Thursday, 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 4


தீரஜ் சூர்யாவை அழைத்துக் கொண்டு வந்திருந்த இடம் ஒரு நந்தவனம். உள்ளே நுழைந்ததும் பசுமையான பெயர் தெரியாத மரங்களும் விதவிதமான பூக்களும் அவர்களை வரவேற்றன. இயற்கை போலவே அமைக்கப்பட்ட பெரிய செயற்கை நீரூற்று கண்களை கவர்ந்தது. நீருற்றின் அடிவாரத்தில் ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சிலுசிலுப்பான அந்த இடம் சூர்யாவின் மனநிலையை மாற்றிவிட்டது. அதை அறிந்த தீரஜ் பிரசாத்தும் அமைதியாக அவளை ரசித்தான். அவள் நந்தவனத்தை ரசித்தாள். தூரத்தில் ஒரு நீர் தேக்கம் தெரிந்தது. அது ஒரு குளம்... குளத்தில் தாமரையும் அல்லியும் மலர்ந்திருந்த அழகை ரசித்தவள் அங்கே மேய்ந்து கொண்டிருந்த வாத்தை ஆசையாக பார்த்தாள். "வாவ்... எவ்வளவு அழகா இருக்கு...!" அவள் அதிசயித்தாள்.

தீரஜ் அவள் ரசனையில் குறுக்கிடாமல் தனியாக ஒதுங்கிவிட்டான். அவள் நல்ல மனநிலையில் இருக்கும் பொது தன மனதை திறந்துகாட்ட முடிவு செய்திருந்தான். அதற்கு அவள் முதலில் அமைதியாக வேண்டும். அதற்கு இந்த சூழ்நிலை உதவும் என்று நம்பினான். அவன் நம்பியது போலவே அவள் மனம் அமைதியடைந்து நந்தவனத்தின் அழகில் லயித்திருந்தது. 'இது தான் சரியான நேரம். அவன் இப்போது அவளிடம் காதலை சொன்னால் அவள் சிறுபிள்ளை தனமாக எதுவும் பேசாமல் கொஞ்சம் யோசிப்பாள்....' அவன் மனதில் நினைத்தபடி தூரத்தில் நிற்கும் சூர்யாவை பார்த்துக் கொண்டு காரில் சாய்ந்து நின்றான். சூர்யா சிரித்த முகத்துடன் தீரஜ்ஜின் பக்கம் திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்தாள். அவள் காலடியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு வாத்து அவள் பின்னால் வந்தது. அதை கண்டு கொள்ளாமல் மேலே நடந்தால். இரண்டாவது வாத்து... மூன்றாவது வாத்து... தொடர்ந்து அனைத்து வாத்துகளும் அவளுக்கு பின்னால் வந்தது. அவள் திரும்பி பார்த்தாள். திகைத்தாள். 'எது என்ன... எல்லா வாத்தும் என்னை துரத்தி வருதே...!' சூர்யா நடையை வேகப்படுத்தினாள். வாத்துகளும் வேகப்படுத்தின. இன்னும் வேகமாக நடந்தாள். அவளை தொடர்ந்த வாத்துகளும் தங்கள் நடையை ஓட்டமாக மாற்றின. சூர்யா பயந்துவிட்டாள். வேகமாக ஓட்டம் பிடித்தாள். வாத்துக் கூட்டம் அவளை துரத்தியது. "ஐயையோ... தீரஜ்... தீரஜ்... " அவள் வேகமாக கத்தியபடி ஓடினாள். வாத்து கூட்டம் இன்னும் வேகமாக அவளை துரத்தியது. அலறியபடி ஓடிவரும் சூர்யாவை பார்த்த தீரஜ் அவளை நோக்கி ஓடிவந்தான். இருவரும் முட்டிக் கொண்டார்கள். சூர்யா தீரஜ்ஜை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். முன்னோக்கி ஓட முடியாமல் இன்னும் இன்னும் நெருக்கமாக அவனுடன் ஒட்டிக் கொண்டாள். பட்டு மேனி ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்த தீரஜ் மெய்மறந்து சிறகில்லாமல் வானில் பறந்தான். சூர்யாவின் அலறல் குரல் அவனை இந்த உலகிற்கு கொண்டுவந்தது. "எ... என்ன...?" என்று கேட்டு தடுமாறினான். "வாத்து... வாத்து துரத்துது..."என்று அவனோடு ஒட்டிக் கொண்டாள். "எங்க... எங்க துரத்துது... திரும்பி பாரு..." அவன் அவளை தன்னிடமிருந்து விளக்கி திருப்பி நிறுத்தி வாத்தை பார்க்கும் படி செய்தான். அது அங்கு அவள் காலுக்கு கீழே "பாக் பாக்.." என்று கத்தியபடி மேய்ந்து கொண்டிருந்தது. "என்ன இது... இப்போ தானே என்னை துரத்தினுச்சு... இப்போ சாதாரணமா நிக்குது..." அவள் வியப்பு குறையாமல் கேட்டாள். "வாத்துக்கு பயந்தா ஓடி வந்த...?" "ம்ம்ம்...." அவள் மனமில்லாமல் அரைகுறையாக ஒத்துக் கொண்டாள். அவன் சத்தமாக மனம் விட்டு சிரித்தான். அவன் எப்போதெல்லாம் சூர்யாவுடன் இருக்கிறானோ அப்போதெல்லாம் அவனால் இப்படி சிரிக்க முடிகிறது. அவள் கோமாளியாக மாறினாலும் அவனை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். "ஏன்டா இப்படி சிரிக்கிற.. சொல்லிட்டு சிரியேன்..." "வாத்து மடச்சின்னு கேள்விப்பட்டிருக்கியா...?" "வாத்து மடையன்னு தான் கேள்விப் பட்டிருக்கேன்..." "இந்த சூழ்நிலைக்கு வாத்து மடச்சிதான் சரியா இருக்கும்..." அவள் இமைக்காமல் அவனை பார்த்தாள். "முதல் வாத்து என்ன செய்யுதோ அதையே தான் அடுத்த வாத்தும் செய்யும்... நீ நடந்த உடன் உனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த வாத்தும் உன்னை தொடர்ந்து வந்திருக்கும். நீ ஓடியதும் அதுவும் ஓடியிருக்கும். அதை தொடர்ந்து அனைத்து வாத்துகளும் ஓடியிருக்கும். நீ நின்றதும் வாத்துக் கூட்டமும் நின்றுவிட்டது..." அவன் சிரிப்பினுடே அவளுக்கு விளக்கினான். "வாத்துகிட்ட இவ்வளவு ரகசியம் இருக்கா..." "ரகசியம் வாத்துகிட்ட மட்டும் இல்ல... " அவன் பூடகமாக பேசினான். அதை சூர்யா புரிந்து கொள்வதற்குள் தீரஜ் பிரசாத்தின் கைபேசி அலறியது. எடுத்து பேசியவனின் முகம் இறுகியது. "கிளம்பு.... உன்னை விடுதியில் விட்டுவிடுகிறேன்... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... " என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான். அன்றும் அவனுடைய காதலை அவளிடம் சொல்ல முடியாமல் அவனுக்கு தடை முளைத்துவிட்டது. ______________________________ யமுனை ஆற்றின் கரையில் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலின் வானளாவிய உயரத்திலும், பளபளக்கும் அழகிலும் மயங்கி நின்றாள் சூர்யா... "சூர்யா... சூர்யா..." அவள் தோள் தொட்டு உளுக்கினான் தீரஜ். கடந்த வாரம் சூர்யாவை நந்தவனத்திற்கு அழைத்து சென்ற தீரஜ் தொழிலில் எப்பொழுதும் போல் அன்றும் திடீரென்று ஒரு சிக்கல் முளைக்க அவசரமாக கிளம்பிவிட்டான். அதனால் இன்று ஒரு முழு நாளை அவளுடன் செலவழிக்க எண்ணி அவளை ஆக்ரா அழைத்து வந்திருந்தான். "ம்ம்ம்... என்னடா..." "என்ன...? அப்படியே நின்னுட்ட? வா..." என்று அவளை அழைத்துக் கொண்டு தாஜ்மகாலின் முன் பக்க