Monday, 6 April 2015

சுகன்யா... 101

"அனு... கிளம்புடீ... என் அத்தான் என்னைப்பாக்க வந்திருக்கார். நான் பேசினதுலேருந்து நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்... காலையிலே இன் ஃபேக்ட் அவர்கிட்ட வேற ஒரு விஷயமா பேசணும்ன்னு நினைச்சேன்... ஆனா அவர் நம்பர் கிடைக்கலே... தீடீர்ன்னு மனுஷன் டெல்லிக்கு வந்து நிக்கறார்...
நான் ஒரு முட்டாள்டீ.. இன்னைக்கு அவருக்கு பர்த்டேன்னு நான் மறந்தே போயிட்டேன்... கீழே போனதும் சரியான சண்டை இருக்கு..." சுகன்யா பரப்பரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.

"சுகன்யா... உன் அத்தான் உன்னைப் பாக்க வந்திருக்கார். இன்னைக்கு அவருக்கு பொறந்த நாள். கோவிலுக்கு போகணுங்கறார். அவர் கூட நீ போயிட்டு வாடி. உங்கக்கூட நான் வேற எதுக்குடி நடுவுலே?"



"என்னடீ பேசறே? உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்; நீ எங்கக்கூட வந்துதான் ஆகணும். நீ வரலேன்னா நானும் அவர்கூட லஞ்சுக்கு போக மாட்டேன்..."

"என்னடி இப்படி அர்த்தமில்லாம அடம் புடிக்கறே? உங்க அத்தானை எனக்கு தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது?" அனு நிஜமாகவே தயங்கினாள்.

"அனு... என் அத்தானை உனக்குத் தெரியாட்டா பரவாயில்லே; ஆனா நான் சொல்றதை கேளு. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீயும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் விரும்பறேன்." சுகன்யாவின் முகத்தில் காரணமேயில்லாமல் ஒரு கள்ளச்சிரிப்பு பொங்கி பொங்கி வந்து கொண்டிருந்தது.

"நீ சந்தோஷமா இருக்கேங்கறது உன் முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுதுடீ" அனு நகருவதாக தெரியவில்லை.

"அப்படீனா இப்ப நீ எதுவும் பேசாம என் கூட எழுந்து வா..." சுகன்யா, அனுவின் கையை பிடித்து அவளை இழுத்தாள்.

"ஓ.கே. நான் ரிசப்ஷன் வரைக்கும் வர்றேன். உன் அத்தானை விஷ் பண்ணிட்டு ரூமுக்குத் திரும்பிடறேன்... இஸ் தட் ஓ.கே.?"

"இல்லே. நிச்சயமா இல்லே. ரிசப்ஷன் வரைக்கும் வர்றேங்கறே? அப்படியே கோவிலுக்கும், லஞ்சுக்கும் எங்கக்கூட வர்றதுல உனக்கு என்னடி பிரச்சனை? காலையிலே கோவிலுக்கு போகணும்ன்னு நீயே சொன்னியா இல்லியா?"

"ஆமாம் சொன்னேன்..."

"நானும் என் அத்தானும் லவ்வர்ஸா? அப்படீல்லாம் ஒண்ணுமில்லையே? ஹீ ஈஸ் ஜஸ்ட் மை ஃபிரண்ட் ஆஸ் தட் ஆஃப் யூ... எங்கக்கூட வர்றதுக்கு நீ ஏன் தயங்கறே?"

"சே... சே... அவரை எனக்கு முன்னே பின்னே தெரியாதேடீ... நீங்க ரிலேடிவ்ஸ்... உங்களுக்குள்ள இன்னைக்கு பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும்.. அவரோட மேரேஜ் பத்தி நீ பேசும் போது நான் எதுக்கு குறுக்கேன்னு நினைக்கறேன் அவ்வளவுதான்."

"எனக்கு பிரச்சனை இல்லே.. என் அத்தானுக்கு நீ வர்றதுனாலே எந்தப் பிரச்சனையும் இருக்காது... அவர் ரொம்ப ஜோவியல் டைப்... எனக்கு அவரைப்பத்தி தெரியும்..."

"என்னமோ நீ சொல்றே? ஆனாலும் எனக்கு தயக்கமாத்தான் இருக்கு.."

