Friday 6 September 2013

நெஞ்சோடு கலந்திடு.. 3


அறைக்குள் இருந்த டேபிளின் ஒரு மூலையில் கிடந்த அசோக்கின் செல்போன் பாட்டு பாடியது. கீழே செல்லும்போது அசோக் செல்போனை அறையிலேயே விட்டு சென்றிருந்தான். ஏமாற்றம் அடைந்தவளாய் திவ்யா காலை கட் செய்தாள். அப்புறம் ஏதோ யோசனை வந்தவளாய்.. சற்றே கிண்டலான குரலில் செல்வாவிடம் சொன்னாள். "ம்ம்.. பையன் கலக்குறான்.. பாட்டுலாம் பட்டாசா இருக்கு.." "எதை சொல்ற..?" "அசோக்கோட ரிங்டோன்.."

"ஹாஹா.. ஆமாமாம்.. இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்.. இந்த மாதிரி பாட்டுத்தான புடிக்குது..?" என்று செல்வா உளறிக்கொட்ட, திவ்யா திகைத்தாள். "என்ன செல்வாண்ணா சொல்றீங்க..? அசோக் லவ் பண்றானா..?" உளறிக் கொட்டிவிட்டோம் என்று செல்வா இப்போது தாமதமாக புரிந்துகொண்டார். உடனே சுதாரித்துக்கொண்டு சமாளிக்க முயன்றார். "ஆ.. இல்ல இல்ல.. இல்லையே..!! நான் எங்க எப்படி சொன்னேன்..?" "ப்ச்.. இப்போ சொன்னீங்களேண்ணா..?" "என்ன சொன்னேன்..?" "இந்த காதல் வந்த பசங்களுக்குலாம்..' அப்டி சொன்னீங்களே..?" "அப்டியா சொன்னேன்..? இல்லையே.. இந்தக்காலத்து பசங்களுக்குலாம்னு சொல்லிருப்பேன்.." "இல்ல இல்ல.. நீங்க அப்படி சொல்லல.." "அப்டித்தான்மா சொன்னேன்.." "அட இல்லண்ணா.. நீங்க எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறீங்க.." "ஐயோ இல்லம்மா.. நான் ஏன் மறைக்க போறேன்..?" "ப்ச்.. பொய் சொல்லாதீங்க செல்வாண்ணா.. உண்மையை சொல்லுங்க.. அவன் யாரையாவது லவ் பண்றானா..?" "அடடடா.. எனக்கு தெரிஞ்சா சொல்லிட மாட்டனா..? இதோ.. அசோக்கே வந்துட்டான்.. அவன்கிட்டேயே கேட்டுக்க நீ.. என்னை ஆளை விடு.." அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அசோக் உள்ளே நுழைய, இப்போது திவ்யா செல்வாவை விட்டுவிட்டு அசோக்கிடம் திரும்பி பாய்ந்தாள். "டேய்.. சொல்லுடா..!! நீ யாரையாவது லவ் பண்றியா..?" அசோக் திக்கித்துப் போனான். உள்ளே நுழைந்ததுமே இந்த மாதிரி ஒரு கேள்வியை, அதுவும் திவ்யாவிடம் இருந்து.. அவன் எதிர்பார்க்கவே இல்லை..!! எதுவும் புரியாமல் செல்வாவை பார்த்தான். அவர் 'உளறி கொட்டிட்டேன்.. எப்படியாவது சமாளி..' என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு, திவ்யாவுக்கு தெரியாமல் இவனுக்கு சைகை செய்தார். அதற்குள்ளாகவே பொறுமை இல்லாமல் திவ்யா கத்தினாள். "கேக்குறேன்ல..? சொல்லுடா.. நீ யாரையாவது லவ் பண்றியா..?" "ப்ச்.. இல்லை திவ்யா.." "எங்க.. என் மேல ப்ராமிஸ் பண்ணு.." திவ்யா அசோக்கின் கையை பிடிக்க, அவன் பதறிப்போய் உதறினான். "ஐயோ.. என்ன இது.. விடு திவ்யா.." "அப்போ.. நீ யாரையோ லவ் பண்ற..?" "ஆ..ஆமாம்.." "இதை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லல..?" "ச்சை.. கத்தாதடி..!! நீ வா.. நாம வெளில போய் பேசலாம்.." அசோக் அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான். அவளை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் தெரிந்த படியேறி இருவரும் மொட்டை மாடியை அடைந்தார்கள். அறையில் கேட்ட கேள்வியை திவ்யா இப்போது மீண்டும் கேட்டாள். "ம்ம்.. இப்போ சொல்லு.. நீ லவ் பண்ற மேட்டரை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து மறைச்ச..?" "ப்ச்.. மறைக்கனும்லாம் இல்ல திவ்யா..!! சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. அதுக்குள்ளே நீ உன் லவ் மேட்டரை சொல்லி.. அதுல பிரச்னையாகி.. அப்புறம் சொல்ல எனக்கு சான்ஸ் கிடைக்கலை..!!" அசோக் இதமான குரலில் சொல்ல, திவ்யா இப்போது சற்றே சமாதானம் அடைந்தாள்."ம்ம்ம்... ஓகே... பொழைச்சுப் போ..!! சரி.. எப்போ உன் ஆளை எனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்க போற..?" "அம்மா தாயே.. இது ஜஸ்ட் ஒன்சைட்..!! மொதல்ல டபுள் சைட் ஆகட்டும்.. அப்புறமா உனக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.." "அட்லீஸ்ட் அவங்க பேராவது சொல்லேன்.." "அது எதுக்கு உனக்கு..?" "அடப்பாவி.. என்கிட்டயேவா..?" திவ்யா முறைக்க, "ஹஹாஹஹாஹஹாஹஹா...!!" அசோக் எளிறுகள் தெரிய சிரித்தான். "சிரிக்காத..!! அப்போ அவங்களும் உன்னை லவ் பண்ற வரைக்கும்.. அவங்களை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?" "என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு..?" "அவங்க யாருனு சொல்லு.." "ம்ம்.. அவ ஒரு லூசு.." "என்ன பண்றாங்க..?" "லூசுத்தனமான வேலை எல்லாம் பண்ணுவா.." "உன் லவ்வை அவங்ககிட்ட சொல்லிட்டியா..?" "இல்ல.. அவளுக்கு புத்தி தெளியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.." "ஐயோ கடவுளே.. என்ன பதில்டா சாமி இது..?" "பைத்தியக்காரத்தனமான பதிலா தோணுதா..? பரவால.. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்..!! சரி.. நீ உன் மேட்டருக்கு வா.. என்ன விஷயமா வந்த..?" "பாரேன்.. கடைசில நான் வந்த மேட்டரையே மறந்துட்டேன்..!! ம்ம்ம்.. ஆக்சுவலா உன்கிட்ட ஸாரி கேக்கலாம்னு வந்தேன்.." "ஸாரியா.. எதுக்கு..?" "நேத்து மிட்னைட் உனக்கு கால் பண்ணினேன்.." "ம்ம்.. காலைல மிஸ்ட் கால்ல பார்த்தேன்..!! அதுக்குலாமா ஸாரி கேட்ப..?" "ஐயோ.. அதுக்கு இல்லடா.. என்னை கொஞ்சம் பேச விடுறியா..?" "சரி.. சொல்லு.." "நேத்து நைட்டு அவருக்கு என் நம்பர் கொடுத்துட்டேன்.. அவரும் உடனே கால் பண்ணிட்டார்.. கொஞ்ச நேரம் பேசினோம்.." திவ்யா சற்றே குற்ற உணர்வுடன் சொல்ல, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் ஏனோ இப்போது பட்டென குறைந்தது. "ஓ..!!" "சாரிடா.. அவர் ரொம்ப கெஞ்சினார்.. என் குரலை கேட்கனும்னு..!! நான் உனக்கு கால் பண்ணினேன்.. நீ பிக்கப் பண்ணவே இல்ல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. உன்கிட்ட கேட்காமலே நம்பர் கொடுத்திட்டேன்..!! நான் நம்பர் கொடுத்தது தப்பா அசோக்..?" "சேச்சே.. இதுல என்ன இருக்கு..?" "ம்ம்.. அ..அப்புறம் இன்னொரு விஷயம்.." திவ்யா மீண்டும் தயக்கமான குரலில் சொன்னாள். "என்ன..?" அசோக் உதறலாக கேட்டான். "இந்த வாரம் எங்கயாவது நேர்ல மீட் பண்ணலாமான்னு கேட்டார்.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்..!!" "ம்ம்.." "நான் என்ன பண்ண அசோக்..? போய் மீட் பண்ணவா..?" "ம்ம்.. போ.. போய் மீட் பண்ணு..!! நேர்ல பாத்து பேசினாத்தான அவரை பத்தி நீயும், உன்னை பத்தி அவரும் புரிஞ்சுக்க முடியும்..? இதுக்குலாமா என்கிட்டே பெர்மிஷன் கேட்டுட்டு இருப்ப..?" மனதுக்குள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே அசோக் சொன்னான்."அப்டி இல்லடா.. இத்தனை நாள் பரவால்ல.. சேட் மட்டுந்தான்..!! நேர்ல பாக்கனும்னதும்.. ஒரே உதறலாவே இருக்கு..!! நீ இருக்கேன்ற தைரியத்துலதான் நான் இருக்கேன்.. நீதாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்..!!" "நானா..? நான் என்ன பண்றது..?" "எங்கே மீட் பண்றது.. என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது.. எப்படி அவர்கிட்ட பேசுறது.." "ஐயோ.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல திவ்யா.. ஏதோ ஒன்னு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "இல்லடா.. அவருக்கு புடிக்கனும்ல..?" திவ்யா குறுக்கில் புகுந்து வெடுக்கென சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். அவளுடைய குழந்தைத்தனமான முகத்தையே சில வினாடிகள் பாவமாய் பார்த்தான். லேசாக புன்னகைத்தான். அப்புறம்.. "சரி.. நான் ஹெல்ப் பண்றேன்.." என்றான் சுரத்தே இல்லாத குரலில். "தேங்க்யூடா.. தேங்க்யூ வெரி மச்.." உற்சாகமாக கத்திய திவ்யா அசோக்கை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இதமாக அணைத்துக் கொண்டான். அசோக்கிற்கு இப்போது இதயம் விரிசல் விடுவது மாதிரி ஒரு உணர்வு. திவ்யா தன்னிடம் இருந்து விலகிக் கொண்டே செல்கிறாள் என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. ஒருவித விரக்தி மனோபாவம் அவனுள் பரவ ஆரம்பித்தது. அவனுடைய குரலிலும் அந்த விரக்தி தென்பட்டது. "நானும் உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும் திவ்யா.." "என்னடா..?" "எனக்கு ஆன்சைட் போறதுக்கு ஒரு ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு.." "வாவ்.. ரியல்லி..? எங்கே..?" "ஜெர்மனி.." "எவ்ளோ நாள்..?" "மூணு வருஷம்..!!" அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம், பட்டென சுருங்கிப் போனது. ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று அவளுடைய மனதை வந்து கவ்வியது மாதிரி இருந்தது. ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று எண்ணியிருந்தவள், மூன்று வருடங்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. அசோக்கின் முகத்தையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். சோர்ந்து போன குரலில் கேட்டாள். "என்னடா சொல்ற..? மூணு வருஷமா..?" "ம்ம்.. கொஞ்சம் அதிகமா கூட ஆகலாம்.." "கண்டிப்பா போகனுமா அசோக்..?" "அப்படி இல்ல.. போறியான்னு கேட்டுருக்காங்க.. நான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.." "நீ என்ன சொல்லப் போற..?" "இன்னும் டிஸைட் பண்ணல திவ்யா.." இப்போது திவ்யா அவசரமாக சொன்னாள். "ப்ளீஸ் அசோக்.. நீ போக வேணாம்..!!" "ஏன்..?" "சொன்னா கேளேன்.. ப்ளீஸ்.. போக வேணாம்..!! நான் சொன்னா நீ கேட்பியா மாட்டியா..?" "ஏன் போக வேணாம்னு சொல்லு..!! ஒருவேளை நான் போயிட்டா.. உன் லவ்க்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு யோசிக்குறியா..?" "ச்சே.. என்ன பேசுற நீ..? என்னை என்ன அவ்ளோ செல்ஃபிஷாவா நெனச்சுட்ட..?" "அப்புறம் என்ன..?" "என்னன்னு எனக்கு சொல்ல தெரியலைடா. ஆனா உன்னை பிரியுறது.. நெனச்சு பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு.. அவ்ளோ நாள் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது..!! ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" திவ்யா பரிதாபமாக கெஞ்ச ஆரம்பிக்க, சற்று முன் இழந்த உற்சாகத்தை அசோக் இப்போது மீண்டும் பெற்றான். அவன் உடலுக்குள் ஏதோ புது ரத்தம் பாய்வது மாதிரி உணர்ந்தான். கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்த புன்னகை இப்போது மீண்டும் அவன் உதடுகளில் வந்து ஒட்டிகொண்டது. திவ்யாவின் தோள் மீது உரிமையாக கைபோட்டு, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான். "சரி.. உன்னை விட்டு எங்கயும் போகலை.. போதுமா..?" என்றான். "தேங்க்ஸ்டா..!!" சொல்லிவிட்டு திவ்யாவும் அசோக்கின் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள். அந்த வார இறுதியில் ஒருநாள் திவ்யாவும் திவாகரும் நேரில் சந்தித்துக் கொள்வது என்று முடிவானது. 'ஏதாவது காபி ஷாப்ல மீட் பண்ணிக்குங்க..' என்று அசோக் கொடுத்த ஐடியாவைத்தான், திவ்யா திவாகருக்கு முன்வைத்தாள். அவனும் ஒத்துக் கொண்டான். அவளை சந்திக்க மிக ஆர்வமாக இருப்பதாக சொன்னான். இடையில் இருந்த நான்கு நாட்களில் திவ்யா அசோக்கை கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விட்டாள். "என்ன ட்ரஸ் போட்டுட்டு போறது..? ஸாரி ஓகேவா..?" "அதுலாம் வேணாம்.. உன் ஆளுக்கு புடிக்காது.." "உனக்கு எப்படி தெரியும்..?" "நானும் அவர் கூட சேட் பண்ணிருக்கேன்ல..? அவரோட டேஸ்ட் என்னன்னு ஓரளவு என்னால அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியுது.." "ஓ..!! அப்போ நீ என்ன சஜஸ்ட் பண்ற..?" "ஜீன்ஸ் டி-ஷர்ட்..!!" "போடா.. எனக்கு ஜீன்ஸே பிடிக்காது.." "உனக்கு புடிக்காட்டா என்ன.. அவருக்கு புடிக்கனுமா இல்லையா..?" "ஆமாம்.. புடிக்கணும்.." "அப்போ போட்டுட்டு போ..!!" "அது எப்படி அவருக்கு புடிக்கும்னு நீ இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற..?" "ஒரு ஆம்பளை மனசு.. இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியும்..!!" "ஆஆஆ...!! அப்பா... முடியலை..!!" "ஹாஹா..!! ம்ம்ம்.. கொஞ்சம் கிளாமரா.. கொஞ்சம் செக்ஸியா.. போ..!! ஜீன்ஸ்ல.. பேன்ட் கூட வேணாம்.. குட்டியா ஷார்ட்ஸ் இருக்குல.. அது போட்டுட்டு போ.. உன் ஆளுக்கு ரொம்ப பிடிக்கும்..!!" "அய்யே.." "நல்லா மேக்கப் போட்டு போ.. லிப்ஸ்டிக் மறக்காத.." "அதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுடா.." "உனக்கு பிடிக்குமா இல்லையான்னு யார் கேட்டா இங்க..?" "சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.. போட்டுட்டு போறேன்..!! சரி.. எப்போ போகலாம்..?" "எங்க..?" "எனக்கு ட்ரஸ் செலக்ட் பண்றதுக்கு.." "அடிப்பாவி.. அதுவும் நான்தான் பண்ணனுமா..?" அன்று மாலையே ஒரு கடைக்கு சென்று திவ்யாவுக்கு உடைகள் வாங்கினார்கள். மாடர்னாக.. அணிந்து கொண்டால் கவர்ச்சியை கொப்பளிக்கும்.. நான்கைந்து செட் உடைகள்..!! ட்ரையல் ரூம் சென்று அணிந்து கொண்டு வந்து, அசோக்கிடம் காட்டி ஒப்பீனியன் கேட்டாள். "நல்லாருக்காடா..? ரொம்ப வல்கரா இருக்கோ..?" "அதெல்லாம் ஒண்ணுல்ல.. உனக்கு எது போட்டாலும் அழகாத்தான் இருக்கும்..!!"உடை விஷயம் மட்டும் இல்லை. திவாகரிடம் எப்படி பேச வேண்டும் என்பது பற்றியும் நிறைய ஆலோசனைகள் கேட்டுக் கொண்டாள். அசோக்கும் அட்வைஸ்களை வாரி வழங்கினான். "அவர்கிட்டயும் போய் லூசு மாதிரி வளவளன்னு பேசிட்டு இருக்காத.. அவருக்கு பேச சான்ஸ் கொடு.. நீ பேசுறதை விட.. அவர் பேசுறதை கவனி.." "ம்ம்.." "சந்தோஷமான மேட்டர் மட்டுமே பேசு.. உன் கவலைலாம் அவர்கிட்ட சொல்லி புலம்பிட்டு இருக்காத.. ஆம்பளைங்களுக்கு அழுமூஞ்சி பொம்பளைங்களை புடிக்கவே புடிக்காது..!! " "ம்ம்.." "அவர் ஏதாவது ஜோக் அடிச்சா நல்லா சிரி.. மொக்கை ஜோக்கா இருந்தா கூட பரவால.." "ஹாஹா..!! ஓகே..!!" "முக்கியமான விஷயம்.. அவர் செய்ற சின்ன சின்ன விஷயங்களை கூட பாராட்டி பேசு.. மறந்து கூட எதுக்காகவும் அவரை கிரிட்டிசைஸ் பண்ணாத.." "ஏன்..?" "உன் ஆளுக்கு அதை தாங்கிக்கிற மென்டாலிட்டி கிடையாது.. நான் கவனிச்சிருக்கேன்..!! அப்டியே ஏதாவது சொல்றதா இருந்தாலும்.. சாஃப்டா, நாசூக்கா சொல்லு.." "ம்ம்.. ஓகேடா.." அவர்கள் சந்திக்கும் நாளும் வந்தது..!! ஆர்வ மிகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திவ்யா அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தாள். நொடிக்கொருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்துக் கொண்டாள். திவாகர் எப்போது வருவான் என்று பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அசோக்கிற்கு அவ்வப்போது கால் செய்து அப்டேட் கொடுத்தாள். "ரொம்ப போரடிக்குதுடா.." "உன்னை யார் இவ்ளோ சீக்கிரம் அங்க போக சொன்னது..?" "நான் என்ன பண்றது..? அந்த ஆட்டோக்காரன் சீக்கிரம் வந்துட்டான்.. வந்து பார்த்தா திவாகர் இன்னும் வரவே இல்ல.." "அவனை உதைச்சா எல்லாம் சரியா வரும்.." "எவனை..?" "ம்ம்.. அந்த ஆட்டோக்காரனை..!! சரி.. அவர் வர்றதுக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு.. அங்கேயே உக்காந்துட்டு இருக்காத.. எல்லாம் ஒருமாதிரி பாக்க போறாங்க.. பக்கத்துல எங்கயாது போய் சுத்திட்டு வா.." "பக்கத்துல என்ன இருக்குது.. ஒரே ஒரு புக் ஸ்டால்தான் இருக்குது.." "நல்லதா போச்சு.. ஏதாவது ஒரு புக் வாங்கி அவருக்கு பிரசன்ட் பண்ணேன்.. சர்ப்ரைசா இருக்கும்..!!" "வாவ்... நல்ல ஐடியாவாத்தான் இருக்குது..? என்ன புக் வாங்குறது..?" "அது கூட நான்தான் சொல்லனுமா..? போய் பாருடி.. சோம்பேறி..!!" "சரி சரி.. திட்டாத..!!" திவ்யா அந்த புத்தக கடைக்குள் நுழைந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சுற்றி சுற்றி வந்தாள். அப்புறம்.. 'திவாகருக்குத்தான் கவிதைகள் மீது மிகவும் ஆர்வம் ஆயிற்றே. ஏதாவது கவிதைத்தொகுப்பு வாங்கிக் கொடுக்கலாம்' என்று முடிவு செய்தாள். கவிதைத்தொகுப்பு பகுதிக்கு சென்று தேடினாள். மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்து அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தாள். மீரா எனும் கவிஞருடைய கவிதைத்தொகுப்பு..!! கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்பக்கங்கள் புரட்டி ஒரு சில கவிதைகளை வாசித்த திவ்யாவுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த புத்தகத்திற்கு பில் போட சொன்னாள். பர்ஸ் திறந்து பணம் எடுத்து கொடுத்தாள். மீதிப்பணம் தந்த பெண்ணிடம்.. "பென் இருக்கா..?" என்று கேட்டாள். அந்தப்பெண் ஒரு பேனாவை எடுத்து நீட்ட, புத்தகத்தின் முதல் பக்கம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். இல்லை இல்லை.. எழுத முயன்றாள். ஆனால்.. பேனா ஒத்துழைக்கவில்லை. மை தீர்ந்து போயிருந்தது போலிருக்கிறது. 