Monday, 6 April 2015

சுகன்யா... 103

"சுகன்யா... செல்வா உங்கிட்ட நடந்துகிட்ட விதத்தை நான் சரின்னு சொல்லலே. அவன் என் பிள்ளைங்கறதுக்காக நியாயப்படுத்தவும் இல்லே. திரும்பவும் சொல்றேன். அவன் செய்தது தப்புதான்."

"...."

"சுகன்யா... அவன் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு உன்னை அவன் சந்தேகப்பட்டதை, எங்களுக்காக, நீ முழுசா மறந்துடணும்ன்னுதான் நான் கேக்கறேன். சுகன்யா என்னை சுயநலக்காரன்னு மட்டும் நினைச்சுடாதே. உன்னை நான் எந்தக்காரணத்துக்காவும் இழக்க விரும்பலேம்மா. இதுதான் உண்மை.

"அங்கிள் நீங்க என் மேல வெச்சிருக்கற அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"சுகன்யா... எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம்மா... அவனை நீ இந்த ஒரு தரம் மன்னிக்கக்கூடாதா?"

"அங்கிள்... ப்ளீஸ்..." சுகன்யா விசும்ப ஆரம்பித்திருந்தாள்.



"அயாம் சாரி... கொழந்தை நீ தனியா இருக்கே... என்னவோ பேச நினைச்சு.... என்னவோ பேசி... உன்னை நான் அழவெச்சுட்டேன்... அயாம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி ஃபார் திஸ்..." நடராஜன் குரலில் சுயபரிதாபம் மிகுதியாக இருந்தது.

"இட்ஸ் ஆல் ரைட் அங்கிள்... நான் தப்பு பண்ணலேங்கறதை நீங்க புரிஞ்சிகிட்டு இருக்கீங்க பாருங்க... அதை உங்க வாயாலே என் கிட்ட இன்னைக்காவது சொன்னீங்க பாருங்க... அதுவே எனக்குப் போதும். உங்க வார்த்தைகளாலே, என் மனசு ரொம்பவே இலேசாயிட்ட மாதிரி நான் ஃபீல் பண்றேன். நான் தனியா இல்லேங்கற ஒரு உணர்வு எனக்கு இப்ப வந்திடிச்சி..."

"சுகன்யா... பீ ப்ரேவ்... ஐ நோ.. யூ... நீ தைரியமான பொண்ணு... நீ எங்கேயிருந்தாலும், நீயே தப்பு பண்ணணும்ன்னு நினைச்சாலும் உன்னாலத் தப்பு பண்ண முடியாதும்மா.. எதுக்கு நீ அழறே? நீ எதுக்கும் அழாதே.. உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்மா..."

"தேங்க் யூ அங்கிள்..." சுகன்யா தன் விழிகளை புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை உறிஞ்சினாள்.

"உனக்கு செல்வா மேல இருக்கிற கோபம் ஞாயமானதும்மா..." நடராஜன் தன் குரலை இழுத்தாற் போல் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

"அங்கிள் அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே..."

"அப்ப நீ ஏன் உன் ட்ரெயினிங் முடிஞ்சதும் சென்னைக்கு திரும்பி வரலே?"

"இதுக்கு மேல இதைப்பத்திமட்டும் தயவு செய்து நீங்க எதுவும் கேக்காதீங்க அங்கிள்...."

"சுகா... மீனாவை மட்டும் நான் என் மகளா நினைக்கலே. செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தன்னைக்கு, எங்க பசியறிஞ்சு, எங்களுக்காக வேகாத வெய்யில்லே ஓட்டமா ஓடி, உன்னோட ரெண்டு கை கொள்ளாத அளவுக்கு சாப்பிட விதவிதமா வாங்கிட்டு வந்தியே, அந்த நிமிஷத்திலிருந்தே உன்னை நான் என் மகளா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த உரிமையிலே சொல்றேம்மா... பிடிவாதத்தினாலே எந்த பயனும் இல்லேம்மா..."

"நிஜமாவே அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே... என்னை நம்புங்க அங்கிள்..."

