Friday 20 September 2013

அன்புள்ள ராட்சசி 5


அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி 'டக்.. டக்..' என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!
"ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!" "ஜூஸ் இன்னும் மிச்சம் இருக்கே..??" மீரா கூலாக டேபிளை கைகாட்ட, அசோக் இப்போது அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்து ஒரு முறை முறைத்தான். 'ஹ்ம்ம்..' என்று ஒரு சலிப்பு மூச்சு விட்டுக்கொண்டான். பிறகு ஜூஸ் தம்ளர் எடுத்து, கடகடவென மொத்த ஜூஸையும் ஒரே மடக்கில் அருந்தி முடித்தான். காலியாகிப்போன கண்ணாடி தம்ளரை 'படார்' என்று டேபிளில் வைத்தவாறு, பொறுமையற்றவனாய் கேட்டான். "ம்ம்.. போதுமா..? ஜூஸும் ஓவர்..!! இப்போ சொல்லு..!!" "என்ன சொல்லனும்..??" அவள் குரலில் தெரிந்த ஒரு விளையாட்டுத்தானம் அசோக்கை இப்போது எரிச்சலாக்கியது. "ப்ச்.. வெளையாடாத மீரா..!! காலைல இருந்து நானும் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்குறேன்.. நீயும் சும்மா சும்மா பேச்சை மாத்துறதுலயே குறியா இருக்குற.. நான் கேட்டதுக்கு இதுவரை பதிலே சொல்லல..!! இப்போ வந்து ஒன்னுந்தெரியாத மாதிரி 'என்ன சொல்லனும்'னு கேட்டா என்ன அர்த்தம்..?? என்னைப் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..??" "ம்ம்..?? ஜூஸ் சாப்பிட்டுட்டு.. வாயை தொடைக்காதவன் மாதிரி தெரியுது..!!" குறும்பாக சொன்ன மீரா, கையிலிருந்த அவளுடைய கர்ச்சீஃபை அசோக்கின் வாய்க்கருகே கொண்டு செல்ல, அவன் அவளுடைய கையை பட்டென தட்டி விட்டான். தனது புறங்கையாலேயே உதட்டை துடைத்துக்கொண்டவன், சற்றே எரிச்சலான குரலில்.. "Be serious Meera.. Please..!!" என்றான். மீராவோ அவனுடைய எரிச்சலை கண்டுகொள்ளாமல் கர்ச்சீஃபை பேகுக்குள் திணித்தாள். மணிக்கட்டு திருப்பி வாட்ச் பார்த்தாள். அவளுடைய அலட்சியமான நடவடிக்கையில், அசோக் மேலும் டென்ஷன் ஆனான். "ப்ச்.. நான் இங்க சீரியஸ்னு சொல்லிட்டு இருக்குறேன்.. நீ என்ன அங்க கூலா மணி பாத்துட்டு இருக்குற..??" அசோக் அவ்வாறு எரிச்சலாக கேட்கவும், இப்போது மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு கூர்மையாக பார்த்தாள். "இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற..??" "டென்ஷன் ஆகாம..?? நீ பண்ற வேலைலாம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.. அப்படியே தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு..!! கொஞ்ச நாளாவே நீ ஒன்னும் சரியில்ல மீரா.. ரொம்ப மாறிட்ட..!! நீ ஏன் இப்படிலாம் நடந்துக்குறேன்னு எனக்கு சுத்தமா புரியல..!! எங்கிட்ட நெறைய பொய் சொல்றேன்னு தோணுது.. எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தோணுது..!! நேத்து நீ அப்படி நடந்துக்கிட்டதுக்கப்புறம்.. என் மனசுல இருந்த அந்த டவுட் இப்போ கன்ஃபார்மே ஆயிடுச்சு..!!" படபடவென சொன்ன அசோக்.. சற்றே நிறுத்தி.. தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான்..!! அருகில் வேறு யாரும் இல்லை என்பதை அவ்வாறு உறுதி செய்து கொண்ட பின்பும்.. குரலை சற்று தணித்துக்கொண்டேதான் அதற்கு மேல் தொடர்ந்தான்..!! "நேத்து ஏன் மீரா அப்படி பிஹேவ் பண்ணின.. கிஸ் பண்ற வரை அப்படியே கம்முனு இருந்துட்டு.. அப்புறம் ஏன் என்னை தள்ளிவிட்ட..?? எதுக்கு திடீர்னு அழுத..??" அசோக்கின் கேள்விக்கு மீரா அமைதியையே பதிலாக தந்தாள். அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவன் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே, ஒருவித ஆதங்கத்துடன் பார்த்தான். அப்புறம் ஒரு பெருமூச்சுடன் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு, சற்றே சலிப்பான குரலில் சொன்னான். "நீ பாட்டுக்கு திடீர்னு அழுதுட்டு ஓடிட்ட.. வீட்ல எல்லாரும் என்னைப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க தெரியுமா.. 'மீரா எதுக்கு அதுக்குள்ள கெளம்பிட்டா.. என்ன ஆச்சு அவளுக்கு.. அவ மூஞ்சியே சரி இல்லயே.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா.. என்ன பண்ணின அவளை..??' அப்டி இப்டின்னு.. ஆளாளுக்கு பாடாபடுத்திட்டாங்க..!! 'அவளுக்கு ஒரு கால் வந்தது.. அர்ஜன்ட் வொர்க்னு சொல்லிட்டு கெளம்பிட்டா..' அப்டின்னு நான் சொன்னதை யாருமே நம்புற மாதிரி இல்ல..!! திரும்ப திரும்ப 'நீ என்ன பண்ணின அவளை.. நீ என்ன பண்ணின அவளை..'ன்னு.. கேள்வி மேல கேள்வி..!!" "சொல்ல வேண்டியதுதான..?? 'அவளை தனியா ரூமுக்கு தள்ளிட்டு போய் கிஸ் அடிச்சேன்.. அதுல மெரண்டு போய் ஓடிட்டா..'ன்னு..??" மீராவின் குரலில் ஒரு குறும்பு. "என்ன.. நக்கலா..?? இங்கபாரு.. நேத்து கிஸ் பண்ணினது உனக்கு பிடிக்கலன்னு மட்டும் பொய் சொல்லாத.. அதை நான் நம்ப மாட்டேன்..!! நீ எவ்வளவு ஆசையா என்கூட கோவாப்ரேட் பண்ணினேன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின.. தேவையில்லாம எதுக்கு அழுத..?? அப்புறம்.. அது என்னது.. ஆங்ங்.. 'நீ கிஸ் பண்ணினது தப்பு இல்ல.. நான் கிஸ் பண்ணினதுதான் தப்பு'ன்னு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? நீ பண்ணினா என்ன.. நான் பண்ணினா என்ன.. கிஸ் ஒன்னுதான..?? அதுல என்ன என் மேல தப்பு இல்ல.. உன் மேல மட்டும் தப்பு..??" "ம்ம்.. கேள்விலாம் அவ்வளவுதானா.. இல்ல.. இன்னும் இருக்கா..??" "இப்போதைக்கு இவ்வளவுதான்..!! இதுக்கு நீ மொதல்ல பதில் சொல்லு.. மிச்ச கேள்விலாம் அப்புறம் நான் கேக்குறேன்..!!" "ஹ்ம்ம்.. சொல்றேன்..!!" இறுக்கமான குரலில் சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அந்த டேபிளுக்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே, வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தனது கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன், அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வேகமாய் பறக்கிற வாகனங்களையும், வெட்டிப் பரபரப்புடன் அலைகிற மனிதர்களையுமே, சிறிது நேரம் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த மீரா, பிறகு அசோக்கிடம் திரும்பி திடீரென கேட்டாள். "இந்த டேபிள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இல்ல அசோக்..??" "வாட்..??" அசோக் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான். "நீ மொதமொதலா எங்கிட்ட பேச வந்தப்போ.. நான் இதே இடத்துலதான் உக்காந்திருந்தேன்..!! நாம ரெண்டு பேரும் 'ஐ லவ் யூ' சொல்லிக்கிட்டதும்.. இதே டேபிள்லதான்..!! அதுக்கப்புறம் எத்தனையோ தடவை.. இங்க உக்காந்து ரெண்டு பேரும் பேசிருக்கோம்.. கதையடிச்சிருக்கோம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நெறைய தெரிஞ்சிட்ருக்கோம்..!! அப்போ நமக்கு இந்த டேபிள் ரொம்ப ஸ்பெஷல்தான..??" "ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!" அசோக் ஒரு சிறு குழப்பத்துடனே மெலிதாக புன்னகைத்தான். "முன்னாடிலாம் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ஐ மீன்.. நாம மீட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி..??" "என்ன பண்ணுவ..??" "எப்போ இங்க சாப்பிட வந்தாலும்.. இதே டேபிள்தான் சூஸ் பண்ணுவேன்..!! இங்க உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்.. தனியா வந்து உக்காந்துகிட்டு.. அப்படியே வெளில வேடிக்கை பாத்துக்கிட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு.. ஹ்ஹ.. ஒருமணி நேரத்துக்கு மேல உக்காந்து.. உலகத்தை மறந்து சாப்பிட்டுட்டு இருப்பேன்.. தெரியுமா..??" "ம்ம்.. ஞாபகம் இருக்கு.. கவனிச்சிருக்குறேன்..!!""ஃபுட்கோர்ட் உள்ள என்டர் ஆகுறப்போவே.. இந்த டேபிள் காலியா இருக்கான்னுதான் மொதல்ல பார்ப்பேன்.. காலியா இருந்தா, நேரா போய் சாப்பாடு வாங்கிட்டு.. இங்க வந்து உக்காந்துக்குவேன்..!! சப்போஸ் வேற யாராவது இங்க உக்காந்திருந்தா.. சாப்பாடு வாங்க மாட்டேன்.. அங்க எங்கயாவது காலியா இருக்குற டேபிள்ள சும்மா உக்காந்துக்கிட்டு.. இந்த டேபிள் காலியாகுற வரை வெயிட் பண்ணுவேன்..!! அப்புறம் இங்க இருக்குறவங்க எந்திரிச்சதும்.. சாப்பாடு வாங்கிட்டு வந்து இங்க உக்காந்துக்குவேன்..!! அந்த அளவுக்கு எனக்கு இந்த டேபிள் ரொம்ப பிடிக்கும்..!!"மீரா சொல்லிக்கொண்டே போக, அவ்வளவு நேரம் கன்னத்தில் கைவைத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், இப்போது சற்றே கவலையான குரலில் கேட்டான். "ஹ்ம்ம்.. ஒரு டேபிளுக்கு இவ்வளவு பில்டப்பா..??" "ஏன்.. அதுல ஏதாவது தப்பா..??" "இல்ல.. தப்புலாம் ஒன்னுல்ல.. இருக்கவேண்டியதுதான்..!! ஆனா.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. ஏதேதோ சொல்லிட்டு இருக்கியேன்னுதான் எனக்கு எரிச்சலா இருக்கு..!!" "ஹாஹா.. ஆமால்ல.. சம்பந்தமே இல்லாம லூஸு மாதிரி உளறிட்டு இருக்கேன்ல..??" மீரா உதடுகள் பிரித்து அழகாக புன்னகைத்தாள். "தெரிஞ்சா சரி..!! ஹ்ஹ்ம்ம்.. இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல..!! எப்போ சொல்ற மாதிரி ஐடியா..??" "ஹாஹா.. சொல்றேன்..!! இங்க வா..!!" "எங்க..??" "இங்க வா.. இங்க வந்து என் பக்கத்துல உக்காந்துக்கோ.. வா..!!" மீரா தனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையை, கையால் தட்டிக்காட்டியவாறே சொன்னாள். "நீ மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.. அதுக்கப்புறம் நான் அங்க வரேன்..!!" "ப்ச்.. வாடா..!! நான்தான் எல்லாம் சொல்றேன்றன்ல..? வா.. பக்கத்துல வா..!!" அசோக்கை நோக்கி ஒருகையை நீட்டி, மீரா அவ்வாறு சொல்லிய விதத்தில், ஒருவித அசாத்திய ஏக்கமும் கிறக்கமும் கலந்திருந்தது. அவளுடைய கருவிழிகள் எறிந்த காதல்க்கணைகள், அசோக்கின் கண்களில் பாய்ந்து அவனது இதயத்தை துளைத்தன. அதற்கு மேலும் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாதவனாய், அசோக் மெல்ல எழுந்தான். அவளருகே சென்று அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததுமே, மீரா தனது இடது கையால் அவனுடைய இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டவள், அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற கவலை கூட இல்லாமல், அவனது கன்னத்தோடு தனது கன்னத்தை சேர்த்துக்கொண்டாள். வலது கையிலிருந்த தனது செல்ஃபோனை உயர்த்தி, 'பளீர்' என ஃப்ளாஷ் அடிக்க, படம் எடுத்துக் கொண்டாள். மீரா அன்று முழுதுவதுமே அப்படித்தான்..!! காலை பத்து மணியில் இருந்து அசோக்குடன் சுற்றி அலைகிறாள்.. என்றும் இல்லாத அதிசயமாய் இன்று அநியாயத்திற்கு அவனுடன் இழைகிறாள்.. அவ்வப்போது தனது செல்ஃபோனால் இருவரையும் படம் எடுத்துக் கொள்கிறாள்..!! "என்னாச்சு உன் பாலிஸிக்கு.. ஃபோட்டோஸ்லாம் எடுத்துக்குற..?? எப்போவும்.. 'சின்ன ஃப்ரேமுக்குள்ள சிக்கிக்கிறதுக்கு எனக்கு பிடிக்காது'ன்னு சொல்வ..??" என்று அசோக் ஆச்சரியமாக கேட்டபோது, "உன்கூட சேர்ந்து சிக்கிக்கிறதா இருந்தா.. இந்த சின்ன ஃப்ரேம் கூட எனக்கு சொர்க்கலோகம் மாதிரிதான்..!!" என்று கவிதையாக பேசினாள். ஆனால்.. தனது மனதில் இருக்கிற குழப்பத்தை பற்றி மட்டும் அவன் பேச்செடுத்தால்.. சரியான பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாமல் பேசி.. அவனை அலைக்கழிக்கிறாள்..!! இப்போது.. ஃபோட்டோ எடுத்து முடித்ததும்.. எப்படி வந்திருக்கிறது என தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்த மீரா.. முகத்தில் ஒரு புன்சிரிப்புடனும், குரலில் ஒரு குறும்புடனும்.. "கொஞ்சமாவது சிரிச்சிருக்கானா பாரேன்.. மூஞ்சியை அப்படியே உர்ருன்னு வச்சிருக்கான்.. உர்ராங்குட்டான் மாதிரி..!!" என்றாள். "நான் கேட்டதுக்குலாம் நீ பதில் சொல்ற வரைக்கும், நான் இப்படித்தான் இருப்பேன்.. போ..!!" அசோக்கின் குரலில் ஒரு உச்சபட்ச உறுதி தெரிந்தது. இன்று எப்படியாவது இவளை பேச வைத்துவிடவேண்டும் என்ற தீவிரம் தெரிந்தது. மலர் உதடுகளில் ஒரு மயக்கும் புன்னகையுடன், மீரா அசோக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சேரில் இருந்து எழுந்தவாறே.. "ஹ்ம்ம்.. கெளம்பலாம் வா..!!" என்றாள். உடனே அசோக் கடுப்பாகிப் போனான். அவள் முகத்தை ஏறிட்டு சீற்றமாக கேட்டான். "என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..?? நானும் காலைல இருந்து பைத்தியக்காரன் மாதிரி கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா... சும்மா சும்மா.." "ஷ்ஷ்ஷ்.. நான்தான் சொல்றேன்னு அப்போவே சொல்லிட்டன்ல..??" "சொல்றேன் சொல்றேன்னுதான் காலைல இருந்து சொல்லிட்டு இருக்குற.. ஆனா சொல்ற மாதிரி தெரியல..!! எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் மீரா.. உன் மனசுல என்னலாம் இருக்குன்னு, இன்னைக்கு எனக்கு தெளிவா தெரிஞ்சாகனும்.. இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்..!! உக்காரு.. சொல்லிட்டு கெளம்பு..!!" "ப்ச்.. சொல்றேன்டா..!! ஆனா இங்க வேணாம்..!!" "வேற எங்க..??" "எனக்கு மனசு விட்டு நெறைய விஷயம் பேசனும்.. அதுக்கு இந்த இடம் சரியில்ல..!! வேற எங்கயாவது தனியா.. டிஸ்டர்ஃபன்ஸ் இல்லாத எடத்துக்கு போயிடலாம்..!!" "எங்க போகலாம்ன்ற..??" "இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல.. அங்க போயிடலாம்..!!" அசோக் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே பார்த்தவாறு யோசனையில் இருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சேரில் இருந்து எழுந்தான். "போலாம் வா..!!' என்றுவிட்டு முன்னால் நடந்தான். அடுத்த பத்து நிமிடங்களுக்கெல்லாம்.. அசோக்கின் பைக் சத்யா கார்டன் நோக்கி மிதமான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..!! என்றும் அசோக்கின் தோளைப் பற்றிக் கொள்கிற மீரா.. இன்று அவனுடைய இடுப்பில் கைபோட்டு இறுக்கியிருந்தாள்.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து படுத்திருந்தாள்..!! வாகனங்களுக்கு இடையில் புகுந்து வண்டியை செலுத்திக்கொண்டிருந்த அசோக்.. தன் இடையை வளைத்திருக்கிற காதலியின் வளைக்கரத்தை சற்றே பெருமிதமாக பார்த்தான்..!! தான் உருவாக்கிய விளம்பரப்படம் சட்டென அவனுடைய நினைவுக்கு வந்தது.. அவனது மனதில் இருந்த குழப்பம் எல்லாம் அந்த கணத்தில் மறந்து போக.. உள்ளமெங்கும் ஒரு உற்சாக ஊற்று பீறிடுவதை அவனால் உணர முடிந்தது..!! அடக்க முடியாத புன்னகையை அதரங்களுக்கு தந்தவன்.. அழகு கொஞ்சும் அவளது முகத்தை கண்ணாடியில் தேடினான்..!! அவனுடைய முதுகில் புதைந்திருந்த மீராவின் முகம்.. அந்த கண்ணாடியில் காணக் கிடைக்கவில்லை..!! அசோக்கின் முகம் பூரிப்பில் திளைத்துக்கொண்டிருந்த அதே நேரம்.. அவனது பின்புறம் படர்ந்திருந்த மீராவின் முகம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது..!! அவளுடைய கண்களில் கண்ணீர் தழும்பிக் கொண்டிருந்தது.. பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. மூக்கு சப்தமெழுப்பாமல் விசும்ப.. உதடுகள் கட்டுக்கடங்காமல் படபடத்தன..!! தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகி.. தத்தளிப்பவள் போல காணப்பட்டாள்..!! அடிக்கடி ஒற்றைக்கையால் கண்களை துடைத்துக்கொண்டவள்.. அவ்வப்போது அசோக்கே உணராதவண்ணம், அவனது முதுகில் மென்மையாக முத்தம் பதித்தாள்..!! ஆகாயத்தில் ஒரு பருந்து.. சிறகசைத்து பறந்து.. அவர்கள் செல்கிற திசையிலேயே விரைந்தது..!! சத்யா கார்டனை அடைவதற்கு சற்று முன்பாக.. ராஜமன்னார் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி.. கொஞ்ச தூரம் சென்றதுமே வந்து சேர்ந்தது அந்த பூங்கா..!! வாசலில் நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளுடன்.. தனது பைக்கையும் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டான் அசோக்..!! முகத்தை இப்போது சுத்தமாக துடைத்து முடித்து.. இயல்பான பாவனையுடன் இறங்கிக்கொண்டாள் மீரா..!! "ம்ம்.. பார்க் வந்துடுச்சுல.. சொல்லு..!!" அவசரப்பட்டான் அசோக். "உள்ள போய் பேசலாம் வா..!!" மீரா லேசாக மூக்கை உறிஞ்சியவாறே சொன்னாள். "சரி.. உன் செல்ஃபோனை கொஞ்சம் கொடேன்..!!" "எதுக்கு..??" "நெறைய ஃபோட்டோஸ் எடுத்தேல.. எப்படி வந்திருக்குன்னு பாக்குறேன்..!!" அசோக் அவ்வாறு கேட்கவும், முதலில் ஓரிரு வினாடிகள் தயங்கிய மீரா, பிறகு "ம்ம்..!!" என்று தனது செல்ஃபோனை அசோக்கின் கையில் திணித்துவிட்டு முன்னால் நடந்தாள். அசோக் அவளை பின்தொடர்ந்தான். அதிகமாக பராமாரிக்கப்படாமல் போனாலும்.. இழைதழைகள் இறைந்துபோய் காணப்பட்டாலும்.. ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த செடிகொடிகளோடும்.. அந்த மாலை நேரத்திற்கு மிக ரம்யமாகவே காட்சியளித்தது அந்த பூங்கா..!! ஆங்காங்கே தெரிந்த மரப்பெஞ்சுகளின் பழுப்பு நிறம் தவிர.. எங்கெங்கிலும் மர,செடி,கொடிகளின் பச்சை நிறமே..!! அவ்வப்போது கேட்கிற காகங்களின் கரைதலை தவிர.. அமைதியே முழுநேரமும் ஆக்கிரமித்திருந்தது..!! புதர் மறைவில் புதையல் தேடுகிற சில காதலர்களை(????) தவிர.. ஆள் நடமாட்டம் அறவே அற்றுப் போயிருந்தது..!! காம்பவுண்டை ஒட்டி நீளமாக சென்ற அந்த மண்பாதையில்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மீரா நடந்து கொண்டிருந்தாள்..!! பாதையின் இருபுறமும்.. கொத்துக்கொத்தாய், பச்சை பச்சையாய் செடிகள்..!! பாதையிலோ.. புற்கள் துளிர்த்திருந்தன.. மரவேர்கள் குறுக்காக ஓடின.. காய்ந்த சருகுகள் மண்டிக் கிடந்தன.. கால்கள் பட்டு அழுந்துகையில் சரக் சரக்கென சப்தம் எழுப்பின..!! மீரா கவனமாகவே நடந்து கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்னால் ஒரு ஐந்தடி இடைவெளிவிட்டு.. மீராவுடையை செல்ஃபோனை விரல்களால் அழுத்தியவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!! மீரா எடுத்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்த அசோக்குக்கு.. திடீரென ஒரு யோசனை.. எல்லா படங்களையும் தனது செல்ஃபோனுக்கு ஒரு நகல் அனுப்பினால் என்னவென்று..!! யோசனை தோன்றியதும் முதலில் மீராவிடம் அனுமதி கேட்கத்தான் நினைத்தான்..!! ஆனால் அப்புறம்.. 