Friday 20 March 2015

சுகன்யா... 63

என் மாமா சிவதாணு என்னடான்னா, வீட்டுக்குள்ள தன் மருமவ சுந்தரி, இத்தினி வருஷம் கழிச்சி வந்ததே பெரிசுன்னு, வாயைப் பொத்திகிட்டு உக்காந்து இருக்காரு..

'சுகன்யா, உனக்கு புடவை பிடிச்சிருக்காம்மா... செயின் பிடிச்சிருக்காம்மான்னு', நாலு பேரு எதிர்ல எட்டுத்தரம் அந்த மெட்ராஸ்காரி மல்லிகா, கேள்வி மேல கேள்வி வேற கேட்டா? சுகன்யாவும் வெள்ளந்தியா... 'அத்தே... நல்லாருக்கு அத்தேன்னு குழையறா..' அறியாத பொண்ணு.. அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்...

மெட்றாஸ்காரிங்கதானே ரெண்டு பேரும்... நடுக்கூடத்துல உக்காந்துக்கிட்டு, ஆத்தாளும் பொண்ணுமா, நல்லா நடிச்சாளுங்க, ஆக்டிங் குடுக்க சொல்லியாத் தரணும்?

என் வீட்டுக்கு மருமவளா வரவேண்டியவளை, எவளோ ஊர் பேர் தெரியாதவ, இன்னைக்கு கொத்திக்கிட்டுப் போறா... கல்யாணத்துக்கு அப்புறமா சுகன்யாவுக்கு இருக்கற அத்தனை சொத்தையும், மொத்தமா மடியில அள்ளி கட்டிக்கிட்டு வேற போவப் போறா, இதபத்தி சொன்னா என் புருஷனுக்கு என் மேல கோவம் வருது.


சிவதாணு குடும்பமும், எங்க குடும்பமும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கிட்டவங்க; அவரு எங்களுக்கு ஒண்ணுவிட்டா உறவு மொறையா இருந்தாலும், சொத்துக்கு பங்காளியா இருந்தாலும், மொத்தத்துல, ஒரு காலத்துல, சொத்து எங்க ரெண்டு வீட்டுக்கும் பொதுவான பாட்டன் வீட்டுதுதானே? பொது சொத்தை இப்ப நடுவுல வந்த எவனோல்லா அடிச்சிக்கிட்டுப் போறான்.

என் உரிமையை காத்துல பறக்க வெச்சுட்டான் இந்த குமாரு. நானும் வெக்கம் கெட்டுப் போய் எல்லாத்தையும் நேத்து வேடிக்கை பாத்துக்கிட்டு வந்து நிக்கறேன். எனக்கு என் புருஷன் இந்த விஷயத்துல சப்போர்ட் பண்ணாதானே? நான் ஒரு கையால தட்டினா எங்கேயாவது ஓசை வருமா?

எவனோ ஒருத்தன் முந்தாநாள், சுகன்யா கையில மோதிரம் மாட்டிட்டான்... என் புள்ளை, சுகன்யாவுக்கு மொறை மாப்பிள்ளை, அவ கழுத்துல தாலிகட்ட வேண்டியவன், அதை நேத்து நேர்ல பாத்துட்டு, ஏங்கிப் போய் நின்னான். என் புள்ளை மனசுல இருக்கறது, அவனை பெத்த எனக்கு புரியலையா?

அந்த செல்வா, அப்படீ என்ன சம்பாதிக்கறான்? என் புள்ளையை விட கம்மியாத்தான் சம்பாதிக்கறான்... அவங்க வீட்டு நெலைமையும், அப்படி ஒண்ணும் ஒஹோன்னு ஒண்ணும் தெரியலை. என் புள்ளையும் வீட்டுல ஒத்தை புள்ளையாத்தான் இருக்கான்... பிக்கல் பிடுங்கல்ன்னு சுகன்யாவுக்கு என் வீட்டுல என்ன இருக்கு? என் சொத்தும்... என் புருஷன் சொத்தும், மொத்தமா என் புள்ளை சம்பத் ஒருத்தனுக்குத்தானே?