'இது எழுதலைங்க..' என்று மீண்டும் அந்தப் பெண்ணிடமே திரும்ப, அவளோ இப்போது வேறு ஒரு கஸ்டமருக்கு பில் போடுவதில் பிஸியாக இருந்தாள். எழுதாத பேனாவை வைத்து தலையை சொறிந்தவாறு திவ்யா நின்றிருக்கையில்தான், அவள் முன்னே அந்த கரம் நீண்டது. விரல்களுக்கிடையே ஒரு பால்பாயின்ட் பேனாவை பிடித்திருந்தது அந்த கரம். கரிய நிறத்தில்.. நீளமான.. கூர்மையான.. பால்பாயின்ட் பேனா..!! கூடவே மென்மையாக அந்த குரலும் ஒலித்தது. "Wherever you go.. don't forget your pen..!!" திவ்யா திகைத்துப் போய் திரும்பி பார்க்க, வெண்பற்கள் தெரிய சிரித்தவாறு திவாகர் நின்றிருந்தான். மழமழவென்று ஷேவ் செய்து பளிச்சென வந்திருந்தான். ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்திருந்தான். கண்ணுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். அவனுடய உடலில் இருந்து ஒரு உயர் ரக சென்ட் வாசனை வெளிப்பட்டு.. அருகில் இருப்பவர்களின் நாசியில் குப்பென ஏறியது..!! "ஹா..ஹாய்..." என்றாள் திவ்யா திகைப்பு மாறாமலே. "பேனா வேணாமா..?" "ஆங்.. வேணும் வேணும்.." அவசரமாக சொன்ன திவ்யா அவன் கையில் இருந்த பேனாவை வாங்கிக் கொண்டாள். வெட்கம் அவளை பிடுங்கி தின்றது. கன்னங்கள் சிவக்க ஓரக்கண்ணால் திவாகரை பார்த்துக் கொண்டே, புத்தகம் திறந்து 'அன்புடன் திவ்யா..' என்று எழுதினாள். பேனாவை மீண்டும் அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி தன் பாக்கெட்டில் செருகிக் கொண்ட திவாகர், சற்றே கிண்டலான குரலில் சொன்னான். "சொல்வேன்னு எதிர்பார்த்தேன்.. நீ சொல்லலை.." "என்னது..?" "தேங்க்ஸ்..!!" "ஓ.. ஸாரி..!! தேங்க்ஸ்.. ஃபார் யுவர் பென்.." திவ்யா அசடு வழிந்தாள். "இட்ஸ் ஓகே.." திவாகர் சிரித்தான். "அண்ட் தென்.. திஸ் இஸ் ஃபார் யூ.." திவ்யா புத்தகத்தை அவனிடம் நீட்ட, அவன் 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று ஆச்சரியப்பட்டவாறே அதை வாங்கிக்கொண்டான். பக்கங்களை புரட்டி மேலோட்டமாக வாசித்தான். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான். "லவ்லி..!!" "யா.. நானும் சில கவிதைகள் வாசிச்சு பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது.." "நான் கவிதையை சொல்லல.." "அப்புறம்..?" "உன்னை சொன்னேன்..!! யூ லுக் லவ்லி..!!" திவாகர் திவ்யாவின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு சொல்ல, திவ்யாவின் முகத்தில் இப்போது குப்பென்று ஒரு நாணம் வந்து குடிகொண்டது. 'ஓஹ்.. தேங்க்ஸ்..' என்று வெட்கப்பட்டவள், தலையை குனிந்து கொண்டாள். "ஷேல் வீ மூவ்..?" திவாகர் கேட்க. "ம்ம்.. யா.." திவ்யா தலையசைத்தாள். இருவரும் காபி ஷாப்புக்குள் நுழைந்தார்கள். ஓரமாய் கிடந்த ஒரு டேபிளை தேர்வு செய்து அமர்ந்து கொண்டார்கள். ஆளுக்கொரு காபி ஆர்டர் செய்து கொண்டார்கள். கண்ணாடி தடுப்பு வழியாக.. வெளியே சாலையில் செல்லும் வாகனங்கள் பளிச்சென தெரிந்தன. வேடிக்கை பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான்."ஃபோட்டோவை விட நேர்ல நீ ரொம்ப அழகா இருக்குற திவ்யா.." "ம்ம்.." "உன் மேக்கப், லிப்ஸ்டிக், உன் ட்ரஸ்.. எல்லாமே.. ஜஸ்ட் பெர்ஃபக்ட்..!!" "நான் போட்டிருக்குற ட்ரஸ் பிடிச்சிருக்கா..?" "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.." "ம்ம்.. அசோக்தான் செலக்ட் பண்ணினான்.. அவனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.." திவ்யா அந்த மாதிரி வெகுளித்தனமாக சொல்ல, "ஓ.." என்றவாறு திவாகர் பட்டென முகம் சுருக்கினான். "என்னாச்சு..?" "ஒண்ணுல்ல..!! ட்ரெஸ் கூட அவனை கேட்டுத்தான் செலக்ட் பண்ணுவியா..?" "ஆமாம்.. அவன் எது சொன்னாலும் கரெக்டா இருக்கும் தெரியுமா..? நானும் எது பண்ணினாலும் அவனை கேட்டுத்தான் பண்ணுவேன்.." திவ்யா ரொம்பவே பெருமையாக சொன்னாள். "ரொம்ப பிடிக்குமோ அவனை..?" "என்ன இப்படி கேட்டுட்டீங்க..? அசோக்தான் எனக்கு எல்லாமே..!!" "ம்ம்ம்ம்.." என்று இறுக்கமாக சொன்னவாறு, திவாகர் ஒரு பெருமூச்சு விட்டான். "ஆமாம்.. ஏன் இதெல்லாம் கேக்குறீங்க..?" "இல்ல.. சேட்லயும் எப்போ பார்த்தாலும் அசோக் புராணம் படிக்கிற.. நேர்லயும் அதேயே ஆரம்பிச்சுட்டியே.. அதான் கேட்டேன்..!!" "ஓ.. ஸாரி.." "இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்... நாம ஒரு அக்ரீமன்ட்டுக்கு வரலாமா திவ்யா..?" "என்ன..?" "இனிமே நாம பேசுறப்போ.. அசோக்கை பத்தி எதுவும் பேசவேணாம்..!! நம்மை பத்தி பேசிக்கவே ஆயிரம் விஷயம் இருக்குறப்போ.. எதுக்கு தேவையில்லாம அவனை பத்தி பேசி.. நேரத்தை வேஸ்ட் பண்ணனும்..? ம்ம்..? நீ என்ன சொல்ற..?" உதடுகளில் அழகாக ஒரு புன்னகையோடும், கண்களை இடுக்கி கூர்மையாக பார்த்தவாறும் திவாகர் கேட்க, திவ்யா திகைத்துப் போனாள். அவன் முன்வைத்த ஒப்பந்தம் அவளுடைய மூளைக்குள் புகுந்து, இதயத்தை பற்றி பிசைந்தது..!! தான் சிறுவயதில் இருந்து ஆதரவாக பற்றியிருந்த அசோக்கின் கையை, யாரோ வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து.. பிரிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! "ம்ம்.. சரி.." என்றாள் மனதில் ஒரு உறுத்தலுடனே. திவ்யாவும், திவாகரும் ஒரு மணி நேரம்தான் பேசியிருப்பார்கள். ஆனால் அவள் அதைப்பற்றி இரண்டு மணி நேரங்கள் அசோக்கிடம் கதையளந்தாள். 'அவர் அப்படி.. அவர் இப்படி..' என்று..!! அசோக் பற்றி இனி பேசவேண்டாம் என்று திவாகர் சொன்னதை மட்டும் அசோக்கிடம் மறைத்து விட்டாள். அதையே வேறு மாதிரி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள். "அவர் ரொம்ப பொசஸிவ் தெரியுமா..? அவர் அப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு.." அவள் சொல்ல சொல்ல அசோக்கிற்கு எரிச்சல் கிளம்பும். இருந்தாலும் எல்லாவற்றையும் உள்ளே போட்டு மறைத்துக் கொண்டு அவள் சொல்லுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக் கொண்டிருப்பான். திவ்யா இந்த மாதிரி அவனை இம்சை செய்தாள் என்றால், சித்ராவின் டார்ச்சர் வேறு மாதிரி இருந்தது. எப்படி என்கிறீர்களா..? இது.. திவ்யாவும், திவாகரும் சந்தித்துக் கொண்டதற்கு அடுத்த நாள் நடந்தது..!! மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு அசோக்கும், சித்ராவும் திரும்ப வந்து கொண்டிருந்தார்கள். அசோக் பைக்கை ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்தவாறே சித்ரா தொணதொணத்துக் கொண்டு வந்தாள். "என்னடா.. அவ நேத்து அந்தப்பையனை போய் பார்த்தாளாமா..?" "ம்ம்.. ஆமாம்.. போய் பார்த்துட்டு.. ஹண்ட்ரட் ரூபிசுக்கு காபி குடிச்சுட்டு வந்திருக்கா.." "எப்படி.. அவளுக்கு புடிச்சிருந்ததாமா..?" "காபியா..?" "அடச்சை..!! அந்த பையனைடா..!!" "புடிச்சதாலதானக்கா பார்க்கவே போனா.." அசோக் எரிச்சலாக சொன்னான். "நீ ஏண்டா இவ்வளவு கோவப்படுற..? ஹ்ம்ம்... நெனச்சா எனக்கும் பாவமாத்தான் இருக்கு..!!" "என் நெலமையை நெனச்சா..?" "இல்லடா.. அந்தப்பையனை நெனச்சா..!! இந்த அடங்காப் பிடாரியை கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு படப்போறானோ..? அவன் வாழ்க்கை கெட்டு குட்டிச்சுவராத்தான் ஆகப் போகுது..!! ஷேர் வாங்கி விக்கிறானா அவன்..? சோறு கூட இல்லாம தெருத்தெருவா பிச்சை எடுக்க போறான் பாரு..!!" சித்ரா திவ்யாவை திட்ட, அசோக்கிற்கு கோவம் வந்தது. "இப்போ எதுக்கு தேவையில்லாம அவளை திட்டுற..? நீயும் லேசுப்பட்டவ இல்லக்கா.. எப்பவும் அவளை விட ஒரு படி மேலத்தான் நிக்கிற நீயும்..!!" "ம்க்கும்.. அவுகளை சொன்னதும்.. இவுகளுக்கு கோவத்தை பாரு.." "ஏன் சொல்லமாட்ட..? உனக்குலாம் என் கஷ்டம் எங்க புரியப்போகுது..? உனக்கு எல்லாமே நக்கலாத்தான் இருக்குது..!!" "அப்படி என்ன தம்பி உனக்கு கஷ்டம்..?" "காதலிக்கிற பொண்ணுக்கே.. இன்னொரு பையனை அவ காதலிக்க ஐடியா கொடுக்குற கொடுமை இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்.." "ஹாஹா..!! உன்னை யாரு அப்படிலாம் கஷ்டப்பட சொன்னது..? உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம்..?? பெரிய தியாகி இவரு.. 'எங்கிருந்தாலும் வாழ்க'னு எடுத்ததுக்கெல்லாம் அவளுக்கு அட்வைஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரு..!! அவதான் உனக்கு இல்லைன்னு ஆகிப் போச்சுல..? அவ எக்கேடோ கெட்டு போறான்னு.. விட்டு தலை முழுகி தொலைக்க வேண்டியதுதான..?" "ப்ச்.. அப்டிலாம் என்னால விட முடியலைக்கா..!! பாவம் அவ.. அப்பாவி..!! என் ஹெல்ப் இல்லன்னா அவ ரொம்ப கஷ்டப்படுவா..!!" "உன்னை வேணாம்னு சொன்னவளுக்காக இப்படி உருகுறியேடா..? இங்க பாரு.. அக்கா சொல்றதை கேளு.. இந்த லவ் அட்வைஸ் கொடுக்குற வேலையலாம் இன்னைக்கோட ஸ்டாப் பண்ணிடு.. அவ சங்காத்தமே வேணாம்னு தலை முழுகிடு.. அவளுக்கு என்ன கஷ்டமோ அதை அவளே பார்த்துக்கட்டும்..!!" "ம்க்கும்.. அவளை நான் தலைமுழுகுனா அவளுக்கு கஷ்டமா இருக்கோ இல்லையோ.. உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!" "ஏன்..?" "அவளோட சீக்ரட்லாம் அப்புறம் யாரு உனக்கு வந்து சொல்றது..?" "அடச்சீய்.. அவ சீக்ரட்டை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன்..?" என்று வெறுப்பாக சொன்ன சித்ரா, அடுத்த நொடியே.. "ம்ம்ம்.. அப்புறம்.. வேற என்ன சொன்னா அவ..?" என்று அசோக்கை கேட்டாள்."ம்ம்ம்..?? நான் செலக்ட் பண்ணின ட்ரஸ் அவருக்கு புடிச்சிருந்ததாம்.. நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி மேக்கப்லாம் போட்டுட்டு போனாள்ல.. அதுவும் அவரை ரொம்ப அட்ராக்ட் பண்ணிச்சாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்க, "ஹாஹாஹாஹாஹாஹா.." சித்ரா பெரிதாக சிரித்தாள். "எதுக்கு சிரிக்கிற இப்போ..?" அசோக் புரியாமல் கேட்டான். "இல்ல.. நீ அவளை பிக்கப் பண்ணலாம்னு பார்த்த.. அவ உன்னை மேக்கப் மேன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாளடா தம்பி..?? அதை நெனச்சா அக்காவால தாங்க முடியலை..!!" கிண்டலாக சொன்ன சித்ரா, அசோக்கின் முதுகில் முகத்தை வைத்து, 'ம்ம்.. ம்ம்.. ம்ம்..' என்று போலியாக அழுது காட்ட.. அசோக் நொந்து போனான்..!! வெறுப்புடன் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை சர்ரென முறுக்கினான். இந்த மாதிரி.. இரண்டு பெண்களின் இம்சைகளும்.. மேலும் இரண்டு, மூன்று வாரங்கள் தொடர்ந்தன. திவாகரும் திவ்யாவும் வாரம் ஒருமுறை நேரில் சந்தித்துக் கொண்டார்கள். தினமும் ஆன்லைனிலும், போனிலும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியதை திவ்யா அசோக்கிடம் கொட்டி தீர்ப்பாள். அசோக்கும் எரிச்சலுடன் எல்லாம் கேட்டுக் கொள்வான். எல்லாவற்றையும் அப்படியே சொல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அந்த விஷயங்களை அக்காவிடம்.. அவளுடைய துருவல் தாங்காமல் அசோக் ஒப்பிப்பான்..!! சித்ராவும் எல்லாவற்றையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு. அப்புறம் அவனையே நோகடிப்பாள்..!! இப்போதெல்லாம் அசோக் அடிக்கடி மதுவின் துணையை நாட ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில்.. ஆபீசில் இருந்து கிளம்புகையிலேயே.. அருகில் இருக்கும் ஒரு பார் சென்று.. ஆல்கஹாலை உள்ளே ஊற்றிவிட்டு.. அப்புறமாய் வீட்டுக்கு செல்வான்..!! அன்றும் அப்படித்தான்.. ஆபீசில் இருந்து கிளம்பியவன்.. பைக்கை அந்த பார் முன்பாக பார்க் செய்தான். உள்ளே நுழைந்தான்..!! கொஞ்சம் காஸ்ட்லியான பார் அது..!! நீல நிறத்தில் மந்தமான வெளிச்சம் அந்த இடம் முழுவதையும் நனைத்திருந்தது..!! ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் இருந்து.. ஒரு ஆங்கிலப் பாடல் மெலிதாக கசிந்து கொண்டிருந்தது..!! கருப்பு நிற சோபாக்கள்.. அவற்றின் மீது கையில் கோப்பையுடன் ஆட்கள்..!! நாற்பத்திரண்டு அங்குல எல்.ஸி.டி-யில்.. சச்சின் திரும்ப திரும்ப கிளீன் போல்ட் ஆகிக்கொண்டிருந்தார்.. ரீப்ளே..!! மேட்ச் பார்க்க வசதியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அசோக் அமர்ந்து கொண்டான். மெனு கார்ட் நீட்டிய பேரரிடம்.. அதை வாங்காமலே.. "ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. டூ லார்ஜ்.. ஒன் ப்ரஞ்ச் ப்ரை..!!" என்று ஆர்டர் செய்தான். பத்தே நிமிடங்களில் ஆர்டர் செய்தவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டே.. விஸ்கியை உள்ளே விட்டுக் கொண்டே.. விரல் சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே..!! ஒரு அரை மணி நேரம்..!! பில் வந்தது. கிரெடிட் கார்ட் எடுத்து கொடுத்தான். வாங்கி சென்ற பேரர், இரண்டு நிமிடங்கள் கழித்து திரும்ப வந்து, பில் புத்தகத்தை டேபிளில் வைத்து சென்றான். அசோக் அதை திறந்து பார்த்தான். சற்றே எரிச்சலானான். உள்ளே கார்ட் ஸ்வைப் செய்யப்பட்ட ஸ்லிப் இருந்தது. ஆனால் அதில் கையொப்பம் இடுவதற்கு பேனா வைக்க மறந்திருந்தான். அசோக் அந்த பேரரின் முதுகை பார்த்து கத்தினான். "ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..!! பேனா..!!" அவன் கத்திக் கொண்டிருக்கும்போதே, "Wherever you go.. don't forget your pen..!!" என்ற அந்த குரல் அவனுக்கு மிக அருகே ஒலித்தது. அதே நேரம் பேனாவுடன் அந்தக்கை அவன் முன்னே நீண்டது..!! பேனாவை வாங்கிக்கொண்டே, அசோக் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் நின்றிருந்தான். திவாகர்..!!!! மொழுமொழு முகத்துடன்.. உதட்டில் சிரிப்புடன்.. கண்ணுக்கு குளிர் கண்ணாடியுடன்..!! அசோக் அதிர்ந்து போனான். திவாகரை சந்திப்போம் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில்..!! இவனுக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று திவ்யா சொல்லியிருக்கிறாளே..? இவன் என்ன செய்கிறான் இங்கே..? மிகவும் குழம்பிப் போனான். ஆனால் திவாகர் மிகவும் கேஷுவலாக இருந்தான். அவனுக்கு இவன்தான் அசோக் என்று தெரியாதே..? இயல்பாக அசோக்கிற்கு எதிரே வந்து அமர்ந்தான். இவனை பார்த்து ஸ்னேஹமாய் புன்னகைத்தான். திவாகரையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் குனிந்து கையொப்பம் இட்டான். அதற்குள் பேரர் வந்து சேர்ந்திருக்க, திவாகர் அவனிடம் மிகவும் உரிமையாக பேசினான். அடிக்கடி இந்த பாருக்கு வருவான் போலிருக்கிறது. ஸ்டைலாக.. ஆங்கிலத்தில் பேசி.. சில மதுவகைகளை ஆர்டர் செய்தான். பேரர் சென்றதும் அசோக் திவாகரிடம் பேனாவை நீட்டினான். அவன் வாங்கி பாக்கெட்டில் செருகிக் கொண்டான். அப்புறமும் அசோக் அவனையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க, "தேங்க்ஸ்லாம் சொல்ல மாட்டீங்களா..?" திவாகருடைய குரலில் ஒருவித கேலியும், கடுப்பும் சரி விகிதத்தில் கலந்திருந்தது. "ஸாரிங்க.. தேங்க்ஸ்..!!" என்றான் அசோக். "ம்ம்.. ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?" "இல்ல.. சொல்லுங்க.." "வெளில போறப்போ.. பாக்கெட்ல எப்போவும் ஒரு பேனா வச்சுக்குறது ரொம்ப நல்ல பழக்கம்.. அதை ஏன் யாருமே பண்ண மாட்டேன்றீங்கன்னு எனக்கு தெரியலை..!!" "ம்ம்.. நீங்க சொல்றது சரிதான்.. இனிமே அதை ஃபால்லோ பண்ண ட்ரை பண்றேன்.." "ஹாஹா..!! நான் என் மனசுல பட்ட ஒரு நல்ல விஷயத்தை சொன்னேன்.. டோன்ட் மிஸ்டேக் மீ..!!" என்று திவாகர் அழகாக சிரிக்க, "இல்லீங்க.. நான் தப்பா எடுத்துக்கலை.." அசோக் அமைதியாக சொன்னான். திவாகர் ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் இதழ்கள் விரித்து புன்னகைத்தான். படக்கென்று அவனது வலது கையை அசோக்கின் முன்பு நீட்டி.. "பை தி வே.. ஐ'ஆம் திவாகர்..!!" என்றான். அசோக்கும் அவனுடைய கையை பிடித்து குலுக்கினான். "ஐ'ஆம் அரவிந்த்.." என்று பொய்யான பெயரை சொன்னான்.கோயில் குளங்கள் ஒரு ஊருக்கு தனி அழகை கொடுக்கத்தான் செய்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று முன்னோர்கள் சொன்னதனாலோ என்னவோ, புளியங்குள மக்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பே தங்கள் கிராமத்தில் அழகான ஒரு கோயிலை கட்டி முடித்திருந்தார்கள். ஊர்க் கண்மாய்க்கு முன்பாக அனாமத்தாக கிடந்த இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் ஆதி பரமேஸ்வரி அம்மனுக்கு ஆலயம் எழுப்பிவிட்டார்கள். ஆண்டு தவறாமல் பொங்கல் வைத்து, விழா எடுத்து, அம்மனை மனம் குளிர செய்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பாக கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் கூட நடத்தினார்கள். பங்குனி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுவார்கள். அடுத்த வாரம் செவ்வாயும், புதனும் திருவிழா..!! திருவிழாவுக்கு முந்தைய அந்த ஒரு வாரமும் ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று ஊர் கோலாகலப்படும். மைக்செட்டு, சீரியல் அலங்காரம், வீதியெங்கும் குழல் விளக்குகள் என.. ஊரே ஒலியும், ஒளியுமாய் இருக்கும்..!! திருவிழா நடக்கும் அந்த இரண்டு நாட்களும், கொண்டாட்டம் இன்னும் உச்சத்தை எட்டும்..!! செவ்வாய் இரவு கரகாட்டமோ, வில்லுப்பாட்டோ, பாட்டு கச்சேரியோ வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு வள்ளி திருமண நாடகம் என்பது எழுதப்படாத ஒரு விதி..!!

