Thursday 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 1


வசந்தம் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள மூன்றாவது வீடு பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டில் குழுமியிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தங்களுக்குள் மிக உற்ச்சாகமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அதே வீட்டில் இருந்த இருவரை மட்டும் அவர்களுடைய பேச்சில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. தனியறையில் தனித்துவிடப்பட்டிருந்த கபிலனும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்வையால் அளந்து கொண்டிருந்தார்கள். சூர்யாவின் அழகில் மயங்கி அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த கபிலனை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்து வைத்தாள் சூர்யா... அதையெல்லாம் அவன் கவனிக்கவில்லை... அவன் மனம் தன் அதிஷ்டத்தை எண்ணி வானில் சிறகடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்து சூர்யா பேசிய வார்த்தைகளில் அது ஆகாயத்திலிருந்து கட்டாந்தரையில் விழுந்து உடைந்து சிதறியது... "ஏய்... என் பேர் என்னன்னு தெரியுமா உனக்கு...?" அவள் அதிகாரமாக கேட்டாள். ".............." அவன் மௌனமாக அவளை பார்த்தான்.

"என்ன முழிக்கிற....? சூர்யா...! சூர்யான்னா என்னன்னு தெரியுமா? தீ பிழம்பு... எனக்கு பிடிக்காதவங்க என்னை நெருங்கினா பஸ்ப்பமாயிட வேண்டியது தான். தெரிஞ்சுக்கோ..." இருபத்தி இரண்டு வயது இளம் பெண்ணான சூர்யா தன் முன் நிற்கும் இருபத்தி எட்டு வயது ஆண் மகனான கபிலனிடம் மிரட்டும் தொனியில் பேசினாள். அவளுடைய மிரட்டல் பேச்சு கபிலனுக்கு சிறு குழந்தைக்கு போலீஸ் வேஷம் போட்டது போல் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் "என்னையும் பஸ்ப்பமாக்கீடுவியோ...!" என்று அவளிடம் நக்கலாக கேட்டான். "அதிலென்ன சந்தேகம் உனக்கு...? உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல... மரியாதையா என்னை பிடிக்கலன்னு என்னோட அப்பகிட்ட போயி சொல்லிடு. இல்ல... அப்புறம் ரொம்...ப வருத்தப்படுவ... " "ஏன்.. எனக்கு என்ன குறை... அழகு இல்லையா...? படிப்பு இல்லையா...? நல்ல வேலை இல்லையா...? பணம் இல்லையா...? என்னை ஏன் உனக்கு பிடிக்கல?" அவன் தன்னை ஒரு பெண் நிராகரித்து அவமானப் படுத்துகிறாள் என்ற கோபத்தில் சிறிது படபடப்பாக வினவினான். "என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவன் வீரனா இருக்கணும். ஒரு நாளைக்கு நான்கு பேர் பல்லையாவது உடைக்கணும். அவனுக்கு முன் ஆண்கள் யாரும் நிமிர்ந்து நடக்க அஞ்சணும். இதுக்கெல்லாம் மேல நானே ஒரு வீராங்கனை. எதுக்கும் பயப்பட மாட்டேன். நானே யாரை பார்த்து பயப்பட்றேனோ, அவன் தான் என் கணவ........ ஆ... ஆ... ஐயோ.. ச்சூ..." சூரியாவின் தலையில் விழுந்த பல்லி தரையில் குதித்து மீண்டும் சுவற்றில் ஏறி ஓடியது. "ஹி.. ஹி... பல்லியா...! இந்த பல்லியெல்லாம் முதல்ல அடிச்சு கொல்லனும்... ச்சை... முக்கியமான நேரத்துல மனுசன 'டிஸ்டர்ப்' பண்ணிக்கிட்டு..." அவள் அசடு வழிந்தாள். அவன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான். அவனுடைய சிரிப்பு அவளை எரிச்சலாக்கியது... உடனே தன்னுடைய வீராங்கனை போர்வையை போர்த்திக் கொண்டு மிடுக்காக பேசினாள். "ஹலோ... என்ன சிரிப்பு... இங்க என்ன காமிடி தர்பாரா நடக்குது...?" கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். "ஓகே... ஓகே... இப்ப என்னதான் சொல்லவர்ற...?" அவன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். "நான் என்ன சொல்றேன்னு இன்னுமா