Saturday, 4 April 2015

சுகன்யா... 95

"Recap of the story". 

"மிஸ் சுகன்யா... உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?"

"இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?"

"எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்." செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது. 


மூன்று மாத பயிற்சிக்காக சுகன்யா டெல்லிக்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. எப்போதும் தன்னிடம் சிடுசிடுத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் முகத்தையும், சென்னை அலுவலகத்தில் பார்த்த மனிதர்களையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிராமல், எதற்கும் உதவாத பைல்களை கட்டிக்கொண்டு மாரடிக்காமல், வந்த இடத்தில் புது முகங்களைப் பார்ப்பதில், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில், இறுகிப்போயிருந்த சுகன்யாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது.


காலை பத்து மணிக்கு பயிற்சி வகுப்புக்குள் நுழைந்தால், மூச்சுவிட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்துக்கு ஒருவர் மாறி ஒருவர் கொடுத்த லெக்சர்களை கேட்டு குறிப்பெடுப்பதில் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.

மாலை ஆறு மணியளவில் விடுதியறைக்கு திரும்பி, முகம் கழுவிக்கொண்டு, தினமும் முனீர்கா, ராமகிருஷ்ணபுரம், சரோஜினி நகர், ஐ.என்.ஏ. என ஜாலியாக புது இடங்களில் அனுராதாவுடன் சுத்துவது வித்தியாசமான அனுபவமாக அவளுக்கு இருந்தது.

ஜாலியாக சுற்றிவிட்டு வந்ததும், பல மாநிலங்களிலிருந்து அவளைப்போல பயிற்சிக்கு வந்திருப்பவர்களுடன், ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல், கேலிச்சிரிப்புடன், கிண்டல் பேச்சுடன், அரட்டையடித்துக்கொண்டு, விடுதியில் பரிமாறப்படும் சூடான, ரொட்டி, தால், சாவல் என இரவு உணவை, உண்டுவிட்டு, ஹாயாக படுக்கையில் படுத்து உருள்வதும் அவளுக்கு வெகு சுகமாக இருந்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் செய்யும் வேலையும், பாத்திரங்களை துலக்கி கழுவும் வேலையும் சுத்தமாக இல்லை என்று நினைக்கும் போதே அவள் மனம் உற்சாகத்தில் சிறகடித்து பறந்தது.

டெல்லி ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் மிக மிக அருமையான நூலகம் இருந்தது. அவள் வெகு நாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள் அழகான கண்ணாடி அலமாரிகளில் நிரம்பி வழிந்தன. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இரவு உணவுக்குப்பின், தனக்கு கிடைக்கும் நேரத்தை சுகன்யா மீண்டும் படிப்பதில் செலவிட ஆரம்பித்தாள்.

சுகன்யா தனக்குப்பிடித்த புத்தகங்களை மனதில் ஆழ்ந்த விருப்பத்துடன், படிக்கவேண்டும் என்ற முனைப்பில் படிக்க ஆரம்பித்ததால், அவ்வப்போது, மனதுக்குள் வந்து போகும் செல்வாவின் நினைப்பை, வரவிடாமல் தடுத்து நிறுத்துவதில், அவள் சிறிது வெற்றியும் பெற்றாள்.

ஒரு மனுஷி எத்தனை நேரம்தான் படிப்பதில் தன் கவனத்தை செலுத்தமுடியும்? இரவில் படுத்துதானே ஆகவேண்டும். சற்று நேரம் விழிகளை மூடித்தானே ஆகவேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன், தினமும் தவறாமல், தன் மனதில் வரும் செல்வாவின் நினைப்பையும், அவனுடன் உல்லாசமாக திரிந்த காலத்தின் இன்பமான நினைவுகளையும் மட்டும், வராமல் தடுப்பதில் சுகன்யாவால் வெற்றிபெறமுடியாமல் போனது. இந்த ஒரு தோல்வியால் அவள் தவித்தாள். திணறினாள்.

சென்னையிலிருந்து கிளம்பும்போதே செல்வாவை மீண்டும் நினைக்கக்கூடாது, அவனை முற்றிலுமாக மறந்துவிட்டு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் நுழைய வேண்டும் என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள். ஆனால் அதை செயலில் காட்டமுடியாமல், இரவு நேரங்களில், படுக்கையில் ஓசையில்லாமல் அழ ஆரம்பித்தாள்.

