Friday, 3 April 2015

சுகன்யா... 93

சம்பத்தோட சுகன்யா பேசறப்ப, அவ மொகத்துல ஒரு மலர்ச்சி, சந்தோஷம் வருது. இதை உன்னால சகிச்சிக்க முடியலே? நான் சொல்றது சரியா?"

"ம்ம்ம்.."

"சம்பத் கருப்புதான்; ஆனா அவன் மூஞ்சியில ஒரு கவர்ச்சியும், வசீகரமும் இருக்கு..."
"நீ என்ன சொல்றே? எனக்குப்புரியலே."
"சம்பத்து... உன்னைவிட செமை பர்சானாலிட்டின்னு சொல்றேன்; சூப்பரா பாடியை வெச்சிருக்கான்; நல்ல வேலையில இருக்கான்; உன்னைவிட அதிகம் சம்பாதிக்கறான்; இத்தல்லாம் பாக்கும்போது உனக்கு உன் மனசுக்குள்ள ஒரு பயம். ஒரு கலக்கம்."
"அந்த நாய்கிட்ட எனக்கென்ன மசுரு பயம். கலக்கம்?"
"சம்பத்தோட அப்பன் பெரிய போஸ்ட்லேருந்து ரிட்டயர் ஆன ஆளு. அவன் குடும்பத்துக்கு சுவாமி மலைல நல்ல செல்வாக்கு. ஏன்? உன் சுகன்யாவோட அப்பாவே அந்தாளுக்கிட்ட கையைகட்டிக்கிட்டு மரியாதையா பேசினதை நிச்சயதார்த்த பங்கஷன்லே உன் கண்ணால நீ பாக்கலையா?"


"உண்மைதான்."
"சம்பத்துக்கு அவன் அப்பன் சைட்ல ஏகப்பட்ட சொத்து இருக்கு; ஆத்தா சைடுல அதைவிட அதிகமா இருக்கு; வூட்டுக்கு ஒரே புள்ளை அவன்; எல்லாத்துலேயும் உன்னைவிட ஒரு படி அவன் உசரத்துல இருக்கான்; இதான் உன் மனசுல இருக்கற கலக்கம். கரெக்டா நயினா?"
"ம்ம்ம்..." முனகினான் செல்வா.
"அவன் உனக்கு வெச்ச ஆப்புக்கு உங்கிட்ட மன்னிப்பு கேட்டான். சுகன்யாகிட்டவும் மன்னிப்பு கேட்டு, தான் ஒரு ஜெண்டில்மேன்னு காமிச்சுட்டான். உன் லவ்வர் மனசுலே நட்புங்கற பேர்ல ஒரு பர்மெனண்ட் எடத்தைப் புடிச்சுட்டான்? அவன் இண்டேரக்டா உனக்கு இரண்டாவது தரமா ஒரு ஆப்பை திருப்பியும் வெச்சிட்டான்ங்கறதுதான் இப்ப உனக்குள்ள இருக்கற எரிச்சல்? ஆம் ஐ ரைட்?"
"ஓரளவுக்கு நீ சொல்றது சரிதான்.." செல்வா மீண்டும் முணுமுணுத்தான்.
"சுகன்யா ஒரு அழகான பொண்ணு; பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவவீட்டுக்கு சம்பந்தம் பண்ண போவத்தான் செய்வாங்க; சம்பத் குடும்பம் அவளுக்கு நெருங்கின சொந்தம். அவங்களும் பொண்ணு கேக்கப் போனாங்க; அவங்க ஒண்ணுக்குள்ள ஓண்ணு; ஒறவுகாரங்க இன்னைக்கு உன் கல்யாண விஷயத்துக்காக சண்டை போட்டுக்குவாங்க. நாளைக்கு கூடிப்பாங்க. சுகன்யாவே இந்த விஷயத்துல ஒண்ணும் பண்ணமுடியாதப்ப, இந்த விஷயத்துல நீ ஏண்டா காண்டாவறே?"
"சுகன்யாவும் 'ஹீ ஹீன்னு' என் மனசைப்புரிஞ்சுக்காம, என் எதிர்லேயே சம்பத்கிட்ட இளிச்சா எனக்கு எரிச்சல் வராதா?" செல்வா சட்டென தன் மனதிடம் எகிறினான்.
"டேய்... சம்பத் அவளுக்கு அத்தான்டா. அவளுக்கு உறவுடா. அவ அவன்கிட்ட பேசறதை நீ எப்படி தடுக்கமுடியும்? உனக்குப்பிடிக்கலேன்னா நீ அவன்கிட்ட பேசாம பொத்திகிட்டு கிட, அதைவிட்டுட்டு அவ உயிரை ஏண்டா எடுக்கறே?"
"புரியுது... நானும் அதைத்தான் சுகன்யாகிட்ட சொன்னேன். சம்பத்கிட்ட என்னைப்பத்தி பேசாதே; என் தங்கச்சியைப்பத்தி பேசாதே; என் குடும்பத்தைப்பத்தி பேசாதேன்னு சொன்னேன்; நான் சொல்றதை அவ கேட்டாதானே?"
"சுகன்யா, சம்பத்கிட்ட பேசி முடிச்சதும், நீ சொல்ல விரும்பறதை, கொஞ்சம் பொறுமையா, அவளுக்குப் புரியமாதிரி சொல்லியிருக்கலாம்லே?"
"சொல்லியிருக்கலாம்"
"அறிவுகெட்டத்தனமா இந்த பிரச்சனையில அவளை இரண்டு தரம் அழவெச்சிருக்கியே, கொஞ்சமாவது மண்டையில எதாவது இருக்காடா உனக்கு?"
"...."
"இப்ப என்னப்பண்றதா உத்தேசம்?'
"வேற என்னப்பண்றது? அவ டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ அவகிட்ட, சாரிடீ சுகு. ப்ளீஸ்... எங்கிட்ட பேசுடீச் செல்லம். ஐ லவ் யூ வெரிமச்ன்னு சொல்லுவேன்."
ஏன் இப்ப சுகன்யாவுக்கு போன் பண்ணி 'சாரி' சொன்னா நீ கொறைஞ்சு போயிடுவியா? இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவ டெல்லிக்கு போறவரைக்கும் அழுதுகிட்டு இருக்கணுமா? நீங்கள்ல்லாம் உருப்படமாட்டீங்கடா; தலைக்கு மேல ஈகோடா உங்களுக்கெல்லாம்.
சுகன்யா லட்டு மாதிரி இருக்கா; உன்னை மாதிரி சம்பாதிக்கறா; ஒரே பொண்ணு; கை நிறைய சொத்தோட உன் வீட்டுக்கு வர்றாளே; அந்த அதுப்புதாண்டா உங்களுக்கு - மனம் அவனை புரட்டி புரட்டி, அடித்து துவைத்து, அலசி அலசி, உதறி கொடியில் போட்டு கிளிப்பையும் மாட்டியது.
இப்ப மணி பன்னண்டு ஆச்சு; என் சுகன்யா தூங்கிட்டு இருப்பா. அவளை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலே. காலையில ஆஃபீசுல மொதல் வேலையா அவ கிட்ட மன்னிப்பு கேட்டுடறேன். மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்த செல்வா தன்னையும் அறியாமல் தன் கண்களை துடைத்துக்கொண்டான். 