"அனுக்குட்டி... சும்மா படுத்தாதேடி.. சட்டுன்னு கிளம்புடி செல்லம்..."

அனுவைக் கொஞ்சிக்கொண்டே எழுந்த சுகன்யா,
அவளை விருட்டென இழுத்து தன் தோளோடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். சுகன்யாவின் முகத்தில் பூத்திருந்த அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்ன என்பதை அந்த நொடியில் அனுவால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியவில்லை. சுகன்யா அறையை பூட்டி சாவியை தன் தோள் பையில் போட்டுக் கொண்டாள். அனுவின் இடுப்பில் தன் இடது கையை தவழவிட்டவளாக, வேகமாக ரிசப்ஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் லவ்வரோட பர்த் டே என்னைக்குங்கறதை நீ நிஜமாவே மறந்திட்டியா?" அவர்கள் இருவரும் ரிசப்ஷனை நோக்கி மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.

"இப்ப எதுக்கு இந்தக்கேள்வியை கேக்கறே நீ?"

நடந்து கொண்டிருந்த அனு சட்டென நின்றாள். அன்றைய தேதி ஜூன் மூன்று என்பது சட்டென அவள் மனதுக்குள் உறைக்க அவள் காதலனின் களையான முகம் அவள் கண்ணுக்குள் வந்து நின்றது. சுகன்யாவின் முகத்திலிருந்த குறும்புப்புன்னகையின் அர்த்தம் இன்னும் அவளுக்கு முழுமையாக விளங்கியிருக்கவில்லை. அனு, ஒரு நொடி, சுகன்யாவின் கையை இறுக்கிப்பிடித்தாள். சுகன்யா மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் மனசுக்குள்ளவே நீ நினைச்சிக்கிட்டு இருக்கற உன் காதலனை, அவனோட பிறந்த நாளன்னைக்கு, நீ விஷ் பண்ண விரும்புவேன்னு நான் முழுமையா நம்பறேன்." இதை சொல்லிவிட்டு சுகன்யா, அனுவின் முகத்தை நோக்கி மிக மிக இயல்பாக சிரித்தாள். அவள் உதடுகளில் இருந்த குறும்பின் அர்த்தம், அனுவுக்கு இப்போது இலேசாக புரிவது போல் இருந்தது.

"சுகன்யா... என்னடி சொல்றே நீ? உண்மையைச்சொல்லுடீ... இப்ப இங்கே வந்திருக்கறது யாரு?" இப்போது அவர்கள் ரிசப்ஷனை அடைந்து விட்டிருந்தார்கள். 


“ஹாய் சுகன்யா ஹவ் ஆர் யூ? ஹாய் அனு... ஹவ் டு யூ டூ? எப்போ, எங்கே, யாரை, யார்கூட சந்திப்போம்ன்னு எதிர்பாக்கவே முடியலியே? நம்ம லைப்ல இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு நிஜமாவே நான் இன்னைக்கு ஆச்சரியப்படறேன்? திஸ் ஈஸ் ரியலி எ சர்ஃப்ரைஸ் டு மீ. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃப்ரெண்ட்ஸா?” சம்பத் வியப்புடன் பேசிக்கொண்டிருந்தான்.

சுகன்யாவுடன் வந்துகொண்டிருந்த அனுராதாவைக் கண்டதும் சம்பத்தின் முகத்தில் இருந்த உற்சாகப் புன்னகையின் நிறம் சற்றே மாறி மங்கலடித்தது.ஒரே நொடியில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு, எப்போதும் தன் முகத்திலிருக்கும் இயல்பான புன்னகையை வரவழைத்துக் கொண்டான். சினேகிதிகள் இருவரையும் இதமான குரலில் விஷ் செய்தவன், முகத்தில் சிறிதும் தயக்கமேயில்லாமல் அவர்கள் கைகளையும் பிடித்து குலுக்கினான்.

ரிசப்ஷனுக்குள் நுழையும் போதே அங்கே வந்திருப்பது யாராக இருக்கும் என்பதை அனு ஓரளவுக்கு யூகித்துவிட்டிருந்தாலும், சுகன்யாவுக்கு சம்பத் நெருங்கிய உறவு என்பதை மட்டும் அவளால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. அவளும் சம்பத்தைப்போல் தன்னுள் திகைத்துத்தான் போயிருந்தாள்.

