Tuesday, 7 April 2015

சுகன்யா... 104

உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத்தொலைடா...'

நடராஜன் கோபத்தில் செல்வாவை நோக்கிக் கூவியதும், ரோஷத்துடன் கையில் கிடைத்த நாலு பேண்டையும், நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக் கொண்டு, வீட்டு வாசலில் தன் கையை இறுகப்பிடித்து தடுத்து நிறுத்திய தங்கை மீனாவின் பிடியையும் விருட்டென உதறிவிட்டு, தெருக்கோடியை அடைந்த செல்வா அதற்கு மேல் எங்கு போவது என புரியாமல் விழித்தான்.

வயிறு கபகபவென பசியால் எரிந்து கொண்டிருந்தது. சாப்பாடு தயாராக இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும் என சொல்லிய சுந்தரம் அய்யர் அவனைப்பார்த்து இதமாக சிரித்தார். சூடாக ஒரு காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்ததும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க, மேற்கொண்டு என்ன செய்வதென நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான் செல்வா.

பெரிய புடுங்கல் மாதிரி வீட்டை விட்டு கிளம்பிட்டே. சொந்த வீட்டை விட்டா, உரிமையா எந்த நேரத்துலேயும் உள்ள நுழையறதுக்கு இருக்கற இன்னொரு இடம் சீனுவோட வீடுதான். என் விஷயத்துல அனாவசியமா தலையிட வேணாம்ன்னு அவனோடவும் வம்பிழுத்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே.இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர்கிட்ட மரியாதையா பேசுடான்னு மீனா நேத்துதான் நோட்டிஸ் விட்டா; வெக்கத்தை விட்டுட்டு என்னடா மாப்ளேன்னு சீனு வீட்டு மாடியிலே போய் ஒரு மாசம் வேணாலும் படுத்துக்கலாம். ஆனா அங்கப் போனது நடராஜ முதலியாருக்கு தெரிஞ்சா, அடியே மல்லிகா, உன் ஆசைப்புள்ளை நம்ம சம்பந்தி வீட்டுக்கு போய் என் மானத்தை வாங்கறான்டீன்னு எக்கச்சக்கத்துக்கு அம்மாகிட்ட எகிறி எகிறி குதிப்பார். இருக்கற பிரச்சனை போதாதா?

லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கலாமா? இந்த ஏரியாவுல நாள் ஒண்ணுக்கு, சாதாரண அறைக்கே குறைஞ்சது ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு நெத்தியில பட்டை தீட்டி கழுத்துல கொட்டை கட்டிடுவானுங்க. செல்வாவின் மனது வரவு செலவு கணக்கு போட ஆரம்பித்தது.

பணம் போறது பெரிசு இல்லே; இந்த ஏரியாவுலே தெரிஞ்சவங்க யார் கண்ணுலயாவது பட்டுட்டா ஏன்டா இப்படீன்னு உயிரை வாங்குவானுங்க; அவனவன் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே தொண்டைத்தண்ணி வத்திப்போயிடும். மனம் போன போக்கில் செல்லை எடுத்து நோண்டினான் செல்வா.

வேலாயுதம்... நம்ப வேலாயுதத்தைப்போய் பாத்தா என்ன? அவனுக்கு இருக்கற கான்டாக்ட்ஸுக்கு ரெண்டு நாள்லே அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர் ஏரியாவிலேயே சீப்பா ஒரு ரூம் பாத்துக் குடுத்துடுவான். மனதுக்குள் ஒரு முடிவுடன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான்.

* * * *

"வாடா மச்சி.. வா... வா... மழை கிழை வந்துடப் போவுதுடா.."

முகத்தில் நிஜமான சந்தோஷத்துடன், பொய்யாக வானத்தைப்பார்த்துவிட்டு, உற்சாகமாக கூவினான் வேலாயுதம். ஃபிரிஜ்ஜ்லிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினான். செல்வாவின் தோளிலிருந்த பையைக்கண்டதும், சற்றே வியப்புடன் ஏற இறங்க அவனைப்பார்த்தாலும், அதைப்பற்றி உடனடியாக அவன் எதுவும் கேட்கவில்லை.

