Wednesday, 11 March 2015

சுகன்யா... 42

பொழுது விடிந்து மணி ஆறாகியிருந்தது. சீனுவின் சிணுங்கிய செல் "மீனா .. மீனா" என பளிச்சிட்டது. சீனு தன் கண்களை கசக்கிக்கொண்டே, தனது இடவலம் திரும்பிப்பார்த்தான். செல்வா, இடுப்பிலிருந்த லுங்கி தொடை வரை நழுவியிருக்க, சுருண்டுப் படுத்து, அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். சீனு எழுந்து, லுங்கியை இறுக்கிக்கொண்டவன், மொபைலை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வேகமாக வெளியில் வந்தான். சூரியன் கிழக்கில் உதயமாகிவிட்டிருந்தான். சீனு மாடியிலிருந்தே கீழே எட்டிப்பார்த்தான். மல்லிகா குனிந்து வாசலில் கிடந்த நீயுஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

"ஹெலோ...மீனா" மெதுவாக குரலைத் தாழ்த்திப் பேசினான்.


"போன் எடுக்கறதுக்கு இவ்வளவு நேரமா?"

மீனா மறுபுறத்திலிருந்து சீறினாள்... காலங்காத்தல, இவ அடாவடி தாங்க முடியலியே? சீனு மனதுக்குள் குமைந்தான்.

"குட்மார்னிங்...! சொல்லு மீனா... எதுக்கு இப்ப கோபப்படறே?"

டேய் சீனு. மீனா செல்வாவோட தங்கை மட்டுமில்லே; அவ இப்ப உன் ஃபிகரு! நிதானமா பேசு அவகிட்ட; நேத்து ராத்திரி நடந்ததெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லியா? முன்ன மாதிரி எடுத்தேன் கவுத்தேன்னு பேசித்தொலைக்காதே; அதுக்கப்புறம் இந்த வீட்டுக்குள்ள நீ நுழைய முடியாது. அவன் மனம் அபாய சங்கை ஊதியது.

"கேட்ட கேள்விக்கு எப்பவும் நேர் பதில் சொல்லமாட்டீங்களே? போன் எடுக்க இவ்வளவு நேரமான்னு கேட்டேன்?" மீனா பதில் வாங்காமல் விடமாட்டாள் போலிருந்தது.

"தூங்கிட்டிருந்தேம்மா! ரூம்ல செல்வாவும் தூங்கிக்கிட்டு இருக்கான்; அதனால வெளியில வந்து பேசறேன் மீனா.."

என்னா உரிமையா மிரட்டறா? இவ கழுத்துல நான் தாலியை மட்டும் கட்டிட்டேன்; எனக்கு அப்பவே சங்குதான். என்னை பலி ஆடா ஆக்கி ... கழுத்துல மாலையைப் போட்டு, மஞ்சாத்தண்ணி தெளிச்சி, குன்னாத்தாம்மா கோவுல்ல கொடிகம்பத்துக்கு கீழே நிக்க வெச்சி, ஒரே வெட்டா வெட்டிடுவா போல இருக்கே?

"குட்மார்னிங்" பரவாயில்லையே! என் சீனுவுக்கு கொஞ்சம் புத்தியும் இருக்குது. என் அண்ணணுக்கு கேக்கவேணாம்ன்னு வெளியில வந்து பேசறான்!. மீனா சீனுவை மனதுக்குள் மெச்சிக்கொண்டாள். அவள் குரல் இப்போது இனிமையாக மாறி வந்தது.

"வெரி குட்மார்னிங் ... சொல்லு மீனா?

"கீழே இறங்கி வரும்போது, உங்க மூஞ்சை சுத்தமா செதுக்கிக்கிட்டு வாங்க..! நேத்து ராத்திரி பாக்க சகிக்கலே! கண்றாவியா இருந்தது..!"

"என்ன சொல்றே மீனா..?"

"ம்ம்ம்... உங்க ஆட்டுக்கடா தாடி...கெளுத்தி மீசை இதெல்லாத்தையும் வழிச்சு போட்டுட்டு ... ஒரு டீசன்ட் லுக்கோட, பாக்கறதுக்கு எங்கப்பா மாதிரி அழகா வாங்கன்னு சொல்றேன்...!" மீனாவின் குரல் எதிர்பார்ப்புடன் வந்தது.

"மீனா ... நான் வீட்டுக்குப் போய்தானே ஷேவ் பண்ண முடியும்...!" சீனு பம்மினான்.

போச்சுடா!. இன்னைக்கே எங்கப்பா மாதிரி மீசையை எடுடாங்கறா! அந்தாளு வயசு என்னா? என் வயசு என்னா? ஆம்பளை தாடியில்லாம இருக்கலாம். மீசையில்லாம என்னை மாதிரி ஒரு தமிழ் குடிமகன் இருக்க முடியுமா? மீசையை எடுத்துட்டு எப்படி ஆஃபீசுக்கு போறது? அங்க இருக்கற ஆண்டிங்கள்ளாம் என்னைப் பாத்து வழிச்சிக்கிட்டு சிரிப்பாளுங்களே?!

