Thursday, 12 March 2015

சுகன்யா... 45

"காலையில போனவன் நீ, இவ்வள நேரமா எங்கடா சுத்திட்டு வர்றே?"

பத்து மணியளவில், தன் தாயின் விருப்பப்படி, சிவதாணுவின் வீட்டில், சுகன்யாவை பார்க்க சென்ற சம்பத், மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பியதும், ராணி தன் பிள்ளையின் சோர்ந்த முகத்தைப் பார்த்து பதறிப் போனாள்.

"வீட்டுக்குள்ளே வர்றப்பவே, என்னை நீ சும்மா நச்சு நச்சுன்னாதேம்மா?" சம்பத் அலுப்பும் சலிப்புமாக எரிந்து விழுந்தான்

"வெளியில எதாவது சாப்பிட்டியாடா...ராஜா... ஏன் கோவப்படறே?" ... "மணி ரெண்டாச்சே!" நேரத்துக்கு சாப்பிட்டு பழக்கமாச்சே இவனுக்கு? இவன் பசியினாலத்தான் உர்ன்னு கோபமா இருக்கானா?

"எதையாவது சீக்கிரமா குடுத்துத் தொலைம்மா...பசி உயிர் போவுது..!" சம்பத் தன் முகத்தைச் சுளித்தான்.


சம்பத், சுகன்யாவின் மீதிருந்த எரிச்சலையும், சினத்தையும், ஏற்கனவே செல்வாவிடம் போனில் முழுசாக காண்பித்துவிட்டான். கனகா குடுத்த காஃபியை குடித்துவிட்டு, அவன் கிளம்பும் போது கூட, தன் தாத்தாவின் அறைக்குள் படுத்திருந்த சுகன்யா, அந்த அறையைவிட்டு வெளியில் வரவேயில்லை.

"பாட்டி, சுகன்யாகிட்ட சொல்லிடுங்க; நான் போய்ட்டு அப்புறமா வர்றேன்!" அறையின் உள்ளிருந்த சுகன்யாவின் காதில் விழுமளவிற்கு சம்பத் தான் கிளம்புவதை சத்தமாக அறிவித்தும், அதற்கும் எந்தவித பலனும் இல்லை.

சம்பத்துக்கு, சற்றே மனதுக்குள் அடங்கியிருந்த ஆத்திரம், மீண்டும் பொங்கி எழுந்தது. நான் கிளம்பறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், உரக்க குரல் கொடுத்ததுக்கு அப்புறமும், ஒரு மரியாதைக்கு கூட வெளியில வர்றலயே? இந்த சுகன்யா மகாத்திமிர் பிடிச்சவளா இருக்கணும்? இவ லவ்வர் தமிழ்செல்வனுக்கும், இவளுக்கும், கூரா ஆப்பு வெச்சதுல ஒரு தப்பும் இல்லை? நடுவுல ஒரு நிமிஷம் நான் இவளை நினைச்சு பரிதாபப்பட்டது தப்புத்தான் போல இருக்கே? இவளை நான் மட்டும் எதுக்காக என் சொந்தம்ன்னு நினைக்கணும்? மதிக்கணும்?

ரெடி ... ஒன்.... டூ... த்திரி ... ஸ்டார்ட் மீயூஜ்ஜிக்! கத்திரிக்கா கடைத் தெருவுக்கு வந்தாச்சு! இன்னொருத்தன் இவளை ஏற்கனவே தொட்டு பாத்துட்டான்னு சுத்தமா தெரிஞ்சுப் போச்சு. நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ன்னு இவளைத் தொட்டவனே கன்பார்ம் பண்ணிட்டான். இவ்வளவு நாளா ஒருத்தரை ஒருத்தர் தொட்டுக்காம, தடவிக்காமலா இருந்து இருப்பாங்க? எனக்கு சத்தியமா சுகன்யா கிடைக்கப் போறதும் இல்லே! இப்ப இவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற இன்ட்ரஸ்ட்டும் எனக்கு சுத்தமா இல்லே! இவளை மாதிரி திமிர் புடிச்சவளைக் கட்டிக்கிட்டா, என் சவுகரியப்படி வாழ்க்கையில ஃபிரீயா இருக்க முடியாது.

ஒரு விஷயம்தான் புரியலே? சுகன்யாவோட லவ்வர் செல்வா, சுத்தமா கொஞ்சம் கூடவா சூடு, சொரனை இப்படி எதுவும் இல்லாம இருப்பான்? சோத்துல உப்புப் போட்டுத்தானே திம்பான் அவன்? ஆப்பு வெச்சு கால் மணி நேரமாச்சு; அவன் பொலம்பி அழுவற சத்தத்தைக் காணோம்! திருப்பியும் சுகன்யாவுக்கு அவன் போன் பண்ணலயே? அவன் போன் பண்ணட்டும்! பண்ணாம போவட்டும்! இல்லே, இங்க நேரா என்கொயரிக்குத்தான் வரட்டுமே? உனக்கென்னடா? உங்கிட்ட மேட்டர் வரும்போது பாத்துக்க! சர்தானே? போ... போ.. எடத்தைக் காலி பண்ணு நயினா...

