Thursday 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 6


மிதமான குளிர்... மெல்லிய வெளிச்சம்... மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு பூவால் அலங்கரிக்கப்பட்ட உயர்தர அறை... அதில் ஈரம் காயாத மஞ்சள் கயிறை கழுத்தில் சுமந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் அருகில், மருதாணி சிவப்பேரியிருந்த அவள் கரத்தை வருடியபடி அமர்ந்திருக்கும் கணவன். சூர்யாவிற்கு இந்த சூழ்நிலை இனியமையாக இல்லாமல் கசந்தது. கணவன் ஆசையாக கையை வருடுவது சுகமாக இல்லாமல்... எரிச்சலாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை.... 'இதுவரை எதற்கும் கட்டாயப்படுத்தாத தாய் தந்தை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி கட்டாயப்படுத்திவிட்டார்களே...! அதுவும் எப்படி.... விஷ கோப்பையையை அவளுக்கு முன்னால் வைத்து 'திருமணத்திற்கு சம்மதம் சொல் அல்லது இந்த விஷத்தை உன் கையாலேயே எங்களுக்கு கொடுத்து கொன்றுவிடு...' எப்பேர்பட்ட வார்த்தைகள்...! அவளால் முடியுமா...? பெற்றவர்களை கொன்றுவிட்டு அல்லது அவர்களது மரணத்திற்கு காரனமாகிவிட்டு அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா...? வாழ வேண்டாம்... செத்துவிடலாம் என்றாலும் அவளுடைய மரணம் பெற்றோரை எப்படி பாதிக்கும் என்பதை நினைத்தால் அவளால் சாகவும் முடியவில்லையே.... என்ன செய்வது...? என்ன செய்ய முடியும் அவர்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும்....'

கேட்டாகிவிட்டது... பெற்றோரின் நிம்மதிக்காக 'என்றாவது ஒரு நாள் தனக்கு நிம்மதி கிடைக்கும்...' என்று நம்பிக்கொண்டிருந்த அவளது நம்பிக்கையையை ஒரேடியாக குழி தோண்டி புதைத்தாயிற்று... அவளுக்குள் முழுமையாக புதைந்திருக்கும் ஒருவனை இன்னும் ஆழமாக உள்ளுக்குள் புதைத்துவிட்டு... மற்றொருவனுக்கு கழுத்தை நீட்டியாயிற்று... அவனும் உரிமையுடன் அவளுடைய கையை பிடித்துக் கொண்டிருக்கிறான். இந்த நரக வேதனையை அவள் சகித்து தான் ஆக வேண்டும்... வாழ்க்கை முழுக்க... "வாவ்... என்ன கலர்... என்ன ஹைட்... என்ன ஸ்டைல்... என்னதான் சொல்லு.... சூர்யாவுக்கு நிகர் சூர்யா தான்... யாரும் உன்கிட்ட நிக்க முடியாது... ஐ லவ் யு டியர்..." அவளுக்கு அவனை சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிந்தும், கபிலன் புது மனைவியின் கையை விடாமல் பிடித்தபடி அவளை சீண்டினான். "........." அவளிடமிருந்து பதில் வரவில்லை. 'திமிர்... உடம்பெல்லாம் திமிர்... இந்த திமிரை அடக்கத்தானே இந்த திருமணமே...' அவன் உதட்டில் ஏளன புன்னகை பூத்தது... "என்ன எதுவுமே பேச மாட்டேங்கிற...? பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு அதிகமா பேசின... இப்போ என்ன ஆச்சு...? சரி விடு... மாப்பிள்ளை கிடைக்காம ரொ....ம்ப நாள் தேடி... தேடி... காஞ்சுபோய் உன்னோட லெவல் என்னன்னு தெரிஞ்சுட்டுருப்ப... எப்படி பேச்சு வரும்...?" அவன் வேண்டும் என்றே அவளை காயப்படுத்தினான். அன்றொரு நாள் அவளிடம் அவன் பட்ட அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொண்டான். சூர்யாவை திருமண வியாபாரத்தில் 'நல்ல உருப்படி...' என்று கபிலன் தேர்வு செய்திருந்தாலும், தான் அவளிடம் பட்ட அவமானத்திற்கு அவளிடமே பழிதீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை கூடுதல் பயன்பாடாக நினைத்துக் கொண்டான். அதனால் அவ்வப்போது அவளிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவளை காயப்படுத்த முனைவான். அதற்கெல்லாம் சூர்யா காயப்பட்டுவிடவில்லை. அவள் மனதில் ஏற்கனவே மிகப்பெரிய ரணம் இருக்கிறது. இவன் பேச்செல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் அவன் அவளிடம் உரிமை பாராட்டுவதை தான் அவளால் சகிக்க முடியவில்லை. அவனிடம் சிக்கியிருந்த கையை மெதுவாக உருவிக்கொண்டு கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றுகொண்டாள். அவன் பேச்சில் காயமடைந்துதான் தனிமையை நாடுகிறாள் என்று நினைத்த கபிலனின் முகத்தில் வெற்றி புன்னகை பூத்தது... 