Wednesday, 1 April 2015

சுகன்யா... 87

சுகன்யாவின் செல் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. சம்பத்குமார் என்ற பெயர் அதில் விடாமல் மின்னிக் கொண்டிருந்தது.

'சம்பத்... நான் இன்னொருத்தனை காதலிக்கறேன்... அவனோட என்னுடைய நிச்சயதார்த்தமும் முடிஞ்சிப்போச்சு... கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டியதுதான் பாக்கி... இந்த நிலைமையில நீங்க என்னை லவ் பண்றேன்னு சொல்றது சரியில்லே..." சம்பத்திடம் சுவாமிமலை ரயில்வே ஸ்டேஷனில் தான் பேசியதெல்லாம் சுகன்யாவின் நினைவில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

'சுகன்யா... நீ சொல்றதெல்லாம் எனக்கு நல்லாப் புரியுது. ஸ்டில் ஐ லவ் யூ... உன்னை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு, தூரத்துல இருந்து உன்னை நான் லவ் பண்றதுல யாருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?" தன் கேள்விக்கு தீர்மானமாக பதில் கொடுத்த அத்தான் சம்பத்தின் முகம் சுகன்யாவின் மனதில் சட்டென வந்து நின்றது.

'அத்தான்... உங்களை நான் ஒரு நல்ல ஃப்ரெண்டா நினைக்கிறேன்... லெட் அஸ் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்...' தங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தான் அவனுக்கு கொடுத்த பதிலும் சுகன்யாவின் நினைவுக்கு வந்தது.



இதெல்லாம் நடந்து ஏறக்குறைய ஒரு மாசாமாயிடுச்சி. இந்த ஒரு மாசத்துல சம்பத் என் கிட்ட பேசவேயில்லை. என் கல்யாணத்தேதியைப் பத்தி பெரியவங்ககிட்ட நான் என் எண்ணத்தை சொல்ல நினைக்கற சந்தர்ப்பத்துல, சரியா இவனோட போன் வருது?

இது என்ன ஆச்சரியம்? சம்பத்திடமிருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க விரும்பறேன். ஆனா அவன் விரும்பி வருகிறானே? நான் யாரை விரும்புகிறோனோ அவன் என்னை விட்டு கொஞ்சம் விலகுவது போல இருக்கே?

இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொருத்தரும் வேறு சிலரோடு ஏதோ ஒரு விதத்துல சம்பந்தப்பட்டிருக்கோம்ன்னு தாத்தா சொல்றது இதைத்தானா? இப்ப இவன் கிட்ட நான் பேசறதா வேண்டாமா? சுகன்யா குழம்பினாள்.

"யாரோட கால்டீ.. அப்படி வெளியிலே போய் சட்டுன்னு பேசி முடிச்சிட்டு வாடீ..." சுந்தரி தன் புருவத்தை நெறித்தாள். சுகன்யா எழுந்து வராந்தாவை நோக்கி நடந்தாள்.

'ஹாய்... சம்பத்... குட் ஈவினிங்..." சுகன்யா பூவாக மலர்ந்தாள்.

"குட் ஈவினிங்... தேங்க் யூ சுகன்யா... என்னை நீ ஞாபகம் வெச்சிருக்கே... இதை நினைக்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..." சம்பத்தின் குரல் இனிமையாக வந்தது.

"அத்தான் நீங்க என்னப்பேசறீங்க? உங்களை என்னால மறக்க முடியுமா?"

சுகன்யாவின் குரலில் இருந்த இனிமைக்கும் குறைவில்லை. சம்பத்திடம் பேச ஆரம்பித்ததும், அவள் உற்சாகமாகிவிட்டாள். மனதில் எழுந்த உற்சாகத்தில், ஓசையெழுப்பாமல் தன் பின்னால் வந்து நின்ற செல்வாவை அவள் கவனிக்கவில்லை.

"என்னமோ மனசுல பட்டதைச் சொன்னேன்..." மறுமுனையில் சம்பத் கிண்டலடித்தான்.

"சம்பத்... எனக்கு நல்லா ஞாபகமிருக்கு... பெங்களூர் போனதும் முதல்லே உனக்குத்தான் போன் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சு... இதுல என்னை நீ மறந்துடலேயேன்னு கிண்டல் வேற... உங்களை மாதிரி ஆளையெல்லாம் நான் என் ஃப்ரெண்டுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நல்லாருக்கு உங்க கதை."