பூங்காவில் நுழைந்தான். அந்த பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் தாஜ்மகாலின் பிம்பம் தெரிந்தது. "வாவ்... " அவள் திறந்த வாய் மூட மறந்து பூங்காவில் நின்றபடி தாஜ்மகாலை ரசித்தாள். பின் அந்த அழகிய மாளிகைக்குள் சென்று சுற்றிப் பார்த்தாள். தீரஜ்ஜுடன் சேர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டாள். தாஜ்மகாலை சுற்றி முடித்தவர்கள் ஆக்ராவின் யமுனா நதிக்கரையோரம் சென்றார்கள். மாலை மயங்கும் நேரம் யமுனயாற்றங்கரையிளிருந்து பார்க்கும் போது தூரத்தில் ஓவியம் போல் தெரியும் தாஜ்மகாலில் ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை சூர்யா உணர்ந்தாள். அவளை அறியாமல் அவள் கண்களில் நீர் கோர்த்தது. பார்வையை அகற்ற முடியாமல் சிலை போல் நின்றாள். அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம்... சூர்யா அந்த அழகிய காட்சியை ரசித்தபடி நிற்க தீரஜ் சூர்யாவை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தான். மாலை மயங்கும் நேரத்தில் சாரல் மழை துளி மனதையும் உடலையும் குளிர்விக்க, தீரஜ் பிரசாத் "சூர்யா..." என்றான் கிசுகிசுப்பாக. தாஜ்மகாலின் அழகில் மயங்கி நின்றவள் சட்டென தீரஜ்ஜை திரும்பிப் பார்த்தாள். அவனுடைய குரலிலும் முகத்திலும் இருந்த மாற்றத்தை அவள் கண்டு கொண்டாள்... எதுவும் பேசாமல் அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்பது போல் அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தீரஜ் பிரசாத்தின் விழிகளில் கூர்மை கூடியது. அவன் அவளுடைய கண்களை கூர்ந்து நோக்கி "ஐ ஆம் இன் லவ் வித் யு சூர்யா.... ஐ லைக் டு மேரி யு... " என்றான். அவனுடைய குரல் குழைந்தது அவளை என்னவோ செய்தது. அவள் தடுமாறிப் போனாள். "எ... என்ன...!?" அவள் தன் காதுகளை நம்பமுடியாமல் சிறு தடுமாற்றத்துடன் கேட்டாள். "ஐ லவ் யு சூர்யா..." அவன் மீண்டும் தெளிவாக சொன்னான். "எ... என்ன திடீர்ன்னு...?" அவள் திக்கி திணறினாள். "உனக்கு என்னை பிடிக்கலையா...?" "கொஞ்சம் பிடிச்சிருக்...கு... ஆனா..." அவள் இழுத்தாள் "என்ன ஆனா...?"

"ஆனா... என்னோட குறிக்கோள் வேறயாச்சே..." அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். அவளுடைய முக பாவம் அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. லேசாக சிரித்துக் கொண்டே, "என்னடி உன்னோட குறிக்கோள்...?" என்றான். "ஒரு மாவீரனை தான் கல்யாணம் செய்யனும்கிறது தான்..." "என்னை பார்த்தா வீரனா தெரியலையா...?" அவன் அவளை காதல் வழியும் பார்வை பார்த்தபடி கேட்டான். "ஹா... ஹா... வீரனா...? நீயா...? சும்மா ஜோக் அடிக்காதடா..." அவள் சுதாரித்து சகஜமாகிவிட்டாள் "சரி... ஜோக் அடிக்கல... வீரன்னா... என்ன மாதிரி வீரத்தை நீ எதிர்பார்க்குற...? உங்க அப்பா போலீஸ் வேலை செய்வதால் அவரமாதிரியே லத்திய வச்சுகிட்டு நாலு பேர போட்டு தாக்குற போலீஸ்காரனை தான் கல்யாணம் செய்யணும்ன்னு ஏதாவது முடிவு செஞ்சு வச்சிருக்கியா...?" "ஐயையோ... எங்க அப்பா மாதிரி ஒரு போலீசா... அதல்லாம் இல்ல... கிருஷ் மாதிரி ஒரு தொடைநடுங்கிய நீ பார்த்திருக்கவே முடியாது... அவரெல்லாம் என்னோட ட்ரீம் பாய் முன்னாடி நிக்க கூட முடியாது..." அவள் பேசுவதை கேட்ட தீரஜ்க்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை... "ஏன்டி... உன்னோட ட்ரீம் பாய் எப்படி தான் இருப்பன் அதையாவது சொல்லி தொலை..." அவளுடைய கனவு நாயகனை மனக்கண்ணில் கொண்டுவர முயன்று கண் மூடி நின்ற சூர்யா குழப்பமானாள். "என்னடா... என் கண்ணு முன்னால நீ நின்னுகிட்டு ட்ரீம் பாய் எப்படி இருப்பான்னு கேட்டா நான் என்ன சொல்றது... கண்ண மூடி பார்த்தா உன்னோட மூஞ்சி தான் தெரியுது..." சூர்யாவின் பேச்சில் தீரஜ் மனம் குளிர்ந்தான்... "ஆனா நீயெல்லாம் என்னோட ட்ரீம் பாய் இல்ல தெரிஞ்சுக்கோ.... " 'போடி லூசுகுட்டி.. உன்னோட மனசு உனக்கே தெரியல... அதை தெருஞ்சுக்க நீ இன்னும் கொஞ்சம் வளரனும்...' அவன் மானசீகமாக அவளை கொஞ்சினான். "சரி... என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு விருப்பமா... இல்லையா...?" அவன் கண்களில் சிரிப்புடன் கேட்டான். "உன்னை எனக்கு பிடிக்குது. ஆனா கல்யாணம் பண்ணிக்க பிடிக்குதான்னு தெரியலையே..." அவள் குழப்பமாக சொன்னாள். "சரி... உனக்கு எப்போ உன்னோட மனசு தெளிவாகுதோ அப்போ எனக்கு சொல்லு போதும். அதுவரை நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன்." என்று உத்திரவாதம் கொடுத்தான். கொடுத்த வாக்கை காப்பாற்ற எண்ணி தீரஜ் சூர்யாவிடமிருந்து முழுவதும் விலகியிருந்தான். அவளை சந்திப்பதையும் கைபேசியில் பேசுவதையும் முழுவதுமாக தவிர்த்துவிட்டான். அவள் நினைவுகள் அவனை தொல்லை செய்யும் போது அவளுக்கு தெரியாமல் தூரத்திலிருந்து அவளை பார்ப்பன். அவளுடன் பேச தோன்றும் போது தன்னுடைய கைபேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவளுடைய குரலை கேட்டுக்கொள்வான். ஒரு வாரம் கடந்துவிட்டது... சூர்யாவிற்கு தீரஜ் பிரசாத்தின் விலகல், அவன் எந்த அளவு அவளுக்குள் கலந்திருக்கிறான் என்பதை காட்டியது. சூர்யாவின் அனைத்து செயல்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் தீரஜ் இருப்பான். ஒரு நிமிடம் கூட தீரஜ் பிரசாத்தின் நினைவை துறந்து சூர்யாவால் இருக்க முடியவில்லை. அவள் மனம் பரபரக்க ஆரம்பித்தது. இப்போதே தீரஜ்ஜை பார்த்தே தீர வேண்டும் என்று பல சமயங்களில் தோன்றும். அந்த சமயங்களில் அவனை பார்க்காமல் இருப்பது மனதை பிழியும்... சாப்பிட விடாமல் உறங்கவிடாமல் அவன் நினைவு அவளை துரத்தும்... இது என்ன மாதிரியான உணர்வு... அம்மா அப்பாவை பிரிந்து வந்த போது கூட இது போல் இவள் துன்பப்படவில்லையே... ஒரு வேலை இது தான் காதலோ... ஆம் இது காதலே தான்... அவனை தவிர வேறு நினைவே இல்லாத போது அவனை மறந்துவிட்டு வேறு