Wednesday, 25 March 2015

சுகன்யா... 73

நடராஜனும், ராமசாமியும் தத்தம் மனைவிமாருடன், அவர்களுடைய தெருவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்தார்கள். எட்டுமணியளவில் பிள்ளையழைப்பு முடிந்து, சுவையான இரவு விருந்து உண்டவுடன், மல்லிகாவும், சியாமளாவும் சாவகாசமாக வெற்றிலையை மென்றுகொண்டே, ஆர அமர அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் உட்க்கார்ந்து, பேசிக்கொண்டிருந்தனர்.

மாலையிலிருந்தே மல்லிகா கல்யாண வீட்டில் நடந்து கொண்டிருந்த சடங்குகளை ஆர்வத்துடன் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது, சியாமளாவிடம் சில சடங்குகளின் அர்த்தங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.

"அடுத்த கல்யாண விருந்து நீதானேடீ எங்களுக்கு போடப்போறே.. அடுத்தது நம்ம தெருவுல செல்வா கல்யாணம்தான்.. இங்க இவா என்ன என்னப் செய்யறான்னு நல்லாப் பாத்துக்கோடீ மல்லிகா.. உங்காத்து பழக்கம் எங்களவா கடைபிடிக்கறதுலேருந்து, கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.. ஆனா பேசிக்கலா எல்லார் ஆத்துலேயும் சடங்குகள் ஒண்ணுதான்டீ..""முன்னேப் பின்னே தெரியாத ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கையில திருமணம்ங்கற சடங்கால ஒண்ணு சேர்றாங்க... ரெண்டு தேகங்கள் ஒண்ணு கூடுது... மனுஷா நாம, நம்ம மனசுல இருக்கற ஆசைகளையெல்லாம், ஒருத்தர் மத்தவாளோட தேகத்தின் துணையோட தீத்துக்க முயற்சி பண்ணிண்டுருக்கோம்... நாளடைவில ரெண்டு ஆத்மாக்களும் ஒண்ணை ஒண்ணு நன்னா புரிஞ்சுக்க ஆரம்பிக்கறது... நேசிக்க ஆரம்பிக்கறது.."

"இந்த அறுபது வயசுல, எங்களைப் பாக்கும் போது, எங்க ரெண்டு பேரோட தேகங்கள் ரெண்டாத்தான், பாக்கறவாளுக்கு வேறு வேறாகத்தான் தெரியும்... ஆனா எங்க ஆத்மாக்கள் ரெண்டும் ஒண்ணாயிடுச்சிடீ... அவருக்கு ஒரு தலைவலின்னா... எனக்கு நெஞ்சுல வலிக்குது..."

"நல்லாச் சொன்னீங்க... பொம்பளை ஜென்மம் எடுத்துட்டோம்... புருஷனை நம்ம கழுத்துல தொங்கற தாலியிலே இருபத்து நாலு மணி நேரம் சொமந்துகிட்டு இருக்கோம்."

"ஆமாம்டீ... அவா கட்டினத் தாலியைத்தான் கழுத்துல தொங்கவிட்டுண்டுருக்கோம்... நிஜத்திலே புருஷனை மார்லே சொமந்திண்டு இருக்கோம்; பின்னாடீ அவா கொடுக்கற புள்ளையை வயித்துல சொமக்கறோம்... சதா ஸாஸ்வதமா, குடும்பத்தோட நெனைப்பை மனசுல சொமக்கறோம்.. இப்படீ வாழ்கை பூரா பெண்டுகள் நாம சொமைதாங்கியாத்தான் இருந்துண்டு இருக்கோம்..."

"தொஸ்ஸோ....தொஸ்ஸோ..." கெழவியோட அனுபவம் பேசறது.. அவளிடம் பேசிக்கொண்டிருப்பதில் மனம் நிறைவது போலிருந்தது. சூள் கொட்டினாள் மல்லிகா.

"என் ஆம்படையான் என் கால் வெடிப்பை பாத்துட்டு அன்னைக்கு 'ஓ'ன்னு குழந்தையாட்டம் அழறார்... ஏன் அழறேள்ன்னேன்... எனக்காக கொல்லைக்கும் வாசலுக்கும் நூறு நடை நடக்கறாய்... நடக்கச்சே நோக்கு கால் வலிக்குமேங்கறார்... என் மேல அந்த அளவுக்கு பாசத்தை வெச்சுண்டு.. பாக்கறவங்களுக்கு அவர் பேசறது என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழற மாதிரி இருக்கும்... எனக்குத்தெரியும் அதெல்லாம் உதட்டுலேருந்து வர்றது... நெஞ்சுலேருந்து வரலேன்னு..."