'ஒருவேளை அவள் ஏதாவது விளங்காத காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது' என்று தோன்றவும்.. அனுமதி கேட்கிற எண்ணத்தை கைவிட்டான்..!! தனது செல்ஃபோன் எடுத்து ப்ளூடூத் எனேபிள் செய்தவன்.. திருட்டுத்தனமாகவே அந்தப்படங்களை நகல் எடுத்துக் கொண்டான்..!! பார்க்குக்குள்ளேயே அமைந்த ஒரு சின்ன நீர்த்தேக்கத்தில் கொண்டு போய் விட்டது அந்தப்பாதை.. பார்க்கின் எல்லையும் அத்துடன் முடிவடைகிறது..!! இனிமேலும் நடக்க வழியில்லை என்றானபிறகு.. இருவருடைய கால்களும் ஓய்ந்தன..!! மீரா ஓரடி முன்னால் எடுத்து வைத்து.. நீர்த்தேக்கத்துக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக்குழாய் வேலியை பற்றிக்கொண்டாள்..!! பாசி படர்ந்துபோய் அமைதியாக கிடந்த அந்த நீர்த்தேக்கத்தையே.. பார்வையால் வெறித்தாள்..!! அசோக் அவளை நெருங்கி.. அவளது செல்ஃபோனை நீட்ட.. மீரா அதை வாங்கிக்கொண்டாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு.. அந்த இடத்தை சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு.. அசோக்கே ஆரம்பித்தான்..!! "ஹ்ம்ம்.. நைஸ் ப்ளேஸ்.. நீ கேட்ட மாதிரியே..!! தனியா.. அமைதியா.. அழகா.. எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம..!! ம்ம்ம்.. இப்போவாவது சொல்வியா.. இல்ல.. 'அந்த தண்ணிக்குள்ள இறங்கி, குரங்கு மாதிரி நாலு குட்டிக்கரணம் அடிச்சாத்தான் சொல்வேன்'னு அடம் புடிப்பியா..??"அசோக் சற்றே எரிச்சலும், கேலியுமாய் அவ்வாறு கேட்க.. மீரா அவன் பக்கமாய் திரும்பி ஒரு உலர்ந்த புன்னகையை வீசினாள்.. பிறகு மீண்டும் அந்த குளத்து நீரை வெறிக்க ஆரம்பித்தாள்..!! அவ்வாறு வெறித்துக்கொண்டே.. "என்ன சொல்லனும்..??" என்று இறுக்கமாக கேட்டாள். "ஹ்ம்ம்.. எதை சொல்றதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தியோ.. அதை..!!" அசோக் இயல்பாக சொல்ல.. மீரா இப்போது முகத்தை திருப்பி அவனை ஏறிட்டாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் சந்தித்து, மிக கூர்மையாக பார்த்தாள்..!! அவளது முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல்.. அவனுடைய உயிரை ஊடுருவுகிற மாதிரி.. ஒருவித ஆழமான பார்வை..!! 'அர்த்தம் என்ன.. அர்த்தம் என்ன..' என்று.. அசோக் அடிக்கடி குழம்பித் தவிக்கிற அதே பார்வை..!! அந்தப் பார்வையைக் கண்டு அசோக் சற்றே திகைத்துப் போயிருக்க.. மீரா இப்போது தனது செவ்விதழ்களை திறந்து.. அழுத்தம் திருத்தமாக அந்த வார்த்தைகளை உச்சரித்தாள்..!! "ஐ லவ் யூ..!!!!" அசோக் இப்போது மீராவை சற்றே வித்தியாசமாக பார்த்தான். அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகளை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்திரவில்லை. குரலில் ஒரு சலிப்பை கலந்துகொண்டு.. "ப்ச்.. என்ன மீரா நீ..?? இதை சொல்றதுக்கா இங்க கூட்டிட்டு வந்த..??" என கேட்டான். "ம்ம்.. யெஸ்..!!!" மீராவின் குரலில் இருந்த உறுதி, அசோக்கை சற்றே குழப்பமடைய செய்தது. "வெ..வெளையாடாத மீரா..!!" "வெளையாடலாம் இல்ல அசோக்.. நான் உன்கிட்ட வெளையாண்ட காலம்லாம் எப்போவோ போயிடுச்சு..!!" "ப்ச்.. இந்த ஐ லவ் யூ சொல்றதுக்குத்தான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தியா..?? இதைத்தான் எப்போவோ சொல்லிட்டியே.. நாம பேசிக்கிட்ட மொத நாளே.." "இல்ல அசோக்.. அது அன்னைக்கு.. சும்மா என் உதட்டுல இருந்து வந்த ஐ லவ் யூ.. இ..இது.. இது என் உசுருல ஊறிக்கெடந்து வர்றது..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!!!" சொல்லும்போதே மீராவின் கண்களில் நீர் அரும்ப, அவள் பேச்சில் இருந்த தீவிரம் இப்போதுதான் அசோக்கிற்கு மெல்ல உறைத்தது. "மீ..மீரா... எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!" "எனக்கும் எதும் புரியல அசோக்..!! எதுக்கு நீ என் லைஃப்ல வந்த.. எதுக்கு உன்மேல எனக்கு வெறுப்பு வரணும்.. வெளையாடணும்.. அப்புறம்.. எதுக்கு என்னையே அறியாம என் மனசை உன்கிட்ட பறிகொடுக்கணும்.. இ..இப்போ.. எதுக்கு உன்னை நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம இப்படி தவிக்கணும்..!! எதுவுமே எனக்கும் புரியல அசோக்..!!" மீராவின் குரலில் கொப்பளித்த பரிதாபத்தை அசோக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை. "ப்ளீஸ் மீரா.. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு..!!" "இன்னுமா உனக்கு புரியல..?? இத்தனை நாளா உன்னை காதலிக்கிறதா சொல்லி.. நடிச்சு ஏமாத்திட்டு இருந்தேன்டா..!! இன்னைக்கு.. உன் நல்ல மனசு முன்னாடி தோத்துப்போயி.. நெஜமாவே உன் மேல காதல் வந்து.. கண்ணுல கண்ணீரோட நிக்கிறேன்..!! இப்போவாவது புரியுதா..??" மீராவின் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்தோடியது. அசோக் அதிர்ந்து போனவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 'என்ன சொல்லுகிறாள் இவள்..??' என்று திகைத்தான். காதில் விழுந்த வார்த்தைகளை அவனால் நம்பமுடியவில்லை. திணறலாக கேட்டான். "கா..காதலிக்கிற மாதிரி நடிச்சியா.. ஏ..ஏன்..??" "சொ..சொல்றேன்..!!" அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள். "உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!! அன்னைக்கு ஒருநாள்.. ஃபுட்கோர்ட்ல ஒருத்தனை செருப்பால அடிக்க போனேனே.. ஞாபகம் இருக்கா..?? அதுக்கு முன்னாடி.. எத்தனை பேரை நெஜமாவே செருப்பால அடிச்சிருக்கேன் தெரியுமா..?? ஹ்ஹ.. என் லைஃப்ல.. நெறைய மோசமான ஆம்பளைங்களை பார்த்து பார்த்து.. எல்லா ஆம்பளைங்க மேலயுமே வெறுப்பு..!! என் வாழ்க்கைல எந்த ஆம்பளைக்கும் எடம் இல்லைன்ற முடிவோடதான் நான் இருந்தேன்..!!" "ஓ..!! ஆம்பளைங்க மேலேயே வெறுப்புனா.. அ..அப்புறம் எதுக்கு என்கிட்ட.." "பேசுன முதல் நாளே ஐ லவ் யூ சொன்னேன்னுதான கேக்குற..??" "ம்ம்..!!" "அதுதான் விதி..!! இல்லனா.. என்னோட திமிர்னு கூட சொல்லலாம்..!!" "பு..புரியல..!!" "புரியிற மாதிரியே சொல்றேன்..!! கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லிட்டு இருந்தேன்ல.. அந்த டேபிள் பத்தி..!!' "ம்ம்..!!" அசோக் மீராவை ஒரு குழப்பப்பார்வை பார்த்தான். "நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்ட முதல் நாள்.. ஐ மீன்.. நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்ன அன்னைக்கு.. ஃபுட்கோர்ட்டுக்கு நான் வந்தப்போ.. அந்த டேபிள் காலியா இல்ல அசோக்.. இட் வாஸ் ஆக்குபைட்..!!" சொல்லிவிட்டு மீரா அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனுக்கு இப்போது ஏதோ புரிவது மாதிரி இருந்தது. அவனுடைய முகத்தில் மெலிதாக ஒரு திகைப்பு பரவ ஆரம்பிக்க, மீரா தொடர்ந்து பேசினாள். "சாப்பாடு வாங்காம.. காலியா கெடந்த இன்னொரு டேபிள்ள உக்காந்திருந்தேன்..!! கொஞ்ச நேரம் கழிச்சு.. எனக்கு பின் பக்கமா.. நான் உக்காந்திருந்ததுக்கு பக்கத்து டேபிள்ள.. நீங்க நாலு பேரும் வந்து உக்காந்திங்க..!!" இப்போது அசோக்குக்கு முழுதுமே புரிந்து போனது. "மீ..மீரா.. அது.. அ..அன்னைக்கு.." என்று தடுமாறினான். "என்னை நீங்க கவனிக்கல.. ஆனா நீங்க பேசினதை எல்லாம் நான் கவனிச்சுட்டு இருந்தேன்..!! அதுக்கு முதல்நாள்.. 'என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்'னு நீ உன் ஃப்ரண்ட்ஸ்ட்ட சவால் விட்டது.. அப்புறம் நான் இன்னொருத்தனை அடிச்சதும், நீ பேசாம திரும்ப வந்துட்டது.. எல்லாம் பேசிக்கிட்டிங்க..!!" "ஆ..ஆமாம்..!!" "நீங்க பேசிக்கிட்டதை கேட்டப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா அசோக்..?? 'பெட் கட்டியாடா வெளையாடுறீங்க.. பொண்ணுகன்னா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிட்டமாடா..??'ன்னு.. உங்க சட்டையை புடிச்சு, அப்படியே பளார் பளார்னு விடலாம் போல இருந்தது..!!" "மீ..மீரா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம்.." "இரு அசோக்.. நான் சொல்லி முடிச்சுடுறேன்..!! ம்ம்ம்... அப்போத்தான் நீ அப்படி சொன்ன.. 'அவ இன்னைக்கு வரட்டும்.. அவட்ட பேசி.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்'னு கெத்தா சொன்ன..!! அதைக் கேட்டப்புறந்தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை.. திமிர் புடிச்ச யோசனை..!! 'என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்னா சவால் விடுற..? வா.. நான் உனக்கு பைத்தியம் புடிக்க வச்சு காட்டுறேன்'னு..!! மனசுல ஒரு ப்ளானோட.. சாப்பாடு வாங்க எழுந்து போனேன்..!! சாப்பாடு வாங்கிட்டு வர்றப்போ.. நீங்க என்னை பாத்து சீக்ரட்டா ஏதோ பேசிட்டு இருந்தீங்க.. அது கூட நல்லா ஞாபகம் இருக்கு.. 'வாடா மவனே.. வந்து பேசு.. வா..'ன்னு ஓரக்கண்ணால உன்னை பாத்து முறைச்சுக்கிட்டேதான் போனேன்..!!" மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகம் இப்போது வெளிறிப் போயிருந்தது. அவனுடைய தலை வேறு லேசாக கிறுகிறுப்பது மாதிரியான உணர்வு. கண்களை இரண்டு மூன்று முறை, இறுக்க மூடி மூடி திறந்து கொண்டான். தலையை லேசாக உதறியவாறே தடுமாற்றமாக சொன்னான். "நீ.. நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டினதுக்காக நான் உன்கூட.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மீரா இடைமறித்து, "தெரியும் அசோக்.. நீ சொல்லனும்னு தேவை இல்ல..!! இத்தனை நாளா உன்கூட பழகிருக்கேன்.. இப்போ உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்.. அதைக்கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது..?? என் மேல வச்சிருந்த காதல்ல.. நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தேன்னு.. என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது..!! ஆனா.. அதை நான் புரிஞ்சுக்குறதுக்கு கொஞ்ச நாள் ஆச்சு..!! ஆரம்பத்துல உன்னை பத்தி நான் என்ன நெனச்சிருந்தேன் தெரியுமா..?? பணத்திமிர் எடுத்த.. ஆம்பளைன்ற கர்வம் புடிச்ச.. ஒரு 'Spoiled Brat'-னுதான் நெனச்சிருந்தேன்..!! ஹ்ஹ.. நாம பேச ஆரம்பிச்சப்போ உன்னோட இன்டென்ஷன் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. என்னோட இன்டென்ஷன் என்னன்னு உனக்கு தெரியுமா..??" ".........................." அசோக் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க, மீரா பேச்சை சற்று நிறுத்தி பிறகு தொடர்ந்தாள். "உன்னை மண்டை காய வைக்கணும்.. அப்படியே தலையை பிச்சுக்க வைக்கணும்.. உன் பணத்திமிரை ஒடுக்கனும்.. ஆம்பளைன்ற கர்வத்தை அடக்கணும்.. பொண்ணுகன்னா நீ பயந்து மெரளணும்.. 'ஏண்டா இவ கூட பழக ஆரம்பிச்சோம்'னு வெறுத்து போகணும்.. 'விட்டா போதும்'னு சொல்லாமக்கொள்ளாம என்னைவிட்டு ஓடனும்..!!" ".........................." அசோக் மீராவையே சற்று மிரட்சியாக பார்த்தான். "ஆரம்பத்துல இருந்தே உன்னை நான் டாமினேட் பண்ண ஆரம்பிச்சேன்..!! ஆர்டர் போட்டேன்.. அதிகாரம் பண்ணினேன்.. அசிங்கப் படுத்தினேன்.. என் கால்ல விழ வச்சேன்.. ஒரு வேலைக்காரன் மாதிரி உன்னை ட்ரீட் பண்ணினேன்..!! தப்பான நம்பர் குடுத்து உன்னை காயவிட்டேன்.. தடிப்பசங்க ரெண்டு பேர்ட்ட அடி வாங்கி தந்தேன்.. டிக்கெட் விக்க சொல்லி தெருத்தெருவா அலைய வச்சேன்.. எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அறைஞ்சேன்.. இன்னும் என்னன்னவோ..!! உன்னோட ஈகோதான் என்னோட டார்கெட்..!! I..I just wanted to humiliate you.. and make you pay the price for choosing me..!! நான் பண்ற டார்ச்சர் தாங்காம.. கொஞ்ச நாள்லயே நீ தலைதெறிக்க ஓடிடுவன்னு நெனச்சேன்..!! ஆ..ஆனா.. நடந்தது என்ன தெரியுமா அசோக்..??" ஆதங்கத்துடன் பேசிய மீரா சற்றே நிறுத்தி, அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ ஒருவித திகைப்புடன் நின்றிருந்தான். அவனுடைய கண்களிலும், முகத்திலும் ஏதோ ஒருவித சோர்வு. உடலில் மெலிதாக ஒரு களைப்பு. இமைகளை மூடி மூடி திறந்தான். மீரா இப்போது காதலும், மென்மையும் கலந்த மாதிரியான குரலில் பேச ஆரம்பித்தாள். "பேசுன மொதநாளே நீ என்னை இம்ப்ரஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. 'பில்லுக்கு பணத்தை வச்சுட்டு எடத்த காலி பண்ணு'ன்னு சொன்னியே..? I was really impressed.. you are different-ன்னு தோணுச்சு.. என்னையும் அறியாம 'ச்சோ.. ச்ச்வீட்'ன்னு சொன்னேன்..!! அப்புறம் நாம அடிக்கடி மீட் பண்ணோம்.. நீயும் அடிக்கடி என்னை இம்ப்ரஸ் பண்ணின.. எல்லாம் உன்னோட நல்ல மனசால..!! நானும் ஒவ்வொரு முறையும் 'ச்சோ.. ச்ச்வீட்' சொல்லி.. அந்த நல்ல மனசை அப்ரஷியேட் பண்ணுவேன்..!! உன்னோட இன்னோசன்ஸ்.. இரக்க குணம்.. பொறுமை.. தொழில் திறமை.. ஒரு பொண்ணுக்கு நீ தர்ற மதிப்பு.. முடியாதவங்க மேல நீ காட்ன அன்பு.. எல்லாத்துக்கும் மேல, என் மேல நீ வச்சிருந்த அந்த Pure and Blind Love.. I started to loose myself..!! உன்னை ஏமாத்த நெனச்சேன்.. ஹ்ஹ.. கடைசில நான்தான் ஏமாந்து போயிட்டேன் அசோக்..!!" ".........................." "உன்கூட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. என் சிச்சுவேஷனும் அந்த மாதிரி.. சிரிப்பையே மறந்து போயிருந்த எனக்கு.. உன்னோட சேர்ந்து சிரிக்கிறது பிடிச்சிருந்தது..!! உன்னை சீண்டுறது.. கேலி பண்றது.. வெளையாடுறது.. அதையெல்லாம் நீ பொறுமையா சகிச்சுக்குறது.. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..!! அன்னைக்கு நான் தண்ணில குதிச்சது கூட.. அந்த மாதிரி உன்னை சீண்டி விளையாடுறதுக்குத்தான்.. சத்தியமா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக இல்ல.. நீ கண்டிப்பா தண்ணில குதிச்சு என்னை தேடுவன்னு எனக்கு நல்லா தெரியும்..!!" கண்களில் தேங்கிய நீருடன் மீரா சொன்னாள். அசோக் அவளையே பிரமிப்பாக பார்த்தவாறு நின்றிருந்தான். நெற்றி வலிப்பது மாதிரி இருக்க, மெல்ல பிசைந்து கொண்டான்."ஆனா.. என் மனசுல உள்ளதுலாம் உனக்கு தெரியக்கூடாதுன்னு நெனைப்பேன்..!! அன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு போதைல.. என் மனசுல இருந்தது என்னையும் அறியாம வெளில வந்துடுச்சு.. உன்கிட்ட உளர்னதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணினேன் தெரியுமா..?? அன்னைக்கே என் புத்தில ஒரு அலாரம் அடிச்சது.. its getting too serious-ன்னு..!! But.. அப்போ அதை அசால்ட்டா விட்டுட்டேன்..!! அப்புறம்.. அன்னைக்கு ஏரில அந்த இன்சிடென்ட் அப்போ.. நீ உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டுனியே.. அப்போத்தான்.. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு, பொட்டுல அறைஞ்ச மாதிரி எனக்கு புரிஞ்சது..!!" ".........................." "உன்கிட்ட இருந்து உடனே விலகிடணும்னு நெனச்சேன்.. அன்னைக்கு சிக்னல்ல இறங்கி ஓடுனனே.. அதுக்கப்புறம் உன்னை மீட் பண்ணவே கூடாதுன்ற முடிவோடதான் இறங்கிப் போனேன்.. கால் பண்ணாம, கான்டாக்ட் பண்ணாம இருந்தேன்..!! But.. Do you know, what happened..?? என்னால ஒருநாளுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல அசோக்.. உன்கூட பேசாம என்னால இருக்க முடியல.. என் வைராக்கியம்லாம் ஒரே நாள்ல செத்துப்போச்சு.. பைத்தியக்காரி மாதிரி உன்கிட்ட ஓடிவந்து.. 'நேத்து என்னை மிஸ் பண்ணுனியா'ன்னு பல்லை இளிச்சுக்கிட்டு நின்னேன்..!!" மீரா கலங்கிய கண்களுடன் பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை இப்போது ஏக்கமாக பார்த்தான். ".........................." "அப்புறமும் அடிக்கடி காணாம போனேன்..!! சரி.. ஒரேடியா முடியல.. கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிடலாம்னு தோணுச்சு.. அதான் இண்டர்வ்யூ அது இதுன்னு பொய் சொன்னேன்..!! ஆனா.. உன்னை ஏமாத்தின மாதிரி என் மனசாட்சியை என்னால ஏமாத்த முடியல அசோக்.. 'இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குற'ன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!! நேத்து உன் ஃபேமிலியை பாத்தப்புறம்.. அவங்க கூட பேசினப்புறம்.. அந்த உறுத்தல் ரொம்ப அதிகமாயிடுச்சு..!! தெனமும் உன்னை நெனச்சு அழுவேன்.. நேத்து ரொம்ப அதிகமா அழுதேன்..!!" தழதழத்த குரலில் மீரா சொல்ல, "ஹேய்.. மீரா..!!" என்று அசோக் அவளுடைய புஜத்தை ஆதரவாக பற்றினான். மீரா இப்போது தனது தளிர்க்கரங்கள் இரண்டையும் உயர்த்தி, அசோக்கின் கன்னங்களை மென்மையாக தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கண்களிலும், மனதிலும் காதல் பொங்கி வழிய சொன்னாள்."நீ என் மனசுக்குள்ள எப்போ வந்த, எப்படி வந்தன்லாம்.. சத்தியமா எனக்கு தெரியல அசோக்.. நான் யோசிச்சு சுதாரிக்கிறதுக்கு முன்னாடி, என் மனசை மொத்தமா நெறைச்சுட்ட..!! 'அவனை நீ லவ் பண்றியா'ன்னு கண்ணாடி முன்ன நின்னு, என்னை நானே கேட்டுக்குவேன்.. அப்புறம் 'அதுலாம் ஒன்னும் இல்ல..'ன்னு நானே பதிலும் சொல்லிக்குவேன்.. 'இன்னும் கொஞ்ச நாள் பேசிட்டு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலகிட போறோம்.. அவ்வளவுதான்..'னு மனசை சமாதானப் படுத்திக்குவேன்.. என்னை நானே ஏமாத்திக்குவேன்..!!" ".........................." "ஆனா.. ஆனா நேத்து அப்படி நடந்ததுக்கப்புறம்.. இனியும் என்னை நானே ஏமாத்திக்கிறதுல எந்த அர்த்தம் இல்லன்னு எனக்கு புரிஞ்சு போச்சு..!! நேத்து நீ என்னை தொட்டப்போ, என்னால தடுக்க முடியல அசோக்.. என்னை அணைச்சப்போ, வேணாம்னு சொல்ல வாய் வரல.. நீ முத்தம் தந்தப்போ, எனக்கு விலக மனசு இல்ல.. எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது..!! வெக்கத்தை விட்டு சொல்றேன் அசோக்.. உன் உதட்டால அப்படியே என்னை உறிஞ்சிக் குடிச்சிட மாட்டியான்னு இருந்தது.. உன் நெஞ்சுல சாஞ்சிருந்தப்போ.. இப்படியே சோறு தண்ணி இல்லாம கிடந்திட மாட்டோமான்னு தோணுச்சு..!!" ".........................." "இனிமேலயும் இது காதல் இல்லன்னு.. என் மனசாட்சியை என்னால எப்படி ஏமாத்த முடியும் அசோக்.. சொல்லு..!!" மீரா காதல் தவிப்புடன் கேட்டாள். அசோக் ஏனோ இப்போது மீண்டும் தன் முகத்தை சுருக்கினான். அவனுடைய முகம் ஏதோ ஒரு வலியில் துடிக்கிற மாதிரி காட்சியளித்தது. ஒருவித அவஸ்தையில் தத்தளிப்பவன் போல தடுமாறினான். கண்களை இறுக மூடியவன், தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டான்."