Tuesday, 31 March 2015

சுகன்யா... 83

“என் மனசுல இருக்கற இந்த பயத்தை உன்னாலப் புரிஞ்சிக்க முடியலே... இதை புரிஞ்சுக்காம, என் தலையை புடிச்சி சுவத்துல இடிக்கறே நீ? இது உனக்கு சரின்னு தோணிச்சின்னா இன்னும் நாலு தரம் என் தலயைச் சுவத்துல மோதுடா.. ”

"வீணா நீ என் மேல பழி போடாதேடி... நான் உன்னை என் மேலேருந்து நகத்தினேன்... நீயா தடுமாறி சுவத்துல போய் முட்டிக்கிட்டே... அவ்வளவுதான்.. "

“டேய்... புளுவாதே நீ... என் கழுத்துல தாலி கட்டறதுக்கு முன்னாடியே, நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா ஆகறதுக்கு முன்னாடியே, நான் உன் காதலியா இருக்கும்போதே எங்கிட்ட இவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்கிறியே? இது உனக்கு அடுக்குமாடா?”

"சுகன்யா... போதும்.. நிறுத்துடீ.."

“என் அப்பா, என் அம்மாவை, தன்னோட பொண்டாட்டிங்கற ஒரே காரணத்துக்காக, குடிச்சுட்டு வந்து, தான் செய்யறதை தப்புன்னு உணராம, அவங்களை அடிச்சதை, ஒதைச்சதை, அவங்ககிட்ட முரட்டுத்தனமா நடந்துகிட்டதை, சின்னவயசுல பாத்து பாத்து என் மனசுக்குள்ள, ஆம்பிளைகளேயே வெறுத்தவடா நான்...”


"இப்ப எதுக்கும் எதுக்கும் முடிச்சிப்போடறடீ நீ... ப்ளீஸ் சுகன்யா.. போதும்மா.. நீ பேசறதை நிறுத்துடி..." செல்வா கெஞ்ச ஆரம்பித்தான். அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

“என் அப்பாவாவது குடிச்சுட்டு, தன் புத்தியை இழந்ததுக்கு அப்புறமாத்தான் என் அம்மாகிட்ட தப்பா நடந்துகிட்டாரு... ஆனா நீ... நீ இன்னைக்கு உன் சுயநினைவோடத்தான் இருக்கே? அதுக்கு அப்புறமும் என் தலையைப்புடிச்சி சுவத்துலே இடிக்கறே.."

"நாளைக்கு முழுசா ஒரு உரிமை, ஒரு சொந்தம் என் மேல உனக்கு கிடைச்சிட்டா, உன் குடும்பத்துல ஒருத்தியான நான், என்னைக்காவது, எந்த விஷயத்திலாவது உன் அம்மாவைப் பத்தி என் கருத்தைச் சொன்னா, உனக்கு அது சரின்னு தோணலன்னா, என் நிலைமை என்ன ஆகும்ன்னு நான் இப்பவே பயப்படறேன்...” சுகன்யா மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

செல்வாவின் முகம் முற்றிலுமாக வெளிறிப்போனது. மேற்கொண்டு அந்த நேரத்தில் சுகன்யாவிடம் ஏதும் பேசாமல் வீட்டுக்குப்போய்விடலாமென டேபிளின் மேல் கிடந்த தன் தோள்பையை எடுத்தவன், ஏதோ நினைத்துக்கொண்டவனாக, கையில் எடுத்தப் பையை மீண்டும் டேபிளின் மேலேயே வீசிவிட்டு, பால்கனிக்கு சென்று, அறையின் வாசலுக்கு நேராக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு தெருவை நோக்கத் தொடங்கினான்

பால்கனி வழியாக அரை நிமிடத்திற்கு ஒருமுறை, வீட்டுக்கு எதிரிலிருந்து, பார்க்கில் வானுயர நின்று கொண்டிருந்த வேப்பமரமொன்று அவ்வப்போது தன் சோம்பலை முறித்ததால் உண்டான குளிர்ந்த காற்று, அவன் உடலை மெல்லத் தழுவிக்கொண்டிருந்தது.

