Thursday 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 5


விடுதியில் தன்னுடைய அறையில் நுழைந்த சூர்யாவிற்கு பிரபாவின் நினைவுகள் உயிரை துளைத்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்துக் கொண்ட சூர்யா உடனடியாக தன் பெற்றோருக்கு தொடர்பு கொண்டாள். "ஹலோ...." "ஹலோ... எப்படி கண்ணு இருக்க...?" "அப்பா.... பிரபாவுக்கு.... பிரபாவுக்கு ஒரு விபத்து நடந்துவிட்டது. இப்போ எப்படி இருக்கான்னு எனக்கு தெரியல... எனக்கு பயமா இருக்குப்பா... அப்பா... நீ உடனே இங்க வந்துருப்பா..."

"என்ன கண்ணு ஆச்சு... சரி... நீ பயப்படாத... அம்மாவுக்கு இப்போ எதையும் சொல்ல வேண்டாம்... ரொம்ப பயந்துடுவா... நா உடனே கிளம்பி அங்க வர்றேன்..." என்று சொல்லி சூர்யாவை ஆறுதல் படுத்தியவர், பிரபாவின் வீட்டிற்கு தகவல் சொல்லி அவளுடைய தந்தையையும் அழைத்துக் கொண்டு அடுத்த விமானத்தில் டெல்லி வந்து, அங்கிருந்து வாடகை கார் எடுத்து கோசிகாலன் வந்து சேர்ந்தார். சூர்யா தன் தந்தைக்கு தகவல் சொன்னது மாலை ஆறு மணிக்கு. அவர் கோசிகாலன் வந்து சேர்ந்தது மறு நாள் அதிகாலை இரண்டு மணிக்கு. இடைப்பட்ட எட்டு மணிநேரம் சூர்யா தனிமையிலும் பயத்திலும் தவித்து போய்விட்டாள். சூர்யாவின் தந்தையும் பிரபாவின் தந்தையும் சூர்யா தங்கியிருக்கும் விடுதிக்கு வந்ததும் சூர்யா தன் தந்தை கிருஷ்ணமூர்த்தியை பாய்ந்து கட்டிக் கொண்டாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பிரபாவின் தந்தை சூர்யாவின் பயத்தை பெரிதுபடுத்தாமல் "பிரபாவுக்கு என்னம்மா ஆச்சு... அவ எங்க இப்போ..." என்று சூர்யாவை துளைத்தார். "அங்கிள்... அவ இப்போ லைஃப் லைன் மருத்துவமனையில இருக்கா..." என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவர் காரில் ஏறிவிட்டார். அவரை தொடர்ந்து சூர்யாவும் அவள் தந்தை கிரிஷ்ணமூர்த்தியும் ஏறிக் கொண்டார்கள். கார் மருத்துவமனையை நோக்கி பறந்தது. காரில் செல்லும் போதே பிரபாவின் தந்தை நடந்த விபரங்களை சூர்யாவிடமிருந்து கேட்டுக் கொண்டார். அவள் தீரஜ் பற்றி சொல்லாமல் பிரசத்ஜியை பற்றி அனைத்தையும் மறைக்காமல் சொன்னாள். அவருக்கு சூர்யாவின் மீது ஆத்திரம் வந்தது. 'இந்த பெண்ணால் தான் நம் மகள் இன்று மருத்துவமனையில் கிடக்கிறாள்' என்று அவரால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. "உங்களுக்கு எதுக்கும்மா ரவடி பயலுங்களோட பழக்க வழக்கம்... வேலைக்கு வந்தோமா... வந்த வேலையை பார்த்தோமான்னு இல்லாமல் எதுக்கு அவன் வீட்டுக்கு நீங்க போனிங்க...?" என்று சூர்யாவை ஏசினார். அவளுடைய வெளுத்த முகமும் சிவந்திருந்த கண்களும் அப்போது தான் அவர் கண்களில் பட்டன. 'இதுவும் சின்ன பொண்ணு தானே... 'சிறு பிள்ளை விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது' என்பது போல் ரெண்டு பேரும் சிறு பிள்ளை தனமாக நடந்து கொண்டது இவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டது....' அவர் எதுவும் பேச முடியாமல் சூர்யாவின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தார். அதற்குள் மருத்துவமனை வந்துவிட அவர்கள் அவசரமாக உள்ளே சென்றார்கள். பிரபாவின் உறவினர்கள் அவளை பார்க்க வந்திருக்கும் விஷயம் நிமிடத்தில் தீரஜ்பிரசாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவனுடைய அனுமதி கிடைத்த பிறகே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதித்தது. பிரபாவை பார்த்த சூர்யா மீண்டும் கதறி அழுதாள். அவள் அழுவதை பார்த்த பிரபாவின் தந்தை சூர்யாவிற்கு ஆறுதல் சொல்லும்படி ஆகிவிட்டது. காலை பத்து மணிக்கு மருத்துவரை சந்தித்து பேசினார்கள். "பிரபாவிற்கு கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடி பட்டு மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று பாதிக்கப் பட்டுள்ளது. அதை சரி செய்ய ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.... " மருத்துவர் அலட்டிக்காமல் சொன்னார். "................" பிரபாவின் தந்தை பேச்சிழந்து விழித்தார். "அந்த அறுவை சிகிச்சை செய்தால் எங்க மகள் எங்களுக்கு பத்திரமாக திரும்ப கிடைப்பாளா...?" கிருஷணமூர்த்தி விபரம் கேட்டார். "கண்டிப்பா... ஆனா அந்த அறுவை சிகிச்சை எங்களால் செய்யமுடியாது. மூளை மற்றும் நரம்பியல் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர் டெல்லியில் ஒரு பிரபல மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவரிடம் நானே இது போல் இரண்டு நோயாளிகளை அனுப்பியுள்ளேன். அவர்கள் இன்று நலமாக உள்ளார்கள். உங்கள் மகளும் அது போல் குணமாக நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது." "அப்படி என்றால் தாமதிக்காமல் பிரபாவை அந்த மருத்துவமனைக்கு மாற்றிவிடுங்கள்...." கிருஷ்ணமூர்த்தி தயங்காமல் சொன்னார். "அதில் ஒரு சிக்கல் உள்ளது. அந்த அறுவை சிகிச்சை செய்ய நாற்பது லட்சம் செலவாகும். அதோடு பிரபாவை இங்கு சேர்த்திருப்பது பிரசாத்ஜி. அவருடைய அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது." "அவன் யார் என் பெண்ணை பற்றி முடிவு எடுக்க..." பிரபாவின் தந்தை இப்போது தான் வாயை திறந்தார். "நான் என் பெண்ணை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்... என்ன வைத்தியம் வேண்டுமானாலும் செய்வேன்..." என்று சொன்னவர் அப்போது தான் உணர்ந்தார். 'பிரபாவிற்கு வைத்தியம் செய்ய நாற்பது லட்சம் தேவையாம்... நான் என்ன செய்வேன்... என் மகளை எப்படி காப்பாற்றுவேன்...' அவர் மனம் புலம்பி அழுதது. பிராபாவின் தந்தை கூச்சலிட்டதும் மருத்துவர் தன்னுடைய கைபேசியுடன் வெளியே சென்றார். பிரபாவின் நிலை பற்றியும் அவளுடைய தந்தையின் மனநிலை பற்றியும் தீரஜ்பிரசாத்திற்கு தொடர்பு கொண்டு ஒப்பித்தார். "என்ன செலவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அந்த பெண்ணை குணமாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்...." அவன் மருத்துவருக்கு உத்தரவிட்டான். மருத்துவர் மகிழ்ச்சியாகிவிட்டார். வேகமாக உள்ளே வந்தவர் "உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம்... பிரசாத்ஜி உங்க பெண்ணின் மருத்துவ செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் இன்றே பிரபாவை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றிவிடலாம்" என்று உற்சாகமாக சொன்னார். "அவன் யார் என் பெண்ணுக்கு செலவு செய்ய...? அவனால் தான் என் மகள் இன்று இந்த நிலையில் இருக்கிறாள்... அவன் பணம் ஒரு பைசா கூட எங்களுக்கு வேண்டாம்..." பிரபாவின் தந்தை உணர்ச்சிவசத்தில் கத்தினார். அவருடைய கத்தலையும் கூச்சலையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் பிரபா டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். தீரஜ் பிரசாத்தை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பிரபாவின் தந்தை. ஆனால் அவருடைய புகார் நேரடியாக தீரஜ்பிரசாத் வீட்டு குப்பை தொட்டியில் விழுந்தது.