என் காதலனோட நான் கழிச்ச இனிமையான நேரங்களைத்தான் என்னால மறக்கமுடியலே. ஒருவிதத்துல அது சரிதான். சந்தோஷம். சந்தோஷம். சந்தோஷம். மனுஷ மனம் எப்பவும் சந்தோஷமா இருக்க விரும்புகிறது. மனசோட இயல்பே அதுதானே.

சந்தோஷம் எங்கே எங்கேன்னு மனசு எப்பவும் அதை மட்டும்தானே தேடிக்கிட்டே இருக்கு. மனுஷன் அனுபவிக்கற எந்த சுகமும் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் துக்கங்கள் மட்டும் வெகு நாட்களுக்கு அவன் மனதுக்குள் தங்களின் கசப்பை விட்டுவைக்கின்றன. மனிதன் எப்போதும் துக்கத்தை விரும்பறதேயில்லை. இதுவும் மனிதனின் மன இயல்பு.

திராட்சை ருசிக்கிறது. அதன் இனிப்பை மனசு விரும்பி சுவைக்கிறது. பாகற்காய் கசக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அது நல்லதென்றாலும் கசப்பை மனிதன் விரும்புவதில்லை. சுகன்யாவின் மனம் இரவில், ஓய்வில்லாமல், கரையை நோக்கி அலையும் கடல் அலைகளைப் போல், இது போன்ற எண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தது.

எங்களுடைய காதல் முறிஞ்சு சிதறுண்டு போனதுக்கு அப்புறமும் செல்வாவை என்னால் ஏன் சட்டென மறக்கமுடியவில்லை? அவனை நான் கொஞ்சமாவா காதலிச்சேன்..? மனசாரக் காதலிச்சேனே? பாவி... எல்லாத்தையும் மறந்துட்டு என் மனசை சுக்கு நூறா உடைச்சி எறிஞ்சிட்டானே? சுகன்யா தன்னையே வெறுத்துக்கொண்டாள்.

காதலிச்சுட்டு பிரியறது இருக்கே அது பெரிய கொடுமை. மனசுக்கு அது பெரிய வலி. வலியை வார்த்தைகளால சொல்லி புரிய வெக்க முடியாது. வலி என்றால் என்ன என்பதை ஒருவன் சுயமாக அனுபவித்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

சுகன்யா இரவு நேரங்களில் செல்வாவின் நினைவில், காதலின் நினைவில், இப்படியெல்லாம் யோசனை செய்துகொண்டு தவித்துப்போனாள். உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள். இரவு வருவதே அவளுக்கு பிடிக்கவில்லை. தூக்கம் வந்தாலும் அது நிம்மதியான தூக்கமாக இல்லை. திடீரென நள்ளிரவில் விழிப்பது அவளுக்கு வழக்கமாகிப்போனது.

சே… நினைவுகள்தான் மனுஷனுக்கு எதிரி. மனசார ஒருத்தனைக் காதலிச்சிட்டு காதலிச்சவனை விட்டு பிரிஞ்சி மனசுக்குள்ள வர்ற அவன் நினைப்பை வராதேன்னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை? மனதுக்குள் நொந்து போவாள். தனக்கு வந்த இந்த நிலைமை வேற எந்த பொண்ணுக்கும் வரக்கூடாதென சுகன்யா நினைக்கும்போதே, அவள் கண்கள் ஈரமாகி, மவுனமாக ஓசையில்லமால் அவள் அழத்தொடங்குவாள்.

சரியான தூக்கமில்லாமல், காலையில் தினமும் தலைவலியோடு படுக்கையைவிட்டு எழுவதும் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. எத்தனை நாளைக்கு அவனை மறக்கமுடியாம நான் அழணும்? இந்த கேள்விக்கு மட்டும் அவள் மனம், அவளுக்கு சரியான விடையைத் தரவில்லை.

சுகன்யா அன்று இரவும் செல்வாவின் நினைவால் அழ ஆரம்பித்தாள். மனம் வெகு வேகமாக டில்லியிலிருந்து சென்னையை நோக்கி ஓடியது. டில்லிக்கு வருவதற்கு முன் சென்னையில் நடந்ததை மனம் அசைபோட ஆரம்பித்தது. 

"மிஸ் சுகன்யா... நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலே." செல்வா அவள் முகத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

"சாரி... இப்ப எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு. நீங்க நினைச்ச நேரத்துக்கெல்லாம் என்னால எங்கேயும் வரமுடியாது."

