Saturday 21 March 2015

சுகன்யா... 67

தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ராகவனை எழுப்பிய அவன் பாட்டி, பஞ்சு குவியலாக கிடந்த ஐந்து நாள் குழந்தையை அவன் மடியில் கிடத்தினாள்.

'உன் தங்கச்சி பாப்படா... கெட்டியாப் புடிச்சுக்கோ... சொல்லுடா பாப்பாவுக்கு என்ன பேரு வெக்கலாம்' ராகவனைப் பார்த்து பொக்கை வாயை திறந்து சிரித்தாள் கிழவி.

"பாட்டீ... இந்த குட்டிப்பாப்பா.. இனிமே நம்ம வீட்டுலதான் இருக்குமா? ஆஸ்பத்திரியிலேருந்து காசு குடுத்து வாங்கியாந்துட்டீங்களா?" முகத்தில் பொங்கும் வியப்புடன் கேட்டான் ராகவன்.

"ஆமாம்... உன் பொம்மையெல்லாம் இனிமே இவளுக்குத்தான்... குடுப்பியா... அப்பத்தான் உன் கூட விளையாடுவா... உன் கூட பேசுவா... சிரிப்பா... ஓடிவருவா..."

"ம்ம்ம்... குடுப்பேன்... பாட்டீ... பாப்பாவை எத்தினி ரூபா குடுத்து வாங்கீனீங்க..." கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.

"ஏண்டா...?" பாட்டி திகைத்தாள்.

"என் உண்டீலே பத்து ரூபா வெச்சிருக்கேன்.. எனக்கு இன்னொரு தங்கச்சிப் பாப்பவும் வேணும் பாட்டீ.. நானும் நீயும் போய் வாங்கிட்டு வரலாமா?"
குழந்தை ராகவனின் பேச்சைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அப்போது அவனுக்குப் புரியவில்லை



"பாப்பா அழகா இருக்காளாடா...?" பெற்றவள், தன் மகனை ஒரு கையால் இழுத்து தன் பால் வடியும் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பாப்பா மேல் அடித்த பால் வாசனை அம்மா மேலும் அடித்தது. ராகவன் தன் தாயின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"பாப்பா... உன்னாட்டாமே செவப்ப்பா அழகா இருக்காம்மா... மெத்து மெத்து இருக்காம்மா... கண்ணைத் தொறந்து என்னைப் பாக்க மாட்டாளா... அம்மா... பாப்பாவுக்கு உஷான்னு பேரு வெக்கலாம்மா..."

"உஷாங்கறது யாருடா?" பக்கத்தில் நின்றிருந்த அப்பா உரக்கச் சிரித்தார்.

"ஒண்ணு 'பீ' செக்ஷன் லீடர் பேருப்பா..." சிறுவன் ராகவன் முகத்தில் பெருமிதமும் வெட்க்கமும் கலந்திருக்க, கலகலவென சிரித்தான்.."

குழந்தை உஷா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டாள். இருபத்து இரண்டு வயதில் அழகிலும், குணத்திலும், பத்தரை மாத்து தங்கமாக ஜொலித்தாள் உஷா. படிக்கும் காலத்தில், பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எப்போதும் முதல் ரேங்கில் வருவது அவள்தான்.

பேச்சு போட்டியில், பாடுவதில், கவிதை எழுதுவதில் முதலிடம் அவளுக்குத்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரியில் முதல் ரேங்க் வாங்கினாள். பட்டம் வழங்கும் விழாவுக்கு டில்லியிலிருந்து வந்த பிரதமரிடமிருந்து கோல் மெடல் வாங்கிக்கொண்டாள். மறு நாள் ஹிண்டுவில் அவள் போட்டோவைப் பார்த்த குடும்பம் மொத்தமும் பூரித்துப்போனது. பெண்ணை தலையில் வைத்து கொண்டாடியது.

டாக்டர் ராமகிருஷ்ணன், டெல்லி யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அஸிஸ்டன்ட் புரொஃபஸராக இருந்தவன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பத்து நாள் லீவில் மெட்ராஸ் பெற்றவர்களைப் பார்க்க வந்திருந்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடந்த இரசயானம் சம்பந்தமான கண்காட்சியில் பட்டாம்பூச்சியாகத் திரிந்த உஷாவைப் பார்த்தவன், தன் மனதை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமால், அவள் முகஅழகிலேயே பறிகொடுத்தான்.

உஷாவின் வீட்டு முகவரியை எங்கிருந்து, எப்படி சேகரித்தானோ... அவளைப் பார்த்த இரண்டாவது நாள் வீட்டுப் பெரியவர்களுடன் உஷாவின் பெற்றொர்கள் முன் வந்து நின்றான். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என ஒரு காலில் நின்றானாம், கிருஷ்ணன். இருவரின் இனமும் ஒத்துப்போயிருந்தது. அவர்கள் மனமும் ஒத்துப் போனது. எல்லாம் காஞ்சி வரதனின் அனுக்கிரகம் என மனதுக்குள் மகிழ்ந்தாள் உஷா. ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனசில் குதுகலமானான் ராகவன்.

