Thursday 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 8


சூர்யா மயங்கி விழுந்ததும் தன்னுடைய கோபம் வெறுப்பு எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாக மறைந்ததை தீரஜ் உணரக் கூட இல்லை. அவன் அவசரமாக அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான். அவளை தட்டி எழுப்பி பார்த்தான். அவளிடம் அசைவில்லாதது கண்டு பயந்துவிட்டான். 'இவள் தற்கொலை கிர்க்கொலை என்று பைத்தியக்கார தனமாக ஏதும் முடிவெடுத்து எதையாவது சாப்பிட்டுவிட்டு தான் இங்கு வந்தாளோ...!' இந்த எண்ணம் வந்ததும் அவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது போல் ஆனது. இந்த நொடி சூர்யா இல்லை என்று முடிவாகிவிட்டால் அவனும் இல்லை என்பது உறுதி.... கடவுளை வேண்டியபடி மருத்துவருக்கு தொடர்பு கொண்டு வரவழைத்தான். அவர் வந்து சூர்யாவை பரிசோதித்துவிட்டு சொன்னார்...

"ஜி... இந்த பொண்ணு தாயாக போகுது... அதனால தான் மயங்கி விழுந்துருச்சு... ஊசி போட்டிருக்கேன். இன்னும் இரண்டு மணி நேரத்துல எந்திரிக்கும். சாப்பிட ஏதாவது கொடுங்க. காலையில சரியாகிவிடும்... ஏதாவது அவசரம் என்றால் கால் பண்ணுங்க உடனே வந்துட்றேன்... நான் வர்றேன்..." என்று சொல்லிவிட்டு வெளியேறினார். மருத்துவர் சொன்ன செய்தியை உள்வாங்கிய தீரஜ்க்கு கண்கள் இருட்டின... தலை கிறுகிறுத்தது... உலகமே சுற்றியது... அவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள சில நிமிடம் அவகாசம் எடுத்துக் கொண்டான். மருத்துவர் சொல்லிவிட்டு சென்ற செய்தி அவனை நோகடித்தது. மனதின் ரணம் தாங்காமல் அவன் கண்கள் கலங்கியது... எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் கோழையாகிவிடுகிறான்... 'சூர்யா.. சூர்யா... எதுக்காக இப்படி செஞ்ச சூர்யா... உன்னால என்னை எப்படி மறக்க முடிஞ்சுது... நீ வாய்விட்டு என்னிடம் உன் காதலை சொல்லவில்லை தான். ஆனால் உன் கண்களில் நான் பார்த்த அந்த காதல் எப்படி பொய்யாகும்... நீ என்னை ஏமாற்றிவிட்டாய்... உன்னையும் ஏமாற்றிக்கொண்டாய்... எதற்காக...? யாருக்காக...? கடவுளே... எனக்கு எல்லாவற்றியும் கொடுத்து எதுவுமே இல்லாதவனாக்கிவிட்டாயே...! என் சூர்யாவை மற்றொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேனே...! ' அவன் மனம் புலம்பி தவித்தது... அவன் நொந்து போனான். ஆனாலும் அவள் துன்பப்படுவதை அவனால் ரசிக்க முடியவில்லை... அவளை துன்புறுத்தி கதரவைக்க வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு ராஜ உபச்சாரம் செய்தான். அவளுக்கு தேவையான வசதிகளை செய்துவிட்டு ஒரு பெண்ணையும் அவளுக்கு துணைக்கு இருக்க ஏற்பாடு செய்துவிட்டு அவன் கிளம்பிவிட்டான். போகும் போது ஒரு முடிவுடன் சென்றான். தூங்கிக் கொண்டிருக்கும் சூர்யாவின் முகத்தை ஏக்கமாக பார்த்து "இன்று தான் நான் உன்னை பார்க்கும் கடைசிநாள். இனி இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் சந்திக்காமல் இருந்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள்...." புண்பட்ட மனதுடன் சூர்யாவிடம் சொல்லிவிட்டு அந்த மாளிகையிலிருந்து வெளியேறினான். சூர்யாவின் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறிவிட நினைத்து தான் சென்றான்... ஆனால் விதி விட வேண்டுமே... மருத்துவர் சொன்னபடி இரண்டு மணிநேரத்தில் கண்விழித்த சூர்யா அவளுக்கு துணையாக தீரஜ் விட்டு சென்றிருந்த பெண்ணிடம் விபரம் அறிந்து கொண்டாள். தீரஜ் அவளை பற்றி என்ன நினைத்திருப்பான்.... அவனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் எப்படி துடித்திருப்பான் என்றெல்லாம் எண்ணி கலங்கியபடி அங்கிருந்து புறப்பட்டாள். "மேடம்... ஜி நீங்கள் எழுந்ததும் உங்களை உங்க வீட்டில் விட்டுவிட சொன்னார்... கார் ரெடியா இருக்கு... இதில் உங்க மருந்துகள் இருக்கு...." என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு அவளும் வெளியே வந்தாள். சூர்யா மறுத்தும் கேட்காமல் அவளை அவளுடைய வீட்டில் சேர்ப்பித்துவிட்டு தான் அந்த பெண் தன்னிடத்திற்கு திரும்பினாள். சூர்யாவிர்க்குள் பல குழப்பம்... 'இந்த குழந்தை வேண்டுமா.. வேண்டாமா... நான் இனியும் கபிலனுடன் வாழவேண்டுமா... நம்மை வேவு பார்க்க தீரஜ்ஜின் அறைக்கு அனுப்பிவைத்த அவன் எவ்வளவு பெரிய கயவன்... அவன் குழந்தையை என் வயிற்றில் சுமக்க வேண்டுமா...' என்றெல்லாம் எண்ணி குழம்பினாள். அவள் வயிற்றில் உதித்திருக்கும் குழந்தை அவனுக்கு மட்டும் குழந்தை இல்லையே... அது அவளுக்கும் குழந்தை தானே...! அதோடு தகப்பன் செய்யும் தவறுக்கு அவனுடைய குழந்தை எப்படி பொறுப்பாகும்... அந்த குழந்தையை அழிப்பது எந்த விதத்தில் ஞாயம்... அவள் குழந்தையை அழிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள். சூர்யா வீட்டிற்கு வரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த கபிலன் அவளை