இந்த சனியன் புடிச்ச சம்பத் இப்ப எதுக்கு இவளுக்கு போன் பண்றான்...? உன்னை என்னால மறக்கமுடியுமான்னு இவ எதுக்கு அவன் கிட்ட இளிக்கிறா? அவன் இவளுக்கும் எனக்கும் சேர்த்து மொத்தமா வெச்ச ஆப்பைப் பத்தி தெரிஞ்சா இவ இப்படி ஹீ ஹீன்னு இளிப்பாளா? செல்வாவின் முகம் சட்டென சுருங்கியது.

"அயாம் சாரி சுகன்யா..."

"பரவாயில்லே சொல்லுங்க... என்ன விஷயம்..?'

"நான்தான் உனக்கு கால் பண்ணலே... என்னை பெரிசா உன் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறே... நீயாவது எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம் இல்லியா?"

"அப்ப நீங்க எனக்கு ஃப்ரெண்டு இல்லையா? சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன வேணும்?" சுகன்யா கலகலவென சிரித்தாள்.

"யெஸ்... நீ என் ஃப்ரெண்ட் மட்டுமில்லே... அதுக்கும் மேலே..." சம்பத் மென்மையாக பேசினான்.

"அதுக்கும் மேலேன்னா...?"

"நீ என் மாமா பொண்ணு... எனக்கு உறவுக்காரி.."

"ஓ.கே. ஐ காட் இட்..." சுகன்யா மீண்டும் சிரித்தாள்.

"அப்ப நீ எனக்கு போன் பண்ணியிருக்கணுமா வேணாமா?"

"சாரி அத்தான்.. நானும் இங்கே கொஞ்சம் பிஸியாகிட்டேன்... ஆஃபிசுலே தலைக்கு மேல வேலை... நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..."

அத்தான் என்னா அத்தான்..? என்ன மசுருக்கு அந்த நாயை இவ உறவைச் சொல்லி கொஞ்சறா? திரும்ப திரும்ப இளிக்கறா... செல்வா மனதுக்குள் கருக ஆரம்பித்தான்.

"இட்ஸ் ஆல் ரைட் சுகா... ஹவ் ஈஸ் லைஃப்?"

"ம்ம்ம். என்னமோ போய்கிட்டு இருக்கு..." இழுத்தாள் சுகன்யா.

"என்னம்ம்மா கல்யாணப்பொண்ணு ரொம்ப டல்லடிக்கறே... எப்ப விருந்து சாப்பாடு போடப் போறே?"

"ம்ம்ம்.. அதைப்பத்தித்தான் இப்ப எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிகிட்டு இருந்தோம்.."

எங்க கல்யாணத்தைப்பத்தி அவன் கிட்ட என்னப்பேச்சு இவளுக்கு...? செல்வா கொதித்துப்போனான்.

முன் தினம் கடற்கரையில் சுகன்யாவை தனியாக சந்தித்தப்பின், அவர்களுக்கு இடையில் இருந்த ஒரு வாரப் பிரச்சனை, மீனாவின் முயற்சியால், ஒரு வாறாக முடிவுக்கு வந்திருந்த நிலைமையில், சம்பத்திடமிருந்து சுகன்யாவுக்கு வந்த போன் காலால், செல்வாவின் மனதுக்குள் மீண்டும் எரிச்சல் முளைவிடத்தொடங்கியது.

"சாரி சுகா.. அப்படீன்ன்னா நான் அப்புறமா உன்னைக் கூப்பிடறேன்..." சம்பத் இழுத்தான்.

"பராவயில்லே நீங்க சொல்லுங்க..." சுகன்யா கர்டஸிக்காகச் சொன்ன போதிலும், வீட்டினுள் பெரியவர்கள் எல்லோரும் தனக்காக காத்திருப்பதை நினைத்தப்போது சட்டென மனசுக்குள் சிறிது டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் அவள்.

"சுகன்யா... உனக்காக எல்லோரும் உள்ள காத்துக்கிட்டு இருக்காங்க..." இதுதான் சமயமென எரிச்சலுடன் செல்வா பின்னாலிருந்து சற்று உரக்கவே பேசினான்..