புரியல...? உன்ன மாதிரி சப்பை பீசெல்லாம் எனக்கு ஒத்துவராது... என்னோட ரேஞ்சே தனி... உனக்கு புரியிற மாதிரி சுருக்கமா சொல்லன்னுன்னா ஒரு நல்ல ராணுவ வீரன்... இல்ல ஒரு நல்ல போலீஸ்காரன்... அதுவும் இல்லன்னா ஒரு ரவ்டி... இவங்கள்ல யாராவது தான் என்னோட கணவனா வர முடியும்... புரியுதா..." அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டான் என்கிற கடுப்பில் பொரிந்தாள். இப்போது அவன் முகம் சுத்தமாக சிரிப்பை தொலைத்துவிட்டு கடுமையாக மாறிவிட்டது. "நல்லா புரியுது..." அவனுடைய பதிலை கேட்டு பெருமையடைந்த சூர்யா சிறிது புன்னகைத்துவிட்டு நிமிர்ந்து நின்றாள். அவன் தொடர்ந்து பேசினான். "நல்ல மனநிலையில இருக்க பொண்ணு பேசுற மாதிரி நீ பேசல... தினமும் பல்லை உடைக்கிரவனா பார்த்து நீ கல்யாணம் செய்யணும் என்றால் எதற்கு ராணுவவீரன் போலீஸ்காரனையெல்லாம் தொல்லை செய்யணும்... பேசாமல் ஒரு பல் மருத்துவனை பார்த்து கல்யாணம் செய்துகொள். அதுவும் மோசமான மருத்துவனா பார்த்து கல்யாணம் செய்துக்கொள். அப்போதான் அவனை பார்த்து எல்லாரும் பயப்படுவானுங்க..." என்று எரிச்சலாக பேசினான் கபிலன். "ஏய்... ன்னா... நக்கலா...? மூஞ்ச பாரு... நல்லா ஊறவச்ச உளுந்து வட மாதிரி... நீ என்ன ஓட்றியா...? மவனே..." அவள் லோக்கலாக இறங்கிவிட்டாள். அவளுடைய பேச்சில் உடல் விரைத்தவன் "இந்த பேச்சுக்கு நீ அனுபவிப்ப...." என்று அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறினான். "என்ன தம்பி... ஆச தீர பேசிட்டீங்களா? எங்க பொண்ணு ஆண் பிள்ளைகளுகிட்ட பேச கொஞ்சம் கூச்சப்படும்... அதனால உங்ககிட்ட சரியா பேசியிருக்காது. அதெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க...." என்றார் ஒய்வு பெற்ற கான்ஸ்டபிலான சூரியாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி. கபிலனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சூர்யாவின் பேச்சை 'அரை பைத்தியக்காரத்தனம்' என்று ஒதுக்கிவிட்டு வந்தவனுக்கு, அவளுடைய தந்தையின் பேச்சு முழு லூசுத்தனமாக தெரிந்தது. இந்த பித்துக்குளி குடும்பத்திடமிருந்து தப்பிக்க எண்ணி தந்தைக்கு கண்களால் குறிப்பு காட்டினான். "இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு தகவல் சொல்றோம்... நாங்க வர்றோம்." என்று மகனின் முகத்தை பார்த்தே ஒரு முடிவை சொல்லிவிட்டு, தன் குடும்பத்துடன் பெண் வீட்டிலிருந்து விடைபெற்று சென்றார் கபிலனின் தந்தை. கபிலன் சூர்யாவின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டான். ஆனால் அவன் மனதிலிருந்து சூர்யா பேசிய வார்த்தைகளை வெளியேற்றாமல் பாதுகாத்து வைத்துக் கொண்டான். அடுத்தடுத்து சூர்யாவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்த சூர்யாவின் பெற்றோர் சோர்வடையும் வரை மறைமுகமாக எதையாவது செய்து அவளது திருமணத்தை கலைத்து கொண்டிருந்தான். # # # கார்மேகம் சூழ்ந்து அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டிவிட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். சூர்யாவும் சுதாவும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றார்கள். அவர்களால் முழுவதுமாக மழையிடமிருந்து தப்பித்துவிட முடியவில்லை. லேசாக தூவானம் அவர்களை நனைத்துக் கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தோழிகள் இருவரும் துப்பட்டாவை இழுத்து போர்த்திக் கொண்டு நின்றார்கள். அவர்களுக்கு அருகே புதியவன் ஒருவனும் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து நின்றான். அவனையும் குளிர் விட்டுவிடவில்லை. குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து இழுத்து