என் புள்ளை அந்த செல்வாவுக்கு எந்தவிதத்துல கொறைஞ்சுப் போயிட்டான்..? என் புள்ளை அந்த செல்வாவை விட கொஞ்சம் நிறத்துல மட்டுதான்... என்னைவிட நெறம் கம்மியா இருந்த என் புருஷனை என் தலையில வலுக்கட்டாயமா கட்டிவெச்சாங்க... ஆரம்பத்துல நான் இதை மனசுல வெச்சிக்கிட்டு, மொரண்டிக்கிட்டுத்தான் இருந்தேன்... அப்புறம் என் புருஷன் குணத்தைப் பாக்க பாக்க என் மனசு மாறிடலயா? ஆயிரம் ஆசை என் மனசுல ஒரு காலத்துல இருந்ததென்னவோ உண்மைதான்... இப்ப என் புருஷன் மூஞ்சி கொஞ்சம் சுருங்கினாலும், என் மனசு நொந்து போய் துடிக்கலையா?

என் புள்ளை ஏதோ கோபத்துல, மூர்க்கனாட்டாம், என்னமோ தப்பா, சுகன்யாவைப் பத்தி அன்னைக்கு பேசிட்டான். யாருமே, காரணமில்லாம ஒரு பொண்ணை தப்பா பேசக்கூடாது. அதை நான் ஒத்துக்கறேன்.

சம்பத்து தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும், என் மனசு தாங்காம, நானே பளார்ன்னு அவன் கன்னத்துல ஒரு அறை வுட்டேன். என் புள்ளை என்னை எதுத்துப் பேசாம நான் கொடுத்த அடியை வாங்கிக்கிட்டு சும்மாதானே இருக்கான். இப்ப சுகன்யாவை தப்பா பேசிட்டமேன்னு மனசுக்குள்ளவே என் புள்ளை மாய்ஞ்சு மாய்ஞ்சு போறான்.

மூணு மாசமா என் புருஷங்கிட்ட நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன்... எங்க மாமா சிவதாணுவை போய் ஒண்ணுக்கு ரெண்டு தரமா, பாத்து பேசுங்க; சுகன்யாவை நம்ம சம்பத்துக்கு கேளுங்கன்னு; இந்த மனுஷன் என் பேச்சைக் கேட்டாரா? ம்ம்ம்... அப்படி கேட்டு இருந்தா இன்னைக்கு நான் ஏன் இப்படி பைத்தியக்காரி மாதிரி மனசுக்குள்ளவே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு புழுங்கணும்?

என் பேச்சைக் கேக்க வேணாம்; இவர் ஃப்ரெண்ட்தானே அந்த ரகு; ரகுகிட்டவாவது எப்பவாவது மனசு விட்டு பேசி, உன் அக்கா சுந்தரி பெத்த பொண்ணை என் புள்ளைக்கு கட்டிக்கப் போறேன்னு, என் மனசுல இருக்கற ஆசையை வெளிப்படையா சொன்னாரா? அதுவும் இல்லே; துப்புக்கெட்ட மனுஷன், என் புருஷன்.

உன் வீட்டுல சம்பந்தம் பண்றதுக்கு உரிமை உள்ளவ நான்; அசலான் கிட்ட சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை நீ கேட்டியாடா? நீ பண்ணது ஞாயமான்னு, குமாரை நேருக்கு நேர், என்னைக்கு இருந்தாலும் நான் கேக்கத்தான் போறேன். வயசுல என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன் தானே அவன்? ஒழுங்கு மொறையா எனக்கு அவன் பதில் சொல்லட்டும்.

இவரு சொல்ற மாதிரி, இப்ப இதையெல்லாம் யோசனைப் பண்ணி பண்ணி, என் மனசுக்குள்ளவே புலம்பித்தான் என்ன பிரயோஜனம்...? ஆனா நான் என்னப் பண்றது..? என் மனசு கேக்கமாட்டேங்குதே? ராணியின் மனது இடம் வலமாக, கட்சி கட்டிக் கொண்டு அலைந்தது.

"என்னங்க... அங்கப் பாருங்களேன்...! நம்ம சம்பத் யாருகிட்ட பேசிகிட்டு நிக்கறான்? கூட நிக்கறது சுகன்யா மாதிரில்லா இருக்குது?

"சுகன்யாவேதான்... பக்கத்துல உன் மாமா சிவதாணு பெஞ்சில உக்காந்து இருக்காரு... காலங்காத்தால... அவருகிட்ட உன் பஞ்சாயத்தையெல்லாம் ஆரம்பிச்சிடாதே...!! அவராவது நிம்மதியா இருக்கட்டும்..." நல்லசிவம் தன் மனைவியை எச்சரித்தார்.