சராசரி மனிதர்கள், தாங்கள் தனிமையில் இருக்கும் சமயங்களில், தங்கள் மனதோடு பட்சபாதமில்லாமல் வாதம் செய்து, தங்களை விமர்சனம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க உள்ளத்தில் உறுதி கொள்ளுகிறார்கள். நடந்த தவற்றை சரி செய்ய முடியுமானால் அதற்கான வழியையும் நிதானமாக தேடுகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை, இரவுகளில், இருட்டின் மடியில், தாங்கள் எடுக்கும் நியாயமான முடிவுகளைகூட, பகலில், வெளிச்சத்தில் சிலரால் சட்டென அமுலுக்கு கொண்டுவர முடிவதில்லை. செல்வாவும் இதற்கு விதிவிலக்கானவன் இல்லை. மறுநாள் அலுவலகத்தில், முதல் வேலையாக சுகன்யாவை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முதல்நாள் இரவு தான் எடுத்த முடிவை உடனடியாக செயல்படுத்த தயங்கினான் அவன். அவன் தயங்கினானா? அவன் தன் செயலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறானா? அது அவனுக்குமட்டும்தான் தெரியும்.

ஆண் மகனான செல்வாவிடம் வரட்டு கவுரவம் அதிகமாக இருந்ததென்றால், சுகன்யாவை, சிறிது காலமாக, பிடிவாதம் என்னும் கொடிய நோய் பிடித்தாட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவருமே நேருக்கு நேர் ஒருவரையொருவர் பார்த்துவிடக்கூடாது என்ற விஷயத்தில், மிகவும் கவனமாக இருந்தார்கள்.

எனக்கு பிடிக்காததை செய்தது நீதானே என செல்வாவும், தப்பாக பேசியது நீதானே? நானில்லையே? என சுகன்யாவும், இருவருமே ஒருவர் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டு தேவையே இல்லாமல், தங்கள் மனதை உளைச்சலில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

சுகன்யா அலுவலகத்தில் எப்போதும் மாடிப்படிக்கட்டுகள் வழியாகத்தான் தன் ரூமுக்குப்போவாள். வருவாள். செல்வா மாடிப்படிக்கட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்த்தான்.

சுகன்யா, செல்வாவின் ஐடி டிவிஷன் இருக்கும் ஐந்தாவது தளத்தின் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. ஐ.டி டிவிஷனில் டிஸ்கஷன் என்றால், சுனிலை விரட்டிக்கொண்டிருந்தாள். காலையில், மாலையில் காண்டீனுக்கு போவதையும் அடியோடு தவிர்த்துவிட்டாள்.