"ஒரு நிமிஷம் செல்வா.. இதோ வந்துட்டேன்ம்பா.." சுகன்யா அவனுக்கும் பதில் சொன்னாள்.

செல்வா எப்ப வந்தான்...? நான் பேசினதையெல்லாம் இவன் கேட்டிருப்பானோ? ஒரு வினாடி திடுக்கிட்டாள் சுகன்யா.

"பக்கதுல யாரு சுகன்யா? எங்கே இருக்கே நீ" சம்பத் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பினான்.

"சம்பத்... இன்னைக்கு என் வுட்பீயோட தங்கை மீனாவுக்கு பர்த் டே... அதுக்காக என் பேரண்ட்ஸோட நான் அவங்க வீட்டுக்கு வந்திருக்கேன்.." சுகன்யா மென்று விழுங்கினாள்.

"சுகன்யா... கண்டவன் கிட்டல்லாம் என் தங்கச்சியைப் பத்தி பேசாதே ப்ளீஸ்..." செல்வா எரிந்து விழுந்தான். அவன் கூவியது மறுமுனையில் இருந்த சம்பத்துக்கும் தெளிவாகக்கேட்டது. சுகன்யா திடுக்கிட்டுப் போனாள். 

"செல்வா.. வாட் ஈஸ் திஸ்?" செல்வாவின் எரிச்சல் சுகன்யாவுக்கும் சட்டென தொற்றிக்கொண்டது. ஒரு வினாடி அவளையும் மீறி அவள் குரல் உயர்ந்தது.

"சுகன்யா... பிளீஸ்... லிசன் டு மீ... திஸ் ஈஸ் வாட் அயாம்... டிரை டு அண்டர்ஸ்டேண்ட் மீ..."

செல்வாவின் குரலில் வேப்பங்காயின் கசப்பிருந்தது. செல்வா பேசியது சம்பத்துக்கும் வார்த்தைக்கு வார்த்தை தெளிவாகக் கேட்டது. அவன் பேசியதில், அவன் குரலில் தெறித்த வன்மத்தை மறுமுனையில் இருந்த சம்பத் தெளிவாக உணர்ந்துகொண்டான். தன்னால், தன் ஒரு போன் காலால், தேவையில்லாமல் சுகன்யாவுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டதேயென அவன் உண்மையாகவே மனசுக்குள் வருத்தப்பட்டான்.

"சுகன்யா.. அயாம் சாரி.. யூ கேரி ஆன்.. பிளீஸ்... ரியலி அயாம் சாரி டு ஹேவ் டிஸ்டர்ப்ட் யூ... மை சின்சியர் அப்பாலஜிஸ் டு யூ..." சம்பத் மன்னிப்பு கோரும் குரலில் பேசினான். அவன் குரலில் சுத்தமாக உயிர் இல்லை.

"சம்பத்... நான் சொல்றதை ஒரு செகண்ட் கேளுங்க..." சுகன்யா சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. அவள் அவனுக்கு பதில் சொல்வதற்குள் சம்பத் காலை கட் செய்துவிட்டிருந்தான்.

செல்வா... நான் என் ஃப்ரெண்டுக்கிட்ட பேசிட்டிருந்தேன். இப்ப நீ நடந்துகிட்ட விதம் உனக்கே நல்லாயிருக்காப்பா?" சுகன்யாவின் குரல் உடைந்து அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

"ஸோ வாட்... என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சரியாத்தான் நடந்துகிட்டேன்?" செல்வாவின் குரலில் அகம்பாவம் துள்ளியது.

"அப்ப நான் என்னத் தப்பு பண்ணிட்டேன்..? நீ என் வுட்பி இல்லையா? மீனா உன் தங்கையில்லையா? அவளைப்பத்தி பேச எனக்கு உரிமையில்லயா?"

"எதை யார்கிட்ட பேசணும்.. எந்த விஷயத்தை யார்கிட்ட சொல்றதுன்னு ஒரு வரைமுறையிருக்கு... ரோட்ல போற கண்ட நாய்கிட்டேயெல்லாம் என் குடும்பத்தைப்பத்தி நீ பேசறது தப்புன்னு நான் நினைக்கிறேன்..." செல்வாவின் முகம் கல்லாகியிருந்தது.