'ஹா... என்னையா அவமானப்படுத்தின...? எம் மூஞ்சி ஊறவச்ச உளுந்து வடையா...! இருக்குடி உனக்கு... முதலிரவுலேயே ரொம்ப காய்ச்ச வேண்டாம்... வாழ்க்கை முழுக்க என்னோட தானே இருக்க போறா... அப்புறம் பார்த்துக்கலாம்....' என்று நினைத்தவன் அவளை சமாதானம் செய்ய முடிவு செய்து அவளிடம் நெருங்கினான். "என்ன சூர்யா...? கோவமா...? சாரிடா செல்லம்... முதல் நாளே உன்ன காயப்படுத்திட்டேன்..." என்று சொல்லிக்கொண்டே அவளை பின்னாலிருந்து அணைத்தான். அவனுடைய ஸ்பரிசம் அவளை தீயாய் சுட அவள் பதறி விலகினாள்" அவளுடைய விலகலில் எரிச்சலடைந்தவன் அவளை முறைத்தான். "என்ன...?" என்று கடுமையான முகத்துடன் அவளிடம் வினவினான். "பிடிக்கல..." ஒற்றை வார்த்தையாக அவளிடமிருந்து பதில் வந்தது. "என்ன பிடிக்கல...?" அவன் விடாமல் கேட்டான். "உங்கள பிடிக்கல..." அவளும் அழுத்தமாகவே பதில் சொன்னாள். ஆனால் அந்த பதிலை கேட்டவனின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது. அவளுடைய பதில் அவனை மிருகமாக்க "உனக்கு பிடிச்சா என்ன... பிடிக்கலன்னா எனக்கு என்னடி...? எனக்கு பிடிச்சிருக்கு... அது போதும்..." என்று சொல்லி அவளை கட்டாயப்படுத்தி கணவனின் உரிமையை நிலைநாட்டினான். தினமும் இதே கதை தொடர்ந்தது. மாமனார், மாமியார், கணவன் என்று ஒரு முழுமையான குடும்பத்திற்குள் சூர்யா இருந்தாலும் அவள் தனிதீவில் இருப்பது போல் உணர்ந்தாள். மாமனார், மாமியார் அவளிடம் கடுமையாகவும் நடந்துகொள்ளவில்லை கரிசனமாகவும் நடந்துகொள்ளவில்லை. கபிலன் அவளிடம் அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், அவளை காயப்படுத்துவதர்காகவும் மட்டுமே பேசினான். மற்றபடி அவளை ஒரு மனித பிறவியாக அவன் நினைக்கவே இல்லை. இப்படியே எந்திரதனமாக ஒரு மாத காலம் ஓடிவிட்டது... கபிலன் அன்று மிகவும் உற்சாகமாக வீட்டிற்கு வந்தான். "அம்மா... அம்மா..." உள்ளே நுழையும் போதே அவனுடைய அம்மாவை சத்தமாக அழைத்தபடி வந்தான். சமயலறையில் செக்கு மாடாக சுழன்றுகொண்டிருந்த சூர்யாவும் அவனுடைய கூச்சலை கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். "என்னப்பா...?" "நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்தது இன்னிக்கு எனக்கு கிடச்சிருக்கும்மா..." "அப்படியா... ரொம்ப சந்தோஷம்பா... என்ன விஷயம்...?" "எனக்கு மதுராவுல கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை கிடைத்திருக்கு... முன்பு சூர்யா வேலை பார்த்த அதே கம்பெனி தான்..." சூர்யாவிற்கு தலையில் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. "இந்த கம்பெனில வேலை வாங்கணும் என்பது என்னோட ரொம்ப நாளைய கனவும்மா... இந்தியாவிலேயே நம்பர் ஒன் கெமிக்கல் ஃபேக்டரி இது தான். நான் இப்போ வாங்குற மாதிரி நான்கு மடங்கு சம்பளம் அதிகம் கிடைக்கும்... " அந்த நேரம் வெளியே சென்றிருந்த அவனது தந்தையும் "என்னப்பா சமாசாரம்... எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க...?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார். அவருக்கு விளக்கம் அளித்தவன் பேருக்கு கூட சூர்யாவின் பக்கம் திரும்பவில்லை. "அம்மா... அவள ஏதாவது நல்ல ஸ்வீட் செய்ய சொல்லும்மா..." என்று தாயிடம் சொல்லி மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு சட்டை பட்டனை கழட்டியபடி அவனுடைய அறையில் நுழைந்தான். அந்த அளவு தான் அவன் சூர்யாவை மதித்தான். இதுவரை சூர்யா அவனிடம் தானாக பேசியதில்லை. ஆனால் இன்று அப்படி பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லாமல் கபிலனை தொடர்ந்து சூர்யா அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள். "இங்க என்ன பண்ற...? ஸ்வீட் செய்ய சொன்னேனே... செய்யலையா...?" அதிகாரமாக வினவினான். என்னவோ அவளுக்கான இடம் சமையலறைதான் என்பது போல... இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டப் பின் எதிர்த்து சண்டை போட்டு எதை சாதிக்க போகிறோம் என்கிற விரக்தியில் "உங்ககிட்ட பேசணும்..." என்று அமைதியாகவே ஆரம்பித்தாள் சூர்யா.

"என்னத்த பேசப்போற...?" "மதுராவுக்கு நாம போக வேண்டாம்..." "ஹா...ஹா... மதுராவுக்கு நாம போறதா...! ஹேய்... எனக்கு மட்டும் தான் அங்க வேலை கிடைச்சிருக்கு... நீயும் என்னோட ஓட்டிகிட்டு கிளம்புற... ஒட்டுண்ணி..." அவன் அவளை மட்டம் தட்டினான். அவளுக்கு முகத்தில் அடிவாங்கியது போல் ஆனது. எதுவும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறி சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தாள். 'எப்படியோ நாம் மீண்டும் மதுரா செல்ல தேவையில்லை... அதுவே போதும்...' அவள் மனம் சமாதானம் அடைய முயன்று முடியாமல் தோற்றது. அவளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.... அமைதியை தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த தீரஜ்பிரசாத் இப்போதுதான் தாயகம் திரும்பியிருந்தான். அவன் மதுராவில் கால் பதிக்கும் போது அவனுக்குள் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிகொண்டிருந்த மென்மையான உணர்வுகளை தூக்கியெரிந்துவிட்டு ஒரு முழுமையான இரும்பு மனிதனாக திரும்பியிருந்தான். ஏற்கனவே தீரஜ் மதுராவில் தவறு செய்பவர்களை சகிக்க மாட்டான். தவறு செய்பவர்களுக்கு அதிகமான அபராதங்களை விதிப்பான்... அதை கட்ட தவறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பான். ஆனாலும் தெரியாமல் நடந்த சில தவறுகளை