டேய் சம்பத்து... நீ உன் வேலையை கச்சிதமா முடிச்சிட்டே! உன் ரூட்டைப் பாத்துக்கிட்டு போய்கிட்டே இருடா; பலனை அனுபவிக்கறவங்க அனுபவிக்கட்டும்! தேவிடியா முண்டை...! மனதுக்குள் சுகன்யாவை வெறுப்புடன் திட்டினான். திட்டியதால் மனதுக்குள் ஏற்பட்ட போலியான சந்தோஷத்தையும், சுகன்யாவின் பாராமுகத்தினால் ஏற்பட்ட வெறுப்பையும் தன் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், "பாட்டீ, தேங்க்ஸ் பாட்டீ... பில்டர் காபி அருமையா இருந்தது.." கனகாவைப் வாயாரப் பாரட்டிவிட்டு சிவதாணுவின் வீட்டிலிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வரும் வழியில், தன் பழைய நண்பன் ஒருவன் எதிர்படவே, அவனுடன் நேரம் போவது தெரியாமல் அரட்டையடித்தவாறு, சுகன்யாவால் புண்பட்ட தன் மனதை, ஃபில்டர் வில்ஸ் புகையால் சிறிதளவு ஆற்றிக்கொண்டான். பசியுடன் வீட்டுக்குத் திரும்பியவன், மிச்சம் மீதியிருந்த எரிச்சலை, முதலில் தன் எதிரில் வந்த தாயின் மீது காட்டினான். ஒரு முரடனின் செல்லாத கோபம், வீட்டில் தாயிடமும், தாரத்திடமும்தானே செல்லுபடியாகும்!.

சம்பத், தான் அணிந்திருந்த ஜீன்சையும், டீ ஷர்ட்டையும் கழற்றி, ஹாலில் திசைக்கொன்றாக எறிந்தான். ராணி, தன் செல்லப்பிள்ளை சம்பத், ஆடும் ஆட்டத்தை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தில் இருக்கும்போது யார் எது சொன்னாலும் அவன் காதில் ஏறாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இப்போதைக்கு அவனை விட்டுப் பிடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

நல்லசிவம், சம்பத்தைப் பெற்றெடுத்தவர், அவன் ஆடும் கூத்தைக் கண்டவர், தன் மகனையும், மனைவியையும் மாறி மாறி மவுனமாக பார்த்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தார். சரிதான்... இன்னைக்கு அம்மாவும், புள்ளையும், வழக்கம் போல ஒரு டிராமா போடத்தான் போறாங்க; அதுல எனக்கு என்ன ரோல்; அதை நான் எப்படி டீல் பண்ணணும்? அவருக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

ராணியும் அதையேதான் சிந்தித்துக்கொண்டு இருந்தாள். ஒரே புள்ளே; ஒரே புள்ளேன்னு தலைக்கு மேலச் செல்லம் குடுத்து கெடுத்துட்டேன். பத்மாசூரன் மாதிரி இப்ப இவன் ஒவ்வொரு விஷயத்திலேயும், இவன் என் தலைமேலேயே கையை வெச்சுப் பாக்கிறேங்கிறான். என்னத்தப் பண்றது? பெத்ததை எங்க கொண்டு போய் விடறது?

பெத்தவரு என்னடான்னா, எப்பவும் தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கார்? பெத்தது ஒரு வக்கிரம்ன்னா, வாச்சது அதுக்கு மேல ஒரு வக்கிரம்; அப்பனும், புள்ளையும் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் நேரா முகம் கொடுத்து பேசறது கூட கிடையாது. சூரியனும், சனியும் மாதிரி தான். அடுத்த வாரம் இவன் பெங்களூரூக்குத் திரும்பிப் போயிடுவான். அதுக்குள்ள ஒண்ணு ரெண்டு இடத்துல இவனுக்குப் பொண்ணுங்களை காட்டணும்! எதைப்பத்தியும் இவரு கவலைப்படாம உக்காந்து இருக்காரு?

இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா, நம்ம கடமை முடிஞ்சதுன்னு நிம்மதியா இருக்கலாம். ஒரு எடமும் சரியா அமைஞ்சுத் தொலையலை? சம்பத்து, படிச்சவளா, வேலை செய்யறவளா வேணுங்கறான். வர்ற எடத்துல பொண்ணு, கொஞ்சம் சுமாரா அழகாயிருந்தா, அவளுக்கு சரியான வேலையில்லே! வேலையிலயிருந்தா இவன் நெனைக்கற மாதிரி செவப்பா இல்லே?

அப்பன் அந்தக்காலத்துல அலைஞ்ச மாதிரி, புள்ளையும் செவப்புத் தோலா பொண்டாட்டி வேணுங்கறான். செவப்பு, கருப்புல என்னா இருக்கு? எப்படியிருந்தாலும் பொம்பளை பொம்பளைதான்னு ஏன் இந்த ஆம்பிளைங்களுக்குப் புரிஞ்சுத் தொலைக்கலை? ஆம்பளைங்களை மட்டும் நான் ஏன் குறைச் சொல்றேன்? பொண்ணுங்க மட்டும் யோக்கியமா?

