Friday 20 March 2015

சுகன்யா... 65

"சம்பத்... உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே நீங்க வெச்சிக்கிட்டு இருந்திருந்தா, யாருக்குமே, எந்தவிதமான பிரச்சனையும் வந்திருக்காதுங்க... ஆனா நீங்க உங்க காதலை என் கிட்ட சொல்லிட்டீங்களே...? என் நிலைமையில நீங்க இருந்து பாருங்க..."

"என் லவ்வர் செல்வாவுக்கு என் மேல உங்களுக்கு இருக்கற ஆசை தெரிஞ்சா.. காதல் தெரிஞ்சா, அவனோட உடனடியான ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஏற்கனவே நீங்க எங்க லவ் லைஃப்ல ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருக்கீங்க... அதுக்காக அவன் கிட்ட நீங்க மன்னிப்பும் கேட்டு இருக்கீங்க... அதுக்கு மேல இப்ப நீங்க என்னை லவ் பண்ணறீங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சா அவன் எங்கிட்ட எப்படி நார்மலா பழகுவான்...? அவனும் ஒரு சராசரி ஆண்... என் எதிர்கால வாழ்க்கையை நீங்க யோசனை பண்ணுங்களேன்." சுகன்யா நிதானமாக பேசினாள்.



"என் மனசுல எது சரின்னு படுதோ அதைத்தான் நான் என் வாழ்க்கையில, இதுவரைக்கும் செய்துகிட்டு வந்திருக்கேன். உனக்கும், செல்வாவுக்கும், ஆப்பு வெக்கணும்ன்னு என் மனசு சொல்லுச்சு; உடனே அதைப் பண்ணேன்..."

"அடுத்தவங்களும் அவங்க மனசுக்கு சரின்னு படறதைத்தானே செய்வாங்க...இதை நீங்களும் புரிஞ்சுக்கணும்.." சுகன்யாவும் விடாமல் பேசினாள்.

"சுகா... நீ சொல்றதும் உண்மை... நான் பண்ணது தப்புடான்னு என் அம்மா என்னை ஓங்கி அறைஞ்சா... அம்மா செய்யறது சரின்னு புரிஞ்சுது; பேசாம அந்த அடியை நான் வாங்கிக்கிட்டேன்.."

"கடைசியில உன்னைப் புரிஞ்சுகிட்டு, நான் பண்ணது தப்புன்னு உணர்ந்தேன்.. நட்ட நடுரோடுல, முன்னே பின்னே பாத்திராத உன் செல்வாகிட்ட, என் கவுரவத்தைப் பாக்காம, என் தப்புக்காக, அவன் கையைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டேன்... சுகன்யா.."

"அத்தான் இது எப்ப நடந்தது...? செல்வாகிட்ட வேற என்ன சொன்னீங்க...? என்னை நீங்க காதலிக்கறதையும், ஆசைப்படறதையும், அவன் கிட்டவும் சொல்லிடீங்களா?" அதிர்ச்சியுடன் அவசர அவசரமாக குரல் குளறக் கேட்டாள், சுகன்யா.

"உங்க நிச்சயதார்த்ததுக்கு மொதல் நாள் ராத்திரி, உன் செல்வாவை நான் தனியா மீட் பண்ணேன். ஆனா நான் உன்னை காதலிக்கறது உன் செல்வாவுக்கு தெரியாது..."

"ம்ம்ம்... அப்பாடா.." சுகன்யா ஒரு வினாடி நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

"சுகன்யா... நான் என்ன மடையனா? உன்னை காதலிக்கற விஷயத்தை நான் உன் கிட்டதானே சொல்லுவேன்... செல்வாகிட்ட ஏன் சொல்லணும்..?"

"அத்தான்... நாம சீரியஸா ஒரு விஷயத்தைப் பேசறோம்.. நீங்க இப்ப எதுக்கு நடுவுல காமெடி பண்றீங்க..."