எ..எனக்கு.. த..தலை சுத்துற மாதிரி இருக்குது மீரா..!!" "ஹ்ம்ம்.. நான் சொன்னது குழப்பமா இருக்கா..??" "இ..இல்ல.. இது நெஜமாவே..!!" திணறலாக சொன்ன அசோக், படக்கென தலையை உதறிக்கொண்டான். இமைகளை ஒருமுறை அகலமாக விரித்து, விழித்து பார்த்தான். தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டவன், பிறகு ஒரு அவஸ்தை பெருமூச்சுடனே சொன்னான். "எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மீரா.. நீ சொ..சொன்னதெல்லாம்.. ஷாக்கிங்கா இருக்கு..!! ஃப்ரண்ட்ஸ்கிட்ட சவால் விட்டதெல்லாம் சும்மா.. அ..அதுக்கு முன்னாடியே நீ என் மனசுல இருந்த.. பெட் கட்டினதுக்காகலாம் நான் உன்கூட பேச ஆரம்பிக்கல.. I always wanted to have a serious relationship with you..!!" "I know..!!" "நானும்.. உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. உ..உன்மேல எனக்கு இவ்வளவு காதல் இருந்ததான்னு கேட்டா.. சத்தியமா இல்லைன்னுதான் சொல்லணும் மீரா.. எல்லாம் உன்கூட பழக ஆரம்பிச்சப்புறந்தான்..!! உ..உன்கூட பேச ஆரம்பிச்ச அந்த செகண்ட்ல இருந்து.. நான் எந்த அளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..?? ஆனா நீ.. ஒவ்வொரு நாளும் உன் மனசுக்குள்ளயே போராடிட்டு இருந்திருக்குற..!!" "ம்ம்..!!" மீராவுக்கு இப்போது மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. "எ..என்னை டாமினேட் பண்ணின.. டார்ச்சர் பண்ணினன்லாம் என்னன்னவோ சொல்ற.. ஆனா.. நான் எதையும் அப்படி எடுத்துக்கல மீரா..!! அதெல்லாம்தான் உன்னோட குணம்னு எடுத்துக்கிட்டேன்..!! உ..உன்னோடதான் என் லைஃப்ன்னு முடிவானப்புறம்.. உன்னோட குணத்துக்கும் மதிப்பு கொடுக்குறதுதான.. உண்மையான காதலா இருக்க முடியும்..?? நான் என் காதலுக்கு எப்போவும் உண்மையாத்தான் இருந்தேன் மீரா..!!" "தெ..தெரியுண்டா..!!" முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் இப்போது முணுக்கென்று வெளிப்பட்டு, மீராவின் கன்னம் நனைத்து ஓடியது. அசோக் இப்போது தனது விரல்களால் அவளுடைய கண்ணீரை துடைத்தான். "ஹேய்.. இன்னும் ஏன் அழற.. அதான் உன் மனசுல உள்ளதெல்லாம் சொல்லிட்டியே.. எ..என் மனசையும் நல்லா புரிஞ்சுக்கிட்டியே..?? இப்போ.. நெஜமாவே என் மேல உனக்கு காதல் வந்திடுசுல.. அது போதும் எனக்கு..!!" என்றவன் அவளது கைகள் ரெண்டையும் தனது கைகளுக்குள் வைத்து, மென்மையாக முத்தமிட்டவாறே தொடர்ந்து பேசினான். "எ..என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமாவே நான் நெனைக்கல மீரா..!! இதை இத்தோட மறந்துட்டு.. நாம எப்போவும் போல இருக்கலாம்.. ம்ம்..?? சரியா..??" கேட்டுவிட்டு அசோக் மீராவை ஏறிட.. அவளோ தவிப்பில் துடிக்கிற முகத்துடனும்.. அழுத்தி கடிக்கப்பட்ட உதடுகளுடனும்.. 'இல்லை.. அது நடக்காது..' என்பது போல தலையை அசைத்தாள். அசோக் இப்போது சற்றே குழப்பமுற்றவனாய் மீராவை பார்க்க, அவளே வாய்திறந்து பேசினாள். "நா..நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது.. நாம எப்போவும் போல இருக்குறதுக்காக இல்ல அசோக்.. இனி எப்போவுமே இதை உன்கிட்ட சொல்ல முடியாதேன்னுதான்..!!" "வா..வாட்..??" "Yes ashok.. Today is our last day.. இனிமே நாம மீட் பண்ணிக்கப் போறது இல்ல..!!" "எ..என்ன சொல்ற நீ..??" "நான் போறேன் அசோக்.. உன்னை விட்டு போறேன்.. தூரமா போறேன்..!! போறதுக்கு முன்னாடி.. என் மனசுல இருந்த காதலை.. உன் கண்ணைப் பார்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு இது போதும்..!!" மீரா அவ்வாறு உறுதியான குரலில் சொல்ல, அசோக்கின் மனதில் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே அவனுக்கு இருந்த தலைச்சுற்றலோடு புதிதாக இந்த உணர்வும் சேர்ந்து கொள்ள, அவன் தடுமாறினான். நிலையாக நிற்க கூட முடியாத அளவுக்கு, அவனுடைய கால்களில் ஒரு நடுக்கம். மூளைக்குள் ஏதோ பலவித குழப்ப மின்னல்கள் வெட்ட, திணறலாகவே அவனால் பேச முடிந்தது. "வெ..வெளையாடாத மீரா.. ஏ..ஏன் போறேன்னு சொல்ற..??" "வெளையாண்டது போதும்னுதான்டா போறேன்னு சொல்றேன்..!! உன் மேல ஏதோ ஒரு வெறுப்புல இந்த வெளையாட்டை ஆரம்பிச்சுட்டேன்.. உன் முன்னாடி இந்த மாதிரி தோத்துப்போய் நிக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா இதை ஆரம்பிச்சிருக்க மாட்டேன்..!! போதும்.. வெளையாட்டை முடிச்சுக்கலாம்..!! நான் போயிடுறேன்..!!" மீரா அழுகுரலில் சொல்ல, அசோக்குக்கு இப்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. "பைத்தியமா உனக்கு..?? நீ எதுக்கு போகணும்..??" "நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!! உன் காதலுக்கு நான் தகுதியானவ இல்ல.. உன் வீட்டுக்கு மருமகளா வர, எனக்கு அருகதை இல்ல..!!" "ஏ..ஏன் மீரா இப்படிலாம் பேசுற..?? நீ.. நீ என்ன பாவம் பண்ணின..??""அதெல்லாம் உனக்கு தெரிய வேணாம் அசோக்.. சொல்றதுக்கு எனக்கும் விருப்பமும் இல்ல..!! ஒரு திமிர் புடிச்சவ உன்கூட வெளையாட ட்ரை பண்ணினா.. அப்புறம் உன் காதலுக்கு முன்னாடி தோத்துப்போய் காணாமப் போயிட்டா..!! அந்த அளவுக்கு நீ என்னைப்பத்தி தெரிஞ்சுக்கோ.. போதும்..!!" "இல்ல.. எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!" "ம்ஹூம்..!!" "சொல்லலேன்னா.. உ..உன்னை இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன் மீரா..!!" சொல்லிக்கொண்டே அசோக் மீராவின் புஜத்தை இறுகப் பற்றினான். "அது உன்னால முடியாது அசோக்.. You can't stop me..!!" "Yes.. I can..!!!! நீ பாட்டுக்கு பைத்தியம் மாதிரி ஏதோ உளறிட்டு போறேன்னு சொல்வ.. நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியா..?? நோ.. உன்னை போக விட மாட்டேன்..!!" "இ..இல்ல அசோக்.. உன்னால முடியாது..!!" "ஏன் முடியாது..?? நான் நெனச்சா.. உ..உன்னை.. இங்க.. இ..இப்படியே.." ஆரம்பித்ததை முடிப்பதற்கு முன்பே, அசோக்கின் தலை சுற்றல் உச்சபட்சத்தை எட்டியது. உடலும் மூளையும் சுத்தமாக சோர்ந்துபோன மாதிரி ஒரு உணர்வு. இமைகள் அவனுடைய கட்டுப்பாடு இல்லாமலே செருக ஆரம்பிக்க, கால்கள் தள்ளாடின. உடலின் எடை முற்றிலும் குறைந்து போய், அப்படியே காற்றில் மிதப்பது மாதிரி தோன்றியது அவனுக்கு. மிகவும் கஷ்டப்பட்டு விழிகளை திறந்து, மீராவை பரிதாபமாக பார்த்தான். அவனுடைய இந்த நிலையைக்கண்டு, மீரா கொஞ்சம் கூட அதிர்ந்து போன மாதிரி தெரியவில்லை. அவளுடய கண்களில் மட்டும் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது புஜத்தை பற்றியிருந்த அசோக்கின் பிடி, இப்போது வலுவிழந்து போயிருக்க, மிக எளிதாக அந்தப் பிடியில் இருந்து விலகிக் கொண்டவாறே, உதடுகள் படபடக்க சொன்னாள். "நான்தான் சொன்னேன்ல.. உன்னால முடியாது..!!" "மீரா.. எ..எனக்கு.. எ..எனக்கு ஒரு மாதிரி.." அசோக் தடுமாற்றத்துடனே தலையை பிடித்துக் கொண்டான். மீரா இப்போது தனது மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். அசோக்கை ஏறிட்டு சொன்னாள். "நீ ஜூஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சு அசோக்.. அப்படித்தான் இருக்கும்..!!" "எ..என்ன சொல்ற.." "வேலியம் 20mg..!! நீ ஹேண்ட் வாஷ் பண்ண போனப்போ.. என் பேக்ல இருந்து ரெண்டு டேப்லட் எடுத்து.. உன் ஜூஸ்ல கலந்துட்டேன்..!!" "வா..வாட்..??" "கொ..கொஞ்சம் ஹெவி டோஸேஜ்.. ந..நல்லா தூக்கம் வரும்.. அவ்வளவுதான்..!!" மீரா அழுகுரலில் சொன்னாள். அசோக்குக்கு இப்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மீரா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிற நிலைமையில் கூட அவன் இல்லை. 99% மயக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அவனது மூளை உறங்கிப்போக தயார் நிலையில் இருந்தது. அந்த உறக்கத்தை, அசோக் தலையை உலுக்கி, உடும்புப்பிடியாக உதற முயன்றான். குழம்பிப்போன மூளை அவனுடைய மனதில் பல குழப்பப்படங்களை திரையிட்டது. உடல் தடுமாறியது.. ஆதரவாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி, அவனது கைவிரல்கள் காற்றில் அலைபாய்ந்தன.. இமைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன..!! மீரா அவனையே ஒருவித பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாதீனத்தை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்த அசோக்.. அப்படியே தலையை சுழற்றி ஆகாயத்தை பார்த்தான்..!! அவனது உச்சந்தலைக்கு மேலே அந்த பருந்து.. வாய்கிழிய கத்தியபடியே வட்டமடித்துக் கொண்டிருந்தது..!! அவனுக்குள் இப்போது ஒரு அர்த்தமற்ற உந்துதல்.. அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று..!! மெல்ல திரும்பினான்.. கால்கள் தள்ளாட நடை போட்டான்.. ஆனால் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்பே.. கால்கள் மடங்கிப்போய் அப்படியே கீழே சரிந்தான்..!! "அசோக்..!!!" மீரா அலறிக்கொண்டே அவசரமாய் நகர்ந்து, அசோக் தரையில் விழுவதற்குள் அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று, அருகில் கிடந்த மரப்பெஞ்சில் அமரவைத்தாள். மயக்கத்தில் தத்தளித்த அசோக்கின் முகத்தை, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். காதலனின் நிலையைக்கண்டு, அவளுக்கு இப்போது அழுகை பீறிட்டு கிளம்பியது. நீர் கசிகிற கண்களுடன், அசோக்கின் தலைமுடியை கோதிவிட்டவாறே.. "ஒ..ஒன்னுல்லடா.. ஒன்னுல்ல..!! நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கப் போற.. வேற ஒன்னுல்ல..!! தூங்கி எந்திரிச்சா.. எல்லாம் சரியாப் போகும்..!! தூங்கு..!!" என்றாள். அவனுடைய நெற்றியில் உதடுகள் பதித்து முத்தமிட்டாள். அசோக் இமைகளை திறக்க முடியாமல் திறந்து, திணறலான குரலில் கேட்டான். "ஏ..ஏன்.. ஏன் மீரா..??""ஸாரிடா.. ஸாரி..!! எதுவுமே சொல்லாம உன்னைவிட்டு பிரிஞ்சு போக எனக்கு மனசு வரல.. ஃபோன்ல என் காதலை சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.. கடைசியா ஒருநாள் உன்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..!! நான் விலகிப்போறேன்னு சொன்னா.. நீ விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதான்..!! என்னை மன்னிச்சிடுடா..!!" "போ..போகாத மீரா..!!" "இல்ல அசோக்.. உன்கூட சேர்ந்து வாழறதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லடா.. நான் போறேன்..!!" "...................." "நா..நான் .. நான் போனப்புறம் என்னை மறந்துடணும்.. என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..?? உ..உனக்கு.. உனக்கு என்னைவிட, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணா ஒருத்தி வருவாடா.. உன் நல்ல மனசுக்கு, வானத்துல இருந்து குதிச்ச தேவதை மாதிரி ஒருத்தி வருவா.. அ..அவளைக் கட்டிக்கிட்டு.. எந்த குறையும் இல்லாம.. ந..நல்லா.. நல்லா சந்தோஷமா வாழனும்.. என்ன..??" விம்முகிற குரலில் சொன்ன மீரா, இப்போது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினாள். அசோக்கின் சட்டைப்பையில் அதை திணித்தாள். "பாட்டிட்ட குடுத்திடு.. இதை போட்டுக்க எனக்கு தகுதி இல்லன்னு சொல்லிடு..!! வீட்ல எல்லார்ட்டயும்.. இந்தப்பாவியை முடிஞ்சா மன்னிச்சிட சொல்லு..!!" மீரா பேசிக் கொண்டிருக்கையிலேயே அசோக் ஏதோ அவளிடம் சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன. அவன் பேச தவிப்பதை உணர்ந்த மீரா, "என்னம்மா.. சொல்லு..!!" என்றவாறே தனது காதை அவனது உதடுகளுக்கு அருகே எடுத்து சென்றாள். அசோக் இப்போது உதடுகள் பிரித்து, ஈனஸ்வரத்தில் மெல்ல முனகினான். "எ..எனக்கு நீ வேணும் மீரா..!!" சொல்லும்போதே அவனுடைய கண்களின் ஓரமாய் கண்ணீர் கொப்பளித்து ஓடியது..!! அவ்வளவுதான்..!! மீராவுக்கு அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை..!! அம்பு தைத்த பறவை போல.. மடியில் வீழ்ந்து கிடந்த காதலனின்.. பரிதாபகரமான வார்த்தைகள்.. அவளுடைய இதயத்தில் ஈட்டியை பாய்ச்சின..!! விழிகளில் கண்ணீர் ஆறாக ஓட.. 'ஓஓஓஓஓ' என்று பெருங்குரலில் ஓலமிட்டு அழுது அரற்றினாள்..!! மார்பில் புதைந்திருந்த அசோக்கின் முகத்தை.. மேலும் இறுக்கிக் கொண்டாள்..!! அவனுடைய நெற்றியில் 'இச்.. இச்..' என்று முத்தங்களை வாரி இறைத்தவாறே.. உடைந்துபோன குரலில் சொன்னாள்..!! "இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!" அசோக் கொஞ்சம் கொஞ்சமாய்.. முழுமயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தான்..!! எப்படியாவது விழித்திருக்கவேண்டும் என்று அவன் செய்த பிரயத்தனங்கள் எல்லாம்.. உள்ளே சென்றிருந்த ரசாயானத்தினால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன..!! அவனுடைய இமைகள் அவனது கட்டுப்பாட்டையும் மீறி.. மெல்ல மெல்ல மூடிக்கொள்ள ஆரம்பித்தன..!! அவனது உதடுகள் மட்டும்.. 'போயிடாத மீரா.. போயிடாத..' என்று திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!! மீராவோ கண்களில் நீர் வழிய.. பிஞ்சுக்குழந்தையை நெஞ்சில் போட்டு தாலாட்டும் தாயைப்போல.. அசோக்கை தனது மார்புத்தொட்டிலில் இட்டு.. அவன் மயக்கத்திற்கு செல்லும்வரை.. இப்படியும் அப்படியுமாய் இதமாக அசைத்து கொடுத்தாள்..!! அசோக் தூங்கிப் போனான்..!! அப்புறமும் சிறிது நேரம்.. மீரா அவனை தனது மார்போடு சேர்த்து தாலாட்டிக் கொண்டிருந்தாள்.. அழுதவாறே அவனது தலையை இதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..!! பிறகு நேரமாவதை உணர்ந்ததும்.. அவனை மெல்ல இருக்கையில் கிடத்திவிட்டு.. எழுந்தாள்..!! அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை உருவினாள்..!! கிஷோரின் நம்பர் தேடிப்பிடித்து கால் செய்தாள்..!! "ஆங்.. சொல்லு மச்சி.. என்ன சொல்றா வீரலட்சுமி..??" என்று கிண்டலாக ஆரம்பித்த கிஷோரை கண்டுகொள்ளாமல், "கிஷோர் அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!" என்றாள் இறுக்கமான குரலில். "மீ..மீரா.. நீ..?? நா..நான் அசோக்குனு.." "பரவாலண்ணா..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல..??" "ம்ம்.. ஆ..ஆமாம்..!!" "உள்ள என்டர் ஆனதும்.. லெஃப்ட்ல ஒரு பாதை போகும்.. அதுலயே போனா.. டெட் என்ட்ல ஒரு வுடன் பெஞ்ச் இருக்கும்.. அந்த பெஞ்ச்ல அசோக் மயக்கமா படுத்திருக்கான்.. நீங்க இங்க கொஞ்சம் வந்து.. அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கண்ணா..!!" "வா..வாட்..?? ம..மயக்கவா..?? என்னாச்சும்மா..??" கிஷோர் அடுத்த முனையில் அதிர்ந்து கொண்டிருந்தான். "பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. நான்தான் தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சிருக்கேன்..!!" "நீ..நீயா..?? என்ன சொல்ற..??" "கொஞ்ச நேரம் நல்லா தூங்குவான்.. அவனை ரெஸ்ட் எடுக்க விடுங்க..!! தூங்கி எந்திரிச்சதும் கேளுங்க.. அவனே எல்லாம் சொல்லுவான்..!!" "எ..என்னம்மா சொல்ற நீ.. எனக்கு ஒன்னும் புரியல..!!" "பேசிட்டு இருக்க நேரம் இல்லண்ணா.. சீக்கிரம் கெளம்பி வாங்க.. வேணு அண்ணாவோட காரை எடுத்துட்டு வாங்க..!!" சொல்லி முடித்த மீரா.. காலை உடனே கட் செய்தாள்..!! கட் செய்ததுமே.. அசோக்குடைய செல்ஃபோனின் பக்கவாட்டில் இருந்த தகட்டினை விலக்கி.. உள்ளே செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை.. விரல் நகத்தினால் உருவி எடுத்தாள்..!! அசோக் அவளுடைய செல்போனில் இருந்து.. அவனது செல்ஃபோனுக்கு படங்களை எல்லாம் பிரதி எடுத்துக்கொண்டதை.. முன்கூட்டியே அறிந்தவள் போல செயல்பட்டாள்..!! இப்போது அசோக்கின் செல்ஃபோனுக்கு கிஷோரின் நம்பரில் இருந்து கால் வந்தது..!! அதை கண்டுகொள்ளாமல்.. அலறுகிற அந்த ஃபோனை.. அசோக்கின் பேன்ட் பாக்கெட்டிலேயே திணித்தாள்..!! இறுதியாகப் பார்க்கிறோம் என்ற எண்ணத்துடன்.. அசோக்கின் முகத்தை காதலும், ஏக்கமுமாய் ஏறிட்டாள்..!! அவன் முகத்திற்கு முன்பாக ரீங்காரமிட்ட ஈ ஒன்றினை.. புறங்கை வீசி விரட்டினாள்..!! கலைந்திருந்த அவனது தலைமுடியை சரி செய்தாள்..!! பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டவள்.. அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்தாள்..!!சற்று நேரத்திற்கு முன்பு நடந்து வந்த பாதையிலேயே.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய பார்வை நிலைகுத்திப்போன மாதிரி.. அந்தரத்தை வெறித்தது..!! வாழ்வில் இருந்த ஒற்றை சந்தோஷத்தையும் இழந்துவிட்ட விரக்தி.. அவளின் முகத்தில் விரவிக் கிடந்தது..!! அவளது கால்கள் மட்டும் அனிச்சையாக.. அடிமேல் அடிவைத்துக் கொண்டிருந்தன..!! கைகள் அவளுடைய செல்ஃபோனை பிரித்தன.. உள்ளே பொதிந்திருந்த சிம்கார்டை உருவின..!! ஏற்கனவே வைத்திருந்த அசோக்கின் மெமரி கார்டுடன் சேர்த்து.. இரண்டினையும்.. மண்டிக்கிடந்த புதருக்குள் வீசி எறிந்தவாறே நடையை தொடர்ந்தாள்.. மீரா..!! அடுத்த நாள் காலை.. நேரம் ஏழு மணியை தாண்டி இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!! வேணுவின் கார் குமரன் காலனி மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி.. புழுதியை கிளப்பியவாறே பங்கஜம் ரோட்டில் நுழைந்தது..!! மேலும் ஒரு இருநூறு அடி தூரம் ஓடியதும்.. மெல்ல மெல்ல வேகம் குறைந்து.. பிறகு சரக்கென ப்ரேக் மிதிக்கப்பட.. சாலையோரமாய் க்றீச்சிட்டு நின்றது..!! கார் நின்றதுமே.. பின் சீட்டில் அமர்ந்திருந்த அசோக் அவசரமாய் கீழே இறங்கினான்.. கதவை அறைந்து சாத்தினான்..!! தலையை சற்றே உயர்த்தி அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்..!! மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. 'Aptech Computer Education' என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. 'டப்.. டப்.. டப்..' என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!! "நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!" சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான். "ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!" என்று அவனை விரட்டினான். முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான். "இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!" கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.
