நிதானமாக மதமதப்பாக புல் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென மிரண்டு போய், 'பே...!!!!' என்று கத்தியவாறு, பேய்பிடித்துக் கொண்டமாதிரி நாலாபுறமும் சிதறி ஓடின. குழப்பத்தில் ஆடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் 'கிணிகிணி' ஓசை, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. ஆடுமேய்ப்பவன் காரணம் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருக்க, ஆட்டுக்கூட்டத்தை அந்தமாதிரி சிதறி ஓட செய்த அந்த சிறுவனும், அந்த சிறுமியும் ஒரே நேரத்தில் வரப்பை தாண்டிக் குதித்தவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். "ஏய்ய்ய்ய்... எடுப்பட்ட பய புள்ளைகளா..!! என்ன பண்றேன் பாரு உங்களை...!!" ஆத்திரத்துடன் பல்லைக் கடித்து கத்திய ஆடு மேய்ப்பவன், சிறுவர்களை வளைத்து பிடிக்க இரண்டு எட்டு எடுத்து வைத்தான். அதற்குள் ஆடுகள் கன்னாபின்னாவென சிதறி தூரமாய் ஓட ஆரம்பிக்க, சிறுவர்களை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு, ஆடுகளை விரட்டிக்கொண்டு ஓடினான். நாக்கை வளைத்து வாய்க்குள் அடக்கி, "கெக்கெக்கெக்கெக்கெக்..." என்று ஒருவித வினோத ஒலியை எழுப்பியவாறு.. கையில் இருந்த கம்பை சுழட்டியவாறு.. வேகமாகவும், அதே நேரம் தூக்குச்சட்டியின் மூடி திறந்துவிடாமல் கவனமாகவும்.. செருப்பில்லா கால்களுடன் ஆடுகளின் பின்னால் ஓடினான். அவனுடைய திட்டையும், ஆடுகளின் பின்னால் அவனுடைய ஓட்டத்தையும்.. சுத்தமாக கண்டு கொள்ளாமல் அந்த சிறுவனும், சிறுமியும் ஒவ்வொரு வரப்பாக தாண்டி தாண்டி குதித்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஐந்தாறு வரப்புகளை அந்த மாதிரி தாண்டிக் குதித்ததுமே, அவர்கள் செல்ல நினைத்த இடம் வந்து சேர்ந்தது.வயல்வெளிகளுக்கு நடுவே ஆறடி உயரத்திற்கு அந்த அகலமான மணல் மேடு..!! அதன் மையத்தில் ஒரு பெரிய கருவேல மரம், அந்த மேடுமுழுக்க நிழல் பரப்பியிருந்தது..!! இரண்டு கைகளையும் ஊன்றி, இருவரும் மெல்ல கவனமாக அந்த மேட்டில் ஏறினார்கள். உச்சியை அடைந்ததும், 'ஹே.. ஹே.. ஹே..' என்று.. அரை நிமிடத்துக்கும் மேலாக இருவரும் மூச்சிரைத்தார்கள். பின்பு தலையை திருப்பி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரே நேரத்தில் இதழ்களை விரித்து அழகாக புன்னகைத்தார்கள். பின்பு அந்தப்புன்னகை.. வெண்பற்கள் வெளியே தெரியும் அளவிற்கு பெரும் சிரிப்பாய் மாறியது. சிறுவன்தான் மூச்சிரைப்புடனே முதலில் பேசினான். "நீ கூ..கூட ஓடி வர்றப்போ.. உன் கால் கொ..கொலுசு.. ஜல்ஜல்னு.. கே..கேக்க நல்லாருக்கு திவ்யா.." "என் கொ..கொலுசை உனக்கு பிடிச்சிருக்கா அசோக்..?" கேட்டுக்கொண்டே திவ்யா தன் பாவாடையை மெல்ல மேலே உயர்த்தி, காலில் அணிந்திருந்த கொலுசை அசோக்கிற்கு தெளிவாக காட்டினாள். அசோக்கும் திவ்யாவின் வெளுத்த கால்களை கவ்வியிருந்த அந்த வெள்ளிக்கொலுசுகளை ஆசையாக பார்த்தான். "ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு திவ்யா.. புதுசா..?" "ஆமாம்.. எங்கப்பா நேத்து மதுரை போயிருந்தார்ல..? வாங்கிட்டு வந்தாரு.." "உன் காலுக்கு.. நல்லா.. அழகா இருக்கு திவ்யா.." "நல்லா பளபளன்னு மின்னுதுல..?" "ஆ..ஆமாம்.." இருவரும் கொஞ்ச நேரம் அந்த கொலுசுகளிலேயே பார்வையை பதித்திருந்தார்கள். பின்பு அசோக் மெல்ல கைநீட்டி, அவளது வலது கால் கொலுசை தொட்டான். அப்புறம் மெல்ல கையை கீழிறிக்கி அவளது பிஞ்சு பாதத்தை தடவினான். உடனே திவ்யா உயர்த்தி பிடித்திருந்த பாவாடையை படக்கென்று கீழே நழுவவிட்டாள். தன் முன் மண்டியிட்டிருந்த அசோக்கின் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தாள். அசோக்கும் அவளைப்பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு, அப்புறம் பேச்சை மாற்றும் விதமாக சொன்னான். "ம்ம்.. சரிசரி.. வா.. வந்த வேலையை பார்ப்போம்.. அதை வெளில எடு.." "இரு அசோக்.. எடுக்குறேன்.." திவ்யா கையில் இருந்த பையை பிரித்தாள். உள்ளே கைவிட்டு அந்த நான்கு முட்டைகளை வெளியே எடுத்தாள். சற்றுமுன் அவள் தன்வீட்டில் இருந்து திருடிக்கொண்டு வந்த முட்டைகள். அடைகாத்த கோழியை அடித்து விரட்டிவிட, அதன் அடியில் கிடந்த முட்டைகள். அவைகளை அசோக்கின் கையில் கொடுத்தாள். அதை வாங்கி கீழே வைத்த அசோக், தன்னுடைய பிஞ்சு கைகளால் மண்ணை தோண்டி குழி பறிக்க ஆரம்பித்தான். அவன் செய்வதையே கவனமாய் பார்த்துக்கொண்டிருந்த திவ்யா அப்பாவியாய் கேட்டாள். "நெஜமாவே மரம் வருமா அசோக்..?" "ம்ம்.. வரும் திவ்யா.. பெரிய மரம் வரும்..!!" "முட்டை காய்க்குமா..?" "ம்ம்.. பெருசு பெருசா.. தேங்கா மாதிரி