சுனில் மட்டும், எப்போதும் போல், தன்னுடைய இயல்பின்படி, எதுவுமே நடக்காதது போல், சுகன்யாவிடம் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவள் அவன் சொல்லுவதைக் முகத்தில் புன்னகையுடன் கேட்டுக்கொண்டாளே தவிர, தான் பேசுவதை முடிந்தவரை குறைத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று வெள்ளிகிழமை. வாரத்தின் கடைசி வேலை நாள். சுகன்யா கணிணியில் மும்முரமாக எதையோ டைப் செய்துகொண்டிருந்தாள். வழக்கம்போல் சுனில் ஏதோ ஒரு சினிமாப்பாட்டை வாய்க்குள் முனகிக்கொண்டே, தன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.

"ஹலோ... குட் மார்னிங் டு யூ ஆல்" கோபாலன் அறைக்குள் நுழைந்தார்.

"அயாம் சாரிம்மா சுகன்யா. நேத்து ஈவினிங் அக்கவுண்ட்ஸ்லேருந்து உன்னை உடனடியா வரசொல்லி ஒரு கால் வந்திச்சி. அப்ப நீ சீட்டுலே இல்லே. அதனால மிஸிஸ் சாவித்திரி கிட்டே சொன்னேன். "

"என்ன விஷயம் சார்? அவங்க எதுவும் என்கிட்ட சொல்லலையே." சுகன்யா மரியாதையாக எழுந்து நின்று வினவினாள்.

"அப்படியா? சரிம்ம்மா. சாவித்திரி கதையை விட்டுத் தள்ளு; உன் சர்வீஸ் புக்ல ஏதோ என்ட்ரி விட்டுப் போயிருக்காம். அவங்க கேட்டதை நான் டெலிபோன்ல கிளாரிபை பண்ணிட்டேன். அடுத்த வெள்ளிக்கிழமை நீ இங்கேருந்து ரிலீவ் ஆகறதுக்கு முன்னாடி இந்த குளறுபடியை சரி பண்ணிட சொல்லிட்டேன். இருந்தாலும் நீ ஒரு தரம், இன் பெர்சன், அந்த ஆஃபிசுக்கு போயிட்டு வந்துட்டீன்னா நல்லாயிருக்கும்."

"உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சார். இன்னைக்கு இன்வென்ட்ரீசை முடிச்சுடலாமேன்னு பாக்கறேன்." சுகன்யா சற்றே தயங்கியவாறு தன் மணிக்கட்டைப் பார்த்தாள். மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

"தியாகராஜனை புடிக்கறது ரொம்பக் கஷ்டம்மா. இன்னைக்கு அவன் ஆஃபிசுலத்தான் இருக்கான். நீ ஒரு கையெழுத்து போடணும். அதுக்கு கீழே அவன் தன் கையெழுத்தைக் கிறுக்கி சீல் அடிக்கணும்; சட்டுன்னு உன் பர்சனல் வேலையை முடிச்சுக்கோ."

"உன் செல்வாவை கூப்பிட்டுக்கோயேன். ரெண்டு பேருமா பைக்லே போனீங்கன்னா ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடலாம்." முகத்தில் புன்னகையுடன் பேசியவர் வந்த வேகத்தில் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர். 

சுகன்யா ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பித்தாள். 'திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்' ன்னு அவன் என்னைப்பாத்து காறிதுப்பிட்டு போய் நாலு நாளாச்சே? உண்மையிலேயே இன்னும் என்னை அவன் காதலிச்சுக்கிட்டு இருந்தா, அட்லீஸ்ட், சுகும்மா... நான் பேசினது தப்புடீன்னு ஒரு 'சாரி' யாவது சொல்லியிருப்பான்லே? ஏண்டா இவனை காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு எனக்கு வெறுத்து போயிடிச்சி.

எங்க காதலை சக்ஸஸ்புல்லா ஆக்கறதுல நான் மட்டும்தான் எப்பவும் ஒரு கமிட்மெண்ட்டோட இருக்கணுமா? எங்க லவ்வுல, எங்க கல்யாணத்துல இவனுக்கு எந்த ரோலும் இல்லையா? ஒவ்வொரு தரமும் நான்தான் நாய் மாதிரி, என் சுயமரியாதையை காத்துல பறக்கவிட்டுட்டு, என் வாலை குழைச்சுக்கிட்டு இவன் எதிர்ல போய் நிக்கணுமா? ஆம்பிளைங்க திமிரு இவன் கிட்ட நிறையவே இருக்கு; இவன் மேல எனக்கு வந்த ஆசையில, ஆரம்பத்துல என் கண்ணு அவிஞ்சிப்போயிடிச்சி. எனக்கு நல்லா வேணும். இப்ப எல்லாத்துக்குமா சேர்ந்து இவன்கிட்ட அனுபவிக்கறேன்.

அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸ் வரைக்கும் என்னை நீ அழைச்சிட்டுப்போறியான்னு இவன்கிட்ட எதுக்காக நான் கெஞ்சணும்? செல்வா இப்பல்லாம் எல்லாத்துக்கும் ரொம்பவே அல்டிக்கிறான்? சென்னையில இவன் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டா நான் வேலையில வந்து சேர்ந்தேன்? நூறு ரூபாயை விசிறி அடிச்சா எவனாவது ஒரு ஆட்டோக்காரன் கூப்பிட்ட இடத்துக்கு வந்துட்டுப்போறான்.