பத்து நாளில், உஷாவை நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடந்து, சாந்திக்கல்யாணத்தையும் முடித்துக்கொண்டு, பெரியவர்களின் ஆசியுடன் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிப் பறந்தான், கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு எல்லாவற்றிலும் அவசரம். எட்டுமாதத்தில் பிறந்தவனாம் அவன். அவசரமாக கார் வாங்கினான். அவசரமாக பிறந்த ஊரில் உஷாவின் பெயரில் வீடு வாங்கினான். தன் பெயரில் பேங்கில் இருந்த பிக்சட் டெப்பாஸிடுகளை, ரொக்கத்தை மனைவியின் பேரில் மாற்றினான். கட்டிய மனைவியிடம் இரவு பகல் என்று இல்லாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிருஷ்ணன் ஒரு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டவில்லை. பிள்ளை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளிப்போட்டான். உஷா வெட்கத்தைவிட்டு 'எனக்கு குழந்தை வேணுங்க...' கேட்டவளிடம் ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா இருப்போமே என்று சிரித்தானாம்...! பாவி... பாவி..!!?

கான்பூரில் மீட்டிங் என்று காலையில் சிரித்துக்கொண்டே, தெரு வாசலில் மனைவியை முத்தமிட்டுவிட்டு போனவன் மீண்டும் வீட்டுக்குள் கால் வைக்கவில்லை. நடு ஆகாயத்தில் தீயை முத்தமிட்டு இருக்கிறான். அன்று எதிர்பாராமல் வெடித்து சிதறி, எரிந்து விழுந்த, விமானத்தில் அவனும் பயணம் செய்தானாம். இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன தன் மைத்துனனின் முகம் இப்போது ராகவனின் நினைவுக்கு வரவில்லை.

அவன் குரலும், பேச்சுகளும், மட்டும் பசுமையாக ராகவனின் மனதில் இன்றும் அழியாமல் இருந்தது. அவனை எப்போது நினைத்தாலும் ராகவனின் மனதுக்குள் மட்டுமல்லாமல், கண்களிலும் இன்றும் கண்ணீர் ததும்பிவிடும். கடைசியா அவன் முகத்தைக்கூட ஆசைத் தீரப்பாக்க குடுத்த வெக்கலையே? கிருஷ்ணங்கறவனை, சாம்பலா, கரியாத்தானே, மூட்டையாத்தானே கட்டி கொடுத்தானுங்க.. இதுக்குத்தான் இப்படி அவசரப்பட்டியாடா பாவி... கிருஷ்ணனை மனதுக்குள் திட்டுவான், ராகவன்.

கிருஷ்ணா.. கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல எங்க வீட்டுக் கொழந்தையை தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படீடா மனசு வந்தது? ராகவன் அழுது அழுது புலம்பினான். ஒரு வருடம் தன் மனைவி பத்மாவிடம் கூட மனம் விட்டு அவன் பேசவில்லை.

"பத்மா.. உஷா இனிமே நம்ம வீட்டுலதான் இருப்பா... இவ என் தங்கச்சி இல்லே... இனிமே உன்கூடப் பொறந்தவன்னு நினைச்சுக்கோ..." ராகவன் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். ஒரு வார்த்தை பேசாமல், பத்மா, தன் கணவன் ராகவனின் கண்ணைத் துடைத்தாள். தன் தோளுடன் தன் கணவனை அணைத்துக்கொண்டாள். பத்மாவை தன் மறு தோளோடு இறுக்கிக்கொண்டாள்.

இன்று வரை உஷாவுக்கும், பத்மாவுக்கும் நடுவில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த புகைச்சலும் வந்ததேயில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததை ராகவன் என்றுமே பார்த்ததில்லை. இன்று வரை அந்த வீட்டில் எந்த விஷயத்திலும் உஷாவின் முடிவைக் கேட்க்காமல் எந்த காரியமும் நடந்ததில்லை. உஷாவின் மடியிலும், தோளிலும், மார்பிலும்தான், வளர்ந்தான், ராகவனின் பிள்ளை.

ராகவன் மாநிறம். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக இருக்கும் சிவந்த முகத்தில் இனிமையான புன்னகையின் கீற்று படர்ந்திருக்கும். தினமும் தவறாமல் சவரம் பண்ணிக்கொள்வதால், தாடையின் மழமழப்பில் கரும் பச்சை வெயிலில் மின்னும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது கருப்பு வண்ண கூலிங் கிளாஸ் முகத்தில் குடியேறும்.

ராகவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவருடன் குடித்தனம் பண்ண வந்த, இளம் பெண் பத்மாவுக்கு தன் கணவர் மீசையோடு இருந்தால் இன்னும் அழகாக இருப்பார் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

'ஏன்னா... மீசை வெச்சுக்கோங்களேன் நீங்க..' தனித்திருக்கும் போது தன் மனசின் ஆசையை கட்டிக்கொண்டவனிடம் ரகசியமாகச் சொல்லிப்பார்த்தாள். மனைவியின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்த ராகவன், தன் மூக்கின் கீழ், உதடுகளுக்கு மேல், கரு கருவென மீசையை மட்டும், வளர்த்து அவள் ஆசையை நிறைவேற்றவில்லை.

“பத்து... அப்பா இருக்கற வரைக்கும் இந்த ஆசையை மனசுக்குள்ளவே வெச்சிக்கோடீ... என் மூஞ்சியிலே மீசையை அவர் பாத்தார்... ஆத்தை விட்டே என்னையும், உன்னையும் சேர்த்து, அடிச்சித் தொரத்திடுவார்..” ராகவனுக்கு பெற்றவரிடம் அத்தனை பயம். தகப்பன் உயிரோடு இருந்த வரை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசினவர் இல்லை.

