Thursday 12 September 2013

ஆண்மை தவறேல் 5


அன்று மாலை ஆனதுமே நந்தினி பரபரப்பாக மாறினாள். கௌரம்மா வியப்பாக பார்க்க, ஆறு மணி வாக்கில் சென்று அன்று இரண்டாம் முறையாக குளித்து விட்டு வந்தாள். 'இந்தப்புடவை உனக்கு நல்லாருக்கு நந்தினி..' என்று அசோக் என்றோ சொன்ன அந்த அடர்சிவப்பு நிற புடவையை தேடிப்பிடித்து அணிந்து கொண்டாள். உற்சாகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள், உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கௌரம்மாவிடம் சொன்னாள். "நீங்க ஹால்ல போய் டிவி பாருங்கம்மா.. இன்னைக்கு சமையல் எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" "இல்லம்மா.. இந்த காய்கறி.." சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவை இடைமறித்து, "அப்படியே வச்சுடுங்க.. நான் பாத்துக்குறேன்.." என்று பட்டென சொன்னாள். கௌரம்மாவும் கையிலிருந்த கத்தியை காய்கறி தட்டிலேயே போட்டுவிட்டு, 'இன்று என்னாயிற்று இந்தப்பெண்ணுக்கு..?' என்பது போல நந்தினியை வித்தியாசமாக பார்த்தவாறே, ஹாலுக்கு நகர்ந்தாள். அவள் சென்ற பிறகு ஓரிரு நிமிடங்கள், நந்தினி இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியவாறு, கிச்சனையும் கிச்சனில் இருந்த சமைப்பதற்கு தேவையான மூலப் பொருட்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றில் அசோக்கிற்கு என்னென்ன ஐட்டங்கள் பிடிக்கும் என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தாள். அந்த ஐட்டங்களை வைத்து என்னெல்லாம் அன்று இரவு உணவுக்கு தயார் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

முடிவுக்கு வந்ததுமே மீண்டும் அவளை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பம்பரம் போல சுழன்று சமையல் வேலைகள் எல்லாவற்றையும் அவளே தனியாக முடித்தபோது, மணி எட்டை நெருங்கியது. 'ரெடியாயிடுச்சும்மா.. நீங்க மாமாவுக்கு சாப்பாடு எடுத்து வைங்க.. நான் இதோ வந்துர்றேன்..' என்று கௌரம்மாவிடம் சொல்லிவிட்டு நந்தினி மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தது கொண்டாள். பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள். கொஞ்சமாய் பவுடர் தீற்றிக் கொண்டாள். குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டெடுத்து நடு நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். உறுத்தாத வண்ணத்தில் உதட்டுக்கு மெலிதாக சாயம் பூசிக்கொண்டாள். ஹேர் பின்னை பற்களால் கடித்தவாறே, மல்லிகைப்பூவை மொத்தமாய் எடுத்து தலையில் சூடிக் கொண்டாள். அழகாயிருக்கிறோமா என்று கண்ணாடியை ஒருமுறை பார்த்து திருப்தியடைந்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள். டைனிங் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மாமனாரையும், அவருக்கு அருகில் இருந்து பரிமாறும் கௌரம்மாவையும், கடந்து ஹாலுக்கு சென்றாள். சோபாவில் அமர்ந்து கொண்டு கணவனின் வருகைக்காக கதவையே வெறிக்க ஆரம்பித்தாள். 'லேட் ஆக்கிடாதடா.. சீக்கிரம் வந்துடு..' என்று சத்தம் வெளிவராமல் முணுமுணுத்துக் கொண்டாள். அசோக்கும் அன்று சீக்கிரமே வீடு திரும்பி விட்டான். வந்த சிறிது நேரத்திலேயே நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். அன்று எல்லாமே அவனுக்கு பிடித்த ஐட்டங்களாக இருக்க, நன்றாக சாப்பிட்டான். நந்தினி ஒரு சேரை இழுத்துப் போட்டு அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அவன் சாப்பிடும் அழகையே ஓரக்கண்ணால் விழுங்கிக் கொண்டிருந்தாள். தனது உடை, முகம், தலை அலங்காரங்கள் பற்றி ஏதாவது அவன் கேட்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டில் குறியாக இருந்தது நந்தினிக்குள் ஒரு சிறிய ஏமாற்றத்தை விதைத்திருந்தது. இருந்தாலும்.. 'தன் கையால் சமைத்ததை.. வேறெந்த கவனமும் இல்லாமல்.. இவ்வளவு ஆசையாக உண்கிறானே..' என்ற நினைவு வேறொரு வகையான சந்தோஷத்தை அவளுக்கு தந்திருந்தது. அவளுடைய பார்வை மொத்தமும் அசோக்கின் முகத்தில் பதிந்திருக்க.. அவளுடைய மனம் முழுவதிலும் அவன் மீதான காதல் படிந்திருக்க.. மனதுக்குள்ளேயே செல்லமாக அவனிடம் உரையாடினாள்..!! 'ஒய்.. சாப்பாடு ரொம்ப பிடிச்சிருக்கோ.. இந்த மொக்கு மொக்குற..?? வந்ததுல இருந்து சாப்பாட்டுலயே கவனமா இருக்கியே.. சமைச்சவளை கொஞ்சம் திரும்பி பார்த்தா என்னவாம்..?? என்னை அவ்வளவு புடிக்குமா உனக்கு.. அம்மான்னு சொன்னியாம்.. ம்ம்..?? இப்பவும் அடிக்கடி அந்த ஃபோட்டோ எடுத்து பார்ப்பியாமே.. அன்னைக்கு நைட்டு நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னதும் உனக்கு எவ்வளவு கோவம் வருது..?? அப்போ.. என் மேல உனக்கு இன்னும் லவ்வு இருக்குதுதான..?? அப்புறமும் ஏன் இப்படி அமுக்குனி மாதிரி உம்முன்னு இருக்குற.. சொல்ல வேண்டியதுதான எங்கிட்ட..??' அவள் அந்த மாதிரி உள்ளத்துக்குள் ரகசியமாய் உரையாடிக் கொண்டிருக்கையிலேதான், திடீரென்று அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது. 'இவன் தன் மனதில் இருக்கும் காதலை என்னிடம் சொல்வான் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்..? ஏற்கனவே ஒருமுறை சொன்னபோது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்தி விட்டேன்..!! மறுபடியும் காதலை சொல்லி சூடு பட்டுக்கொள்ள எந்த மடையனாவது நினைப்பானா..?? அப்போது போல என்னால் காயப்படுத்த முடியாவிட்டாலும், இப்போதும் அந்த காதலை என்னால் மறுதலிக்க முடியுமே..?? அதுவே அவனுக்கு அவமானம்தானே..?? அப்படி இருக்க.. அவன் எப்படி தன் மனதை திறந்து என்னிடம் காட்டுவான் என்று எதிர்பார்க்க முடியும்..??' 'ஆமாம்.. இதற்கு ஒரே வழி நான் முதல் அடி எடுத்து வைப்பதுதான்..!! நான்தான் இவனிடம் முதலில் சொல்ல வேண்டும்..!! என் மனம் எவ்வளவோ மாறியிருக்கிறதடா பார்.. அதை முழுதாய் நீயே அடைத்திருக்கிறாய்.. உன் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.. என் கட்டளைகளை நீ ஏற்றுக் கொள்வாயா.. உன் கெட்ட வழக்கங்களை விட்டொழிக்கிறாயா.. உன்னை எனக்கே எனக்கென்று தந்து விடுகிறாயா.. உயிரும் உனக்கே உனக்கென்று சிந்தி விடுகிறேன்..' "ஏய்.. நீ இன்னும் சாப்பிடலையா..?" அசோக்கின் குரல் நந்தினியின் கவனத்தை கலைத்தது. "இ..இல்ல.. ஏ..ஏன் கேக்குறீங்க..?" தடுமாற்றமாய் சொன்னாள். "பசிச்சதுன்னா போட்டு சாப்பிடு.. அதை விட்டுட்டு சாப்பிடுற என் வாயையே மொறைச்சு மொறைச்சு பாத்துட்டு இருக்குற..?" "ஐயே.. நான் ஒன்னும் உங்களை பாக்கலை..!! நீங்க சாப்பிட்டு முடிங்க.. நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்..!!" முகத்தை சுளித்தவாறு சொன்ன நந்தினி வேண்டா வெறுப்பாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். திரும்பிக் கொண்டவளால் கொஞ்ச நேரம் கூட சும்மா இர முடியவில்லை. ஓரக்கண்ணால் மீண்டும் அவனையே பார்த்தாள். அசோக் அப்புறம் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட்டு முடித்தான். கைகழுவி விட்டு அவர்களது பெட்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டான். நந்தினியும் அவசர அவசரமாக சாப்பிட்டாள். பாத்திரங்களை எல்லாம் பரபரப்பாக கழுவி வைத்தாள். அவன் தூங்கியிருக்க கூடாதே என்று கவலையாக நினைத்துக்கொண்டே, அவளும் தங்கள் அறைக்குள் நுழைந்தாள். நல்ல வேளை.. அசோக் இன்னும் தூங்கி இருக்கவில்லை. விழித்துதான் இருந்தான். கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டு, வயிற்றில் லேப்டாப்பை தாங்கி, கீ போர்டில் விரல்களை தடதடக்க விட்டிருந்தான். மேல் சட்டையை இப்போது துறந்திருந்தான். வொயிட் கலரில் ஒரு பனியனும், க்ரீம் கலரில் ஒரு ஷார்ட்சும் அணிந்திருந்தான்.நந்தினி உள்ளே நுழைந்ததும் அவளை ஒருமுறை ஏறிட்டு பார்த்த அசோக், அப்புறம் மீண்டும் தன் பார்வையை லேப்டாப்பின் மீது வீசியிருந்தான். நந்தினிதான் ஒருமாதிரி இதயம் படபடக்க நின்றிருந்தாள். லேசாக வியர்ப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு. 'மனதில் இருப்பதை இப்போதே இவனிடம் சொல்லி விடலாமா..?? இல்லை.. இன்னும் கொஞ்ச நாள் இவனை ஆழம் பார்க்கலாமா..??' மனதில் குழப்பமான கேள்வியுடனே, நந்தினி கட்டில் மீது மடித்து வைக்கப்பட்டிருந்த பெட்ஷீட்டை எடுத்தாள். தரையில் விரித்தாள். தலையணை எடுத்து போட்டாள். படுக்கையில் வீழப் போனவள், ஒருகணம் தயங்கி நின்றாள். மீண்டும் தன் கணவனின் முகத்தையே ஆசையாக பார்த்தாள். 'ஏன் தாமதிக்கிறாய்.. சொல்லிவிடு.. சொல்லிவிடு.. இப்போதே சொல்லிவிடு..' உள்மனம் அவளை உந்தி தள்ளியது. நந்தினி அந்த மாதிரி தயங்கி நிற்பது, அசோக்கிற்கு தலையை திருப்பாமலே புரிந்து போனது. லேப்டாப்பில் இருந்து பார்வையை விலக்காமலே, மெல்லிய குரலில் கேட்டான். "என்னாச்சு..??" அசோக்கே அப்படி ஆரம்பித்ததும், நந்தினி இப்போது சற்றே தயக்கமாக சொன்னாள். "உ..உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..!!" "சொல்லு.." இன்னும் அவனது பார்வை லேப்டாப்பின் மீதே படிந்திருந்தது. நந்தினி இப்போது சற்று நிதானித்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. குழப்பமாக இருந்தது. அந்த குழப்பத்துடனே, "நீ..நீங்க குடிச்சிருக்கீங்களா..??" என்று சற்றும் சம்பந்தமில்லாமல் கேட்டாள். அசோக் இப்போது விழிகளை சுழற்றி தன் மனைவியை பார்த்தான். அவளுடைய கண்களை தனது கண்களால் மிக கூர்மையாக பார்த்து, சற்றே முறைப்பாக கேட்டான். "பாத்தா எப்படி தெரியுது..??" "கு..குடிக்காத மாதிரிதான் தெரியுது.." நந்தினி இப்போது அசடு வழிந்தாள். "அப்புறம் ஏன் அப்படி கேட்ட..?" "இ..இல்ல.. நீங்க தெளிவா இருக்கீங்களா.. இல்லையான்னு.." "நான் குடிச்சா கூட தெளிவாத்தான் இருப்பேன்.. என்ன மேட்டர்னு சொல்லு.." சொன்ன அசோக் மீண்டும் லேப்டாப்பை நோண்ட ஆரம்பித்தான். "அ..அது.. அது வந்து.." "ம்ம்.. எது வந்து..??" "அ..அதை எப்படி கேக்குறதுன்னு எனக்கு தெரியலை.." "உனக்கு இப்போ சொல்லனுமா.. கேக்கனுமா..??" அசோக்கின் கூர்மையான கேள்வி, நந்தினியை சற்று திகைக்க வைத்தது. திணறலாக சொன்னாள். "ரெ..ரெண்டுந்தான்.. மொ..மொதல்ல கேக்கணும்.. அ..அப்புறம் சொல்லணும்.." தான் உளறுகிறோமோ என்று நந்தினிக்கு அவள் மீதே இப்போது ஒரு சந்தேகம். "சரி.. அப்போ மொதல்ல கேளு.." அசோக் அமைதியாகசொல்ல, "ஒ..