"ம்ம்ம்..."

"என்னா ம்ம்ம்ம்...ங்கறீங்க?"

"மீனா ரேசர் வேணுமே?"

"உங்க உயிர் "நண்பேண்டா" கிட்ட ஒரு ரேசர் கடன் கேக்கறது?"

"ம்ம்ம்.."

"என் ஆசையை நான் சொல்லிட்டேன் ... அப்புறம் உங்க இஷ்டம்...! நான் சொன்னபடி வந்தா சூடா காஃபி கிடைக்கும்... வந்து சேருங்க நேரத்துக்கு...!" சீனு பதில் சொல்வதற்கு முன் லைன் கட் ஆகியிருந்தது.

"நீங்கங்கறா... வாங்கங்கறா...போங்கங்கறா!" ஒரே ராத்திரியில, மீனா எனக்கு ஒரு "லைக்" போட்டு, என் ஸ்டேட்டஸையே இந்த வீட்டுல தலை கீழா மாத்திட்டா! எனக்கு குடுக்கற மரியாதையையும் தாறுமாறா ஏத்திட்டா! இது வரைக்கும் ஓ.கே. தான். சீனுவின் மனம் துள்ளியது. ஆனா கூடவே அழும்பு வேற பண்றாளே?

மீசையை எடுடா; தாடியை வழிடா; இதெல்லாம் ஒரே நச்சால்ல இருக்கு!? இது என் ஆசைன்னு, கிடைக்கற கேப்புல கெடா வெட்டறாளே? நம்ம பசங்க என்னடான்னா "மச்சான் உனக்கு இந்த தாடி நல்லாருக்குடான்னு" நேத்துதான் தண்ணி உற்சவம் நடத்தும் போது ஒத்து ஊதினானுங்க! கட்டிங்கைத்தான் இவ மொத்தமா கட் பண்ணிட்டாளே? நான் இப்ப எந்த பக்கம் போறது? சீனு தன் தலையை சொறிந்துகொண்டு நின்றான். 


நடராஜன், அன்று, நிதானமாக தனது காலை "வாக்கிங்கை" முடித்துக்கொண்டு, புத்துணர்வு நிறைந்த மனதுடன், வீட்டுக்குள் நுழைந்த போது, என்றுமில்லாத திருநாளாக, மல்லிகா வெரண்டா படியில், கையில் ஹிண்டுவுடன் உட்க்கார்ந்திருந்தாள்.

"குட்மார்னிங் மல்லி.."

"குட்மார்னிங் ..." மல்லிகா கணவனை நோக்கி மென்மையாக புன்முறுவல் செய்தாள்.

"பசங்கல்லாம் எழுந்தாச்சா..?"

"இப்படி பக்கத்துல செத்த உக்காருங்களேன் ..." மல்லிகா தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

மனைவியின் பக்கத்தில் உட்க்கார்ந்தவர், மல்லிகாவை தன் ஓரக்கண்ணால் அன்றுதான் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். சும்மா சொல்லக்கூடாது... மல்லிகா இன்னும் இளமையாத்தான் இருக்கா.. இவ பக்கத்துல சுகன்யா நின்னா, அக்காத் தங்கைன்னுதான் சொல்லுவங்கா. தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஒரு முறை தலையை திருப்பியவர், சட்டென மல்லிகாவின் கன்னத்தில் அவசர அவசரமாக ஒரு முத்தத்தைப் பதித்தார்.

"கிட்ட வான்னா போதும்! ... அடுத்த செகண்ட் ... கிழவன் நீங்க துள்ளி குதிக்க ஆரம்பிச்சிடுவீங்களே? மல்லிகா தன் முகம் சிவக்கப் பேசினாள்.

"என் கெழவிக்குத்தானே குடுத்தேன் ..."

"நேரம்...காலம் ...எடம் எதுவும் கிடையாதா?"

"சும்மா இருடி ... இந்தாண்டை ... அந்தாண்டை பாத்துட்டுத்தான் குடுத்தேன்.."

"இந்த ஜம்பத்துக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்லே?" மல்லிகா தன் முகத்தைச் சுளித்தாள்.

"ரோடுல நடந்து போவும் போதே பசங்க ஒண்ணுக்கு ஒண்ணு முத்தம் குடுத்துக்குதுங்க... நீ என்னமோ வீட்டுக்குள்ளே உக்காந்துகிட்டு அல்ட்டிக்கிறே?" நடராஜன் தன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டார்.

"ஆமாம்! உங்க மஹாகவிகள்ல்லாம்...பொம்பளை ஒடம்பையும், யானை... அங்குசத்தையும் தவிர வேற எதைப்பத்தியும் எழுதலியா? இல்லே..! அதெல்லாம் நீங்க படிக்கறது இல்லையா? மல்லிகா கண்களில் குறும்புடன் வினவினாள்.

