Thursday 12 March 2015

சுகன்யா... 47

"சாரிம்ம்மா... நான் இந்த கேள்வியை கேக்கக்கூடாதுதான்.. இன்னைக்கு நான் மனசால ரொம்ப நொந்து போயிருக்கேம்மா... அப்பா எதையுமே புரிஞ்சுக்காம பேசறாரு...!"

"அவர் போக்குத்தான் உனக்குத் தெரியுமேடா?" மகன் தன் மடியில் கிடக்க ராணியின் மனதில் தாய்மை முழுமையாக நிறைந்திருந்தது.

"என் மனசுல சுகன்யாவோட நடத்தைக்கு காரணம் என் கருப்பு நெறம்தான்னு பட்டுடுச்சிம்மா...என்னால அதைத் தாங்கிக்க முடியலைம்மா.." சம்பத்தின் கண்கள் கலங்கியிருந்தன.

"சீச்ச்சீ... அப்படியெல்லாம் இருக்காதுடா... சுகன்யாவோட அம்மா சுந்தரியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... அவ கொஞ்சம் ரிஸ்ர்வ்ட் டைப்டா... அவ புருஷனுக்கும் அவளுக்கும் இருந்த பிரச்சனையால... அதிகமா அவ யாருக்கிட்டேயும் பேச மாட்டா... சுகன்யாவும் அப்பா இல்லாம அம்மா நிழல்ல வளர்ந்த பொண்ணுடா... அதனால சுகன்யாவும் அம்மா மாதிரி, யாரோடவும் ஒட்டாம, தனியா ஒதுங்கி இருப்பாளோ என்னவோ?

"அடப் போம்மா... நீ வேற... நீயும் அப்பா மாதிரி அவ பக்கம் பேசற; கனகா பாட்டி வீட்டுக் கதவைத் தட்டினேன்... அந்த கழுதைதான் வந்து கதவைத் தொறந்தா? என்னமோ ஒரு சோப்பு விக்கப்போன சேல்ஸ்மேனைப் பாக்கற மாதிரிதான் மேலும் கீழுமா என்னைப்பாத்தா... வேண்டா வெறுப்பா யார்ரா நீன்னு கேட்டா?"



"ம்ம்ம்ம்....ஸ்ட்ரேன்ச்..." ஒரு நொடி, ராணி தன் மகன் சொல்லுவதைக் கேட்டுத் திகைத்தாள்.

"பின்னே என்னா, ஜீன்ஸ், டாப்ஸ், லேட்டஸ்ட் ஷூன்னு போட்டுக்கிட்டா மட்டும் போதுமா? சென்னையில வேலை செய்தா மட்டும் போதுமா? ஒரு நார்மல் கர்ட்டஸி அவளுக்குத் தெரியலையே? சம்பத் குமைந்தான்.

ராணி தன் மகன் சொல்லும் கதையில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டாள். ஆணும் பெண்ணும் குணங்களின் கலவைகள்தானே? மனுஷத்தன்மையும், விலங்குத்தன்மையும் கொண்ட ஒரு ஆணாலும் பெண்ணாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டவர்கள்தானே? ராணி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

ஒரு மனிதன் எப்போது விலங்காக மாறுகிறான்; எப்போது மனுஷனாக நடக்கிறான் என்பது, அவனுடைய சூழ்நிலையும், சேர்க்கையுமே நிர்ணயிக்கின்றன. தன் மகனின் சோர்ந்த முகத்தையும், அவன் கலங்கும் கண்களையும் கண்ட ராணியின் மனதில் அந்த நேரத்தில் வக்கிரகுணம் மெல்ல மெல்ல மேலே எழுந்து வர ஆரம்பித்தது.

இது வரையில் எந்தப் பக்கமும் சாயமால், பட்சபாதமில்லாமல் பிரச்சனையை கேட்டுக்கொண்டிருந்தவள் மனதில், தன் மகன் சொல்லுவது சரிதானோ என்ற ஒரு ஐயம் எழுந்தது? ராணி தெளிவாக சிந்திக்கும் தன் திறனை இழந்தாள். ஒரு தலைப்பட்சமாக தன் மகன் பக்கம் சாய ஆரம்பித்தாள். ஒரு தாயின் இயல்பான மனஉணர்ச்சிகளுக்கு அடிமையானாள். பெத்தவளுக்கு அவள் மகன் பேசுவதுதானே கரும்பாய் இனிக்கும்..?! மகனுக்கு அப்புறம் தானே மணளான்?