விட்டான். அந்த புகையின் நெடி தோழிகள் இருவரையும் தாக்கி புரையேரச் செய்தது. அதில் எரிச்சலான சூர்யா, "ஹலோ.. பொது இடத்துல புகை பிடிக்கக் கூடாதுன்னு தெரியாதா..? " என்று வழக்கம் போல் தன் குரலை உயர்த்தினாள். இருட்டில் நின்றுகொண்டிருந்த இரண்டு உருவங்களை அதுவரை சரியாக கவனிக்காத அந்த புதியவன் திரும்பிப் பார்த்தான். "உங்களதான் சார்... மரியாதையா சொன்னா புரியாதா...? ஒழுங்கா அந்த சிகரெட்டை கீழ போடுங்க... நீங்க புகை பிடித்தால் உங்களுக்கு அருகில் பத்து அடி தூரத்துல இருக்க எங்களுக்கும் சேர்த்து பாதிப்பு வந்து சேருது. இதெல்லாம் எத்தன தடவ 'ஃபேஸ்புக்ல', 'ஈமெயில' , 'டிவி நியூஸ்ல', பத்திரிக்கைல பார்த்தாலும் உங்களுக்கெல்லாம் புத்தியே வராதா?" "இல்ல... நான்... குளிருக்கு.... சாரி..." என்று கோர்வையாக பேச முடியாமல் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு தடுமாறினான் அந்த புதியவன். அப்போது அந்த பக்கம் வந்து கொண்டிருந்த ஒரு காரின் வெளிச்சம் அவர்கள் மீது பட்டு, அரைகுறையாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன், மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் இருந்த சூர்யாவின் அழகை எடுத்துக் காட்டியது. அவர்களை நெருங்கி வந்த கார் ஒரு நொடி தயங்கி நின்று பின் விரைந்து அவர்களை கடந்து சென்றது. கார் சென்ற அடுத்த நொடியே அங்கு நின்று கொண்டிருந்த புதியவனும் சூர்யாவின் பேச்சிலிருந்து தப்பிக்க எண்ணி, தன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். "ஏன்டி நீ சும்மாவே இருக்க மாட்டியா...? நாமலே தனியா மழைக்கு ஒதுங்கி நிக்கிறோம். அவனுகிட்ட உனக்கு ஏன்டி வம்பு?" "இப்படியே எல்லோரும் பயந்து ஒதுங்கி போறதாலதான் சுதா இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ரொம்ப துளிர் விடுது. என்ன மாதிரி தான் எல்லோரும் தைரியமா இருக்கனும். அப்ப தான் நம்மள பார்த்து மத்தவங்களுக்கு பயம் வரும். நீயே பார்த்தல்ல... நான் திட்டின உடனே அவன் சிகரெட்டை கீழே போட்டுட்டு வண்டிய எடுத்துக்கிட்டு ஓடிட்டான். அது தான்டி சூர்யா..." "நீ சொல்றதும் சரிதான்டி... நீ வரும் போது மட்டும் தான் அந்த 'ராம் நகர்' பசங்க எங்ககிட்ட வாலாட்ட மாட்டேங்கிரானுங்க...." தோழியின் பேச்சில் உச்சி குளிர்ந்த சூர்யா மழையின் வேகம் குறைந்துவிட்டதால் வண்டியை கிளப்பினாள். சூர்யாவிற்கு பார்க்கும் வரங்கள் தட்டிக்கழிந்து கொண்டே இருந்ததில் சூர்யாவின் பெற்றோர் சோர்வடைந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் சூர்யாவை பெண் பார்த்துவிட்டு சென்ற ஒரு வரனை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டாரின் பதிலுக்காக சூர்யாவின் பெற்றோர் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். "என்னடி சிந்தாமணி... வீட்டுக்கு போன உடனே தகவல் சொல்லியனுப்புறேன்னு சொல்லிவிட்டு போன மாப்பிள்ளை வீட்டுலேருந்து ஒரு வாரம் ஆகியும் ஒரு தகவலையும் காணும்?" "நம்ப சூர்யாவ பிடிக்காதவங்களும் இருக்க முடியுமா!? என்னங்க நீங்க இப்படி குழப்பிக்குறீங்க? இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு நல்ல செய்தி நமக்கு வரும் பாருங்க. இல்லன்னா நாமலே ஒரு ஃபோன் போட்டு கேட்டுடலாம்." "அப்படி தான் செய்யணும் சிந்தா... இந்த இடம் நம்ப பொண்ணுக்கு எல்லா விதத்திலேயும் ரொம்ப பொருத்தமான இடம். இது அமைஞ்சா நம்ப பொண்ணு ரொம்ப குடுத்துவச்சவ தான்..." அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஃபோன் மணி அடித்தது. எடுத்து பேசிய கிருஷ்ணமூர்த்தியின் முகம் அதிர்ச்சியையும் பின் ஏமாற்றத்தையும் காட்டியது. "என்னங்க...? ஃபோன்ல யாரு?"

