"டேய் செல்வா ... நீ வந்து சாப்ட்டீனா என் வேலை முடியும். மணி எட்டாச்சு. எனக்கு நேரத்துல தூங்கணும்..." மல்லிகாவுக்கு அவனை கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று.
"அம்மா ... எனக்கு பசிக்கும் போது நான் சாப்பிட்டுக்கிறேன் ... நீ போய் நிம்மதியா தூங்கு ... தூங்கறதை விட்டா உனக்கு வேற என்ன கவலை?" மதியமே அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக மல்லிகா போட்டதை, எதுவும் பேசாமல் அவசர அவசரமாக விழுங்கியிருந்தான்.
"எல்லாம் உன் இஷ்ட்டம்ன்னு சொல்லியாச்சு ... அப்புறம் ஏண்டா நீ என் கிட்ட வீண் பேச்சு பேசறே?"
"அம்மா ... நீங்க ரெண்டு பேரும் திருப்பியும் ஆரம்பிச்சிடாதீங்க ... என்னை கொஞ்ச நேரம் படிக்க விடுங்க; அவன் கேக்கும் போது அவனுக்கு நான் ரெண்டு தோசை ஊத்திக் குடுக்கறேன்; நீ போய் படும்மா... " மீனா ஒரு வாரத்துக்கு பிறகு அன்றுதான் தன் கல்லூரிப் புத்தகத்தை கையில் எடுத்திருந்தாள்.
மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
***
செல்வா மனதுக்குள் சுண்ணாம்பாய் வெந்து கொண்டிருந்தான். நெலமை புரியாம அம்மா இப்பத்தான் சாப்பிடு சாப்பிடுன்னு என் உயிரை எடுக்கிறா? நேரத்துக்கு புள்ளை சாப்பிடலேயேன்னு அம்மா மனசு கஷ்டப்படுது. அது எனக்கு புரியலையா? என் மனசு கனத்துப் போயிருக்குது. மனசுல இருக்கற பாரத்தை எறக்கற வரைக்கும் எனக்கு எப்படி பசிக்கும்? என் பாரத்தை நான் யார் தோள்ல எறக்கி வெப்பேன்?
மதியம் சுகன்யாவிடம் சந்தோஷமாக கல்யாண விஷயத்தை சிக்ஸர் அடிக்க முயற்சி பண்ண எனக்கு, என் கல்யாண நாடகத்துல புதுசா சீனுக்குள் வந்த பௌலர் சம்பத் போட்ட கூக்ளியில், என் நடு ஸ்டம்ப் எகிறி க்ளீன் போல்ட் ஆகி, பெவிலியனுக்கு திரும்ப வந்திருக்கிற என் மன வேதனையை நான் யார்கிட்ட சொல்லி அழறது?
சம்பத் சொன்ன கதையை கேட்டதுலேருந்து, மொத்தமா என் மனசு குழம்பி சேறாகிப் போயிருக்கேன்? இப்ப எனக்கு சோறு ஓண்ணுதான் கேடா? ஒரு வேளை தின்னலன்னா செத்தா போயிடுவேன்?
செல்வா தன் மனதுக்குள் எரியாமல் புகைந்து கொண்டிருந்தான். மெதுவாக எழுந்து வெரண்டாவிற்கு வந்த செல்வா, தன் முகத்தில் அடித்த இதமான குளிர் காற்றை நீளமாக இழுத்து, மார்பை முழுமையாக நிறைத்துக்கொண்டான். குளிர்ந்த காற்று நெஞ்சுக்குள் பரவியதும், மனம் ஓரளவிற்கு இலேசாகியதாக உணர்ந்தவன் அங்கேயே வெறும் தரையில் நீளமாக படுத்துக் கொண்டான். உஷ்ணமான உடம்புடன், ஜில்லென்ற தரையில் கிடந்தவன் மனதின் எண்ணப் பறவைகள் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்தன.
முதல்லே வித்யா, சுகன்யாவை எவனோ ஒரு சம்பத் பொண்ணு பாக்க போறான்னு ஒரு சின்ன கல்லைத் தூக்கி என் தலையில போட்டா; நான் சொல்றது உண்மையா இல்லையா? அதான் முக்கியம்; யார் சொன்னதுங்கறது முக்கியமில்லேன்னு புதிரா பேசினா; அப்ப அது அவ்வள பெரிய விஷயமா எனக்குத் தோணலை.