"சுகன்யாகிட்ட, அப்பா சொன்னமாதிரி நான் தப்பா எதுவும் பேசலைம்மா... சுகன்யா! உங்களுக்கு என்னைத் தெரியாது! ஆனா உங்களை எனக்குத் தெரியும்... கதவைத் தொறங்கன்னு மரியாதையாத்தான் நான் பேசினேம்மா..."

"ம்ம்ம் ...."

"அதுக்கப்புறமும்... அவ கதவைத் தொறக்காம.... "பாட்டி" யாரோ வந்திருக்காங்கன்னு உள்ளப்பாத்து குரல் குடுத்தாம்மா... அழகிப் போட்டியில நடக்கறவ மாதிரி தன் தோளை குலுக்கிக்கிட்டு, இடுப்பை ஆட்டி ஆட்டிக்கிட்டு நடந்து உள்ளே போறாம்மா... நாயி... "

ராணிக்கு தன் மகனின் ஆதங்கம் புரிந்தது. தன் மகனும் ஒரு ஆண்தானே. தன் கணவன் தன்னை முதல் முறை பார்த்தவுடன் தன் அழகில் விழுந்தது போல், சம்பத்தும் சுகன்யாவின் அழகில் விழுந்துவிட்டான் எனத் தெளிவாக அவளுக்குப் புரிந்தது. மகனுடைய மனதின் தாபம் முழுசாக புரிந்தது. தன் மகனின் கலங்கும் கண்களைக் கண்டதும், அவள் புத்திரப்பாசத்தால் புறம் பேசினாள். எப்படியாவது சுகன்யாவை தன் மகனுடன் சேர்த்துவிட அவள் மனது துடிக்க ஆரம்பித்தது.

"டேய் நீ சொல்றது சரிதாண்டா... சுகன்யா கொஞ்சம் திமிர் பிடிச்சவளாத்தான் இருக்கணும்!"

"இப்ப புரியுதாம்மா உனக்கு...? திமிரான ஒரு பெண்ணைப் பாத்தா ஒரு ஆம்பிளைக்கு எரிச்சல் வருமா? வராதா? நீயே சொல்லும்மா...?"

"..."

அம்மாவை மெதுவா நம்ம பக்கம் இழுத்தாச்சு... விடாதேடா அம்மாவை... டேய் சம்பத்து! டெம்போவை அப்படியே மெய்ன்டென் பண்ணுடா... அம்மா எப்பவும் உன் பக்கம்தான் நிப்பா. உன் அப்பனை நம்பாதே! நீ தெரியாம தப்பு பண்ணாக்கூட உன்னை அவரு சப்போர்ட் பண்ணமாட்டாரு... இதை நீ எப்பவும் ஞாபகம் வெச்சுக்க.

"நான் சுந்தரி வீட்டுக்கு, சுகன்யா இருக்கும் போது, நாலுதரம் போயிருக்கேன்... எங்கிட்டவும் எப்பவும் அந்த சுகன்யா முகம் கொடுத்துப் பேசினதே கிடையாதுடா...!" ராணி குதர்க்கமாகப் பேச ஆரம்பித்தாள்.

"பாத்தியா... பாத்தியா... சம்பத் உற்சாகமடைந்தான். நான் சொல்றதுல தப்பு ஓண்ணும் இல்லியே? உன்னையே அவ மதிச்சது இல்லே பாத்தியா...? அவ எங்க என்னை மதிப்பா?" சம்பத் வேகமாக கொம்பு சீவினான்.

"பிச்சைக்காரிக்கு, பழம் பொடவை போடற மாதிரி, இந்த சிறுக்கி சுகன்யா, என்னைப் பாத்து சின்னதா ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, ஒவ்வொரு தரமும் எழுந்து மாடிக்கு போயிடுவா... அப்பவே இது எனக்கு வித்தியாசமா பட்டது." ராணி வேகமாக முழங்க ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்..."

"சுகன்யா, சின்னப் பொண்ணு, நாம ஆரம்பத்துலேருந்து பாம்பேயில இருந்துட்டோம்... சுகன்யா என்னைப் பாத்ததேயில்லே... நான் அவளுக்கு அத்தை உறவுன்னு, அவளுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நான் அப்பெல்லாம் நெனைச்சுப்பேன்..."

"நீ நெனச்சதுலே தப்பேயில்லை...ஆனா சுகன்யா அப்படியில்லே..."

"புது ஆளுங்ககிட்ட பேச கூச்சப்படறான்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். நீ சொன்னதுக்கு அப்புறம்தான் இப்ப எனக்கு எல்லாமே நல்லாப் புரியுது?" ராணி தன் மகன் பக்கம் மொத்தமாக சாய்ந்துவிட்டாள்.

"அப்புறம்..?"