"ஆமாம்... நீங்க நாட்டாமையை ஒழுங்காப் பண்ணியிருந்தா, என் புள்ளை, சுகன்யா கழுத்துல இந்நேரம் தாலியைக் கட்டியிருப்பான்." ராணி நொடித்துக்கொண்டாள்.

"ஏன்டீ, ராணி... மாமா பொண்ணைப் வழியிலப் பாத்தான்.. அதுல ஒண்ணும் தப்பு இல்லே.. விஷ் பண்ணாம, ஹாய்ன்னு சொன்னமா, உள்ளப் போய் ஜாகிங் பண்றதை வுட்டுட்டு இந்த கூறுகெட்டவன், இப்ப எதுக்கு சுகன்யா கிட்ட இளிச்சுக்கிட்டு நிக்கறான்? நல்லசிவத்தின் மனசு, தன் மகனின் செயலைக் கண்டு எரிச்சலடைந்தது.

இவன் ஒரு தரம் சுகன்யாகிட்ட அடிச்ச கூத்து பத்தாதா? ஊருக்கு போற இன்னைக்கு, திருப்பியும் எந்த வெனையாவது வெதைச்சிட்டு போனான்னா... அது அறுவடை பண்றது யாரு? அவர் தன் மனதுக்குள் ஆத்திரப்பட்டார்.

"சின்னஞ்சிறுசுங்க ஏதோ சிரிச்சிப் பேசிக்கிட்டு நிக்குதுங்க... இதுக்கு இப்ப நீங்க ஏன் கிடந்து பொலம்பறீங்க..?

மெல்ல நடந்து வந்த நல்லசிவமும், ராணியும், பார்க்கின் நுழைவாயிலை நெருங்கினார்கள். ராணி தன் உதட்டில், புன்னகை வழிய, அவர்கள் ஜோடியாக பக்கம் பக்கம் நின்று பேசிக்கொண்டு இருப்பதை, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். நல்லசிவம் சிவதாணுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். 

"நல்லாயிருக்கியா சுகன்யா?" ராணி சுகன்யாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். 

"ஃபர்ஸ்ட் கிளாஸ் அத்தே... அயாம் ஜஸ்ட் ஃப்ளையிங் இன் த க்ளவுட்ஸ்... நீங்க எப்படீ இருக்கீங்க அத்தே?" மகிழ்ச்சியாக சிரித்தாள் சுகன்யா.

"ம்ம்ம்... எனக்கென்னடா கண்ணு... சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறதுதான் வேலை.. ஒடம்பு பெருக்குது... அதான் கொஞ்ச தூரம் தினம் நடக்கிறேன்..." ராணியும் சிரித்தாள்.

"டெய்லி நீங்க வாக்கிங் வருவீங்களா? தெரிஞ்சிருந்தா இந்த வாரம் பூரா நானும் பார்க்குக்கு வந்திருப்பேன்... நான் தினமும் ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் தனியா நடக்கப் போய்கிட்டு இருந்தேன்.."

"வாரத்துல நாலு நாள் கண்டிப்பா இந்த பக்க வருவோம்..."

"ம்ம்ம். நாளைக்கு காலையில அப்பா கூட நான் ஊருக்குப் போறேன்.. அப்புறம் திரும்பவும் தாத்தா வீட்டுக்கு வரும்போது உங்கக்கூட ஜாய்ன் பண்ணிக்கறேன்.." உற்சாகத்துடன் பேசினாள் அவள்.

"இனிமே கல்யாணத்துக்குத்தான் வருவே..." ராணி சிரித்தாள்.

"தெரியலை அத்தே... "அவர்" வீட்டுல கல்யாணம் எங்க வெச்சுக்கலாம்ன்னு பிரியப்படுவாங்களோ? வெட்கத்துடன் பேசினாள், சுகன்யா.

"கரெக்ட்தாம்மா.. நீ சொல்றது..." 

"சுகன்யா... வாட் அபவுட் ஜாகிங்... ஐ விஷ் டு கோ ஃபார் எ ஸ்லோ ரன்.." சம்பத் புன்னகைத்தான்.

"தாத்தா... நான் 'அத்தான்' கூட கொஞ்ச நேரம் ஜாக் பண்ணிட்டு வரட்டுமா? எனக்கும் கொஞ்ச நேரம் டயம் பாஸ் ஆகும்?" சம்பத்தின் உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொள்ள, தாத்தாவை கெஞ்சலாகப் பார்த்தாள் சுகன்யா. 