"பாக்கறவங்களுக்கு அவர் வீட்டுல கால் தரிக்கமா இங்கேயும் அங்கேயுமா ஓடீண்டுருக்கறதா தோணும்.. ஊரெல்லம் அலைஞ்சு திரிஞ்சு கால் கிலோ முள்ளு கத்திரிக்காய் வாங்கிண்டு வருவார்... கேட்டா நோக்குப் பிடிக்கறதேன்னுதான் ஆவடி வரைக்கும் போய் வந்தேம்பார்... நாலு ரூவா காய்க்கு... நாப்பது ரூவா போக வர கூலி கொடுத்திருப்பார்.. இதாண்டீ ஆம்பளை..."

"வாய்லேதான் வார்த்தை பாவக்காயா வர்ரும்.. அவரோட மனசென்னமோ கல்கண்டு மாதிரி தேங்காய்தண்ணிடீ... நாப்பத்தஞ்சு வருஷமா அவர்கூட குப்பை கொட்டிண்டு இருக்கேனே? நான் சொல்றதெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்ட புருஷன் பொண்டாட்டியோட கதையாக்கும்... மனுஷ வாழ்க்கைங்கறது இவ்வளவுதான்டீம்மா."

"மாமீ... நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு... என்னவரும் இப்படித்தான் அப்பப்ப நாங்க தனியா இருக்கும் போது, மனசை தொறந்து காட்டுவார்.. அவர் பேசறதை கேக்கும் போது எனக்கும் மனசே 'கொல்லு'ன்னு போயிடும். அப்படியே அவரை கட்டிக்கிட்டு வாய்ல வார்த்தையே வராம அவர் நெஞ்சுல தலை வெச்சு கிடப்பேன்."

"மனசு நிறைஞ்சிருக்கும்போது பேசறதுல அர்த்தமில்லேடீ.. மல்லிகா.."

"உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்துல, ஏதோ ஒரு வழியா எங்க செல்வா கல்யாணம் செட்டில் ஆயிடுச்சி... சுகன்யாவைத்தான் நிச்சயதார்த்ததுலே நீங்க பாத்தீங்களே... பொறுப்பான பொண்ணுன்னுதான் தோணுது... அவ மேல செல்வா தன் உயிரை வெச்சிக்கிட்டு இருக்கான்."

"அந்த பொண்ணும் செல்வாவை தன் கண்ணுக்குள்ளே வெச்சிக்கிட்டிருக்கா... அந்தப் பொண்ணுக்காக, ஒரு நாள் செல்வா, இத்தனை வருஷமா பெத்து வளத்த என்னையே தூக்கி எறிஞ்சி பேசிட்டான்னா... பாத்துக்கோங்களேன் மாமீ... எப்படியோ அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தா சரி..."

"அப்படித்தான் இருக்கணும்.."

"வீட்டுக்கு சுகன்யா வந்துட்டாள்ன்னா... 'இந்தாடியம்மா புடிச்சுக்கோடீ'ன்னு என் கிட்ட இருக்கற சாவிக்கொத்தை அவ கையில குடுத்துட்டு, நானும் இந்த மாதிரி, 'ஹாயா' நாலு எடத்துக்கு உங்க கூட வர ஆரம்பிச்சுடுவேன்..."

"பாருங்கோ மாமீ... வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டிய காலமா இருக்கு.. வீட்டுல ஒரு வயசு பொண்ணை வெச்சிக்கிட்டு, அவளை தனியா விட்டுட்டு, மனசுல எவ்வளவுதான் ஆசையிருந்தாலும், வெளியில எங்கேயும் போகமுடியலே..."

"ம்ம்ம்...நீ சொல்றதும் உண்மைதான்... லோகம் கெட்டுக்கிடக்கறது..."

"உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன... குடும்பத்தை வீட்டுக்கு வர்ற மருமவ பாத்துக்கட்டும்... எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு மாமீ... ஊர் ஊரா போய், முருகனை தரிசனம் பண்ணணுங்கற ஆசை மனசுல முட்டிக்கிட்டு நிக்குது... ஆனாலும் ஒரே நாள்லே சட்டுன்னு ஓடம்பை இழுத்து மூடிக்கவா முடியும்.. அப்பப்ப... தாலிகட்டின ஆம்பளை முந்தானையை புடிச்சி இழுக்கும் போது... அவன் கிட்ட எனக்கு வேணாம்ன்னு எப்படி சொல்றது...? சித்த நேரம் இடுப்புத் துணியை வெலக்கிக்கிட்டு செவனேன்னு மல்லாந்து கிடக்கிறேன்.."

"மல்லிகா.. நோக்கு அப்படி என்னடீ வயசாயிடுத்து...? இப்படி அலுத்துக்கறயே... இன்னும் உனக்கு இடுப்பு நெக்குவிட்டுப் போகமாத்தான் இருக்கு... மாரெல்லாம் சரியாம செலை மாதிரிதான் இருக்கே... இன்னும் நீ கொறஞ்சது ஆறேழு வருஷம் உங்காத்துக்காரனை ராவு பகல்ன்னு இல்லாம தாக்குப்பிடிக்கலாம்டீ.. புருஷா எல்லாரும் இந்த விஷயத்துல ஒரே மாதிரிதான்.. ஒரு தவிட்டுக் கூடையை தூக்கற அளவுக்கு அவா ஒடம்புல வலு இருந்தாப் போதும்ன்னு என் மாமியார் சொல்லுவார்..." சொல்லிவிட்டு சிரித்தாள், சியாமளா.