தன்னை கபடதாரி, வேஷதாரி, பொய்யன், முரடன் என சுகன்யா அடுக்கடுக்காக தன் மேல் குற்றம் சாட்டியதாலும், அந்த குற்றச்சாட்டில் பொதிந்திருந்த, தன்னால் மறுக்க முடியாத ஒரு சிறிய உண்மை, அவன் மனதை குத்திக்கிளறியதாலும், உண்டான வெட்க்கத்தில் அவன் தலை குனிந்திருந்தது.

ரெண்டு நிமிடங்களுக்குப்பிறகு மனதின் கனத்தை, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையை சகித்துக்கொள்ள முடியாமல், செல்வா தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் தலையை உயர்த்தி, கட்டிலின் மீது அமர்ந்திருந்த சுகன்யா இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாளா, என்ற ஐயத்தில் தன் பார்வையை அறைக்குள் தயக்கமாக வீசினான்.

என்னதான் ஏமாத்தம் என் மனசுக்குள்ள இருந்தாலும், தன் மீது உயிரையே வைத்திருக்கும் சுகன்யாவிடம், தன் ஆசை நிறைவேறாத வெறுப்பில், அவள் பேசிய பேச்சில் இருந்த நியாயத்தை பொறுத்துக்கொள்ளமுடியாமல், ஆணுக்கே உரிய தன் முரட்டுத்தனத்தை, அவளிடம் காட்டிவிட்டதற்காக அவன் உள்ளூர வருந்தினான்.

தப்பு என்னுது... என்னமோ தகராறு நடந்து போச்சு... எழுந்து போய் சாரி’ன்னு அவகிட்ட ஒரு வார்த்தை சொன்னா நான் என்னக் கொறைஞ்சா போயிடுவேன்..? இந்த எண்ணம் அவன் மனதின் ஒரு மூலையில் கிளம்பியதும், அவன் சேரிலிருந்து மெல்ல எழுந்தான்.

சுகன்யா, விரிந்து கிடந்த தன் கூந்தலை சீராக்கிக்கொண்டு, கட்டிலின் மீது கிடந்த தன் அழுக்கு நைட்டியை உதறி, அறையின் மூலையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையில் எடுத்து வீசினாள்.

படுக்கையின் மேல் தாறுமாறாகக் கிடந்த பெட்ஷீட்டை உதறி சரியாக விரித்தாள். தரையில் சிதறிக்கிடந்த தலையணைகளை தட்டி சரியாக அதனிடத்தில் வைத்தாள்.

தன் வாய்க்குள்ளேயே எதையோ அவள் முணுமுணுத்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைவது செல்வாவின் பார்வையில் பட்டது. ரெண்டே நிமிடங்களில் சுகன்யா தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

செல்வா, சற்று நேரத்துக்கு முன், தன் முகத்தை துடைத்துவிட்டு, சோஃபாவின் மேல் வீசியிருந்த அதே துண்டால், தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, சாமி மாடத்தின் முன் இருந்த விளக்கை ஏற்றினாள். கண் மூடி, தன் கைகளை கூப்பி, ஒரு நிமிடம் சாமிப்படங்களின் முன் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

குங்கும சிமிழியிலிருந்து ஒரு விரலால், சிவப்பு நிற குங்குமத்தை, தன் புருவ நெற்றியில் அழுத்திக்கொண்டாள். தன் பார்வையை, தலை குனிந்து நாற்காலியில் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி வீசினாள்.

சம்புடத்திலிருந்து ஒரு சிட்டிகை விபூதியை எடுத்துவந்து, அவன் முகத்தை தன் கையால் உயர்த்தி, அவன் நெற்றியில் தீட்டினாள். விழிகளில் கனிவுடன், உதட்டில் சிறிய புன்னகையுடன், செல்வாவின் முகத்தை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள்.

சுகன்யாவின் அந்த ஒரு செயலில், அவள் தன் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை உணர்ந்ததும், செல்வா உள்ளுக்குள் முழுவதுமாக உடைந்தான். அதற்கு மேல் அவள் எதிரில் இருந்தால், தான் அழுதுவிடுவோமோ என்னும் அச்சத்தில், அவள் மார்பிலிருந்து தன் முகத்தை சட்டென விலக்கிக்கொண்டான். நாற்காலியைவிட்டு சடாரென எழுந்தான்.