தகப்பனார் வைகுண்ட வாசத்தை அடைந்தவுடன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒரு முறை மீசை வளர்த்தார். மீசை வெள்ளையும் கருப்புமாக வளர, 'வேண்டாங்க.. மீசை இல்லாமலே நீங்க அழகா இருக்கீங்க' ஆசைப்பட்ட பத்மாவே கிண்டல் பண்ண, விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடு என அவர் மனதுக்குள் திருப்தியடைந்தார்.

கறுப்பு மெட்டல் பிரேமில் மூக்குக் கண்ணாடி. மீசை இல்லாம, நெத்தியில திருசூர்ணத்தோட வெள்ளை சட்டை போட்டு இருப்பார் அவர்தான் ராகவன். நல்ல மனுஷன். அவர் கிட்ட போங்க, உங்க பிராப்ளம் எல்லாத்தையும் நொடியில சால்வ் பண்ணிடுவார், அவர் சீஃப் மேனஜாராக இருந்த பாங்க் கிளையில் அவருடைய அடையாளம் இதுதான்...

ராகவன் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவார். நெருங்கிய உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அவர் கீழப்பந்தல் நாராயண ஐயங்கார். மற்றவர்களுக்கு அவர் வெறும் ராகவன். ராகவன் என்பது படிக்க ஆரம்பித்த காலத்தில் பள்ளிக்கூடத்திற்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர்.

உயரத்துக்கு ஏற்ற கனம். வெய்யிலோ, குளிரோ, கால வித்தியாசமில்லாமல், எந்த காலத்திலும், வீட்டில் எட்டு முழ வேஷ்டி, கை வெச்ச பனியன் என்றுதான் எளிமையாக இருப்பார். அவர் அருகில் சென்றால், மஞ்சளின் வாசமும், துளசியின் நறுமணமும் வீசும். சனிக்கிழமைகளில் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தவறாமல் பெருமாளைத் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

தனித்திருக்கும் போது வாயில் திருவாய்மொழியும், ஆண்டாள் பாசுரங்களும் முனகலாக வந்து கொண்டிருக்கும். ஒரு கைப்பிடி புளிசாதத்திற்கும், ஒரு தொன்னை நெய் வழியும் வெண் பொங்கலுக்கும், பெசண்ட் நகரில், தன் உழைப்பில், தான் கட்டிய மாடி வீட்டையும், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடத்தையும், மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார்.

புளியோதரையிலும், வெண்பொங்கலிலும் மட்டும் அந்த அளவுக்கு அவருக்கு ருசி, விருப்பம், ஏன் ஒரு வெறி என்றே கூடச்சொல்லலாம். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எந்த பெரிய ஆசை, லட்சியம், கனவு என்று இல்லாமல், தன் மனைவி, தன் தங்கை உஷா, தன் ஒரே மகன் என்ற நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருபவர், ராகவன்.

லயோலா காலேஜ் பாஸ் அவுட். கல்லூரியில் முதல் பெஞ்சில்தான் உட்க்காருவன் ராகவன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன். கல்லூரி மாணவர்களுக்கே உரிய அதீத ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. சிகரெட்டை கனவிலும் கையால் தொட்டதில்லை.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ‘தண்ணி அடித்தல்’ என்ற சொற்களைக் கேட்டால், காத தூரம் ஓடுவார். 'அவன் தயிர்சாதம்டா" சக மாணவர்களின் கிண்டலைப் பற்றி கவலைப் பட்டடே கிடையாது.

காலையில் எழுந்ததும், ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும் ராகவனின் பிள்ளை, ஆசை புதல்வன், அவரின் ஒரே வாரிசு, தன் பதினெட்டாவது வயதில், தெரு முனை பெட்டிக் கடைக்கு பின்னால் நின்று கொண்டு, ஸ்டைலாக சிகரெட்டை உதடுகளில் கவ்வி, மூக்கு, வாய், உதடு என புகையை வெளியேற்றி அக்னி ஹோத்திரம் பண்ண ஆரம்பித்தான்.

தன் குலத்திலேயே முதலாவது ஆளாக, தன் வாரிசு சிகரெட் பிடிப்பதை முதல் முறையாக கண்ணால் கண்டவர், பிடிக்காமல், மனதுக்குள் புழுங்கினார். கோபத்தில் குமைந்தார். தங்கையிடமும், தாரத்திடமும் தான் கண்டதைச் சொல்லி சொல்லி மருகினார். ஒரு வாரம் மகனிடம் பேசவில்லை. ஆனால் தன் பொறுமையை இழக்கவில்லை.

'அவன் புகை விடறதை பாத்துட்டு சும்மாவா வந்தீங்க..?' பெற்றவள் பத்மா கொதித்தாள்.

'தோளுக்கு மேல வளந்தவன் அவன்; என் தோழன் அவன்; அவனை எப்படி நான் அடிச்சிப் புத்தி சொல்றது?' ராகவன் மனைவியிடம் வாதம் செய்தார்.