வருத்தெடுத்தான். தீரஜ்சுக்கும் அவளுக்கும் தவறான உறவு இருப்பதாக சொன்னான். அவள் அவனை ஏமாற்றிவிட்டதாக சொன்னான். இன்னும் ஏதேதோ மோசமாக பேசினான்... அவன் பேசியதை கேட்ட சூர்யாவிற்கு உடம்பெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. அவள் வெறுப்புடன் முகத்தை சுழித்து "ச்சீ..." என்றாள் சீற்றத்துடன். "என்ன ச்சீ... " அவன் அவளை முறைத்தான். "உன்ன மாதிரி கேவலமா நான் நடக்க மாட்டேன்... " "அப்படின்னா... என்ன அர்த்தம்..." அவன் கொலைவெறியுடன் அவளை பார்த்தான். "எனக்கும் தீரஜ்கும் தப்பா எந்த உறவும் இல்லைன்னு அர்த்தம்..." "இத என்ன நம்ப சொல்றியா...? இவ்வளவு நேரம் அவனோடு இருந்துவிட்டு தப்பா இல்லைன்னு சொன்னா அதை நம்ப நான் என்ன கேனையனா...? " அவனிடம் பேசினால் இன்னும் தரமிறங்கி பேசுவான் என்று நினைத்த சூர்யா பதில் பேசுவதை தவிர்த்து அங்கிருந்து நகர்ந்தாள். அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இரண்டடி எடுத்து வைக்கும் முன் பாய்ந்து அவளுடைய முடியை கொத்தாக பிடித்துவிட்டான். மிருகத்தனமாக அவளை தாக்கினான். அவள் சமாளித்துக் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவளுடைய அறையில் சென்று தாள் போட்டுக் கொண்டாள். நாளுக்கு நாள் கபிலனின் மிருகத்தனம் அதிகமானது. அவனுடைய கொடுமைகளுக்கு ஒரு மாதம் தாக்குபிடித்த சூர்யாவால் அதற்கு மேல் முடியவில்லை. கபிலனின் மிருகத்தனத்தில் சூர்யா பயந்துவிட்டாள். இனி ஒருமுறை அவன் இதுபோல் மிருகத்தனமாக நடந்துகொண்டால் அவளால் தாக்குப் பிடிக்க முடியாது. அவனை தனியாக சமாளிப்பது முடியாத காரியம் என்பதை புரிந்து கொண்டாள். உடனே மாமியார் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள். "ஹலோ... அத்த நா சூர்யா பேசுறேன்..." "சொல்லும்மா நல்லா இருக்கியா...?" "இருக்கேன் அத்த... நீங்க எப்படி இருக்கீங்க...? மாமா எப்படி இருக்கார்...?" "நாங்க நல்லா இருக்கோம்மா...? கபிலன் எப்படி இருக்கான்? "அத்த... இங்க கொஞ்சம் நிலைமை சரியில்ல... நீங்க உடனே கிளம்பி வாங்க.. என்னோட அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்... ரெண்டு பெரும் வயசானவங்க... பயந்துடுவாங்க..." "என்னம்மா...? என்ன ஆச்சு...? "அதெல்லாம் இப்போ விளக்க முடியாதுத்த... நீங்க உடனே இங்க கிளம்பி வாங்க. அப்படி வரலன்ன உங்க குடும்ப வாரிசு உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும்..." அவள் ஒரு குண்டை தூக்கி போட்டாலும், சூர்யா சொன்ன குழந்தை விஷயம் கபிலனின் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்க அவர்கள் கபிலனை அழைத்து வாழ்த்து சொல்லியதோடு புத்திமதியையும் சேர்த்து சொல்லிவிட்டு மதுராவிற்கு கிளம்பினார்கள். கபிலன் தன் பெற்றோர் மூலம் தெரிந்துகொண்ட செய்தியில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான். "ஏய்... என்னடி நெனச்சுகிட்டு இருக்க... கிளம்புடி டாக்டர்கிட்ட... " "எதுக்கு...?" "எதுக்கா... உனக்கு தெரியாது...? துரோகி..." "நான் வரமாட்டேன்... " "வரமாட்டியா... அப்போ குழந்தை விஷயம் உண்மை தானா...?" "ஆமாம்..." "என்ன அழுத்தம்டி உனக்கு...?" "அழுத்தம் தான்... அதற்கு என்ன இப்போ... எனக்கு இனி இந்த குழந்தை தான் எல்லாம்... இதற்கு ஒரு ஆபத்து வர நான் விடமாட்டேன்..." "யார் குழந்தைடி இது...?" அவள் வேதனையுடன் கண்களை மூடி திறந்தாள். அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க அவள் அந்த சிறு அவகாசத்தை எடுத்துக் கொண்டாள். பின் நிதானமாக "என்னோட குழந்தை..." என்று அழுத்தமாக சொன்னாள். "ஏய்... அது தெரியாமலா கேட்குறேன்... அந்த குழந்தைக்கு அப்பன் யாருடி...? "

அவனுடைய பேச்சில் பாதிக்கப் படாதவள் போல் தன்னை காட்டிக் கொண்டு " உன்னோட பேச்சு இனி என்கிட்டே எடுபடாது... இந்த குழந்தையை நான் பெத்துக்க தான் போறேன்..." என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அடுத்த நொடியே அவன் பிடியில் சிக்கி சித்ரவதை பட்டாள். கபிலன் சூர்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தீரஜ் பிரசாத்தின் குழந்தை என்று முற்றிலும் நம்பினான். அதனால் அந்த குழந்தையை அழிப்பதில் குறியாக இருந்தான். எத்தனையோ முறை சூர்யாவை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றான். முடியவில்லை... அதனால் மருத்துவரை வீட்டிற்க்கே வரவழைத்தான். சூர்யா அவளுடைய அறையில் படுத்திருக்கும் போது உள்ளே ஒரு பெண் நுழைந்தாள். "யார் நீங்க...?" "டாக்டர் உமாதேவி... உங்களை கொஞ்சம் ச்செக் பண்ணனும்..." "நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு என் குழந்தையை அழிக்க விருப்பமில்லை. என்னை மீறி ஏதாவது நடந்தால் நீங்கள் பிரசாத்ஜிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்." அவள் தீரஜ் பிரசாத்தின் பெயரை துணைக்கு அழைத்துக் கொண்டாள். அந்த பெயரை சொல்வதே