Saturday 14 March 2015

சுகன்யா... 54

"அவனை நான் ஏன்டீ வெறுக்கணும்?"

"அந்தப் புள்ளாண்டானை கண்டாலே உங்களுக்கு எப்பவும் ஆகறதில்லே?"

"சரியான தண்ணி வண்டிடீ அவன்! பத்து நாள் முன்னாடீ ராத்திரி நேரத்துல கா.. கறி வாங்கிண்டு ஆத்துக்கு திரும்பி வர்றேன்; அந்தக் கடங்காரன் தண்ணியைப் போட்டுட்டு, என் கிட்ட நெருப்பு பொட்டி இருக்காங்கறான்..!!

"பளேர்ன்னு ஓண்ணு கன்னத்துல குடுக்கலாமான்னு வந்தது நேக்கு... என்னடா? உடம்பு எப்படி இருக்குன்னேன்? மாமா நீங்களா? தலையில மஃப்ளரு சுத்தியிருக்கேளா? அடையாளம் தெரியாம கேட்டுட்டேன்னு பவ்யமா ஒதுங்கி நிக்கறவன் மாதிரி நடிக்கறான்... குடிகாரப் பாவி... மீனாட்சி கிளியாட்டம் இருக்கா... அழகான கிளியை பூனை கைய்யில சிக்கவிடலாமோ?

"வாழ்க்கையை எதார்த்தமா பாருங்கோ... சின்னஞ்சிறுசுங்க... ஒருத்தரை ஒருத்தர் விரும்பிண்டுருக்காளோ என்னவோ?

ஏதோ அவா மனசுல கிளர்ச்சி... நெருங்கி நின்னுண்டு, தொட்டு பேசிண்டிருந்துருக்கலாம். உங்களுக்கு அப்பப்ப பக்கத்துல நிக்கற என் மூஞ்சே தெரியலங்கறேள்... மொட்டை மாடீலேருந்து நீங்க என்னத்தைப் பாத்தேள்"

"என்னடீ நோக்கு கிண்டலா போயிட்டேனா நான்?"

"இன்னைக்குத்தான் பெண்கள் பாய் ஃப்ரெண்ட்ஸூம், பையங்கள் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்ன்னும், சொல்லிண்டு சகஜமா தோள்லே கை போட்டுண்டு ரோடுல வீதி வலம் வர்றதுகள்..!! இதை நீங்க பெரிசுப்படுத்தாதீங்கோ!!"

"வெக்கக்கேடு! என்ன நெஞ்சழுத்தமிருந்தா... கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடீ... வீட்டுக்கு வெளியிலே முத்தத்துல நின்னுண்டு அவா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிண்டு கன்னத்துல முத்தம் கொடுத்துக்குவா; என் கண்ணால பாத்தேண்டி?

"இந்த வயசுலயும் உங்களுக்கு பரந்த மனசுயில்லயே?"

"நோக்கு... ரொம்பத்தான் பரந்த மனசு...போ..."

"கண்ணாடி வீட்டுல இருந்துண்டு நீங்க அடுத்தவா ஆத்துகுள்ல கல் எறியறேள்...நம்மாத்து கதை காத்துல பறக்குது..."

"என்னடீச் சொல்றே?"

"அவாளுக்கு ஒரு நியாயம், நமக்குன்னா வேற ஒரு நியாயமான்னு கேக்கறேன்.."

"செத்தப் புரியற மாதிரி சொல்லேன்டீ"

"மேல இருக்கறவன் போட்ட முடிச்சை யாராலயாவது மாத்த முடியுமோ?" சியாமளா புன்னகைத்தாள்.

"முடியவே முடியாது" ராமசாமி தீர்க்கமாகச் சொன்னார்.

"உங்களால உங்கப் பொண்ணுக்கு அந்த ஈஸ்வரன் போட்ட முடிச்சை... மாத்த முடிஞ்சுதோ?"

"முடியல்லே.."