'நெடுக வளந்துட்டாலும் அவன் இன்னும் குழந்தைதானே... அறியாத பருவம், புரியாத வயசு, கூடாத நட்பு, தப்பு பண்ணிட்டான். என்னப்பண்றது...?விளையாட்டாப் பண்ணாலும், உடம்பைக் கெடுத்துக்கறானே, நான் அவனுக்கு புத்திசொல்றேன்...'

உஷாதான் அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் பஞ்சாயத்து பண்ணி வைத்தாள். அப்பாவிடம், அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், 'சாரி' சொன்ன பிள்ளை, தெரு முனைக் கடையை விட்டு விட்டு, நாலு தெரு தள்ளி சென்று, கண் மறைவாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது.

பிள்ளையின் இருபத்து நான்காவது வயதில், அவனே சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், தன் மகன் ‘தீர்த்தவாரியும்’ நடத்த ஆரம்பித்துவிட்டான், அதோடு நிற்காமல், 'ஜலகீரிடையின்" போது ஊர்வன, பறப்பன என்று எந்த பேதமுமில்லாமல், கண்டதை தின்னவும் தொடங்கிவிட்டான் என்று தெரிய வந்தபோது, ராகவனின் மனம் கனத்தது.

'இதெல்லாம் நல்லதுக்கு இல்லே... நம்ம குடும்பத்துல யாரும் இந்த காரியங்களை இதுவரைக்கும் பண்ணதில்லே... குடும்ப பழக்கம் வழக்கமின்னு இருக்கு... அதை பிடிக்கலைன்னாலும், கடைபிடிச்சுத்தான் ஆகணும்' ஒரு நாள் பதட்டமில்லாமல், நிதானமாக பிள்ளையை நடுக்கூடத்தில் உட்க்கார வைத்து பிள்ளைக்கு புத்தி சொன்னார்.

'எல்லாத்துக்கும் ஒரு உபதேசம்... உங்கக் கட்டுப்பாடு, உங்க லெக்சர் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. நானும் படிச்சிருக்கேன்... நானும் சம்பாதிக்கறேன்.. என் கைக்காசை போட்டு குடிக்கறேன்... உங்க பேரு கெட்டு போவுதுன்னு நீங்க நெனைச்சா, நான் வீட்டை விட்டேப் போயிடறேன்..' பிள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது...

'டேய்... யாருகிட்ட என்னப் பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுடா' அத்தை உறுமியதில் அந்த நேரத்துக்கு அடங்கியது.

இதற்கு மேல் தன் பிள்ளையிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் நினைத்தார். தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, இனி அவனிடம் பேசுவதில்லை என்று மனசுக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. அப்பனும் பிள்ளையும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது இல்லை. இந்த முடிவால் மனம் நொந்து போனவர்கள் பெற்றவளும், வளர்த்தவளும்தான்.

அண்ணா... இது தப்பு... பெத்தவனும், பிள்ளையும், இப்படி பரம வைரி மாதிரி ஒரே வீட்டுல இருந்துகிட்டு ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசாம மொறைப்பா இருந்தா எப்படீ? பேசாம இருந்து அவனை நீங்க கொல்றதைவிட, கூப்பிட்டு ரெண்டு அறை விடுங்க அண்ணா... அப்படியாவது அவன் திருந்தட்டும்... உஷா அண்ணணுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 


ராகவன் ஒரு கருங்கல். எல்லா விஷயத்திலும் கல்லைப் போல் பொறுமையைக் கடைபிடிப்பவர்.

'பத்மா ... உன் பிள்ளையை நான் அடிச்சு அதனால அவன் திருந்தக்கூடாது. அவனா உணர்ந்து திருந்தணும்...'

ஒரு வரியில் பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டார். இது அவரது போக்கு. இந்த கருங்கல்லுக்கு என்னைக்கு கோபம் வர்றது...? என்னைக்கு எங்கப் புள்ளை திருந்தறது...? பத்மாவும், உஷாவும் தங்களுக்குள் உருகிக்கொண்டார்கள். மருகிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நியமம் இருக்கிறது. ஒரு தர்மம் இருக்கிறது. அந்தந்த காரியங்களை அந்தந்த முறையில்தான் செய்யணும் என்று நம்புபவர் ராகவன்.

"உஷா, என் பிள்ளையை சிகரெட் பிடிக்காதே, குடிக்காதேன்னு, நான் சொல்றது என் பேரு கெட்டுப்போகுதுன்னு இல்லே..'

'ம்ம்ம்..."

'நான் சொல்றது எல்லாத்தையும் அவன் நம்ம மதத்தோட சம்பந்தபடுத்திப் பாக்கறான்; நம்ம குலத்தவர்கள் சொல்லிக்கற போலியான, பாசாங்கான பெருமைன்னு அவன் நினைக்கறான்; நாம் கும்பிடற பெருமாளோட சம்பந்தப் படுத்திக்கறான்..'

"என்னச் சொல்றீங்க...எனக்குப் புரியலே" பத்மா முகத்தில் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

'நான் சொல்றது மதத்தோட சம்பந்தப்பட்டது அல்ல. என் குலத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அவனோட உடலோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய தினசரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. வருங்காலத்துல அவனுடைய இல்லற வாழ்க்கையோட தொடர்பு கொள்ளப்போவது..."

"அண்ணா.. உங்க வயசுக்கு இருக்கற முதிர்ச்சியை இருபத்து மூணு வயசு பிள்ளைகிட்ட, எதிர்பாத்தா முடியுமா?" உஷா அவரை சமாதானப்படுத்திப் பார்த்தாள்.

