Monday, 7 May 2012

சுவிட்சர்லாந்து என்றாலே


தேனிலவு என்றவுடன் நினைவுக்கு வருவதும், வரி ஏய்ப்பு செய்த இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கின்ற நாடு என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் உள்ள மக்களிடமும் பரிச்சயமாகி உள்ள சுவிட்சர்லாந்து என்ற நாட்டில், அழகிய ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இருந்து எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அமைவிடம்:
swiss_400சுவிட்சர்லாந்து நாடு, ஐரோப்பாக் கண்டத்தில் வடக்கே ஜெர்மனி, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லீக்டென்ஸ்டெயின், மேற்கே பிரான்சு ஆகிய நாடுகளை அரணாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நாட்டின் நிலப்பரப்பு, தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குதான். எனவே, நாட்டின் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு 5 மணி நேரப் பயணத்தில் சென்று விடலாம். தலைநகரம் பெர்ன். இந்த நகரில்தான் நாடாளுமன்றம் உள்ளது. சூரிச், ஜெனிவா ஆகியவை வணிக நகரங்களாக விளங்குகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் 26 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித் தனி கொடிகள் வைத்து உள்ளனர். ஜெனிவா நகரில்தான் ஐ.நாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலகம் அமைந்து உள்ளது. ஐ.நாவின் அனைத்து அமைப்புகளின் அலுவலகங்களும் ஜெனிவாவாவில் அமைந்து உள்ளன. ஐ.நா சபை அலுவலகத்திற்கு அருகே வீற்று இருக்கின்றது உத்தமர் காந்தி சிலை.