"கொஞ்சம் தண்ணீ கொண்டு வா சிந்தா" "இதோ வர்ரேங்க..." என்று சொல்லிவிட்டு விரைந்து சென்று குடிக்க நீர் கொண்டுவந்து கொடுத்தார் சிந்தாமணி. அதை வாங்கி பருகியவர் "நம்ப மகளை அவங்களுக்கு பிடிக்கலையாம் சிந்தா... நம்மை வேர இடம் பார்த்துக்க சொல்லிவிட்டாங்க..." என்று அழுது விடுபவர் போல் கூரினார். சிந்தாமணிக்கும் கணவனுடைய பதில் எதிர் பார்க்காதது தான். சிந்தாமணி அவருக்கு ஆறுதலாக பேசுவதற்கு பதில் தனது வருத்தத்தை சொல்லி கணவனின் மனவருத்தத்தை அதிகப் படுத்தினார். சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. "மயக்கமாக வருது சிந்தா... என்னை பிடி..." என்று சொல்லிக் கொண்டே கீழே சரிந்தார். அந்த நேரம் அவர்களுடைய ஒரே மகளான சூர்யா வெளியே சென்றுவிட்டாள். வெளி உலகம் தெரியாத சிந்தாமணி செய்வது அறியாது திகைத்து பின் கூக்குரலிட்டு அழுதார். "அய்யய்யோ... என்னங்க... உங்களுக்கு என்னங்க ஆச்சு...? எந்திரிங்க... கடவுளே... முருகா... காப்பாத்துப்பா..." என்று அழுதுகொண்டே வெளியே ஓடி பக்கத்து வீட்டு கதவை தட்டினார். "என்ன சூர்யா அம்மா..? என்ன ஆச்சு? ஏன் அழுவுறீங்க? சொல்லுங்க..." "அவருக்கு.... சூரியா அப்பாவுக்கு மயக்கம் வந்து விழுந்துட்டாரு குமாரம்மா... உங்க வீட்டுக்காரர் இருந்தா கூப்பிடுங்க.." "அய்யோயோ...! என்ன ஆச்சு...? ஏங்க... குமாரப்பா... இங்க வாங்க... குமார கூப்பிடுங்க... சூர்யாப்பாவுக்கு முடியலையாம்... வந்து பாருங்க..." என்று அவளுடைய கணவனையும் மகனையும் உதவிக்கு அழைத்து கிருஷ்ணமூர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினாள் குமாரம்மா என்று அழைக்கப்படும் பக்கத்து வீட்டு பெண்மணி. விஷயம் தெரிந்து அடித்து பிடித்துக் கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு வரும் போது சிந்தாமணி ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். "என்னம்மா... என்ன ஆச்சு...?" "சூர்யா... உங்க அப்பாவுக்கு என்னமோ ஆயிட்டு கண்ணு... " "என்ன ஆச்சு...?" "தெரியலையே..." "டாக்டர்கிட்ட கேட்க வேண்டியது தானே... இல்லன்னா எனக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்ல வேண்டியது தானே... நான் வீட்டுக்கு போயிட்டு விஷயம் தெரிஞ்சு ஓடி வர்றேன்... என்னை மாதிரி ஒரு தைரியமான பொண்ணுக்கு நீ எப்படி தான் அம்மாவா வந்தியோ தெரியல போ..." "உன்னோட ஃபோன் நம்பர் எடுத்துகிட்டு வரல கண்ணு..." "ஒரு பத்து நம்பர் உனக்கு மனப்பாடமா வச்சுக்க தெரியாது... உன்ன என்னதான் பண்றதோ... சரி அப்பாவுக்கு என்ன ஆச்சு...? நான் வெளியே கிளம்பும் போது நல்லா தானே இருந்தார்." என்று தந்தைக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினாள் மகள். சிந்தாமணி கணவனுக்கு நடந்ததை மகளிடம் சொன்னாள். தாய் சொன்னவற்றை கேட்ட சூர்யா தனக்கு தானே போட்டுக் கொண்ட தைரியமான பெண் என்ற வேஷத்தை கவனமாக பாதுகாத்துக் கொண்டாலும், உள்ளுக்குள் தன்னுடைய தந்தை உடல்நிலை பதிக்கப்பட்டுவிட்டார் என்பதும், அடுத்து அவருக்கு என்ன ஆகுமோ என்ற பயமும் அவளை நடுங்கச் செய்தது. சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு "சரி... சரி... நீ கொஞ்ச நேரம் அழாம இப்படி உக்காந்திரு. நான் போயி டாக்டரை பார்த்துட்டு வர்றேன்..." என்று தாயிடம் சொல்லிவிட்டு மருத்துவரை தேடிச் சென்றாள். "சரி கண்ணு... சீக்கிரம் வந்துடு..." மருத்துவரை தேடி சென்ற சூர்யா சிறிது நேரத்தில் மலர்ந்த முகத்துடன் கையில் ஒரு கோப்பை பழசாருடன் வந்தாள். "இத குடிம்மா... அப்பாவுக்கு ஒன்னும் இல்ல... கொஞ்சம் இரத்த கொதிப்பு அதிகமாயிடிச்சு. காலையில மாத்திரை சாப்பிட்டார?" "தெரியல கண்ணு..." "ஆமாடி... உனக்கு என்ன தான் தெரியும்... ஏதாவது ஒண்ணுன்னா நல்லா ஊளை விடத்தான் தெரியும்." "ஹி...