அனுவின் யூகத்துக்கு ஏற்ப, சம்பத் ரிசப்ஷன் வாசலில் நின்றவாறு புன்னகையுடன் தங்களை விஷ் செய்ததைக் கண்டதும், அவள் மனதில் இனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு மகிழ்ச்சி பீறிட்டெழ ஆரம்பித்தது. சம்பத்தை அவள் கடைசியாக பார்த்து ஒரு வருஷத்துக்கும் மேலாகியிருந்தது.

அனுவின் மனதை கொள்ளையடிக்கும் கவர்ச்சியான அதே சிரிப்பு, இன்றும் சம்பத்தின் முகத்தில் பூத்திருந்தது. அந்த இனிமையான, இதமான, சிரிப்பில்தானே அவள் அவனிடம் மயங்கி போயிருந்தாள். அவனுடைய கம்பீரமான குரலில் தானே, அவள் தன் மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள். அவனுடைய மிடுக்கானத் தோற்றத்தை கண்டுதானே தன் காதலை அவனிடம் தெரிவித்திருந்தாள்.

சம்பத் இப்ப கொஞ்சம் மெலிஞ்சி போயிருக்கானே? எப்பவும் பார்ட்டி பார்டீன்னு அலையறவன்; இன்னும் அந்த பழக்கமெல்லாம் இவனுக்கு இருக்கோ என்னவோ? நேரத்துக்கு சரியா சாப்பிடறது இல்லையோ? ஆனா இந்த ஒரு வருஷத்துலே, முகத்துல ஒரு மெச்சூரிட்டி வந்த மாதிரி இருக்கே?

அவனே சொன்ன மாதிரி, திடுதிப்புன்னு, எதிர்பார்க்காத நேரத்துல, அவனோட பொறந்த நாளைன்னைக்கு என் எதிர்ல வந்து நிக்கறானே? நான் அவனை காதலிச்சது, நான் அவங்கிட்ட என் நேசத்தை சொன்னது, இதெல்லாம் அவனோட ஞாபகத்துல இருக்குமா? என்னைப் பாத்ததும் வெகு இயல்பா சிரிச்சானே?

இதுக்கு என்ன அர்த்தம்? என்னை அவன் மறக்கலேன்னுதானே அர்த்தம். கடைசீல என் மனசுக்குள்ள இருக்கற ஆசை நிறைவேறப்போகுதா? என் வேண்டுதல் வீண் போகலையா? நான் கும்பிடற தெய்வம் என்னை கைவிடலியா? தெரியலியே? அனுவின் மனம் மகிழ்ச்சியில் ஒரு பக்கம் பொங்க, மறுபுறம் ஆயிரம் கேள்விகளுடன் தவிக்க, அவள் உடல் சிலிர்த்துப்போய் நின்றாள்.

"அயாம் பைன்... ஹவ் டூ யூ டூ சம்பத்... ஹேப்பி பர்த் டே டு யூ" அனு தன் மனசார அவனை வாழ்த்தினாள்.

"தேங்க் யூ அனு... தேங்க் யூ வெரிமச்...?" சம்பத் அனுவின் வலது கையை மென்மையாக அழுத்தினான்.

"அத்தான்... அனுவோட கையை குலுக்கினது போதும்.. என் பக்கமும் கொஞ்சம் திரும்புங்க... ஹேப்பி பர்த் டே டு யூ..." சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

"தேங்க் யூ சுகா... உன் வாழ்த்துக்கு தேங்க்யூ... பட் இன்னைக்கு ஒரு நாளாவது என்னை நீ கிண்டல் பண்ணாம இரேன்.." அவளிடம் கெஞ்சுவது போல் அவன் நடித்தான்.

"அத்தான்.. நீங்க உண்மையைச்சொல்லுங்க. என் ஃப்ரெண்ட் அழகா இருக்காளா இல்லியா?"