"சுகா... நான் உன்னை உண்மையா காதலிக்கறேம்மா.. அது காமெடி இல்லே.."

"அத்தான்... ப்ளீஸ்... திரும்ப திரும்ப இதை சொல்லாதீங்க... இதனால யாருக்கும் எந்தவிதத்திலும் பலனில்லே..."

"சுகா... எனக்கு உன்னோட சொத்துகள் வேண்டாம்... உன் இளமை வேண்டாம்... உன் அழகு வேண்டாம்... உன் படிப்பு வேண்டாம்.. எதுவுமே வேண்டாம்... உன்னோட அன்பு மட்டும்தான் எனக்கு வேணும்..."

"சம்பத்... எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை..." சுகன்யா பேசமுடியாமல் தவித்தாள்.

"சுகா.. நான் உன்னை உண்மையா விரும்பறேன்... உன்னை நான் அளவில்லாம நேசிக்கறேன்... என் மனசோட இந்த உணர்வுகள் உனக்குத் தெரியணும்ன்னு நான் நினைச்சேன்.. அதை நான் உன் கிட்ட உடனடியா சொல்ல நினைச்சேன்.. சொல்லிட்டேன். இப்ப என் மனசுக்குள்ள ஒரு பெரிய நிம்மதியை நான் உணர்றேன்."

சம்பத் எழுந்தான். எழுந்து நின்ற இடத்திலேயே தன் உடலை இடவலமாக அசைத்தான். அவன் பேசியதைக்கேட்ட, சுகன்யாவின் முகத்தில் சம்பத்தின் மேலிருந்த பிரமிப்பு மேலும் ஒரு நொடி அதிகரித்தது.

"ஆனா என் நிம்மதி போயிடுச்சு அத்தான்..." சுகன்யாவின் குரல் முணுமுணுப்பாக வந்தது. அவள் முணுமுணுப்பில் சலிப்பும் இருந்தது.

"அயாம் சாரி சுகன்யா... நீ சலிச்சிக்கிட்டாலும் உன்னை நான் காதலிப்பது உண்மை.."

"அத்தான்... நீங்க ஒரு சின்னக் கொழந்தையாட்டாம் பேசறீங்க... உங்க மனசுல இருக்கறதை நீங்க சொல்லிட்டீங்க... என்னைப் பொறுத்தவரைக்கும், நான் அதை தப்புன்னு சொல்லலை... ஆனா இதனால யாருக்குப் பிரயோசனம்... சொல்லுங்க? நீங்க விரும்பறது எப்படி நடக்கும்?

"நான் எதையும் எதிர்பார்த்து உன்னை நான் நேசிக்கலை... வாழ்க்கையிலே எதிர்பார்ப்புகளே இல்லாம இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...?" முனகினான் சம்பத். அவன் விசுக்கென்று எழுந்தான். மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் முணுமுணுத்தது சுகன்யாவுக்கும் கேட்டது. இருவரும் வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

"அத்தான், உங்க மனசை நான் புரிஞ்சிக்கிட்ட மாதிரி... நீங்களும் என் மனசைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். மிகவும் நாசூக்காக தன் உள்ளதில் இருப்பதை உடனடியாக அவனுக்கு புரிய வைக்க விரும்பினாள், சுகன்யா.

"சொல்லு சுகன்யா..." சம்பத் இப்போது தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருந்தான்.

"அத்தான்... எல்லாமே விதிக்கப்பட்டதுன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... எனக்கு விதிக்கப்பட்டவன் செல்வா. எனக்கு இந்த ஜென்மத்துல விதிக்கப்பட்டவர் நீங்க இல்லன்னு தயவு செய்து புரிஞ்சுக்கணும். நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஆறு மாசம் முன்னாடி சந்திச்சிருந்தா, பத்து நிமிஷம் முன்னாடி நீங்க என் கிட்ட சொன்ன உங்க அன்பை அப்ப சொல்லியிருந்தீங்கன்னா, என் கண்ணை மூடிக்கிட்டு உங்களுக்கு நான் சரின்னு சொல்லியிருப்பேன்..