"லலிதான்னு ஆசையா பேரு வெச்சேள்? மார்லே போட்டுண்டு ஊரெல்லாம் திரிஞ்சேள்... உங்கப் பொண்ணு உங்கப் பேச்சைக் கேட்டாளோ? சர்ச்சுக்குப் போய்தானே ஒரு டேவிட் கையால மோதிரம் மாட்டிக்கிட்டா?"

"ஆமாம்.. என் பொண்ணு என் பேச்சைக் கேக்கலே.. ஒப்புக்கறேன்.."

"அப்போ நீங்க ஏன் அடுத்தவா வீட்டு விஷயத்துல கெடந்து அல்லாடறேள்...? ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு இப்ப காலங்காத்தால ஏன் மழைக் காலத்து வரட்டுத் தவளை மாதிரி கத்திண்டு குதிக்கறேள்..?" சியாமளாவின் பதிலும் தீர்மானமாக வந்தது.

சியாமளாவும், ராமசுவாமியும் இருவேறு துருவங்கள். கல்யாணமாகி ஓரே வீட்டில் இத்தனை வருஷங்களாக அவர்கள் இணைந்து வாழ்வதுதான் உலகின் எட்டாவது அதிசயம். ராமசாமி எதற்கும் முதலில் உச்ச ஸ்தாயியில் கூச்சலிடுவார். எதையும் புரிந்து கொள்ளாமல், எல்லாம் புரிந்தது போல், அர்த்தமில்லாமல் ஜம்பமாக குதிப்பார். அவர் பேச்சை யாரும் கேட்கவில்லை என்பது அவருக்கு புரிந்ததும். மெல்ல மெல்ல பெட்டிப் பாம்பாக அடங்குவார். வீட்டிலும் சரி. வேலை பார்த்த இடத்திலும் சரி. இதுதான் அவர் வழக்கம்.

சியாமளா எல்லா விஷயங்களிலும் அழுத்தம். நேர்மையான பரந்த மனசு உள்ளவள். தன் வீட்டுக் குப்பை தன் வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில் குவிப்பதை விரும்புபவள். அடுத்தவர் பாராதிருக்கும் போது தெருவில் கொட்ட மாட்டாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகத்திலிருந்து யாராலும் படிக்க முடியாது.

சியாமளாவை பத்து தரம் கேட்டால் ஒரு தரம் நிதானமாக யோசித்து பதில் சொல்லுவாள். அடுத்தவர்கள் பேசுவதை நடுவில் குறுக்கிடாமல் முதலில் அமைதியாக கேட்ப்பாள். அவள் பதிலைக் கேட்டவர்கள் அடுத்த கேள்வி அவளைக் கேட்கவே மாட்டார்கள். பொறுமைக்கு சியாமளாவை உதாரணமாக காட்டலாம்.

ஆண்டவன் போடும் முடிச்சுக்களில்தான் எத்தனை அர்த்தமிருக்கிறது. ஆட்டுக்கும் வாலை அவன் அளந்துதானே கொடுத்திருக்கிறான். அவன் அளந்து கொடுப்பதில் அர்த்தம் இருக்கத்தானே செய்கிறது...

"சியாம்ளீ... என்னதான் நீ சொன்னாலும் நேக்கு மனசு கேக்கலடீ?"

"இப்ப என்ன பண்ணணுங்கறேள்?"

"இந்த காலத்து யூத்துக்கு சுத்தமா டிஸிப்ளீன்ங்கறதே இல்லேடீ? சீனு தொண்டை முட்ட தண்ணியும் போடுவான்... ரயில் வண்டியா குப் குப்புன்னு புகையும் ஊதுவான்."

"அன்னைக்கு இந்த சீனு நடராஜன் வீட்டுல பேசிக்கிட்டு இருக்கும் போது, மாமான்னு சொல்லிண்டு என் கிட்ட வந்தான்... குப்புன்னு ஒரே நாத்தம்... நேக்கு குடலைப் பொரட்டிக்கிட்டு வந்திடிச்சி... அவனொரு உருப்படாத தறுதலை... சுத்தமா காரக்டர் இல்லாதவன்.. இவனைப் போய் மீனாட்சி ஆசைப்படறாளே?"