பெரும் பலம் போல் தோன்றியது அவளுக்கு. "என்ன...?" அந்த மருத்துவர் அதிர்ந்தார். "ஆமாம்... இந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா பிரசாத்ஜி உங்களை கேள்வி கேட்பார்..." அவள் மீண்டும் அழுத்தமாக சொன்னாள். அதற்கு மேலும் அங்கே நின்று பேசிக்கொண்டிருக்க அந்த மருத்துவருக்கு பைத்தியமா என்ன...! அந்த பெண் வந்த தடம் தெரியாமல் திரும்ப சென்றுவிட்டாள். "ஏய்... என்னடி நெனச்சுகிட்டு இருக்க நீ... மரியாதையா சொன்னா கேட்க மாட்டியா..? என்னடி சொன்ன அந்த டாக்டர்கிட்ட...? எதுக்குடி அவங்க இப்படி ஓடுறாங்க? " அவன் ஹாலில் இருந்ததால் உள் அறையில் நடந்த பேச்சு வார்த்தை அவனுக்கு தெரியாது. அதனால் சூர்யாவிடம் எரிந்து விழுந்தான். "உண்மையை சொன்னேன்..." "என்னடி உண்மை...?" "என்னோட குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா தீரஜ் கேள்வி கேட்பான்னு சொன்னேன்..." "தெரியும்டி... அவன் எப்படி கேட்காமல் இருப்பான்... இது அவன் குழந்தையாச்சே...! கேட்க தான் செய்வான்... " "வாய மூடு..." "நா எதுக்குடி மூடனும்... உன்ன கொன்னு போட்டா எல்லாம் சரியாகிவிடும்டி..." அவன் ஆவேசமாக பேசிக்கொண்டு அவள் மீது பாய்ந்தான். அந்த நேரம் வெளியில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கபிலனின் பெற்றோர் வந்து இறங்கினார்கள். "இவங்க எதுக்குடி இங்க வர்றாங்க..." "நான் தான் வர சொன்னேன்..." "என்னது...! என்னன்னுடி சொன்ன...?" அவன் அதிர்ச்சியடந்தவனாக கேட்டான். எங்கே அவன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றியிருப்பாளோ என்று பயந்துவிட்டான். அதற்குள் காரிலிருந்து இறங்கியவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். சூர்யாவும் கபிலனும் நின்று கொண்டிருந்த கோலம் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களுக்கு தெளிவாக காட்டியது. பெற்றோரை பார்த்ததும் கபிலன் கொஞ்சம் அடக்கி வாசித்தான். சூர்யாவை பற்றி சொன்னால், அவளை தீரஜ் பிரசாத்தின் அறைக்கு அனுப்பியது கபிலன் தான் என்பதையும் சொல்ல வேண்டி வரும். அவர்கள் முன் அவனுடைய முகத்திரை கிழிவதை அவன் விரும்பவில்லை. சூர்யாவும் அவனை காட்டிக் கொடுக்கவில்லை. குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று கபிலன் நினைக்கிறான். சூர்யா வேண்டும் என்று நினைக்கிறாள். இது தான் பிரச்சனை என்று வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் முழுமையாக சூர்யாவிற்கு தான் ஆதரவு கொடுத்தார்கள். வயிற்றில் இருப்பது அவர்கள் குடும்ப வாரிசாயிற்றே... ஒருநாள் கபிலனின் தாய் சமயலறையில் காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். கபிலன் டிவி பார்த்தபடி காபி குடித்துக் கொண்டிருந்தான். சூர்யா அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து "அத்த... இன்னிக்கு செக் அப் இருக்கு... நாம ரெண்டு பெரும் போய்விட்டு வந்துவிடலாம்..." என்றாள் "அதுக்கென்னம்மா... போயிட்டு வந்துட்டா போச்சு... உனக்கு ஒரு கப் காபி கொடுக்கவா..." "வேண்டாம் அத்த..." சூர்யாவின் பேச்சை கேட்ட கபிலனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. 'என்னுடைய பேச்சிற்கு இந்த வீட்டில் என்ன மதிப்பு' அவன் கடுப்பானான். "அம்மா.. அவ பேச்ச கேட்டுகிட்டு ஆடாத... உன் பிள்ளை ஒழுங்கா வாழணுன்ன மரியாதையா அந்த குழந்தையை கலைக்க சொல்லி உன் மருமகளுக்கு புத்தி சொல்லு..." "அத்த.. நீங்க இல்ல... அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்..." அவள் பேச்சு அவனை எரிச்சலாகக கையில் இருந்த சூடான காபி டம்ளரை தூக்கி அவள் மீது வீசினான். அது சரியாக அவளது நெற்றியை பிளந்தது. "அட பாவி மகனே... புள்ளதாச்சி பொண்ண இப்படி போட்டு அடிக்கிரியேடா... இந்த பாவத்த எங்கடா கொண்டு போயி தொலைப்ப..." கபிலனின் அன்னை சூர்யாவை மடியில் தாங்கியபடி மகனை திட்டினாள். அவன் சிறிதும் அலட்டிக்காமல் "அவள வெளியே எங்கயும் கூட்டிட்டு போன உன்ன தொலைச்சிடுவேன்..." என்று தாயையே மிரட்டிவிட்டு வேகமாக வெளியேறினான். மற்றொரு நாள் கபிலன் யாரிடமோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். சூர்யா குழந்தையை பற்றி ஏதோ மாமியாரிடம் பேசினாள். அடுத்த நொடி கபிலனின் கையிலிருந்த கைபேசி சூர்யாவை நோக்கி பறந்தது. அவளுடைய நாசி உடைந்து ரத்தம் கொட கொடவென கொட்டியது. அதை பார்த்த கபிலனின் பெற்றோர் இருவரும் திகைத்தார்ர்கள். தங்கள் மகன் இப்படி ஒரு ராட்சசனா என்று நினைத்து மருகினார்கள். ஆனால் சூர்யாவிற்கு இது பழகிவிட்டது. தினமும் இப்படி கையில் இருக்கும் பொருளை சூர்யாவை நோக்கி வீசுவது அவனுக்கு பழக்கமாகிவிட்டது. கவனமாக இல்லாதது அவளது தவறு தான் என்று நினைத்துக் கொண்டாள். மகனின் நடவடிக்கை பெற்றோரை வேதனைப்படுத்தியது. அவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். ______________________________ கபிலன் வெறிபிடித்தவன் போல் இருந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுடைய பெற்றோரையே வெறுப்படைய செய்தது. அவர்கள் பார்த்தவரை சூர்யாவின் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. "என்னங்க... இந்த கபிலன் ஏங்க அந்த பொண்ண இந்த பாடு படுத்துறான்...?" "என்னவோ பெரிய விஷயம் நடந்திருக்கு கமலா... நமக்கு தான் என்னன்னு தெரியல... ரெண்டு பேருமே மறைக்கிறாங்க..." "ஆமாங்க... குழந்தை வேண்டாம் என்பதற்காக ஒருவன் இந்த அளவு மிருகமாக மாறுவானா...!" "சரிதான் கமலா... ஆனால் ஒன்னுமட்டும் நிச்சயம்..." "என்னங்க....?" "நடந்தது எதுவா இருந்தாலும் மருமக பொண்ணு மேல தப்பிருக்க வாய்ப்பே இல்லை கமலா..." "எனக்கும் புரியுதுங்க... இவன் குணத்துக்கு இந்த பொண்ணு என்பதால் தான் இவ்வளவு நாளும் வண்டி ஓடிகிட்டு இருக்கு... அது இந்த பயலுக்கு புரிய மாட்டேங்குது..." இந்த ரீதியில் தான் கபிலனின் பெற்றோர் பேசிக்கொண்டார்கள். இந்த நிலையில் ஒரு நாள் கபிலன் நேரத்திலேயே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிவிட்டான். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய கபிலன் வீட்டில் பெண்கள் இல்லாததை கவனித்து தந்தையிடம் கேட்டான். "அப்பா.. எங்க அவளையும் அம்மாவையும் காணும்...?" "அவங்க ரெண்டு பேரும் பார்க்குக்கு வாக்கிங் போயிருக்காங்கப்பா...? " "வெளியே சென்றுவிட்டு வரும் ஆண்பிள்ளையை கவனிப்பதை விட இவங்களுக்கு என்ன வாக்கிங் முக்கியமா போச்சு..." அவன் எரிந்து விழுந்தான். "மருமக பொண்ணு இந்தமாதிரி நேரத்துல வாக்கிங் போகணும் என்று டாக்டர் சொல்லியிருக்காராம் பா.." அவர் எதார்த்தமாக சொல்லிவிட்டார். 'குழந்தைக்காக வாக்கிங் போயிருக்காளா...!' அவன் வெறியாகிவிட்டான். அதற்கு மேல் அவன் அவரிடம் எதுவும் கேட்கவில்லை... வீட்டிற்குள் நின்று தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தவன் வேகமாக வெளியே வந்து வாசல்படியில் அமர்ந்துகொண்டான். அவனுடைய முகத்தில் இருந்த கொடூரம் கபிலனின் தந்தையை அச்சுறுத்தியது. இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அவர் உள்ளுணர்வு சொல்லியது. சிறிது நேரத்தில் தூரத்தில் சூர்யாவும் அவள் மாமியார் கமலாவும் வருவது தெரிந்தது. கபிலனின் கண்களில் தீ பொறி பறந்தது... அதை பார்த்த அவன் தந்தையின் வயிற்றில் பயம் பொங்கியது. "கபிலா... அவசரப்படாதடா.... சொன்னா கேளுடா... பொறுமையா இருடா..." அவர் பீதியுடன் மகனை அமைதிபடுத்த முயன்றார். அதற்குள் சூர்யாவும் கமலாவும் வீட்டை நெருங்கிவிட்டார்கள். கபிலனின் முகத்தை பார்த்தவர்கள் தயங்கி நின்றார்கள். வாசல் படியிலிருந்து ஆவேசமாக எழுந்தவன் "எவனை பார்க்கடி போய்ட்டு வர்ற...?" என்று கேட்டபடி அவள் சுதாரிப்பதற்குள் வாசல்படியில் செடி மறைவில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அவள் வயிற்றில் பலமாக அடித்துவிட்டான். "ஆ..." என்று அலறியவள் கீழே விழும் முன் மேலும் இரண்டு அடிகளை கொடுத்ததோடு தடுக்க வந்த பெற்றோரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு அவள் முடியை பிடித்து இழுத்தபடி வீட்டிற்குள் சென்று தாள் போட்டுவிட்டான். காலனியில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் சூர்யா மற்றும் கபிலனின் பெற்றோர் போட்ட சத்தத்தில் வெளியே வந்து கபிலனை தடுப்பதற்குள் அவன் சூர்யாவுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டான். "அடேய் பாவி பயலே... உன்னை பெற்றதுக்கு நான் மலடியாவே இருந்திருக்கலாமேடா... கொடும் பாதகா... புள்ளதாச்சி பொண்ண சித்ரவதை செய்றியேடா..." "உன்னை அந்த கடவுள்தான்டா கேட்கனும்..." "பகவானே...!!! இந்த பயலுக்கு கூலி கொடுக்க வாப்பா... வந்து இந்த பொண்ண காப்பாத்துப்பா..." கபிலனின் தாய் ஆவேசமாக வானத்தை பார்த்து கத்த உள்ளே அரை மயக்கத்தில் கிடந்த சூர்யாவின் மனமும் அதையே சொல்லிக் கொண்டிருக்க.... அவன் வந்தான்....!!! இரணியனை கொள்ளவந்த நரசிம்மன் போல் வந்தான்... ராவணனின் தலையை கொய்தெரியவந்த ராமன் போல் வந்தான்... அசுரனை அழிக்க வந்த தேவன் போல் வந்தான்... அப்பாவிகளை காக்க வந்த ரட்சகன் போல் வந்தான்... சீறி பாய்ந்து வந்து கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தான்... அவன் தான் தீரஜ் பிரசாத்...!!! அங்கு நடந்த கலவரம் யார் மூலம்... எப்படி அவனுக்கு தெரிந்தது... அவன் எப்படி அவ்வளவு விரைவாக KC காலனியை அடைந்தான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்... ஆனால் சரியான நேரத்திற்கு அங்கு வந்தான்... புயல் வேகத்தில் புழுதியை கிளப்பியபடி காலனிக்குள் நுழைந்து அரைவட்டம் அடித்து நின்ற காரிலிருந்து மின்னல் போல சீறி பாய்ந்து வந்தான். சூர்யாவை கபிலன் வீட்டிற்குள் இழுத்து சென்று கதவை தாள் போட்ட சில நிமிடங்களிலேயே ஒரே உதையில் அந்த கதவை தகர்த்தெறிந்தான்.