அவர்கள் எடுக்கும் விழா, அம்மனை மகிழ்விக்க உதவியதோ இல்லையோ.. ஊரை ஒன்றுபடுத்த பெரிதும் உதவியது..!! மீசை நரைத்த பெருசுகளும், அரும்பு மீசை சிறுசுகளும், கைகோர்த்துக்கொண்டு அம்மன் காரியம் செய்வார்கள்..!! எவ்வளவுதான் ஒருவொருக்கொருவர் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும்.. தாளாத மனக்கசப்பு இருந்தாலும்.. ஊர்க்காரியம் என்றால் ஒன்று கூடி விடுவார்கள் புளியங்குள மக்கள்..!! "வாங்கப்பு.. வந்து பந்தக்காலை ஊன்டுங்க.. நீங்க ஊன்டுறதுதான வழக்கம்..?" என்று ஒரு ஊர்ப்பெரியவர், தனக்கு பிடிக்காத இன்னொரு ஊர்ப்பெரியவரை முகம் ஏறிட்டு பாராமல் அழைப்பார். அந்த இன்னொரு பெரியவரும்.. "அட இதுல என்ன இருக்குப்பா.. யார் ஊன்டுனா என்ன..? சரி வா.. ரெண்டு பெரும் சேர்ந்தே ஊன்டுவோம்.." என்பார். இருவரும் சேர்ந்து பந்தல் கால் நடுகையில், அவர்களுடைய கைகள் லேசாக உரசிக் கொள்ளும். நெடு நாட்களுக்கு அப்புறம், ஒருவர் முகத்தை இன்னொருவர் ஏறிட்டு பார்த்துக் கொள்வார்கள். இருவருடைய இதழ்களிலும் ஒரு சிநேகப் புன்னகை படரும். பந்தல் கால் நட்டுவிட்டு, இருவரும் ஒன்றாக.. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, 'தாயே..!!!' என்று ஆதி பரமேஸ்வரி அம்மனை வணங்குவார்கள். வெறுப்பையும், மனக்கசப்பையும் தூக்கி எறிந்துவிட்டு, அம்மனின் முன்பு அரிவாள் மீசை முளைத்த குழந்தைகளாய் நிற்பார்கள்..!! அசோக், திவ்யா, சித்ரா, கார்த்திக்.. இவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஒரு வருடம் கூட ஊர் திருவிழா தடைப்படவில்லை. எல்லா வருடமும், அதற்கு முந்தைய வருடத்தை விட இன்னும் கோலாகலமாகவே கொண்டாடப்பட்டது. இவர்களும் அந்த சமயத்தில் எங்கிருந்தாலும், ஒருமுறை கூட திருவிழாவை காண தவறியதில்லை. கல்லூரியோ, அலுவலகமோ.. விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு விரைந்து விடுவார்கள். அது.. திருவிழாவுக்கு முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை இரவு..!! பயணத்துக்கு தேவையான வேலைகளை சித்ரா கவனித்துக் கொண்டிருந்தாள். முதலில் அன்று இரவே ஊருக்கு பயணிக்கத்தான் திட்டமிட்டிருந்தார்கள். இரவு ட்ரெயினில் வெயிட்டிங் லிஸ்ட் மூவ் ஆகாததால்.. அடுத்த நாள் காலை பஸ்ஸில் பிரயாணம் செல்லலாம் என்று திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள். கார்த்திக்குக்கு பிரயாணத்தின்போது கொறிக்க ஏதாவது நொறுக்குத்தீனி வேண்டும். நேற்றே வெல்ல சீடை பொரித்தெடுத்து ஒரு பொட்டலம் கட்டியாயிற்று. இன்று வீட்டில் மிச்சமிருந்த முந்திரி பருப்புகளை சித்ரா பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் அடைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ ஞாபகம் வந்தவளாய், கையிலிருந்த சல்லடை கரண்டியுடனே சமையலறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலை நோக்கி நடந்தாள்.ஹாலில் அண்ணனும், தங்கையும் அமர்ந்து டிவியில் 'கனா காணும் காலங்கள்' பார்த்துக் கொண்டிருந்தார்கள். கார்த்திக்குடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த திவ்யா, அண்ணியை கண்டதும், பார்வையை தொலைக்காட்சியின் பக்கம் திருப்பிக் கொண்டாள். சித்ராவும் அவளை கண்டுகொள்ளாமல், கணவனிடம் கேட்டாள். "முந்திரி பருப்பும் வறுத்து வச்சுட்டேங்க.." "ஓகே.. வெரி குட்.." "சும்மா அப்படியே சாப்ட்டுக்குறீங்களா..? இல்ல.. உப்பு, மொளகாத்தூள் போட்டு வைக்கவா..?" "நோநோ.. அதெல்லாம் வேணாம்.. அப்புறம் போற வழில வயிறு புடுங்கிக்கப் போவுது..!! ப்ளெயின் முந்திரி பருப்பு மட்டும் போதும்..!!" "ம்ம்.. சரிங்க.." சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நுழைய முற்பட்டபோதுதான் அசோக் வீட்டுக்குள் நுழைந்தான். ஆபீசில் இருந்து இப்போதுதான் திரும்புகிறான். தம்பி வந்ததும் அக்கா அங்கேயே நின்றுகொண்டாள். அசோக் திவ்யாவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான். வந்ததுமே சென்னை ட்ராபிக் பற்றி புலம்ப ஆரம்பித்தவனிடம், பேச்சை மாற்றும் விதமாக கார்த்திக் கேட்டான். "அப்புறம் அசோக்.. உன் லீவ் அப்ரூவ் ஆயிடுச்சா.. நீ என்னைக்கு ஊருக்கு வர்ற..?" "ப்ச்.. இல்லைத்தான்.. லீவ் அப்ரூவ் ஆகலை..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "அச்சச்சோ.. அப்போ திருவிழாவுக்கு நீ வரலையா..?" "ம்ஹூம்..!! ஃபர்ஸ்ட் டைம்.. நம்ம ஊர் திருவிழாவை மிஸ் பண்ண போறேன்..!!" "ப்ச்.. என்ன அசோக்.. இப்படி சொல்ற..? திருவிழா நேரத்துல நீ இருந்தாத்தான் வீடே களை கட்டும்..!!" "என்னத்தான் பண்றது..? ப்ராஜக்ட் ரிலீஸ் டைமாகிப் போச்சு..!! நெறைய வேலை.. அதில்லாம.. எங்க டீம்லேயே.. நான்தான் க்ரிட்டிக்கல் ரிசோர்ஸ்..!!" அசோக் கேஷுவலாக அதே நேரம் பெருமையாக சொல்ல, திவ்யா 'ம்க்கும்.. சரியான பெருமை பீத்த களைய பய..' என்று முனுமுனுத்தவாறு, முகத்தை வேறு அஷ்ட கோணலாக்கியபடி வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான். "கண்டிப்பா போயே ஆகணும்னு சொன்னேன் அத்தான்.. ஆனா.. மேனேஜர் என் கால்ல விழாத குறையா கெஞ்சுனாரு.. எனக்கும் பாவமா போச்சு.. 'சரி போ போ.. போகலை'ன்னு சொல்லிட்டேன்..!!" அசோக் சோகமாக சொல்லி முடிக்க, கார்த்திக் இப்போது சற்றே வருத்தமான குரலில் சொன்னான். "ச்சே.. இப்படி ஆயிடுச்சே.. எல்லாரும் இருக்குறப்போ நீ மட்டும் இல்லைன்னா.. அது அவ்வளவு நல்லா இருக்காதே..!! அட்லீஸ்ட் புதன்கிழமை கெடா வெட்டுக்காவது வந்து.. கறி சோறு சாப்பிட்டு போகலாம்ல அசோக்..?" கார்த்திக் சீரியசாக சொல்ல, அசோக் இப்போது அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். 'ங்கொய்யால.. அப்போவாச்சும் புதன்கிழமை திருவிழாவுக்கு வந்து சாமி கும்பிட்டு போகலாம்லன்னு சொல்றானா பாரு..? திங்கிறதுலயே இருக்கான்யா.. ச்சே..!!' என்று மனதுக்குள் காறி துப்பினான். அப்புறம் அக்கா புருஷனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்று அசோக்கிற்கு தோன்றியது. குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே எள்ளல் தொனிக்க கேட்டான். "கெடா வெட்டு செவ்வாக்கிழமைலத்தான்..? புதன்கிழமைன்னு சொல்றீங்க..?" அசோக் கேட்க, கார்த்திக் இப்போது 'கெக்கேபிக்கே'வென சிரிக்க ஆரம்பித்தான். தன் பானை வயிறு குலுங்க சிரித்தவன், அப்புறம் அந்த சிரிப்பை அடக்க முடியாமலே சொன்னான். "ஹ்ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹ்ஹா.. எந்த உலகத்துல இருக்குற நீ..? இத்தனை வருஷம் திருவிழா பார்த்திருக்குற.. என்னைக்கு கெடா வெட்டுன்னு கூட உனக்கு தெரியலையா..? புதன்கிழமைதான்பா கெடா வெட்டு..!!""இல்லைத்தான்.." "அட ஆமாம்பா.. எனக்கு நல்லா தெரியும்..!!" "அப்போ செவ்வாய்க்கிழமை..?" "அன்னைக்கு பொங்கல் வைப்பாங்க..!! சக்கரை பொங்கலும், வெண்பொங்கலும்.. சாமிக்கு உடைச்ச தேங்கா சில்லை எடுத்து.. வாழைப்பழத்தையும் கடிச்சுக்கிட்டே சாப்பிடுவோமே.. மறந்து போச்சா..?" "அப்போ.. அந்த அதிரசம், முறுக்குலாம் என்னைக்கு..?" "ப்ச்.. அதுதான் திங்கக்கெழமை நைட்டே சுட்ருவாங்களே அசோக்..? ரெண்டு சட்டி.. ஒரு சட்டில அதிரசம்.. ஒரு சட்டில முறுக்கு..!!" கார்த்திக் ஆர்வமாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் இப்போது கருவிழிகளை சுழற்றி ஓரக்கண்ணால் தன் அக்காவை பார்த்தான். அவளோ தம்பியின் கேள்விகளுக்கு 'படார்.. படார்..' என பதிலளித்துக் கொண்டிருந்த தன் கணவனையே பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்..!! அசோக் இப்போது லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தான். "கலக்குறீங்கத்தான்.. எல்லாம் என்னைக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!! ம்ம்ம்ம்.. குட் குட்.. அப்படியே இன்னொன்னும் என்னைக்குன்னு சொல்லிருங்களேன்..?" "எது..?" "அக்காவோட பர்த்டே..!!"அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் பிரகாசமாக இருந்த கார்த்திக்கின் முகம், இப்போது இன்ஸ்டன்ட்டாய் இஞ்சி தின்ற குரங்குடையது மாதிரி மாறிப்போனது..!! அவ்வளவு நேரம் ஈசியான கொஸ்டின்ஸ் வர வர, 'பட் பட்' என ஆன்சர் செய்தவன், இப்போது டஃப் கொஸ்டின் வந்ததும் திணறினான்.. திருதிருவென விழித்தான்..!! தெரியாத ஆன்சரை கெஸ் செய்ய முயன்றான்..!! "பி..பிப்ரவரி 24-த்..?" "ப்ச்.. அது நம்ம சீஃப் மினிஸ்டர் பர்த்டே.. நான் கேட்டது சித்ரா அக்காவோட பர்த்டே..!!" "இல்ல அசோக்..பிப்ரவரி 24-தான்..!! அதானடி..?" என்றவாறு கார்த்திக் திரும்பி சித்ராவை பார்க்க, அவளுடைய முகம் அகோரமாய் மாறி நெடுநேரமாகியிருந்தது. தன் முட்டைக் கண்களை உருட்டி, எரித்து விடுவது போல அவள் கணவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக்கிற்கு தன் அக்காவை பார்க்க, அவர்கள் ஊர் ஆதி பரமேஸ்வரி ஞாபகத்துக்கு வந்தாள். கார்த்திக்கோ அர்த்த ஜாமத்து ஆவியைப் பார்த்தவன் போல குலைநடுங்கிப் போனான். "எ..என்னாச்சுடி.. ஏ..ஏண்டி அப்படி பாக்குற..? அப்போ.. பிப்ரவரி 24 இல்லையா..?" சித்ரா ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றாள். கையில் வைத்திருந்த கரண்டியாலேயே கணவனின் உச்சந்தலையில் 'டங்..!!!' என்று ஒரு போடு போட்டாள். கோபத்துடனே படக்கென்று திரும்பி, அவசரமாய் உள்ளே நடந்தாள். "அடப்பாவி.. இப்படி எக்கச்சக்கமா என்னை மாட்டி விட்டுட்டியே.. நீ நல்லாருப்பியா..? உனக்கும் ஒரு அடங்காப்பிடாரிதான் பொண்டாட்டியா வரப்போறா.. அவகிட்ட நீ நல்லா அடிவாங்கப் போற.. இது என் சாபம்..!!" என்று அசோக்கை கரித்துக் கொட்டிய கார்த்திக், எழுந்து தன் மனைவியின் பின்னால் ஓடினான். அவளை சமாதானம் செய்யும் குரலிலேயே.. "சித்தூ.. சித்தூம்மா.. பிப்ரவரி 24- தானடி..? போத்திஸ்ல போய் உனக்கு பொடவைலாம் வாங்கித்தந்தேனேடி..? அன்னைக்குத்தான..? சித்தூ.. சித்தூம்மா..!!" என்று பரிதாபமாக கூவிக்கொண்டே சென்றான். இங்கே அசோக்கும், திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா இருந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு சிரித்த திவ்யா, அவள் சென்றபின் தாராளமாக சிரித்தாள். "ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... ஐயோ.. அசோக்.. முடியலைடா.. பாவம்டா..!!" "ஹ்ஹாஹ்ஹா.. சரியான காமடி பீஸ்டி உன் அண்ணன்..!! பொங்கச்சோறு என்னைக்கு ஆக்குவாங்கன்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.. பொண்டாட்டி என்னைக்கு பொறந்தான்னு கேட்டா திருதிருன்னு முழிக்கிறான்..!!" "ஐயோ நான் அவனை சொல்லலைடா.. நான் பாவம்னு சொன்னது உன் அக்காவை..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!" திவ்யா இன்னும் வாயெல்லாம் சிரிப்பாக சொல்ல, அசோக்குடைய சிரிப்பு இப்போது பட்டென்று நின்றது. "என்னடி சொல்ற..?" என்றான் சற்றே இறுக்கமான குரலில். "ஆமாம்.. அவ மூஞ்சி போன போக்கை பார்த்தியா அசோக்..?? ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா... வெளக்கெண்ணை குடிச்ச தேவாங்கு மாதிரி..!! ஹ்ஹாஹ்ஹா... ஹ்ஹாஹ்ஹா...!!" "ஏய்.. ஏஏஏஏய்ய்ய்.. நிறுத்து... நிறுத்துடி..!!" அசோக் சற்றே கடுப்பாக சொன்னான். "ஏன்..??" திவ்யா பட்டென சிரிப்பை நிறுத்திவிட்டு கேட்டாள். "ஏனா..?? உங்க ரெண்டு பேரையும் திருத்தவே முடியாதுடி..!!" "நான் ஒரு ஆளுதான..? அது யாரு இன்னொருத்தரு..?" "ம்ம்ம்..? என் அக்கா..!!" அசோக் சொல்ல, இப்போது திவ்யா கடுப்பானாள். "ப்ச்.. இங்க பாரு.. திட்டுறதா இருந்தா என்னை மட்டும் தனியா திட்டு.. அவ கூட சேர்த்து வச்சு திட்டாத..!! எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஆமாம்..!!" "ஐயோ.. ராமா ராமா..!!" அசோக் தலையை பிடித்துக் கொண்டான். 'திட்டு வாங்குவது கூட அவளுடன் சேர்ந்து வாங்க மாட்டேன்.. தனியாகத்தான் வாங்குவேன்..' என்கிறாளே என்று நொந்து போனான். அப்புறம் சில வினாடிகள் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். சில விநாடிகளிலேயே சூழ்நிலையின் இறுக்கம் சற்று தளர்ந்தது. இருவரும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டார்கள். திவ்யாதான் மெல்லிய குரலில் சொன்னாள். "ம்ம்ம்ம்... போடா.. நீ இல்லாம.. எனக்குத்தான் திருவிழா ரொம்ப போரடிக்க போகுது.." "ம்ம்ம்.. அதுலாம் ஒண்ணுல்ல..!! ஆமாம்.. காலைல எத்தனை மணிக்கு பஸ்..?" "எட்டரைக்கு..!! ஆனா.. நான் நைட்டுதான் போறேன்..!!" "நைட்டா..? ஏன்..??" "நாளைக்கு மேட்ச் இருக்கு அசோக்.. இன்டர் காலேஜ் டோர்ணமன்ட்.. ஃபைனல்..!! போன வருஷம் கப் மிஸ் பண்ணிட்டோம்.. இந்த தடவை விட கூடாது..!!" "ஓ..!! சொல்லிட்டு இருந்தேல..? மறந்துட்டேன்..!! ஆமா.. அந்த மேட்ச்சுக்காக நீ தனியா நைட்-ட்ராவல் பண்ண போறியா..? பேசாம மேட்ச் கேன்சல் பண்ணிட்டு.. நீயும் காலைலயே இவங்க கூட போயிடேன் திவ்யா..??" "இல்ல அசோக்.. நாளைக்கு நான் கண்டிப்பா விளையாடியே ஆகணும்.. நாளைக்கு மேட்ச் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..!!" சொல்லும்போதே திவ்யாவின் குரலில் ஒருவித சோகம் தொணித்ததை அசோக்கால் உணர முடிந்தது. "அ..அப்படி என்ன ஸ்பெஷல்..?" "நாளைக்கு மேட்ச்தான்.. நான் விளையாடப் போற கடைசி மேட்ச்..!!" திவ்யா சொல்ல, அசோக் அதிர்ந்தான். "எ..என்ன சொல்ற திவ்யா..? கடைசி மேட்சா..? ஏன்..?" "திவாகருக்கு நான் ஸ்போர்ட்ஸ்ல இருக்குறது பிடிக்கலை அசோக்.. 'அதெல்லாம் எதுக்கு.. விட்டுடேன்..?'னு சொன்னாரு..!! நான்தான் 'இந்த டோர்ணமன்ட் முடியட்டும்.. எல்லாம் ஸ்டாப் பண்ணிர்றேன் ..'னு சொல்லி வச்சிருக்கேன்..!!" திவ்யா சொல்ல சொல்ல, அசோக் கடும் எரிச்சலுக்கு உள்ளானான். "ஓ..!! அப்போ.. இதுக்கப்புறம் நீ விளையாட போறது இல்லையா..?" "ம்ஹூம்..!! பாலை கைல கூட தொட்டு பார்க்க மாட்டேன்..!!" "இதெல்லாம் என் மனசுக்கு சரியா படலை திவ்யா..!!" "எது..?" "அவருக்காக நீ உன் திறமையை குழி தோண்டி புதைக்கிறது..!! காதல்ன்றது காதலிக்கிறவங்களோட நிலைமையை மேல உயர்த்துறதா இருக்கணும்.. இப்படி கீழ புடிச்சு தள்ளி விடுறதா இருக்க கூடாது..!!" "ச்சே..!! என்ன பேசுற நீ..? நான் அப்டிலாம் நினைக்கலை..!! எனக்கு புடிச்ச மாதிரி அவர் நடந்துக்குறதும்.. அவருக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்குறதும்.. அதுதான காதல்..? விட்டுக் கொடுக்குறதுதான லவ்வோட பேசிக்ஸ்..?? அதைத்தான் நான் செய்றேன்..!!" திவ்யா அழுத்தமாய் எதிர் வாதம் செய்ய, அசோக் சலிப்பாய் ஒரு பெருமூச்சு விட்டான். "சரி விடு.. நான் ஆர்க்யூ பண்ண விரும்பலை..!! ம்ஹ்ஹ்ம்.. இன்னும் அவரை நீ லவ் பண்றேன்னே சொல்லலை.. அதுக்குள்ளே அவருக்கு புடிச்ச மாதிரி உன்னை மாத்த ஆரம்பிச்சுட்டாரா..?" "அப்டிலாம் இல்ல அசோக்.. அவரும்தான் எனக்காக அவரை மாத்திட்டு இருக்காரு..?" "ஓ..!! என்ன பண்ணினார்..?" "எனக்கு யெல்லோ பிடிக்காதுன்னு சொன்னேனா..? இனி யெல்லோ கலர்ல ட்ரெஸ் போட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்காரு..!!" திவ்யா சொல்ல, அசோக் எரிச்சலானான். "சுத்தம்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எனிவே.. ஆல் தி பெஸ்ட்..!! நான் சொன்னது நாளைக்கு மேட்சுக்கு..!!" சொல்லிவிட்டு அவன் எழ முயல, "அசோக்.." திவ்யா அவனை அழைத்தாள். "ம்ம்.." "நாளைக்கு எங்க காலேஜுக்கு மேட்ச் பார்க்க வர்றியா..? நாளைக்கு சாட்டர்டே.. உனக்கு லீவ்தான..?" "இல்ல திவ்யா.. நான் ஆபீஸ் போகணும்..!! வேலை இருக்கு.. வர முடியாதுன்னு நெனைக்கிறேன்..!!" "ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்..!! ஈவினிங்.. கொஞ்ச நேரம் மட்டும்..!! எனக்காக.. ப்ளீஸ்..!! நீ வந்தா.. கேலரில உக்காந்து நீ பாக்குறேன்னு தெரிஞ்சா.. நான் நல்லா விளையாடுவேன்..!! என்னோட லாஸ்ட் மேட்ச்.. நான் நல்லா விளையாடனும்னு ஆசைப்படுறேன்.. ப்ளீஸ் அசோக்.. ப்ளீஸ்.. எனக்காக.. !!" திவ்யா குழந்தை மாதிரி கெஞ்ச ஆரம்பிக்க, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் உற்ற தோழியையே.. உயிரில் கலந்த காதலியையே.. அன்பும், ஆசையுமாய் பார்த்தான். இதமான குரலில் சொன்னான்..!! "ம்ம்ம்ம்... நான் மேட்ச் பார்க்க வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்டா..!! போதுமா..??" என்றவாறே திவ்யாவின் முன் நெற்றியில் வந்து விழுந்திருந்த கொத்து மயிர்களை, அழகாக பின்னுக்கு ஒதுக்கி விட்டான். "தேங்க்ஸ் அசோக்..!!" திவ்யா உற்சாகமாக துள்ளி குதித்தாள். "சரி வா.. இப்போ நம்ம வீட்டு மேட்ச்சை போய் வேடிக்கை பார்க்கலாம்..!!" "நம்ம வீட்டு மேட்ச்சா..?" "ம்ம்.. பாக்ஸிங்..!! என் அக்காவுக்கும், உன் அண்ணனுக்கும்..!!" சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட, "ஹஹாஹாஹஹா..!!!" திவ்யா கலகலவென சிரித்தாள்.அடுத்த நாள்.. "ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் ராஜன்.." என்று அசோக் காலையிலேயே சொல்லி வைத்திருந்தான். அவரும், "ஓ.. ஷ்யூர்.. ஷ்யூர்..!!" என்று தாராள மனசுக்காரனாய் பல்லிளித்தார். ஆனால் அசோக் கிளம்பும் நேரத்தில், "ப்ளீஸ் அசோக்.. இது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ.. இதை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிடேன்.. ப்ளீஸ்..!!" என்று வெட்கமில்லாமல் கெஞ்சினார். அசோக்கும் வேறு வழியில்லாமல் அந்த வேலையை செய்ய வேண்டியதாயிற்று. ஆபீசை விட்டு கிளம்ப தாமதமாகி விட்டது. அவசரமாய் கிளம்பி பைக்கை எடுத்துக்கொண்டு, திவ்யாவுடைய காலேஜை நோக்கி பறந்தான். காலேஜை அடைந்து பேஸ்கட் பால் மைதானத்துக்கு விரைந்தான். அன்றொருநாள் அவன் பார்த்த அதே மைதானந்தான். ஆனால் அன்று போல் இல்லாமல், இன்று மைதானம் எண்ணெய்ப் பலகாரத்தில் ஈ மொய்த்த மாதிரி கொசகொசவென்று இருந்தது. தமிழ்நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் வந்திருந்த மாணவ, மாணவியர் இறுதிப் போட்டியை காண ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருந்தனர். கேலரியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. போட்டி இன்னும் ஆரம்பமாகி இருக்கவில்லை. ஆனால்.. ஆரம்பிக்கும் தருவாயில் இருந்தது..!! திவ்யாவின் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த ஒரு மகளிர் கலைக்கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டி..!! இரண்டு அணியினரும் பேஸ்கட்பால் கோர்ட்டில் அணிக்கொரு பக்கமாக.. வட்ட வடிவில் குழுமியிருந்தார்கள்..!! திவ்யா தனது அணியினருக்கு மத்தியில் நடுநாயகமாக நின்றிருந்தாள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பெண்களுக்கு இறுதிக்கட்ட இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தாள். அசோக் கேலரியில் எங்காவது இடம் இருக்கிறதா என தேடிப் பார்த்தான். மொத்த இடத்திலும் இரண்டே இரண்டு பேர் மட்டும் அமரக் கூடிய அளவுக்கு ஒரு இடம் தென்பட்டது. அங்கே சென்று அமரலாம் என முடிவு செய்தான். கேலரியில் ஏறி.. கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து.. அந்த இடத்தை நெருங்கினான். அமரப்போகும் முன், கைகள் ரெண்டையும் வாயை சுற்றி வட்டமாக வைத்து, "கமான் திவ்யாஆஆஆ...!!!!!!!!!!" என்று உரத்த குரலில் கத்தினான். உடனே திவ்யாவும் திரும்பி பார்த்தாள். ஆரவாரத்துடன் அமர்ந்திருந்த அத்தனை பேரிலும், நின்று கொண்டிருந்த அசோக் மட்டும் திவ்யாவின் கண்களுக்கு தனியாக தென்பட்டான். உடனே திவ்யாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! அசோக் இப்போது தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட.. திவ்யாவும் தன் உடலுக்குள் புதிதாய் ஒரு நம்பிக்கை ஊற்று உடைப்பெடுத்தவள் மாதிரி.. தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள். அசோக் அமர்ந்து கொள்ள, ஓரிரு நிமிடங்களிலேயே போட்டி ஆரம்பமானது..!! கோவை அணி அதிரடியாக ஆரம்பித்தது..!! அந்த அணியின் கேப்டன் ஒருத்தி.. பொம்பளை டார்ஜான் மாதிரி இருந்தாள்.. அசால்ட்டாக நாலைந்து ஷூட்கள் போட.. கோவை அணி முன்னிலை வகித்தது..!! சென்னை அணியும் விடவில்லை.. திவ்யா அடுத்தடுத்து வளையத்துக்குள் பந்துகளை போட்டு, பாயின்ட் கணக்கை சமன் செய்தாள்..!! ஆட்டம் சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த போதுதான்.. அத்தனை நேரம் அசோக்குக்கு அடுத்து.. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்தப்பெண்.. இப்போது அவனை நெருங்கி அமர்ந்தாள்..!!"ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ.." என்றாள் அசோக்கிடம் மெல்லிய குரலில். "யெஸ்.." "நீங்க எந்த காலேஜ்..?" "நானா..? நா..நான்.. அண்ணா யுனிவர்சிட்டி..!!" என்றான் சற்றே கிண்டலான குரலில். "என்ன படிக்கிறீங்க..?" "படிக்கலைங்க.. அங்க வொர்க் பண்றேன்.. ஐ'ஆம் எ ப்ரொஃபசர்..!!" "ப்ரொஃபசரா..? பாத்தா அப்படி தெரியலையே..?" "ரொம்ப யங்கா இருக்கேன்ல..? அது என் தப்பில்லைங்க..!!" "ம்ம்.. எங்க காலேஜ் பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்..?" "யாரு..?? ஓ.. திவ்யாவா..? அ..அது.. அவ.. நான் கட்டிக்க போற பொண்ணு..!! ஐ லவ் ஹர்..!!" "ஓஹோ.. இப்போ தெரியுது நீங்க யாருன்னு..? என்னடா எங்கேயோ கேட்ட நக்கல் குரல் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன்..!!" அந்தப்பெண் சொல்ல, அசோக் இப்போது பதறினான். "எ..என்னங்க சொல்றீங்க..?" "அசோக்தான உங்க பேரு..?" "ஆ..ஆமாம்.. நீங்க..?" "ம்ம்...?? நானா..?? நான்தான் அந்த கல்லை முழுங்குன காக்கா..!!" அந்தப்பெண் முறைப்பாக சொல்ல, "ஓ.. அ..அது.. அன்னைக்கு நீங்க.. அந்த ஃபோன்ல..?" அசோக் அசடு வழிந்தான். "ஆமாம்.. அதேதான்..!!" "ஓகே ஓகே..!!! ம்ம்ம்.. திவ்யா எல்லாம் சொல்லிட்டாளா உங்ககிட்ட..? ஸாரிங்க..!!" "பரவால..!!" "ஆனா.. நீங்க சொன்னது தப்புங்க..!!" "தப்பா..? என்ன தப்பு..?" "அது.. கல்லை முழுங்குன காக்கா இல்ல.. கருங்கல்லை முழுங்குன காக்கா..!!" அசோக் சொல்ல அந்தப்பெண் மறுபடியும் முறைத்தாள். "ரொம்பதான் நக்கல் உங்களுக்கு..!! திவ்யா உங்களை பத்தி சொன்னது சரியாத்தான் இருக்கு.!!" "என்ன சொன்னா..?" "உங்களுக்கு வாய் மட்டும் இல்லைன்னா.. நாய் தூக்கிட்டு போயிடுமாம்..!!" "ஹாஹா..!! அப்படியா சொன்னா..? வச்சுக்குறேன் அவளை..!! ம்ம்ம்.. அப்புறம்.. உங்க பேரு என்னனு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே..?" "அது எதுக்கு உங்களுக்கு..?" "என்னங்க நீங்க..? அன்னைக்கு கேட்ட மாதிரியே இன்னைக்கும் கேக்குறீங்க..?" "ஏன் கேட்க கூடாதா..? இன்னைக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?" "அன்னைக்கு என்னை யார்னே தெரியாது.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுனீங்க.. அதுல ஒரு நியாயம் இருந்தது..!! இன்னைக்குத்தான் நாம இவ்வளவு நெருங்கிட்டோமே..?" அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். உடனே அசோக், "ஐயையோ.. நான் அந்த நெருக்கத்தை சொல்லலைங்க.. ஃபிரன்ஷிப்ல நெருங்கிட்டோம்னு சொன்னேன்..!! பேரை சொல்லுங்கங்க.. ப்ளீஸ்.." அசோக் இளிப்பாக கேட்க, "ம்ம்ம்..?? அஞ்சு..!!" அந்தப்பெண் முறைப்பாக சொன்னாள். "ஐயயோ.. நான் டைம் கேக்கலைங்க.. உங்க பேரை கேட்டேன்..!!" "ஆஆஆஆ..!!!!! என் பேர்தான் அஞ்சு..!!" "அப்போ டைம்..??" "ம்ம்.. அதுவும் அஞ்சுதான்..!!" அவள் மணிக்கட்டை திருப்பி பார்த்துவிட்டு சொன்னாள். "நீங்க ரொம்ப வெவரங்க.. வேற யார்கிட்டயாவது நீங்க டைம் கேட்டா தப்பா சொல்லுவாங்கன்னு.. நீங்களே கைல வாட்ச் கட்டிருக்கீங்க..!!" "என்ன சொல்றீங்க நீங்க..? எனக்கு புரியலை..!!" "ஆமாம்.. டைம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டு பாருங்க.. அஞ்சு அஞ்சுன்னு தப்பா சொல்வாங்க..!!" "ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாஆஆஆ..!!! உங்க மொக்கை தாங்க முடியலை..!! என்னை ஆளைவிடுங்க.. நான் மேட்ச் பாக்குறேன்..!!" இருவரும் பேச்சை குறைத்துக் கொண்டு, மேட்சை பார்க்க ஆரம்பித்தார்கள். கை தட்டி சென்னை அணியை உற்சாகப் படுத்தினார்கள். ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது. கோவை அணியில் மூன்று பெண்கள் நன்றாக விளையாடினார்கள். சென்னை அணியில் திவ்யாவை தவிர மற்ற எல்லாப் பெண்களும் சொதப்பினார்கள். பாதி நேரம் முடிந்த நிலையில் 32 - 27 என, கோவை அணியின் கையே ஓங்கியிருந்தது. இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு எடுக்கையில் திவ்யா, கேலரிப்பக்கம் பார்வையை வீசினாள். அசோக்கும் அவளுடைய தோழி அஞ்சுவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, மகிழ்ச்சியாக அவர்களை பார்த்து புன்னகைத்தாள். இடைவேளைக்கு அப்புறம் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது. இந்த முறை கோவை அணியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. திவ்யாதான் சென்னை அணியின் கீ ப்ளேயர் என்பதை புரிந்து கொண்டு, அவளை ப்ளாக் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். அவளுடைய கைக்கு பந்து போவதை அரும்பாடுபட்டு தடுத்தார்கள். விளைவு.. கோவை அணியின் ஸ்கோர் மளமளவென உயர.. சென்னை அணியின் ஸ்கோர் மந்தமாகியது..!! "அச்சச்சோ.. என்னங்க இது..? ஊத்திக்கும் போல இருக்கே..?" அஞ்சு அசோக்கிடம் கவலையாக சொன்னாள். "எனக்கு நம்பிக்கை இருக்குங்க.. திவ்யா விடமாட்டா.. பட்டாசு கெளப்புவா பாருங்க..!!" சொன்ன அசோக் எழுந்து 'கமான் திவ்யா..!!' என்று ஒருமுறை கூவிவிட்டு அமர்ந்தான். "எனக்கென்னவோ நம்பிக்கையே போச்சு.. '54-38'.. ரொம்ப கஷ்டங்க..!!" "ப்ச்.. திவ்யாவால முடியாதது எதுவும் இல்ல.. நீங்க வேணா பாருங்க..!!" அசோக் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் சொல்ல, அஞ்சு அவனுடைய முகத்தையே ஒரு சில வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் குரலில் ஒருவித ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். "உங்களுக்கு திவ்யாவை ரொம்ப பிடிக்குமா..?" "ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குறீங்க..?" "இல்ல.. அவளை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்லாம்.." "ஐயையோ.. அது சும்மா சொன்னேங்க..!! நீங்க யார்னு தெரியாம.." "ம்ம்.. அதான பார்த்தேன்..!! அப்டி ஏதாவது இருந்திருந்தா திவ்யா எங்கிட்ட சொல்லிருப்பாளேன்னு நெனச்சேன்..!!" "இல்லைங்க.. அது வெளையாட்டுக்கு சொன்னேன்.. அவகிட்ட போட்டு கொடுத்துடாதீங்க..!!" "ஹாஹா..!! என்ன.. அவளுக்கு எப்படி பயப்படுறீங்க..? ம்ம்ம்ம்.. கவலைப்படாதீங்க.. அவகிட்ட எதுவும் சொல்லலை.. நீங்க வெளையாட்டுக்குத்தான் சொன்னீங்கன்னு எனக்கு புரிஞ்சது..!!" "தேங்க்ஸ்..!!" அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா ஒரு த்ரீ ஷூட் போட, மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அசோக் எழுந்து விசில் அடித்தான். ஆட்டம் பரபரப்பான இறுதி நிமிடங்களை எட்டியது. திவ்யா ஆடுகளத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். ஒற்றை ஆளாக தன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினாள். பம்பரமாக சுழன்றாள். பந்துகளை கைப்பற்றி வளையம் நோக்கி வீசி, பாயிண்டுகளாக மாற்றினாள். தனது அணித்தோழிகளுடன் கை தட்டிக் கொண்டு ஓடினாள்..!! ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில் அவள் அடுத்தடுத்து இரண்டு த்ரீ ஷூட் போட.. இப்போது சென்னை அணி முன்னிலை வகித்தது..!!இன்னும் ஒரே நிமிடம்தான்..!! சென்னை அணி ஐந்து பாயிண்டுகள் அதிகமாக இருந்தது..!! அந்த அணி வெல்லப் போவது உறுதி என்று ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆராவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான் அது நடந்தது..!! திவ்யாவின் கையில் பந்து கிடைக்க, அவள் எதிர் அணியின் போஸ்ட் நோக்கி நகர்ந்தாள். அவளை கோவை அணியின் கேப்டன் அந்த டார்ஜான் இரு கைகள் விரித்து வழி மறித்தாள். அவளிடம் இருந்து அழகாக தப்பித்த திவ்யா மேலும் முன்னேற.. எதிரணி கேப்டன் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றாள். அதற்குள் திவ்யா கூடையை நெருங்கியிருக்க, வேகமாக அவள் பின்னால் ஓடிவந்த அந்தப்பெண் திவ்யாவின் முதுகைப் பிடித்து அப்படியே அதிக பலத்துடன் தள்ளிவிட்டாள். திவ்யா தடுமாறிப் போனாள். பந்து அவளுடைய கையை விட்டு எங்கோ பறந்து சென்றது. அவளுடைய ஷூ கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள.. பேலன்ஸ் செய்ய இயலாமல்.. ஓடியவாக்கிலே சென்று.. பேக்போர்ட் போஸ்டிலேயே போய் 'நச்ச்..!!' என்று மோதினாள்..!! அவளுடய நெற்றி போஸ்ட்டில் சென்று முட்டியது. முட்டிய வேகத்தில் திவ்யா, மூச்சு பேச்சு இல்லாமல்.. 'சொத்த்த்..!!' என்று தரையில் விழுந்தாள்..!! அவ்வளவுதான்..!! மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனது..!! யாரோ ஒரு பெண் மட்டும் 'ஓஓஓஓஓவ்வ்வ்..!!' என்று பெரிதாக அலறினாள்..!! அசோக் நடந்ததை நம்பமுடியாதவனாய்.. பதறிப்போய் எழுந்தான்..!! திவ்யாவுடைய அணித்தோழிகள் அவளை நோக்கி ஓட.. அசோக் கேலரியை விட்டு குதித்து இறங்கினான்..!! "திவ்யா...!!!" அசோக்கின் அலறல் தனியாக ஒலித்தது. அதற்குள் திவ்யாவின் தோழிகள் அவளை சூழ்ந்திருக்க, அசோக் அவர்களை விலக்கிக்கொண்டு உள்ளே புகுந்தான். தரையில் வீழ்ந்து கிடந்த தன் தேவதையை கைகளில் அள்ளி எடுத்தான். திவ்யா மயங்கிப் போயிருந்தாள். அவளுடைய நெற்றி உடைந்து உதிரத்தை கொப்பளிக்க ஆரம்பித்திருந்தது. "திவ்யா.. திவ்யா.. கண்ணைத் தொறந்து பாரு திவ்யா.." அசோக் அவளுடைய கன்னத்தில் 'பட் பட் பட்' என தட்டினான். அதற்குள் இப்போது அந்த அஞ்சுவும் ஓடி வந்து அவளை இன்னொரு பக்கமாக தாங்கி பிடித்தாள். தனது காதல் மகாராணி.. தன் கைகளிலே.. நெற்றியில் குருதி ஓட… இமைகள் மூடிய விழிகளோடு.. பரிதாபமாய் கிடக்க.. அசோக்குடைய இதயம் இப்போது வெடித்து விடும்போல் வலித்தது.. அவனையும் அறியாமல் அவனது கண்கள் உடைப்பெடுத்து நீரை கொட்ட ஆரம்பித்தன..!! 'திவ்யா.. திவ்யா..' என அழுது அரற்றினான்..!! அந்த அஞ்சு இப்போது நிமிர்ந்து அசோக்கை பாவமாக பார்த்தாள்..!! யாரோ முகத்தில் நீரை தெளிக்க, திவ்யாவின் மயக்கம் தெளிந்தது. இமைகளை மெல்லப் பிரித்தாள்..!! மயக்கம் தெளிந்து எழுந்ததுமே.. 'எனக்கு ஒன்னும் இல்ல.. ஐ ஆம் ஆல்ரைட்.. ஐ கேன் ப்ளே..' என்று, நெற்றியில் ரத்தத்துடன் எழ முற்பட்ட திவ்யாவை பார்த்து அசோக்கிற்கு அழுகை இன்னும் பீறிட்டது..!! அழுதான்..!! அதற்குள் அவளுடைய கோச் வந்து.. அவளை தட்டிக் கொடுத்தார்..!! "இல்லம்மா.. நீ வெளையாண்டது போதும்.. இன்னும் ஒரு நிமிஷம்தான் இருக்கு..!!" என்றார். நல்லவேளையாக அவர்கள் கல்லூரியின் மருத்துவர் அங்கேதான் இருந்தார். அவர் வந்து முதலுதவி செய்தார். 'ஒண்ணுல்ல.. சின்ன அடிதான்..' என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவாறே, அவளுடைய காயத்தை சுத்தம் செய்து, பிளாஸ்திரி போட்டார்..!! அந்தப்பக்கம் இரண்டு அணிகளின் கோச்சுகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்புறம் அந்த டார்ஜான் பெண்ணுக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவளை வெளியேற்றிவிட்டு வேறொரு பெண்ணை சேர்த்துக் கொண்டு.. ஆட்டத்தை தொடர்ந்தார்கள். அசோக்குடைய தோளில் ஆதரவாய் சாய்ந்தவாறே திவ்யா மீதி ஆட்டத்தை பார்த்தாள். அதற்கு மேல் நடந்த ஒருநிமிட ஆட்டத்தில் எந்த அணியும் ஸ்கோர் செய்யாமல் போக.. சென்னை அணி வென்றது..!! அந்த வெற்றியை மொத்த கும்பலும் ஆரவாரம் செய்து கொண்டாடியது..!! யாராரோ வந்து திவ்யாவின் கையை குலுக்கி பாராட்டினார்கள்..!! திவ்யாவின் கோச் அவளுடய தலையை தடவிக்கொடுத்து வாழ்த்தினார்.. பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தார்..!! பார்த்தவர்.. "சரிம்மா.. நீ ரொம்ப நேரம் இங்க இருக்க வேணாம்.. ஆளாளுக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ வீட்டுக்கு கெளம்பு.. போய் நல்ல ரெஸ்ட் எடு..!! எதுக்கும் நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கோ.. பில் க்ளெயிம் பண்ணிக்கலாம்.. சரியா..?" என்றார்."வீட்டுக்கு எப்டி போவீங்க..?" அசோக்கிடம் கேட்டாள் அஞ்சு. "நான் பைக்ல வந்திருக்கேன்.. அதுலயே.." "இல்ல இல்ல.. இவ இருக்குற நிலைமைல பைக் வேணாம்.. எங்கிட்ட கார் இருக்கு.. அதுல போயிடலாமா..?" கேட்ட அஞ்சுவை அசோக் நன்றியுடன் பார்த்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் மூவரும் காரில் சென்றுகொண்டிருந்தார்கள். அஞ்சு காரை ஓட்ட, அசோக்கும், திவ்யாவின் பின்சீட்டில அமர்ந்திருந்தார்கள். அஞ்சு நிதானமாகவே காரை செலுத்தினாள். அவ்வப்போது பின்னால் திரும்பி அவர்களை பார்த்துக் கொண்டாள். அசோக் அவளுக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தான். பாதி தூரம் சென்று கொண்டிருக்கையில்.. திவ்யா அசோக்கிடம் பரிதாபமான குரலில் கேட்டாள். "எனக்கு மறுபடியும் தலை சுத்துற மாதிரி இருக்கு அசோக்.. உன் மேல சாஞ்சுக்கவா..?" "ம்ம்.. சாஞ்சுக்கோ திவ்யா.." திவ்யா அசோக்கின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய இடுப்பை ஒருகையால் வளைத்துக்கொண்டு.. இமைகளால் விழிகளை மூடிக்கொண்டு.. ஒரு குழந்தையைப் போல.. சுகமாக அவன் நெஞ்சில் படர்ந்து கிடந்தாள்..!! ஊரெல்லாம் அலைந்துவிட்டு நமது வீட்டுக்கு வந்ததும், நம் மனதில் ஒரு நிம்மதியுணர்வு படருமே.. அப்படி ஒரு உணர்வுதான் அப்போது திவ்யாவை ஆக்ரமித்திருந்தது..!! அவளுடைய படபடப்பும் துடிதுடிப்பும் அடங்கி, மனதும் உடலும் அமைதியாகி போனது..!! திவ்யாவை அந்த நிலையில் பார்க்க, அசோக்கிற்கு அழுகை வந்தது. கண்கள் விட்டு வழிந்த கண்ணீரை திவ்யாவுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டான்..!! மெலிதான விசும்பல் ஒலி கூட வெளியே கேட்க கூடாது என, உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான்..!! அஞ்சு தன் தலைக்கு மேலிருந்த கண்ணாடி மூலமால, பின்சீட்டில் அமர்ந்திருந்த அசோக்கை கவலையுடன் கவனித்துக்கொண்டே, காரை செலுத்திக் கொண்டிருந்தாள். வீட்டை அடைந்ததும், அசோக்கும், அஞ்சுவும் திவ்யாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்தார்கள். கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அஞ்சு, அப்புறம் கிளம்பினாள். அப்பார்ட்மன்ட்ஸ் கீழ் வரை சென்று அசோக் அவளை வழியனுப்பினான். மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் அவளிடம் சொன்னான். "ரொம்ப தேங்க்ஸ்ங்க அஞ்சு.." "ச்சே.. இதுக்கெதுக்கு தேங்க்ஸ்..? என் பிரண்டுக்காக இந்த சின்ன ஹெல்ப் கூட நான் பண்ண மாட்டனா..?" "இ..இருந்தாலும்.." "ஒன்னும் இழுக்க வேணாம்.. விடுங்க..!! ஆமாம்.. வீட்ல மத்தவங்கல்லாம் எங்க..?" "எல்லாம் எங்க ஊர் திருவிழாவுக்கு போயிருக்காங்க.. காலைலதான் போனாங்க.. இவளும் நைட்டு போறதா இருந்தது.. இப்படி ஆகிப்போச்சு..!!" "ம்ம்ம்.. சரிங்க.. பாத்துக்கங்க அவளை.. நான் கெளம்புறேன்..!!" "ம்ம்.. போயிட்டு வாங்க..!!" சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க, அஞ்சு காரை நோக்கி நடந்தாள். காரை நெருங்கியவள் கார்க்கதவை திறக்கப் போகும் முன்.. ஒருகணம் அப்படியே நின்று.. திரும்பி.. அசோக்கை பார்த்தாள்..!! அசோக் எதுவும் புரியாமல் 'என்ன..??' என்பது போல அவளை பார்த்தான். இப்போது அஞ்சு தயங்கி தயங்கி சொன்னாள். "அ..அப்போ.. மேட்ச் பாக்குறப்போ.. திவ்யாவை ல..லவ் பண்றதா.. சும்மா வெ..வெளையாட்டுக்கு சொன்னேன்னு சொன்னீங்களே..? நானும் அப்போ அப்படித்தான் நெனச்சேன்..!! ஆனா இப்போ.. எ..எனக்கு என்னவோ அப்படி தோணலை..!!" சொன்னவள் அதன்பிறகு ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. கதவை திறந்து காருக்குள் நுழைந்தாள். ஸ்டார்ட் செய்து சர்ரென பறந்தாள். அசோக் திகைத்துப் போனவனாய் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான்.அசோக் காலை கட் செய்தான். செல்போனை பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். கதவு திறந்து வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்குள் நுழைந்தவன் சற்றே ஆச்சரியமானான். சற்று முன்பு வரை அசந்து தூங்கிக்கொண்டிருந்த திவ்யா, இப்போது எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததும் சற்றே எரிச்சலாக கேட்டாள்."எங்கடா போயிட்ட என்னை விட்டுட்டு..?" "நீ தூங்கிட்டு இருந்த திவ்யா.. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு.. வெளில போய் ஃபோன் பேசிட்டு வந்தேன்..!!" "ஓ.. ஃபோனா..? நானும் இப்போத்தான் ஒரு கால் பேசிட்டு.. ஃபோனை கீழ வச்சேன்..!! ஆமாம்.. யாரு உனக்கு கால் பண்ணினா..?" "யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. ஊருக்கு..!!" "ம்ம்.. என்ன சொன்ன..?" "ஃபுல்லா சொல்லலை.. மேலோட்டமா சொன்னேன்.. பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை.. திவ்யா இன்னைக்கு வரமாட்டா.. இன்னைக்கு ஒருநாள் நான் அவளை பாத்துக்குறேன்.. நாளைக்கு நைட்டு ஊருக்கு அனுப்பி வச்சிர்றேன்னு சொன்னேன்..!!" "ம்ம்.. அவங்க என்ன என்ன சொன்னாங்க..?" "ஒன்னும் சொல்லலை.. அதான் நான் இருக்கேன்ல.. நான் பாத்துப்பேன்னு நெனச்சிருப்பாங்க..!! அதுசரி.. உனக்கு யார் கால் பண்ணினது..?" "யாரும் பண்ணலை.. நான்தான் பண்ணினேன்.. திவாகருக்கு..!!" "ஓ..!! என்ன சொன்னாரு..?" "நல்லா திட்டினாரு..!!" "திட்டினாரா..? எதுக்கு..?" "ம்ம்ம்..?? 'இந்த எழவுக்குத்தான் ஸ்போர்ட்ஸ்லாம் வேணாம்னு சொன்னேன்.. நான் சொல்ல சொல்ல கேட்காம பேஸ்கட்பால் பேஸ்கட்பால்ன்னு பொலம்பினல.. உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..' அப்டின்னார்..!!" "ஓ.." "ப்ச்.. அவர்கிட்ட பேசினா.. ஆறுதலா இருக்கும்னு கால் பண்ணினேன்.. அவர் என்னடான்னா..? போ அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" வருத்தமாக சொன்ன திவ்யா அருகில் அமர்ந்திருந்த அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக வருடிக் கொடுத்தான். இப்போது அவன் மனதுக்குள் திவாகரின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு பரவ ஆரம்பித்தது. 'ச்சே.. என்ன மாதிரி காதலன் இவன்..? காதலி காயம்பட்டு கிடக்கையில்.. அவளுக்காக கண்ணீர் சிந்தாவிட்டால் கூட பரவாயில்லை.. காரண காரியங்கள் ஆராய்ச்சி செய்து.. அந்த காயத்தை மேலும் பெரிது படுத்தினால் எப்படி..??'. அசோக்கிற்கு 'திவாகர் சரியில்லையோ..' என முதல்முறையாக ஒரு எண்ணம் ஓடியது. இப்போது அசோக் வருத்தமாக சொன்னான். "ச்சே..!! அவர் ஏன் இப்படி இருக்குறாரு..?" "தெரியலைடா.. சில நேரம் அவரை புரிஞ்சுக்கவே முடியலை..!!" "திவ்யா.." "ம்ம்ம்.." "நா..நான்.. உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்.." "என்ன..?" திவ்யா அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். "ஒரு வாரமா உன்கிட்ட இருந்து மறைச்சுட்டேன்.." "எ..என்னடா சொல்ற..?" அவளுடைய குரலில் இப்போது ஒரு பதட்டம் ஏறியிருந்தது. "திவாகருக்கு குடிப்பழக்கம் இருக்கு திவ்யா..!!" "அசோக்..!!!" திவ்யாவின் அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. "ஆமாம் திவ்யா..!! நான் போன வாரம் அவரை ஒரு பார்ல மீட் பண்ணினேன்..!! அவர் அங்க நடந்துக்கிட்ட விதத்தை வச்சு பார்த்தா. அடிக்கடி அவர் அங்க வந்து போவார் மாதிரி தெரிஞ்சது..!!" "நோநோ..!! இல்ல அசோக்.. நீ ஏதோ தப்பா சொல்ற.. அவருக்கு அந்த மாதிரி பழக்கம்லாம் இல்லை..!!" "ப்ச்.. சரியாத்தான் சொல்றேன் திவ்யா.. அவரே 'ஐ ஆம் திவாகர்'னு எங்கிட்ட வந்து கைகுலுக்குனாரு.. நான்தான் என் பேரை அவர்கிட்ட தப்பா சொல்லிட்டு வந்தேன்..!!" "நீ பேரை தப்பா சொன்னியா..? ஏன்..?" "காரணமாத்தான்.. பின்னால எதுவும் பிரச்னை வர கூடாதுன்னுதான்..!!" "என்னடா சொல்ற.. எனக்கு எதுவுமே புரியலை..!! அதனால என்ன பிரச்னை வரப் போகுது..?" "பொறு.