"நெறைய விஷயத்தைப் பத்தி எழுதியிருக்காங்களே? ஏன்?"

"இல்லே .. லீவு நாள்லே, கொஞ்சம் கையை காலை ஆட்டி ... காலையில காப்பீ ... டீன்னு ... பொண்டாட்டிக்கு போட்டுக் குடுக்கறதைப் பத்தி அவங்க எழுதலையான்னு கேக்கிறேன்...!

"நேரா சொல்லேன் ... காஃபி வேணும்ன்னு... எதுக்காக சுத்தி வளைக்கிறே?"

"ஒரு நாளைக்கு நீங்க எனக்கு காப்பி போட்டுக்குடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க...?"

"அம்மா .. ஏம்மா அப்பாவை தொந்தரவு பண்றே ... நான் ஏற்கனவே காஃபியை போட்டாச்சு! இந்தா புடி உன் காஃபியை..." மீனா குளித்திருந்தாள். தலையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

"தேங்க்ஸ்ம்ம்மா ... நீதான் என் செல்லப் பொண்ணாச்சே!..." நடராஜன் மனம் குதூகலித்தது.

"மீனா நீ முதல்ல உன் தலையை துவட்டுடி! அப்புறம் நாள் பூரா தும்மி தும்மியே, தலை வலிக்குதுன்னு என் உயிரை எடுப்பே" மல்லிகா அவளை வாயால் அதட்டிய போதிலும், மனதுக்குள் தன் பெண்ணின் பொறுப்பை நினைத்து பெருமிதம் பொங்க தன் கணவனைப் பார்த்தாள்.

"டேய் ... சீனு... நீ எப்படா வந்தே? மல்லிகா மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி வந்து கொண்டிருந்த சீனுவைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் வினவினாள். செல்வாவும் அவன் பின் இறங்கி வந்துகொண்டிருந்தான்.

"நேத்து ராத்திரி பத்துமணிக்கு மேல ஆயிடுச்சி... வாழைக்காய் பஜ்ஜி மீனா கொடுத்தா... சூப்பரா இருந்தது..." சீனுவும் மல்லிகாவின் பக்கத்தில் வெராண்டா படிக்கட்டில் உட்க்கார்ந்து கொண்டான்.

"உனக்குத்தாண்டா போன் பண்ணி வரச்சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்... நீயே வந்துட்டே?" நடராஜன் சீனுவை நோக்கி புன்முறுவல் செய்தார்.

"ஏண்டா ... இது என்னடா கோலம்? கூத்துல வேஷம் கீஷம் கட்டப்போறியா என்னா? தாடி மீசை எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டு வந்து நிக்கறே? மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.

"இப்பத்தான் பாக்கறதுக்கு டீசண்டா இருக்கான்..." நடராஜன் சான்றிதழ் கொடுத்தார். செல்வா ஒரு சேரை இழுத்துப் போட்டு தன் தந்தையின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான்.

"என்ன விஷயம் சொல்லுங்கப்பா..." சீனு நடராஜனை நோக்கினான்.

"மீனா இவங்களுக்கும் ஒரு கப் காஃபியை குடேன்ம்மா?"

மீனா சீனுவைப் திரும்பிப்பார்த்தாள். கூர்மையான மூக்கு, எத்தனை முறை பின்னால் தள்ளிவிட்டாலும், நெற்றியில் திரும்ப திரும்ப வந்து விழும் தலைமுடி. சீனு சுத்தமாக ஷேவ் செய்து இருந்தான். நான் சொன்னதை கேட்டு தில்லுமுல்லு படத்துல வர்ற "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" பாடும் ரஜினியை மாதிரி வந்திருக்கறவனுக்கு தன் தரப்புல இருந்து என்ன கொடுக்கலாம்? மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

மீனா அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். தோட்டத்தில் சற்றே குனிந்து நின்று, வெகு லாகவமாக துண்டால், "பட் பட்" என சத்தம் வர தன் தலை முடியை ஓங்கி தட்டி தட்டி, அதன் ஈரத்தை உலரவைத்துக் கொண்டிருந்தாள். அவள் காதில் அணிந்திருந்த மெல்லிய ஜிமிக்கி அவள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தது.

ஜிமிக்கியில் புதைக்கப்பட்டிருந்த சிறிய வெண்மையான கற்களில், காலை வெயிலின் ஓளிக்கற்றைகள் பட்டு, வர்ண ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. அவள் காலில் போட்டிருந்த வெள்ளி கொலுசு "ஜல் ஜல்" எனக் கொஞ்சின. அவள் கழுத்தில் போட்டிருந்த வெள்ளை முத்து மாலை அசைந்து, அவள் மார்பை அவ்வப்போது தொட்டு தொட்டு விலகிக்கொண்டிருந்தது. அவள் கையும் காலும் ஒரு வித தாள கதியுடன் உடல் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தன.

