Thursday, 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 3


அன்று சனிக்கிழமை. சூர்யாவிற்கு விடுமுறை நாள். காலை பன்னிரண்டு மணிவரை வார இறுதியில் செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த வேலைகளை முடித்தவள், சரியாக ஒரு மணிக்கு மத்திய உணவை முடித்தாள். ஒரு மணிக்கு மேல் அவள் மூளை பிரசாத்ஜியை பற்றி கேள்விகளை கேட்டு அவளை துளைத்தது. அந்த கேள்விகளை அவள் பிரபாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். "பிரபா... பிரசாத்ஜியை பார்க்க உனக்கு ஆசையா இருக்கா...?" "ஏன்... உனக்கு ஆசையா இல்லையா...?" "ஹி.... ஹி.... ஆசையா தான் இருக்கு..." "அதை நேரடியா சொல்ல வேண்டியது தானே...? அதை விட்டுட்டு என்னடி பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குற?"

"ஹேய்... நா எங்கடி பாயசம் கேட்டேன்...? உனக்கு பிரசாத்ஜியை பார்க்க ஆசை இருக்கான்னு தானே கேட்டேன்...!" அவள் சந்தேகம் கேட்டாள். "ஆசையா இருக்குன்னா என்ன செய்றதா உத்தேசம்...?" "அவங்க வீட்டுக்கு போயி பார்க்குறதா உத்தேசம்..." "ஏய்.. என்னது...? பிரசாத்ஜியை பார்க்க போறியா..? எப்படி...? அவங்க வீட்டுக்கு போக யாருகிட்ட அனுமதி வாங்கியிருக்க...?" "அனுமதி வாங்கனுமா?" "பின்ன இல்லையா...?" "யார்கிட்ட வாங்கணும்...?" "நம்ம ஆபீஸ்ல யார்கிட்டையாவது கேட்டா தெரியும்... பிரசாத்ஜி நம்ம ஆபீஸ்க்கு மாதம் ஒரு தடவ வருவாராம்..." "அவர் ஏன்டி நம்ம ஆபீஸ்க்கு வர்றார்...?" "அவர் தானேடி நம்ம முதலாளி...!" "ஹோ... ரியலி... அப்போ நமக்கு இன்னும் ஈசியா போச்சு... நம்ம மேனேஜர் சுந்தர் சார்கிட்ட பேசி பார்க்கலாமா..?" "சுந்தர் சாரா... எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கும்டி..." பிரபா மிரண்டாள். "அப்போ நீ பிரசாத்ஜி வீட்டுக்கு வரமாட்டியா...?" சூர்யா கேள்வி கேட்டாள். "வரலன்னா நீ விடுவியா...!" பிரபா எதிர் கேள்வி கேட்டாள். "அதெப்படி விடுவேன்.... நீ வந்து தான் ஆகணும்..." அழுத்தமான பதில் வந்தது சூர்யாவிடமிருந்து "அப்புறம் ஏன்டி ஒப்புக்கு கேள்வி கேட்குற...? எப்படியும் என்னை ஒரு வழி பண்ணாம இந்த ஊரை விட்டு நீ போகப்போறது இல்ல..." "தெரியுதுல்ல... அப்போ நாளைக்கு சுந்தர் சார்ரை பார்க்க ரெடியா இரு..." அவர்கள் இருவரும் தங்களுடைய வாக்குவாதத்தில் மும்மரமாக இருக்கும் போது, அவர்கள் தங்கியிருந்த மகளிர் விடுதியில் வேலைசெய்யும் ஒரு பெண் வந்து "சூர்யா மேடம்... உங்களை பார்க்க 'விசிட்டர்' வந்திருக்காங்க..." என்றாள். "என்னை பார்க்கவா...?" சூர்யா சந்தேகமாக கேட்டாள். "ஆமா..." "சரி... நீ போயி யாருன்னு பாரு. நான் போயி மாடில துணி காஞ்சிட்டான்னு பார்த்து எடுத்துட்டு வர்றேன். அப்புறம் நம்ம ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம்..." என்று சொல்லிவிட்டு பிரபா மொட்டை மாடிக்கு சென்றுவிட, சூர்யா தன்னை பார்க்க வந்த பார்வையாளரை தேடி சென்றாள். வெளியே