Wednesday, 1 April 2015

சுகன்யா... 86

"மீனா நீ ரொம்பவே லக்கிடீ... படிச்சி முடிக்கறதுக்கு முன்னாடியே உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிடிச்சி... இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள்... சந்தோஷமா ஹேப்பியா இரும்மா..."

செல்வாவின் இல்லத்தில், மீனாட்சியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்று கூடிய அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அவளை வாழ்த்த வந்த விருந்தினர்கள், அனைவரின் மனம் குளிரும் வண்ணம் நடராஜன் மல்லிகா தம்பதியினரால், உபசரிக்கப்பட்டார்கள்.

மனம் மகிழ்ந்த நண்பர்கள், உறவினர்கள், உளமார மீனாட்சியை வாழ்த்தி விடை பெற்றனர். ஹாலில், நடராஜன், குமாரசுவாமி, ராகவன், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே, மனதில் பொங்கும் மகிழ்ச்சி, முகத்தில் தெரிய, உற்சாகமாக, பேசிக்கொண்டிருந்தனர்.


"சீனு... ரொம்ப சந்தோஷம்ப்பா... நீயும் மீனாவுமா சேர்ந்து ஒரு நாள் காலங்காத்தால என் பிளட் பிரஷரை ஏத்தினேளே... அன்னேலருந்து நான் என் வீட்டு மாடியில வேஷ்டியை ஓணர்த்தறதுக்கு வர்றதேயில்லை... " ராமசாமி சிரிப்பு பொங்கி பொங்கி வந்தது.

"மாமா... உங்காத்துல நீங்க கோமணத்தை வேஷ்ட்டின்னு சொல்லுவேளா?" சீனு பதிலுக்கு அவரை நக்கலடித்தான்.

"நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க... தலையும் புரியலே... வாலும் புரியலே" சிவதாணு ராமசாமியை குழப்பத்துடன் பார்த்தார்.

"இனிமே சீனுவும், மீனாவும் இந்தாத்து மாடிப்படிக்கட்டுக்கு கீழே எப்ப வேணாலும் நிண்ணுன்டு, உக்காந்துண்டு, சிரிச்சுண்டு, சந்தோஷமா அரட்டையடிக்கலாம்னு சொல்றேன்..." ராமசாமி மீனாவை நோக்கி சிரித்தார்.

"மாமா.. சும்மா இருங்க... ப்ளீஸ் எல்லார் எதிரிலேயும் என் மானத்தை வாங்காதீங்க மாமா..." மீனா வேகமாக பாய்ந்து சென்று, ராமசாமியின் வாயைப் பொத்தினாள். நடராஜனும், மல்லிகாவும் வாய்விட்டு சிரித்தார்கள்.

ராமசாமி என்ன சொல்கிறார், மீனா ஏன் இப்படி பதறுகிறாள், நடராஜனும் மல்லிகாவும் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், சீனுவின் முகத்தில் ஏன் இத்தனை வெட்கம், என்ற விஷயம் புரியாமல், கூடத்திலிருந்தவர்கள் அவர் முகத்தை திகைப்புடன் பார்த்தார்கள்.

"மாமா.. நீங்க நாரதர்... உங்க கலகத்தாலே எங்க ரெண்டு பேருக்கும் நல்லதுதான் நடந்திருக்கு... ஒரு விஷயம் சொல்றேன்... நல்லாக்கேட்டுக்கோங்க; எப்பவும் தலையில மப்ளர் மட்டும் சுத்திண்டு, இருட்டு நேரத்துல தெருவுல நடக்காதேள்... எனக்கே உங்களை அடையாளம் தெரியமாட்டேங்கறது... அப்புறம் நொண்டிக்கருப்பன், உங்களை எப்படி தெரிஞ்சுப்பான்?"

"என்னைப்பாத்து நொண்டிக்கருப்பன் கொலைக்கறான்னு திரும்பவும், ஹிண்டுவுக்கு கம்பெளைய்ன்ட் எழுதி போடாதேள்." சீனு அவரைத் தன் வழக்கப்படி சீண்டினான்.