சுகன்யா... ஒரு செகண்ட் பொறுடீ. எக்குத்தப்பா எமோஷனாவதடீ. இது நல்லதுக்கு இல்லே. செல்வா பண்ணது தப்பாவே இருக்கட்டும்? அவனை நீ இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தானே இருக்கே? அதனாலத்தானே நாலு நாளா மனசுக்குள்ளவே நீ முகாரி ராகத்தைப் பாடிகிட்டு இருக்கே?

அவனை டெஸ்ட் பண்றதுக்கு இது உனக்கு கிடைச்சிருக்கற ஒரு சான்சை நீ தவறவிட்டுடாதே. நீயா... நானான்னு போட்டி போடாதடீ. உன் பிடிவாதத்தை கொறைச்சுக்கோ. காதல்லே யாரு விட்டுக் கொடுத்தாலும், சந்தோஷம் உங்க ரெண்டுபேருக்கும்தானேடீ?சுகன்யா நீ இன்னொரு விஷயத்தையும் நல்லாப்புரிஞ்சுக்கோ. 'உன் அத்தான் சம்பத் குடுத்த டார்ச்சரை தாங்கமுடியாம, எங்க அண்ணன் செல்வா அசந்து போய் உக்காந்துட்டான். அன்னைக்கு ராத்திரி சீனுதான் அவன் தலைமேல ரெண்டு அடி போட்டு, சுவாமிமலைக்கு இழுத்துக்கிட்டு வந்தான்னு' ஏற்கனவே மீனா உங்கிட்ட சொல்லியிருக்காளா இல்லையா?

இப்படி செல்வா ஆரம்பத்துலேருந்தே எதையாவது நினைச்சுக்கிட்டு தனக்குள்ள தடுமாறிகிட்டுத்தான் இருக்கான். இது அவன் கூடப்பிறந்த குணம்; ஆனாலும் அவன் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறாங்கறதும் உனக்கு நல்லாத்தெரியும். நீ இல்லாம அவனால இருக்கமுடியாது. உங்கப்பிரச்சனையை நீங்கதாண்டீ தீத்துக்கணும். ஒவ்வொரு தரமும் உன் மாமாவோ, சீனுவோ, மீனாவோ, உங்க நடுவுல வந்து நிக்கமாட்டாங்க?

அவனுக்கு இன்னொரு சான்ஸ் குடுடீ. அவன் கிட்ட போய் பேசுடீ; இதுதான் கடைசி தரம்ன்னு நெனைச்சிக்கோ. சுகன்யாவின் மனதுக்குள் எழுந்த வேறுபட்ட உணர்ச்சிகள் அவள் முகத்திலும் தங்கள் தாக்குதலை படமாக வரைந்து கொண்டிருந்தன.

சுனில், தன் ஓரக்கண்ணால் சுகன்யாவைப்பார்த்தான். சுகன்யாவின் முகத்தில் ஓடும் வலியை, அவள் முகத்தின் பாவனைகளை, சட் சட்டென அவள் முகத்தில் தோன்றும் மாறுதல்களை, எட்டு பெண்களிடம் காதலுக்கு அப்ளிகேஷன் போட்டவனால் நன்றாகப் படிக்க முடிந்தது. செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

நாலு நாளா செல்வாவையும் நான் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நிஜமாவே அவன் டெக்னிகல் வேலையில இன்டெலிஜண்ட் பெலோதான். ஆனா இவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையினால, ஆஃபீஸ்ல முட்டாளா பிஹேவ் பண்றான்.

டேட்டா அப்டேஷனைப்பத்தி தினமும் ஈவினிங்ல அவன் கூட டிஸ்கஸ் பண்ணும்போது, நான் ஒண்ணு சொன்னா, பைத்தியக்காரன் மாதிரி அவன் எதையாவது உளர்றான். அப்புறம் விஷயம் புரிஞ்சதும், நாலுதரம் எங்கிட்ட 'சாரி ப்ரதர்'ங்கறான்.

சுகன்யா கேண்டீனுக்கு போற வழக்கமான நேரத்துல, தினமும், தவறாம, தனியா மூலையில உக்காந்துகிட்டு, இவ வர்றாளான்னு திருட்டுப்பார்வை பாத்துகிட்டு தேவுடு காக்கறான்.

கம்மினாட்டி பய...! இவ்வளவு தூரம் சுகன்யாவை டீப்பா லவ் பண்ற முண்டம், எதுக்காக இந்தமாதிரி ஒரு நல்லப்பொண்ணுகிட்ட அறிவுகெட்டத்தனமா சண்டை போட்டுக்கிட்டு இவளை அழவிடணும்?