ஒருவனுடன் எப்படி வாழ்வது...? மாவீரனாவது மண்ணாவது... தீரஜ் ஒருவனை தவிர வேறு யாரையுமே அவளுக்கு நினைவில்லை... அவளுக்கு புரிந்துவிட்டது. தீரஜ் இல்லாமல் அவளுக்கு மகிழ்ச்சி என்பது இல்லை. அவனுடன் வாழாத வாழ்க்கை அவளுக்கு உப்பு சப்பில்லாமல்தான் இருக்கும்.... அது ஒரு வாழ்க்கையே இல்லை..... அவள் ஒரு முடிவெடுத்துவிட்டாள்... தன்னுடைய காதலை தீரஜிடம் ஒத்துக்கொள்ள சூர்யா முடிவு செய்துவிட்டாள். தீரஜ்ஜிடம் பேச நினைத்து அவள் கைபேசியை கையில் எடுத்தபோது, என்றைக்கும் இல்லாத ஒரு புது நடுக்கம் உடலில் பரவியது. உள்ளுக்குள் உருண்ட ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து பேசவிடாமல் தடுப்பது போல் ஒரு உணர்வு... அவள் கைபேசியை அனைத்துவிட்டாள். நாளை நேரில் அவனை பார்க்கும் போது தன் மனதை வெளிப்படுத்தலாம் என்று முடிவு செய்த நேரம் ஒரு புது தொலைபேசி எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவள் தன்னை நினைத்து வியந்தாள். முழு நேரமும் தீரஜ் பிரசாத்தே சூர்யாவின் நினைவை ஆக்கிரமித்து இருந்ததால் அவள் பிரசாத்ஜியை சந்திக்க வேண்டிய தேதியை மறந்துவிட்டாள். பிரசத்ஜியின் PA சுஜித் அவளுக்கு கைபேசியில் அழைத்து பிரசாத்ஜியுடன் அவளுடைய சந்திப்பை உறுதி செய்யும் போது தான் நாளை நான்காம் தேதி என்பதை நினைவுகூர்ந்தாள். அன்று காலை எட்டு மணிக்கெல்லாம் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க தயாராகிவிட்டாள். "பிரபா... பதினொரு மணிக்கு நாம பிரசத்ஜியை பார்க்க போறோம்டி... இப்போ இங்கிருந்து கிளம்பினா சரியா இருக்கும்..." புது ஆடை உடுத்தி, பொருத்தமான அணிமணிகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு தயாராகிவிட்ட பிரபா "எனக்கு கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு சூர்யா... நா வரல... நீ மட்டும் போயிட்டு வாயேன்..." என்றாள். "மயக்கம் வந்து நீ கீழ விழுந்தாலும் பரவால்ல... இன்னிக்கு நீ என்னோட வந்து தான் ஆகணும்." "ஒரு முடிவோட தான் இருக்க... ஏன்டி உனக்கு பயமே இருக்காதா....? ஊரே பார்த்து நடுங்குற ஒருத்தர பார்க்க அப்பாய்ன்மென்ட் வாங்கிவச்சு சந்திக்க போறியே...! வேலியில போற ஓனான எடுத்து வேட்டியில விட்டுகிட்ட மாதிரி இருக்கு நீ செய்யிறது..." "அடிபாவி... முதல்ல கேட்டப்ப பிரசாத்ஜியை சந்திக்க ஆசையா இருக்குன்னு தானே சொன்ன...? இப்ப என்னடி வந்தது உனக்கு...?" "அது அப்போ..." "அப்போ... இப்போ...?" "பயமாருக்குடி..." "மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா வாசல் வரைக்கும் வந்துட்டு... இப்ப என்னடி பயம்...? மரியாதையா நடையகட்டு..." என்று மிரட்டி சூர்யா பிரபாவை பிரசாத்ஜியை சந்திக்க அழைத்து சென்றாள். ஆனால் பிரபாவின் உள்ளுணர்வு செய்த எச்சரிக்கை மெய்யாகியது. தோழிகள் இருவரும் அடுத்த ஒரே மணி நேரத்தில் திசைக்கு ஒருவராக சிதறடிக்கப் பட்டார்கள். சூர்யாவும் பிரபாவும் பிரசாத்ஜியின் வீடு இருக்கும் தெருவை நெருங்கிவிட்டார்கள். ஆட்டோ அந்த தெருவிற்குள் அனுமதிக்கப் படவில்லை. அதனால் ஆடோவிளிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். "ஹலோ... மேடம்..." ஒரு குரல் அவர்களை கலைத்தது. தோழிகள் இருவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். "ஹலோ...." என்று சூர்யா அந்த நடுத்தர வயது மனிதனிடம் பதில் பேசினாள். "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே....!" தினமும் தீரஜ் பிரசாத்துடன் சூர்யா பயணம் செய்வதை நன்கு அறிந்திருந்தும் தெரியாதவன் போல் கேட்டான். "நான் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை செய்றேன். அங்கே பார்த்திருபீங்க..." அவள் எதார்த்தமாக பதில் சொன்னாள். "ஹோ... ஆமா...ஆமா... அங்கே தான் பார்த்திருக்கேன். என்ன இந்த பக்கம் வந்திருக்கீங்க?" கல்யாண் ஆர்வமாக சூர்யாவிடம் பேச்சுக் கொடுத்தான். "பிரசாத்ஜியை பார்க்க வந்திருக்கோம். 11 மணிக்கு அப்பாய்ன்மென்ட்..." "அப்பாய்ன்மென்ட்....!" கல்யாண் சூர்யாவை ஆச்சர்யமாக பார்த்தான். 'தினமும் பிரசாத் பயலோடு நீ அலுவலகத்திற்கு வருவதும்.... போவதும்.... ஊர் சிரிக்குது. இப்ப என்ன புதுசா கதை விடுற...?' அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் மண்டையை குடைந்தன. "வாங்க ஒரு காஃபி சாப்பிட்டுவிட்டு போகலாம். 11 மணிக்கு தானே அப்பாய்ன்மென்ட்..." "சரி வாங்க..." என்று கல்யானுடன் காஃபி அருந்த சூர்யா சம்மதித்து விட பிரபா தயங்கினாள். "பயப்படாத பிரபா... நம்ம ஆபீஸ்ல வேலை செய்றவர் தானே...! என்ன சார்... நீங்களும் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல தானே வேலை செய்றீங்க...?" சூர்யா அவளாக முடிவு செய்து கொண்டு பேசினாள். "ஆ... ஆமாம்..." அவன் தயக்கத்துடன் ஒத்துக் கொண்டான். "நீங்க இதுக்கு முன்னாடி பிரசாத்ஜியை பார்த்திருகீங்களா...?" அவன் காஃபியை சுவைத்தபடி சூர்யாவிடம் பேச்சுக் கொடுத்தான். "இல்ல சார்... இன்னிக்கு தான் முதல் முறை பார்க்கப் போறேன்... கொஞ்சம் படபடப்பா இருக்கு... அதான் ஒரு காஃபி சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்து இங்கு வர சம்மதித்தேன்." "ஹோ... சரிம்மா... பிரசாத்ஜி கெட்டவங்களுக்கு ரொம்ப மோசமானவர். ஆனா நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவர்..." அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே தீரஜ்பிரசாத்தின் ஆள் ஒருவன் சூர்யா கல்யானுடன் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான். அதை பார்த்த கல்யாண் லேசாக தன்னை மறைத்துக் கொள்ள முயன்றான். தீரஜ்பிரசாத்தின் ஆள் அந்த இடத்திலிருந்து அகன்றதும் மீண்டும் சகஜநிலைக்கு வந்த கல்யாண், கட்டை விரலை உயர்த்திக் காட்டி சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அவளை பிரசாத்ஜியை சந்திக்க வழியனுப்பி