"டேய் சீனு... அந்த நொண்டி கருப்பனுக்கு பிஸ்கோத்து வாங்கி போட்டுட்டு, அவனை என் பின்னாடீ "சூ... சூ"ன்னு, என் பின்னால ஏவிவிட்டு, என்னைத் தொறத்த வெக்கிற விஷயம் நேக்கு நன்னாத் தெரியும்டா..." ராமசாமியும் விடாமல் அகடவிகடம் பண்ணிக்கொண்டிருந்தார்.

"மாமா... சாரி மாமா.. ஏதோ விளையாட்டுக்கு ஒருதரம் அப்படி நான் பண்ணிட்டேன்... பெரியவர் நீங்க... இதையெல்லாம் மனசுலே வெச்சுக்காதேள்..." அவர் பாணியிலேயே, அவர் பேசுவது போல் மிமிக்ரி செய்து சீனுவும் அவரை கலாய்த்தான்.

"நீங்க ரெண்டு பேரும், சீக்கிரமா கல்யாணம் பண்ணிண்டு, பெரியவா ஆசீர்வாதத்தோடு, காலாகாலத்துல குழந்தை குட்டிகளை பெத்துக்கிட்டு, நீண்ட ஆயுசோட, நல்லபடியா குடும்பம் நடத்தணும். அதை நான் என் கண்ணாலாப் பாக்கணும்..." மனமார வாழ்த்தினார் ராமசாமி.

"தேங்க் யூ மாமா.. " சீனுவும், மீனாவும் கோரஸாக கத்தினார்கள்.

"புரியறது... புரியறது... நான் கிளம்பிண்டே இருக்கேன்... கிளம்பேன்டீ..."தன் மனைவியை நோக்கி உரக்கக் கூவினார்.

"நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷம் வந்தே ஆகணும்..!" சிவதாணுவையும், கனகாவையும், விடாப்பிடியாக, ராமசாமிஅய்யர் தம்பதியினர் தங்களுடன் இழுத்துக்கொண்டு கிளம்பினர்.


“ஹேப்பி பர்த்டே டு யூ மீனா...!!!”

மீனாவின் வலது கையில், தான் முதல் நாள் அவளுக்கென வாங்கிவைத்திருந்த ரிஸ்ட் வாட்சை அணிவித்து, அவள் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள் சுகன்யா.

“தேங்க் யூ... சுகன்யா... தேங்க் யூ... வேலைக்கு போகணுமே... புது வாட்ச் ஒண்ணு வாங்கணும்ன்னு மனசுக்குள்ளவே நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... ப்யூட்டிஃபுல்லா இருக்கு... மீனா உண்மையான மகிழ்ச்சியுடன் சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"பத்து நிமிஷத்துல நீ சொன்ன மாதிரியே உன் அண்ணனை என்கிட்ட பேச வெச்சியே... நான்தான்டீ உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.." சுகன்யா அவள் காதைக்கடித்தாள்.

"மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்றேன்; சுகன்யாவை பேர் சொல்லி கூப்பிடற வேலையை நீ விட்டுடு..." மல்லிகா அவளை முறைத்தாள்.

"அத்தே.. நான் இந்த வீட்டுக்கு நிரந்தரமா வந்ததுக்கு அப்புறம் மீனா என்னை என் உறவைச் சொல்லி அழைக்கட்டும்... அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தான்... அவளுக்கு மனசுல எப்படித் தோணுதோ அப்படியே என்னைக் கூப்பிடட்டும்.." மீனாவுக்கு வக்காலத்து வாங்கினாள் சுகன்யா.

"இந்தாம்மா மீனா... இதை வாங்கிக்கோ; இது எங்களோட ஆசிர்வாதம்..."சுந்தரி ஒரு புடவையை அவள் கையில் திணித்தாள்."

"ஏய்... மீனா.. அவங்க ரெண்டு பேர் கால்லேயும் விழுந்து வாங்கிக்கடீ..." மல்லிகா முணுமுணுத்தாள்.

"அதுக்கெல்லாம் ஒண்ணும் அவசியமில்லேம்மா..." குமாரசுவாமி சட்டென எழுந்து மீனாவை தடுத்து நிறுத்தினார்.