ஒரு நிமிஷம்.. இதோ வந்துர்றேன்.." என்று விட்டு நந்தினி அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். வெளியேறியதுமே 'ஏண்டி இப்படி உளறி கொட்டுற..?' என்று தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அரை நிமிடத்திலேயே நந்தினி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள். அவள் கையில் இப்போது அந்த ஆல்பம் முளைத்திருந்தது. அசோக்கின் கல்லூரி ஆல்பம்..!! உள்ளே நுழைந்த நந்தினி கையிலிருந்த ஆல்பத்தை அசோக்கின் முன்பாக படக்கென்று நீட்டினாள். முகத்தில் ஒரு மலர்ச்சியும், உதட்டில் ஒரு குழந்தைத்தனமான சிரிப்பும், குரலில் ஒரு அதீத ஆர்வமுமாய் கேட்டாள். "இதுக்கு என்ன அர்த்தம்..?" அசோக் அவள் நீட்டிய ஆல்பத்தின் மீது ஒரு முறை பார்வையை வீசினான். அப்புறம்.. முகம் முழுதும் ஏக்கமும், எதிர்பார்ப்புமாய் இருந்த நந்தினியை ஏறிட்டு, எள்ளலான குரலில் கேட்டான். "இது என் காலேஜ் ஃபோட்டோ ஆல்பம்.. இதுல என்ன அர்த்தம் இருக்கு..?? ஏதோ ஷகீரா ம்யூசிக் ஆல்பத்தை நீட்டி என்ன அர்த்தம்னு கேட்டாலும்.. அதுல ஒரு அர்த்தம் இருக்கு..!!" அசோக்கின் கிண்டலால் பிரகாசமாய் இருந்த நந்தினியின் முகம் பட்டென்று சுருங்கிப் போனது. 'ஞே' என்று அசட்டுத்தனமாய் விழித்தாள். "அ..அதுக்கில்ல.. அடிக்கடி இதை நீங்க எடுத்து பாப்பீங்களாம்..??" "யார் சொன்னா.??" "கௌ..கௌரம்மா.." அசோக்கிடம் அவ்வாறு சொன்னவள், 'ஸாரி கௌரம்மா' என்று மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். "சரி.. அதுக்கென்ன இப்போ..? ஃபோட்டோ ஆல்பம்தான பாத்தேன்.. ஏதோ போர்னாக்ராஃபி சைட்டை பாத்த மாதிரி கேள்விலாம் கேக்குற..??" "இ..இல்ல.. இதுல அந்த ஃபோட்டோ.. அதையும் நீங்க.." நந்தினி கட்டை விரல் நகத்தை டென்ஷனாக கடித்துக்கொண்டே சொன்னாள். "எந்த ஃபோட்டோ..?" நந்தினி இப்போது அவசரமாய் அந்த ஆல்பத்தை பிரித்து புரட்டினாள். கேமிரா பார்த்து சிரிக்கும் அசோக்கும், வேறெங்கோ முகம் திருப்பியிருந்த நந்தினியும் இருந்த அந்த ஃபோட்டோ வந்ததும் புரட்டுவதை நிறுத்தினாள். அசோக்கின் முகத்துக்கெதிராக ஆல்பத்தை காட்டி, சுட்டு விரலால் அந்த ஃபோட்டோவை தொட்டு காட்டியவாறே சொன்னாள். "ம்ம்ம்.. இந்த ஃபோட்டோ இந்த ஃபோட்டோ.. பேப்பர் ப்ரன்சன்டேஷனுக்கு பேங்களூர் போயிருந்தப்போ.. நாம எடுத்துக்கிட்டது.." "என்னது.. நாம எடுத்துக்கிட்டதா..??" அசோக் நந்தினியை ஏறிட்டு கேலியாக கேட்க, "இல்ல.. நீங்களே.. திருட்டுத்தனமா.." என்று உளறியவள், உடனே நாக்கை கடித்துக்கொண்டு "ஸாரி.." என்றாள். சொல்லிவிட்டு திருதிருவென விழித்த நந்தினியை பார்க்க அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. "பரவால விடு.. நீ சொன்னது கரெக்ட்தான்.. திருட்டுத்தனமாத்தான் அந்த ஃபோட்டோ எடுத்தேன்..!! அப்போ உன் மேல எனக்கு லவ்வோ லவ்வு.. கண்ணு மண்ணு தெரியாம ஒரு காதலு..!! அதான் இந்த அழகு பட்ட மூஞ்சியை கேப்சர் பண்ணி வைப்போமேன்னு, ஒரு அறிவு கெட்ட நாய்ட்ட கேமராவை கொடுத்து க்ளிக் பண்ண சொன்னேன்.. அந்த நாய் கரெக்டா நீ அந்தப்பக்கம் திரும்புற வரை வெயிட் பண்ணி.. அப்புறமா க்ளிக் பண்ணிருக்கான்..!! சரி.. அதுக்கென்ன இப்போ..??" "இ..இல்ல.. இ..இதை எதுக்கு இந்த ஆல்பத்துல வச்சிருக்கீங்க..?" "எடுத்து வீசிடலாம்னு சொல்றியா..? நான் காலேஜ்ல படிச்சேன்றதுக்கு இருக்குறதே அந்த பத்து பதினஞ்சு ஃபோட்டோதான்.. இதுவும் இருந்துட்டு போகட்டுமேன்னு சும்மா சொருகி வச்சிருக்கேன்.. உனக்கு புடிக்கலைன்னா தூக்கி கீழ போட்டுடு.." அசோக் அந்தமாதிரி கூலாக சொல்லவும், நந்தினிக்கு ஒருமாதிரி முகம் வாடிப் போயிற்று. இந்த மாதிரி ஒரு பதில் இவனிடம் இருந்து வருமென்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை. தேவையில்லாமல் இப்போது இந்தப்பேச்சை ஆரம்பித்து விட்டோமோ என்று தாமதமாக உணர்ந்தாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு மனது, 'ஒருவேளை இவன் தன்னை காய விடுகிறானோ..?' என்று சந்தேகப்பட்டது. மனதில் காதலை வைத்துக்கொண்டு, தான் எப்போதோ செய்த தவறுக்காக இப்போது பழி வாங்குகிறானோ..?? அவளுடைய குழப்பமும், ஏமாற்றமும் அவளது குரலிலும் ஒலித்தது. "இங்க பாருங்க.. நான் தப்பு பண்ணிருக்கேன்தான்.. இல்லைன்னு சொல்லல..!! உங்களுக்கு என் மேல ஏதாவது கோவம் இருந்தா.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க..!! அதை மனசுல வச்சுக்கிட்டு இப்படிலாம் பண்ணாதீங்க..!!" "நீ என்ன பேசுறேன்னே எனக்கு எதுவும் புரியலை.. நீ என்ன தப்பு பண்ணிருக்குற..??""அ..அதான்.. நீங்க காலேஜ்ல உங்க லவ்வை சொன்னப்போ.. நான் உங்களை ஹர்ட் பண்ணினது.." "அதுக்குத்தான் அன்னைக்கே மன்னிப்பு கேட்டுட்டியே..? அப்புறம்.. இப்போ என்ன புதுசா..?" "அ..அப்போ கேட்டது வேற.. இப்போ கேக்குறது வேற.." "என்ன வேற வேற..?" "நான் ஹர்ட் பண்ணினது உங்களை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு.. அப்போ எனக்கு தெரியாது..!! நீங்க என்னை எந்த அளவுக்கு லவ் பண்ணுனிங்கன்னு இன்னைக்குதான் எனக்கு புரிஞ்சது..!! எந்த கெட்ட பழக்கமும் இல்லாம இருந்தீங்க.. என்னாலதான இப்போ இப்படி மாறிட்டீங்க.. எல்லாத்துக்கும் காரணம் நாந்தான..?" "ஹ்ஹ.. யார் சொன்னாங்க அப்படி..?? எல்லாத்துக்கும் புள்ளையார் சுழி போட்டது வேணா நீயா இருக்கலாம்.. ஆனா.. எல்லாத்துக்கும் காரணம் நீதான்னு சொல்ல முடியாது.. இது நானா சூஸ் பண்ணிக்கிட்ட லைஃப்..!! எனக்கு இந்த லைஃப் பிடிச்சிருக்கு.. நான் பண்றது எதுவும் எனக்கு தப்பா தோணலை..!! அதே மாதிரி.. நீ என்னை ஹர்ட் பண்ணினதுக்காக உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல.. டு யு அண்டர்ஸ்டாண்ட்..??" அசோக் கூர்மையாகவும் தெள்ளத்தெளிவாகவும் சொல்ல, நந்தினிக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. 'உண்மையாகத்தான் சொல்கிறானா..?? இவனுக்கு என் மீது கோபமும் இல்லை.. காதலும் இல்லையா..?? நானாகத்தான் தவறாக புரிந்து கொண்டேனா..?? காலையில் இருந்து கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேனே.. இவன் மனதின் ஓரத்திலாவது என்மீது காதல் இருக்கும் என்று நம்பினேனே.. அப்படி இல்லையா..?? ' அவள் தலையை பிடித்துக் கொண்டு அமைதியாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான். "அதுசரி.. அதுக்கும் இந்த இத்துப்போன ஆல்பத்துக்கும் என்ன சம்பந்தம்..??" "என்னது..???? இத்துப்போன ஆல்பமா..????" அவன் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நந்தினிக்கு ஆத்திரத்தை கிளப்பிவிட, கடுப்புடன் கேட்டாள். "ஹேய்.. ஆல்பத்தை சொன்னதுக்கு நீ ஏன் டென்ஷன் ஆகுற..??" "ம்ம்ம்.. இத்துப்போன ஆல்பம்னா.. அப்புறம் எதுக்கு இதை அடிக்கடி எடுத்து பாக்குறீங்களாம்..?? பிடிக்கலைன்னா தூக்கி குப்பைல போட்டுட வேண்டியதுதான..??" நந்தினி சூடாக கேட்க, அசோக் இப்போது நிதானித்தான். மடியில் இருந்த கணிணியை மூடி ஓரமாக வைத்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தன் மனைவியை ஏறிட்டான். உதட்டில் ஒரு புன்னகையுடனே, "நீதிக்கதைகள்-னு கேள்விப் பட்டிருக்கியா டியர்..?? மாரல் ஸ்டோரிஸ்..??" அசோக் கேட்க, "ம்ம்.." என்றாள் நந்தினி 'இதை எதுக்கு இப்போ கேக்குறான்..?' என்ற குழப்பத்துடனே. "உலகத்துல இரண்டு டைப்பான நீதிக்கதைகள் இருக்கு.. என்னன்னு உனக்கு தெரியுமா..?" "தெ..தெரியாது.. நீங்களே சொல்லுங்க.." "ம்ம்.. எப்படி வாழணும்னு சொல்ற ஸ்டோரிஸ் ஒரு டைப்.. எப்படி வாழகூடாதுன்னு சொல்ற ஸ்டோரிஸ் இன்னொரு டைப்.. நாம ரெண்டு டைப் ஸ்டோரிஸ்மே படிச்சு தெரிஞ்சுக்கணும்.. வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது..!! அதே மாதிரி.. நான் இந்த காலேஜ் ஆல்பத்தை அடிக்கடி பாக்குறேன்னா.. இந்த ஆல்பம் அதுல ஒரு டைப்..!! அதாவது.. எப்படி வாழ கூடாதுன்னு அடிக்கடி நான் எடுத்து பாத்துக்குறது..!! நான் உனக்கு இன்னொரு டைப்பான ஆல்பம் காட்டுறேன்.. ஃபர்ஸ்ட் டைப்..!! ம்ம்ம்ம்.. அந்த லாஸ்ட் கப்போர்ட்ல நெறைய புக்ஸ் இருக்கும்.. எல்லா புக்சுக்கும் அடில ஒரு ஆல்பம் இருக்கும் பாரு.. அதை எடு..!!" நந்தினி தலையை பிராண்டிக் கொண்டாள். எதுவுமே புரியாமலே சென்று, அசோக் விரல் நீட்டிய திசையில் தெரிந்த அந்த கப்போர்டை திறந்தாள். அதற்குள் இருந்த அந்த ஆல்பத்தையும் எடுத்தாள். 'என்ன ஆல்பம் இது..?' என்பது போல தன் கணவனை பார்க்க, "பிரிச்சு பாரு.." என்று அவன் அனுமதி கொடுத்தான். நந்தினி அந்த ஆல்பத்தை புரட்டினாள். உள்ளே விதவிதமாக பெண்களின் படங்கள்.. பக்கத்திற்கு ஒரு ஃபோட்டோவாக.. எண் வாரியாக.. தேதி வாரியாக..!! அது என்ன ஆல்பம் என்பது புரியவே நந்தினிக்கு சில வினாடிகள் பிடித்தன. அப்புறந்தான் அது அசோக் படுக்கையை பகிர்ந்துகொண்ட பெண்களின் ஆல்பம் என்று, அவளுடைய மூளையில் சுரீர் என்று உறைத்தது. உடனே உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானவள், அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அதே எரிச்சலுடன் கொஞ்சம் ஏளனத்தையும் கலந்து கொண்டு கேட்டாள். "ஓஹோ..?? இப்படித்தான் வாழணுமோ..??" "பின்ன..?? இப்படியா வாழணும்.. அம்மாஞ்சியா..??" என்று தன் பழைய பழமூஞ்சி போட்டோவை அவன் கையிலெடுத்து சுட்டி காட்டினான். உதட்டில் ஒரு கேலிப்புன்னகையுடனே அவன் பார்த்துக்கொண்டிருக்க, நந்தினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. "ச்ச்ச்சை..!!"என்று வெறுப்பாக சொன்னவள், கையிலிருந்த ஆல்பத்தை கட்டிலில் தூக்கி வீசினாள். விழுந்த வேகத்தில் ஆல்பத்தின் கடைசி பக்கம் விரிந்து கொண்டது. எதேச்சையாக அதன் மீது பார்வையை வீசிய நந்தினி, சற்றே அதிர்ந்து போனாள். கடைசியாக பல்லிளித்துக் கொண்டிருந்த பெண்ணின் எண், தொண்ணூற்று ஒன்று..!! உடனே முகத்தை சுளித்தவாறே அசோக்கிடம் கேட்டாள். "என்ன இது..?? எயிட்டி செவன்னு சொன்னீங்க.. இதுல நைன்ட்டி ஒன் போட்டிருக்கு..??" "அது சொல்லி ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுதுல.. புதுசா நாலு ஆட் ஆயிடுச்சு..!!" "இது எப்போ.. எங்கிட்ட சொல்லவே இல்ல..??" "எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணுமா..??" அசோக் சொல்லிவிட்டு குறும்பாக புன்னகைக்க, நந்தினி இப்போது நொந்து போனாள். அசோக்கின் முகத்தையே ஏக்கமாக பார்த்தாள். அப்புறம் அதே ஏக்கமும், ஏமாற்றமும் கலந்த குரலில் கேட்டாள். "என்னங்க நீங்க.. நான் என்னன்னவோ நெனச்சிருந்தேன்.. கடைசில ஒண்ணுமே இல்லையா..?? அவ்ளோதானா..??" "யார் சொன்னா அவ்ளோதான்னு..?? இந்த நைன்ட்டி ஒன்னை ஹண்ரட் ஆகி.. ஹன்ரடை தவுசண்ட் ஆக்குற வரை நான் விடப் போறது இல்ல.." அசோக் கிண்டலாக சொல்ல, நந்தினி உச்சபட்ச கடுப்புக்கு சென்றாள். "அடச்சீய்ய்ய்..!!!" என்று வெறுப்பாக சொன்னவள், தான் விரித்துப் போட்டிருந்த படுக்கையில் பொத்தென்று வீழ்ந்தாள். போர்வையை இழுத்து தன் முகம் வரை முழுவதுமாய் மூடிக்கொண்டாள். எரிச்சலும், ஏமாற்றமுமாய் தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள். 