சக மனிதர்கள் காணவும் சகியாமல், கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்ற சமகால சமூகத்தையும், புறக்கணிக்கப்பட்டவர்களின் அக அழகையும் வெள்ளித்திரையில் விரியச்செய்து, திரையுலகத்தின் களங்கம் துடைத்திருப்பதன் மூலமாக ஓர் அற்புத படைப்பாளியாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் பரிணமித்திருக்கிறார்.
திரைப்பட சமூகத்தின் போக்கும், திரைப்படத்தின் போக்கும் அவற்றை நேசிப்பவர்களுக்கும் உயிர்க் காற்றாக சுவாசிப்பவர்களுக்கும் மூச்சுத்திணறலை உருவாக்கியிருந்த கவலை மிகுந்தச் சூழலில், திரைப்படத் துறையின் நாடியாகத் திகழ்கிற படைப்பாளிகளுக்கும் உழைப்பாளிகளுக்கும் ஏறத்தாழ கடைசித்துடிப்பு அடக்கிக்கொண்டிருந்த ஆபத்தான வேளையில் எத்தனை தடைகள் வந்தாலும் இன்னும் வரட்டும் என்று எகிறி எதிர்க்கொள்ளத் தேவையான தெம்பையும் ஆற்றலையும் ஊட்டுகிற உன்னத நோக்கமுள்ள படைப்பாக வழக்கு எண் 18/ 9 வெளிவந்திருக்கிறது.
கலை இலக்கியத்தின் பணி அம்பலப்படுத்துகிற வேலையைச் செய்வதுதான் என்றார் மாவோ. ஏழை எளிய அடித்தட்டு மக்களைப் புதைத்து உருவாக்கப்பட்ட மண் மேடுகள் மீது அரக்கத்தனமாக எழுப்பப்பட்டிருக்கின்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் காவல் அரண்களாக திகழ்கிற நான்கு தூண்களின் அந்தரங்க முகத்தை தோலுரித்து அம்பலப்படுத்தியிருக்கும் விதத்தில் மாவோ பிறப்பெடுத்திருக்கிறார்.
திரை ஊடகம், ராணுவத்தின் வலிமைமிக்க படைப்பிரிவுக்கு ஒப்பானது என்று சொன்ன தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்; அவர்களின் உறுதிமிக்க நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் படைப்பாக வடிவம் பெற்றிருக்கிறது வழக்கு எண் 18/ 9.
இவ்வழக்கில் தொடர்புடைய வேலுவும், மீள முடியாத ஏழ்மை அழுத்தத்தில் செத்துச் செத்துப் பிழைத்து, மண் சரிவில் சிக்கி மரணத்தின் மூலம் விடுதலை பெற்ற வேடியப்பன் தொடங்கி, கந்து வட்டிக்காரன், முறுக்குக் கம்பெனி முதலாளி, ரோசி அக்கா, கையெந்திபவன் கடைக்காரர், கூத்துக் கலைஞன் சின்னச்சாமி, ஜோதி, ஜோதியின் அம்மா, ஆர்த்தி, ஆர்த்தியை துரத்தும் மாணவன், அவனைப்பெற்ற ஜெயலட்சுமி, காவல்துறை ஆய்வாளர், அமைச்சர், அடுக்ககக் காவலாளி, துயர நெடிகளுக்கு இடையில் பொடிபோடும் லாவகத்தோடு பிழைப்புத் திறன் காட்டும் அரசு மருத்துவமனை ஊழியர் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்கள் அல்ல. தாராளமயமாக்கப்பட்ட உலகின் உறுப்பினர்கள்.