"சீனு... கங்கிராட்ஸ்... உன்னோட லைப் பார்ட்னர் செலக்ஷ்ன் ரொம்பவே சூப்பர்... சந்தோஷமா இருங்க..." சுந்தரி சிரித்துக்கொண்டே சீனுவின் தோளை தட்டிக்கொடுத்தாள்.

"தேங்க் யூ ஆன்ட்டீ" சீனுவின் முகம் மலர்ந்தது.

"அத்தே நீங்க எனக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கீங்க..." மீனா உஷாவின் முழங்கையை பிடித்துக்கொண்டாள்.

"மீனா.. எங்க உசுரே சீனுதான்... அவனைத்தான் உனக்கு வேணும்ன்னு நீயே எடுத்துக்கிட்டே... அவனை விட மேலான கிஃப்ட், உனக்கு நாங்க என்ன குடுக்கப் போறோம்...?"

"என் அண்ணங்கிட்ட, என் அண்ணிகிட்ட, என்கிட்ட இருக்கற எல்லாமே உனக்குத்தான்... எப்ப எங்க வீட்டுக்கு நீ வர்றே... அதை மட்டும் சொல்லு..? மீனாவை இழுத்து தன் பக்கத்தில் உட்க்காரவைத்துக் கொண்ட உஷாவின் குரல் தழுதழுப்பாக வந்தது.

"உண்மைதான்.. நீங்க சொல்றது... சீனு இந்த வீட்டு மாப்பிள்ளையா வர்றதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்... இவனை விட ஒரு நல்லத் துணையை என் பொண்ணுக்கு என்னால தேடமுடியாது." நடராஜன் மனதில் நெகிழ்ந்து, புன்னகைத்து கொண்டே சீனுவை தன் தோளோடு சேர்த்துக்கொண்டார். 


"நடராஜன்... முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. உங்க தங்கை யு.எஸ்.லேருந்து வர்றதா சொன்னீங்க... அவங்க எப்ப வர்றாங்க...? மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயங்களைப் பார்க்கணுமே?" குமாரசுவாமி, பொதுவாக பேச ஆரம்பித்தார்.

"ஆமாம் சார்.. எனக்கும் செல்வா, சுகன்யா திருமணத்தை சீக்கிரமா முடிச்சாகணும்.. அப்பத்தான்... அடுத்தக்கல்யாணத்தை முடிக்க முடியும். "

"ராகவன் சார்... உங்க ஐடியா என்ன?"

"மொதல்லே செல்வா கல்யாணத்தை திட்டமிட்டப்படி முடிங்க; மீனா விருப்பப்படற மாதிரி ஒரு இரண்டு மூணு மாசம், வேலைக்கும் போய்வரட்டும். அதுக்கப்புறமா இவா மேரேஜை நடத்திடலாம்".

"ஓ.கே... இப்ப இங்கே இருக்கிற நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்திகள்... அதனால நான் எதையும் உங்ககிட்டேருந்து மறைச்சு பேச விரும்பலே.."

பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஒரு வினாடி தயங்கினார். தன் மனைவி மல்லிகாவைப் பார்த்தார். சீனுவையும் தன் ஓரக்கண்ணால் ஒருமுறை நோக்கினார். மாடிக்கு போகலாம் வாடீ... மீனாவை நோக்கி கண்ணால் சைகை செய்து கொண்டிருந்தான் சீனு.

"சுகா.. மீனா நீங்க இரண்டு பேரும் ஏன் நிக்கறீங்க? இப்படி வந்து உக்காருங்க... தம்பி சீனு, செல்வா நீங்களும் இப்படி உக்காருங்களேன்...!!! இனிமே நம்ம வீடுகள்ல்ல நடக்கற எல்லா விஷயங்களையும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்..."

குமாரசுவாமி தன் கையை ஆட்டினார். வேறு வழியில்லாமல் அவர்களும் நடராஜன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

"என் தங்கை, மீனாட்சியை தன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு மனசுக்குள்ள ஆசைப்பட்டிருக்கா... செல்வா கல்யாணத்துக்கு இந்தியா வரும்போது... தன் மகனுக்கு இவளை நிச்சயம் பண்ணிக்கற எண்ணத்தோட என் மச்சினரும் இருந்திருக்கார். எங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தது... ஆனால் இதைப்பத்தி நாங்க எப்பவும் மீனாகிட்ட பேசினதே கிடையாது. "

"ம்ம்ம்ம்..."