"உண்மைதான். பத்து நிமிஷத்துல லஞ்ச் டயம் ஆரம்பமாயிடும். இப்ப நீங்க என்கூட வந்துட்டா, உங்க புது ஃப்ரெண்ட் சுனிலுக்கு சோறு ஊட்டற முக்கியமான வேலையை யார் செய்வாங்க?" செல்வா தன் நாக்கை வாய்க்குள் சுழற்றிக்கொண்டான். கண்களில் அளவில்லாத எகத்தாளமிருந்தது.

செல்வா, சுகன்யாவை தன் வார்த்தைகளால் குதறியதும், சுகன்யாவுக்கு காலிலிருந்து தலைவரை பற்றி எரிந்தது. அவனுக்கு சூடாக பதில் கொடுக்க எத்தனித்தவள், சட்டெனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"செல்வா... உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? உங்க மனசு என்ன கல்லாயிடுச்சா?"

"மேடம்... என் மனசு கல்லா, இரும்பா, இந்த ஆராய்ச்சியை நீங்க ஓய்வா இருக்கும் போது வெச்சுக்குங்க; உங்க ஆசை அத்தானோட போன் வேற இப்ப லஞ்ச் அவர்ஸ்ல வரும். அதை நீங்க முக்கியமா அட்டண்ட் பண்ணணும் இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் கூப்பிட்டா நீங்க என் கூட வருவீங்களா? சே.. சே... நீங்க உங்க டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இங்கே நிக்காதீங்க. கிளம்புங்க; கிளம்புங்க." செல்வா அவளை கிண்டலும், நக்கலுமாக பார்த்து சிரித்தான்.

"ஓ.கே.. ஓ.கே.. செல்வா நான் ரெடி... யெஸ் அயாம் ரெடி.. எங்க போகணும் சொல்லுங்க?" வெடித்துவிடும் போலிருந்த தன் நெற்றியை ஒருமுறை இறுக நீவிக்கொண்டாள் சுகன்யா.

*****

சுகன்யாவும், செல்வாவும், கடற்கரையில் தாங்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

சுகன்யா, செல்வாவின் முகத்தைப் பார்க்காமல் சற்றுத் தொலைவில், கவலையே இல்லாமல் கடற்கரை மணலில், வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைகளினருகில், ஜோடியாக தங்களை மறந்து, அந்த உலகத்தையே மறந்து, ஒரு நடுத்தர வயது ஜோடி, ஒருவர் முகத்தை ஒருவர், தங்கள் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருந்தனர். செல்வாவும் அவர்களையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்."செல்வா.. அந்த குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்லே?" அந்த இக்கட்டான நேரத்திலும், தன் மனதில் இருந்த எரிச்சலிலும், கோபத்தையும், மறந்தவளாக, சுகன்யா கள்ளமற்ற அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை, மகிழ்ச்சியை ரசித்தாள். தன் மனதில் எழுந்த உணர்வை தன் மீது கோபமாக இருக்கும் தன் காதலன் செல்வாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினாள்.

"ப்ச்ச்ச்..." செல்வா சூள் கொட்டினான். தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“செல்வா... சரிப்பா... நான் சொல்றது, செய்யறது எதுவுமே உனக்கு பிடிக்கலே; ஓ.கே. முக்கியமா ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க; நானும் வந்ததுலேருந்து பாக்கறேன்; கடலையே வெறிச்சுக்கிட்டு இருக்கீங்க; என்ன விஷயம்?"

சுகன்யா சிரிக்க முயன்றாள். தன் முயற்சியில் தோற்றாள். சுகன்யாவின் முகத்தில் வந்த அந்தப் புன்னகை, அவள் விரும்பாத நேரத்தில், அவள் விரும்பாத விருந்தாளி, அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல், அவள் வீட்டுக்குள் வந்தவுடன், வலுக்கட்டாயமாக அவள் முகத்தில் அணிந்து கொள்ளும் புன்னகையாக இருந்தது.