ஒரு எடத்துல பொண்ணுப் பாக்க போனா, பெத்தவங்களுக்கு மேல, இதுங்களே கண்டீஷன் மேல கண்டீஷன் போடுதுங்க! வர்றவன் உசரமா இருக்கணும்; செவப்பா இருக்கணும்; மீசை இருக்கணும்; சமையல் தெரியணும்; கார் வெச்சிருக்கானா? வீடு வெச்சிருக்கானா? வீடு வெச்சிருந்தா, வீட்டுக்கு என்னை ஈ.எம்.ஐ. கட்டுன்னு சொல்லக்கூடாது! கல்யாணம் ஆனதும் உடனே தனிகுடித்தனம் போயிடனும். ஆம்பளை கண்டீஷன் போட்ட காலம் போய், இப்ப பொண்ணுங்க கண்டீஷன் போடற காலமாயிருக்கு!

இந்தக்காலத்து பொண்ணுங்களுக்குத்தான், என்னன்னா ஆசைகள்! என்னன்ன விருப்பங்கள்! என்னன்ன கற்பனைகள்! மாமானார், மாமியார், நாத்தானார்ன்னு பிக்கல் பிடுங்கல் இருக்கக்கூடாதுன்னு, மனசுக்குள்ளத் ரொம்பத் தெளிவா இருக்காளுங்க! பின்னே என்னா? சொந்தக்கால்ல நிக்கறாளுங்களே? ஒண்ணு அமைஞ்சி வந்தா, ஒண்ணு அமைய மாட்டேங்குது... சுகன்யா, எல்லாவிதத்துலயும் ஒத்துவர்றா! ஆனா அவ அப்பனும், ஆத்தாளும் ரொம்பவே பிகு பண்றாங்க... நீங்க ஒரு தரம் நேராப் பாத்து அந்த குமார்கிட்ட பேசுங்கங்கறேன்... காதுல வாங்கினாத்தானே? என்ன மனுஷனோ? புள்ளை கல்யாணத்துல கூட அக்கறையில்லே?

சம்பத்தை, காலையில சுகன்யாவைப் பாத்துட்டு வாடான்னு சொன்னேன்; என்னமோ சொன்னதும் எதுத்துப் பேசாமா எழுந்துப் போனான். அங்கப் போனானா? இல்லையா? ஒண்ணும் தெரியலை? இவனோ ஒரு குரங்கு... இவனுக்கு ஏத்த மந்தி எங்கப் பொறந்து இருக்கோ? ராணி தன் மனதுக்குள் சலித்துக்கொண்டாள். 

"ஏண்டா, சுகன்யாவைப் பாத்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா அவளை? அவ என்ன சொன்னா?" வரிசையாக கேள்வி மேல் கேள்வியை ராணி அடுக்கினாள்.

"ம்ம்ம்... சொன்னா சுரைக்காய்க்கு உப்பு இல்லேன்னு!"

"என்னடா உளர்றே?" மகன் அர்த்தமில்லாமல், தன் மேல் காட்டும் கோபத்தைக் கண்டு ராணி ஒரு வினாடி திகைத்தாள்.

"புரியலை...உனக்கு? இப்ப என்னைக் கேள்வி கேக்காதேன்னு சொல்றேன்..!?"

"அவங்க வீட்டுல ஒரு வாய் உன்னை சாப்பிடக்கூட சொல்லலையா?"

புத்திரப் பாசம் யாரை விட்டது? ராணியை மட்டும் விட்டுவிடுமா அது? மகனின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு, தட்டில் சாதத்தையும், அதன் மேல் வத்தல் குழம்பையும் ஊற்றி, கூடவே ஒரு பொரித்த அப்பளத்தையும், தன் மகனிடம் நீட்டியவாறே கேட்டாள் ராணி.

"இப்ப பசியோட இருக்கற என் வாயைக் கிளறாதே... கொஞ்ச நேரம் நீ சும்மாயிரு.. உன் பேச்சைக்கேட்டு அந்த சுகன்யாவைப் பாக்க போனேன் பாரு..என் புத்தியை நானே, என் செருப்பாலத்தான் அடிச்சுக்கணும்!!!

"என்னடா ஆச்சு... சொல்லித் தொலையேண்டா..!" போன எடத்துல என்னமோ தாறுமாறா நடந்துருக்கு... நடந்தது என்னாங்கிறதை இவன் கிட்டேயிருந்து முழுசா தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். இப்போது ராணியும் சற்றே சினத்துடன் சீறினாள்.

"ம்ம்ம்.. என்னை அந்த சுகன்யா செருப்பால அடிச்சிருந்தாக்கூட பரவாயில்லே? நான் கவலைப்பட்டு இருக்கமாட்டேன்... ஆனா அவ என்னை மூஞ்சால அடிச்சா! என் மனசைப் புண்படுத்திட்டா... அதைத்தான் என்னாலப் பொறுத்துக்க முடியலை! சரியான திமிர் புடிச்ச பொட்டை நாய் அவ..!! அவளை உன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு நீ கிடந்து துடிக்கறே!!?"

"டேய்...ஒரு வயசுக்கு வந்த பொம்பளைக் குழந்தையை... அதுவும் சுகன்யா நம்ம உறவு முறை; அந்தக் குழந்தையை... ஏண்டா அசிங்கமா இப்படியெல்லாம் பேசறே? நீ படிச்சு என்னடாப் பிரயோசனம்? முதல்ல பொம்பளைங்களை மதிக்கக் கத்துக்கடா..."