"ம்ம்ம்.. அயாம் அன்லக்கி..." சம்பத் முனகினான்.

"அத்தான்... "

"ம்ம்ம்... செல்வாவை நீ சந்திச்சப்பிறகுதான், உன் நிச்சயதார்த்ததுக்கு நாலு நாள் முன்னாடிதான் நான் உன்னைப் பாக்கணும்ன்னு, எனக்கு விதிக்கப்பட்டிருக்கு... இதுக்கு நான் யாரை நொந்துக்கறது?" விரக்தியாக சிரித்தான், சம்பத்.

"அத்தான்... என் மனசுல உங்களுக்குன்னு ஒரு நிரந்தரமான எடத்தை நீங்க பிடிச்சிட்டீங்க. நீங்க என் அத்தைப் பையன். நீங்க என்னோட இரத்த உறவு.. எனக்கு ஒரு பிரச்சனைன்னா எனக்காக என் உறவுகள்தானே முன்னே வரும். என் நட்புகள் தானே எனக்காக ஆதரவு கரம் நீட்டும். என் நண்பர்கள்தானே எனக்கு உதவணும். இந்த நொடியிலிருந்து நீங்க என்னோட சினேகிதன். ஒரு நல்ல நண்பன்... !" சுகன்யா அவன் கையில் தன் கையை நட்புடன் கோர்த்துக் கொண்டாள்.

"ம்ம்ம்..."

"அத்தான்... நீங்க என் கிட்ட என் அன்பை மட்டும்தான் எதிர்பாக்கறதா கொஞ்சம் முன்னாடீ சொன்னீங்க..."

"ஆமாம்..."

"ஒரு பெண், ஒரு ஆணை காதலிப்பதன் மூலமாத்தான், தன் அன்பை அவனுக்கு காட்டணும்ன்னு அவசியமில்லே. இரண்டு நண்பர்களுக்கு இடையேயும் உண்மையான அன்பு நிலவ முடியும். சம்பத், நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும். சீனு என்னோட நல்ல ஃப்ரெண்ட்... மீனா என்னோட திக் ஃப்ரெண்ட்... வேணி என்னோட ஃப்ரெண்ட்... இது மாதிரி நீங்களும் நானும் நட்பா இருக்க முடியும். இதனால என் வாழ்க்கையில எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது." சுகன்யா அவனை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"ப்ச்ச்ச்..." சம்பத் சூள் கொட்டினான். 

"அத்தான்... வாலிப வயசுக்கே உரிய சில சிலுமிஷங்களை, இளமைக்கே உரிய சில திருட்டுத்தனங்களை, சுவையான தப்புகளை, தில்லு முல்லுகளை, விளையாட்டா நீங்க பண்ணியிருக்கீங்க. அதைப் பத்தி நான் கவலைப்படலே." பேசியவள் அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

"யூ ஹாவ் எ ப்ராட் மைண்ட்..சுகன்யா... என்னை நீ ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டே..!!"

"அயாம் நோபடி டு ஜட்ஜ் யூ... எனக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்லை. நீங்க உங்க மனசுல இருந்த காதலை என் கிட்ட ஓப்பனா சொன்னதுனால உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை... அதுக்கு மாறா ஐ ரியலி அப்ரிஷியேட் யூர் ஸ்ட்ரெய்ட்பார்வேட்னெஸ்..."

"தேங்க் யூ சுகன்யா.."

"ஆனா அத்தான்... உங்க மனசுக்கே பிடிக்காத உறவுகளை, இனிமே, திரும்பவும் கண்ட பெண்களோடு, நீங்க வெச்சுக்கக்கூடாதுன்னு, உங்களோட ஒரு உண்மையான சினேகிதியா, உங்ககிட்ட கேக்கற உரிமையை, நான் உங்க கிட்ட எதிர்பாக்கலாமா?" சம்பத்துடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தவள், அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்தாள், சுகன்யா.