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இங்க பாரு திவ்யா.. ட்ரிங்க்ஸ் சாப்பிடுறான்றதாலயே ஒருத்தனை கெட்டவன்னு நாம முடிவு பண்ணிட முடியாது..!! அவரை பார்ல வச்சு பார்த்தப்போ ஃபர்ஸ்ட் எனக்கும் ஷாக்கா இருந்தது..!! அப்புறம் கொஞ்சம் நிதானமா யோசிச்சேன்.. 'அவர் நல்லவராவே இருக்கலாம்.. உன்னை இழந்துடக் கூடாதுன்னு உன்கிட்ட அந்த உண்மையை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை தேவையில்லாம பெரிய விஷயமாக்க வேணாம்.. பின்னாடி தேவைப்பட்டா உன்கிட்ட சொல்லிக்கலாம்.. இல்லனா அந்த மேட்டரை அப்படியே விட்டுடலாம்..' அப்டின்னு தோணுச்சு..!! எப்படியும் நீ திவாகர்ட்ட என்னை பத்தி சொல்லிருப்ப.. என் பேர் அசோக்னு நான் அவர்கிட்ட சொல்லிருந்தா.. அவர் என் மேல இன்ட்ரஸ்ட் காட்டிருப்பாரு.. அது பின்னால பிரச்னையாக வாய்ப்பிருக்கு..!! அதைவிட நான் யாரோ ஒருத்தன் அப்டின்னு அவர் நெனைச்சுக்குறதுதான் நல்லதுன்னு தோணுச்சு.. அதான் என் பேரை மாத்தி சொன்னேன்..!! அவர் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு அஞ்சு நிமிஷம் என் எதிர உக்காந்திருப்பாரு.. அதுவும் டிம் லைட்ல..!! ஸோ.. அவர் என்னை ப்யூச்சர்ல ஞாபகம் வச்சுக்க சான்சே இல்லை..!!" "ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாம் என்கிட்டே இருந்து மறைச்சுட்டேல..?" திவ்யாவுடைய குரலில் அதிர்ச்சியும் ஆத்திரமும் சரிசமமாக கலந்திருந்தது. "ப்ச்.. எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் திவ்யா..!!" "போடா..!! இப்போ மட்டும் எதுக்கு வந்து சொன்னியாம்..?" "அவர் உன்னை திட்டுனார்னு சொன்னதும் எனக்கு மனசு கேக்கலை.. உன்கிட்ட சொல்லிர்றது நல்லதுன்னு தோணுச்சு..!! அவர் சரியில்லையோன்னு எனக்கு ஒரு டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு.. அதான் சொல்லிட்டேன்..!!" "உனக்கு டவுட் மட்டுந்தானா..? எனக்கு கன்ஃபார்ம்டே ஆயிடுச்சு.. அவர் சரியில்லைன்னு..!! எப்படி நடிச்சு என்னை ஏமாத்திட்டான்.. பொறுக்கி ராஸ்கல்.. அவனை என்ன பண்றேன் பாரு..!!" ஆத்திரமாக சொன்ன திவ்யா, அவசரமாக செல்போனை எடுத்தாள். திவாகரின் நம்பருக்கு டயல் செய்ய முயன்றாள். அசோக் அவளை தடுத்து, அவள் கையிலிருந்து அந்த செல்போனை பறித்தான். "ஐயோ.. என்ன பண்ற திவ்யா நீ..? பொறுமையா இரு.. அவசரப்படாத..!!" "இன்னும் எதுக்குடா என்னை பொறுமையா இருக்க சொல்ற..?" "டென்ஷனாகாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. அவர் உன் மேல இருக்குற காதலால கூட அதை மறைச்சிருக்கலாம்.. இப்போதைக்கு இதை ஒரு பெரிய விஷயமாக்காத..!!" "இப்போ என்னை என்னதான் பண்ண சொல்ற..?" "அவர்கிட்ட இந்த மேட்டர் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.. எப்பவும் போல பேசு.. ஆனா முன்னாடி விட இனிமே ரொம்ப கேர்ஃபுல்லா இரு..!! அவரைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கோ.. அவர் உன் மேல வச்சிருக்குற லவ் உண்மைதானான்னு உறுதி பண்ணிக்கோ..!! அது உண்மையா இருந்தா.. இதெல்லாம் ஒன்னும் பெரிய மேட்டரே இல்லை..!! என்ன.. புரியுதா..??" "ம்ம்.. புரியுது.. புரியுது..!!" "அதை ஏன் மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு சொல்ற.. கொஞ்சம் சிரிச்சுக்கிட்டேதான் சொல்லேன்.." "ஈஈஈஈ...!! புரியுது.. போதுமா..?" "இல்லையே.. உன் வாய்ஸ்ல தெம்பே இல்லையே..?" "ம்ம்ம்..? அதுக்கு காரணம் உடம்புல தெம்பு இல்லை.. அதான்..!!" "என்னடி சொல்ற..?" "பசிக்குதுடா..!!" "அச்சச்சோ.. திவ்யா குட்டிக்கு பசிச்சிடுச்சா..? ஓகே ஓகே.. ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு.. ஐயா சாப்பாட்டோட வர்றேன்..!!" "பத்து நிமிஷத்துல எப்படி ஹோட்டலுக்கு போயிட்டு வருவ..?" "ஹோட்டலுக்கா..?? தி கிரேட் குக் அசோக் இருக்குறப்போ.. ஹோட்டல் எதுக்கு..?" "நீ சமைக்க போறியா.. அதெல்லாம் தெரியுமா உனக்கு..?" "என்ன இப்படி கேட்டுட்ட..? பிரம்மாதமா சமைப்பேன்..!!" "போடா.. வெளையாடாத..!!" "வெளையாடலை திவ்யா.. ஆறுமாசம் நான் பெங்களூர்ல பிரண்ட்சோட தங்கிருந்தேன்ல.. அப்போ கொஞ்சம் கத்துக்கிட்டேன்.." "கத்துக்கிட்ட கருமத்தை என்னை வச்சு ட்ரை பண்ணி பாக்க போறியா..?" "ஹேய்.. ஓவரா பேசாதடி.. எது பேசுறதா இருந்தாலும்.. நான் சமைச்சதை சாப்பிட்டுட்டு.. அப்புறம் பேசு..!!" "சரி சரி பார்க்கலாம்.. டென் மினிட்ஸ்தான கேட்ட..? யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..!!" சொல்லிவிட்டு திவ்யா மணிக்கட்டை திருப்பி நேரம் பார்க்க, "அடிப்பாவி.. பத்து நிமிஷம்னா.. கரெக்டா பத்தே நிமிஷம்தானா..? கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்..!!" "ஓகே.. டேக் யுவர் ஓன் டைம்..!! அதுசரி.. என்ன சமைக்க போற..?" "வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்..!! ஐயாவோட ஸ்பெஷல்..!! உனக்கு ஓகேவா..?" "எனக்கு டபுள் ஓகே.. அசத்து..!!" அசோக் முழுதாக நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டான். அரிசியை கழுவி குக்கரில் போட்டு.. ஆனியன், சில்லி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் கட் செய்து.. பட்டாணி உறித்து.. பின்பு எல்லாவற்றையும் சட்டியில் போட்டு.. உப்பு, மிளகு, சோயா சாஸ் ஊற்றி கிளறி..!! அவன் பரபரப்பாக சமைப்பதை, திவ்யா கைகள் கட்டி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து ரசித்தாள்..!! சமைத்து முடித்து இரண்டு ப்ளேட்களில் ஆவி பறக்க ஃப்ரைட் ரைஸை எடுத்து வந்தான் அசோக்..!! "ஃப்ரைட் ரைஸ் ரெடி..!!" "வாவ்..!! ஸ்மெல்லே சூப்பரா இருக்குடா அசோக்..!!" சந்தோஷ கூச்சலிட்டாள் திவ்யா. "சாப்பிட்டு பாரு.. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்..!!" சாப்பிட்டார்கள்..!! ஆனால் வாசனை இருந்த அளவுக்கு ருசி ஒன்றும் பிரம்மாதமாக இல்லை..!! இரண்டு வாய் அள்ளி வைத்ததுமே அசோக் அதை உணர்ந்து கொண்டான்..!! முகத்தை சுளித்தவாறே திவ்யாவை நிமிர்ந்து பார்க்க, அவளோ.. "நல்லா சமைச்சிருக்குறடா.. செம டேஸ்ட்.. உனக்கு வரப்போறவ ரொம்ப கொடுத்து வச்சவ..!!" என உற்சாகமாக சொல்லிக்கொண்டே கைநிறைய சாதத்தை அள்ளி வாயில் திணித்துக் கொண்டாள். பசியில் இருந்ததால் அப்படி சொன்னாளோ.. அசோக் மீதிருந்த பாசத்தினால் அப்படி சொன்னாளோ.. அதைக் கேட்டபோது, அசோக் அப்படியே உருகிப் போனான்..!! தன் கையால் சமைத்த உணவை, தன் காதல் தேவதை ஆசையாக சாப்பிடுவதையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு.. அவனும் அமைதியாக உண்ண ஆரம்பித்தான்..!! இப்போது ஏனோ.. சாப்பாடு ருசியாக மாறிவிட்டது போல அவனுக்கு தோன்றியது..!! சாப்பிட்டு முடித்ததும் அசோக்கே எல்லா பாத்திரங்களையும் கழுவி அடுக்கி வைத்தான். அப்புறம் புகை பிடிக்க வேண்டும் போல தோன்ற, பால்கனிக்கு சென்று ஒரு ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு அமைதியாக புகை விட்டான். திவ்யாவும் அவனுக்கருகே வந்து நின்று கொண்டாள். அவனுடைய வலது கையை கட்டிக்கொண்டு, அவனது தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். அசோக் மெல்ல ஆரம்பித்தான்."நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சுடலாம் திவ்யா.." "ஏன்..?" "ஏனா..? உன் கோச் சொன்னது ஞாபகம் இல்லை.. காலைல போய் உனக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பாத்துடலாம்..!!" "ஐயோ.. அதுலாம் ஒன்னும் வேணாம் அசோக்.. எனக்கு ஒன்னும் இல்ல..!!" "என்ன வெளையாடுறியா..? அதுலாம் முடியாது.. காலைல கண்டிப்பா ஹாஸ்பிட்டல் போறோம்..!! போயிட்டு.. அப்படியே உனக்கு ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டும் புக் பண்ணிடலாம்..!!" "....................." "என்ன சத்தத்தையே காணோம்..?" "நான் வரலை..!!" "உதை வாங்குவ..!!" "சரி வர்றேன்.. ஆனா.. ஒரு கண்டிஷன்..!!" "என்ன..?" "நீயும் என் கூட ஊருக்கு வா.." "ஊருக்கா..??? எனக்குத்தான் கம்பெனில லீவு குடுக்கலையே..?" "லீவுன்றது குடுக்குறது இல்ல அசோக்.. எடுக்குறது..!!" "பன்ச் டயலாக்லாம் பட்டாசாத்தான் இருக்குது.. ஆனா வேலைக்காகாது..!!" "ஏன்..?" "ரிலீஸ் டைம் திவ்யா.. நெறைய வேலை இருக்கு.. நான் போகலைன்னா அங்க ஒரு வேலையும் நடக்காது..!!" "அதெல்லாம் சும்மா.. நடக்கனும்னு விதி இருந்தா எல்லாம் நடக்கும்..!!" "என்ன சொல்ற நீ..?" "இப்போ ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டேல..? திடீர்னு உனக்கு வாந்தி பேதி புடுங்கிடுச்சுனு வச்சுக்கோ.. என்ன பண்ணுவாங்க உன் ஆபீஸ்ல..?" "அடிப்பாதகத்தி..!! ஏண்டி உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்..??" "ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" "அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது.. அதுலாம் விதி..!!" "அதைத்தான் நானும் சொன்னேன்..!!" "ம்ம்.. நல்லாத்தான் பேசுற.. ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி.. லீவ் போட்டுட்டு ஓடுறது அவ்ளோ ஈசி இல்லை..!!"

"ஓகே.. நான் ஒரு ஈசியான அட்வைஸ் சொல்றேன் கேக்குறியா..?" "என்ன..?" "உன் செல்போனை பார்ட் பார்ட்டா கழட்டி போட்டுடு..!! நாலு நாளைக்கு அப்படியே கெடக்கட்டும்..!! உனக்கு ஒரு தொந்தரவும் இருக்காது..!!" "நல்லாத்தான் இருக்கு யோசனை.. ஆனா நாலு நாளுக்கப்புறம்.. கழட்டுனதை எல்லாம் திரும்ப மாட்டுறப்போ.. எங்கடா போய் தொலைஞ்சன்னு ஆபீஸ்ல காரணம் கேட்பாங்களே.. என்ன சொல்றது..?" "நாலு நாள் நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு.. வீட்டுல தெண்டத்துக்கு தூங்கிட்டு இருப்பேல..? என்ன காரணம் சொல்லலாம்னு அப்போ மல்லாக்கப்படுத்து நல்லா யோசி..!!" "ஹாஹா.!!. உனக்கு... நல்லா கொழுப்பு வச்சுப் போச்சுடி..!!" சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டு, அசோக் திவ்யாவை அடிப்பது போல விளையாட்டாக விரட்ட, அவளும் ஓடினாள். ஓடியவள் இரண்டே எட்டுகளில் 'ஆஆஆஆ..!!' என்று அலறியவாறு அப்படியே நின்றாள். வலியை தாங்க முடியாமல் அவள் முகம் சுருங்கிக்கொள்ள, குனிந்து தனது வலது கையால் முழங்காலை பற்றிக் கொண்டு அப்படியே அமர்ந்தாள். அசோக் பதறிப் போனான். "ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?" "கீழ விழுந்தப்போ கால்லயும் அடி பட்டுடுச்சுடா.. அப்போ தெரியலை.. இப்போ நல்லா வலிக்குது..!!" "அச்சச்சோ.. எங்க காட்டு.." திவ்யா துணியை மேலேற்றி தன் முழங்காலை காட்ட.. அந்த இடம் கன்றிப்போய் வீங்கியிருந்தது..!! "சரி வா.. நான் மூவ் போட்டு விடுறேன்.. காலைல சரியாயிடும்..!!" "ம்ம்.." அடுத்த இரண்டாவது நிமிடம், திவ்யா மெத்தையில் கால் நீட்டி படுத்திருக்க, அசோக் அவளுடைய வலது காலை எடுத்து தன் மடிமீது வைத்திருந்தான். வீங்கியிருந்த பகுதியில் மூவ் பிதுக்கி தடவி, கவனமாக மசாஜ் செய்துவிட்டான். அசோக்கின் கவனம் திவ்யாவின் காலிலேயே இருக்க, திவ்யாவின் கவனமோ அசோக்கின் முகத்தில் படிந்திருந்தது. அன்று மாலை அவளுக்கு அடிப்பட்டதில் இருந்து நடந்த சம்பவங்கள் வரிசையாக அவள் மனதுக்குள் வந்து போயின. 'இவனுக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு.. எவ்வளவு அக்கறை..? ஒரு அன்னை மாதிரி என்னை எப்படி கவனித்துக் கொள்கிறான்..? எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எப்படி இவனால் மட்டும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது..? விவரம் தெரியாத பிஞ்சு வயதில் இருந்தே, தினம் தினம் இவன் எனக்கு புரிந்த நன்மைகள்தான் எத்தனை..? எனக்கு அள்ளிக் கொடுத்த சந்தோஷங்கள்தான் எத்தனை எத்தனை..? இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன்..? எனைப்படைத்த இறைவன் கூட என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பானா..?' "ஹேய்.. என்னாச்சு.." அசோக் நிமிர்ந்து பார்த்து கேட்க, "ஒ..ஒண்ணுல்ல.." திவ்யா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். "அப்புறம் ஏன் அழற..?" "நீயும் என்கூட ஊருக்கு வாடா.. ப்ளீஸ்...!!" "அட லூசு.. இதுக்காகவா அழற..? நான் ஊருக்கு வரணும்.. அவ்ளோதான..? கண்டிப்பா வர்றேன்..!! போதுமா..?" "தேங்க்ஸ்டா..!!" "சரி.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம.. நிம்மதியா படுத்து தூங்கு.. நான் உனக்கு கால் புடிச்சு விடுறேன்..!!" "ம்ம்ம்.." திவ்யா படுத்துக்கொண்டாள். தன் கால்கள் இரண்டையும் இதமாக பிடித்துவிட்டு கொண்டிருந்த அசோக்கின் முகத்தையே அன்போடு பார்த்துக் கொண்டு, கொஞ்ச நேரத்திலேயே சுகமாக உறங்கிப் போனாள். அவள் உறங்கியதும், அசோக் போர்வை எடுத்து அவளுடைய கழுத்து வரை போர்த்திவிட்டான். இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு மிச்ச விளக்குகளை அணைத்தான். திவ்யாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் பொலிவுடன் பிரகாசித்த திவ்யாவின் அழகு முகத்தை பார்த்துக்கொண்டே, நெடுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.அத்தியாயம் 21 'வேற்காடு வாழ்ந்திருக்கும்.. ஆதி பராசக்தி அவள்..!! வேல்முருகன் அன்னை அவள்.. வேண்டும் வரம் தந்திடுவாள்..!! பாற்கடலாய் அவள் கருணை.. பெருகிடவே செய்திடுவாள்..!! பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள்..!!' ஒலிப்பெருக்கியில் LR ஈஸ்வரி தன் கணீர் குரலில் அம்மனின் புகழ் பாடிக்கொண்டிருந்தார்..!! புளியங்குளம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! எந்தப்பக்கம் திரும்பினாலும் முகத்தில் சந்தோஷமும் புன்னகையுமாய் அந்த ஊர் வெள்ளந்தி மக்கள்..!! சிறுவர் சிறுமியர் ஆரஞ்சு கலரில் ஐந்து ரூபாய் குளிர் கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள்..!! ஆண்கள் கால்சட்டை தெரியுமாறு வெள்ளை வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கொண்டு, பீடி புகைத்தார்கள்.. கடைகளில் நின்று சர்பத் குடித்தார்கள்..!! பெண்கள் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்தார்கள்.. பரந்து விரிந்திருந்த மைதானத்தில், மூன்று கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இன்ஸ்டன்ட் அடுப்புகளில்.. விறகு செருகிக் கொண்டிருந்தனர்.. எரியூட்டினர்.. பொங்கல் பானையில் குழவையிட்டபடியே அரிசியிட்டனர்..!! அசோக்கின் குடும்பமும், திவ்யாவின் குடும்பமும் அருகருகே பொங்கலிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். அசோக் குடும்பத்தில் அவனுடைய அம்மாவும், திவ்யாவின் குடும்பத்தில் சித்ராவும் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க, அசோக்கின் அப்பா, திவ்யாவின் அப்பா, கார்த்திக் மூவரும் ஏதோ ஒரு பிரச்னை பற்றி சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அசோக் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் இருந்தான். திவ்யா பாவாடை தாவணியில் பாந்தமாக நின்றிருந்தாள். இருவரும் ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். 'அம்மனுக்கு பொங்கல் வைக்க நேரமாகிவிட்டபடியால்.. ஆங்காங்கே இருக்கும் ஊர் பொதுமக்கள்..' என்று நிமிடத்துக்கு ஒருமுறை, ஒரு பையன் ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தான்."என்ன இஞ்சினியர் மச்சான்.. நல்லாருக்கீகளா..?" அசோக்கை கடந்து சென்ற வளர்மதி என்ற ஒரு உறவுக்காரப்பெண் கேட்டாள். "ம்ம்.. நல்லாருக்கேன் வளர் மதினி.. நீங்க எப்படி இருக்கீக..?" "எங்களுக்கென்ன.. ஏதோ இருக்கோம்..!! என்னைக்கு வந்தீக ஊர்ல இருந்து..?" "நேத்து காலைல மதினி.." "சரி சரி.. ரொம்ப நேரம் வெயில்ல நிக்காதீக.. அப்புறம் வாடி வதங்கிப்போய்.. இஞ்சினியர் மச்சான், சுக்குனியர் மச்சானாயிட போறீக..!!" அவள் கிண்டலாக சொல்ல, "ஹாஹா..!! நாலு புள்ளை பெத்தப்புறமும் நக்கலு மட்டும் உங்களுக்கு கொறையலையே மதினி.. உங்களை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க அண்ணன் எப்டித்தான் குடும்பம் நடத்துறாரோ..?" அசோக் சொல்லிவிட்டு சிரித்தான். இப்போது அசோக்கின் அம்மா, அவனுக்கு சப்போர்ட்டாக வந்தாள். "அடிப்போடி.. கிறுக்கச்சி மவளே..!! எம்புள்ளைக்கு என்னடி.. எவ்வளவு வெயில் அடிச்சாலும்.. தங்கக்கட்டி மாதிரி சொலிப்பான்..!!" "ஆத்தாடி..!! தங்கக்கட்டியாம்ல இவுக புள்ள..? தங்கக்கட்டியா இருந்தா ரெண்டு தொங்கட்டமா செஞ்சு காதுல மாட்டிக்கங்கத்தை..!!" வளர்மதி தூரமாக சென்று நின்று, கத்திவிட்டு போனாள். உலை கொதித்ததும், அசோக்கின் அம்மா குழவையிட்டபடியே பொங்கல் பானையில் பச்சரிசியை கொட்டினாள். அதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறினாள். அந்தப்பக்கம் சித்ரா வைத்த உலையும் இப்போது கொதிக்க ஆரம்பித்தது. அரிசியிட அவள் தயாராகும்போது, அவளுடைய மாமனார் தடுத்தார். "இரும்மா.. திவ்யாவை எங்க.. ஆளைக்காணோம்..?" உடனேதான் அசோக் அருகில் திரும்பி பார்த்தான். அவனோடு சேர்ந்து அனைவரும் அவளை தேடினார்கள். திவ்யாவை எங்கும் காணவில்லை..!! "இங்கதான மாமா இருந்தா.. எங்க போனான்னு தெரியலையே..?" அசோக் குழப்பமாக சொன்னான். "அவ எங்க போனாளோ..? நேரம் ஆயிட்டு இருக்கு மாமா..!!" சித்ரா அவசரப்படுத்த, "இரும்மா.. அவ வந்து அரிசியை போடட்டும்..!! அசோக்.. நீ போய்.. அவ எங்க போயிட்டான்னு கொஞ்சம் தேடிப்பாரேன்..!!" அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சித்ரா தன் தம்பிக்கு அருகில் வந்து நின்று கொண்டாள். அவனுக்கு மட்டும் கேட்குமாறு சன்னமான குரலில் பொருமினாள். "ம்க்கும்.. காலைல இருந்து எல்லா வேலையும் பாத்தது நானு.. அரிசி போடுறது மட்டும் அவளா..? என்னமாத்தான் வருது..!! அப்படி என்ன பாசமோ.. ஆடுகாலி பொண்ணு மேல..!!" "ப்ச்.. சும்மா பொலம்பிட்டு இருக்காதக்கா..!!" அக்காவிடம் முணுமுணுத்த அசோக், "இருங்க மாமா.. நான் போய் பாத்துட்டு வர்றேன்..!!" என்று திவ்யாவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். கோயிலுக்கு முன்பு ஆங்காங்கே போடப்பட்டிருந்த உடனடி கடைகளில் தேடிப்பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தான்.. இல்லை..!! கோவிலுக்கு பின்புறம்.. அங்கேயும் இல்லை..!! 'எங்கே சென்றிருப்பாள்..?? கால் செய்து பார்க்கலாம் என்றால்.. இவள் பேச்சை கேட்டு செல்போனை வேறு அக்கு அக்காக கழட்டிப் போட்டுவிட்டேன்..?' அசோக் குழம்பினான். அப்போதுதான்.. எதேச்சையாக பார்வையை தூரமாக வீசியவனுக்கு.. தனியாக நின்றிருந்த அந்த வேப்ப மரமும், அதன் கீழே நின்றுகொண்டிருந்த திவ்யாவும் கண்ணில் தென்பட்டார்கள்..!! 'இவள் எதற்கு அங்கே சென்று தனியாக நின்று கொண்டிருக்கிறாள்..?' அசோக்கிற்கு விளங்கவில்லை. அந்த வேப்ப மரத்தை நோக்கி மெல்ல நடையை போட்டான். நெருங்கினான்..!! திவ்யா அங்கே பதட்டமும், நடுக்கமுமாக கைகளில் வைத்திருந்த செல்போனின் பட்டன்களை அமுக்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய முகமெல்லாம் அழுது வடிந்து கொண்டிருந்தது. உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. கண்களில் ஒரு அதீத பயம்..!! அசோக்கை பார்த்ததும், "அசோக்..!!!!" என்று அலறிக்கொண்டே ஓடிவந்து அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "ஏய்.. திவ்யா.. என்னாச்சு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?" "நான் தப்பு பண்ணிட்டேன்டா அசோக்.. தப்பு பண்ணிட்டேன்.." "என்னம்மா சொல்ற..? எனக்கு எதுவும் புரியலை..!!" "நீ சொல்ல சொல்ல கேட்காம.. நேத்து ஃபோன் பண்ணி.. திவாகர்ட்ட நல்லா சண்டை போட்டுட்டேன்..!! 