"செல்வா... தென் யூ ஆர் ராங்... சம்பத் தெருல போற நாய் இல்லே... அவர் என் அத்தைப் பையன்... அவரைப்பத்தி பேசும் போது நீயும் கொஞ்சம் மரியாதையாகப் பேசினா நல்லாருக்கும்..." சுகன்யா நிதானமாக பேசினாள்.

"என்னைவிட... என் குடும்பத்தைவிட உனக்கு அந்த பொறுக்கி முக்கியமா போயிட்டான் இல்லையா?"

"செல்வா வார்த்தையை அள்ளிக்கொட்டாதே..? கொட்டினதை பொறுக்கி எடுக்கறது ரொம்பக் கஷ்டம்.."

"உனக்கு அவனைப்பத்தி முழுசா தெரியாதுடீ... அவன் பண்ணக்காரியம் உனக்குத் தெரியாது? தெரிஞ்சா நீ அவனுக்கு இப்டி இப்டி வக்காலத்து வாங்க மாட்டே" செல்வாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"செல்வா.. எனக்கு எல்லாம் தெரியும்...?"

"என்ன சொல்றே நீ...?"

"உனக்கும் சம்பத்துக்கும் நடுவுல நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றேன்.."

"தெரிஞ்சுமா நீ அவன் கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கே? அதுவும் என் எதிர்லேயே கொஞ்சறயே?"

"அவருதான் தான் பண்ணத் தப்புக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு இல்லையா? இந்த உலகத்துல தப்பே பண்ணாதவங்க யார் இருக்காங்க?"

"அந்த நாய் ஒரு தரம் மன்னிப்பு கேட்டுட்டா போதுமா? ஐ டோண்ட் லைக் ஹிம்..?" செல்வா மீண்டும் தன் முகத்தை கோபமாகச் சுளித்தான். அவன் இடது கரம் நடுங்கிக்கொண்டிருந்தது.

"உனக்கு அவரைப்பிடிக்கலேன்னா நீ அவர்கிட்ட பேசவேண்டாம்.. எனக்கு வேண்டியவங்ககிட்ட, என் உறவுகாரங்ககிட்ட, எனக்கு பிடிக்கறவங்க கிட்ட நான் பேசறதை நீ எதுக்கு வேண்டாங்கறே?"

"யெஸ்... சுகன்யா... நான் சொல்றதை நீ காது குடுத்து நல்லாக் கேட்டுக்கோ... அவன் கிட்ட நீ பேசறது எனக்குப் பிடிக்கலே... சுத்தமா பிடிக்கலே..."

"செல்வா... பிளீஸ்... இப்பல்லாம் நீ எப்பவும் சண்டை போடற மூடுலேயே இருக்கே... இது ஏன்னு எனக்கு புரியலே... சட்டு சட்டுன்னு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்காக நீ என்கிட்ட எரிச்சல் படறேன்னு தெரியலே..."

"சுகன்யா... நான் எரிச்சல் படறேனா? உனக்கு நல்லதைச் சொன்னா நீதான் எரிச்சல் படறே...!? யார் தேவையில்லாம எரிச்சல் படறதுங்கற கேள்வியை உன்னை நீயே ஒரு தரம் கேட்டுக்கோ..."

"ம்ம்ம்... அப்புறம்..."சுகன்யாவும் தன் அடிக்குரலில் சீறினாள்.

"இப்ப இங்க நடந்ததையெல்லாம், நீ பேசினதையெல்லாம். உன் வீட்டுக்குப் போய் நிதானமா ஒரு தரம் யோசனை பண்ணிப்பாரு. புரியலேன்னா உன் அம்மாக்கிட்ட கேளு. உன் தாத்தாக்கிட்ட கேளு. நான் பண்ணது சரியா.. இல்லே நீ பண்றது சரியான்னு அவங்க உனக்குப் புரிய வெப்பாங்க. அவங்க சொல்றதும் உனக்குப் புரியலேன்னா. வேற வழியே இல்லே... இனிமே உனக்கும் எனக்கும் அந்த ஆண்டவன் விடறதுதான் ஒரே வழி..."