"கண்ணு... உஷா... நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டவ, ஒரு ஆம்பளை கூட வாழ்ந்தவ... நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு நல்லாப்புரியும்... இவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்ட போவான்.. அவ இவன் வாய்லேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தை தாங்க முடியாம, மூஞ்சை திருப்பிக்குவா... அங்கதான் ஆரம்பிக்கும் குடும்பத்துல பிரச்சனை... இதையெல்லாம் நான் இவன் கிட்ட இப்ப பேச விரும்பலை...

"அண்ணா...."

"அவன் உன் மடியிலே வளந்தவன்... கொஞ்சமாவது உன் பேச்சைக் கேக்கறான்... அவனுக்குப் புரியறமாதிரி சொல்லு... எனக்கென்ன அவன் கிட்ட விரோதம்...?"

பிள்ளைக்கு அம்மாவை விட அத்தையின் மேல் கொள்ளைப் பிரியம். பாசம். உயிர். உஷா முகம் சுருங்கி ஒரு முறைப் பேசினால், நாற்பது தடவை அவளிடம் மன்னிப்பு கேட்க்கும், பிள்ளை.

சமையலறையில் சென்று இடுப்பைக் கட்டிக்கொள்ளும்.. கொல்லையில் சென்று அத்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்.. அத்தே... இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன்... என் கிட்ட பேசு அத்தே... பிள்ளை குழைவான்.. கெஞ்சுவான்... மிஞ்சுவான்... உஷாவும் கடைசியில் அவன் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் மசிந்து விடுவாள்.

பிள்ளைக்கு இன்று இருபத்தாறு வயசாகிறது. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமே...! நேரில் அவனைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கொள்ளும் ராகவன், அவன் நகர்ந்ததும், பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து, அவன் வளர்ச்சியைப் கண்டு பூரித்துப் போவாரே ஒழிய, தன் சபதத்தை அவரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.



பிள்ளையும் இரத்தச் சூட்டில், தகப்பன் சொல்லும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்ற போதிலும் தன் தகப்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும், பற்றி நன்றாக அறிந்திருந்தது. தன் தகப்பனுக்கு பிடிக்காத காரியங்களையும் செய்யக்கூடாது என மனதுக்குள் நினைக்கும் பிள்ளை, நண்பர்களைப் பார்த்தவுடன் சிகரெட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டது. நண்பர்கள் சிரிப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பத்து நாளைக்கு ஒரு முறை அவர்களுடன் நடத்தும் தீர்த்தவாரியையும் நிறுத்த முடியமால் தவித்தது.

பத்து... நான் எப்பவோ பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்... நீ எனக்கு ஆத்துக்காரியா வந்திருக்கே... என்ன பாவம் பண்ணியிருக்கேனோ? இப்படி ஒரு புள்ளை பொறந்து, என் மனசுக்கு ஒவ்வாத காரியத்தை பண்றதுன்னே சத்தியம் பண்ணிகிட்டு அலையுது.

ராகவன் மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்வாரே தவிர, தன் மனவருத்தத்தை, தன் மனைவியின் எதிரிலோ, தங்கையின் எதிரிலோ கான்பித்து அவர்கள் மனதை வீணாக நோக அடித்ததில்லை.

"காலங்காத்தால என்ன யோசனை அண்ணா...? போய் அண்ணியை எழுப்புங்கோ.. பால் ஆறிப்போவுது... ஒரு வாய் காஃபி குடிச்சா, அவங்க தலைவலி, சோர்வு எல்லாம் தன்னாலப் பறந்து போயிடும்..."

"ம்ம்ம்... கீசரை கொஞ்சம் ஆன் பண்ணும்ம்மா..."

'தண்ணீ சூடா இருக்கு..."

"இன்னக்கு வர்றானா அவன்?" கேட்டுக்கொண்டே ராகவன் எழுந்து தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

"வெளியியல வேஷம் போட்டுக்க வேண்டியது.. ஆனா மனசுக்குள்ள புள்ளை மேல ஆசையை வெச்சுக்கிட்டு கெடந்து தவிக்க வேண்டியது... இதெல்லாம் வீட்டுல இருக்கற பொம்பளைங்க எங்களுக்கு புரியாமலா இருக்கு...?" அடுக்களையில் நுழைந்த உஷா மனசுக்குள் சிரித்தாள். 


ராகவன் குளித்துவிட்டு வந்தபோது, பத்மாவும், உஷாவும் டைனிங் டேபிளில் அவருக்காக காத்திருந்தார்கள்.

காலை டிபனுக்காக, சூடான வெண் பொங்கலும், மெது வடையும் தயாராக இருந்தது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், சின்ன வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையை தக்காளியுடன் சேர்த்து வதக்கி, பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து கொட்டி, மல்லி விதை அதனுடன் வெந்தயத்தையும், தேங்காய் துறுவலையும் வறுத்து பொடி பண்ணிச் சேர்த்து, புளியை குறைவாக ஊற்றி, கலவையை நன்றாக கொதிக்க வைத்து, கடைசியில் கொத்தமல்லியை தூவி, ஹோட்டல் சாம்பாராக அதை இறக்கியிருந்தாள், உஷா.