"தேங்க்ஸ்டா.. பேனைக் கொஞ்சம் வேகமாக்குடா வேலு..."

சோஃபாவில் சரிந்து வசதியாக உட்கார்ந்துகொண்ட செல்வா சோம்பலாக முனகினான். ஹாலை சுற்றி கண்களை சுழல விட்டான். வீடே நீட் அண்ட் க்ளீனாக எல்லாமே அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. ஒரு பொறுப்பான பெண்ணின் கைவண்ணத்தில் வீடு பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. கிச்சனிலிருந்து வெங்காயம், தக்காளி வதங்கும் வாசனை வந்து கொண்டிருந்தது.

"எப்ப மச்சி கல்யாண சாப்பாடு போடப்போறே?" வேலாயுதம் இளித்தான்.

"எனக்கு கல்யாணமும் இல்லே; உனக்கு கல்யாண சாப்பாடும் இல்லே..." தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியை வெறிக்க ஆரம்பித்தான் செல்வா.

"என்னா மச்சான்.. அபசகுனமா பேசறே?" வேலு அவன் கழுத்தை கட்டிக்கொண்டான்.

"நான் நேத்து காத்தால சாப்பிட்டதுதான்டா... ரொம்ப பசிக்குது... சாப்பிடறதுக்கு என்னடா இருக்கு? செல்வாவின் குரல் கலக்கமாக எழுந்தது.

"என்னடா பேசறே மச்சான்... வொயிட் ரைஸ் ரெடியாருக்குடா... அஞ்சு நிமிஷத்துல கத்திரிக்காய் சாம்பார் கொதிச்சிடும்.. மவராசனா சாப்பிடுறா..." செல்வாவின் பேச்சைக்கேட்டு ஒரு வினாடி விக்கித்துப்போன வேலாயுதம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், கிச்சனை நோக்கி ஓடினான்.

கோமதியோட சத்தத்தையே காணோமே? செல்வா மனதில் யோசனையுடன் எழுந்து வேலுவின் பின்னால் நடக்க ஆரம்பித்தான். வலது புறம் திறந்திருந்த பெட்ரூமில் அவன் பார்வை செல்ல, கட்டிலின் நடுவில் இளம் சிவப்பு நிற சேலையொன்று நீளக்கொடியாக கிடந்தது. கோமதியினுடையதாகத்தான் இருக்கவேண்டும். அவன் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டான் வேலு.

"மச்சான்.. கோமதி அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கடா... வர்றதுக்கு ஒரு பத்து நாளாகும். உன் தலையெழுத்து நீ என் கை சமையலைத்தான் சாப்பிட்டுத் தொலைக்கணும்..."

செல்வா மொகமே சரியில்லே. ஏதோ பிரச்சனையோட வந்திருக்கான். சாப்பிட்டு முடிக்கட்டும்... அப்புறமா நிதானமா என்ன ஏதுன்னு விசாரிக்கலாம். மனதில் எண்ணங்கள் ஓட வெள்ளையாகச் சிரித்துக் கொண்டே சாம்பாருக்கு தாளித்துக் கொட்டிய வேலாயுதத்தின் கன்னங்களில் சதை ஏறியிருந்தது. மெலிதாக தொப்பையும் விழ ஆரம்பித்திருந்தது.

"ஆளே பளபளன்னு இருக்கேடா... தொப்பை விழுது... கோமதி கை சாப்பாடு உன் ஒடம்புக்கு நல்லா செட்டாயிட்டாப்ல இருக்கு..." செல்வா சிரித்தான்.

"நம்பாளு சூப்பரா சமைப்பா மச்சான். கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனி வாட்டி உன்னைக் வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டேன்? நீதான் வரவேயில்லை. பத்து நாள் முன்னாடி கூட கோமதி உன்னை சுகன்யா கூட மார்கெட்ல பாத்தாளாம்."

செல்வா அவன் முகத்தை நேராக பார்ப்பதை தவிர்த்தான்.