செல்வா வீட்டுக்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தான். மனதுக்குள் பொங்கி வந்த கோபத்தை வெகு சிரமத்துடன் அடக்கிக்கொண்ட சுகன்யா, வராண்டாவிலிருந்த நாற்காலில் சரிந்து உட்கார்ந்தாள். நீளமாக ஒரு முறைப் பெருமூச்சு விட்டாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

ஓ மை காட்... வாட் ஈஸ் ஹேப்பனிங் வித் மீ? அவள் தன் தலையில் தன் இரு கரங்களையும் அழுத்திக்கொண்டாள்.

நான் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசக்கூடாதா? இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய லெக்சரா? சத்தமேயில்லாம என் பின்னாடி வந்து நின்னு நான் பேசறதை ஒட்டுக்கேக்கறான்... சுத்தமா நாகரீகமே இல்லாம நடந்துகிட்டு நான் பண்ணது தப்புங்கறான். எனக்கு எதுவும் புரியலேங்கறான்... நான் என்னக் குழந்தையா?

ஆண்டவன் விட்ட வழிங்கறான்... என்ன உளர்றான் இவன்...? இவன்கூட கடைசீ வரைக்கும் எப்படி என் காலத்தை ஓட்டப்போறேன் நான்? அவளுக்கு நடு மண்டை வலிப்பது போலிருந்தது. அந்த இடத்தை விட்டு எழுந்து எங்காவது ஓடவேண்டும் போலிருந்தது.



தன் மனசுக்குள்ள என்னப்பத்தி இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? சுகன்யா என்ன இவன் வீட்டு குப்பையில முளைச்சிருக்கற கிள்ளுகீரையா? இவன் நினைச்சா என்னை கிள்ளி வீசிடுவானா?

இல்லே இவன் வீட்டு முத்தத்துலே, காத்துல அடிச்சி, பறந்து வந்து விழுந்திருக்கிற எச்சையிலைன்னு என்னை நெனைக்கறானா? எந்தத் தைரியத்துல இவன் இப்படியெல்லாம் பேசறான்?

சுகன்யா பொறுடீ... செல்வா மூடுதான் சரியில்லேன்னா... உன் மூடையும் நீ ஏன் இப்பக் கெடுத்துக்கறே... தேவையில்லாம எதையொதையோ கன்னாபின்னான்னு ஏன் யோசிக்கறே?

இப்ப என்ன ஆயிடிச்சி... தெளிவா தெரியுது... சம்பத் கூட நீ பேசினது அவனுக்குப் பிடிக்கலே.. இப்ப பேசாம இரு.. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது ஒரு தரம் பொறுமையா இதைப்பத்தி பேசு... கோபப்படறதுல என்ன பிரயோசனம்?

சம்பத்தைப் பத்தி அவன் மனசுக்குள்ள அப்படி என்னதான் தப்பா இருக்குன்னு தெரிஞ்சிக்கோ... அவசரப்படாதே... ஆம்பிளை அவசரப்படும் போது பொம்பளை பொறுமையா இருக்கணும்ன்னு உன் பாட்டி சொல்றதை ஞாபகத்துலே வெச்சிக்கோ...

சுகன்யா தன் முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். மனதுக்குள் ஒரு முடிவுடன் ஹாலுக்குள் நுழைந்தாள். 


"வாம்மா சுகன்யா... உக்காரு... டெல்லிக்கு நீ போறதுக்கு முன்னாடியே உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்ன்னு ஆசைப்படறியாமே? இப்பத்தான் உங்கம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." முகத்தில் புன்னகையுடன் நடராஜன் அவளைப் பார்த்தார்.

"அங்கிள்... நான் என்னமோ அப்படித்தான் ஆசைப்பட்டேன்... ஆனா.."

"சொல்லும்மா... தயங்காம சொல்லு..." மல்லிகா அவளை உற்று நோக்கினாள்.

"அத்தே... என் ஆசைக்காக நான் உங்க யாரையும் அனாவசியமா தொந்தரவு பண்ண விரும்பலே... இருக்கற ரெண்டு வாரத்துலே எவ்வளவு காரியங்களை செய்து முடிக்கணும்... எனக்கும் சட்டுன்னு லீவு கிடைக்குமான்னு தெரியலே..." சுகன்யா செல்வாவை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தாள். சட்டெனத் தன் தலையை குனிந்து கொண்டாள்.