எப்படியோ இங்க அங்க அலைஞ்சு அவ இருக்கற எடத்தை கண்டுபிடிச்சி போனைப் போட்டா ... வித்யா சொன்ன அந்த சம்பத்தே, சிவதாணு வீட்டுல போனை எடுத்து ... என் தலை மேல பெட்ரோலை ஊத்தி நெருப்பை அள்ளிக் கொட்டி, மொத்தமா என் கரண்ட்டை புடுங்கிட்டான். அப்ப வித்யா சொன்னது முழு உண்மைதானே?
சுகன்யாவா? என் சுகன்யாவா இப்படி பண்ணியிருக்கா? சுகன்யா என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, அவளுக்கு இன்னொரு ஆணுடன் பழக்கம் இருந்திருக்கிறதா? ஒருத்தன் அவளை எட்டு வருஷமா காதலிச்சிருக்கான். இந்த விஷயத்தை முழுசா மறைச்சு என் கிட்ட அவ பழகியிருக்காளே? என்னால இதை நம்பவும் முடியவில்லை. நம்பாம இருக்கவும் முடியலையே?
செல்வா ... அப்படியே சுகன்யா யார்கூடவாது பழகியிருந்தா உனக்கு என்னடா? அது முடிஞ்சுப் போன விஷயம். இப்ப அவ உன் மேல உயிரையே வெச்சிருக்கா? அதுதானேடா முக்கியம்? அவளோட பழசை நினைச்சு நீ ஏண்டா அர்த்தமில்லாம கவலைப் படறே?
சுகன்யா ஒருத்தன்கூட பழகினதிலே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே? அவ அதை என் கிட்ட ஏன் மறைச்சா? அதுதான் இப்ப என் மனசுக்குள்ள முள்ளா இருந்துகிட்டு குத்துது? கடைசியிலே என் சுகன்யாவும், சராசரி பெண்களில் ஒருத்திதானா? அவ மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேனே?
எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு; அடிபட்டுக்கிட்டவன் அப்படியே போயிருக்கக் கூடாதா? நடு ரோடுல செத்திருந்தா கூட பரவாயில்லே? நான் எதுக்காக பொழைச்சு வந்தேன்? என்னை சந்திக்கறதுக்கு முன்னாடியே, சுகன்யாவுக்கும் இன்னொருத்தனுக்கும் பழக்கம் இருந்தது; நடுவுல அவங்க பிரிஞ்சிட்டங்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போற நேரத்துல, சம்பத்துக்கு சுகன்யா மேல இன்னும் காதல் இருக்குன்னு அவனே எங்கிட்ட சொல்லி, அதை நெனைச்சு நெனைச்சு நான் இப்படி மனசுக்குள்ளவே புழுங்கறதுக்கா பொழைச்சுக்கிட்டேன்?
சுகன்யா ஒருத்தன் கூட நட்பா பழகியிருந்திருக்கலாம். அது தப்பில்லே? ஆனால் அதை என் கிட்ட எப்பவும் சொன்னதேயில்லையே? அவர்களுடைய நட்பு எது வரைக்கும் போயிருந்திருக்கும்? எதனால அவர்கள் நட்பு நடுவில் நின்று போனது? சம்பத் அந்த நட்ப்பை மீண்டும் ஏன் புதுப்பிக்க விரும்புகிறான்? இதில் சுகன்யாவுக்கு எந்த அளவுக்கு உடன்பாடு? டேய், செல்வா, போதும் நிறுத்துடா. உன் மனசை அலைய விடாதே! இதுக்கு மேல இதை நோண்டாதே.... இப்போதைக்கு சும்மா இரு. சும்மாவா சொல்றாங்க? அம்பட்டன் குப்பையை கிளறினா மசுருதாண்டா மிஞ்சும்ன்னு?