"சுகன்யா... நீ என் மனசுக்குள்ள வந்துட்டே... இனிமே இந்த மனசுக்குள்ளே வேற எவளுக்கும் இடம் கிடையாது. இந்த உடம்பு இனிமே வேற எந்த பொண்னோட உடம்பையும், உடல் சுகத்துக்காக நிச்சயமா தீண்டாது... இது சத்தியம்..." ஒரு நொடியும் தயங்கமால் அவளுக்கு பதிலளித்தான், சம்பத்.

இவன் என்னை இந்த அளவுக்கு நேசிக்கிறானா? என் ஒரு வார்த்தைக்கு இவன் இந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறானா? இனிமே எவளையுமே தொடமாட்டேன்னு தயங்காம சத்தியம் பன்றானே? இவனை நான் பைத்தியக்காரன்; மன நோயாளின்னு சந்தேகப்பட்டேனே? சுகன்யா ஒரு நொடி பிரமித்து நின்றாள். ந்டந்து கொண்டிருந்த சம்பத் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

"ஏன் நின்னுட்டே சுகன்யா?"

"ஓண்ணுமில்லே..." சுகன்யா நடக்கத்தொடங்கினாள்.

"சுகன்யா, நான் சொன்னதை நீ நம்பலையா?" சம்பத் சிரித்தான்.

"நிஜமாவே... நீங்க பண்ண சத்தியத்தைக் கேட்டதும், ஒரு செகன்ட் ... இது எப்படி சாத்தியம்ன்னு, நான் என் காதால கேட்டதை நம்ப முடியாம நின்னது உண்மைதான்.. அயாம் சாரி...உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை..." சுகன்யாவின் முகம் சட்டெனக் கருத்தது.

"ப்ளீஸ் ... சுகன்யா... கம் ஆன் டியர்... நீ பேசின உண்மை எனக்கு ரொம்பப் பிடிக்குது... உன்னோட இன்னோசென்ஸ், உன் மனசோட நேர்மை, இதுதான் என்னை உங்கிட்ட இழுக்குது... திரும்பவும் சொல்றேன்... ஐ லவ் யூ சுகன்யா... "

"அத்தான்... ப்ளீஸ்... நாம ஃபரெண்ட்ஸா இருக்கலாம்பா... நான் சொல்றதைக் கேளுப்பா... இதனால யாருக்குமே பிரச்சனையில்ல... என்னைப் புரிஞ்சுக்கப்பா..." சுகன்யா மீண்டும் அவனைக் கெஞ்சினாள்.

"நீ உன் அன்பால, பாசமான வார்த்தைகளால, உன்னோட நேர்மையான குணத்தால, என்னை வதைக்கிறேம்ம்மா.. நீ ஓரே ஒரு வார்த்தை கோபமா பேசியிருந்தா, நீ என் கன்னத்துல பளார்ன்னு பளார்ன்னு ரெண்டு அறை விட்டிருந்தா... எனக்கு அது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கும்..." சம்பத் தன் கண்களில் மீண்டும் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்...

"சுகன்யா... உன் மனசு நிம்மதியை நான் குலைச்சுட்டேன்னு நிஜமாவே உனக்கு என் மேல கோபமில்லையே?"

"நோ... நோ.. அத்தான்... நீங்க என்னைப் பத்தி செல்வா கிட்ட தப்பா பேசினதை, கிரேஸ்ஃபுல்லா என் கிட்ட ஒத்துக்கிட்டு, இதுல சம்பந்தப்பட்ட எங்க ரெண்டு பேருகிட்டவும், மன்னிப்பு கேட்டீங்க.. அதுக்கு அப்புறமும் உங்களோட நல்ல குணத்தை, உங்க திறந்த மனசைப் புரிஞ்சுக்காம, உங்களை கோவிச்சுக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரியா? இல்லே முட்டாளா?"