மன்னிப்பான். ஆனால் இப்போது அவன் மன்னிப்பு என்ற வார்த்தையே அறியாதவன் போல நடந்துகொண்டான். தப்பு செய்பவர்களுக்கு பகிரங்கமாக தண்டனை கொடுத்து நிறைவேற்றினான். கையாட்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். அவனிடம் நெருங்கி பேசுவதற்கே அஞ்சும் அளவிற்கு அவன் முகம் நெருப்பு தணலாகவே இருந்தது... அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தீரஜ்பிரசாத்தின் உதவி தேவைப்பட்டதால் அவனை தட்டிகேட்கும் துணிவின்றி அதிகார வர்க்கம் மௌனித்துவிட தீரஜ்பிரசாத்தின் கெடுபிடிகள் அதிகமானது. அதனால் அவனுடன் இருப்பவர்கள் மட்டும் அல்லாது மதுரா மக்களே ஒருவித பயத்துடனே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் சூர்யா மீண்டும் மதுராவிற்கு பிரவேசித்தாள்.... # # # மாலை நேரம்... சூரியன் செவ்வானத்தில் புதைந்து கொண்டிருப்பதை வெறித்து பார்த்தபடி மொட்டை மடியில் கையில் காய்ந்த துணிகளுடன் நின்று கொண்டிருந்தாள் சூர்யா. "என்ன சூ...ர்யா... இங்க நின்னு யாரை பற்றி கனவு கண்டுட்டு இருக்க...? உன்னோட கனவு நாயகனை பற்றியா...? ஹா... ஹா... உன் கனவு கனவாவே போச்சு... கடைசி வரைக்கும் நீ விரும்பின... சாரி... சாரி... விரும்புற மாதிரி ஒரு ஆ...ண் மகனை பார்க்கவே இல்ல பாவம்... ஒருவேள அப்படி யாரும் உன் கண்ணுல சிக்கியிருந்தா விட்டுருக்கவே மாட்ட இல்ல... எப்படியும் வளச்சு பிடிச்சிருப்ப..." அவனுடைய வார்த்தைகளில் இருந்த அம்பு சூர்யாவை குத்தத்தான் செய்தது. அவளே தீரஜ்ஜை மறக்க முயன்றாலும், இவன் 'தான் என்ன செய்கிறோம்...' என்று புரியாமலே அவள் மனதில் புதைத்து வைத்திருக்கும் விஷயங்களை கிளறிக் கொண்டிருந்தான். அவன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொண்டிருந்தாலும், ஜடம் போல் உணர்ச்சிகளை துடைதெரிந்துவிட்டு நடமாடிக்கொண்டிருக்கும் சூர்யா நாளடைவில் ஓரளவேனும் அவனை அனுசரிக்க முயன்றிருக்கலாம்... ஆனால் அவன் அதற்கான வாய்ப்பை அவளுக்கு கொடுக்கவே இல்லை. அவனுடைய வார்த்தையடிக்கு எப்போதும் போல் இன்றும் சூர்யாவிடமிருந்து பதில் வரவில்லை. "உன்னோட துணிமணிகளை பெட்டியில் எடுத்து வைத்துகொள். இன்று இரவு பத்து மணிக்கு ட்ரைன்..." அவன் அவளிடம் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் கையில் சிகரெட்டை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியின் மறு கோடிக்கு சென்றுவிட்டான். இந்த நிமிடம் வரை மதுரா பயணத்தை பற்றி எதுவும் அறிந்திடாத சூர்யா அவன் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் உடலும் மனமும் இறுகி கற்சிலையாக சமைந்துவிட்டாள். அவள் வாழ்க்கை இருண்டதுபோல் வானமும் இருட்டிக்கொண்டு வந்தது... வருங்காலத்தில் அவள் சந்திக்கவிருக்கும் சோதனைகளை அறிந்த இயற்கை மழைத்துளியை கண்ணீராக வடித்தது.... மழையில் நனைகிறோம் என்ற உணர்வே இல்லாமல் நின்று கொண்டிருந்த சூர்யாவை கபிலன் உலுக்கினான்... "அறிவுகெட்ட மண்டே... நீதான் எருமைமாடு மாதிரி மழையில நிக்கிறேன்னா... எதுக்கு காஞ்ச துணிய திரும்ப ஈரமாக்கிகிட்டு நிக்கிற...? கீழ இறங்கி வந்து தொல...." கபிலன் சூர்யாவிடமிருந்து எந்த எதிர்பும் வராததால் நாளுக்கு நாள் வார்த்தைகளில் அனலை ஏற்றிக் கொண்டிருந்தான். அவன் பேசிய வார்த்தைகள் சூர்யாவிற்கு வலிக்கத்தான் செய்தது. ஆனால் அவளுக்கு ஏனோ அவனை திருப்பி அடிக்க தோன்றவில்லை. ஒரு வகையில் அவனுக்கு அவள் தீங்கிழைத்திருக்கிறாள்... அவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமப்பவள் அவனை மனதில் சுமக்கவில்லை. அவனுடைய கட்டாயத்தின் பெயரில் தான் அவள் அவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்றாலும், அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில அசம்பாவிதங்களை அவள் அவனிடம் விளக்கியிருக்க வேண்டும். அதை அவள் செய்யவில்லை. அந்த குற்றத்திற்காக அவனுடைய கடும் மொழியை சகித்துக் கொண்டாள். அன்று இரவு பத்து மணிக்கு நெஞ்சம் நிறைய திகிலுடன் சூர்யா கபிலனுடன் மதுராவிற்கு ரயில் ஏறினாள். முதல் முறை மதுரா செல்ல ரயில் ஏறியது அவள் நினைவில் வந்தது... அன்று இன்று போல் சூர்யாவின் மனதில் 'மதுரா சென்றவுடன் என்ன நடக்குமோ...' என்ற திகில் இல்லை. 'மதுரா எப்படி இருக்கும்... அங்கு உள்ள மக்கள் எப்படி பழகுவார்கள்... அவர்களில் கலாச்சாரம் என்னவாக இருக்கும்...' இப்படி பல கேள்விகள் மனதில் எழ மிகுந்த ஆர்வத்துடன் தன்னந்தனியாக மதுராவிற்கு பயணம் செய்தாள்... அந்த பயணம் ஒரு இனிமையான பயணம்... ஆனால் அதே ஊருக்கு அவளுடைய இன்றைய பயணம் கொடுமையானது... மிகக் கொடுமையானது... விடியற்காலை நான்கு மணிக்கு ரயில் மதுரா சந்திப்பில் நின்றது. களைத்த முகத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது உடைமைகளை சுமந்து கொண்டு ரயில் பெட்டிகளிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாக கபிலனும் முண்டியடித்துக் கொண்டு இறங்கினான். கீழே இறங்கிய கபிலன் தன்னை தொடர்ந்து தன் மனைவியும் இறங்கியிருப்பாள் என்ற நம்பிக்கையில் திரும்பிப் பார்த்தான் அவள் பெட்டியிலிருந்து இறங்க காத்திருப்பவர்கள் அனைவருக்கும் பின்னால் நின்று கொண்டிருந்தாள். 