சுவிட்சர்லாந்து நாடு அமைக்கப்பட்ட நாள் 01-08-1291. ஆதலால் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் நாளை வெகு சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். இங்கே குறைந்தது 1500 ஏரிகளாவது இருக்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் கண்டிப்பாக ஆறோ அல்லது ஏரியோ கண்டிப்பாக இருக்கின்றது. இங்கு உள்ள எல்லா நகரங்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால் அதிக வேறுபாடு இருக்காது.
மொழி:
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 80 லட்சம்தான். சூரிச் நகரத்தில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஜெர்மன், பிரென்ஞ், இத்தாலியன் மற்றும் ரோமனிக் ஆகியவை அரசு மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மன் மொழியை நாடு முழுவதும் பரவலாகப் பேசுகிறார்கள். பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் மொழிகள் அந்தந்த நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள இடங்களில் பேசப்படுகிறது. இங்கே உள்ள உணவகங்களில் உள்ள உணவு வகைகளின் அட்டைகளிலும், ஜெர்மன், பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு உள்ளன. ஆங்கில மொழியை வைத்து நகரப்பகுதிகளில் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம், ஆனால் கிராமப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் கடினம்.
வாழ்க்கை முறை:
காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்குச் சென்று, தேவையான பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து விலை போட்டால் கணினியில் செலுத்த வேண்டிய தொகை தெரியும். அதை வைத்து தேவையான பணத்தை கொடுத்து விடலாம், மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
சுவிட்சர்லாந்தின் பணம் ஃபிராங் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்று என்பதால், அனைத்துப் பொருட்களின் விலையும் மிக அதிகமாகத்தான் இருக்கும். ஆயினும் மனநிறைவு கிடைக்காது. அதிலும் குறிப்பாக உணவகங்களில் நாம் கொடுக்கின்ற விலைக்கு ஏற்ற உணவு, அளவு கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு காபி குடிக்க வேண்டுமானால் குறைந்தது 3.50 ஃபிராங் (இந்திய மதிப்பில் 190 ரூபாய்) கொடுக்க வேண்டியது இருக்கும்.
நான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எல்லைப்பகுதியில் உள்ள ஜெர்மனியின் நகரத்திற்கு முப்பது நிமிடங்களில் தொடர்வண்டியில் சென்று விடலாம். அங்கே உள்ள கடைகளில், அனைத்துப் பொருட்களும், சுவிட்சர்லாந்தை ஒப்பிடும்போது விலை பாதியாக இருக்கும். அதனால் வார இறுதி நாட்களில் அங்கே சென்று பொருட்களை வாங்கி வருவோம். அப்படியே நம்மிடம் வசூலித்த விற்பனை வரியையும் எல்லையில் இருக்கும் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கி திரும்பப் பெற்று கொள்ளலாம்.
சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக அமைதியை விரும்புவார்கள். இரவு 8 மணிக்கு மேல் சமைக்கும் சத்தம் கூட கேட்க கூடாது என்பதால், 8 மணிக்கு முன்னரே சமைத்து முடித்து விட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இங்கே உள்ள மக்கள் காலையில் 8 மணிக்கு முன்னரே அலுவலகத்துக்கு வந்து விடுவார்கள். மதிய உணவை 11.30 மணிக்கெல்லாம் உண்டு விடுவார்கள்.
மாலையில் விரைவாக வீட்டிற்குச் சென்று விடுவார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை மட்டும்தான். அதற்கு மேல் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வாரத்துக்கு 45 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க கூடாது என்ற விதி உள்ளது. இரவு உணவை 6.30 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்வார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு சுவிஸ் பாண்ட்யூ (Swiss Fondue) எனப்படும் சாக்லேட்களையோ அல்லது பாலாடைக்கட்டிகளை (Cheese) உருக்கி அதில் இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை முக்கி, அதை அப்படியே உண்கின்றனர். சுவிட்சர்லாந்து முழுவதும் இத்தாலியன் உணவகங்கள்தான் நிறைய உள்ளன.
சுவிட்சர்லாந்து என்றாலே உடனே நினைவுக்கு வருவது சாக்லேட், கடிகாரங்கள் மற்றும் கத்திகள். இவற்றை இங்கே குடிசைத்தொழிலைப்போலச் செய்கிறார்கள். எல்லாம் தரமானவையாகவும், உலகப் புகழ் பெற்றவையாகவும் உள்ளன. அதனால் விலை அதிகம்.
பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியும் இங்கே அதிகம். கிராமத்துப் பக்கம் சென்றால் ஏராளமான மாட்டுப் பண்ணைகளைக் காணலாம். ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் மணி தொங்கவிட்டு இருப்பார்கள். இங்கே தயாரிக்கப்படும் சாக்லேட்களைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 11.6 கிலோ சாக்லேட்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுவிட்சர்லாந்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்கள் உள்ளன. அவை பார்ப்பதற்குப் பழமையாக இருக்கும்; ஆனால் உறுதியாக உள்ளது. அதில் உள்ள ஆணிகள், நட்டுகள் இன்றைக்கும் பளபளப்பாக உள்ளன. அந்த அளவுக்கு துருப்பிடிக்காத எஃகினால் செய்து உள்ளார்கள்.
அழகிய ஆல்ப்ஸ்:
swiss_450ஆல்ப்ஸ் என்றாலே அனைத்து மக்களுக்கும் நினைவுக்கு வருவது சுவிட்சர்லாந்து மட்டுமே. உண்மையில் ஆல்ப்ஸ் மலை ஜெர்மனி, சுலோவேணியா, ஆஸ்திரியா, லீக்டென்ஸ்டெயின், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் எல்லாம் போர்வையைப் போல பரவிக் கிடக்கிறது. ஆனால் ஆல்ப்ஸ் மலை சுவிட்சர்லாந்தின் பரப்பளவில் 60 விழுக்காடு இருப்பதாலும், மற்றும் பல இடங்களில் மலைச் சிகரங்களுக்குச் செல்ல அனைத்து வழி வகைகளையும் செய்து உள்ளதாலும் இங்கு ஆல்ப்ஸ் மலை சிறப்பு மிகுந்ததாக உள்ளது. ஆனால், ஆஸ்திரிய பகுதியில்தான் ஆல்ப்ஸ் மிகுதியாகவும், அழகு மிகுந்தும் காணப்படுகின்றது. ஆனால், அங்கே உள்ள அனைத்து மலைச் சிகரங்களுக்கு செல்லப் போதுமான வழிவகைகள் இல்லாததால், சுவிட்சர்லாந்தின் மலைச்சிகரங்களில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து வழிகின்றனர். சுவிட்சர்லாந்தில் 13000 அடிகளுக்கு மேல் 100 மலைச்சிகரங்கள் உள்ளன.
மலைச்சிகரங்களுக்குச் செல்ல மலை ரயில்களும், கேபிள் கார்களும் மற்றும் சுற்றிச் சுழன்று செல்லும் கண்டோலாக்களும் அமைத்து உள்ளனர். கண்டோலாக்களில் அமர்ந்து ஆகாயத்தில் செல்லும்போது கீழே பூமியைப் பார்த்தால் இதை கட்டமைத்து உள்ள முறை வியப்பாக இருக்கிறது. ரயில்கள் மலைகளிடையே ஊர்ந்து செல்ல பல இடங்களில் மலையைக் குடைந்து குகைகளை அமைத்து உள்ளனர். மலையைக் குடைந்து குகைகளை அமைப்பதில் வல்லவர்கள் இவர்கள். மக்கள் பயணத்திற்குத் தேவையான அனைத்து போக்குவரத்து கட்டமைப்புகளையும் அமைத்து உள்ளனர். இருப்பினும் மென்மேலும் தொடர்ச்சியாக மலையைக் குடைந்து பயணப் பாதைகளை அமைத்து வருகின்றனர். இப்பொழுது சூரிச் நகருக்கும் இத்தாலியின் மிலன் நகருக்கும் இடையே உள்ள ஆல்ப்ஸ் மலையில் குகைகளை புதிதாகக் குடைந்து முடித்து உள்ளனர். தற்பொழுது அங்கே ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக, இதுவரையிலும் மொத்தமாகப் பத்து ஆண்டுகள் செலவழித்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த இரு நகரங்களுக்கும் இடையே ரயில் போக்குவரத்து உள்ளதே, புதிதாக எதற்கு இந்த குகை என்று கேட்டால், பயண நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் குறைப்பதற்காக என்கிறார்கள்.