காய்க்கும்..!!" "அவ்ளோ பெருசாவா..? நெஜமாவா சொல்ற..??" "நெஜந்தான் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?" "ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!! நம்ம மரத்துல காய்க்கிற முட்டையை வேற யாருக்கும் குடுக்க கூடாது அசோக்.. நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான்.. சரியா..?" "சரி திவ்யா..!! நாம சாப்டது போக மிச்ச முட்டையை வச்சு.. முத்தலிபு பாய் ஜவுளிக்கடை பக்கத்துல.. நாம ஒரு முட்டைக்கடை ஆரம்பிக்கலாம்.. நெறய சம்பாதிக்கலாம்.." "நெஜமாவா சொல்ற..??" திவ்யா கண்களில் கனவு பளபளக்க கேட்டாள். குழி ஓரளவு பெரிதானதும், அசோக் அந்த நான்கு முட்டைகளையும் உடைத்து உள்ளே ஊற்றினான். மண்ணை தள்ளி மூடினான். இருவரும் எழுந்து நின்றார்கள். மூடப்பட்ட குழியையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்தார்கள். திவ்யா மெல்ல கேட்டாள். "மரம் வளர எத்தனை நாள் ஆகும் அசோக்..?" "ஒரு மாசம் ஆகும்.." "அவ்ளோ பெரிய மரம்.. ஒரு மாசத்துல வளர்ந்திடுமா..?" திவ்யா சற்றே நம்பிக்கை இல்லாமல் கேட்டாள். "வளர்ந்திடும் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?" "ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" இப்போது திவ்யாவின் குரலில் புதிதாக நம்பிக்கை பிறந்திருந்தது. முட்டைகளை புதைத்த இடத்தையே திவ்யா ஆசையும், கனவுமாக பார்த்துக் கொண்டிருக்க, அசோக் மட்டும் சற்றே தூரமாய் பார்வையை வீசியிருந்தான்... அந்த ஆட்டுக் கூட்டம் மீது..!!ஒன்று சேர்ந்து ஒழுங்காய் புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், இப்போது மீண்டும் முன்புபோலவே சிதறி எல்லாத்திசைகளிலும் ஓடின. இந்தமுறை அவைகளை சிதறி ஓடச்செய்தது இன்னுமிருவர். திவ்யாவின் அம்மா பத்மாவும், அசோக்கின் அக்கா சித்ராவும். இருவரும் ஓட்டமும், நடையுமாக அந்த மணல்மேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். பத்மாவின் கையில் ஒரு பிரம்பு. ஆடுகள் கலைந்து ஓடியதற்காக சலித்துக்கொண்ட ஆட்டுக்காரனுக்கு, 'போடா கிறுக்குப்பயலே..' என்று அந்த பிரம்பால் 'சுளீர்...!!' என ஒரு அடி கிடைத்தது. பார்க்கும்போதே பயங்கர கோவத்துடன் வருகிறாள் என்று தெளிவாக தெரிந்தது. அசோக் பதறிப்போய் திரும்பி கத்தினான். "திவ்யா.. திவ்யா.." "ச்சீய்.. பக்கத்துலதான நிக்கிறேன்.. ஏண்டா கத்துற..?" "உன் அம்மா வர்றாங்க திவ்யா.. குச்சி வச்சிருக்காங்க.. ஓடிடு.." திவ்யா அதிர்ந்து போனாள். கையில் பிரம்புடன் கோவமாக வரும் அம்மாவையே திகைப்பாய் பார்த்தாள். சுதாரித்துக்கொண்டு அவள் ஓடுவதற்கு முன்பே அவர்கள் இருவரும் மணல் மேட்டை நெருங்கியிருந்தார்கள். சித்ரா திவ்யாவை நோக்கி கை நீட்டி, பத்மாவிடம் கத்தினாள். "இவதான் அத்தை முட்டையை திருடிட்டு ஓடி வந்தா.." "ஏண்டி.. இவ சொல்றது உண்மையா..? எங்கடி முட்டையை..?" பத்மா தன் மகளை பார்த்து கேட்டாள். "கு..குழி தோண்டி.. முட்டையை உடைச்சு ஊத்தி.. மூடிட்டோம்..!! நாங்க.. மு..முட்டை மரம் வளர்க்க போறோம்.." திவ்யா நடுக்கமான குரலில் சொன்னாள். "அடக் கூறுகெட்ட பய மவளே.. நானே ஒத்தைக்கோழி என்னைக்கு பத்துக்கோழியா மாறும்னு கனவு கண்டுக்குட்டு கெடக்கேன்.. இப்படி இருந்த முட்டையெல்லாம் உடைச்சு மண்ணுல ஊத்திருக்கியே..? என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..? ஏய்.. சித்ரா.. புடிடி அந்த திருட்டுக்கழுதையை.." ஆத்திரத்துடன் அவளுடைய அம்மா கத்த, திவ்யா மிரண்டு போய் ஓட ஆரம்பித்தாள். சித்ரா அவளை வளைத்து பிடித்து கோழிக்குஞ்சு மாதிரி அமுக்கினாள். 'விடுடி.. முண்டக்கண்ணி.. விடுடி..' என்று திவ்யா கிடந்து துடிக்க, சித்ராவோ உடும்புத்தனமாய் அவளை பிடித்திருந்தாள். இழுத்து சென்று அவள் அம்மாவிடம் ஒப்படைத்தாள். "களவாணிச்சிறுக்கி.. வீட்டுல ஒரு பொருளை நம்பி வைக்க முடியுதா..? அதைத்திருடி இதைத்திருடி.. அடக்கோழி முட்டையையும் திருடிட்டு வந்திருக்குறியே..?" "எங்க மரம் வளர்ந்ததும் உன் முட்டையை திருப்பி குடுத்துர்றேன்.." "எதுத்தாடி பேசுற.. எடுபட்ட சிறுக்கி..!! எவ்வளவு கொழுப்பு உனக்கு ..? என்ன பண்ணுறேன் பாரு உன்னை..!! உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போடுறனா இல்லையான்னு பாரு.." பத்மா கையில் வைத்திருந்த பிரம்பால், 'சுளீர்.. சுளீர்..' என, திவ்யாவின் கால்களில் இரண்டு இழுப்பு இழுக்க, 'ஆஆஆ.. !! ஆஆஆ...!!' என திவ்யா அலறி துடிக்க ஆரம்பித்தாள். "வீட்டுக்கு வா.. கரண்டியை காய்ச்சி திருடுற கைல சூடு வைக்கிறேன்.. இனிமே உனக்கு ஜென்மத்துக்கும் திருட்டு நெனைப்பே வரக்கூடாது.." சொன்ன