தெரிந்தவர்களை வைத்து ஒரு மத்திய மந்திரியிடம் சென்று முறையிட்டால், "நான் என்ன கட்டப் பஞ்சாயத்தா நடத்துகிறேன்... போங்கையா... போயி காவல் நிலையத்தில் புகார் கொடுங்க..." என்று அந்த மந்திரி முறையிட சென்றவர்களையே விரட்டியடித்துவிட்டு தீரஜ் பிரசாத்துக்கும் தகவல் சொல்லிவிட்டார். பிரபாவின் தந்தையின் மனநிலையை தீரஜ் பிரசாத் உணர்ந்தாலும் அவரிடம் இறங்கி பேச அவனால் முடியவில்லை. அவனுடைய குண இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை. தீரஜ் பிரசாத்துக்கு எதிராக எதுவும் செய்ய முடியா தன் கையாளாக தனத்தை நினைத்து பிரபாவின் தந்தை தனக்குள் வெந்து கொண்டிருந்தார். சூர்யாவும் தீரஜ்ஜின் முரட்டுத்தனமான அனுகுமுறையில் மேலும் கலவரமானாள். ஆனால் சூர்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தீரஜ் பிரசாத் மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தான் நினைத்ததை செய்து முடித்தாலும், அவனுடைய பிடிவாதத்தில் மறைந்திருக்கும் நல்ல எண்ணத்தை உணர்ந்தார். ஆனால் அதை பற்றி மற்றவர்களிடம் பேசும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து அமைதிகாத்தார். பிரபாவை டெல்லிக்கு கொண்டு சென்று இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களும் மருத்துவர்கள் அவளுடைய உடல்நிலையை நடக்கவிருக்கும் பெரிய அறுவை சிகிச்சையை தாங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள். இன்று இரவு ஏழு மணிக்கு பிரபாவிற்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. சரியாக ஆறு முப்பதுக்கு தீரஜ் பிரசாத் மருத்துவமனைக்குள் நுழைந்தான். பிரபாவிற்கு அறுவைசிகிச்சை செய்யவிருக்கும் அந்த பெரிய மருத்துவரும், அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் கார் நிறுத்தத்திற்கு வந்து தீரஜ்பிரசாத்தை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். அவர்களிடம் பிரபாவின் உடல்நிலையை பற்றி விசாரித்தவன் அவளை பார்க்க சென்றான். அவனுடைய ஆட்கள் யாரும் அவனுடன் வரவில்லை என்றாலும், அந்த மருத்துவமனையில் முக்கிய பதவியிலிருக்கும் பலர் தீரஜ்பிரசாத்தின் வரவு தெரிந்து அவன் பின்னால் வந்துவிட்டார்கள். பத்து பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் அவசரசிகிச்சை பிரிவை நோக்கி சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் தீரஜ்பிரசாத்தை, அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்த சூர்யா கவனித்துவிட்டாள். அவளை அறியாமல் எழுந்து நின்றவளின் உடல் நடுங்கியது. கால்கள் நகர்த்த முடியாமல் வேரோடிவிட்டன. சூர்யாவிற்கு அருகில் அமர்ந்திருந்த சூர்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும், பிரபாவின் தந்தை முத்துசாமியும் அதுவரை தீரஜ் பிரசாத்தை கவனிக்கவில்லை. சூர்யா எழுந்து நின்றதும் அவளை நிமிர்ந்து பார்த்த கிருஷணமூர்த்தி அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து அவளுடைய பார்வை சென்ற திசையை நோக்கினார். தீரஜ் பிரசாத்தை பார்த்து தன் மகள் நடுங்குவதை புரிந்துகொண்டவர் அவளுடைய கையை ஆதரவாக பற்றினார். தன் தந்தை அருகில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தவளாக அவருக்கு பின்னால் பதுங்கினாள் சூர்யா. அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட தீரஜ்பிரசாத் சூர்யாவின் செயலில் நொந்து போனான். தன்னை இதுவரை குழந்தை தனமாகவும், துருதுருப்புடனும், நப்புடனும் நோக்கிய கண்களில் இன்று பயத்தை கண்டதும் அவனுக்கு தன்னுடைய வாழ்க்கை முறை சரியானதுதானா என்ற சந்தேகம் முதல் முறையாக தோன்றியது. தன்னிலை மறந்து ஒரு நொடி சூர்யாவை பார்த்து தயங்கி நின்றவன், தன்னை சுதாரித்துக் கொண்டு பிரபாவின் அறைக்குள் மருத்துவருடன் நுழைந்தான். அதுவரை தலையை கையில் தாங்கியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரபாவின் தந்தை முத்துசாமி மகளின் அறையில் யாரோ நுழைவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். தீரஜ்பிரசாத்தின் முதுகு பகுதி அவர் கண்ணில் பட்டது. அவனுடைய தோரணை அவன் தான் தீரஜ்பிரசாத் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டது. அவருக்கும் கிட்டத்தட்ட சூர்யாவின் நிலை தான். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்தவர், நகரமுடியாமல் கால்கள் வேரோடி போனவராக சமைந்து நின்றார். அவர் எவ்வளவு நேரம் அப்படி நின்றாரோ தெரியாது. ஆனால் தீரஜ் மீண்டும் பிரபாவின் அறையிலிருந்து வெளியே வரும் வரை உறைந்த நிலையிலேயே இருந்தார். வெளியே வந்த தீரஜ் நேரடியாக முத்துசாமியிடம் வந்து நின்றான். அவர் தீரஜ்பிரசாத்தின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை விரும்பவும் இல்லை. ஆனால் அவரால் அவனிடம் நேரடியாக வாய் திறந்து பேசமுடியவில்லை. அவரை எது தடுத்தது....? அவனுடைய கம்பீரமான உருவமா... நிமிர்ந்த நடையா... நேர் பார்வையா... தெளிவான முகமா...? எது...? எது அவரை தடுத்தது....? அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவரால் அவனுக்கு முன் வாய் திறக்க முடியவில்லை. அவனுக்கு பின்னால் அவனை ஏசித் தீர்த்தவர் அவனுக்கு முன் வாயடைத்து நின்றார். "வணக்கம்... நான் தீரஜ் பிரசாத். உங்ககளுக்கு தெரிந்திருக்கும்...." "............." அவர் சிந்தனையில் கூட ஏதும் தோன்றவில்லை. சிந்திக்கும் திறனையும் இழந்தவராக அசையாமல் நின்றார். "உங்களோட மகளின் நிலைமைக்கு மறைமுகமாக நான் காரமாகிவிட்டேன். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.... என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகளை மீண்டும் பழையபடி குணமாக்கி தருவது என் பொறுப்பு...." "............." அவர் அப்போதும் எதுவும் பேசவில்லை. அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவரிடம் அசைவை எதிர்பார்த்து நின்றவன் அவரிடம் எந்த அசைவும் இல்லாததை கண்டு அங்கிருந்து நகர்ந்தான். வந்த வழியே திரும்பும் போது அவன் விழிகள் சூர்யாவை தேடின. அவள் கிருஷ்ணமூர்த்திக்கு பின்னால் தலை குனிந்தபடி நின்றாள். வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்ற தீரஜ் அன்று அந்த மருத்துவமனையிலேயே விஐபி அறையில் தங்கியிருந்தான். பிரபாவிற்கு இரவு பன்னிரெண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடித்துவிட்டு மருத்துவர் ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார். அனைவரும் பரபரப்புடன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கவலையுடன் நின்று கொண்டிருக்கும் போது, அவர் நேராக தீரஜ்பிரசாத்தை தேடி சென்றார். அவனும் மருத்துவர் வெளியே வரும் நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்திற்கு ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தான். "ஜி... ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி பயப்பட எதுவும் இல்லை. பதினைந்து நாள் மருத்துவமனையில் அப்செர்வேஷன்ல இருந்துவிட்டு, அதன் பிறகு நோயாளியின் உடல்நிலையை பார்த்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்து செல்லலாம்." "ரொம்ப நன்றி டாக்டர்... " தீரஜ் மனதார நன்றி சொன்னான். மருத்துவரை தொடர்ந்து வந்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை ஒருவித படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியும் முத்துசாமியும் . மருத்துவருடைய இந்தி பேச்சு புரியாமல் விழித்தார்கள். தீரஜ் அவர்களுக்கு நிலைமையை தமிழில் விளக்கினான். சூர்யா அருகில் வரவில்லை என்றாலும் தீரஜ் பிரசாத்தின் முகபாவத்திலிருந்து அவன் என்ன சொல்கிறான் என்பதை தூரத்திலிருந்தே அனுமானித்துவிட்டாள். அவளிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது. பிரபா மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாட்களும் சூர்யாவும் அவள் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் பிரபாவின் தந்தை முத்துசாமிக்கு உதவியாக இருப்பதற்காக டெல்லியிலேயே தங்கியிருந்தார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பிரபாவை பார்த்துக் கொண்டார்கள். அந்த நாட்களில் தீரஜ்பிரசாத்தும் டெல்லியிலேயே தான் இருந்தான். பதினைந்து நாட்களுக்கு பிறகு பிரபாவின் உடல் நிலை ஓரளவு முன்னேறியிருந்தது. தீரஜ் பிரசாத்தின் உதவியுடன் அவள் சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டாள். சூர்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் கோசிகாலன் வந்து சேர்ந்தார்கள். சூர்யாவிற்கு தன்னுடைய வேலையை தொடர விருப்பம் இல்லை. அதனால் அவள் கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னைக்கு புறப்பட தயாரானாள். "அப்பா... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் ஆஃபீஸ் போய்விட்டு வந்துவிடுகிறேன். என்னுடைய சர்டிஃபிகட்ஸ் எல்லாம் அங்கதான் இருக்கு. அதையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். அப்புறம் நம்ம ரெண்டு பேருமே சேர்ந்து சென்னைக்கு போய்விடலாம்." "சரி கண்ணு... பத்திரமா போய்விட்டு வந்துவிடு... நான் நமக்கு ட்ரைன் டிக்கெட் வாங்கி வைக்கிறேன்..." "இல்லப்பா... ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிவிடு... நான் சீக்கிரமா சென்னை போய் சேரனும்..." அவள் தீரஜ்பிரசாதத்தோடு சேர்த்து மதுராவையும் வெறுத்தாள். "சரி கண்ணு..." அவள் விருப்பத்திற்கு இசைந்தார் கிருஷ்ண மூர்த்தி. அலுவலகத்திற்குள் நுழைந்த சூர்யா, தன் இருக்கைக்கு செல்லாமல் நேராக தன்னுடைய நேரடி மேலாளர் சுந்தரிடம் சென்றாள். தன்னை வேலையிலிருந்து விடுவித்து தன்னுடைய சான்றிதழ்களை திருப்பி தருமாறு அவனிடம் கேட்டாள். "என்னம்மா... திடீர்ன்னு வேலையிலேருந்து விலகுறேன்னு சொல்றீங்க...! ஜிகிட்ட பேசினீங்களா...?" அவர் தீரஜ்பிரசாத்தும் சூர்யாவும் நட்புடன் பழகுவதை அறிந்திருந்ததால் என்ன முடிவெடுப்பது என்பது புரியாமல் தீரஜ்பிரசாத்தின் மனநிலை என்ன என்பதை அறிய முயன்றார். "இல்ல... அவங்ககிட்ட நான் பேசல... ஆனா நான் வேலையிலேருந்து விலக விரும்புறேன்..." "சரிம்மா... நான் ஏற்பாடு செய்றேன்...." மேலாளர் சுந்தர் சூர்யாவிற்கு சாதகமான பதிலை சொன்னார். "நன்றி சார்..." அவள் மகிழ்ச்சியாக அவளுடைய இருக்கைக்கு திரும்பினாள். சூர்யா அவளிடத்திற்கு திரும்பியதும், முதல் வேலையாக சுந்தர் தீரஜ்பிரசாத்தின் உதவியாளர் சுஜித்திர்க்கு விஷயத்தை தெரியப்படுத்தினான். இரண்டே