சுகன்யாவும்தான் எதுக்காக என்னைப் பொழைக்க வச்சா! எதுக்காக? இப்படி என்னை கொல்லாம கொல்றதுக்கா? டேய் பைத்தியக்காரா! சும்மா சும்மா ஏண்டா சாவைப் பத்தியே நினைக்கிறே? இப்ப என்னடா ஆயிடிச்சி? இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கலை. உன் அப்பாவும், இந்த கல்யாணத்துல எங்களுக்கு முழு சம்மதமுன்னு சுகன்யா வீட்டுக்கு இன்னும் கன்ஃபார்ம் பண்ணலை. அப்புறம் என்னடா? எத்தனை எடத்துல, தாலி கட்டறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னே கல்யாணம் நின்னுப் போயிருக்கு. அவங்கல்லாம் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலையா? ஆசைப்பட்ட ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கலன்னா, உன் வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சா? நீ எதுக்கு சாவைப் பத்தி இப்ப நினைக்கணும்?
டேய் செல்வா! நில்லுடா ... நில்லுடா! காலையிலத்தான் கன்யாவை விட்டா வேற எவளையும் திரும்பிப் பாக்கமாட்டேன்னு நடுக்கூடத்துல உக்காந்து சத்தியம் பண்ணே? சபதமெடுத்து இன்னும் முழுசா எட்டு மணி நேரம் கூட முடியலை. கல்யாணம் நின்னா என்னன்னு எப்படிடா உன்னால நினைக்க முடியுது?
மீனா உனக்காக அம்மாகிட்ட எவ்வளவு தூரம் ஆர்க்யூ பண்ணா? மீனா கிட்ட சம்பத்து சொன்னதை சொல்லுவியா? சுகன்யாவை இன்னொருத்தனும் கல்யாணம் பண்ண டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்? அவங்களுக்குள்ள ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும் போலத் தெரியுது. இது எனக்கு மனசை உறுத்தறதுன்னு உன் தங்கைக்கிட்ட உன்னால சொல்ல முடியுமா? சுகன்யா இப்ப அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆயிட்டா; அவ கிட்ட அவளைப் பத்தி எடக்கு மடக்கா பேசினா, தூ ... நீயும் ஒரு சராசரி ஆம்பிளைத்தானா என் மூஞ்சி மேலேயே காறித் துப்பினாலும் துப்புவா ...? இந்த விஷயத்தை இவ கிட்ட பேசக்கூடாது. செல்வா தன் மனதிலிருந்து தன் தங்கை மீனாவின் பெயரை அழித்தான்.
உன் அப்பா, எப்பவும் அனாவசியமா எதுக்கும் வாயைத் தொறக்காத மனுஷன். அவரு எப்பவும் உன் அம்மா பேச்சை தட்டாம, அவ சொல்றதுக்கு அதிகமா மறுப்பு சொல்லாமா ஸ்மூத்தா லைபை ஓட்டிக்கிட்டு இருக்கறவரு. அவரே முதல் தரமா, உன் கல்யாண விஷயத்துல, தன் பொண்டாட்டிங்கறதுக்காக அவ பேச்சை கேக்காம, உன் பக்கம் இருக்கற ஞாயத்தை எடுத்துப் பேசியிருக்கார்.
உன் அப்பனுக்கு வார்த்தைதான் முக்கியம். பேசின வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கற ஆளு அவரு. பொண்டாட்டி புள்ளை எல்லாமே கொடுத்த வார்த்தைக்கு அப்புறம்ன்னு நெனைக்கற ஆளு. அவரு ஏற்கனவே, உன் சித்தப்பா, உன் மாமா எல்லார்கிட்டவும், உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசிட்டாரு. உன் உறவு முறையில என்பது சதவீதம் பேருக்கு உன் கல்யாணம் பத்தி தெரிஞ்சு போச்சு. இப்ப போய் நீ ஏதாவது வில்லங்கம் பண்ணே; மவனே; இதுக்கு மேல உன் கிட்ட அந்தாளு பேசறதையே நிறுத்திடுவாரு. மானமுள்ள மனுஷன் அவரு; ஞாபகம் வெச்சுக்க. ஸோ ... நீ இந்த விஷயத்தை அவருகிட்டவும் பேச முடியாது. நடராஜன் பெயரும் செல்வாவின் மனதிலிருந்து அடிக்கப்பட்டது.