இவனும் தவிக்கறான்? இவளையும் தவிக்கவுடறான்? சுனிலின் மனதில் அவர்கள் இருவரின் பேரிலும் பரிதாபம் எழுந்தது. காதலிக்கறவன் அத்தனை பேரும் உருப்படப்போறது இல்லே; அவன் உதடுகளில் ஒரு மந்தகாச புன்னகை மலர்ந்தது. 

சுனில் மெல்ல தன் தொண்டையை செருமினான். சுகன்யா தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள். சுகன்யா தன் தலையை நிமிர்த்தி தன்னைப்பார்ப்பாள் என ஒரு பத்து வினாடிகள் அவன் பொறுமையாக இருந்தான். அவள் தன் தலையை உயர்த்தவில்லை.

"சுகன்யா..." தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாக சுனில் சுகன்யாவிடம் நேராகவே பேசத்தொடங்கினான்.

சுனில் அவளை பொதுவாக 'மேம்' என்றுதான் விளிப்பான். தங்கள் அறையை விட்டு கேண்டீனிலோ, அல்லது மற்ற இடங்களில் பேசும்போது, 'சுகன்யாஜீ' என அவள் பெயருடன் 'ஜீ" யைச்சேர்த்து ஒரு புன்னகையுடன் அழைப்பான். இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு? ரொம்ப அன்பா, உரிமையா என் பேரைச் சொல்லி கூப்பிடறானே?

"ம்ம்ம்... சொல்லுங்க சுனீல்." சுகன்யா ஒரு நொடி தன் புருவங்களை சுருக்கி விரித்தாள். "ஓ மை காட்" இன்னைக்கு சுகன்யாதான் எவ்வளவு அழகா இருக்கா? சுனில் தன் மனதுக்குள் வியந்து போனான்.

"சுகன்யா... உங்க பர்சனல் விஷயத்துல அனாவசியமா தலையிடறனேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க." சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சாவித்திரி ஆஃபீசுக்கு இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

"சுகன்யா... உங்களை என்னோட நல்ல ஃப்ரெண்டா நினைச்சிக்கிட்டு இருக்கேன். அந்த உரிமையிலேதான் இப்ப நான் பேசறேன். நாலு நாளைக்கு முன்னாடி நீங்க விளையாட்ட என் தோள்லே தட்டினீங்க. திரும்பவும் நீங்க தட்டப்போறீங்களோன்னு, சட்டுன்னு நானும் விளையாட்டாத்தான் உங்கக்கையை புடிச்சிட்டேன். அந்த நேரத்துல என் மனசுக்குள்ள வேற எந்த தவறான எண்ணமும் இல்லே. அதை செல்வா வேறவிதமா புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். அதனால உங்க நடுவுல ஏற்கனவே இருந்த பிரச்சனை இன்னும் அதிகமாயிடுச்சுன்னு எனக்கு தோணுது."

"ஆமாம் சுனில்..." சுகன்யா முணுமுணுத்தாள்.

"நம்ம வாழ்க்கையில நாம எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், சிலநேரங்கள்லே, எதிர்பாராமல், சில விரும்பதகாத நிகழ்ச்சிகளும் நடந்துடுது. இந்த மாதிரி விஷயங்கள் சுத்தமா நம்ம கட்டுப்பாட்டுலேயே இல்லைன்னு எனக்குத்தோணுது."

"உண்மைதான் சுனீல்.." அவன் கண்களை நேராக பார்த்து பேசினாள் சுகன்யா.

"செல்வா உங்களை ரொம்ப டீப்பா லவ் பண்றார். உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி. கூடிய சீக்கிரத்துல உங்க கல்யாணம் நடக்கபோவுதுன்னும் எனக்குத்தெரியும்."

"ப்ப்ச்ச்ச்... ஐ டோண்ட் நோ... சுனில். என்ன நடக்குமோ? எனக்கு மனசுக்குள்ள ஒரே பயமா இருக்கு."

"கவலைப்படாதீங்க சுகன்யா. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும். நான் ஒரு ஆண். ஒரு சராசரி ஆணோட மனசைப்பத்தி எனக்கும் தெரியும்லே?"

"சுனில்... நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க?"

"உங்க செல்வா... உங்கக்கிட்ட, தன்னோட உரிமையை, அக்கறையை, அன்பை அவர் மட்டும்தான் காட்டணும்ன்னு நினைக்கறார். இதை நீங்க தயவு செய்து புரிஞ்சிக்கணும்."

"நீங்க சொல்றது எனக்கு நல்லாப்புரியுது சுனில். ஆனா செல்வாகிட்ட ரொம்பவே அதிகமா இந்த பொஸஸிவ்னெஸ் இருக்கு. ஆனா, எதுவுமே அளவுக்கு அதிகமா போனா விஷமாயிடும் இல்லையா? இப்ப அதுதான் எங்க நடுவுல நடந்துகிட்டு இருக்கு." சுகன்யாவின் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

"உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா இதெல்லாம் சரியாகிடும் சுகன்யா. நான் என்ன சொல்றேன்னா, இந்த முறை, ப்ளீஸ்... எனக்காக நீங்க கொஞ்சம் விட்டுக்குடுங்க. சும்மா தயங்கிக்கிட்டே இருக்காம, செல்வாவுக்கு நீங்களே ஒரு தரம் போன் பண்ணி 'ஹலோ சொல்லுங்க. ஹவ் ஆர் யூன்னு கேளுங்க.' எனக்கு நம்பிக்கையிருக்கு, அவர் நிச்சயமா உங்களை அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அழைச்சிட்டுப்போவார்." நிதானமாக பேசிய சுனில், தன் தலைமுடியை கோதி பின்னால் தள்ளிக்கொண்டான்.