"நான் ஹால்லே உக்காந்து இருக்கேன்.. அந்த கெழவி கனகா என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தறா, சுகன்யா ... இந்த சம்பத்து உனக்கு அத்தைப் பிள்ளை...பெங்களூர்ல இஞ்சினீயரா இருக்கான்;"

"கெழவிக்காவது உறவு மொறை தெரிஞ்சுருக்குதே?" ராணிக்கு தன் மனதில் ஒரு அசட்டுத்தனமான திருப்தி எழுந்தது.

"ஆனாம்மா... சுகன்யா வாயில அன்பா ஒரு வார்த்தையில்லே; அவ மூஞ்சில ஒரு சிரிப்பு இல்லே; சொந்தக்காரன்ங்கற ஒரு சலுகையில்லே; ஆம்பளைங்கற ஒரு மதிப்பு இல்லே. அப்படியா பாட்டீன்னு கேட்டுட்டு, திரும்பி என்னைப் பாத்து, ஒரு சின்ன முறுவல், ஒரு தலையாட்டல், ஒரு ஆமோதிப்பு, இப்படி எதுவுமே அவகிட்டருந்து வரலை."

கோவிலில் பிரசாத வரிசையில் கையில் தொன்னையுடன் காத்திருந்து, தன் முறை வரும் போது, குண்டானில் சக்கரைப் பொங்கல் தீர்ந்துபோக, காலியான தொன்னையுடன், முகத்தில் வரட்டு சிரிப்பும், மனதில் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் பக்தனின், மனநிலையில் சம்பத் அன்று இருந்தான். ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஒரு வினாடி பேசுவதை நிறுத்தி தன் தாயின் ஆதரவான அங்கீகாரத்துக்காக, ஒரு புன்னகைக்காக, அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

"அப்புறம்..."

"அப்புறம் என்னா? சுகன்யா, பெரிய பத்தினி மாதிரி என்னைப் பாத்து கையை கூப்பிட்டு, மிஸ்டர் சம்பத், நீங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க; "பீ கம்பர்டபிள்"ன்னு என் கிட்ட இங்லீஷ் பேசிட்டு, அடுத்த செகண்ட், கூடத்து ரூமுக்குள்ள நுழைஞ்சு, கதவை என் மூஞ்சிலே அடிக்கற மாதிரி சாத்திக்கிட்டாம்மா...?

"அவ்வளக் கொழுப்பா அவளுக்கு..? நல்லப்பொண்ணுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேனே?" ராணி தன்னையும் அறியாமல் தன் பற்களைக் கடித்தாள். அழகான அவள் முகம் கோபத்தில் கருக்க ஆரம்பித்தது.

திருதராஷ்டிரன், துரியோதனன் மேலிருந்த புத்திரப் பாசத்தால், இப்படித்தான் தன் மகன் சொன்னதை கேட்டு கேட்டு, அதன் படியே நடந்து, தன் குலத்தையே அழித்து தானும் அழிந்தான் என்பது ராணியின் நினைவுக்கு அன்று வரவில்லை.

"கொழுப்பா ... அவ்வளவும் நடிப்பும்ம்மா..."

"என்னடா சொல்றே?"

"சுகன்யா மெட்ராஸ்ல அவ வேலைச்செய்யற எடத்துல ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியா மஜா பண்ணிக்கிட்டு இருக்கா!"

"ஆச்சரியமா இருக்கே...! அப்பவே நான் நெனைச்சேன்...! இதனாலத்தான் சுகன்யாவை உனக்கு குடுக்கமாட்டேன்னு, சுந்தரி சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கிறாளா!!??

"வேற என்னா காரணம் இருக்க முடியும்?"

"சுகன்யா ஒருத்தன் கூட கூடி குலாவிக்கிட்டு இருக்கறது உனக்கு எப்படிடா தெரிஞ்சுது...?"

"எவன் கூட இவ குஜாலா சுத்தறாளோ... அவன் பேரு தமிழ்செல்வனாம்... அந்த நேரம் பாத்து... சிவதாணு கிழவன் நம்பர்ல... அவன் போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடுன்னான்?

"வாவ்...என்ன டிவிஸ்ட்டுடா ஸ்டோரியில" தாய், சின்னக்குழந்தையாக அசட்டுத்தனமாக சிரித்தாள்.

சீட்டைக் குலுக்கி போடும் போதே கையில ஆட்டம் ஆயிருக்கணும்ம்மா எனக்கு; ரெண்டு மொக்கை, ஒரு ஜோக்கர், ரெம்மிதான் இல்லை; செட்டா கையில கார்டை வெச்சிக்கிட்டு இருக்கேன்; ஸ்ட்ரெய்ட்டா ரம்மி அண்ட் டிக் ஆவுது....இந்த செல்வாதான் என் ரெம்மி கார்ட்டும்மா... பாரும்மா இதான் லக்குங்கறது...என்ன சொல்றே நீ?" சம்பத் தன் பற்கள் பளீரென மின்ன சிரித்தான்.