உன் அம்மாவுக்கு, சுகன்யா தன் கல்யாணத்துக்கு முன்னயே, உடம்பு அரிப்பெடுத்து, உன் கூட தனியா இருந்தான்னு ரொம்ப மனக்குறை. அவ தன் அழகை காமிச்சி உன்னை மயக்கிட்டான்னு ரொம்பவே எரிச்சல். அம்மா அவ மேல இந்த விஷயத்துல, அவ நடத்தை மேலே கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இல்லாம இருக்காங்க. நீ உன்னைத் தவிர சுகன்யா யாரையுமே திரும்பியே பாத்தது இல்லைன்னு காலையில் நடுக்கூடத்துல நாலு பேரு முன்னாடி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணே? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களும் கடைசியா எக்கேடோ கெட்டுப் போடான்னு தன் முடிவுலேருந்து உனக்காக இறங்கி வந்திருக்காங்க.
சம்பத் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கற கதை அவங்களுக்கு தெரிஞ்சா, இந்த வீடு குருஷேத்திரமா ஆயிடும். அது மட்டுமா, பழைய குருடி கதவை தொறடிங்கற மாதிரி, உன் அம்மா சுகன்யாவை எடுபட்டவ, கூறு கெட்ட சிறுக்கின்னு, கூப்பாடு போடுவாங்க. அதை உன்னால் நிஜமா தாங்கிக்க முடியுமா? அம்மா கிட்டவும் இந்த விஷயத்தை பேசமுடியாது.
ம்ம்ம் ... எல்லாத்துக்கும் மேல, முந்திரிகொட்டை மாதிரி, நானே என் வாயாலே, சுகன்யா மாமன் ரகுகிட்டே, என் அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கண்ணு டமுக்கு அடிச்சிட்டேன். அத்தோட வுட்டனா? அந்தாளுக்கிட்டவே சுகன்யா கிட்ட பேசறேன்னு நெம்பரை வாங்கி, சம்பத் பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாகிட்ட இதுவரைக்கும் பேசாம, பொட்டைப் பயலாட்டாம் பதுங்கி கிடக்கிறேன்? அந்தாளு சுகன்யா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு என் அம்மா சம்மதம் சொன்னதை இன்னேரம் சொல்லிக் கூட இருக்கலாம். அப்படி அவரு சுகன்யா கிட்ட சொல்லியிருந்தால், இன்னேரம் சுகன்யா எனக்கு போன் பண்ணி இருக்க மாட்டாளா?
நான் ஒரு முண்டம். சுகன்யா போன் பண்ணுவான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? அவதான் பிடிவாதமா, ஒரு வாரமா என் கிட்ட பேசறதை நிறுத்தி வெச்சிருக்காளே? எல்லாத்துக்கும் மேலே ஏற்கனவே நான் வீட்டுக்கு வந்தது அவளுக்கு தெரிஞ்சும் வீம்பா பேசாமலே இருக்கா.
ம்ம்ம்... சத்தியமா சுகன்யாகிட்ட இந்த விஷயத்தை கேக்கறதுக்கு எனக்கு மனசுல தைரியமில்லே? தைரியம் என்ன? இஷ்டமும் இல்லே? ஆனா இந்த பாழும் மனசு என்னை அலைக்கழிக்குதே? இப்ப நான் என்னப் பண்றது? இந்த வேதனையை வெளியில சொல்லாம மனசுக்குள்ள வெச்சுக்கவும் என்னால முடியலையே? யார்கிட்டவாவது இதை சொல்லித்தான் ஆகணும். இல்லேன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்? இதை யார் கிட்ட சொல்றது?
சுகன்யாவோட ரகுவிடமோ அல்லது அவ அம்மா கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்கு தெரியவருதுன்னு ... நோ ... நோ ... என்னால என் சுகன்யா கிட்டவே பேச தைரியமில்லாம இருக்கப்ப அவங்க வீட்டுல யாருகிட்ட பேசறது? வேற வினையே வேணாம்.