தீரஜ்பிரசாத் தன்னுடைய காரின் மீது சாய்ந்தபடி நிற்பதை பார்த்த சூர்யா உற்ச்சாகமாகிவிட்டாள். "ஹேய்... தீரஜ்... வெல்கம்... வெல்கம்... என்னடா திடீர்ன்னு வந்து நிக்கிற...?" அவள் சத்தமாக கேட்டுக் கொண்டே அவனருகில் ஓடி வந்தாள். தீரஜ் பிரசாத்தை அடையாளம் தெரிந்த பொது மக்கள் அவனுடன் பேச முயற்சி செய்யலாம் என்பதால், சில அடி தூரத்திலிருந்தே அவனுடைய ஆட்கள், அவர்கள் இருப்பதே தெரியாமல் ஆங்காங்கு நின்றபடி, அவனுக்கு அருகில் யாரையும் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். அதை அறியாத சூர்யா தீரஜ் பிரசாத்தை ஏகவசனத்தில் சத்தமாக பேசிக்கொண்டு ஓடிவர, அங்கு நின்றபடி அதை கவனித்த அவனுடைய தமிழ் தெரிந்த ஆட்கள் சிலர் மின்சாரம் தாக்கியதை போல் உறைந்து போனார்கள். சில நாட்களாக தீரஜ் பிரசாத்தின் முகத்தில் தெரியும் மென்மைக்கும் சிரிப்பிற்கும் விடை கிடைத்துவிட்ட தெளிவு அவர்கள் முகத்தில் வந்தாலும், சூர்யாவின் துடுக்குத்தனமான பேச்சு கொடுத்த அதிர்ச்சியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. தலை குளித்து அளவாக வெட்டப்பட்ட விரித்துவிட்ட கூந்தலுடன் ஒப்பனைகள் இல்லாமல் சாதாரண சுடிதாரில் தேவதை போல் அவள் துள்ளி குதித்து ஓடிவரும் காட்சி தீரஜ்பிரசாத்தின் உயிரை எடுத்தது. "வண்டில ஏறு...." அவன் தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிடாமல் இருப்பதற்காக முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்துக்கொள்ள முயன்றான். "எங்க...?" "சொல்றேன் ஏறு..."

"கொஞ்சம் வெயிட் பண்ணு... பிரபாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்..." "அதெல்லாம் வந்து சொல்லிக்கலாம்... இப்போ வண்டில ஏறு..." என்று பிடிவாதமாக சொல்லி, அவள் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினான். "ஹேய்... மெதுவாடா... ஏன்டா இந்த இழு இழுக்குற... ஆ.. அம்மா..." என்று அவன் பிடியில் கன்றி போயிருந்த கையை தேய்த்துவிட்டுக் கொண்டவள், "என்னையெல்லாம் காருக்குள்ள தள்ள இவ்வளவு பவர் யூஸ் பண்ண வேண்டியது இல்லடா... யாருக்கு எவ்வளவு பவர் யூஸ் பண்ணனும் என்று தெரிஞ்சு செயல்படனும்... புரியுதா... ஐயோ அம்மா..." அவளுடைய முகபாவத்தில் சிரித்துவிட்டவன், "சரியான சொத்தடி நீ... நல்லா பேச மட்டும் கத்து வச்சிருக்க..." என்று சொல்லியபடி காரின் மறுபக்க கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான். "ஆமா இவரு பெரிய பயில்வான் பக்கிரிசாமி.... என்னை சொல்ல வந்துட்டாரு... ஆளையும் மூஞ்சியும் பாரு..." "ஏன்டி எம் மூஞ்சிக்கு என்ன குறைச்சல்...?" "எதுவுமே குறைச்சல் இல்ல... எல்லாமே கொஞ்சம் ஓவர் சைஸா தான் இருக்கு... " என்று வாய் வார்த்தைக்காக சொல்லியவள் அவனுடைய திருத்தமான முகத்தில் எதுவும் ஓவர் சைஸ் இல்லை என்பதை உணர்ந்து 'சாரிடா தீரஜ்...' என்று மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். "சரி... இப்போ எங்க போறோம்?" "இன்னும் பத்து