"நான் உன்னை நம்பறேன்... உன் செல்வா ரொம்பவே ஒடைஞ்சு போயிருக்காம்மா..." நடராஜன் பொய் சொல்லவில்லை என்பது அவருடைய குரலிலிருந்து அவளுக்கு புரிந்தது.

"அங்கிள்... இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லே...." செல்வா உடைந்து போயிருக்கிறான் என நடராஜன் சொன்னதும் அவள் தன்னுள் ஏதோ இளகுவதாக உணர ஆரம்பித்தாள்.

"யெஸ்... இன் ஏ வே... யூ ஆர் கொயட் ரைட்... திரும்பவும் சொல்றேம்மா... அந்த முட்டாள் தன் தப்பை உணர்ந்துட்டான். இதை மட்டும் என்னால நிச்சயமா சொல்லமுடியும். உன்னைப் பாக்க, உங்கிட்ட பேச, உங்கிட்ட மன்னிப்பு கேக்க அவன் துடிச்சிக்கிட்டு இருக்கான்."

"ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ... அவன் சொல்லி நான் இன்னைக்கு உங்கிட்டே பேசலே... அவன் தரப்புல நான் உன் கிட்ட வாதடால. நான் உன்னிடம் பேச நினைச்சதே வேற ஒரு முக்கியமான் விஷயம்... "

"அவர் தன்னோட தப்பை ரியலைஸ் பண்ணிட்டாருன்னு எப்படி நீங்க அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க அங்கிள்?"

"உன்கிட்ட மீனா எப்ப பேசினாலும், அவ பேசி முடிச்சதுக்கு அப்புறம் உன்னைப்பத்திய எல்லா விஷயத்தையும் அவகிட்டருந்து நாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். அதை அவன் திருடன் மாதிரி ஒளிஞ்சு நின்னுக்கிட்டு ஒரு வரி விடாம கேட்டுக்கிட்டு இருப்பாம்மா...."

"ம்ம்ம்" சுகன்யாவின் உதடுகள் துடிக்க ஆரம்பித்தன.

"மீனாவை தனியா அழைச்சிக்கிட்டுப் போய், சுகன்யா எப்படியிருக்கா? சுகன்யா நல்லா இருக்காளா? சுகன்யா என்னைப்பத்தி ஏதாவது கேட்டாளா? சுகன்யாவோட கோபம் அப்படியேதான் இருக்கா... என் மேல அவளுக்கு இருக்கற கோவம் இன்னும் கொஞ்சம் கூட கொறையலயான்னு, நூறு தரம் உன்னைப்பத்தி அவகிட்ட செல்வா கேக்கிறானே... அதுக்கெல்லாம் என்னம்மா அர்த்தம்?"

"அங்கிள்..."

"சுகன்யா... ப்ளீஸ் செல்வாவுக்கு திரும்பவும் உன்கிட்ட அன்பு செலுத்த, நீ ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கணும்ம்மா..." நடராஜனின் குரல் கெஞ்சலாக வந்தது.

"அங்கிள் நீங்க என்னைத் தப்பா நினைக்கக்கூடாது..."

"சொல்லும்மா..."

"ஐ நீட் சம் டயம்... இப்பத்தான் என் மனசு கொஞ்சம் கொஞ்சமா நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பிக்கிட்டு இருக்கு."

"சுகன்யா... தேங்க் யூ ம்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... நீ இவ்வளவு சொன்னதே எனக்குப் போதும்..." நடராஜன் குரலில் இப்போது மிகுந்த உற்சாகம் வந்திருந்தது. 

"அங்கிள்... என்னவோ பேச நினைச்சு என்னவோ பேசிட்டேன்னு சொன்னீங்க... ஏதோ முக்கியமான விஷய்ம்ன்னு சொன்னீங்க?" சுகன்யா மெல்ல பேச்சை செல்வாவிடமிருந்து திசை திருப்ப விரும்பினாள்.

"சுகன்யா... நீ உன் மனசுல என்ன இருக்குங்கறதை என் கிட்டவும் சரியா சொல்ல மாட்டேங்கறே? அதனாலத்தான் நான் சொல்ல வந்ததை எப்படி சொல்றதுன்னு தயங்கறேன்." நடராஜன் சிறிய பீடிகையுடன் பேசத்தொடங்கினார்.