நிமிடத்தில் தீரஜ்பிரசாத் சுந்தரை தொடர்பு கொண்டான். "ஹலோ..." "நமஸ்த்தே ஜி..." சுந்தர் தீரஜ்பிரசாத்தின் குரலை அடையாளம் கண்டுவிட்டு மரியாதையுடன் பேசினான். "என்ன விஷயம்...?" தீரஜ் சுருக்கமாக கேட்டான். சுந்தர், சூர்யா தன்னிடம் பேசிய விஷயத்தை தெளிவாக விளக்கி சொன்னான். அனைத்தையும் அமைதியாக கேட்ட தீரஜ் "சரி... சூர்யாவை ரிலீவ் பண்ணிவிடு... ஆனா இன்னிக்கு வேண்டாம்... நாளைக்கு ஆஃபீஸ் வரட்டும். நாளைக்கு கணக்கை முடித்து அனுப்பிவிடு..." அவனுடைய குரலில் சிறிதும் கலக்கம் இல்லை. "சரி ஜி..." சுந்தர் தொலைபேசியையே தீரஜ்பிரசாத்தாக பாவித்து மிக பவ்யமாக ரிசீவரை தாங்கியில் பொருத்தினான். பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் சிரமப்பட்டுவிட்டு உடனே அலுவலகத்திற்கும் வந்துவிட்டதால் ஏற்கனவே சோர்வடைந்திருந்த சூர்யா, சுந்தர் நாளை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு சொன்னதும் மிகவும் சோர்ந்து விட்டாள். 'எப்போதடா இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து சென்னை சென்று சேர்வோம்' என்று நினைத்தபடி களைப்பாக வெளியே வந்தவளுக்கு , ஷேர் ஆட்டோவில் ஏறி நசுங்கி கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்று சேர்வதற்கு மலைப்பாக இருந்தது. 'கால் டாக்ஸி'யில் ஏறி சொகுசாக பயணிக்கலாம் என்று நினைத்து 'கால் டாக்ஸி'க்கு கைபேசியிலிருந்து அழைப்புவிடுத்தாள். இரண்டே நிமிடத்தில் 'கால் டாக்ஸி' வந்துவிட நிம்மதியாக அதில் ஏறி அமர்ந்தவள், செல்லவேண்டிய இடத்தை ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் அசதியில் கண்களை மூடிவிட்டாள். கார் நிறுத்தப்படுவதை உணர்ந்து கண்விழித்த சூர்யா, அந்த பிரம்மாண்டமான மாளிகையை கண்டு திகைத்தாள். சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்தவள் "ஏய்... என்ன இது...? உன்னை நான் எங்கே போக சொன்னேன்... நீ எங்க வந்திருக்க...?" அவள் ஓட்டுனரிடம் ஆத்திரமாக கத்தினாள். அவன் பதில் சொலும் முன் "மேடம்... உள்ள வாங்க... " ஒரு ஆஜானுபாகுவான மனிதன் சூர்யாவை நெருங்கி மரியாதையுடன் சொன்னான். அவன் என்னதான் மரியாதை கொடுத்து பேசினாலும் அவனுடைய உருவம் அவனுக்குள் இருக்கும் மிருகத்தை சூர்யாவிற்கு தெளிவாக காட்ட அவள் அவனை எதிர்த்து பேச துணிவின்றி தயக்கத்துடன் அவன் பின்னால் நடந்தாள். அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் சூர்யாவிற்கு வியர்த்தது. அந்த அறையில் நிறைந்திருந்த பணக்காரத்தனம் அவளை மிரட்டியது. கடந்த நாட்களில் தீரஜ் பிரசாத்தின் உண்மை முகத்தை அறிந்துகொண்ட திகைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துகொண்டிருக்கும் நேரத்தில் தீரஜ்பிரசாத்தின் இந்த தாக்குதல் அவளை நிலைகுலைய செய்தது. 'எப்படி இங்கிருந்து வெளியேறுவது...?' என்று யோசித்தபடி சோபாவில் பதட்டமாக அமர்ந்திருந்தாள். தன்னுடைய பதட்டத்தை சற்றே குறைக்க எண்ணி தன் முன் கண்ணாடி கோப்பையில் வைக்கப்பட்டிருந்த பழரசத்தை சிறிது பருகினாள். பின் அதன் சுவையில் தன்னிலை மறந்து முழுவதையும் பருகினாள். இப்போது அவளுடைய பதட்டம் சிறிது குறைந்திருந்தது. தீரஜ் பிரசாத்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவள், அவனிடம் என்ன பேச வேண்டும்.... எப்படி பேசவேண்டும்.....? என்று யோசித்து தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள். தன் சிந்தனையில் மூழ்கியிருந்தவள், தன் முன் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். தீரஜ்பிரசாத் எதிர் சோபாவில் அமர்ந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை அருகில் பார்த்ததும் அவளுக்கு அவளுடைய தோழன் தீரஜ் மட்டும் தான் நினைவில் வந்தான். பிரசாத்ஜி அவள் நினைவிலிருந்து ஒரு நொடி மறைந்தே போய்விட்டான். அவள் இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளை பார்த்தபடியே வந்து எதிர் சோபாவில் அமர்ந்தான். "க்..ம்.." அவனுடைய கனைப்புசத்தம் அவளை நினைவுலகுக்கு கொண்டு வந்தது. 'அவன் தீரஜ் அல்ல... அது அவனுடைய பொய் முகம்... மனிதத்தன்மை சிறிதும் அற்ற, மிருக குணம் கொண்ட பிரசாத்ஜி மட்டும் தான் உண்மை... ' என்பதையும் பொட்டில் அறைந்து சொன்னது. சற்றே இளகிய அவள் மனம் மீண்டும் கடினப்பட்டது. இப்போது அவளுக்குள் இருந்த பயம் என்ன காரணத்தினாலோ காணாமல் போய்விட்டது. அவள் சற்றே நிமிர்ந்து அமர்ந்தாள். "ஊரைவிட்டு போவது என்று முடுவு செய்துவிட்டாய்.... ஆனால் நான் உன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமலே போக முடிவேடுத்துவிட்டாயே...! என்னுடைய கேள்விக்கு என்ன பதில்..?" அவனுடைய குரலிலும் முகத்திலும் எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் அவனுடைய பார்வையில் கூர்மை இருந்ததோ...! சூர்யாவால் எதையும் கணிக்க முடியவில்லை. "என்ன கேள்வி...?" அவளும் அவனை போலவே உணர்ச்சிகளை துடைத்துவிட்டு பேசத்தான் முயன்றாள். ஆனால் அவளை மீறி பழைய நினைவுகள் அவளை தாக்குவதை அவளுடைய முகம் பிரதிபலித்தது. தீரஜ் பிரசாத் மனதிற்குள் தன்னை மெச்சிக்கொண்டான். தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு "அதை கூட மறந்துட்டியா...?" என்றான்.