"ம்ம்ம்ம்...அப்படியா ... அப்ப அங்க சிவதாணு மாமா இல்லையா?"

"போன் அடிச்சப்ப கூடத்துல யாருமில்லே! சிவதாணு கக்கூஸ் போய் வர்றேன்னு என்னைத் தனியா வுட்டுட்டு போயிட்டார்; நான்தான் போனை எடுத்தேன்... அவன் என்னடான்னா, ரொம்ப உரிமையா சுகன்யாவை கூப்பிடுன்னான்.."

"ம்ம்ம... நல்லா போவுதுடா கதை..."

"என்னா நயினா...? சுகன்யாவை "அவ இவ" ன்னு ரொம்ப உரிமையா பேசறே...? நீ யார்ரான்னேன்?

"அவன் பயந்துப் போயி, சாரி சார்... சுகன்யா நம்பர் வேலை செய்யலை; சுகன்யாவும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்... அர்ஜண்டா ஒரு மேட்டர், அவகிட்ட பேசணும்... அவளைக் கூப்பிடுங்க சார்ன்னு கெஞ்சினான்."

"சரி...சரி ... மேல சொல்லுடா"

"தோஸ்த்... நீ பேசறதைப் பாத்தா நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு தோனலையேன்னு, பட்டுன்னு ஒரு தூண்டிலைப் போட்டேன்.. மீனு சிக்கிடிச்சி!"

"புத்திசாலிடா நீ" தாய் தன் தனயனைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டாள்.

"அம்மா... அந்த தமிழ்செல்வன் ஒரு கேணப்பயலாத்தான் இருக்கணும்... நான் யாருன்னு முழுசா கூட தெரிஞ்சுக்காம, சார்... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்... கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு என் கிட்ட ஆசீர்வாதம் கேக்கறான்..?"

"என்னாது... நீ அவனை ஆசிர்வாதம் பண்ணியா?" ராணி வியப்படைந்தாள்.

"பின்னே என்னா...ம்ம்மா? என் மொறைப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறவனை, நான் ஆசீர்வாதம் பண்ண வாணாமா? நானும் "ததாஸ்து"ன்னு அவனை மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டேன்!"

"சம்பத்து... விஷயத்துக்கு வாடா...கண்ணு... எப்படிடா நீ அவனை ஆசீர்வாதம் பண்ணே? தாயின் குரலில் பெருமிதம் ஒலித்தது."

"என் மொறைப்பொண்ணு சுகன்யா; என் பேருல இருக்கற பட்டாவை, உன் பேருக்கு மாத்திக்குடுடான்னு எங்கிட்டவே கேக்கறியே.. இது ஞாயமாடான்னேன்?"

"ஹாங்...போட்றா... அப்படி போடுடா...பிச்சிட்டடா... சம்பத்தா ... கொக்கான்னேன்...என் பட்டுடா நீ?" தாய் பூரித்துப் போனாள்.

"அப்படியே அசந்து பூட்டான் அவன்..."

"அருவாளை அழுத்தமாத்தான்டா வீசியிருக்கே! ராணியின் முகம் பெருமிதத்தில் மின்னியது.

"மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்துருக்கேம்மா!...

கொளுத்திப்போட்டேன் பாரு ஒரு ஆயிரம் வாலா சரவரிசைப் பட்டாசை... அந்த திமிர் பிடிச்ச சுகன்யா கல்யாணம் நின்னுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே! பாத்துக்கிட்டே இரு... மெட்ராஸ்ல்ல்ல வெடி வெடிக்கற சத்தம், கும்பகோணம், சுவாமிமலைன்னு ஊரே அதிரப் போவுது பாரு..." சம்பத் ஆங்கார, ஓங்காரமாக சிரித்தான்.

தப்பு பண்ணியவனை தட்டிக்கேட்க்கவேண்டிய தாயும், தன் பிள்ளையுடன் சேர்ந்து வகை தொகையில்லாமல் சிரித்தாள். தான் சிவந்த சரீரத்துடன் இருந்த போதிலும், தன் மகன் கருப்பாக, தன் கணவனை மாதிரி, பிறந்துவிட்டதில் ராணிக்கும், அவன் பிறந்தவுடன் சிறிதே, மனக்குறைதான்.