வைத்தான். தீரஜ் பிரசாத்தின் ஆள் சூர்யாவை கவனித்துக் கொண்டே தான் இருந்தான். பிரபாவின் வெளிரியமுகமும், கல்யாண் தீரஜ்பிரசாதத்தினால் நசுக்கப்பட்ட நச்சு பூச்சி என்பதும், சூர்யாவின் மேல் அவனுக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்திவிட்டது. அவன் இதற்கு முன் சூர்யாவை தீரஜ் பிரசாத்துடன் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது... அதன் பிறகு சூர்யா தீரஜ் பிரசாத்தின் வீட்டை நெருங்க அவளுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் முளைத்தன. "யார் நீங்க....?" தீரஜ் பிரசாத்தின் வீட்டு நுழைவாயில் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே சூர்யா விசாரிக்கப்பட்டாள். "என் பேர் சூர்யா... இது என்னோட தோழி பிரபா... நாங்க பிரசாத்ஜியை பார்க்க வந்திருக்கோம்." "என்ன விஷயமா...?" "விஷயம் எதுவும் இல்ல... பார்க்கணும்..." "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோட காஃபி ஷாப்ல பேசிகிட்டு இருந்தீங்க?" "அது கிரிஷ்ணா கெமிக்கல்ஸ்ல எங்களோட வேலை பார்ப்பவர்...." சூர்யா தனக்கு தெரிந்த விபரங்களை சொன்னாலும், அவளுடைய பதில்கள், கேள்வி கேட்பவனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. சூர்யா எந்த காரணமும் இல்லாமல் தீரஜ் பிரசாத்தை சந்திக்க வந்திருக்கிறாள்.

அவளுடன் இருக்கும் பெண்ணின் பார்வையும் முகமும் ஒருவித மிரட்சியுடன் இருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன் அவள் பேசிக்கொண்டிருந்த ஆள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல் வேலை செய்பவன் அல்ல. அவன் தீரஜ் பிரசாத்தை பகையாளியாக நினைப்பவன். இவை அனைத்தும் சூர்யாவின் மீதான சந்தேகத்தை வலு படுத்த, அவன் அவளை உள்ளே விட மறுத்தான். "நீங்க உள்ளே போக முடியாது. கிளம்புங்க.... கிளம்புங்க.... " அவன் அதிகாரமாக சொன்னான். "நாங்க பிரசாத்ஜியை பார்க்க முன் அனுமதி வாங்கியிருக்கோம். அவரை பார்க்காமல் போக முடியாது." சூர்யா எப்பொழுதும் போல் தன் குரலை உயத்த பிரபா நடுங்கிவிட்டாள். "ஏய்... வந்துடுடி போயிடலாம்..." அவள் தன் தோழியின் கையை பிடித்து இழுத்தாள். சூர்யா பிரபாவிடமிருந்து கையை உருவ முயன்ற நேரம் பிரபா சூர்யாவை விட்டுவிட, அவள் தடுமாறி அங்கு அவர்களை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தவன் மீது விழுந்துவிட்டாள். சூர்யா அந்த முரடன் மீது விழுந்ததும் பிரபா பயத்தில் கத்த ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய 'கீச்' குரல் முரடனை எரிச்சல் படுத்தியதோடு அவர்கள் மீதான சந்தேகம் அவனுக்கு கடுங்கோபத்தை மூட்டியது. கோபத்தில் நிதானம் இழந்தவன் தன் முழு பலத்தையும் பிரயோகித்து சூர்யாவை தன்னிடமிருந்து விளக்கி கீழே தள்ளிவிட்டு பிரபாவை அறைந்துவிட்டான். கீழே விழுந்த சூர்யா சுதாரித்து எழுந்துவிட்டாள். ஆனால் அவன் அடியில் நிலைதடுமாறிய பிரபா அங்கு கிடந்த கருங்கல்லின் மீது விழுந்தாள். விழுந்தவள் எழவே இல்லை... "ஆ... ஐயோ... பிரபா... பிரபா..." சூர்யா பிரபாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள். பிரபாவிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அங்கு நடந்த கலவரத்தை பார்த்துவிட்டு பாதுகாப்புக்காக அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த தீரஜ் பிரசாத்தின் ஆட்கள் இன்னும் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள். "என்ன ஆச்சு... என்ன சத்தம் இங்க...?" ஏற்கனவே சூர்யாவையும் பிரபாவையும் மிரட்டியவனை விட அதிக அதிகாரம் கொண்ட பிரணவ் அதட்டலாக கேட்டான். "ஜி... இந்த ரெண்டு பொண்ணுங்களும் கல்யாண் அனுப்பின ஆளுங்க... இங்க வந்து கலாட்டா பண்ணுதுங்க..." அவன் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க அவன் சூர்யாவின் மீதும் பிரபாவின் மீதும் பழியை போட்டான். "உனக்கு எப்படி தெரியும்...?" "கல்யாண்கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிகிட்டு இருந்ததை நானே பார்த்தேன். அதனால தான் விசாரிச்சுகிட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த பொண்ணு என்னை கீழ தள்ளிட்டு உள்ள நுழைய பார்த்துச்சு...." என்று சூர்யாவை காட்டி சொன்னவன் "அதனால தான் நானும் கை நீட்டுற மாதிரி ஆயிடிச்சு..." என்று தன் பக்க ஞாயத்தை சொல்லி முடித்தான். சூர்யா ஓரளவு இந்தி கற்றுக் கொண்டுவிட்டாலும் அவன் பேசிய கொச்சை இந்தியை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அவள் மறுத்து எதுவும் பேசாமல் பிரபாவை கவனித்துக் கொண்டிருந்தாள். தன் சகா சொன்ன விஷயங்களை பரி பூரணமாக நம்பிவிட்ட பிரணவ் "இந்த பெண்ணை நம்ம இடத்துல அடச்சு வைங்க..." என்று சூர்யாவை காட்டி சொன்னவன், பிரபாவை சுட்டிக்காட்டி "இவளை மருத்துவமனைக்கு கொண்டு போ..." என்று உத்தரவிட்டான். அங்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே சூர்யா கைகள் பின்னால் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக ஒரு குவாலிஸ் காரில் ஏற்றப்பட்டாள். தீரஜ் பிரசாத் ஒரு பெண்ணுடன் பழகிக் கொண்டிருப்பது, அவனுக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், அவன் எந்த பெண்ணுடன் பழகிக் கொண்டிருக்கிறான் என்பது அநேகமானவர்களுக்கு தெரியாது. அதனால் தான் இன்று சூர்யா தீரஜ் பிரசாத்தின் ஆட்களாலேயே கடத்தப்பட்டுவிட்டாள். காலை எட்டு மணியிலிருந்தே சூர்யாவை சந்திக்க தீரஜ் பிரசாத் தயாராக இருந்தான். அவனுக்குள் 'தன்னால் தீரஜாகவே சூர்யாவின் மனதை வெல்ல முடியவில்லையே' என்ற ஏமாற்றம் இருந்தது. அதனால் முகத்தில் கலகலப்பில்லாமல் அவனுடைய அறையிலேயே அடைந்து கிடந்தான். 