"செல்வா... செல்வாங்கறீங்க... நல்ல ஃப்ரெண்டுன்னு வேற சொல்றீங்க... நம்ம மேரேஜ்க்கு அப்புறம் ஒரு தபா கூட நம்ம வீட்டுக்கு நீ வல்லியேன்னு கோம்ஸ் கூட ரெண்டு மூணு தரம் ஃபீல் பண்ணிருக்காடா..."

சுகன்யாவின் பேரை வேலாயுதம் சொன்னதும் செல்வாவின் முகம் சுருங்க, அவன் முகம் சுருங்கியதை, இவன் கண்கள் தவறாமல் படித்துக் கொண்டன.

சர்தான்... நம்ப மச்சான் செல்வா, சுகன்யா கூட தகறாரு பண்ணிக்கிட்டு வந்திருக்கான். பிகரு வெச்சிருக்கறவன் அத்தினி பேரும் தவறமா அட்சிக்கிறானுங்கப்பா. லவ் பண்றவனை ராடு வுடாத பொண்ணுங்களே இந்த ஊர்லேயே கிடையாதா? தானும் தன் மனைவி கோமதியும் காதலர்களாக இருந்த காலத்தில் வாரத்துக்கொரு முறை அடித்து பிடித்துக் கொண்டதெல்லாம் வேலாயுதத்தின் நினைவுக்கு வர அவன் சிரிக்க ஆரம்பித்தான்.

"வெல்லாயுதம்.. ஏன்டா சிரிக்கறே?"

"நீ பசியில இருக்கும்போது நான் எது சொன்னாலும் உனக்கு கோவம்தான் வரும். மொதல்லே சாப்பிடு மச்சான். அதான் பொட்டி படுக்கையோட வந்திட்டீல்லா? பொறுமையா சொல்றேன்..."

“ஹேய்... நக்கலா.. வாய் மேலேயே போடுவேன்..” செல்வாவின் முகம் சுருங்கியது.

“கோச்சிக்காதே மச்சான்...”

இரண்டு தட்டுகளில் சாதத்தை அள்ளி போட்டான். சாம்பாரை தளர தளர ஊற்றினான். வெந்தய வாசனை மூக்கைத் துளைத்தது. தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாயை ஜாடியிலிருந்து தாராளமாக வழித்து போட்டான் வேலு. பசி வேகத்தில் மொத்தமாக பரிமாறுவதற்கு முன்னரே அப்பளத்தை எடுத்து கடிக்க ஆரம்பித்தான் செல்வா. கையில் தட்டு வந்ததும் வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"சாம்பார் சூப்பரா இருக்குடா வேலு..." நண்பனை மனமார பாராட்டியவன் இன்னொரு கரண்டி சாம்பாரை எடுத்து தட்டில் ஊற்றிக் கொண்டான்.

"கோமதிகிட்ட கத்துக்கிட்டேன்டா..." வேலாயுதம் தன் பெண்டாட்டி புராணத்தை அன்று முழுவதும் நிறுத்தவேயில்லை. 

“இந்தாடா”

இரும்பு பீரோவிலிருந்து, சுத்தமாக துவைத்து வைக்கப்பட்டிருந்த லுங்கிகளில் ஒன்றை எடுத்து செல்வாவிடம் நீட்டிய வேலாயுதம் ஏர்கண்டீஷனரை ஓடவிட்டான். டபுள் காட்டில் சுவரோரமாக உருண்டு படுத்தவன், அவனையும் படுத்துக்கொள்ள சொன்னான்.

“வேணாம்டா... புருஷன் பொண்டாட்டி படுக்கற கட்டிலு... ஒரு பாயைக்குடு; இப்படியே நான் தரையில படுத்துக்கிறேன்.”