ஹி.. அதுதான் அப்பாவுக்கு ஒன்னும் இல்லையே... அப்புறம் எதுக்கு கண்ணு கோச்சுக்குற...? வா அப்பாவ போயி பார்க்கலாம்..." "என்...னடா...? என்னடா நீ...? நீயெல்லாம் ஒரு போலீஸ்காரனாடா...? 'ஆ..ஊ...'ன்னா மயங்கி விழுந்துடற...! உனக்கெல்லாம் யார் தான் போலீஸ் வேலை கொடுத்ததோ தெரியல..." என்று தந்தையிடம் தன் தம்பியிடம் பேசுவது போல் பேசினாள். "அது இல்ல கண்ணு... அந்த மாப்பிள்ளை வீட்டுல ஃபோன்..." "எல்லாம் எனக்கு தெரியும்... விட்டு தள்ளு கிரிஷ்... எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல... நீ தான் கட்டாயப்படுத்தி இந்த ஏற்பாட்டை செஞ்ச... இப்போ என்ன ஆச்சு..? இனியாவது நல்ல பிள்ளையா நான் சொல்றத கேட்டு நட..." "சரி கண்ணு... இனிமே நீ சொல்றத மட்டும் கேட்டு நடக்குறேன்... சரியா...? " "பேச்சு மாற மாட்டியே..." "மாறவே மாட்டேன்..." "நிஜம்....?" "சத்யம்..." "சிந்தா... நீதான் சாட்சி... நல்லா கேட்டுக்கோ... உன் கணவர் இனி நான் சொல்றபடி தான் நடப்பேன்னு உறுதி கொடுத்திருக்கார். நீயும் ஞாபகம் வச்சு அது படி நடந்து நல்ல மனைவி என்று நிருபிக்கணும் சரியா....?" என்று தாய்க்கு தாயாக மாறி அறிவுரை கூறினாள் சூர்யா. "சரி கண்ணு...." என்று மகளுக்கு உறுதி கொடுத்தாள் தாய். அவள் தன் பெற்றோர் இருவரையும் பெயர் சொல்லியும், 'வாடா...' 'போடி...' என்றும் அழைப்பதும் அவர்கள் வீட்டில் வழக்கம். அது அவள் செல்லமாக அழைப்பது தான். மற்றபடி பெற்றோரும் மகளும் ஒருவர் மீது மற்றவர் உயிரையே வைத்திருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஒரு வாரம் கழித்து சூர்யா தந்தையிடம் பேச்சை ஆரம்பித்தாள். "அப்பா... எனக்கு ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சிருக்கு...." "வேலையா...! என்ன கண்ணு நீ... வேலைக்கு போக உனக்கு என்ன தலையெழுத்து?" "தலையெழுத்...தா...! க்ரிஷ்... உனக்கு என்ன ஆச்சு...? வேலைக்கு போறத ஏதோ சபிக்கப்பட்ட விஷயம் என்கிற ரேஞ்சுக்கு 'பில்ட் அப்' பண்ற...?" "அதுக்கு இல்ல கண்ணு... நீ எதுக்கு வேலைக்கு போகணும்... வீட்டுல ஜாலியா இருக்க வேண்டியது தானே...?" "வேலைக்கு போறதுதான் எனக்கு ஜாலி க்ரிஷ்... நீ 'ஓகே'ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு போதும். உன்கிட்ட நான் வேற ஏதும் கேட்கல..." "ஹா...ஹா... நீ யாரு... சூர்யாவாச்சே... உன் பேச்சுக்கு மறு பேச்சு இருக்க முடியுமா...?" "அப்போ நான் வேலைல 'ஜாய்ன்' பண்ணிடவா...?" "சரி கண்ணு... உன் விருப்பம்..." "சரி... அப்போ நாளைக்கு மதுராவுக்கு ஒரு டிக்கெட் ட்ரைன்ல புக் பண்ணிடு..." "என்னது...?! மதுராவா...?" அவர் ஆச்சர்யமாக கேட்டார். "ஆமா க்ரிஷ்... " "மதுரான்னா... இந்த டெல்லிக்கு பக்கத்துல இருக்கே... அதுவா...!?" "கரெக்ட்... அது உத்திரப் பிரதேசத்துல இருக்கு. டெல்லியிலேருந்து மதுராவுக்கு 145 கிமீ தூரம். ஆனா எனக்கு வேலை கிடைத்திருப்பது மதுராவுக்கு பக்கத்துல இருக்க கோசிக்காலன்ல. அந்த ஊருக்கு ரயில் வசதி