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த சீனு நல்லப்பையன்தான். சின்ன வயசுலேருந்தே அவங்க வீட்டுக்கு வர்றவன்.. போறவன்.. அவன் பொறந்த குடும்பமும் நல்ல குடும்பம்... பகவானை சேவிக்கற குடும்பம்.. நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்... இந்த காலத்துல யாருங்க சிகரெட் பிடிக்கலை...?"

"க்க்க்கும்ம்ம்ம்..." அவர் தொண்டையை உரக்க கனைத்தார்.

"இப்பல்லாம் உங்க மாட்டுப்பொண்ணே உங்க பிள்ளைக்கு சரி சமமா உக்காந்துண்டு வீக் எண்டுல தீர்த்தம் சாப்பிடறாளாம்... சிகரெட்டும் ஊதறாளாம்... மாம்பலமே நாறிப் போகுதாம்..."

"அந்த ஓடுகாலியைப் பத்தி என்னண்டை பேசாதேங்கறேன்?"

"ஆகாசத்துல பறக்கறதுலேருந்து... தரையில ஓடறது வரைக்கும், வீட்டுலயே அடிச்சி, அவிச்சி, பொரிச்சி, பொங்கித் திங்கறாளாம். உங்க புள்ளைக்கும் ஆசையா ஊட்டி விடறாளாம்...அவனும் நாக்கைச் சப்பு கொட்டிண்டு திங்கறானாம்."

"இதெலாம் நோக்கு யார் சொன்னது?"

"போன வாரம் அந்த சத்தியபாமா கோவில்ல நின்னுண்டு நம்பாத்து கதையை சொல்லி சொல்லி சிரிச்சிண்டு இருந்தா... தூண் ஓரமா நின்னுண்டு இருந்தேன்.. அவ என்னை கெவனிக்கலே..!!

நேக்கு துக்கம் தொண்டையை அடைச்சது... கண்ணுல வந்த ஜலத்தை பொடவை முந்தானையால தொடைச்சிண்டு, மொகத்துல போலியா ஒரு சிரிப்பை விட்டுண்டு அம்பாள் எதிர்ல தேமேன்னு நின்னேன்...!!"

"ப்ஸ்ஸ்ஸ்..." ராமசாமி சியாம்ளீயின் மனவேதனையை சகிக்க முடியாமல் நெளிந்தார். சியாமளாவின் அருகில் எழுந்து உட்கார்ந்தார்... தன் தோளில் அவளை சாய்த்துக்கொண்டு அவள் தலையை மெல்ல வருடத் தொடங்கினார்.

"உங்க கிட்ட சொன்னா நீங்க எதையும் வெளியே சொல்லமா மனசுக்குள்ளவே வெச்சிண்டு உங்க புள்ளையை நெனைச்சு நெனைச்சு கண் கலங்குவேள்... அவன் தன் உங்களை மறந்துட்டு, வீட்டை விட்டுட்டு கொண்டவ பின்னாடீப் போயிட்டான்.!!"

"அழாதேடீ... சியாம்ளீ... என்னாலத் தாங்க முடியலேடீ.." ராமசாமியின் குரல் உடைந்து, அவருக்கு அழுகைப் பொங்கிக்கொண்டு வந்தது.

"இந்த லெட்சணத்துல நீங்க அடுத்தாத்துப் புள்ளையை கொறை சொல்ல கிளம்பிட்டேள்...?"

சியாமளா, ராமசாமியின் மார்பில் சாய்ந்து விக்கி விக்கி அழுதாள். இரண்டு நிமிடங்களுக்குப் பின் தன் கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

"எல்லாம் என் தலையெழுத்துடீ..." ராமசாமி மெல்ல தன் தலையில் அடித்துக்கொண்டார்.

"பின்னே...வேற எதைச் சொல்லி நம்ம தேத்திக்கறது... நம்ம வீட்டுக்கதையே நாறிக் கெடக்கு..." சியாமளாவின் குரல் தளர்ந்து சுரத்தில்லாமல் வந்தது.