"ஹேய்.. அனுவுக்கென்ன? ஷி ஈஸ் வெரி வெரி நைஸ் லேடீ.. அண்ட் ஷீ ஈஸ் ஆல்வேஸ் ப்யூட்டிஃபுல்..." அனுவின் முகத்தை, அவனுடைய பாராட்டுதலால் சிவந்த அவள் முகத்தை, அவன் தன் ஓரக்கண்ணால் பார்த்தான். உண்மையாகவே அனு இப்ப முன்னைக்கு அழகா இருக்காளே? உடம்புல கொஞ்சம் சதை போட்டிருக்கு... நல்லா கலர் ஏறின காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்கா? சம்பத் அவளை நீளமாக ஒரு முறைப்பார்த்தான்.

"அத்தான்... அனுவையோ, அல்லது அவளோட வாழ்த்தையோ இன்னைக்கு நீங்க எதிர்பாத்தீங்களா?"

"நிச்சயமா இல்லே. பட் அயாம் ரியலி ஹேப்பி டு மீட் ஹர் அகெய்ன். அனுவை சந்திச்சி கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும். பெங்களுரூலேருந்து எங்க கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் இப்பத்தான் அவளைப் பாக்கறேன். தேங்க் யூ அனு. தேங்க் யூ ஃபார் யுவர் விஷ்ஷஸ்." மீண்டும் ஒரு முறை சம்பத் அவள் கையை பிடித்து மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

"உலகம் ரொம்ப சின்னது. நாம நினைக்காததெல்லாம் நடக்குதுன்னு, போனவாரம் நான் சொன்னப்ப நீங்க சிரிச்சீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?" சுகன்யா சம்பத்தை நோக்கி கேலியாகச் சிரித்தவள், அனுவையும் குறும்பாக நோக்கினாள்.

"யெஸ்... யூ ஆர் ரைட் சுகன்யா..."அவர்கள் மெல்ல காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இதமான காற்று அவர்கள் உடலைத் தழுவிக் கொண்டுபோனது.


"நான் ரூமுக்கு போறேன்டீ சுகன்யா... நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க..." காரை நெருங்கியதும் அனு சற்றே தயங்கி நின்றாள்.

"வொய்... அனு?எங்க கூட வர்றதுக்கு உனக்கென்ன தயக்கம்? ஏதோ என்னை முன்னே பின்ன தெரியாதவன் மாதிரி ஏன் நினைக்கிறே?"

"அப்படீல்லாம் இல்லே சம்பத்..."

"என் பர்த்டேன்னைக்கு, எங்க கூட லஞ்ச் சாப்பிட உனக்கு இஷ்டமில்லையா? இல்லே; என்னையே உனக்குப் பிடிக்கலையா?" சம்பத் பேசியபின் சட்டெனத் தன் நாக்கை கடித்துக் கொண்டான். ஏதோ நினைவில் சட்டென அவளுடைய இடது கையைப் பிடித்தான்.

உன்னைப் பிடிக்காமலாடா, உன் பொறந்து நாளுக்கு கோவிலுக்குப் போய், உன் பேர்ல அர்ச்சனை பண்ண நினைச்சேன்? என் காதல் வேண்டாம்ன்னு என் மனசை நீ நொறுக்கிட்டுப் போயிருக்கலாம்.

ஆனா நான் இன்னும் உன்னை மறக்கவும் முடியாமே, என் மனசுலேருந்து உன்னை தூக்கி எறியவும் முடியாமே ஒரு பைத்தியக்காரியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் மனசுல இருக்கறது உனக்கு புரியாதுடா. அனு தன் மனதுக்குள் புழுங்கினாள்.

"அத்தான்.. அனு இன்னைக்கு, அவ மனசுக்கு ரொம்ப நெருக்கமான யார் பேருக்கோ கோவில்லே அர்ச்சனை பண்றதா இருந்தா. அவ மனசுக்கு நெருங்கியவங்க யாருங்கறதை நான் யதேச்சையா கண்டுபுடிச்சிட்டேன்." அவர்கள் இருவரும் ஒன்றாக உட்காரட்டும் என்ற எண்ணத்தில் சுகன்யா காரின் முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள். அனுவும் சம்பத்தும் பின் சீட்டில் அமர்ந்தனர்.



"சுகன்யா... பிளீஸ்... கொஞ்ச நேரம் சும்மாருடி..." அனு தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். காரில் உட்கார்ந்த பின்னும் சம்பத், அனுவின் கரத்தை தன் பிடியிலிருந்து விடவில்லை.