'நம்மை பார்த்ததும் சூர்யா என்ன செய்வா...? ரொம்ப சந்தோசப்படுவாளா....? இல்ல இத்தனை நாள் நம்மை பற்றி சொல்லாததற்காக கோபப்படுவாளா...? இல்லை வருத்தப் படுவாளா...? எப்படியோ... அவள் எதிர்பார்த்தபடி ஒரு காதலன் அவளுக்கு கிடைக்க போகிறான். ஆனால் எனக்கு தான், என்னை எனக்காகவே காதலிக்கும் காதலி கிடைக்கப் போவதில்லை.... என்னுடைய அடையாளங்களை மட்டும் காதலிக்கும் ஒருத்தி தான் என் காதலி...' அவன் பெருமூச்சு விட்டான். "எக்ஸ்கியூஸ் மீ ஜி..." சுஜித் தீரஜ் பிரசாதத்தின் அறைக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தான். "உள்ள வா..." தீரஜ் அனுமதி கொடுத்தான். "ஜி... ஒன்பது மணியாச்சு... இது நீங்க கிருஷ்ணா கெமிக்கல்ஸ்க்கு புறப்படற நேரம்..." "இன்னிக்கு தேவை இல்ல... சூர்யா வந்தாச்சா...?" "இல்ல சார்... பதினொரு மணிக்கு தான் அவங்களை வர சொல்லியிருகீங்க. " அவன் தயக்கத்துடன் நின்றான். "ஓகே... வேற என்ன...?" "கல்யாண் ரெண்டு பெண்களை அனுப்பி ஏதோ பிரச்சனை செய்ய முயற்சி செஞ்சிருக்கான். ஒரு பெண்ணை நம்ம ஆள் தாக்கிவிட்டான். அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கோம். இன்னொரு பெண்ணை பேப்பர் மில்லில் அடச்சு வச்சிருக்கோம்." "நல்லா விசாரிச்சாச்சா...?" "விசாரிச்சாச்சு ஜி... நமக்கு தகவல் சொன்னது பிரணவ்..." "சரி... சூர்யாவை பார்த்ததுக்கு பிறகு நான் பேப்பர் மில்லுக்கு வர்றேன்னு சொல்லிடு. அதுவரை யாரும் அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்..." "ஓகே ஜி..." அவன் மரியாதையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான். தீரஜ்பிரசாத் சூர்யாவின் வருகைகாக பதினொருமணிவரை காத்திருந்தான். அவள் வரவில்லை. சுஜித்தை அழைத்துக் கேட்டான். "சூர்யா வந்தாச்சா?" "இல்லை ஜி..." என்று பதில் கிடைத்தது. மேலும் அரை மணிநேரம் காத்திருந்தான். அவள் வரவில்லை. அதற்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியில்லை. சூர்யாவின் கைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றான். அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் சொன்னது. தீரஜ்பிரசாத் குழம்பினான். 'என்ன இவ... பிரசாத்ஜின்னு சொன்னா தலை கீழ நடப்பா... இப்போ அவரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் வராமல் இருக்காளே...!' மீண்டும் தீரஜ் சுஜித்தை அழைத்து விசாரித்தான். "சூர்யா இங்க வரவே இல்லையா....? " "நிச்சயமா இல்லை ஜி....." "ஹாஸ்ட்டலிளிருந்து புறப்பட்டுவிட்டாளா என்று விசாரிக்க சொல்...." "ஓகே ஜி..." "நில்லு... சூர்யாவை ஏற்கனவே பார்த்திருபவனை அனுப்பி நேரில் சென்று விசாரிக்க சொல்." "ஓகே ஜி..." அவன் அவசரமாக அந்த இடத்திலிருந்து அகன்றான். சுஜித், சூர்யா தங்கியிருக்கும் மகளிர் விடுதிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு தொடர்பு கொண்டு சூர்யாவை பற்றி விசாரிக்க சொன்னான். அடுத்த பத்து நிமிடத்தில் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க தன் தோழி பிரபாவுடன் காலை எட்டு மணிக்கே புறப்பட்டுவிட்டதாக செய்தி கிடைத்தது. "என்னடா...? சூர்யாவுக்கு என்ன ஆச்சு? அவ ஏன் இன்னும் இங்க வந்து சேரல?" தீரஜ் ஒருவித படபடப்புடன் கேட்டான். "ஒருவேள அந்த கல்யாண் ஏதாவது செஞ்சு அவங்களை இங்க வரவிடாமல் செய்திருப்பானோ...! அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் நம்மகிட்ட மாட்டியிருக்காளுங்க... அவளுங்களை விசாரிச்சா விஷயம் தெரியும் ஜி...." யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் தீரஜ்பிரசாத்தின் மூளையும் வேறுவிதமாக யோசிக்க மறுத்தது. அவனால் அவன் ஆட்களே சூர்யாவை கடத்தியிருக்க முடியும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. அதனால் சுஜித் சொன்னது தான் உண்மை என்று முழுமையாக நம்பி அந்த இரண்டு பெண்களை சந்திக்க முடிவு செய்தான். கார் ஓட்டுனரிடம் காரை எடுக்க சொன்னவன் " மருத்துவமனைக்கு போ..." என்றான். அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையையை அடைந்த தீரஜ் பிரபா அனுமதிக்கப் பட்டிருந்த அறையை நோக்கி விரைந்தான். அவள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அதிக இரத்தம் வீனாகியிருந்ததால் அவள் சுயநினைவில்லாமல் இருந்தாள். மருத்துவர்களிடம் விசாரித்ததற்கு "இருபத்தி நான்கு மணிநேரம் கழித்த பிறகுதான் உள்ள நிலமையையை சொல்ல முடியம் " என்று சொல்லிவிட்டார்கள். பிரபாவை அவள் அனுமதிக்கப் பட்டிருக்கும் அறையில் சென்று தீரஜ் பார்த்தான். அவளுடைய முகம் அவனுக்கு பரிச்சயமானதாக இல்லை. அவளுடைய முகத்தை சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தான். அந்த முகத்தோடு எந்த கள்ளத்தனமும் பொருந்தும் என்று அவனுக்கு தோன்றவில்லை. 'எங்கேயோ தப்பு நடந்திருக்கு...' என்று நினைத்தவன் அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் பேப்பர் மில் நோக்கி விரைந்தான். கைகள் பின்னால் கட்டப்பட்டு, நாக்கை அசைக்க முடியாதபடி வாயில் ஒரு கட்டுடன் குவாலிஸ் காரின் பின் பகுதியில் அலட்சியமாக தள்ளப்பட்டிருந்தாள் சூர்யா. கார் ஏதோ காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மேடுபள்ளங்களில் கார் வேகமாக செல்லும் போது முன்னும் பின்னும் மோதி இடித்துக் கொண்டு வலியில் முனகினாள். "சுப்... திருட்டு நாயே... வாயை மூடுடி..." நாராசமான குரலில் அதட்டினான் ஒரு தடியன். அந்த குரல் குலையை நடுங்கவைக்க, மறு முறை காரில் இடித்துக் கொண்ட போது பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள் சூர்யா. கார் ஒரு மதில் சுவருக்குள் சென்றது. சுமார் பத்து அடி உயரம் கொண்ட அந்த மதில் சுவர் ஆளை மிரட்டியது. அந்த மதில் சுவருக்குள் ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அதுதான் பழைய (பயன்பாட்டில் இல்லாத ) பேப்பர் மில். அந்த கட்டிடத்தை சுற்றி மாமரங்களும் தென்னை மரங்களும் தோப்பாக வளர்க்கப்பட்டிருந்தன. கார் மதில் சுவருக்குள் நுழையும் போதே சூர்யா அதுவரை கண்டிராத கொடூரமான ஒரு கட்சியை