செல்வா கட்டிலில் படுக்கத் தயங்கினான். சுவரில் பதித்திருந்த ஸ்லேபில் வரிசைய் வரிசையாக புடவை மடிப்புகள் வீற்றிருந்தன. பிளாஸ்டிக் கயிற்றுக்கொடியில், ஹேங்கரில் மாட்டப்பட்ட ஒரு நைட்டியும், சல்வார் கமீசும் தொங்கிக் கொண்டிருந்தன. பாவாடை வரிசைகள், ஜாக்கெட்டுகள், அறையில் பெண்மையின் ஆதிக்கம் தூக்கலாக இருந்தது.

செல்வாவின் கையிலிருந்த லுங்கியிலிருந்து மெல்லிய பவுடர் வாசம் வந்து கொண்டிருந்தது.

"கோமதி... துணியெல்லாம் தொவைச்சு அதுமேல லேசா பவுடரை தூவிடுவா... வாசனையா இருக்குல்லே?" வேலாயுதத்தின் முகம் பெண்டாட்டியின் பெருமையைப் பேசிய போது பூவாய் மலர்ந்தது.

காதலிச்சு கட்டிக்கிட்டவளை ரொம்பவே தலை மேல தூக்கி வெச்சிக்கிறான். என் சுகன்யாவுக்கு முன்னாடி, இந்த கோமதியெல்லாம் நிக்க முடியுமா? செல்வாவுக்கு அவனுள் காரணமேயில்லாமல் ஏதோ புகைந்தது.

“மச்சான்... நடுகூடத்துல உக்கார வெச்சு நாளு கிழமையிலே எத்தனை தரம் உங்கம்மா எனக்கு சோறு போட்டு இருக்காங்க. வித்தியாசம் பாக்காதடா. உன் வூடு மாதிரி நெனைச்சுக்கோடா. ஃப்ரியா இரு மச்சான்...” வேலாயுதத்தின் குரலில் எல்லையில்லாத நட்பு வழிந்து ஓடியது.

“தேங்க்ஸ்டா...”

“நமக்குள்ள என்னடா மண்ணாங்கட்டி தேங்சு...?”

“ம்ம்ம்ம்...” செல்வாவும் படுத்தான். போம் மெத்தை அமுங்கி அவன் உடலை உள்வாங்கிக்கொண்டது.

“வீட்டுல கோச்சிக்கிட்டு வந்திட்டியாடா? உங்க நிச்சயதார்த்தம்தான் நல்லபடியா முடிஞ்சுப்போச்சே? இப்ப எதுனா புதுசா பிரச்சனையா? நீ வீட்டை விட்டு வந்தது உன் ஆளுக்குத் தெரியுமா?”

“ப்ச்ச்ச்... சுகன்யாவை நான் தலை முழுகி ஒரு வாரம் ஆச்சு... அவ இப்ப டில்லியிலே இருக்கா...”

“டேய்... நானும் பாக்கறேன்... நாக்குல நரம்புல்லாம பேசிகினே போறே? ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா சொல்றேன். நீ பேசறதெல்லாம் சுத்தமா நல்லால்லே. மப்புல இருக்கறவன் கூட இப்டீல்லாம் பேசமாட்டான்டா.” வேலு சட்டென அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தான்.

“எனக்கு ஒரு ரூம் வேணும்டா.” செல்வா முனகினான்.

“நான் உனக்கு ரூம் பாத்துக் குடுத்தேன்னு சீனுவுக்கு தெரிஞ்சா அவன் என்னை செருப்பால அடிப்பான்...”

“வேலு.. இப்போதைக்கு இங்க நான் இருக்கறது யாருக்கும் தெரியவேணாம்...”

“தண்ணியில உக்காந்துக்கிட்டு ஒருத்தன் குசு வுட்டானாம். அந்தக் கதையா இருக்குதுடா நீ பேசறது. இன்னிக்கு ஈவினிங்குள்ள தல உன்னைத் தேடிகிட்டு இங்க வந்து என் தலையை உருட்டலே, நீ என் பேரை மாத்தி வெய்டா...”

“என் விஷயத்துல தலையிடாதேன்னு நேத்தே அவனுக்கு வார்னிங் குடுத்துட்டேன். என்னைத் தேடிக்கிட்டு எவனும் இங்கே வரமாட்டான்.”