"இதுல தொந்தரவு என்னம்மா இருக்கு... உங்க சவுகரியம்தானே எங்களுக்கு முக்கியம்... உன் விருப்பத்தை நீ சொல்லு... காரியங்களை பாக்கப் போறது நாங்கதானே? நீ கடைசியா ஒரு வாரம் லீவு எடுத்துக்கோ..."

"உங்க மாமா இருக்கார்... சூரனா என் சீனு இருக்கார்... உங்கப்பா சொன்ன மாதிரி இருபது நாள்லே உங்கக் கல்யாணத்தை தடபுடலா நடத்திடமுடியுங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு..." நடராஜன் குமாரசுவாமியைப் பார்த்தார். சீனுவையும் ஒரு முறை பார்த்தார்.

"ஆமாம் அங்கிள்..." சீனு தலையாட்டினான்.

"இல்லே அங்கிள்... மூணு மாசம்தானே... ட்ரெயின்ங் முடிஞ்சி நான் திரும்பி வந்ததுக்கப்புறமே நிதானமா அவசரமில்லாம டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்... இப்ப நீங்க அவசர அவசரமா எந்த ஏற்பாடும் எங்க கல்யாணத்துக்காக செய்ய வேண்டாம்." சுகன்யா தன் தலையை நிமிர்த்தவில்லை. செல்வா தெரு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"சரிம்மா... உன் இஷ்டம்... அப்ப நாங்க எங்க சவுகரியப்படி மூணு மாசத்துக்கு அப்புறமா ஒரு தேதி ஃபிக்ஸ் பண்ணிடலாம் இல்லியா?"

"செய்யுங்க அங்கிள்..."

"நடராஜன் நேரமாச்சு.. அப்ப நாங்க கிளம்பறோம்... உங்க எல்லார்கிட்டவும் உத்தரவு வாங்கிக்கறோம்..." குமாரசுவாமி பொதுவாக கையைக் கூப்பினார்.

"போயிட்டு வர்றேன் மீனா... ஆல் த பெஸ்ட்..." மீனாவின் கையை ஒரு முறை பிடித்து அழுத்திய சுகன்யா, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், விறுவிறுவென தெருவுக்கு நடந்தாள். தங்கள் காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். சிவதாணுவும், கனகாவும் ஏற்கனவே காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

செல்வா ஒரு மரியாதைக்குகூட தெரு வரை வரவில்லை. நடராஜனும் மல்லிகாவும் மட்டுமே அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.

பத்து நிமிஷத்துக்கு முன்னாடீ முகம் கொள்ளாத சிரிப்போட இருந்த சுகன்யாவுக்கு தீடீர்ன்னு என்னாச்சு...? செல்வா ஏன் இப்படி ஒரு இடியட் மாதிரி நடந்துக்கறான்.. வந்தவ என்னை நினைப்பாங்க? சீனுவும் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

சுகன்யாவுக்கு ஏதோ ஒரு போன் வந்திச்சி... எழுந்து தெருவுக்கு போனா... செல்வாவும் அவ பின்னாடியே எழுந்து போனான்.. வரண்டாவுல என்ன நடந்ததுன்னு தெரியலே?

அவங்களுக்குள்ள ஏதோ சின்ன வாக்கு வாதம் நடந்திருக்கணும்... வீட்டுக்குள்ள வந்த செல்வாவும் டல்லடிக்கறான். அவன் பின்னாடியே உள்ளே ஹாலுக்கு வந்த சுகன்யாவும் உம்முன்னு இருக்கா? மீனா தன் மனசுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

"செல்வா என்னடா ஆச்சு?" சீனு வராண்டா சேரில் உட்கார்ந்திருந்த செல்வாவை ஜாடையாகக் கேட்டான்.

"புல் ஷிட்..." செல்வா அடிக்குரலில் சீனுவுக்கு மட்டும் கேட்குமளவிற்கு உறுமினான்.

செல்வாவா இப்படி பேசறான்? அதுவும் எங்கிட்ட...? சீனு நிஜமாகவே ஒரு வினாடி அதிர்ந்து போனான். மீனா, சீனுவின் முழங்கையை அழுத்தினாள். 