தன் ஆசை மகனின் கருப்பு நிறம் ராணியின் மனதுக்குள் ஒரு தழும்பேறிய காயமாக இருந்தது. அந்த காயத்தை சிரித்து சிரித்தே தன் மனதுக்குள்ளாகவே ஆற்றிக்கொண்டிருந்தாள் அவள். ராணியின் பலவீனமான இடம் அது. சம்பத் இந்த இடத்தை, தன் தாயிடம் தனக்கு காரியம் ஆகவேண்டும் என நினைக்கும் பட்சத்தில், மெல்ல தொட்டு வருடி, கிள்ளி, அந்தக் காயத்தின் தணலில் குளிர் காய்ந்து கொள்ளுவான்.

"அப்புறம்...?" ராணி ஏதோ சின்னத்திரை சீரியல் பார்ப்பது போல் ஆர்வமாக இருந்தாள். 


"பாஸ், நான் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறேன்... நீ என்னடான்னா எங்க நடுவுல பூந்து அவளை பிராக்கெட் போட்டா, உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நான் என்னா ஏலக்காய் தட்டிப்போட்டு, பாலை சுண்டக் காய்ச்சி, அவ கையில குடுத்தனுப்புவேனான்னேன்?" தாயும் மகனுமாக சேர்ந்து சிரித்தார்கள்.

"சத்தியமா சொல்றேம்மா... அந்த தமிழ்ச்செல்வன் புசுக்குன்னு சுத்தமா அவிஞ்சிப்பூட்டான். பேச்சு, மூச்சு எல்லாம் அடங்கிப் போச்சு அவனுக்கு... வார்த்தையே வர்லே வாய்லேருந்து..." ஹோவென மீண்டும் சிரித்தான் சம்பத்.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோட விளையாடிட்டு வந்திருக்கான் புள்ளை... அதை கண்டிக்காம... பெத்தவ, புள்ளை கூட சேர்ந்து சிரிச்சு கும்மாளம் போடறாளே? இது எங்கேயாவது அடுக்குமா? வெளியில் வெராண்டாவில் உட்க்கார்ந்திருந்த நல்லசிவத்தின் வயிறு கலங்கியது. பற்றி எரிந்தது.

"சம்பத்து... நீ ஆட்டத்தை சரியா ஆரம்பிச்சிட்டேடா; மீதி கதையை நான் பாத்துக்கறேன்டா; நான் தாயக்கட்டையை கையில எடுத்தா எப்பவும் மொதல் உருட்டல்ல, தாயம்தாண்டா விழும்; சுகன்யாவை உனக்கு நான் கட்டி வெக்கிறேன். ராணி, மகாபாரதத்தின் பெண் சகுனியாக மாறி, வீம்பாக தன் மகனின் மனசு புரியாமல் கொக்கரித்தாள்.



"அம்மா...! நீ என்னா உன் புள்ளையை, குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு நெனைச்சிட்டியா?" சம்பத்தின் கருத்தமுகம் குரோதத்தில் மேலும் கருத்தது. சம்பத் கோபத்துடன் தன் தொடையை ஓங்கித் தட்டிக் கொண்டான்.

"என்னடா சொல்றே நீ...? எனக்குப் புரியலைடா...!"திடுக்கிட்டாள் ராணி.

இவ்வளவு நேரம் சுகன்யாவின் அழகால் அலைக்கழிக்கப்பட்டு, அவள் தன்னை கிஞ்சித்தும் மதிக்கவில்லையே என புலம்பிக்கொண்டிருந்த தன் பிள்ளை, தீடீரென சேம் சைட் கோல் ஏன் போட முயலுகிறான் என அவளுக்குப் புரியவில்லை. தன் மகனின் முகத்தையும், அவன் முகத்தில் நிறைந்திருந்த குரோதத்தையும் பார்த்த ராணி ஒரு நிமிடம் பயந்து, இவன் ப்ளான் என்னன்னு புரியலியே, என தன் மனதுக்குள் மருகினாள்.

"அம்மா, எவனோ தொட்ட ஒருத்தியை... நீ எனக்கு கட்டிவெக்கலாம்ன்னு பாக்கறீயே? ஒரு பெத்தவ பண்ற வேலையா இது? இதுக்கு மேல சுகன்யாவே வந்து, என்னைக் கட்டிக்க அவ தயார்ன்னு சொன்னாலும், அவளைக் கட்டிக்க நான் ரெடியில்லை; நான் என்ன மானங்கெட்ட மடையனா...?” சம்பத்தின் கண்கள் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன.

"சம்பத்து ... நீ பேசறதுல ஞாயமில்லேடா..", ராணி முனகினாள்.