'உன்னை பற்றிய எல்லா விஷயத்தையும் மறக்க முடிந்தால்... அதை விட நல்ல விஷயம் எதுவும் இருக்க முடியாது...' அவள் மனதிற்குள் நினைத்தபடி அவனை முறைத்தாள். அதை புரிந்து கொண்டவனாக "உன்னால் எதையும் மறக்க முடியாது... சும்மா ஏன்டி குழப்பிக்குற...? சொல்லு... என்னை உனக்கு பிடித்திருக்கா... இல்லையா...? இப்பவே பதில் சொல்... " அவளால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது என்று முழுமனதாக நம்பி இறுமாப்புடன் அவளை மடக்கினான். தீரஜ் குரலில் இருந்த இறுமாப்பு சூர்யாவிற்கு பிரசாத்ஜியையும் அவனுடைய அடக்குமுறைகளையும் கண்முன் நிறுத்த, "நான் எதற்கு உனக்கு பதில் சொல்ல வேண்டும்...?" என்று முகத்தில் அலட்சியத்தை காட்டி கேட்டாள். "சூர்யா..." அவன் அதட்டினான். ஒரு நொடி அவன் முகம் சுருங்கி பின் இரும்பு போல் இறுகியது... அவனுடைய அதட்டலில் சூர்யா திடுக்கிட்டாலும், தீரஜ் அவளை எதுவும் செய்துவிடமாட்டான் என்கிற நம்பிக்கை அவள் மனதின் அடிஆழத்தில் இருந்து அவளுக்கு தைரியத்தை கொடுத்ததோ என்னவோ... அவள் அச்சமின்றி அவனுடைய கண்களை பார்த்தாள். அவன் கண்களில் லேசாக எட்டிப்பார்க்கும் வலியை கண்டுகொண்டாள். 'உனக்கும் வலிக்குமா...!? ' அவனது வலி அவளுடைய மனகாயத்தை மயிலிறகால் வருடி மருந்திடுவது போல் உணர்ந்தாள். "நீ ஏன் இப்படி பேசுறேன்னு எனக்கு புரியுது. அன்று மில்லில் நடந்ததை பார்த்து நீ பயந்துட்ட... அவனுங்க தப்பு பண்ணினவனுங்க... அவனுங்களுக்கு அப்படிப்பட்ட தண்டனை கொடுத்தால் தான் மற்றவங்களுக்கு பயம் இருக்கும்" "தப்பு பண்ணினவங்களுக்கு தண்டனை கொடுக்க நீ யார்...? பிரபா என்ன தப்பு பண்ணினா... நான் என்ன தப்பு பண்ணினேன்...? உன்னோட ஆளுங்க எங்ககிட்ட ஏன் அப்படி மோசமா நடந்துகிட்டாங்க...?" அவள் சீறினாள். உணர்ச்சி பெருக்கில் அவள் குரலும் உடலும் நடுங்கியது. அவன் முகம் சட்டென இலகுவானது. "அதுக்கு தான் உன்னிடம் மன்னிப்பு கேட்டேனே..." அவன் குரல் அடங்கிவிட்டது. "தப்பு பண்ணிவிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்டால் நீ விட்டுவிடுவியா...?" "தெரியாமல் நடந்த தவறென்றால் மன்னிக்க வேடியதுதான்..." "நீ தெரிஞ்சே தப்பு பண்ணிக்கிட்டு இருக்க... எல்லோரையும் அடக்கி அராஜகம் செய்ற..." "அராஜகம் செய்றேனா...?" "ஆமாம் அராஜகம் தான் செய்ற... " "தப்பு செய்றவங்களை தட்டி கேட்பது அராஜகமா...?" "தட்டி கேட்க நீ முதல்ல ஒழுங்கா இருக்கியா...? அதோடு மற்றவங்களை தட்டி கேட்கவும் தண்டிக்கவும் உனக்கு என்ன உரிமை இருக்கு...? " அவள் காட்டமாக கேட்டாள். அந்த கேள்வி அவனுடைய பொறுமைக்கு சவால்விட்டது. "எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..." அவன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அடிகுரலில் பதில் சொன்னான். "உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது...?" "எனக்கு எவனும் உரிமை கொடுக்க முடியாது. எல்லா உரிமையையும் நானே தான் எடுத்துக் கொண்டேன். இந்த மதுராவில் நான் வைத்ததுதான் சட்டம்... அதற்கு இப்போ என்னாங்குற...?" அவன் கடுப்படித்தான். "இதுதான் அத்து மீறல்... இந்த அத்துமீறலை என்னிடமும் அமல்படுத்த நினைக்கிறாயா... அது உன்னால் முடியவே முடியாது. என் மனமும் உன் பக்கம் சாயாது...." "என்ன சொல்ற...? " அவன் குரலில் அழுத்தம் கூடியிருந்தது. "உன்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிறேன்... உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறேன்... ஒருநாளும் உன்னை போல் ஒருவனை எனக்கு பிடிக்காது என்று சொல்கிறேன்..." என்று அவளும் முகத்தில் அடித்தது போல் அழுத்தமாகவே பதில் சொன்னாள். தீரஜ்பிரசாத்தின் முகம் அவமானத்தில் சிவந்துவிட்டது. அவளுடைய பதில் தீரஜ்பிரசாத்தின் தன்மானத்தை சீண்டி விட்டது. அவனை நிராகாரித்தவள் அவனுக்கு வேண்டவே வேண்டாம் என்று நொடியில் முடிவெடுத்துவிட்டான். "சரி... இனி ஒரு நொடி கூட நீ இந்த இடத்தில் நிற்கக்கூடாது. போ இங்கிருந்து..." அவனுடைய குரலில் இருந்த கடினம் அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது. அவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள். இனம் புரியாத வலி அவள் மனதை மென்று தின்றது. அவளுக்கு தீரஜ்ஜை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் பிரசாத்ஜியை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒருவர் தான் என்கிற சூழ்நிலையில் பிரசாத்ஜி மேலிருக்கும் வெறுப்பு தீரஜ் மேலிருக்கும் ஆசையை வென்று சூர்யாவை குழப்பி வேதனை படுத்தியது. மனதின் வலி உடலில் பிரதிபலித்தது. உடலின் சக்தியெல்லாம் வியர்வையாக வடிந்துவிட கால்கள் பின்னி நடக்கமுடியாமல் தள்ளாட்டத்துடன் சுற்றுசுவர் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அப்போது அவளை வழிமறித்து ஒரு கார் வந்து நின்றது. "மேடம்... உங்களை நீங்கள் எங்கு போகவேண்டுமோ அங்கு கொண்டு போய் விட சொல்லி உத்தரவு..." கார் ஒட்டி பணிவாகவே சொன்னான். அந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொண்டவளுக்கு ஏனோ அதை மீற தோன்றவில்லை. அந்த பெரிய மாளிகையில் தீரஜ்பிரசாத்தை சந்தித்த அறை ஜன்னலை நோக்கி பார்வையை திருப்பினாள். அதில் எந்த சலனமும் இல்லை. மனபாரம் அதிகமானது. அவள் அமைதியாக காரில் ஏறி அவளுடைய தந்தை தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்று இறங்கினாள். சூர்யா ஓட்டல் அறையிக்குள் நுழைந்ததும் அவளிடம் அவளுடைய சான்றிதழ்களையும், அவளை வேலையிலிருந்து விடுவிக்கும் ஆணையையும் நீட்டினார் கிருஷ்ணமூர்த்தி. நாளை கிடைக்க வேண்டிய கோப்புகள் இன்றே கிடைத்துவிட்டன... அதை கையில் வாங்கிய சூர்யாவிற்கு ஒன்று தோன்றியது.... 