பத்மா, திவ்யாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்ல ஆரம்பித்தாள். திவ்யா அழுது அரற்றிக்கொண்டும், அவளுடன் வரமாட்டேன் என்று அடம்பிடித்து துள்ளி குதித்துக்கொண்டுமே சென்றாள். அவர்கள் கொஞ்ச தூரம் சென்றதும், அசோக் தன் அக்காவை நெருங்கினான். வெறுப்பாக முறைத்தான். "ஏன்டி சொல்லிக்குடுத்த..?" "ம்ம்ம்.. நான் என்ன பண்ண..? அவ அம்மா 'நீதான் திருடினியாடி'ன்னு என்னல்ல கேக்குறா..?" கொஞ்ச நேரம் தன் அக்காவையே முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் திவ்யாவும் அவள் அம்மாவும் சென்ற திசையில் திடுதிடுவென ஓட ஆரம்பித்தான். இழுத்து செல்லப்பட்ட திவ்யா, ஒரு புதர் தடுக்கி கால் இடறி கீழே விழுந்தாள். விழுந்தவளை 'எந்திரிடி சனியனே..' என்று அவள் அம்மா ஒரு கையை பிடித்து கொத்தாக மேலே தூக்கினாள். மீண்டும் தரதரவென அவளை இழுத்து செல்ல ஆரம்பித்தாள். அவர்களுக்கு பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த அசோக், திவ்யா கால் இடறி விழுந்த இடத்தை அடைந்ததும், ப்ரேக் அடித்தமாதிரி அப்படியே நின்றான். மெல்ல குனிந்தான். திவ்யாவுடைய ஒற்றைக்கால் கொலுசு அங்கே கழண்டு விழுந்து கிடந்தது. ஒருகையால் அந்த கொலுசை எடுத்தான். ஓரிரு வினாடிகள் அந்த கொலுசையே பாவமாக பார்த்தான். அப்புறம் கைக்குள் வைத்து அந்த கொலுசை இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தான். திவ்யாவின் வீட்டை அசோக் அடைந்தபோது, அவளது அழுகுரல் மட்டும் பெரிதாக வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. 'வேணாம்மா.. வேணாம்மா..' என்ற திவ்யாவின் பரிதாபமான குரல் அசோக்கின் பிஞ்சு மனதை பிசைந்தது. வீட்டுக்கு முன்பிருந்த திண்ணையில் ஏறினான். உடலை எக்கி மரத்திலான அந்த ஜன்னல் கதவை திறந்தான். மிரட்சியாய் ஒரு பார்வையை உள்ளே வீசினான். முதலில் அவன் பார்வையில் சிக்கியது திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான். ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அவனுடைய வாய் அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவன் கையில்.. சென்ற வாரம் திருவிழாவிற்கு செய்த பணியாரம். வாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை மட்டும் அசையாமல் ஓரிடத்தில் நிலைத்திருந்தது.அவன் பார்வை பதிந்திருந்த இடத்தில் அவன் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள். பத்மாவின் ஒரு கையில் திவ்யா அகப்பட்டிருக்க, அவளது இன்னொரு கையில் அடுப்பில் வைத்து எடுக்கப்பட்டிருந்த கரண்டி. அதை நீட்டி நீட்டி தன் மகளை மிரட்டிக் கொண்டிருந்தாள். "சொல்லுடி.. இனிமே திருட மாட்டேன்னு சொல்லு.." "மாட்டேன்மா.. இனி திருட மாட்டேன்.." "இன்னொரு தடவை நீ திருடுனேன்னு தெரிஞ்சது.. திருடுன கை பொசுங்கி போகும் பொசுங்கி.." சொல்லிக்கொண்டே அவள் அந்த கரண்டியை திவ்யாவின் கைக்கு அருகில் எடுத்து சென்றாள். உடனே திவ்யா பயந்துபோய் 'விலுக்' என்று ஒரு துள்ளு துள்ளினாள். பத்மா அதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திவ்யாவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவளுடைய கை விடுபட்டது. விடுபட்ட வேகத்தில் சுடுபட்ட கரண்டியில் திவ்யாவின் வலது கை உரசியது. அவ்வளவுதான்..!! "ஆஆஆஆஆ...!!!" என்று அலறிக்கொண்டு திவ்யா கீழே விழுந்து துடித்தாள். தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீன் மாதிரி, கை கால்களை உதறிக்கொண்டு துடிதுடித்தாள். பத்மாவின் தாயுள்ளம் படக்கென பதறிப்போனது. கையில் இருந்த கரண்டியை தூர எறிந்து விட்டு, தன் மகளை அள்ளி எடுத்தாள். "ஐயோ... ஐயோ... அடிப் பாவிமவளே.. நான் சும்மா பயமுறத்ததானடி செஞ்சேன்..!! ஏண்டி இந்த ஆட்டம் ஆடுற..? ஆடுகாலி சிறுக்கி..!!" என்று உடனடியாய் ஒரு ஒப்பாரி வைத்தாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த தன் மகனிடம் திரும்பி, "டேய் கார்த்திக்கு.. அந்த அலமாரில மை பாட்டில் இருக்கும்.. எடுத்துட்டு வாடா..!!" என்று கத்தினாள். கார்த்திக் ஊஞ்சலில் இருந்து இறங்கினான். 'இப்போதே செல்லலாமா.. இன்னொரு கடி கடித்துவிட்டு செல்லலாமா..' என்பது போல கையிலிருந்த பணியாரத்தை ஒரு பார்வை பார்த்தான். "வெரசா எடுத்துட்டு வாடா.. வெட்டிப்பய மவனே.." பத்மா ஆத்திரமாய் கத்தவும், கையில் வைத்திருந்த பணியாரத்தை ஊஞ்சலில் வைத்துவிட்டு கார்த்திக் அவசரமாய் உள்ளே ஓடினான். திவ்யா அலறி துடித்துக் கொண்டே இருந்தாள். அசோக்கால் நீண்ட நேரம் அவளுடைய கதறலை கேட்க முடியவில்லை. அவளுடைய துடிப்பை பார்க்க முடியவில்லை. திண்ணையில் இருந்து இறங்கினான். உள்ளம் முழுக்க சோகத்துடன் தன் வீட்டை நோக்கி மெல்ல நடையை போட்டான்.அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு, அசோக், திவ்யா, சித்ரா மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. மூன்றாம் நாள் மாலை.. பெல் அடித்ததும், அசோக் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தான். ஸ்கூல் மெயின்கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். எங்கிருந்தோ ஓடிவந்த அவனுடைய அக்கா சித்ரா அவனுக்கு பின்புறமாக வந்து அவன் தோளை தொட்டாள். அசோக் திரும்பி பார்த்ததும், சற்றே பரிதாபமான குரலில் கேட்டாள். "ஏண்டா தம்பி என்கிட்டே பேசவே மாட்டேன்ற..?" "போடீ.. திவ்யாவை அவ அம்மாகிட்ட நீதான மாட்டிவிட்ட..? உன்னாலதான அவ கைல சூடு வாங்குனா..? உன்கிட்ட பேசமாட்டேன் போ..!! திவ்யா எவ்ளோ பாவம் தெரியுமா..? எப்படி அழுதா தெரியுமா..?" "அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்..? நான் என்ன வேணும்னா செஞ்சேன்..? தெரியாமத்தானடா..!! என்கிட்டே நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா அசோக்கு..!! நான் வேணா அந்தப்புள்ளைட்ட மன்னிப்பு கேட்டுடவா..?" சித்ரா அவ்வாறு பரிதாபமாக கேட்கவும், அசோக் இப்போது சற்றே இறுக்கம் தளர்ந்தான். 'ம்ம்.. சரி..' என்று தன் அக்காவை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். இருவரும் திவ்யாவை தேடி சென்றார்கள். புளியமரத்துக்கு கீழே இருந்த சிமென்ட் பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்த திவ்யா பார்வைக்கு கிடைத்தாள். தூரத்தில் சித்ராவை பார்த்ததுமே வெறுப்புடன் வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள். "என்னை மன்னிச்சுடு திவ்யா.. நான் தெரியாம பண்ணிட்டேன்.." சித்ரா உண்மையான குற்ற உணர்ச்சியுடன் சொல்ல, "உன்கூட பேச எனக்கு புடிக்கல.. போயிடு.." திவ்யா முறைப்பாக சொன்னாள். "நான்தான் மன்னிப்பு கேக்குறேன்ல..?" சித்ரா கெஞ்ச, "நான்தான் போயிடுன்னு சொல்றேன்ல..?" திவ்யா கத்தினாள். "தெரியாம பண்ணிட்டேன் புள்ள.." "சொன்னது காதுல விழுகுலையா..? என்முன்னால நிக்காதடி.. போ.. போயிடுடி..!! முண்டக்கன்னி..!!" திவ்யா அந்த மாதிரி திமிராக சொல்லவும், இப்போது சித்ராவும் எரிச்சலானாள். அவளும் இப்போது குரலை உயர்த்தி கத்தினாள். "என்ன புள்ள.. பாவமேனு பேசலாம்னு வந்தா.. ரொம்பத்தான் கத்துற..? எத்தனை நாள் என் கூட பேசாம இருக்குறேன்னு நானும் பாக்குறேன்.." சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். "பேச மாட்டேண்டி.. உன்கூட பேசவே மாட்டேன்.." திவ்யா சித்ராவின் முதுகை பார்த்து கத்தினாள். "ம்ம்.. பாப்போம் பாப்போம்.." என்றாள் சித்ரா கேலியான குரலில். "போடீ போடீ.. முண்டக்கண்ணி.." "போடீ போடீ.. வெள்ளைப்பன்னி.." அக்கா ஆத்திரத்துடன் கத்திவிட்டு செல்ல.. திவ்யா இன்னொரு பக்கமாக முகத்தை திருப்பி முறைத்துக் கொண்டிருக்க, அசோக் கொஞ்ச நேரம் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தான். அப்புறம் பொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான். சோகமாக முகத்தை வைத்தபடி, தலையை பிடித்துக் கொண்டான். அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனுக்கு அக்காவையும் பிடிக்கும். திவ்யாவையும் பிடிக்கும். இரண்டு பேரும் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டது அவனுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. அதில்லாமல்.. அக்கா மீது இருக்கும் கோபத்தில், திவ்யா எங்கே இனிமேல் அவனுடன் பேசாமலே போய் விடுவாளோ என்ற கவலை வேறு அவனுடைய மனதை ஒருபக்கம் அரித்துக் கொண்டிருந்தது. அவன் அந்தமாதிரி கவலையுடன் அமர்ந்திருக்கையில்தான், திவ்யாவுடைய பட்டுக்கரம் ஒன்று அவன் தோள் மீது படர்ந்தது. வாடிப்போயிருந்த அவனது முகத்தை வாஞ்சையுடன் தொட்டு திருப்பியது. அவ்வளவு நேரம் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை துப்பியது இந்த உதடுகள்தானா என நம்ப முடியாத அளவுக்கு, இப்போது திவ்யாவின் உதடுகள் அன்பில் அமிழ்ந்த வார்த்தைகளை சிந்தின. "என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?" "ஒ..ஒண்ணுல்ல திவ்யா.." அசோக் தடுமாற்றமாய் சொன்னான். "ஏன் ரெண்டு நாளா என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வரலை..?" "நீ என் மேல கோவமா இருப்பியோன்னு நெனச்சேன்.."