அளவுக்கு மீறிய பணத்திலும், உண்டுக் கொழுக்கும் குணத்திலும், கொழுப்புச் சத்து மிகுந்த உணவிலும் சுரப்பிகள் தூண்டிய தினவிலும் ஊறியதால் விளைந்த வயதுக்கு மீறிய வளர்ச்சியை உண்டாக்கிய, அன்பில் பணியாத வினை-
சாலையோர வாழ்விடமும் சத்தில்லா ஆகாரமும், செம்மை குன்றாத கடின உழைப்பும், சத்தியம் தவறாத முனைப்பும் பிணைந்த வாழ்வில் கனியும், அமிலத்தில் கரையாத காதல்-
என ஒன்றுக்கொன்று தொடர்புடைய, அதே நேரம் ஒன்றோடொன்;று முரண்பட்டு விலகி நிற்கிற இருவேறு எல்லைகள் கொண்ட ஏழை மற்றும் பணக்காரர்கள் என பொருளாதாரத்தால் வகைப்படுத்தப்பட்ட இரு இனங்களின் மரபியல் பண்புகள், பண்பியல் கூறுகள் அதனதன் இயல்பு மாறாமல் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதால் நாம் நிகழ்வுகளின் பார்வையாளனாக இல்லாமல் சாட்சிகளாகப் பங்கேற்கிறோம்.
தொழில்நுட்பப் புரட்சி, பொருளாதார வளர்ச்சி எனும் வெளிப் பூச்சுகளை சிதறடித்த, சராசரி வாழ்க்கையும்; கூட வாழ முடியாத பெரும்பான்மையின் ரத்தம் குடிக்கிற வறட்சியை படம் பிடித்து, வல்லரசுக்; கூச்சல்களின் குரல் வளையை நெறித்து உடைக்கும் அதேவேளையில், உலக சினிமா உலக சினிமா என்று பிதற்றுபவர்களுக்கு இதுதான் எமது உலகம், இதுவே எமது வாழ்க்கை என்று நெற்றியில் அடிக்கிறது இந்த படைப்பு.
இளம் பெண்ணின் முகத்தில் அமில வீச்சு என்ற ஒற்றை வரி செய்தியின் மூலக்கூறுகளை பிரித்து நுணுக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் சமூக அக்கறையை உணர்வுத் தளத்தில் குவியச்செய்ததே படைப்பு நேர்மையாகவும், தன்னை அறிந்த படைப்பாளனின் தர்மமாகவும் வெளிப்பட்டு வெற்றியில் மிளிரச்செய்திருக்கிறது.
இந்த தேசத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த விவசாயிகளின் இடுப்பொடித்து ஏற்றப்பட்டகடன் சுமை, திட்டமிட்டே கொத்தடிமைகளை உருவாக்கும் கொடுமை, வறுமைக்கு பலியான எம் மக்கள் மனிதம் விற்கும் தரகர்களால் அடகுப் பொருளாக கை மாற்றப்படும் கொடூரம். கல்வி வியாபாரம் என்பதையும் தாண்டி விபச்சாரம் ஆக்கப்பட்டிருக்கும் வேசித்தனம், பணம் பணம் பணம் ஒன்றே வாழ்வின் பிரதானம் என்று கருதி ஓடிக்கொண்டிருக்கிற மக்களின் கேட்பாரற்றத் தன்மை இச்சமூகத்துக்கு விளைவிக்கும் தீங்கு, நவீன யுகத்தின் தொழில்நுட்பம் இளைய தலைமுறையின் கைகளில் சிக்கி விளைவிக்கும் பெரும்கேடுகள், பிணம் கொத்தக் காத்திருக்கும் பேய்க்கழுகு நாய்நரிகள் போல சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்து பாயும் காவல்துறை அதிகாரம், அதனை இயக்கும் அரசியல் பயங்கரவாதம் ஆகிய கூட்டுச் சதிக்கு இடையே சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளின் நிலை என இன்றைய சூழலை அப்பட்டமாக பதிவு செய்திருப்பதால் இயக்குனர் புரட்சியாளராக உருவாகவில்லை, ஒரு புரட்சியாளனால் மட்டுமே இந்த நடைமுறை உண்மைகளை சமரசமின்றி பதிவு செய்யமுடியும்.