கண்டு ஆடி போய்விட்டாள். ஆடைகள் முழுவதும் களையப்பட்ட, உடலில் ஏதோ திரவம் தடவப்பட்ட, ஒரு மனிதன் மாமர கிளையில் தலை கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தான். அவனுக்கு கீழ் சவுக்கு கட்டைகள் 'தக தக'வென பற்றி எரிந்து கொண்டிருந்தன. அவன் உடம்பில் தடவப்பட்டிருந்த திரவம் கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வெப்பத்தை கிரகித்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் அந்த மனிதன் வளைந்து நெளிந்து புழுவாக துடித்துக் கொண்டிருந்தான். அவன் எழுப்பிய மரண ஓலம் சூர்யாவை அதிர வைத்தது. ஏற்கனவே பயத்தில் இருந்த சூர்யா இப்பொழுது கண்ட காட்சியில் உறைந்துவிட்டாள். நிறுத்தப்பட்டுவிட்ட காரிலிருந்து சூர்யா இறங்காமல் மாமரத்தடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சர்புதீன் (அவளை இங்கு கொண்டு வந்த அந்த தடியன்) "ஏய்... எறங்கு... " என அதட்டினான். அவனுடைய அதட்டலில் உடல் நடுங்கிய சூர்யா, அவசரமாக கீழே இறங்க முயன்று தடுமாறி காரிலிருந்து கீழே விழுந்தாள். அவள் சுதாரித்து எழுந்திருக்கும் முன் அவள் கையை பிடித்து முரட்டுத்தனமாக இழுத்து தூக்கி நிறத்தினான் அந்த தடியன்.. சூர்யாவிற்கு வலியில் கண்கள் கலங்கின. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்க கூட முடியவில்லை. சூர்யாவை தூக்கி நிறுத்தியவன் பிடித்த கையை விடாமல், அவளை இழுத்தபடி வேகமாக அங்கு இருந்த அந்த ராட்சச கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான். சூர்யாவின் கைகள் பின்னால் கட்டப் பட்டிருந்ததால் அவள் கிட்டத்தட்ட பின்னால் திரும்பியபடி ஓடினாள். ஒரு மிருகத்தை கூட இந்த அளவு கீழ் தரமாக நடத்தி சூர்யா கண்டதில்லை. இன்று அவளையே இப்படி ஒருவன் நடத்துகிறான். அவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது. அவள் ஒரு அறையில் தள்ளப்பட்டாள். அந்த அறையில் தேவையில்லாத பழைய பொருட்கள் நிரம்பியிருந்தன. அந்த குப்பையோடு ஒரு குப்பையாக சூர்யா தள்ளப்பட்டாள். 'பிரபாவுக்கு என்ன ஆச்சு...? நம்மை ஏன் இங்கு கொண்டுவந்து அடைத்து வைத்தான் இந்த தடியன்.... என்ன நடந்தது...?' சூர்யாவிற்கு குழப்பமாக இருந்தது. பிரசத்ஜியை சந்திக்க வந்தது மட்டும் தான் அவளுக்கு புரிந்தது. அதன் பிறகு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அவளுக்கு புதிராகத் தான் இருக்கிறது. சூர்யா எதையோ யோசிக்க முயன்று கொண்டிருக்கும் போது 'தட்... தட்..' என்ற சத்தத்துடன் கூடிய முனகல் சத்தம் அவள் சிந்தனையை கலைத்தது. மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தாள். பத்தடி தூரத்தில் ஒருவனை நான்கு பேர் சேர்ந்து மரக்கட்டையாலும் இரும்பு சங்கிலியாலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் சத்தம் போடக் கூட திராணியில்லாமல் ரத்த வெள்ளத்தில் தரையில் ஒரு எழும்பில்லாத ஜந்து போல் ஊர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய இரத்ததோடு சேர்ந்து தசை துகள்களும் சிதறின... அந்த கொடூரமான காட்சியை சூர்யாவால் பார்க்க முடியவில்லை. கண்களை மூடிகொண்டு அறையின் மறு கோடிக்கு ஓடியவள் தரையில் தடுமாறி விழுந்து கதறி அழுதாள். அவளுடைய அந்த கண்ணீர் அவளுக்காக அல்ல. அவள் கண்ட இரண்டு காட்சிகளின் கணம் தாங்காமல், மனம் வெடித்து கண்ணீர் பெருகியது. அவளுக்கு கண்களை திறக்க கூட தைரியம் அற்று போயிற்று. 'எப்படி இவர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ள முடிகிறது...! மனிதர்களை ஒரு புழுவை விட கேவலமாக நசுக்க இவர்களால் எப்படி முடிகிறது...! மனிதத்துவமே இல்லாத மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்களே...! ' என்ற எண்ணம் தோன்றும் போதே, தன்னை இங்கு அடைத்து வைத்திருப்பது பிரச்சத்ஜியின் ஆட்கள் என்பதும் அவர்கள் தான் மனிதத்துவம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதும் சூர்யாவின் மனதில் பட்டது. 'தான் என்ன தவறு செய்துவிட்டோம்.... அல்லது வெளியே துடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் தான் என்ன தவறு செய்திருக்க முடியும்...! இல்லை... இல்லை... இவ்வளவு மோசமான தண்டனையை அனுபவிக்கும் அளவு அவர்கள் எந்த தவறும் செய்திருக்க முடியாது... தவறு எல்லாம் ஒரே ஒருவன் மீது தான் இருக்க முடியும்... ' என்ற எண்ணங்கள் அலையலையாக மனதில் ஓட 'பிரசாத்ஜி... மனிதாபிமானமே இல்லாத பிரசாத்ஜி... அரக்கன் பிரசாத்ஜி... ராட்சசன் பிரசாத்ஜி... கொடூரன் பிரசாத்ஜி...' அவள் உள்ளம் புலம்பியது. அந்த நிமிடம் மனதின் மிக ஆழத்திலிருந்து அவள் பிரசாத்ஜி என்பவனை வெறுத்தாள். அவளுடைய கண்கள் மெல்ல திறந்தன.... தூரத்தில் ஒரு உருவம்... அவள் அங்கு சற்றும் எதிர்பாராத உருவம் கண்ணில் பட்டது... அவனுடைய கம்பீர நடையும், அவன் முகத்தில் இருந்த கடுமையும், அருகில் உள்ளவர்களின் பம்மலும் அவன் யாராக இருக்க முடியும் என்பதை ஊகிக்க சூர்யாவிற்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. ஆனால் அந்த ஊகம் உணர்த்திய உண்மை அவளுடைய தலையில் இடியாக இறங்கி அவளை சிலையாக மாற்றியது. தீரஜ் பிரசாத்தின் கார் சத்தமிலாமல் பேப்பர் மில்லுக்குள் நுழைந்தது. அவனுடைய இறுக்கமான முகம் அங்கு இருந்த அவனுடைய ஆட்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. காரிலிருந்து இறங்கியவன் வேக நடையுடன் மில்லுக்குள் நுழைந்தபடியே, உடன் நடந்து கொண்டிருந்தவனிடம் "எங்கே அந்த பெண்...? பிரணவ் இங்கே வந்தானா...? நீ ஏதாவது அந்த பெண்ணிடம் விசாரிச்சியா...?" என்று கொத்தாக பல கேள்விகளை கேட்டான். "இல்ல ஜி... பிரணவ் இங்க வரல... நான் மட்டும் தான் அவளை இங்க கொண்டு வந்தேன். நான் எதுவும் விசாரிக்கல ஜி... இப்போ பின் பக்கம் கடைசி அறைல தான் இருக்கா..." என்று பதில் சொன்னான் அவனுடன் நடந்து கொண்டிருந்த சர்புதீன்.