"சுகன்யாவுக்கு தாலி கட்டிட்டு, காலம் பூரா அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளைப் தொடும்போதெல்லாம், அவளை புருஷனா நான் கொஞ்சும் போதெல்லாம், என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி எவனையோ காதலிச்சவ, காதலிச்சவனை கட்டிப்புடிச்சி, கொஞ்சி குலாவினவங்கற நெனைப்புலேயே, வாழ்க்கைப் பூரா, இந்த விஷத்தை நான் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, மருகி மருகி மனசுக்குள்ளவே சாகணுமா?"

"டேய்... நீ ஒரு பொண்ணை அவமானப்படுத்தறடா..." தன் மகன் ஒரு ஆண் ஆதிக்கத்தின் மொத்த உருவம், குறியீடு, அடையாளம் ... என ராணியின் மனது ஓலமிட்டது.

"ஏற்கனவே ஒருத்தன் கூட நெருக்கமா பழகிக்கிட்டு இருக்கற சுகன்யாவை, அவனையே கல்யாணம் பண்ணிக்க இருக்கற சுகன்யா கூட, உன் புள்ளை, நிம்மதியா ஒன்னாப் படுத்து தூங்க முடியும்ன்னு நீ நெனக்கறியாம்மா?

"அப்ப ஏண்டா அந்த தமிழ்செல்வன் கிட்ட சுகன்யாவை நான் எட்டு வருஷமா காதலிக்கறேன்னு கதைவுட்டே?" ராணியால் பொறுக்கமுடியாமல் பதறினாள்.

"வெரி சிம்பிள்... என்னை மதிக்காதவளை நான் பழிவாங்க நெனைச்சேன்... அவளை நான் கட்டிக்க நெனக்கலை.... எனக்கு அவ கொஞ்ச நேரமாவது அழுவணும்.. அவ்வளவுதான்.."

"நீ அவளை கட்டிக்க ஆசைப்படறேன்னு நான் நெனைச்சேண்டா" ராணிக்கு தன் மகனின் உள்ளம் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

"ஆனது ஆச்சு, போனது போச்சுன்னு, அவளைக் கட்டிக்கிட்டு, சந்தோஷமா குடும்பம் நடத்தற அளவுக்கு, பரந்தமனசு எனக்கு இல்லே; அவ்வள பெரிய மனுஷன் நான் இல்லேம்மா...."

"டேய்... சம்பத்து.. இது தப்புடா கண்ணு... வேணாம்டா இந்த விளையாட்டு..." இப்போது ராணி தன் மகனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.

ராணிக்கு தன் கணவன் தன் மகனைப் பற்றி சொன்னது சரியாப் போச்சே என்ற பயம் சட்டென மனதுக்குள் எழுந்தது. நான் விஷயம் புரியாம இவனை வேறத் தூண்டி விட்டுட்டேன்... சுகன்யா வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகறது? இந்த விஷயம் ரகுராமனுக்கு தெரிஞ்சா, வெனையாகிடுமே; ஆன்னா ஊன்னா, அருவாளை தூக்கற மொரடனாச்சே அவன்; சிவதாணு மாமாவுக்கும், நமக்கும் இருக்கற கொஞ்ச நஞ்ச ஒறவும் இவனால வுட்டுப் போயிடுமே? இந்த விளையாட்டு எங்கப் போய் முடியும்ன்னு தெரியலியே? அவள் மனது அரற்றியது.

"அம்மா... நான் ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள மனுஷன், எவனோ தொட்டு வுட்டுட்ட பொண்ணை கட்டிக்கிட்டு, நான் ஒரு பெரிய தியாகின்னு சொல்லி, யாருகிட்டவும் மெடல் வாங்க எனக்கு விருப்பமில்லே..." சம்பத்தின் முகத்தில் கேலியும், கிண்டலும், விளையாடிக் கொண்டிருந்தன.

சம்பத்தின் எகத்தாளமான வார்த்தைகளையும், வெறி சிரிப்பையும் பார்த்த ராணியின் முகம் ஒரே நொடியில் வெளிறிப்போனது. தன் பிள்ளை சம்பத்தின் வக்கிரமான மனசும், அவன் தன் மனதுக்குள் ஒரு பெண்ணின் மேல், ஒட்டு மொத்த பெண் இனத்தின் மேல் வைத்திருக்கும் உண்மையான மதிப்பும், மரியாதையும் தெரிய, தன் செல்ல மகனின் உண்மையான முகம், மெல்ல மெல்ல அவளுக்குப் புரிய, அவள் முகத்தின் சிரிப்பு சட்டென உறைந்து, பேச்சு மூச்சில்லாமல் உட்க்கார்ந்திருந்தாள்.

தன் கணவர் எங்கே? அவர் தன் உதவிக்கு வரமாட்டாரா? அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது. 

