Wednesday, 8 April 2015

சுகன்யா... 107

சம்பத்தின் விருப்பத்திற்கேற்ப, பெசன்ட் நகரிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை, புதுமணத் தம்பதிகள் வசிப்பதற்காக ஏற்பாடு செய்து கொடுத்தான் சீனு. பெங்களூரிலிருந்து வந்திறங்கிக் கொண்டிருந்த சம்பத்தின் சாமான்களை சீராக அடுக்கிவைக்க அனுவும், அவனும் கூடமாட உதவிக் கொண்டிருந்தார்கள்.

அறிமுகம் ஆன பத்தாவது நிமிடத்திலேயே, சீனுவும் அனுராதாவும், வெகு நாள் பழகியவர்களைப்போல் கேலியும் கிண்டலுமாக அரட்டையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர்களுடைய இயல்பு ஒருவரையொருவர் நெருக்கமாக்கிவிட்டது.

"நம்ம பெட் ரூம்லே போய் உங்க புஸ்தகத்தையெல்லாம்... அமுக்கறீங்க?" அனு தன் முகத்தைச் சுளித்தாள்.

"இப்போதைக்கு எல்லா திங்க்ஸும் ஒரு எடத்துல இருக்கட்டுமே.. கொஞ்சம் கொஞ்சமா சரிபண்ணிடறேம்ம்மா.." சம்பத் கெஞ்சலாக பேசினான்.

"அனு.. உன் கல்யாணம் முடியறவரைக்கும் நீ ஏன் பேயிங் கெஸ்ட்டா எங்கேயோ இருக்கணும்? நாளைக்கு நல்ல நாள்தான். இந்த வீட்டுக்கே உன் பேக் அண்ட் பேகேஜஸ்ஸோட ஷிப்ட் ஆயிடேன்.""நல்லாருக்கே கதை.. புது வீட்டுல பால் காய்ச்ச வேண்டாமா? அப்ப எங்கக்கூட பெரியவங்கள்ல்லாம் இருக்க வேண்டாமா?எல்லாத்துக்கும் மேல நான் எப்படி தனியா இருப்பேன் இங்கே?"

"பகல் நேரத்துல ஆஃபிசுக்கு போகப்போறே... ராத்திரிலே மட்டும் சம்பத்தை உன் துணைக்கு கூப்பிட்டுக்கோயேன்.." முகத்தை குழந்தையாக வைத்துக்கொண்டு அவளைச்சீண்டினான் சீனு.

"ராத்திரி நேரத்துல ஒத்தையிலே இருக்கும் போது இந்த பசங்களை மட்டும் நம்பிடாதேடீன்னு என் ஃப்ரெண்டு ஒருத்தி எனக்கு புத்திமதி சொல்லியிருக்கா..."

"யாரும்மா அந்த புத்திசாலி டீச்சர்...?" சம்பத் அனுவின் முதுகில் தன் முழங்கையால் உரசினான்.

"அனு... கல்யாணத்துக்கு முன்னாடீ ஆம்பிளைங்களை நம்பி கிட்ட நெருங்கவிட்டே, மொத்தமா டேமேஜ் ஆயிடுவேடீன்னு என் டீச்சர் சொல்லியிருக்கா.." அவள் அவனை பதிலுக்கு இடித்தாள்.

"உன்னை கட்டிக்கப்போறவனை நீ நம்பலையா? அவ்வளவு கெட்டவனா நான்? அனு இப்பவே உன் டார்ச்சர் தாங்கலைடீ..." சம்பத் கொதித்து போல் பொங்கி எழுந்தான்.

"நல்லவன் கெட்டவன்னு ஆம்பிளைங்க நெத்தியிலே எழுதி ஒட்டியா வெச்சிருக்கு?

"ஆமாம் உன் டீச்சருக்கு கல்யாணம் ஆயிடிச்சா?" சீனு மீண்டும் மொக்கை போட ஆரம்பித்தான்.