ஸ்ப்ளிட் ஏஸி அந்த சின்ன அறையில், சத்தமில்லாமல், வெகு அருமையாக வேலை செய்து கொண்டிருந்தது. செல்வா போர்வையை எடுத்து போத்திக்கொண்டான்.

“சீனுவும், நீயும், உங்க சொந்த வாழ்க்கையிலே மாமன், மச்சான் ஆவப்போறிங்க. உங்க வெவகாரத்துல நான் குறுக்கே வர்லே. நீ என் வூட்டுல பத்து நாளு இரு; பத்து மாசம் இரு; ஆனா உள்ளூர்ல அப்பன், ஆத்தா தங்கச்சின்னு எல்லாரும் இருக்கும் போது தனி ரூம் பாக்கற வேலைல்லாம் நல்லதுக்கு இல்லே. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்...!” வேலாயுதத்தின் முகம் கல்லாக மாறியிருந்தது. “வேலு... ஏ.சீ. ஃபிரிஜ்... வாஷிங் மெஷின்.. அது இதுன்னு உன் வீடே ஏகத்துக்கு தடபுலா இருக்கே? மொத்தமா இவ்வளவு பைசா ஏதுடா?” வேலாயுதம் போட்டுக்குடுத்த காஃபியை குடித்துக் கொண்டே செல்வா சிரித்தான்.

“ம்ம்ம்... புது பைக்கை வுட்டுட்டியேடா? எல்லாம் மாமியார் வாங்கிக்குடுத்தது மச்சான். அவங்க சேவிங்ஸ் மொத்தத்தையும் எனக்கு மொய் எழுதிட்டாங்க...” அவனும் இவனுடன் சேர்ந்து சிரித்தான்.

“கோவில்ல உன் மேரேஜ்ன்னைக்கு, நீ நல்லாயிருப்பியாடான்னு, மண்ணை வாரி வாரித் தூத்தினாங்க..”

“அது பழைய கதை மச்சான். லேடீஸ் மனசை, நம்ம ஈகோவால நாம புரிஞ்சிக்கறதே இல்லே. என் மாமியார் சைக்காலஜியை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன். வசதியா, சொகமா இருக்கேன்.” ஹோவென சிரித்தான் வேலாயுதம்.

"என்னடா சொல்றே?" ஈகோ, கீகோங்கறான். என்னைப்பத்தி பேசறானா? செல்வாவின் முகம் சட்டென விழுந்தது.

"உன் மேல உயிரையே வெச்சிருந்த சுகன்யா, உனக்கு பிடிக்காதவன் கிட்ட செல்லுல பேசினான்னு அவளை சந்தேகப்பட்டியே? அதுக்கு பேரு என்னடா? நான் சொல்றேன். அதுக்கு பேருதான் ஈகோடா. நாம பண்ணது தப்புன்னு தெரிஞ்சா சட்டுன்னு சம்பந்தபட்டவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடணும்."

வேலாயுதம் தன் விரல் நடுவிலிருந்த சிகரெட்டை நீளமாக இழுத்து ஊதினான். செல்வா அவனுக்குப் பதிலேதும் கொடுக்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோமதியோட அம்மா தன் பொண்ணை எவ்வளவு ஆசையா வளர்த்து இருப்பாங்க; அவங்க மனசுல அவளைப்பத்திய கனவுகள் என்னன்ன இருந்திருக்கும்? ஒன் பைன் மார்னிங், எனக்கு அவளை புடிச்சிருக்குன்னு, அவளை என் வீட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டா, அவங்க அதை ஒத்துப்பாங்களா?"

"கோம்ஸும்தானே உன்னை லவ் பண்ணா?"

"இருக்கலாம்...."

"அப்புறம் என்னா?"

"நான் விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நான் என் ஈகோவை திருப்தி படுத்திக்கிட்டேன். கோமதியும் தன் ஆசைதான் முக்கியம்ன்னு அவங்க வீட்டைவிட்டுட்டு என் பின்னாடி வந்துட்டா. இதை ஒரு தாயோட ஆங்கிள்லேருந்து பாருடா மச்சான்.."