"வையி.. அப்புறம் பேசலாம்..!!" அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது. "ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!" கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே.. "நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??" என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான். "திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி.." ".............." "ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!" ".............." "என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??" ".............." "ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!" ".............." "ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!" கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை 'கில்'ல ஆரம்பித்தார்கள்..!!நேற்று மீரா கால் செய்து விஷயத்தை சொன்னதுமே.. அசோக்கின் நண்பர்கள் மூவரும் பதறிப் போனார்கள்..!! அவனுடைய செல்ஃபோனில் ரிங் சென்று கொண்டே இருக்க.. பயந்து போன மூவரும் வேணுவின் காரில் உடனடியாய் கிளம்பினர்..!! மீரா சொன்ன குறிப்பை உபயோகித்து.. மிக எளிதாகவே அசோக்கை கண்டுபிடிக்க முடிந்தது..!! மயக்கத்தில் இருந்தவனை.. கார் பின் சீட்டில் கிடத்தினர்..!! 'பயப்படுறதுக்கு ஒன்னுல்ல..' என்று மீரா சொல்லியிருந்தாலும்.. இவர்கள் மனம் சமாதானமாகாமல்.. அசோக்கை அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!! அவனை பரிசோதித்த டாக்டரும்.. மீரா சொன்னதையே திரும்ப சொன்னபிறகுதான்.. நிம்மதியாக மூச்சு விட்டனர்..!! ஹாஸ்பிட்டல் படுக்கையில் வாய்பிளந்து உறங்கிய அசோக்கை சுற்றி.. கன்னத்தில் கைவைத்தவாறு மூவரும் அமர்ந்து கொண்டார்கள்..!! அசோக் குடும்பத்தாருக்கு விஷயத்தை சொல்லி.. அவர்களை களேபரப் படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!! 'அவசர வேலையா வெளியூருக்கு போயிருக்கான் ஆன்ட்டி.. நாளைக்கு காலைல வந்துடுவான்..' என்று கிஷோர் பாரதிக்கு கால் செய்து சொன்னான்..!! மயக்கத்தில் கிடக்கிற நண்பனையே.. மற்ற மூவரும் கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்தனர்..!! என்ன நடந்திருக்கும் என்பதை.. கொஞ்சம் கூட அவர்களால் யூகிக்க இயலவில்லை..!! 'இவனை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு.. எங்கே போய் தொலைந்தாள் அவள்..?? அசோக்கை மயக்கத்தில் வீழ்த்துக்கிற அளவுக்கு.. அப்படி என்ன அவசியம் அவளுக்கு..??' எதுவுமே புரியவில்லை நண்பர்களுக்கு..!! அதிகாலை மூணு மணி வாக்கில்தான் அசோக்குக்கு விழிப்பே வந்தது..!! அவன் எழுந்ததுமே.. சப்தம் கேட்டு விழித்து.. அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள்.. 'மீரா எங்கடா..??' என்று கேட்க எத்தனித்தனர்..!! ஆனால் அவர்களை முந்திக்கொண்டு.. அசோக் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க.. மூவரும் குழம்பிப் போயினர்..!! அப்புறம்.. நடந்த விஷயங்களை எல்லாம் அசோக்கே நண்பர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்..!! அப்படி சொல்கையில் அவனுடைய குரலில் தொனித்த வேதனையை.. அவர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!! தாங்கள் விளையாட்டுத்தனமாய் விட்ட சவால்தான்.. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்பதை அறிய நேர்ந்ததும்.. அவர்களுக்குமே மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி..!! 'எனக்கு இப்போவே மீராவ பாக்கனும்..' என்று.. அந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்ப முயன்ற அசோக்கை.. அதட்டி, அடக்கி, அரும்பாடு பட்டு.. 'எல்லாம் காலைல பாத்துக்கலாம்டா.. இப்போ நிம்மதியா படுத்து தூங்கு..' என்று சமாதானம் செய்து படுக்கவைத்தனர்..!! அசோக்கின் மனதில் நிம்மதி எப்போதோ செத்துப் போயிருக்க.. அவனால் உறங்க முடியவில்லை..!! மீராவின் நினைவுகளே நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருக்க.. மனதுக்குள்ளேயே அழுதவாறு படுத்திருந்தான்..!! ஏதோ ஒரு நப்பாசையுடன் அவளுடைய எண்ணுக்கு கால் செய்து பார்த்தான்.. ஸ்விட்ச்ட் ஆஃப் என்று பதில் வர.. மொபைலை எறிந்தான்..!! தனது மெமரி கார்டை கூட அவள் உருவி சென்றிருப்பதை உணர்ந்து.. வயிறு எரிந்தான்..!! 'ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டா.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?? உன்னை விட்ருவேன்னு நெனச்சியா..?? நாளைக்கே உன்னை தேடிக் கண்டு பிடிக்கிறனா இல்லையான்னு பாரு.. கண்டுபிடிச்சதும் உன் கன்னம் ரெண்டும் பழுக்குதா இல்லையான்னு பாரு..' என்று மனதுக்குள்ளேயே கருவிகொண்டான்..!! 'எப்போதடா பொழுது விடியும்' என்று.. மோட்டுவளையை வெறித்தவாறே காத்திருந்தான்..!! விடிந்ததுமே.. களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த நண்பர்களை.. அந்த அதிகாலையிலேயே அடித்துக் கிளப்பி.. இதோ.. காரை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் சென்டருக்கும் வந்துவிட்டான்..!! நேரம் எட்டு மணியை நெருங்க ஆரம்பிக்கையில்.. அந்த இடத்துக்கு ஆட்கள் வருகை அதிகமாக இருந்தது..!! மார்னிங் பேட்ச் தேர்வு செய்திருந்த மாணவர்கள்.. குளித்தோ, குளிக்கமாலோ சென்டருக்கு வந்து சேர்ந்து.. சலிக்காமல் டெக்னிகல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்..!! சரியாக 7.55 க்கு.. உதட்டோரத்தில் அழகாக மச்சம் தாங்கிய அந்தப்பெண்.. ஆக்டிவாவில் ஸ்டைலாக வந்து இறங்கினாள்.. கடையை திறந்தாள்..!! மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சேர்ந்து.. அந்த ஆரவாரம் எல்லாம் சற்று அடங்கும்வரைக்கும்.. அசோக்கும் நண்பர்களும் அமைதியாக காத்திருந்தனர்..!! அப்புறம் சென்டருக்குள் நுழைந்து.. அந்த மச்சக்காரியை அணுகினர்..!! அவள் சாலமனின் முகத்தை பார்த்த பிறகுமே.. "என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண வந்திருக்கீங்க..??" என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டாள். "ஹிஹி.. இல்லைங்க.. நாங்க கோர்ஸ்லாம் ஜாயின் பண்ண வரல.!!" சாலமன் இளித்தான். "அப்புறம்..??" "எங்களோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தங்க.. இந்த சென்டர்லதான்.. போன மாசம் வரை அனிமேஷன் கோர்ஸ் படிச்சாங்க..!!" "சரி..!!" "உங்க ரெகார்ட்ஸ்லாம் எடுத்து.. அவங்க அட்ரஸ் என்னன்னு கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா.. நாங்க வந்த வேலை முடிஞ்சிடும்..!! உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு.. நாங்க கெளம்பிட்டே இருப்போம்..!!" சற்றே எகத்தாளமாக சொன்ன சாலமனை, அந்தப்பெண் எரிச்சலாக பார்த்தாள். "க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க.. இங்க வந்து அட்ரஸ் கேக்குறீங்க..??" அந்தப்பெண் லாஜிக்காக கேள்வி கேட்க, சாலமன் இப்போது தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை கண்டதும், வேணு இப்போது இடையில் புகுந்து, அவளுக்கு உளறலாக பதில் சொன்னான். "அ..அது.. அது வந்து.. க்ளோஸ்தாங்க.. ஆனா அட்ரஸ் சொல்லிக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்லன்னு வச்சுக்கங்களேன்..!! ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்.. தண்ணி கூட அடிச்சிருக்கோம்.. ஆ..ஆனா இந்த அட்ரஸ் மட்டும் எப்படியோ ஷேர் பண்ணிக்காமலே விட்டுட்டோம்..!! இப்போ அர்ஜன்ட்டா அவங்கள மீட் பண்ற மாதிரி ஒரு சிச்சுவேஷன் ஆகிப்போச்சு.. அதான்..!! ப்ளீஸ்ங்க.. கொஞ்சம் ஹெல்ப்புங்க..!!" வேணுவின் உளறலில் அந்தப்பெண் கன்வின்ஸ் ஆகாவிட்டாலும்.. அவனுடைய குரலில் தொனித்த அந்த கெஞ்சல்.. அவளை மனம் இரங்க செய்தது..!! தனது கம்ப்யூட்டரை இயக்கியவள்.. மானிட்டரை பார்த்துக்கொண்டே வேணுவிடம் கேட்டாள்..!! "கோர்ஸ் எப்போ முடிச்சாங்கன்னு சொன்னீங்க..??" "லாஸ்ட் மன்த்..!!" "என்ன கோர்ஸ்..??" "மாயா..!!" "அவங்க பேரு..??" "மீரா..!!" வேணு கூலாக சொல்ல, "மீராவா..??" அவள் திடீரென அதிர்ந்தாள். "ஆமாங்க..!!" என்ற வேணு அசோக்கிடம் திரும்பி, "அப்பா பேரு என்ன மச்சி..??" என்று கேட்டான். "சந்தானம்..!!" என்று அசோக் சொன்னதும், வேணு இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி, "ஆங்.. எஸ்.மீரா'ன்னு போட்டு தேடிப்பாருங்க..!!" என்றான். அவளோ வேணுவை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள். "பொண்ணா..????" என இறுக்கமாக கேட்டாள். "ஆ..ஆமாம்..!! அப்புறம்.. மீரான்னா.. பொண்ணுதான..??" வேணு அப்பாவியாக இளிக்க, அவள் இப்போது மானிட்டரை படக்கென ஆஃப் செய்தாள். "இல்லைங்க.. பொண்ணுங்க அட்ரஸ்லாம் தர்றது இல்ல..!!" "ஹலோ ஹலோ.. ப்ளீஸ்ங்க..!!" வேணுவுடன் சேர்ந்து இப்போது கிஷோரும் அந்தப்பெண்ணிடம் கெஞ்சினான். "ப்ச்..!! நோ.. ஐ கான்ட்..!! உங்க நாலு பேரையும் பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு.. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா.. யார் பதில் சொல்றது..?? அட்ரஸ்லாம் தர முடியாது.. எடத்த காலி பண்ணுங்க..!!" "அப்படிலாம் சொல்லாதிங்க மேடம்.. நீங்கதான் எங்களுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்..!! எந்தப் பிரச்சனையும் வராது மேடம்.. எங்களை பாத்தா பிரச்னை பண்றவங்க மாதிரியா தெரியுது..?? நாங்க ரொம்ப அப்பாவிங்க மேடம்..!! ப்ளீஸ்.. கொஞ்சம் மனசு வைங்க..!!" "ஷ்ஷ்ஷ்.. நான்தான் முடியாதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கெஞ்சிட்டு இருக்கீங்க..?? கெளம்புங்க..!!" "ஹையோ.. ரொம்ப முக்கியமான விஷயம் மேடம்.. அவங்க அட்ரஸ் எப்படியாவது எங்களுக்கு வேணும்.. எங்க நெலமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்..!!" "என் நெலமையை நீங்க மொதல்ல புரிஞ்சுக்கங்க..!!" "ப்ளீஸ் மேடம்..!! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! நீங்க மனசு வச்சா கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்..!!" அசோக்கை தவிர மற்ற மூன்று பேருமே, இப்போது அந்தப்பெண்ணை கெஞ்சினர். வெட்கமில்லாமல் அவர்கள் கெஞ்சுவதை சகிக்க முடியாமல், அவளும் இப்போது சற்றே இறங்கி வந்து.. "சரி.. அப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றீங்களா..??" "என்ன..??" "எங்க மேனேஜரை பார்த்து பெர்மிஷன் கேளுங்க..!! அவர் சொன்னா.. நான் உங்களுக்கு அட்ரஸ் தர்றேன்..!!" "ஓகே..!! அப்போ.. உங்க மேனஜரை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மன்ட் கொடுங்க..!!" "அவர் 9'o clock-தான் வருவாரு.. அதுவரைக்கும் கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க..!!" அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே சோபாவை கைகாட்டினாள். "9'o clock-ஆ..?? அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா..?? என்ன மேடம் நீங்க..?? நீங்களே அந்த கம்ப்யூட்டர்ல அடிச்சு பாத்து.." "ஹலோ..!! என்னால அவ்வளவுதான் பண்ண முடியும்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இஷ்டம் இருந்தா, வெயிட் பண்ணி மேனேஜரை பாருங்க.. இல்லனா எடத்த காலி பண்ணுங்க..!! எனக்கு வேலை நெறைய இருக்கு.. வெட்டியா பேசிட்டு இருக்க நேரம் இல்ல..!!"கறாராக சொன்ன அவள் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து, இவர்கள் மேலிருந்த கடுப்பை கீ போர்டிடம் காட்ட ஆரம்பித்தாள். அசோக்கும் நண்பர்களும் வேறு வழியில்லாமல், மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்கள். அவ்வாறு அமர்ந்ததுமே.. கிஷோர் அசோக்கை பார்த்து.. "டேய் மச்சி.. அந்த மேனேஜர் வர்றதுக்குள்ள.. நீ போய் சாப்பிட்டுட்டு வந்துடு..!!" என்றான் கரிசனமாக. "இல்லடா.. அந்த ஆள் வரட்டும்..!! அட்ரஸ் வாங்கிட்டே கெளம்பிடலாம்..!!" "ப்ச்..!! அறிவில்லாம பேசாத.. நாங்களாவது பரவால.. நீ நைட்டும் சாப்பிடல..!! அட்லீஸ்ட் அவளை தேடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாம்..?? போ.. போய் சாப்பிட்டு வா.. போ..!! நாங்க இங்க வெயிட் பண்ணி.. அந்த ஆள் வர்றானான்னு பாக்குறோம்..!! சரியா..??" என்று கடுமையாக சொன்ன கிஷோர், வேணுவிடம் திரும்பி.. "டேய்.. கூட்டிட்டு போடா..!!" என்றான். "வாடா மச்சி.. போலாம்..!!" என்றவாறு வேணுவும் அசோக்கின் புஜத்தை இறுகப் பற்றினான். அடுத்த இரண்டாவது நிமிடம்.. அசோக்கும் வேணுவும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்..!! "நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! சும்மா.. செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா.. நம்மட்ட இருந்து எஸ்கேப் ஆயிட முடியுமா..?? உன்கூட நூறு நாள் பழகிருக்கா மச்சி.. எவ்ளோ பேசிருப்பா.. என்னன்னலாம் சொல்லிருப்பா.. ஈஸியா புடிச்சுடலாம் மச்சி..!! நீ டென்ஷன் ஆவாத..!!" வேணு சொன்ன ஆறுதல் அசோக்குக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் அவனுடைய புத்தியில் தீ கொளுத்தி போட்டது. மீராவுடன் அவன் பழகிய அந்த நூறு நாட்களில், அவள் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை எல்லாம், மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே வந்தான்..!! ஃபுட் கோர்ட் வந்து சேர்ந்தது..!! வாசலுக்கு முன்பாக வேணு காரை நிறுத்த.. அசோக் இறங்கிக்கொண்டான்..!! "நீ உள்ள போய் வெயிட் பண்ணு மச்சி.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..!!" சொன்ன வேணு, ஃபுட் கோர்ட்டின் கீழ்த்தளம் நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான். அசோக் படியேறி ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததுமே.. அவன் காலடியை வந்து மோதியது அந்த பலூன்..!! இரத்த நிறத்தில்.. இதய வடிவத்தில்.. அழகான, மென்மையான.. அந்த பலூன்..!! அந்த பலூனுக்கு பின்னாடியே.. நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.. பலூனை பிடிக்கிற உத்வேகத்துடன் வேகமாக ஓடிவந்தான்..!! அவனுக்கு பின்னால்.. அவனுடைய அம்மா.. "டேய் சூர்யா.. சூர்யாஆஆஆ..!! ஓடாத.. நில்லு..!! நில்லுன்றேன்ல..?? டேய்..!!!!!" என்று கத்தியவாறே, ஒருவித பதைபதைப்புடன் ஓடிவந்தாள். அசோக் குனிந்து அந்த பலூனை எடுத்தான். அந்த சிறுவனிடம் நீட்டினான். "தேங்க்ஸ் அங்கிள்..!!" அழகுப்புன்னகையுடன் சொன்னவாறே, அதை வாங்கிக்கொண்டான் சூர்யா. அவனை வந்து தூக்கிக்கொண்ட அவனது அம்மாவும், அசோக்கை பார்த்து, "தேங்க்ஸ்ங்க..!!" என்று புன்னகைத்தாள். "இட்ஸ் ஓகே..!!" சொன்ன அசோக் சூர்யாவின் கன்னத்தை பிடித்து அன்பாக திருகிவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்..!! வேணு வரும்வரை காத்திருக்கலாம் என்று எண்ணியவன்.. டேபிள்களுக்கு இடையில் புகுந்து நடந்தான்..!! மெல்ல நடைபோட்டு.. அந்த டேபிளை வந்தடைந்தான்.. மீரா எப்போதும் அமர்கிற அதே டேபிள்..!! அந்த டேபிளை பார்த்ததுமே.. அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை படருவதை.. அசோக்கால் உணர முடிந்தது..!! மீரா வழக்கமாக அமருகிற அந்த இருக்கையை.. ஒரு கையால் மென்மையாக வருடினான்..!! பிறகு மனதுக்குள் ஏதோ ஒரு ஆசை உருவாக.. அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்..!! அவனுக்கு சற்று தூரத்தில்.. சூர்யாவும், அவன் அம்மாவும் அமர்ந்திருந்தனர்..!! அவள் அசோக்கை பார்த்து ஒருமுறை புன்னகைத்துவிட்டு.. தோசையை பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்..!! சூர்யா இவனை பார்த்து 'ஹாய்' என்று கையசைத்துவிட்டு.. பலூனை தரையில் தட்டி தட்டி விளையாட ஆரம்பித்தான்..!! அசோக்கும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. மீராவின் நினைவில் மூழ்க ஆரம்பித்தான்..!! இதே ஃபுட்கோர்ட்டில்.. அவனுக்கும் அவளுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் எல்லாம்.. அவனுடைய மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டிருக்க.. நெஞ்சு பாரமாகிக் கொண்டே போனது..!! அப்போதுதான்.. எங்கிருந்தோ பறந்து வந்த அந்த காகிதம்.. அசோக்கின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது..!! அசோக் தனது கன்னத்தை தடவி.. அந்த காகிதத்தை கையில் எடுத்தான்..!! அது வெறும் காகிதம் அல்ல.. பிஸ்ஸாவின் மேல் தூவப்படுத்துகிற.. மிளக்காய்த்துகளை உள்ளடக்கியிருக்கும் காகித கவர்..!! இப்போது காலியாகிப்போய்.. எங்கிருந்தோ பறந்து வந்திருந்தது..!! அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!! ______________________________Mirchi..!!!!" அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!! "உன் பேர் என்ன..??" "ம்ம்ம்... மிர்ச்சி..!!" "ம்ம்ம்... மிர்ச்சி..!!" "ம்ம்ம்... மிர்ச்சி..!!" அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள். அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! 'ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??' என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!! அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்.. "Learn 'MAYA' at Aptech Computer Education..!!" "இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!" "ஓ..!! என்ன கோர்ஸ்..??" "ம்ம்.. மாயா...!!!!" மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!! "காரைக்குடி - செட்டிநாடு உணவகம்..!!" "ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!" ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!! "பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" - மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள். அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!! "என் அப்பா பேரு சந்தானம்..!!" "ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??" "ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!" யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!! "உன்னோட ஃபேவரிட் மூவி எது..??" "ம்ம்... டைட்டானிக்..!!" அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!! "ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??" "ம்ம்... சோனியா..!!" டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!! அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!"ஹலோ ஹனிபனி..!!" என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!! "வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!" என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார். அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி.. "என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" "என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! 'எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?' என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!! இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! 'அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??' அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்.. "டமார்..!!!" என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!! "பலூனு.. என் பலூனு..!!!" கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான். "ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!" அவன் அம்மா பதறினாள். "பலூனு.. என் பலூனு..!!!" "ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!" "எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!" சூர்யா 'ஓ..!!!!' என்று அழுது வீறிட்டான்..!! ஏமாந்து போன அந்த சிறு குழந்தையின் துயரத்தை பார்த்த அசோக்குக்கு.. அவனையும் அறியாமல் கண்களில் குபுக்கென்று நீர் கொப்பளித்து ஓட ஆரம்பித்தது..!! அவனுமே அந்த சூர்யாவின் நிலையில்தான் இருந்தான்.. அவனுக்குமே அதுமாதிரி அலறி அழ வேண்டும் போலிருந்தது..!! அப்போதுதான் திடீரென அவன் மனதுக்குள் அந்த சந்தேகம்..!! நீர்த்திரையிட்ட கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு.. சரக் சரக்கென தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அந்த வளாகத்தில் மிச்சமிருக்கிற விளம்பர போர்டுகளை எல்லாம்.. ஒவ்வொன்றாக பார்த்தான்..!! அவனுடைய பார்வை பரிதாபமாக அலைபாய்ந்தது.. 'அந்த வார்த்தை மட்டும் என் கண்ணில் பட்டுவிடக்கூடாது கடவுளே..' என அவனது மனம் இரைந்து மன்றாடியது..!! ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி.. வியர்த்த முகத்துடன்.. தவிக்கிற பார்வையுடன்.. கொதிக்கிற உள்ளத்துடன்.. தேடி தேடி பார்த்தான்..!! எங்குமே அந்த வார்த்தை அவனது கண்ணில் படவில்லை..!! இப்போது அவனது மனதுக்குள் மெலிதான ஒரு நிம்மதி பரவியது..!! "அட்லீஸ்ட்.. அவ பேராவது.. உண்மையான பேரை சொன்னாளே..!!" என்ற அற்பத்தனமான நிம்மதி. கண்களை துடைத்துக் கொண்டான். இதயம் இன்னும் திடும் திடும் என அடித்துக் கொண்டிருக்க.. டேபிளில் கையூன்றி.. முகத்தை மூடியவாறே மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்..!! பிறகு அவன் இமைகளை மெல்ல பிரித்தபோது.. எதேச்சையாக அவனது பார்வையில் அது பட்டது..!! ரொம்ப ஸ்பெஷல் என்று மீரா சொன்ன அந்த டேபிளின்.. பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம்..!! "Meera Furnitures & Home Appliance..!!" அவ்வளவுதான்..!! அந்த மாதிரி ஒரு வலியை.. ஏமாற்றத்தை.. வேதனையை.. அசோக் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை..!! ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவனது இதயம்.. இப்போது சில்லு சில்லாக வெடித்து சிதற ஆரம்பித்தது..!!போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில்.. அதிக சலசலப்பு இல்லாமல் சாந்தமாகவே காட்சியளித்தது அந்த கட்டிடம்.. வடபழனி R-8 காவல் நிலையம்..!! கட்டிடத்துக்குள்ளே.. கைதிகளை அடைத்து வைக்கிற ஸெல்லுக்குள்.. செங்கலாலும், சிமெண்டாலும் ஆன அந்த மேடை மீது.. சற்றே வாயை பிளந்து வைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்..!! எஸ்.ஐ ஆக இருக்கையிலேயே.. எல்லோரும் அவரை எஸ்.பி என்று அழைக்கிறார்கள் என்றால்.. தாய், தந்தை வைத்த தனது பெயருக்குத்தான் அவர் நன்றி கூற வேண்டும்..!! 'எஸ்.பி ஸார் வர்றார்.. எஸ்.பி ஸார் போறார்..' என்பது மாதிரி கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் பேசி.. அந்த ஸ்டேஷனுக்கு புதிதாக வருகை தந்திருக்கிற நபர்களை.. புரியாமல் தலை சொறிய வைப்பார்கள்..!! மஃப்டி உடையிலே உறங்கிக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாச பிரசாத்.. மார்பு திறந்திருக்க, சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழன்டிருந்தன.. தடித்த தங்கச்சங்கிலி ஒன்று அவரது கழுத்தில் தகதகத்தது..!! அசதியால் ஏற்பட்டிருந்த அவருடைய ஆழ்ந்த உறக்கத்தை.. ஸ்டேஷனுக்கு முன்புறம் இருந்து, சலசலவென வந்த அந்த சப்தம்.. சற்றே அசைத்து கலைத்துப் பார்த்தது..!! கான்ஸ்டபிள் கனகராஜன்.. கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த யாரிடமோ.. அசுவாரசியமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார்..!! "ஓடிப்போயிட்டாளா..??" "கா..காணாமப் போயிட்டாங்க..!!" "ரெண்டும் ஒன்னுதானய்யா..??" "இ..இல்ல ஸார்.. ரெண்டும் வேற வேற..!!" முன்பிருந்து வந்த சப்தம் மட்டும் இல்லாமல்.. அவருடைய முகத்துக்கு முன்பாக 'ஈஈய்ங்.. ஈஈய்ங்..' என்று இரைச்சலிட்டவாறே சுற்றி சுற்றி வந்த ஈ ஒன்று.. இப்போது அவரது மூக்கிலேயே சென்று அமர.. அவருடைய உறக்கம் முழுமையாக கலைந்து போனது..!! 'ப்ச்..' என்று சலிப்பான குரலுடன் முகத்துக்கு முன்பாக கையை வீசியவர்.. தலையை சிலுப்பியவாறே எழுந்து அமர்ந்தார்..!! கண்கள் தூக்கத்தால் இன்னும் சுருங்கிப்போயிருக்க.. முரட்டுத்தனமான அவருடைய முகவெட்டில் இப்போது ஒருவித கடுகடுப்பு..!! ஈ மீது எழுந்த கடும் எரிச்சலுடன்.. பக்கத்து அறையில் இருந்து வந்த கனகராஜனின் கட்டைக்குரல் வேறு அவருக்கு கடுப்பை கிளப்ப.. "ஏய்ய்ய்..!!!" என்று இங்கிருந்தே அந்த அறையைப் பார்த்து கத்தினார்..!! இவருடைய குரல் கனகராஜனின் காதில் விழவில்லை போலிருக்கிறது.. எந்த தடையும் இல்லாமல் தனது எகத்தாளப் பேச்சை அவர் தொடர்ந்துகொண்டிருந்தார்..!! "என்னய்யா.. வெளையாடுறீங்களா..?? எல்லாம் தண்ணி போட்டு வந்திருக்கீங்களா..??" "ஐயோ.. இ..இல்ல ஸார்..!!" "அப்புறம்..?? பேர் என்னன்னு கேட்டா இந்தாள் மீரான்றான்.. நீ என்னடான்னா மீரா இல்லைன்ற..??" "மீ..மீராதான் ஸார்.. அவங்க அப்படித்தான் சொன்னாங்க.. ஆனா அது உண்மையான பேரா இருக்குறதுக்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மின்னு வச்சுக்கோங்க.. கண்டிப்பா வேற பேராத்தான் இருக்கணும்..!! வேணும்னா.. இ..இப்போதைக்கு.. மீரான்னே வச்சுக்குவோம் ஸார்..!!" சாலமனின் பேச்சு கனகராஜனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கவேண்டும். "என்னய்யா பேசுறீங்க நீங்க.. நல்லா வெளக்கெண்ணெய்ல போட்ட வெண்டைக்காய் மாதிரி.. வழவழா கொழகொழான்னு..!!" என்றார் கேலியும் கோபமுமாய். (மேலே சாலமன் சொன்னதுதான் நமக்கும்.. அதாவது.. எழுதுகிற எனக்கும், படிக்கிற உங்களுக்கும்..!! அசோக் அவளுடைய உண்மையான பெயரை தெரிந்துகொள்ளும் வரை.. நமக்கு அவள் மீராதான்..!! சாலமன் சொன்னதை ஏற்றுக்கொள்வது நல்ல பிள்ளைக்கு அழகு.. அதை விட்டுவிட்டு.. மேலே கனகராஜன் சொன்னது போல.. என்னை கிண்டல் பண்ணுகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது.. சரியா..??) தனது சத்தத்துக்கு பயனில்லை என்று தெரிந்ததும், இங்கே ஸ்ரீனிவாச பிரசாத் சலிப்பானார். இனி வாய்பிளந்து உறங்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டவர், படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தார். தூக்க கலக்கத்துடனே நடந்து, அந்த அறையை ஒட்டியிருந்த கழிவறைக்குள் புகுந்தார். பைப் திறந்து முகத்தில் நீர் வாரி இறைத்துக் கொண்டார். ஹேங்கரில் தொங்கிய டர்க்கி டவலை எடுத்து.. முகத்தை அழுந்த துடைத்தவாறே.. மீண்டும் முன்னறையை நோக்கி நடந்தார்..!! அடுத்த அறையில் அவர்களுடைய பேச்சு சப்தம் இப்போது மீண்டும் கேட்டது..!! "ஜஸ்ட்.. அந்த ஃபோன் நம்பர் வச்சு.. அவங்க அட்ரஸ் மட்டும் கண்டுபிடிச்சு தந்தா போதும் ஸார்..!!" - கிஷோர் "புரியுதுயா.. மொதல்ல ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுங்க.. விசாரிப்போம்..!!" - கனகராஜன் இரண்டு அறைகளையும் பிரித்த அந்த இரட்டை மரத்தடுப்பை.. இரண்டு கையாளும் விலக்கியவாறு வந்து நின்றார் ஸ்ரீனிவாச பிரசாத்.. பக்கத்து அறைக்குள் பார்வையை வீசினார்..!! கனகராஜனும் அவரை சுற்றி அமர்ந்திருந்த அசோக் அண்ட் கோ-வும் கண்ணுக்கு தெரிந்தனர்..!! இவர் வந்து நின்றதை அவர்கள் கவனிக்கவில்லை.. தங்களது பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்றே கவலையான குரலில் கனகராஜனிடம் கேட்டான்..!!"க..கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணாம.. க..கண்டுபுடிச்சு தர மாட்டீங்களா ஸார்..??" "எதுக்கு கேக்குற..??" "எ..எனக்கு.. எனக்கு அவ மேல கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ண இஷ்டம் இல்ல..!!" சொன்ன அசோக்கை, கனகராஜன் ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார். "ஏன்யா.. எங்களைலாம் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..?? வேலை வெட்டி இல்லாம உக்காந்திருக்கோம்னு நெனச்சியா..?? கம்ப்ளைன்ட் பண்ணாம ஆக்க்ஷன் எடுக்குறதுக்கு.. போலீஸ்காரங்க என்ன உங்கவீட்டு வேலைக்காரங்களா..?? எத்தனையோ கேஸ் எஃப்.ஐ.ஆர் போட்டும்.. ஆக்க்ஷன் எடுக்காம அப்டி அப்டியே கெடக்குது.. நீ என்னடான்னா.." "அதுக்கு இல்ல ஸார்.. நான்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேணு இடையில் புகுந்து "ஏய்.. நீ சும்மா இர்டா.." என்று அவனை தடுத்தான். பிறகு கனகராஜனிடம் திரும்பி, "ஸார்.. நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்குறோம்..!!" என்றான். "டேய்..!!" அசோக் இப்போது வேணுவிடம் எகிறினான். "என்னடா..??" "அ..அவ மேல எதுக்குடா கம்ப்ளைன்ட்.. அவ என்ன தப்பு பண்ணினா..??" "உன்னை நல்லா ஏமாத்திருக்காளே.. அது பத்தாது..?? இத்தனை நாளா உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சு.. நம்ப வச்சு.. பொய் பொய்யா சொல்லி..!! ச்ச.. எப்படிலாம் முட்டாள் ஆக்கிருக்கா.." சொல்லிக்கொண்டிருந்த வேணுவை இடைமறித்து கனகராஜன் கேட்டார். "ஏம்பா.. கொஞ்சம் இருங்க..!! ஏமாத்திட்டா ஏமாத்திட்டான்னு அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கீங்களே.. அப்படி என்ன ஏமாத்திட்டா..?? பணம், நகைன்னு ஏதாவது ஆட்டைய போட்டுட்டு போயிட்டாளா..??" "ஹையோ.. அதெல்லாம் ஒன்னுல்ல ஸார்.. ஏன் கேக்குறீங்க..??" - இது கிஷோர். "என்னது.. ஏன் கேக்குறீங்களா..?? கிழிஞ்சது போ..!! கம்ப்ளைன்ட்ல அப்புறம் என்னத்தய்யா எழுதுவீங்க..?? அவ ஏமாத்தினதால.. உங்களுக்கு என்ன பாதிப்புன்னு எழுதனுமே..??" "ஓ..!! பா..பாதிப்புனா.. ம்ம்ம்.. அவ போயிட்டதால.. இ..இவன் அப்டியே மனசு உடைஞ்சு போயிட்டான் ஸார்..!! அதான்.." கிஷோர் தயங்கி தயங்கி சொல்ல, கனகராஜன் இப்போது கடுப்பானார். "யோவ்.. எந்திரிங்கயா..!!" "எ..என்ன ஸார்..??" "டயத்தை வேஸ்ட் பண்ணாம.. எடத்த காலி பண்ணுங்க..!!" "ஏ..ஏன் ஸார்.. என்னாச்சு..??" "பின்ன என்ன..?? அவன் அவன் லட்சக்கணக்குல தொலைச்சுட்டு.. ஏமாந்த பணம் எப்போ வரும்னு தெரியாம.. வீட்டுக்கும் ஸ்டேஷனுக்குமா அலைஞ்சுட்டு இருக்கானுக..!! நீங்க என்னடான்னா.. மனசு உடைஞ்சதுக்குலாம் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டீங்க..?? அங்க பாரு.. அவ்வளவும் பெண்டிங்ல இருக்குற கேஸ் ஃபைல்ஸ்..!! ஆயிரத்தெட்டு கம்ப்ளைன்ட் வந்து கெடக்கு.. அம்புட்டும் வழிப்பறி, ராபரி, கழுத்தறுப்பு, கற்பழிப்பு..!! அதைக்கவனிக்கவே இங்க ஆளும் இல்ல.. நேரமும் இல்ல..!! இந்த லட்சணத்துல.. இப்போ உங்க கம்ப்ளைன்ட் ரொம்ப முக்கியமா..?? வீட்டுக்கு போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்கயா.. போங்க..!! சும்மா கெளம்பி வந்துட்டிங்க.. மனசு, மசுருன்னுட்டு..!!" கனகராஜன் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, அசோக்குக்கு இப்போது சுருக்கென கோவம் வந்தது. அந்த கோவத்துடனே அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து, "என்ன ஸார் நீங்க.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க..?? லட்சக்கணக்குல தொலைச்சா மட்டுந்தான் அது பாதிப்பா..?? எத்தனை கோடி ரூபா கொடுத்தாலும்.. என் மனசுல உண்டான பாதிப்பு சரியாகாது ஸார்.. அது தெரியுமா உங்களுக்கு..?? அவ வந்தாத்தான் அது சரியாகும்..!! அ..அவ.. அவ என் உயிர் ஸார்.. என் வாழ்க்கை..!! அவ எனக்கு திரும்ப கெடைக்கலைன்னா.. என் லைஃபே போச்சு.. அவ்வளவுதான்.. Its gone..!!!! அப்புறம் நான் வாழ்றதுல அர்த்தமே இல்ல..!! கொஞ்சமாவது என் நெலமையை புரிஞ்சுக்கங்க ஸார்.. சும்மா வாயிக்கு வந்தபடி பேசாதிங்க..!!" ஆதங்கத்துடன் அசோக் பேசியதை ஸ்ரீனிவாச பிரசாத் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் அவ்வாறு குரலை உயர்த்தி பேசியது, இப்போது கனகராஜனின் ஆத்திரத்தை கிளறிவிட்டது. "டேய்.. என்ன.. திமிரா..?? ஸ்டேஷனுக்குள்ளயே வந்து ஓவரா சவுண்டு விடுற..?? உள்ள தூக்கிப்போட்டு பேத்தெடுத்துடுவேன் ராஸ்கல்..!!" என்று அசோக்கை பார்த்து சீறியவாறு, சேரில் இருந்து எழுந்தார். அவருடைய வலது கையை நீட்டி, அசோக்கின் சட்டையை பற்ற எத்தனித்த அவரை, "கனகு..!!!!!" என்று அவருக்கு பின்னால் இருந்து வந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் கடுமையான குரல் தடுத்து நிறுத்தியது. கனகராஜன் திரும்பினார். சப்-இன்ஸ்பெக்டரை கண்டதும் அவருடைய உடலில் உடனடியாய் ஒரு விறைப்பு. அவருடைய குரலிலும் அந்த விறைப்பு கூடியிருக்க,"ஸார்..!! வ..வந்ததுல இருந்தே ராங்கா பேசிட்டு இருக்காய்ங்க ஸார்..!! ஏதோ ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லிட்டு காணாம போயிட்டாளாம்.. உடனே இவரு மனசு உடைஞ்சு போயிட்டாராம்.. கம்ப்ளைன்ட் குடுக்க வந்துட்டாய்ங்க.. அந்தப்பொண்ணு பேர் கூட இவய்ங்களுக்கு சரியா தெரியல.." "ப்ச்.. விடுயா..!!" "நாம இவய்ங்களுக்கு அந்தப்பொண்ணு அட்ரஸ் கண்டுபிடிச்சு தரணுமாம் ஸார்..!! போலீஸ் ஸ்டேஷன்னு நெனச்சாய்ங்களா.. இல்ல போஸ்ட் ஆபீஸ்ன்னு நெனச்சாய்ங்களான்னு தெரியல..!!" "யோவ்.. விடுன்றேன்ல.. எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்..!!" சற்றே எரிச்சலாக கனகராஜனிடம் சொன்னார் ஸ்ரீனிவாச பிரசாத். பிறகு மெல்ல நகர்ந்து அசோக்கை நோக்கி சென்றார். இப்போது அசோக்கின் நண்பர்களும், சேரை விட்டு எழுந்து நின்றனர். மற்றவர்களை விட்டுவிட்டு அசோக்கை நெருங்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அவனுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார். "ஏமாந்தவன் நீதானா..??" "ஆ..ஆமாம்..!!" "உன் பேர் என்ன..??" "அ..அசோக்..!!" "ம்ம்..!! சரி.. நீ மட்டும் என்கூட வா..!! மத்தவங்கல்லாம் வீட்டுக்கு போங்க..!!" இயல்பாக சொல்லிவிட்டு அவர் முன்னால் நடக்க, அசோக்கும் அவன் நண்பர்களும் அவரை சற்றே குழப்பமாக பார்த்தனர். அசோக் நின்ற இடத்தை விட்டு இன்னும் அசையாமல் இருக்க, ஒரு நான்கைந்து எட்டுகள் எடுத்து வைத்திருந்த ஸ்ரீனிவாச பிரசாத், இப்போது திரும்பி பார்த்தார். "ப்ச்.. வான்றேன்ல.. வா..!!" என்று கடுமையான குரலுடன் அசோக்கை கையசைத்து அழைத்தார். அசோக் இப்போது தயங்கி தயங்கி அவரை நோக்கி சென்றான். அவர் முன்னால் நடக்க, இவன் அவரை பின்தொடர்ந்தான். அசோக்கின் நண்பர்களும், கனகராஜனும் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தனர். இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர்..!! வெளியே இப்போது கதிரவன் காணாமல் போயிருக்க.. காரிருள் வந்து உலகத்தை கவ்வியிருந்தது.. ஆங்காங்கே ஒளிர்ந்த மின்விளக்குகள்.. அந்த இருளை நீக்க முடிந்த அளவுக்கு முயன்று கொண்டிருந்தன..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பில் ஏறி அமர்ந்து.. கதவை அறைந்து சாத்தினார்.. அசோக்கும் வண்டியில் ஏறி, அவருக்கு அருகே அமர்ந்துகொள்ள.. ஆக்சிலரேட்டரை மிதித்து ஜீப்பை கிளப்பினார்..!! வண்டி ஆர்காட் ரோட்டில் விரைந்து கொண்டிருந்தது.. ஸ்ரீனிவாச பிரசாத் எதுவுமே பேசாமல், ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாய் வளைத்துக் கொண்டிருந்தார்..!! அவருடைய இறுகிப்போன முகத்தை.. சற்று மிரட்சியுடன் பார்த்தவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!! "எ..எங்க ஸார் போறோம்..??" என்று அவன் தயங்கி தயங்கி கேட்டதற்கு.. ஸ்ரீனிவாச பிரசாத் அவன் பக்கமாய் திரும்பி, ஒரு முறைப்பையே பதிலாக தந்தார்..!! அசோக்கும் அதற்கு மேல் அவரை எதுவும் கேட்கவில்லை..!! சாலையில் ஏகத்துக்கும் வெளிச்சத்தை தெளித்தவாறு.. சர்ரென எதிர்த்திசையில் பறக்கிற வாகனங்களையே.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..!! அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து.. நெல்சன் மாணிக்கம் சாலையில்.. சற்று ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிற ஒரு தனியார் பார்..!! அரசின் அனுமதியும் பெறாமல்.. அதிக பிரபலமும் ஆகாமல்.. அமைதியும், அலங்கோலமுமாய் காட்சியளித்தது அந்த பார்..!! சுற்றியிருந்த சுவர்களில்.. சட்டை கழற்றிய சல்மான்கான்கள்.. கையில் சோடாவை வைத்துக்கொண்டு.. மறைமுகமாக விஸ்கிக்கு விளம்பரம் செய்தனர்..!! மூலையில் கிடந்த ஒரு டேபிளில்.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் அசோக்கும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்..!! இருவருமே அல்ரெடி நிறைய ஆல்கஹாலை விழுங்கியிருந்தனர்..!! "அ..அவ கண்ணு இருக்கே.. அ..அது.. அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்..!! எனக்கு கோவமானாலும் சரி.. சோகமானாலும் சரி.. அந்தக்கண்ணை பாத்துட்டா.. அவ்வளவுதான்.. அப்படியே எல்லாம் காணாம போயிரும்..!!" ".................................." "ஹ்ம்ம்... அ..அவளை எவ்ளோ லவ் பண்ணினேன் தெரியுமா..?? அவ மேல உசுரையே வச்சிருந்தேன்.. அவதான் என் பொண்டாட்டின்னு மனசுக்குள்ள அவ்வளவு கற்பனை..!! எ..எல்லாத்தையும்.. தூக்கிப்போட்டு மிதிச்சுட்டு போயிட்டா..!! அ..அப்டியே.. அப்டியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டா..!!" ".................................." "நல்லா தின்னுவா.. மெட்ராஸ்ல இருக்குற ஒரு ஹோட்டல் விடாம அவளுக்கு தீனி வாங்கிப் போட்டிருக்கேன்..!! பொடவை.. நகை.. லிப்ஸ்டிக்.. நெயில் பாலிஷ்.. லொட்டு.. லொசுக்கு.. மசுரு.. மட்டை..!!! ச்சை..!!!" ".................................." "இவளுகளலாம்.. நடுரோட்டுல ஓடவிட்டு.. அ..அப்டியே என்கவுன்டர் பண்ணனும்..!!" ".................................." "காதலிக்கிறப்போ தெரியலையா.. கட்டிப்புடிச்சு படுத்துக் கெடக்குறப்போ தெரியலையா..?? கல்யாணம்னு வந்தவுடனே மட்டும் கண்ணு தெரிஞ்சுடுச்சாக்கும்.. நான் போலீஸ்காரன்னு..!!" ".................................." "அந்த பன்னாடை நாயை பாக்குறதுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே.. போலீஸ் ஆகணும்னு ஆசை எனக்கு..!! திடீர்னு வந்து.. அப்பன் திட்றான்.. ஆத்தா வையிறான்னு மூக்கை சிந்தினா..??" ஸ்ரீனிவாச பிரசாத் தொடர்ந்து ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே இருந்தார். அசோக் தனது கதையை ஏற்கனவே அவருக்கு சொல்லி முடித்திருந்தான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தின் முறை. அமைதியாக அவருடைய புலம்பலை நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்த அசோக், பிறகு ஆறுதலாக அவரிடம் சொன்னான்."வி..விடுங்க ஸார்.. அதையே நெனைச்சுட்டு இருக்காதீங்க..!!" "எப்படிடா விடுறது..?? அவ விட்டுட்டு போய் எட்டு வருஷம் ஆகுது.. இன்னும் இங்க உக்காந்து அப்படியே கொடைஞ்சுட்டு இருக்காடா..!!" நெற்றியை தட்டிக்காட்டியவாறே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு முகத்தை வெடுக்கென வேறுபக்கமாக திருப்பி கத்தினார். "டேய் அய்யனாரு.. இன்னொரு கட்டிங் கொண்டா..!!" "போ..போதும் ஸார்.. ஏற்கனவே ரொம்ப குடிச்சுட்டீங்க..!!" அசோக்கின் கனிவு அவருக்கு ஏரிச்சலையே மூடியது. "ஏய்.. என்ன.. அக்கறையா..?? அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!! அக்கறையா பேசுற யாரையும் நான் சுத்தமா நம்புறது இல்ல.. அதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!" ஸ்ரீனிவாச பிரசாத் கண்களை உருட்டி சூடாக சொன்னார். பிறகு ஏதோ ஞாபகத்துக்கு வந்தவராய், தலையை கவிழ்த்துக் கொண்டார். அசோக் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். அப்புறம் தலையை மெல்ல உயர்த்தி, சற்றே தளர்ந்து போன குரலில் சொன்னார்.