'சச்சை.. இதுலாம்.. திருந்தாத ஜென்மம்.. திருந்தவே திருந்தாத ஜென்மம்.. இதைப்போய் திருத்த நெனச்ச பாரு.. நீ சரியான அறிவு கெட்ட ஜென்மம்..!! மனசுதான் வெக்கமில்லாம ஆசைப்பட்டுச்சுனா.. புத்தி எங்க போச்சு உனக்கு..?? ச்சே.. நல்லா வேணும் உனக்கு.. நல்லா வேணும்..!!' "ஹேய்.. என்ன முனங்குற..?" அசோக் கேட்க, "ஆங்.. ஒண்ணுல்ல.. பல்லு வலி..!!" என்று மூடிய போர்வைக்குள் இருந்து கடுப்புடன் சொன்னாள் நந்தினி. "சரி.. இந்த ஆல்பத்தை எடுத்து அங்க வச்சுடு..". "நீங்களே எடுத்து வச்சுக்கோங்க.. உங்க காலேஜ் ஆல்பத்தையும்.. அந்த கருமம் புடிச்ச ஆல்பத்தையும்..!!" அவளுடைய கோபத்தை பார்க்க அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உதட்டில் புன்னகையுடனே பெட்டில் இருந்து எழுந்தான். இரண்டு ஆல்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டான். நடந்து சென்று கப்போர்டில் அந்த ஆல்பங்களை திணித்தான். விளக்கை அணைப்பதற்காக திரும்பியவன் சற்றே ஆச்சரியமானான். நந்தினி இப்போது படுக்கையில் இருந்து எழுந்து விறைப்பாக அமர்ந்திருந்தாள். ஓரக்கண்ணால் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்தாள். "ஏய்.. என்னாச்சு..??" அசோக் கேலியாக கேட்க, "அ..அப்புறம் ஏன் அன்னைக்கு அப்படி பண்ணுனீங்க..?" என்றாள் அவள் கோபம் கொப்பளிக்கும் குரலில். "என்னைக்கு பண்ணுனேன்.. எப்படி பண்ணுனேன்..??" "அன்னைக்கு நைட்டு.. நீங்க லேட்டா வீட்டுக்கு வந்தப்போ.. நான் சாப்பிடமாட்டேன்னு சொன்னேன்..!! என்னை அவ்வளவு கம்பெல் பண்ணி சாப்பிட வச்சீங்களே..? ஏன் அப்படி பண்ணுனீங்க.. எப்படியாவது போகட்டும்னு விட்டிருக்க வேண்டியதுதான..?" நந்தினி கேட்டுவிட்டு குறுகுறுவென பார்க்க, அசோக் இப்போது நின்றவாக்கிலேயே சற்று குனிந்தான். தரையில் அமர்ந்திருந்த தன் மனைவியின் முகத்துக்கு எதிராக தனது முகத்தை கொண்டு சென்று, அவளது கண்களை இவனது கண்களால் அருகருகே சந்தித்து, சற்றே கிண்டலான குரலில் சொன்னான். "நீ மட்டும் உன் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. ஆபீசுக்கு சாப்பாடு கட்டி கொண்டு வரலாம்..!! நான் என் ஃப்ரண்டு உடம்பு கெட்டு போயிட கூடாதுன்னு.. சாப்பிட சொல்லி கம்பெல் பண்ண கூடாதா..??" அவ்வளவுதான்..!! எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த நந்தினியின் முகம் இப்போது அப்படியே சோர்ந்து போனது. அசோக்கின் முகத்தையே 'பே..' என்று பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் 'சுத்தம்...!!!' என்று சலிப்பாக சொன்னவள், மீண்டும் பொத்தென்று படுக்கையில் விழுந்து, போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். மீண்டும் வாய்க்குள்ளேயே ஏதேதோ முணுமுணுக்க ஆரம்பித்தாள். அசோக் விளக்குகளை அணைத்தான். கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்தவன், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னான். "கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட கண்டிஷன்லாம் ஞாபகம் வச்சுக்கோ நந்தினி..!!" "ஞாபகம் இருக்கு சாமி.. நல்லா ஞாபகம் இருக்கு.. இனிமே சத்தியமா மறக்காது..!!" நந்தினி போர்வைக்குள் இருந்து கத்தினாள்.அடுத்த நாள் காலை..!! அசோக்கும், நந்தினியும் அந்த பால்கனியில் நின்றிருந்தார்கள். இருவருடைய கைகளிலும் காபி கப். அசோக்கின் இன்னொரு கையில் மட்டும் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இருவரும் அமைதியாக தோட்டத்தை வெறித்தவாறு, அவ்வப்போது கப்பை வாயில் வைத்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். நேற்று இரவுக்கு அப்புறம் இன்னும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சற்று முன் அசோக் உடற்பயிற்சி செய்து முடித்து காத்திருக்க, நந்தினி வழக்கம்போல காபி கப்புகளுடன் மேலே வந்தாள். இறுக்கமான அவளுடைய முகத்தை பார்த்த அசோக், தானும் எதுவும் பேசாமல் கப்பை கையில் வாங்கிக் கொண்டான். இப்போது இருவரும் மெளனமாக பால்கனியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அசோக் பக்கவாட்டில் திரும்பி தன் மனைவியின் முகத்தை ஒரு தடவை பார்த்தான். அவளுடைய அழகு முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. அவளுடைய பார்வை எங்கோ தூரமாக நிலை குத்தி போயிருந்தது. நேற்று அவள் நடந்து கொண்ட விதம் எல்லாம் இப்போது அசோக்கின் மனதுக்குள் மீண்டும் படமாக ஓடியது. நினைக்க நினைக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நந்தினி இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களாகவே அவன் மனதில் இருந்த அந்த சந்தேகம் இப்போது இன்னும் வலுவடைந்திருந்தது. 'நான் விதித்திருந்த எல்லையை இவள் தாண்டி செல்ல முயலுகிறாள்..!!' "கோவமா என் மேல..??" அசோக்தான் மெல்ல ஆரம்பித்தான்.

"கோவமா..?? அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. எனக்கு என்ன கோவம்..??" நந்தினி இயல்பான குரலில் சொல்ல முயன்றாள். "ம்ம்.. நேத்து என்னாச்சு உனக்கு திடீர்னு..? என்னைப் பத்திதான் உனக்கு நல்லா தெரியும்ல.. அப்புறமும் ஏன் அப்படிலாம் நடந்துக்கிட்ட..?" "அறிவில்லாம அப்படி நடந்துக்கிட்டேன்.. விடுங்களேன்..!!" "ம்ம்ம்ம்...!!! தேவையில்லாத ஆசைலாம் வேணாம் நந்தினி.. நாம இப்படியே இருந்திடலாம்.. அதுதான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..!! புரியுதா..??" அசோக் அவ்வாறு சொன்னதும் இப்போது நந்தினி தன் முகத்தை திருப்பி தன் கணவனை கூர்மையாக பார்த்தாள். முறைத்தாள் என்று கூட சொல்லலாம். சில வினாடிகள் அவ்வாறு முறைத்தவள், அப்புறம் சற்று இறுக்கமான குரலிலேயே கேட்டாள். "நான் உங்களை ஒன்னு கேக்கவா..?" "கேளு..." "எதுக்காக என்னை சூஸ் பண்ணுனீங்க..??" "நான் எங்க சூஸ் பண்ணினேன்.. அப்பாதான் சூஸ் பண்ணினார்..!!" "ஆனா.. 'வேற பொண்ணா இருந்தா முடியாதுன்னு சொல்லிருப்பேன்.. நீன்றதாலதான் இப்போ டீல் பேசிட்டு இருக்கேன்'னு சொன்னீங்களே.. அது ஏன்..?? என்னையும் வேணாம்னு சொல்லிருக்கலாமே..??" - 'வேணான்னு சொல்லிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேனே..?' என்பது மாதிரி இருந்தது அவளுடைய குரல். "உனக்கு அந்த டீல் ஓகே இல்லைன்னு சொல்லிருந்தா.. உன்னையும் வேணாம்னுதான் சொல்லிருப்பேன்..!!" "ப்ச்.. நான் கேக்குறது புரியலையா..?? எங்கிட்ட டீல் பேசனும்னே மொதல்ல உங்களுக்கு ஏன் தோனுச்சு..??" நந்தினியின் கேள்வி தெளிவாக, கூர்மையாக இருக்க, அசோக் சற்று நிதானித்தான். அவளுடய முகத்தையே சில வினாடிகள் வெறுமையாக பார்த்தான். அப்புறம் காபியை ஒருமுறை உறிஞ்சிவிட்டு சொன்னான். "உனக்குத்தான என்னை பிடிக்காது..?? நீதான எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்ட..?? அதான்..!!" "எ..எனக்கு புரியலை..!!" "சரி.. புரியிற மாதிரி சொல்றேன்..!! காலேஜ்ல நான் எப்படி இருந்தேன்..?? நான் அப்படி இருந்தப்போவே உனக்கு என்னை புடிக்கலை.. இப்போ எனக்கு இந்த மாதிரிலாம் ஹேபிட்ஸ் வேற.. உனக்கு சத்தியமா என்னை புடிக்கவே போறது இல்லைன்னு நெனச்சேன்..!! உண்மையை சொல்லு நந்தினி.. இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கிறப்போ.. உனக்கு என் மேல கொஞ்சமாவது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததா.. நான் உனக்கு நல்ல புருஷனா இருப்பேன்னு உன் மனசுல ஒரு ஓரத்துலயாவது ஒரு எண்ணம் இருந்ததா..?? இல்லைல..?? உன் குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்.. அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சிருக்கேன்னும் நான் புரிஞ்சுக்கிட்டேன்.. அதையே காரணமா வச்சு இந்த கல்யாணம் நடந்தா.. நீ எப்போவுமே என்னை நெருங்க மாட்டேன்னு எனக்கு தோணுச்சு.. ஒரு புருஷனா எங்கிட்ட இருந்து நீ எதையும் எப்போவும் எதிர்பார்க்க மாட்ட, என் இஷ்டத்துக்கு என்னை இருக்க விடுவேன்னு நெனச்சேன்..!! 'அப்பாவும் தொல்லை பண்றாரு.. சரி அவ கிட்ட டீல் பேசி பாக்கலாம்.. ஓகேன்னு சொன்னா.. கல்யாணம் செஞ்சுக்கலாம்..'னு ப்ளான் போட்டேன்..!!" அசோக் அமைதியான குரலில் சொல்லி முடிக்க, நந்தினி தன் கணவனின் முகத்தையே ஒருமாதிரி ஆசையும், ஏக்கமுமாய் பார்த்தாள். அவளுடைய மனதுக்குள் அந்த குரல்.. 'ஆமாம்.. நானும் அப்படித்தான் நினைத்து இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்.. ஒரு கணவனாக உன்னிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது என்ற எண்ணத்துடன்தான் உனக்கு கழுத்தே நீட்டினேன்..!! ஆனால்.. ஆனால் இப்போது.. என்னால் அப்படி இருக்க முடியவில்லை.. என் மனம் அலைபாய ஆரம்பித்து விட்டது.. மயக்கி விட்டாய் என்னை நீ..!! ஓரிரு மாதங்களாய் சேர்ந்திருந்த உன்மீதான நல்ல அபிப்ராயத்துடன்.. நீ என்னை எந்த அளவு காதலித்திருக்கிறாய் என்ற உண்மையும் நேற்று கலந்துவிட.. என் மனம் உன் மீது சாய்வதை என்னால் தடுக்க முடியவில்லை..!! புரிகிறதா உனக்கு..?? இல்லை.. உனக்கு புரியாது.. புரியவே புரியாது..!!'ஏய்.. என்னாச்சு.. என் மூஞ்சியையே அப்படி பாக்குற..??" அசோக் கேட்க, "ஒ..ஒண்ணுல்ல.." நந்தினி வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள். "கமான் நந்தினி.. நீ இப்படி டல்லா இருக்குறது எனக்கு சுத்தமா புடிக்கலை.." "இ..இல்லை.. நான் நார்மலாத்தான் இருக்கேன்.." "நோ..!! உன் முகமே சரியில்ல.. அந்த க்யூட் ஸ்மைல் எங்க போச்சு.. காணோம்..?? ம்ம்ம்..?? கமான் நந்தினி.. சிரி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சவும், நந்தினி வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதட்டில் கொண்டு வந்து நிறுத்தினாள். இப்போது அசோக்கும் முகம் மலர்ந்து மெலிதாக புன்னகைத்தான். "ம்ம்.. இப்படித்தான் சிரிச்சுட்டே இருக்கணும்.. ஓகேவா..??" "ஓகே..!!" "ஃப்ரண்ட்ஸ்..??" சொன்ன அசோக் தனது வலது கையை அவளிடம் நீட்ட, அவளும் "ஃப்ரண்ட்ஸ்..!!" என்றவாறு அந்தக்கையை பற்றி குலுக்கினாள். "நானும் உன்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்.. நீயும் எங்கிட்ட எதுவும் எதிர்பார்க்க கூடாது.. ரெண்டு பேருக்கும் எந்த பிரச்னையும் இல்ல..!! ஓகேவா..??" "ஓகே..!!" குலுக்குவதற்காக கோர்த்துக்கொண்ட அசோக்கின் கையை நந்தினிக்கு விட மனசில்லை. இன்னும் இறுகப் பற்றியிருந்தாள். ஒரு சில வினாடிகள் பொறுத்துப் பார்த்த அசோக், அவனே தனது கையை அவளிடம் இருந்து உருவிக் கொள்ள வேண்டியிருந்தது. கையை உருவிக்கொண்டவன் நந்தினியை ஏறிட்டு வித்தியாசமாக பார்க்க, அவளோ கண்களை இடுக்கி அவனை குறும்பாக பார்த்தாள். அவளுடைய பார்வை அசோக்கை என்னவோ செய்தது. நெடுநேரம் அந்த பார்வையை அவனால் பார்க்க முடியவில்லை. வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டே சொன்னான். "கீழ போலாமா..??" "இன்னும் ஒன்னே ஒன்னு கேக்கணும்.." "என்ன..?" "ஆறு வருஷம் முன்னாடி.. நீங்க என்னை எந்த அளவு லவ் பண்ணுனீங்கன்னு.. கௌரம்மா நேத்து சொன்னாங்க.." "ஓ..!! நீதான் அந்த பொண்ணுன்னு கௌரம்மாட்ட சொல்லிட்டியா..?" "இல்ல.. யாரோ ஒரு பொண்ணுன்னு சொன்னாங்க.. நாந்தான்னு அவங்ககிட்ட காட்டிக்கலை.." "நல்லவேளை..!! நீதான்னு சொல்லிருந்தா.. தேவையில்லாத கன்ஃப்யூஷன்..!! அதுலாம் யாருக்கும் தெரியவேணாம் நந்தினி.. நமக்குள்ளே இருக்கட்டும்..!!" "ம்ம்.. சரி.. சொல்லலை..!!" "சரி.. நீ என்னவோ கேட்க வந்தியே.. என்ன..?" அசோக் ஆர்வமாக கேட்க, நந்தினி அவன் கண்களையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டாள். "என்னை பத்தி கௌரம்மாட்ட சொல்றப்போ.. 