குமாரசுவாமி, ராகவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"எங்கவீட்டிலே, சீனுவை நாங்க ரெண்டு பேரும், செல்வாவைப்போல இன்னொரு பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருந்தோம்... நடத்திக்கிட்டு இருந்தோம். ஆனா சில சமயங்களில் நாம நினைக்கறது எதுவுமே, நடக்கணும்ன்னு நினைக்கறது எதுவே நடக்கறது இல்லே...."

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்... எல்லா முடிச்சுமே மேலே இருக்கறவன் போடறதுதான்... இதுல எந்த சந்தேகமும் எனக்கு இல்லே" ராகவன் மெல்ல சிரித்தார்.

"போன மாசத்துல ஒரு நாள், மீனாவும் சீனுவும் நெருக்கமா நின்னு அன்னியோன்மாக பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததாக நம்ம எதிர்வீட்டு ராமசாமிஅய்யர், எங்கிட்ட சொன்னப்ப ஒரு வினாடி நான் திடுக்கிட்டுத்தான் போனேன்..."

"வாஸ்தவமான பேச்சு... தப்பே இல்லை..." ராகவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சீனுவை ஒருமுறை பார்த்தார். அவன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

"செல்வா.. சுகன்யாவை தனக்கு துணையாத் தேர்ந்தெடுத்துட்டான்... எனக்கு அவன் சாய்ஸ்லே எந்தக்குறையும் தெரியலே.... ராதர் ஐ வாஸ் வெரி வெரி ஹேப்பி.. ஆரம்பத்துல என் மனைவி கொஞ்சம் தயங்கினாலும்... அப்புறம் முழுமனசோட சுகன்யாவை அவ ஏத்துக்கிட்டா... சுகன்யா தன்னோட செயல்களால மல்லிகா மனசுக்குள்ள வந்து உக்காந்துட்டா..."

"இதுக்கு நடுவுல, என் பொண்ணோட மனசுல இருக்கற ஆசையை, சீனுவோட மனவிருப்பத்தை.. அவனோட வீட்டுல எப்படி எடுத்துக்குவாங்கங்கற சிறிய அச்சம் என் மனசுக்குள்ள எழுந்தது."

"க்கொயட் நேச்சுரல்..." குமாரசுவாமி தன் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்.

"ராகவன் சார் வீட்டுல இவங்க ஆசைக்கு மறுப்பு தெரிவிச்சால்... எப்படி இந்த விஷயத்தை நாங்க அணுகறது... மல்லிகாவும் நானும் குழம்பிப் போயிட்டோம்."

"சீனு விட்டுல ஓ.கே.ன்னு சொன்னால், என் தங்கைக்கு என்ன பதில் சொல்றதுங்கறது ஒரு பெரிய விஷயமா அவளுக்கு பட்டது. ஒரே அண்ணன்; தங்கை; எங்க நடுவுல, அவ தூரத்துலே இருந்தாலும், எங்க உறவுல எந்த விரிசலும், வந்துடக்கூடாதுன்னு மல்லிகா பயந்தா..." நடராஜன் தான் பேசுவதை ஒரு நொடி நிறுத்தினார். தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டார்.

"என் தங்கையை நான் சமாதானம் பன்ணிக்கறேன்; மீனா மனசுல இருக்கற காதலை அவ கண்டிப்பா புரிஞ்சுக்கவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு;
இப்போதைக்கு மீனாவோட விருப்பம்தான் முக்கியம்ன்னு என் வீட்டுக்காரர் சொன்னதும், அதுவரைக்கும் என் புள்ளையா நினைச்சுக்கிட்டு இருந்த சீனுவை... என் மருமகப்பிள்ளையா ஆக்கிக்கறதா முடிவு பண்ணிட்டேன்." மல்லிகா தன் முகத்தில் பெருமிதத்துடன் சிரித்தாள்.

"உங்க முடிவு நிஜமாவே நல்ல முடிவுங்க... உறவுகள் நமக்கு தேவைதான்... ஆனா அதேசமயத்துல நம்ம குழந்தைங்க சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்..." சுந்தரி தன் தலையை ஆட்டினாள்.