"வர்ற பங்குனிக்கு நாப்பதெட்டு முடிஞ்சுடும்... மருமவ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்... ராவுலே தனியா கூடத்துலயோ, பின் கட்டு வெராண்டாவுலேயோ, மொடங்கிக்கறதுதான் மரியாதைன்னு எனக்குத் தோணுது.. ஆனா மாமீ.. நெஜம்மா மனசு தொறந்து சொல்றேன்... இன்னைக்கு காலையிலேருந்து பெரியவங்க உங்க கூட இருக்கேன்... உங்கக்கூட பேசிக்கிட்டு இருக்கறதுலே, என் மனசே நெறைஞ்சு போயிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." மல்லிகா தன் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தாள்.


"கவலையே படாதேடீ மல்லிகா... நம்ம மீனாட்சி கல்யாணமும் ஏறக்குறைய முடிஞ்ச மாதிரின்னுதான் நினைச்சுக்கோடீ... எல்லாத்தையும் நீ கும்பிடற அந்த திருத்தணி முருகன் நல்லபடியா நடத்தி முடிச்சிப்பிடுவான்... அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருடீ..."

"என்ன சொல்றீங்க மாமீ... நீங்க பேசறது எனக்கு சட்டுன்னு பிடிபடலையே.." மல்லிகா தன் கண்களை மலர்த்தி சியாமளாவைப் பார்த்தாள்.

"நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுடீ.. ஒரு வாரமாவே உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசனை பண்ணிண்டே
இருந்தேன். இப்ப என்னால சொல்லாம இருக்கவும் முடியலே.. ஆனா இப்போதைக்கு நான் சொல்ற இந்த விஷயத்தை உன் மனசுக்குள்ளே வெச்சுக்கோ..."

"ஆகட்டும் மாமீ.."

"உன் பொண்ணு மீனாவை தன் படிப்புல கவனமா இருக்கச்சொல்லு.. நல்லா, கருத்தா படிக்கற கொழந்தை அது... கடைசீ செமஸ்டர் இல்லியா இது அவளுக்கு.. "

"ஆமாம் மாமீ.."

"மீனாவோட படிப்பு முடிஞ்சுடட்டும்... நடக்கறதெல்லாம் நல்லதுக்குதான்னு இருந்தோம்னா, வாழ்க்கையில டென்ஷனே இல்லே..." சியாமளாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர்ந்தது.

"சீக்கிரம் சொல்லுங்க மாமீ... என்ன விஷயம்...? எனக்கு படபடன்னு வருது..."

"நம்ப மீனாட்சீ கல்யாணத்தைப் பத்தித்தான் சொல்றேன்..!" முகத்தில் புன்னகையுடன் பேசினாள் சியாமளா.

மாமீ என்ன சொல்றா... வெளங்கற மாதிரியும் பேசமாட்டேங்கறா... சுத்தி வளைச்சுப் பேசறாளே? மீனாட்சி கல்யாணமே இவ கையில இருக்கற மாதிரியில்லா பேசறா? மீனாவோட படிப்பு முடியட்டும்ங்கறா... சியாமளாவின் நீளமான பீடிகையை கண்ட மல்லிகாவின் மனதுக்குள் ஒரு சிறிய கலவரம் எழுந்தது.

மல்லிகாவின் முகத்தில் இலேசாக மிரட்சியின் இழையொன்று ஓட ஆரம்பித்தது. மல்லிகா தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அறைக்கு வெளியிலிருந்த காலி இடத்தில், ஒரு பாயை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசுவாமி, வந்த இடத்திலும் தன் வழக்கமான பாணியில், நடராஜனிடம் எதைப்பற்றியோ தீவிரமாக விவாதம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. நடராஜன் அவர் பேசுவதை, மவுனமாக முகத்தில் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

"என்ன சொல்றீங்க மாமீ.. சொல்றதை சட்டுன்னு நேராச் சொல்லுங்களேன்..?" மல்லிகா அவசரப்பட்டாள்.

"செல்வாவோட ஃப்ரெண்ட் சீனு இருக்கானோல்லியோ... அவன் மேல நம்ம மீனாட்ச்சிக்கு ஒரு லயிப்பு இருக்கும்ன்னு நேக்கு தோணறதுடீ..." சியாமளா பட்டும் படாமல் பேசினாள்.