"அவங்களுக்கு புடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ணி, அவங்க மனசை, நாங்க ரெண்டு பேருமே புண்படுத்திட்டோம் இல்லையா? புருஷன் இல்லாம தன் பொண்ணை வளர்த்து படிக்க வெச்ச பொம்பளைக்கும் ஈகோ இருக்குமில்லே?" தன் கையிலிருந்த சிகரெட் துணுக்கை வீசியெறிந்தான் வேலு.

"ம்ம்ம்..."

"நாளைக்கு எங்க பொண்ணு இதே காரியத்தைப் பண்ணா; எங்க மனசு எவ்வளவு பாடு படும்?"

"வேலு... என்னடா நீ இன்னைக்கு என்னன்னமோ பேசறே?"

"ஆமாம் மச்சான்.. சுகன்யா கழுத்துல தாலியை கட்டிட்டு அவகூட ஒரு ஆறுமாசம் நீ குடும்பம் பண்ணதுக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் பேசுவே.. கோமதி இப்ப தலைமுழுகாம இருக்காடா..."

"கங்கிராட்ஸ்டா..." செல்வா அவன் கையை குலுக்கினான்.

"கோமதி கன்சீவ் ஆனதும், ரொம்பவே வாந்தி வாந்தின்னு கஷ்டப்பட்டா; வீட்டுல சிகரெட் பிடிக்கறதைக்கூட நான் நிறுத்திட்டேன். தண்ணியடிக்கறது அவளுக்கு பிடிக்கலேன்னு அதையும் விட்டுட்டேன்; இந்த விஷயத்துல உன் தங்கச்சி மீனா எனக்கு ஒரு தரம் பெருசா ராடு வுட்டுட்டாப்பா..."

"சீனு சொன்னான். ஆனா இப்ப நீ சிகரெட் பிடிச்சே?"

"நீ வந்திருக்கே... மனசு சந்தோஷமா இருக்கு... பத்து நாள் கழிச்சு இன்னைக்குத்தான் புடிச்சேன்.. இதோட என்னைக்கு புடிப்பேனோ...?"

"அப்புறம்..?"

"மிஸ்டர் உன் பொண்டாட்டி மனசுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு... அது என்னன்னு கேட்டு தீத்து வைங்கன்னு ஒரு கைனகாலஜீஸ்ட் சொன்னா..."

"ம்ம்ம்"

"என்னம்மா கோம்ஸுன்னேன்? எங்கம்மாவை பாக்கணுங்க; அவங்க கையால ஒரு வாய் சாப்பிடணுங்கன்னு அழுதா..."

"ஓ மை காட்..."

"ராத்திரி பத்து மணி.. கால்லே செருப்பு கூட இல்லாம, இடுப்புல லுங்கி, மார்லே சட்டையோட, என் மாமியார் வூட்டு கதவை தட்டினேன்... எங்கடா வந்தே நாயேன்னாங்க?"

"காட்..."

"அத்தே.. உங்க பொண்ணை நான் என்னால முடிஞ்ச அளவுக்கு, சந்தோஷமாத்தான் வெச்சிக்கிட்டு இருக்கேன்... ஆனா இப்ப அவளுக்கு உடம்பு சரியில்லே. உடனே நீங்க வந்து அவளைப் பாக்கணும்; அப்புறமா என்னை எதுவும் குத்தம் சொல்லிடாதீங்கன்னு ஒரு பிட்டு போட்டேன்."

"என் பொண்ணுக்கு என்னடா ஆச்சு? அவளை கொன்னே போட்டுட்டியாடா குடிகார நாயேன்னு என் தலை மயிரை புடிச்சி உலுக்கு உலுக்குன்னு உலுக்கிட்டாங்கப்பா..."

"அத்தே.. அவ மூணு மாச கர்ப்பமா இருக்கா... கடைசியா உங்களை ஒரு தரம் பாத்துடணும்ன்னு ஆசை படறா... நீங்க இப்பவே வந்தாகணும்ன்னு அவங்க கையை பிடிச்சிக்கிட்டு, மூஞ்சை உம்முன்னு வெச்சிக்கிட்டு, குரலை இழுத்து இழுத்து பேசி, சின்னதா ஒரு ஃபிலிம் காட்டினேன்..."