இதுவரை, அங்கு நடந்து கொண்டிருந்த வேடிக்கையை, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த நல்லசிவம் குறுக்கில் பேசத் தொடங்கிய அவர் பேருக்கு ஏற்றவாறு நல்ல மனுஷன். இயல்பாக அதிகம் பேசாமல் இயல்பாகவே அமைதியாக இருப்பவர். தன் மகனின் சிலுமிஷங்கள் அத்தனையையும் நன்றாக அறிந்தவர். பெண்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் தன் பிள்ளை சம்பத் இந்த அளவிற்கு சீரழிந்து போயிருப்பதற்கு முதல் காரணமும், அளவுக்கு அதிகமாக அவனுக்கு செல்லம் குடுத்திருக்கும் தன் மனைவி ராணி என்பதை, சிறிதும் தயங்காமல் எந்த கோவிலிலும் சத்தியம் செய்ய தயாராக இருப்பவர்.

"நீங்க சித்த நேரம் சும்மா இருங்க... நான் கேக்கறேன்... அவன் பதில் சொல்றான்... அங்க என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்க புள்ளையை நீங்களே மதிக்கலனா... ஊர்ல எவன் மதிப்பான்?" ராணி தன் புகைச்சலை அவர் மீது திருப்பினாள். தன் மகன் செய்யும் சில அட்டூழியங்களை ஏன் என்று அவர் தட்டிக்கேட்பதால், அவளுக்கும் அவருக்குமிடையில் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும்.

"எக்கேடோ கெட்டு நாசமாப் போங்க; ஆனா சொந்த ஊர்ல என் பேரை ரிப்பேர் ஆக்காதீங்க; இவன் ஆட்டத்தை எல்லாம் கண் காணாத இடத்துல, வெளியில எங்கயாவது வெச்சுக்கச் சொல்லு" அவர் தன் துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்.

"இன்னும் அவன் நடந்த விஷயத்தையே சொல்லலை; அதுக்குள்ள நீங்க எதுக்கு கிடந்து குதிக்கறீங்க?"

"உன் புள்ளையைப்பத்தி புதுசா தெரிஞ்சிக்கணுமா என்ன? அந்த பொண்ணு சுகன்யா கிட்ட இவன் எதாவது ஜோக் அடிக்கறேன்னுத் தப்பா பேசியிருப்பான்? இல்லேன்னா கண்ணடிச்சி, சிரிக்கறேன்னு கழுதை மாதிரி கனைச்சிருப்பான்?

"அய்யோ... என் தலையெழுத்து, உங்களைக் கட்டிக்கிட்டு நான் மாரடிக்கறேன்; என் புள்ளை புரியாத வாலிப வயசுல, ஒண்ணு ரெண்டு தரம், இப்படி... அப்படி ... சரின்னு சொன்னவளுங்க கூட சந்தோஷமா இருந்துட்டான்... இப்ப அதுக்கு என்னப் பண்ணணுங்கறீங்க?"

"ஆமாம்... உன் புள்ளைகிட்ட அவளுங்களா வந்து, சரின்னு சொன்னாளுங்க; பேச்சு பேசறே நீ; இவன் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்காம... காப்பத்திவிட்டது நான்தாங்கறது ரெண்டுபேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்... அன்னைக்கெல்லாம் நான் ஒரு பொஸிஷன்ல இருந்தேன்... இன்னைக்கு ஏதாவது வம்பு தும்பு ஆச்சு... இவனை உள்ளத் தள்ளி முட்டிக்கு முட்டி பேத்துடுவானுங்க; இதையும் நல்லா ஞாபகத்துல வெச்சுக்குங்க.."

"நடந்தது நடந்துப் போச்சு! நீங்களே உங்கப் புள்ளையை ஏன் இப்படி கொறைச்சுப் பேசறீங்க... எந்த ஆம்பிளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அப்படி இல்லமா இருந்திருக்கான்?"

"நான் இப்படி அப்படீன்னு இருந்தது இல்லடி... உன்னைத்தவிர வேற எவளையும் என் லைஃப்ல நான் தொட்டது இல்லடி..!"

"உங்களை யாரும் இப்ப கொறை சொல்லலை... அதோட நிறுத்துங்க.."ராணி பதிலுக்கு நல்லசிவத்திடம் சீறினாள்.

"மை டியர் ஃபாதர்... நீங்க என்னை ஆசை ஆசையா பெத்து எடுத்தீங்க; அதுக்காக நீங்க உங்க கடமையை அப்ப அப்ப செய்தீங்க... செய்யறீங்க; எல்லா அப்பனும் அவன் அவன் புள்ளைக்கு இதெல்லாம் செய்துதான் ஆகணும்; நான் உங்களை அப்பான்னு கூப்பிடறேனே... அதுக்கு பதிலுக்கு நீங்க எதாவது செய்ய வேண்டாமா?"

"என் கோபத்தை அதிகமாக்காதே... நீ இத்தோட நிறுத்திக்க்க..." நல்லசிவம் அவனை கையெடுத்துக் கும்பிட்டார்.

"அப்பா... போலீஸ் ஸ்டேஷனுக்கு போக இருந்த என்னை, ஒரு தரம் போன் பண்ணி அப்படி நடக்காம பாத்துக்கிட்டீங்க; உங்க அஃபிஷியல் லிங்க்சை யூஸ் பண்ணீங்க? நான் ஒத்துக்கறேன்; போலீஸ்காரன் எத்தனை தடவை உங்க கிட்ட ஹெல்ப்புக்காக வந்திருக்கானுங்க? இதெல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக்ன்னு எடுத்துக்கணும்..." சம்பத் கேலியாகச் சிரித்தான்.