"மாமீ.. மீனா இன்னும் ஒரு சின்னக்குழந்தை... உங்களுக்கு தெரியாததா? சீனு இன்னைக்கு நேத்தா எங்க வீட்டுக்கு வர்றான்... போறான்.. மீனாவும் அவனும் அப்பப்ப அவங்களுக்குள்ள சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை புடிச்சுக்குவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கை நீட்டி அடிச்சிப்பாங்க.. கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கி வெச்சுக்குவாங்க.. அப்புறம் அஞ்சே நிமிஷத்துல ஒண்ணா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இழைஞ்சுக்குவாங்க.. இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லே மாமி..."

"மல்லிகா நீ ஒரு அசடுடீ... மீனா நீ பெத்த பொண்ணு... நீ அவளை ஒரு தாயா பாக்கறே... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கே... என்ன இருந்தாலும் நான் வேத்து மனுஷி இல்லயா? நீ பாக்கற அதே விஷயங்களை என் கண்ணும், மனசும் வேற விதமா பாக்கலாமில்லியா?"

"மாமீ... நீங்க சொல்றதும் சரிதான்.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா பழகறது தப்புன்னு சொல்றீங்களா? இல்லே அவங்க பண்ணது எதுவும் உங்க கண்ணுல தப்பா பட்டிருக்கா?"

"மல்லிகா... மீனா கெவுன் போட்டுண்டு இருந்த காலத்துலேருந்து அவளை நான் பாத்துண்டு இருக்கேன்... நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்... அந்த ரெண்டு குழந்தைகளையும் உண்மையை இல்லாத எதையும் சொல்லி, எக்குத் தப்பா பேசினா என் நாக்கு அழுகிப் போயிடும்.." சியாமளா தன் கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

"நீங்க என்னதான் சொல்றீங்க...?"

"மல்லிகா, இன்னும் அவா ரெண்டு பேரும் நீ நெனைச்சுண்டு இருக்கற மாதிரி, சொப்பு வெச்சுண்டு, மணல் வீடு கட்டி விளையாடற கொழந்தைகளும் இல்லேங்கறதை நன்னாப் புரிஞ்சுக்கோ.. நல்லாப் படிச்சு, வயசும் மனசும் முதிர்ந்த வாலிபக் குழந்தைகள்... குழந்தைகள் ரெண்டும் பாக்கறதுக்கு கண்ணுக்கு நெறைஞ்சு இருக்காங்க... இந்த வயசோட, அவாளாடோ இளமையின் விளையாட்டு இருக்கே அதை சாதாரணமா நீ எடுத்துக்காதேடீ... அவா மனசையும், ஒரு தாயோட ஸ்தானத்துலேருந்து வெளியில நின்னு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடீ..." 

"நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க..." மல்லிகா, சியாமளாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

"பத்து பதினைஞ்சு நாள் மின்னாடீ, உங்காத்துல, அவா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா நிண்ணுண்டு, தங்களையே மறந்து, இந்த உலகத்தையே மறந்து, பேசிண்டு இருந்தாளாம்... அவங்க இருந்த நிலைமை பாக்கறவங்களுக்கு சாதாரண நட்பா, தோழமையா தெரியாதாம்..."

"நீங்க பாத்தீங்களா மாமி..."

"இல்லேடியம்மா... அவாளை எங்காத்துக்காரர்தான் பாத்ததா சொன்னார்."

"மாமா ஏன் அவங்களைப் பத்தி தப்பா சொல்லப் போறார்..?"

"உனக்குத்தான் மாமாவைப்பத்தி நன்னாத் தெரியுமே... அந்த காலத்து மனுஷன்... இன்னைய உலகத்தை புரிஞ்சுக்கற பக்குவமில்லாதவர்... தன் பிள்ளைகள் வீட்டை விட்டுட்டு போய், தாங்களா தங்க கல்யாணத்தை முடிச்சிக்கிட்டதிலேருந்து, இந்த காலத்து சின்னஞ்சிறுசுகள் யாரையாவது நெருக்கமாப் பாத்தா வெல வெலத்து போயிடறார்...:"

"வாஸ்தவம்தானே மாமீ..." மரியாதைக்கு நிதானமாக பேசிக்கொண்டிருந்தாளே தவிர, மல்லிகாவும் வெலவெலத்துத்தான் போயிருந்தாள்.

"அவா ரெண்டு பேரையும் நெருக்கமாப் பாத்ததும், அரக்கப் பரக்க போட்டது போட்டபடி, உங்காத்துக்கு ஓட்டமா ஓடி வந்திருக்கார்... உங்காத்து வாசல்லே எப்பவும் தூங்கிண்டிருக்கற நொண்டிக் கருப்பன், அன்னைக்குன்னு சனியன் முழிச்சிண்டு இருந்ததாம், அது இவரைப் பாத்து கொலைச்சதாம்.. அப்படியே யூ டர்ன் அடிச்சி எங்காத்துக்கே ஓரே ஓட்டமா ஓடிவந்திட்டார்..."