'உங்களுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருக்குறதை ஏன் எங்கிட்ட இருந்து மறைச்சீங்க.. ஏன் என்னை பொய் சொல்லி ஏமாத்துனீங்க.. இனிமே என்கூட பேசவே செய்யாதீங்க'ன்னு.. நல்லா கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டேன்..!!" "ஐயோ.. ஏன் திவ்யா அப்படி செஞ்ச..? நான் தான் அவ்ளோ தூரம் சொன்னேன்ல..? அவர் கூட எப்போவும் போல பேசுன்னு..!!" "என்னால மனசுல உறுத்தலை வச்சுக்கிட்டு.. வெளில சிரிச்சு அவர்கிட்ட பேச முடியலை அசோக்..!! என்னை பொய் சொல்லி ஏமாத்திட்டார்னு ஆத்திரம்.. அதான்..!!" "சரி விடு..!! ஆனா.. அதனால இப்போ என்ன பிரச்னை..?" "கொஞ்ச நேரம் முன்னாடி அவர்கிட்ட இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது..!!" "என்னன்னு..??" "ட்ரிங்க்ஸ்தான குடிக்க கூடாது.. பாய்சன் குடிக்கலாம்லன்னு..!!" "ஷிட்..!!" அசோக் தலையில் கைவைத்துக் கொண்டான்."அவர் நம்பருக்கு கால் பண்ணினா.. எடுக்கவே மாட்டேன்றார்..!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு அசோக்..!!" திவ்யாவுடைய பதற்றம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. "எங்க குடு.. நான் ட்ரை பண்றேன்..!!" அசோக் கேட்க, திவ்யா செல்போனை அவனிடம் நீட்டினாள். "ப்ளீஸ் அசோக்.. எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! அவருக்கு ஏதாவது ஆச்சுனா.. அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னு போட்டுடும்.. அப்புறம் நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!" "ப்ச்..!! பைத்தியம் மாதிரி உளறாத திவ்யா.. அதுலாம் அவருக்கு ஒன்னும் ஆகாது..!!" அசோக் கால் லாக்ஸ் எடுத்து, திவாகரின் நம்பருக்கு மீண்டும் டயல் செய்தான். முதல் தடவை கால் பிக்கப் செய்யப்படவில்லை. இரண்டாம் முறை பிக்கப் செய்யப்பட்டது. அசோக் ஹலோ சொல்வதற்கு முன்பே, அடுத்த முனையில் திவாகரின் குரல் மிக மிக உருக்கமாக ஒலித்தது. "உயிரோடதான் இருக்கேன் திவ்யா.. இன்னும் சாகலை.. ஆனா.. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்.. இன்னொரு கைல பாய்சன் பாட்டில் வச்சுக்கிட்டுத்தான் இப்போ பேசிட்டு இருக்கேன்..!!" "ஹலோ.. தி..திவாகர்.. நான் திவ்யா இல்லை.. அ..அசோக் பேசுறேன்..!!" அவ்வளவுதான்..!! அதற்குமுன் உருக்கமாக ஒலித்த திவாகரின் குரல் இப்போது பட்டென்று கிண்டலாக.. ஒருமாதிரி எகத்தாளமாக மாறியது..!! "அசோக்கா..?? திவ்யாவோட மொபைலை வச்சுக்கிட்டு நீங்க என்ன ஸார் பண்றீங்க...??" "திவ்யா இங்க பக்கத்துலதான் இருக்குறா திவாகர்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!" "எனக்கு உங்கிட்ட பேச விருப்பம் இல்லை அசோக் தம்பி.. ஃபோனை திவ்யாட்ட குடு..!!" "ப்ளீஸ் திவாகர்.. ஒரே ஒரு நிமிஷம்..!!" "அவகிட்ட குடு..!!" "அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க திவாகர்.. கொஞ்சம் பொறுமையா.." "ஹாஹா.. இங்கபாரு.. இந்த அட்வைஸ் கொடுக்குற வேலை எல்லாம் திவ்யாவோட நிறுத்திக்கோ.. நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! ஃபோனை அவகிட்ட குடு..!! குடுடா..!!" திவாகர் கத்தினான். அசோக் காதிலிருந்த செல்போனை கையில் எடுத்து பார்த்தான். அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. 'ஆரம்பத்தில் உருக்கமாக பேசியவன், உடனடியாய் ஏன் எகத்தாளமாக பேசுகிறான்..?? சாவின் விளிம்பில் இருப்பவன் ஏன் திவ்யாவிடம்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறான்..?? உயிரையே விட முடிவெடுத்தவனுக்கு இவ்வளவு கோபம் எங்கிருந்து வரும்..?? சாகப் போகிறவன் சத்தம் போடாமால் மாத்திரைகளை முழுங்குவானா.. இல்லை.. ஊருக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி ஸீன் போடுவானா..??' அசோக்கிற்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, திவாகர் பொய்யாக நடிக்கிறான் என்று தோன்றியது. சாகப்போவதாக பொய் சொல்லி, திவ்யாவை தன்வசம் இழுக்க முயலுகிறான் என்று தோன்றியது. செல்போனை திவ்யாவிடம் கொடுக்காமல் பட்டென காலை கட் செய்தான். ஆனால்.. திவ்யாவோ பதற்றம் கொஞ்சமும் குறையாதவளாய் கேட்டாள். "எ..என்ன அசோக்.. என்னாச்சு..?" "ஒன்னும் ஆகலை.. விடு.." "அவர் என்ன சொன்னார்..?" "அவர் ஏதோ உளர்றாரு திவ்யா.. நீ வா..!!" என்று அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான்."எங்க கூப்பிடுற என்னை..?" "அங்க சாமிக்கு பொங்கல் வைக்க டைம் ஆச்சு.. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!!" அசோக் சொல்ல, திவ்யா உச்சபட்ச கோவத்துக்கு உள்ளானாள். படக்கென்று அவனுடைய கையை உதறினாள். "கையை விடு அசோக்..!!! கையை விடு..!!!!!!! அங்க ஒருத்தன் சாகக் கெடக்குறான்.. சாமிக்கு பொங்கல் வைக்கிறதுதான் உனக்கு முக்கியமாப் போச்சா..??" "ஐயோ.. திவ்யா.. அவர் சூசயிட்லாம் பண்ணிக்கிற ஆள் மாதிரி தெரியலை.. அவர் பேசுறதை வச்சுப் பார்த்தா.. அவர் சும்மா ஸீன் போடுற மாதிரி இருக்கு..!!" "ஜஸ்ட் அவரோட வாய்ஸை மட்டும் வச்சு.. அவர் நடிக்கிறார்னு எப்படி நீ முடிவு பண்ணுற..? அவரைப் பத்தி உனக்கு புரியலை அசோக்..!!" "அவரைப் பத்தி உனக்குத்தான் புரியலை திவ்யா.. அவர் உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றார்..!! அது உனக்கு புரியலை..!!" "அவர் என்ன வேணா பண்ணிட்டு போட்டும்.. இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்..!! சப்போஸ்.. அவர் உயிர் போச்சுனா.. உன்னால திருப்பி தர முடியுமா அசோக்..? திருப்பி தர முடியுமா..????" திவ்யா காட்டுத்தனமாய் கத்த, அசோக் ஸ்தம்பித்து போனான். அவனிடம் அந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை. "தி..திவ்யா நீ தேவையில்லாம பயப்படுற.. அ..அவருக்கு ஒன்னும் ஆகாது..!!" "ஃபோனை குடு அசோக்..!! ஃபோனை குடு..!!!!!" "திவ்யா.. அவசரப்படாத.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" "ஸாரி அசோக்.. முடியாது..!! ஃபோனை குடு..!!!!!" திவ்யா அசோக்கிடம் இருந்து வெடுக்கென்று ஃபோனை பறித்தாள். திவாகரின் நம்பரை அமுக்கி டயல் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். அசோக் அதிசயித்து போனான். தன் கண்முன் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தான். 'நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..' என்று சிறுவயதில் இருந்து சொல்லிக்கொண்டிருந்த திவ்யா இப்போது எங்கே போனாள்..?? எப்போதிருந்து இப்படி மாறிப் போனாள்..?? அசோக்கிற்கு புரியவில்லை..!! "ஹலோ.. ஹலோ.. திவாகர்..!! நா..நான் திவ்யா..!!!" "........................................" "ஸாரி திவாகர்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி...!! "........................................" "நோ திவாகர்.. அப்டிலாம் பண்ணிடாதீங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என்னை மன்னிச்சுடுங்க.. நான் தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! நான் உங்ககிட்ட அப்படி பேசிருக்க கூடாது..!! தப்புதான்... என்னை மன்னிச்சுடுங்க.. ப்ளீஸ்..!!" "........................................" "ஐயோ...!!!! வேணாம் திவாகர்.. வேணாம்.. என்னை கொல்லாதீங்க.. தயவு செஞ்சு அப்படிலாம் பண்ணிடாதீங்க..!!" "........................................" "அப்புறம் நானும் செத்து போயிடுவேன்..!!" "........................................" "சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..!!" "........................................" "அவ்ளோதான..? சொல்றேன்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ திவாகர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ப்ளீஸ் திவாகர்.. அந்த பாட்டிலை உடைச்சு தூக்கி எறிங்க..!!" திவ்யா சத்தம் போட்டு அலறினாள்..!! அலறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்..!! தன் கண்முன்பே தனது ஆருயிர்க்காதலி.. இன்னொருவனுக்கு 'ஐ லவ் யூ..!!' சொல்ல.. அசோக்கிற்கு நெஞ்சம் குமுறியது..!! இதயம் சில்லு சில்லாய் உடைந்து சிதறியது..!!இருட்டுப் புதருக்குள் இரை தேடி ஊர்ந்து செல்லும் பாம்பை போல, இரும்புத் தண்டவாளத்தின் மீது பாண்டியன் எக்ஸ்பிரஸ் பாய்ந்து கொண்டிருந்தது. விருத்தாச்சாலத்தை தாண்டி, சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. கம்பார்ட்மன்ட்டுக்குள் நிறைய விளக்குகள் இப்போது அணைக்கப்பட்டிருக்க, ஒரு மந்தமான வெளிச்சம் மட்டுமே மிச்சம் இருந்தது. பிரயாணிகள் அனைவரும் தூங்கிப் போயிருக்க, ரயிலின் 'தடக் தடக்.. தடக் தடக்..' ஒலியும், 'பாம்...' என்ற அவ்வப்போதைய அலறலும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு அப்போதுதான் விழிப்பு வந்தது. சுருங்கிப்போன முகமும், கண்களுமாக எழுந்தான். அவன் படுத்திருந்த அப்பர் பர்த்துக்கு பக்கவாட்டில் இருந்த பார்த்தில், திவ்யா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். கீழே இருந்த பர்த்துகளில் சித்ராவும், கார்த்திக்கும் ஆளுக்கொரு பக்கமாய் நீட்டி நிமிர்ந்திருந்தார்கள். அசோக் கீழே இறங்கினான். தட்டுத்தடுமாறி டாய்லட் நோக்கி நடந்து சென்றான். அவனுடைய தடுமாற்றத்திற்கு காரணங்கள் இரண்டு..!! ஒன்று தூக்க கலக்கம்..!! மற்றொன்று.. நேற்று இரவு ஸ்டேஷனை அடைந்ததும், 'புக் ஷாப் சென்று விகடன் வாங்கி வருகிறேன்..' என்று சொல்லி எஸ்கேப் ஆகி, ஒயின்ஷாப் சென்று விஸ்கியை அவசரமாய் உள்ளே விட்டுக் கொண்டதுதான்..!! திரும்பி வந்தபோது தம்பியின் கையில் விகடனை தேடி ஏமாந்த சித்ரா.. "எங்கடா..? கைல ஒன்னையும் காணோம்..?" என்று கேட்க, "அடிச்சுட்டேன்.." என்று உளறினான் அசோக். "என்னது..?? அடிச்சுட்டியா..??" சித்ரா குழம்ப, "ப்ச்.. காது கேட்காதா உனக்கு..? படிச்சுட்டேன்னு சொன்னேன்.. பழைய விகடனை வச்சிருக்காய்ங்க..!!" என்று சலிப்பாக சமாளித்த அசோக், அப்பர் பர்த்தில் ஏறி அப்பாவி மாதிரி படுத்துக் கொண்டான். இப்போது.. டாய்லட் சென்று இயற்கை உந்துதலை நிவர்த்தி செய்து கொண்டு வெளியே வந்தான். 'அவசரமாய் புகை வேண்டும்' என்று அவனுடைய நுரையீரல் ஆர்டர் போட்டது. ரயிலில் புகை பிடிப்பது தவறு என்று புத்திக்கு உறைத்தாலும், மனது கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள்நடமாட்டமே இல்லை. அனைவரும் தூங்கிப் போயிருந்தனர். இப்படி ஓரமாய் நின்று தம்மடித்து விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான். சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்தான். ஒரே ஒரு சிகரெட்தான் மிச்சமிருந்தது. உதட்டில் பொருத்திக்கொண்டு தீக்குச்சி உரசினான். கதவு திறந்திருக்க காற்று ஜிலுஜிலுவென உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு, நாலைந்து குச்சிகளை விரயம் செய்த பின்னரே, சிகரெட்டின் தலையில் கொள்ளி வைக்க முடிந்தது. கஷ்டப்பட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டதும்தான் காமடியான அந்த காரியத்தை செய்தான். தூக்க கலக்கமும், விஸ்கி போதையும் அவனுடைய மூளையை சற்றே குழப்பி விட்டிருக்க.. சிகரெட் பற்ற வைத்ததும், தீக்குச்சியை வெளியே எறிவதற்கு பதிலாக.. உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டான்..!!!! என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு அசோக் சுதாரிப்பதற்கே சில வினாடிகள் பிடித்தன. நடந்தது புரிந்ததும் 'ச்சே..!!' என்று எரிச்சலானான். கையில் புகை விட்டுக்கொண்டிருந்த தீக்குச்சியையே.. 'வடை போச்சே..!!!' என்பது போல பரிதாபமாக பார்த்தான்..!! 'இனி காலையில் ரூமுக்கு சென்ற பிறகுதான் தம்..!! ச்சே..!!' நொந்து போனவனாய் உள்ளே நடக்க முயன்றவன், அவனுக்கு எதிரே மிக அருகே திவ்யா நின்றிருந்ததை பார்த்ததும், அப்படியே நின்றான்..!!"தம்மடிச்சாச்சா..?? ட்ரெயின்ல போறப்போ கூட வாயை பொத்திக்கிட்டு இருக்க முடியாதா உன்னால..??" திவ்யா கோவமாக கேட்க, "ப்ச்.. அடிக்கலைடி..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "அப்புறம் கைல மேட்ச் பாக்ஸ் வச்சுக்கிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?" "தம்மடிக்கலாம்னுதான் வந்தேன்.. ஒன்னே ஒண்ணுதான் இருந்தது.. எடுத்து பத்த வச்சேன்.." "ம்ம்.. அப்புறம்..?" "பத்த வச்சுட்டு குச்சியை தூக்கி போடுறதுக்கு பதிலா.. சிகரெட்டை தூக்கி வெளில போட்டுட்டேன்..!!" அசோக் தலையை சொறிந்தவாறே சொல்ல , "ஹ்ஹஹாஹ்ஹஹா...!! ஹ்ஹஹாஹ்ஹஹா...!!" திவ்யாவுக்கு குபீரென சிரிப்பு கிளம்பியது. ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை அசோக்கை நோக்கி நீட்டி ஏளனம் செய்துகொண்டு, குலுங்கி குலுங்கி சிரித்தாள். "ஹ்ஹஹாஹ்ஹஹா...!! ஐயோ... ப்பா.. முடியலைடா அசோக்.. ஏண்டா இப்படி காமடி பண்ற..?? ஹ்ஹஹாஹ்ஹஹா...!!" "ஏய்.. சிரிக்காதடி..!! நானே கடுப்புல இருக்கேன்..!!" எரிச்சலாக சொன்னவன், அப்படியே பின்பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டான். திவ்யாவின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதழ்களில் புன்னகையுடனே அசோக்கை ஏறிட்டு பார்த்தாள். அவன் 'ப்ச்..!!' என்று சலிப்பும், முறைப்புமாய் பார்த்தான். இப்போது திவ்யாவும் அசோக்குக்கு நேர் எதிரே சாய்ந்து நின்று கொண்டாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், குறும்பான குரலில் அவனை அழைத்தாள். "டேய்.. கோவக்காரா..!!" "கோவக்காரனா..? யாரு..??" "ம்ம்ம்..?? நீதான்..!!" "நானா..? நான் என்ன கோவப்பட்டேன்..??" "நடிக்காத.. எனக்கு தெரியும்..!! என் மேல உனக்கு கோவம்..!!" "ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!!" "அப்புறம் ஏன் ரெண்டு நாளா உம்முன்னு இருக்குற..??" "அப்படிலாம் ஒன்னும் இல்லையே.. நான் பேசிட்டுத்தான இருக்கேன்..?" "பேசுற..!! ஆனா.. எப்போவும் போல இல்லை..!!" அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்தான். சில வினாடிகள் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்த திவ்யா, நகர்ந்து சென்று அவனுக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டாள். அவனுடைய முகத்தை ஒரு கையால் நிமிர்த்தினாள். மெல்லிய குரலில்.. "ஸாரிடா.." என்றாள். "ஸாரியா..? எதுக்கு..?" "அன்னைக்கு உன் பேச்சை மீறி நடந்துக்கிட்டேன்ல..?" "ப்ச்.. பரவால்ல..!! அதனால என்ன..?" "ஆனா.. எனக்கு கஷ்டமா இருக்கே.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!" "ஐயோ.. விடு திவ்யா.. அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்..!!" "ம்ம்ம்... என்னதான் இருந்தாலும் அது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா அசோக்..? அதான் நான் அப்படி நடந்துகிட்டேன்..!!" "உயிரை விடுறவங்க இப்டிலாம் ஃபோன் பண்ணி ஸீன் போட்டுட்டு இருக்க மாட்டாங்க திவ்யா..!!" "எனக்கு புரியுதுடா..!! ஆனா.. அவர் உண்மைலேயே அந்த மாதிரி ஒரு மென்டாலிட்டில இருக்குறதுக்கு ஒரு பர்சன்ட் சான்ஸ் இருந்தாகூட… அது தேவையில்லாத ரிஸ்க்தான..? சப்போஸ்.. அவர் முட்டாள்த்தனமா ஏதாவது பண்ணிருந்தா.. என்ன ஆகி இருக்கும்னு கொஞ்சம் நெனச்சு பாரு..!!" "ம்ம்ம்.." "அதில்லாம.. அவர் பெருசா என்ன கேட்டுட்டாரு..? ஜஸ்ட் ஒரு 'ஐ லவ் யூ' சொல்ல சொன்னாரு.. அவ்ளோதான..? அதான் பட்டுன்னு சொல்லிட்டேன்..!!" 'ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூ' என்று கேஷுவலாக திவ்யா கூறிய வார்த்தைகள், அசோக்கின் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. 'எவ்வளவு எளிதாக சொல்கிறாள் இவள்..? ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூவாம்..? மூன்றே மூன்று வார்த்தைகள்தானே என்று மிகவும் சீப்பாக நினைத்துவிட்டாள் போலிருக்கிறது..!! ஆனால்.. அந்த மூன்று வார்த்தைகளை.. தங்கள் உள்ளத்தில் இருப்பவர்களின் முகத்தை பார்த்து உச்சரிக்க முடியாமல்.. நெஞ்சுக்குள்ளேயே போட்டு மூடி வைத்து.. தினம் தினம் எத்தனை உயிர்கள் வேதனையில் வெந்து சாகின்றன என்பதை இவள் அறிந்திருக்க மாட்டாள்..!! நானும் அத்தகைய ஒரு பரிதாப ஜீவன்தானே..??' "என்னடா.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?" "ம்ம்ம்... எனக்கென்னவோ.. உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கத்தான் இந்த ட்ராமான்னு தோணுது..!!" "ஹாஹா..!! அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதனால என்ன..?? நான் அவரைத்தான லவ் பண்றேன்..? அவர்கிட்ட ஐ லவ் யூ சொன்னதுல என்ன தப்பு..??" "சொன்னதுல தப்பு இல்ல.. ஆனா.. அவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அவசரப்பட்டு சொல்லிட்டியோன்னு.. எனக்கு ஒரு சின்ன உறுத்தல்..!!" "என்ன அசோக் நீ.. இன்னும் அவரைப்பத்தி என்ன தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு..?" "ஆரம்பத்துலயும் அப்டித்தான் நெனச்சிருந்தோம்..? அப்புறம்தான் திடீர்னு அந்த.." "ட்ரிங்க்ஸ் மேட்டர் சொல்றியா..?" "ம்ம்.." "நேத்தே அதைப்பத்தி அவர்கிட்ட பேசிட்டேன் அசோக்..!! பிசினஸ் சம்பந்தமா நெறைய பேரை மீட் பண்றதால.. அவங்ககிட்ட இருந்து இந்தப்பழக்கம் வந்துடுச்சுன்னு புலம்பினார்..!! மேரேஜுக்கு அப்புறம் சுத்தமா ஸ்டாப் பண்ணிடுறதா ப்ராமிஸ் பண்ணிருக்கார்..!!" "ஓஹோ..?? நீ என்ன சொன்ன..??" "நான் என்ன சொல்வேன்..?? எனக்கு அது போதும்னு சொல்லிட்டேன்..!! கரெக்ட்தான..??" திவ்யா அப்பாவியாய் கேட்க, "ஹ்ஹா.. என்ன கேட்ட..?" அசோக் சற்றே ஏளனமாக கேட்டான். "நான் அவர்கிட்ட அப்படி சொன்னது கரெக்ட்தானான்னு கேட்டேன்..??" "ம்ம்ம்.. இனிமே நீ அந்த மாதிரிலாம் எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை திவ்யா..!!" "ஏன் அப்படி சொல்ற..?" "ஆமாம்.. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. இனிமே ஒப்பீனியன் கேட்க என்ன இருக்கு..??" அசோக் சிரித்துக்கொண்டே சொல்ல, திவ்யாவின் முகம் பட்டென சுருங்கிப்போனது. சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தவள், பின்பு குரல் தழதழக்க கேட்டாள். "உ..உனக்கு இன்னும் என் மேல கோவம் போகலைல..?" அசோக்கிற்கு இப்போது திவ்யாவை பார்க்க பாவமாக இருந்தது. குரலில் மென்மையை குழைத்துக்கொண்டு சொன்னான். "ஏய்.. ச்சீய்.. அப்படிலாம் இல்ல...!! எ..எனக்கு.. எனக்கு உன் மேல எப்போவும் கோவமே வராது திவ்யா..!!" "அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..? எனக்கு என்ன ஆனாலும் பரவாலைன்ற மாதிரி..!!" "லூசு.. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை..!!" "அப்புறம்..??" "அவரைப்பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் உன் காதலை சொல்ற மாதிரிதான நம்ம ப்ளான்..?? அதனாலதான நான் உனக்கு ஐடியாலாம் கொடுத்துட்டு இருந்தேன்..?? இப்போதான் நீ உன் காதலை அவர்கிட்ட சொல்லியாச்சே..?? இனிமே நான் உனக்கு தேவைப்பட மாட்டேன்னு சொல்ல வந்தேன்..!!" "இப்படிலாம் பேசாதடா..!! நீ எனக்கு எப்போவும் வேணும் அசோக்..!! என் லைப் ஃபுல்லா.. என்னை கைட் பண்ண.. நீ எப்போவும் வேணும்..!!" "ஹாஹா.. அது எப்படி முடியும் திவ்யா..? எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான..?""ஏன்.. அப்புறம் என்ன..?" "அப்புறம்.. திவாகரை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா.. எந்த விஷயமா இருந்தாலும் அவரை கேட்டுத்தான நீ முடிவு பண்ண வேண்டியதா இருக்கும்..?" அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, "இல்லை.. நான் உன்னை கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன்..!!" திவ்யா பட்டென சொன்னாள். அவளுடைய பதிலில் அசோக் சற்றே திணறிப் போனான்.

