Monday, 7 May 2012


மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு.
அந்த நுனா மரத்தில்தான் 'ரெட்டக்குண்டி' சின்னைய்யனை அடித்து மாட்டி வைத்திருந்தனர்.
ரெட்டைக்குண்டி சின்னைய்யனின் சாவு இன்று வரையும் புதிராகவே தான் இருக்கிறது. அதைப்பற்றி ஊருக்கு ஊர் கதை கதையாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.


சின்னையன் சூராதி சூரனான மாட்டு வியாபாரி. வட தேசம் போய் சோப்புப்போட்டு வெளுத்ததைப்போல் வெள்ளை வெளேரென்று மேற்கத்திய காளைகளை வாங்கி வருவான். ஒத்தை ஆளாகவே இரண்டு, மூன்று ஜோடிகளை ஓட்டி வந்து இங்கே நல்ல விலைக்கு விற்பான். வடக்கே போகாத நாட்களில் அக்கம் பக்கத்து ஊர்களில் மாடுகளைத் தேடி அலைவான். அவன் கணக்குகளுக்குச் சரியாக வரும் மாடுகளைக் கோழிக்குஞ்சைக் கொத்திக் கொண்டு பறக்கும் குருவியைப்போல கொத்திக்கொண்டு போவான்.
பீமசேனனைப்போல நல்ல பாரியான உடம்பு அவனுக்கு. பாறாங்கல்லாய் விரிந்த மார்புகள். கருங்கல்போன்று மினுங்கும் முதுகு. தின்ன உட்கார்ந்தால், மூன்று உருண்டை களியை திரும்பிப் பார்ப்பதற்குள் நான்கே திருகாய்த் திருகி விழுங்கிவிட்டு, தட்டை வழித்து நக்குவான். ஆட்டுத்தலையை தீய்த்துக் காய்ச்சி வைத்தால் ஒரு தலையை ஒருத்தனே மென்று துப்பி விடுவான்.
சேவல் கறியை புரட்டி வைத்தால், ஐந்தாறு கிளாஸ் சாராயத்தை உறிஞ்சிவிட்டு இரண்டு முழு சேவல்களை சட்டியில் மிச்சமில்லாமல் துடைத்தெடுப்பான்.
மாடுகளை ஓட்டிக்கொண்டு இரவு பகல் பாராமல், கல்லும் முள்ளும், நரியும் குரத்தியும் மலிந்து கிடக்கும் காட்டில் ஒத்தை ஆளாய் சுற்றவான். ரெட்டை நாடி சரீரத்திற்கேற்ப இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டும், பெண் சுகத்துக்கு அலைவான்.
அவனது நடையும், மதர்த்த உடலும், உச்சத்தில் ஒலிக்கும் குரலும், வியாபாரத்தில அவனுக்கிருந்த லாவகமும் அவனை அதிசய மனிதனாகத்தான் காட்டியது. அவனுக்குள் இரட்டை குண்டிக்காய்கள் இருக்கும் என பலர் பேசிக்கொண்டனர்.
"ரெட்ட குண்டிகா இருந்தாதான் இப்டி ராவு பகுலுனும், காத்து கருப்புனும் பாக்காமச் சுத்தும் தெய்ரியம் வரும்" என்றார்கள். அவன் ஊருக்குள் வந்தால், ஊர்ப்பெண்கள்கூட அதிசயததைப் போலவும், பார்க்காததைப் போலவும் பார்ப்பார்கள். குசுகுசுவென பேசிக்கொள்வார்கள். பல பெண்களுக்கு அவனது தின‌வெடுத்த உடம்பு மீதும், அவனது வீரதீரச் செயல்கள் மீதும் மையல்கூட இருந்தது.
அந்த சின்னைய்யனைத்தான் அடித்துக்கொன்று சின்ன்னாங் குளக்கரையில் இந்த ஒற்றைப்பனைக்கு துணையாய் இருந்த நுனா மரத்தில் மாட்டித் தொங்கவிட்டனர். அவனோடு இருந்தவர்களே வியாபாரத்தில் முளைத்த விரோதத்தினாலோ, பொம்பளை விவகாரத்தாலோ அடித்து மாட்டிவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.