"அனு... பீ சீர்ஃபுல்..." சம்பத் ஆதரவாக அவளை நோக்கி புன்னகைத்தான்.சம்பத்தின் கரத்திலிருந்து தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டாள் அனு.

"அத்தான்... அனு சொல்ற மாதிரி நான் சும்மாயிருக்கப் போறது இல்லே. நீங்க என்ன காரணத்துக்காக அனுவோட அன்பை, காதலை வேணாம்ன்னு சொன்னீங்களோ... இப்ப அதைப்பத்தி நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலே. அதனால எந்த பிரயோசனமும் இல்லே. ஒரு விதத்துல அது ஏற்கனவே முடிஞ்சு போன விஷயம்."

"சுகன்யா... இப்ப இதைப்பத்தி நாம பேசியே தீரணுமா?" சம்பத் தன் முகத்தை, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவன், ஓரக்கண்ணால் அனுவைப் பார்த்தான். சுகன்யாவின் மனதிலிருப்பது என்னவென்று அவனுக்கு புரிந்துவிட்டது.

அனு யாரையுமே பார்க்காமல் கார் கண்ணாடியின் வழியே சாலையை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள்.சுகன்யா அடுத்ததாக என்னப்பேசுவாள் என்பது அவளுக்கும் புரிந்துவிட்டது.

"அத்தான்.. சுத்தி வளைச்சுப்பேச எனக்கு விருப்பமில்லே. உங்களுக்கும் அது பிடிக்காது. நாமெல்லாம் குழந்தைகளும் இல்லே. இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்க்கையிலே உண்மையா இருக்கறதுதான் முக்கியம். அதுதான் புத்திசாலித்தனம்."

"அனு என்னோட ஃப்ரெண்ட்.. அனுவும் நீங்களும் ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்கீங்க. உங்களுக்கு அவளைப்பத்தி, அவ குணத்தைப்பத்தி, தெரிஞ்ச மாதிரி எனக்கும் அவளைப்பத்தி ஓரளவுக்குத் தெரியும்."

"இந்த நிமிஷத்துல, உங்க மேல அனு வெச்சிருக்கற ஆசை, காதல், நேசம், இதைப்பத்தியெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்." ஆனா உங்களுக்குத் தெரியாது.நீங்க அதை தெரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்."

"ம்ம்ம்.." சம்பத் தன் பார்வையை அனுவின் புறம் திருப்பினான். அனு இன்னமும் ரோடையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஒரு நேரத்துல, அனுவோட காதலை நீங்க ஏத்துக்க மறுத்து இருக்கலாம். ஈரத்துணியிலே சுத்தி வெச்சிருக்கற மல்லிகை பூவை மாதிரி, இன்னமும் உங்களை, அவ தன் மனசுக்குள்ளவே பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டு இருக்கா. உங்க நினைப்புங்கற வாசனையை தன் உள்ளத்குள்ளவேமுகர்ந்து முகர்ந்து பாத்துகிட்டு, தன் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கா."

"சுகன்யா... இன்னைக்கு அவரோட பர்த் டேப்பா. இன்னைக்கு பூரா அவர் சந்தோஷமா இருக்கணும். இதுதான் என் ஆசை. எனக்கும் அவருக்கும் நடுவுல என்னைக்கோ நடந்த ஒரு மேட்டரை, இப்ப நீ டிஸ்கஸ் பண்ணியே ஆகணுமா?" அனு தன் பார்வையை காருக்குள் திருப்பமால் முனகினாள்.

"கொஞ்ச நேரம் நீ சும்மாயிருடீ... நீயாடீ என்னை இவர்கிட்ட உன்னைப்பத்தி பேச சொன்னே?"

“ப்ச்ச்ச்... இல்லே...” அனு மீண்டும் மெல்லிய குரலில் முனகினாள்.

“பாத்தீங்களா அத்தான்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்லுலே பேசும்போது, நான் யார் மனசை புரிஞ்சுகலேன்னு என் கிட்ட கேட்டீங்களே? இப்ப உங்களுக்கு புரியுதா?"

"சுகா.."