"மீனாவோட விருப்பம் என் தங்கைக்கு தெரிஞ்சதுலேருந்து, நான் இந்தியாவுக்கே வரலேன்னு என் மேல கோபமா இருக்கா... மீனா இன்னொரு பையனை லவ் பண்ற விஷயத்தை எங்கிட்ட ஏன் முதல்லேயே நீங்கச் சொல்லலைன்னு என்னைத் தவறா நினைக்கறா..."

"ப்ச்ச்...ப்ச்ச்..." சுந்தரி மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"என் மச்சினர் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு, மீனாவோட விருப்பம்தான் அவ கல்யாணத்துல முக்கியம். செல்வா கல்யாணத்தை உங்க இஷ்டப்படி எப்பவேணா ஃபிக்ஸ் பண்ணிக்குங்க... என்னோட ஆசீர்வாதம் எப்பவும் அவனுக்கு உண்டு; என் மனைவியை நான் சமாதானம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டார்." நடராஜன் முகத்தில் சிரிப்பில்லாமல் பேசி முடித்தார். 




"நீங்க இப்ப சொன்ன இதே விஷயம், என் குடும்பத்துலேயும், சுகன்யா கல்யாண மேட்டரை நாங்க பர்சூயூ பண்ண ஆரம்பிச்சதும், நடந்திருக்குன்னு சொன்னா, நீங்க யாருமே நம்பமாட்டீங்க..."குமாரசுவாமி தன் முகத்தை ஒருமுறை அழுத்தித் துடைத்துக்கொண்டார்.

"ராணின்னு எனக்கு ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்தங்க சுவாமிமலையிலே இருக்காங்க... அவங்க ஹஸ்பெண்ட் நல்லசிவம்ன்னு லா ஆஃபிசரா நார்த்லேயே இருந்துட்டு ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறமா எங்க ஊருக்குத் திரும்பியிருக்கார்... அவங்களுக்கு சம்பத்குமார்ன்னு ஒரே பையன்... பெங்களூர்ல வேலை செய்யறான்... மாசம் லட்ச ரூபா சம்பாதிக்கறான்."

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... ஏன்டீ மீனா... நம்ம வீட்டு விஷேசத்துல, பச்சைக்கலர்லே, மயில் பார்டர் போட்ட பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்தாங்களே? செகப்பா, மூக்கும் முழியுமா இருந்தாங்க... சாப்பிட்டதுக்கு அப்புறம் கூடத்துல உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப நம்ம பக்கத்துலதானே இருந்தாங்க; அவங்க என்கிட்ட கூட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசினாங்களே? அவங்களைத்தானே அண்ணன் சொல்றார்?"மல்லிகா நினைவுகூர்ந்தாள்.

"உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி...?" சுந்தரி சிரித்தாள்.

"எங்க அம்மா பட்டுப்புடவை கலர்ல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுப்பாங்க... அதுவும் அடுத்தவங்க கட்டியிருக்கற புடவைன்னா கேக்கவே வேணாம்..." மீனாவும் குஷியாக சிரித்தாள்.

சம்பத்தின் பெயரைக்கேட்டதும், செல்வா முகத்தில் ஒரு மெல்லிய சிணுக்கம் ஏற்பட்டதையும், சட்டென சீனுவும் செல்வாவும், தங்கள் கண்கள் மின்ன, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதையும், சுகன்யா கவனிக்கத் தவறவில்லை.

"எங்க அக்கா மனசுலேயும், சுகன்யாவைத் தன் மகனுக்கு பண்ணிக்கணுங்கற ஆசை இருந்திருக்கு... இது சம்பந்தமா, ராணியக்கா, சுந்தரிகிட்ட நாலைஞ்சு தரம் பேசியிருந்திருக்காங்க... என் மச்சினர் ரகு என் மாமா நல்லசிவத்துக்கு ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட்... கிராமத்துல இருக்கும் போது அவங்க ரெண்டு பேரும் ஓண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருபாங்க... அவரும் ரகுகிட்ட தன் பிள்ளைக்காக சுகன்யாவை கேட்டிருக்கார்... என்னைக் கேக்கணுமின்னு இவங்க சொல்லிகிட்டு இருந்திருக்காங்க..."