"சீக்கிரத்துலேயே ஆயிடும்..."

"யாரும்மா அது...?" சம்பத் அவளை விடமால் நெருக்கினான்.

"உங்க மாமா பொண்ணுதான்..."

"சுகன்யாவா என் மொராலிட்டியை சந்தேகப்படறா? இப்பவே போன் பண்ணி அவளை ஒரு வார்த்தை கேட்டுடறேன்." சம்பத் செல்லை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.

"இத பாருங்க.. அவகிட்ட இதைப்பத்தி எதாவது கேட்டீங்க... எனக்கு கெட்ட கோவம் வரும். வாய் தவறி எதையும் சொல்லிடக்கூடாதே? நான் சொல்றதை நீங்க நம்பலையா?" அனுவும் சம்பத்தும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போதும்... போதும்.. இப்போதைக்கு ஒரு ஜோடி அடிச்சிக்கிட்டு தனித்தனியா நிக்கறது போதும். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டையைப் போட்டுக்கிட்டு மொகத்தை தூக்கி வெச்சுக்காதீங்க.. உங்களைப் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம்." சீனு சிரித்தான்.

"ஒரு வாரத்துக்கு அப்புறமாவது என்னை நம்பி இந்த வீட்டுலே இருப்பியா? இல்லே உன் டீச்சர்கிட்ட போய் பர்மிஷன் கேப்பியா?சம்பத் அவள் கையைப்பிடித்தான்.

"அப்பவும் நான் சொல்றதை கேட்டுக்கிட்டு நீங்க ஒழுங்கா நடந்துகிட்டாத்தான், இங்கே நான் இருப்பேன்..." பொய்யான சிணுங்கலுடன் தன் உதட்டை அழகாகச்சுழித்தாள் அனு. அவளுடைய அழகான உதடுகளை கவ்விக்கொள்ளத் துடித்தான் சம்பத்.

"நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ... ப்ளீஸ் என்னை நம்புடீ..." சம்பத் தன் கண்களை சிமிட்டினான்.

"மூணாம் மனுஷன் நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்..." அவர்கள் கொஞ்சலை கண்டு முணகிய சீனு வெகுவாக வெட்கப்பட ஆரம்பித்தான். 

"மாமா.. வாங்க மாமா?" கல்யாண சத்திரத்துக்குள் தனியாக வெள்ளை வேட்டி சட்டையில் நுழைந்த நடராஜனைக் கண்டதும் மானாகத் துள்ளிக்கொண்டு அவரருகில் ஓடினாள் சுகன்யா.

"நல்லாயிருக்கியாமா?"

நடராஜனின் கண்கள், தங்கமாக ஜொலித்துக்கொண்டிருக்கும், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை வேகமாக ஓடி மீண்டும் அவள் முகத்தில் வந்து நிலைத்தது. சுகன்யா கொஞ்சம் இளைச்சுப்போயிருக்கா. பாவம் தனியா இருக்கற பொண்ணு... நேரத்துக்கு சாப்பிடறாளோ இல்லையோ? என் புள்ளையால இவளுக்கு தேவையில்லாத மனவேதனை... அவருக்கு மனதில் சுருக்கென வலித்தது.

"நல்லாயிருக்கேன் மாமா.. அத்தை வரலையா?"

"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லேம்மா... சென்னையில நடக்கப் போற ரிசப்ஷனுக்கு உங்க அத்தையும், மீனாவும் கண்டிப்பா வந்துடுவாங்க.."

நடராஜன் சுகன்யாவின் தலையை பாசத்துடன் ஒருமுறை வருடியவர், ஹாலில் சென்று உட்கார்ந்தார். மனையில் சிரித்த முகத்துடன் சம்பத் உட்கார்ந்திருக்க, புரோகிதர் கல்யாணச்சடங்குகளை ஆரம்பித்துக் கொண்டிருந்தார். சுகன்யாவின் கண்கள் கல்யாணச்சத்திர நுழைவாயிலில் இடமும் வலமுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளுடைய அலையும் விழிகளையும், முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும் நடராஜன் தன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார்.