"நா..நான் குடிக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னாடா.. ஒரு வருஷத்துக்கு மேல சுத்தமா இதை தொடாம இருந்தேன் தெரியுமா..!! இப்போ பாரு.. டெய்ய்ய்லி..!!" அவருடைய குரலில் தொனித்த வேதனையை அசோக்கால் புரிந்து கொள்ள முடிந்தது. 'இவன் நிஜமாகவே அன்புக்காக ஏங்குகிறான்.. ஆனால் எவளோ ஒருத்தி அன்பு காட்டுவது போல நடித்து ஏமாற்றிய பாதிப்பினால்.. யாருடைய அன்பும் தனக்கு அவசியம் இல்லை என்று அடம் பிடிக்கிறான்.. பாவம்தான்..!!' அசோக் இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தை பார்த்த பார்வையில் ஒருவித பரிதாபம் கலந்திருந்தது. அய்யனார் வந்து அரைகுவார்ட்டரை க்ளாஸில் கவிழ்த்து சென்றான். அதில் சோடா ஊற்றி கலக்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அப்படியே தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். 'க்க்க்ஹ்ஹாஹ்..!!' என்றொரு கனைப்புடன் முகத்தை சுருக்கிக் கொண்டார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டவர், அசோக்கின் பிரச்சினைக்கு வந்தார். "அவ பேர் என்ன..??" "தெ..தெரியாது ஸார்..!!" "ப்ச்.. அவ சொன்ன அந்த டுபாக்கூர் பேரைத்தான்டா கேக்குறேன்..!!" "மீரான்னு சொன்னா..!!" "ஹ்ம்ம்..!! ரொம்ப புடிக்குமா அவளை..??" "ம்ம்..!!" "ரொம்ப அழகா இருப்பாளோ..??" "ஆ..ஆமாம்..!!" "ம்ம்ம்ம்..!! அழகா பொறந்து தொலைச்சு.. நம்ம உசுரை எடுத்து தொலைக்குங்க.. சனியனுக..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அந்த மாதிரி வெறுப்பாக சொன்னவிதம்.. அசோக்கின் உதட்டில் மெலிதான ஒரு புன்னகையை வரவழைத்தது..!! இரண்டு நாட்களுக்கு பிறகு.. அவனது இதழ்களில் பூத்த புன்னகை அது..!! "நூறு நாள் அவகூட ஊர் சுத்திருக்கேன்னு சொல்ற.. ஒரு ஃபோட்டோ கூடவா எடுத்து வச்சுக்கல..??""மொபைல்ல வச்சிருந்தேன் ஸார்.. ஆ..ஆனா..!!" "ஆனா..??" "அவ போறப்போ.. அந்த மெமரிகார்டை உருவிட்டு போயிட்டா..!!" அசோக் இயல்பாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் புகை வழிகிற வாயுடன் சற்றே அதிர்ந்து போய் அவனை பார்த்தார். 'என்ன மாதிரியான கேரக்டர் அது..??' என்று மனதுக்குள்ளேயே ஒரு சில வினாடிகள் யோசித்திருப்பார் போலிருக்கிறது. பிறகு ஒரு சலிப்பு பெருமூச்சை வெளிப்படுத்தியவர், "செம கேடியா இருப்பா போல..??" "ம்ம்..!!" "எ..எப்படிடா இப்படி ஒருத்திட்ட போய் மாட்டுன..?? செம கேனையனா இருப்ப போல..??" என்று கேட்டார். "............................." அசோக் பதில் சொல்லவில்லை. விரக்தியாக புன்னகைத்தான். ஒரு சிலவினாடிகள் அமைதியாக இருந்த ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக கேட்டார். "ஹ்ம்ம்.. வீட்ல மேட்டரை சொல்லிட்டியா..??" "இன்னும் இல்ல ஸார்..!!" "ஏன்..??" "வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு.. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம்..!! இப்போ.. இந்த மேட்டர் தெரிஞ்சா.. அந்த சந்தோஷம் சுத்தமா காணாமப் போயிடும் ஸார்.. அப்படியே மனசு உடைஞ்சு போயிடுவாங்க..!!" "ம்ம்..!!" "இந்தப் பிரச்சினைக்கு காரணமே நானும் என் ஃப்ரண்ட்சுந்தான்.. வீட்டுக்கு எதுவும் தெரியாம, நாங்களே இந்தப் பிரச்சினையை சால்வ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!" "ம்ம்..!! அதுவும் சரிதான்..!! நீ சொன்னதை வச்சு பாத்தா.. உங்க வீட்டு ஆளுகலாம் ரொம்ப சாஃப்ட் டைப்பா தோணுது.. இந்த ஷாக்கை எப்படி தாங்குவாங்களோ..?? இப்போதைக்கு அவங்களுக்கு தெரியாம இருக்குறதே நல்லது..!!" "............................." "ஹ்ம்ம்... சரிடா.. எனக்கு ஒரு நாலஞ்சு நாள் டைம் குடு.. கம்ப்ளைன்ட்லாம் எதுவும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்.. என்ன..??" "ம்ம்..!!" "ப்ராப்பர் கம்ப்ளைன்ட் இல்லாம மூவ் பண்றதால.. கொஞ்சம் டிலே ஆகலாம்.. மத்தபடி எதும் பிரச்சினை இல்ல..!!" "ம்ம்..!!" "நீ சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத.. கண்டுபுடிச்சிடலாம்.. புரியுதா..??" "சரி ஸார்..!!" "ம்ம்ம்..!!! சரி வா.. கெளம்பலாம்.. டைமாச்சு..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சேரில் இருந்து மெல்ல எழுந்தார்.. அவருடைய உடம்பில் போதை மிதமிஞ்சி போயிருக்க.. எழுந்ததுமே கால்கள் தடுமாறினார்..!! கால்கள் தடுமாறி கீழே விழப் போன அவரை.. அசோக் அவசரமாக நகர்ந்து, தாங்கிப் பிடித்துக் கொண்டான்..!! உடனே அவருடைய முகம் படக்கென மூர்க்கமாகிப் போனது..!! "ப்ச்.. விட்றா..!!" என்று சீற்றமாக சொன்னவர்.. அசோக்கின் கையை வெடுக்கென உதறினார்..!! "எ..எனக்கு யார் தயவும் தேவை இல்ல..!!" வாய் குழற சொன்னவர்.. கால்கள் இரண்டும் தள்ளாட.. உடல் சீரில்லாமல் அல்லாட.. தடுமாற்றத்துடனே முன்னால் நடந்தார்..!! அசோக் முகத்தில் ஒருவித அன்புப் புன்னகையுடன்.. ஓரிரு வினாடிகள் அவரையே பார்த்தான்.. பிறகு மெல்ல நடந்து அவரை பின்தொடர்ந்தான்..!! 'ஸ்ரீனிவாச பிரசாத்திடம் வேலையை ஒப்படைத்தாயிற்று' என்று.. அசோக்கால் அமைதியாக இருக்க முடியவில்லை.. மீராவை தேடிக்கண்டுபிடிக்க.. தன்னால் இயன்ற அளவு முயன்றான்..!! அவர் அவகாசம் கேட்டிருந்த அந்த ஐந்து நாட்களுக்குள்ளேயே.. அவளை கண்டுபிடித்துவிடவேண்டுமென.. முனைப்புடன் செயலாற்றினான்..!! இன்னும் சொல்லப்போனால்.. 'அவள் இல்லாமல் ஐந்து நாட்கள் கழிக்கவேண்டுமா' என்ற அவனுடைய மனதின் மலைப்புத்தான்.. அவனது செயலின் முனைப்புக்கு காரணம்..!! அவனுடைய செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக.. அவனது மனநிலையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!! முதலில்.. 'இத்தனை நாளாய் தன்னை ஏமாற்றியிருக்கிறாள்' என்றெல்லாம்.. இப்போது அசோக்கிற்கு மீரா மீது வருத்தம் இல்லை..!! ஆரம்பத்தில் அவள் மீது எழுந்த திடீர் கோபமும்.. அப்புறம் நிதானமாக யோசிக்கையில் காணாமல் போனது..!! அவளுடைய நிலையை இவன் தெளிவாக புரிந்துகொண்டான் என்றுதான் சொல்லவேண்டும்..!! பேச ஆரம்பிக்கையிலே அவளுக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை எனும்போது.. அவளுடைய பெயரைக்கூட பொய்யாக உரைத்தது பெரிய பிழையாக அவனுக்கு தோன்றவில்லை..!! ஆனால் பின்னாளில்.. அந்த மாதிரி பொய் உரைத்து தன்னுடன் பழகியதற்காக.. நிச்சயம் அவள் வருந்தியிருப்பாள் என்று அசோக் நம்பினான்..!! "இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குறன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!!" அன்று பார்க்கில்.. மீரா சிந்திய கண்ணீர் வார்த்தைகளின் முழு வீச்சு.. அசோக்கிற்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! 'பொய் சொல்லிவிட்டாளே' என்று இவன் இப்போது துடிப்பதை விட.. 'பொய் சொல்லிவிட்டோமே' என்று அவள் பல நாட்களாய் பலமடங்கு துடித்திருக்கிறாள்..!! அவளுடைய வேதனையையும், வலியினையும்.. அந்த வார்த்தைகளிலும், கண்ணீரிலும்.. மிக ஆழமாகவும், தெளிவாகவும் உணர முடிகிறதே..?? அதே மாதிரி.. 'தனது காதலை புரிந்துகொள்ளாமல் மீரா பிரிந்து சென்றுவிட்டாள்' என்றும் அசோக் நினைக்கவில்லை..!! அவனது காதலை நன்றாக புரிந்து கொண்டதாலேயே.. பதிலுக்கு அவள் மனதில் பொங்குகிற காதலை அடக்க முடியாததாலேயே.. அவள் இந்த முடிவெடுத்திருக்கிறாள் என்று நம்பினான்..!! "நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!" "இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!" 'அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று புரிகிறது.. உடலளவிலா, மனதளவிலா அல்லது இரண்டளவிலுமா என்பது தெளிவாக புரியவில்லை..!! என்ன பிரச்சினையாக இருந்தாலும்.. என்னிடம் அவளது நிலையை விளக்கி சொல்லியிருந்தால்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. ஏற்றுக்கொண்டிருப்பேன் நான் அவளை..!! அதை அவளுமே அறிவாள்.. என்னுடைய காதலின் ஆழத்தை அவள் கட்டாயம் அறிந்தே வைத்திருப்பாள்..!! அவ்வாறு அறிந்து வைத்திருந்ததால்தான்.. அவளது பிரச்சினையை சொல்லி.. 'என்னை ஏற்றுக்கொள்கிறாயா அசோக்..?' என்ற அபத்தமான கேள்வியை அவள் கேட்கவில்லை..!! நான் அவளை ஏற்றுக்கொள்வேன் என்பதை முன்கூட்டியே அறிந்துதான்.. அந்த வாய்ப்பை அவள் எனக்கு வழங்கவே இல்லை..!! 'நான் பாவம் செய்தவள்.. நான் உனக்கு பொருத்தம் இல்லை.. எனவே நான் பிரிந்து செல்கிறேன்.. இதுதான் என் முடிவு.. இதை நீ ஏற்றுக்கொண்டாக வேண்டும்..' என்பது மாதிரி.. ஒரு நிர்ப்பந்தத்தில் என்னை தவிக்கவிட்டு விலகியிருக்கிறாள் என்றால்.. எனது காதலையும் அவள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள்.. அவளுடைய காதலையும் நன்றாகவே எனக்கு உணர்த்தி சென்றிருக்கிறாள்..!!' 'ஆனால்.. ஒரே ஒரு விஷயத்தைத்தான் அவள் தவறாக எடை போட்டுவிட்டாள்..!! அந்த விஷயத்தில்தான் எனக்கு அவள்மீதும், என்மீதும் ஒருசேர பரிதாபம் பிறக்கிறது..!! அவளை மறந்து.. வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொன்னாளே.. அங்குதான் அவள் என் மனநிலையை குறைத்து மதிப்பிட்டுவிட்டாள்..!!' "என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..??" 'எப்படி மீரா என்னால் முடியும்..?? நீதான் என் வாழ்க்கை என்று ஆனபின்.. எப்படி என்னால் அப்படி இருக்க முடியும்..?? நீ விலகிவிட்டால்.. நான் விட்டுவிடுவேனா..?? எளிதில் உனை கண்டறிய.. எந்த தகவலையும் விட்டு செல்லவில்லை என்கிற தைரியமோ உனக்கு..?? என்ன செய்வதென்றறியாது சோர்ந்துபோய்.. என் மனதை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்தாயோ..?? நான் தேடப்போகிறேன் மீரா.. தேடி உனை கண்டுகொள்ள போகிறேன்.. ஓடி வந்து கையில் அள்ள போகிறேன்..!! என் காதலை உனக்கு புரிய வைத்தேன் அல்லவா.. விரைவில்.. நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தமேதும் இல்லை என்கிற உண்மையையும்.. உன்னை அறிந்துகொள்ள வைக்கிறேன்..!!' மீராவை தேடிக்கண்டுபிடித்து.. அவளுக்கு தனது மனஉறுதியை உணர்த்தி.. அவளை சொந்தம் கொள்ளவேண்டும் என்ற முடிவில்.. அசோக் மிக தெளிவாக இருந்தான்..!! மீராவை நெருங்கும் மார்க்கம் என.. அசோக்கின் மனதில் முதலாவதாக தோன்றிய விஷயம்.. வினோபா அநாதை விடுதிதான்..!! நிச்சயம் அவளுக்கு அந்த விடுதியுடன் நீண்ட கால தொடர்பு இருக்க வேண்டும்.. கட்டாயம் அவளுடைய தொடர்பு விவரங்கள்.. அந்த விடுதியின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்..!! அசோக்கும் சாலமனும் அந்த விடுதிக்கு.. பைக்கில் வந்து இறங்கினார்கள்..!! கொஞ்சம் பழமையான ஆசிரமம்தான்.. ஆனால் நிறைய குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய.. நீண்ட வரலாறுடைய ஆசிரமம்..!! பெரிதாக அகலமாக மையக்கட்டிடம் நின்றிருந்தது.. ஆனால் பெயிண்ட் பூச்சு உதிர்ந்துபோய் சற்று பரிதாபமாக காட்சியளித்தது..!! கட்டிடத்தை சுற்றி.. உயர உயரமாய்.. பச்சை பச்சையாய்.. நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன..!! காய்ந்த சருகுகள் தரையெங்கும் இறைந்து கிடந்தன..!! சீருடை அணிந்த பிள்ளைகள்.. ஆங்காங்கே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்..!! அந்தப்பிள்ளைகளை பார்த்தவாறே.. அசோக்கும் சாலமனும் நடந்து சென்று.. ஆசிரமத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்..!! "எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க..!!" நாற்பதை தாண்டியிருந்த அந்த விடுதி மேலாளர் பெண்மணியின் ஆரம்பமே, அபசகுனமாக இருந்தது. சலிப்பான சாலமன், 'இது வேலைக்காவாது' என்று அவநம்பிக்கையாய் தலையசைத்தான். ஆனால் அசோக் மிக நம்பிக்கையாகத்தான் பேசினான். "பரவாலைங்க.. என்னை ஒரே ஒருதடவைதான் பாத்திருக்கீங்க.. அதுவும் இப்போ நூறு நாள் ஆகிப்போச்சு.. அதான் உங்களுக்கு என்னை மறந்திருக்கும்.. It's obvious..!!" "ஆமாம் தம்பி.. அதுவும் சரிதான்..!!" "ஆனா.. அன்னைக்கு என் கூட வந்த அந்த பொண்ணு இருக்காளே.. அ..அவ இங்க அடிக்கடி வர்றவதான்..!! கண்டிப்பா அவளோட காண்டாக்ட் டீடெயில்ஸ் உங்கட்ட இருக்கும்..!!" "ம்ம்..!!" "எங்களுக்கு அவளோட அட்ரஸ் வேணும் மேடம்.. It's very urgent..!!" "ஓ..!! அவ்ளோதான் விஷயமா..??" "ஆமாம்..!!" "அதுக்கென்ன தம்பி.. தந்துட்டா போச்சு.. நோ ப்ராப்ளம்..!!" "தேங்க்ஸ் மேடம்..!!" அசோக் உள்ளமெல்லாம் பூரிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "ஆங்.. அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னீங்க..??" என்று அந்த பெண்மணி கேஷுவலாக கேட்டாள். அருகில் இருந்த சாலமன் உடனே, "கிழிஞ்சது..!! எங்க போனாலும் இது ஒன்னை கேட்டுர்றாய்ங்க.. ச்சை..!!" என்று முணுமுணுத்தான். அப்புறம் மீராவின் பெயர்க்குழப்பத்தை வேறு.. அசோக் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டி இருந்தது..!! அதுமட்டுமில்லாமல்.. மீராவுடைய அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி.. அவளுடைய ஞாபக சக்தியை தூண்டிப் பார்த்தான்..!! "நல்லா அழகா இருப்பா..!! ஸ்லிம்மா.. ஹைட்டா..!! ஆங்.. சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்..!! கூந்தல் பின்ன மாட்டா.. லூஸ் ஹேரா விட்ருப்பா..!! ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக்.. ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் போட்ருப்பா.. ம்ம்ம்... அப்புறம்.. லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் போட்ருப்பா.. அதுல கூட ஹார்ட் ஷேப்ல ஒரு பென்டன்ட் தொங்கும்..!!" "ஸாரி தம்பி.. யா..யாரை சொல்றீங்கன்னு என்னால ஐடென்டிஃபை பண்ண முடியல.. இங்க நெறைய பேரு வர்றாங்க.. போறாங்க..!!" அவஸ்தையாக சிரித்த அந்த பெண்மணியை.. அதற்கு மேலும் அசோக் தொல்லை செய்யவில்லை..!! அவளுடைய பிரச்சினை அசோக்கிற்கு புரிந்தது.. அதே மாதிரி அசோக்கின் பிரச்சினையையும் அவள் ஓரளவு யூகித்துக் கொண்டாள்..!! அப்புறம் அந்த தடியான பதிவேட்டை எடுத்துவந்து.. அவர்களுக்கு முன்பாக போட்டாள்..!! "இங்க நூத்துக்கணக்கான வாலன்டியர்ஸ் இருக்காங்க தம்பி.. தெனமும் புதுசு புதுசா நெறைய வாலண்டியர்ஸ் வர்றாங்க.. எல்லாரையும் என்னால ஞாபகம் வச்சுக்க முடியிறது இல்ல..!! லாஸ்ட் பத்து வருஷம் ஜாயின் பண்ணினவங்க லிஸ்ட் அண்ட் அட்ரஸ் இதுல இருக்கு..!! நீங்க தேடிட்டு இருக்குற பொண்ணோட அட்ரஸ் எங்கட்ட இருந்தா.. அது இந்த ரெஜிஸ்டர்லதான் இருக்கணும்..!!" "அவ ரீசண்டாதான் இங்க ஜாயின் பண்ணிருக்கணும் மேடம்.. மிஞ்சி மிஞ்சி போனா.. ஒரு மூணு வருஷத்துக்குள்ளதான் இருக்கும்..!!" நம்பிக்கையாக சொன்ன அசோக் அந்த பதிவேட்டை கையிலெடுத்து புரட்டினான்.. 2010-இல் இருந்து ஆரம்பித்தான்.. பெண் பெயரில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிகளில் கவனத்தை குவித்தான்.. அவர்களுடைய வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டான்..!! "ரம்யா.. மேஹா.. மேகலா.. எமி.. மீனலோசனி.. வசுமதி.. வைஷூ.." ஒவ்வொரு பெண்ணின் பெயராக சொல்லி சொல்லி.. அவர்களது முகவரியையும் அசோக் சொல்ல.. அவற்றை எல்லாம் சாலமன் தனது மொபைலில் சேகரித்துக் கொண்டான்..!! அப்படியே ஏழெட்டு முகவரிகள் எடுத்தாயிற்று..!! ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக புரட்டிக்கொண்டு வந்த அசோக்.. ஒரு பக்கத்தை புரட்டியதும் அதிர்ந்துபோய் அப்படியே உறைந்தான்..!! நடுவுல ஒரு பக்கத்தை காணோம்..!! கிழிக்கப்பட்டிருந்தது..!! கிழிக்கப்பட்ட பக்கத்தின் பிசிறு.. பதிவேட்டின் இடுக்கில் தெளிவாக தெரிந்தது..!! 'ஒருவேளை.. ஒருவேளை..??' அவனுடைய புத்தி எதையோ கூர்மையாக யோசிக்க.. அவனுடய உள்ளத்தில் அவ்வளவு நேரம் பொங்கிகொண்டிருந்த ஒரு உற்சாகம்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளில் அது சுத்தமாக வடிந்து போனது..!! அசோக் தளர்ந்து சோர்ந்து போனான்.. தலையை பிடித்துக்கொண்டான்..!! "ம்ம்.. சொல்லு மச்சி.. நெக்ஸ்ட்..??" ஆர்வமாக கேட்ட சாலமனிடம், "போதுன்டா.. விடு..!!" என்றான் சுரத்தற்ற குரலில். "என்னடா.. என்னாச்சு..??" "Its' waste..!!" சொல்லிக்கொண்டே அசோக் அந்த பதிவேட்டை தூக்கி டேபிளில் போட்டான். என்ன நடந்திருக்கிறது என்பதை ஓரளவு புரிந்துகொண்ட விடுதி மேலாளரும், சாலமனும் சற்றே அதிர்ந்து போனவர்களாய் அசோக்கை பார்த்தனர். அசோக் இப்போது அந்த பெண்மணியை ஏறிட்டு சொன்னான். "மேடம்.. எனக்காக இன்னொரு சின்ன விஷயம் நீங்க யோசிச்சு சொல்லணும்..!!" "என்ன தம்பி.. சொல்லுங்க..!!" "நான் இப்போ சொன்ன அடையாளத்தோட.. லாஸ்ட் ரெண்டு மூணு நாள்ல.. யாராவது உங்களை பார்க்க இங்க வந்தாங்களா..??" அசோக் அவ்வாறு கேட்கவும், "ம்ம்ம்ம்ம்.." அந்தப் பெண்மணி இப்போது நெற்றியை பிசைந்தவாறு யோசிக்க ஆரம்பித்தாள். "நல்லா யோசிச்சு பாருங்க மேடம்.. ஜஸ்ட்.. ரெண்டு மூணு நாள்தான் ஆகி இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கும்..!!" அசோக் தவிப்புடன் சொன்னான். அவள் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு.. "ம்ம்ம்... ரெண்டு மூணு நாள்னா.. ம்ம்ம்ம்ம்ம்... ஒருவேளை.. அ..அந்தப்பொண்ணா இருக்குமோ..??" என்றாள். "யாரு..??" "மு..முந்தாநாள் யாரோ ஒரு பொண்ணு.. என்னை பாக்குறதுக்காக வந்து.. ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றதா.. மார்ட்டின் வந்து சொன்னான்..!!" "மா..மார்ட்டின் யாரு..??" "எங்க ஆபீஸ் அசிஸ்டன்ட்..!!" "ஓ..!! அப்புறம்..??" "ஆனா நான் வந்து பாக்குறப்போ இங்க யாரையும் காணோம்.. அந்தப்பொண்ணு அல்ரெடி கெளம்பி போயிருந்தா..!! ஒ..ஒருவேளை அவளா இருக்குமோ..??" அவளுடைய பதிலைக் கேட்ட அசோக் அப்படியே நொந்து போனான்.. பாறையில் போய் முட்டிக்கொண்ட மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு..!! பிறகு மார்ட்டினை அழைத்து விசாரித்தார்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அந்தப்பெண்ணை அவன் வர்ணிக்க.. அது மீராதான் என்று அசோக்கால் உறுதி செய்துகொள்ள முடிந்தது..!! மீராவின் தந்திரத்தில் சிக்கிய மார்ட்டினுக்கு.. அவளுடைய பெயர் கூட என்னவென்று தெரியாத நிலை..!! நினைவடுக்கில் பிரச்சினையுள்ள மேலாளருக்கு.. பெயரில்லாமல் துரும்பளவு தகவல் கூட தர முடியாத நிலை..!! பெருத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த அசோக்குக்கு.. பெயரை கூட தெரிந்து கொள்ள முடியாமல்.. வெறுப்புடனும், வெறுங்கையுடனும் வெளியேறுகிற நிலை..!! ஆபீஸுக்கு திரும்பிய அசோக்.. அன்று முழுக்க தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. ஏதோ யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான்..!! எளிய வழி என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது.. ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு..!! அந்த மொபைல் நம்பர்தான் இப்போது இருக்கிற ஒரே பிடிமானம் என்று தோன்றியது..!! இல்லை.. வேறேதாவது வழி இருக்கிறதா..?? அவனுடைய நண்பர்கள் அவனைச் சுற்றி கவலையாக அமர்ந்திருந்தனர்.. அவர்களுடைய கவலைக்கு காரணம், ஆசிரமத்தில் கிடைத்த ஏமாற்றம் அல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் உதவி செய்வதாக உறுதி அளித்தபிறகும்.. அசோக் தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறானே என்பதுதான்..!! "டேய்.. விட்றா.. ரொம்ப யோசிக்காத.. அந்த எஸ்.பி எஸ்.ஐ-தான் இன்னும் நாலு நாள்ல அட்ரஸ் ட்ரேஸ் பண்ணித்தர்றேன்னு சொல்லிருக்காருல..?? நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம.. மண்டையை போட்டு உடைச்சுட்டு இருக்குற..?? கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்குக்கு எரிச்சலையே உண்டு பண்ணின..!! 'என்னுடைய தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது..??' என்று நினைத்துக் கொண்டான்..!! தனிமை வேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து.. நண்பர்களை விட்டு அகன்று போய்.. படிக்கட்டு ஏறி.. அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில்.. அகலமான அந்த கைப்பிடி சுவற்றில்.. தனியாக வந்து அமர்ந்து கொண்டான்..!!உதட்டுக்கு சிகரெட் கொடுத்தான்..!! நெஞ்சில் நெருப்பு.. மூளையில் அனல்.. வாயில் புகை..!! காதல் தவிப்பில் அலைபாய்ந்த மனதை.. சற்றே கட்டுப்படுத்தி.. நிதானமாக யோசித்துப் பார்த்தான்..!! பரபரப்பான சென்னையின் மீது.. உயரத்தில் இருந்து பார்வையை வீசினான்..!! 'இந்த பரந்து விரிந்த மாநகரில்.. பாவி நீ எங்கடி பதுங்கியிருக்கிறாய்..??' "உன் வீடு எங்க இருக்கு..??" ஒருமுறை பேச்சினூடே அசோக் கேட்டதற்கு, "ட்ரஸ்ட்புரம்..!!" என்று மீராவும் மிக இயல்பாகவே சொல்லியிருந்தாள். ஆனால்.. அதை இப்போது ட்ரஸ்ட்டுவதில்தான் அசோக்கிற்கு சிக்கல்..!! எந்த நேரத்தில்.. எந்த மனநிலையுடன்.. எந்த விளம்பர போஸ்டர் பார்த்து அந்த மாதிரி சொன்னாளோ..?? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!! அசோக் மீராவை பிக்கப் செய்வதோ, ட்ராப் செய்வதோ.. வடபழனி பேருந்து நிலையம்தான்..!! அதைத்தாண்டி அவள் எங்கே செல்கிறாள்.. அவள் வீடு எங்கே அமைந்திருக்கிறது.. என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிற மாதிரி.. எந்த தகவலையும் அவனால் யோசிக்க முடியவில்லை..!! ஆப்டெக் சென்டரில் விசாரித்தாயிற்று.. மீரா அங்கு பயிலவில்லை என்பதை அவர்கள் உறுதிபடுத்தி விட்டனர்..!! வெறும் பெயரை மட்டும் வைத்தல்ல.. உருவ அமைப்பு, அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லியும் விசாரணை நடத்தியாயிற்று.. அந்த சென்டரில் மாயா கோர்ஸ் படித்த மாணவர்களிடமும் பேசிப் பார்த்தாயிற்று..!! அவள் நிச்சயமாய் கோர்ஸ் படிப்பதற்காக இங்கு வந்து செல்லவில்லை.. வேறு ஏதோ வேலை விஷயமாக தினசரி வடபழனி வந்து சென்றிருக்கிறாள்..!! வடபழனியை பற்றி.. அதை சுற்றியிருக்கிற பகுதிகளை பற்றி.. அவள் நிறைய தெரிந்து வைத்திருந்ததை அசோக்கால் நினைவுகூர முடிந்தது..!! வடபழனியை சுற்றிய ஏதோ ஒரு ஏரியாவில்தான்.. அவளுடைய வசிப்பிடம் அமைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது..!! இல்லை.. ஒருவேளை அப்படி இல்லாமல் கூட இருக்கலாம்..!! வடபழனி பேருந்து நிலையத்தையும்.. அதனுடனான மீராவின் நினைவுகளையும்.. யோசித்துக் கொண்டிருந்த அசோக்குக்கு.. திடீரென ஒரு விஷயம் மூளையில் பளிச்சிட்டது..!! அசோக்தான் அந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளே சென்றது இல்லை.. ஆனால்.. மீராவை பிக்கப் செய்யும்போது, அவள் அந்த நிலையத்துக்கு உள்ளே இருந்துதான் வெளிப்படுவாள்.. அதேபோல அவளை ட்ராப் செய்யும்போதும், உள்ளே சென்றுதான் ஏதோ ஒரு பேருந்தில் ஏறி மறைந்து போவாள்..!! அதை வைத்துப் பார்க்கையில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட.. ஏதாவது ஒரு வழித்தடத்தில் செல்கிற.. ஏதோ ஒரு பேருந்தில்தான் அவள் தினசரி வந்து சென்றிருக்க வேண்டும்..!! அசோக்கின் மூளை இப்போது சற்றே கிளர்ந்து எழுந்தது.. மேலும் தீவிரமாக யோசித்தான்..!! மீரா செல்கிற பஸ் ரூட் எதுவாக இருக்கும் என்று திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தான்..!! அப்போதுதான் அவனுடைய புத்தியில் ஒரு பொறி தட்டியது..!! ஒரு வாரத்திற்கு முன்பாக.. மீரா அவனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நிகழ்வு.. இப்போது அவனுடய நினைவுக்கு வந்தது..!! "ஹலோ அசோக்..!!" "ஹேய் மீரா.. என்னாச்சு.. பத்து மணிக்கு வருவேன்னு சொன்ன.. நான் இங்க உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! நீ வருவேன்னு பார்த்தா.. கால் வருது..??" "வீட்ல இருந்து அப்போவே கெளம்பிட்டேன்டா.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்..!!" "ப்ச்.. போச்சா..?? வர்றதுக்கு அப்போ லேட் ஆகுமா..??" "இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!" "அப்போ சரி..!!" "நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..!!" "என்னது..?? சரியா கேக்கல மீரா.. ஒரே எரைச்சலா இருக்கு.. கொஞ்சம் சத்தமா பேசு..!!" அசோக் சொல்ல, மீரா இப்போது கத்தி பேசினாள். "இல்லடா.. 'நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..'ன்னு சொன்னேன்..!!" "ஓ..!! ஓகே ஓகே..!! பரவால வா.. நான் வெயிட் பண்றேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. பயங்கர எரைச்சல்.. காது வலிக்குது..!!" "இங்க ஏதோ ஊர்வலம் நடக்குதுடா.. அதான் எரைச்சல்.. ட்ராஃபிக்கும் அதனாலதான்..!!" "என்ன ஊர்வலம்..??" "ஈழப் படுகொலையை கண்டிச்சு.. ஸ்டூடண்ட்ஸ்லாம் ஊர்வலம் போறாங்க..!!" "ஓ..!! சரி சரி.. நீ வா.. நேர்ல பேசிக்கலாம்..!! இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருந்தேன்.. என் காது டமாரம் ஆயிடும் போல இருக்கு..!!" "ஹாஹா..!! ஓகேடா.. வெயிட் பண்ணு.. வந்துடறேன்..!!" அவ்வளவுதான்..!! அந்த உரையாடல் நினைவுக்கு வந்ததுமே.. அசோக்கின் மூளை சுறுசுறுப்பானது.. அவன் மிகவும் பரபரப்பானான்..!! தடதடவென படியிறங்கி கீழே வந்தான்..!! அவசரமாக ஆபீசுக்குள் நுழைந்தவனை பார்த்து.. "டேய்.. என்னடா.. என்னாச்சு..??" என்று நண்பர்கள் குழப்பமாய் கேட்டதை கண்டுகொள்ளாமல், பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில்.. மீண்டும் ஆபீசுக்குள் பிரவேசித்தான்..!! கையிலிருந்த நான்கைந்து பழைய செய்தித்தாள்களை டேபிளில் போட்டான்.. சுவற்றில் ஒட்டியிருந்த சென்னை ஸிட்டி மேப்பை கிழித்தெடுத்தான்.. தனது லேப்டாப்பையும் திறந்து அருகில் வைத்துக் கொண்டான்.. மார்க்கர் பேனா திறந்தவன், மூடியை வாயில் கவ்விக்கொண்டான்..!! "ஏய்.. என்னடா பண்ற..?? கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுடா..!!" நண்பர்களுக்கு இன்னுமே குழப்பம். "ப்ச்.. இருங்கடா..!!" அவர்களுக்கு பதில் சொல்வதை பற்றி எல்லாம் அசோக் யோசிக்கவில்லை. முதலில் செய்தித்தாள்களை ஒவ்வொன்றாய் புரட்டி.. மாணவர்களின் அந்த ஊர்வலத்தை பற்றிய செய்தியை கண்டு பிடித்தான்..!! சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக.. சட்டக்கல்லூரி மாணவர்கள்.. இலங்கை அரசை கண்டித்து அந்த ஊர்வலத்தை நடத்தியிருந்தார்கள்..!! லைட் ஹவுஸில் ஊர்வலத்தை தொடங்கி.. நுங்கம்பாக்கம் வரை சென்று.. அங்குள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகை இட்டிருந்தனர்..!! அசோக் கையிலிருந்த பேனாவால், கிழித்தெடுத்த சென்னை மேப்பில்.. ஊர்வலம் சென்ற பாதையினை, வளைவு நெளிவுடன் சிவப்பு மையிட்டான்..!! பிறகு.. வடபழனி பஸ் நிலையத்தையும் மார்க் செய்து.. வட்டமிட்டுக் கொண்டான்..!! "டேய்.. என்னடா ஆச்சு உனக்கு..??" "கொஞ்ச நேரம் கம்முனு இருங்கடா..!!" எரிச்சலாக சொன்ன அசோக்.. இப்போது தனது லேப்டாப்பை திறந்தான்..!! இணையத்தை தொடர்பு கொண்டு.. சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள் பற்றிய தகவல்களை அடங்கிய ஒரு இணையதளத்தை அணுகினான்..!! அதில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட வழித்தடங்கள் எத்தனை என்று கணக்கிட்டான்..!! மொத்தம் இருபத்தியாறு வழித்தடங்கள்..!! அந்த இருபத்தியாறு வழித்தடங்களில்.. எத்தனை வழித்தடங்கள்.. தான் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்த அந்த சிவப்பு பாதையை குறுக்கிடுகின்றன என்று ஆய்வு செய்தான்..!! மொத்தம் நான்கே நான்குதான்..!! 1. 37C - வடபழனி முதல் வில்லிவாக்கம் வரை 2. 12B - வடபழனி முதல் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை 3. 17 - வடபழனி முதல் ப்ராட்வே வரை 4. M37B - வடபழனி முதல் திரு.வி.க.நகர் வரை அந்த நான்கு வழித்தடங்களின் பாதையினையும்.. மேப்பில் நீல நிற மையினால் வரைந்தான்..!! மேலும் சில வினாடிகள் மோவாயை சொறிந்தவாறு யோசித்தான்..!! "இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!" மீரா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..!! 'யெஸ்..' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!! அன்று அவள் சொன்ன மாதிரியே மேலும் 15, 20 நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டாள்..!! பயண நேரத்தை கணக்கிடையில்.. 12B யை லிஸ்டில் இருந்து எடுத்து விடலாம் என்பது தெளிவாக தெரிந்தது..!! 12B ரூட் சிவப்பு லைனை க்ராஸ் செய்கிற இடத்தில் இருந்து.. வடபழனிக்கு பஸ்ஸில் வந்து சேர.. குறைந்தது நாற்பது நிமிடங்களாவது ஆகும்..!! 12B பாதையை பெருக்கல் குறியிட்டவன்.. சற்றே திருப்தியான முகத்துடன் நண்பர்களை ஏறிட்டான்..!! "மச்சி.. 37C, 17, M37B.. இந்த மூணு ரூட்டுல ஏதோ ஒண்ணுலதான்.. மீரா டெயிலி வடபழனி வந்துட்டு போயிட்டு இருக்காடா..!!" "எப்படிடா சொல்ற..??" இப்போது அசோக் தான் கண்டறிந்ததை நண்பர்களுக்கு தெளிவாக விளக்கி சொன்னான்.. மூவரும் அமைதியாக, கவனமாக கேட்டு.. அசோக்கின் லாஜிக்கை புரிந்துகொண்டனர்..!! ஆனால்.. கேட்டு முடித்தபிறகும்.. அசோக்கிடம் இருந்த ஒரு எக்சைட்மன்ட் அவர்களிடம் காணக்கிடைக்கவில்லை..!! "அதெல்லாம் சரி.. இப்போ இந்த இன்ஃபர்மேஷனை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போற..??" என்று சற்று ஏளனமாகவே கேட்டான் வேணு. அவன் அவ்வாறு கேட்டதும், அசோக்கே சற்று குழம்பிப் போனான். 'ஆமால்ல.. இதை வச்சுக்கிட்டு என்ன பண்றது..??' என்று தனக்குத்தானே மனதுக்குள் கேட்டுக்கொண்டான். அவனுடைய மூளை அந்தக் கேள்விக்கு சரியான பதிலை தரவில்லை. ஆனாலும் தனது தடுமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. "ஏ..ஏதாவது பண்ண வேண்டியதுதான்..!! இது ஜஸ்ட் ஒரு லீட்.. அவ்ளோதான்..!!" என்றான் மழுப்பலாக. "ஏண்டா.. இன்னும் ஒரு நாலு நாள்.. அதுவரை கொஞ்சம் மூடிட்டு இருக்க மாட்டியா..??" - இது வேணு. "விட்றா.. ஏதாவது பண்ணிட்டுப் போறான்..!!"