பலத்த சத்தத்துடன் திறந்துகொண்ட கதவை திடுக்கிடலுடன் திரும்பிப்பார்த்த கபிலன் அங்கே ஆக்ரோஷமான முகத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்த தீரஜ் பிரசாத்தை பார்த்து குலை நடுங்கிப்போனான். அவன் மேலே சிந்திக்கும் முன் உள்ளே நுழைந்துவிட்ட தீரஜ்பிரசாத் அவனின் செவியை கிழித்தான். அருகிலிருந்த பூச்சாடியை கையிலேடுத்தவன் ஒரே அடியில் அவன் மண்டையை பிளந்ததோடு அவனை மயக்கமடையவும் செய்தான். அதே சமயம் தரையில் அரைமயக்கமாக சரிந்துகிடந்த சூர்யாவின் கண்களுக்கு கடவுளாக தெரிந்தவன் அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்... தீரஜ் பிரசாத்தின் ஆட்கள் கபிலனை அள்ளிக் கொண்டு பேப்பர் மில்லிர்க்கு விரைந்தார்கள்... அங்கு கூடியிருந்த அனைவரும் அங்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது... கபிலனால் தாக்கப்பட்ட சூர்யா இரண்டு நாட்களாக கோசிகாலனிலேயே சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். சூர்யாவின் பெற்றோருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள். மூச்சுவிட கூட முடியாதபடி பயமும் துக்கமும் தொண்டையை அழுத்த சிந்தாமணி கண்ணீருடனும் கிருஷ்ணாமூர்த்தி இறுக்கமான முகத்துடனும் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் கபிலனின் பெற்றோர் குற்ற உணர்வுடன் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார்கள். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரியும் வரை தீரஜ் பித்தனை போல் மருத்துவமனையை விட்டு அசையாமல் ஒரே இடத்திலேயே தவம் கிடந்தான். அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று தான் சூர்யாவிற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் குழந்தைக்கு உயிராபத்து இல்லை... ஆனால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது குழந்தை வயிற்றில் வளர வளரத்தான் தெரியும் என்றும் தெரியவந்தது. சூர்யாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை... குழந்தைக்கும் உயிராபத்து இல்லை என்று தெரிந்த பின்பு அவன் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது. இரண்டு உயிருக்கும் ஆபத்து இல்லை என்கிற செய்தியால், இதுவரை அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் தளர்ந்தது... சூர்யாவின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற தீரஜ் "பார்த்துக்கோங்க... கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்..." என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் வெளியேறினான். # # # தீரஜ் பிரசாத்தின் அடியில் நினைவிழந்த கபிலன், நினைவு திரும்பிய போது தலையில் ஒரு கட்டுடன் குப்பை கூளங்கள் நிறைந்திருந்த ஒரு அறையில் தரையில் கிடப்பதை உணர்ந்தான். சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான். யாரையும் காணவில்லை. அரைமணி நேரம் கழித்து ஒருவன் வந்தான். கொச்சை இந்தியில் ஏதோ பேசினான். பின் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாக்கெட்டையும் அவனிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான். கபிலன் அதை பிரித்து பார்த்தான். இரண்டு ரொட்டி துண்டுகள் இருந்தன. அதை உண்டு தண்ணீரை குடித்து வயிறை நிறைத்துக் கொண்டான். மேலும் ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் வந்தார். அவர் மருத்துவராக இருக்க வேண்டும். அவனை பரிசோதித்து ஊசி போட்டார். அவனிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டார். இதே போல் கபிலனுக்கு இரண்டு நாள் உபச்சாரம் நடந்தது. மூன்றாம் நாள் தான் அந்த காட்சியை பார்த்தான் கபிலன். முன்பு ஒரு நாள் சூர்யா பார்த்தது போலவே கோரமான காட்சி... அவன் ரத்தமே உறைந்துவிட்டது... 'இரண்டு நாட்களாக நமக்கு நடந்த உபச்சாரம் பலியாட்டுக்கு நடக்கும் உபச்சாரம் தானோ...! இந்த மாதிரி கொடுமையை தாங்குவதற்குதான் நம்மை தயார் செய்திருக்கிறார்களோ...!' அவன் கலங்கினான். இது போல் பத்தில் ஒரு பங்கு என்ன... நூற்றில் ஒரு பங்கு சித்ரவதையை கூட அவனால் தாங்க முடியாது என்று நினைத்து நடுங்கினான்... அன்று முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தவனின் நடுக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தான் தீரஜ்... தீரஜ் பிரசாத்தின் கார் பேப்பர் மில்லிர்க்குள் நுழைந்த நேரம், கபிலன் அவன் அடைபட்டிருந்த அறையிலிருந்து மரத்தடிக்கு இழுத்து வரப்பட்டு குத்துக் காலிட்டு அமர வைக்கப்பட்டான். தீரஜ் காரிலிருந்து இறங்கி வரும் வேகநடையும், அவனுடைய சிவந்து இறுகிய முகமும் கபிலனை அச்சுறுத்த அவன் கண்களில் கண்ணீர் கட கடவென வழிந்தது. வேகமாக அவனை நெருங்கிய தீரஜ் அவன் மார்பில் எட்டி உதைக்க கபிலன் சுருண்டான். தீரஜ்பிரசாத் கபிலனை பார்த்தபடியே தனக்கு வலதுபுறம் நின்று கொண்டிருந்த சகாவிடம் கையை நீட்ட அங்கே உடனடியாக ஒரு ஹாக்கி பேட் முளைத்தது. தீரஜ் மட்டும் தான் கபிலனை அடித்தான். மிஞ்சி போனால் பத்து அடி கூட அடித்திருக்க மாட்டான். ஆனால் நூறு பேர் சேர்ந்து தாக்கியிருந்தால் கூட கபிலன் இந்த அளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டான் என்கிற அளவு பாதிக்கப்பட்டுவிட்டான். ஏனடா இந்த பிறபெடுத்தோம் என்று நினைத்தான் கபிலன்... இப்போவே செத்துவிடக் கூடாதா என்கிற அளவு ஒவ்வொரு அணுவும் வலித்தது. சற்று முன் ஒருவனை நான்கு பேர் அடித்து அவன் தோலை உரித்தது கூட பரவாயில்லை என்று தோன்றியது கபிலனுக்கு. ஏனென்றால் அங்கே அடிபட்டவன் நினைவிழந்த நிலையில் தான் அடிபட்டுக் கொண்டிருந்தான். ஆனால் கபிலனுக்கு முழு சுரணையும் இருந்தது. அழவும் கத்தவும் முடிந்தது... ஆனால் எழுந்து ஓடவோ கை காலை அசைக்கவோ முடியவில்லை... தீரஜ் அடிப்பதை நிறுத்திவிட்ட பின்பும் "என்னை கொன்னுடு... என்னை கொன்னுடு..." என்று கத்திக் கொண்டிருந்த கபிலன் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கத்தி கத்தியே சோர்வடைந்து மயக்கமானான். மறு நாள் மயக்கத்திலிருந்து விழித்தவனுக்கு மீண்டும் பழயபடி உபச்சாரம் நடந்தது...!!! இப்போது நடக்கும் உபச்சாரம் பிறகு அவன் அனுபவிக்க போகும் சித்ரவதையை நினைவுபடுத்தி அவனை அச்சுறுத்தியது. கபிலனுக்கு ஒன்று புரிந்துவிட்டது. 