'எனக்கு இன்னொரு அம்மா கெடைச்சிருக்கா..'ன்னு சொன்னீங்களாமே.. உண்மையா..?" ஒருமாதிரி ஏக்கமாய் நந்தினி அந்த கேள்வியை கேட்டாள். அசோக் அந்த கேள்வியை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. சற்றே திகைத்தான். தடுமாறினான். "அ..அது.. அது.." "சொல்லுங்க அசோக்.. அப்படி சொன்னீங்களா..??" "ஆ..ஆமாம்.. சொன்னேன்..!! அ..அப்போ எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!" 'இப்போ அப்படி தோணலையா..??' - இது நந்தினி தன் மனதுக்குள் ஏக்கமாய் கேட்டுக் கொண்டது. அசோக் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். "................... அப்புறம் அதெல்லாம் இல்லைன்னு ஆயிடுச்சு.. நானும் மனசை தேத்திக்கிட்டேன்.. 'ரெம்பலாம் ஆசைப்படாத.. ரெண்டு அம்மா போதும் உனக்கு..'ன்னு..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். ஆனால் அதை சொல்லும்போதே அவனுடைய குரலில் ஒருவித சோகம் எத்தனித்ததை நந்தினியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 'இவன் ஒரு பெண்ணுடைய அன்புக்காக இன்னும் ஏங்குகிறான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!! ஆனால்.. முன்பு அந்த அன்பை வேண்டி.. இவன் என்னிடம் வருகையில்.. அப்போது நான் ஏற்படுத்திய காயம்.. இவன் மனதின் ஆழத்தில் இன்னும் ஒரு ஆறாத ரணமாக இருக்கிறது..!! அதனால்தான் அத்தகைய அன்பே எனக்கு வேண்டாம் என்று அடம் பிடிக்கிறான்..!! இந்த விஷயத்தில் இப்போது அவசரப்படுவது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.. 'நீ எனக்கு வேண்டாம்..' என்று இவன் முழுமையாக உதறிவிட்டால்..?? இல்லை.. அவசரப்படாதே.. பொறுமையாக இரு.. கொஞ்சம் கொஞ்சமாய் இவனுக்கு உன் அன்பை புரிய வை.. நிச்சயம் மாறுவான்.. அதுவரை காத்திரு..!!' மனதுக்குள் ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த நந்தினி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தாள்.. இவனை விட்டுப் பிடிக்கலாம் என்ற முடிவு..!! முடிவெடுத்ததும், முகத்தில் ஒரு மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு, கணவனை பார்த்து புன்னகையுடன் சொன்னாள். "ம்ம்.. புரிஞ்சிடுச்சு..!! இப்போ கீழ போலாம்..??"சூளைமேடு ஹைரோடில், சுற்றிலும் தென்னை மரங்களாளும் நெட்டிலிங்க மரங்களாளும் சூழப்பட்டு, பிரம்மாண்டமான நிற்கும் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல். அசோக் அந்த ஹோட்டலுக்குள் தன் காருடன் நுழைந்த போது மணி மாலை 6.15. விசிட்டர்கள் பார்கிங் செய்யும் ஏரியாவுக்குள் காரை செலுத்தி அங்கேயே காரை நிறுத்திக்கொண்டான். பின் சீட்டில் இருந்த ப்ரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு ரிசப்ஷன் வந்தான். கருநீல நிற புடவையில், காதில் ஹெட்ஃபோனும், வாயில் மைக்குடனும் இருந்த ரிசப்ஷனிஸ்டை அணுகி, அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவரை தான் சந்திக்க வந்திருக்கும் விஷயத்தை சொன்னான்."ஹிஸ் நேம்..?" ரிஷப்ஷனிஸ்ட் கேட்டதற்கு, "பரமேஸ்வரன் ஃப்ரம் புனே..!!" "நீங்க வர்ற விஷயம் அவருக்கு தெரியுமா..?" "எஸ்.. ஹீ ஸ் வெயிட்டிங் ஃபார் மீ..!!" "யூ ஆர் மிஸ்டர்..??" "அசோக்..!! அசோக் ஃப்ரம் A-ONE Flow Controls..!!" "ஒன் மொமன்ட் ப்ளீஸ்.." சொன்ன ரிஷப்ஷனிஸ்ட் டெலிபோனை கையிலெடுத்து அந்த பரமேஸ்வரன் இருந்த அறைக்கு கால் செய்தாள். அவள் அனுமதி பெறுவதற்காக காத்திருந்த நேரத்தில் அசோக் தன் பார்வையை சுழற்றி, அந்த இடத்தை ஒருமுறை நோட்டமிட்டான். சற்றே பெரிய ரிஷப்ஷன் அறைதான். அறையின் ஒரு பக்கம் ஒரு மல்ட்டிகுஷன் ரெஸ்டாரன்ட். இன்னொரு பக்கம் பார்ட்டி ஹால். இன்று ஏதோ ஓவிய கண்காட்சி என்று வெளியே போர்ட் வைக்கப்பட்டிருந்தது. அறை சீலிங்கின் மையத்தில் ஒரு பெரிய சாண்டலியர் விளக்கு தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு நேர் கீழே கிடந்த மர டேபிளில் நாளிதழ்களும், வார இதழ்களும் பரவி கிடந்தன. அதை சுற்றி போடப்பட்டிருந்த சொகுசு சோபாக்கள் இப்போது காலியாகவே இருந்தன. அங்காங்கே வைக்கப்பட்டிருந்த வெண்கல தொட்டிகளில் வண்ண வண்ணமாய் மலர்கள் முளைத்திருந்தன. "எக்ஸ்க்யூஸ் மீ.." ரிஷப்ஷனிஸ்ட் அழைக்க, "எஸ்.." என்றான் அசோக் திரும்பி. "உங்களை வர சொல்றார்.. தேர்ட் ஃப்ளோர்.. ரூம் நம்பர் 307..!!" "தேங்க்யூ..!!" விசிட்டர்ஸ் புக்கில் ஒரு என்ட்ரி போட்டுவிட்டு, ரிஷப்ஷனிஸ்டிடம் ஒரு புன்னகையை வீசிவிட்டு, அசோக் லிஃப்ட் நோக்கி நடந்தான். மூன்றாவது மாடியை அடைந்து அவள் சொன்ன அறை எண்ணை தேடினான். அறையை கண்டுபிடித்து காலிங் பெல் அடித்து காத்திருந்தான். கதவை திறந்த பரமேஸ்வரன் புன்னகையுடன் வரவேற்றார். "கமான் இன் அசோக்.. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. சொன்ன மாதிரி ஷார்ப் டைம்க்கு வந்துட்டீங்க..!!" இருவரும் உள்ளே சென்றார்கள். பரமேஸ்வரன் ரிஷப்ஷனை அழைத்து காபி கொண்டு வர சொன்னார். சோபாவில் அமர்ந்து கொண்டு, காபியை உறிஞ்சிக்கொண்டு பொதுவாக கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தார்கள். அப்புறம் பரமேஸ்வரன், "உங்க பர்சேஸ் ஆர்டர் பேக்ஸ் வந்துடுச்சு அசோக்.. சைன் பண்ணி ரெடியா வச்சிருக்கேன்.." என்று அந்த கவரை நீட்டினார். அசோக் அந்த கவரை வாங்கி பிரித்தான். உள்ளே இருந்த லெட்டரில் பிரிண்ட் ஆகியிருந்த இலக்கங்களை சரிபார்த்தான். சந்தோஷமானவன் பரமேஸ்வரனை ஏறிட்டு புன்னகைத்தான். "தேங்க்ஸ் ஸார்.." "ஹேப்பிதான அசோக்..?" "ரொம்ப ரொம்ப ஹேப்பி..!! என்னை நம்பி இவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் கொடுத்ததுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..!!" "அதெல்லாம் ஒன்னும் வேணாம் அசோக்.. வேலையை பக்காவா முடிச்சு கொடுங்க.. அது போதும்..!!" "கண்டிப்பா ஸார்.. கவலையே படாதீங்க..!!"தன் ப்ரீஃப்கேஸ் திறந்து அந்த கவரை உள்ளே வைத்த அசோக், உள்ளே இருந்த அந்த ஜ்வல் பாக்ஸை வெளியே எடுத்தான். பரமேஸ்வரனிடம் நீட்டினான். புன்னகையுடனே சொன்னான். "இது உங்க வொய்ஃபுக்கு மிஸ்டர் பரமேஸ்வரன்.. ஒரு சின்ன கிஃப்ட்..!!" "ஐயோ.. எதுக்கு இதெல்லாம் அசோக்..??" பரமேஸ்வரன் இளித்தவாறே அந்த ஜ்வல் பாக்ஸை வாங்கிக்கொண்டார். உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தார். பார்த்ததும் அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒன்று எரிந்தது. மனதில் இருந்த சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டே சொன்னார். "என்ன அசோக்.. எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியான கிஃப்ட்லாம்..??" "பரவால்ல ஸார்.. இருக்கட்டும்.." அவர் அசோக்கிற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு, அந்த ஜ்வல் பாக்ஸை எட்டி மெத்தை மீது வைத்தார். அப்போதுதான் அசோக் அதை கவனித்தான். மெத்தை மீது பிரவுன் ராப்பர் சுற்றப்பட்ட அந்த அகலமான பார்சல். அது என்னவாயிருக்கும் என்று அவனுக்கு ஆர்வம் மேலிட, அதை அவரிடமே கேட்டுவிட்டான். "என்ன ஸார் அது..?" அவன் கேள்விக்கு ஒருகணம் திகைத்த பரமேஸ்வரன், பிறகு உடனே புரிந்துகொண்டு "ஓ.. இதுவா..?? இது ஒரு பெயிண்டிங்..!!" "பெயிண்டிங்கா..?? உங்களுக்கு அதுலலாம் இன்ட்ரஸ்ட் இருக்கா..??" "ஹாஹா..!! எனக்கு ரொம்பலாம் இன்ட்ரஸ்ட் இல்லை அசோக்.. ஆனா என் வொய்ஃபுக்கு இன்ட்ரஸ்ட் உண்டு..!! இந்த ஹோட்டல்ல கீழ ஒரு ஓவிய கண்காட்சி ஒன் வீக்கா போயிட்டு இருக்கு.. ஈவினிங் சும்மா அப்படியே போய் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்.. இது எனக்கு புடிச்சிருந்தது.. என் வொய்ஃபுக்கும் புடிக்கும்னு தோனுச்சு.. வாங்கிட்டேன்..!! உங்களுக்கு பெயிண்டிங்ல இன்ட்ரஸ்ட் உண்டுங்களா..??" "ம்ம்.. கொஞ்சம் கொஞ்சம்..!!" "பிரிக்கிறேன்.. பெயின்டிங்கை பாக்குறீங்களா..?" "ஐயையோ.. வே..வேணாம் ஸார்.. விடுங்க.." அசோக் தயங்கினான். "பரவால அசோக்.. பாருங்க.. இதுல என்ன இருக்கு..?" அவர் அந்த ராப்பரை பிரித்தார். பெயிண்டிங்கை அசோக்கிடம் நீட்டினார். அவனும் கையில் வாங்கி பார்த்தான். மிக அழகாக இருந்தது அந்த பெயிண்டிங். கானகத்தில் இருந்த ஒரு மரக்கிளையில்.. கண்ணனும் ராதையும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்..!! மலராலான ஊஞ்சலில்.. பொன்னாலான பலகையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்..!! கண்ணன் ராதையை காதலாக பார்க்க, ராதையோ வெட்கத்தில் தலை குனிந்திருந்தாள். அவர்களுக்கு முன்பாக நின்று இரண்டு மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. அதற்கு பின்புறம் இருந்த ரம்யமான பின்னணியில் ஒரு நீரோடையும், அதில் நீந்தி செல்லும் அன்னப் பறவைகளும்..!! "அமேஸிங்..!!" வியந்தான் அசோக். "நெஜமாவா..?? நல்லாருக்கா..??" "ரொம்ப நல்லாருக்கு ஸார்.." "என் வொய்ஃபுக்கு புடிக்குமா..?" "கண்டிப்பா புடிக்கும்.. ஷீ இஸ் கோனா லவ் திஸ்..!! இதை வரைஞ்ச ஆர்ட்டிஸ்ட் பேர் என்ன..?" "ஹ்ஹ.. இப்போதான் பார்த்தேன்.. அதுக்குள்ளே மறந்துடுச்சு.. அந்த கார்னர்ல பேர் இருக்கும் பாருங்க.." அவர் சொன்னதும் அசோக் அந்த பெயிண்டிங்கில் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரின் பெயரை தேடினான். பெயிண்டிங்கின் கீழே இடதுபக்க மூலையில் அந்த பேர் எழுதப்பட்டிருந்தது. புனிதா..!! அதை பார்த்ததும் அசோக்கிற்கு ஒரு பரீட்சய உணர்வு எழுந்தது. "புனிதா..???" கேட்டான் பரமேஸ்வரனிடம். "ஆங்.. ஆமாம்.. கரெக்ட்..!! கீழ எக்ஸிபிஷன்ல இருக்குறது எல்லாம் அவங்க வரைஞ்ச ஓவியந்தான்..!!" "ஓஹோ..?? நான் நெனைக்கிறது சரியா இருந்தா.. இந்த புனிதா.. குமுதம் ஆனந்த விகடன் படிக்கிறவங்ககிட்டரொம்ப பாப்புலர்.. இப்போ ரீசண்டா இவங்களோட நெறைய ஓவியம் அந்த புக்ஸ்ல வந்திருக்கு..!!" "ஓ..!! அப்படியா..?? அல்ரெடி இவங்க ரொம்ப பாப்புலரா..??" "சிக்னேச்சர் பாத்தா அப்படித்தான் தோணுது.. எனக்கும் சரியா தெரியலை..!!" "ஓகே ஓகே..!!" அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து அசோக் கிளம்புவதாக சொன்னான். அந்த பரமேஸ்வரன் அவனை மது அருந்திவிட்டு போகலாம் என்று சொன்னார். வேண்டாம் என்று மறுத்த அசோக்கை கட்டாயப் படுத்தினார். வேறு வழியில்லாமல் ஒரே ஒரு லார்ஜ் என்று அசோக் ஒத்துக்கொண்டான். மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் செலவழித்து இருவரும் மது அருந்தி முடித்தனர். அந்த அறையை விட்டு கிளம்பி அசோக் கீழ்த்தளத்துக்கு வந்தான். முதலில் ஹோட்டலை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கார் பார்க்கிங் ஏரியாதான் செல்ல நினைத்தான். அப்புறந்தான் அவனுடைய கண்களில் அந்த ஓவிய கண்காட்சி போர்ட் மீண்டும் பட்டது. உள்ளே சென்று ஒரு முறை ஓவியங்களை பார்வையிட்டு வரலாம் என்று தோன்றியது. ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த ஹாலுக்குள் நுழைந்தான். மிகவும் அமைதியாக இருந்தது அந்த ஹால். அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் ஆங்காங்கே ஜனங்கள் அந்த அறையை நிறைத்திருந்தனர். அனைவரும் அமைதியாக ஓவியங்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் அந்த ஜனங்களுடன் கலந்து கொண்டான். பொறுமையாக ஒவ்வொரு ஓவியமாக ரசித்து ரசித்து பார்வையிட ஆரம்பித்தான். அனைத்து ஓவியங்களையுமே அசோக்கிற்கு மிகவும் பிடித்திருந்தது. பார்த்து பார்த்து வியந்தான். அனைத்தும் கேன்வாஸில் தீட்டப்பட்ட ஓவியங்கள். ஒரு கட்டுக்குள் அகப்படாமல் காட்டாற்று வெள்ளம் போல, அந்த ஓவியங்களை வரைந்த ஓவியனின் தூரிகை பலதரப்பட்ட விஷயங்களை தொட்டிருந்தது. ஆன்மிகம் பேசியது.. அரசியலை ஏசியது.. இயற்கையழகை கொட்டியிருந்தது.. ஈழப்படுகொலையை திட்டியிருந்தது.. தாய்மையின் புனிதம் சொன்னது.. தாயகத்தின் பெருமை உரைத்தது..!! வண்ணம், செறிவு, அளிக்க நினைத்த உணர்வு என அனைத்து வகையிலும் பூரணமான ஓவியங்கள்..!! "பெயிண்டிங்க்ஸ்லாம் பிடிச்சிருக்கா அசோக்..?" பின்னால் இருந்து கேட்ட குரலுக்கு, "மார்வலஸ்..!!" என்று உடனடியாய் பதில் சொல்லிவிட்ட அசோக், அப்புறந்தான் தன்னை யார் பேர் சொல்லி அழைப்பது என்று ஆச்சரியமானான். அந்த ஆச்சரியத்துடனே உடனடியாய் திரும்பி பார்த்தான். திரும்பியவன் ஓரிரு வினாடிகள் அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனான். எதிரே அவன்.. நெற்றிக்கு சந்தனமும்.. கண்களுக்கு கண்ணாடியும்.. உதட்டுக்கு புன்னகையையும் கொடுத்தவாறு.. புருஷோத்தமன்..!!!! "டேய்.. புருசு..!!!!" அசோக் உற்சாகமாக கத்தினான். "அசோக்..!!" புருஷோத்தமனும் முகமெல்லாம் மலர்ச்சியும் சிரிப்புமாய் சொன்னான். "எ..எப்படிடா இருக்குற..??" "நான் நல்லா இருக்கேன் அசோக்.. நீ எப்படி இருக்குற..?" "நல்லா இருக்கேண்டா..!! சென்னைக்கு எப்போ வந்த..?" "மூணு வருஷம் ஆச்சு..!!" "வாட் எ சர்ப்ரைஸ் மேன்..?? பாத்து எவ்வளவு நாளாச்சு..??" "ம்ம்.. ஒரு ஆறு வருஷம் இருக்குமா..?? காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு பாத்தது.. அப்புறம் கொஞ்ச நாள் ஃபோன்ல காண்டாக்ட் இருந்தது.. அப்புறம் நீ யூ.எஸ் போனப்புறம் அதுவும் கட் ஆயிடுச்சு..!!" "ம்ம்.. ஆமாண்டா..!! ஐ கான்ட் பிலீவ் திஸ்.. உன்னை இங்க மீட் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!! ஆமாம்.. நீ எப்படி இங்க..??" "ஹாஹா..!! அதை நான் கேக்கனும்டா..!! நீ எப்படி இங்க..??" "நா..நான்.. இங்க ஒரு.. ஆங்.. பிசினஸ் சம்பந்தமா ஒருத்தரை மீட் பண்ண வந்தேன்.. அப்படியே சும்மா வேடிக்கை பாக்கலாமேன்னு உள்ள வந்தேன்.." "ஓ..!! பிசினஸ்னா.. அப்பாவோட பிசினஸா..??" "ம்ம்.. அதேதான்..!! சரி.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குறேன்னு சொல்லு..!!" "நானும் பிசினஸ்தான்..!! ஐ'ஆம் ஹியர் ஃபார் செல்லிங் ஆல் தீஸ்.." "பு..புரியலை.." "இதெல்லாம் என்னோட பெயிண்டிங்க்ஸ்டா.." புருஷோத்தமன் சொல்ல அசோக் ஆச்சரியத்தில் திளைத்தான். "ஹேய்.. வெ..வெளையாடாத.." "ஹாஹா.. நான் ஏண்டா வெளையாடபோறேன்..? நெஜமாவே இதெல்லாம் நான் வரைஞ்சதுதான்..!!" "அ..அப்போ.. நீதான் புனிதாவா..?? ரீசண்டா குமுதம் ஆனந்த விகடன்ல..??" "ம்ம்.. நானேதான்..!!" "மை காட்.. நீதான் அந்த பாப்புலர் புனிதாவா..??" "ஹாஹா.. ஆமாண்டா..!!" "ஓ.. மேன்.. ஐ கான்ட் பிலீவ் திஸ்..!! ஆமாம்.. அது என்ன புனிதா.. உன் புனைப்பேரா..?""ஹாஹா.. இல்ல.. என் வொய்ஃபோட பேரு.." புருஷோத்தமன் சொல்ல அசோக் அடுத்ததாய் ஒரு அதிர்ச்சிக்கு போனான். 'என்ன சொல்கிறான் இவன்..???' என்று ஒருகணம் குழம்பினான். அந்த அதிர்ச்சியும், குழப்பமுமாகவே புருஷோத்தமனிடம் கேட்டான். "வொய்ஃபா..?? க..கல்யாணம் ஆயிருச்சா உனக்கு..??" "ம்ம்.. ஆயிடுச்சே..!! ஒன்றரை வருஷம் ஆகுது..!!" "எப்படிடா..??" "எப்படின்னா.. எல்லாருக்கும் மாதிரிதான்..!! இன்விடேஷன் அடிச்சு.. ஊரெல்லாம் கூட்டி.. தாலி கட்டி.. மாலை மாத்தி..!!" "ஹேய்.. காமடி பண்ணாத..!!" "பின்ன.. நீ கேக்குறது அப்படித்தான் இருக்குது.." "அதுக்கில்லடா.. உனக்குத்தான் காதல், கல்யாணம் இதெல்லாம் பிடிக்காதே..?" "ஓ..!! அ..அது அப்போ.. காலேஜ் படிக்கிறப்போ..!! இப்போ அதுதான் எல்லாம்னு ஆயிட்டேன்..!!" சிரித்தவாறே புருஷோத்தமன் சொல்ல, அசோக்கிற்கு அந்த வார்த்தைகளை நம்ப மிகவும் கடினமாக இருந்தது. "காதல் ஒரு பாவச்செயல்.. கல்யாணம் ஒரு பெருங்குற்றம்.. அப்டின்லாம் சொன்னியேடா..!!" "அடப்பாவி.. அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்குற நீ..??" "அதெப்படிடா மறக்குறது..??" "ம்ம்.. அது அப்போ ஏதோ.. உலகம் புரியாத வயசுல உளருனது..!! வேணுன்னா.. அதை அப்படியே இப்போ மாத்தி சொல்லவா..??" "எப்படி..??" "காதல் ஒரு புனிதச்செயல்.. கல்யாணம் ஒரு புண்ணிய வாசல்..!! எப்படி இருக்குது..?? ஹாஹா..!!" "ஹேய்.. சிரிக்காதடா.. !! சொல்லு.. என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!" "என்ன தெரிஞ்சாகனும்..??" "எப்படி நீ இப்படி மாறினேன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.." அசோக்கின் முகத்தில் தெரிந்த சீரியஸ்னஸ் பார்த்ததும் புருஷோத்தமன் சற்றே நிதானித்தான். கொஞ்ச நேரம் அசோக்குடைய கண்களையே கூர்மையாக பார்த்தான். ஒருமுறை அந்த ஹாலை சுற்றும் முற்றும் பார்த்தவன், அப்புறம் புன்னகை தோய்ந்த உதடுகளுடன் சொன்னான். "வா.. அப்படி வெளில போயிறலாம்.." அசோக்கும் புருஷோத்தமனும் அந்த ஹாலை விட்டு வெளியே வந்தார்கள். ரிசப்ஷனை கடந்து பக்கவாட்டில் தெரிந்த பாதையில் நடந்தார்கள். ஹோட்டலுக்கு பின்புறமாக இருக்கும் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து செல்லும் வழி அது. கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததுமே அசோக்கிற்கு புகைக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன், முதலில் புருஷோத்தமனிடம் நீட்டினான். "இல்லடா.. நான் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்.." புருஷோத்தமன் மறுக்க, "நெஜமாவா..??" அசோக் ஆச்சரியமானான். "ம்ம்.." "தம்மு மட்டுந்தானா.. இல்ல.. தண்ணியுமா..??" "ஹாஹா.. எல்லாம் விட்டாச்சுடா..!!" "அடப்பாவி..!! தயவு செஞ்சு 'என் பொண்டாட்டி விட சொன்னா.. அதான் விட்டுட்டேன்..'னு மட்டும் சொல்லிடாத.. என்னால தாங்கிக்க முடியாது..!!" "அப்போ நான் ஏதாவது புதுசா பொய் கண்டுபிடிச்சுதான் சொல்லணும்..!! ஹாஹா..!!" சொல்லிவிட்டு சிரித்த புருஷோத்தமனையே அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் உருவி உதட்டில் பொருத்திக் கொண்டான். அதன் முனைக்கு நெருப்பு வைத்து, ஆழமாக புகையை இழுத்து வெளியே விட்டான். ஒரு ஐந்தாறு வினாடிகள் நீடித்த மௌனத்தை கலைத்தவாறு கேட்டான். "சொல்லு புருசு.. அப்படி இருந்த நீ, எப்படி இப்படி மாறுன..?" அசோக் கேட்க, புருஷோத்தமன் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். அப்புறம் அவனது பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டான். கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி, பாக்கெட்டில் இருந்த கர்சீப் எடுத்து அதை துடைத்தவாறே, மெல்லிய குரலில் ஆரம்பித்தான்."உலகத்துல மாற்றம்ன்ற விஷயத்தை தவிர வேற எந்த விஷயமும் நிரந்தரம் இல்ல அசோக்..!! மனுஷ வாழ்க்கையும் அந்த மாதிரிதான்..!! ஒவ்வொரு காலகட்டதுலயும் மனுஷங்களும், அவங்க மனசும் மாறிக்கிட்டேதான் இருக்கும்..!!" "ம்ம்.. தத்துவம்லாம் நல்லாத்தான் இருக்கு..!! உன் மனசு மாறுனதுக்கு காரணம் என்னன்னு சொல்லு புருசு..!!" "நமக்குள்ள காண்டாக்ட் கட் ஆனப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியாதுல..?? நாலஞ்சு வருஷம் முன்னாடி.. லைஃப்ல ரொம்ப மோசமான ஸ்டேஜுக்கு போயிட்டேன் அசோக்..!! அரியர்ஸ்லாம் கிளியர் பண்ண முடியலை.. டிக்ரீ கம்ப்ளீட் பண்ண முடியலை.. எங்கயும் வேலையும் கெடைக்கலை..!! ஒரே ஃப்ரஸ்ட்ரேஷன்.. யாரை பாத்தாலும் ஒரே எரிச்சல்..!! தண்ணி தம்மொட ட்ரக்ஸ் பழக்கமும் சேர்ந்துக்கிச்சு.. போதைக்கு அடிமை ஆகி, ஒருமாதிரி.. வெறி புடிச்சவன் மாதிரி ஆயிட்டேன்..!! அம்மா திட்டுவாங்க.. அப்பா அடிப்பாரு.. தங்கச்சி என்னை பாத்தாலே மெரண்டு ஓடுவா..!! ஒருநாள் போதைல.. செலவுக்கு பணம் தரமாட்டேன்னு சொன்ன அம்மா மண்டைல தோசைக்கல்லை எடுத்து அடிச்சுட்டேன்..!! ஹாஹா.. அம்மா தலைல ரத்தத்தோட துடிச்சுட்டு கெடந்தப்போ.. நான் தட்டுல சோறு போட்டு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..!! நம்ப முடியுதா உன்னால..?? ஹாஹா..!!!" விரக்தியாக சிரித்தவாறே புருஷோத்தமன் கேட்க, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. வாயில் வழியும் புகையுடன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அவனுடைய அமைதியை பார்த்த புருஷோத்தமன் அவனே தொடர்ந்தான். "வீட்ல எல்லாம் என்னை கை கழுவிட்டாங்க அசோக்.. இனி இவன் அவ்வளவுதான்னு முடிவே பண்ணிட்டாங்க.. என்னை வீட்டுக்குள்ள சங்கிலில கட்டி போட்டுட்டாங்க.. எல்லாம் சூனியமா தெரிஞ்சப்போதான் அவ வந்தா..!! புனிதா..!!!! பாவப்பட்ட என் வாழ்க்கையை புனிதமாக்க வந்தா..!! அவ எனக்கு தூரத்து சொந்தம்.. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு என் மேல பிரியம்.. ஹாஹா.. காலேஜ் படிக்கிற டைம்ல.. அவ ஒரு நாள் வெட்கப்பட்டுக்கிட்டே எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. அவ கன்னம் பழுக்குற அளவுக்கு பளார்னு அறைஞ்சிருக்கேன்..!! ஒருவேளை.. அதனாலதான் அவளுக்கு என்னை ரொம்ப பிடிச்சதோ என்னவோ..?? என் மேல அன்பு காட்டுனா.. பரிவு காட்டுனா..!! சாப்பாடு ஊட்டுவா எனக்கு.. நான் பொளேர்னு கன்னத்துல அறைவேன்.. அடிவாங்கிட்டு அடுத்த வாய் சோறு நீட்டுவா..!! ரொம்ப பொறுமை அவளுக்கு.. பொறுமைன்னு கூட சொல்ல முடியாது.. வைராக்கியம்.. என்னை ஒரு நல்ல மனுஷனா மாத்தி காட்டுறேன்னு வைராக்கியம்..!!"