"தேங்க்ஸ்.. சுகன்யா..! என்னால எதிர்ப்புகளை வெகு சுலபமா நேர் கொள்ள முடியுது. ஆனா ஏனோ தெரியலை... உபசாரத்தையும், அன்பையும் என்னால எதிர்நோக்க முடியலைம்மா..." சுகன்யாவிடம் தன் காதலை சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்ல என்பது புரிந்ததும், சம்பத் நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.

"சுகன்யா, இவ்வளவு நேரம் நீ ரொம்பப் பொறுமையா இருந்தே... நான் சொன்னதையெல்லாம் காது குடுத்துக் கேட்டே... நீ நெனைச்சிருந்தா எப்பவோ, என்னை ஒதுக்கிட்டு எழுந்துப் போயிருக்கலாம்... இவ்வளவு தூரம் நான் சொல்றதை கேக்கணுங்கற அவசியம் உனக்கு நிச்சயமா இல்லே... இன்னும் ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை நீ கேளு..."

"சொல்லுங்க சம்பத்..." சுகன்யா அவனை ஆதரவாகப் பார்த்தாள்.

"என் மனசுல இருக்கற அன்பை உன் கிட்ட நான் சொல்லிட்டேன்.. என்னைப் பொறுத்த வரைக்கும், ஒருவிதத்துல என் ஆசையை நான் உன் மனசுக்குள்ள இன்னைக்கு வெதைச்சிட்டேன்.. அது முளைக்கறதும், மொளைக்காததும் காலத்தோட கையிலத்தான் இருக்கு. உனக்காக நான் பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்."

"....."

"நான் திரும்பவும் என் காதலைப் பத்தி உன் கிட்டவோ, வேற யாரோடவும் நான் எப்பவுமே பேசமாட்டேன். என்னால உன் திருமண வாழ்க்கையில, உங்க ரெண்டு பேரு நடுவுல எப்பவும் எந்தப் பிரச்சனையும் வராது. ஐ பிராமிஸ்... சுகன்யாவின் வலது கையைப் பற்றி, தன் வலது கையால், அவள் உள்ளங்கையில் அழுத்தினான், சம்பத்.

"அத்தான்... நீங்க உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு மவுனமா என்னை காதலிச்சுக்கிட்டே இருக்கலாம்... அதை என்னால நிச்சயமா தடுக்க முடியாது... எனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்றீங்களே... அதை என்னாலப் புரிஞ்சுக்க முடியலை."

"என் மனசுக்குள்ள செல்வா பூரணமா நிறைஞ்சு இருக்கான்... என் மனசு எப்படி மாறும்ன்னு நீங்க எதிர்பாக்கறீங்க... இதை நான் உண்மையிலேயே தெரிஞ்சுக்க விரும்பறேன்.." அவன் செய்த சத்தியத்தைக் கேட்டதும், அவள் தன் மனதுக்குள் மிகுந்த நிம்மதி அடைந்தாள். அதே வினாடியில் அவள் உதடுகளில் ஒரு குறும் புன்னகை அவளையும் மீறி எழுந்தது. 

"யெஸ்... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. உன்னை மாதிரி பெண்ணோட மனசு சாதாரண சூழ்நிலைகளிலே மாறவே மாறாது. நீ உண்மையா காதலிக்கற செல்வாவை ஏற்கனவே உனக்கு பெரியவங்க நிச்சயம் பண்ணிட்டாங்க... உன் மனசு என் பக்கம் எப்படித் திரும்பும்...? அதுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.. நீ கேக்கற கேள்வியும், உன் சிரிப்பின் அர்த்தமும் எனக்கு நல்லாப் புரியுது... சுகா...! 