"தி..திவ்யா.. நீ.." "ஆமாம் அசோக்.. எனக்கு திவாகரை விட உன் மேலதான் நம்பிக்கை அதிகம்..!! நீ எது செஞ்சாலும் என் நல்லதுக்குத்தான் செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! நான் திவாகரை கல்யாணம் செய்துகிட்டாலும் சரி.. லைஃப்ல எந்த முக்கியமான முடிவு எடுக்குறதா இருந்தாலும்.. நான் உன்னை கேட்டுத்தான் எடுப்பேன்..!!" அசோக் இப்போது அப்படியே நெகிழ்ந்து போனான். 'இவளுக்குத்தான் என் மீது எவ்வளவு நம்பிக்கை..? இந்த நம்பிக்கைதான் எவ்வளவு உன்னதமான விஷயம்..? இந்தமாதிரி ஒரு நம்பிக்கையுடனான நட்பு கிடைக்க நான் எவ்வாளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..? இவள் என் காதல் மனைவியாய் அமையாமல் போனால்தான் என்ன..? காலம் முழுவதும் இந்த நட்பு ஒன்றே போதுமே எனக்கு..?' அசோக் இப்போது திவ்யாவை பார்த்து ஸ்னேஹமாக புன்னகைத்தான். தனது வலது கையால் அவளது தோளை சுற்றி வளைத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளுடைய கருவிழிகளை தனது கண்களால் கூர்மையாக பார்த்தவாறே கேட்டான். "என்னை அவ்வளவு பிடிக்குமா..?" "ம்ம்ம்.." "நான் அவ்வளவு முக்கியமா உனக்கு..?" "ம்ம்ம்.." "நான் சொன்னா அதை அப்படியே செய்வியா..?" "செய்வேன்..!!" "என்ன வேணாலும்..??" "என்ன வேணாலும்..!!" திவ்யா உறுதி மிக்க குரலில் சொல்ல, 'என்னை கொஞ்சம் லவ் பண்ணேன்..' என சொல்லலாமா என்று அசோக்கிற்கு தோன்றியது. அப்புறம் பட்டென அதை மாற்றிக் கொண்டு, "உன் அண்ணன் பாக்கெட்ல இருந்து ஒரு தம் சுட்டுட்டு வாயேன்.." என்றான் குறும்பாக. "போடா.. லூசு..!!! சீரியஸா பேசிட்டு இருக்குறப்போ.. காமடி பண்ற..?" "காமடி இல்ல திவ்யா.. இப்போதைக்கு அதுதான் என் இம்மீடியட் தேவை..!!" "ஏன்.. காலைல வரை வெயிட் பண்ண முடியாதோ..?" "ம்ஹூம்..!! லங்க்ஸ்லாம் கொலை பட்டினில கெடக்குடி.. ப்ளீஸ்..!!" "ஐயோ.. அவன் ஷர்ட் பாக்கெட்ல வச்சிருப்பான் அசோக்.. எப்படி சுடுறது..? கஷ்டம்..!!" "இல்ல.. ஷர்ட்டை கழட்டி தலைக்கு பக்கத்துல வச்சுட்டு.. பனியனோடதான் படுத்திருக்கான்.. நைஸா சுட்டுட்டு வந்துடு..!!" "அதை நீயே போய் எடுத்துக்கலாம்ல..?" "எடுத்துக்கலாம்.. ஆனா.. எடுக்குறப்போ உன் அண்ணன் எந்திரிச்சுட்டான்னா..? தம்மாதுண்டு தம்முக்காக அம்மாம் பெரிய ரிஸ்க் எடுக்கனுமான்னு பாக்குறேன்..?" "அந்த தம்மாதுண்டு தம்முக்காகத்தான.. இப்படி நடுராத்திரில நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டு அலையுற..? பேச்சுக்கு மட்டும் கொறைச்சல் இல்ல..!! உனக்கு ரிஸ்க்னா.. அப்புறம் நான் மட்டும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்..??" "என்ன திவ்யா இப்படி சொல்லிட்ட..? நீதான சுடுறதுல சூப்பர் ஸ்டார்..? ஏழு வயசா இருக்குறப்போவே.. வீட்டுல எதை எங்க ஒளிச்சு வச்சிருந்தாலும் நேக்கா தட்டிட்டு வந்துடுவியே..? ரிஸ்க் எடுக்குறதுலாம் உனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரிதான..?" "போடா.. லூசு..!!!" திவ்யாவுடைய குரலில் கோவத்தை விட, பெருமிதமே எக்கச்சக்கமாய் கொப்பளித்தது. "ப்ளீஸ் திவ்யா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.." "ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. கெஞ்சாத..!! இரு.. எடுத்துட்டு வர்றேன்..!!" "தேங்க்ஸ்டி..!!" திவ்யா உள்ளே நடந்து சென்றாள். அசோக் அங்கேயே அமைதியாக காத்திருக்க, ஓரிரு நிமிடங்களிலேயே திவ்யா திரும்ப வந்தாள். தூரத்தில் வருகையிலேயே கட்டை விரலை உயர்த்தி காட்டி, வெற்றி என்பது போல புன்னகைத்தாள். அசோக்கை நெருங்கியவள், அண்ணனிடம் சுட்ட சிகரெட்டை நீட்டிக்கொண்டே.. "பார்த்து பத்த வையி.. இதையும் தூக்கி வெளில போட்டுடாத..!!" "அப்போ ஏதோ தூக்க கலக்கம்.. போட்டுட்டேன்.. இப்போதான் தெளிவா இருக்கோம்ல..?" "சரி சரி.. நீ தம்மடி.. நான் ஆளுங்க வராங்களான்னு பாத்துக்குறேன்..!!" திவ்யா பாதையின் நடுவே சென்று நின்றுகொண்டு, தலையை இருபுறமும் திருப்பி திருப்பி பார்த்தவாறு காவல் காக்க, அசோக் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்..!!அடுத்த வாரம் புதன் கிழமை..!! இரவு ஏழரை இருக்கும்..!! அசோக் அந்த பாருக்குள் நுழைந்தான். அவன் அவ்வப்போது செல்லும்.. அவனது ஆபீசுக்கு அருகாமையில் இருக்கும் அதே பார்..!! வழக்கம் போலவே உள்ளே மங்கலான வெளிச்சம்.. கூரையில் இருந்து வழிந்த மந்தமான நீல நிற வெளிச்சம்..!! வழக்கம் போலவே அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல் கூட்டம்..!! ஆனால்.. வழக்கத்துக்கு மாறாக இன்று ஸ்பீக்கர்களில் தமிழ்ப்பாடல் மிதமான வால்யூமில் கசிந்து கொண்டிருந்தது..!! 'கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன் அட லீலைகளின் மன்னன் அந்த மன்மதனின் மாமன் நான் தானே அத்தை நான் மேனகைக்கு அத்தை வா கத்துத் தாரேன் வித்தை அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே' உள்ளே நுழைந்த அசோக், அமர்வதற்கு இடம் தேடி.. அந்த மங்கலான வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்வையை வீசிக்கொண்டிருந்தான். டிவி பார்ப்பதற்கு வசதியாக.. ஏதாவது காலி இடம் இருக்குமா என அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தக்குரல் அவனுக்கு பின்னால் இருந்து உரக்க ஒலித்தது..!! "ஹலோ.. மிஸ்டர் அரவிந்த்..!!" குரல் கேட்டு திரும்பி பார்த்த அசோக், பக்கென அதிர்ந்து போனான்..!! அங்கே.. கால்களை அகலமாக விரித்தவாறு.. சோபாவில் ஹாயாக சாய்ந்தவாறு.. வாயிலிருந்து வழியும் புகையுடன்.. அமர்ந்திருந்தான்.. திவாகர்..!!!! எதிரே கிடந்த சோபா காலியாக இருக்க, அவன் முன்பிருந்த டேபிளில் விஸ்கி கிளாசும், தந்தூரி சிக்கனும்..!! அசோக் திவாகரை சுத்தமாக அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை..!! அவனையே திகைப்பாக பார்த்தான்..!! 'இவன் இங்கே என்ன செய்கிறான்..? சிகரெட் பழக்கம் கூட இருக்கிறதா இவனுக்கு..?' அசோக் அப்படி திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, "இங்க எடம் இருக்கு பாருங்க அரவிந்த்.. இங்க வாங்க..!!" திவாகர் மீண்டும் அழைத்தான். அசோக் இப்போது தடுமாறினான். 'செல்லலாமா.. வேண்டாமா..' என ஒரு சில வினாடிகள் தயங்கியவன், திவாகர் திரும்ப திரும்ப அழைக்க.. வேறு வழியில்லாமல் அவனை நோக்கி நடந்தான். அசோக் திவாகருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொள்ள, திவாகர் இப்போது தன் இதழ்களை அகலமாக விரித்து புன்னகைத்தான். "அப்புறம் மிஸ்டர் அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..?" "எ..என் பேரு அ..அரவிந்த் இல்ல.." அசோக் தடுமாற்றமாக சொன்னான். "அப்புறம்..?" "அசோக்.." "அசோக்கா..?? அன்னைக்கு அரவிந்த்னுதான சொன்னீங்க..??" "இ..இல்லையே.. அ..அசோக்னுதான் சொல்லிருப்பேன்..!!" அசோக் திணறலாய் சமாளிக்க முயல, திவாகர் சிரித்தான் "ஹாஹா.. சரி விடுங்க..!! I know..!!" . "What do you know..?" "I know.. I know everything..!! ஹாஹா..!!" "இல்ல.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை..!!" அசோக் சொல்ல, திவாகர் இப்போது பட்டென ஒருமைக்கு தாவினான். "இங்க பாரு.. அன்னைக்கு நீ அரவிந்த்னுதான் சொன்ன.. எனக்கு நல்லா தெரியும்..!! நீ ஏன் அப்படி சொன்னன்னு கூட எனக்கு தெரியும்..!!" "ஏ..ஏன்..?" "அப்போத்தான நான் ஏதாவது உளறுவேன்.. அதை அப்படியே போய் திவ்யாட்ட போட்டுக் கொடுக்கலாம்..!! என்ன அசோக்.. கரெக்டா..??" திவாகர் சொல்லிவிட்டு தனது வெண்பற்கள் தெரியுமாறு அழகாக புன்னகைத்தான். அசோக் திகைத்தான். "இ..இல்ல திவாகர்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..!!" அசோக் பதற்றமாக சொல்ல, "ரிலாக்ஸ் அசோக்.. ரிலாக்ஸ்..!! நான் உன்னை இப்போ எதுவுமே சொல்லலையே..? ஏன் பதர்ற..? ம்ம்ம்ம்...??? சரி.. அந்த மேட்டரை விடு..!!" என்ற திவாகர், அந்தப்பக்கமாக திரும்பி, "டேய்.. வேங்கடேசா.." என்று பேரரை அழைத்தான். உடனே அந்த வெங்கடேசன் இவர்கள் டேபிளை நோக்கி ஓடி வந்தான்."சொல்லுங்க ஸார்.." என்றான் பணிவாக. "ஸாருக்கு என்ன வேணும்னு கேட்டு குடு..!!" திவாகர் அசோக்கை நோக்கி கைநீட்டினான். "ம்ம்.. சொல்லுங்க ஸார்.." பேரர் அசோக்கிடம் திரும்பினான். "ரெண்டு லார்ஜ்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. ஒரு ஸ்ப்ரைட்.. ஒரு ஃப்ரஞ்ச் ஃப்ரை..!! கரெக்டா அசோக்..? ம்ம்ம்.. போய்.. அதை கொண்டு வா வெங்கடேசா..!!" திவாகர் அசோக்குக்கு பதிலாய் ஆர்டர் செய்துவிட்டு, அப்புறம் அசோக்கிடம் திரும்பி இளித்தான். "உங்களுக்கு..??" என்று அவனிடம் கேட்ட பேரரிடம், "எனக்கு போதும்..!!" என்றான். பேரர் ஆர்டர் குறித்துக்கொண்டு நகர, திவாகர் அசோக்கிடம் திரும்பினான். கொஞ்ச நேரம் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தவன், பின்னர் மிக கேஷுவலான குரலில் சொன்னான். "ஆறு மணில இருந்து இங்கயே உக்காந்துட்டு இருக்கேன் அசோக்.. அல்ரெடி அஞ்சு லார்ஜ் ஆகிடுச்சு..!!" "ஓ..!!" "உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. தெரியுமா..?" திவாகர் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான். "எனக்காகவா..?" "ம்ம்ம்..!!! நீ வெட்னஸ்டே வெட்னஸ்டேதான் இந்த பாருக்கு வருவியாமே.. வெங்கடேசன் சொன்னான்..!!" "ஆ..ஆமாம்..!!" "அதான் ஆறு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! ஆமாம்.. அது என்ன வெட்னஸ்டே கணக்கு..?" "அ..அது.. அன்னைக்குத்தான் எனக்கு.. நைட் ஆன்சைட் கால் இருக்காது..!! சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து கிளம்பிடுவேன்..!!" "ஓஹோ..!! குட்..!! ம்ம்ம்ம்... சாஃப்ட்வேர் இஞ்சினியர்.. இல்ல..??" "ஆமாம்..!!" அசோக் சொல்ல, திவாகர் அவன் முகத்தையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தான். அப்புறம் தன் தலையை லேசாக கவிழ்த்துக் கொண்டான். கருவிழிகளை மேலே உயர்த்தி அசோக்கையே ஒரு கழுகுப்பார்வை பார்த்தான். குரலை இறுக்கமாக மாற்றிக்கொண்டு, கிசுகிசுப்பாக சொன்னான். "ஆனா.. பண்றதெல்லாம் சல்லித்தனமான வேலை..??" "எ..என்ன சொன்னீங்க..?" அசோக் தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல் கேட்க, "நத்திங்.. நத்திங்..!!" திவாகர் வெண்பற்கள் தெரிய சிரித்தான். அசோக்கிற்கு அந்த சூழ்நிலை இப்போது ஏனோ அவஸ்தையாக தோன்றியது. திவாகரின் செய்கைகள் அவன் மனதில் லேசாக கிலியை கிளப்பிவிட்டன. 'எந்த மாதிரியான மனநிலையில் இவன் இருக்கிறான்..? கோபமாக இருக்கிறானா.. இல்லை.. இயல்பாக இருக்கிறானா..? புரியவில்லையே..?? இவன் அழைப்பை ஏற்று இங்கு வந்து அமர்ந்தது தவறோ..? இதனால் ஏதும் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளதோ..? நைஸாக நழுவியிருக்க வேண்டுமோ..? கூடிய சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விடவேண்டும்..!!' அதற்குள் பேரர் ஆர்டர் செய்தவைகளை கொண்டு வந்து டேபிளில் பரப்பினான். அசோக் பொறுமையாக விஸ்கியையும், ஸ்ப்ரைட்டையும் ஊற்றி மிக்ஸ் செய்தான். 'சியர்ஸ்..!!' என்றவாறு திவாகர் நீட்டிய க்ளாஸுடன், தனது க்ளாஸை இடித்துக் கொண்டான். நிதானமாக விஸ்கியை உறிஞ்ச ஆரம்பித்தான். திவாகருக்கு இப்போது தலை நிலைகொள்ளாமல் தள்ளாடியது. கருவிழிகள் கடிகார முள் போல சுழன்றன. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க, ஏழெட்டு குச்சிகள் வீணாக்கினான். அவன் போதையின் உச்சத்தில் இருக்கிறான் என்று அசோக்கிற்கு தெளிவாக தெரிந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த திவாகர் அப்புறம் மெல்ல ஆரம்பித்தான்."உங்க சொந்த ஊர் மதுரைப்பக்கம் இல்ல.. திவ்யா ஊர்ப்பேர் என்னவோ சொன்னாளே..?" "புளியங்குளம்..!!" "ஆஆஆங் .. புளியங்குளம்.. புளியங்குளம்..!! எனக்கு.. மடப்புரம்..!! திருத்துறைப்பூண்டி பக்கத்துல..!!" "ஓ..!! "சின்ன வயசுலேயே அப்பா, அம்மா போயிட்டாங்க அசோக்..!! அஞ்சாறு வயசு இருக்கும்.. அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க..!! அப்போ இருந்தே நான் மெட்ராஸ்தான்..!! பெரியப்பா வீடு மாதவரத்துல இருக்குது.. அங்கதான் தங்கிருந்தேன்.. அவர்தான் என்னை படிக்க வச்சாரு..!!" "ம்ம்ம்.." "பெரியப்பாவுக்கு பழைய பேப்பர் பிசினஸ்.. அவர் என் படிப்புக்கு பண்ணின செலவை விட.. நான் அவருக்கு உழைச்சு சம்பாதிச்சு குடுத்த காசு பலமடங்கு இருக்கும்..!! சின்ன வயசுல.. இந்த ஏரியாவுல ஒரு தெரு விடாம.. பேப்பர் பொறுக்கிருக்கேன்..!! ஹாஹா... Can you believe that..??? வெல்டிங் ஷாப்ல வேலை பாத்திருக்கேன்.. டீக்ளாஸ் கழுவிருக்கேன்.. கட்டிட மேஸ்திரிகிட்ட காலால மிதி வாங்கிருக்கேன்..!! ரொம்ப கஷ்டம் அசோக்..!! ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கேன்..!!" "ம்ம்.. கிரேட்..!!" "தேங்க்ஸ்..!! இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு தெரியுமா..?" "உ..உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கணும்.. அதுக்காகத்தான..?" "அது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.. அதுக்காகவுந்தான்..!!" "எ..என்ன புரிஞ்சுக்கணும்..?" "எனக்கு ஜெயிக்கிறது புடிக்கும்..!! இதுவரை நான் தொட்டது எல்லாம் சக்சஸ்தான்..!! I know how to win..!!" திவாகரின் குரலில் ஒரு கர்வம் பொங்கியது. "ஓ..!!" "சின்ன வயசுல இருந்தே என் மனசுக்குள்ள எப்போவுமே ஒரு வெறி உண்டு அசோக்.. ஜெயிக்கணும்ன்ற வெறி.. நெனச்சதை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!!" திவாகர் சொல்ல சொல்ல, அசோக் அவனையே மிரட்சியாக பார்த்தான். "ம்ம்ம்.." "இப்போ கொஞ்ச நாளா.. மனசுக்குள்ள.. புதுசா ஒரு வெறி கிளம்பிருக்கு.. திவ்யாவை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!! அந்த வெறி.. என்னை அப்படியே ஆட்டிப் படைக்குது அசோக்..!!" சொல்லிவிட்டு திவாகர் அசோக்கை பார்த்து புன்னகைத்தான். திவாகரின் கண்களில் மின்னிய ஒரு குரூரம்.. அவனது அழகான புன்னகைக்கு அடியில் மறைந்து கிடந்த அந்த கொடூரம்..!! அசோக் உண்மையிலேயே மிரண்டு போனான்..!! திவாகரோ அசோக்கின் முகமாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்..!! "நான் ஆன்லைன்ல.. நெறைய பொண்ணுக கூட பேசிருக்கேன் அசோக்.. அது என்னோட ஹாபி மாதிரி.. ஜஸ்ட் ஃபார் ஃபன்.. நத்திங் சீரியஸ்..!! ஒரு ரெண்டு வாரம் பேசுவேன்.. அப்புறம் அவங்களே வந்து பிங் பண்ணினா.. நான் பிஸியா இருக்கேன்னு.. ஜஸ்ட் லைக் தேட் அவங்களை அவாய்ட் பண்ணிடுவேன்..!! ஆனா.. திவ்யாவை என்னால அப்படி அவாய்ட் பண்ண முடியலை.. ஆக்சுவலா அந்த விஷயத்துல உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்..!!" "எ..எனக்கா..?" அசோக் புரியாமல் கேட்டான். "ஆமாம்.. நீதான் அந்த ஃபோட்டோ எடுத்தியாமே..?? திவ்யா அந்த ஃபோட்டோவை எனக்கு அனுப்பின அன்னைக்குல இருந்து ஆரம்பிச்சதுதான் அந்த வெறி.. அவளை அடைஞ்சே ஆகணும்ன்ற வெறி..!!" "ஓ..!!" "வாவ்..!!!! என்ன ஒரு அழகுடா சாமி..!!!! இந்த திவ்யா பொண்ணு இவ்வளவு அழகா..?? இவ கூடவா இத்தனை நாளா பேசிட்டு இருந்தோம்..? இத்தனை நாளா சும்மா பேசிட்டு மட்டும் இருந்துட்டமே..' அப்டின்னு..!!! நான் ஆரம்பத்துல சில ட்ரிக்லாம் பண்ணிப்பார்த்தேன் அசோக்.. திவ்யா அதுக்குலாம் மசியலை..!! அப்புறந்தான்.. நான் அவளை காதலிக்கிறதா சொன்னேன்.. நான் நெனச்ச மாதிரியே திவ்யா அழகா என் ப்ளான்க்குள்ள வந்து லாக் ஆகிக்கிட்டா..!! ஹாஹா.. ஹாஹா..!!" "அ..அப்போ நீங்க திவ்யாவை லவ் பண்றேன்னு சொன்னது பொய்யா..?" "ஃப்ராங்கா சொல்லப்போனா.. எனக்கு தெரியலைன்னுதான் சொல்லணும்.. அது லவ்வா என்னன்னே எனக்கு தெரியலை..!! ஆனா.. இப்போதைக்கு அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டு குடும்பம் நடத்துற மாதிரித்தான் என்னோட ப்ளான்..!! ப்ராமிஸ்..!! ட்ரஸ்ட் மீ..!!" "ம்ம்ம்..!!" "ம்ம்ம்ம்.. எல்லாம் என் ப்ளான் படி ஸ்மூத்தா போயிட்டு இருந்தது அசோக்.. அப்போத்தான்.. எங்க இருந்த வந்த நந்தி மாதிரி நீ என் விஷயத்துல மூக்கை நொழைச்ச..!! அந்த ட்ரிங்க்ஸ் மேட்டர்ல நான் திவ்யாவை கன்வின்ஸ் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..!! ஆக்சுவலா.. அந்த மேட்டர்ல எனக்கு உன்மேல ரொம்ப ரொம்ப கோவம் அசோக்..!! என்னதான் இருந்தாலும் நீ அப்படி பண்ணிருந்திருக்க கூடாது..!!" "நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. உ..உங்களை பிரிக்கிறது என்னோட இன்ட்டென்ஷன் இல்ல..!!" "ஏதோ ஒன்னு.. விடு.. ஆனா அதுவும் நல்லதுக்குத்தான்.. அந்த மேட்டர்னாலதான் அடம்புடிச்ச திவ்யாவை என்னால ஐ லவ் யூ சொல்ல வைக்க முடிஞ்சது..!! அதுக்காகவும் நான் உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!" "உங்க தேங்க்ஸை நீங்கள் வச்சுக்கோங்க..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க..??" அசோக் இப்போது சற்றே எரிச்சலாக கேட்டான். "இரு இரு... மேட்டருக்கு வர்றேன்..!! ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது... திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொன்னேன் இல்லையா..? அவ எனக்கு கிடைக்கிறதுல.. நடுவுல நீ ஒரு பிரச்னையா இருக்கப்போறேன்னு எனக்கு தோணுது..!! ஒருவேளை நீ ஒரு பிரச்னையா இல்லாம கூட இருக்கலாம்.. Who knows..?? But.. I don’t want to take risk..!! ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. பிசினஸ்னா ரிஸ்க் எடுத்துத்தான் ஆகணும்னு எல்லாம் சொல்வாங்க.. ஆனா என்னோட பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி என்னன்னு உனக்கு தெரியுமா அசோக்..? Elimination of Risk..!! That's what exactly I'm doing now..!! I want to eliminate you..!!" "எ..எனக்கு புரியலை..!!" "புரியிற மாதிரியே சொல்றேன்..!! நீ திவ்யாவோட பழகுறது எனக்கு சுத்தமா புடிக்கலை.. அவளை விட்டு நீ விலகிடனும்..!! திவ்யா ஏதோ சொல்லிட்டு இருந்தா.. உனக்கு ஏதோ வெளிநாடு போற ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்குறதா..!! நெஜமா அது..??" "ம்ம்ம்.." "என்னைப் பொறுத்தவரை உனக்கு அது ஒரு பெஸ்ட் ஆப்ஷன்..!! கொஞ்ச நாள் நீ வெளிநாட்டுல போய் இருந்துட்டு வா.. அட்லீஸ்ட் நான் நெனச்ச மாதிரி எல்லாம் நடந்து முடியிறவரை..!!" "ஓ..!! நான் போகமாட்டேன்னு சொன்னா..??" "சிம்பிள்..!! எனக்கு உன்மேல கோவம் வரும்..!! அது உனக்கு நல்லது இல்ல..!!" "என்ன பண்ணுவீங்க..?" "நானே திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிப்பேன்.. அவளாவே உன்னை வெறுத்து ஒதுக்குற மாதிரி செய்வேன்..!!" "ஹ்ஹா.." "என்ன.. நக்கலா சிரிக்கிற..? என்னால முடியாதுன்னு நெனைக்கிறியா..?" "நிச்சயமா உங்களால முடியாது..!!" "பார்க்கலாம்..!! நான் அல்ரெடி அந்த வேலையை எல்லாம் ஆரம்பிச்சுட்டேன்.. உன்னை பத்தின தப்பான அபிப்ராயத்தை கொஞ்சம் கொஞ்சமா அவ மனசுக்குள்ள திணிச்சுட்டு இருக்கேன்..!! 'அசோக்குக்கு என் மேல ஏதோ பொறாமை.. நம்ம பிரிக்க ப்ளான் பண்றார் திவ்யா..' அந்த மாதிரி..!! 'ஏன்னே தெரியலை.. அவனுக்கு உங்களை புடிக்கலை.. உங்களை அவன் புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்..' இது திவ்யா இன்னைக்கு காலைல எங்கிட்ட விட்ட டயலாக்..!! ம்ம்ம்ம்.. உனக்கு இப்போ ரெண்டு ஆப்ஷன் இருக்கு அசோக்..!! ஒன்னு.. திவ்யா உன் மேல வச்சிருக்குற மதிப்பு கொஞ்சமும் குறையாம.. நீ வெளிநாடு போயிடுறது..!! ரெண்டு.. இங்கயே இருந்து.. அவ உன் மேல வச்சிருக்குற மதிப்பை இழந்து.. ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் அவ கூட பேச முடியாம போயிடுறது..!! ரெண்டுல எதை நீ சூஸ் பண்ண போற..?""என்ன.. என்னை மிரட்டுறீங்களா..?"