எனக்காக இப்ப என் அப்பா முழுசா கல்யாண வேலையில இறங்கியாச்சு? இப்ப கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னோ, இல்லை வேண்டாம்ன்னோ, எப்படி நான் சொல்லப் போறேன்? என்னக் காரணத்தை சொல்லுவேன்? பேசாம சுகன்யாவை நேரா போய் பாத்துடலாமா?
என்னன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில போறது? சுகன்யாவை பாக்கப் போறேன்னா ... எல்லாம் துணியை வழிச்சுக்கிட்டு சிரிப்பாங்க ... நாலு நாளுலே கும்பகோணம் போகத்தான் போறோம்பாங்க... அய்யோ! என் மனசுல இருக்கறதை யாருகிட்டவாவது சொல்லாட்டா எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கே! என் மன வேதனையை இப்ப நான் யார்கிட்ட சொல்லுவேன்? ஒரே ஒருத்தன் கிட்ட நான் நம்பிக்கையா பேசலாம். இப்ப அவன் எங்கே இருக்கானோ?காலம் சென்ற, நிலக்கிழார், ஸ்ரீமான் கீழப்பந்தல் வெங்கிடேசவரதரங்கன் சீனுவாசன், தன் சீமந்த பேரனுக்கு, தன் தாத்தாவின் பெயரான, பாற்கடலில் பள்ளிக்கொண்டவன் திருநாமத்தை "சீனிவாசன்" என ஆசையுடன் சூட்டி, தன் மார்பின் மேல் புரண்டு வளர்ந்த குழந்தைக்கு, அவனுடைய இரண்டு வயதிலேயே ஆண்டாள் அருளிய திருப்பாவையை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய முன்னோர்கள், தன் காலால் மூவுலகையும் அளந்தவனுக்கு, கோவில் எழுப்பி சேவகம் செய்த பெருமையை உடையவர்கள். பரம்பரை பரம்பரையாக காஞ்சி வரதராசனுக்கு கருட சேவை உற்சவத்தை வெகு காலம் உபயதாரர்களாக இருந்து நடத்தியவர்கள்.
சீனு என்கிற "கீழப்பந்தல் நாராயணன் சீனுவாசன்" தன் வலக்கையில் விஸ்கி கிளாசும், இடக்கையில் புகையும் சிகரெட்டுமாக, தன்னை மறந்து, தன் சுற்றுப்புறத்தை மறந்து, பிரம்மாண்டமான ஆனந்தஜோதியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருந்தான் (கட்டிங் விட்டதுக்கு பிறகு தனக்கு கிடைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போலியான மன நிம்மதியை "ஆனந்த ஜோதி" என சொல்லுவது சீனுவின் வழக்கம்). சீனு எப்படி கட்டிங்குக்கு அடிமையானான்? ஏன் அடிமையானான் என்பது இந்த கதைக்கு தற்போது அவசியமில்லாத ஒன்று.
அவனருகில் இந்திரா நகரின் இளைய தளபதிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும், இரண்டு மூன்று பேர், "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..." என எம்பி3 ப்ளேயரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னிசை மழையில் குளிர குளிர நனைந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் இடுப்பிலிருந்த லுங்கி நழுவி பட்டை போட்ட அண்டிராயர் பளிச்சிட, பாட்டுக்கு, நடனமாடுவதாக நினைத்து தன் உடலை வருத்திக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மட்டையாக போய்க் கொண்டிருந்தார்கள்.
வேலாயுதம் குடியிருந்த வீட்டுக்காரரும், அவர் மனைவியும் தங்கள் பெண்ணின் பிரசவத்திற்காக பத்து நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்த காரணத்தால், அவன் தங்கியிருந்த மாடியறையில் கசப்புத் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
சரக்கில் மிக்ஸ் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த பெப்ஸி பாட்டில் ஒன்று கவிழ்ந்து விழுந்து, கருமை நிறத்தில் வழிந்து ஓடிக்கொண்டிருப்பதை கூட லட்சியம் செய்யாமல், வெண்ணையில் பளபளக்கும் சிக்கன் மசாலாவில் மிதந்து கொண்டிருந்த லெக் ஃபீஸ் ஆணுடையதா இல்லை பெண்ணுடையதா என அன்றைய சோம பானக் கச்சேரியின் உபயதாரர் திருவாளர் வேலாயுதம் தன் மனதுக்குள் ஒரு தீவிரமான ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான். கடைசியில் விவேக் தின்ற காக்கா காலா இல்லாம இருந்தா சரிதான் என்று தன் ரிசர்ச்சை தற்காலிகமாக நிறுத்தினான்.