"சுந்தரியும், ரகுவும், இந்த மேட்டரைப்பத்தி சுகன்யாகிட்ட பேசறதுக்கு, சென்னைக்கு வந்தன்னைக்குத்தான் செல்வா எதிர்பாராமல், பைக் ஆக்ஸிடென்ட்ல சிக்கி, ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருந்தார்."

"செல்வாவை நான் லவ் பண்றேன்... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு... தன்னோட ரத்தத்தை அவர் உடம்புல ஏத்திட்டு, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம்ன்னு, வீட்டுல சோறுகூடத் திண்ணாம, ஆஃபிசுக்கும் போகாம, ஒரே பிடிவாதம் புடிச்சா சுகன்யா... அன்னைக்கு வரைக்கும் இவ செல்வாவை லவ் பண்ற விஷயம், சுந்தரிக்கோ, ரகுவுக்கோ தெரியவே தெரியாது..."

"கொய்ட் இன்ட்ரஸ்டிங்க்... ராகவனும், பத்மாவும் திகைப்புடன் குமாரசுவாமியைப் பார்த்தார்கள். சுகன்யாவை பார்த்து உஷா குறும்பாகச் சிரித்தாள்.

"செல்வா அவர் பங்குக்கு, சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு தன்னோட அம்மாக்கிட்ட சண்டை பிடிச்சிருக்கார். என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்ன்னு, நடராஜன்கிட்ட கலந்து பேசிட்டு, நான் நிச்சயதார்த்தத்தை சட்டுபுட்டுன்னு பண்ணி முடிச்சிட்டேன்." குமாரசுவாமி பேசுவதை நிறுத்திவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.

"சுந்தரீ.. நீ எப்படிடீ என் பிள்ளையை விட்டுட்டு இன்னொரு எடத்துல சுகன்யாவுக்கு சம்பந்தம் பேசினே...? என் புள்ளை சம்பத்தானேடீ உன் பொண்ணுக்கு முறை மாப்பிள்ளே? நாங்க வேணாம்ன்னு சொன்னாத்தானே நீங்க வெளியில போகலாம்..."

"பொண்ணை கேட்டு முடிவு சொல்றோம்ன்னு எங்களுக்கு காது குத்தி, பூ சுத்திட்டு, ஒரே வாரத்துல காதும் காதும் வெச்ச மாதிரி, சுகன்யாவுக்கு யாரோ ஒருத்தனை நிச்சயம் பண்ணிட்டீங்களே... இது தப்பில்லையா?"

"எல்லாத்துக்கும் மேலே, அந்த நிச்சயத்துக்கு நீயும் உன் புருஷனுமா வந்து, என்னையும் என் வீட்டுக்காரனையும் மொதல் நாளே வந்துடனும்ன்னு அழைப்பு வெச்சீங்களே?... இது நியாயமாடீ? நானும் உறவு விட்டுப்போகக்கூடாதுன்னு வந்தேன்..."

"நிச்சயத்துக்கு முன்னாடீ எங்களை ஒரு வார்த்தை கேட்டியாடீன்னு என்னை வம்புக்கு இழுத்தாங்க..." சுந்தரிக்கு மூச்சிறைத்தது.

"இதெல்லாம் எப்பம்மா நடந்தது? எங்கிட்ட நீ சொல்லவேயில்லே?" சுகன்யா, தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பொரும ஆரம்பித்தாள்.

"சுந்தரீ.... உனக்கு என்ன நெஞ்சழுத்தம்டீ? இது உனக்கு அடுக்குமா? உன் புருஷனை உண்டு இல்லேன்னு நம்ம உறவுகாரங்க முன்னாடீ நிக்க வெச்சு கேள்வி கேக்கலைன்னா, என் பேரு ராணியில்லேன்னு, இவரோட அக்கா என் வீட்டுக்கு வந்து அப்படி ஒரு சண்டை இழுத்துட்டு போயிருக்காங்க..."

"ஏம்மா நல்லசிவம் மாமாவுமா உங்கிட்ட சண்டை போட்டாரு?"

"இல்லடீ... அவரு வரலை... உன் அத்தைதான் பத்ரகாளி மாதிரி ஒரு பேய் ஆட்டம் ஆடிட்டு போயிருக்காங்க..."