'கூட்டம் கொஞ்சம் இறங்கட்டும்... அதன் பிறகு நாம் இறங்கலாம்...' என்று அவள் மனதில் நினைப்பது அவனுக்கு கேட்க வாய்ப்பில்லை தான். ஆனால் மனைவியின் குணத்தை புரிந்து கொண்டிருந்தால், அவள் நினைப்பதை அவன் ஊகித்திருக்க முடியும். அது முடியாததால் முகம் கடுத்தான்... 'சோம்பேறி... சோம்பேறி... ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாத மண்டு... ' அவன் மனதிற்குள் வசை பாடினான். கூட்டம் குறைந்த பின் கீழே இறங்கியவள் ரயில் நிலையத்தை கண்களால் அலைந்தால். அன்று போலவே இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த ரயில் நிலையம். அன்று அந்த அழகை ஆர்வத்துடன் இரசித்தவளை இன்று அதே அழகு அச்சுறுத்தியது... இந்த அழகுக்கு யார் காரணம் என்கிற கேள்வி எழுந்து அதற்கான பதிலும் மனதில் உதையமானது.... 'தீரஜ் பிரசாத்....' மின்னல் பாய்ந்தது போல் மனதிற்குள் 'சுரீர்' என்று ஒரு வலி தோன்றியது... 'இறைவா... அவனை மட்டும் என் கண்ணில் காட்டிவிடாதே... அவன் என்னை பார்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திவிடாதே... என்மேல் உனக்கு ஒரு துளியேனும் கருணையிருந்தால் இந்த வேண்டுதலை மட்டும் நிறைவேற்றிவிடு ஆண்டவா...' அவள் மானசீகமாக இறைவனிடம் வேண்டினாள். ஆனால் இறைவன் அவள் வேண்டுதலுக்கு செவிசாய்க மறுத்துவிட்டான். சூர்யா ரயிலிலிருந்து இறங்கிய அடுத்த நொடி தீரஜ்பிரசாத்திற்கு 'சூர்யா ஒரு ஆணுடன் மதுராவிற்கு வந்திருக்கிறாள் ' என்கிற செய்தி சென்று சேர்ந்துவிட்டது. அடுத்த சில மணிநேரங்களில் சூர்யாவை பற்றிய முழுவிபரமும் தீரஜ் பிரசாத்திற்கு சென்றுவிட்டது. கபிலனின் கண்களில் அந்த ஊரின் அழகோ... சுத்தமோ... எதுவும் படவில்லை. அவன் கடிவாளம் கட்டிய குதிரை போல் தன்னுடைய அலுவலகத்தையும் தங்கப் போகும் வீட்டையும் பற்றி யோசனை செய்தபடி வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த சூர்யாவோ பழைய நினைவுகளில் கணம் தாங்காமல் கண்களை மூடி கார் கதவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். கார் கோசிகாலனுக்குள் நுழைந்த போது "எந்த பக்கம் சார் போகணும்..." என்று கேட்டு டிரைவர் மௌனத்தை கலைத்தான். அவனுடைய இந்தி புரியாமல் விழித்த கபிலன் சூர்யாவை பார்த்தான். அவள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ் ஊழியர்களுக்கான காலனிக்கு செல்ல வழி சொன்னாள். சுமார் முன்னூறு வீடுகளை கொண்ட அந்த காலனிக்குள் கார் சென்று நின்றது. காலனி பொறுப்பாளரிடம் விபரம் தெரிவித்துவிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டின் சாவியை வாங்கிக்கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். வீடு அழகாக இருந்தது. ஒற்றை படுக்கையறையை கொண்ட அந்த வீட்டில் இரண்டு பேர் தாராளமாக தங்கலாம். சூர்யா குளித்துவிட்டு பூஜை விளக்கேற்றி சமையலை ஆரம்பித்துவிட்டாள். கபிலனும் அலுவலகத்திற்கு தயாராகிவிட்டான். அன்றைய தினம் கரைச்சல் இல்லாமல் சென்றுவிட்டது. # # # விடியற்காலை நான்கு மணி பதினைந்து நிமிடம். இந்தியாவிலேயே முதன்மையான கெமிக்கல் நிறுவனமான கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சின் முதலாளியின் கார் அப்போதுதான் கம்பெனி வளாகத்திலிருந்து வெளியே வந்தது. காருக்குள் இருந்த அமைதியை குலைக்கும்படி தீரஜ்பிரசாத்தின் கைபேசி அலறியது. அந்த கைபேசி எண் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த எண். நேரடியாக அவனை தொடர்புகொள்ளும் அதிகாரம் உடைய மிக சிலரில் யார் இப்போது அழைப்பது...? தீரஜ் கைபேசியை எடுத்துப் பார்த்தான். அவனுடைய செயலாளர் சுஜித் தான் பேசினான். அவன் சொன்ன செய்தியை கேட்ட தீரஜ் சட்டென கார் பிரேக்கை அழுத்தி கரை நிறுத்தி நிமிர்ந்து அமர்ந்தான். ஆம்... சுஜித் சூர்யாவை பற்றிய செய்தியை தான் சொன்னான். அவனுக்கு ரயில் நிலையத்திலிருந்து செய்தி வந்ததாம். அவன் உடனே தீரஜ்பிரசாத்திற்கு தெரியப்படுத்திவிட்டான். சூர்யாவை பற்றிய செய்தியை கேட்டதும் ஒரு கணம் தீரஜ்பிரசாத்தின் மனம் மகிழ்வதை அவனால் தடுக்க முடியவில்லை. இவ்வளவு நாளும் அவளை சுத்தமாக அவனுடைய மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டோம் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தது பொய்யாகிப் போனதை அந்த கணம் அவன் உணர்ந்தான். இவ்வளவு நாளும் அவளைப் பற்றி