"டேய் ... யானை கொழுத்தா தன் தலையில அதுவே மண்ணை வாரிப் போட்டுக்குமாம்...!" கோபத்தில் நல்லசிவத்தால் பேசமுடியவில்லை.

"அப்பா ... நான் திரும்பவும் சொல்றேன்... நீங்க கும்பிடற அந்த ஆண்டவன் எனக்கு ஒரு சாய்ஸ் கொடுத்திருந்தா..."

"கொடுத்திருந்தா?" நல்லசிவம் சீறினார்.

"சிம்பிள்... உங்களுக்கு பிள்ளையா நான் பொறந்தே இருக்க மாட்டேன்; வேற ஒரு ஃபாதரைத் தேடிக்கிட்டு அந்த வீட்டுல பொறந்திருப்பேன்;" சம்பத் சிரித்தான்.

"பாத்தியாடி... நீ பெத்திருக்கற உன் புள்ளை லட்சணத்தை?"

"அப்பா.. நீங்க உங்க பயாலாஜிகல் நாலெட்ஜ்ஜைக் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க; என் அம்மா மட்டுமே நான் பொறந்ததுக்கு காரணமில்லே! அன்பார்ட்சுனேட்லி, இந்த ஜென்மத்துல நீங்க என் அப்பா! நான் உங்க பிள்ளை! உங்களுக்கும் எனக்கும் எதுலயுமே சுத்தமா ஒத்து வரலே!

"நீ என்னோட வெறியில பொறந்தவண்டா... அதான் இப்படியிருக்கே? கொஞ்சம் விவேகம் வந்தப்ப எனக்கு ஆண்டவன் ஒரு நல்லப் புள்ளையை குடுக்கலை.."

"நான் ஒத்துக்கறேன். அதுக்கு ... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? ஒல்ட் மேன்... யூ கான்ட் புட் த க்ளாக் பேக்...!"

"டேய் சம்பத் ... நிறுத்துடா உன் கிண்டலை... நானும் பாக்கறேன்... யார்கிட்ட நீ பேசறே? அது புரிஞ்சுத்தான் பேசறீயா?" ராணி நிலைமையை சமாளிக்க குறுக்கேப் புகுந்தாள்.

"அம்மா... எனக்கு நல்லாத் தெரியும்... என்னை பெத்தவர்கிட்டத்தான் நான் பேசிகிட்டு இருக்கேன்... அவருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவர்தான் என்னை தன் பிள்ளையா நெனக்கறதேயில்லை. அப்படி நெனைச்சுப் பேசறதும் இல்லே!"

"சம்பத்து... போதுண்டா... வீண் பேச்சு பேசாதப்பா..." ராணி தன் மகனை கெஞ்சி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

"அப்பா... எனக்கு நீங்க நெறைய செய்திருக்கிறீங்க; நீங்க செய்த எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... இப்ப நானும் சம்பாதிக்கிறேன்! நல்ல பொஸிஷன்ல்ல இருக்கேன்; எனக்கும் நாலு பேரை நல்லாத் தெரியும்! நீங்க தேவையில்லாம என்னைப் பத்தி அதிகமா கவலைப்படாதீங்க!

"சரி...அப்புறம் மேல..." நல்லசிவம் தன் மகனைக் கூர்ந்து நோக்கினார்.

"திருப்பியும் போலீஸ்காரன் நம்ம வீட்டுக்கு வந்தா எனக்கு இருபத்து அஞ்சு வயசாயிடுச்சு.. என் புள்ளை மேஜர்.. எனக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லேன்னு பாண்டு பேப்பர்ல எழுதி கையெழுத்துப் போட்டு அவன் கிட்ட குடுத்துடுங்க... மீதியை நான் பாத்துக்கறேன்." சம்பத் சாய்ந்து உட்க்கார்ந்து கொண்டு, அப்பளத்தை நொறுக்கித் தின்ன ஆரம்பித்தான்.

"அப்படி என்னடா பண்ணிட்டு வந்திருக்கே அந்த சுகன்யா வீட்டுல நீ?"

"என்னை மதிக்காதவளுக்கு... நான் யாருன்னு சூட்சமமா சொல்லிட்டு வந்திருக்கேன்...?"

"இந்த ஊர்ல உன்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, வீட்டு உள்ள வான்னு சொல்ற ஒரு எடத்தையும் கெடுத்துக்கிட்டியா?

"அவசரப் படாதீங்க... ஓண்ணு ரெண்டு நாள்ல ரிசல்ட் தெரியலாம்...!"

"இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியில போடா... உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு; ஒரு நல்ல குடும்பத்து பொண்ணை மதிக்கத் தெரியலை உனக்கு. உன் ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாவோட தாய் மாமன் ரகுகிட்ட போய் உனக்காக நாலு தரம் பேசிட்டு வந்தேன். சுகன்யா உன்னை சரியாத்தான் எடை போட்டிருக்கணும். என் எதிர்ல நிக்காதே... இப்பவே போயிடு... அந்தக் குடும்பத்தைப் பத்தி உனக்கு என்னடாத் தெரியும்...?"