'நான் போறேன்..' மேஜை மேல் கிடந்த தன் பையை விருட்டென எடுத்துக்கொண்டவன், அவள் முகத்தைப் பார்க்காமல் முனகினான். அவள் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அறையை விட்டு நடக்க ஆரம்பித்தான்.

"செல்வா.. ப்ளீஸ்.. எப்பவும் போறேன்னு எங்கிட்ட மொட்டையா சொல்லாதப்பா... இப்படி சொல்லி என் மனசை கஷ்டப்படுத்தாதே... போய்வரேன்னு சொல்லுப்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. அவள் தலை குனிந்திருந்தது.

சுகன்யா தன் தலையை நிமிர்ந்தபோது செல்வா மாடியிலிருந்து இறங்கி தெருவுக்குப் போய்விட்டிருந்தான்... சுகன்யா பால்கனிக்கு வந்தாள். செல்வா தன் பைக்கை வலுவாக உதைத்துக்கிளப்பிக்கொண்டிருந்தான்.

செல்வா, பால்கனியில் நிற்கும் தன்னை நிச்சயமாக ஒருதரம் திரும்பிப்பார்ப்பான் என சுகன்யா நினைத்தாள். அப்படி அவன் அவளைப் பார்க்கவேண்டும் என தன் மனதில் எப்போதும் இருக்கும், அம்பாளை மனமார வேண்டினாள்.

செல்வா, அவள் எதிர்பார்த்தபடி, மாடி பால்கனியின் பக்கம் திரும்பிப்பார்க்கவில்லை. அவனுடைய பைக் பார்க்கை கடந்து, தெரு கோடி முனையை அடைந்ததும், வலது புறம் திரும்பி கண்பார்வையிலிருந்து மறைந்தது.

சுகன்யா விசும்பிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள். 

அடியே சுகன்யா... எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்து இருக்கப்போறே? பேச்சைக் குறைடீன்னு உன் அம்மா உன் கிட்ட எத்தனைத் தடவை சொல்லியிருக்கா? ஏன் இப்படி பேசியே தீருவேன்னு பிடிவாதம் பிடிக்கறே?

"நான் பேசலைன்னா என் மனசுல இருக்கறது அவனுக்கு எப்படித் தெரியும்...?"

"பேசலாம்... நீ பேசலாம்.. எல்லாத்துக்கும் ஒரு நேரம்.. காலம் இருக்கு.. பெரியவங்க கொஞ்சம் பொறுமையா இருன்னுதானே சொல்றாங்க... நீ சொல்ல நினைக்கறதை சரியான நேரத்துல சொல்லு..."

"சரியான நேரங்கறது என்ன?"

"அதை நீங்க ரெண்டுபேரும்தான் டிசைட் பண்ணணும்... அவன் கூட பழக பழகத்தான் கொஞ்சம் கொஞ்சமா அவன் குணம் உனக்குப் புரியவரும்... இன்னைக்கு வரைக்கும் அவன் இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணுவான்னு எதிர்பார்த்திருக்கியா? ஒரே நாள்லே ரோம் உண்டாயிடலடீ.. உன் ஆம்பளையை நீ கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுக்க முடியும்.

"வேணி சொன்னமாதிரி.. நான்தானே என்னை பாதுகாத்துக்கணும்..?"

"சந்தேகமேயில்லை... உன்னை நீதான் பாதுகாத்துக்கணும்... நீ சொல்ல நினைச்சதை அவன் கிட்ட நீ சொல்லிட்டேல்லா... அப்புறம் ஏன் விசும்பிக்கிட்டு இருக்கே... அவனைப்பத்திதான் உனக்கு தெரியுமில்லே... அதிகபட்சம்... ரெண்டு நாள் இல்லேன்னா... மூணு நாள்... தன்னோட மூஞ்சைத் தூக்கி வெச்சுக்குவான்..."

"அதுக்கப்புறம் உங்கிட்டத்தான் வருவான்.. அவன் உன்னை விட்டுட்டு எங்கப் போயிடப்போறான்... ராத்திரி பத்து மணிக்கு மேலே ஒரு தரம் அவனுக்கு போன் பண்ணி "சாரி" செல்வான்னு சொல்லிடு.. சட்டுன்னு எல்லாம் சரியாயிடும்..."