"என்கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லே?" சுகன்யாவுக்கு பொறுக்கவில்லை.

"இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கிட்டு வீணா மனசைக் கொழப்பிக்க வேண்டாம்ன்னுதான் உன் கிட்ட சொல்லலை..."

"மல்லிகா.. என்கிட்ட சண்டை போட்டதுலே தப்பில்லேங்க... இவரோட அக்கா, என் மாமனாரையும், மாமியாரையும் ஒரு புடி புடிச்சி... ஒரு வழி பண்ணிட்டாங்க..." நடராஜனைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்த சுந்தரி தனக்கு மூச்சிறைக்க தான் பேசுவதை நிறுத்தினாள். 

"இவன் கல்யாண மேட்டரை ஆரம்பிச்சதுலேருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டுத்தான் இருக்கு? மல்லிகா தன் தலைமுடியை கோதிக்கொண்டாள்.

"ஒண்ணும் கவலைப் படாதே மல்லிகா... நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்... செல்வா கல்யாணம் நல்லபடியா நடக்கும்; கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லே... அதுக்கப்புறம்தான் வரக்கூடாது..." பத்மா மல்லிகாவுக்கு ஆறுதலாகப் பேசினாள்.

"உங்க வாய் முகூர்த்தம் சுகன்யா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்..." சுந்தரி பத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். க்கூம்... குமாரசுவாமி தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். பேசத்தொடங்கினார்.

"இன்னும் இரண்டுமூணு வாரத்துலே சுகன்யா தன்னோட மேண்டேட்டரி ட்ரெய்னிங்குக்காக டில்லிக்கு போயே ஆகணுமாம்... திரும்பி வர மூணு மாசம் ஆகும்ங்கறா... செல்வா இதைப்பத்தி உங்கக்கிட்டே டிஸ்கஸ் பன்ணியிருப்பாருன்னு நினைக்கிறேன்...?"

"ஆமாம்... நேத்து ராத்திரிதான் சொன்னான்..." நடராஜன் தன் முகத்தை தடவிக்கொண்டார்.

"இருபது நாள்லே வானத்துல இருக்கற மூனுக்கே ரெண்டுதரம் போயிட்டு வந்துடலாம். ஆஃப்டர் ஆல்.. நம்பளால, ஒரு கல்யாணம் பண்ணமுடியாதா...? இவங்க கல்யாணத்தை, யாருக்கும் எந்தக்குறையும் இல்லாம, நான் முன்னே நின்னு பண்ணிவெக்கறேன்னு ரகு சொல்றார்..."

"நடராஜன்... நீங்க உங்க சவுகரியத்தைச் சொன்னா... மேரேஜ் டேட்டைப் நாமப் பிக்ஸ் பண்ணிடலாம். இதுல ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம கவனிக்கனும்..." குமாரசுவாமி ஹாலில் இருந்தவர்கள் முகங்களை நிதானமாக ஒரு முறைப் பார்த்தார். மல்லிகாவுக்கு அவர் எதையோ சொல்லத் தயங்குவது போல் பட்டது.

"சொல்லுங்கண்ணா.. உங்க மனசுல இருக்கறது எதுவாயிருந்தாலும், வெளிப்படையாச் சொல்லுங்க... இங்கே நாம நமக்குள்ளத்தானே பேசிக்கிட்டு இருக்கோம்... இங்கே வேத்து மனுஷா யாரும் இல்லையே?" மல்லிகா குமாரசுவாமியின் தயக்கத்தை நீக்க முயற்சி செய்தாள்.

"சொல்லுங்க குமார்.. மல்லிகா சொல்றது சரிதானே?" நடராஜன் முகம் சற்றே சீரியஸாக இருந்தது.

"அவசர அவசரமா இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டு, சின்னஞ்சிறுசுங்க இதுங்க ரெண்டு நாள் சந்தோஷமா ஒண்ணாயிருந்துட்டு, சட்டுன்னு மூணாம் நாள்லேயிருந்து மூணுமாசம் ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்கறதும் சரியில்லேன்னு நான் நினைக்கிறேன்..." குமாரசுவாமி சுகன்யாவைப் பார்த்தார்.