"உங்க பர்த் டே அன்னைக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு நினைக்கறவளோட மனசைத்தான் இப்ப நீங்க முக்கியமா புரிஞ்சிக்கணும்."

“சுகன்யா... அயாம் சாரி.. உண்மையாகவே உன்னோட குற்றசாட்டுக்கு இப்ப என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலே.” முகத்தில் இலேசான குழப்பத்துடன் சம்பத் தன் சீட்டில் தளர்ந்து சரிந்தான்.

“அத்தான்.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை மட்டும் காது குடுத்து கேட்டாப் போதும்...”

“சுகன்யா உன் அத்தான்கிட்ட நீ பேச விரும்பறதையெல்லாம், என் எதிர்லேதான் பேசணுமா?” அனு அசௌகரியமாக தன் ஆசனத்தில் நெளிந்தாள்.

"ஆமாம்டீ... நீ கொஞ்ச நேரம் பேசாம இருன்னு சொல்றேன்"

“அத்தான், உங்ககிட்ட எனக்கிருக்கற உறவாலேயும், உங்க மேல இருக்கற உண்மையான அக்கறையாலேயும், அனுவோட ஃப்ரெண்டுங்கற உரிமையாலேயும், இப்ப நான் உங்க ரெண்டு பேரைப்பத்தியும் பேசிகிட்டு இருக்கேன். உங்க தனிப்பட்ட விஷயத்துல நான் தலையிடறது உங்களுக்கு பிடிக்கலேன்னா அதை ஓப்பனா சொல்லிடுங்க..."

இதுவரை பின்சீட்டை நோக்கி அவர்களைப் பார்த்து உரையாடிக்கொண்டிருந்த சுகன்யா விருட்டென திரும்பி உட்கார்ந்துகொண்டு, தன்னெதிரில் தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கும் அகலமான வீதியைப்பார்க்க ஆரம்பித்தாள்.

"சுகா.. உன்னை நான் தப்பா எதுவும் சொல்லலீயே? எதுக்காக நீ கோவப்படறே?" சம்பத் தன் முகம் சுருங்கினான்.

"பின்னே எப்படி பேசணுங்கறீங்க? நீங்க பழைய சம்பத்தாயிருந்தா நான் அனுவைப்பத்தி உங்ககிட்ட பேசியே இருக்க மாட்டேன். நிச்சயமா அவளை என்னோட அழைச்சிக்கிட்டே வந்திருக்க மாட்டேன்."

"சுகன்யா... ப்ளீஸ்... நான் சொல்றதை கேளேன்." தன்னால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாதேயென்ற ஆதங்கத்தில் அனு அவர்கள் பேச்சின் நடுவில் நுழைந்தாள்.

"சரிடீ.. கடைசியா என்னை நீ ஒரே ஒரு வார்த்தை பேசவிடுடீ... அத்தான்... இப்ப நீங்க அனுவோட செல்லை வாங்கிப்பாருங்க. ஒண்ணுல்லே; ரெண்டுல்லே; பத்து போட்டோ வெச்சிருக்கா. அத்தனையும் உங்களோடதுதான். ஒரு நாள்லே பத்து தரம் திரும்ப திரும்ப அந்த படங்களை பாத்துக்கிட்டு இருப்பா..." சம்பத் அனுவைப்பார்த்தான்.

"அவளைப் பொறுத்தவரைக்கும், அவ காதல் முடிஞ்சுப் போன விஷயம் இல்லே. அவ உங்களையே எப்பவும் தன்னோட மனசுக்குள்ளவே நெனைச்சிக்கிட்டு இருக்கா." சுகன்யா இப்போது அவர்களை பார்க்காமல் கார் ஓடிக்கொண்டிருந்த பாதையை நோக்கியவாறு பேசிக்கொண்டிருந்தாள்.

"ஓ மை காட்..." இம்முறை சற்று உரக்கவே முனகினான் சம்பத்.

முனகிய சம்பத் தன் அருகில் உட்கார்ந்திருந்த அனுவின் முகத்தை தயக்கத்துடன் மீண்டும் ஒருமுறைப் பார்த்தான். அனு தன் இருகரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக கோர்த்து தன் மடியின் மேல் வைத்திருந்தாள்.