மீனா, வெள்ளையில் நீலப் பூக்கள் இறைந்திருந்த, காட்டன் புடவை ஒன்றை லூசாக தன் உடலில் சுற்றியிருந்தாள். அவள் புடவையின் ஒரு நுனியை இடுப்பில் தூக்கி செருகியிருக்க, இடது காலின் வெண்மையும், இலேசாக பளிச்சிட்ட அவள் தொப்புள் குழியும், ஓரக்கண்ணால் அவளைப் பார்த்த சீனுவின் இதயத்தை ஒரு நொடி நிறுத்தின. அவன் இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. விருந்து கொடுக்கற மாதிரில்ல இருக்கு இவ ட்ரஸ்...? சீனு தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.

மீனாட்சியின் கண்கள், அவள் பேருக்கு ஏற்றவாறு, மீனாக இங்கும் அங்கும் துள்ளிக்கொண்டிருந்தன. அவள் விழிகளில் அன்பு எல்லையற்று வழிந்து கொண்டிருந்தது. தன் பிரியத்துக்குரியவளின் கண்களை காலையில் பார்த்ததும், சீனுவின் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது. மனம் துள்ளியதுமட்டுமல்லாமல், உடலும் இலேசாக தடுமாற ஆரம்பித்தது.

மீனா இப்ப செய்யறதெல்லாம், அதுவே இயல்பா நடக்குதா? இல்லே? நான் சொன்னதை கேட்டு மூஞ்சை மழிச்சுக்கிட்டு வந்திருக்கியேன்னு என் மேல இரக்கப்பட்டு, நாய்க்கு எலும்புத் துண்டு போடறமாதிரி எனக்கு தன் இடுப்பை காமிச்சி என்னை கட்டிப்போடறாளா? இல்லே; வெறுப்பேத்தறாளா? சீனு ஒன்றும் புரியாமல் மவுனமாக மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

இந்த வீட்டுல புதுசா ஒரு காதல் நாடகம் அரங்கேறுதுன்னு தெரியாம, அம்மாவும், அப்பாவும் ரொமாண்டிக் மூடுல பக்கத்துல பக்கத்துல உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க? என் எதிரிலேயே என் தங்கச்சி, என் ஃப்ரெண்டுக்கு கடலைப் போடறா; என்னாக் கொடுமைடா இது? நான் வாயைப் பொத்திக்கிட்டு இவங்க ட்ராமவை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்கேன். என் கதையே இன்னும் ஒரு சரியான ட்ராக்ல செட் ஆவலை. இவங்க ரெண்டு பேரு கதையை அம்மா கிட்ட இப்ப சொல்லலாமா? வேணாமா?

இவங்க கதையை அம்மாகிட்ட சொல்லப் போய், என் கதையில இடைவேளை போட்டுட்டா; நான் ஒழிஞ்சேன். இப்ப நான் என்ன பண்ணணும்? கொஞ்சம் பொறுக்கறது நல்லதுன்னு உள்ளுக்குள்ள எனக்குத் தோணுது? இந்த கம்மினாட்டி சீனு ஏன் மீசையை எடுத்துட்டு சிவன் கோவில் பண்டாரம் மாதிரி உக்காந்து இருக்கான்? மீசை தாடியை வழிடான்னு மீனா சொல்லியிருக்கணும்! செல்வா தன் இருகைகளையும் தன் தலை மேல் வைத்துக்கொண்டு மனதுக்குள் எண்ண அலைகள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்க, மீனாவையும், சீனுவையும், மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

சீனு...! சீனு..! என் சீனு...!!! என் முழுமனதையும் ஒரு ராத்திரியில ஆக்கிரமித்துக் கொண்டவன், என் எதிர்ல உக்கார்ந்திருக்கிறான். என் விருப்பத்தை அவன் நிறைவேத்திட்டான். "ஃபட் ஃபட் ஃபட்" ... மீனா தன் தலைமுடியை வேண்டுமென்றே மீண்டும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவள் நினைத்தது போலவே, சீனு வேகமாக அவள் பக்கமாக திரும்பினான். தான் அவனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள்.

மீனா தன் ஓரக்கண்ணால் சீனுவைப் பார்த்து ஒரு மில்லிமீட்டர் தன் இதழ்கள் அசைய, புன்னகை புரிந்து, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, நேற்றிரவைப் போல், காற்றில் சீனுவுக்கென ஒரு பிரத்தேயக முத்தத்தை அனுப்பினாள். அதே தருணத்தில் தான் தன் நேசத்துக்குரியவனை பார்த்து புன்முறுவல் பூத்ததையோ, அவனை முத்தமிட்டதையோ யாரும் பார்த்துவிடவில்லையே என்றும் நோட்டமும் விட்டாள்.