நிமிஷத்துல தெரிஞ்சிடும்..." என்று அவளை அமைதிகாக்க சொன்னவன் சரியாக எட்டு நிமிடத்தில் அந்த இடத்தில் காரை நிறுத்தினான். அடர்ந்த மரங்களின் சிலு சிலுப்பான காற்று உடலை வருடியது. அமைதியான சூழ்நிலை மனதிற்கும் அமைதியை தந்தது. காவி உடை அணிந்த துறவிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள். "என்ன கோவில்டா இது...? இங்க ஏன் என்னை கூட்டிகிட்டு வந்த?" கோவிலுக்குள் நுழையும் முன்பே சூர்யா தன் கேள்வியை ஆராம்பித்துவிட்டாள். "கோகிலவான் ஆலையம். சனிபகவானுக்கு பிரசித்தி பெற்ற கோவில். இங்க தான் கிருஷ்ணன் சனி பகவானுக்கு தரிசனம் கொடுத்ததா ஐதீகம்." "ஓ...." "யாருக்கு சனி பிடிச்சிருக்கோ அவங்க இந்த கோவிலுக்கு வந்து, சனிபகவானை தரிசனம் பண்ணினா அவங்களை பிடிச்ச சனி உடனே விலகி அவங்களுக்கு நல்லது நடக்கும் என்பதும் ஐதீகம்..." அவன் சூர்யாவுடன் நடந்தபடி அவளுக்கு விளக்கம் சொன்னான். அவன் பேச்சில் சட்டென நின்றுவிட்ட சூர்யா, தீரஜ் பிரசாத்தின் பக்கம் பார்வையை திருப்பி, "அது சரி... என்னை ஏன்டா இந்த கோவிலுக்கு கூட்டிகிட்டு வந்த?" என்றாள். அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது... 'ஒருவேள எனக்கு சனி பிடிச்சிருக்குன்னு சொல்றானோ...!' "என்னை பிடிச்ச சனி உன்னையும் பிடிச்சிருந்தா நம்ம ரெண்டு பேருக்குமே ஒண்ணா நல்லது நடக்கட்டுமேன்னு தான் உன்னையும் அழைச்சிகிட்டு வந்தேன்..." "என்னது... உனக்கு சனி பிடிச்சிருக்கா...! " அவள் நம்பமுடியாமல் கேட்டாள் "ஆமா... பயங்கரமான சனி... ராத்திரியெல்லாம் தூங்கவிடாத சனி..." அவன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னான். "லூசு... உன்னை சனி பிடிச்சா நீ மட்டும் வர வேண்டியது தானே... என்னை ஏன்டா இழுத்துகிட்டு வந்த..." "பொய் சொல்லாதடி... உன்னை இழுத்துகிட்டு எல்லாம் வரல... கார்ல அழைச்சிகிட்டு தான் வந்தேன்..." "அழைச்சுகிட்டு வந்த...! நீ...? கார்ல தூக்கி போட்டுக்கிட்டு வந்ததும் இல்லாம... பொய் பேசுறியா...? அதை கூட மன்னிக்கலாம்... ஆனா இப்படி என்னை சனி பிடிக்கிற கோவிலுக்கு கூட்டிகிட்டு வந்திருக்கியே... உனக்கு மூளை இருக்காடா...?" "என்னது சனி பிடிக்கிற கோவிலா...!" "ஆமாம்... சனி பிடிச்சவங்க இங்க வந்தா நல்லது நடக்கும்... சனி பிடிக்காதவங்க வந்தா அவங்களுக்கு சனி பிடிக்கும் தானே..." "ஹா... ஹா..." "சிரிக்காதடா... பிரபாகிட்ட சொல்லாம கூட என்னை இப்படி இழுத்துகிட்டு வந்துட்டியேடா பாவி... அவ அங்க தேடிகிட்டு இருக்க போறா..." "கோவிலுக்கு வந்துட்டு புலம்பாதடி... உள்ள வா... சாமி தரிசனம் முடிச்சிட்டு வரலாம்..." என்று ஒரு அதட்டு போட்டு சூர்யாவை உள்ளே அழைத்து சென்றவன், சிறிது நேரத்திலேயே சுவாமி தரிசனம் முடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். "நைட் தூக்கம் வரலன்னு சொன்னியே... என்னடா ஆச்சு...?" "ஒரு குட்டி பிசாசோட முகம் கனவுல வந்து பயமுறுத்துது... " "யாருடா