சேச்சே.. எனக்கு உன் அக்கா மேலதான் கோவம்.. உன் மேல இல்ல.." "நெஜமாவா சொல்ற.. அப்போ.. என்கூட எப்போவும் போல பேசுவியா..?" இப்போது அசோக்கின் குரலில் எக்கச்சக்க உற்சாகம். "ம்ம்.. பேசுவேனே..? எப்போவும் போல பேசுவேன்.. எப்போவும் பேசுவேன்..!! இரு இரு.. உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்குறேன்.." சொன்ன திவ்யா தன் ஸ்கூல் பேகுக்குள் கைவிட்டு ஒரு பாக்சை எடுத்தாள். பாக்சை திறந்து உள்ளே இருந்த அந்த காகித பொட்டலத்தை வெளியே எடுத்தாள். "என்னது இது திவ்யா..?" "பனங்கற்கண்டு.." பொட்டலத்தை பிரித்து அசோக்கிடம் நீட்டினாள். "ஹை.. எனக்கு ரொம்ப புடிக்கும்.." "ம்ம்.. தெரியும்..!! அதான்.. வீட்டுல இருந்து அம்மாவுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடு.." "ம்ம்... இந்தா திவ்யா.. நீயும் கொஞ்சம் சாப்பிடு.." "எனக்கு வேணாம் அசோக்.. நான் அப்போவே சாப்பிட்டேன்.. நீ நல்லா சாப்பிடு.." அசோக் கற்கண்டை அள்ளி வாயில் போட்டுக்கொள்ள, அவன் சாப்பிடுவதையே திவ்யா ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டை சுவைத்துக்கொண்டே அசோக் தன் வலது கரத்தை நீட்டி, திவ்யாவுடைய வலது கரத்தை தொட்டான். திருப்பினான். தீக்காயம் பட்ட இடத்தை பார்வையிட்டான். திவ்யாவுடைய வலது கையில்.. முழங்கைக்கு சற்று கீழே.. உட்புறமாக.. மூன்று இன்ச் அளவு நீளத்திற்கு.. கோடு போட்ட மாதிரி அந்த தீக்காயம். அந்த காயத்தை சுற்றி அசோக் இதமாக தடவினான்.. மயிலிறகால் வருடுவது மாதிரி..!! "ரொம்ப வலிக்குதா திவ்யா..?" "இல்ல அசோக்.. இப்போ வலிக்கலை.." "உன் கையை புடிச்சுக்கவா..?" "ம்ம்.. புடிச்சுக்கோ.." வருடிக்கொண்டிருந்த கையை அசோக் இப்போது நகர்த்தினான். திவ்யாவின் வலது கரத்தோடு, தனது வலது கரத்தை இணைத்தான். அவளுடைய விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான். அழுத்தி பற்றிக்கொண்டான்..!!இன்று..!! அசோக் பல் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் ப்ரஷ் பிடித்து இடதும் வலதுமாய் இயக்கிக் கொண்டிருந்தவன், இன்னொரு கையில் செய்தித்தாளை விரித்து வைத்திருந்தான். கண்கள் செய்திகளை அவ்வப்போது மேய்ந்து கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் முழுவதும், செல்வாவின் மேலேயே இருந்தது. செல்வா செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்றது. செல்வாவின் செய்கைகளிலேயே படிந்திருந்தது. செல்வா அவனது அறைத்தோழன். அறைத்தோழன் என்றதும் அசோக்குடைய பள்ளித்தோழனோ, கல்லூரித்தோழனோ என்று நினைத்து விடாதீர்கள். செல்வாவிற்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அரைக்கிழவன் வயதில் அசோக்கிற்கு ஒரு அறைத்தோழன்..!! ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை. அதில்லாமல் ஓய்வு நேரங்களில் எல்.ஐ.சி ஆப் இன்டியாவிற்கு ஏஜன்ட் வேலையும் செய்கிறார். 'லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி விக்கிற மாதிரி உலகத்துல ஒரு தர்மசங்கடமான வேலை வேற எதுவும் இல்லை அசோக்..' என்று அடிக்கடி புலம்பிக்கொள்(ல்)வார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த அறைக்கு, அசோக் தன் கல்லூரித்தோழன் சுரேஷுடன் குடி வந்தான். வந்த இரண்டு மாதங்களிலேயே இந்த செல்வா அவர்களுடன் வந்து ஒட்டிக்கொண்டார். செல்வாவும் சுரேஷும் ஒரே ஊர்க்காரர்களாகிப்போனது அசோக்கின் துரதிர்ஷ்டம்..!! சென்ற மாதம் சுரேஷ் ஆன்சைட் என்று அமெரிக்காவிற்கு பறந்து விட, இப்போது அசோக்கும் செல்வாவும் மட்டுந்தான்..!! அசோக் எழுவதற்கு முன்பே அதிகாலையிலே எழுந்து அதிசயமாய் செல்வா குளித்து முடித்திருந்தார். வழுக்கை பரவாத பாகங்களில், வளர்ந்திருந்த முடிகளில், வெள்ளை நிறம் கொண்டவை இப்போது காணாமல் போயிருந்தன. டை அடித்திருக்கிறார் என்று தெளிவாக தெரிந்தது. எப்போதாவது அணியும் ஜீன்ஸ், டி-ஷர்ட்டை இப்போது அணிந்திருந்தார். 'என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி..' என்ற சிட்டுக்குருவி பாடலை சீட்டியடித்தபடியே, ஷாருக்கான் சிபாரிசு செய்த க்ரீமை முகம் முழுக்க அப்பி தேய்த்தார். ஒரு புதுவிதமான உற்சாகத்துடனே, அறைக்குள் உலவிக்கொண்டிருந்தார். அதைத்தான் அசோக் அப்படி வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான். "ஏன் அசோக்.. ஒரு சாயல்ல என்ன பார்த்தா.. மாதவன் மாதிரியே இல்ல..?" செல்வா ஒரு மாதிரி ஸைட் போஸ் கொடுத்தபடியே கேட்க, அசோக் செம கடுப்பானான். வாயில் இருந்த நுரையை ஜன்னல் வழியே வெளியே துப்பிவிட்டு, வெடுக்கென சொன்னான். "மாதவன் மாதிரியா..? மயில்சாமி மாதிரி இருக்கீங்கண்ணா..!!" "என்ன அசோக் இப்படி சொல்லிப்புட்ட..?" "பின்ன என்ன..? ஏண்ணா காலாங்காத்தாலேயே காமடி பண்றீங்க..? என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு..?" "அ..