"ம்ம்ம்.. சீக்கிரமா வந்து சேரும்மா.. அங்க பாட்டி டிஃபன் செய்து வெச்சுட்டு, உனக்காக காத்துக்கிட்டு இருப்பா..!" சிவதாணு பேசுவதை சற்று நிறுத்தி தொண்டையை செருமிக்கொண்டார். சிவ சிவா என சிவத்தை ஒருமுறை துணைக்கு அழைத்தார். 

"டேய் சம்பத்.. ஒழுங்கா கொழந்தையை வீட்டுல திருப்பி கொண்டாந்து விட்டுட்டு போ; நீ பாட்டுக்கு இவளை அம்போன்னு எங்கயாவது நடு வழியிலே ரோட்ல நிக்கவெச்சுட்டு, 'தம்' அடிக்கப் போயிடாதே..!!" அவனுக்கு உரத்தக்குரலில் உத்திரவு போட்டார், சிவதாணு.

"தாத்த்த்தா.. என்ன தாத்தா சொல்றீங்க...நீங்க.. சம்பத் அத்தான் கோச்சிக்கப் போறாரு..?" சுகன்யா அழகாக தன் விழிகளை சுழற்றி கொஞ்சினாள்.

"சிவ... சிவா... அவன் அம்மா... நான் பாத்து பொறந்தவ... அவ புள்ளை என்னை கோச்சிக்குவானா.... நல்லா இருக்கும்மா நீ சொல்ற கதை...!!" 

"ம்ம்ம்.... ரெண்டு நாளா நான் என் நெஞ்சுக்குள்ள படற வேதனை எனக்குத்தானே தெரியும்... நானாவது... என் சுகன்யாவை நடுவழியிலே விட்டுட்டு போறதாவது..." சரியான புத்திக்கெட்ட கிழம் இது, மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டான், சம்பத்.

"மாமா.. நீங்க பேசறது மட்டும் நல்லாயிருக்கா? சுகன்யா என்ன இன்னும் குழந்தையா? என் புள்ளை சம்பத்தும் அவளுக்கு அசலா என்ன? அவளுக்கு அவன் சொந்த அத்தான்தானே.. அவனுக்குத் தெரியாதா? இதெல்லாம் நீங்க சொல்லணுமா?" ராணி சிவதாணுவின் கையை ஆதுரமாக பிடித்துக்கொண்டாள். 

"சிவ சிவா...! நீ தப்பா நெனைச்சுக்காதேடீ ராணீ... உன் புள்ளையை நான் கொறை சொல்லலை... நீயே எனக்கு கொழந்தைதான்!! சுகன்யா உன் பொண்ணு மாதிரி... அப்படியிருக்கும் போது சுகன்யா என்னைக்கும் எனக்கு கொழந்தைதானே?!"

"மாமா... பசங்க ரெண்டு பேரும் அவங்களா வீட்டுக்கு வந்து சேருவாங்க... இப்படியே எங்க கூடவே வந்து ஒரு கப் காஃபி சாப்பிடுங்களேன்... நீங்க எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே?" நல்லசிவம் அன்புடன் சிவதாணுவை அழைத்தார்.

"சிவ.. சிவா... இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்.. நான் வர்றதுக்கு முன்னாடி காப்பி குடிச்சுட்டுத்தான் வந்தேன். இன்னும் குளிக்கலை.. போய் குளிச்சிட்டுப் பூஜை பண்ணணும்... வர்றேம்மா ராணீ...." சொன்னவர் எழுந்து தன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். 

"சம்பத்... நாம இப்படியே ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வரலாமா?" அவன் முகத்தை சுகன்யா ஆர்வத்துடன் பார்த்தாள்.

சுகன்யா நின்ற இடத்திலேயே ஜாக் பண்ண ஆரம்பித்தாள். குதித்துக்கொண்டிருந்தவளின் மார்பு திரட்சிகள், சீரான ரிதத்தில், மேலும் கீழுமாக அசைய ஆரம்பித்தன. துள்ளும் அந்த கவர்ச்சியை நேராக பார்க்க முடியாமல் தன் தலையை ஒரு நொடி தாழ்த்திக்கொண்டான் சம்பத். 