சீனுவுக்கும், தனக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும், அன்னியோன்யத்தை, தற்சமயம் ரகசியமாக வைத்திருக்க அவள் மனம் விரும்பியது. செல்வா உளறிட்டான்னா? அவன் கிட்டவும் சொல்லி வெக்கணும்! இதை எப்படி என் அண்ணன் கிட்ட நான் பேசறது? என் அண்ணன் கிட்ட பேசறதுக்கு நான் ஏன் தயங்கறேன்...? சுகன்யாவை விட்டு இவன் கிட்ட சொல்லலாமா? ஒரே இரவில், தன் தாய், தன் தந்தை, தன் தமையன் அத்தனை பேரும் தன்னிடமிருந்து சற்றே அன்னியமாகிப்போனதை நினைத்து அவள் மனம் வியந்தது.

மீனா...என்னடி பேசறே நீ? அவங்க உங்கிட்டேயிருந்து அன்னியமாகலைடி! நீ சீனுவை நெருக்கமா உணர ஆரம்பிச்சிருக்கே! அதனால அவங்கள்ளால்லாம் உனக்கு அன்னியமாத் தெரியறாங்க! அவள் மனது அவளுடன் ஒன்றி நடந்தது.

என் மனசு இவனை விரும்பத் தொடங்கி விட்டது. ஆனா அதே மனசே மெல்லப் போடீன்னு ப்ரேக்கும் போடுது; இது பெரிய கொடுமை... என் மனசு ஆசைக்கு நான் முதலிடம் கொடுக்கறதா? இல்லே என் மனசுக்கு ஒரு பெரிய காட்ரேஜ் பூட்டைப் போட்டு பூட்டறதா? ஒரு தரம் மனசு ஓட ஆரம்பிச்சிட்டா அதை பிடிச்சி நிறுத்த முடியாது. எரியற நெருப்புல நெய்யை ஊத்தற கதைதான்!. நெய்யை ஊத்தி நெருப்பை அணைக்க முடியுமா? மீனாவின் மனசு வேகமாக ஓடியது. 

மீனாட்சியின் முத்தம் கிடைத்தவுடன், சீனுவாசனின் மனம், மிகுந்த பரவசத்தில் ஆழ்ந்தது. ஓரக்கண்ணால் தன் இருபுறத்தையும் பார்த்தான். நடராஜனும், மல்லிகாவும் காஃபியின் சுவையில் மெய் மறந்திருந்தார்கள். சீனு அன்றைய பேப்பரில் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். சீனு தன் வலது கை நுனிவிரல்களை தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டு, அந்த முத்தத்தை மீனாவின் பக்கம், தன் உதடுகளை குவித்து ஊதினான்.

மீனா, சீனுவின் பதில் முத்தத்துக்காக காத்துக்கொண்டிருந்தவள் போல், தன் உதட்டைக் குவித்து காற்றில் பறந்து வந்த முத்தத்தை எதிர்கொண்டவள், தன் தலையை ஒருமுறை சுழற்றி தன் கூந்தலை மார்பில் போட்டுக்கொண்டவள், விறுவிறுவென தன் கொலுசதிர வீட்டுக்குள் நடந்தாள். சீனுவின் திருட்டு கண்கள், தங்களின் பார்வையை அவள் அசையும் பின்னழகின் பின்னால் செலுத்தின.

சீனுவின் குறும்பான பார்வையும், அவன் தன் உதட்டால் செய்த வித்தையையும், அது தனது உடலில் ஏற்படுத்திய ஜாலத்தையும் உணர்ந்த மீனாவின் மனதில் சட்டென தோடி ராகம் எழுந்தாடி உள்ளத்தில் ரீங்காரமிடத் தொடங்கியது. அவள் உற்சாகத்துடன், தங்களுக்காக காஃபியை கலக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் அவளுக்குப்பிடித்த பாடலை முனக ஆரம்பித்தது

"தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி...!
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை...!

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்...!
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்...!!"

மீனா என் காதலுக்குரியவள். மீனா என்னுடைய காதலி. இவள் என்னுடையவள். நேற்றிரவு இவள் எனக்காக மட்டுமே மனதுக்குள் அழுதாள்! இனிமேல் இவள் எனக்காக மட்டுமே சிரிப்பாள்! இனிமேல் இவள் எனக்கு மட்டுமே விடியலில் மலர்ந்து மணம் வீசும் ஒரு பவழ மல்லிகைப் பூ! நான் மட்டுமே தனியாப் பாத்து பாத்து ரசிக்கப் போற ஒரு டீ.வீ.டி. டிஸ்க். இவள் செல்லில் நான் போன் செய்தால் எனது போட்டோ மின்னும். இது எவ்வளவு பெரிய மகத்தான விஷயம். சீனு தன் மனதுக்குள் கர்வமானன். நான் ஆயிரத்தில் ஒருவன்.