சாதாரணமாக அவனை அடிக்க முடியாது என்பதால் நைசாகப் பேசி குளக்கரைக்குக் கூட்டிப்போய் நெஞ்சிக்கும், குஞ்சிக்கும் சாராயத்தைக் குடிக்க வைத்து, முட்டையிடாத வெடக்கோழியைக் காய்ச்சித் திகட்டத் தின்னவைத்து, முன்னிரவு நிலா வெளிச்சத்தில் ஒரு பெண்ணையும் அவனோடு படுக்க வைத்து, இரட்டை போதையில் இருக்கும்போது தீர்த்துக் கட்டினார்களாம்.
ஒற்றை போதையே ஆளை கவிழ்த்துவிடும்போது, இரட்டை போதையில் எந்தக் கொம்பனானாலும் என்ன செய்யமுடியும். அப்படியும் அவனைக் கொல்ல படாதபாடு பட்டார்களாம். உச்ச போதையிலிருக்கும்போது, அவனது மார்பின்மீது ஏறி உட்கார்ந்து தலையை ஒருவன் பிடித்துக்கொள்ள, கால்களின் மீதேறி ஒருவன அழுத்திக்கொள்ள, அவள் அவனின் உயிர்நிலையைப் பிசைந்து, கசக்கி துடிக்கத் துடிக்கக் கொன்றாளாம்.
அவள் விலைமாது என்றும், அவனது வைப்பாட்டிகளில் ஒருத்தியே என்றும் பேசிக்கொண்டார்கள். துடித்துத் துடித்து அடங்கிய உடலை மூவரும் தூக்க முடியாமல் தூக்கி, அந்த நுனா மரத்தில் அவனது வேட்டியாலேயே சுருக்கிட்டுத் தொங்க விட்டனராம்.
மறுநாள், உச்சி வெய்யிலிலில் செம்மறி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டப்போன சுப்புதான் காற்றில் ஆடிக்கொண்டிருந்த பிணத்தைப் பார்த்து அலறியடித்து, ஆடுகளைக்கூட மறந்து ஓடிவந்தவன் படுக்கையில் விழுந்தான். காய்ச்சலும், பிதற்றலும் ஓய தேசிகாமணி தேசிகரின் வேப்பிலை மந்திரமும், திருநீறும் ஒருவாரம் தேவைப்பட்டது.


அதற்குப்பிறகு ஆடு மாடு மேய்ப்பவர்கள்கூட அந்தப்பக்கம் போவதில்லை. சின்னப் பிள்ளைகள் அந்தத் திசையைக்கூட திகிலாய்ப் பார்த்தனர். அந்த ஒற்றைப் பனையில் சின்னைய்யனின் ஆவியிருப்பதாகவும், அது தண்ணீர் குடிக்கப்போகும் ஆடுகளை அவ்வப்போது அடித்துவிடுவதாகவும் பேசிக்கொண்டார்கள்.
பொதுவாக சின்னனாங்குளத்துக்கு கிழக்கில் இருக்கும் கரி மலையில் கள்ளிச் செடிகளும், முட்புதர்களும், நெடும்பாறைகளும் குறுக்கும்மறுக்குமாக கிடக்கும். அதில் ஆடுகளை மேயவிட்டால் மொத்தத்தையும் திரும்ப மீட்கமுடியாது. வழி தவறிப்போகும் அல்லது குறத்திகள் அடித்துவிடும். அதனால் ஆட்டுக்காரர்கள்கூட அந்த மலைப்பக்கம் அதிகம் போவதில்லை. சுப்பா ரெட்டியாரும், மாரிமுத்து ரெட்டியாரும் மட்டும்தான் போட்டி போட்டுக்கொண்டு இந்தக் குளத்தில் வலை வீசுவார்கள். ஆனால் இந்தச் சாவுக்குப்பின் அவர்களும் குளத்தை நெருங்குவதில்லை. நாளுக்கு நாள் சின்னையனின் ஆவி ஊரில் பலபேருக்கு காய்ச்சலையும், திகிலையும் ஏற்றிக்கொண்டு இருந்தது.
வலைகளை விடாததால் குளத்தில் முட்டைக்குரவைகளும், விரால்களும் பெருகிக் கிடப்பதாக சுப்பா ரெட்டியாருக்கு தெரிந்ததில் இருந்து தூக்கம் இல்லாமல் தவித்தார். கனவில் வந்து வந்து போன மீன்கள் அவரை வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டன. விரால் ஆசையும், ஆவி பயமும் அவரை மாறி மாறி அலைக்கழித்தன.