"நான் என்னத் தப்பு பண்ணேன்..? நான் எதுக்கு சாரி சொல்லணும்..? இன்னைக்கு நடந்த கூத்துக்கு அவன்தான் என்கிட்ட சாரி சொல்லணும்...?"

"ஏன்டீ... ஆம்பளை எப்பவும் தொட்டுப்பாக்க அவரசப்படுவான்... அடுப்புல கொதிக்கும் போதே அள்ளிக் திங்கணும்ன்னு துடிப்பான்... ஆக்கப் பொறுக்கறவன் ஆறப்பொறுக்க மாட்டான்.. பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா இருக்கணும்ன்னு உனக்கு உன் பாட்டி கனகா சொன்னாளா... இல்லையா?"

"ஆமாம்... தானா பழுக்கற காயைக் கூட தடியால அடிச்சு பழுக்க வெக்கலாம்ன்னும், ஆம்பிளை அலைவான்னும் சொன்னாங்க..."

"உனக்கு எல்லாம் புரியுது இல்லே; அப்புறம் அவனை ஏன் உன் கூட இங்கே கூப்பிட்டுக்கிட்டு வந்தே?"

"அது என் தப்புதான்..."

"புரிஞ்சிக்கிட்டேல்லா... இனிமே அந்த தப்பை பண்ணாதே.."

"தேங்க்யூ....இனிமே பண்ணமாட்டேன்.."

"உன்கூடவே இருக்கற எனக்கெதுக்கு இந்த தேங்க்யூல்லாம்... நடந்தது நடந்து போச்சு... உன் அப்பா வர்ற நேரமாச்சு... இப்ப எழுந்து போய் சமையல் வேலையைப் பாருடி..." இடது வலது என பட்சபாதமில்லாமல், தனக்குள்ளாகவே வாதம் பண்ணியதும் சுகன்யாவின் மனது சிறிது தெளிவாகிவிட்டது.
இரவு சாப்பிட்டு முடித்ததும், இரண்டு மூன்று முறை, சுகன்யா செல்வாவை தொடர்பு கொள்ள முயற்சித்தாள். செல்வாவின் செல்லில் ரிங் போனது... போய்க்கொண்டே இருந்தது. வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்ற தகவலே அவளுக்கு தொடர்ந்து கிடைத்தது.

ரொம்பவே கோவமா இருக்கான் போல இருக்கு... தொரைக்கு என்கிட்ட பேசக்கூட இஷ்டமில்லையோ? இருக்கட்டும்.. எத்தனை நாளைக்கு இப்படி முறுக்கிக்கிட்டு இருக்கான்னு... நானும் பாக்கறேன்... தன் உதட்டை ஒருமுறை சுழித்துக் கொண்டவள் ஹாலில் இருந்த கட்டிலில் படுத்ததும் உடல் அசதியில் உடனே தூங்கிவிட்டாள் சுகன்யா.

பதினொரு மணிவாக்கில் குமாரசுவாமி உள் அறையிலிருந்து எழுந்து வந்து, தான் போட்டிருக்கும் நைட்டி விலகிய உணர்வு கூட இல்லாமல், அசந்து தூங்கும் தன் மகளின் மேல் ஒரு போர்வையைப் போத்தியவர், அறை விளக்கை விளக்கை அணைத்துவிட்டு படுத்தார்.

மறுநாள் சுனில் ஆஃபீசுக்கு வரவில்லை. தினசரி வேலையுடன், பைல் லிஸ்ட் தயார் செய்யும் வேலையும், அவள் தலைமேல் அன்று மொத்தமாக விழுந்தது. நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் சுகன்யா வேலை செய்து கொண்டிருந்ததால், செல்வாவுக்கு அவள் போன் செய்யவில்லை. அவனும சுகன்யாவுக்கு போன் செய்யாதது மட்டுமல்லாமல், அன்று முழுவதும் அவன் இவள் கண்ணிலேயே தென்படாமல் உலவிக்கொண்டிருந்தான்.