"தேங்க்யூ வெரிமச் சுனில். ஒரு உண்மையான ஃப்ரெண்டா நீங்க என்னை கய்ட் பண்ணியிருகீங்க. லெட் மி சின்சியர்லி டிரை யுவர் அட்வைஸ்." சுகன்யா எந்த தயக்கமும் இல்லாமல், செல்வாவின் இண்டர்காம் நம்பரை அழுத்த ஆரம்பித்தாள்.

"மேடம், செல்வா சார் இன்னும் ஆஃபிசுக்கு வரலீங்க. அவர் செல்லுல டிரை பண்ணுங்க. ஆமாம். நீங்க யார் பேசறீங்க?" செல்வாவின் அட்டெண்டண்ட் நல்லத்தம்பி பதில் கொடுத்தான்.

"நல்லத்தம்பி... நான் சுகன்யா பேசறேன்..." சுகன்யா போனை கட் பண்ணினாள். சாவித்ரி அறைக்குள் நுழைந்து தன் சீட்டில் உட்கார்ந்தாள்.

"சுகன்யா, உங்களை நான் இன்னைக்கு சிரிச்ச முகத்துல பாக்கணும்ன்னு நினைச்சேன். பட் அயாம் அன்லக்கி." சுனில் மென்மையாக சிரித்தான். 
சுகன்யா, சுனிலுக்கு பதிலேதும் சொல்லவில்லை. தன் மணிக்கட்டைத் திருப்பி, வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால் ஆகிக்கொண்டிருந்தது. சுகன்யா வெள்ளிக்கிழமையன்று பிறந்தவள்.

சுகன்யாவின் ஜாதகத்தில் ராகு தன்னுடைய எதிரியின் கட்டத்தில் உட்கார்ந்திருந்தான். சுகன்யாவுக்கு ராகுவின் புக்தி நடந்துகொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை, காலை பத்தரை மணியிலிருந்து ராகு தன் ஆதிக்கத்தை தொடங்குகிறான். கோச்சாரத்திலும் ராகு சுகன்யாவின், சந்திரனிலிருந்து எட்டாம் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.

சுகன்யாவுக்கு தான் கற்றுக்கொடுக்க வேண்டிய “பொறுமை” என்னும் பாடத்தை, நாவடக்கம் என்னும் அரிய உண்மையை, அவளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கியதை உணர்ந்து, ராகு தன் வேலையை ஆரம்பித்தான்.

சுகன்யாவின் முகத்தையே மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுனில். ஒரு அசாதாரணமான அமைதி அவள் முகத்தில் குடியேறியிருந்தது. சாவித்திரியின் முன்னால் சென்று அமர்ந்தாள் அவள்.

"குட்மார்னிங் மேம். கோபாலன் சார், என்னை அக்கவுண்ட்ஸ் ஆஃபிசுக்கு போயிட்டு வர சொன்னார்."

"ஆமாம்டீயம்மா. நேத்து போன் வந்திச்சி. ஒரு வாய் தண்ணியை குடிச்சுட்டு, நானே சொல்லணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ரெண்டு அஃபீஷியல் லெட்டர்ஸ் குடுக்கறேன். அதுகளையும் பர்சனலா நீ தியாகராஜன்கிட்டே குடுத்துடறீயா?" சாவித்திரி வாட்டர் பாட்டிலிலிருந்து நேரடியாக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தாள்.

"ஷ்யூர் மேடம்."

"அடுத்த வாரம் நான் ரிலீவ் ஆகறேன்." சுகன்யா தன் கன்னத்தை தடவிக்கொண்டாள்.

"ம்ம்ம்..." சாவித்திரி டவலால் தன் நெற்றி வியர்வையைத் நிதானமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

"அக்கவுண்ட்ஸ் பீப்பிளை மிஸ்டர் சுனிலுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணணும். ஸோ... இவரை என்கூட அழைச்சிட்டுப் போகலாம்ன்னு நினைக்கறேன். நீங்க பர்மிஷன் குடுக்கணும்." சுகன்யா மெல்லிய குரலில் பேசினாள்.

"பேஷா அழைச்சிண்டு போடீயம்மா. நீ எங்க வேணா போ. யார்கூட வேணா போ. எப்ப வேணா திரும்பி வா. இதுல நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? கோபாலன்தான் இந்த ஆஃபீசுக்கு அடுத்த சீப். அவனோட ஆசீர்வாதம் உனக்கு பூரணமா இருக்கும் போது, நீ என்ன வேணா பண்ணலாம்? இதுக்கெல்லாம் என் பர்மிஷன் உனக்கெதுக்கு?" அவள் குரலில் அளவுக்கு அதிகமான நக்கல் இருந்தது.