அது.. அது வந்து.. அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா அசோக்.." செல்வா வெட்கத்துடன் சொன்னார். "மறுபடியுமா..?" அசோக் நொந்துபோனவனாய் கேட்டான். "ஆமாம்.." "இப்போ யாரு..?" "நம்ம புவனா ஆண்ட்டியோட பொண்ணு.. கண்மணி..!!" சிட்டுக்குருவி பாடலின் சீக்ரட் இப்போது புரிந்து போனது, அசோக்கிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் புவனாவை ஆண்ட்டி என்று செல்வா சொன்னதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. புவனா என்பது, செல்வா தினமும் சாப்பிடுகிற மெஸ்சுக்கு சொந்தக்காரி. அக்கா என்று கூட சொல்ல முடியாது.. செல்வாவுக்கு தங்கை என்று சொல்லும் அளவிற்கு.. இளமையாக இருப்பாள். இல்லையென்றால் செல்வா முதிர்ந்து போய் தெரிவார் என்றும் சொல்லலாம். "கண்மணியா..? அது சின்ன பொண்ணுண்ணா.. பாவம்..!!" "காதல்ல பாவம், புண்ணியம்லாம் கெடையாது அசோக்..!! காதல்ன்றது.." அவர் ஆரம்பித்ததுமே அசோக் காதை பொத்திக்கொண்டான். 'ங்கொய்யால.. கேப் கெடைச்சா காதல் பத்தி தத்துவம் சொல்ல ஆரம்பிச்சுடுறான்யா இந்த ஆள்' என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. 'காதல்ன்றது உப்புமா மாதிரி அசோக்..', 'காதல்ன்றது ஊத்தாப்பம் மாதிரி அசோக்..', 'காதல்ன்றது உளுந்த வடை மாதிரி அசோக்..', என்ற ரீதியில் ஆரம்பித்து இதுவரை ஏகப்பட்ட தத்துவம் சொல்லியிருக்கிறார் செல்வா. 'விக்ரமன் படமா பாத்து கெட்டுப்போயிட்டான்யா இந்த ஆள்..' என்று நினைத்துக்கொண்டான். அவர் தத்துவம் சொல்லி முடித்துவிட்டார் என்று உறுதியான பிறகே காதை கொஞ்ச கொஞ்சமாய் திறந்தான். செல்வா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்."......... அப்போ அவ என்னை லவ் பண்றானுதான அர்த்தம்..?" "எவ..??" அசோக் புரியாமல் கேட்டான். "ப்ச்.. அவதான்பா.. கண்மணி..!!" கிழிஞ்சது..!! இவர் இப்படித்தான்..!! இவர் ஏதோ மன்மதராசா மாதிரியும், உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் இவரிடம் ஜொள்ளுவிட்டு திரிவது மாதிரியும் நினைப்பு இவருக்கு..!! இந்த ஐந்து மாதத்தில் பத்து, பதினைந்து பெண்களுக்கு மேல் இவரை காதலிப்பதாக சொல்லிவிட்டார்..!! "எதை வச்சு அவ உங்களை லவ் பண்றான்னு சொல்றீங்க..?" "இப்போலாம் ஒழுங்காவே நீங்க சாப்பிடுறது இல்ல.. எளைச்சு போயிட்டீங்க.. நல்லா சாப்பிடுங்க.. அப்டின்னு சொல்றாப்பா..!! இதுக்கு என்ன அர்த்தம்..? என் மேல அவளுக்கு அப்படி என்ன அக்கறை..? இதுக்கு பேர் காதல்தான..?" "அண்ணா.. வெளையாடாதீங்கண்ணா..!! அவ ஏதோ.. நீங்க நல்லா சாப்பிட்டா.. கூட ரெண்டு கல்த்தோசை விக்குமேன்னு சொல்லிருப்பா..!! அதைப்போய் காதல்னு சொல்றீங்க..?" "அட போப்பா..!! உனக்கு தெரியாது.. பார்வையே காட்டிக் கொடுத்திடும்..!! காதல்ல எனக்கு நெறைய அனுபவம் இருக்கு அசோக்.. நான் கரெக்டா கண்டுபிடிச்சுடுவேன்..!! உங்க காதலையே நான் எப்படி கரெக்டா கண்டுபுடிச்சேன் பாத்தேல..?" "ஐயையோ.. நீங்க வேற..!! நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா.. நாங்க ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்..!!" "ம்ஹூம்..!!" "ஏண்ணா நம்ப மாட்டேன்றீங்க..? நான்தான் சொல்றேன்ல..?" "நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! நீயும் அந்தப்பொண்ணும் லவ் பண்றீங்க.. லவ் பண்றீங்க..!! இதை நான் ஆணித்தரமா அடிச்சு சொல்வேன்..!!" "ஷ்ஷ்ஷ்ஷ்.... என்னால முடியலை..!! ஆளை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!" அசோக் காலில் விழாத குறையாக கதற, செல்வா சற்று மனமிறங்கினார். மீண்டும் கண்ணாடி முன் சென்று நின்றுகொண்டு, விட்ட இடத்தில் இருந்து மேக்கப்பை தொடர்ந்தார். அவர் சீவி சிங்காரித்து வருவதற்குள் அசோக்கை பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அசோக் சென்ற வருடம்தான் எஞ்சினியரிங் முடித்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறிய சாஃப்ட்வேர் கம்பெனியில், குறைந்த ஊதியத்திற்கு ஒரு வேலை கிடைத்தது. அந்த கம்பெனியில் சேர்ந்து கொள்வது என்று முடிவெடுத்தான். தங்குவதற்கு இடம் வேண்டுமே..? தயக்கமே இல்லாமல் சென்னையில் இருக்கும் தன் அக்கா சித்ராவிற்கு கால் செய்தான். அவள் பார்த்து தந்த அறைதான் இது..!! அதுவும் தான் வசிக்கும் அப்பார்ட்மன்ட்சுக்கு அடுத்த தெருவிலேயே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு போர்ஷன்..!!..!! சித்ரா எப்போது சென்னை வந்தாள் என்று கேட்கிறீர்களா..? வருகிறேன் வருகிறேன்.. பொறுங்கள்..!! சித்ராவுக்கும் சென்ற வருடம்தான் திருமணம் ஆனது. தன் கணவனுடன்தான் அடுத்த தெரு அப்பார்ட்மன்ட்சில் குடியிருக்கிறாள். அவளுடைய