அன்று ஞாயிற்று கிழமையாக இருந்த போதிலும், சங்கர் ஏதோ அவசர வேலையென்று தன்னுடைய அலுவலகத்திற்கு காலை ஒன்பது மணிக்கெல்லாம், வேணி கட்டிக்கொடுத்த தயிர்சாதத்தையும், உருளைக்கிழங்கு வறுவலையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிவிட்டிருந்தான்.

வேணியின் மாமியார் வசந்தியின் தங்கைக்கு சுகமில்லையென தகவல் தெரிந்து, அவளைப் பார்த்துவிட்டு வரலாமென அவளுடைய மாமானர் மாமியார், இருவரும் மதுராந்தகம் வரை போயிருந்தார்கள்.

லீவு நாட்களில் வீட்டு வேலை முடிந்ததும், வேணி, சுகன்யாவின் அறையில், அவளுடன் அரட்டையடித்துக்கொண்டு இருப்பாள். சுகன்யாவும் தன் தாய் தந்தையருடன் திருவான்மியூரில் புதிய வீட்டில் குடியேறிவிட்டதால், வீடு வெறிச்சென்று கிடந்தது. அவளுக்கு பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாமல் போகவே வேணிக்கு தனிமை வெகுவாக போரடித்தது.

கொல்லையில் வேப்பமரத்தடியில் சற்று நேரம் காற்றாட உட்கார்ந்து கொண்டிருக்கலாமென வேணி கையில் எம்.பி.3 டிஜிட்டல் பிளேயருடன் கிணற்றடிப்பக்கம் போனாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு இலைகூட அசையவில்லை. வெப்பம் புழுங்கித்தள்ளியது. பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் அங்கு தனியாக உட்க்கார்ந்திருக்க முடியவில்லை.

போரடிக்குது. சுத்தமா பொழுது போகலே. எவ்வளவு நேரம்தான் விட்டத்தைப் பாத்துக்கிட்டு ரூமுக்குள்ளவே மல்லாந்துக் கிடக்கறது? ரொம்ப நேரம் படுத்திருந்தா முதுகு வலிக்குது. உட்கார்ந்திருந்தா கால் வீங்குது... புடவைக்குள் மேடிட்டிருந்த தன்னுடைய வயிற்றை ஒரு முறை மேலும் கீழுமாக பெருமிதத்துடன் தடவிக்கொண்டாள் வேணி.

வேணியின் மனசு மகிழ்ச்சியில் மயிலிறாக காற்றில் பறந்தது. இன்னும் ஆறு மாசத்துல ஒரு குட்டி சங்கரோ, இல்லே ஒரு குட்டி வேணியோ இந்த வீட்டுக்குள்ள வந்துடும். அப்புறம் அந்த குட்டி பொன்வண்டைப் பாத்துக்கறதுக்கே எனக்கு நேரம் போதாது. இப்படி பொழுது போகலேன்னு எரிச்சல்பட வேண்டிய அவசியமேயில்லை. வேணியின் உதடுகளில் புன்முறுவல் எழுந்தது.



மெல்ல எழுந்து, புறக்கடை கதவைத் தாளிட்டுக்கொண்டு, தன் படுக்கையறைக்குவந்து ஏஸியை ஆன் செய்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு டீவியில் வரும் தமிழ் சீரியல்கள் எதையும் பார்க்க சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சங்கர் தன்னோட லேப்டாப்ல புதுசு புதுசா இங்கிலீஷ் படங்கள் வெச்சிருப்பானே...!! அதுல எதையாவது ஒண்ணைப் பாக்கலாமா? தீடிரென அவள் மனதில் சினிமா பார்க்கும் எண்ணம் எழுந்தது. அப்படி புதுப்படம் எதுவும் இல்லேன்னா யூ ட்யூப்ல எதாவது குறும்படம் பாக்கலாமா?

சங்கரின் லேப்டாப்பை திறந்து பொழுது போவதற்காக அவன் சேமித்து வைத்திருக்கும் வீடியோ ஃபைல்களை நோண்டினாள் வேணி.



No comments:

Post a Comment