"அயாம் சாரி சம்பத்... நான் இந்த நேரத்துல இப்படி சிரிச்சு உங்க மனசை புண்படுத்தியிருக்கக்கூடாது... ரியலி அயாம் சாரி... ஆனா..." சம்பத்தின் பதிலை எதிர் நோக்கியவாறு, அவனுடன் நடந்து கொண்டிருந்த சுகன்யா ஒரு நொடி நின்று அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"சுகன்யா... இட் ஈஸ் ஆல்ரைட்... இந்த ஜென்மத்துல உன் மனசு மாறாமல் போகலாம்... இந்த ஜென்மத்துல இல்லன்னாலும்... அடுத்து வரப்போற எந்த ஜென்மத்துலயாவது உன் மனசுல என் மேல காதல் வரலாம் இல்லையா? அந்த நம்பிக்கையோட உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்." தன் விழிகளில் அவள் பால் பொங்கி வரும் எல்லையில்லாத காதலுடன் சம்பத் அவளைப் பார்த்தான். 

"அத்தான்... என்னன்னொவோ நீங்க பேசறீங்க...?"

சுகன்யாவின் குரல் கரகரத்தது. அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. தன் உடம்பு சிலிர்த்து நின்றவளின் மனம் நெகிழ்ந்தது. அவள் நெஞ்சு விம்மியது. இந்த அளவுக்கு 'டீப்' ஆக என்னை இவன் காதலிக்கறானா? சம்பத்தின் பேச்சிலிருந்த உண்மை அவளுக்குப் புரிந்தபோது, அந்த உண்மை தந்த உணர்வை அவளால் நிஜமாவே தாங்க முடியலை.



"நான் என் மனசுல இருக்கற உணர்வுகளைத்தான் பேசறேன்.. சுகா.."


"அத்த்தான்... நான் எப்பவும் நிகழ்காலத்துல வாழறவ.. நிகழ்காலத்துலதான் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன். நீங்க எதிர்காலத்துல நிறைய எதிர்பார்க்கறீங்க.." சுகன்யா தன் குரலை இழுத்தாள்.

"சுகன்யா, 'காலம்' ங்கறது ஆதியும் அந்தமும் இல்லாததுன்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு. 'காலங்கறது' நீளமான ஒரு மெல்லிய நூல் கண்டு. அதுல நேத்து... இன்னைக்கு... நாளைக்கு... அடுத்த வாரம், புது வருஷம், புது பிறப்புங்கற முடிச்சுகள் இல்லை. இதெல்லாம் நாம நம்ம வசதிக்கு ஏற்படுத்திகிட்ட கூறுகள், பகுதிகள், துண்டுகள்.. ..."

"மெல்லிய நூலியிழையில சட்டுன்னு சிக்கு விழுந்துடும்.. நடைமுறை வாழ்க்கையில தன்னால சிக்கல்கள் வந்துடக் கூடாதுன்னு நமக்கு நாமே போட்டுக்கிட்ட வறைமுறைகள்... சிறிய சிறிய முடிச்சுகள்தான் நேற்று, இன்று, நாளை..."

"பிரபஞ்சத்துல 'காலத்துக்கு' எல்லைகள் இல்லை. இந்த உடலுக்குள்ள அடைஞ்சுக்கிடக்கற ஆத்மாக்களின் அனுபவங்களுக்கும் எல்லைகள் இல்லை சுகன்யா... இதெல்லாமே ஒரு வட்டத்துல இயங்குது... வட்டத்துல எந்தப் புள்ளி ஆரம்பம்...? எந்தப் புள்ளி முடிவு...?" சம்பத் சுகன்யாவின் வலது கையை ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டான்.

"அத்தான்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..."