***

மறுநாள் செல்வாவின் ஃப்ளோருக்கு, ஏதோ வேலையாக சென்றிருந்தபோது, அவன் அவள் எதிரில் வருவதைப் பார்த்தவுடன், முகத்தில் புன்னகையுடன் அவனுக்காக லிஃப்டின் அருகில் நின்றாள். செல்வா இவளைக் கண்டதும் இவளைப் பார்க்காததுபோல் சட்டெனத் திரும்பி எதிர்ப்புறமாக படிக்கட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

குழந்தைக்கு இன்னும் என் மேல இருக்கறக் கோபம் தீரலைப் போலருக்கு... சுகன்யா மனதுக்குள் எழுந்த சிரிப்புடன் தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டாள். இப்படி என்னைப் பாத்தும் பார்க்காத மாதிரி போற அளவுக்கு நான் என்னத் தப்பு பண்ணிவிட்டேன் என்ற தவிப்பும் மனதில் எழ, அந்த தவிப்பு ஒரு சிறு முடிச்சாக அவள் மனதின் ஒரு மூலையில் விழுந்தது. கூடவே அவள் உள்ளத்துக்குள் ஒரு சின்ன வருத்தமும் எழுந்தது. 


"சுனீல்.. நீங்க எங்கே சுத்திகிட்டு இருக்கீங்க..? 'இவன் எங்கேப் போனான்... எங்கேப் போனான்னு' சாவித்திரி கொஞ்ச நேரமா... என்னை உண்டு இல்லேன்னு வறுத்து எடுக்கறாங்க.." சுனிலின் செல்லில் சுகன்யா அவனைக் கூப்பிட்டாள்.

"சாரி மேம்... நேத்து நீங்க பிரிப்பேர் பண்ணி அனுப்பிச்ச டேட்டாவுல ஏதோ சின்னப் பிராப்ளம் இருக்குன்னு செல்வா சார் பாய்ண்ட் அவுட் பண்ணாராம்... ஐ.டி. பீப்பிள்ஸ் கிட்டேருந்து தகவல் கிடைச்சுது. இப்ப அவங்க டிவிஷன்ல உக்காந்து, டேரக்டா சர்வர்லேயே நம்ம செக்ஷ்ன் டேட்டாவை வெரிபை பண்ணிக்கிட்டு இருக்கோம்... ரொம்ப அவசரம்ன்னா உடனே கீழே இறங்கி வர்றேன்..."

"யூ கேரி ஆன்... சுனில்.. நான் சாவித்திரி மேடம் கிட்ட இதைப்பத்தி சொல்லிடறேன்.. மிஸ்டர் சுனீல் ஒரு சின்ன விஷயம்... செல்வா அங்கே தன் சீட்டுல இருக்காரா..?. யெஸ்... ஆர் ... நோன்னு மட்டும் பதில் சொல்லுங்களேன்..."

"யெஸ் மேம்..."

"தேங்க் யூ..."

இது நான் பண்ண வேலைன்னு செல்வாவுக்கு நல்லாவே தெரியும்... என் வேலையிலத் தப்பு இருந்தா, அதைப்பத்தி செல்வா என்னைக் கூப்பிட்டு நேரடியா சொல்லியிருக்கலாமே?

அஃபீஷியலாவும் இதைத்தானே அவன் செய்யணும்... அதைவிட்டுட்டு அவனோட ஆளுங்ககிட்ட, டாட்டவை வெரிபை பண்ண சுனிலை கூப்பிட சொல்றான்னா.. செல்வா என்கிட்ட பேசறதையே, என் முகத்தைப் பார்க்கறதையே, தவிர்க்க நினைக்கிறானா?

அவள் மனதில் ஒரு சிறிய ஐயம் எழுந்தது. சட்டென அவள் மனம் துணுக்குற்றது.

ரெண்டு நாட்களாகவே செல்வாவிடம் பேச சுகன்யாவின் மனம் துடித்துக் கொண்டிருந்தது. சரி.. அப்படியே இருக்கட்டும்.. அவனே பெரிய மனுஷனா இருந்துட்டு போவட்டும்... ஆஃப்டர் ஆல் அவன் யாரு? அவன் என் ஆள். எனக்கு புருஷனா ஆகப்போறவன்.. என்னைக் கோச்சிக்கறதுக்கு அவனுக்கு உரிமையில்லையா?