"ம்ம்ம்.. ஆஸ் யூ விஷ்... அயாம் ரெடி... எந்தப் பக்கம் வேணா போவலாம்... சுகன்யா!" சம்பத்தும் அவளும் மெல்ல ஓட ஆரம்பித்தார்கள்.


சுகன்யாவும், சம்பத்தும், ரயில்வே நிலையத்தை அடையும்வரை, நிதானமாக, சீரான வேகத்தில் ஓடினார்கள்.

"அத்தான்... ஜாகிங்கை நிறுத்திக்கலாமா...? ஏற்கனவே நான் தாத்தா கூட ஒரு அரை மணி நேரம் நடந்துட்டேன்..." சுகன்யாவுக்கு இலேசாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது.

"சுகா.. நீ ரெகுலரா ஜாகிங் பண்ணுவியா? முழுசா பதினைந்து நிமிஷம், அசால்டா, என் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வந்தியே?" சம்பத் தன் கண்கள் விரிய அவளை வியப்புடன் பார்த்தான்.

"யெஸ்... காலேஜ்ல சேர்ந்ததுலேருந்தே, அஞ்சாறு வருஷமா, அயாம் ரெகுலர் இன் வாக்கிங் அண்ட் ஜாகிங்..." சுகன்யா தன் ஆரோக்கியமான ரோஜா நிற ஈறுகளும், வெள்ளைப் பற்களும் தெரிய சிரித்தாள்.

"இப்பத்தான் புரியுது... எனக்கு!!"

"என்னது"

"உன்னோட ஸ்மார்ட் அண்ட் அத்லெடிக் 'பாடியோட' ரகசியம்..." அவனும் தன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தான்.

'க்க்கூம்.. ச்சும்மா கிண்டல் பண்ணாதீங்க அத்தான்... நான் அப்படி ஒண்ணும் ஸ்மார்ட்ல்லாம் இல்லே! நான் ஒரு சராசரி சுவாமிமலைப் பொண்ணுதான்..." கொஞ்சலாக பேசினாள், சுகன்யா.

சுகன்யா நீ என்னை அத்தான்... அத்தான்னு இவ்வளவு பாசமா, நமக்குள்ள இருக்கற உறவைச் சொல்லி கூப்பிடறயே? ஆனா நான் உன் திருமண வாழ்க்கையில இடைஞ்சலை உண்டு பண்ணப் பாத்தேன்... அது உனக்கு தெரிஞ்சா, என்னைபத்தி நீ என்ன நினைப்பே? சம்பத் தன் மனசுக்குள் வெட்கினான். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. நடுங்கியது. சம்பத் கன்யாவுடன் ஸ்டேஷனுக்குள் மவுனமாக நடந்து கொண்டிருந்தான்.

***

ஸ்டேஷனில் வரப்போகும் ரயிலுக்காக ஒரு இளம் ஜோடி, அரச மரத்தின் கீழ் காத்திருந்தது. இருவர் முதுகிலும் லாப்டாப் பை தொங்கிக்கொண்டிருக்க அவர்கள் வெகு நெருக்கமாக நின்று, அவர்களுக்கு மட்டுமே கேட்கும் தொனியில், குசுகுசுவென பேசியவாறு, காலை இளங்காற்றின் குளிர்ச்சியை போக்கிக் கொள்ள, சூடான ஆவி பறக்கும் காஃபியை ருசித்துக் கொண்டிருந்தார்கள்.



அந்த இளைஞன் தன் காதலியிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. அவன் முகத்தை தன் விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்த யுவதியின் முகத்தில் வெட்கம் சட்டென படர்ந்தது. அவள் கன்னம் சிவந்தது. கண்களில் சிரிப்புடன், தன் காதலனின் முதுகில் செல்லமாக ஓங்கி அடித்தாள் அவள்.

அவன் விழிகள் சுடராக பிரகாசித்துக்கொண்டிருக்க முகத்தில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. தன் காதலி கொடுத்த அடியை உதட்டில் சிரிப்புடன், விருப்பத்துடன் வாங்கிக் கொண்டான் அந்த இளைஞன். சுற்றுமுற்றும் பார்த்தவன் தன் அன்புக்குரியவளின் கையைப் பற்றி சட்டென தன் புறம் இழுத்தான். அவனை நெருங்கியவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். முத்தத்தை வாங்கிக் கொண்ட அந்த இளம் பெண்ணின் முகத்தில் எல்லையில்லாத உல்லாசமும், மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தன.