அந்த குட்டி பிசாசு... எதுக்கு அந்த பிசாசு முகம் உன்னோட கனவுல வந்து உன்ன பயமுறுத்துது?" "அதா கேட்கத்தான் உன்ன இங்க கூட்டிகிட்டு வந்தேன்... எதுக்குடி நைட் என் கனவுல வந்து என்னை பயமுருத்துன...?" "அடப்பாவி என்னை பார்த்தா குட்டி பிசாசு மாதிரி இருக்கா....? " என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு முதுகில் இரண்டு அடி கொடுத்தாள் சூர்யா. அவளுடைய முகம் அவனுடைய கனவில் வருகிறது என்கிற முக்கியமான விஷயத்தை கவனிக்காமல், அவன் அவளுடைய முகத்தை குட்டி பிசாசின் முகம் என்று சொல்லியதை பெரிதாக எடுத்துக் கொண்டு அவனிடம் சண்டை போட்டாள். எப்பொழுதும் குழந்தை தனமாக துரு துருப்புடன் இருக்கும் சூர்யாவிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவித்து தினம் தினம் உறக்கம் துறந்தான் தீரஜ் பிரசாத். கோவிலுக்கு சென்று திரும்பும் போது உயர்தர ஹோட்டலில் காரை நிறுத்தினான் தீரஜ். தீரஜ் பிரசாத்தை திட்டிக் கொண்டே இறங்கினாலும் சூர்யா தென்னிந்திய உணவை ஆர்டர் செய்து திருப்தியாக உண்டாள். "இந்த ஹோட்டல்ல சவுத் இண்டியன் ஃபுட் சுப்பரா இருக்குடா... எங்க ஹாஸ்ட்டல்ல மூணு நேரமும் தீஞ்சுபோன ரொட்டி தான்... அத சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நாக்கே செத்து போச்சு... " "செத்து போன நாக்கு தான் இந்த போடு போடுதா..." அவன் அவள் ஆர்வமாக சாப்பிடுவதை பார்த்து நக்கலாக கேட்டான். அவன் கேட்ட விதத்தில் லேசாக வெட்கப்பட்டவள் "எனக்கு சவுத் இண்டியன் ஃபுட் ரொம்ப பிடிக்கும்... அதுவும் ஸ்வீட்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும்..." என்றாள் லேசாக அசடு வழிந்தபடி . அவள் பேசிய விதத்தில் சத்தமாக சிரித்துவிட்டவன்... மெனு கார்டை எடுத்து அவள் தலையில் செல்லமாக தட்டி "சாப்பிடு...." என்றான் சிரித்துக் கொண்டே... அன்று அவர்கள் இருவரும் தங்களுடைய கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டார்கள். சூர்யாவின் கைபேசி எண்ணை அவளிடமிருந்து வாங்கிவிட்ட தீரஜ் அன்று இரவே அவளிடம் தன் காதலை சொல்லிவிட எண்ணி அவளை கை பேசியில் அழைத்தான். "ஹலோ...." "ஹேய்... தீரஜ்... சொல்லுடா... என்னடா இந்த நேரத்துல..." அவள் விகல்பம் இல்லாமல் கலகலப்பாக பேசினாள். "சூர்யா..." அவனுடைய குரல் கிசுகிசுப்பாக இருந்தது. "ஹேய்... சத்தமா பேசுடா... எனக்கு எதுவும் புரியல..." அவள் அந்த இரவு நேரத்தில் எவ்வளவு சத்தமாக பேச முடியுமோ அவ்வளவு சத்தமாக பேசினாள். அவனுக்கு காதல் சொல்லும் மூடே போய்விட்டது. இருந்தாலும் விடாமுயர்ச்சியுடன் "சூர்யா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..." என்றான். "பேசேன்டா... என்னவோ எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கிட்டு தான் செய்ற மாதிரி பாவலா பண்றான் பாரு..." அவள் அவனை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை. 