"கொஞ்ச நாளா நான் நல்லசிவங்கறவரை என் அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்... ராணிங்கறவங்க என் அம்மா... அவங்க ரெண்டு பேரும் என்னை தன் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ஆனால், எத்தனை அம்மாக்கள் எனக்கு? எத்தனை அப்பாக்கள் இந்த சம்பத் குமாரனுக்கு...??? இவன் இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்பான்? இவனுக்குத்தான் எத்தனை காதலிகள், எத்தனை மனைவிகள் இருந்திருப்பாங்க..? இந்த சம்பத்துக்கு இந்த கணக்குகள் எதுவும் நினைவுல இல்லே..."

"அத்த்தான்..."

"இவன் மனசுக்கு இன்னும் திருப்தி வரலே... இவன் மனசு இன்னும் பெண்ணோட அன்புக்காக, பரிசுத்தமான ஒரு பெண்ணின் அன்புக்காக, அலையுது.. இவன் இப்ப சுகன்யாங்கற பெண்ணின் அன்பை, மனசை ஆசைப்படறான்... இது சரியா தவறா? இது அவனுக்கே தெரியலை..." சம்பத் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான். குரலில் விரக்தி தொனிக்க நீளமாக ஒரு முறைச் சிரித்தான். சுகன்யா மவுனமாக அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

"சுகன்யா... கடைசியா ஒரு நிமிஷம்... லெட் மி ஸ்பீக்...ப்ளீஸ்.." சம்பத் புன்னகைத்தான்.

"ம்ம்ம்.. சொல்லுங்க அத்தான்... நீங்க இப்ப பேசறதை கேக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு..." 

"காரணமேயில்லாமல் இந்த உலகத்துல, ரெண்டு பேர் ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கறது இல்லை. நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சதுல நிச்சயமா ஒரு அர்த்தம் இருக்கு"

"சுகன்யா, உன் கிட்ட என் காதலை சொல்லும் போதே, அதுக்கு உன்னுடைய பதில் என்னவாயிருக்கும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்" 

"என்னோட பதில் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காதுன்னு தெரிஞ்சும் என் கிட்ட உன் காதலை சொன்னீங்க; என்னோட மறுப்பை என் வாயால சொல்ல வைச்சு, அதை கேக்கறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம், சம்பத்?"

"என்னோட காதலை வலுப்படுத்திக்கத்தான்... சுகன்யா?"

"எனக்குப் புரியலை சம்பத்..."

"சுகன்யா... நீ கடல்... நான் ஒரு நதி... நதியின் இயற்கை நியதி கடலில் சென்று சேருவது. இன்னைக்கு இல்லன்னாலும், நாளை, நாளை மறுநாள், அடுத்த ஜென்மத்தில், அதுக்கும் அடுத்த ஜென்மத்தில்ன்னு, உன்னை நான் தேடிக்கிட்டு வந்துடுவேன்."

"ம்ம்ம்..." 

"என் பேரு அப்ப 'சம்பத்' ஆக இருக்காது... உன் பேரும் சுகன்யான்னு இல்லாம சுகந்தின்னு இருக்கலாம்.. வசந்தின்னு இருக்கலாம்... நாமமோ, ரூபமோ முக்கியமில்லை. மனம் தான் முக்கியம். நான் யார்? என்னுடைய இந்த உடலா? நீ யார்? உன்னுடைய இந்த வசீகரமான உடலா? இந்த உடல்கள் எத்தனை எத்தனை பெயர்களை இதற்கு முன் சுமந்து இருக்கின்றன. இன்னும் எத்தனை எத்தனை பெயர்களை சுமக்கப் போகின்றன? ஆனா நான் உன்னையும், நீ என்னையும் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வோம்... நீயும் நானும் நிச்சயமாக ஒன்று சேருவோம்... எனக்கு இதுல எந்த சந்தேகமும் இல்லை.. சுகா.." 