ஏறக்குறைய, மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியபின், இதோடு நிறுத்திக்கலாமா இல்லை இன்னோரு சின்ன ரவுண்டு போகலாமா, என மனதுக்குள் வாத பிரதி வாதம் செய்து கொண்டே, சீனு தன் பிரத்யேகமான ஜோதியில் ஐக்கியமாகியிருந்த வேளையில், உடுக்கை இழந்தவனுக்கு கையாக மாறி இடுக்கண் களைபவன் நண்பன் என்ற முதுமொழிக்கிணங்க, நமது கதாநாயகன் செல்வா, தன் மனக்கவலையை போக்கி, தனக்கு ஒரு வழி காட்ட வல்லவன் இந்த வையகத்தில் ஒருவன் இருக்கிறானென்றால அது தன்னுடைய அத்தியந்த நண்பன் சீனு ஒருவனே என ஏக மனதாக முடிவெடுத்து, அலைபேசியில் அவனை அழைத்தான்.
"டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் .... டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் ...."
"சீனு ... உன் போன் அடிக்குது மாப்ளே..."
"யார்ரா அவன் பூஜை வேளையில கரடி வுடறான்..." சீனு போனை எடுத்து வேலாயுதத்திடம் எறிந்தான் ... என் ஆபீசா இருந்தா நான் செத்துட்டேன்னு சொல்லு ..."
"மாப்ளே ... யாரோ செல்வின்னு கூப்பிடறா மாப்ளே ...வேலாயுதம் போதையில் தன் வாயெல்லாம் பல்லாக மாற, பக்கத்திலிருந்தவன் அவன் கையிலிருந்து போனை பிடுங்கி "ஹெல்லொ ... நீங்க யார் பேசறது" என வடிவேல் ஸ்டைலில் தன் வாயை கோணினான்.
"டேய் தறுதலை வெல்லாயுதம் ... இது நம்ம செல்வாடா ...செல்வாவை ஒரே நாள்லே செல்வியாக்கிட்டியேடா? "ஹோ ... ஹூ" என அவர்கள் கொக்கரித்தார்கள்.
"டேய் ... சீனு ... செல்வா பேசறேன்..."
"சொல்லுடா மச்சி ... எப்படியிழுக்கே" சீனுவின் குரலில் உற்சாகம் மிதமிஞ்சியிருந்தது. அவனுடைய நாக்கு இலேசாக குழற ஆரம்பித்திருந்தது.
"மாப்ளே! எங்கடா இருக்கே?" சீனுவின் உளறலை கேட்டவுடனேயே, அவன் இன்றைக்கு வெற்றிகரமாக எவனுடைய பாக்கெட்டுக்கோ ப்ளேடு போட்டு "கட்டிங்" உற்சவம் நடத்திக் கொண்டிருக்கிறானென்று செல்வாவுக்கு புரிந்துவிட்டது
"நம்ப வெல்ல்லாயுதம் இருக்கான்ல;" சொல்லிவிட்டு நிறுத்தினான் சீனு
"சொல்லித் தொலைடா... குடிகாரனுக்கு சஸ்பென்ஸ் என்னடா சஸ்பென்ஸ்?" செல்வா அவன் மீது எரிந்து விழுந்தான்.
"தரமணியில ஷிப்ட்டு டூயுட்டிக்கு போற ஐ.டி. பிகர் ஒண்னை கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தானேடா?"
"யாருக்குடா தெரியும் .. ஊர்ல ஆயிரம் ஐ.டி. பிகருங்க அலையறாளுங்க..."
"அதாண்டா "கோம்ஸ்" டா மாமா ... ஹாங் ..ஹாங் ... அதான் கோமதிதான்; அவ இவன் ப்ரப்போசலுக்கு ஓ.கே சொல்லிட்டாளாம்; ரொம்ப வேண்டப்பட்ட நம்ம பசங்களுக்கு ஒரு சின்னப்பார்ட்டி குடுக்கறாண்டா..."