"உஷா... பொங்கல் திவ்யமா இருக்கும்மா... இப்ப நீ என்னை என்னக் கேட்டாலும் குடுத்துடுவேன்.." ஒரு விள்ளலை சாம்பாரில் நனைத்து, வாயில் போட்டு சுவைத்தவர், நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, முகத்தில் திருப்தியுடன் தங்கையைப் பாராட்டினார்.

"ஆமாம்... பொழுது போனா பொழுது விடிஞ்சா இதே கதைதான்; நீங்களும் உங்களுக்கு இருக்கற ஒரே வீட்டை எத்தனை தரம்தான் உஷா பேருக்கு எழுதி வெப்பீங்க.." கலகலவென சிரித்தாள், பத்மா.

"மனசுல சந்தோஷமா எந்த காரியத்தை செய்தாலும்.. பகவானோட நாமத்தை சொல்லிண்டு சேஞ்சா அது நன்னாத்தான் வரும்.. என்ன மன்னீ நான் சொல்றது...?" உஷா அண்ணனைப் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே, இன்னொரு கரண்டி பொங்கலை அவர் தட்டில் எடுத்து வைத்தாள்.

"போதும்டா... கண்ணு... வயிறு ரொம்பினாலும் கண்ணு நிறைய மாட்டேங்குது.. வரதராஜா.. பெருமாளே... கடைசி விள்ளலை வழித்து வாயில் போட்டுக்கொண்ட ராகவன் தட்டில் கையை உதறினார்.

"டொய்ங்க்க்க்... டிங்க்..." காலிங் பெல் ஒலித்தது.

"சீனுவாத்தான் இருக்கும்..." துள்ளி எழுந்து வாசலுக்கு ஓடினாள், சாப்பிட்டுக்கொண்டிருந்த உஷா.

தோளில் பழுப்பு நிறத்தில் தோல் பையும், கையில் மீடியம் சைஸ் டிராவலருமாக ஹாலுக்குள் நுழைந்த கீழப்பந்தல் நாராயனன் சீனுவாசனின் தலை முடி சீராக ஒட்டவெட்டப்பட்டு, முகத்தில் தாடி மீசை எதுவுமில்லாமல், பளிச்சென்று இருந்தான்.

என் புள்ளை சீனுவா இது? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? என்னால நம்பவே முடியலியே? எதனால இந்த மாத்தம்? சீனுவை ஓரக்கண்ணால் பார்த்த ராகவன் ஒரு நொடி திகைத்தார்.

"என் புள்ளையை ராத்திரி அவதாரம்ன்னு சொன்னீங்களே... இப்ப சொல்லுங்க...' அவர் முகத்தில் எழுந்த ஆச்சரிய உணர்ச்சியை சட்டெனப் படித்த பத்மாவின் முகத்தில் புன்முறுவல் ஒன்று எழுந்தது.

"வாடா...வா... ஆட்டோவுல வந்தியா...?" பத்மா எழுந்து அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டாள்.

"அண்ணா... யாரோன்னு மலைச்சுப் போயிருக்கீங்க.. உங்களுக்கு அடையாளம் தெரியலியா... நம்ம சீனுவேதான்... டேய் சட்டுன்னு குளிச்சிட்டு வாடா... டிஃபன் ரெடியா இருக்கு..." உஷா தன் மருமகனின் தலைக்குள் தன் இடது கை விரல்களை நுழைத்து அவன் முடியைக் விளையாட்டாக கலைத்தாள்.

"அத்தே குளிக்கறது எல்லாம் அப்புறம்... பசி உயிர் போவுது... நேத்து ராத்திரியே ஒண்ணும் சரியா சாப்பிடலே... முதல்ல நீங்க டிஃபனை குடுங்கோன்னா..." பிள்ளை செல்லமாக அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. அவள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டது.

"போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா..." ஒரு வாரமாக வீட்டில் இல்லாத பிள்ளையை கண்களில் பாசத்துடன் பார்த்தாள், பத்மா.

"ஆச்சு... ஆச்சு.. அத்தே.. இன்னும் ரெண்டு வடையை தள்ளுங்க இப்படீ..."

முகத்தில் ஆச்சரியத்துடன் இன்னும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, சீனு எப்போதும் போல் சாப்பாட்டு ராமனாக மாறி, தட்டிலிருந்த பொங்கலை, வேகமாக உருட்டி உருட்டி, மென்று திண்ணக்கூட பொறுமையில்லாமல், கோழியைப் போல் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். சட்டென ஒரு பருக்கை நெஞ்சுக்குழலில் சிக்கி பொறை ஏறி இருமினான்.

"யாரோ... என் புள்ளையை நெனைச்சுக்கறா?" பத்மா அவன் தலையைத் தட்டினாள்.

யாரு என்னை இப்ப நெனைச்சுக்கறது... மீனாவா இருக்குமா! கண்களில் கண்ணீர் ததும்ப சிரித்தான், சீனு.

"டேய் சீனு.. மெதுவா சாப்பிடுடா... சாப்பிடும் போது பேசாதடா.. தொண்டையில சிக்கிக்கும்ன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்லியிருக்கேன்" ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு ராகவன் தன் மகனிடம் அன்புடன் பேச ஆரம்பித்தார். பாசத்தில் அவர் குரல் தழதழத்தது.

"அப்பா..."