பகலில் வலை விடுவது அத்தனை பயமானது இல்லை. ஆனால் இவர் வலை விட்டது தெரிந்தால் மாரிமுத்துவுக்கும் தைரியம் வந்து விடும். அவரும் போட்டிக்கு வரலாம். யோசித்து யோசித்துதான் யாருக்கும் தெரியாமல் இரவில் வலை விடப் போனார்கள்.
எத்தனையோ இரவுகளில் தனியாளாக சுப்பா ரெட்டியார் வலைவீசிய குளம்தான். குழந்தைகளைப்போல பெருத்த விரால்கள் வலையில் மாட்டிக்கொண்டு துள்ளுவதைப் பார்த்தவர்தான். ஆனால் அவருக்கே முருகேசன் உடனிருந்தும்கூட அந்த இரவில் ஒரு மெல்லிய அச்சம் நரம்பெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. ஊர் ஊராகப் பேசிக்கொள்வதைப்போல பனை மரத்தில் சின்னைய்யனின் ஆவி இருக்குமோ? மனதின் ஒரு மூலையின் அந்த எண்ணம் முளைத்ததும், பின் கழுத்தில் 'தக்'கென்று ஒரு சூடு படர்ந்தது. தண்ணீரில் நிற்கும்போதே நெற்றியிலும், கழுத்திலும் வியர்த்தது. தோளில் கிடந்த வலையை பிரித்து நீளமாய் விட்டுக்கொண்டே குளத்தின் மையத்தை நோக்கி நகர்ந்தவர், கடல்பால் மண்டைகளில் மாட்டித் தடுமாறினார். பின்னேலேயே ஒட்டியபடி வந்துகொண்டிருந்தான் முருகேசன். மார்பளவு தண்ணீரில் நின்று வானத்தைப் பார்த்தார். மேகங்கள் கரும் புகைகளைப்போல திட்டுத்திட்டாகக் கிடந்தன. நிலா பனைமரத்தின் தலைக்குமேல் வந்தபோது மேகங்கள் அதை மறைக்க, திடீரென இருள் சூழ்ந்தது.
நெஞ்சுக்கூடு திக் திக் என அடித்துக்கொண்டது இருவருக்கும். இன்னும் சற்று தூரம்தான். ஒரு இருபது அடி வலையை விட்டால் குளத்தின் அந்தக் கரை வந்து விடும். அங்குதான் நிற்கிறது பனை. அதை நிமிர்ந்து பார்க்காமல் வலையை இறக்கிக்கொண்டே அவர் முன்னே நடக்க முருகேசன் தொடர்ந்தான்.
மரத்தை நெருங்க, நெருங்க தண்டவாளத்தில் ஓடும் ரயிலைப்போல துடிக்கத் தொடங்கியது நெஞ்சுக்கூடு. பனையின் உச்சியில் உட்கார்ந்து ஒருவேளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பானோ சினைய்யன்? இதுவரை ஆடுகளைத் தவிர வேறெதையும் அடித்ததில்லை. ஆனால் யாரையேனும் ரத்தம் கக்க வைக்கிறவரை அவன் ஆத்திரம் தீராது என்கிறார்கள். அவனது உடம்புக்கு ரெட்டை குண்டி என்றால் அவன் ஆவிக்கு எத்தனை குண்டி இருக்கும்?
பத்தடி தூரத்தில் நிற்கிறது பனை. வலையும் முடியப்போகிறது. குளத்தின் குறுக்கும் மறுக்குமாக தண்ணீரை அடித்துக்கொண்டு நான்குமுறை போனால் போதும். மீன்கள் சிதறி ஓடி வளையில் மாட்டிக்கொள்ளும். பிறகு அவற்றை கழற்றி பையில் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். லேசாக சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்த காற்று அப்போது திடும்மென வேகம் எடுத்தது. கடுமையான இருட்டில் குளத்தைச் சுற்றி நிழல் உருவங்களாக கள்ளிச் செடிகளும், முட்செடிகளும் அசைய, பனையின் உச்சியில் திடீரென எழுந்தது ஒரு பேரிரைச்சல்.