"நடராஜன் என்ன மாதிரி மனுஷன், நேக்கு மனசு சுத்தமா ஆறலடி.. நீ அவனுக்கு வக்காலத்து வாங்கறே?" ராமசாமியின் குரல் மீண்டும் எழுந்தது.

“ரொம்ப நன்னாருக்கே நீங்க பேசறது! நம்ப மாட்டுப்பொண்ணே உங்க ஜாதியில்லே! நாமப் பெத்ததை நாம என்ன கொன்னா போட்டுட்டோம்!"

"என்னைக் குத்தறேதே நோக்கு வேலையாப் போச்சுடீ.."

"உங்க பையனும் பொண்ணும் அவா அவா இஷ்டப்படி மனசுக்கு பிடிச்ச துணையைத் தேடிண்டு சந்தோஷமாத்தானே இருக்கா?"

"த்ஸொ... த்ஸொ... அந்த மனுஷன் பாவம்டி.. கடைசி வரைக்கும் நாம பெத்ததுங்க அவா இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கறது நமக்கு தெரியாம போச்சு. நாம நம்ம பசங்களால பட்ட மனக்கஷ்டத்தை என் சினேகிதன் நடராஜனும் பட வேணாமேன்னுதான் நான் பாக்கறேன்..." அவர் பேசுவதை நிறுத்தினார்.

"ம்ம்ம்...சொல்லுங்கோ..."

"அவரு காதுல நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை காலம் தாழ்த்தாம போட்டுடலாமேன்னு... நினைக்கறேன்.. நோக்கென்ன தோன்றது?" ராமசாமி முதலில் அவருள் இருந்த வேகம் வெகுவாக குறைந்தவராக, சியாமளாவை நோக்கினார். தன் மனைவியின் மெலிந்த விரல்களை நீவிக்கொண்டிருந்தார் அவர்.

“ரெண்டு நாளைக்கு சும்மா இருங்கோ... நீங்க வெட்டியா இதிலே உங்க மூக்கை நொழைக்காதேள்... எதையாவது வாய்க்குப் வந்தபடி நடராஜன் வீட்டுலே உளறிக்கொட்டாதேள்... உங்களுக்குன்னு இருக்கற ஒரு நல்ல ஃப்ரெண்டையும் இழந்துடாடேள்..."

"ம்ம்ம்.. நீ சொல்றதும் சரின்னுதான் தோணறது.."

"நான் மல்லிகா காதுலே நமக்கு தெரிஞ்சதை சாவகாசமா போட்டுடறேன்... அதுக்கு மேல அவா பாடு...”

"ஏன்டீ இப்ப வேணாங்கறே?"

"இந்த வாரக்கடைசியிலே செல்வாவுக்கு நிச்சயம் பண்ண போறாளாம்... பெண்ணுக்கு சொந்த ஊர் கும்பகோணமாம்... செல்வா ஆஃபீஸ்லேதான் அந்த குட்டியும் வேலை செய்யறதாம்... பாக்கறதுக்கு மூக்கும் முழியுமா நன்னா இருக்காளாம்..

நம்ப செல்வாவுக்கும் என்ன கொறைச்சல்... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதா செல்வா சொல்லவேதான்... பத்து நாள் முன்னாடி அவா ஆத்துலே ஒரே கூச்சல் கொழப்பம்..."

"என்ன சத்தம் ஆத்துலேன்னு கேட்டேன்.. நடராஜன் சிரிச்சிண்டே அப்புறமா சொல்றேன்னு மழுப்பிட்டார். செல்வா கல்யாணம்... நிச்சயம் பண்றதைப்பத்தி என்கிட்ட ஒண்ணும் சொல்லலியே..?" ராமசாமி தன் தலையை சொறிந்து கொண்டார்.

"நடராஜனுக்குப் பொண்ணை பிடிச்சிருக்காம்... இந்த சம்பந்தத்துல மல்லிகாவுக்குத்தான் அவ்வளவா விருப்பமில்லையாம்..."