எத்தனையோ ஆயிரம் இளைஞர்களில் நான் தனிப்பட்டவன். என்னுடையத் தனித்தன்மை மீனாவை கவர்ந்திருக்கிறது. "உனக்குத்தான் நான் இருக்கேனே?" நான் மனம் கலங்கி நின்றபோது என்னைத் தேற்ற எனக்கென என்னருகில் வந்து நின்றவள். வேறு எந்த இளைஞனுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை எனக்கு இவள் கொடுத்திருக்கிறாள். இது இவள் எனக்களித்த மதிப்பும், கவுரவம்தானே? சீனுவுக்குத் தன் மனதில் எழுந்த உற்சாக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

செல்வாவுக்கு மீனா எனக்கு கொடுத்திருக்கும் இந்த புதிய ஸ்தானம் தெரியும். பக்கத்திலிருந்த மல்லிகாவிடமும், நடராஜனிடம், உங்கள் மகள் என் மனதுக்குகந்த காதலியாகிவிட்டாள். நான் அவளுடைய காதலன். நாங்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு முடிவு எடுத்திருக்கிறோம். எங்களை நீங்கள் தயவு செய்து ஆசீர்வதியுங்கள், என தங்களுடைய புதிய உறவை உடனே அவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நேத்து ராத்திரி, மீனா திருட்டுத்தனமா என் கையை தொட்டா; என் தலையையும் முதுகையும் வருடிவிட்டா. என் ஆசைக்குரியவளின் ஒரு ஸ்பரிசம், என் டோட்டல் கெமிஸ்ட்ரியை ஒரு ராத்திரியில மாத்திடுச்சே? இந்த கண்றாவி மீசையை எடுத்துத் தொலைடா; நம்ம குடும்பத்து ஆம்பளைங்க மீசை வெச்சுக்கற வழக்கம் இல்லைடான்னு; என் அம்மா என் கிட்ட எவ்வள நாளா மல்லுக்கு நின்னா? நான் கேட்டனா அவ பேச்சை? இன்னைக்கு காலங்காத்தால இவ சொன்னான்னு வெக்கமில்லாம என் மீசையை வழிச்சிட்டு உக்காந்திருக்கேன்?? இது தான் காதலா? இவள் என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.

மீனா சொல்றதை, ஏன், எதுக்குன்னு ஒரு கேள்வி கேட்க்காமல் செய்ய ஆரம்பிச்சுட்டேன்! நான் இவகிட்ட என் தனித்தன்மையை இழந்து தோத்துப்போய் நிக்கறனா? அவனுக்கு அவன் மேலேயே குபீரென கோபம் பொத்துக்கொண்டு வந்தது. டேய், சீனு .. நீ தோத்தா என்னடா? உனக்குப்புரியலே? நீ தோத்ததாலத்தான் இவ உனக்கு காதலியா கிடைச்சிருக்கா? இது உனக்கு வெற்றித்தானே? சீனுவை மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"டேய் சீனு எத்தனை நாள் காதலிடா இவ? உன் காதலுக்கு எத்தனை வயசுடா?" அவன் மனம் அவனை கேலி செய்து சிரித்தது.

"காதலுக்கு வயசு எல்லாம் உண்டா என்ன?" சீனுவின் மனமே கேள்விக்குப் பதில் சொல்லியது.

"உங்களுக்குள்ள காதல் வந்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே... ஞாபகமிருக்கட்டும்..! அதுக்குள்ள உனக்கு மாமானார், மாமியார் ஆசிர்வாதம் வேணுமா..." மனம் எள்ளி நகையாடியது.

"ஏன் இதுல என்னத் தப்பு?"

"செருப்படி வாங்கறதுக்கு ஏண்டா அவசரப்படறே?

"நீ திருப்பி திருப்பி என் தன்னம்பிக்கையை குலைக்கறே? சீனு தன் மனதிடம் எகிறினான்.



"உன்னை புத்தியா பொழைச்சுக்கன்னு நான் சொல்றேன்.. இந்த பொண்ணு பின்னாடி விழுந்திட்டியேன்னு சொல்றேன்!" மனம் அமைதியாகப் பேசியது.

"நேத்து ராத்திரி எவ்வள ஆசையா, என் வயத்து பசியறிஞ்சு பலகாரத்தை எடுத்து எடுத்து என் தட்டுல போட்டா? பசிக்கு சோறு போட்டவ சொல்றதை நான் கேட்டுத்தானே ஆகணும்!" சீனுவின் பதில் இது.

"இருபத்தாறு வருஷமா உன் பெத்தவ கையால தின்னதுல்லாம் மறந்து போச்சா? உனக்கு சுத்தமா நன்றியே இல்லடா... நீயெல்லாம் ஒரு புள்ளையாடா? உன்னைப் பெத்தவ தன் வயித்துல பெரண்டையை வெச்சுத்தான் கட்டிக்கணும்..." மனசு அவனை காறித் துப்பியது.

"அது வேற இது வேற... கஷ்டமான கேள்வில்லாம் நீ என்னை கேக்கக்கூடாது!" மனதிடம் வெள்ளைக் கொடி காட்டினான் சீனு..