சுகன்யா, செல்வாவைத்தான் தேடறா... மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சுக்கிட்டு இருக்கற பொண்ணு... ஒருதரம் வாயைவிட்டு அவன் எங்கேன்னுதான் என்னைக் கேட்டா இவ என்ன கொறைஞ்சா போயிடுவா? நடராஜன் மனதுக்குள் குறும்பு எட்டிப்பார்த்தது. தனக்குள் சிரித்துக்கொண்டார்.

"மாமா.. எழுந்து டிஃபன் சாப்பிட வாங்களேன்..."

"முகூர்த்தம் முடியட்டும்மா... மெதுவா சாப்பிட்டாப்போச்சு..."

"சூடா இருக்கும்போது ஒரு வாய் சாப்டுங்க மாமா... ப்ளீஸ் வாங்க மாமா.."

சுகன்யா, தன் கட்டியிருந்த இளம் நீலவண்ணப் பட்டுப்புடவை சரசரக்க, சூடியிருந்த மல்லிகை மணக்க, அவர் கையை, உரிமையுடன் பிடித்திழுத்துக்கொண்டு, டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.

சுகன்யாவின் கை தன் கரத்தைப் பற்றியதும், ஒரு வினாடி நடராஜனுக்கு உடல் சிலிர்த்து, சென்னையில் இருக்கும் தன் பெண் மீனாவின் நினைவு அவர் மனதுக்குள் வந்தாடியது. நடராஜனின் பக்கத்தில் உட்கார்ந்த சுகன்யா, பார்த்து பார்த்து, ஒன்றன் பின் ஒன்றாக டிஃபன் அயிட்டங்களை கொண்டு வரச்சொல்லி, அவரைத்தானே கனிவுடன் உபசரிக்க ஆரம்பித்தாள்

"எத்தனை நாள் லீவு போட்ருக்கேம்மா?"

"வெள்ளிக்கிழமை ரிசப்ஷன் முடிஞ்சதும்.. சனிக்கிழமை ஈவினிங் கிளம்பறதா இருக்கேன்.."

"போறதுக்கு முன்னே வீட்டுக்கு ஒரு தரம் வாயேம்மா..." கெஞ்சலுடன் அவள் முகத்தைப்பார்த்தார் நடராஜன்.

"சட்னி கொஞ்சம் போட்டுக்கங்க மாமா.." இலையில் ஒரு வடையை வைத்து, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து ஊற்றினாள். நடராஜனின் பக்கத்தில் நின்றிருந்த போதும், சுகன்யாவின் மனமும் விழிகளும் டைனிங் ஹால் முழுவதையும் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கு வராமலா இருப்பான்?பத்து நாள் முன்னாடி செல்வா மேல எனக்கு கோவம் இருக்குன்னு சொன்னேன். அவன் என்னை செல்லுல கூப்பிட்டப்பல்லாம், அவன்கிட்ட பேசாம லைனை கட் பண்ணேன். இப்ப இவர்கிட்ட செல்வா வரலையான்னு என் வெக்கத்தை விட்டு கேட்டா இவர் சிரிக்க மாட்டாரா?

நேத்து பிள்ளையழைப்புக்கே வருவான்னு எதிர்பார்த்தேன். வரலே. நான் ஏன் அவன் மொகத்தைப் பாக்கணும்ன்னு இப்படி கிடந்து துடிக்கிறேன்... அவ இன்னும் என் கண்ணுல படவேயில்லையேன்னு ஏன் தவிக்கறேன்... ஏன் நிலைகெட்டு அலையறேன்?