செல்வாவும் சங்கடத்துடன் சுகன்யாவின் எதிரில் சற்று நெளிந்தான். ஆஃபீசை விட்டு, கடற்கரைக்கு வந்தபின் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சிறிது குறைந்திருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

இந்த சங்கடமான தருணத்துக்கு காரணம் நான் இல்லை என்று செல்வா தனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அவன் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு குற்ற உணர்வு எழுந்து கொண்டிருந்தது. நான் பேசப் போற விஷயத்தை இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்? இவள் மனம் அதிகமாக புண்படாதவாறு நான் என்ன பேசவேண்டும், என் மனதில் இருப்பதை எப்படி சுருக்கமாக பேசவேண்டும், என அவன் தன் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் சொல்ல வந்ததை உடனடியாக அவளிடம் சொல்லி விடவும் அவனுக்குத் தைரியம் வரவில்லை.

"செல்வா... ப்ளீஸ்... எனக்கு ஆஃபீசுல நிறைய வேலை இருக்குங்க. நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரமா சொல்லுங்க."

"உங்களுக்கும், உங்க எடுபுடி சுனிலுக்கும் நடுவுல ஏதோ ‘மேட்டர்’ இருக்கறதா இந்த ஆஃபீஸ் பூரா ஒரு கிசுகிசு ஓடிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு இதைப்பத்தி தெரியுமா?" செல்வா தன் முகத்தை சுளித்துக்கொண்டான். 

"ஊர்ல இருக்கறவன் என்ன வேணா பேசுவான்... செல்வா... இதையெல்லாம் நீங்க நிஜம்ன்னு நம்பிக்கிட்டு என்னை சந்தேகப்பட்டு என்னை தப்பா நினைக்கறீங்களே; வாய்க்கு வந்ததைப் பேசி உங்க வார்த்தையாலேயே என்னைச் சித்திரவதை பண்றீங்களே; உங்களுக்கு கொஞ்சமாவது சுயபுத்தி இருக்கா?"

"சுகன்யா... எனக்கு புத்தி இருக்கவேதான் உடனடியா இதைப்பத்தி உன் கிட்ட தெளிவாப் பேசிடணுங்கற முடிவுக்கு வந்திருக்கேன்.."

"செல்வா... என்னைப் பத்தி எவன் என்னப் பேசறான்னு நான் கவலைப்படலே; என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க; இப்ப அதுதான் எனக்கு முக்கியம். நான் ஒழுக்கமானவள்னு எனக்குத் தெரியும். என் மனசாட்சிக்குத் தெரியும். என் குடும்பத்துக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும்ன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன். அந்த நம்பிக்கையை நீங்க மோசம் பண்ணீடாதீங்க."

"நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சொசைட்டியோட, நடுத்தரக்குடும்பத்து வேல்யூசை மதிக்கணும்ன்னு ஒரு பத்து நாள் முன்னாடி நீ எனக்கு லெக்சர் குடுத்தே; இப்ப இந்த சொசைட்டி உன்னோட நடத்தையைப்பத்தி, என்ன பேசுதுங்கறதைப் பத்தி, நீ கொஞ்சம்கூட கவலைப் படமாட்டேங்கறியே? இது உனக்கு கொஞ்சம் வினோதமா படலியா?

"செல்வா... நான் அன்னைக்கு எந்த கான்டெக்ஸ்ட்ல இப்படி பேசினேன்? கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள உடல் உறவு வேணாங்கறதைப்பத்தி பேசும்போது சொன்னேன். இப்ப நீ எந்த கான்டெக்ஸ்ட்ல சொசைடியோட வேல்யூசைப் பத்தி பேசறேங்கறதை புரிஞ்சிகிட்டுத்தான் பேசறியா?" சுகன்யா இப்போது ஒருமைக்கு வந்திருந்தாள்.

"சுகன்யா... திரும்பவும் சொல்றேன். நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலே. சம்பத்தோட நீ பேசறது, சுனிலோட கேண்டீன்ல சிரிச்சிக்கிட்டு நிக்கறது, தேவையில்லாம அவன் கூட ஊர் சுத்தறது, இதெல்லாம் எனக்கு பிடிக்கல்லே; நம்ம கல்யாணத்தை எதிர்ல வெச்சிக்கிட்டு, இப்படியெல்லாம் அடுத்தவனுங்களோட நீ கண்டபடி கூத்தடிக்கறது, நடுத்தர குடும்பத்துல பொறந்த எனக்கு, நடுத்தர குடும்பத்து வேல்யூசை மதிக்கற எனக்கு சுத்தமா பிடிக்கலே.”