"ம்ம்ம்...போச்சுடா பகவானே? ஈஸ்வரன் ஏன் இப்படீ லோகத்துல இருக்கவா எல்லாரையும் ஆட்டிப் படைச்சிண்டு இருக்கார்ன்னு புரியலே?"

"அவா ஆத்துல ஒரு நல்ல காரியம் நடக்கறப்ப... நாம ஏன் மீனாட்சியைப் பத்தியோ, அந்த பொண்ணு விருப்பப்படற சீனுவைப் பத்தியோ தூஷணையா பேசி, அவா சாபத்தை வாங்கிக் கட்டிக்கணும்? நமக்கென்னத் தலையெழுத்துங்கறேன்.."

"ம்ம்ம்..."

"என்ன ஊம்ம்ம்ங்கறேள்?"

"சொல்லேன்டீ... இந்தாத்துல நீ வெச்சதுதான் சட்டமாயிருக்கு... நான் என்ன சொல்றது நடுவுலே?"

"அவாவா வெனையை அவாவாதான் அனுபவிக்கணும்... நம்ம வெனையை நாம கழிச்சிட்டு, அடுத்தவாளுக்கு தொந்தரவு கொடுக்காம, நேரத்தோட ஈஸ்வரன் கிட்ட போய் சேந்தா அதுவே போதாதா? நீங்க என்ன சொல்றேள்?"

"வாஸ்தவம்டீ..." ராமசாமி சியாமளாவின் தோளில் தன் மெலிந்த கரத்தைப் போட்டு அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

"மீனாட்சிக்கும், அந்த சீனுவாசனை மனசுக்குள்ள புடிச்சிருக்க போய்த்தானே... நடுவீட்டுல யாருக்கும் பயப்படாமல், அந்த சீனுவை கட்டிண்டு, மொகத்துல முத்தம் வாங்கிண்டாள்..."

"ம்ம்ம்..."

"அப்படி மனசு நெறைய ஆசை வெச்சிருக்கவாளை, நீங்க ஏன் பிரிக்க நெனைக்கறேள்.."

"நீ சொல்றதுலேயும் அர்த்தமிருக்குடீ.."

"சீனு குடிக்கறதும், சிகரெட் பிடிக்கறதும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் போது... மீனாவுக்கு தெரிஞ்சிருக்காதா?"

"ம்ம்ம்..."

"அப்புறம் நீங்க ஏன் அந்த சின்னஞ்சிறுசுங்க மத்தியிலே கெட்டப் பேர் வாங்க துடிக்கறேள்... அவா அவா வாங்கிண்டு வந்துருக்கற வரத்தை அவாவாதானே அனுபவிக்கணும்?"

"ம்ம்ம்ம்..."

"புரியறதோல்லியோ.."

"நன்னாப் புரிஞ்சுண்டேன்..."

"அப்ப வாயைப் பொத்திண்டு சாப்பிட வாங்கோ.."

சியாமளா தன் கணவரின் முகத்தை சற்று நேரம் உற்று நோக்கினாள். உணர்ச்சிப் பெருக்கால், விம்மி விம்மி தணியும் அவர் மார்பை தன் வலது கரத்தால் மெல்ல தடவிவிட்டாள். கலங்கியிருந்த அவர் கண்களைத் தன் முந்தானையால் மெல்லத் துடைத்தாள்.

"எழுந்திருங்கோன்னா..." சியாமளா தன் கணவரை உலுக்கியெழுப்பி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். 

ராமசாமியின் மனதில் ஓடிய எண்ணங்களை அறியாத மீனா, அவர் தன் வீட்டுக்குள் நுழைந்ததும், அவள் தங்கள் வீட்டு ஹாலுக்குள் நுழைந்தாள். மல்லிகா சமையல் அறையில் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றிக்கொண்டிருந்தாள். 

செல்வா குளியலறைக்குள் குளித்துக் கொண்டு இருக்க, நடராஜன் தன் முகத்தில் பூசிய சோப்பு நுரையுடன் கண்ணாடிக்கு முன் ஷேவிங்கில் மும்மரமாக இருந்தார். மீனா வேகமாக தன் மூச்சிரைக்க சீனுவிடம் ஓடினாள். 