"அவாத்துல, செல்வா கல்யாண விஷயத்துல, அவாளே டென்ஷனா இருக்கா..! செல்வா விஷயம் நல்லபடியா நடந்து முடியட்டும்..!! அதுக்கப்புறம் இந்த விஷயத்தைப் உன் காதுல பக்குவமா போடறேன்னு... நான்தான் எங்களவரை அன்னைக்கு இழுத்துப் பிடிச்சி நிறுத்தினேன்.."

இது என்ன வம்பா போச்சே? இது வம்பு பேச்சாயிருந்தால் கூட பரவாயில்லையே? மல்லிகாவுக்கு தன் தலை சுற்றுவது போலிருந்தது.

"மாமீ.. என் மனசு பதைச்சு போவுது... அவங்களுக்குள்ள தப்பா எதுவும் நடந்துடலையே?" குரலை தழைத்து கொண்டு கேட்டாள், மல்லிகா."என்னடீ... பைத்தியமாட்டம் உளர்றே நீ... சீனுவாசன் நம்ம ராகவனோட பிள்ளை... எப்பவும் தப்பு தண்டாவுக்கு போகாத குடும்பம்.. அந்த குடும்பத்துல பொறந்த சீனு மட்டும் தப்பு தண்டாவா எதுவும் பண்ணிடுவானோ? இல்லே... நம்ம கொழந்தை மீனாதான் தப்பு பண்ணிடுவாளோ? நம்ம கொழந்தைகளை நாம நம்பலன்னா வேற யார்டீ நம்புவா?"

"அவா ரெண்டு பேரும், மாடி கைப்பிடி பக்கத்துல ஒருத்தர் தோள்ல ஒருத்தர் கையை போட்டபடி நின்னுன்டு இருந்தாளாம்.. அங்க அவா அதுக்கு மேல என்ன தப்பு பண்ண முடியும்...? நாளைக்கு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நிதானமா மீனாவோட மனசுல என்ன இருக்குன்னு கேளுடீ..."

"ம்ம்ம்.." சுரத்தில்லாமல் முனகினாள், மல்லிகா.

"நன்னாப் படிக்கற கொழந்தைடீ அது... முதல்ல அவ காலேஜ் பரீட்சை முடியட்டும்.. கன்னா பின்னான்னு நீ பாட்டுக்கு எதையாவது பேசி, அவ மனசை கொழப்பி விட்டுடாதே, இப்பத்திலுருந்தே நீயும் உன்னைப் போட்டு குழப்பிக்காதே.. உன் ஆம்படையானையும் கொழப்பிடாதே!"

"மாமீ... அவரோட தங்கை நளினி அமெரிக்காவுலேருந்து அடுத்த மாசம் வர்றா... அவ புள்ளை இந்தியாவுலதான் செட்டில் ஆவேன்னு தலை கீழா நிக்கறானாம்.. இங்கே ஒரு வீடு வாங்கணுங்கற ப்ளான்ல இருக்கா.. மீனாவை அவ தன் புள்ளைக்கு பண்ணிக்கணும்ன்னு ஒரு நெனைப்பு இருக்குமோன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்..."

"இந்த சமயத்துல நீங்க இப்படி ஒரு கல்லைத் தூக்கி என் தலையில போடறீங்க.. செல்வாதான் அவனுக்கு புடிச்சவளை இவளைத்தான் கட்டிப்பேன்னு, இழுத்துக்கிட்டு வந்துட்டான்.. மீனாவுக்காவது எங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தோம்..." மல்லிகாவின் குரல் பிசிறடித்தது.

"மல்லிகா... எங்காத்துல நடந்த கூத்தையெல்லாம் நீ பாத்தேயில்லையா... ரெண்டைப் பெத்தோம்.. ஆசையா வளத்தோம்... அதுகளுக்கு என்னக் குறை வெச்சோம்.. கல்யாணம்ன்னு வந்தப்ப, ரெண்டும் அதது வழியை அதுகளா பாத்துக்கிட்டு போயிட்டதுகள்... எவ்வளவு நாளைக்கு அதையே நெனைச்சு பொலம்பறது..? பொலம்பறதால ஏதாவது பலன் உண்டோ? கெழங்கள் நாங்க எங்க மனசை திடப்படுத்திக்கலையா..."

"நீ திருத்தணி முருகனை கும்பிடறே.. அவா காஞ்சி வரதனை சேவிச்சிக்கிறா.. எல்லா சாமியும், எல்லா பூதமும் ஒண்ணுதான்டீ... குழந்தைகளோட ஆசைக்கு குறுக்கே நிக்காதீங்கோ.. ரெண்டுமே நல்ல குழந்தைகள்... அவா ஜோடிப்பொருத்தமும் நன்னாத்தானிருக்கு.. யாருக்கு எங்கேன்னு முடிச்சு போட்டு இருக்கோ அதை நாம வெட்ட முடியாதுடீ... இதை நீ நன்னாப் புரிஞ்சுக்கோ... வீணா மனசை கெட்டுப் போக்கிக்காதே.."

"சரி மாமீ.. உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி..."