சம்பத்தும், அனுவும், ஒண்ணா ரெண்டு பேருமே அவன் வீட்டுக்குப்போய் இன்வைட் பண்ணதுக்கு அப்புறமும், மேரேஜ்க்கு வரலேன்னா அவன் மனசுக்குள்ள என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்கான்? முகூர்த்த நேரம் வேற நெருங்குதே? சுகன்யாவின் மனம் ஓரிடத்தில் நிற்கவில்லை.

"அப்ப திங்கட்கிழமை தில்லிக்கு போயிடுவே...?" நீண்ட பெருமூச்சொன்று நடராஜனின் கண்டத்திலிருந்து எழுந்தது.

"போய்த்தானே ஆகணும் மாமா..." முணகியவாறே வேகமாக எழுந்தவள் சூடாக காஃபியை கொண்டுவந்து அவர் கையில் திணித்தாள்.

"சுகன்யா... இன்னைக்கு தேதி பதினாறு. அடுத்த பதினெட்டாம் தேதி உன் ஃப்ரெண்டு மீனாவுக்கு கல்யாணம். இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. இப்பவே உன்னை நான் பர்சனலா கல்யாணத்துக்கு அழைக்கிறேன். ரெண்டு நாள் முன்னாடியே வந்து எங்களோட இருக்கணும்..." சுகன்யாவின் முகத்தை தன் ஓரக்கண்ணால் பார்த்தார்.

"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? மீனா எனக்கு ஃப்ரெண்டு மட்டும்தானா?" சுகன்யாவின் குரல் திடீரென தழைந்தது.

"சுகன்யா... உன்னை என் வீட்டு மருமகளா... மீனாவோட அண்ணியா, அவ கல்யாணத்தை நீயே முன்னே நின்னு நடத்தும்மான்னு உன்னை நான் கேட்டுக்கிட்டேன்."

"ஆமாம்..."

"மீனா கல்யாணத்தை நடத்துங்கன்னு நீ சொன்னதுக்கு அப்புறம்தானேம்மா நான்... மேற்கொண்டு காரியத்தை நடத்த ஆரம்பிச்சேன்..."

"ம்ம்ம்..."

"மீனா மேரேஜ் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கலாம். ஆனா இப்பவும் சொல்றேன்... என் வீட்டுக்குள்ள நீ மட்டும்தான் என் மருமகளா நுழையமுடியும்... எப்ப உன் வீட்டுக்கு வர்றேங்கறதை நீதான் முடிவு பண்ணி எனக்குச்சொல்லணும்." நடராஜன் மென்மையாக புன்னகைத்துக்கொண்டே சுகன்யாவின் முதுகை தட்டிக்கொடுத்தார். திருமண மண்டபத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

"மாமா..."

"சொல்லுடா கண்ணு..." நடராஜன் நின்ற இடத்திலிருந்து திரும்பிப்பார்த்தார்.

"அவரு வரலையா?" சுகன்யாவின் குரல் குளறியது. விழிகள் இளம் சிவப்பாகிக்கொண்டிருதன.

"நேத்து ராத்திரியே இங்கே வந்தானே? நீ பாக்கலையா அவனை..?"

"இல்லே அங்கிள்..."

"அவனை இப்ப நிஜமாவே பாக்கணுமா உனக்கு?"

"ஆ... ஆ... ஆமாம்ம் அங்கிள்..." சுகன்யாவின் பேச்சு அவள் உதடுகளிலேயே சிக்கி சிக்கித் திணறலுடன் வந்தது.

"கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு..." சொல்லிவிட்டு முகத்தில் புன்சிரிப்புடன் நகர்ந்தார்.

சீனுவும், செல்வாவும், டிஃபன் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். சுகன்யா அவர்கள் பக்கம் திரும்பியதும் சீனு அவளை நோக்கி உற்சாகமாக கையை ஆட்டினான். சீனுவின் பக்கத்தில் செல்வா தன் தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான். 


"ஹாய் சீனு..." செல்வாவைப் பார்த்ததும் தன் முகம் குப்பென சிவக்க, அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தாள் சுகன்யா.