சிந்திக்காமல் அவனுடை கட்டுப் பாட்டில் அவனுக்கு அடிமையாக இருந்த மனம் இன்று அவள் மீண்டும் மதுராவிற்கு வந்துவிட்டாள் என்ற செய்தியை அறிந்ததும் அவளை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவனுடைய கட்டுப்பாட்டை மீறி அவனை அடிமையாக்கி அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது. மனதின் கட்டளையை மீர முடியாமல், அவனுக்கு சூர்யாவை பற்றி தகவல் சொன்ன ஆசாமியை அழைத்து சூர்யாவை பற்றி மேலும் விபரங்கள் வேண்டும் என்றான். அவள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ் காலனிக்குள் நுழைந்ததும் அவளை பற்றிய விபரங்களை சுலபமாக சேகரித்த அந்த ஆசாமி அவனுக்கு தெரிந்த விபரங்கள் அனைத்தையும் தீரஜ் பிரசாத்திற்கு தெரியப்படுத்தினான். 'என்ன துணிச்சல் இருந்திருந்தால் திருமணம் முடித்து மற்றொருவனின் மனைவியாக மதுராவிர்க்குள் காலடி வைத்திருப்பாள்....! அதுவும் அவள் கணவனுக்கு கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சில் வேலையாம்...' அவன் ரெத்தம் கொதித்தது... ரௌத்திரம் ஆனான்... கொலையே செய்யும் அளவிற்கு அவள் மேல் வன்மம் ஏற்பட்டது. ஆனால் அவளை கொலை செய்வதால் அவனுடைய மனம் அமைதியடைந்துவிடும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவள் இருக்க வேண்டும்.... உயிரோடு இருக்க வேண்டும்.... ஆனால் அமைதியிழந்து... நிம்மதியிழந்து... தவிக்க வேண்டும். அவன் தவிப்பது போல... 'ஏன்டா தீரஜ்பிரசாத்தை உதறினோம்...' என்று வெந்து சாக வேண்டும்... "விடமாட்டேண்டி... உன்ன அவ்வளவு சுலபமா விட்டுவிட மாட்டேண்டி... யார்கிட்ட விளையாட்டு காட்டுற...? என்னையே சீண்டி பார்க்குறியா...? இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம்தான்டி...." அவன் அவளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான். அவள் உயிரை வைத்து ஊனை எடுக்க முடிவெடுத்துவிட்டான். அவனுடைய முதல் எதிரியாக சூர்யாவை நினைத்து அவளை ஒழித்துக்கட்ட முடிவெடுத்துவிட்டான். அன்று தான் கபிலன் கிருஷ்ணா கெமிகல்ஸ்ல் வேலையில் சேர்ந்திருந்தான். வேலையில் சேர்ந்த முதல் நாளே அவனுக்கு முதலாளியை சென்று சந்திக்கும் படி மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. அவனுக்கு தெரியும்... கிருஷ்ணா கெமிகல்ஸ் முதலாளியை அவ்வளவு சுலபமாக யாரும் நெருங்கிவிட முடியாது. அப்படியிருக்க இவன் மட்டும் எந்த வகையில் உயர்வு...! அவன் குழம்பியபடி தீரஜ்பிரசாத்தின் அறையை நெருங்கினான். அங்கு அவன் முறையாக விசாரிக்கப்பட்டு தீரஜ்பிரசாத்தின் அனுமதியின் பெயரில் பத்து நிமிட காத்திருப்புக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டான். அங்கு முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் கபிலனின் கண்களில் ஆச்சர்யம். கிட்டத்தட்ட அவன் வயதேயுடைய ஒருவன் எவ்வளவு சாதித்திருக்கிறான். கபிலனுக்குள் பொறாமை துளிர்விட்டது...

அதே நேரம் கபிலனை கண்களால் அளந்த தீரஜ்ஜும் கபிலனை பார்த்து பொறாமை பட்டான். 'என்னை விட நீ எந்தவிதத்தில் உயர்வு... என் சூர்யாவை அபகரித்துவிட்டாயே...' அவன் கூர்மையாக கபிலனை பார்த்தான். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அவன் தீரஜ்ஜிடம் இருக்கும் பணத்தை மிகவும் விரும்புகிறான் என்பதை கண்டு கொண்டான். அவன் கண்களில் மின்னல்வெட்டியது. இதை தான் அவன் எதிர்பார்த்தான்.... "வணக்கம் சார்..." கபிலன் அதிகப்படியான பணிவை காட்டினான். தீரஜ் அவனுக்கு பதில் வணக்கம் சொல்லாமல், சிறு தலையசைவுடன் அவனுக்கு முன்னாள் இருக்கும் இருக்கையை கையசைவில் காட்டினான். நுனி இருக்கையில் அமர்ந்த கபிலன் அவனை கேள்விக்குறியாக பார்த்தான். தீரஜ் அவனை ஆராச்சி பார்வை பார்த்தான். "சார் நான் கபிலன். இன்னிக்கு தான் இங்க சீனியர் இஞ்சினியரா ஜாயின் பண்ணியிருக்கேன். உங்களை பார்க்க சொல்லி செய்தி வந்தது...." "ம்ம்ம்... வெல்... மிஸ்டர் கபிலன்.... இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்திங்க... அங்க உங்களோட பாக்கேஜ் என்ன... எல்லா விபரமும் உங்க பேபெர்ஸ் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க நீங்க எப்படி வேணுன்னாலும் இருந்திருக்கலாம். பட் இங்க கடுமையா உழைக்க வேண்டியிருக்கும். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களால முடியும் என்றால் இன்னிக்கு ஜாயின் பண்ணிக்கோங்க. இல்லன்னா நீங்க போகலாம்." கறாராக பேசினான். "கண்டிப்பா என்னுடைய கடின உழைப்ப நீங்க எதிர்பார்க்கலாம் சார்... " "நிச்சயாமா...?" "நிச்சயமா சார்..." "ஓகே... அப்போ இந்த டாக்குமெண்ட நல்லா படிச்சு பார்த்துட்டு ஒரு சைன் பண்ணுங்க..." கபிலனை கூர்மையாக கவனித்தபடி ஒரு பத்திரத்தை தீரஜ் கபிலனுக்கு முன் தள்ளினான். அவன் படித்து பார்த்தான். இன்று இந்த கம்பெனில் அவன் சேர்ந்துவிட்டால் குறைந்தது இரண்டு வருடத்திற்கு அவன் இங்கிருந்து நகர முடியாது. அப்படி அவன் செல்ல நினைத்தால் கடுமையான விளைவுகளை(அது என்ன விளைவுகள் என்று தெளிவாக விளக்கப்பட்டிருந்தது) சந்திக்க நேரிடும். ஆனால் அவனுடைய வேலையில் திருப்தி இல்லையெனில் நிர்வாகம் எந்த நேரத்திலும் அவனை வெளியேற்றலாம். மேலோட்டமாக பார்த்தால் இந்த ஒப்பந்தம் சாதரணமாக தோன்றும். அனேகமாக நிறுவனங்களில் இது போல் ஒப்பந்தம் போடுவது வழக்கம் தான். ஆனால் கிருஷ்ணா கெமிக்கல்சில் போடப்படும் ஒப்பந்தம் இவ்வளவு கடுமையாக இருக்காது. வேலையிலிருந்து விலக வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு முன் தெரியப்படுத்திவிட்டால் போதும். இந்த ஒப்பந்தம் கபிலனுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்பதை அறியாத கபிலன் ஆழமாக யோசிக்காமல் கிரிஷ்ணா கெமிக்கல்சில் வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று எண்ணி உடனடியாக பேனாவை எடுத்து கையெப்பமிட்டான். அன்றிலிருந்து கபிலனுக்கு சோதனை காலம் ஆரம்பமானது. தீரஜ் அவனை வேலையில் சக்கையாக பிழிந்து எடுத்தான். ட்ரைனிங் என்கிற பெயரில் வேலை நேரம் தவிர மேலும் பல மணிநேரம் அவன் அலுவலகத்திலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டான். காலை ஆறுமணிக்கு அலுவலகம் வரும் கபிலன் இரவு இரண்டு மணிக்கு தான் வீடு திரும்புவான். மீண்டும் அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். உண்மையில் கபிலன் கடுமையாக உழைத்தான். அவன் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை விட இரண்டுமடங்கு அதிகமான சம்பளம் அவனுக்கு வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதி தனியாக செய்து தரப்பட்டது. பல சமயங்களில் தீரஜ் அவனை நேரில் அழைத்து பாராட்ட வேறு செய்வான். இவையெல்லாம் உற்ச்சாகமூட்ட அவன் ஆர்வமுடன் வேலை செய்தான். வேலை... வேலை... வேலை... பணம்... பணம்... பணம்... இது தவிர அவன் மனதில் எதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. 'எப்படி பணம் சேர்ப்பது....? எப்படி தீரஜ் போல பணத்தில் புரல்வது? அவனளவு இல்லாவிட்டாலும் அவனை போல் பத்தில் ஒரு பங்காவது வளர வேண்டும்...' என்பதை பற்றி மட்டும் தான் அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். அதே சிந்தனையில் இருந்தவன் சூர்யாவை வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தினான். "ஏய்... எங்க கம்பனில ஒரு வேகன்சி இருக்கு... நீ அப்லை பண்ணு..." "எதுக்கு...?" "ம்ம்ம்... இப்படியே எத்தனை நான் வீட்டுல உக்காந்து காலம் கடத்தலாம் என்று பிளான் போட்டுருக்க...?" "................." "நாளைக்கு விண்ணப்பம் கொண்டுவந்து தர்றேன். ஒழுங்கா அப்ளை பண்ணு..." அவன் அதிகாரமாக சொல்லிவிட்டு படுக்கைக்கு சென்றான். மறுநாள் சொன்னது போலவே வேலைக்கான விண்ணப்பத்துடன் வீட்டிற்கு வந்தான். அவள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க மறுத்துவிட்டாள். அன்றிலிருந்து கபிலன் தன் சுயரூபத்தை சூர்யாவிடம் காட்ட ஆரம்பித்தான். எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் சூர்யாவை ஒரு பாடு படுத்தாமல் ஓயமாட்டான். "மூணு நேரமும் மூக்கபிடிக்க சாப்பிட தெரியுது... இந்த சின்ன வீட்டை சுத்தமா வச்சிக்க முடியலையா...?" என்று சொல்லி எரிந்து விழுவான். "சாம்பார்ல ஏன் காரம் அதிகமா போட்டுருக்க... தண்ட சோறு... தண்ட சோறு..." சாப்பாட்டை வீடு முழுக்க விசிரியதித்துவிட்டு படுக்க சென்றுவிடுவான். "இந்த மெத்தை விரிப்பை துவைத்து எத்தனை நாள் ஆகுது... உங்க அப்பன் மாதிரி என்னை அழுக்கன்னு நினைத்தியா...?" என்று படுக்கை விரிப்பை உருவி அவள் முகத்தில் அடிப்பான். அவளுடைய கைபேசியை கைபற்றிவிட்டவன் அவளை அவள் பெற்றோருடன் பேசவே அனுமதிக்கவில்லை. அவர்கள் அழைக்கும் போது எப்போதாவது இவன் வீட்டில் இருந்தால் ஓரிரு வார்த்தை பேச அனுமதிப்பான். அவளிடம் எந்த சேமிப்பும் இல்லாதபடி செய்துவிட்டவன்... அவளுடைய எல்லா தேவைகளுக்கும் அவள் அவனிடம் வந்து நிற்கும் படி செய்துவிட்டான். சூர்யா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அதனால் அவள் தீரஜ் பிரசாத்தை சந்திக்கவும் இல்லை. ஆனால் அவனுடைய ஊரில் அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் நிழலில் இருப்பது சூர்யாவிற்கு முள் மேல் நிர்ப்பது போல் இருந்தது. அதோடு கபிலனின் நடவடிக்கைகள் அவளுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தன. இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. இதுவரை சூர்யா கபிலனிடம் தனக்கு இது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. அவள் அவளுடைய