கணவன் வேறு யாரும் கிடையாது.. திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான்..!! எஸ்.. அனலில் விழுந்த புழுவாய் தங்கை அலறி துடித்துக் கொண்டிருந்தபோது, பணியாரத்தை பரிதாபமாய் பார்த்த அதே கார்த்திக்தான்..!! இப்போது அரசு வங்கி ஒன்றில் பணக்கட்டுகளுக்கு இடையில் பணிபுரிகிறான்..!! திவ்யாவை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. சொல்கிறேன்..!! திவ்யாவும் சென்னையில்தான் ஒரு கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் பயில்கிறாள். சித்ராவும் கார்த்திக்கும் குடியிருக்கும் அதே வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். முதல் மூன்று வருடங்கள் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தாள். அண்ணனுக்கு திருமணம் ஆனதும், அவனுக்கென்று சென்னையிலேயே ஒரு வீடு வந்ததும்.. 'ஏன் தேவையில்லாத தெண்ட செலவு..?' என்பது மாதிரியான குடும்பத்தினர் நெருக்குதலுக்கு உட்பட்டு.. விருப்பமும், வேறு வழியும் இல்லாமல்.. ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அந்த வீட்டில் தங்கியிருக்கிறாள். திவ்யாவுக்கும் சித்ராவுக்கும் இன்னும் ஏழாம் பொருத்தம்தான்..!! சிறுவயதில் பேசிக்கொள்ளாமல் பிரிந்தவர்கள் இன்று வரை பேசிக்கொள்ளவில்லை..!! சித்ரா தன் அண்ணியாக வருவதில் அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. வீட்டு பெரியவர்களிடம் கூட சண்டையிட்டு பார்த்தாள். அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க.. திவ்யாவால் எதுவும் செய்ய முடியவில்லை..!! ஏதோ அயலார் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவள் போலத்தான், அண்ணனின் திருமணத்தன்று சுற்றி திரிந்தாள். சித்ராவின் கையை பிடித்து மணவறையை வளம் வரக்கூட, திவ்யாவின் சித்தி பெண்ணை வைத்துத்தான் சமாளித்தார்கள். விருப்பம் இல்லாமல் அண்ணனின் வீட்டில் வந்து தங்கியிருந்தவளுக்கு, அசோக்கும் அருகிலேயே குடிவந்தது சற்றே நிம்மதியையும், எக்கச்சக்கமாய் சந்தோஷத்தையும் கொடுத்தது. அசோக்குடன் நிறைய நேரம் செலவழிக்கிறாள். அசோக் தங்கியிருக்கும் அறைக்கு சகஜமாக வந்து செல்வாள். மேலே.. செல்வா அசோக்குடன் இணைத்துக் கூறிய அந்த பெண்.. திவ்யாதான்..!! அவர்களுடைய நெருக்கத்தைப் பார்த்து அவராக அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.செல்வா மேக்கப்பில் மூழ்கிவிட, அசோக் பாத்ரூம் சென்று குளித்தான். குளித்து முடித்து வேறு உடைகள் அணிந்து வெளியே வந்தபோது, செல்வா கிளம்பி ரெடியாக இருந்தார். "அப்போ.. நான் போயிட்டு வர்றேன் அசோக்.." "எங்கண்ணா கேளம்பிடீங்க..?" "வேறெங்க..? மெஸ்ஸூக்குத்தான்.. சாப்பிட்டு வர்றேன்பா..!!"
"ஓ.. சரிண்ணா.." "ஹ்ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்ச மகராசன்..!! அக்கா வீடு பக்கத்துலையே இருக்குது.. அங்கேயே சாப்பிட்டுக்குவ..!! லவ் பண்ற பொண்ணு வேற அந்த வீட்டுலையே இருக்குது.. அப்படியே ரொமான்ஸ் லுக் விட்டுக்கிட்டே சாப்பிடுவீங்க..!!" "ஐயோ.. அண்ணா.. ஏண்ணா இம்சை பண்றீங்க..? நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா.." அசோக் எரிச்சலாக கத்தினான். "நோ நோ..!! நீ அந்தப்பொண்ணை லவ் பண்ற.. அந்தப்பொண்ணும் உன்னைத்தான் லவ் பண்ணுது.. யார்கிட்ட விடுறீங்க உங்க கதையை..? நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! என்னை யாரும் ஏமாத்த முடியாது..!!" அவர் கூலாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். கூச்சமே இல்லாமல் 'என் கண்மணி.. என் காதலி.. இளமாங்கனி.. எனை பார்த்ததும்.. சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே..' என்று சத்தம் போட்டு பாடிக்கொண்டே சென்றார். கதவை சாத்தி வெளியேறினார். பாட்டுக்கு ஏற்றவாறு தன் கைகளையும், இடுப்பையும் நெளித்தவாறே அவர் சென்றது செமகாமடியாக இருந்தது..!! அசோக் கொஞ்ச நேரம் அவரையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் அவனும் தயாராகி அக்கா வீட்டிற்கு சாப்பிட கிளம்பினான்.