சலசலத்த அந்த ஓசையால் அதிர்ந்து, இருவரும் நிமிர்ந்து பனையைப் பார்க்க, அதன் உச்சியில் இருந்து ஒரு கருத்த உருவம் அவர்களை நோக்கி வேகமாய் கீழிறங்கியது. ஒரே ஒரு வினாடிதான். 'தொபீர்' என பெரும் சத்தத்தோடு சுப்பா ரெட்டியாரின் எதிரில் தண்ணீரில் குதித்தது அது.
"எம்மாடியோவ்" என்று அலறியபடி கீழே சாய்ந்தார் அவர். பின்னால் இருந்த முருகேசனுக்கு லுங்கியிலேயே மூத்திரம் போனது. உடல் முழுவதும் ஒரு வெட்டு வெட்டியது.
"அண்ணா..." என்று அலறியவன், தண்ணீரில் சாய்ந்தவரை பிடித்துத் தூக்கினான். தூக்கத் தூக்க சரிந்தார். கால்கள் துணியைப்போல துவண்டன. கைகளைப்பிடித்து தண்ணீருக்கு மேலாக இழுத்துவந்து கரையில் சாத்தினான். அவனது கைகளும் கால்களும உதறத் தொடங்கின.
"அணா... ணோவ்... அணா" என்று உலுக்கினான். அதேநேரம் வலையில் மாட்டிய எதுவோ சலக் சலக் என எகிறத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் மேலும் உதறல் எடுத்தது அவனுக்கு. சின்னைய்யனின் ஆவி வலையை அறுக்கிறதோ?
இரண்டு கை நிறைய நீரை மொண்டு சுப்பா ரெட்டியார் முகத்தில பளீரென அடித்தான். அசைவே இல்லை. உசுப்பிப் பார்த்தான். மரக்கட்டையைப் போல கிடந்தார். அவரை அலேக்காகத் தூக்கி தோளில் சாயத்துக்கொண்டு குளத்தின் ஓரத்திலேயே நடந்து வெளியே வந்தான். முட்செடிகளும், கப்பு மண்டைகளும் உடலெங்கும் கீறின. அதன்பின் ஒற்றையடிப்பாதையில் கால் வைத்ததும், வீடு வந்து சேர்ந்ததும் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
மறுநாள் விடிந்தபோது ஊரே அவர்களை சூழ்ந்துகொண்டிருந்தது. ராத்திரி நடந்தவை அவனுக்குள் ஒட சட்டென்று எழுந்தான். மந்தையிலிருந்து தவறிவிட்ட செம்மறி ஆட்டைப்போல சுப்பா ரெட்டியார் எல்லோரையும் மலங்க மலங்கப் பார்த்தார். வாயடைத்துவிட்டது. அடிக்கடி லுங்கி நனைந்தது.
தேசிகாமணி தேசிகரின் திருநீறும், வேப்பிலை மந்திரமும் கூட அவரை எழுப்பவில்லை. ஒருவாரம் வரை சுற்றி நிற்பவர்களையெல்லாம் பார்த்துப் பார்த்து பயந்தார். ஏழாவது நாள் சின்னைய்யன் அவரை துணைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஊர் அப்படித்தான் சொன்னது.
அவருக்கு காரியமும், மறுநாள் நடப்பும் முடிந்தபின் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே குந்திக்கிடந்தான் முருகேசன். அவனால் எதையுமே நம்ப முடியவில்லை. பெற்றவர்கள் போனபிறகு அவர்தான் இவனுக்கு எல்லாமாக இருந்தார். இருந்த கால்காணி நிலத்தை உழுது, கூலிக்கு ஏர் ஓட்டி இவனை வளர்த்தார். கல்யாணமே செய்துகொள்ளாமல் இவனுக்காகவே இருந்தார். ஒரே இரவில் எதுவுமே இல்லாமல் போனதை இவனால் நம்பவே முடியவில்லை.
அந்த விடியற்காலையில் கால்காணி நிலத்தையும், குடியிருந்த சுற்றுக்குடிசையையும் மறந்துவிட்டு பேருந்து ஏறியவன்தான். இருபத்தைந்து ஆண்டுகளை முழுமையாய் தொலைத்துவிட்டு, இதோ... இப்போதுதான் திரும்ப வந்திருக்கிறான். போன இடத்தில் வேலை, கல்யாணம், குடும்பம், வசதிகள் என ஆனபோதும் ஊர்ப்பக்கம் திரும்பவே இல்லை. யாருக்காக வருவது?