"அங்கிள்... நீங்க என் விஷயத்தை மறந்துடுங்க. அது முடிஞ்சு போன விஷயம். இப்ப நீங்க பேச நினைக்கறததை சொல்லுங்க."

"எதும்ம்மா முடிஞ்சு போன விஷயம்?" நடராஜனின் குரல் சூடாக வருவதாக சுகன்யாவுக்கு பட்டது.

"எங்க நிச்சயார்த்தம்..."

"யார் சொன்னது?" இப்போது அவர் குரலில் சிறிதளவு சீற்றம் இருந்தது.

"உங்க மகன்தான் சொன்னாரு?" நடராஜனின் குரலில் இருந்த சீற்றத்தை உணர்ந்த சுகன்யாவின் குரலில் இலேசாக நடுக்கம் எழுந்தது.

"அவன் சொல்லிட்டா போதுமா?" நடராஜனின் குரல் இலேசாக உயர்ந்தது.

"அங்கிள்...?"

"நீயும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு இருக்கலாம். உங்களுக்குள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கலாம். ஆனா உன்னை எங்க வீட்டு மருமகளா நிச்சயம் பண்ணது யாரும்மா? நானும் உன் அத்தை மல்லிகாவும் நிச்சயம் பண்ண கல்யாணம் இது. இஸ் தட் ரைட்?"

"யெஸ்..."

"இந்தக் கல்யாணத்தை நிறுத்த உங்களுக்கு உரிமையில்லே... இந்த திருமணத்தை இப்படி பாதியில நிறுத்த எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லே..."

"மேரேஜை நீங்க உறுதி செய்திருக்கலாம்.. ஆனா வாழப்போறது நாங்கத்தானே அங்கிள்?" சுகன்யாவின் குரல் சுத்தமாக வலுவேயில்லாமல் தேய்ந்து போயிருந்தது.

"நீ சொல்றது உண்மைதான்.. நான் இல்லேங்கலே... அதே சமயத்துலே எங்களுக்கும் உங்க வாழ்க்கையில பங்கு இருக்கு.. நீங்க எடுக்கற முடிவுகள் உங்களை மட்டுமில்லே... உங்களை சுத்தி இருக்கற நிறைய நபர்களை பாதிக்குதும்மா... எங்க ரோலை நாங்க எப்படி விட்டுக்குடுத்துட முடியும்?"

"அங்கிள்..." சுகன்யா முனகினாள்.

"அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடறது தப்புன்னு எனக்கும் தெரியும்... உங்க பிரச்சனையை உங்களாலே ஹேண்டில் பண்ண முடியலேங்கறப்ப, அட்லீஸ்ட், நீயாவது அதை என் கிட்ட சொல்லியிருக்கலாம்லே?"

"எங்க நடுவுல இருந்த பிரச்சனையை நான் உங்ககிட்ட சொல்லி இருக்கலாம்... அப்படி சொல்லாதது என்னோட தப்புன்னு நான் ஒத்துக்கறேன்... அங்கிள் இதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்..."

"தில்லியிலே என்னோட ட்ரெய்னிங் முடிஞ்சு நான் ஊருக்கு திரும்பி வந்ததுக்கு பின்னாடி, எங்க கல்யாணத்தை எப்ப வேணா நீங்க பிக்ஸ் பண்ணுங்க மாமான்னு மீனாவோட பொறந்த நாளைன்னைக்கு என் கிட்ட சொன்னியே? இது உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ஞாபகம் இருக்கு அங்கிள்.."

"உனக்கும் செல்வாவுக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை வந்திருக்கலாம்... அறிவு கெட்டத்தனமா அவன் எதையாவது உங்கிட்ட உளறியிருக்கலாம். இந்த விஷயத்துல இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் ஏதாவது தப்பா சொன்னேனா?"

"இல்லே அங்கிள்..."

"அப்படியிருக்கும் போது நீ ஏன் என்னை திரும்ப திரும்ப அங்கிள்ன்னு சொல்லி உன் கிட்டேயிருந்து என்னை அன்னியமாக்கறே?" தன் மனதில் இருந்த உறுத்தலை அவர் கடைசியில் அவளிடம் கொட்டிவிட்டார்.