இல்ல. அதுனால மதுராவுல இறங்கி கோசிக்காலனுக்கு பஸ்லையோ இல்ல கார்லையோ போகப்போறேன்." "ஐயய்யோ... என்ன கண்ணு நீ... நம்ப சென்னைல இல்லாத வேலையா... அதெல்லாம் நீ எங்கேயும் போக வேண்டாம்..." என்று சிந்தாமணி படபடக்க "ஆமா... ஆமா... நீ இங்க தான் இருக்கனும்..." என்று கிருஷ்ணமூர்த்தி தன் முடிவை சொன்னார். "க்ரிஷ்...... கோசிகாலன்ல தான் கெமிகல் தொழில் துறைல இந்தியாவிலேயே சிறந்த நிறுவனம் இருக்கு. அங்க தான் எனக்கு வேலை கிடைத்திருக்கு. இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டாக வேண்டும்." "......................." பெற்றோர் இருவரும் மகளின் பேச்சை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்கள். "சிந்தா... நீ தானே அன்னைக்கு சாட்சியா இருந்த.. நீயே இப்போ மாத்தி பேசுற...? நா மதுரா போறதுல உறுதியா இருக்கேன். ஒழுங்கா டிக்கெட் எடுத்து குடுத்தா ட்ரைன்ல போவேன். இல்லன்னா கிடைக்கிற லாரில ஏறி போக வேண்டியது தான்." என்று சூர்யா தன் முடிவை சொன்னாள். இறுதியில் சூர்யாவின் முடிவுதான் அமலுக்கு வந்தது. அடுத்த நாள் சூர்யா ரயிலில் மதுரா நோக்கி பயணம் செய்தாள். அதிகாலை நான்கு மணிக்கு 'அந்தமான் எக்ஸ்பிரஸ்' மதுரா சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. உடன் வருவதாக சொன்ன தந்தையை பிடிவாதமாக மறுத்துவிட்டு, தனியாக முப்பத்தென்பது மணிநேரம் ரயிலில் பயணம் செய்து மதுரா வந்து சேர்ந்தாள் சூர்யா. ரயிலில் ஏறும்போது காதில் விழுந்த தமிழ் பேச்சுக்கள் காணாமல் போய், இறங்கும் போது இந்தி பேச்சுக்கள் காதை துளைத்தன. சுமாரான கூடத்தில் எங்கு திரும்பினாலும் புதிய முகங்கள் அவளை மிரளச் செய்தது. அந்த மிரட்சியையும் மீறி சூர்யாவின் கவனத்தில் பட்டது அந்த ரயில் நிலையத்தின் சுத்தம். எங்கு தேடியும் சூர்யாவால் அங்கு ஒரு சிறு குப்பையையும் காண முடியவில்லை. மாறாக துப்புரவு பணியாளர்கள் தூய்மையான அந்த ரயில் நிலையத்தை மீண்டும் மீண்டும் சுத்தப் படுத்திக் கொண்டிருந்ததை தான் பார்க்க முடிந்தது. 'நம்ம இந்தியாவுல இவ்வளவு சுத்தமான ரயில் நிலையமா...!' என்று ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள் இன்னொரு ஆச்சர்யம் அவளை தாக்கியது. "ஹாய்... சூர்யா..." பின்னாலிருந்து சூர்யாவின் முதுகை தொட்டாள் அவள் தோழி பிரபா. "ஹேய்... சரியான நேரத்துக்கு வந்துட்ட...! ஆமா யாரோட வந்த? எப்படி வந்த? " "ஏன்.... கால் டாக்ஸில தனியா தான். " "தனியாவா? லூசாடி நீ... இந்த நேரத்துல நீ தனியா வரலாமா?" "ஏன்... வரக் கூடாதா? நீயும் தான் சென்னையிலேருந்து தனியா வந்திருக்க." "நானும் நீயும் சமமா? எனக்கு பாதுகாப்பா என் பேக்ல ஒரு கிலோ மிளகாப் போடி வச்சிருக்கேன். நீ என்ன கொண்டுவந்த காமி..." "ஹா... ஹா... ஒரு கிலோ மிளகாப் பொடியா? அதெல்லாம் நம்ம சென்னைல தான் தேவை. மதுரால பாதுகாப்புக்கு அவசியமே இல்ல..." "ஏன்... இங்க திருடனுங்களே இல்லையா...?" அலட்சியமாக கேட்டாள் சூர்யா. "இல்ல..." அழுத்தமாக பதில் வந்தது பிரபாவிடமிருந்து. "என்னால நம்ப முடியல... அது சரி... நான் முதல்லையே உன்கிட்ட கேட்க நினைத்தேன். என்னடி இந்த ரயில் நிலையம் இவ்வளவு சுத்தமா இருக்கு. எனக்கு ஏதோ விமான நிலையத்துக்குள்ள இருக்க மாதிரி ஒரு உணர்வு தோணுது." "இதுக்கே அசந்துட்டா எப்படி..? வெளிய வந்து மதுராவ பார். அப்புறம் சென்னையையே மறந்துடுவ."