"சீனு... எதிர் வீட்டுக் கெழம் நம்ம வீட்டுக்கு வேக வேகமாக ஓடியாந்ததைப் பாத்தீங்களா?"

"ம்ம்ம்.. பாத்தேன்..." சீனு வெற்றுப் பார்வையொன்றை மீனாவின் முகத்தில் வீசினான். 

"நாம கிஸ் அடிச்சதை அது பாத்துட்டுதுன்னு எனக்குத் தோணுதுங்க... இப்ப என்னப் பண்றது?" அவள் முகத்தில் ஒரு தொய்வு வந்திருந்தது.

"மொத மொதல்ல எனக்கு கிஸ் குடுத்தே..!! நல்ல சகுனம் பாத்தியாடீ? ஒத்தைப் பாப்பான் எதிர்ல கிஸ் அடிச்சது யாருடீ..? நீதானே அது? இப்ப என்னைக் கேக்கறியா நீ? மனதுக்குள் இருந்த கிலியை மறைத்துக்கொண்டு அவன் கிண்டலாகப் பேசினான்.

"அயாம் ஸாரி... சீனு...?"

"என்னை நீ கிஸ் அடிச்சதுக்கு வருத்தப்படறீயா...? இல்லே நீ சீனுவைத் திருத்தணுங்கற பிரச்சனையில ஏன்டா மாட்டிக்கிட்டோமேன்னு கவலைப் படறீயா?" சீனு ஏளனமாக அவளை நோக்கிச் சிரித்தான்.

"உனக்கு சுத்தமா புத்தியே இல்லையாடா? எந்த அர்த்தத்துல நீ இந்தக் கேள்வியை நீ என் கிட்ட கேக்கறே? நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சாச்சு... நீதான் என் கழுத்துல தாலி கட்டப்போறவன். அய்யரு நடுவுல வந்தாலும் சரி... அப்துல் காதர் வந்தாலும் சரி...! அதுல எந்த மாத்தமும் கிடையாது... !"

"ம்ம்ம்.."

"செல்வா பிரச்சனை இப்பத்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. அதுக்குள்ள நம்மப் பிரச்சனை வீட்டுக்குள்ள ஆரம்பிச்சுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு..!"

"இதல்லாம் என்னை கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி நீ யோசனைப் பண்ணியிருக்கணும்.."

"நான் யோசனைப் பண்ணலே... தப்புத்தான்... நீயும் தானே பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சி கிஸ் குடுத்தே?" மீனா அவனிடம் தன் அடிக்குரலில் சீறினாள்

"ம்ம்ம்... நான் இங்க வேணாம்ன்னு அப்பவே சொன்னனா இல்லையா?"

"இப்ப என்னை நீ வெறுப்பேத்தாதே சீனு.." அவள் முகம் சுண்டியது. 

"சரி.. ஓ.கே... நான் உன்னை எதுவும் சொல்லலை...!!! நீ மூஞ்சைத் தூக்கி வெச்சுக்காதே..."

"அம்மாவை நெனைச்சா எனக்கு பயமாயிருக்கு சீனு.. இப்ப இந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சா என் தோலை உரிச்சு உப்புத் தடவிடுவாங்க..."

"உன் தோலை உரிக்கறவங்க, நடுக்கூடத்துல என்னை உக்காரவெச்சு, வாங்க மாப்ளேன்னு எனக்கு சோறு போடுவாங்களா?"

"அவங்க போடலன்னா நான் போடறேன் உனக்கு..." சீனுத் தன்னை அந்த வீட்டு மாப்பிள்ளை என்று டிக்ளேர் செய்ததும் அவள் முகம் தாமரையாக மலர்ந்தது. மீனா அவன் சட்டைப் பித்தானை திருகினாள். 