“செல்வா...? நான் யாருகிட்டப் பேசணும்? நான் எங்க, யார்கூட போகணும், யார் கிட்ட சிரிக்கணும்? யார்கிட்ட மூஞ்சை சுளிக்கணும்? எந்த இடத்துல டீ குடிக்கணும்? எப்ப டீ குடிக்கணும்? அதையும் யார் கூட குடிக்கணும்? இதெல்லாத்தையும் இனிமே நீதான் முடிவு பண்ணப் போறியா?”

"நான் சொல்றதை நீ கொஞ்சம் கேட்டா, என் விருப்பங்களை, என் உணர்வுகளை, நீ மதிச்சா, அதுல உனக்கு எதாவது நஷ்டமா?"

"நீ சொல்றதை அப்படியே நான் கேட்டு நடந்தா எனக்கு என்ன லாபம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"உங்கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லையா... சுகன்யா?"

"எந்த உரிமையில இந்த அளவுக்கு நீ என்னை கட்டுப்படுத்தறேன்னு அதையும் சொல்லிடேன்... செல்வா?"

"என் கையால நீ தாலிகட்டிக்கறதாகவும், உன்னை நான் என் மனைவியா ஏத்துக்கறதாகவும், நாலு பேரு முன்னாடி, நாம ரெண்டுபேரும் மனசொத்து முடிவெடுத்ததை, இவ்வளவு சீக்கிரம் நீ மறந்துடுவேன்னு நான் நெனைக்கலை. கொடுத்த வாக்குறுதிக்கு நீ வெக்கற மரியாதையைப் பாக்கும்போது எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துப் போவுது."

"என் வாக்குறுதியை நான் எந்தவிதத்துல பங்கப்படுத்திட்டேன்?"

"சுகன்யா நீ வீணாப்பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே? நீ எந்த விதங்கள்லே உன் வாக்குறுதியை காத்துல பறக்கவிடறேங்கறது உனக்கே நல்லாத் தெரியும்."

"ஒஹோ... என் கிட்ட பேசறதே; உன் நேரத்தை வேஸ்ட் பண்றதா உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?"

"ஆமாம். என்னை உன் புருஷனா ஏத்துக்கறேன்னு உன் ஊர்ல சொல்லிட்டு, இங்கே வந்ததுலேருந்து, கண்டவனுங்களோட உன் நேரத்தை செலவு பண்றது சந்தேகமில்லாம வேஸ்டுதான்னு எனக்குத் தோணுது."

"சரி இன்னைக்கே, இப்பவே நான் அவங்க கிட்ட பேசறதை, பழகறதை நிறுத்திடறேன்."

"ரொம்ப சந்தோஷம். ஆனா இது ஒரு காலம் கடந்த முடிவு..."

"அப்படியா? எனி வே, நாம பேச ஆரம்பிச்சதை முழுசா பேசிடாலாமா?


“யெஸ்... பேசு...”

“நாளைக்கு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் காய்கறி வாங்க மார்கெட் போகணும். காய் விக்கறவன் எங்கிட்ட சிரிச்சுப் பேசுவான். பால் விக்கறவன் சிரிச்சுப் பேசலாம். என் புடவைக்கு இஸ்திரி போடறவன்; காஸ் சப்ளை பண்றவன்; ஆட்டோ ஓட்டறவன், இப்படி இவங்க எல்லாருமே இந்த ஊருல ஆம்பிளைங்கத்தான்."

"சுகன்யா... என் மனசை உன்னால புரிஞ்சுக்க முடியலேன்னாலும் பராவயில்லே. ஆனா... ப்ளீஸ் நீ ரொம்ப புத்திசாலித்தனமா பேசறேன்னு நினைச்சுக்கிட்டு என்னை தயவு செய்து வெறுப்பேத்தாதே."

“செல்வா... இன்னும் ஒரே ஒரு நிமிஷம் என்னை பேசவிடு...”

“ப்ச்ச்ச்.. பேசிடும்மா... உன் மனசுல இருக்கறதை எல்லாம் உன் ஆசை தீர இன்னைக்கு நீ பேசிடு...” செல்வா மூர்க்கமாக பேசினான். குதர்க்கமாக சிரித்தான்.

"நம்ம மேரேஜ்க்கு அப்புறம், என் தாய் மாமா ரகு நம்ம வீட்டுக்கு வந்து என் கிட்ட சிரிச்சி பேசலாம். உரிமையா என்னைத் தொட்டு பேசலாம். நம்ம வீட்டுக்கு வர்ற என் மாமாகிட்ட நான் பேசலாமா? கூடாதா?”