"ம்ம்ம்.." "ட்ரீட்மன்ட் கூட்டி போவா.. எப்போவும் என் கூடவே இருந்து என்னை கவனிச்சுக்குவா.. வெளி உலகத்தை காட்டி நல்லா உத்துப்பாருன்னு சொல்வா..!! கொஞ்சம் கொஞ்சமா நான் மாற ஆரம்பிச்சேன் அசோக்.. அவ என்னை மாத்துனா.. காதல்னா என்னன்னு எனக்கு புரிய வச்சா.. எப்படி வாழணும்னு என்னை உணர வச்சா..!! இந்த பெயிண்டிங்ஸ்.. இந்த திறமை எனக்குள்ள இருக்குறதே அவதான் எனக்கு கண்டு பிடிச்சு கொடுத்தா..!! நான் என் வொய்ஃப் பேர்ல ஓவியம் வரையுறதுல ஒரு காரணம் இருக்குது.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டுறாங்க.. கை தட்டுறாங்க..!! ஆனா.. அந்த பாராட்டுக்கு பின்னால ஒருத்தி பட்ட வேதனை இருக்குது.. அந்த கைதட்டுக்கு பின்னாடி ஒருத்தியோட கண்ணீர் இருக்குது.. இன்னைக்கு நான் ஒரு மனுஷனா உன் முன்னாடி நிக்கிறேன்னா.. அதுக்கு பின்னாடி அவ என் மேல வச்சுருக்குற காதல் இருக்குது..!! புனிதா.. ஷீ இஸ் மை வொய்ஃப்..!!" சொல்லும்போதே புருஷோத்தமனின் குரலில் ஒரு அதீத பெருமிதம் ஒலிப்பதை அசோக்கால் உணர முடிந்தது. புருஷோத்தமன் சொல்லி முடிக்க, அசோக் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தான். புருஷோத்தமனின் முகத்தையே சலனமில்லாமல் பார்த்தவன், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேட்டான். "ஸோ.. நீ மாறிட்ட..??" "ஹாஹா.. வேற என்ன பண்ண சொல்ற..?? எனக்காக இவ்வளவு பண்ணினவ என்கிட்டே இருந்து எதிர்பார்த்தது என்ன தெரியுமா..??" "என்ன..??" "எதுவுமே இல்ல..!!!! அவ என் மேல காட்டின அன்புக்கு பின்னாடி எந்த சுயநலமும் இல்ல..!! ஆனா அவ மனசுல இருந்த ஆசை.. எனக்கு மனைவி ஆகணும்னு..!! அந்த ஆசையை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. நிறைவேத்தி வச்சேன்.. இப்போ அவளுக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துக்குறேன்.. அவ்ளோதான்..!!" "உ..உனக்கு இந்த மாற்றம் பிடிச்சிருக்கா புருசு..?" "என்ன கேள்வி இது அசோக்..?? என்னை பாத்து பயந்தவங்க எல்லாம்.. எதிர வந்தா சிரிக்கிறாங்க.. கை குலுக்குறாங்க.. பைத்தியக்காரன்னு சொன்னவங்க எல்லாம் பாராட்டுறாங்க.. எல்லாத்துக்கும் மேல.. 'எங்கயாவது போய் செத்து தொலைடா..!!'ன்னு சொன்ன அம்மா.. 'சாப்பிட்டு வேலையை பாக்க கூடாதாப்பா..??'ன்னு பாசமா கேக்குறாங்க.. ஒரு மனுஷனுக்கு இதைவிட என்ன வேணும்..??" "ம்ம்ம்.. சரிதான்..!!" அசோக்கிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆறு வருடங்களில் புருஷோத்தமன் இந்த அளவுக்கு மாறிப் போயிருப்பான் என்று அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒரு பெண் அவனை மாற்றி மனைவியும் ஆகியிருக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை. அசோக் அந்தமாதிரி பேச்சிழந்து போய் நின்றிருக்க, இப்போது புருஷோத்தமன் ஆரம்பித்தான். "சரி.. வந்ததுல இருந்து என்னை பத்தியே கேட்டுட்டு இருக்குற..? உன்னை பத்தி ஒண்ணுமே சொல்லலை..?" புருஷோத்தமன் புன்னகையுடன் கேட்க, அசோக்கும் இப்போது மெலிதாக புன்னகைத்தான்."ஹ்ஹ.. என்னை பத்தி என்ன இருக்கு..?" "உனக்கு லைஃப்லாம் எப்படி போகுது..??" "ரொம்ப சந்தோஷமா போகுது.. எந்த பிரச்னையும் இல்ல..!! பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு.. வருஷ வருஷம் டர்ன் ஓவர் அதிகமாகிட்டே போகுது..!!" "ம்ம்.. கல்யாணம் ஆயிடுச்சா..??" "ஆ..ஆயிடுச்சு..!!" "வாவ்.. எப்போ..??" "இ..இப்போதான்.. ஒரு ரெண்டு மாசம் இருக்கும்.." "அப்படியா..?? ரொம்ப சந்தோஷம்..!! வாழ்த்துகள்டா அசோக்..!!" "தேங்க்ஸ்டா..!! அ..அப்புறம்.. பொண்ணு யாருன்னு உனக்கு தெரியாதே..?" அசோக் குறும்பு புன்னகையுடன் கேட்க, "யாரு..??" புருஷோத்தமன் ஆர்வமாக கேட்டான். "நந்தினி..!!" "ஹேய்.. நெஜமாவா..??" "ம்ம்.. எஸ்.." "அடப்பாவி..!! உன்னை யாரும் லவ் பண்ண மாட்டான்னு சொன்ன பொண்ணையே, லவ் பண்ண வச்சிட்டியா..?? கில்லாடிதான் நீ..!!" "ஹாஹா.. இல்லடா.. அது நீ நெனைக்கிற மாதிரி நடந்த மேரேஜ் இல்ல.. வேற மாதிரி.. அரேஞ்ட்..!!" "ஓ.. குட்.. குட்..!! ம்ம்ம்.. அப்புறம்.. எப்படி இருக்குறா.. சுள்ளான்..??" கேட்டுவிட்டு புருஷோத்தமன் சிரிக்க, "ஹாஹா.. நல்லா இருக்குறா..!!" அசோக்கும் சிரித்தான். அவன் சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், வைப்ரேட்டரில் கிடந்த புருஷோத்தமனின் செல்போன் பதறியது. அவன் எடுத்து பேசினான். "சொல்லும்மா.. எங்க இருக்குற..?" "..................................." "ஓ.. வந்தாச்சா..?? அங்கேயே வெயிட் பண்ணு.. ஒரு நிமிஷத்துல வந்துர்றேன்..!!" "..................................." "இங்கதான்மா இருக்குறேன்.. இதோ வந்துர்றேன்..!!" காலை கட் செய்த புருஷோத்தமன், அசோக்கை ஏறிட்டான். புன்னகையுடன் சொன்னான். "என் வொய்ஃப் வந்தாச்சு..!!" "வொய்ஃபா..?? அவங்க இந்த நேரத்துல.. இங்க..??" அசோக் குழப்பமாய் கேட்டான். "ஓ.. உனக்கு தெரியாதுல..? எக்ஸிபிஷன் இன்னைக்கு லாஸ்ட் டே..!! இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு சின்னதா ஒரு பாராட்டு விழா..!! அதுக்காகத்தான் என் வொய்ஃப் வந்திருக்குறா..!!" "ஓஹோ..??" "வா அசோக்.. என் வொய்ஃபை உனக்கு இன்ரோட்யூஸ் பண்ணி வைக்கிறேன்..!!" புருஷோத்தமன் அவசரமாய் முன்னால் நடக்க, அசோக் அவனை பின்தொடர்ந்தான். அந்த குறுகலான பாதையில் நடந்து ரிஷப்ஷனை அடைந்தார்கள். ரிஷப்ஷன் பகுதியை அடைந்ததுமே, அங்கே அசோக் கண்ட காட்சி அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை கொடுத்து அப்படியே உறைய வைத்தது. வெளியே போர்டிகோவில் நின்றிருந்த அந்த கார் நின்றுகொண்டிருந்தது. காருக்கு அருகே அந்த வீல்சேர். அந்த வீல் சேரில் பட்டுப்புடவையை சுற்றிக்கொண்டு, பால்நிறத்தில் சிரித்துக்கொண்டு அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். புனிதா..!!!! 'கால்கள் செயலிழந்து போய்.. எல்லோரையும் போல எழுந்து இயல்பாக நடக்க முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்தான் புருஷோத்தமனின் மனைவியா..??' அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உள்வாங்கி அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமன் புனிதாவை நெருங்கினான். "எங்க போயிட்டீங்க.. இவ்ளோ லேட்டு..?" புனிதா செல்ல கோவத்துடன் கேட்டாள். "ஃப்ரண்ட் வந்திருந்தாங்கம்மா.. பேசிட்டு இருந்தேன்..!!" "ஃப்ரண்டா..? யாரு..?" "இவர்தான்.. பேர் அசோக்.. என் காலேஜ் மேட்.. ஹாஸ்டல்ல நானும் இவரும் ஒரே ரூம்தான் !! ஆறு வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத்தான் மீட் பண்ணுறோம்..!!" "ஓ.. அப்படியா..??" என்று வியந்த புனிதா அசோக்கிடம் திரும்பி, "வணக்கம்ண்ணா..!!" என்று கைகூப்பினாள் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையுடன்."இவதான் அசோக்.. என் வொய்ப் புனிதா..!!" புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைக்க, அசோக்கும் தடுமாற்றமாய் புனிதாவுக்கு வணக்கம் சொன்னான். "சரி.. வா.. உள்ள போகலாம்.." சொன்ன புருஷோத்தமன் புனிதாவை கைகளில் தூக்கிக்கொள்ள முயன்றான். "ஐயோ.. விடுங்க.. நான் நடந்து வர்றேன்.." என்றாள் புனிதா வெட்கத்துடன். "பரவால்லம்மா.. வா.. நான் தூக்கிட்டு போறேன்..!!" புருஷோத்தமன் புனிதாவை தனது கைகளில் அள்ளிக்கொண்டான். புனிதா அவனது கழுத்தை சுற்றி தனது கைகள் இரண்டையும் மாலையாக கோர்த்துக் கொண்டாள். மனைவியை ஏந்திக்கொண்ட புருஷோத்தமன் அசோக்கிடம் திரும்பி சொன்னான். "பங்க்ஷன் ஒரு அரை மணி நேரந்தான் அசோக்.. அப்புறம் டின்னரும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.. நீ இருந்து.. பங்க்ஷன் முடிஞ்சதும் எங்க கூட டின்னர் சாப்பிட்டுதான் கெளம்பனும்.." "ஆமாண்ணா.. வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்.." புருஷனோடு சேர்ந்து புனிதாவும் அசோக்கிடம் கெஞ்சும் குரலில் சொல்ல, "ம்ம்.. ஓகே.. இ..இருக்குறேன்..!!" அதிர்ச்சி முழுதும் விலகாதவனாகவே அசோக் சொன்னான். அப்புறம் புருஷோத்தமனின் பாராட்டு விழா முடிந்து, அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக டின்னர் சாப்பிட்டுவிட்டே அசோக் கிளம்பினான். ஹோட்டலில் இருந்து அவன் கிளம்பியபோது இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. புருஷோத்தமனும், புனிதாவும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விலகாமலே, அசோக் ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் என்னென்று புரியாத ஒருவகை குழப்பம்..!! ஸ்டியரிங் பிடித்திருந்தவன் அவ்வப்போது தன் தலையை திருப்பி, தனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அந்த பொருளை பார்த்துக் கொண்டான். பாராட்டு விழாவில் இறுதியில் புருஷோத்தமன் பேசிய வார்த்தைகள் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. "இன்னைக்கு என் திறமைக்கு கிடைச்சிருக்குற இவ்வளவு பெரிய அங்கீகாரம்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப பெருமையா இருக்கு..!! உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்.. என்னோட ஒவ்வொரு ஓவியங்களுக்கும் பின்னாடி.. ஒரு உயிருள்ள ஓவியத்தோட விலை மதிப்பில்லாத தியாகம் ஒளிஞ்சிருக்கு.. அந்த ஓவியம் என் மனைவி புனிதாதான்..!! என்னோட எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான்.. அவ இல்லைன்னா.. இன்னைக்கு நான் இங்க உங்க முன்னாடி இல்ல..!! ஐ'ஆம் வெரி வெரி ப்ரவுட் ஆஃப் மை வொய்ஃப்..!! அவ எனக்கு கெடைச்சதுக்கு நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!! தேங்க்ஸ் புனிதா.. தேங்க்ஸ் ஃபார் கமிங் இன் மை லைஃப்..!!" 'இப்படி ஒரு மனிதன் மாறிப் போவானா..?? இவன் சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நான் என் வாழ்க்கை பாதையை நிர்ணயித்திருக்கிறேன்..!! இவன் என்னடாவென்றால்..?? இது எப்படி சாத்தியம்..??' குழம்பிய அசோக் மீண்டும் விழிகளை சுழற்றி, பக்கத்து இருக்கையில் இருந்த அந்த பொருள் மீது பார்வையை வீசினான். இப்போது அசோக்கிற்கு வேறு சில வார்த்தைகள் காதில் ஒலித்தன. அவர்களோடு அமர்ந்து அவன் டின்னர் சாப்பிடும்போது, அந்த புனிதா வெள்ளந்தியாக அசோக்கிடம் சொன்ன வார்த்தைகள். "இவரு எல்லாம் ரொம்ப ஓவரா சொல்றாருண்ணா.. நான் என்ன அப்படி பெருசா பண்ணிட்டேன்..?? ஏதோ கொஞ்சம் ஆறுதலா பேசுவேன்.. பசில இருக்குறப்போ சாப்பாடு போடுவேன்.. அவரோட மைண்டை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்.. அவ்ளோதான்..!! அவருக்கே மாறணும்னு ஆசை இருந்திருக்கு.. அதான் சீக்கிரமே அந்த ஸ்டேஜ்ல இருந்து வெளில வந்துட்டாரு..!! அப்புறந்தான் எனக்கும் ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா.. இவரு அதுக்கப்புறமும் என்னை கொஞ்ச நாள் காய விட்டாரு பாருங்க.. ஹாஹா.. என்னால மறக்கவே முடியாது.. இவருக்கு ரொம்பத்தான் கொழுப்பு..!! மனசுல இருக்குறதை எங்கிட்ட சொல்லவே இல்லண்ணா.. நல்லா சிரிச்சு பேசுவாரு.. பிரியமா நடந்துப்பாரு.. ஆனா என் மேல இருக்குற லவ்வை சொல்லவே இல்ல.. எனக்கு ஒரே கொழப்பமா இருக்கும்.. நானா சொல்றதுக்கும் எனக்கு தயக்கம்.. ஏற்கனவே சொன்னப்போதான் அறைஞ்சிட்டாரே..? இவரே 'ஐ லவ் யூ..' சொல்லிட மாட்டாரான்னு ஏங்குவேன்..!! ஆனா.. இவரு மொத மொதல்லா இவரோட காதலை எங்கிட்ட எப்போ சொன்னாரு தெரியுமா..?? எனக்கு ஆக்சிடன்ட்ல ரெண்டு காலும் போய்.. ஹாஸ்பிட்டல்ல படுத்து கெடக்குறப்போ.. அழுதுட்டே சொல்றாரு.. 