"சீனு ... இதே வேலாயுதம் அவளை டென்னிஸ் கிரவுண்டுன்னு நக்கல் பண்ணிக்கிட்டு இருந்தான்டா!"
"செல்வா ... ஒண்ணு சொல்றேன் கேளு ..."
"சொல்லுடா ..."
"அவனும் அலைஞ்சு அலைஞ்சு பாத்தான்... சரியா ஒண்ணும் கரெக்ட் ஆவலை அவனுக்கு! அவனுக்கு வயசாயிகினே போவுது! எவ்வள நாளைக்குத்தான் கையில புட்சிக்கினு கவுந்தடிச்சி பட்த்துக்குவான்?"
"ம்ம்ம்ம்... அதுக்காக?"
"மாப்ளே! மேல கிரவுண்டு எப்படி இருந்தாலும் பரவால்லே ... கீழ கிரவுண்டுல புல்லு முளைச்சு பொத்தல் இருக்கா?... இப்ப வுட்டு ஆட்டறதுக்கு அதாண்டா முக்கியம்ன்னு வெல்லாயுதம் அபிப்பிராயப்படறான். இது அவன் பர்ஸனல் மேட்டர்! இதுல நாம எதாவது சொல்றதுக்கு இருக்கா?" சீனு தன் பஞ்சாயத்தை ஆரம்பித்தான்.
"டேய் அவன் பக்கத்துல இருக்கறானா? ஏண்டா இப்படி குடிச்சிட்டு தாறு மாறா பேசறே?"
"இருந்தா என்னாடா? என் உயிர் நண்பண்டா அவன்! சரிடான்னு நான்தான் ரெண்டு பேரையும் கோத்துவுட்டுட்டேன்!"
"கோத்து வுட்டியா? என்னடா சொல்றே?'
"அதாம்பா ரெஜிஸ்ட்ரார் ஆபீசுல நோட்டீஸ் குடுத்து ... சாட்சி கையெழுத்து போட்டு இருக்கேன்ல்லா?" அடுத்த மாசம் பத்தாம் தேதி கல்யாணம்டா.."
"இவ்வள தூரம் கதை நடந்து இருக்குது? அந்த வேலாயுதம் ... கம்மினாட்டி எனக்கு சொல்லவேயில்லை?"
"மச்சான் ... சாயங்காலம் ஆனா எங்களுக்கு செக்கு ... சிவலிங்கம் எல்லாம் ஒண்ணுதான்!. நீ எப்பவும் போதி மரத்துக்கு கீழ உக்கார்ர புத்தரு! உனக்குத்தான் "கட்டிங்" வுடறவங்களைப் பாத்தாலே பத்திக்குதே?"
"ம்ம்ம்ம்...."
"அதுக்கு மேல நீ நடக்கற நெலமையிலா கீறே!... உன்னை நான் ஒரு ஆட்டோ வெச்சுத்தான் ஓட்டிக்கிணு வரணும்; வந்தா மட்டும் நீ என்னாப் பண்ணப் போறே? ஒரு கிளாசுல பெப்ஸியை ஊத்திகிணு ஆகாசத்தை பாத்துக்கிட்டு குந்திகினு இருப்பே? குடிக்கறது தப்புன்னு ... பாடம் நட்த்துவே? எங்களுக்கு இதெல்லாம் தேவைதானா? அதான் நயினா கூப்புடலை உன்னை..."
"சரிடா ... சரிடா ..."
"ஒரு விசியம் க்ளீன்னா தெரிஞ்சுக்கோ? ஃப்ரெண்ஸ்ங்களுக்குள்ள குழப்பம் இருக்கக்கூடாது."
"என்ன எழவுடா அது குழப்பம் ... சீக்கிரம் சொல்லுடா"
"வெல்லாயுதம் உன்னை பார்ட்டிக்கு கூப்ப்புறேன்னான்; நான் தான் வேணாம் வுற்றான்ன்னேன்; செல்வா நம்ம ஜிகிரி தோஸ்த்து ...அவனுக்கு நான் சொல்லிக்க்க்க்கிறேன்... ஒண்ணும் பிரச்சனை பண்ணமாட்டான்னேன்.."