"அயாம் சாரி அங்கிள்... சாரி... சாரி... மாமா... நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா நினைக்கவேயில்லை.... மனசுல எந்த உள்நோக்கமும் இல்லாமத்தான் நான் உங்களை அங்கிள்ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். அது தப்புன்னு நீங்க ஃபீல் பண்ணா... ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க மாமா.."

"நீயே இன்னும், என் வீட்டுக்கு வரலே. ஏன்... நீயே சொல்லிட்டு வந்த மாதிரி, ட்ரெய்னிங் முடிஞ்சு சென்னைக்கே இன்னும் திரும்பி வரலே. எப்ப என் வீட்டுக்கு வருவேன்னு கேட்டா எனக்கு டயம் வேணுங்கறே? இந்த நிலையிலே, இன்னொரு கல்யாணத்தைப்பத்தி எப்படிம்மா நான் உங்கிட்ட பேசறது?"

"எனக்கு புரியலே மாமா.. என்னச் சொல்றீங்க நீங்க? இன்னொரு கல்யாணமா?" சுகன்யா ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனாள்.

"மீனாவை தங்களோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்ன்னு சீனுவோட அத்தையும், அவன் அம்மாவும், ரொம்பவே அவசரப்படறாங்கம்மா..."

"மாமா இது ரொம்பவும் சந்தோஷமான விஷயமாச்சே...!! இதைச் சொல்றதுக்கு எதுக்காக நீங்க இப்படி தயங்கறீங்க?" சுகன்யா நிதானமாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

"நீங்க ரெண்டு பேரும், ஒருத்தரோட ஒருத்தர், முகத்தை முறிச்சிக்கிட்டு நிக்கும் போது, நான் எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு என் பொண்ணு கல்யாணப் பத்திரிக்கையோட உங்க வீட்டுக்குள்ள நுழையறது?"



"மாமா... மீனா கல்யாணத்துகான வேலைகளை நீங்க தாராளமா பாக்க ஆரம்பிக்கலாம்...!! இதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே.."

"ம்ம்ம்ம்.. அப்புறம்.."

"மாமா.. மீனா கல்யாணத்துக்காக நான் என்ன செய்யணும்? அதை மட்டும் சொல்லுங்க! இப்ப என் ஃப்ரெண்ட் மேரேஜ் நடக்கறதுல, எங்க வீட்டுல, யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது..." சுகன்யா உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

"என் ஃப்ரெண்ட் குமாரசாமியைப்பத்தி எனக்கும் நல்லாத் தெரியும்... அவர் மீனாவோட கல்யாணத்துல எந்த பிரச்சனையும் பண்ணமாட்டார்... ஆனா.."

"ஆனா...? ஆனா... என்ன மாமா?"

"நாங்க முடிவு பண்ணபடி, உன் கல்யாணம்தான் முதல்லே நடக்கணும்... எங்க வீட்டு மருமகளா நீ முன்னே நின்னு, உன் ஃப்ரெண்டு கல்யாணத்தை நீ நடத்தி வைக்கணும்ன்னுதான் நானும், உன் அத்தையும் ஆசைப்படறோம். மீனாவோட ஆசையும் இதுதாம்மா... மொதல்லே இதுக்கு நீ ஒத்துக்கணும்..."

"மாமா... என் நிலைமையையும் கொஞ்சம் நீங்க யோசனைப் பண்ணி பாருங்க. 'உன்னை நான் வெறுக்கறேன்னு நான் போட்ட மோதிரத்தை என் மூஞ்சியிலே வீசி எறிஞ்சுட்டு போன ஒருத்தரோடு,' நான் எப்படி திரும்பவும் சகஜமா பழக முடியும்? எப்படி என் மனசுல எந்த வருத்தமும் இல்லாதது போல அவருகிட்ட சிரிச்சுப் பேச முடியும்? எங்களுக்குள்ளே எதுவே நடக்காத மாதிரி எப்படி அவரை திருமணம் பண்ணிக்க முடியும்?"

"தப்புதாம்மா... செல்வா பண்ணது தப்புதான்... நான்தான் சொன்னனே அவன் தன் தப்பை உணர்ந்துட்டான்னு! செல்வா உன்கிட்ட மன்னிப்பு கேக்க தயாரா இருக்கான்."