நான்தானே அவனை முதல்லே காதலிக்க ஆரம்பிச்சேன்.. கோவிலுக்கு அழைச்சிட்டுப் போன்னு நான்தானே அவனை என் பக்கம் இழுத்தேன். இந்த உறவுக்கே முதல் காரணம் நான்தானே?

பாண்டிச்சேரிக்கு போனான். அஞ்சு நாள் வரைக்கும் எங்கிட்ட பேசலே.. நான் நான் என் வெக்கத்தை விட்டுட்டு போன் பண்ணேன்.. இந்த தடவையும் நானே திரும்பவும் ஒருதரம் அவன் கிட்டே பேசிட்டுப்போறேன்.. இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், வினாடியும் தாமதிக்காமல் செல்வாவின் நம்பரை இண்டர்காமில் அழுத்தினாள்.

"யெஸ்... தமிழ்செல்வன் ஹியர்..." செல்வாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

"செல்வா.. எனக்குத் தலைவலிக்கற மாதிரி இருக்குப்பா... கேன்டீன் வரைக்கும் போகலாமா..? ஒரு கஃப் காஃபி வாங்கிக் குடேன்..."

"ம்ம்ம்... நீங்க யார் பேசறீங்க மேடம்...? நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.."

"என்னடா கண்ணூ... மேடம்... கீடம்ன்னு யாருகிட்ட ஃபிலிம் காட்டறே... நான் யாருன்னு நிஜமாவே உனக்குத் தெரியலையா?" காமெடி டிராக்குக்கு சுகன்யா மாறினாள்.

"பிலிம்.. கேமரா இதெல்லாம் எதுவும் எங்கிட்ட இல்லே.. நான் விக்கறதும் இல்லே... வாங்கறதும் இல்லே... இது ஐடி டிவிஷன்.. என் பேரு தமிழ்செல்வன், இங்கே ஸிஸ்டம் அனலிஸ்டா இருக்கேன்.."

"ஐ சீ..."

"நான் யாரையும் பாக்க விரும்பலே... யார்கிட்ட பேசணூம்? உங்களுக்கு ராங் நம்பர் கிடைச்சிட்டுதுன்னு நினைக்கிறேன்..."

"பிளீஸ்... செல்வா... நான் சுகன்யா பேசறேன்.. நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளு... அயாம் சாரிடாச் செல்லம்.. உங்கிட்ட அன்னைக்கு நான் கொஞ்சம் கோவமா பேசியிருக்கலாம்... ரெண்டு நாளா அதுக்காக நான் ரொம்பவே ஃபீல் பண்றேன்பா.." சுகன்யா தன் குரலைத் தழைத்துக்கொண்டு பேசினாள்.

"ம்ம்ம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நீங்க சொல்ல நினைக்கறதை சட்டுன்னு.. சுருக்கமா சொல்லிட்டா நல்லாயிருக்கும்..."

"அப்டி என்ன பெரிய பிஸி நீ... ஹும்ம்.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? எதாவது நெட்ல இங்கிலீஷ் படம் பாத்துக்கிட்டு இருப்பே... இன்னொரு டேப்ல ஆஃபீஸ் வேலையைத் தொறந்து வெச்சிக்கிட்டு இருப்பே... ஒரு ரெண்டு நிமிஷம் எழுந்து வந்தா கொறைஞ்சிப் போயிடுவியா... கேண்டீனுக்கு வா.. மொத்தமா அங்கே வெச்சிக்கறேன் உனக்கு..." சுகன்யா குரலைத் தாழ்த்திக்கொண்டு கொஞ்சினாள்.

"யூ ஆர் ரைட் மேடம்.. என்னை யாரும் வெச்சிக்கல்லாம் வேண்டாம்... உங்களுக்கு என்னைப்பத்தி முழுசா தெரியாது... நீங்க இன்னும் என்னைச் சரியாப் புரிஞ்சிக்கல... அயாம் சாரி டு சே திஸ்... நான் இப்ப கொஞ்சம் பிஸி... டிரை டு அண்டர்ஸ்டேண்ட் திஸ்.." செல்வா நறுக்கென பேசிவிட்டு லைனை கட் பண்ணிணான்.

சுகன்யாவின் மனதில் மெல்ல மெல்ல அவளுடைய பிடிவாதம் என்னும் குட்டி பூதம் தூக்கத்திலிருந்து எழுந்தது. தன் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தது. 