"மச்சான்... நம்ம வீட்டு பெரிசு நகர்ந்துடுச்சு... சுகன்யா தனியா இருக்கா.. சான்ஸை விட்டுடாதே.... " சீனு முணுமுணுத்தான்.

"என்னடா பண்ண சொல்றே?"

"போடாங்ங்க்... நல்லா வருதுடா வாயிலே எனக்கு.. பட்டுன்னு கையைப் புடிச்சிக்கிட்டு ஒரு கதறு கதறிடுங்கறேன்..."

"சும்மாருடா... கிட்ட வந்துட்டாடா அவ.."

"அடுத்தக் கல்யாண மாப்பிளைக்கு கங்கிராட்ஸ்... " சீனுவின் கையை பிடித்து குலுக்கியவள், வேண்டுமென்றே செல்வாவைப் பார்க்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்."தேங்க் யூ சுகன்யா... எப்படி இருக்க்க்கே? சீனு எழுந்து நின்று தன் உடலை வளைத்து பணிவுடன் அவள் கையை பிடித்து குலுக்கினான்?"

"பைன்.. பைன்... இப்ப எதுக்கு என் முன்னால எழுந்து நின்னு உங்க ஆறடி உடம்பை கூனி குறுக்கி ட்ராமா காட்டறீங்க...?"

"என் வருங்கால மாமனார்... நீ பர்மிஷன் குடுத்தாத்தான் என் கல்யாண டேட்டையே பிக்ஸ் பண்ணமுடியும்ன்னு, சொல்லிகிட்டு ஒரு பத்து நாள் கூடத்துக்கும் வெராண்டாவுக்குமா அலைஞ்சார். அந்த அளவுக்கு அவரையே நீ மெரட்டி வெச்சிருக்கே...! உன் முன்னால இந்த சீனு எம்மாத்திரம்?" அவன் புன்னகைத்தவாறே ஆரம்பித்தான்.

"போதும்.. போதும்.. உங்களைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும்... இந்த நக்கலடிக்கற வேலையையெல்லாம் என்கிட்ட வெச்சிக்கதீங்க..!!"

"சரிங்க டீச்சர்..." சீனு மேலும் பணிவது போல் நடித்தான்.

"நீங்க உக்காருங்க மொதல்லே... டீச்சரா...? இது என்ன புதுக்கதை...?"

"ரீசண்டா.... இருட்டினதுக்கு அப்புறம், கூட இருக்கற மொட்டைப்பசங்களை மட்டும் முழுசா நம்பிடாதேடீன்னு யாரோ ஒரு கன்னிப்பொண்ணுக்கு நீங்க லெக்சர் குடுத்தீங்களாமே?" சீனுவின் முகத்தில் சிரிப்பு அலையலையாக பொங்கிக் கொண்டிருந்தது.

"ஸோ... அனு உங்களோட ஃப்ரெண்டாயிட்டா... அவ்வளவுதானே?" சுகன்யா சிரித்துக்கொண்டே ஓரக்கண்ணால் செல்வாவைப் பார்த்தாள். ஏன் இவன் மூஞ்சே சுண்டிப்போயிருக்கு. ராத்திரி தூங்கலையா? ஐயோ பாவம்.. மனசுக்குள் ஒரு வினாடி துணுக்குற்றாள்.

"ஃப்ரெண்டு என்னா ஃப்ரெண்டு... நீங்க கொஞ்ச மனசு வெச்சா... அனு எனக்கு சொந்தக்காரியாவும் ஆயிடுவா..."

"என்னது... அனு எப்படி உங்களுக்கு சொந்தக்காரியா ஆவா?"

"சுகா... புரியாத மாதிரி பேசாதே... என் மச்சான் நொந்து நூலாகி போய்ருக்கான்... நடந்தது நடந்து போச்சு... அவனுக்கு கொழந்தை மனசு... இவனை ரொம்ப கலாய்க்காதே... அப்புறம் நான் அழுதுடுவேன்..." சீனு கண்ணைக் கசக்கினான்.