சாவித்திரிக்கு கூடியவிரைவில் மாற்றல் உத்திரவு வரப்போகிறது என்ற தகவலை அன்று காலைதான் கோபாலனின் பர்சனல் அஸிஸ்டெண்ட் அவளுக்கு சொல்லியிருந்தான். கோபாலன், தன்னை தன் டிவிஷனில் நிறுத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிந்ததிலிருந்து, அவளுக்கு அவர் மேல், காலையிலிருந்தே, அர்த்தமில்லாமல் ஒரு எரிச்சல் எழுந்து கொண்டிருந்தது. எதையும் யோசிக்காமல், நேரம் காலம் பார்க்காமல், தனக்கு கோபாலன் மீது இருந்த எரிச்சலை, கோபத்தை, வெறுப்பை, அவள் ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சுகன்யாவின் மீது திருப்பிவிட்டாள்.

அடுத்தவர்களின் உணர்வுகளை கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல், தன் எதிரில் இருப்பவர்களை, கிள்ளுக்கீரையாக எடுத்தெறிந்து பேசும் சாவித்திரியின் வழக்கத்தைப்பற்றி சுகன்யாவுக்கு நன்றாகத்தெரியும். சாவித்திரியின் கிறுக்குத்தனமான, கிண்டல் பேச்சுக்களுக்கு, சுகன்யா எப்போதுமே மதிப்பு கொடுத்ததில்லை. ஆனால் அன்று சுகன்யா இருந்த நிலையில், எரிச்சலும், கோபமும், அவள் அடிவயிற்றிலிருந்து பற்றிக்கொண்டு கிளம்பின. அவள் தன் பொறுமையை சட்டென இழந்தாள்.

நானும் ரொம்பப் பொறுமையா இருக்கேன். இந்த நாய் தன் மனசுக்குள்ள என்ன நினைச்சுக்கிட்டு இந்த மாதிரி என்னை தப்பு தப்பா பேசறா? இவளும் ரெண்டு பொண்ணைப் பெத்தவதானே? இவ பொண்ணுங்களை யாராவது இப்படி இழிவா பேசினா, இவ சும்மா இருப்பாளா? சுகன்யா மனதுக்குள் குமைந்தாள். ராகு தன் வேலை சுலபமாக முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டிருந்தான். 
எதைச்செய்யவேண்டாமோ, எதைச்செய்யக்கூடாதோ, அதை செய்ய உற்சாகப்படுத்துவதே ராகுவின் வேலை. கிரகங்கள் மனிதனின் இயல்பான குணங்களை நேரான, அல்லது தவறான வழியில் தூண்டி அவர்களை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளி சோதிக்கின்றன. புத்தியுள்ளவன் இந்த சோதனையில் வெற்றி பெறுகிறான். பொறுமையில்லாதவன், துன்பத்தை அனுபவிக்கிறான். கிரகங்கள் துன்பத்தையோ, இன்பத்தையோ தாங்களாக தருவதில்லை. மனிதனே, இன்பத்தையும், துன்பத்தையும் நோக்கி, தான் செய்யும் காரியங்களால், அதன் பலன்களை அடைவதற்கு ஓடுகிறான்.

கண்ணு... சுகன்யா... கொஞ்சநாளைக்கு, வெள்ளிக்கிழமையிலே, ராகு காலத்துலே, யார்கிட்டவும் தவறா எதையும் பேசிடாதே. யாராவது உன்னை தப்பாவே பேசினாலும், வேணும்னே சண்டைக்கு இழுத்தாலும், உன் பொறுமையை நீ இழந்துடாதே - தாத்தா சிவதாணு அவளிடம் சொல்லியிருந்தார். சுகன்யாவுக்கு அன்று வெள்ளிகிழமை என்பது மறந்து போயிருந்தது.

"நீ எங்க வேணா போ... யார்கூட வேணா போ..." இதுக்கு என்ன அர்த்தம்..? இவ எனக்கு ஆஃபிசுல சீனியர்... இவ என்னை விட வயசுல மூத்தவ... அதுக்காக நாக்குல நரம்பில்லாம எதை வேணா என் கிட்ட பேசிடலாமா? சுகன்யாவால், அன்று தனக்கு எழுந்த கடுமையான எரிச்சலை அடக்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் மேலும் பேசுவதற்கு ராகு அவளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

"வாட் யூ மீன் மேம்? வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் டு மீ?" சுகன்யா விருட்டென சீறினாள்.