சுகன்யா செல்வாவின் இண்டர்காம் நம்பரை மீண்டும் ஒரு முறை அழுத்தினாள். இம்முறை அவள் காலை செல்வா எடுக்கவில்லை. அவனுடைய அஸிஸ்டண்ட் ராஜாராமன் எடுத்தான்.. 

"ராஜூ... நான் சுகன்யா பேசறேன்.. ஒரு செகண்ட் செல்வா கிட்ட ரிஸிவரை குடுங்களேன்..."

"சார்.. உங்களுக்கு போன்." ராஜாராம் ரிஸீவரை செல்வாவின் டேபிள் மீது வைத்துவிட்டு இருக்கவேண்டும்.. அவன் பேசுவது சுகன்யாவுக்கு தெளிவாககேட்டது. 

ரெண்டு பேரும் ஒரே வயதுதான். நண்பர்கள்தான். ஆனால் செல்வா தன் சீட்டில் உட்கார்ந்திருந்தால், ராஜூ அவனை 'சார்' என்றுதான் விளிப்பது வழக்கம். ஆஃபிசுக்கு வெளியில் போடா வாடா என்று அடித்து பிடித்துக்கொள்வார்கள்.

"யாருடா லைன்ல" செல்வாவின் குரலில் சிறிது ஏளனம் ஒலித்ததாக சுகன்யாவுக்குப் பட்டது.

"உன் ஆளுதாண்டா..." செல்வா 'டா' போட்டதும் ராஜாராம் பதிலுக்கு அவனை 'டா' போட்டான். 

"நான் சீட்லே இல்லேன்னு சொல்லுடா..." 

"செல்வா... என்னடா சொல்றே..?"

"சொன்னதை செய்டா.."

"டேய் எந்த உலகத்துல இருக்கேடா நீ? சுகன்யா லைன்ல இருக்காங்கடா...? சொல்றது உன் காதுல விழலேயா?" இப்போது ராஜாராமின் குரலில் உண்மையான வியப்பிருந்தது. 

"டேய்... நான் சொன்னதை உன்னால செய்ய முடியலேன்னா... இனிமே என் டேபிள்லே இருக்கற போன் அடிச்சா தயவு செய்து நீ அதை எடுக்காதே... அது பாட்டுல அது அடிச்சுட்டு போகட்டும்ன்னு நீ உன் வேலையைப் பாரு..." "ஹோ... உடம்பு கிடம்பு சரியில்லையா பாஸ்...?" 


"மிஸ்டர்... ஐ கேன் வெரிவெல் அட்டண்ட் மை கால்ஸ்... ஐ டோண்ட் நீட் எனிபடீஸ் அஸிஸ்டன்ஸ் ஹியர்... அண்ட் டூ வாட் ஐ சே.." செல்வா பேசிக்கொண்டிருந்தது அடுத்த முனையிலிருந்த சுகன்யாவுக்கு வெகு வெகு தெளிவாகக் கேட்டது. ரீசிவரை பிடித்திருந்த தன் கை நடுங்க அதை அதனுடைய இடத்தில் வைத்தாள் அவள். 

சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய உணர்ச்சிப் பந்தொன்று வேகமாக எழுந்தது. அது எரிச்சலா.. அது கோபமா... அது ஆதங்கமா... அது ஆற்றாமையா... அது சினமா... இல்லை அது வருத்தமா... அது அவளுடைய இயலமையா? 

இதில் எதுவுமே அது இல்லையென்றால் என்னதான் அது? அதை என்னவென்று சொல்வது? அவளால் இனம் கண்டு கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி, விருட்டென எழுந்து, அவளுடைய தொண்டை வரை வந்து, தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டு நின்றது. 

அந்த உணர்ச்சி முதலில் சிறிய கேவலாக கிளம்பியது, கேவல் அழுகையாக மாறியது... சத்தம் உதட்டிலிருந்து வெளியில் வராதபடி தன் வாயை, கைக்குட்டையால் பொத்திக்கொண்டாள் சுகன்யா. வாயிலிருந்து சத்தம் வராவிட்டாலும், அவள் விழிகள் கண்ணீரால் நிரம்பியது.No comments:

Post a comment