தாய்க்கும் பிள்ளைக்கும் நடுவில் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளை, இதுவரை மவுனமாக, தலையெழுத்தேயென்று, தன் தலையில் இரு கைகளையும் வைத்தவாறு, வெரண்டாவில் உட்க்கார்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்த நல்லசிவம், மெதுவாக எழுந்தார். ஹாலுக்குள் நுழைந்து தன் மனைவி ராணியின் அருகில் வந்து நின்றார்.

"எம்மாடி, ராணி... இவ்வளவு நேரமா, உன் ஆசைப் புள்ளைக்கூட சேர்ந்து சந்தோஷமா, ஒரு பொண்ணு வாழ்க்கையில, தேவையில்லாம அவன் விஷத்தை ஊத்திட்டு வந்த கதையை, பெருமையாச் சொல்லச் சொல்ல, நீ சிரிச்சு சிரிச்சுக் கேட்டு சந்தோஷப்பட்டியே, இப்ப அவன் "நான் என்ன மானங்கெட்ட மடையனான்னு” கேட்ட கேள்விக்கு உங்கிட்ட பதில் எதாவது இருக்கா? இல்லே, இப்பவாவது உன் புள்ளையோட அசல் ரூபம் என்னான்னு உனக்குத் தெரியுதா?"

நல்லசிவத்தின் முகம் சலனமின்றி இருந்தது. ராணி தன் கணவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் பதில் ஏதும் சொல்லாமல், மவுனமாக தன் தலையை குனிந்து கொண்டாள்.

"அப்பா, நான் அவமானப்பட்டதை ஒரு பொருட்டாவே நீங்க நெனைக்கலையா?" மகன் தன் தகப்பனிடம் சீறினான்.

நல்லசிவம் தன் மகனின் கேள்வியை காதிலே வாங்கிக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளாமல் மேலே பேச ஆரம்பித்தார்.

"நான் உன் புள்ளையை மதிக்கலேன்னு சொல்றியே! உன் புள்ளை ஒரு நல்ல குடும்பத்து பொண்ணுக்கு குடுக்கற மதிப்பை பாத்துட்டியா? ஒரு வயசுப் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு வந்ததுமில்லாம அவளைப்பத்தி எப்படியெல்லாம் அவதூறாப் பேசறான்னு பாத்தியா?"

"....." ராணி மவுனமாக இருந்தாள்.

"மானம் கெட்டவனுக்கு ஒரு புது டெஃபினிஷன் - அதான்டி "குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு" உன் புள்ளை உனக்கு புது விளக்கம் குடுத்து இருக்கானே, இதுல உனக்கு சந்தோஷம்தானே? நல்லசிவம் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீறிட்டுக்கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். சிரித்தவர், பக்கத்திலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்தவர், அவரது கை அவரையும் அறியாமல் அவர் தலையை சென்றடைந்தது.

"ஏம்மா... உன் புருஷனுக்கு இன்னா பைத்தியம் புடிச்சு போச்சா? ஏன் இப்படி சிரிக்கணும்? நான் சொன்னதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?"

சம்பத் வெகுண்டான். நல்லசிவம், அவனுக்குப் பதில் சொல்லாமல், தன் மகனையும், தன் மனைவி ராணியையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தார். தன் தந்தை தன்னிடம் நேராகப் பேசமால், தன்னை குறை சொல்லி, தன் தாயிடம் மட்டுமே பேசுவது அவனுக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுத்தது.

"அப்பா.. எவனோ தொட்ட ஒருத்தியை நீங்க கட்டிக்கிட்டு உங்களால வாழ முடியுமா? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்கப் பார்ப்போம்?" தன் தகப்பனின் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியாததால் சம்பத் தன் தகப்பனை வெறுப்புடன் கேட்டான்.

"டேய்.. நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா..." ராணி விரிந்து கிடந்த தன் கேசத்தை கொத்தாக முடிந்தவாறு எழுந்து நின்றாள்.

நல்லசிவத்தின் சிரிப்பின் அர்த்தம் ராணிக்குப் புரிந்தது. தன் கணவன் தன்னை ஏளனம் செய்கிறார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் மனதுக்குள் அவள் கல்யாண வாழ்க்கை ஒரு நொடிக்குள் முழுவதுமாக, ஆரம்பம் முதல் அந்த நொடி வரை, வேகமாக ஓடி நின்றது.

உன் பிள்ளை சம்பத்து உனக்கு ஒரு கதை சொன்னான். அதை கேட்டு நீ மகிழ்ந்துப் போய் நிக்கறே? நீ உன் புள்ளைக்கு, உன் சொந்தக் கதையை சொல்ல தைரியம் இருக்காடின்னு என் புருஷன் என்னைப் பாத்து சிரிக்கறார். எனக்குத் தைரியம் இல்லையே; ராணியின் மனம் உள்ளுக்குள் அழுதது.