"கிங்குடா நீ..." செல்வா சிரித்தான்.

"துணைக்கு நம்ப தோஸ்த் ஆட்டோக்கார தியாகுவையும் கூப்பிட்டுக்கிட்டு போயிருந்தேன். என் மாமியார் குய்யோ மொறையோன்னு கூச்சப்போட்டுகிட்டு வீட்டுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடினாங்க. ராத்திரி நேரத்துல கூச்சலைக் கேட்டு பக்கத்து வூட்டு காரனுங்க எட்டிப்பாக்க ஆரம்பிச்சிட்டாங்க."

"தகராறு எதாவது ஆயிடிச்சா?"

"நான் என்னா பண்ணேண்? என் மாமியாரை, சட்டுன்னு அப்படியே அலேக்காத் தூக்கி ஆட்டோவுல போட்டுகினு நம்ப வூட்டுக்கு வந்துட்டேன்..."

"கில்லாடிடா நீ..."

"எல்லாம் உன் மச்சான் சீனுவோட திரைக்கதை, வசனம் டைரக்ஷ்ன்தாம்பா... அவன் சொல்லி குடுத்த மாதிரியே ஆக்டிங் குடுத்தேன்." வேலு தன் 'தல'யை மனதுக்குள் நன்றியுடன் நினைத்துக்கொண்டான்.

"ஒரு பொண்ணு என்னைக் காதலிச்சி, நான்தான் முக்கியம்ன்னு என் பின்னாடி வந்தா பாரு; அவ சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்டா செல்வா... அவளுக்காக நான் என்னா வேணா பண்ணுவேன்... யார் கால்லே வேணா விழுவேன்." மிடுக்காக வேலு பேச பேச, செல்வாவின் முகம் இலேசாக கருத்தது. 

"கால்லே விழுந்தியா? யார் கால்லே விழுந்தே?"

"வீட்டுக்கு வந்ததும்.. என் பொண்டாட்டி கோமதி முழுசா எழுந்து வந்து வூட்டுக்கதவை தொறந்தா, என் மாமியார் என்னை பெண்டு எடுக்க மாட்டாங்களா?" வேலு கெக்கேபிக்கே என சிரித்தான்.

"அப்றம்..."

"இங்க குந்திகினு இருக்கோமே இதே எடம்தான்... நீள நெடுக அவங்க கால்லே விழுந்துட்டேன்... அத்தே என்னை மன்னிச்சுடுங்க... நான் பண்ணது தப்புதான்... உங்களுக்கு இஷ்டம் இல்லாம, உங்ககிட்ட சொல்லாம கொள்ளாம, உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

"ம்ம்"

"இப்ப என் பொண்டாட்டி வவுத்துல இருக்கற என் புள்ளை பொழைக்கணும்... கொஞ்சம் நாள் நீங்க என் கோமதிக்கு பொங்கிப் போடணும்... உங்களுக்கு என் மேல கோவம்ன்னா என்னை இப்படியே மிதிங்க... ஆனா உங்க ஆசைப்பொண்ணை தண்டிக்காதீங்கன்னேன்.""அவ்ளோதான் மச்சான். அவங்க கால்லே என் கை பட்டதும்... ஆடிப்போயிடாங்க என் மாமியாரு... எழந்திருங்க மாப்பிளேன்னாங்க...! என் பொண்டாட்டியை தன் மடிலே போட்டுகினு, ஆத்தாளும் பொண்ணும், ராத்திரி பூரா ஒரே பாசமழையா பொழிஞ்சிக்கிட்டாங்க..."

"குட்..."

"எனக்கொரு பாய் தலையணையை குடுத்து ஹாலுக்குத் தொரத்திட்டாங்க... இங்கே மாமியார் இருந்த ஒரு வாரம் நான் என்னுதை கையிலதான் புடிச்சிக்கிட்டு கிடந்தேன்."No comments:

Post a comment