"நீங்க சொல்றது ரொம்பவும் சரி... கொழந்தைகள் மனசால, உடம்பால, சந்தோஷமா இருக்கணும்... அதுக்குத்தானே கல்யாணம், ஹனிமூன், அப்படி இப்படீன்னு பெரியவர்கள் ஒரு சிஸ்டத்தை உண்டாக்கி வெச்சிருக்காங்க... ராகவன் தன் நெற்றியை சொறிந்துகொண்டே பேசினார்.

"அண்ணா.. கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப்பயிர்... அவசரப்படாம, நல்ல நேரம், முகூர்த்தம் பாக்கணும்... கல்யாணத்துக்கு மட்டுமில்லே.. அதை தொடர்ந்து வர்ற சடங்குகளையும் சுபநேரத்துலத்தான் பண்ணணும்..."

"எல்லாத்துக்கும் மேல, நமக்கு வேண்டிய உறவுகாரர்கள் எல்லோரையும் அழைச்சுத்தான் செய்யணும்... இப்போ கொஞ்சம் கோபமா இருக்கறவாளை சட்டுன்னு அப்படியே விட்டுடறாதா?" உஷா தன் அண்ணனை ஆமோதித்தாள். சுந்தரிக்கும் அவள் சொல்லுவது சரியெனப்பட்டது.

"அங்கிள், நீங்க தப்பா நினைக்கலேன்னா, பெரியவங்க பேசறப்ப, நடுவுல நான் ஒரே ஒரு வார்த்தை பேசலாமா?" செல்வா மெல்லிய குரலில் வினவினான்.

"நிச்சயமா... சொல்லுங்க மாப்பிளே..."

"சுகன்யா ட்ரெய்னிங் முடிஞ்சி திரும்பி வரட்டும்... உஷா அத்தை சொல்ற மாதிரி, அவசர அவசரமா எங்க மேரேஜ் நடக்கணுமான்னு நான் நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்கப்பா...?"

"சுகன்யா நீ என்னம்மா சொல்றே?" நடராஜன் சுகன்யாவை திரும்பிப்பார்த்தார்.

அதே நேரத்தில் சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்தது. செல்லில் பளிச்சிட்ட நம்பரையும், பெயரையும் பார்த்தவுடன் சுகன்யாவின் முகத்தில் சட்டென இனம் தெரியாத ஒரு மிரட்சி பரவியது. சுந்தரியின் கூரிய கண்கள் தன் மகளின் முகத்தில் வந்த தீடீர் மாற்றத்தை கவனித்தது.

ம்ம்ம்ம்... சில சமயங்கள்லே நாம நினைக்கறது நடக்கறது இல்லேன்னு இப்பத்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க... மேன் ப்ரப்போசஸ் காட் டிஸ்போஸஸ்... என்னைப் பொறுத்தவரைக்கும் இது சரிதான் போல இருக்கே...



சில சமயங்கள்லே நாம எதிர்பாக்காததும் நடக்கும் அப்டீன்னு சொல்றாங்க... அப்படி சொல்றதும் உண்மையாத்தான் இருக்கு. அன்றைக்கு முன்தினம், கடற்கரையில், செல்வாவுடன் இருந்த போது உண்டான அதே இனம் தெரியாத பயம் அந்த வினாடியில் அவளை மீண்டும் தொற்றிக்கொண்டது.

இந்த நேரத்துலத்தான் இந்த 'கால்' வரணுமா? சுகன்யா காலை அட்டண்ட் செய்வதா... வேண்டாமா என தயங்கினாள். சிணுங்கும் செல் ஓய்வுக்கு வந்தது. அப்பாடா என சுகன்யாவுக்கும் மூச்சு வந்தது.

'அப்ப்பா... நான் என்ன சொல்றேன்னா..." அவள் பேசத் தொடங்கிய போது, அவளுடைய செல் மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது. செல்வாவை ஒரு முறை பார்த்தாள் அவள்.

செல்லின் டிஸ்ப்ளேயைப் பார்த்தாள் சுகன்யா. மீண்டும் அதே நம்பர். அதே பெயர். செல்லில் சம்பத்குமார் என்ற பெயர் மின்னிக்கொண்டிருந்தது. 



No comments:

Post a Comment