'தீரஜ்க்கும் அவளுக்கும் இருந்த கடைசி உறவு.... அவன் முதலாளி இவள் தொழிலாளி என்கிற உறவு... அதுவும் அறுந்துவிட்டது... எல்லாம் முடிந்துவிட்டது... தீரஜ் என்பவன் இனி அவளுடைய வாழ்க்கையில் இல்லை....' எதையோ இழந்துவிட்ட துக்கம் அவளை தாக்கியது. இது அவளாக விரும்பி ஏற்படுத்திக் கொண்ட பிரிவுதான். ஆனாலும் வலிக்கிறதே... தாங்கமுடியாமல் இதயம் கனக்கிறதே... தந்தைக்கு தெரியாமல் இருப்பதற்காக குளியலறைக்குள் சென்று குழாயையை திறந்துவிட்டுவிட்டு ஆத்திரம் தீர அழுது முடித்தவள் தலை குளித்து, அழுது வீங்கியிருந்த முகத்தை ஓரளவு சரி செய்து கொண்டு வெளியே வந்தாள். மனபாரம் சிறிதும் குறையவில்லை. ஆனால் இந்த பாரத்தை சுமந்துதான் ஆகவேண்டும் என்கிற உருதி மனதில் தோன்றிவிட்டது. குழந்தை மனம் சிறிது சிறிதாக பக்குவப்பட்டுக் கொண்டிருந்தது... போலீஸ்காரன் கண்களுக்கு தப்பிய ரகசியமும் இருக்க முடியுமா...? ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணமூர்த்தி சூர்யாவின் தவிப்பையும் தடுமாற்றத்தையும் கவனித்துக் கொண்டே தான் இருந்தார். அலுகலகத்திளிருந்து மகள் வாங்கிவரவேண்டிய கோப்புகள் அவர்கள் இருப்பிடம் தேடி வந்ததில் அவர் தன் பார்வையை கழுகு பார்வையாக்கி மகளை மேலும் உன்னிப்பாக கவனித்தார். அவருக்கு ஒரு விஷயம் விளங்கிவிட்டது. 'மகள் பிரபாவுக்காக மட்டும் அழவில்லை... வேறு ஏதோ ஒரு விஷயத்தில் பலமாக அடிவாங்கியிருக்கிறாள். அது என்ன....?' அவர் குழப்பத்தில் இருந்த நேரத்தில் மகள் அழுது வீங்கிய முகத்துடன் குளியலறையிலிருந்து வந்ததும் மேலும் கலவரமடைந்தார். என்னதான் அப்பாவுக்கு தெரியகூடாது என்று மகள் முகத்தை சீர் செய்துகொண்டு இயல்பாக இருக்க முயன்றாலும் மகளின் முகமாற்றம் தந்தைக்கு தெரியாதா...! கிருஷ்ணமூர்த்தி மகளை புரிந்து கொண்டுவிட்டார். அவரால் பொறுமையாக 'பிறகு பார்த்துக்கொள்லாம்...' என்று இருக்க முடியவில்லை. மகளை துருவ ஆரம்பித்துவிட்டார். அதற்கு மேல் தந்தையிடம் எதையும் மறைக்கும் நோக்கமில்லாத சூர்யா ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கிவிட்டாள். சூர்யா சொன்ன அனைத்தையும் கேட்டவருக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. "கண்ணு... கொஞ்சம் தண்ணி கொண்டுவா..." என்றார். அவரசமாக தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தந்தைக்கு கொடுத்தாள் சூர்யா. அதை வாங்கி மடமடவென பருகியவர், சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு... "ஏங்கண்ணு... அந்தமாதிரி இடத்துலையா (பேப்பர் மில்) கண்ணு உன்னை அடச்சு வச்சிருந்தானுங்க... அந்த பிரசாத்ஜியை பார்த்தா எனக்கே அவ்வளவு மோசமானவர் மாதிரி தெரியலை... நீ அவரை சாதாரண மனிதர் என்று நினைத்து பழகியதில் ஒரு வியப்பும் இல்லை கண்ணு..." அவர் ஆத்தாத்தப் பட்டார். "..............." "இன்னைக்கு வேற உன்னை அங்க கொண்டு போயிட்டானுங்களே...! நாம உடனே இந்த ஊர்லேருந்து போயிடனும் கண்ணு... " அவர் கண்ணில் அச்சம் தெரிந்தது. சூர்யாவின் முடிவும் அதுவே தான் என்பதால், சூர்யா அன்றே தன் பொருட்களை விடுதியிலிருந்து சேகரித்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டாள். மகள் எவ்வளவு பெரிய கண்டத்திலிருந்து தப்பியிருக்கிறாள்.... அவருக்கு இந்த விஷயத்தை மனதிற்குள் அடக்கி வைக்க முடியவில்லை. யாரிடமாவது உடனே கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது. இதை பற்றி யாரிடம் பேச முடியும்... மனைவியிடம் மட்டும்தான் மகளை பற்றி முழுமையாக சொல்ல முடியும்... சென்னை விமானநிலையத்தில் இறங்கியவுடன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் விளக்கும் பொறுமை இல்லாமல் கைபேசியில் சிந்தாமணியை அழைத்து சுருக்கமாக மூன்று வரியில் மகளுக்கு நடந்ததை சொல்லி முடித்தார். அதை கேட்ட சிந்தாமணி கண்ணீரும் கம்பலையுமாக மகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார். # # # சூர்யாவிற்கு சேரவேண்டிய கோப்புகளை அவளிடம் சேர்ப்பித்து அவளை வேலையிலிருந்து விடுவிக்கும்படி சுந்தருக்கு ஆணையிட்ட தீரஜ்பிரசாத் சோர்ந்து கட்டிலில் அமர்ந்தான். இதுவரை தோல்வியையே சந்திக்காதவன் அல்ல தீரஜ். அவன் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்து தோல்வியை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியக்காரன். ஆனால் இன்று அவன் கண்ட தோல்வி அவனுக்கு மரணடியாகிப் போனது... அதற்கான காரணம் 'சூர்யா...' சூர்யாவை அவனால் இழக்க முடியாது... முடியவில்லை... 'சூர்யா அவனை ஏன் உதறிச்சென்றாள்...? அவனை அவளுக்கு பிடிக்கவில்லையா...? ' அவன் யோசித்தான் 'நிச்சயமாக இல்லை... அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். அதை அவள் சொல்லவில்லை என்றாலும் அவளுடைய முகமும் கண்களும் தெளிவாக சொல்கின்றன...' அவன் மனமே அவனுக்கு பதில் சொன்னது... 'பிறகு என்ன...? ' இன்னொரு மனம் கேள்வியெழுப்பியது... 'அவளுக்கு அவனுடைய வாழ்க்கை முறை பிடிக்கவில்லை... அதை அவன் மாற்றிக்கொண்டால் சூர்யா சுலபமாக சமாதானமாகிவிடுவாள். ஆனால் அவன் மாற்றிக்கொள்வானா... ? ' 'நிச்சயம் மாட்டான்... எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்... அவனை பொறுத்தவரை அவனுடைய வாழ்க்கை முறை சரிதான்... இப்படிப்பட்ட வாழ்க்கையை தான் அவன் விரும்புகிறான். அவனால் இந்த நிலையிலிருந்து இறங்க முடியாது... இறங்கினால் அவனே இல்லாமல் போய்விடுவான்... அவனுக்கு சூர்யாவும் வேண்டும்... அவனுடைய அடையாளங்களும் வேண்டும்... ஆனால் இரண்டும் ஒன்றாக கிடைக்காது... அவளா...? அவனுடைய அடையாளங்களா...? இதுவா...? அதுவா...?' அவன் இதயத்தில் ஒரு யுத்தம் துவங்கிவிட்டது... மனபாரம் தாளாமல் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை ஆழமாக இழுத்து விட்டான். மனபாரம் சிறிதும் குறையவில்லை. அவளுடைய ஞாபகம் அவனை உலுக்கியது. அவன் நிலைகொள்ளாமல் எழுந்து பால்கனிக்கு சென்றான். தோட்டத்து இயற்கை காற்று சில்லென்று முகத்தில் மோதியது. அந்த காற்றின் வருடல் அவன் மனபாரத்தை குறைப்பதற்கு பதில் சூர்யாவின் நினைவை அதிகப்படுத்தியது. எங்கோ எப்போதோ கேட்ட திலிப்வர்மனின் பாடல் அவன் செவிகளில் இடைவிடமால் ஒலித்துக் கொண்டிருந்தது.