அந்த இரவின் இருட்டும், குளத்தில் குதித்த கருத்த உருவமும் அவனை பல இரவுகளில் தூங்க விடாமல் செய்திருக்கின்றன. இப்போது யோசிக்கையில் விழுந்தது பனை மட்டையாக இருக்குமோ என்றுகூட அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவனைவிட மகா தைரியப் பேர்வழியான அண்ணனே அலறி விழுந்தாரே. அதை நினைததால்தான் உடல கூசுகிறது. அது சின்னைய்யனின் ஆவியேதான்.
இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எப்படி இருக்கும் சின்னைய்யன் குளம்? ஒற்றைப் பனையில் இப்போதும் அதே மூர்க்கத்தோடு இருக்குமா அந்த ஆவி? ஊரைவிட்டுப்போன சில ஆண்டுகள் வரை ஊரார் யாரையேனும் பார்த்தால் விசாரிப்பான். ஆள் அரவமற்றே கிடப்பதாகத்தான் சொன்னார்கள். அந்த சம்பவத்தைச் சொல்கிறபோதெல்லாம் இவன் மனைவிகூட திகிலோடுதான் பார்ப்பாள்.
இப்போது மகளின் திருமண பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தவனுக்குள் எழுந்த அரிப்பு இரவெல்லாம் தூங்க விடவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளாய் அவனுக்குள் விடாமல் எழுகிற அரிப்பு. சொரிந்து சொரிந்து அடக்க முடியாத அரிப்பு.


நேற்று மாலை வந்தவுடன் உறவுகளையெல்லாம் தேடித்தேடி பத்திரிகை வைத்தான். ஊரே தலைகீழாக மாறியிருந்தது. பாதி விளைநிலங்களில் கான்கிரீட் வீடுகள் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தன. பெரியப்பாவின் பேரன் வீட்டில் இரவைக் கழித்து, காலையில் அரைகுறையாய் சாப்பிட்டு, இதோ இந்தக் காட்டுப்பாதையில் திகிலோடு காலடி வைத்தது முதலே பெரும் கல் விழுந்த நீர்ப் பரப்பாய் அலையடிக்கத் தொடங்கிவிட்டன எண்ணங்கள்.
எத்தனைமுறை ஓடிய மண் இது. எத்தனை முறை காட்டெலிகளைத்தேடி அலைந்த காடு இது. அடர்ந்த மரங்களைத் தொலைத்துவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த சாராய மரங்களால் வெக்கை வீசியது இப்போது. அங்கங்கே அவலட்சணமாய் குந்தியிருந்த ஆவாரஞ்செடிகளையும், காரை முட்செடிகளையும் கடந்து, தூரத்தில் நிற்கும் ஒற்றைப் பனையை கண்களுக்குள் வாங்கியதுமே மின்சாரம் பாய்ந்தது உடலுக்குள்.
சின்னைய்யனின் ஆவிக்கும் இப்போது இருபத்தைந்து வயதிருக்கும். என்றால் வாலிப வயது. மனிதன் வாலிப வயதில் துள்ளி விளையாடுகிறான். ஆவிகள் எப்படி இருக்கும்? அவைகளின் அதிகபட்ச ஆயுள் எவ்வளவு? கேள்விகளோடும், திகில்களோடும் பனையை நெருங்க நெருங்க அவனது இதய ஓட்டம் அதிகரித்தது. ஆனால் நடையின் வேகம் தளர்ந்தது.
வியர்க்க, மூச்சடைப்பது போன்ற திணறலுடன் ஒருவழியாய் குளத்தை எட்டிப் பார்த்தவன் அதிர்ந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது.
"அய்யோ... அடப்பாவிப் பசங்களே... ஓடுங்க... ஓடுங்க..." என்று அலறினான்.
வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. கண்கள் பிதுங்கிக்கொண்டு நின்றன. சின்னனாங்குளத்தில் ஒற்றைப் பனையின் கீழே கம்புகளை ஊன்றி வைத்து, ஏழெட்டுப் பிள்ளைகள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
முருகேசன் வாயடைத்துப் போய் நிற்க, அந்த நேரத்தில் மேலெழும்பிய பந்து சரியாக ஒற்றைப் பனையின் நெற்றிப் பொட்டில் அடித்துவிட்டு, சலசலவென மட்டைகளை உரசிக்கொண்டு கீழே இறங்கியது.


No comments:

Post a Comment