'இந்த மண்டுக்கு போன்ல சொல்லியெல்லாம் புரிய வைக்க முடியாது போலிருக்கே... ஆண்டவா எண்ணை காப்பாற்று...' அவன் கடவுளின் உதவியை நாடினான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக... "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்... என்னன்னு கண்டுபிடி..." ஒரு பிட்டை போட்டான். "ஹேய்... நாளைக்கு எனக்கு ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா கொண்டுவர போறியா...?" அவள் குரலில் ஒரு வித பரபரப்புடன் சொன்னாள். "என்னது...?" அவன் அதிர்ச்சியடைந்தவனாக கேட்டான்... "ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா..." அவள் இன்னும் சத்தமாக சொன்னாள். "இப்ச்... அது இல்லடி..." "ம்ம்ம்... அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ்...?" "ஹேய்... என்...னடி...?" அவன் வியப்புடன் கேட்டான். இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் "அதெல்லாம் இல்லடி... வேற எதுவுமே உனக்கு தோணலையா... ?" "கொஞ்சம் வெயிட் பண்ணுடா.. நான் யோசிக்க வேண்டாமா...?" அவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை துளிர் விட்டது. குரலை பழயபடி குழைவாக்கிக் கொண்டு "ம்ம்... நல்ல யோசிச்சு சொல்லுடி..." என்றான் கெஞ்சலாக.... "ம்ம்ம்..." அவள் சத்தமாக யோசித்தாள் "ம்ம்ம்..." அவனும் அவளுக்கு பின் பாட்டு பாடினான். "ம்ம்ம்... கண்டுபிடிச்சிட்டேன்... இன்று போன ஹோட்டல்க்கு நாளைக்கும் நாம போகப்போறோம்..." அவள் உற்ச்சாகமாக கத்தினாள். "ஏண்டி சாப்பிடறத விட்டா உனக்கு வேற எதுவுமே தெரியாதா...?" அவன் ஆற்றாமையுடன் கேட்டான். "நீதானடா சர்ப்ரைஸ்ன்னு சொன்ன...?" "சர்ப்ரைஸ்ன்னா சாப்பாடு மட்டும்தானடி... " அவன் நொந்துவிட்டான். "அப்புறம் என்னடா.. நீயே சொல்லு..." அவளும் அவன் கொடுக்கும் சர்ப்ரைஸ் அவளுக்கு பிடித்ததாக இருக்கபோவதில்லை என்கிற முடிவுக்கு வந்தவளாக அலுத்துக் கொண்டாள். "ஆமா சொல்லிட்டாலும்... அப்படியே சந்தோஷத்துல துள்ளி குதிச்சுட போற... போடி வேலைய பார்த்துகிட்டு..." அவன் வெறுத்துப் போய் பேசினான். "டேய்... என்னடா... கொழுப்பா...? நான் பாட்டுக்கு இந்நேரம் படுத்து தூங்கியிருப்பேன்.... நடு ராத்திரில போன போட்டு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அது இதுன்னு உளறிவிட்டு... இப்போ 'போடி வேலைய பார்த்துகிட்டு'ன்னு சொல்லுற...? ங்கொய்யால... " "என்னது.... ங்கொய்யால-வா... என்னடி லாங்வேஞ் இது...?" "எல்லாம் நம்ம சுந்தர தமிழ் தான்..." "இதெல்லாம் நல்லா வாய் கிழிய பேசு... மற்றதுலயெல்லாம் மண்டாவே இரு..." "ஹலோ யாரு... நா மண்டா... " "ஆமாடி நீ தான் மண்டு... பின்ன என்ன நானா மண்டு...?" "ஆமாடா நீதான் மண்டு... முட்டாள்... லூசு... பைத்தியம்... எல்லாம்..." "நீ தான்டி அதெல்லாம்..." "நீ தான்... நீ தான்... நீதாண்டா..." அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "முடிச்சிட்டியா....? போ.. போயி நிம்மதியா இழுத்து போர்த்திகிட்டு தூங்கு..."