சுகன்யாவின் புதுப்பட்டுப்புடவை வாசம், அவள் தலையிலிருந்து வரும் மல்லிகையின் மணம், கல்யாண வீட்டுக்கே உரிய ஒரு பிரத்யேகம், இவை எல்லாம் ஒன்றாக கலந்தடிக்க செல்வா தன் மனதுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். சட்டென எழுந்து சுகன்யாவை கட்டிபிடித்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

கலகலவென சிரிக்கும் சுகன்யாவின் முகத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதும், தன் விரல்களை நெறித்துக்கொள்வதும், அவள் திரும்பும்போது, அசையும் போது, அவ்வப்போது பளிச்சிடும் அவளுடைய வென்னிற இடுப்பை திருட்டுத்தனமாக பார்ப்பதும், தான் பார்ப்பதை அவள் பார்த்துவிடப்போகிறாளே என்ற தவிப்புடன், உடனே தன் தலையை குனிந்து கொள்வதுமாக இருந்தான் செல்வா.

"இந்தக் கல்யாண வீட்டுல, பெசண்ட் நகர் நடராஜ முதலியாருக்கு மட்டும் வீ.ஐ.பி. ட்ரீட்மென்ட் நடக்குது? மத்தவங்களையெல்லாம் யாரும் கவனிக்கவே மாட்டேங்கறாங்க...?" சீனு சுகன்யாவை கிண்ட ஆரம்பித்தான்.

"நான் எப்படியிருக்கேன்னு என்னைப்பத்தி கவலைப் படறவங்களைத்தானே நான் ஸ்பெஷலா கவனிக்கணும்... அதானே முறை? அதானே ஞாயம்?" பேசிக்கொண்டே வேகமாகத்திரும்பி எதிர் வரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை அழைத்தாள்.

"எப்படி இருக்கே சுகன்யா?" சட்டென முனகிக்கொண்டே அவள் கையை பற்ற முயன்றான் செல்வா.

"சீனு... இவரு யாரு? எப்படி இருக்கேன்னு என்னைக் கேக்கறாரே? என்னை இவருக்குத் தெரியுமா? என்னை எப்படித் தெரியும்ன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்?" சுகன்யா தன் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள். குழிந்த அழகான தொப்புள் வினாடி நேரத்துக்கு பளிச்சிட செல்வா மருண்டான். அவள் அழகில் தொலைந்தான்.

"சுகன்யா. எனக்கு பசி உயிர் போவுது.. நான் சாப்பிடணும்... உங்க ரெண்டு பேரு பஞ்சாயத்தையும் கொஞ்சம் கழிச்சி வெச்சுக்கலாம்." இலையில் வைக்கப்பட்ட பாதம் ஹல்வாவை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான் சீனு.

"சீனு... நான் கேட்ட கேள்விக்கு எனக்கு ஒழுங்கான பதில் கிடைச்சா, உங்களுக்கு வி.வி.ஐ.பி டீரீட்மெண்ட் கிடைக்கும். ஸ்பெஷலா என் கையால இன்னும் ஒரு கரண்டி பாதாம் ஹல்வா கொண்டாந்து குடுக்கறேன்..." சுகன்யா இலேசாக தன் உதட்டை சுழித்து குறும்பாக சீனுவைப்பார்த்து சிரித்தாள்.

அடிப்பாவி... நான் யாருன்னா கேக்கறே? என் மனசு தவிக்கறது உனக்குத் தெரியலியாடீ? என் இதயம் சுகன்யா... சுகன்யான்னு துடிக்கறது உனக்கு கேக்கலையாடீ?

"சுகா... உங்க கண்ணாமூச்சி விளையாட்டை அந்த மூலையா போய் நீங்க ரெண்டுபேரும் ஆடுங்க. இப்ப என்னைக் கொஞ்சம் நிம்மதியா சாப்பிட விடுங்க.." சீனு தன் தலைக்கு மேல் இருகைகளையும் உயர்த்தி சுகன்யாவை கும்பிட்டவன், பொங்கலை அள்ளி வாயில் திணித்துக்கொண்டான். மெதுவடையை எடுத்து கடித்தான்.