சுகன்யாவின் பார்வை அவர்கள் மீது ஒரு கணம் தவழ்ந்து நின்றது. அவள் உதட்டில் புன்னகை ஒன்று மலர்ந்தது. 'லெட் தெம் பீ ஹாப்பி' சுகன்யாவின் தாராள மனசு முனகியது. அந்த இளம் ஜோடியை அவள் தன் மனமார வாழ்த்தினாள்.

சுகன்யாவின் பார்வை திரும்பவும் சம்பத்தின் முகத்தில் வந்து நிலைத்தது. அவன் முகத்திலும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவின் பார்வை போன இடத்தையும், அந்த இளம் ஜோடி நடத்திய காதல் விளையாட்டையும் சம்பத்தும் பார்த்துக் கொண்டே நடந்தான்.

"அத்தான்.. ஜாலியா, சந்தோஷமா இருக்கறவங்களை பாக்கறதே நம்ம மனசுக்கு ரம்மியமா இருக்கு இல்லே?"

"யெஸ்... நான் இதைத்தான் சொல்ல நினைச்சேன்... நீ முந்திக்கிட்டே..!"

"சம்பத்... இப்ப உங்க கிட்ட பைசா எதாவது இருக்கா? வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்க் வரைக்கும்தானே போகப் போறோம்ன்னு நான் பர்ஸை எடுத்துட்டு வரல்லே.." தன் முகம் சற்றே சுருங்கியவளாக குரலில் வெட்க்கத்துடன் கேட்டாள், சுகன்யா.

"சுகா.. இப்ப உனக்கு என்ன வேணும்மா? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு, எனக்கு இது வேணும்ன்னு கேட்டும், நான் உன் மாமா பிள்ளை, அதை உனக்கு வாங்கிக் குடுக்க முடியலைன்னா, இந்த ஊரும், நம்ம ஒறவு மொறையும் என்னைப் பாத்து சிரிக்கமாட்டாங்களா?" முகத்தில் சிறிய குழப்பத்துடன் பேசினான், சம்பத்.

"ம்ம்ம் அப்புறம்... வேற என்னச் சொல்லப்போறீங்க... அதையும் சீக்கிரமா சொல்லிடுங்க..?" சுகன்யா மனதில் குஷியுடன் சிரித்தாள்.

"ஊர்ல இருக்கறவன் சிரிக்கறதை விடு... என் பேத்தி கேட்டதை நீ வாங்கிக் குடுக்கலையாடான்னு உன் தாத்தா என்னை அடிக்கவே வந்துடுவார்... அவரை நெனைச்சாத்தான் மொதல்ல எனக்கு பயமா இருக்கு...!!"

"சேச்சே.. எங்க தாத்தா எவ்வளவு நல்லவர் தெரியுமா...?" சுகன்யா அவன் பேச்சை வெட்டினாள்.

"சுகன்யா... உனக்கு இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேணுமா? இல்லே சுவாமிமலையே வேணுமா...? என்ன வேணும் சொல்லு டியர்...! நீ கேட்டா.. நான் என் உயிரையும் உனக்கு குடுக்கறதுக்கு தயார்..." சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் வசனம் பேசி சிரித்தான், சம்பத்.

"எனக்கு ஊரும் வேண்டாம்... உங்க உயிரும் வேண்டாம்... இப்ப எனக்கு சூடா ஒரு கப் காஃபி குடிக்கணும்.. அவ்வளவுதான்... அதை மட்டும் நீங்க முடிஞ்சா வாங்கிக் குடுங்க..." சுகன்யாவும் உரத்த குரலில் உற்சாகமாக சிரித்தாள்.

"ப்ஃபூ.. இவ்வளவுதானா?" அவன் சற்றே ஏமாற்றம் படிந்த முகத்துடன், தன் பர்ஸை திறந்தான். ஸ்டாலில் நின்றவனிடம் ஒரு நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவி நீட்டினான். திறந்த ஃபர்ஸில், மாம்பழ நிற நிச்சயதார்த்தப் புடவையில், முகத்தில் சிரிப்புடன், கண்களில் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள், சுகன்யா. 

"அத்தான்.. அந்த போட்டோ என்னோடது மாதிரி இருக்கு. உங்கக்கிட்ட எப்படீ வந்தது? சுகன்யா தன் போட்டோவை அவன் பர்ஸில் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனாள்.