தேவைகளை மிகவும் குறுக்கிக் கொண்டாள். அன்று கபிலன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தான். அதை பிரித்து பார்த்த சூர்யா வியந்தாள். அதில் வீட்டிற்கு என்று எதுவுமே இல்லை. எல்லாம் அவனுடைய தேவைகளுக்காக மட்டும் தான் இருந்தது. இப்போது அவளுக்கு தேவையானதை அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ...! ஆனால் சூர்யாவால் கேட்க முடியவில்லை. அன்று கபிலன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வரும்போது குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. எப்போதும் போல் மாத மளிகை சாமான் முதல் வீட்டிற்கும் அவளுக்கும் தேவையான பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. அவன் கொதித்தான். "ஏய்... உன்கிட்ட தான் காசு இல்லையே... எப்படிடி இதெல்லாம் வாங்கின...?" அவள் அவளுடைய கையை உறர்த்தி காண்பித்தாள். அங்கு இருந்த மோதிரம் ஒன்று இப்போது காணாமல் போயிருந்தது. அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அவன் அவள் கன்னத்தில் பட்டென்று ஒன்று கொடுத்தான். "யாரை கேட்டுடி மோதிரத்தை விற்றாய்...?" "அது என் மோதிரம்... நான் யாரை கேட்க வேண்டும்..." "உன் கழுத்தில் நான் தாலி கட்டிய போதே உன்னோடு சேர்த்து உன் கையில் இருந்த மோதிரமும் எனக்கு சொந்தமாகிவிட்டது... என்னை கேட்காமல் நீ மூச்சு கூட விடக்கூடாது. அப்படி இருக்கும் போது மோதிரத்தை விற்க உனக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்..." அவனுடைய பேச்சில் சூர்யா விக்கித்தாள். "உனக்கு தேவையானதை நீ என்னிடம் தான் கேட்க வேண்டும். என்னை என்ன உன்னை போல் வேலை இல்லாதவன் என்று நினைத்தியா...? தண்ட சோறு... தண்ட சோறு..." அவன் பேசியதை கேட்ட சூர்யாவிற்கு இவன் உழைப்பில் உக்கார்ந்து உண்பதைவிட கேவலமான தொழில் எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது. அவள் மறுநாளே வேலைக்கு விண்ணப்பித்தாள். கபிலனின் பணத்தில் ஜீவிப்பது பிடிக்காமல் சூர்யா வேலை தேடிக்கொண்டாள். ஒரு சிறிய கம்பெனியில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தாள். விபரம் அறிந்த கபிலன் சூர்யாவிடம் பாய்ந்தான்.

"ஏய்... வேலைக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்ட... அப்புறம் ஏன்டி ஒரு உருப்படாத கம்பெனிக்கு போற...? கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு வர்றதுக்கு என்ன...?" "எனக்கு பிடிக்கல..." "எனக்கும் தான் உன்னை பிடிக்கல... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழலையா... சும்மா வீம்பு பிடித்து என்னோட கோபத்தை கிளராத சொல்லிட்டேன்..." "என்னால கே.சி க்கு வர முடியாது. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க... வேற நல்ல கம்பெனில நல்ல சம்மலத்துல வேலை தேடிக்கிறேன்..." அவள் அமைதியாக அவனுக்கு எடுத்து சொன்னாள் "ஏன் வர முடியாது... முன்னாடி இங்க தானே நீ வேலை பார்த்த... இப்போ மட்டும் என்ன...?" ".................." அவள் மௌனமாகிவிட்டாள். அவளால் பேச முடியவில்லை. தீரஜ்ஜின் நினைவு அவள் மனதை கணக்க வைத்தது. "சொல்லுடி... சொல்லு... " அவன் கத்திக் கொண்டிருந்தான். "ப்...ளீ...ஸ்...... ப்ளீஸ்... என்னை எதுவும் கேட்காதிங்க... என்னால எதுவும் சொல்ல முடியாது..." அவள் அவளுடைய கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தாள். கபிலனின் தலைக்குள் மணியடித்தது. 'இவள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறாள்....' இங்கு தான் அவனுடைய சந்தேக கண் விழித்தது. அதன் பிறகு இருவருமே எதுவும் பேசாமல் அவரவர் அலுவலுக்கு சென்றுவிட்டார்கள். அன்று இரவு வேலை முடித்து வரும் போது கபிலன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வந்தான். அவனுடைய சிவந்த விழிகளும் கோணல் சிரிப்பும் அவளை அச்சுறுத்தின. கோசிகாலன் மக்கள் அனைவரும் அமைதியாக உறங்கும் நேரத்தில் சூர்யா மட்டும் உறக்கத்தை தொலைத்துவிட்டு கபிலனின் பிடியில் சிக்கி தவித்தாள். "சாப்பாடு எடுத்து வைக்கவா...?" அவள் பயந்து கொண்டே அவனிடம் கேட்க "யாருடி அவன்...?" அவன் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு கேள்வியை கேட்டான். அவனுடைய கேள்வியில் அதிர்ந்த சூர்யா "யாரு...?" என்று நடுக்கத்துடன் கேட்டாள். "அவன் தாண்டி உன்னோட முன்னாள் காதலன்... தப்பு... தப்பு... இந்நாள் கள்ள காதலன்... ஹி... ஹி..." அவன் கேட்ட கேள்வியில் அவள் உடல் பதற... அவன் இளித்த இளிப்பில் நெஜ்ஜாங்கூடு சில்லிட்டது. "ஏ... ஏன் இப்படி பேசுறீங்க...? அப்படியெல்லாம் யா..