ஒரு நொடி விக்கித்துப் போனான், சீனு. அப்பாவா...!! அவர் கோபத்தையும், தாபத்தையும், விட்டுட்டு எங்கிட்ட பேசறார்..? அவன் இருமிக்கொண்டே எழுந்தான், தன் எச்சில் கையோடு தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவர் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டான். சட்டென கண்கள் குளமாக மாறி, ஒரு சொட்டு கண்ணீர், கன்னத்தில் இறங்கி ஓட, அம்மாவையும், அத்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

"இப்பத்தான் நீ நம்மாத்து புள்ளையா இருக்கேடா... ம்ம்ம்.. உக்காந்து பரபரப்பில்லாம சாப்பிடுடா..." தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே ராகவன் அவன் தோளில் கையை போட்டுக்கொண்டார்.

"அப்பா... நான் குடிக்கறதை விட்டுட்டேன்ம்பா.. சிகரெட் பிடிக்கறதையும் கொறைச்சுட்டேன்.. அதையும் சீக்கிரமே மொத்தமா விட்டுடறேன்.. அயாம் சாரிப்பா..." சீனு தீடிரென ஓசையெழுப்பாமல், தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தான்.

"இவ்வளவு நாள் உங்க புள்ளைகிட்ட பேசாமலே இருந்து அவனை அழவெச்சீங்க.. இப்பதான் ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவனை இப்ப பேசியே அழவெக்கறீங்க..."

"நீ வாடா இப்படி.. எதுக்குடா அழுவுறே நீ... என் ராஜா" பத்மா விருட்டென எழுந்து தன் பிள்ளையை தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள்.

ஆஞ்சேனேயா... இந்த செவ்வாக்கிழமை நான் உனக்கு வடைமாலை சாத்தறேம்பா... உஷா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனதிலிருக்கும் பாசத்தை வார்த்தைகளில் கொட்டமுடியாமல் தவிக்கும் தன் அண்ணனையும், விசும்பிக்கொண்டிருக்கும், தன் ஆசை மருமகனையும், மனநிறைவுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

"சீனு..."

"சொல்லுங்க அத்தே..."

"குடிக்கறதை விட்டுட்டே; சிகரெட்டை விட்டுடப் போறேன்னு, நீ சொன்னதை கேட்டதுலேருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா ஆயிட்டோம்டா..."

"அத்தே.. இப்பத்தான் பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, எப்படியாவது இந்த பழக்கம் என்னை விட்டு போனா சரின்னு, இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துட்டேன்.." தலையை குனிந்து கொண்டு மெல்லியக் குரலில் பேசினான், சீனு

"கேக்கறதுக்கே ஆச்சரியமா இருக்குடா.. நாங்க சொன்னப்பல்லாம் கேக்காதவன், யார் சொல்லிடா இந்த குடி சனியனை விட்டே? அவங்க யாரா இருந்தாலும் நான் பாத்தே ஆவணும்..!" பத்மா வியப்புடன் கேட்டாள்.

"நிச்சயமா... அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்..." தன் காதல் கதையை வீட்டுக்குள் அவிழ்த்துவிட இதுதான் நல்ல சமயம் என புரிந்து கொண்டு உற்சாகமாக பேச ஆரம்பித்தான், சீனு.

"அவளா...?"

"ஆமா அத்தே... ஒரு பொண்ணு சொல்லித்தான் விட்டுட்டேன்.."

"சீனு... அந்தப் பொண்ணு யாராயிருந்தாலும், அவ மகராசியா நல்லா இருக்கட்டும்..." முகம் தெரியாத அவளை ஆசிர்வாதம் செய்தார், ராகவன்.

"நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவன் ஏதோ சொல்ல வர்றான்... அடுத்தவங்களைப் பேசவிடாம குறுக்க பூந்துடுவீங்களே?" பத்மா அவர் வாயை அடைத்தாள்.

"நீதானேடீ அவன் கிட்ட பேசுங்க பேசுங்கன்னு நேத்து ராத்திரி பூரா என் உயிரை வாங்கினே?"

"அப்பா..."

"சீனு... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு, உன் அம்மாவும், அத்தையும் ரொம்ப ஆசைப்படறாங்கப்பா.. அவங்க எதிர்பார்ப்பிலேயும் தப்பு இல்லே; வாழ்க்கையிலே எல்லாமே அந்தந்த நேரத்துல நடந்து முடியணும்பா.." இதமாக பேசினார், ராகவன்.

"ம்ம்ம்.."

"உஷா... அந்த லலிதாவோட போட்டோவையும், அவளைப் பத்திய குறிப்பையும் எடுத்துட்டு வா.. இந்த பொண்ணு காஞ்சீபுரமாம்... நல்லாப் படிச்சிருக்கா... இங்க சென்னையிலத்தான் வேலை செய்யறாளாம்... உன் அத்தையோட மச்சினருக்கு தெரிஞ்ச ஃபேமலியாம்..."

"ம்ம்ம்..."

"உனக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருந்தா, மேல் கொண்டு நடக்க வேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்..."

"அப்பா... நீங்க கோபப்படலேன்னா ஒரு விஷயம் சொல்லட்டுமா?

"சொல்லுடா... உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லப்பா.."

"என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மனசார ஆசைப்படறா... அவதான் நான் குடிக்கக்கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா..."