"தெரிய வேண்டாம் எனக்கு...என்னைப் பத்தி அவ தெரிஞ்சுக்கட்டும்?"

"போவும் போது கூடவே உன்னைப் பெத்தெடுத்து இப்படி வளர்த்து இருக்காளே இந்த மகராசி... இவளையும் உன் கூடவே கூட்டிக்கிட்டுப் போய் தொலை..." நல்லசிவத்தின் வாயிலிருந்து எச்சில் தெறித்தது.

"சாரி... பாதர்... இந்த வீடு என் தாத்தாவுது... நீங்க மத்திய அரசாங்கத்தில பெரிய லா ஆஃபிஸரா இருந்து ரிட்டையர் ஆகியிருக்கீங்க... உங்களுக்கு சட்டம் நல்லாவேத் தெரியும்..."

"என்னடா சொல்றே நீ?"

"ஏதோ இந்த வீட்டுக்கு நீங்க பெயிண்ட், கியிண்ட், அடிச்சிருக்கீங்க; திண்ணையை இடிச்சி வரந்தாவா ஆக்கியிருக்கீங்க; அதுக்கு கம்பி கதவு போட்டு இருக்கீங்க; அனுபவ பாத்தியதையை என் தாத்தா உங்களுக்கு குடுத்துட்டு, அவரு தனக்கு சங்கு ஊதிக்கிட்டாரு.."

"செத்தவங்களை எல்லாம் ஏண்டா இப்ப இழுக்கிறே?" ராணி தன் மகனின் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்தாள்.

"அப்பா... நீங்க இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருங்க... எனக்கு ஒரு அப்ஜக்ஷனும் இல்லே; ஆனா என்னை வெளியில போடான்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை... ஏம் ஐ ரைட்?"

சம்பத் தட்டை வழித்து நக்கி, வத்தல் குழம்பு சோற்றை ருசித்து தின்றுக்கொண்டிருந்தான். சோற்றைத் தின்று முடித்த சம்பத் பக்கதிலிருந்த நியூஸ் பேப்பரை ட்ர்ரென கிழித்து, பேப்பரால் தன் கையையும், வாயையும், துடைத்தான். கையைத் துடைத்த பேப்பரை சாப்பிட்ட தட்டிலேயே வீசி எறிந்தான். தண்ணீரை நிதானமாக குடித்து, நீண்ட ஏப்பம் விட்டான்.

"எம்மா... அந்த பேனைக் கொஞ்சம் ஆன் பண்ணேன்?" சோஃபாவில் நீளமாக தன் கால்களை நீட்டி, வசதியாக ஜட்டி, பனியனுடன் படுத்துக்கொண்டான்.

"டேய்... உனக்குத்தான் சட்டம் தெரியுமே! என் பொண்டாட்டி தாலி அறுத்ததுக்கு அப்புறம் நீ இந்த வீட்டுக்குள்ள வாடா.. இப்ப ஏண்டா என் கழுத்தை அறுக்கறே?' நல்லசிவம் எப்போதுமே பேசி அறியாத வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வேகமாக வந்து நெருப்பாகத் தெறித்து விழுந்தன. அவர் மூச்சு உலையிலிருந்து வெளியேறும் வெப்பமாக அவரையே சுட்டது. 




"அய்யோ ...அய்யோ... அப்பனும் புள்ளையுமாவா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறீங்க? ராணி முடிவில் தன் கணவன் பக்கம் திரும்பினாள்.

"என் கிட்ட ஏன் கேக்கறே? உன் புள்ளையைக் கேளுடீ.."

"அவன்தான் சின்னப்பையன், ஏதோ பைத்தியக்காரத்தனமா பேசறான்னா.. நீங்கதான் கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்.." ராணி தன் கணவனை வெளியே இழுத்தவள், அவரை வெராண்டாவில் போட்டிருந்த சேரில் உட்க்காரவைத்தாள்.

"உன் புள்ளை என்னை என் உசுரு போற வரைக்கும் இந்த வீட்டுல இருக்கலாம்ன்னு சொல்றான்! நீ ஏண்டி அதுக்குள்ள என்னை வெராண்டா வரைக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டே? உனக்கு அது வரைக்கும் கூட பொறுக்க முடியலியா? இப்படியே, இப்பவே வெளியிலத் தள்ளிடலாம்ன்னு ஏதாவது ப்ளானா?" நல்லசிவம் தன் மனைவி ராணியிடம் எகிறினார்.

"ஆண்டவா! அவன் கிட்ட பேசி நீங்க ப்ளட் பிரஷரை ஏத்திக்கிறீங்களேன்னு, உங்களை வெளியில கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்; ஏன் இன்னைக்கு குதர்க்கமாவே பேசறீங்க?" ராணி அவரைப் பார்த்து சமாதனமாக சிரிக்க முயன்றாள்.

"சிரிக்காதடி... எனக்குப் பத்திக்கிட்டு வருது?"

"ம்ம்ம்ம்... என்னப் பாத்தா பத்திகிட்டு வருதா?"

"எப்ப சுந்தரியும், அவ புருஷன் குமாரும், இப்ப நாங்க எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்றதாயில்லேன்னு நாசுக்கா நம்மகிட்ட சொல்லிட்டாங்களோ, அதுக்கு அர்த்தம் என்னன்னு உன் மரமண்டைக்குப் புரியலையா?