கார் ஓடும் வேகத்தில் அனுவின் முகத்தில் அடித்த மெலிதான வெய்யிலில், அவளுடைய குழந்தை போன்ற முகம் அழகாக மின்னிக்கொண்டிருந்தது. அனுவுக்குத்தான் எவ்வளவு அழகான மூங்கில் மாதிரி வழவழப்பான கைகள்? எத்தனை நீள நீளமான விரல்கள் இவளுக்கு? அமைதியான முகம். ஆரவாரமில்லாத பேச்சு. சம்பத், தன் பார்வையில் சிறிதும் காமம் என்பதேயில்லாமல் அவளை நோக்கினான்.

அனு நீ அழகு மட்டுமில்லே; புத்திசாலியும் கூட; இதுல எனக்கு கொஞ்சமும் சந்தேகமேயில்லை. உன்னை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உன் அழகுல எனக்கு மோகமிருக்கு. ஆனா உன்னை நான் காதலிக்கலைங்கறதுதான் உண்மை. உன்னை மட்டுமல்ல; என்னால எந்தப்பெண்ணையும் காதலிக்க முடியாது. எந்த பெண்ணோடவும் நிரந்தரமான உறவை வெச்சுக்க எனக்கு விருப்பமில்லே. எனக்கு காதல், திருமணம், இதுலேல்லாம் சிறிதளவும் நம்பிக்கையில்லை.

அனு... என்னை நீ புரிஞ்சுக்கணும். உன்னை நான் எந்த விதத்திலும் வற்புறுத்தலை. உனக்கு சரின்னா, நம்ம ஓய்வு நேரத்துல, நம்ம மனசுல இருக்கற ஆசைகளை, உடலின் தேவைகளை, நம்ம விருப்பங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து தீத்துக்கலாம். உனக்கு விருப்பம் இருக்கறவரைக்கும் இந்த உறவு நமக்குள்ள நீடீக்கும். உனக்கோ எனக்கோ போதும்ன்னு தோணும்போது இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம்.

அனுராதா தன் காதலை சம்பத்குமாரனிடம் தெரிவித்தபோது, அவளை, அவள் மனதை, அவள் காதலை புரிந்துகொள்ளமால், அவளிடம் கொஞ்சமும் வெட்கமில்லாமல், பைத்தியக்காரத் தனமாக பேசியது அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்துலதான் நான் புத்தியே இல்லாம, யாரையுமே மதிக்காம, திமிர் பிடிச்சி அலைஞ்சுக்கிட்டு இருந்தேனே? சம்பத் தன் தலையை வேகமாக உதறிக்கொண்டான்.

என்னை இவ காதலிக்கறான்னு தெரிஞ்சும், இவளோட காதல் எனக்கு தேவையில்லைன்னு இவளை நான் உதறினதுக்கு அப்புறமும், இவ தன் மனசுக்குள்ளாகவே ஒரு வருஷத்துக்கும் அதிகமா என்னை காதலிச்சுக்கிட்டு இருக்காளே? என் பிறந்த நாளை நினைவு வெச்சுக்கிட்டு இருந்து, என்னோட நலனுக்காக, கோவில்ல அர்ச்சனை செய்ய நினைக்கிறாளே?

என்னை நினைச்சு, தன் காதலை நினைச்சு, என் கண் முன்னாலேயே என் நினைவுல இவ தன் கண் கலங்குகிறாளே. எனக்காகவும் ஒருத்தி அழுறாளா? இது உண்மையாவே சாத்தியம்தானா? சம்பத் அதிர்ந்து போனவனாக அனுவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏன்டா முடியாது? சுகன்யாவை நீ காதலிக்கறேங்கலையா? ஆறு கடலை சேர்ந்துதான் ஆகணும்ன்னு நீ கதை சொல்லலியா? எவ்வளவு காலமானாலும் நீயா வர்ற வரைக்கும் உனக்காக காத்திருப்பேன்னு சுகன்யாகிட்ட ஜம்பமடிச்சிக்கிட்டியேடா, அது உனக்கு மறந்து போச்சா? சுகன்யாவை நீ உன் மனசுக்குள்ளவே நினைச்சுக்கிட்டு இருக்கறது உண்மைன்னா அனு ஏன் உன்னை தன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கக்கூடாது?