'ஐ லவ் யூ'ன்னு..!! யாருண்ணா சொல்வாங்க அப்படி..?? இவங்க வீட்டுல கூட கொஞ்சம் யோசிச்சாங்க.. ஏன்.. நான் கூட வேணாம்னு அழுது புரண்டு ஒரு வழி பண்ணுனேன்..!! ஆனா.. இவர் யார் பேச்சையும் கேட்காம, ஒத்தைக்கால்ல நின்னு.. ரெண்டு காலும் இல்லாத என் கழுத்துல தாலி கட்டுனாரு..!! யாருண்ணா செய்வாங்க அப்படி..?? நான்தாண்ணா இவர் கெடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!" புருஷோத்தமனும், புனிதாவும் உதிர்த்த வார்த்தைகள் திரும்ப திரும்ப அசோக்கின் நினைவுக்கு வந்து போயின. அவனது மூளையில் பலவித குழப்ப அதிர்வுகளை ஏற்படுத்தி சென்றன. திருவான்மியூரில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்த போது, அசோக் மீண்டும் தன் தலையை திருப்பி பக்கத்து இருக்கையை பார்த்தான். பக்கத்து இருக்கையில் கவர் பிரிக்கப்பட்டு அந்த ஓவியம் இருந்தது..!! சற்றுமுன் புருஷோத்தமன் அசோக்குக்கு பரிசாக அளித்த அவனே வரைந்த ஓவியம்..!! புதுமணப்பெண் ஒருத்தி, உடலெங்கும் ஜொலிக்கும் நகைகளுடன், தலையில் சூடிய மல்லிகையுடன், புகுந்த வீட்டில் விளக்கேற்றுவது மாதிரியான ஓவியம் அது..!! விளக்கில் இருந்து கிளம்பிய வெளிச்சத்தை விட, அந்தப்பெண்ணின் முகத்திலும் சிரிப்பிலும் இருந்து கிளம்பிய வெளிச்சம், அந்த வீட்டையே ஒளிமயமாக்கிக் கொண்டிருக்க, பின்னணியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்..!! அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க, அசோக்கின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.. காரணம் தெரியாத குழப்பம்..!! ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம் பட்டென்று மாறி.. அந்த இடத்தில் நந்தினியின் முகம் தோன்ற.. தோன்றியதும் அசோக்கை பார்த்து விஷமமாக புன்னகைக்க.. அசோக் உடனடியாய் தன் பார்வையை அந்த ஓவியத்தில் இருந்து விலக்கிக் கொண்டான்..!!அதன் பிறகு ஒரு வாரம் கழித்து..!! அது ஒரு நண்பகல் நேரம். இடம் அசோக்கின் அடையாறு ஆபீஸ்..!! அசோக்கிற்கு எதிரே நந்தினி அமர்ந்திருந்தாள். தான் சமைத்து எடுத்து வைத்திருந்த மதிய உணவு ஐட்டங்களை, ஹாட் பாக்ஸ் திறந்து, டேபிள் மீது அடுக்கிக் கொண்டிருந்தாள். பசியில் இருந்த அசோக், நாவில் எச்சில் ஊற மனைவியிடம் கேட்டான். "இன்னைக்கு என்ன சமையல் நந்தினி..??" "சாம்பார், ரசம், அப்பளம், பாவக்கா பொரியல்..!!" "பாவக்காயா..??" அசோக் முகத்தை சுளித்தான். "என்னாச்சு.. மூஞ்சி ஏன் அப்படி போகுது..??" "பாவக்கா எனக்கு பிடிக்காதே.." "ஏன்..??" "கசக்கும் நந்தினி.." "நல்ல விஷயம் எல்லாம் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும்.. கசப்பு புடிக்காதுன்னா, நல்லதும் எதுவும் புடிக்காதுன்னு அர்த்தம்..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இப்போலாம் நீ எது பேசினாலும்.. பொடி வச்சே பேச ஆரம்பிச்சுட்ட..!! பாவக்கா கசக்கும்னு சொன்னதுக்கு.. இப்படி ஒரு பாடாவதி தத்துவம் தேவைதானா..?" "ச்சே.. அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. பாவக்கா கசப்பா இருந்தா என்ன.. அது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா..? பசியை தூண்டும்.. பித்தத்தை குறைக்கும்.. வயித்துல இருக்குற பூச்சிலாம் சாகடிக்கும்.. கல்லீரலுக்கு ரொம்ப நல்லது.." "அடச்சை.. போதும் நிறுத்து..!! வாய்க்கு ருசியா ஆக்கி போடுடின்னா.. வலம்புரி ஜான் மாதிரி அட்வைஸ் பண்ணிக்கிட்டு..??" அசோக் சலிப்பாக சொல்ல, நந்தினிக்கு சிரிப்பு வந்தது. "ஹாஹாஹாஹா.." "சிரிக்காத.. எடுத்து வை.. சாப்பிட்டு தொலைக்கிறேன்.." அசோக் சட்டையின் கையை மடித்து விட்டுக்கொண்டே சொன்னான். நந்தினி கூடையில் இருந்த ப்ளேட்டை எடுத்து அசோக் முன்பு வைத்தாள். சாதத்தை கொட்டி, சாம்பாரை அள்ளி ஊற்றினாள். பொரியலை ஒரு கரண்டியில் எடுத்து வைத்தாள். அசோக் சாதத்தை பிசைவதற்காக கையை கொண்டு சென்றபோதுதான், அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. உடனே அசோக் தலையை நிமிர்த்தி வாசலை பார்த்தான். வாசலில் கற்பகம் கையில் ஒரு பேப்பருடன் நின்று கொண்டிருந்தாள். அசோக் சாப்பிட தயாராகி கொண்டிருப்பதை பார்த்ததும், தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று இப்போது தயங்கினாள். "ஓ.. ஸாரிடா.. சாப்பிட்டுக்கிட்டு இருக்கியா..??" "இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலை கற்பு.. இனிமேதான்.. சொல்லு.." "இல்ல.. நீ சாப்பிடு.. நான் அப்புறம் வர்றேன்.." "பரவால.. சொல்லு.. என்ன விஷயம்..?" "இ..இது.. அந்த புனே பார்ட்டிக்கு இதை ஃபேக்ஸ் அனுப்பனும்.. நீ ஒருதடவை பாத்து ஓகே சொல்லிட்டா.. அனுப்பிடலாம்..!!" "சரி கொண்டா.. பாக்குறேன்.." "இல்லடா.. நீ சாப்பிடு.. நான் போயிட்டு அப்புறமா வர்றேன்.." "அட பரவால்லம்மா.. வா..!!" கற்பகம் இப்போது தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கை நெருங்கியவள், கையிலிருந்த லெட்டரை அவனிடம் நீட்டினாள். அவனும் அதை வாங்கி மேலோட்டமாக பார்வையை வீசி, மேட்டரை சரி பார்க்க ஆரம்பித்தான். கற்பகம் இப்போது நந்தினியின் பக்கமாக திரும்பினாள். "ஹாய்.." என்றாள் ஒருவித ஸ்னேக புன்னகையுடன். நந்தினியும் பதிலுக்கு "ஹாய்.." என்றாள் சற்றே இறுகிப் போன முகத்துடன். "நல்லா இருக்கீங்களா..?" "ம்ம்.. நல்லாருக்கேன்.." அவ்வளவுதான்...!! மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாதவள் போல, நந்தினி தலையை குனிந்து கொண்டாள். என்னவென்று புரியாத கற்பகமும் பார்வையை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டாள். அதற்குள் அசோக் அந்த லெட்டரை சரிபார்த்து, அப்புறம் அதில் கையொப்பமும் இட்டு, கற்பகத்திடம் திரும்ப நீட்டினான். நீட்டியவன் புன்னகையுடன் கற்பகத்திடம் கேட்டான்."சாப்பிடுறியா கற்பு..?" "ஹையோ.. இல்லடா.. நீ சாப்பிடு..!!" "பாவக்கா பொரியல் கற்பு.. அதுவும் என் பொண்டாட்டியோட கைவண்ணத்துல..!! எங்க போனாலும் கெடைக்காது.. இன்னொரு சான்ஸ் அமையாது..!!" "ஐயோ.. பாவக்காயா..?? எனக்கு வேணாம் சாமி.."

"ஏன்..?" "எனக்கு கசப்பே பிடிக்காது..!!" "எனக்குந்தான் பிடிக்காது.. நாங்கல்லாம் சாப்பிடலையா..??" "நீ சாப்பிடு.. என்னை ஆளை விடு.." இதழில் ஒரு புன்முறுவலுடன் சொல்லிவிட்டு கற்பகம் நகர்ந்தாள். தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்த நந்தினி, கற்பகம் செல்வதையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் கதவை சாத்திவிட்டு சென்ற பிறகும், மூடிய கதவையே சில வினாடிகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். "ஏய்.. என்ன அங்கேயே பாத்துட்டு இருக்குற..? அந்த அப்பளத்தை எடுத்து வை..!!" அசோக்கின் குரல் நந்தினியின் கவனத்தை கலைக்க, அவள் சுதாரித்துக்கொண்டு உடனே இயல்புக்கு திரும்பினாள். அப்பளத்தை எடுத்து வைத்தாள். அசோக்கை பார்த்து போலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள். அப்புறம் அசோக் சாப்பிட்டு முடிக்கும் வரை நந்தினி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அவனுக்கு உணவு பரிமாறினாள். தினமும் பெரும்பாலும் அவளும் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவாள். அன்று ஏனோ 'நான் வீட்ல போய் சாப்பிட்டுக்குறேன்..' என்று சொல்லிவிட்டாள். அசோக் சாப்பிட்டு முடித்ததும், உணவு கொண்டு வந்த பாத்திரங்களை எல்லாம் அங்கிருந்த வாஷ் பேசினிலேயே கழுவிக்கொண்டாள். பாத்திரங்களை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அறையை விட்டு வெளியே வந்தவள், முதலில் ஆபீஸ் வாசலை நோக்கித்தான் நடந்தாள். பாதி தூரம் நடந்த நிலையில்தான், கடந்த அரை மணி நேரமாக அவள் மனதில் இருந்த உறுத்தல் உச்சபட்சத்தை எட்டியது. நடப்பதை நிறுத்தி அங்கேயே தயங்கி நின்றாள். சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தவளாய், எதிர்ப்பட்ட பியூனிடம் கேட்டாள். "இங்க.. கற்பகம் எங்க உக்காந்திருப்பாங்க..?" "அங்கேயேதான்மா.. ஐயா ரூமுக்கு பக்கத்துலையே.. சைடுல போனா.. அந்த கடைசில அவங்க சீட்டு.." "ஓ.. சரிங்க.. நான் போய் பாத்துக்குறேன்.." நந்தினி வந்த வழியிலேயே திரும்பி நடந்தாள். அந்த பியூன் குறிப்பிட்ட பாதையில் திரும்பினாள். அவள் செல்லும் வழியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் எழுந்து அவளுக்கு வணக்கம் சொல்ல, இவளும் பதில் வணக்கம் செலுத்திக்கொண்டே நடந்து சென்றாள். அந்த வரிசையில் கடைசியாக தனியாக அமர்ந்திருந்தாள் கற்பகம். நந்தினி தன் இடத்தை நோக்கி நடந்து வருவதை பார்த்ததும், ஒரு கணம் எதுவும் புரியாமல் விழித்தாள். மெல்ல தன் சீட்டில் இருந்து எழுந்து நின்றாள். "வா..வாங்க.." என்றாள் தடுமாற்றமாய். "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." நந்தினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். "எ..என்ன..?" "நானும் ரொம்ப நாளா பாத்துட்டுதான் இருக்கேன்.. ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு நெனச்சதுதான்.. கேக்கவா..?" "கே..கேளுங்க.." கற்பகம் சற்று உதறலாகவே சொன்னாள். ஓரிரு வினாடிகள் நிதானித்த நந்தினி, பிறகு கற்பகத்தின் கண்களை கூர்மையாக பார்த்து முறைத்தவாறு கேட்டாள். "சம்பளம் கொடுக்குற முதலாளியை.. உங்க ஆபீஸ்ல எல்லாரும் போடா வாடான்னுதான் கூப்பிடுவீங்களா..??" அந்த கேள்வியில் இருந்த வீரியம் கற்பகத்தை நிலைகுலைய செய்தது. அந்த மாதிரி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்த்திரவில்லை. விழிகளை விரித்து லேசாக அதிர்ந்தாள். பதில் சொல்ல தடுமாறினாள்."இ..இல்ல.. நா..நான் மட்டுந்தான் அசோக்கை அ..அப்படி.." கற்பகத்தின் வாயில் இருந்து வார்த்தைகள் திக்கி திணறி வெளிப்பட்டன. "ஓ.. நீங்க மட்டுந்தானா..?? நான் கூட எல்லாருமோன்னு நெனச்சேன்..!!" நந்தினியின் வார்த்தைகளில் ஒரு விஷமம் கொப்பளித்தது. கற்பகம் அதை புரிந்துகொள்ளாமல், "இ..