"புரியுது... இதுகூடவா ஒரு எம்.ஏ. படிச்ச எனக்குப் புரியலை?" ராணி திரும்பி அவரிடம் முறைத்தாள்.

"எம். ஏ. படிச்ச புத்திசாலிதானே நீ? அப்புறம் எதுக்குடி நீ இந்த கேடு கெட்டவனை, அதுவும் தனியா, சுகன்யாவை பாத்துட்டு வான்னு, சிவதாணு வீட்டுக்கு அனுப்பினே?"

"நீங்கதான் புரியாம பேசறீங்க... நல்ல எடங்க இது; பொண்ணு கிட்ட அழகுக்கு அழகு; குணத்துக்கு குணம்; சொத்துக்கு சொத்து; ஜாதிக்கு ஜாதி; சொந்தத்துக்கு சொந்தம்; அவங்க வீட்டுல வேணாம்ன்னு சொன்னா நாம அப்படியே விட்டுடறதா? சுகன்யா இவனைப் பாத்தது இல்லே! அதனால அனுப்பிச்சேன்..."

"வேணாங்கறவன் வீட்டு வாசல்ல போய் ஏண்டி நீ முட்டிக்கிறே? இதான் என் கேள்வி?"

"ரெண்டு தரம் முட்டிப் பாக்கறதுல தப்புல்லங்க...?"

"இப்ப இந்த சனியன் புடிச்சவன் அங்க என்னப் பண்ணிட்டு வந்திருக்கான்னு தெரியலியே?" நல்லசிவம் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

"நீங்க என்னைப் பொண்ணு பாத்துட்டு போனதும், நானும்தான் உங்களை வேணாம்னு சொன்னேன்".

"நம்ம கதையும் இவன் கதையும் ஒண்ணா? உன் அப்பன் ஆத்தா உன்னை எனக்கு கொடுக்க மாட்டேன்னா சொன்னாங்க?"

"இப்ப இவனை சுகன்யா வேணாம்ன்னு சொல்லிட்டாளா? ரெண்டு கதையிலேயும் கொஞ்சம்தான் வித்தியாசம்... அன்னைக்கு நீங்க என்னைக் கட்டிக்கணுமின்னு ஒத்தைக்கால்லே நிக்கலையா?"

ராணி இதை வெகு சாதாரணமாகத்தான் எந்தவிதமான உள்ளர்த்தமும் இல்லாமல்தான் சொன்னாள். ஆனால் அந்த நேரத்தில் நல்லசிவத்தால் தன் பிள்ளை எதிரில் தன்னை அலட்சியமாக பேசுவதை அவரால் சுலபமாக ஜீரணிக்கமுடியவில்லை.

"ஆனா நீ என்னை வேணாம் சொன்னதுக்கு உன்னை நான் பொட்டை நாய்ன்னு எங்க வீட்டுலே போய் யார்கிட்டவும் இவனை மாதிரி அசிங்கமா பேசலை..."

"நான் கருப்பாயிருந்தேன்; அது என் தப்பு இல்லே? நீ செகப்பா அழகா இருந்தே; அதுலே உன் பங்கு என்னா பெரிசா இருக்கு? அந்த திமிர்ல நீ என்னை வேணாம்ன்னு சொன்னேன்னு, நான் அந்தக்காலத்துல எந்த தப்புத்தண்டாவுலேயும் எறங்கலே; உன்னை நாயே பேயேன்னு கேவலமா பேசலை.. ஆனா உன் புள்ளை அப்படியா இருக்கான்...?"

"சரி சரி இப்ப என்னா அதுக்கு? முடிஞ்சுப் போன நம்ம கதையை இப்ப நாம ரெண்டு பேரும் ஏன் பேசணும்?

"நீதாண்டி ஆரம்பிச்சே... நீ ஆரம்பிச்ச அந்தக்கதையை நான் ஒழுங்கா நேராக்கறேன்... உன் புள்ளை இனிமேலாவது திருந்தட்டும்ன்னு அவனுக்குச் சொல்றேன்... அவ்வளவுதான்.." அவர் ஆத்திரத்துடன் கத்தினார்.

"சும்மா கத்தாதீங்க... நாலு தரம் எங்க வீட்டுக்கு, நீங்க எட்டுப்பேரைத் தனிதனியா அனுப்பலையா? அது தப்புன்னு உங்களுக்கு தோணலயா? அது அந்த நேரத்துல எனக்கு எவ்வளவு டென்ஷனா இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?" ராணியும் தன் கண்களை சற்றே உருட்டி விழித்து அவரை வெகுண்டாள். ராணி இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே அதிகம்.

"சரி...சரி... நிறுத்துடி போதும்... உன் பழங்கதையை... உன் ஞாயத்தை... கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன் அழகைப் பாத்து உன்னை பண்ணிக்கணும்ன்னு நான் நாலு தரம் உன் வீட்டுக்கு ஆள் அனுப்பினேன்... அது உண்மைதான்...?"

"அதைத்தான் நானும் சொன்னேன்.. நீங்க என்ன இப்ப புதுசா சொல்றீங்க எனக்கு?"