சலிப்பாக சொல்லிவிட்டு கிஷோர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.. வேணு அவனை பின்தொடர்ந்தான்..!! சாலமன் மட்டும் அசோக்கை நெருங்கி.. சற்றே நக்கலாக சொன்னான்..!! "மச்சி.. துப்பறியும் ஷ்ஷாம்பூ ஆயிட்ட போல இருக்கு..?? துப்பாக்கி படம் பாத்த எஃபக்ட் தெரியுதே..?? மேப்புலாம் சூப்பரா போடுற..??" என்று இளித்தான். ஆனால்.. அசோக் போட்ட மேப்பு.. தனக்கு வைத்திட்ட ஆப்பு என்பதை.. அடுத்த நாள்தான் சாலமன் தெளிவாக புரிந்துகொண்டான்..!! அடுத்த நாள் காலை.. வடபழனி பேருந்து நிலையம்.. அப்போதுதான் ட்ரிப் முடித்துவிட்டு கீழே இறங்கியிருந்த ஒரு கண்டக்டரிடம்.. பாடத்தை மக்கப் செய்த மக்கு மாணவன் மாதிரி.. கமா, ஃபுல்ஸ்டாப் இல்லாத வாக்கியங்களை.. கடகடவென கக்கிக்கொண்டிருந்தான்.. சாலமன்..!! "நல்லா அழகா இருப்பா ஸ்லிம்மா ஹைட்டா இருப்பா சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும் கூந்தல் பின்ன மாட்டா லூஸ் ஹேரா விட்ருப்பா ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக் ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் அதுல ஹார்ட் ஷேப் பென்டன்ட்..!!" அவனிடமிருந்து தள்ளி சற்று தூரத்தில்.. அசோக்கும் அதே வாக்கியங்களை இன்னொரு கண்டக்டரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்..!! அசோக்குக்கே இது கொஞ்சம் ஸில்லித்தனமாகத்தான் தோன்றியது.. இந்த முயற்சியில் அதிக வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அவனது மூளை அறிந்தே வைத்திருந்தது..!! பஸ்ஸில் பயணிக்கிறவர்களைப் பற்றி எத்தனை நடத்துனர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்..?? எந்த மாதிரியான உபயோகமான தகவலை அவர்களால் தந்துவிட முடியும்..?? அசோக்கிற்கு புரியாமல் இல்லை.. ஆனாலும்.. மிக மெலிதான அந்த சாத்தியக்கூறை கூட அவனால் சாதாரணமாக ஒதுக்க முடியவில்லை..!! பாவம்.. சாலமன்தான் அவனுடன் அலைந்து திரிந்து அல்லல் பட்டான்..!! அந்த பேருந்து நிலையத்தில் பணிபுரிகிற, அரசு போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவரை.. பஜ்ஜி, சமோசா, பாதாம்பால் எல்லாம் வாங்கித்தந்து கைக்குள் போட்டுக் கொண்டார்கள்.. அவர் மூலமாக அந்த மூன்று வழித்தடங்களில் வேலையமர்த்தப்பட்ட, அத்தனை நடத்துனர்களின் விவரங்களையும் வாங்கிக் கொண்டனர்.. ஒவ்வொரு நடத்துனரையும் சந்தித்து, மேலே சொன்ன வாக்கியங்களை கூறி விசாரித்தனர்.. 'அடடே.. அந்தப்பொண்ணா.. எனக்கு ரொம்ப நல்லா தெரியுமே..?' என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று எதிர்பார்த்தனர்.. ஏங்கினர்..!! ஆனால்.. அவர்களுடைய எதிர்பார்ப்பும், ஏக்கமும் ஏமாற்றமாகத்தான் உருமாறிக் கொண்டிருந்தன..!! "எனக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.. பஸ்ல வர்ற புள்ளைகளை சைட் அடிக்கிறத விட்டு, பல வருஷம் ஆயிப் போச்சு.. ஹ்ம்ம்.. அதுலாம் ஒரு காலம்..!!" என்றான் நடுத்தர வயது நடத்துனர் ஒருவன். "அதெல்லாம் வுடு.. அவளுக்கும் உனக்கும் எப்டி கனக்சனு..?? ரெண்டு பேரும் இன்னாலாம் பண்ணீங்கோ.. ஒரே குஜால்தானா..?? பார்ட்டி எப்டி..??" - இது ஒரு இளவயது ஜொள்ளு. "ஏய்.. போங்கடா அந்தாண்ட.. உங்களுக்குலாம் வேற வேலையே இல்லையாடா.. அப்டியே அலையுறானுவ !!" - புரிந்து கொள்ளாமல் சீறியது ஒரு பெருசு. அசோக்கும் சாலமனும், இரண்டு நாட்களின் பெரும்பான்மையான நேரத்தை வடபழனி பேருந்து நிலையத்தில்தான் கழித்தனர்..!! அந்த இரண்டு நாட்களிலும்.. அட்ரஸ் கண்டுபிடிக்கிற முயற்சியில் முன்னேற்றம் உண்டா என கேட்பதற்காக.. நான்கு முறை ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக் கால் செய்தான்..!! அவரும் 'சொல்லுடா அசோக்..' என்பார்.. 'ஸாரிடா.. இன்னைக்கு ரொம்ப வேலையா போச்சு.. ஒன்னும் பண்ணமுடியல..' என்று வருந்துவார்.. 'இந்த மட .... இருக்கானே...' என்று யாராவது மக்கள் பிரதிநிதியை, கெட்ட வார்த்தையில் திட்டுவார்.. 'இன்னும் ரெண்டு நாள் டைம் குடுடா.. கண்டிப்பா முடிச்சுடுறேன்..' என்று நம்பிக்கை தெரிவிப்பார்.. 'ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. கூலா இரு..' என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, காலை கட் செய்வார்..!! இரண்டு நாட்கள் முடிந்தபோது.. அசோக்கும், சாலமனும் அவர்கள் லிஸ்டில் இருந்த அனைத்து நடத்துனர்களையும் விசாரித்து முடித்திருந்தனர்.. ஒரே ஒருவரை தவிர..!! உடல்நலம் சரியில்லாமல், விடுப்பில் இருந்த அவரையும்.. மூன்றாவது நாள் காலை பத்து மணியளவில், மிகச்சரியாக வளைத்து பிடித்தனர்..!! அவரிடமும் அவர்களுக்கு எந்த தகவலும் பெயரவில்லை..!! இவர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்க.. அவர் கையை விரித்தார்.. உதட்டை பிதுக்கினார்.. 'ம்ஹூம்.. ம்ஹூம்..' என்று இப்படியும் அப்படியும் தலையை ஆட்டினார்..!! இறுதியில்.. "ஐயயயயயே.. நவுருங்கப்பா.. நானே நாஷ்டா துன்னாம, நாக்கு வறண்டு போய் கெடக்கேன்.. நீங்க வேற..?? ஷ்ஷ்ஷ்ஷ்.. அப்டியே க்கேரா இருக்கு..!!" என்று சலிப்பாக சொன்னவர், நாஷ்டா கடையை நோக்கி நடையை கட்டினார்.அவர்களுடைய முயற்சி அப்படி அட்டர் ஃப்ளாப் ஆனதில்.. அசோக்கும், சாலமனும் ரொம்பவே நொந்து போயினர்..!! 'ச்ச.. எல்லாம் வேஸ்டா போச்சே..' என்று எரிச்சலாக முனுமுனுத்தவர்கள்.. பிறகு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்..!! தளர்ந்துபோன நடையுடன் அவர்கள் வெளியே வர.. அவர்களுக்கு மிக நெருக்கமாக ஒரு பைக் 'விர்ர்ர்ர்' என்று சீறிப் பறந்தது..!! ஆரம்பத்தில் அந்த பைக்கை கவனியாத சாலமன்.. கடைசி நேரத்தில் சுதாரித்து விலகிக்கொள்ள முயன்றும்.. அவனுடைய கைவிரல்களை 'பட்' என்று தட்டிவிட்டு விரைந்தது அந்த பைக்..!! ஏற்கனவே கடுப்பில் இருந்த சாலமனுக்கு.. சுர்ரென்று ஏறியது டென்ஷன்.. அந்த பைக்கை பார்த்து கத்தினான்..!! "டேய்.. பாடு..!!! பொண்ணு பின்னால இருந்தா.. த்தா.. கண்ணு தெரியாதாடா உங்களுக்கு..??" அவன் கத்தியது பைக் ஓட்டியவன் காதில் விழுவதற்குள்ளேயே.. தொலைதூரம் சென்றிருந்தது அந்த வண்டி..!! பின் ஸீட்டில் உட்காந்திருந்த இளம்பெண்.. கைகள் ரெண்டையும் விரித்து.. காதலனின் வேகத்தை ரசித்தாள்..!! முகத்தை குரங்கு மாதிரி வைத்துக்கொண்டு.. சாலமன் அசோக்கை திரும்பி பார்க்க.. அவனோ பிரம்மை பிடித்தவன் மாதிரி.. அந்த பைக் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தான்..!! எதுவும் புரியாமல் குழம்பிய சாலமன்.. "என்னாச்சுடா..??" என கேட்டான். "மச்சி.. அந்த பைக்கை பாத்தியா..??" "பாக்கலைடா.. பாத்திருந்தாத்தான் வெலகிருப்பனே..??" "ப்ச்.. அதை சொல்லலைடா..!!" "அப்புறம்..??" "என்ன ப்ராண்ட்ன்னு பாத்தியா..??" "ம்க்கும்.. பின்னாடிருந்த அந்தப்புள்ள மூஞ்சை கூட சரியா பாக்க முடியலன்னு, நானே வெறுப்புல இருக்கேன்..??" "அ..அது.. அது கவாஸாக்கி பைக்குடா..!!" "ஸோ..??" சாலமன் கேள்வியாக அசோக்கை பார்க்க, அவனோ முகத்தில் ஒரு புதுவித பிரகாசத்துடன் "கண்டுபுடிச்சிடலாம் மச்சி அவளை..!!" என்றவாறு, சாலமனின் புஜத்தை இறுகப் பற்றினான். "ஆஆஆஆ..!! கண்டுபுடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டு.. என் கையை உடைச்சு எடுத்துடாதடா.. வுடு..!!" வலியால் சுருங்கிப்போன முகத்துடன், சாலமன் அசோக்கின் கையை தட்டிவிட்டான். "ஹேய்.. வாடா..!!" சொன்ன அசோக் சாலமனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. பார்க் செய்யப்பட்டிருந்த அவனுடைய பைக்கை நோக்கி ஸ்பீடாக நடந்தான்.. இல்லையென்றால், ஸ்லோவாக ஓடினான் என்றும் வைத்துக் கொள்ளலாம்..!! என்னவென்று புரியாமலே.. சாலமனும் அவசரமாக அவன் பின்னால் ஓடினான்..!! அடுத்த இரண்டு நிமிடங்களில்.. அசோக்கின் பைக் ஆர்காட் ரோட்டில் விரைந்துகொண்டிருந்தது..!! குழப்பத்தை அடக்க முடியாமல் சாலமன் கேட்டான்..!! "எங்கடா போறோம்..??" "பாலாஜி அட்வர்டைஸிங்..!!" "அங்க எதுக்கு..??" அசோக் வண்டியை ஓட்டிக்கொண்டே.. தன் மனதில் இருக்கிற விஷயத்தை சாலமனுக்கு விளக்கி சொன்னான்..!! சில நாட்களுக்கு முன்பு, மீரா அசோக்கிடம் சொன்ன அந்த விஷயம்.. அவளையும் அறியாமலே அவளைப்பற்றி உளறியிருந்த அந்த விஷயம்.. அவளுடைய வீட்டுக்கு எதிரே கவாஸாக்கி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வைக்கப்பட்டிருக்கிற விஷயம்..!! அசோக்தான் அந்த விஷயத்தை ஆர்வமாகவும், ஆனந்தமாகவும் சொன்னானே தவிர.. சாலமன் எல்லாவற்றையும் அசுவாரசியமாகவும், அவநம்பிக்கையாகவுமே கேட்டுக் கொண்டான்..!! மேலும் ஒரு அரை மணி நேரம் கழித்து..!! அசோக்கும் சாலமனும், பாலாஜி அட்வர்டைஸிங் அலுவலகத்துக்குள்.. மோகன்ராஜின் பிரத்தியேக அறைக்குள் அமர்ந்திருந்தனர்..!! அவர் தனது லேப்டாப் திரையையே வெறித்துக் கொண்டிருக்க.. இவர்கள் அவருடைய முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்தான் இப்போது சற்று பொறுமையில்லாதவனாய் சொன்னான்..!! "கொஞ்சம் சீக்கிரம் ஸார்..!!" "இருடா.. மெயில் பாக்ஸ்ல வச்சிருக்கேன்.. ஓப்பன் ஆயிட்டு இருக்கு..!!" அமர்த்தலாக சொன்ன மோகன்ராஜ், மேலும் ஒரு அரைநிமிடம் எடுத்துக் கொண்டார். அப்புறம், "ம்ம்.. இந்தா..!!" என்றவாறே லேப்டாப்பை அசோக்கின் பக்கமாக திருப்பி வைத்தார். அசோக் அந்த லேப்டாப்பை ஒருவித அவசரத்துடன் தனக்கு நெருக்கமாக இழுத்தான். திரையில் விரிந்திருந்த அந்த டேடா ஃபைலை கவனமாக பார்வையிட்டான். மோகன்ராஜ் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார். புகை வழிகிற வாயுடனே சொன்னார். "சென்னை ஸிட்டி ஃபுல்லா.. மொத்தம் இருபத்தஞ்சு எடத்துல.. அந்த மாதிரி ஃப்ளக்ஸ் போர்ட் வச்சிருக்கோம்..!!"அவர் கேஷுவலாக சொல்ல.. அதைக்கேட்ட சாலமனுக்கோ அடிவயிற்றில் புளி கரைத்தது..!! உடைந்துபோன குரலில்.. மிக பரிதாபமாக சொன்னான்..!! "இருபத்த்...தஞ்சு எடமா..?? அடங்கொன்னியா..!!! ஒரு போர்டை சுத்தி.. கொறைஞ்சது ஒரு ஆயிரம் ஜன்னலாவது இருக்குமே..?? ஒரு நாளைக்கு இருநூறு ஜன்னல்னு வச்சுக்கிட்டா கூட.. ஒரு போர்டுக்கு அஞ்சு நாளு.. இருபத்தஞ்சு போர்டுக்கு எழுபத்தஞ்சு நாளு..!! ஷ்ஷ்ஷ்ஷப்பா.. இப்போவே எனக்கு கண்ணைக்கட்டுதே..!!" புலம்பிய சாலமனை கண்டுகொள்ளாமல், அசோக் மோகன்ராஜிடம் கேட்டான். "இது மொத்த லிஸ்ட்தான ஸார்..??" "ஆமாம்..!!" "நான் உங்கட்ட சொன்னன்ல.. அந்த ரெயின் பேக்ரவுண்ட் ஸ்டில்..!! அந்த ஸ்டில் இருக்குற லிஸ்ட் மட்டும் எனக்கு போதும்..!!" "ஓ..!! இரு வர்றேன்..!!" சொன்ன மோகன்ராஜ் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்தார். அமர்ந்திருந்த அசோக்கிற்கு பின்புறமாக வந்து நின்றவர், "மொத்தம் நாலு விதமான ஸ்டில்ஸ் யூஸ் பண்ணினோம்.. அதுல நீ சொன்ன ஸ்டில் இருக்குற போர்ட்னா.." என்று முனுமுனுத்தவாறே, லேப்டாப்பின் கீபோர்டை இரண்டு தட்டு தட்டினார். திரையில் தெரிந்த லிஸ்ட் இப்போது ஃபில்டர் செய்யப்பட்டு எண்ணிக்கை குறைந்தது..!! "பதினொன்னு வருது..!!" "ஹ்ம்ம்..!! லாஸ்ட் டூ வீக்ஸ்ல எரக்ட் பண்ணின போர்ட்லாம் லிஸ்ட்ல இருந்து எடுத்துடுங்க ஸார்..!! அதுலாம் வேணாம்..!!" "எரக்ட்ஷன் கம்ப்ளீட்டட் டேட் இங்க இருக்கு பாரு..!!" சொன்ன மோகன்ராஜ் லேப்டாப்பை மேலும் இரண்டு தட்டு தட்ட, எண்ணிக்கை இப்போது இன்னும் குறைந்தது. "எயிட்..!!" என்றார். "Eight is also huge number மாப்ள..!!" சாலமன் இன்னுமே திருப்தியடையாமல் புலம்பலாக சொல்ல, அசோக் இப்போது அவனை ஏறிட்டு முறைத்தான். "ஏய்.. வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் கம்முனு இருக்க மாட்ட..??" எரிச்சலாக சொன்னவன், இப்போது தனது சட்டைப்பைக்குள் கைவிட்டு அந்த மேப்பை எடுத்தான். டேபிளில் விரித்து வைத்தான். ஸ்டாண்டில் இருந்து பேனா ஒன்றை உருவிக் கொண்டான். லேப்டாப் திரையையும், தான் வரைந்து வைத்திருந்த அந்த மேப்பையுமே மாற்றி மாற்றி பார்த்தான். அந்த மூன்று வழித்தடங்களில் அமைந்த ஏரியாக்களை உன்னிப்பாக பார்வையிட்டான். அந்த சிவப்பு எல்லையை தாண்டிய பகுதிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டான். மோகன்ராஜும், சாலமனும் ஒருவித குழப்பத்துடன் அசோக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு அரை நிமிடம் கூட ஆகி இருக்காது.. அசோக்கின் முகத்தில் திடீரென அப்படி ஒரு பிரகாசம்.. அவனுடைய உதடுகளில் ஒரு பெருமிதம் கலந்த வெற்றிப்புன்னகை..!! அந்த எட்டு இடங்களில் ஒன்று மட்டுமே.. அந்த மூன்று வழித்தடங்களில் சிவப்பு கோட்டுக்கு மேலாக அமைந்த ஒரு இடத்துடன் மேட்ச் ஆனது..!! 'மாட்னடி மவளே..!!' என்று முனுமுனுத்தவாறே, அசோக் மேப்பில் அந்த இடத்தை மார்க் செய்து வட்டமிட்டான்..!! 'அட்வர்டைஸ்மன்ட் போர்டை பார்த்தே எனக்கு நீ அல்வா குடுத்தல.. இப்போ அதே அட்வர்டைஸ்மன்ட் போர்டை வச்சு நான் உன்னை அமுக்கி புடிச்சுட்டேன் பாரு..' என்று மனதுக்குள் கர்வமாக சொல்லிக்கொண்டான்..!! "மீராவோட பஸ் ரூட் செவன்டீன் மச்சி.. அவ வீடு சிந்தாதிரிப்பேட்டைல இருக்குது.. அதுவும்.. Just opposite to our advertisement board.. !!" குரலிலும் முகத்திலும் ஒருவித பெருமிதத்துடன் அசோக் சொல்ல, மோகன்ராஜூம் சாலமனும் இப்போது அவனை பிரமிப்பாக பார்த்தார்கள்..!!அசோக்கும் சாலமனும்.. வடபழனியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்வதற்கு.. மேலும் ஒரு மணி நேரம் ஆனது..!! அந்த ஃப்ளக்ஸ் போர்ட் வைக்கப்பட்டிருந்த.. நான்கு அடுக்குகள் கொண்ட.. அந்த தனியார் கட்டிடத்தின் மொட்டைமாடியை அடைய.. மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின..!! இருவரும் போர்டை ஒருமுறை சுற்றி வந்து.. சுற்றுப்புறத்தை கவனமாக நோட்டமிட்டனர்..!!ஒரு பக்கம் குடிசையும் கூவமுமாய் வறுமையான பகுதி.. இன்னொரு பக்கம் மாளிகை வீடுகளும் மரநிழலுமாய் வசதியான ஏரியா..!! தூரத்தில் தெரிந்த ரயில்வே ட்ராக்கில்.. மெட்ரோ ரயில் ஒன்று.. 'ஊஊஊஊ' என்று ஊளையிட்டவாறே.. உற்சாகமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது..!! அந்த ரயிலின் உற்சாகம் அசோக்கிடமும் எக்கச்சக்கமாய் பொங்கி வழிந்தது..!!
"அந்த குடிசை ஏரியாலாம் லாஸ்டா பாத்துக்கலாம் மச்சி.. மொதல்ல இந்தப்பக்கம் கவர் பண்ணிடுவோம்..!!" என்றான் சாலமனிடம். "ஹ்ம்ம்.. இது என்னவோ எனக்கு வேலைக்காவுற மாதிரி தெரியல..!!" சாலமன் இன்னுமே சலிப்புடன் சொன்னான். "டேய்.. முட்டாக்...!! சும்மா சும்மா நெகட்டிவா பேசாதடா.. வெண்ணை..!!" "ம்க்கும்.. போடா வெளக்கெண்ணை..!! அங்க பாரு.. அந்த அப்பார்ட்மன்ட்சை பாரு..!! அதுல மட்டுமே கொறைஞ்சது நூறு வீடு இருக்கும்.. எல்லா ஜன்னலும் இங்கதான் பாக்குது..!! அது மாதிரி இன்னும் எத்தனை அப்பார்ட்மன்ட்ஸ் இருக்குது பாரு..!! ஒன்னு.. ரெண்டு.. மூணு.." "ஏய் ஏய்.. நிறுத்துடா..!! மொத்தமா பார்த்தா எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கும்.. ஒன்னு ஒன்னா பாரு.. ரொம்ப ஈஸியா இருக்கும்..!! இருபத்தஞ்சு போர்டை இப்போ ஒத்தை போர்டா மாத்தலையா..?? அந்த மாதிரிதான்..!! இங்க இருக்குற ஒவ்வொரு வீடா போறோம்.. ஒன்னு ஒன்னா ஃபில்ட்டர் பண்றோம்.. கோழியை அமுக்குற மாதிரி அவளை அமுக்குறோம்..!!" "ஹ்ம்ம்.. இவ்வளவு கொள்ளைல அந்த கோழியை எங்க இருந்து தேட ஆரம்பிக்கிறது..??" "எங்கயாவது இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்..!! இங்க இருந்து எந்த வீடு.. க்ளியர் வ்யூல இருக்கு.. ம்ம்ம்ம்.. ஆங்.. அதோ.. அந்த வீட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்..!!" கேஷுவலாக சொன்னவாறே.. அசோக் தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டை நோக்கி கை நீட்டினான்..!! அதே நேரம்.. அவனுடைய கை நீண்டிருந்த அதே திசையில்.. அவனது விரல்கள் சுட்டிக்காட்டிய அதே வீட்டுக்குள்.. சிறிதாக தெரிந்த அந்த ஜன்னலின் வழியாக.. ஒரு ஜோடிக் கண்கள்.. இவர்கள் இருவரையுமே சற்று மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன..!! அவை.. சாட்சாத்.. நமது கதாநாயகியின் கவின்மிகு கண்கள்தான்..!!

No comments:

Post a Comment