"டேய் சீனு ... என்னை கொஞ்சம் பேச வுடுடா..."
"மன்சுல எத்தையும் வெச்சுக்காதே ப்ரொ ... இத்தைப் பத்தி நேரா பாக்கும்போது பேசிக்கலாம்..."
"மாப்ளே ... சீனு .. உன்னை நான் உடனே பாத்தாவணும்டா.."
"டேய் செல்வா ... இப்பத்தாண்டா லேசா சுதி ஏறுது!"
"டேய் நாயே ... உன் சுதி, ராகம் எல்லாத்தையும் நிறுத்திபுட்டு இப்பவே கிளம்பி என் வீட்டுக்கு வா.."
"மச்சான் என்னடா ஆச்சு ... எதுக்குடா என்னை நாயேங்கறே?"
"சீனு ... மாப்ளே .. நான் ரொம்ப நொந்து போயிருக்கேண்டா"
"என்ன மச்சான் ... சுகன்யாக்கிட்ட எதாவது லொந்தாயிப்போச்சா...?"
"சீனு என்னை வெறுப்பேத்தாதே! உன் நாத்தவாயை மூடிக்கிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க வரலே ... நடக்கறதே வேற பாத்துக்கோ ..." செல்வா உறுமினான்..
"என்ன மச்சான் ... ரொம்பவே சூடாவறே?
"குடிகாரனுங்க நடுவுல என் ஆள் பேரை நீ ஏண்டா எடுக்கறே?"
"சாரி ... சாரி ... பிரதர் ... மன்னிச்சுக்கப்பா"
"சரி சரி ... எப்ப வர்றே? ..
"செல்வா ... ஒரு ஆட்டோ புட்ச்சித்தான் வர்ரணும் ... பைக் வீட்டுல கிடக்குடா ... ஒரு அரை மணி நேரத்துல வர்றேனே"
"சீனு கோச்சிக்காதேடா ... என்னமோ வெறுப்புல உன்னை நாயேன்னுட்டேன்."
"ம்ம்ம் ... ஒ.கே மச்சான்.."
"சாரிடா சீனு! உன்னை விட்டா எனக்கு வேற ஃப்ரெண்டு யாருடா இருக்கான்...?"
"சரிடா ... சும்மா பொலம்பாதேடா .. நான் வரேண்டா ."
"எப்படியாவது வந்து தொலைடா ... ஒரு முக்கியமான மேட்டர் டிஸ்கஸ் பண்ணணும்..."
"அம்மா முழிச்சிட்டு இருக்காங்களா?"
"இப்ப எந்த அம்மாவை கேக்கறடா?"
"டேய் செல்ல்வா எனக்கு ரெண்டு அம்மா; ஒண்ணு என் அம்மா; என்னைப் பெத்து வளத்த அம்மா; இன்னொன்னு உன் அம்மா... என்னை பெக்காத அம்மா; ஆனா ஆசையா எப்ப வந்தாலும் உக்கார வெச்சு சோறு போடற அம்மா; உன் அம்மா என் அம்மா ... எப்படி..? ரைமிங்கா பேசறேன்ல்ல்லா.."
"டேய் சீனு அடங்குடா ... பொத்திக்கிட்டு சீக்கிரம் வந்து சேருடா...."
"மச்சான் நான் இன்னும் சாப்புடலேடா"
"நம்ம வீட்டுல சாப்பிட்டுக்கலாம் வாடா... உனக்கில்லாத சோறா?"
செல்வா காலை கட் பண்ணினான். என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்... இவனை போய் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கேன். யாருக்குத் தெரியும் இவன் கட்டிங் வுடறான்னு? போன் பண்ணதுக்கு அப்புறம்தான் தெரியுது? இவன் வந்து என் கதையை கேட்டு, எனக்கு என்னா வழி காட்டுவான்? வந்தான்னா சட்டுன்னு மாடி ரூமுக்கு ஓட்டிக்கிட்டு போய்; அங்கேயே படுக்க வெச்சிடணும் ... "
No comments:
Post a Comment