"நீ சென்னைக்கு திரும்பி வரலே... உனக்கு போஸ்டிங் தில்லியிலே ஆயிடிச்சுன்னு தெரிஞ்சதும், ஒரு தரமில்லே.. இரண்டு தரமில்லே... தொடர்ந்து உனக்கு நாலு நாள் அவன் போன் பண்ணியிருக்கான்.. நீதான் அவன்கிட்ட பேசாம, ஒவ்வொரு தரமும் லைனை கட் பண்ணிட்டியாமே? இது உண்மைதானா?"

"மாமா...ப்ளீஸ்..." சுகன்யாவின் குரல் மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்தது.

"சுகன்யா.. அவன் என்னதான் சொல்ல விரும்பறான்னு ஓரே ஒரு தரம் நீ கேட்டு இருக்கலாம்லே?"

"ப்ச்ச்... கேட்...கேட்டு இருக்கலாம்.. ஆம்பிளைக்கு கோவம் வரலாம்... ஆனா எனக்கு மட்டும் கோவம் வரக்கூடாதா மாமா?" சுகன்யா தீடிரென முறுக்கினாள்.

"வரலாம்ம்மா... உன் கோவம் நியாயம்ன்னு நீ கேக்காமலேயே நாலு தரம் நான் சொல்லிட்டேனே?" சுகன்யாவின் குழந்தைத்தனமான முறுக்கலை கண்டு நடராஜன் மெல்ல சிரித்தார்.

"எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க... சிரிக்காதீங்க.. நீங்க சிரிச்ச எனக்கு கெட்ட கோவம் வரும்..." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"சுகன்யா... சும்மா நீ பிடிவாதம் பிடிக்காதேம்மா. நீ ரொம்ப பிடிவாதக்காரின்னு உன் அம்மா... உன் அத்தை மல்லிகா கிட்ட சொல்லியிருக்காங்களாம்... நான் சொல்றதை கொஞ்சம் கேளு... உன் பிடிவாதத்தை எங்களுக்காக கொஞ்சம் விட்டுக்குடு. எங்க வீட்டுக்கு எப்ப நீ வரப்போறேன்னு நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம்ம்மா... எங்க தவிப்பையும் நீ புரிஞ்சுக்கணும்."

"...."

"செல்வா மேல உனக்கு கோவம் இல்லேன்னு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே சொன்னே? நடந்ததையெல்லாம் நான் மறந்துட்டேன்னு, சொன்னது நீதானே?"

"ஆமாம் மாமா அப்படி நான் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனா இப்ப சொல்றேன்... நான் அவர் மேல ரொம்பக் கோவமா இருக்கேன்..." சுகன்யா தாயிடம் பொம்மை கடையில் முரண்டு பிடிக்கும் சிறு குழந்தையாக தன் மூக்கை உறிஞ்சினாள்.

"சுகன்யா... அழாதேம்மா.. செல்வா பண்ணத்தப்புக்கு அவனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு நீ நினைக்கிறியோ அதை நீ அவனை நேரா பாக்கும் போது குடு. இது உனக்கும் அவனுக்கும் நடுவுல நீ தீத்துக்க வேண்டிய விஷயம்."

"சுகன்யா... தேவையில்லாம எங்களை நீ ஏன் தண்டிக்கறே? எங்களை மட்டும் நீ தண்டிக்கலே... கூடவே உன் அப்பாவை, உன் அம்மாவை, உன் மேல தன் உசுரையே வெச்சிருக்கற உன் ரகு மாமாவை, உன் கல்யாணத்தைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற உன் தாத்தா, பாட்டி, இவங்களையும் ஏம்மா தண்டிக்கறே?"

"மாமா... யாரையும் தண்டிக்கணுங்கறது என் விருப்பமில்லே.... என்னை நானே தண்டிச்சுக்கறேன்... ஏன்டா ஒருத்தனை காதலிச்சோம்ன்னு எனக்கு இருக்கு?"

"சரி... செல்வா மட்டுமா உன்னை நேசிச்சான்? எங்க குடும்பத்துல இருக்கற எல்லோரும் உன்னை நேசிக்கிறோம். அவன் உன்னை பைத்தியக்காரத்தனமா, வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நாங்கள்ல்லாம் உன்னை வெறுக்கலையே?"