"மல்லிகா... நான் அட்வைஸ் பண்ணலேடீ... யதார்த்தத்தைச் சொல்லறேன்.. நீ சொன்ன மாதிரி மீனா ஒரு தங்கமான குழந்தைதான்.. கறிவேப்பிலை கொத்து மாதிரி இருக்கா... ரொம்ப மிரட்டிடாதே... மின்னாடி செல்வாவோட கூச்சல் போட்ட மாதிரி இவகிட்டவும் கூவாதே..."

"சரி மாமீ..."

"எதுவாயிருந்தாலும் நிதானமா பக்குவமா கேளு... இந்த காலத்து குழந்தைகளை பெத்துட்டோங்கற உரிமையில, பெத்தவா யாரும் கோச்சிக்கவும் முடியலை... அதுவும் பொம்பளை கொழந்தைகளை ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே... எல்லாம் தெரிஞ்ச மாதிரி தஸ்சு புஸ்ன்னு இங்லீஷ்ல பேசறதுகள்... அப்புறமா முன்னுக்குப் பின்னா, ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா... 'நீ என்னைப் பெத்தவதானே? நீ ஏன்டீ எனக்கு புத்தி சொல்லலேன்னு', மனசு ஒடைஞ்சு கண்ணை கசக்கிண்டு நிக்கறதுகள்... "

"நல்லாச் சொன்னீங்க..." மல்லிகா தன் புடவை முந்தானையால் தன்னைப் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு தீடிரென குளிர்வது போலிருந்தது.

"மல்லிகா நேக்கும் தூக்கம் கண்ணைச் சுத்தறது.. அவா புருஷாள் வந்து படுக்கறப்ப படுக்கட்டும்... நான் இப்படியே என் கட்டையை சாய்ச்சுக்கறேன்..." உட்க்கார்ந்திருந்த பாயிலேயே தன் உடலை சுருக்கிக்கொண்டாள், சியாமளா.

மல்லிகாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை என்ற போதிலும், சியாமளாவின் பக்கத்திலேயே அவளும் படுத்தாள். மனம் வெகு நேரம் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. 

சீனு தங்கமான பையன்தான்... கெட்டப்பழக்கம்ன்னு சொன்னா இந்த தெரு முனையில நின்னுக்கிட்டு, சிகரெட்டை ஊதி ஊதி தள்ளி ஒடம்பை கெடுத்துக்கறானே... இதைத்தான் சொல்லணும்... மல்லிகாவின் மனம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தது.

'அம்மா... இப்பல்லாம் சீனு வாரத்துக்கு ஒரு தரம் 'கட்டிங்' வுடறான்.. இவன் கூட சேர்ந்து உன் புள்ளை செல்வாவும் குட்டிசுவரா ஆயிடப் போறான்... இந்த சீனுவுக்கு நீ ரொம்ப செல்லம் குடுக்கறே... சனிக்கிழமை வந்தாப் போதும், வாரத்துக்கு ஒரு தரம் குடிச்சுட்டு வந்து நம்ம வீட்டு மாடியில உருள்றான். அவனை கண்டிச்சி வை. நீ சொன்னா அவன் கொஞ்சமாவது அடங்குவான். என்னைக்காவது ஒரு நாள் அவங்க அத்தை உஷா உன் கிட்ட சண்டை பிடிக்கப் போறாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ...'

மீனாதான் அன்னைக்கு நாள் பூரா புலம்பி புலம்பி கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தா.. அந்த புலம்பலும் கூச்சலும் தன் மனசுக்கு புடிச்சவன் கெட்டு சீரழியறானேங்கற ஆதங்கத்துல வந்ததுதானா.. இது இந்த மூளை கெட்ட முண்டத்துக்கு புரியலியே.. என் பொண்ணு மனசுல இருக்கறதை என்னால புரிஞ்சுக்க முடியலை... எதிர் வீட்டுக்காரி எனக்கு எடுத்து சொல்ல வேண்டியதா இருக்குது...

இப்ப மட்டும் என்ன கெட்டுப் போச்சு.. டேய் சீனு.. இது என்னடா வேலை.. குடிச்சுட்டு இந்த வீட்டுக்குள்ளே நுழையாதேன்னு ஒரு அதட்டு அதட்டினா என் பேச்சைக் கேக்காமலா போயிடுவான் அவன்...? மனதுக்குள் குமைந்தாள் மல்லிகா.

அம்மா.. இவன் என் கூட படிக்கற பையன்ம்மா.. என் கிளாஸ்ல என் பக்கதுலதான் எப்பவும் உக்காருவான்... இன்னைக்கு ஸ்கூல்லேருந்து வரும் போது மழையில நல்லா நனைஞ்சுட்டோம்.. இவனுக்கு ரொம்ப குளுருதாம்... என்கிட்ட இருக்கற காய்ஞ்ச சொக்கா ஒண்ணு இவனுக்கு குடுக்கறேம்மா...