'சூர்யா சொன்னது நிஜம் தான் இவன் சூர்யாவை காதலித்திருக்கிறான். அதனால் தான் அவள் அடிபட்டது இவனுக்கு வலிக்கிறது... அந்த வலியும் அதனால் ஏற்பட்ட வெறியும் அவன் கண்ணில் தெரிந்ததே...! அதோடு நம்மை ஒரு வழி பண்ணாமல் இங்கிருந்து அனுப்பமாட்டான்... ஐயோ கடவுளே... இந்த சூர்யாவை நான் ஏன் தான் திருமணம் செய்தேனோ...! ஆண்டவா... என்னை காப்பாத்துப்பா...' அவன் மனம் புலம்பியது... # # # சூர்யா கண்விழித்ததிலிருந்து அவளுடைய பெற்றோரும் கபிலனின் பெற்றோரும் அவளுக்கு அருகில் தான் இருக்கிறார்கள். சூர்யாவிடம் தெளிவே இல்லை. ஒரு வாரமாக மருத்துவமனைக்கு வந்து போய் கொண்டிருக்கும் தீரஜ் சூர்யாவை ஒரு முறை கூட வந்து பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு உணர்வு அவனை சூர்யாவை நெருங்கவிடாமல் தடுத்தது. ஒரு வாரம் கழித்து சூர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கூடவே அதிக தூரம் சூர்யா பயணம் செய்யக் கூடாது என்றும் சேர்த்து சொல்லிவிட்டார். தீரஜ், கபிலன் மற்றும் சூர்யாவின் பெற்றோரை அழைத்தான். " என்ன முடிவு பண்ணியிருக்கீங்க...?" சாதாரணமாக கேட்டான். "இதுல என்ன முடிவு செய்றதுக்கு இருக்கு....? நான் என் பெண்ணை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு போகிறேன்... இனி இவங்க பையனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..." கிருஷ்ண மூர்த்தி கபிலனின் தந்தையை காட்டமாக பார்த்துக்கொண்டே தீரஜ் பிரசாத்தின் கேள்விக்கு பதில் சொன்னார். "அதை முடிசெய்ய நீங்கள் யார்...? சூர்யாவின் வாழ்க்கையை பற்றி முடிவு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு...?" தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை எரிப்பது போல் பார்த்தபடி கேட்ட கேள்வியில் அவர் திணறினார். "எ.. என்.. என்ன சொல்றீங்க நீங்க...? இந்த பயலோட என் பொண்ணு எப்படி வாழ முடியும்...?" "அதை அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைப்பதற்கு முன்பே யோசித்திருக்க வேண்டும்..." அவன் அவரிடம் காட்டமாக பேச அவர் அவனை குழப்பமாக பார்த்தார். "எனக்கு தெரியும்... சூர்யாவின் முழு சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று எனக்கு முன்பே சந்தேகம் தான். இப்போது உங்களுடைய அதிர்ந்த முகம் நான் சொன்னது முழுவதும் சரிதான் என்று சொல்லிவிட்டது..." கிருஷ்ணமூர்த்தி குற்ற உணர்வுடன் தலை குனிந்துவிட்டார். சிந்தாமணி முந்தானையால் வாயை மூடி கண்ணீர்விட்டார். தீரஜ் பிரசாத்தின் கடினமான முகம் சற்றும் இளகவில்லை. "நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..." அவன் கபிலனின் பெற்றோரை பார்த்து கேட்டான். "முடிவு எடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. சூர்யாவும் அவள் பெற்றோரும் என்ன சொல்கிறார்களோ அதற்கு கட்டுப்படுகிறோம்..." கபிலனின் தந்தை தன் வார்த்தையை முடித்துக் கொண்டார். "சரி... சூர்யா அதிகம் பயணம் செய்யக் கூடாது. அதனால் இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு வீடு ஏற்பாடு செய்திருக்கேன். சூர்யாவும் நீங்களும் அந்த வீட்டிலேயே தாங்கிக்கொள்ளுங்கள். அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை சென்னையை மறந்துவிடுங்கள். வீட்டிற்கு சென்ற பின் சூர்யா என்ன முடிவெடுத்திருக்கிறாள் என்று கேட்டுவிடுங்கள்." அவன் கிருஷ்ண மூர்த்தியிடம் உத்தரவிடுவது போல் சொன்னான். பின் கபிலனின் பெற்றோரிடம் திரும்பி "நீங்கள் சூர்யா விரும்பினால் அவளுடன் தங்கலாம்... இல்லையென்றால் சென்னைக்கு இன்றே புறப்பட தயாராகுங்கள்." என்றதும் கபிலனின் தாய் 'ஓ' வென்று சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டார். அந்த அழுகைக்கு பின் மகனை பற்றிய பயமும் கலக்கமும் நிறைந்திருந்தது அனைவருக்குமே புரிந்தது. தாயின் மனம் பதறுவது தெரிந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. தீரஜ்ஜும் அந்த அம்மாவிற்கு எந்த சமாதானமும் சொல்லவில்லை. அவன் ஒரு இயந்திரம் போல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். வீட்டில் அமைதி குடிகொண்டிருந்தது. பெரியவர்கள் அனைவரும் வெளியே தோட்டத்தில் இருக்க, உணர்ச்சிகளை தொலைத்துவிட்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் தீரஜ் பிரசாத்திக்கு முன் சங்கடமான முகத்துடன் சூர்யா அமர்ந்திருந்தாள். சூர்யா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது. அவள் அடிபட்ட நாளிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட தீரஜ் சூர்யாவின் முன் வந்ததில்லை. அவளிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. எப்போதாவது சூர்யாவின் வீட்டிற்கு வந்தால் அவளை பார்க்காமல் கிருஷ்ண மூர்த்தியை பார்த்து பேசிவிட்டு சென்றுவிடுவான். தினமும் கிருஷ்ண மூர்த்திக்கு கை பேசியில் அழைத்து பேசி அவளுடைய நலம் விசாரிப்பவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசமாட்டான். இந்த சூழ்நிலையில் தான் சூர்யா தானாக தீரஜ்ஜை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள். சில நிமிட மௌனத்திற்கு பின் தீரஜ்பிரசாத்தான் பேச்சை ஆரம்பித்தான். "எதுக்காக வர சொன்ன...?" 