இதைப்போல இவர்களுடைய எதிர்கால திட்டங்களைக் கேட்கும் போது வியப்பாக உள்ளது. சூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான ரயிலில் பயணம் செய்வதற்கு தற்பொழுது மூன்றரை மணிநேரம் ஆகும். அதில் பாதி நேரம் அழகிய ஆல்ப்ஸ் மலையிடையே ரயில் பயணம் இருக்கும். இந்தப் பாதையில் செல்லும்போது அழகிய ஆல்ப்ஸ் மலைகளையும், ஒரு மலைத்தொடரில் இருந்து மற்ற மலைத்தொடருக்கு செல்ல அமைத்துள்ள பாலங்கள் போன்ற கட்டமைப்புகளையும் ரசித்து மகிழலாம், சலிப்பே தோன்றாது. ஆல்ப்ஸ் மலையிலேயே நாள் முழுவதும் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தும் அமைந்து உள்ளது.
இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் வரும்போது ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் இரு மலைத்தொடர்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஒன்று இண்டர்லேகன் (Interlaken) நகரத்துக்கு அருகே உள்ள ஜங்புரோ(Jungfrau) என்ற மலைத்தொடர் (உயரம் – 11782 அடி), மற்றொன்று லூசர்ன் நகருக்கு அருகே உள்ள டிட்லிஸ் (Titlis) மலைத்தொடர் (உயரம் – 10627 அடி). இதில் ஜங்புரோ ஐரோப்பாவின் உயரமான மலைத்தொடர் (Top of Europe) என்று அழைக்கப்படுகிறது. இங்கே இந்திய உணவகம் அமைந்து உள்ளது. இருப்பதிலேயே உயரமான மலைத்தொடர் மாண்டே ரோசா (15,203 அடி), சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்து உள்ளது. ஆல்ப்ஸ் மலையின் அழகையும், பச்சைப்பசேல் என்று இருக்கும் சுவிட்சர்லாந்தையும் வருணித்துக் கொண்டே இருக்கலாம்.
பொழுதுபோக்கு:
இங்கு உள்ள மக்களின் முக்கியமான பொழுதுபோக்கே விதவிதமான விளையாட்டுக்கள்தான். கால நிலைக்கு ஏற்றவாறு விளையாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். சுவிட்சர்லாந்தில் வெயில் காலம், இலையுதிர் காலம், இளவேனிற்காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய பருவகாலங்கள் உள்ளன.
குளிர்காலம் என்றால் மலைத்தொடருக்குச் சென்று பனிச்சறுக்கு தொடர்பான விளையாட்டுகளையும், மீதம் உள்ள காலங்களில் மலையேற்றம், பைகிங் (சைக்கிலிங்) போன்ற விளையாட்டுகளையும் மேற்கொள்வார்கள். நமது ஊர்களில் பைக் என்றால் மோட்டார் சைக்கிளை குறிப்பிடுவோம், ஆனால் இங்கே சைக்கிளை, பைக் என்று குறிப்பிடுகிறார்கள், ஆதலால் பைகிங் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் உடலை காட்டுக்கோப்பாக வைத்து கொள்ள விரும்புவார்கள். எழுபது வயதானவர்கள் கூட கைகளில் குச்சிகளை வைத்துக்கொண்டு மலையில் இருந்து (10, 000 அடி) அடிவாரத்திற்கு வெயில் காலங்களில் நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
எனது அலுவலக நண்பர்கள் பலர் வாரம் இருமுறை மதிய உணவுக்குமுன் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடிவிட்டு (ஜாக்கிங்) வருவார்கள். 10 கி.மீ தூரத்துக்கு குறையாமல் இருக்கும். அதுவும் சமதளப்பகுதியில் அல்ல, மேடுகளைக் கொண்ட மலைப்பாதைகளில், அந்த அளவுக்கு சக்தி இருக்கும்.
swiss_620
இங்கே குழந்தைகளுக்கு இரண்டரை வயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர். ஓராண்டு இடைவெளியிலேயே தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளும் அளவுக்கு நன்கு பழகி விடுகின்றனர். குளிர்காலம் வந்துவிட்டால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் எங்கும் பனிச்சறுக்கு கருவிகளோடு மக்கள் குவிந்து இருப்பதைப் பார்க்கலாம். ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளில் இருந்தும் பனிச்சசறுக்கு விளையாட சுவிட்சர்லாந்துக்கு வந்து விடுவார்கள். நானும் ஒருமுறை முயற்சி செய்தேன்; கடினமாக இருந்தது; மறுமுறை வாய்ப்பு கிட்டவில்லை.