"மீனா.. எனக்கு உங்க அப்பாவை நெனைச்சாத்தான் பயமாயிருக்குடீ... இந்தக் கிழம் எதையாவது அவருகிட்ட உளறி வெச்சா.. அவர் மூஞ்சை எப்படி நான் நிமிர்ந்துப் பாப்பேன்னு எனக்குத் தெரியலை..."

"அந்த கெழம் வீட்டுக்குள்ள வராம ஏன் கேட்டோட திரும்பிப் போயிடுச்சி...?"

"ஒரு வேளை என் மீசையில்லாத மூஞ்சைப் பாத்துட்டு, பயந்து இருக்கலாம்..." சீனு சிரித்தான்.

"சனியனே... கொஞ்சம் சீரியஸா பேசேன்டா.." மீனா அவன் மார்பில் குத்தினாள். 

"மீனா... நீ மொதல்ல அந்த நொண்டிக் கருப்பனுக்கு சூடா ஒரு இட்லி வெய்டீ... அது குடுத்த கொரல்லதான் அய்யரு பயந்து போய் திரும்பி ஓடியிருக்கணும்..." சீனு அவளை நோக்கி கண்ணடித்தான்.

"சீனு... இப்ப எதுக்கு அசிங்கமா சிரிச்சு என்னைப் பாத்து கண்ணடிக்கறே நீ? இதெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது... சொல்லிட்டேன்.."

"மீனா... கோச்சுக்காதேடி தங்கம்..."

"சரி...சரீ... மேலப் போ..."

"மீனா.. மாடி ரூமுக்கு போய் வெச்சுக்கலாங்கறீயா? இப்ப யாரும் அங்க வரமாட்டாங்களா?"

"டேய்... என் கோபத்தைக் கிளறாதே? நீ சொல்ல வந்ததை சொல்லுன்னு சொன்னேன் நான்..."

"உன்னை நான் தொட்டுட்டேன்... உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேன்... இனிமே உன்னை விட்டு விலகிப் போறதுங்கறதுங்கற பேச்சுக்கே எடமில்லே... !" அவன் அவள் புடவை முந்தானையை பிடித்துக்கொண்டான். அவள் புடவையை தொட்டதும், அவனையுமறியாமல் அவன் தலை எதிர் வீட்டு மொட்டை மாடியின் பக்கம் திரும்பியது. 

"தேங்க் யூ சீனு..."

"சிரிச்சிக்கிட்டே சொல்லும்மா..."

"நானும் சுகன்யா மாதிரி ஒரு வேலையில இருந்தேன்னா இப்படி அம்மாக்கிட்ட ரொம்பவே பயப்படவேணாம்... சொந்தக் கால்லே நிக்கறேன்ற தைரியமாவுது எனக்கு இருக்கும்..!!"

"ஏய்... என்னடீ மீனா... ஏன் இப்படி ஃபீல் பண்றே? உனக்கு சோறு போடற அளவுக்கு நான் சம்பாதிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன் செல்லம்... உனக்கு மட்டுமில்லே... ஏன்... உங்க அப்பா, அம்மா, உன் அண்ணன், உனக்கு வரப் போற அண்ணி... இவங்க எல்லோரும் ஒண்ணா, என் வீட்டுக்கு உன்னைப் பாக்க வந்தாலும், அவங்களுக்கு விருந்தே என்னால குடுக்க முடியும்..." சீனுவின் குரல் சீரியஸாக வந்தது. 

"ம்ம்ம்..."

"மீனா... என் வீட்டுல தனித்தனியா மூணு ரூம் இருக்கும்ம்மா... அது போதாதா நமக்கு... நீ என்னை உன் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு இருக்கற விஷயம் என் அம்மாவுக்கு தெரிஞ்சா, நாளைக்கே உன் வீட்டுக்கு வெத்தலைப் பாக்கு எடுத்துகிட்டு உன்னை மொறையா பொண்ணு கேக்க வந்துடுவாங்க..." சீனுவின் முகத்தில் பெருமிதம் வெளிச்சம் போட்டிருந்தது. 