"உன்னோட போட்டோதான் சுகா..." சம்பத்தின் முகத்தில் சிறிய வெட்கம் எட்டிப்பார்த்தது.

சுகன்யா, சம்பத்தின் கையிலிருந்த பர்ஸை வாங்கி, அதில் செருகப்பட்டிருந்த தன் போட்டோவைப் பார்த்தாள். சரியான வெளிச்சத்துடன், முழு "டெப்த்" டுன் அந்த புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டிருந்தது. பாதி உள்ளங்கையளவு இருந்த அந்தப் படத்தில், தன் மார்பளவில், சுகன்யா, தாமரையாக மலர்ந்து, தன் முகம் நிறைய சிரிப்புடன் இருந்தாள்.

"என் நிச்சயதார்த்த படம் மாதிரி இருக்கே...?" சுகன்யா தன் முகத்தில் சிறிது குழுப்பமும், ஆச்சரியமாகவும் பேசினாள்

"சுகா... நான் நேத்து உன்னோட பங்கஷனுக்கு வந்தேன்... என் கிட்டவும் அருமையான கேமிரா இருக்கு... போட்டோகிராஃபி என்னோட ஹாபி... என் மனசுக்கு பிடிச்ச நொடியை, நான் படமா மாத்திட்டேன்..." சம்பத் முகத்தில் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... என் போட்டோவை நீங்க ஏன் உங்க பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்க...?" முகத்தில் வியப்புடன், குரலில் சிறிய நடுக்கத்துடன் கேட்டாள், சுகன்யா. தன் கையிலிருந்த போட்டோவை அவனிடம் தயக்கத்துடன் திருப்பிக்கொடுத்தாள்.

"சுகன்யா உன்கிட்ட நான் மனசுவிட்டு ஒரு பத்து நிமிஷம் பேசணும்... ப்ளீஸ்.. அப்படி ஓரமா இருக்கற அந்த பெஞ்சுல உக்காரலாமா? சம்பத்தின் கண்களில் மெல்லியக் கெஞ்சல் தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவால் அவன் கேட்டதை தட்ட முடியவில்லை.

இருவரும் காஃபியை வாங்கிக்கொண்டு, ப்ளாட்பாரத்தின் கோடியில், காலியாக கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். ஆவி பறக்கும் காஃபியை, தன் உதடுகளை குவித்து, மெல்ல "ஸ்ஸ்ஸ்" என சத்தமெழுப்பி, சுகன்யா குடிக்கும் அழகை, தன் உள்ளத்தில் எழுந்த உவகையை அடக்க முடியாமல், ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான், சம்பத்.

"சுகன்யா... அந்த காதல் ஜோடியை நீ பாத்தே இல்லையா?"

"யெஸ்... தே ஆர் வெரி க்யூட்..." மனதில் கள்ளமில்லாமல் பேசினாள் சுகன்யா.

"சூடான ஒரே கப் காஃபியை ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா மாத்தி மாத்தி குடிச்சாங்க. ரியலி... ஐ லைக்ட் தட் மொமென்ட்.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்... அந்த நொடியில... இந்த உலகமே அவங்களுக்கு இல்லாம போயிருக்கும்..."

ம்ம்ம்... சம்பத் மனசால இவ்வளவு தூரம் வாழ்க்கையின் எளிமையான அழகை ரசிக்கறவனா? இவனால தன் மனசுக்குள்ள ரசிச்சதை, இந்த அளவுக்கு தெளிவா வார்த்தைகளால வெளிக்கொணர முடியுமா? தன் உள்ளத்து உணர்வுகளை இன்னொருத்தருக்கு உணர்த்த முடியுமா? சுகன்யா மனதுக்குள் வியந்து போனாள்.

"சுகா... அந்த நொடியில அவங்க ரெண்டு பேரு மட்டுமே இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. அப்படீத்தான் நான் நெனைக்கிறேன்... மனசுக்குள்ள எந்தக் கவலையும் இல்லாம, தங்களை மட்டுமே அவர்கள் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க... அதைத்தான் அவங்க ரெண்டு பேரோட முகத்துல நான் பாத்தேன்... வாட் டூ யூ சே?" இப்போது அவன் முகம் சற்று சீரியஸாக இருந்தது போல் சுகன்யாவுக்கு தோன்றியது.