“சுகன்யா... திஸ் இச் நாட் கோயிங் டு ஹெல்ப் யூ இன் எனி வே...” செல்வா தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

“சீனு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட். நாளைக்கு உன்னோட தங்கையை கல்யாணம் பண்ணிக்கப் போறவன். உனக்கு மச்சான். எனக்கு நெருங்கின என் குடும்பத்து உறவினனாக மாறப்போகிறவன். இன்னைக்கு சம்பத்துக்கு, அதான் என் அத்தான், அவருக்கு எங்கிட்ட என்ன உரிமையோ, என்ன உறவோ, அதே உரிமையோட, உறவு தரும் பலத்தோட, சீனு எங்கிட்ட சாதாரணமா பேசலாம். ஏன் சமயத்துல சிரிச்சும் பேசலாம்.”

“ஒரு செகண்ட்... பொறு செல்வா... முகத்தை சுளிக்காதே... எப்படி நான் என் கலீக் சுனிலோட தோளை நட்பா தொட்டு பேசினேனோ அப்படி அவர் முதுகையும் தட்டி நான் பேசலாம். சிரிக்கலாம். ஏன்னா என் மனசுல எந்தவிதமான திருட்டு எண்ணங்களும் இல்லை. நான் அவர்கிட்ட பேசித்தானே ஆகணும்? நம்ம வீட்டு மாப்பிள்ளை சீனுகிட்ட நான் பேசலாமா? கூடாதா? இந்த மாதிரி சூழ்நிலைகள்லே நான் எப்படி ஃபிஹேவ் பண்ணணுங்கறதை, கிளியரா நடுத்தரக் குடும்பத்துல பொறந்த நீ இப்பவே எனக்கு கிளாரிபை பண்ணிட்டா ரொம்ப உதவியா இருக்கும்.”

"சுகன்யா நீ வரம்பை மீறி தேவையே இல்லாத விஷயங்களை யெல்லாம் பேசறே?"

"அப்படீன்னா, இனிமே என் வாழ்க்கையில என் வரம்பை நிர்ணயிக்கப் போறது நீ மட்டும்தானா? என் வரம்பு எது? எனக்கு எது எல்லைக்கோடு? இதையெல்லாம் யோசிக்கறதுக்கு, நிர்ணயிச்சுக்கறதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லையா?"

"ஆமாம். ஆமாம். நான் உன் புருஷனாகப்போறவன். உன் வரம்புகளை நிர்ணயிக்க என்னை விட தகுதியானவன் வேற யாரும் இங்கே இல்லே."

"இதை நான் மறுத்தால்?" சூடாக எழுந்தது சுகன்யாவின் குரல்.

"நம்ம உறவை முறிச்சிக்கவேண்டியதை தவிர வேறு எந்த வழியும் எனக்குத்தெரியலே." தீடிரென செல்வாவின் குரலில் ஒரு இனம் தெரியாத அமைதி வந்துவிட்டிருந்தது.

"செல்வா நீ பேசறது என்னான்னு புரிஞ்சுதான் பேசறியா?" ஆற்றாமையுடன் கேட்டாள் சுகன்யா.

"ஆமான்டீ சனியனே... எனக்கு வர வர உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்குடீ?" சலித்துக்கொண்டான் செல்வா. எரிச்சலுடன் தன் முகத்தையும் திருப்பிக்கொண்டான்."நான் உனக்கு சனியனாயிட்டேனாடா? என் மொகத்தைப்பாத்து சொல்லுடா நீ" சுகன்யா தன் அடித்தொண்டையில் கூவினாள்.

"ஆமாம். உன் ஆட்டத்தையும் பாட்டத்தையும் என்னாலத்தாங்க முடியலே. தினம் தினம் உன்கூட என் மனசுக்குப் பிடிக்காத ஒரு தொல்லையை இப்படி அனுபவிக்கறதைவிட, மொத்தமா உன்னைவிட்டு பிரிஞ்சிட்டாலே, அது எனக்கும், உனக்கும் ஒருவிதத்துல நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்." செல்வாவின் குரலில் ஒரு தீர்மானம் ஒலித்தது.

சுகன்யா தன் தலையை குனிந்து கொண்டிருந்தாள். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்க உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

"செல்வா... நீ உண்மையாத்தான் சொல்றியாடா? என்னை நீ வெறுக்கறீயா? சுகன்யா விசும்பினாள். விம்மினாள்.No comments:

Post a comment