புயலுக்கு முன்னும் பின்னும் நிலவும் அமைதி போல புரட்சிக்கும் அடிப்படை குணம் இரண்டு. ஒன்று பெருங் கோபம், இன்னொன்று பேரமைதி. ஆழ்கடலுக்குள் கொந்தளிக்கும் எரிமலையின் வெப்பத்தை தனது ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்தும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்குரிய இடத்தை இன்னும் திரைப்பட உலகம் வழங்கவில்லை. சமூகத்தை புரட்டிப்போடுகிற சிந்தனையாளனைவிட சாமார்த்திய புரட்டல்களுக்கு சொந்தக்காரர்களை கொண்டாடித் துதிக்கும் தன்மை இங்கே தூக்கலாக தென்படுவது மாற்றப்பட வேண்டிய ஒன்று. திரைப்படம் என்னும் ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்கும் சக போராளிக்கு இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் உதவி இயக்குனர்கள் தலைவணங்குகிறோம்.
சமூக அவலம் குறித்து சிற்றிதழ்களிலும், இணையதளங்களிலும் ஆவேசமான கட்டுரைகள் எழுதுவதைவிடவும், பொதுக்கூட்டங்களில் பேசுவதைவிடவும் வீரியமிக்க சலனத்தை திரைப்படம் ஏற்படுத்தும் என்பதை நிரூபித்திருப்பதன் மூலமாக என் போன்றவர்களை மீண்டும் கரை திரும்பச் செய்திருக்கிறார்.
இந்த நாட்டின் காவல்துறையும், நீதித்துறையும் சட்டத்தின் துணைக் கொண்டு எழுதுகிற தீர்ப்புகளின் விளைவால் நிரபராதிகளின் வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படுவதை தடுக்க முடியாமல் குமுறுவதை தவிர வேறெதுவும் செய்துவிட சக்தியற்ற மனிதக் கூட்டத்தில் எல்லாவற்றிற்கும் மேலான நீதியை, படைப்பவனால் மட்டுமே வழங்கமுடியும். அவனே அற்புதமானவன். நடுவுநிற்றல் தவறாத தராசைக் கைக்கொண்டு இருப்பவன் அளிக்கும் உயர்ந்த நீதியே எமது எதிர்ப்பார்ப்பு என்பதை ஜோதி, காவல்துறை ஆய்வாளர் முகத்தில் அமிலம் வீசும் போது எழுகின்ற பெரும்பான்மை கைத்தட்டல் உறுதிப்படுத்துகிறது.
தம்மை பேராற்றல் படைத்தவர்களாகக் காட்டிக்கொள்ள மாபெரும் கதாநாயகர்கள் அணிந்துகொண்ட களவாடப்பட்ட முக்காடுகளைவிட ஜோதியின் முகம் மறைக்கும் கண்ணியமிக்க முக்காடு கம்பீரமாக இருக்கிறது.
பார்வையாளர்களை நியாயத்தின் பக்கம் நிற்க வைத்ததில் வெற்றிப்பெற்று மனச்சலவைக்கு உட்படுத்தி தூய்மையாளர்களாக வெளியேறச் செய்யும்போது, வெள்ளித்திரை மக்களை இருளில் தள்ளியது என்ற கறை கழுவப்பட்டு இருள் நிறைந்த அரங்கம் வெளிச்சமாகிறது.
உங்களால் ஒரே ஒரு மனிதனுக்கு நம்பிக்கை ஊட்ட முடிந்தால், ஒருவனை கவலைகள் மறந்து சிரிக்கச் செய்ய முடிந்தால், ஒருவனது கண்ணீரைத் துடைக்க முயன்றால், உங்களுக்கு பிறன் வலியை தன் வலியாக உணரத்தெரிந்தால், மின்சார கம்பிகளுக்கு இடையில் சிறகு சிக்கி இறந்து கிடக்கும் காக்கைக்காக வருந்தும் மனமிருந்தால் நீங்கள் புரட்சியாளர்.
சமூக மறுமலர்ச்சியை சாத்தியப்படுத்தும் ஒவ்வொரு படைப்பாளியும் புரட்சியாளனே!
No comments:
Post a Comment