செல்வாதான் சீனுவை கொட்டற மழையில ஒரு நாள் வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டு வந்தான். அப்ப செல்வாவுக்கு பத்து வயசு இருக்குமா. இன்னைய தேதிக்கு அண்ணன் தம்பியாத்தான் பழகிக்கிட்டு இருக்கானுங்க ரெண்டு பேரும்.

சீனு தயங்கி தயங்கி வீட்டுக்குள்ள நுழைஞ்சது இன்னும் என் கண்ணுலேயே நிக்குது... உன் பேரு என்னடா கண்ணுன்னேன்.. பசிக்குதுன்னு பதில் சொன்னான்... வீட்டுல இருந்த ஒரு அடையை ரெண்டா புட்டு ஆளுக்கு ஒரு துண்டா கையில குடுத்தேன்.. அந்த குழந்தை அவசர அவசரமா அடையை பிச்சித் திண்ண அழகைப் பாத்துட்டு நெஞ்சு நிறைஞ்சு போய் நின்னேன்..

அப்புறம்...? அப்புறம் என்னா..?? அம்மா... அம்மான்னு என் முந்தானையை புடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுக்குள்ள அலையறான்.. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் முன்னே வந்து நிக்கறான். என் வீட்டு சாக்கடை முதல் கொண்டு குத்தி விடறான்.. என்னைக்காவது அவனை விட்டுட்டு சாப்பிட மனசு போவுதா?

வீட்டுல எது செய்தாலும் அவனுக்கு முதல்ல ஒரு பங்கு எடுத்து வெச்சுட்டுத்தான் நான் என் வாய்ல போடறேன்.. அந்த அளவுக்கு இந்த வீட்டோட ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் போயிட்டான். ரெண்டு நாள் அவன் மூஞ்சியைப் பாக்கலன்னா... அவனுக்கு என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோன்னு மனசு பதறிப் போவுது.

எம்மா... என்னை விட உனக்கு சீனுதான் எப்பவும் ஓஸ்தின்னு.. அப்பப்ப நான் பெத்த என் புள்ளை செல்வாவே மூஞ்சை தூக்கி வெச்சிக்கற அளவுக்கு என் கிட்ட செல்லம் கொண்டாடறான்... எந்த ஜென்மத்து குடுக்கல் வாங்கல் பாக்கி இருக்கோ.. இது அந்த திருத்தணி முருகனுக்குத்தான் வெளிச்சம்...

பதினைஞ்சு வருஷமா இந்த வீட்டுக்குள்ள இன்னொரு புள்ளையா வலம் வர்றவன், இப்ப என் வீட்டு மாப்பிள்ளையா வர்றேங்கறான்.. அம்மான்னு கூப்பிடற வாயால அத்தேன்னு கூப்பிடுவானா..? இல்லே மாமீன்னு கூப்பிடுவானா..?. இந்த ஒறவு மொறை சரிப்பட்டு வருமா?

செல்வா என் இனத்தை விட்டுட்டு, வேற இனத்துலேருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வர்றேன்னப்ப, வந்த கோபம் இவன் விஷயத்துல ஏன் எனக்கு வரலே..? என் புருஷனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் என்ன சொல்லுவாரு?

"மல்லிகா உன் புருஷன் சொல்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்டீ.. நீ என்னடீ சொல்றே?" அவள் மனம் அவளிடம் எள்ளியது.

"விஷயத்தை கேட்டதுலேருந்து எனக்குத்தான் ஒண்ணும் புரியலியே? காலும் ஓடலை.. கையும் ஓடலே... மனசு நிலை கொள்ளலை..." நகைக்கும் மனசுக்கு பதில் கூறினாள், மல்லிகா.

"நிதானமா யோசனை பண்ணுடீ... பத்மாவுக்கு ஓரே புள்ளடீ இவன்... பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது..."

"உண்மைதான்.. கல்யாணம் முடிஞ்ச மூணு வருஷத்துல நாத்தானார் புருஷன் ஆகாசத்துல எரிஞ்சு போயிட்டான்.. வீட்டுக்கு வெத்து நெத்தியா திரும்பி வந்தவளை, தன் வீட்டுல, தன் கூடவே வெச்சுக்கிட்டு, அவ சொல்றபடி குடும்பம் பண்ற, நல்ல மனசுக்கு யாருக்கு வரும்.?

பத்மாவுக்கு தங்கமான குணம்... என் பொண்ணு மீனாவை பெத்த பொண்ணா நடத்துவாளுங்க ரெண்டு பேரும்.. இதுல எனக்கு ஒண்ணும் சந்தேகமேயில்லை.."

"அப்புறம் என்னடீ தயக்கம்...?"

"கல்யாணம்ன்னு வந்தா நாலு விஷயத்தையும் யோசிக்கணுமில்லையா?"