"ம்ம்ம்.. உங்க அம்மா மனசைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சீனு...அவங்க ரொம்ப நல்லவங்க...உன் மேல தன் உயிரையே வெச்சிருக்காங்க.."

"நான் எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவேன்னு காத்துக்கிட்டு இருக்காங்க.."

"தெரியும் எனக்கு..."

"உங்க வீட்டுல நம்ம காதலை அப்ரூவ் பண்ணலன்னா... இப்ப நீ கட்டிக்கிட்டு இருக்கியே... இந்த பொடவையோட என் கூட வந்துடு.. எனக்கு வேற எதுவுமே உங்க வீட்டுலேருந்து வேண்டாம்... கடைசீ வரைக்கும் உன்னை நான் என் தோள்ல உக்கார வெச்சி உன்னைத் தாங்குவேன்... எதுக்கும் கவலைப்படாதே...!!!" சீனு உறுதியாக தன் மனதிலிருந்ததை சொன்னான். 

நிஜமா இவன் ஒரு ஆம்பிளைதான்... என் காதலன் சீனு தைரியமானவன். செல்வா மாதிரி வழாவழா கொழகொழான்னு பேசற வெண்டைகாய் இல்லே...!! எந்தப் பிரச்சனைக்கும் டக்குன்னு ஒரு ஸ்டேண்ட் இவனால எடுக்க முடியும்...!! சீனுவின் தைரியம் அவளுக்குப் பிடித்திருந்தது. உடனடியாக அவன் எடுத்த முடிவை கேட்டதும் அவள் மனசு சந்தோஷத்தில் துள்ளியது. 

சீனுவின் பேச்சைக் கேட்ட மீனாவின் மனம் முழுமையாக மகிழ்ச்சியில் திளைத்தது. இவனுக்கு இப்ப எதாவது உடனடியா குடுக்கனும்ன்னு என் மனசுக்கு தோணுது...!! என்ன கொடுக்கலாம். என்னையே எடுத்துக்கடான்னு குடுத்துடலாம். அவள் கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தது. 

"எனக்கு மட்டும் தைரியமில்லேன்னு பாக்கறீயா?" மீனா அவனை உற்று நோக்கினாள்.



'என்ன சொல்றே நீ?"

மீனா அவனுக்கு பதில் சொல்லவில்லை. சுற்று முற்றும் ஒரு முறைப் பார்த்தாள். எதிர் வீட்டு மாடியைப் பார்த்தாள். பக்கத்து வீட்டு தோட்டத்தைப் பார்த்தாள். 

சீனுவுக்கு அவள் என்ன செய்யப்போகிறாள் என்று புரிந்து அவன் அவளிடமிருந்து விலகுவதற்கு முன் மீனா சீனுவின் முகத்தை தன் புறம் வேகமாக இழுத்தாள். தன் உடலின் மொத்த வலுவையும் தன் ஈர உதடுகளில் குவித்தாள். தன் மனதிலிருக்கும் காதலை அவன் இதழ்களிடம் தன் இதழ்களால் அன்புடன், ஆசையுடன், நேசத்துடன், பாசத்துடன், அழுத்தமாகச் சொன்னாள். சீனு ஆடாமல் அசையாமல் நின்றவன் தன் மனதுக்குள் ஒன்று முதல் பத்து வரை எண்ணினான். அவன் உதடுகளின் மேலிருந்த அழுத்தம் குறைந்தது. 

"இப்ப புரிஞ்சுதா...?" மீனா அவன் பதிலுக்கு காத்திராமல், அவன் உதட்டை அழுத்திக் கிள்ளியவள், வீட்டுக்குள் மானாக துள்ளி ஓடினாள். 

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு மவுனமாக வீட்டுக்குள் மெல்ல நுழைந்தான். சென்டர் டேபிளின் மேல் கிடந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவன், வெளியில் நின்றிருந்த காரைத் துடைக்க ஆரம்பித்தான். 

நன்றியுடன் நொண்டிக்கருப்பனைப் பார்த்தான். நொண்டிக்கருப்பன் அவனை நோக்கி ஆதரவாக தன் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. 



No comments:

Post a Comment