மீனா, மூன்று கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை கொண்டு வந்து அவர்களிடம் நீட்டினாள். தன் கப்பை எடுத்துக்கொண்டு, சீனுவின் பக்கத்தில் இயல்பாக உட்காருவது போல் உட்க்கார்ந்தாள். சீனுவின் பல்ஸ் வேகமாக எகிறியது. பக்கத்தில் உட்க்கார்ந்தவள், தன் கண்களால் காஃபியை குடியேன்! ஏன் பயந்து சாகறே? இதுக்கு முன்னாடி நான் உன் பக்கத்துல உக்கார்ந்ததே இல்லையா? அவள் கண்களில் கேலி கூத்தாடிக்கொண்டிருந்தது.

"சீனு, ஒரு டெம்போ டிராவலர் ரெண்டு நாளைக்கு வாடகைக்கு வேணும்... உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?"

"ம்ம்ம்... எத்தனை பேரு ட்ராவல் பண்ணணும்?" சீனு அவரைப் பார்த்தான்...

"நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு... அப்புறம் என் தம்பி, அவன் ஒய்ஃப், மல்லிகா சைடுல ரெண்டு பேரு .. செல்வாவோட கசின்ஸ் ஒரு ரெண்டு, மூணு பேரு ... மொத்தத்துல ஒரு பத்து... பன்னண்டு பேருன்னு வெச்சிக்கியேன்" நடராஜன் நிதானமாக பேசினார்.

"எங்கப்பா போறோம் ...?"

மீனாவுக்கு குஷி கிளம்பியது. சீனு ஒதுங்கி ஒதுங்கி உக்கார்றான்... அவனை கொஞ்சம் சீண்டலாமா? அவள் புடவை முந்தானை ஓரம் சீனுவின் வலது கையை உரசிக்கொண்டிருந்தது. அவள் உடலிலிருந்து, அவளுடைய சுகந்தமும், சந்திரிகாவும் ஏக வாசனையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். சீனுவுக்கு தன் நிலை கொள்ளவில்லை. இந்த பக்கம் மீனா, அந்தப்பக்கம் நைட்டியில மீனாவோட அம்மா மல்லிகா... அவனால் அசைய முடியவில்லை.

அம்மா என்னடா? இன்னும் அம்மா...! அவங்க நேத்து வரைக்கும் உனக்கும் அம்மா! இப்ப மாமியார்ன்னு சொல்லுடா! சீனுவின் மனம் உரக்க கூவ, தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருவரையும் இடித்துவிடாமல், அவன் கல்லைப் போல் உட்க்கார்ந்திருந்தான். மீனா அவன் இடுப்பில் தன் இடது முழங்கையால் குத்தினாள். பேசாம இருடி! மீனா இதெல்லாம் இப்ப வேணாம் .. ப்ளீஸ்... அவன் கண்களால் அவளைக் கெஞ்சினான்

"ராத்திரி, சுகன்யாவோட மாமா போன் பண்ணியிருந்தார்... நிச்சயதார்த்தம், கல்யாணத்தோட வெச்சுக்கலாம்ன்னு நான் சொன்னதால, வர்ற வெள்ளிக்கிழமை, நாள் நல்லாருக்கு... நீங்களும் நம்ம வீட்டை வந்து பாத்த மாதிரி இருக்கும்; சின்னதா ஒரு பங்ஷன் வெச்சு, தாம்பூலம் மாத்திக்கலாம்ன்னு சொன்னார்; நானும் சரின்னுட்டேன்; வியாழக்கிழமை காலையில டிஃபன் சாப்பிட்டுட்டு கிளம்பினா, சாயந்திரத்துகுள்ள கும்பகோணம் போயிடலாம். மறு நாள் போன வேலை முடிஞ்சா ... ராத்திரிக்கு கிளம்பிட வேண்டியதுதான். மல்லிகா நீ என்ன சொல்றே?

"ட்ரெயின் டிக்கட் கிடைக்காதா? உடம்பு அலுப்பு இல்லாம போய் வந்துடலாமே? மல்லிகா தன் கணவனைப் பார்த்தாள்.

"நடுவுல ஒரு நாள்தான் இருக்கு! பத்து ...பதினைஞ்சு டிக்கட் ஒண்ணா கிடைக்குமா? எல்லோருக்கும் ரெண்டு நாளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டு போகணும்... அதுக்கு மேல தேங்காய் பழம் ... ஸ்வீட்ஸ்ன்னு, மத்த பொருள்கள் வேற இருக்கு...."நடராஜன் இழுத்தார். சீனு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்னடா சொல்றே சீனு?" செல்வா எழுந்து நடந்துகொண்டே கேட்டான்.

"ட்ராவலர் ஆப்ஷன் பெஸ்ட்ன்னு தோணுது எனக்கு... ஈஸியா, சேஃபா, 15 பேர் போவலாம்... பிளஸ் ஒரு டிரைவர் ... ஒருத்தர் தீடீர்ன்னு வரேன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஏத்திக்கலாம். யாரும் வர்றலேன்னா பின்னாடி காலி சீட்டுல லக்கேஜ் அடுக்கிடலாம். நெனைச்ச எடத்துல நிறுத்தி, நம்ம சவுகரியப்படி காபி, டீ, சாப்பிட்டுக்கிட்டு, ட்ராவல் பண்ணல்லாம். நம்மப் பையன் ஒருத்தன் ட்ராவல்ஸ் நடத்தறான். இப்ப போன்ல சொன்னா வண்டியை அனுப்ச்சிடுவான்..." சீனு நடராஜன் சொன்னதையே ஆமோதித்தான்.