"நல்ல ஆஸ்தீக குடும்பம்.. கடலாட்டம் சொந்த வீடு.. சீனுவோட அப்பாவும் வாயில்லாப் பூச்சி.. வாயைத் தொறந்தா 'வரதா.. வரதா'ன்னு பெருமாளோட பேருதான் வரும்..."

"ஆனா என் நாத்தானாருக்கு என்ன பதில் சொல்றது..." மல்லிகாவின் மனதில் இந்த கேள்வி வந்தது.

"அது உன் புருஷன் நடராஜன் பாடுன்னு விட்டுட்டு நீ ஒதுங்கிக்கோடீ..."

"நல்லாருக்கே.. என் புருஷன் என் மேல உயிரையே வெச்சிருக்கான்... பிரச்சனைன்னு வரும் போது அவனை நான் எப்படி தனியா விடறது...?" மல்லிகாவின் மனது தட்டமாலை சுற்றிக்கொண்டிருந்தது. தன் விழிகள் சொக்கி எப்போது அவள் அயர்ந்து தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

***

"முகூர்த்த நேரம் நெருங்குதுடீ.. என்ன இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கறே..." விடியற்காலை அஞ்சரை மணிக்கு நடராஜன் அவள் தொடையை தொட்டு உலுக்கியபோதுதான் அவள் தூக்கம் கலைந்தது.

"என்னங்க... பொழுது விடிஞ்சிடிச்சா? சியாமா மாமீ எங்கே.." விருட்டென எழுந்து உட்கார்ந்தாள் மல்லிகா.

"மாமாவும் மாமியும் ரெண்டாவது டோஸ் காபி குடிக்க டைனிங் ஹால்லே எப்பவோ ஆஜராயிட்டா.. நீதான் காலை விரிச்சு போட்டுக்கிட்டு, நம்ம பெட்ரூம்ல தூங்கற மாதிரி இடுப்பு புடவை நழுவினது கூட தெரியாம மல்லாந்து கிடக்கறே..!" நடராஜன் வாய்விட்டு சிரித்தார்.

"ம்ம்ம்... என்னை எழுப்ப வேண்டியதுதானே நீங்க.." சிணுங்கியவாறே நடராஜன் தோளில் சுருண்டாள் மல்லிகா.

"ராமசுவாமி... கீழே கிச்சன்லேருந்து ப்ளாஸ்க்ல காபி கொண்டந்து வெச்சிருக்கார்.. சட்டுன்னு ஒரு வாய் குடிச்சுட்டு... ரெண்டு சொம்பு தண்ணியை ஒடம்புல ஊத்திக்கிட்டு கெளம்புடீ..." மல்லிகாவின் முதுகை மெல்ல வருடிய நடராஜனின் கை அவள் இடுப்பில் தவழ்ந்தது. மனைவியின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டவரின், அவர் அணிந்திருந்த புது சட்டை வேட்டியின் வாசம், அவள் மூக்கில் கும்மென ஏறியது.

"ம்ம்ம்.... நகருங்க... தள்ளி உக்காருங்க... கொஞ்சம் கிட்ட வந்தா போதும்... கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களே... நேரம் காலம் ஓண்ணும் இல்லாம உங்க வேலையை ஆரம்பிச்சுடுவீங்களே.. வெக்கம் கெட்ட மனுஷன்..." மீனா சூடான பில்டர் காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தாள்."புது எடத்துக்கு வந்திருக்கோம்.. மனுசன் ரூட்டீன் வேலைகள்லேருந்து நகர்ந்தாலே... அவன் மனசுக்குள்ள உற்சாகம் பொங்கி பொங்கி வருதுடீ... பத்தாக்குறைக்கு தனி ரூம்ல, நீயும் நானும் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்.. நீ நிம்மதியா தூங்கி எழுந்ததும் உன் முகமே களையா இருக்குடீ.." நடராஜன் குழைந்து கொண்டிருந்தார்.

"ரொம்ப வழியாதீங்க..."

"அய்யரு, மாமியோட வெளியில போயிட்டாரு... இப்படி அதுவா கிடைக்கற சான்சை விடறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... இப்பதான்டீ... நீ என் கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகாத் தெரியறே... லைஃபோட அர்த்தமே இந்த வயசுலதான் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு..." நடராஜன் இதமாக சிரித்தார். சட்டென மல்லிகாவை தன் புறம் வளைத்து இழுத்தார். அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டார்.

"போதும்... விடுங்க... உங்க சட்டைல்லாம் கசங்குதுங்க... நான் இன்னும் பல்லுகூட துலக்கலை.. வாய்ல முத்தம் குடுக்கறீங்க?" சிணுங்கினாள், மல்லிகா.

கணவனின் இதமான வார்த்தைகளிலும், சூடான முத்தத்திலும் அவள் மனம் நிறைந்திருந்தது. நடராஜனின் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாக ஒரு முறை பதித்தவள், விருட்டென எழுந்து பாத்ரூமுக்குள் ஒரு சிறு பெண்ணைப் போல ஓடினாள். No comments:

Post a comment