அவன் அவளிடம் காதலை சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவள் அவனையும் அவளைப் போலவே குழந்தை தனமாக சண்டை போட வைத்து வெற்றிகரமாக அந்த சண்டையில் அவனை பின்வாங்க வைத்துவிட்டாள். இவளிடம் எப்படி தன் காதலை சொல்லி புரியவைக்க போகிறோம் என்று குழம்பி அன்றைய தூக்கத்தை துறந்தான் தீரஜ்... சூர்யா பிரசாத்ஜியை பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாள். அடிக்கடி அவரை பற்றி நினைவுகள் மனதில் எழும். ஆனால் தீரஜ் பிரசாத்தை பார்த்தவுடன் பிரசாத்ஜியின் நினைவு அவளை விட்டு அகன்றுவிடும். முழுவதும் தீரஜ் பிரசாத் தான் அவள் மனதை ஆக்கிரமித்திருப்பான். அதனால் பிரசாத்ஜியை பற்றி அவள் தீரஜிடம் பேசவே இல்லை. ஆனால் அலுவலகத்தில் அவளுடைய மேனேஜர் சுந்தரிடம் பிரசாத்ஜியை சந்திக்க வேண்டி பேசினாள். "சார்... நான் பிரசாத்ஜியை அவர் வீட்டில் சென்று பார்க்க எனக்கு முன் அனுமதி வாங்கி தர முடியுமா? " என்று கேட்டாள். தினமும் தீராஜ்பிரசாத் என்கிற பிரசாத்ஜியுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண், பிரசாத்ஜியை சந்திக்க முன் அனுமதி கோரி வந்து நிற்பதை கண்டு குழம்பினான் சுந்தர். தன்னுடைய குழப்பத்தை சூர்யாவிடம் தெரிவிக்காமல் நாசுக்காக பேசி அவளை அனுப்பிவிட்டு, பிரசாத்ஜியின் PA சுஜித்தை தொடர்பு கொண்டு பேசினான். "சுஜித்... நான் சுந்தர் பேசுறேன்..." "சொல்லுங்க சுந்தர்." "ஆபீஸ் ஸ்டாஃப் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க முன் அனுமதி கேட்குறாங்க.... அவங்க ஜிக்கு ரொம்ப க்ளோஸ்" "ஓகே சுந்தர்.. ஜிகிட்ட பேசிட்டு சொல்றேன்..." என்றான் சுஜித் விஷயத்தை கேள்விப்பட்ட தீரஜ் தனக்குள் சிரித்துக் கொண்டான். "சரி சுஜித்... இன்று தேதி நான்கு. அடுத்த மாதம் நான்காம் தேதி காலை 11 மணிக்கு இருக்கும் அப்பாயின்மென்டை கான்செல் பண்ணிவிட்டு சூர்யாவை மீட் பண்ண அந்த டைமை பிக்ஸ் பண்ணிடு...?" "ஓகே சார்..." தீரஜ்பிரசாத் சூர்யாவை பிரசாத்ஜியாக சந்திக்க ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக் கொண்டான். அந்த ஒரு மாத கால அவகாசத்தில் தீரஜ் பிரசாத், தீரஜ்ஜகவே தன்னுடைய காதலை சூர்யாவிற்கு புரியவைக்க நினைத்தான். அதனால் சூர்யாவுடன் அதிகமாக நேரம் செலவழிக்க முடிவு செய்து அந்த வாரத்தில் ஒரு நாள் சூர்யாவை மதுராவிற்கு அழைத்து சென்றான். "என்னடா... திடீர்ன்னு மதுராவுக்கு கூட்டிகிட்டு வந்திருக்க?" "சும்மா தான். நீயும் ஊருக்கு புதுசு. மதுரால பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு. உனக்கு சுத்திக் காட்டலாமேன்னு தான்..." அவன் சாதாரணமாக சொன்னான். "ஹோ... தேங்க்ஸ் டா... " என்று மகிழ்ச்சியாக சொன்னாள் சூர்யா. தீரஜ் சூர்யாவை முதலில் கேசவ தேவ் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். "இது தான் கேசவ தேவ் கோவில் சூர்யா. இந்த இடத்த