இல்ல.. நான் மட்டுந்தான்.." என்றாள். கம்மலான குரலில் சொன்ன கற்பகம், நந்தினியின் முகத்தை ஏறிட்டு பார்க்க இயலாமல், தன் தலையை லேசாக குனிந்து கொண்டாள். அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் முறைத்துக் கொண்டிருந்த நந்தினி, அப்புறம் குத்தலாக சொன்னாள். "இங்க பாருங்க.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு எனக்கு தெரியாது.. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல..!! நான் சொல்ல வந்தது இதுதான்.. இனிமே நான் இருக்குறப்போ.. என் முன்னாடி என் புருஷனை போடா வாடான்னு சொல்லாதீங்க.. என்னால அதை தாங்கிக்க முடியலை.. நீங்க அந்த மாதிரி சொல்றப்போ.. எனக்கு அப்படியே.." முகத்தை ரௌத்திரமாக்கிக்கொண்டு சொன்ன நந்தினி, பாதியிலேயே நிறுத்தினாள். அப்புறம் சில வினாடிகள் எடுத்துக்கொண்டு, கண்களை மெல்ல மூடி, மூச்சை சீராக வெளியிட்டு தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அப்புறம் அவளுடைய இமைகளை பிரித்து, தன்னையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த கற்பகத்திடம், "புரியுதா..??" என்றாள். "பு..புரியுது..!! ஸாரிங்க.. இ..இனிமே நான் அப்படி சொல்ல மாட்டேன்..!!" "ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்.." "என்ன..?" "என் புருஷனுக்கு மரியாதை கொடுத்தா மட்டும் போதும்.. எனக்கு மரியாதை தரனும்னுலாம் அவசியம் இல்ல.. இந்த போங்க வாங்கலாம் வேணாம்.. போ வான்னே சொல்லுங்க.. இல்லனா போடி வாடின்னு சொல்லுங்க.. எனக்கு பரவால..!! சரியா..?? நான் வர்றேன்..!!" நந்தினி சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள். தலையை கவிழ்த்திருந்த கற்பகம், நந்தினி போவதையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சற்று தொலைவாக சென்றதும், உதட்டை சுளித்து 'வே..' என்று நந்தினிக்கு தெரியாமல் பழிப்பு காட்டினாள். அன்று மாலை அதே ஆபீசில்.. கீழே இருக்கும் டீக்கடையில் வேலை பார்க்கும் பையன், ஃப்ளாஸ்கில் கொண்டு வந்த காபியை, ஆபீசில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கப்பில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டு கப்புகளில் காபி நிரப்பிக்கொண்ட கற்பகம், இரண்டையும் எடுத்துக் கொண்டு அசோக்கின் அறைக்குள் நுழைந்தாள். ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றை அவனுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டே உறிஞ்ச ஆரம்பித்தாள். "அந்த ஃபேக்ஸ் அனுப்பியாச்சா கற்பு..??" அசோக்கும் காபி உறிஞ்சிக்கொண்டே கேட்டான். "ம்ம்.. அனுப்பியாச்சுங்க ஸார்..!!" கற்பகத்தின் குரலில் தொணித்த ஒரு கிண்டலை அசோக் கவனிக்கவில்லை. "அப்புறம்.. அந்த டெல்லி பார்ட்டி.. பேமன்ட் வரலை.. ஃபால்லோ-அப் பண்ண சொல்லிருந்தேன்..!!" "ஃபோன் பண்ணி கேட்டேங்க ஸார்.. செக் நாளைக்கு ரெடியாகிடும்னு சொல்லிருக்காங்க ஸார்..!!" இந்தமுறை அசோக் அந்த எள்ளலை புரிந்துகொண்டான். கற்பகத்தை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தான். ஒருமாதிரி குழப்பமான குரலில் கேட்டான். "ஏய்.. என்னாச்சு இன்னைக்கு.. ஸார் ஸார்னு ஓவர் மரியாதைலாம்..??" "அதுவா..?? எல்லாம் உங்க பொண்டாட்டி மேடத்தோட கட்டளைதான் ஸார்..!! இனி நான் உங்களை வாங்க ஸார்.. போங்க ஸார்னுதான் கூப்பிடணுமாம்..!!" "ஹாஹா.. இது எப்போ நடந்தது..??" அசோக் ஒரு புன்முறுவலுடன் கேட்டான். "இன்னைக்குத்தான்..!! மதியம்.. மேடம் என் எடத்துக்கே வந்து பெருசா ஒரு கம்ப்ளயின்ட் வாசிச்சுட்டு போயிட்டாங்க..!! என் புருஷனை இனிமே வாடா போடான்னுலாம் கூப்பிட கூடாதுன்னு.. ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்காங்க அம்மணி..!!" "ப்ச்.. நீ எப்போவும் போல என்னை கூப்பிடு கற்பு.. அவ கெடக்குறா.. லூசு..!!" "ஹேய்.. ஏண்டா அவளை திட்டுற..?? அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு..??" "ஓ.. அவளுக்கு நீயும் சப்போர்ட்டா..?" "ஆமாம்.. ஒரு பொண்டாட்டின்றவ வேற எப்படி இருப்பான்னு நீ எதிர்பார்க்குற..? என்னால அவளோட ஃபீலிங்க்சை புரிஞ்சுக்க முடியுது அசோக்.. அவ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நான்தான் இத்தனை நாளா அறிவில்லாம நடந்துக்கிட்டேன்.. இனிமே நான் உன்னை மரியாதை இல்லாம கூப்பிட போறது இல்ல..!!" "ஏய்.. அவ சொன்னதுக்காக நீ ஏன் உன்னை மாத்திக்கிக்கனுமா..?""யார் சொன்னா என்ன..? தப்புன்னு தெரிஞ்சா மாத்திக்க வேண்டியதுதான்..!! ஆனா.. அதுக்காக நீ ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத.. உன் பொண்டாட்டி அந்த வகைல ரொம்ப நல்லவடா.. அவ இருக்குறப்போத்தான் உன்னை மரியாதையா கூப்பிட சொல்லிருக்கா.. அவ இல்லாதப்போ உன்னை என்ன வேணா சொல்லி கூப்பிட்டுக்கலாமாம்.. நாய், பேய், எருமை, பன்னின்னு கூட கூப்பிட்டுக்கோங்கன்னு சொல்லிட்டா..!!" "ஹாஹா.. இதுலாம் அவ சொன்னதா.. இல்ல நீ போடுற எக்ஸ்ட்ரா பிட்டா..??" "புரிஞ்சா சரிதான்..!! ஆமாம்.. நீ என்னவோ அவளுக்கு உன் மேல எந்த அக்கறையும் இல்ல.. நீ என்ன செஞ்சாலும் அவளுக்கு கவலை இல்லைன்னு சொன்ன.. ஆனா அம்மணியை பாத்தா அப்படி தோணலையே..? உன் மேல ரொம்ப பிரியமா இருக்காங்க..??" "ம்ம்.. எனக்கும் ஒன்னும் புரியலை.. கொஞ்ச நாளா அவளுக்கு ஏதோ ஆயிடுச்சு கற்பு..!!" "என்ன ஆச்சு..?" கற்பகம் கேட்க, கடந்த சில வாரங்களாக நந்தினி நடந்து கொள்ளும் முறைகளை பற்றி அசோக் அவளிடம் பொறுமையாக விளக்கினான். முக்கியமாக அன்றொரு நாள் இரவு அவனுடைய காலேஜ் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு வந்து வழிந்தது, அடுத்த நாள் காலை காபி அருந்துகையில் அவள் உருகியது.. எல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாககேட்டுக் கொண்டிருந்த கற்பு, அவன் சொல்லி முடித்ததும் நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டவாறு, சற்றே கிண்டலான குரலில் சொன்னாள். "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சந்தேகமே இல்லை.. அம்மணிக்கு உன் மேல லவ்ஸ் பிச்சுக்கிச்சு.." "ஹேய்.. வெளையாடாத கற்பு.." "நான் என்ன வெளையாடுறேன்..? நீ சொன்னதை வச்சுதான் சொல்றேன்.. அவ உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..!! ஐ'ஆம் ஹண்ட்ரட் பர்சண்டேஜ் ஷ்யூர்..!!" "எனக்கும் அந்த டவுட்டு இருக்கு கற்பு.. ஆனா.." "என்ன ஆனா..??" "அவ ஏன் இப்படிலாம் அறிவில்லாம பண்ணுறா..??" "அட கொடுமையே.. கட்டுன புருஷனை லவ் பண்றது அறிவுகெட்டதனமா..?" "ப்ச்.. என்ன கற்பு.. நீயும் புரியாம பேசிக்கிட்டு..?? எதையும் எதிர் பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டுத்தான கல்யாணமே பண்ணிக்கிட்டோம்..??" "நீதாண்டா புரியாம பேசுற.. இதுலாம் கண்டிஷன் போட்டு கண்ட்ரோல் பண்ணி வைக்கிற விஷயமாடா..?? நம்ம ஊர் பொண்ணுகளுக்குலாம் தாலி கட்டுனவுடனே எங்க இருந்துதான் வருமோ.. புருஷன் மேல அந்த பிரியமும், பொசசிவ்னசும்..!! பொண்ணுகளை பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை அசோக்.. நீ பழகுற அந்த மோசமான பொண்ணுகளை பாத்து பாத்து.. எல்லாம் அப்படித்தான் இருப்பாங்கன்னு நெனச்சுட்டியோ என்னவோ..?? உண்மையான ஒரு தமிழ்ப்பொண்ணை இப்பத்தான பாக்குற.. போக போக பொண்ணுகளை பத்தி நல்ல புரிஞ்சுக்குவ..!!" "என்ன பூச்சாண்டி காட்டுறியா..??" "இல்ல.. என மனசுக்கு தோணுனதை சொல்றேன்.." "என்ன தோணுது உன் மனசுல..?" "கூடிய சீக்கிரம் நீ பொண்டாட்டிதாசன் ஆக போறேன்னு தோணுது.." "ஹாஹா.. அந்தக்கதைதான் இங்க நடக்காது.. நான் எப்போவும் மாறவே மாட்டேன்..!!" "பேசு தம்பி பேசு.. நல்லா பேசு..!! உனக்கு பாடம் சொல்லி தந்த வாத்தியாரே.. அங்க ஒருத்திக்கிட்ட மண்ணை கவ்விட்டாரு..!!" "புருசை சொல்றியா..?? அவன் கெடக்குறான்.. அவனுக்கு வேற வழி இல்ல.. மாறிட்டான்..!! எனக்கு அந்த மாதிரி ஒரு நெலமை எப்போவும் வராது..!!" அசோக் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, கற்பகம் இப்போது சற்றே சீரியசான குரலில் சொன்னாள்."இங்க பாரு அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!! இன்னும் கூட ஒன்னும் கெட்டு போகலை.. நீ இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் உன் பொண்டாட்டி உன்னை லவ் பண்றா..!! இதைவிட உனக்கு என்ன வேணும்..?? எல்லாத்தையும் விட்டுட்டு.. உன் பொண்டாட்டிக்காக கொஞ்சம் மாறித்தான் பாரேன்..??" "ஹாஹா..!! இவளுக்காக.. என் சந்தோஷத்தைலாம் விட்டுட்டு.. நான் மாறனுமா..?" "ஏன்.. மாறினா என்ன..?? அந்த புருஷோத்தமன் மாறலை..??" "அவன் பொண்டாட்டி அவனுக்காக என்னன்னவோ தியாகம் பண்ணிருக்கா.. அவன் மாறிட்டான்..!! இவ எனக்காக என்ன பண்ணிருக்கா..??" அசோக் கிண்டலாக கேட்க, "ஹ்ம்ம்.. உன்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதே ஒரு பெரிய தியாகந்தாண்டா..?? இதுல புதுசா லவ்வு வேற மொளைச்சிருக்கு.. இதுக்காகவாவது நீ மாற கூடாதா..??" கற்பகமும் கிண்டலாகவே பதிலளித்தாள். "ஹாஹா.. எதுக்காகவும் நான் மாறுறதா இல்ல.." "ம்ம்.. இப்படியே பேசிட்டு திரி.. ஒருநாள் எல்லாத்துக்காகவும் நல்லா ஃபீல் பண்ண போற..!!" "சரி அதை விடு.. மதியம் அவ உன்கிட்ட என்ன சொன்னான்னு சொல்லு..!!" "உடனே பேச்சை மாத்திடுவியே..?? ம்ம்ம்ம்... அவ என்ன சொன்னா.. அப்டியே.. மூஞ்சியை சொர்ணாக்கா மாதிரி டெரரா வச்சுக்கிட்டு.. கண்ணுல அப்டியே ரெட் பல்பு எரிய.. என்னென்னவோ சொன்னா..!! நான் அப்படியே பயந்து நடுங்கி போயிட்டேன்..!! ஆனா ஒன்னுடா.. நீ சொன்னப்போ நான் நம்பலை.. இன்னைக்குத்தான் தெரிஞ்சது..!!"

"என்ன..?" "உன் பொண்டாட்டி மேடத்துக்கு கொஞ்சம் கொலஸ்ட்ரால் ஜாஸ்திதான்..!!" "ஹாஹா.. அப்படி என்ன சொன்னா..?" "ஆனா அவளை சொல்லியும் குத்தம் இல்ல.. எல்லாம் உன்னாலதான்..!!" "என்னாலயா..?" "ஆமாம்..!! 'காலிப் பசங்க கூடலாம் சேராதடி கற்பகம்..'ன்னு எங்க அம்மா சின்ன வயசுலேயே அடிக்கடி சொல்வாங்க.. அதெல்லாம் மறந்துட்டு உன்னை மாதிரி ஒரு கழிசடைப்பய கூட சேர்ந்தேன் பாரு.. அதான் இந்த திட்டுலாம் கேக்குறேன்..!!" "ஹேய்.. என்ன சொன்னான்னு சொல்லு.." "உங்களுக்கும் அவருக்கும் நடுவுல என்ன ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு எனக்கு தெரியாது.." கற்பகம் நந்தினி சொன்னது மாதிரி உதட்டை சுளித்து சொல்லிக்காட்டி கேலி செய்தாள். அசோக் சிரித்தான். "ஹாஹாஹாஹா..!!" "அப்படியே அவ கொமட்டுல ரெண்டு குத்தலமான்னு இருந்தது எனக்கு.. பாவம்னு விட்டுட்டேன்..!!" "ஹாஹாஹாஹா..!!" "சிரிக்கிறியா..?? சிரி மவனே சிரி..!! உன்னை மாதிரி ஆள் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு.. உன் பொண்டாட்டி என்னை ஏறிட்டு போறா..!!" கற்பகம் சொன்னவிதம் அசோக்கிற்கு மேலும் சிரிப்பையே வரவழைத்தது. வாய் விட்டு சிரித்தான்.. அதன் பிறகு வரப்போகிற சம்பவங்களின் தீவிரம் உணராதவனாய்..!!

No comments:

Post a Comment