"சரிப்பா.. சீனு நீ அட்வான்ஸ் கொடுத்துடுப்பா ... நல்ல ஏ.ஸி. வண்டியாப் பாரு! அம்பது நூறு அதிகமானலும் பரவாயில்லே! பணம் எவ்வள குடுக்க? நடராஜன் எழுந்தார்.

"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..! அப்புறம் நீங்க மொத்தமா குடுங்க..." சீனுவும் எழுந்தான்.

சீனு எழுந்த போது மீனா தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் இடுப்பில் இலேசாக குத்தினாள். ஆடுடி நீ! இப்ப எவ்ள முடியுமோ அவ்வள ஆட்டம் ஆடி முடிச்சிடு! மாமன் கிட்ட தனியா மாட்டுவேடி ... அப்ப வெச்சிக்கறேன் உனக்கு கச்சேரியை... எழுந்து நின்ற சீனு தன் கண்களால் மீனாவை முறைத்தான். முறைத்தான் என்று நினைத்தானே தவிர, அவன் பார்வையில் ஒரு வித கெஞ்சல்தான் இருந்தது.

"மல்லிகா .. அப்ப நீ சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாவு... மீனாவும், நீயுமா போய், சுகன்யாவுக்கு சிம்பிளா ஒரு பட்டுப் புடவையும் ...செயினும் வாங்கிட்டு வந்திடுங்க... நிச்சயதார்த்தப் புடவை நாம தானே எடுக்கணும்? அப்ப அவளையும் கூப்பிட்டுகிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாதிரி கிரேண்டா வாங்கிடலாம். நான் ஆபீஸ் போய் லீவு அப்ளை பண்ணிட்டு சாவியெல்லாம் குடுத்துட்டு, ஒரு ரெண்டு மணிக்குள்ள திரும்பி வந்துடறேன்.

"நம்ப வீட்டுக்கே அவ இன்னும் வரலை; அதுக்குள்ள ரொம்பத்தான் அவளை தலை மேல தூக்கி வெச்சிக்கிறீங்க!? மல்லிகா மெல்ல முனகினாள்.

"நம்ம வீட்டுக்கு வர்ற குழந்தை ... சந்தோஷமா வரட்டுமே?" நடராஜன் தன் தோள் துண்டை உதறினார்.

"உன் கை பிளாஸ்டர் இன்னைக்கு பிரிக்கணும்டா... ஞாபகமிருக்கா? சீனு செல்வாவை கேட்டான்.

"என்னங்க ... நாங்க காரை எடுத்துக்கிட்டு போறோம் ... சீனு இவனை ஹாஸ்பெட்டல்லா டிராப் பண்ணிட்டு ... எங்களை டி.நகருக்கு கூட்டிக்கிட்டு போகட்டும். செல்வா கட்டு பிரிச்சதும் அவன் பாட்டுல அவன் ஆட்டோவில வீட்டுக்கு வந்திடட்டும்.. அவன் வந்ததுக்கு அப்புறமா, நீங்க இன்னைக்கு பஸ்ல ஆஃபீஸுக்கு போயிட்டு வந்துடுங்களேன்! மல்லிகா தன் திட்டத்தை சொல்லிக்கொண்டே மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள்.

"சீனு ஆஃபீஸ் போக வேண்டாமா? அவனை ஏண்டி நீங்க உங்க கூட இழுக்கறீங்க? நீங்களும் ஆட்டோவுல போங்களேன் ஒரு நாளைக்கு?அவனுக்குத்தான் நான் ஒரு வேலை குடுத்து இருக்கேனே?..." நடராஜன் முனகினார்.



"அப்பா நீங்க சொல்லிட்டீங்கள்ல்ல... அதோட விடுங்க... சீனு அவர் ஆஃபிஸ்ல எதாவது தில்லு முல்லு பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுடுவாரு..! என்ன சீனு நான் சொல்றது சரிதானே? மீனா அவனை கண்ணடித்து வம்புக்கு இழுத்தாள். சீனு தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையாட்டினான்.

"சரி சரி .. உங்க பாடு; அவன் பாடு; ஏதாவது பண்ணுங்க ... சீக்கிரமா பர்சேஸை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க.." நடராஜன் எழுந்து குளிப்பதற்கு விரைந்தார்.

மாப்ளே கார் சாவி எடுத்துக்கிட்டு வரேன்.. நீ உன் வீட்டுக்குப் போயிட்டு ஜல்தியா வந்துடு ... செல்வாவும் தன் தந்தையின் பின்னாலேயே வீட்டுக்குள் நடந்தான். 



No comments:

Post a Comment