சாவித்திரி சற்று அதிர்ந்துதான் போனாள். சுகன்யாவின் அந்த திடீர் சீறலை, கோபத்தை சாவித்திரி எள்ளளவும் எதிர்பார்க்கவேயில்லை. தான் பேசிய வார்த்தைகளில் இருந்த எகத்தாளம், கடுப்பு, எரிச்சல், எல்லாமே அவளுக்கு புரிந்திருந்தது. ஆனால் தன் காரியத்துக்கான பலனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்கு பரிதாபமான உண்மை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தன்னுடைய வழக்கப்படி, எல்லோரிடமும் கிண்டலாக பேசுவது போல், தன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத, அடக்க ஒடுக்கமான சுகன்யாவிடம், உண்மையான ஒரு அரசு ஊழியரிடம், அலுவலகத்துக்குள், அன்று அனாவசியமாக பேசிவிட்டதை நினைத்து ஒரு கணம் அவள் தன் மனதுக்குள் வருந்தினாள். அவள் முழுமையாக தன் தவறை உணர்ந்துகொள்வதற்குள், சுகன்யா தன் ஆயுதத்தை அவள் மேல் எய்துவிட்டாள். ஆயுதமும் சாவித்ரியை அவளுடைய பலவீனமான இடத்தில் தாக்கி காயப்படுத்திவிட்டது.

"ஏண்டீ சுகன்யா நீ நல்லப்பொண்ணாச்சே? நீ எதுக்குடீ இப்ப எரிச்சல் படறே? உடம்பு கிடம்பு சரியில்லையா உனக்கு? ஆத்துலேருந்து பில்டர் காஃபி கொண்டு வந்திருக்கேன். நீ வேணா ஒரு முழுங்கு குடிக்கறீயா?" தன் அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு, குரலில் சிறிது கரிசனத்தைப் பூசிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"எனக்கு உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்கு; உங்க பிளட் பிரஷரை நீங்க கொஞ்சம் கன்ட்ரோல்ல வெச்சிக்குங்க. இல்லேன்னா எல்லாருக்கும் கஷ்டமாப் போயிடும். வார்த்தைக்கு வார்த்தை என்னை உங்க பொண்ணுன்னு சொல்லிக்கறீங்களே?" சுகன்யாவுக்கு லேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

"ஆமாம்டீ... இப்பவும் சொல்றேன். உன்னை நான் என் பொண்ணாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்." சாவித்திரிக்கு மெல்ல பிரஷர் ஏறிக்கொண்டிருந்தது. தலை சுற்ற ஆரம்பித்தது."நீ எங்கே வேணா போ... யார் கூட வேணா போ, எப்ப வேணா திரும்பி வான்னு", வெள்ளிக்கிழமை அதுவுமா நாக்குல நரம்பில்லாம, வாய்க்கு வந்தபடி என்னைப் பாத்து பேசறீங்களே, இப்படி பேசறதுக்கு உங்களுக்கு வெக்கமாயில்லே? ஒரு அம்மா ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?"

சுகன்யாவின் முகம் கோபத்தில் அடியோடு சிவந்து போயிருந்தது. தன்னுடைய உடல் நடுங்குவதை அவள் உணர்ந்த போதிலும், சாவித்திரியை இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என அவள் முடிவெடுத்து விட்டாள். அவளா முடிவெடுத்தாள்? முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. அவள் செய்த ஒரே தவறு; அவள் தன் நிதானத்தை இழந்ததுதான்.

"சுகன்யா... நிறுத்துடி. அப்டீ நான் என்னடீ சொல்லிட்டேன் இப்ப? சும்மா நீ பாட்டுக்கு மேல மேல பேசிகிட்டே போறே? நான் பேசினது உனக்குத் தப்புன்னு பட்டா, அயாம் சாரீ" சாவித்திரி பதிலுக்கு பேசவேண்டுமென நினைத்து பேசினாளேத் தவிர அவள் மனசுக்குள் சிறிய பயம் முளைத்திருந்தது.

காரிடாரில் போய்க்கொண்டிருந்த கோபாலன் காதில், சுகன்யாவின் கோபமான குரல் விழுந்தது. சாவித்திரியின் நைச்சியமான பேச்சும் அவர் காதில் விழுந்தது. சுகன்யாவா இப்படி கூச்சல் போடறா? அவரால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. சட்டென அந்த அறைக்குள் நுழைந்த தன் மேலதிகாரியை சுகன்யா கவனிக்கவில்லை.

"மேடம்.. மைண்ட் யூர் லேங்வேஜ். இனிமே எங்கிட்ட நீங்க கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். என்னை போடீ.. வாடீன்னு பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லே? உங்களுக்கும் உங்க ஆஃபிசருக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்; அந்த எரிச்சலையெல்லாம் நீங்க என்கிட்ட காட்டவேண்டிய அவசியமில்லே." சுகன்யா உறுமிகொண்டே தான் உட்கார்ந்திருந்த சேரை வேகமாக பின்புறம் உதறிவிட்டு எழுந்தாள்.

"ப்ளீஸ்... சுகன்யா... கூல்டவுன்... கூல்டவுன்... யூ ப்ளீஸ் கேரி ஆன் வாட் ஐ டோல்ட் யூ... மிஸ்டர் சுனில் யூ ப்ளீஸ் கோ வித் சுகன்யா. மிஸஸ் சாவித்ரி யூ கம் டு மை ரூம்." கோபலான் மிடுக்காக திரும்பி நடந்தார். 

No comments:

Post a comment