"கல்யாணத்துக்கு அப்புறம், உன் கேடு கெட்ட கதை தெரிஞ்சதுக்கு அப்புறமும், நானா இருக்கவே உன் கூட இன்னைக்கு வரைக்கும், எதையும் யாருகிட்டவும் வெளியச் சொல்லாம ... வெக்கத்தை விட்டுட்டு உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்!" நல்லசிவத்தின் கண்கள் கோவைப்பழமாக சிவந்திருந்தன. அவர் தன் பற்களை நறநறவெனக் கடித்தார்.

விஷக்கடி நேரத்தில் ஆரம்பிக்கும் பேச்சு எப்போதும் திசைமாறிப் போகும். திசைமாறியப் பேச்சு விஷமாகவும் மாறும். கோபத்தில் பேச்சைக்குறை என்றார்கள் பெரியவர்கள். குடும்பத்தில் எதிராளி உன் பேச்சைக் கேட்கவில்லையென்றால், வாழ்ந்து கெட்டவர்கள் வாயைப் பொத்து என்றார்களே, தெரியாமலா சொன்னார்கள் அவர்கள்?

தன் மகன் ஒரு பெண்ணை மதிக்கவில்லையே என தான் படும் ஆதங்கத்தை, தன் மனைவியும் புரிந்து கொள்ளவில்லேயே என அவர் வருத்தப்பட்டார். அவள் தன்னை வேண்டாம் என சொன்னபோதிலும், அவளுக்கு எந்தக் கெடுதலையும் தான் நினக்கவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்பினார்.

நல்லசிவம் நல்லவர். வாழ்க்கையை நிதானமாக எத்தனை குறையிருந்த போதிலும், அமைதியாக கழித்தவர். தன் மனைவி காரணமேயில்லாமல் கோபமாக பேச ஆரம்பித்தால் கூட அவர் மவுனமாகிவிடுவார். ஆனால் விதி யாரை விட்டது? அன்று கோபத்தின் வசத்தில் நல்லசிவம் தன் நிலையிழந்து, தெரிந்தோ தெரியாமலோ அவர் பேச்சை தன் மனைவியிடம் வார்த்தைக்கு வார்த்தையாடிவிட்டார்.

"என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வுட்டுட்டு போயிருக்க வேண்டியதுதானே? இல்லே போடீன்னு என்னை அடிச்சு வெரட்டியிருக்க வேண்டியதுதானே? யாரு உங்க கையை புடிச்சிக்கிட்டது? ராணியும் கோபத்தின் உச்சத்தில் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் கத்த ஆரம்பித்தாள். அவளும் பேச்சை இன்றைக்கு நிறுத்துவதாக தெரியவில்லை.

"சரியாத்தாண்டி நீ சொல்றே! அன்னைக்கே உன்னை அடிச்சு வெரட்டியிருக்கணும்...! என் மனசாட்சிக்கு பயந்துகிட்டு... ஆண்டவனுக்குப் பயந்துகிட்டு, உன்னை நானே விரும்பி வந்து, தொட்டுத் தாலி கட்டின பாவத்துக்காக, நான் சும்மா இருந்துட்டேன்!"

இத்தனை காலமாக தன் மனதின் ஆழத்துக்குள் அவர் பொத்தி பொத்தி வைத்திருந்தது அன்று வெளியில் வந்துவிட்டது. நல்லசிவம், என்னடா இப்படி பேசிட்டே? இது நல்லதுக்கு இல்லேடா! மல்லாந்து படுத்துக்கிட்டு வானத்தை நோக்கி எச்சில துப்பற கதையாகிப் போச்சே? இங்கேயே இந்தப் பேச்சை நிறுத்திடு... ராணி என்னச் சொன்னாலும், இதுக்கு மேலே பேசாதே! இப்ப இதையெல்லாம் பேசறதால யாருக்கும் பலன் இல்லே! அவர் மனதின் ஓரத்தில் ஒரு குரல் மெல்ல ஒலித்தது.

"என்னைத் தொட்டு தாலி கட்டினது பாவம்ன்னு இன்னைக்குத்தான் தெரியுதா?"



"அறுபதுக்கு மேலத்தான் விவேகமே வருது..."

"அனுபவி ராஜா அனுபவின்னு, உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் என்னை அனுபவிச்சிட்டு, அறுவது வயசுல ரத்தம் சுண்டினதுக்கு அப்புறம் இப்ப என் கிட்ட இந்த பேச்சா? இதுக்குப் பேரு விவேகமா? என்னை வீட்டை விட்டு அடிச்சு விரட்டணுங்கற ஆசை வேற உன் மனசுக்குள்ள இத்தனை நாளும் இருந்திருக்கா?

நல்லாருக்குய்யா உன் ஞாயம்; நான் எதுக்கு என் வீட்டை விட்டுப் போவணும்? என் பொணம்தான் இந்த வீட்டை விட்டு வெளியிலப் போவும்..." வயது வந்த பிள்ளை எதிரில் இருவரும் சாதாரணமாக எண்ணி பேச ஆரம்பித்தப் பேச்சு அன்று வம்பில் சென்று முடிந்தது. அவர்களுடைய முப்பத்தெட்டு வருட தாம்பத்ய வாழ்க்கையில் இரண்டாவது முறையாக விஷத்தைக் கலந்தது. 



No comments:

Post a Comment