"ம்ம்ம்... யெஸ்...ஐ அன்டர்ஸ்டேன்ட் தட்..." இயந்திரமாக தன் மனதில் ஓடும் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் பதிலளித்தாள் சுகன்யா.

சம்பத்தின் நயமான ரசிப்பை, அவனுடைய இயல்பான, யதார்த்தமான பேச்சை அவள் ஒரு புறத்தில் ரசித்தபோதிலும், மறுபுறத்தில் அவள் தன் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை நினைத்து குழம்பிக்கொண்டிருந்தாள்..

சம்பத் என் போட்டோவை ஏன் அவன் பர்ஸில வெச்சிருக்கான்? இதுக்கு என்ன அர்த்தம்...? அவன் ஏதோ மனசு விட்டு பேசணும்ன்னு சொன்னானே? அவன் எங்கிட்ட என்ன சொல்ல விரும்பறான்..? உடனடியாக அதைத் தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.

சம்பத் மெல்ல தன் கையிலிருந்த காஃபியை உறிஞ்சி அவசரமில்லாமல் குடிக்க ஆரம்பித்தான். காஃபி நிஜமாகவே சுவையாக இருந்தது. அவன் முகத்தில் ஒரு அசாதாரண அமைதி குடிகொண்டிருக்க, பார்வை தொடுவானத்துக்கும் அப்பால் நிலைத்திருந்தது.

சம்பத் தன் கையிலிருந்த சுகன்யாவின் போட்டோவை ஒரு முறை உற்றுப் பார்த்தவன், திரும்பவும் போட்டோவை வெகு பத்திரமாக, தன் பர்ஸுக்குள் செருகி, அதை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். ஒரு நீளமான பெருமூச்சு அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வெளிவந்தது.

"சொல்லுங்க சம்பத், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னீங்க...?

"சுகன்யா... என் மனசுல இருக்கறதை சுருக்கமா ஒரு வரியில எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை? சம்பத் சுகன்யாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

தன் மனதை, தன் மனதில் உள்ள காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல எந்த ஆணும், எப்போதும், ஏன் தயங்குகிறான்? பெண் மறுத்துவிடுவாள் என்ற பயமா? மறுப்பை எதிர்கொள்ள தயக்கமா? சம்பத்தும் தன் மனதுக்குள் முதல் முறையாக ஒரு பெண்ணின் முன் பேசமுடியாமல் தவிப்பதை, தன் தயக்கத்தை நினைத்து சிரித்துக்கொண்டான். மனதின் சிரிப்பு உதடுகளிலும் வந்தது.

"அத்தான்... எதுவும் சொல்லாம இப்படீ என்னைப் பாத்து சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்?" சுகன்யா தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தாள்.

"ஸாரி சுகா... நான் உன்னைப்பாத்து சிரிக்கலை... நான் என்னையே, என் நிலைமையை நெனைச்சு சிரிச்சுக்கறேன்..."



"ப்ளீஸ்... நேரமாவுது... நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரம் சொல்லுங்க.." சுகன்யா சற்றே எரிச்சலைடைந்தாள். அவள் குரலில் அந்த எரிச்சல் லேசாக வெளிவந்துவிட்டது.

"அயாம் சாரி சுகா.. அயாம் பாதரிங்க் யூ... என் பேச்சு உனக்கு வினோதமா படலாம்.. ஆனா நான் சொல்றதெல்லாம் நிஜம்... உண்மை... முழுமையான சத்தியம்... நான் விளையாட்டுக்காக உன் கிட்ட பேசல.." சம்பத் நீண்ட பீடிகையுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியவன், மீண்டும் தயங்கினான், பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, தொடுவானத்தையும் எதிரில் ஓடிக்கொண்டிருந்த முடிவில்லாத தண்டவாளத்தையும் மவுனமாக மாறி மாறி பார்க்க ஆரம்பித்தான்.

"சம்பத்... நீங்க சொல்ல வந்ததை சொல்லாமா, எதுக்காக இப்ப தண்டாவளத்தை அளந்துகிட்டு இருக்கீங்க...? வீ ஆர் கெட்டிங் டிலேய்ட்...யூ நோ... நீங்களும் இன்னைக்கு பெங்களூருக்கு கிளம்பணும் இல்லையா?"

சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கப்பை மெல்ல கசக்கிக்கொண்டே எழுந்தாள். வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி காலை எட்டைத் தொட்டிருந்தது. 




No comments:

Post a Comment