'எப்படி இருக்கன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை...' அவள் மனம் சுணங்கியது. அதை வெளிப்படுத்தாமல்... "கபிலன் எங்க...?" சூர்யா தீரஜ் பிரசாத்திடம் கேட்டுவிட்டாள். இந்த கேள்வி அவளாக கேட்கவில்லை... கபிலனின் தாய் அழுது புலம்பி கெஞ்சி சூர்யாவை கரைத்து தீரஜ்ஜிடம் பேச சொல்லியிருந்தது தீரஜ்பிரசாத்திற்கு தெரியாது. அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. "என் இடத்தில் தான் இருக்கான்..." 'அதற்கு மேல் என்ன கேட்பது...?' சூர்யாவிற்கு புரியவில்லை. அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். "அவரை அவங்க அம்மா அப்பாகிட்ட ஒப்படச்சிடுங்க... " அவள் அவனிடம் வேண்டவும் இல்லை... அவனுக்கு கட்டளையிடவும் இல்லை... இயந்திர தனமாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாள். "சரி..." அவனும் எதிர் பேச்சின்றி அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டான். மீண்டும் அங்கே கனத்த மௌனம்... "வேற என்ன...?" தீரஜ் மௌனத்தை கலைத்தான். "இல்ல... வேற எதுவும் இல்ல..." தீரஜ் எதுவும் பேசாமல் எழுந்துவிட்டான். சூர்யா தீரஜ்ஜிடம் பேசிய அடுத்த அரைமணி நேரத்தில், தீரஜ்பிரசாத்தின் கைவண்ணத்தில் நாற்பத்தைந்து நாட்களாக நடந்த மேள தாளத்துடன் கூடிய தட-புடலான பூஜையின் காரணமாக, கிழிந்த நாராய் கபிலன் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். மகன் உயிரோடு கிடைத்ததே பெரும் பாக்கியம் என்று நினைத்து அவனை சென்னைக்கு கொண்டு போய்விட்டார்கள் அவனை பெற்றவர்கள். # # #

சூர்யா கருத்தரித்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் தான் அவர்களுக்கு அந்த விஷயம் தெரியவந்தது. சூர்யாவிற்கு வயிற்றில் பட்ட அடியில் குழந்தை பாதிக்க பட்டிருந்தது. அவளுடைய குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக பிறக்கும் என்பதை தெரிந்துகொண்ட சூர்யா அதிர்ந்தாள். மருத்துவரும் சூர்யாவின் பெற்றோரும் அவளுக்கு சொன்ன அறிவுரை... "இந்த குழந்தை பிறந்தால் அது மிகவும் சிரமப்படும். இந்த உலகத்தில் அந்த பிள்ளைக்கு போராடி வாழும் வலு இருக்காது... பேசாமல் இந்த குழந்தையை கலைத்துவிடு..." அடுக்கடிக்காக சோதனைகளை சந்தித்துக் கொண்டே இருந்தாலும் அவள் மனம் மரத்துப் போகாமல் வலித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று கபிலன் சொன்ன வார்த்தையை இன்று மருத்துவரும் அவளுடைய பெற்றோரும் சொல்கிறார்கள். காரணம் வேறாக இருந்தாலும் அவர்கள் சொல்வது அவளுடைய குழந்தையை கொல்ல வேண்டும் என்று... நான்கு மாதமே ஆனாலும் அவளுடைய வயிற்றில் உதித்து... அவளோடு உறவாடி... அவளுக்குள் இருக்கும்... அவளுடைய குழந்தையை அழிக்க சூர்யாவிற்கு மனம் வரவில்லை... அழுதாள்... தொடர்ந்து அழுதாள்... தீரஜ் அவளை வந்து பார்த்து பேசும் வரை அழுதாள். குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சூர்யா நொறுங்கிப் போயிருக்கிறாள் என்பது தீரஜ் பிரசாத்திற்கு தெரியவந்தது. அவளாக சமாதானம் அடைந்துவிடுவாள் என்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தான். அவள் தெளிவதாக தெரியவில்லை. அதனால் அவளை பார்த்து பேச முடிவு செய்தான். அழுது வீங்கிய முகத்துடன் தன் முன் நிற்கும் சூர்யாவை வெற்றுப்பார்வை பார்த்தான் தீரஜ். "என்ன சொல்றாங்க?" "அழிக்கனுமாம்..." "நீ என்ன முடிவு செஞ்சிருக்க...?" அவளுடைய கண்கள் கலங்கின..."என்னால முடியாது..." "பின்ன ஏன் அழற...?" "என் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சு...? இந்த உலகத்துல அது என்னவெல்லாம் கஷ்ட்டப்பட போகுதோ..." அவள் தேம்பினாள். "நான் விடமாட்டேன்..." அவன் அழுத்தமாக சொன்னான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "இந்த குழந்தை எந்த கஷ்ட்டமும் பட நான் விட மாட்டேன்..." அவன் மீண்டும் ஒரு முறை தெளிவாக சொன்னான். இப்போது சூர்யாவிற்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அவளுடைய எல்லா துன்பங்களும் நீங்கிவிட்டது போல் உணர்ந்தாள். 'தீரஜ்பிரசாத்தின் ஒரு வார்த்தைக்கு இத்தனை சக்தியா...!' அவளுக்கு வியப்பாக இருந்தது. அன்று சூர்யாவிடம் உறுதி கொடுத்துவிட்டு போனவன் தான். அதன் பிறகு சூர்யாவை அவன் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவள் நலனை கிருஷ்ணமூர்த்தி மூலம் அடிக்கடி தெரிந்துகொள்வான். நாட்கள் நகர்ந்தன. சூர்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அது சூர்யாவின் மறுபதிப்பாகவே இருந்தது. 