டேய் சம்பத்து..., உன் வரையறைப்படிப் பாத்தா, உன் அப்பனே ஒரு மானம் கெட்ட மடையன்தாண்டா; முப்பத்தஞ்சு வருஷமா, எச்சை எலையில சோறு திங்கறவன்தான்; ஆனா இதை யாருகிட்டவும் இன்னைக்கு வரைக்கும் சொல்லாம, கொள்ளாம, மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, மவுனமா இருக்கற பெரிய மனுஷன்தான்னு வாய்விட்டு சொல்ல, உனக்குத் தைரியம் இருக்கான்னு என்னைப் பாத்து சிரிக்கறாரு? என்னால முடியாதே? ராணியின் முகம் சிவந்து, கண்கள் குளமாகியிருந்தன.

நல்லசிவத்தின் பார்வை ராணிக்குத் தெளிவாக அவர் மனதில் இருந்ததை உணர்த்தியது. கல்யாணமே ஆகாத ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணை, எச்சை எலைன்னு சொல்லி சிரிக்கறானே உன் பிள்ளை, அவன் கிட்ட சொல்லுடி; உங்கப்பனே எச்சை எலையில சோறு திங்கறவன்தான்னு...

அடியே ராணி, இதைச் சொல்ல உனக்குத் தைரியம் இருக்கா? இல்லே; உன் புள்ளைக்கு உன் கதையை நான் சொல்லட்டுமா? நல்லசிவத்தின் கண்களில் கேலியும், கிண்டலும், ஏளனமும், ஒன்று சேர்ந்து கூத்தாடிக்கொண்டிருந்தன.

உண்மையைச் சொல்லணும்ன்னா, எனக்குத் தைரியம் இல்லையே; ராணி தன் தலை குனிந்திருக்க, நான் பெத்தப் புள்ளை, என் கதை தெரியாம, என் எதிரிலேயே, என் புருஷனையே மானம் கெட்டவன்னு சொல்லிட்டானே, மனதுக்குள் தன் கதையை யோசித்து யோசித்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனை கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள். ப்ளீஸ், இப்ப இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, அவள் பார்வை அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

"எதுக்கு இப்ப குடி முழுகிப் போன மாதிரி தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?" ராணி தன் கணவரின் அருகில் சென்று அவர் கையை, அவருடையத் தலையிலிருந்து விலக்கினாள்.

"ராணி நீ தெரிஞ்சே எரியற கொள்ளிக் கட்டையை எடுத்து உன் தலையைச் சொறிஞ்சுக்கறே...! உன் புள்ளைப் பாசம் உன் கண்ணை மறைக்குது! உன் புள்ளை மேல இவ்வளவு மோகம் நீ வெக்காதே! அவனை, அவன் வாழ்க்கையை நீயே கெடுக்காதே! ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில் நீங்க ரெண்டு பேரும் விளையாடாதீங்க. பெண் சாபம் நம்ம குலத்தையே எரிச்சுடும். உன் புள்ளைக்கு நல்லபடியா எடுத்துச் சொல்லி, அந்த தமிழ்செல்வனுக்கு போன் பண்ணி இவன் பண்ணது தப்புன்னு மன்னிப்பு கேக்கச் சொல்லுடி."

"..."



"யாருகிட்டவும் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் எனக்கில்லே?" சம்பத் அர்த்தமில்லாமல் எகிறினான்.

"நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க. திருதராஷ்ட்ரனும் புத்திர பாசத்துலத்தான் அழிஞ்சான்... தசரதனும் புத்திர மோகத்தாலத்தான் அழிஞ்சான்... நீயும் நானும் இவ்வளவு நாள் ஒண்ணா இருந்ததுக்கு ஒரு காரணம் உன் புள்ளையாலத்தாங்கறது உனக்கு நல்லாத் தெரியும். நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும். தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும். யாராலும் மாத்தவே முடியாத இயற்கையின் முதல் விதி இது.

நீளமாக பேசி முடித்த நல்லசிவம் எழுந்து அமைதியாக வரண்டாவிற்கு வந்தார். சற்று முன் உதறி எறிந்த செருப்பை மாட்டிகொண்டவர், கதைவைத் திறந்து, தன் பின்னால் வந்த ராணியைத் திரும்பிப் பார்க்காமல், குனிந்த தலையுடன் தெருவில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். ராணி தன் கணவனை தடுக்க முடியாமல், அவர் போவதை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 


No comments:

Post a Comment