"இல்லே மாமா..."

"சுகன்யா நீ புத்திசாலிப் பொண்ணு. வாழ்க்கையில எப்பவும் ஒரே நேரத்தில ரெண்டு விஷயங்கள் நடக்கும்..."

"நிஜமாவே இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை அங்கிள்."

"நாம நடக்கும்போது வலது காலை எடுத்து ஒரு அடி முன்னே வெச்சா, அந்தக் கால் பதியபோற இடம் மேடா, இல்லை பள்ளமான்னு, கவனமா பாத்து வைக்கிறோம். அந்த எடத்தை எப்படியிருந்தாலும் நாம நம்ம மனசார வரவேற்று ஏத்துக்கறோம்."

"ம்ம்ம்.."

"ஏன்னா.. வலது காலை கீழே வெக்காம இடது காலை தூக்க முடியாது..."

"யெஸ்..."

"அதே சமயத்துல எந்த எடத்துலேருந்து நம்ம காலை எடுத்து வெச்சோமோ, அந்த இடத்தைப்பத்தி நாம அதிகமா நெனைக்காம சட்டுன்னு மறந்துடறோம். இதுதான் வாழ்க்கை... இப்படித்தான் நீ உங்களுக்குள்ள நடந்த அந்த கசப்பான நிகழ்ச்சியை மறந்துடணும்ன்னு நான் சொல்றேன்."

"இதைத்தான் நானும் சொல்றேன் மாமா..."

"சொல்லு சுகன்யா.. நீ என்ன சொல்ல விரும்பறே?"

"செல்வாவோட எனக்கிருந்த உறவு... நான் கடந்து வந்துட்ட இடம்... அந்த இடத்தை நானும் மறக்க விரும்பறேன்... நான் எடுத்து வெக்கப் போற அடுத்த அடி என்னன்னு எனக்கு இன்னும் தெளிவாப் புரியலே... நான் எடுத்த வைக்கப்போற அந்த அடி தப்பாயிடக்கூடாதேன்னு நான் எனக்குள்ள ரொம்ப பயப்படறேன்.."

"ம்ம்ம்ம்... ஐ அண்டர்ஸ்டேண்ட்..." சுகன்யா என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் நடராஜன் தன் மனதுக்குள் குழம்ப ஆரம்பித்தார்.

"அதனாலத்தான் எனக்கு இப்ப கொஞ்சம் டயம் வேணும்ன்னு உங்கக்கிட்ட கேக்கிறேன் மாமா..." சுகன்யா மெல்லிய குரலில் மரியாதையுடன் நடராஜனுடன் பேசிய போதிலும், அவள் குரலில் இருந்த விரக்தியையும், சலிப்பையும் நடராஜன் உணர்ந்து கொண்டார்.



"உன் இஷ்டம்மா... இதுக்கு மேல நீ இதைத்தான் செய்யணும்ன்னு, உன்னை நான் வற்புறுத்தமாட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் நீ மட்டும்தான் என் வீட்டுக்குள்ள என் மருமகளா நுழைய முடியும்." நடராஜன் நீண்ட பெருமூச்செறிந்தார்.

"மாமா.. என்னை நீங்க தப்பா நினைக்கக்கூடாது..."

"இல்லேம்மா... நிச்சயமா இல்லே... நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா சேர்ந்து என் வீட்டுத் தோட்டத்துல நின்னுகிட்டு சிரிக்கறதைப் பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு தேவையான அளவுக்கு டயம் எடுத்துக்கோ... ஆனா என் ஆசையை மட்டும் நீ நிராசையா ஆக்கிடாதே..!"

"ம்ம்ம்..."

"ரொம்ப நேரமாயிடுச்சு.. குட் நைட்... சுகன்யா..." சட்டென தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் நடராஜன்.

"குட் நைட் மாமா..." சுகன்யாவும் மெல்ல முணுமுணுத்தாள். அப்போதைக்கு அவள் தன்னை சிறிது ஆசுவாசமாக உணர ஆரம்பித்தாள். 


No comments:

Post a Comment