"சார்... டிஃபன் ஏ கிளாசா இருக்கு.... உங்களை நீங்களே டேரக்டா இவங்ககிட்ட இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா... நான் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடுவேன்.." விருட்டென இடதுபுறம் திரும்பி, செல்வாவை நோக்கி கண்ணடித்தான் சீனு.

செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென எழுந்தான். நான் அதிகமா விளையாடிட்டேனா? செல்வா எழுந்த வேகத்தை கண்டதும், சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் அதிர்ந்தாள். அவள் தன்னை சுதாரித்துக்கொள்வதற்குள், செல்வா சுகன்யாவின் வலது கையை இறுகப்பற்றினான்.

செல்வாவின் உள்ளங்கையின் வெப்பம், சுகன்யாவின் மணிக்கட்டை சுட்டது. காலியாக இருந்த டைனிங் ஹாலின் மூலையை நோக்கி அவளை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தான்.

"நல்லா இருக்கியா சுகன்யா?" செல்வாவின் உதடுகள் துடித்தன.

"நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க நல்லாயிருக்கீங்களா?" த்ன் சிவந்த உதடுகளை சுழற்றி நாக்கை லேசாக நீட்டினாள் சுகன்யா.

"வெறுப்பேத்தாதடீ... சத்தியமா சொல்றேன்... நீ இல்லாமே நொந்து போயிருக்கேன்டீ..." செல்வா அவள் கையை வலுவாக நெறித்தான்.

"என்னமோ தாடி மீசை யெல்லாம் வெச்சிக்கிட்டு அலைஞ்சீங்களாமே? கேள்விப்பட்டேன்..." சுகன்யாவின் உதடுகளில் குறும்பு புன்னகை சட்டெனத் துளிர்விட்டது.

"ப்ளீஸ்... சுகன்யா... அயாம் சாரி... அயாம் சாரிம்மா... என்னை மன்னிச்சுடு..." செல்வாவின் குரல் நடுங்கியது. அவள் கரத்தின் மேலிருந்த அவனுடைய பிடி மேலும் இறுகியது.

"எனக்கு கை வலிக்குது..."

"சுகா... உன்னை எங்கெல்லாம் தேடறதுடீ.. அனுவோட ஹேண்ட்பேக், கீயெல்லாம் உங்கிட்ட இருக்காமே?" சுந்தரியின் குரல் அவள் பின்னால் இருந்து வந்தது.

"இதோ வந்துட்டேம்மா..." செல்வாவின் கையிலிருந்து ஒரே உதறலாக உதறி, தன் கையை விடுவித்துக்கொண்டு சுகன்யா சிட்டாக தாயை நோக்கி ஓடினாள்."என்னடீ சொல்றான் அவன்...?"

"நல்லா இருக்கியான்னு கேட்டாரும்மா.."

"என்னடீ விஷயம்... திரும்பவும் "அவன்"... "அவர்" ஆகறான்" சுந்தரி பெண்ணை முறைத்தாள்.

"போம்மா... நீதானேம்மா சொன்னே... கல்யாண வீட்டுல எல்லார்கிட்டவும் மரியாதையா பேசணும்ன்னு..." சுகன்யா தன் இடுப்பில் செருகியிருந்த சாவியை உருவி தாயிடம் நீட்டினாள். திரும்பினாள். செல்வா சீனுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவளையே வெறித்துக்கொண்டிருந்தான்.

"பொண்ணும், பிள்ளையும் மனையில உக்காந்தாச்சு... உன் அத்தை உன்னை கூப்பிடறாங்க..." சுகன்யாவை இழுத்துக்கொண்டு நடந்தாள் சுந்தரி. 
No comments:

Post a comment