கிருஷ்ண ஜென்ம பூமின்னு சொல்லுவாங்க. இங்க இருந்த பாதாள சிறையொன்றில் கிருஷ்ணன் பிறந்ததா சொல்லி இந்த இடத்தில் கேசவ தேவ் கோவில கட்டியிருக்காங்க." என்று அந்த கோவில் பற்றிய விபரங்களை அவளுக்கு விலக்கிவிட்டு கோவிலை சுற்றிக் காண்பித்தான். பின் யமுனா நதிக்கரையோரம் அழைத்து சென்றான். அந்த இடத்தின் இதமான சூழ்நிலை மனதை மயக்க தீரஜ் தன் மனதை சூர்யாவுக்கு திறந்து காட்ட முடிவு செய்தான். "சூர்யா... இந்த இடம் உனக்கு பிடிச்சிருக்கா?" தீரஜ் பேச்சை ஆரம்பித்தான். "ரொம்ப பிடிச்சிருக்கு..." யமுனாவின் அழகை ரசித்தபடி சூர்யா ஒற்றை வரியில் பதில் சொன்னாள். "எப்போ கல்யாணம் செஞ்சுக்க போற?" தீரஜ் நேரடியாக கேட்டான். "பிரசாத்ஜி மாதிரி ஒரு ஆண்மகனை சந்தித்த பிறகு..." அவள் தன்னை அறியாமல் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில் தீரஜ் பிரசாத்தை மகிழ்ச்சி படுத்தவில்லை. ஏனோ அவன் மனம் சோர்ந்ததுவிட்டது. அதற்கு மேல் அவன் அந்த பேச்சை தொடர விரும்பாமல் அவளை அழைத்து சென்று விடுதியில் விட்டுவிட்டு, அவனுடைய வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான். அடுத்த நாள் கிருஷ்ணன் சிறு வயதில் வளர்ந்த ஊரான விருந்தாவனுக்கு சூர்யாவை அழைத்து சென்றான். "இங்க சுமார் ஐயாயிரம் கோவில்கள் இருக்கு சூர்யா. இந்த ஊர்ல தான் கிருஷ்ணன் வளர்ந்ததா சொல்லுவாங்க." என்று அந்த ஊரை பற்றி விளக்கியவன் அந்த ஊரின் முக்கிய கோவில்களான "பாங்கி பிகாரி கோவில்" ,"மதன் மோகன் கோவில்" , "கோவிந்தா தேவ் கோவில்" , "கிருஷ்ண பலராம் கோவில்" என்று பல கோவில்களுக்கு அழைத்து சென்றான். அந்த கோவில்களின் பழமையும், அழகும் சூர்யாவை கவர்ந்தது. ஒவ்வொரு கோவிலின் கட்டிடங்களுக்கும் உள்ள வித்தியாசம் அவளை பிரம்மிக்க வைத்தது. மதுரா ஒரு புனித தளம் என்பதால் அங்கு கோவில்கள் தான் அதிகம். அதனால் தீரஜ் சூர்யாவை கோவில்களுக்கு தான் அதிகமாக அழைத்துச் சென்றான். இரண்டு நாட்கள் முழுக்க சூர்யாவை அழைத்துக் கொண்டு விருந்தாவன் மற்றும் மதுராவை சுற்றியவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூட சூர்யாவிடம் தன்னுடைய காதலை சொல்லவில்லை. அவன் அவளுடன் அதிகமாக நேரம் செலவழிக்க நினைத்து தான் முதலில் அவளை கோவில்களுக்கு அழைத்து சென்றான். 'இப்படியே கோவில்களுக்கு சென்று கொண்டிருந்தால் கடைசியில் சந்யாசியாக வேண்டியது தான்...' என்று பயந்துவிட்டானோ என்னவோ... அடுத்தநாள் அவளை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தான். அன்று மாலை சூர்யாவை தீரஜ் விடுதியில் சென்று சந்தித்து அவளை வெளியே அழைத்து வந்திருந்தான். காரில் கனத்த அமைதி நிலவியது. தீரஜ் அமைதியாக உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். சூர்யாவை பார்த்து 'உனக்கு இவ்வளவு அமைதியாக கூட இருக்க தெரியுமா...?' என்று நினைத்தான். அவளுடைய அமைதிக்கு