பின்பக்க அறையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தவனை சூர்யா தரையில் அமர்ந்தபடியே ஜன்னல் வழியாக பார்த்தாள். பார்த்தவளின் விழிகள் நிலை குத்தி நின்றுவிட்டன. சூர்யா அடைக்கப்பட்டிருந்த அறையின் கதவை அசால்டாக திறந்தவன், அங்கு மிரண்ட விழிகளுடன் கைகளிலும் வாயிலும் கட்டுடன் தரையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் முகம் இறுக்கமாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்றாலும் அவன் கண்கள் அதிர்ச்சியை காட்டின. ஒருவேளை பேப்பர் மில்லில் இருப்பது சூர்யாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வந்தவனுக்கு அவனுடைய சந்தேகம் உண்மையாகிவிட்டதில் வலித்தது... அவனுடைய சூர்யாவின் நிலை அவன் உள்ளத்தை கசக்கி பிழிந்தது... கண்களை மூடி அந்த வலியை ஒரு நொடி அனுபவித்தவன் "ஷிட்..." என்று எதிரில் இருந்த அட்டை பெட்டியை உதைத்துவிட்டு வேகமாக அவளிடம் நெருங்கினான். "சூ....ர்.....யா.... நீ...யா...!" காற்றோடு கலந்து ஒலித்த அவன் குரலில் ஜீவன் இல்லை... தீரஜ் அவளிடம் நெருங்குவதை கண்ட சூர்யா மிரண்டு அமர்ந்த நிலையிலேயே பின்னால் நகர்ந்தாள். அவளுடைய அந்த பயம் தீரஜ் இதுவரை கண்டிராதது. இதுவரை அவன் பார்த்த துரு துருப்பான சூர்யா காணாமல் போய், வெளுத்த முகமும் நடுங்கும் மேனியுமாக அவனை கண்டு மிரண்டு விலகும் புது சூர்யாவை பார்த்து திகைத்த தீரஜ், அவளை நெருங்காமல் நின்றுவிட்டான். "சூ.... சூர்யா... நான் தீரஜ்... " அவன் கோர்வையாக பேச முடியாமல் திணறினான். பின் மெதுவாக அவளை நோக்கி முன்னேறினான். அவன் அவளை நெருங்குவதை கண்ட சூர்யா, இன்னும் வேகமாக பின்னால் நகர்ந்தாள். அவளுக்கு பின் புறம் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்கள் 'சர சர'வென அவள் மீது சரிந்தன. "ஆ... ஆ..." அவள் அலற முயன்றாள். முடியவில்லை. வாயிலிருந்த கட்டு அவள் அலறலை ஒருவித முனகலாக மாற்றி வெளியிட்டது. மர அலமாரி அவள் மீது சாய்ந்துவிடாமல் அதை ஒரே தாவில் தாங்கி பிடித்தவன் மறு கையால் சூர்யாவை பிடித்தான். அவன் கை அவள் மீது பட்டதும் "ங்... ங்... ங்ங்... " என்ற முனகலுடன் இன்னும் வேகமாக அலறியபடி (முனகியபடி) அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளுடைய இந்த செயலில் பலமாக அடிவாங்கிய தீரஜ்பிரசாத் தன் வலியை வெளிக்காட்டாமல், பிடியை அழுத்தமாக்கி குரலை கடினமாக்கி "சூர்யா... சூர்யா..." என்று அழைத்தான். அவள் அவன் அழைப்பிற்கு செவிமடுக்கும் நிலையில் இல்லை. கண்களை இருக்க மூடியபடி திமிரியவள் "சூ...ர்ர்ர்ர்யா..." என்ற அவனது கடுமையான அதட்டலில் திமிரலை நிறுத்திவிட்டு மெல்ல கண்களை திறந்து அவனை பார்த்தாள். கள்ளமில்லா அந்த கண்களில்தான் எத்தனை கலக்கம்... இந்த கலக்கத்திற்கு காரணமானவன் நான் தானே... தீரஜ் உருகிவிட்டான். அவன் முகத்திலும் மென்மை படர்ந்தது... "என்...னடா...? " தீரஜ் இன்னமும் தன் கையனைப்பிலேயே இருக்கும் சூர்யாவின் கண்களை பார்த்துக் உருக்கமாக கேட்டான். இதுவரை வெளிப்படாத அவன் மனவலி அந்த ஒற்றை வார்த்தையில் வெளிப்பட்டது... "............................" அவளிடமிருந்து பதில் இல்லை... ஆனால் அவன் கண்களை பார்த்தபடியே இருந்த அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. தீரஜ்ஜின் மூளைக்கு அப்போதுதான் அது உரைத்தது. சூர்யாவின் கட்டுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை... அவளை தன்னிடமிருந்து சிறிது விளக்கி நிறுத்தி "ஒன்னும் இல்ல சூர்யா... நான் தான் வந்துட்டேன்ல்ல... இனி உனக்கும் எந்த பிரச்சனையும் வர விட மாட்டேன்... பயப்பட கூடாது..." என்று சொல்லியபடி அவசரமாக அவள் கட்டுகளை அவிழ்த்தெறிந்தான். வாயில் கட்டப்பட்டிருந்த துணி அழுந்தி இரண்டு கன்னங்களிலும் ரத்தம் போல் சிவந்த இரு கோடுகளும், கையில் கட்டப்பட்டிருந்த கயிறு அழுந்தி கன்றி சிவந்திருந்த மணிகட்டும், உடலிலும் முகத்திலும் அக்காங்கே இருந்த சிறு சிராய்ப்புகளும் தீரஜ்ஜின் கண்ணில் படத் தவறவில்லை. "சர்...பு...தீன்..." தீரஜ்பிரசாத்தின் சத்தத்தில் அந்த கட்டிடமே கிடுகிடுத்தது... "ஜி..." அடுத்த நொடி அடித்துபிடித்து கொண்டு உள்ளே ஓடுவந்த சர்புதீன், தன் கன்னத்தில் இறங்கிய இடியை உணர்வதற்கு முன் அங்கே மூலையில் கிடந்த தகர சாமான்களுக்குள் 'தட தட' வென்ற சத்தத்துடன் விழுந்தான். "முட்டாள்... யார் மேல கை வச்சிருக்க தெரியுமா...?" "................" "உன்ன உயிரோட எரிச்சு சாம்பலாக்கிடுவேன்டா.... மடையா...." "................" "யாருடா... சூர்யாவை கல்யான் அனுப்பின பொண்ணுன்னு சொன்னது....?" "............" "எங்கடா போனான் அந்த பிரணவ்...." அவன் இடி இடிப்பது போல் முழங்கிக் கொண்டிருக்க கீழே விழுந்தவனோ பதில் ஏதும் சொல்லாமல் தீரஜ்ஜை பார்த்து மலங்க விழித்தான். அவன் எப்படி பதில் சொல்வான்....! தீரஜ் என்ன கேட்கிறான் என்பது