கனவெல்லாம் நீதானே! விழியே உனக்கே உயிரானேன்... நினைவெல்லாம் நீதானே! கலையாத யுகம் சுகம் தானே... பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அழைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கிறதே.... கனவெல்லாம் நீதானே! விழியே உனக்கே உயிரானேன்... நினைவெலாம் நீதானே! கலையாத யுகம் சுகம் தானே... சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளிபார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சும் பனி பூவாய் நீ குறுக எனை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எதுவரை சொல்லடி காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்... அன்றிலிருந்து தினம் தினம் சூர்யாவின் ஞாபகங்கள் தீரஜ் பிரசாத்தின் நெஞ்சை பிழிந்தது. முதன் முதலில் சென்னையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் கார் ஹெட் லைட் வெளிச்சத்தில்... மழையில் நனைந்து... பனி பூவாய் குறுகி அவள் நின்றது அவன் நினைவில் வந்தது. மீண்டும் அதே போல் ஒரு சூழ்நிலையில் அவளை கோசிகாலனில் பார்த்தது நினைவில் வந்தது. அன்று ஒரு குழந்தை திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவது போல் அவள் நடந்து கொண்டது நினைவில் வந்தது... அதற்காக அவள் மன்னிப்பு கேட்டது... அதன் பிறகு அவனுடன் தினம் தினம் காரில் பயணம் செய்தது.... அவன் அவளிடம் காதல் சொன்னது... அதற்கு அவள் அவளுடைய எதிர்பார்ப்பை சொன்னது... அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றியது... அவளை அவனுடைய இடத்திலேயே மோசமான சூழ்நிலையில் அவன் பார்த்தது... அதன் பிறகு அவனை பார்க்கும் போதெலாம் அவள் அஞ்சி நடுங்கியது... பின் அச்சத்தை துறந்து எதிர்த்துபேசி அவனை குற்றம் சொன்னது... கடைசியாக அவனுடைய காதலை அவள் தூக்கி எறிந்துவிட்டு போனது... என்று அவனுக்கு அவளுடைய ஞாபகங்கள் அனைத்தும் மாற்றி மாற்றி நினைவில் வந்து கொண்டே இருந்தது... அவன் மனம் அனலில் விழுந்த புழுவாக சுருண்டது. தீரஜ்பிரசாத்தால் சூர்யாவின் நினைவுகளை துறந்து மதுராவில் ஒரு இடத்தில் கூட இருக்க முடியவில்லை. எங்கும் எதிலும் அவள் நிறைந்திருந்தாள். அவள் நினைவுகள் அவனை விடாமல் துரத்தியது. அவன் ஓடினான்... விரண்டு ஓடினான்... கடல் கடந்து கண்டம் கடந்து ஐரோப்பியாவிற்கு ஓடினான்... உள்ளே வேரூன்றிவிட்ட அவளை பிடுங்கியெறிந்துவிடும் வெறியுடன் ஓடினான்... அது அவனால் முடியுமா...? முடியும் என்றால் அதை அவன் மதுராவிலேயே செய்திருக்க முடியுமே...! எதற்காக ஓட வேண்டும்...? உலகையே கட்டியாள புறப்பட்ட சர்வாதிகாரி பெனிடோ முசோலினி கிளாரேட்டா பெட்டகி என்ற பேரழகியை உயிருக்குயிராக நேசித்தான். ஒரு முறை முசோலினி கிளாராவை பற்றிக் கூறியது... "என் வாழ்வின் வசந்தம் கிளாரா! என் இளமை அவள்! என் வாழ்வில் நான் அடைந்த மிக இனிமையான செல்வம்" ஆனால் முசோலினியின் அழிவிற்கு முதற்படி அவன் கிளாரா மேல் கொண்ட காதல்... கட்டுக்கடங்காத காதல்... பெனிடோ முசோலினி, ஜோசப் ஸ்டாலின், அடால்ஃப் ஹிட்லர், ஈரான் மன்னன் ஷா போன்ற உலகையே ஆள நினைத்த சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் 'காதல்... பெண்...' என்னும் மந்திரத்தில் சிக்கி தவித்தவர்கள் தான். அப்படி இருக்க தீரஜ் பிரசாத் மட்டும் தப்பிவிட முடியுமா... அவனும் சிக்கி தவித்தான்.... சூர்யாவின் நினைவு மனதை அழுத்த விழிபிதுங்கினான்... சென்னை வந்து சேர்ந்த சூர்யாவை அவளுடைய தாய் வாரி அணைத்துக் கொண்டாள். "ஆத்தா வீரம்மாகாளி... எம்பொண்ண என்னுகிட்ட பத்தரமா கொண்டு வந்து சேத்துட்டடி அம்மா...... வைகாசி மாசம் எம் புருஷனுக்கு மொட்ட போட்டு, எம் மகளுக்கு பூமுடி எடுத்து உனக்கு பொங்கல் வக்கிறேம்மா... இனிமே எம் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுடி ஆத்தா....." சிந்தாமணி அவளுடைய குலதெய்வத்திடம் முதலில் பேசிவிட்டு பிறகு மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள். "என்ன கண்ணு... அப்பா என்னென்னவோ ஃபோன்ல சொன்னாரே... உன்ன எதுக்கு கண்ணு அந்த ஆளு கடத்தினாறு...? அந்த மாதிரி ஆளோட உனக்கு எதுக்கு கண்ணு சகவாசம்...? " "அவன் என்னை ஏமாத்திட்டாம்மா... அவன் தான் அந்த பிரசாத்ஜின்னு எனக்கு தெரியாது... என்னை நல்லா ஏமாத்திட்டாம்மா... அவனோட உண்மையான முகம் தெரிஞ்சிருந்தா நான் அவனோட பழகியிருக்கவே மாட்டேன்..." சிந்தாமணியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆத்திரம் தொண்டையை அடைக்க அவள் கேவி அழுதாள். "என்ன கண்ணு... எதுக்கு கண்ணு நீ அழுவுற.... ஐயையோ... நீ கலங்கினா என்னால தாங்க முடியுமா...? நா அழுதா என்ன திட்டுவியே... இப்ப நீயே அழுவலாமா...?" சிந்தாமணி மகளின் கண்ணீரை தாங்க முடியாமல் பதறினாள். "எனக்கு தெரியும் கண்ணு... நீ இந்த மாதிரி ஆளுக்களோட பழக மாட்டேன்னு... ஏதோ நம்ம கெட்ட நேரம் நீ அந்த ஊருக்கு போகணும்... அந்த ஆளு கண்ணுல படனும்... நம்ம இதெல்லாம் அனுபவிக்கனுமுன்னு தலையில எழுதியிருந்திருக்கு... அதை யாரால மாத்த முடியும்... ஏதோ... சனியன் இத்தோட விட்டுதேன்னு நெனச்சுக்க..." என்று மகளுக்கு சொல்வது போல் தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டாள் சிந்தாமணி. சூர்யா முன்பு போல் படபடப்பாக யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. பெற்றோருக்கு அறிவுரை சொல்வதை சுத்தமாக விட்டுவிட்டாள். அவர்கள் எது சொன்னாலும் அதுவே அவளுக்கு வேதவாக்கானது. சிரிப்பை மறந்தேவிட்டாள். அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. மனதை ஒருநிலை படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டுவிட்டாள். அது முழுக்க முழுக்க தீரஜ் பிரசாத்தின் நினைவுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் இருக்கும் நல்ல குணங்களை சுகமாக அசைப்போடும் மனது, அவனுடைய மற்றொரு முகத்தின் நினைவுகளை அசை போடும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும். மகளின் மெலிந்த உடலும், சோர்ந்த முகமும் எப்போதும் சிரிப்பை துளைத்துவிட்டு விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கும் நிலையம் பெற்றோரை வருத்தியது. அவளை சகஜமாக்க நினைத்து அவர்கள் பேச்சு கொடுத்தால் அந்த நேரம் மட்டும் தன்னை சகஜமாக காட்டிக்கொள்ளும் சூர்யா சில நிமிடங்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவாள். 'எத்தனை நாள் இப்படியே இருப்பாள்... நிச்சயம் சில நாட்களில் பழைய சூர்யாவாக மாறிவிடுவாள்..' என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாட்கள் தான் நகர்ந்து கொண்டிருந்தன. சூர்யாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய அடி மனதில் இருக்கும் காதல் அவளை சகஜமாக இருக்க விடாமல் படுத்தியது. அதே நேரம் தீரஜ் பிரசாத்தின் கையாட்களின் அநாகரீகமான பேச்சும், நடத்தையும், கொலைவெறி தாக்குதலும் அவன் மீது வெறுப்பை எற்படுத்திவிட்டது. அவள் இந்த இரண்டு உணர்வுகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்த கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டத்தில் மௌனத்தை கலைத்து மகளிடம் பேச்சை ஆரம்பித்துவிட்டார். "கண்ணு... உனக்கு அந்த மனுஷன்... அவர் பேரு என்ன... ஆங் பிரசாத்ஜி... அவரை பிடிச்சிருந்தா சொல்லு... நான் அவர்கிட்ட பேசி உன்னை அவரோட சேர்த்து வைக்கிறேன்... உன்னை கல்யாணம் செஞ்சுக்க அவருக்கு விருப்பம்ன்னு அவர் சொன்னாதா நீதானே சொன்ன... அவர் எந்த ஆட்சேபனையும் சொல்ல வாய்ப்பு இல்ல... நீ சரின்னு சொன்னா உடனே கல்யாணம் தான்... சொல்லு கண்ணு... உன்னோட விருப்பம் என்னன்னு வெளிப்படியா சொல்லிடு கண்ணு..." "..................." அவள் மெளனமாக இருந்தாள். "கண்ணு... இது நீ சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் கண்ணு... இப்போ தப்பான முடிவு எடுத்துட்டா வாழ்க்கையே தப்பாயிடும்... சொல்லு உனக்கு அந்த மனுஷன் மேல விருப்பமா... சொல்லு..." அவர் எப்படியும் இன்று சூராவை பேச வைத்துவிட வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பேசிக்கொண்டிருந்தார். "......................." "நீ வேணுன்னா அவர்கிட்ட ஒரு தடவ போன்ல பேசி பார்க்கிறியா..." "வேண்டாம்பா.... நான் அவனை மறக்க முயற்சி செய்றேன்... ஆனா அது முடியாம சிரமப்பட்றேன்..." "அப்படின்னா...?" "இனி அவன் என் வாழ்க்கைல இல்லவே இல்ல... அது மட்டும் உறுதி..." சூர்யாவின் உறுதியான பேச்சு கிருஷ்ணமூர்த்திக்கு தெம்பு கொடுத்தது. அவருக்கும் மகளை ஒரு தாதாவிற்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் மகளுக்காக இறங்கி வந்தார். இப்போது மகளே நல்ல முடுவு எடுத்துவிட்ட பிறகு என்ன கவலை.... அவர் மகளின் மனதையும் கவனத்தையும் வேறு திசையில் திருப்பினால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தார். வேலைக்கு அனுப்பினால் அவள் வேளையில் கவனம் செலுத்தி தீரஜ்ஜை மறக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அங்கும் தீரஜ் போல் எவனாவது வந்து தொல்லை கொடுத்தால் இவள் தாங்க மாட்டாள். அதனால் 'பாதுகாப்பாக ஒரு நல்ல பையன் கையில் பிடித்து கொடுத்துவிட்டால் பிறகு அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்' என்று கணக்கு போட்டார். சிந்தாமணியும் அந்த கணக்கு தான் சரி என்று சான்றிதழ் வழங்கினாள். பிறகு என்ன... சூர்யாவின் கருத்தை அறியாமலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது.

சூர்யாவின் ஜாதகம் பல வரங்களை தட்டிகழிக்க, வரங்கள் பிடிக்காமல் கிருஷ்ணமூர்த்தி சிந்தாமணி தம்பதியர் மீதி வரங்களை தட்டிக் கழித்தனர். இப்படியே சூர்யாவிற்கு மாப்பிளை தேடும் படலம் மாத கணக்கில் நீடித்தது. அந்த நேரத்தில் சிந்தாமணி ஒரு யோசனை சொன்னாள். "என்னங்க... நேத்து கோவில்ல கபிலன் தபியோட அத்தையை பார்த்தேன். அவருக்கும் இன்னும் பொண்ணு அமையலையாம். நாம வேணுன்னா இன்னொரு தடவ ஆள் விட்டு கேட்டு பார்க்கலாமா...?" "அவங்களுக்கு விருப்பமைல்லைன்னு ஒரு முறை சொல்லிவிட்டாங்க. பிறகு எப்படி அவங்ககிட்ட நாமளா பேசுறது...? அது சரிவராது சிந்தா..." "இப்போ நம்ம சூழ்நிலை சரியில்ல... சூர்யா நமக்கு ஒரே பொண்ணு.... அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையிறது நமக்கு ரொம்ப முக்கியம்... சூர்யாவுக்கு அந்த பையன் பொருத்தமா இருப்பான்... இதையெல்லாம் யோசிச்சு நாம கொஞ்சம் இறங்கி போனா தப்பில்லைங்க..." "சரி சிந்தா... நான் தரகர்கிட்ட சொல்லி பேசி பார்க்க சொல்றேன்..." அவர் அரைமனதாக சம்மதித்தார்.

No comments:

Post a Comment