"அத்தான்... நீங்க எவ்வளவு புத்திசாலித்தனமா வாழ்க்கையின் உண்மைகளைத் தெளிவா பேசறீங்க... இது வரைக்கும் சுயக்கட்டுப்பாடே இல்லாத ஒரு வாழ்க்கையை நீங்களா வாழ்ந்து இருக்கீங்க? என்னால நம்பவே முடியலே... சம்பத்!!" சுகன்யா ஒருவித பிரமிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

"சுகன்யா... திரும்பவும் தப்பான எந்த ஒரு காரியத்தையும் செய்து உன் காதலை அடைய நான் முயற்சி செய்ய மாட்டேன்..." புன்னகைத்தான் சம்பத். 

"சரி... அதுக்காக இந்த ஜென்மத்துல நீங்க எந்த பெண்ணையும் தொடமாட்டேன்... யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்..?" சுகன்யா அவன் பேசுவதில் குறுக்கிட்டாள். அவள் குரல் இலேசாக தழுதழுத்தது. 

"சுகன்யா, சில சமயங்கள்ல நாம மாம்பழத்தை திண்ணுட்டு, கொட்டையை நல்லா சப்பிட்டு, வீட்டுக்கு பின்னாடி குப்பையிலத் தூக்கி எறியறோம். அதுக்கப்புறம் அதை மறந்து போயிடறோம். கொஞ்ச காலம் கழிச்சி, பேய்ஞ்ச மழையில, காய்ஞ்ச வெயில்லே, அந்தக் கொட்டையிலேருந்து சின்னதா துளிர்கள் விட்டு, குப்பை மேட்டுல ஒரு மாஞ்செடி முளைச்சு, காத்துல ஆடும்..."

"அந்த செடியோட தாமிர வண்ண இலைகள், இளம் வெயில்லே நனைஞ்சு தக தகன்னு மின்னும். பாக்கறவன் மனசு அப்டியே குளுந்துப் போயுடும். பாக்கறவன் பிரமிச்சுப் போய் நிப்பான். அந்த மகிழ்ச்சியை அவன் ஒருத்தனாலத்தான் அனுபவிக்க முடியும்... பேச்சால சொல்ல முடியாது... எழுத்துல எழுத முடியாது... நான் என் காதலோட அழகை அப்படித்தான் பாத்து ரசிக்க விரும்பறேன்.."

ஒரு மணி நேரத்துக்கும் மேலே உன் கூட நான் தனியா இருந்தேன். உன் கூட இருந்த இந்த தருணங்கள் என் மனசுக்குள், எப்பவும், எனக்கு, சுகமா இனிச்சுக்கிட்டே இருக்கும். சம்பத் பேசுவதை கேட்ட சுகன்யாவின் முகத்திலிருந்த பிரமிப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது. 

***

"தாத்தா... உங்கப் பேத்தியை பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துட்டேன்..." வீட்டின் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு சுகன்யாவுக்காக தெருவிலேயே காத்திருந்த சிவதாணுவிடம் சிரித்துக்கொண்டே சொன்னான், சம்பத். 



வியப்பிலும், பெருமிதத்திலும் மூழ்கிப் போய் சிலையாக வீட்டு வாசலில் நின்றாள், சுகன்யா. அவன் பேச்சு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


"சிவ... சிவா...!! நான் சொன்னதை சீரியஸா எடுத்திக்கிட்டியாடா? நல்லப் புள்ளைடா நீ.... டேய்... சம்பத்து... நீ நல்லசிவத்துக்கு பொறந்த புள்ளைடா... நல்லசிவத்தை எனக்கு நல்லாத் தெரியும்டா..." சிவதாணு வெள்ளையாக சிரித்தார்.

"பை... சீ யூ... சுகன்யா..." சுகன்யாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான், சம்பத். அவள் கையை பிடித்து அழுத்தமாக ஒருமுறை குலுக்கியவன் அவளைத் திரும்பி பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"பை... பை அத்தான்..." மெல்ல முனகிய சுகன்யா, தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை, துடைத்துக்கொண்டு, அவன் போவதையே மவுனமாக பார்த்துக்கொண்டு நின்றாள். 


No comments:

Post a Comment