வெயில்காலம் வந்தால் ஆங்காங்கே அடுப்புகளில் விறகுகளைப் போட்டு எரித்து, அதன்மேல் கம்பி வலையை (Grill) வைத்து, பின் இறைச்சிகளை அதன் மேல் போட்டு சுட்டுத் தின்கிறார்கள் (Barbecue). ஆண்டு முழுவதுமே இங்கே சைக்கிளில் அலுவலகத்துக்கு வருகிறார்கள். பனிப் பொழிவின் போது கூட சைக்கிளில்தான் வருகிறார்கள்.
பொழுதுபோக்குக்கென்று திரை அரங்குகள் உள்ளன. ஜெர்மன் மொழியில்தான் திரைப்படங்கள் இருக்கும். இரவுக்காட்சி மட்டும் ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது புதிய தமிழ்ப் படங்களும் நமது ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் எடுத்து திரையிடுவார்கள்.
இந்திய திரைப்படங்களுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறையவே நடக்கின்றது. பல தமிழ் படங்களின் பாடல்களில் சுவிட்சர்லாந்தின் அழகைக் காணலாம்.
ஈழத் தமிழ் சொந்தங்கள்:
சுவிஸ் நாட்டில் உள்ள நமது ரத்த பந்தங்களான ஈழத் தமிழ்ச் சொந்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 90களில் இந்த நாட்டிற்கு ஏதிலியராகக் குடிவந்தவர்கள் 18,000 பேர் இருக்கலாம். இன்று 55,000 பேர்களாக உள்ளனர். இங்கே வருபவர்களை சில மாதங்கள் முகாமில் வைத்திருந்துவிட்டு, பின்னர் இந்தெந்த ஊர்களுக்கு இத்தனை பேர் என்று பிரித்து அனுப்பி, அவர்களுக்கு வேலை கிடைக்க வழியும் செய்து இருக்கின்றது அரசாங்கம்.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இன்று நல்ல வசதியுடன் கார், வீடு என வாழ்ந்து வருகின்றனர். உண்மையாக உழைப்பதனால் ஈழத் தமிழர்களை சுவிட்சர்லாந்து மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஈழத்தமிழர்கள் இந்திய உணவகங்கள் மற்றும் கடைகள் வைத்து வணிகம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. அவர்களே பல ஊர்களில் இந்துக் கோவில்களை நிறுவி, வழிபட்டு வருகின்றனர். சூரிச் நகரில் முருகன் கோவில் ஒன்றும், சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
குழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்க பயிற்றுவிக்க வகுப்புகள் எடுக்கின்றனர். எனவே, ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு நன்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்து உள்ளது. ஈழத்தமிழ் நண்பர்கள் ஈழத்தில் நடக்கும் அவலங்களைச் சொல்லுவதைக் கேட்கும்போதே நெஞ்சைப் பிசையும்.
கல்வி முறை:
சுவிட்சர்லாந்தில் ஜெர்மன் வழிப் பள்ளிகளில் கல்வி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளில் கல்விக்கு நிறைய பணம் செலுத்த வேண்டும். பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவுதான். இங்கே குழந்தைகளைப் படி படி என்று வற்புறுத்துவதே இல்லை. 7 வயது வரை அதிகமாக விளையாடத்தான் விடுவார்கள். அதற்கு அப்புறம்தான் A, B, C, D கற்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளை வாரம் ஒருமுறை அருங்காட்சியகத்துக்கோ அல்லது காட்டுக்கோ அழைத்துச் செல்வார்கள். செய்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தொடக்கக் கல்வி முடிக்கும்போதே அடுத்து அந்தக் குழந்தை என்ன படிப்புக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்து விடுவார்கள். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும் இங்கே உள்ளன.


19 வயதில் அனைத்து இளைஞ‌ர்களும் கட்டாயமாக ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும், பெண்கள் விருப்பப்ப‌ட்டால் செல்லலாம். ஆனால் இங்கே ராணுவத்தை தொழிலாகக் கொண்டு உள்ள வீரர்கள் மிகக்குறைவு.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. நோப‌ல் பரிசு வென்ற, உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்துதான் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை (Theory of Relativity) மேற்கொண்டார். அவர் பெர்ன் நகரத்தில் தங்கி இருந்த வீட்டை கண்காட்சியக‌மாக அமைத்து உள்ளன

No comments:

Post a Comment