'இந்த குழந்தையா மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை...!' என்று சந்தேகிக்கும் வண்ணம் இருந்தது அந்த குழந்தை... குழந்தையை பார்த்த தீரஜ் பிரசாத்திற்கு அது கபிலனின் குழந்தை என்கிற நினைவே எழவில்லை. குழந்தையின் பூ முகம் தீரஜ்ஜை 'சூர்யா சிறு வயதில் இப்படி தான் இருந்திருப்பாள்...' என்று நினைக்க வைத்தது. அவனுக்கு குழந்தையை விட்டு பிரிந்து அவனுடைய வேலைகளை பார்க்க செல்லவே மனம் இல்லாமல் போனது. காலம் பெரியவர்களின் மனக் காயத்தை ஆற்றியிருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு கபிலனின் பெற்றோர் குழந்தையை பார்க்க வந்திருந்தார்கள். சூர்யாவின் பெற்றோர் அவர்களிடம் முகம் திருப்பவில்லை. அன்று தீரஜ்ஜும் குழந்தையை பார்க்க வந்திருந்தான். கபிலனின் பெற்றோரை பார்த்ததும் அவனுக்கு 'பகீர்' என்றது... சூர்யா மீண்டும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயந்தான். சூர்யாவின் மனதில் கபிலனின் இடம் என்ன என்று தெரிந்து கொள்ள அவன் மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் ஒரு புதை குழியில் அவள் சிக்கிவிடக் கூடாது என்று மனம் பதைத்தது. 'யாராவது இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர மாட்டார்களா...' என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது கபிலனின் தாய் சூர்யாவிடம் பேச்சை ஆரம்பித்தார். "என்னம்மா... முடிவு பண்ணியிருக்க...? குழந்தையும் பிறந்துடுச்சு... இனியும் அமைதியா இருந்தது என்ன செய்றது...?" சூர்யா கமலாவை குழப்பமாக பார்த்து "எதை பற்றி...?" என்றாள். "கபிலனை பற்றி தான்..." "இனி எனக்கும் உங்கள் மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் சட்டரீதியான பிரிவிற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள்..." அவள் கண்டிப்புடன் சொன்னாள். சூர்யா தான் கபிலனால் பாதிக்கப்பட்டவள். அதனால் கபிலனின் பெற்றோருக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் சூர்யாவின் முடிவை எதிர்த்து பேசும் துணிவும் விருப்பமும் இல்லை. அவர்களுக்கு சூர்யாவின் முடிவை ஏற்பதுதான் சரியென்று பட்டது.... ஏற்றுக் கொண்டார்கள். இரு தரப்பிலும் எதிர்ப்பு இல்லாததால் இரண்டு மாதத்தில் கபிலனிடமிருந்து சூர்யாவிற்கு விடுதலை கிடைத்துவிட்டது. இதில் எதிலும் தீரஜ் சம்மந்தப்படவில்லை... இப்போது சூர்யாவிற்கு அவள் குழந்தையே உலகம் என்றானது. தீரஜ் எதை மறந்தாலும் காலையும் மாலையும் கீர்த்தியை பார்த்து அவளோடு ஒரு மணிநேரம் செலவிடுவதை மறக்க மாட்டான். 'கீர்த்தி...' சூர்யா தன் செல்ல கண்ணமாவிர்க்கு கீர்த்தனா என்று பெயரிட்டிருந்தாள். "எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...! நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து உதித்து உயிரில் கலந்தாய் என் உயிரே...! உண் பூவிழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே... " பெரியவர்கள் பாடும் தாலாட்டு பாடல் தெரியாத சூர்யா, சினிமாவில் வரும் சில பாடல்களை பாடி குழந்தையை தூங்க வைப்பது வழக்கம். அன்றும் அதே போல் தான் அந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாள். அவள் குரலில் அத்தனை சோகம்... தீரஜையும் அவளுடைய குழந்தையின் நிலையையும் மாற்றி மாற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவளின் வாய் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தது என்பதுதான் சோகத்தின் காரணம்... குழந்தையை பார்க்க வந்த தீரஜ் அவள் குரலில் நெகிழ்ந்து அசையாமல் நின்றுவிட்டான். "வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே... வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்க சிலையே... காண கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிகின்ற வைரமே... கோடி கொடுத்தாலும் உன்னை போல செல்வம் கிடைக்காது வாழ்விலே... புள்ளி மானே... தூங்கும் மயிலே... எனை மறந்தேன் நானம்மா... " குழந்தையின் அறைக்குள் யாரோ வரும் அரவரம் கேட்டு பாடலை நிறுத்திவிட்ட சூர்யா அங்கே தீரஜ் பிரசாத்தை பார்த்ததும் எழுந்து நின்றாள். அவன் தொட்டிலுக்கு அருகில் சென்று குழந்தையை அள்ளி மார்போடு அனைத்துக் கொண்டான். அவனுக்கு பாடல் பாடவெல்லாம் தெரியாது. ஆனால் சூர்யாவின் இந்த தாலாட்டை அவன் அவ்வப்போது கேட்டதால் அந்த பாடல் அவன் மனதில் பதிந்துவிட்டது. மீதி பாடலை அவன் மனதிற்குள் பாடினான். "எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...! கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாய் காதல் தேவி...! உறவின் பலனாக கடலின் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே...! தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே...! சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே...! சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா.... "

தீரஜ் தன்னை அறியாமலே மனதளவில் அவன் அந்த குழந்தைக்கு தந்தையாகிவிட்டான். இதை அவனுடைய நடவடிக்கையிலிருந்து புரிந்து கொண்ட சூர்யா தீரஜ்பிரசாத்தின் எதிர்காலத்தை நினைத்து கலங்கினாள். குழந்தைக்கு விபரம் தெரியும் முன் இந்த குழந்தையிடமிருந்து அவனை பிரித்தால் தான் குழந்தைக்கு பாதிப்பு இருக்காது. அதோடு இவன், சூர்யாவிற்கும் குழந்தைக்குமே சேவகம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமாட்டான். தூங்கும் குழந்தையை மார்போடு அணைத்தபடி வெளியேறும் தீரஜ் பிரசாத்தை கனிவாக பார்த்தாள் சூர்யா... 'இவனுக்கு எதற்கு இத்தனை பாசம் இந்த குழந்தை மேல்...!' அவளுக்கு புரிந்தது. அந்த பாசம் சூர்யாவின் மீதான அவனுடைய காதலின் வெளிப்பாடு. ஆனால் அந்த காதலுக்கு அவள் தகுதியானவள் இல்லை என்பது சூர்யாவின் எண்ணம். அதனால் தான் அந்த முடிவை எடுத்தாள்.

No comments:

Post a Comment