காரணம் தீரஜ் சூர்யாவை கட்டாயப் படுத்தி வெளியே அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவள் தீரஜ் மேல் கோபமாக இருந்தாள். "என்ன சூர்யா எதுவும் பேசாம அமைதியா இருக்க...?" "பேசினா மட்டும் என்ன ஆக போகுது... நீ வண்டிய ஒழுங்கா பார்த்து ஓட்டு..." "எதுக்குடி இப்படி மூஞ்சிய திருப்பிக்கிற...? அப்படி என்ன நான் செஞ்சுட்டேன்...?" "நான் வேலை இருக்குன்னு சொன்ன பிறகும் என்னை கட்டாய படுத்தி கார்ல அள்ளி போட்டுக்கிட்டு வந்திருக்கியே... உன்கிட்ட மூஞ்சிய திருப்பாம சிரிச்சு பேசணுமா..?" "நான் கூப்பிட்டபோதே நீ வந்திருந்தா நான் எதுக்கு உன்னை கட்டாயப்படுத்த போறேன்...?" "நீ கூப்பிட்டா நான் எதுக்கு வரணும்...?" "சரி வர வேண்டாம் இறங்கி போ..." அவன் நடு வழியில் காரை நிறுத்தினான். அவன் காரை நிறுத்தியிருந்த இடம் கோசியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அந்த இடத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக இல்லை. மனிதர்களும் அதிகமாக கண்ணில் படவில்லை. நீண்டு அகன்ற கரும் சாலையின் இரண்டு பக்கமும் செம்மண் வெட்டியெடுக்கப்பட்ட பெரிய பெரிய பள்ளங்கள் தான் கண்ணில் பட்டன. அந்த இடத்தில் தனியாக மாட்டிக் கொள்ள சூர்யாவிற்கு விருப்பம் இல்லை. அதனால் காரில் அமர்ந்தபடியே தீரஜ் பிரசாத்தை முறைத்தாள். "என்ன பார்க்குற... இறங்கி போயேன்..." அவன் கண்களில் குறும்புடன் கூறினான். சூர்யாவிற்கு எரிச்சல் வந்தது. அவள் அவனை அடித்தாள். அவன் கையை மடக்கி அவளுடைய அடிகளை முழங்கையால் தடுத்தான். அவனை அடித்ததில் சூர்யாவிற்குதான் கை வலித்ததே தவிர அவன் மேல் ஒரு அடி கூட விழவில்லை. அவன் அவளுடைய கோபத்தை ரசித்து சிரித்தான். அவனை அடிக்க முடியவில்லையே என்கிற கோபத்தோடு அவனுடைய சிரிப்பு அவளை இன்னும் எரிச்சல் படுத்தியது. காரில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து

"இது தாண்டா நீ... உன்னை இப்படி தான்டா கிழிப்பேன்..." என்று சொல்லி புத்தகத்தை இரண்டு பாதியாக கிழித்தாள். "உன்னை இப்படிதான்டா கசக்குவேன்..." என்று சொல்லி அந்த புத்தகத்தை கையில் சுருட்டி கசக்கினாள். பின் அதை காலுக்கு கிழே போட்டு "நல்ல பார்த்துக்கோ... நீ தான் இது... உன்னை இப்படிதான் மிதிப்பேன்...." என்று சொல்லி அந்த புத்தகத்தை மிதி மிதி என்று மிதித்தாள். அவளுடைய கோபம் முழுவதையும் அந்த புத்தகத்திடம் காட்டினாள். அவளுடைய செய்கையில் முதலில் திகைத்தவன் பின் சத்தமாக சிரித்துவிட்டான். அவன் சிரித்த பிறகு தான் அவள் தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து புத்தகத்தை மிதிப்பதை நிறுத்தினாள். அமைதியாக அவனை பார்த்தாள். அவள் கண்களில் அப்படி ஒரு அப்பாவித்தனம்... 'இவளிடம் எப்படி நம் காதலை புரியவைக்க போகிறோம்...' அவன் குழம்பினாலும் அவளுடைய அப்பாவி தனத்தை ரசித்தான்.

No comments:

Post a comment