"ஹாஹா.. நான் எங்க மிரட்டுறேன்..? ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. உன்கிட்ட ஒரு டீல் பேசிட்டு இருக்கேன்.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்திருக்கேன்..!!" "உங்களோட ரெண்டு ஆப்ஷனுமே எனக்கு பிடிக்கலை மிஸ்டர் திவாகர்..!! நான் மூணாவது ஆப்ஷன் சூஸ் பண்ணப் போறேன்..!!" "ஹாஹா.. அதென்ன மூணாவது ஆப்ஷன்..??" "உங்க பேச்சுல இருந்தே தெரியுது.. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு..!! உங்களை மாதிரி ஒரு ஆளைக் கட்டிக்கிட்டு.. திவ்யா சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!! அதனால.." "என்ன பண்ணப் போற..?" "உங்களைப் பத்தி அவகிட்ட சொல்லப் போறேன்..!!" "ஹாஹா..!! இப்போ நான் பேசுனதெல்லாம் அவகிட்ட போய் சொல்லப் போறியா..? அப்படின்னா.. அதோட இதையும் சேர்த்து சொல்லு.. நான் இதுவரை ஒரு ஏழெட்டு பொண்ணுகளோட செக்ஸ் வச்சிருக்கேன்..!! உண்மை.. அதையும் அவகிட்ட போய் சொல்லிப்பாரு..!! அவ நம்பமாட்டா அசோக்.. அப்படியே ஒருவேளை நம்பி.. எங்கிட்ட வந்து கேட்டாலும்.. நான் அப்டிலாம் சொல்லவே இல்லைன்னு சத்தியம் செஞ்சு அவளை சமாளிச்சுடுவேன்..!! திவ்யாவை எப்படி டீல் பண்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அவளை எப்படி என்கிட்டே ஐ லவ் யூ சொல்ல வச்சேன்னு பார்த்தேல..? I know.. I know everything about her..!! இந்த மேட்டரை போய் அவகிட்ட சொன்னா.. அதை வச்சே உன் இமேஜை டேமேஜ் பண்ணிக்காட்டவும் என்னால முடியும்.. பாக்குறியா..?" திவாகர் சவாலாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரர் வந்து அவன் முன்பாக பில் புக்கை நீட்டினான். பில்லை பார்க்காமாலே.. திவாகர் பர்ஸ் திறந்து கிரெடிட் கார்ட் எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் வாங்கிக்கொண்டு அந்தப்புறம் நகர்ந்ததும், கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் விழுங்கினான். நிமிர்ந்து அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தான். இப்போது அசோக்கும் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து மொத்தமாய் உள்ளே ஊற்றிக் கொண்டான். ப்ளேட்டில் இருந்த சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே, திவாகரை பதிலுக்கு முறைத்தான். கார்ட் வாங்கிக்கொண்டு சென்ற பேரர் திரும்ப வந்தான். புக்கை நீட்டினான். திவாகர் அதை திறந்து, பாக்கெட்டில் இருந்த பேனாவை உருவி, ட்ரான்சாக்ஷன் ஸ்லிப்பில் கையொப்பம் இட்டான். பர்ஸ் திறந்து வெங்கடேசனுக்கு டிப்ஸ் எடுத்து வைத்தான். ஒரு சிகரெட் எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து, அதிலிருந்து குபுகுபுவென கிளம்பிய புகையை அசோக்கின் முகத்தில் ஊதினான். "நீ சாப்பிட்டதுக்கும் சேர்த்து நான் பில் பே பண்ணிட்டேன் அசோக்.. நீ பே பண்ண தேவையில்ல..!!" என்றான். உடனே அசோக் ஒருகணம் குழம்பிப்போனான். சற்றே எரிச்சலாக கேட்டான். "நீ..நீங்களா..? ஏன்..?" "Its ok.. Treat this as my Treat..!!" "நோ நோ..!! எனக்கு உங்களோட ட்ரீட் தேவையில்ல.. நான் பணம் தர்றேன் வாங்கிக்கோங்க..!!" அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுக்க, "பரவால அசோக்.. பணத்தை உள்ள வை..!! என்னோட டீல் உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு..!!" ______________________________அசோக் இப்போது எதுவும் பேசாமல் திவாகரைப் பார்த்து முறைத்தான். அப்புறம் பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவன் முன்பாக தூக்கி போட்டான். திவாகர் சற்றே கிண்டலாக கேட்டான். "இதுக்கு என்ன அர்த்தம்..?" "உங்க டீல் எனக்கு ஓகே இல்லைன்னு அர்த்தம்..!!" "அப்போ திவ்யாவை விட்டு நீ விலகமாட்ட..?" "அது என்னால முடியாது..!!" "ஹாஹா.. அப்போ உன்கிட்ட இருந்து திவ்யாவை நான் பிரிக்க வேண்டி இருக்கும்..!!" "அது உங்களால முடியாது..!!" அசோக் உறுதியாக சொல்ல, திவாகர் இப்போது அசோக்கை முறைத்துப் பார்த்தான். டேபிளில் கிடந்த பணத்தை அள்ளி தன் பர்ஸில் திணித்துக் கொண்டான். எழுந்து கொண்டான். டேபிளில் கை ஊன்றி குனிந்து, தனது முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று, சவால் விடும் குரலில் சொன்னான். "முடிச்சுக் காட்டுறேன்.. I know how to do it.. I know everything..!!" சொல்லிவிட்டு நகர முயன்றவனை, "ஒரு நிமிஷம் மிஸ்டர் திவாகர்..!!" என்று அசோக் அழைத்து நிறுத்தினான். திவாகர் நின்று 'என்ன..?' என்பது போல அசோக்கை திரும்பி பார்க்க, இப்போது அசோக் சோபாவில் இருந்து எழுந்தான். "டோன்ட் ஃபர்கெட் யுவர் பென்..!!" என்ற அசோக், திவாகர் டேபிளில் மறந்து விட்டிருந்த அந்த பேனாவை எடுத்து அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்தான். திவாகர் எரிச்சலாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அசோக் இதழில் அழகாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னான். "இப்போ.. அடிக்கடி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. என்னது அது..?? ஆங்.. 'I know everything..!!' ம்ம்ம்... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கலாம் திவாகர்.. ஆனா ஒரு விஷயத்தை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை.. அது தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் இப்படிலாம் என்கிட்ட பேசிருக்க மாட்டீங்க..!! ஆனா.. கூடிய சீக்கிரம் அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பீங்க..!!" "என்ன அது..?" திவாகர் சற்றே எகத்தாளமாக கேட்க, "திவ்யா என் மேல வச்சிருக்குற நம்பிக்கை..!!" அசோக் திவாகரின் கண்களை கூர்மையாக பார்த்து சொன்னான். சொல்லிவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல், திரும்பி விறுவிறுவென நடந்து, அந்த பாரை விட்டு வெளியேறினான்.அசோக் எக்கச்சக்க ஆத்திரத்தில் இருந்தான். தன் ஆத்திரம் மொத்தத்தையும் ஆக்சிலரேட்டரிடம் காட்டினான். முழுவதுமாய் முறுக்கப்பட்ட ஆக்சிலரேட்டர் பைக்கை 'விஷ்ஷ்..' என உச்சபட்ச வேகத்தில் சீற வைத்தது. ஸ்பீடாமீட்டர் முள் 100ஐ முத்தமிட.. அந்த பாரில் இருந்து வீடு செல்லும் பாதையில் பைக் பறந்து கொண்டிருந்தது. அசோக் மனதுக்குள் திவாகரை திட்டிக்கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். 'ச்சே.. என்ன மனிதன் இவன்..?? எவ்வளவு ஆபத்தான ஆள் இவன்..?? என்ன ஒரு வெறி அவனுக்கு..?? என்ன ஒரு சூழ்ச்சிக்கார குணம்..?? இவனைக் கட்டிக்கொண்டு திவ்யா நிம்மதியாக இருக்கப்போவதில்லை.. இருக்கவே போவதில்லை..!! விட மாட்டேன்.. என்னுடைய திவ்யா இப்படி ஒரு குரூர புத்தி உடையவன் கையில் சிக்க விடவே மாட்டேன்..!! யார் என்று நினைத்துக்கொண்டான் என்னை..?? என்னிடமே எவ்வளவு எகத்தாளமாக பேசுகிறான்..?? நான் யார் என்று இன்று அவனுக்கு காட்டுகிறேன்..!!' ஒரு அரை மணி நேரத்தில் அசோக் வீட்டை அடைந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது, கார்த்திக் எதையோ கொறித்துக்கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான். பரபரப்பாக உள்ளே நுழைந்த அசோக்கை வித்தியாசமாக பார்த்தான். "என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?" "திவ்யாவை எங்கத்தான்..?" "அவ ரூம்ல இருக்குறா.. ஏன்..?" அசோக் அவனுக்கு பதில் சொல்லாமல் உள்ளறைக்குள் நுழைந்தான். 'டேய்.. என்னடா ஆச்சு..?' சமையலறையில் இருந்து வெளிப்பட்டுக் கேட்ட அக்காவையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. விடுவிடுவென நடந்து திவ்யாவின் அறைக்குள் புகுந்தான். உள்ளே லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்த திவ்யாவின் கையைப் பற்றி இழுத்தான். திவ்யாவுக்கு எதுவும் புரியவில்லை. "எ..என்னடா..? என்னாச்சு..?" "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா.. வா..!!" "என்ன பேசணும்..?" "இங்க வேணாம்.. வா.. மொட்டை மாடிக்கு போயிடலாம்..!!" அசோக் திவ்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். திவ்யாவுடையை கையை இறுகப்பற்றி தரதரவென இழுத்து செல்லும் அசோக்கையே சித்ராவும், கார்த்திக்கும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமலே திவ்யா அசோக்கின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவன் பின்னால் சென்றாள். மொட்டை மாடியை அடைந்ததும் பொறுமை இல்லாமல் கத்தினாள். "ஐயோ.. என்னாச்சு அசோக்.. இவ்வளவு அவசரமா எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த..?" "உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் திவ்யா..!!" "அப்படி என்ன முக்கியமான விஷயம்..?" "நான் யாரு..??" "ப்ச்.. இதைக் கேட்கத்தான் கூட்டிட்டு வந்தியா..?" திவ்யா சலிப்பாக கேட்டாள். "கேக்குறதுக்கு பதில் சொல்லு திவ்யா.. நான் யாரு..??" "ம்ம்.. நீ என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்..!!" "உனக்கு என்னை புடிக்குமா..?" "என்ன கேள்வி இது..?" "பதில் சொல்லு திவ்யா..!!" "சரி.. சரி..!! ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! போதுமா..?" "உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா..?" "இருக்கு.. அதுக்கு என்ன இப்போ..?" "எவ்வளவு..??" "எக்கச்சக்கமா இருக்கு..!! என்ன ஆச்சு உனக்கு..??" "நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்னு நம்புறியா..?" "இங்க பாரு அசோக்.. என்னை படைச்ச கடவுளை விட நான் உன்னை அதிகமா நம்புறேன்..!! என்ன மேட்டர்னு கொஞ்சம் சொல்லித் தொலையேன்..!!"திவ்யா எரிச்சலாய் சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தையே குழப்பமாய் பார்த்தாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. திவ்யாவுடைய கண்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மிகவும் இறுக்கமான குரலில் கேட்டான். "என்மேல அவ்வளவு நம்பிக்கை இருக்குன்னா.. நான் எது சொன்னாலும்.. அப்படியே கண்ணை மூடிட்டு செய்வியா..?" "ம்ம்.. செய்வேன்..!!" "ப்ராமிஸ்..??" "ப்ராமிஸ்..!!! என்ன செய்யணும்..? சொல்லு.. இந்த மாடில இருந்து குதிக்கணுமா..?" திவ்யா இன்னும் எரிச்சலாகத்தான் காணப்பட்டாள். "இல்லை.. திவாகரை உன் மனசுல இருந்து அழிக்கனும்..!!" அசோக் தெள்ளத்தெளிவாக சொல்ல, திவ்யா உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானாள். அவள் சுத்தமாக அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய முகத்தில் ஓடிய அதிர்ச்சி ரேகைகள் அப்பட்டமாய் தெரிந்தன. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் திக்கி திணறி வெளிப்பட்டன. "அ..அசோக்.. எ..என்ன சொல்ற நீ..?" "ஆமாம் திவ்யா.. இந்த நிமிஷத்துல இருந்து..!! அவரை நீ மறந்துடணும்.. அவர்கிட்ட இருந்து சுத்தமா விலகிடனும்.. எந்த வகைலையும் அவரை இனி நீ காண்டாக்ட் பண்ண கூடாது..!!" "எ..எனக்கு எதுவும் புரியலை அசோக்.. எ..என்னாச்சு இப்போ திடீர்னு..?" "அவர் சரியில்ல திவ்யா.. ரொம்ப மோசமான ஆள்..!! அவரை கட்டிக்கிட்டு நீ சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!!" "ஏ..ஏண்டா அப்படி சொல்ற..?" "அவரோட நடத்தை சரியில்ல.. எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு அவருக்கு.. கோபம், பொறாமை, சூழ்ச்சி, பழிவாங்குறதுனு.. அவரோட கேரக்டர்சே ஒண்ணுகூட சரியில்லை..!! பத்தாததுக்கு நெறய பொண்ணுகளோட தொடர்பும் இருக்கு..!! அவர் உனக்கு வேணாம் திவ்யா..!!" "அ..அசோக்.. நீ நெனைக்கிற மாதிரி அவர் இல்லைடா..!!" "ஐயோ திவ்யா.. நீ நெனைக்கிற மாதிரிதான் அவர் இல்ல..!! நான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்..!! என்னை நம்பு..!!" "சரி.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?" திவ்யா அந்த மாதிரி கேட்கவும், அசோக் இப்போது சற்று திணறினான். 'திவாகரே இதெல்லாம் சொன்னான்.. இப்படி எல்லாம் பேசினான்..' என்று சொன்னால் சத்தியமாக இவள் நம்பப்போவதில்லை. உடனே திவாகருக்கு கால் செய்து கேட்பாள். அவன் இவளிடம் நடிப்பான். இந்த லூசும் அவனுடைய தேன் தடவிய வார்த்தைகளை நம்பி ஏமாறும். அதனால் உடனடியாய் ஒரு பொய்யை தயார் செய்து, திக்கி திணறி திவ்யாவிடம் ஒப்பித்தான். "எ..எனக்கு தெரிஞ்ச ஒரு பி..பிரண்ட் மூலமா விசாரிச்சேன்.." "யார் அவர்..?" "அ..அதை என்னால சொ..சொல்ல முடியாது..!!" "ஏன்..??" "தான் யார்னு காட்டிக்க அவர் விரும்பலை.. திவாகரால தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்படுறாரு..!!" "ஓ.. அவரை நீ நம்புறியா..?" "ஆமாம்.. அவரை நான் முழுசா நம்புறேன்..!! நீ என்னை நம்புறியா திவ்யா..??" அசோக் பரிதாபமாக கேட்டுவிட்டு திவ்யாவையே பார்க்க, அவளுக்கு இப்போது என்ன சொல்வதென்றே புரியவில்லை. "என்னடா.. இப்படி கேக்குற..?" என்றாள் அவளும் பரிதாபமாக.அப்போ அவரை மறந்துடுறேன்னு சொல்லு..!!"

"நா..நான் வேணா திவாகர்கிட்ட ஒரு தடவை பே..பேசி பார்க்கவா..?" திவ்யா தயங்கி தயங்கி கேட்டாள். "நோ திவ்யா..!! அதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!" "ஏண்டா..?" "அவருக்கு ஏற்கனவே என்மேல எக்கச்சக்கமா கோவம்... இப்போ நீ அவர்கிட்ட பேசினா.. அவர் உன்னை நல்லா குழப்பி விட்ருவாரு.. நீயும் அதை நம்புவ..!! உன் கண்ணுக்கு நான் கெட்டவனா தெரிவேன்.. அதான் சொல்றேன்..!!" "நீ அவரை தப்பவே புரிஞ்சு வச்சிருக்குற அசோக்.. அவருக்கு உன் மேல எந்த கோவமும் கிடையாது..!! அவர்கிட்ட பேசினா.. இதுக்கு ஒரு நல்ல முடிவு கெடைக்கும்னு எனக்கு தோணுது..!!" திவ்யா பிடிவாதமாக இருக்க, அசோக் இப்போது எரிச்சலானான். "சரி.. போ.. போய் பேசு..!! அவர்தான் உனக்கு முக்கியம்னா.. போய் பேசு..!! ஆனா ஒன்னு.. அப்புறம் என்கிட்டே எப்போவும் பேசாத..!!" அசோக் அவ்வாறு இரக்கமே இல்லாமல் சொல்ல, திவ்யா அப்படியே ஆடிப் போனாள். அவளுடைய கண்கள் பட்டென கலங்கி போயின. அவளது மனம் முழுவதும் குழப்பத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 'சிறு வயதில் இருந்தே தான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் நண்பனா..?? அல்லது சில நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆனவாக இருந்தாலும், வாழ்வின் மிச்ச நாட்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்த காதலனா..?' அவளால் எளிதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தத்தளித்தாள். அவள் ஊமையாயிருக்க, அசோக்கே இப்போது கேட்டான். "என்ன திவ்யா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..?" "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அசோக்.. ஒரே குழப்பமா இருக்கு..!!" "ஓ..!! அப்போ இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலை.. இல்ல..? அன்னைக்கு ட்ரெயின்ல.. லைஃப்ல எந்த முடிவா இருந்தாலும் என்னை கேட்டுத்தான் எடுப்பேன்னு சொன்னியே.. அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொன்னியா.. எல்லாம் வெறும் நடிப்பா திவ்யா..??" அசோக்கின் வார்த்தைகள் திவ்யாவை மிகவும் காயப்படுத்தின. துடித்துப் போனாள். "இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" "இங்க பாரு திவ்யா.. உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் இப்படி பேசலை.. உன் வாழ்க்கை மேல எனக்கு இருக்குற அக்கறைலதான் இப்படிலாம் பேசுறேன்..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இது உன் லைஃப்ல ரொம்ப முக்கியமான டெசிஷன்.. இதுல ஏதாவது தப்பா முடிவெடுத்தேன்னா.. உன் லைஃபே ஸ்பாயில் ஆயிடும்..!! உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா.. நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்னு முழுசா நீ நம்புனா.. நான் சொல்ற மாதிரி கேளு.. இல்லன்னா.. அப்புறம் எப்போவுமே நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரி போயிடும்..!! நல்லா யோசிச்சு சொல்லு..!!" அசோக் சொல்லி முடித்துவிட்டு, திவ்யாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான். அவள் சொல்லப் போவதை வைத்துதான்.. திவ்யாவுடனான தன் நட்பும் தொடரப் போகிறது என்ற அபாயமும்.. அவன் இதயத்தை ட்ரம்ஸ் வாசிக்க செய்தது. திவ்யா கண்களில் நீர் கசிய, தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். இது தன் வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்பதை அவளும் இப்போது நன்கு உணர்ந்திருந்தாள். அசோக்கின் முகமும், திவாகரின் முகமும் மாறி மாறி அவளது மனக்கண்ணில் வந்து போயின. ஒரு அரை நிமிடம் திவ்யா அந்த மாதிரி அமைதியாக யோசித்திருப்பாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்து தெளிவாக சொன்னாள். "ஓகே அசோக்.. நீ சொல்றதை நான் நம்புறேன்..!! அவரை விட்டு விலகிடுறேன்..!!" திவ்யா சொன்னதும் அசோக் அப்படியே முகம் மலர்ந்து போனான். அவன் மனதில் ஒரே நேரத்தில் நிம்மதியும், சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி வழிந்தன. தன் வாழ்க்கையையே அவன் கையில் ஒப்படைக்க துணிந்த அவனது தோழியை மிகவும் பெருமிதமாக பார்த்தான். நெஞ்சுக்குள் ஒரு உணர்ச்சி ஊற்று பீறிட்டு கிளம்பியது. உதடுகளை கடித்து அந்த உணர்சிகளை அடக்கிக் கொண்டான். "தே..தேங்க்ஸ் திவ்யா.. தேங்க்ஸ்..!!" என வார்த்தை வெளியே வராமல் தடுமாறினான். "நீதான் எனக்கு முக்கியம் அசோக்..!! சொல்லு.. நான் என்ன பண்ணனும்..?" "சொல்றேன்.. மொதல்ல இந்த சிம்மை கழட்டி தூரமா போடு.. வேற நம்பர் மாத்திக்கோ..!!" "ம்ம்.." "அவருக்கு ஃபைனலா ஒரு மெயில் அனுப்பிச்சுடு..!! 'நான் உங்களை லவ் பண்ணலை.. அன்னைக்கு நீங்க சூசயிட் பண்ணிக்கிறேன்னு மிரட்டுனதுல நான் குழம்பி போய் அப்படி சொல்லிட்டேன்.. இப்போ நான் தெளிவாயிட்டேன்.. நீங்க எனக்கு வேணாம்.. தயவு செய்து என்னை இனி தொந்தரவு செய்யாதீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. நான் எந்த வகைலயாவது உங்களுக்கு கஷ்டம் கொடுத்திருந்தா என்னை மன்னிச்சுடுங்க..' அப்டின்னு ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு.. அந்த மெயில் ஐடியும் க்ளோஸ் பண்ணிடு..!! அவர் என்ன ரிப்ளை பண்ணிருக்கார்னு பார்க்க கூட அதை ஓப்பன் பண்ணாத..!!" "ம்ம்.. சரி.. ஆனா அவர் எப்படியும் என்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணுவாரு..!!" "கண்டிப்பா பண்ணுவாரு.. எனக்கும் தெரியும்.. உன்னை அவ்வளவு சீக்கிரமா அவர் விட மாட்டார்..!! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ திவ்யா.. இது ரொம்ப ரொம்ப முக்கியம்.. எந்த காரணம் கொண்டும் அவர் கூட நீ பேசக்கூடாது.. அவர்கிட்ட பேசினா நிச்சயமா உன்னை குழப்பிடுவாரு..!! அவர் உன்னை தேடிவந்தா முகம் கொடுத்து பேசாத.. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு..!! கொஞ்ச நாள்ல அவரோட முயற்சியை அவர் கை விட்ருவாரு.. அப்புறம் உனக்கு எதுவும் பிரச்னை இல்லை.. புரியுதா..?" "ம்ம்.. சரிடா..!! புரியுது..!!" திவ்யாவின் குரல் சோகமாக ஒலிக்க, அசோக் அவளுடைய தோளைப் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டான். "இங்க பாரு திவ்யா.. நீ சரியான முடிவுதான் எடுத்திருக்குற.. அதுக்காக சந்தோஷப்படு..!!" "ம்ம்ம்ம்.." திவ்யா புன்னகைக்க முயன்று தோற்றாள். "நான் உன்கூட இருக்கேன் திவ்யா.. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" "ம்ம்.. நீ இருக்குற தைரியத்துலதான்.. நான் இருக்கேண்டா அசோக்..!!" சொல்லிவிட்டு திவ்யா அசோக்கின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.