"பில்ட் அப் ரொம்ப அதிகமா கொடுக்குர... அப்படி என்ன தான் இந்த ஊர்ல இருக்குன்னு நானும் பார்க்க தானே போறேன்..." என்று சாதாரணமாக பதில் சொன்னால் சூர்யா. அந்த அலட்சியமெல்லாம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வரை தான். ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியதும் அவள் கண்ட காட்சி அவளை அசர வைத்தது. சிறு மேடு பள்ளம் கூட இல்லாத கருமையான வழுவழுப்பான தார் ரோடு, அதன் இரு புறமும் சீராக வெட்டப்பட்ட பசுமையான புல்வெளி, சாலையோரம் பெரிய பெரிய மரங்கள், ஆங்காங்கே சரியாக பராமரிக்கப்படும் சாலையோர பூங்காக்கள், என்று மதுரா மிக அழகாக இருந்தது. ஆங்காங்கே குப்பை தொட்டியும், அதற்குள்ளே(!) குப்பையும் காணப்பட்டன. பிச்சைகாரர்கள் இல்லை. தெருவில் மாடு , நாய் போன்ற விலங்குகள் இல்லை. சாலையில் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. ஆச்சர்யப்படும் விதமாக அனைவரும் போக்குவரத்து விதியை பின்பற்றினார்கள். சாலையோரம் நடப்பட்டிருந்த மரங்களில் மலர்ந்திருந்த மலர்களின் வாசனை, அதிகாலை ரம்யமான குளிர் காற்றுடன் கலந்து வந்து சூர்யாவின் நாசியை இதமாக வருடியது. "ம்... ஹா... என்ன வாசனை...!" சூர்யா ஏதோ சொர்க்க பூமியில் கால் பதித்திருப்பதை போல் உணர்ந்தாள். அந்த இதமான சூழ்நிலை அவளை பேசவிடாமல் வாயடைக்கச் செய்தது. அமைதியாக மதுராவின் அழகை ரசித்தப் படி பிரபாவுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள். சிறிது நேர பயணத்திற்கு பின் கடலையொத்த அகண்ட யமுனா நதி கண்ணில் பட்டது. கரை தளும்பிய நீர், யமுனா நதியின் அழகை நின்று ரசிக்க சொன்னது. "வாவ்...! ஏய்... காரை கொஞ்சம் நிறுத்த சொல்லுடி..." "பையா... காடியை கொஞ்சம் ஓரமா நிறுத்திக்கோங்க...." "இது தான் யாமுனை ஆறா பிரபா...?" "ஆமாடி... மதுரா யமுனை ஆற்றங்கரையில தானே இருக்கு... இந்த ஊருக்கு இதுவும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்..." "எவ்வளோ தண்ணீ...! எப்பவும் இப்படி தான் இருக்குமா?" "இல்லடி... மழை அதிகமா இருக்க வருஷம் இது மாதிரி வெள்ளம் இருக்கும். இல்லன்னா இந்த அளவு தண்ணி இருக்காது. இந்த வருஷம் நல்ல மழை... அதனால தான் இந்த அளவு தண்ணி இருக்கு." "ச்ச... 'ச்சான்சே' இல்ல... சூப்பரா இருக்குடி... இங்கேயே இருக்கலாம் போல தோணுது." "ஹலோ மேடம்... நம்ம போகவேண்டிய ஊர் கோசிக்காலன்... மறந்துடாதிங்க..." என்று பிரபா விளையாட்டாக சொன்னாள். லேசாக சிரித்துக் கொண்ட சூர்யா "ஓகே... வா கிளம்பலாம்..." என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள். கோசிக்காலன் வந்து சேரும் வரை சூர்யா சுற்றுப்புறத்தை கவனித்துக் கெண்டே இருந்தாள். மதுராவில் அவள் கண்ட சுற்றுப்புற சுத்தம், அழகு, பொது மக்களின் பொறுப்புணர்ச்சி அனைத்தும் எந்த ஒரு இடத்திலும் குறையவில்லை. எங்கும் பசுமை... எதிலும் தூய்மை... "எப்படி பிரபா இது...! மதுரா இந்த மாவட்டத்தோட தலைநகரம். அந்த ஊர் சுத்தமாவும் அழகாவும் இருந்தது ஓரளவு என்னால ஏத்துக்க முடிஞ்சுது. ஆனா கோசிக்காலன் தொழில் நகரம். ஏகப்பட்ட தொழிற்ச்சாலைகள் இருக்கும் ஒரு ஊர் இவ்வளவு சுத்தமாவும் அழகாவும் இருக்கே...! இந்த மாநிலம் முழுக்க இப்படி தான் இருக்குமா?" "இல்லடி... மதுரா மாவட்டம் மட்டும் தான் இப்படி இருக்கும். மற்ற மாவட்டமெல்லாம் மோசமா தான் இருக்கும்..." "ஏன்டி...?" புரியாமல் கேட்டாள் சூர்யா. "மதுரா மாவட்டம் முழுக்க பிரசாத்ஜி கட்டுப்பாட்டுல இருக்கு. இங்க கழிவுகளை முறையா வெளியேற்றாத தொழிற்ச்சாலைகள தொடர்ந்து நடத்த முடியாது. அது மட்டும் இல்ல சூர்யா... மதுரால