யாரும் இல்ல..." அவள் திணறினாள். "அடிச்சு மூஞ்சி முகறையெல்லாம் பேத்துடுவேன்.... உன் லச்சனத்தை தான் நா காலையிலேயே பார்த்துட்டேனே... KC -ல யாருடி அவன்... அவனுக்கு பயந்து தானே நீ அங்க வேலைக்கு வரமாட்டேன்கிற..." "......................" "உன்ன உன் அப்பன் வலிய வந்து என் தலையில கட்டும் போதே நான் சுதாரிச்சிருக்கனும்டி... ஏமாந்துட்டேன்..." "............................" "அது சரி... எவ்வளவு தூரம் உங்க பழக்கம் போச்சு... சொல்லு... எல்லாம் முடிஞ்சிருச்சா...? அதுதான் கழட்டிவிட்டுடானா...?" "......................." அவள் உதட்டை அழுந்த கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். "சொல்லிடி... கேட்குறேன்ல... சொல்லு..." அவள் தோளை பிடித்து உலுக்கினான். அவள் வெடித்து அழுதாள். அவனுக்கிருந்த போதை மயக்கத்தில் அவள் அழுவதெல்லாம் அவனுக்கு பொருட்டாகவே இல்லை. அவன் மிருகமாக மாறி ஆணின் பலத்தை காட்டினான். அழுதழுது ஓய்ந்த சூர்யா காலை எட்டு மணிக்கு தான் எழுந்தாள். அப்போதும் கபிலன் உறங்கிக் கொண்டிருந்தான். புயலில் அடிபட்ட அவள் உடல் துவண்டது. முயன்று எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்று வேலைகளை கவனித்தாள். அவன் எழுந்ததும் அவனிடம் என்ன பேசவேண்டும் என்று மனம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து வந்தவனுக்கு என்ன தோன்றியதோ... சூர்யாவின் முகத்தை பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். சூர்யா அவளுடைய வேலைகளை முடித்து விட்டு காத்துக் கொண்டிருக்கும் போது அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்தான். சூர்யா அவனை நேராக பார்த்தாள். அவன் அவள் முகத்தை பார்க்காமல் வெளிப்பக்கம் போனான். "ஒரு நிமிஷம்... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." மெலிந்த குரல்தான் என்றாலும் உறுதியாக பிசிறடிக்காமல் வந்தது. அவன் அவள் முகத்தை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்றான். "நேற்று இரவு என்ன நடந்ததுன்னு நினைவு இருக்கா..?" "......................." அவன் எதுவும் பேசவில்லை. நின்ற நிலையிலிருந்து அசையவும் இல்லை. "நீங்க நேற்று கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொல்கிறேன். திருமணத்திற்கு முன்பே உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும்... சொல்லாமல் விட்டது என் தவறுதான்... பெரிய தவறு..." "......................." "நான் KC -இல் ஒருவரை காதலித்தது உண்மைதான்....." இதுவரை தீரஜ்ஜிடம் கூட சொல்லியிராத ஒரு விஷயத்தை இன்று கபிலனிடம் சொன்னாள். அவன் சட்டென திரும்பி அவளை பார்த்தான். என்னதான் பணத்தாசை பிடித்த சின்ன புத்திகாரனாக இருந்தாலும் அவன் மனைவி மற்றொருவனை காதலித்துவிட்டு இவனை திருமணம் செய்திருக்கிறாள் என்கிற செய்தி அவனுக்கு உவப்பானதாக இருக்க முடியாதே. அவனுக்கும் வலித்திருக்குமோ...! "ஆனால் நீங்கள் சொன்னபடி காரியம் முடிந்ததும் அவன் என்னை உதறிவிடவில்லை. அவன் காதலை என்னிடம் சொன்னான். எனக்கும் அவனை பிடித்திருந்தது. என் காதலை அவனிடம் சொல்ல நினைக்கும் போது அவன் நல்லவன் இல்லை என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. அதனால் நான்தான் அவனை உதறிவிட்டு உங்களை திருமணம் செய்து கொண்டேன்." இதை சொல்லும் போது அவள் மனம் வலித்தது. முன்பு தீரஜ் கொடூரமானவன் என்று நினைத்த சூர்யாவால் ஏனோ இப்போது அப்படி நினைக்க தோன்றவில்லை. 'அவன் பக்கம் ஏதாவது ஞாயம் இருந்திருக்குமோ...!' என்ற எண்ணம் தான் தோன்றியது. "யார் அவன் ...?" ".................." "சொல்லு சூர்யா... யார் அவன்...?" "தீரஜ்பிரசாத்..."

"எ...ன்...ன...து...?!" அவன் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தான். அவனை போல் அந்த கம்பெனியில் வேலை செய்யும் யாரையாவது சொல்லுவாள் என்று நினைத்து கேட்டவனுக்கு "தீரஜ் பிரசாத் " என்ற பெயரை கேட்டதும் உண்மையில் அவனுடைய அதிர்சியின் அளவை சொல்லவே முடியாது... ஆனால் உடனே அவன் தன்னை சுதாரித்துக் கொண்டான். "ஆமாம்... உங்கள் முதலாளி தீரஜ்பிரசாத் தான்..." அவள் மீண்டும் ஒரு முறை தெளிவாக சொன்னாள். அவன் கண்களில் ஒரு ஏளனம் வந்து மறைந்தது. "நம்முடைய திருமணம் என்னுடைய சம்மதம் இல்லாமல் தான் நடந்தது... இதையெல்லாம் நான் உங்களிடம் விளக்கி சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது என் தவறு தான். ஆனால் அதற்காக நேற்று நீங்கள் என்னிடம் நடந்துகொண்ட முறை கொஞ்சமும் சரியில்லை..." "நான் போகிறேன்... என் அப்பாவிடம் போகிறேன்... நீங்கள் உங்கள் வழியை பார்த்துக் கொள்ளுங்கள்... நான் என் வழியை பார்த்துக் கொள்கிறேன்..." அவள் தெளிவாக சொன்னாள். அடுத்த நொடி கபிலன் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத செயலை செய்து அவளை திகைக்க வைத்தான்.

No comments:

Post a Comment