மனதுக்குள் வெகுவாக அதிர்ந்த சம்பத் மெல்ல அனுராதாவின் பக்கம் திரும்பினான். அவள் வலது கரத்தை மிகுந்த நேசத்துடன் வெகு மெண்மையாக தன் இடது கையால் பற்றினான். அனு அவனை நோக்கித் திரும்ப, அவன் விழிகள் அவள் விழிகளை கனிவுடன், காதலுடன் நோக்கின. அனுவின் விழிகள் லேசாக கலங்க ஆரம்பித்தன.

"அனு... ஏண்டி உன் வாய்லே என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்கே? வாயைத்தொறந்து சொல்லேண்டீ.."

"என்னடீ சொல்ல சொல்றே?" அனு தழுதழுத்தாள்.

"உங்களை நான் காதலிக்கலே; உங்களை நான் எப்பவோ மறந்துட்டேன்; சுகன்யா சொல்லிகிட்டு இருக்கறதெல்லாம் சுத்தப்பொய்ன்னு என் அத்தான் மூஞ்சைப்பாத்து ஒரே ஒரு தரம் சொல்லேண்டீ.."

உள்ளத்தில் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தில், ஆசையில், தன் மேலிருக்கும் ஒரு தலைக்காதலால், தன் பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற மறுக்கும் தன் அத்தானின் மனதை மாற்றிவிடவேண்டும் என்ற உணர்ச்சியுடன் கோபமாக சுகன்யா அனுவிடம் வெடித்தாள். தன் பேச்சுக்கு பதிலேதும் வராததால், சட்டென திரும்பி பின் சீட்டை நோக்கினாள்.

காரின் பின்னிருக்கையில், சம்பத்தின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு, அனு தன் விழிகளை மூடி உட்கார்ந்திருந்தாள். சம்பத்தின் இடது கரம் அனுவின் தோளில் விழுந்திருந்தது. அனுவின் வலது கரத்தை, அவன் தன் இடது கரத்தால் பற்றி வருடிக் கொண்டிருந்தான்.

கார் மலைமந்திரின் முன் கிறீச்சிட்டு நின்றது.

"அனு குட்டீ உன் கண்ணைத் தொறடீ... கோவில் வந்திடிச்சிடீ..." களிப்புடன் கூவிய சுகன்யா காரின் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கினாள்.

"சுகன்யா... ஒரு சின்ன திருத்தம் சொல்லட்டுமா?" தன் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு இறங்கிய சம்பத், தன் முகத்தில் புன்னகையுடன், அனு இறங்குவதற்காக வசதியாக அவள் பக்கத்து கதவை திறந்து கொண்டு நின்றான்.

"அத்தான் நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்களோ, அதை முதல்லே உங்க அனுராதாகிட்ட சொல்லுங்கோ... அவ தன் காது குளிர கேக்கட்டும்..." சுகன்யாவின் முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

"ஓ.கே... சுகன்யா... கோவில் என்னைத் தேடி வராதுங்கறது எனக்கு இன்னைக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. எனக்காக திறந்திருக்கிற ஒரு கோவிலைத் தேடி நான்தான் போகணும்." காரிலிருந்து இறங்கிய அனு அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.

"அனு... எனக்காக நீ காத்துக்கிட்டு இருந்தே. இப்ப நானே உன்னைத் தேடி வந்திருக்கேன். என்னை நீ ஏத்துக்குவியா?" சம்பத் படபடக்கும் உள்ளத்துடன், அனுவின் முகத்தை உற்று நோக்கினான்.



அனுராதா, சம்பத்குமாரனின் இடதுபுறத்தில் நின்றிருந்தாள். அவள் பதிலேதும் பேசாமல், தன் வலது கரத்தால், அவன் இடது முழங்கையை வளைத்துக்கொண்டாள். அவன் இடது தோளில் தன் தலையை சாய்த்துகொண்டு, சில நொடிகள் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றாள்.

"சுகன்யா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டீ." மெல்லிய குரலில் சொன்னவள் சம்பத்தை இழுத்துக்கொண்டு அர்ச்சனை தட்டுகள் விற்கும் இடத்தை நோக்கி, தன் கால்கள் தொய்ய, தொய்ய, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.


No comments:

Post a Comment