"டேய் சீனு... நான் வளத்தப் புள்ளை நீ, உனக்கு என்னடா கொறைச்சல்...'என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு' ஏன்டா உன்னையே நீ குறைச்சுப் பேசிக்கறே?" விருட்டென எழுந்த உஷா அவன் பக்கத்தில் உட்க்கார்ந்து அவன் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

"சீனு... யாருடா அந்தப் பொண்ணு...?" பத்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

"நீங்க சரின்னு சொன்னா, அவளை நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்... உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்..."

"உன் கூட வேலை செய்யறாளாடா..?" உஷாவுக்கு பொறுக்கமுடியவில்லை.

"இல்லத்தே.. படிச்சிக்கிட்டு இருக்கா..."

"படிக்கறான்னா... ரொம்பச் சின்ன பொண்ணா இருப்பாளேடா..? நம்ம ஜாதிதானேடா?" பத்மா குறுக்கிட்டாள்.

"அவனை பேசவிடுங்களேன்டீ... என்னை குறுக்குல பேசாதேன்னீங்க... நீங்க ரெண்டு பேரும் நடுவுல நடுவுல... குதிக்கறீங்க.." சற்றே எரிச்சலடைந்தார், ராகவன்.

"பைனல் இயர் இஞ்சினீயரிங் படிக்கறா... கடைசி செமஸ்டர்... இப்பவே ஒரு விஷயம் சொல்லிடறேன்... அந்த பொண்ணு நம்ம இனத்தை சேர்ந்தவ இல்லே... சைவக்குடும்பத்துல பொறந்தவ... ப்யூர் வெஜிடேரியன்... அவங்க குடும்பத்தை எனக்கு நல்லாத்தெரியும்... அவ நம்ம வீட்டுக்கு வந்தா " சீனு தயங்கி தயங்கி பேசினான்.

"வந்தா...?" உஷா முடிக்காமல் நிறுத்தினாள்.

"ரொம்ப பிராக்டிகல் மைண்ட் அவளுக்கு... நம்ம வீட்டு பழக்கங்களை சட்டுன்னு புடிச்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு..?"

"அண்ணீ... சீனு யாரைப்பத்தி சொல்றான்னு இன்னுமா உங்களுக்குப் புரியலே?" உஷாவின் குரலில் குதூகலம் பொங்கியது.

"அத்தே... உங்களுக்கு புரிஞ்சுப் போயிருந்தா... ப்ளீஸ் இப்ப சொல்லாதீங்க அத்தே.. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டும்... ப்ளீஸ்.. அத்தே.." சீனு அத்தையிடம் கெஞ்சினான்.

"யாருடா... எனக்கு நிஜமாவே தெரியலடா... சொல்லுடா.." பத்மா முகத்தில் குழப்பமும், தன் மகனை உருப்பட வைக்க முயலும் அந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் முகத்தில் தோன்றப் பேசினாள்.

"டேய் சீனு... அந்த பொண்ணு சொல்லித்தான்... நீ உன் தலை முடியை ஒட்ட வெட்டி, உன் மீசை, ஆட்டுக்கடா தாடி, எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டியா?" ராகவன் தன் கண்களில் ஒரு குழந்தையின் குறும்பு மின்னுவதைப் போல உற்சாகத்துடன் வினவினார்.

"ஆமாம்பா..." அவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரவா என்ற கேள்வி சீனுவின் முகத்தில் பூரணமாக எழுந்திருக்க, அவன் தன் தந்தையின் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.



"சீனு... உன் வயசு வேகத்துல, அர்த்தமில்லாம, நீ பண்ண சில காரியங்கள் எனக்கு பிடிக்கலை. அவைகளை என்னால ஜீரணிக்க முடியாம சிரமப்பட்டேன்... உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத்தனமாவும் நடந்துகிட்டேன்..."

"அப்...அப்பா.."

"ஒரு பொண்ணு உன்னை விரும்பறா; அவளுக்கும் நீ பண்ற காரியங்கள் பிடிக்கலை; ஆனா அவ உன்னை, உன் போக்கை, ஓரளவுக்கு மாத்தியிருக்கான்னா, அந்த பொண்ணு கண்டிப்பா என் மனப்போக்குக்கு ஒத்து வர்ற பொண்ணாத்தான் இருக்கணும்... ஒரு நல்லக்குடும்பத்துல பொறந்த கொழந்தையாத்தான் இருக்கணும்.."

"ஆமாம்பா..."

"சீனு... அந்த பொண்ணு யாரா இருந்தாலும் சரிடா... அந்த பொண்ணு எந்த ஜாதியா இருந்தாலும் சரிடா... அவளை நான் என் மருமகளா ஏத்துக்க தயார்...
உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..." நிதானமாக பேசிய ராகவன் எழுந்தார். சீனுவாசனின் கையைக் குலுக்கினார்.

"அப்பா.. அப்டீன்னா அவளை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?"

"போய் அழைச்சிட்டு வாடா... இன்னைக்கு நாள் நல்லாத்தான் இருக்கு..."

"ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..."

அதே நேரத்தில் சீனுவின் செல் ஒலித்தது. செல்லில் மீனாவின் போட்டோ மின்னியதும், சீனுவின் மனசு குப்பென்று பற்றிக்கொண்டது. சீனு எழுந்து வெராண்டாவிற்கு வந்தான். 


No comments:

Post a Comment