காதில் விழுந்தால் தானே அவன் பதில் சொல்ல... அவன் காதில் விழுவதெல்லாம் "ஞொய்......" என்கிற சத்தம் மட்டும் தான். "என்னடா நான் கேட்டுகிட்டே இருக்கேன்.... நீ என்னடான்னா பச்சபுள்ள மாதிரி முழிக்கிற...." என்று கேட்டவன் அவன் நெஞ்சில் எட்டி உதைந்தான். தீரஜ் ஏனோ கடுங்கோவத்தில் இருக்கிறான் என்பதும் அதற்கு காரணம் இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்ததுதான் என்பதும் சர்புதீன் அறிவுக்கு எட்டிவிட, தீரஜ் இதுவரை என்ன கேட்டான் என்பதை பற்றி கவலைப் படாமல் "ஜி...... நான் எதுவும் பண்ணல ஜி.... பிரணவ் தான் இந்த பெண்ணை இங்கு கொண்டுவர சொன்னார். இந்த பவன்-பயல் தான் இந்த பொண்ணுகிட்ட தகராறு பண்ணினான்...." என்று சொல்லிவிட்டு தன்னை விட்டால் போதும் என்று நினைத்து, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்துகொள்ள அவன் உதட்டசைவை கூர்மையாக பார்த்த படி நின்றான். "அவனுங்க ரெண்டு பேரையும் என்னை வந்து பார்க்க சொல்லு... அவனுங்களோடு நீயும் வா...." என்று தீரஜ் சொல்ல அதை அவன் உதட்டசைவில் ஓரளவு புரிந்து கொண்டவன் 'அடுத்து என்ன நடக்குமோ....' என்ற பீதியுடன் அந்த இடத்தை காளிசெய்தான். சர்புதீன் வெளியே சென்று மறையும் வரை அவனுடைய முதுகை வெறித்தவன் பின் சூர்யாவின் பக்கம் திரும்பினான். கட்டுகள் அவிழ்கப்பட்டதும் தீரஜ்ஜின் பிடியில் மீண்டும் சிக்கும் முன், அந்த அறையின் மறு கோடிக்கு ஓடி சுவற்றுடன் ஒட்டிக் கொண்டு நின்றாள் சூர்யா. இப்போதும் அவள் அதே மிரண்ட விழிகளுடன் சுவற்றில் ஒட்டிக் கொண்டுதான் நின்றாள். தீரஜ் பிரசாத்தின் நெற்றி சுருங்கியது. அவன் குழப்பமாக கேட்டான்... "என்கிட்டே உனக்கு என்னடி பயம்...? " "................." அவள் பேசவில்லை. வறண்டிருந்த கண்கள் மீண்டும் கலங்கின. "சூர்யா.... பசங்க உன் மேல தெரியாமல் கை வச்சிட்டானுங்க... இனி இது மாதிரி நடக்கவே நடக்காது.... என்னை நம்பு...." இப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. ஆனாலும் அவள் வாய் திறக்கவில்லை. "சூர்யா... ஏதாவது பேசு சூர்யா... என்னை திட்டிவிடு அல்லது அடித்துவிடு... இப்படி பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்...?" அவன் குரல் உயர்த்தினான். "....................." "நான் தான் பிரசாத் என்று உன்னிடம் சொல்லவில்லை என்று கோபமா...?" ".............................." "உன் இயல்பு தான் என்னை பற்றி உன்னிடம் சொல்லவிடாமல் தடுத்தது சூர்யா... என்னை தீரஜ்ஜாக மட்டுமே நீ புரிந்து கொண்ட பிறகு எல்லாவற்றையும் சொல்ல நினைத்தேன்..." "................................." "நான் செய்தது தவறுதான்... அதற்காக உன்னிடம் மன்னிப்பு வேண்டுமானால் கேட்டுக்கொள்கிறேன்... என்னை மன்னித்துவிடு..." அவள் பேசவும் இல்லை அவள் கண்ணீரும் நிற்கவில்லை. அவன் முகம் இறுகியது. "அழுகையை நிறுத்துடி முதல்ல... என்ன வேணும் உனக்கு...? எதுக்கு இப்படி அழுது தொலைக்கிற...?" ம்ஹும்... மௌன கண்ணீரை தவிர அவளிடமிருந்து வேறு எந்த பதிலும் வரப்போவதில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்ட தீரஜ் "சரி கிளம்பு..." என்றான். புரியாமல் பார்த்தவளிடம் "பிரபாவை பார்க்க வேண்டாமா..?" என்றான். அவள் கண்கள் லேசாக ஒளிர்ந்தது. அவன் வேகமாக வெளியேற அவனை தொடர்ந்து அவளும் வெளியேறினாள். # # #

கண்ணாடி கதவு வழியாக பிரபாவை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா மெல்ல முனுமுனுத்தாள். "பிரபா... பிரபா... மன்னிச்சிடு பிரபா... என்னை மன்னிச்சிடு பிரபா... என்னால தான்... எல்லாமே என்னால தான்... வா பிரபா... எழுந்து வா..." அவள் முனுமுனுப்பு விம்மலாக மாறியது. கைகளில் முகம் புதைத்து தேம்பி அழுதாள். அவளுடைய அழுகை தீரஜ்பிரசாத்தை கலக்கியது. அவன் குழப்பங்களை சுமந்தபடி, "சரி கிளம்பு... உன்னை ஹாஸ்ட்டல்ல கொண்டுவந்து விடுறேன்.." என்றான். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் மருண்ட விழிகளுடன் "வேண்டாம்... வேண்டாம்.... நா... நா... நான் இங்கேயே... " என்றபடி மீண்டும் தேம்பி அழுதாள். சூர்யாவின் பயத்தை உணர்ந்து அவளுடைய பயத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்த தீரஜ் பிரசாத், பேப்பர் மில்லில் இன்று நடந்த விஷயங்களை சூர்யா பார்த்திருக்க வேண்டும் என்று ஊகித்தான். அதற்கான காரணங்களை அவளிடம் விளக்கி சொல்லி அவளை தெளிவுபடுத்த நினைத்தான். ஆனால் அவன் சொல்வதை புரிந்துகொள்ளும் நிலையில் அவளுடைய இப்போதைய மனநிலை இல்லை என்பதால் கொஞ்சம் விட்டு பிடிக்க எண்ணினான். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் அவளை இங்கே விட்டுவைத்தால் அழுதே மடிந்துவிடுவாள் என்று நினைத்து, வலுக்கட்டாயமாக விடுதியில் கொண்டு சென்று விட்டுவிட்டு, விடுதி பொறுப்பாளரிடம் சூர்யாவை கவனித்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

No comments:

Post a Comment