பாலித்தின் கவர் பயன்பாட்டுல இல்ல." "பிரசாத்ஜி இந்த பகுதி MLA -வா இல்ல மந்திரியா...?" "ரெண்டும் இல்ல... இந்த பகுதி அரசியல்வாதிங்க பிரசாத்ஜியோட சப்போர்ட் இல்லாம ஜெயிக்க முடியாது. அவ்வளவு தான்." "யாருடி அந்த பிரசாத்ஜி....?" "நான் அவரை நேர்ல பார்த்தது இல்ல. ஆனா அவரோட ஆளுங்க சிறுத்தை கொடி கட்டின, கருப்பு குவாலிஸ் கார்ல மதுரா மாவட்டம் முழுக்க இருப்பாங்க. மக்களுக்கு நல்லது பண்ணுவாங்க. ஆனா தப்பு பண்றவங்களுக்கு ரொம்ப மோசமானவங்க... மக்களுக்கு அவங்க மேல மரியாதையும் இருக்கு அதைவிட பயமும் அதிகமா இருக்கு..." "பயமா...?" சூர்யா ஆர்வமாக கேட்டாள். "ஆமாடி... பயம் தான். ஒரு தடவ குடிச்சிட்டு டிராஃபிக் சிக்னல்ல இருந்த கமராவை ஒடச்ச ஒருத்தன, அதே சிக்னல்ல ரெண்டு நாள் முழுக்க கட்டி தொங்க விட்டுட்டாங்க." "அய்யய்யோ..." "ஆமா... சும்மா கைய வச்சிக்கிட்டு இருக்காம, அவன் அப்பன் வீட்டு சொத்துன்னு நெனச்சு, பொது சொத்துல கைவச்ச சும்மா இருப்பாங்களா? பத்தாயிரம் ரூபா கமராவுக்கு ஒரு லட்சம் அபராதம் கட்டிவிட்டு அவனை அவனோட அப்பா அழைச்சுகிட்டு போனாராம்." "ஓ..." சூர்யா ஆச்சர்யமாக கேட்டாள். சூர்யாவிற்கு மேலும் பிரசாத்ஜியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. "ம்.... அப்புறம்..." என்று தோழியை தூண்டினாள். "ஆமா... நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம்... விழுப்புரம்ன்னு கேட்டுகிட்டு இப்படி வாசல்லையே நின்னா நான் இன்னிக்கு ஆஃபீஸ் போன மாதிரி தான்... வாடி உள்ள போகலாம்..." என்று சொல்லி சூர்யாவின் இரண்டு பைகளையும் தன்னுடைய இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு மகளிர் விடுதிக்குள் நுழைந்தாள் பிரபா. அவளை தொடர்ந்தாள் சூர்யா. # # # "கபிலா... உனக்கு எப்படி தான்டா பொண்ணு வேணும். பார்க்குற பொண்ணெல்லாம் 'வேண்டாம்... வேண்டாம்...' என்று சொல்லி தட்டி கழிக்ச்சுகிட்டே இருந்தா என்ன செய்றது?" "அப்பா... எனக்கு சூர்யாவை விட அழகான, படிச்ச, வசதியான, நம்ம இனத்தை சேர்ந்த பொண்ணா பாருங்க..." "அப்படி தானேடா இந்த ஃபோட்டோவுல இருக்க பொண்ணு இருக்கு. இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்." "இந்த பொண்ணுக்கு குறை அதோட வேலை தான். எனக்கு வேலை பார்க்குற பொண்ணு தான் வேணும் ஆனால், என்னைவிட கம்மியா சம்பாதிக்கணும். இந்த பொண்ணு 'ஃசாப்ட் வேர்ல' வேலை பார்க்குது. என்னைவிட சம்பளம் அதிகம். இந்த பொண்ணு எனக்கு வேண்டாம்." "............." அவனுடைய தந்தை எதுவும் பேசாமல் அவனை முறைத்தார்.

"சூர்யா கெமிக்கல் இஞ்சினியரிங் முடிச்சிருக்கா.. அதுமாதிரி பொண்ணு இருந்தா பாருங்க... அப்போதான் எனக்கு சமான வேலையும் சம்பளமும் வாங்குற மனைவியோட நான் சந்தோசமா வாழ முடியும்." "அது மாதிரி நான் எங்க போயி தேடுறது? அந்த பொண்ணு சூர்யாவையே முடிச்சிருக்கலாம். அந்த பொன்னையும் தட்டி கழிச்சிட்டு இப்படி வந்து 'கண்டிஷன்' போட்டா நான் என்ன செய்றது?" என்று புலம்பினார் கபிலனின் தந்தை. "அந்த சூர்யாவுக்கு வாய் கொஞ்சம் அதிகம். அவளோட வாயை அடக்க நான் வேற வழி வச்சிருக்கேன்... அவளுக்கெல்லாம் என்னுடைய மனைவியாகும் தகுதி இல்லை... நீங்க வேற பெண்ணை பாருங்க...." கபிலன் தன் தேவையை தெளிவாக சொன்னான். அவன் தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான். அதே சமையம் சூர்யாவின் வாழ்க்கையை அழிப்பதிலும் உறுதியாக இருந்தான். 'உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடந்த மாதிரி தான்...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் கபிலனின் தந்தை.

No comments:

Post a Comment