ஆறு அடுக்குகள் கொண்ட அப்பார்ட்மன்ட்ஸ் அது..!! அதில் நான்காவது அடுக்கில்தான் சித்ராவின் வீடு இருக்கிறது..!! அப்பார்ட்மன்ட்சுக்கு வெளியிலேயே அசோக் பைக்கை பார்க் செய்தான். லிஃப்ட் பிடித்து நான்காவது தளத்துக்கு சென்றான். வீடு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தான். மிக்ஸியில் எதையோ அரைத்துக்கொண்டிருந்த சித்ரா, அசோக் உள்ளே நுழைந்ததும் ஒருமுறை ஏறிட்டு பார்த்தாள். அப்புறம் அவனை கண்டுகொள்ளாமல், அவளது வேலையில் கவனத்தை செலுத்தினாள். அசோக் அவளை நெருங்கினான். சற்றே கொஞ்சலாக கேட்டான். "என்னக்கா பண்ணிட்டு இருக்குற..?" "ஹ்ம்ம்.. பாத்தா தெரியலை..? தேங்கா அரைச்சுக்கிட்டு இருக்குறேன்.." சித்ரா சற்றே சலிப்பாக சொன்னாள். "அப்போ.. டிபன் இன்னும் ரெடியாகலையா..?" அசோக் அப்படி கேட்டதும், அக்கா எரிச்சலானாள். "அப்டியே போட்டன்னா..!! என்னவோ ரொம்ப குடுத்து வச்சவன் மாதிரி வந்து கேக்குற..?" "அடிப்பாவி.. உங்க வீட்டுல சாப்பிடுறதுக்கு.. மாசாமாசம் ஆயிரம் ரூபா கொடுக்குறேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!!" "ஆமாம்.. இவரு கொடுக்குற ஆயிரம் ஓவாயை வச்சுத்தான் நாங்க இங்க கோட்டை கட்டப்போறோம்..? உன் ஆயிரம் ஓவாயை நீயே வச்சுக்கோ சாமி.. நாளைல இருந்து வேற எங்கயாவது சாப்பிட்டுக்க..!!" அவள் அப்படி மிஞ்சியதும், அசோக் இப்போது கொஞ்சலாக சொன்னான். "என்னக்கா.. கோவிச்சுக்குற..? நீயே இப்படி சொன்னா.. நான் சாப்பாட்டுக்கு வேற எங்க போவேன்..?" "ஏன்.. அந்த புவனா மெஸ்ல போய் சாப்பிடு..!!" "என்னதான் இருந்தாலும்.. என் அக்காவோட கையால சமைச்சதை சாப்பிடுறது மாதிரி வருமா..?" "என்ன.. அக்கா மேல ரொம்பத்தான் பாசம் இன்னைக்கு.." "இன்னைக்கு இல்லக்கா.. என்னைக்குமே அப்படித்தான்..!! உனக்குத்தான் புரியுறது இல்ல..!!" அவன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் திவ்யா அவளுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள். குளித்து முடித்து புதிதாய் பூத்த பூ மாதிரி வந்தாள். அசோக்கை பார்த்ததும் மலர்ந்துபோன அவள் முகம், அருகிலேயே அவளுடைய அக்காவும் இருப்பதை அறிந்ததும் பட்டென சுருங்கியது. அமைதியாக நடந்து சென்று ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். ரிமோட் எடுத்து டிவி ஆன் செய்தாள். அசோக் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அவளும் திரும்பி இவனை பார்த்தாள். அசோக் அவளிடம் சைகையாலே ஏதோ சொன்னான். அவளும் திரும்ப சைகையாலேயே ஏதோ கேட்டாள். அப்புறம் அசோக் சொல்ல வந்ததை அவள் புரிந்துகொண்ட மாதிரி தலையசைத்தாள். சில வினாடிகள் டிவி பார்த்தவள் அப்புறம் எழுந்து கொண்டாள். நடந்து உள்ளறைக்கு சென்று மறைந்தாள். இவர்கள் இருவரும் சைகையால் பேசிக்கொண்டதை, சித்ரா ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள். திவ்யா உள்ளே சென்றதும், அசோக்கிடம் கேட்டாள். "என்ன பண்ணுனீங்க இப்போ ரெண்டு பேரும்..?" "எ..என்ன பண்ணுனோம்.. ஒன்னும் பண்ணலையே..?" அசோக் திணறினான். "ப்ச்.. நடிக்காதடா.. நான் பாத்துக்கிட்டுத்தான இருக்குறேன்..?" "ஐயோ.. ஒன்னும் இல்லக்கா.." "ரெண்டு பேரும் என்னை ஏதோ கேலி பண்ணுனீங்க.. கரெக்டா..?" "சேச்சே.. என்னக்கா நீ..? என் செல்ல அக்காவை நான் கேலி பண்ணுவேனா..?" அசோக் தன் அக்காவின் கன்னங்கள் இரண்டையும் பிடித்துகொண்டு கொஞ்ச, அவள் பட்டென அவனுடைய கைகளை தட்டிவிட்டாள். "அப்போ.. என்ன மேட்டர்னு சொல்லு.." "அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..? நம்பிக்கை இல்லையா..?" "ம்ஹூம்..!! நான் அவளையும் நம்ப மாட்டேன்.. அவகூட சேர்ந்து நீ சுத்திட்டு இருக்குற வரை உன்னையும் நம்ப மாட்டேன்..!!"அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் ஹாலுக்குள் பிரவேசிக்க, சித்ரா கப்சிப் ஆனாள். மிக்ஸி ஜாரை திறந்து அரைபட்ட தேங்காயை வழித்தெடுக்க ஆரம்பித்தாள். திவ்யா தலையை குனிந்தவாறே நடந்து வந்தாள். இவர்கள் இருவரையும் கடக்கும்போது, "மொட்டை மாடிக்கு வா..!!" என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றாள். கதவை திறந்து வெளியேறினாள். திவ்யா செல்லும்வரை அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக்கொண்டிருந்த சித்ரா, அவள் சென்றதும் தன் தம்பியிடம் திரும்பி எரிச்சலாக கேட்டாள். "எதுக்குடா மொட்டை மாடிக்கு வர சொல்றா..?" "எனக்கு எப்படிக்கா தெரியும்..? போனாத்தான் தெரியும்.." சொல்லிக்கொண்டே அசோக்கும் வாசலை நோக்கி நகர, சித்ரா அவனுக்கு பின்னால் இருந்து கத்தினாள். "போ.. போ.. உன் போக்கே சரியில்ல தம்பி..!! என்னைக்கோ ஒருநாள் மூக்கை சிந்திக்கிட்டு எங்கிட்டத்தான் வந்து நிக்கப் போற..!!" அக்காவுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தாது அசோக் வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகளை அடைந்து மேலேறினான். மொட்டை மாடியை அடைந்தான். திவ்யா அங்கே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு இவனுக்காக காத்திருந்தாள். இவன் சென்றதும், சற்றே வெறுப்பாக கேட்டாள். "என்ன சொல்றா.. உன் அருமை அக்கா..? ஓவரா சவுண்டு வுடுறா..?" "ஏய்.. என்னதான் இருந்தாலும் அவ உன் அண்ணன் பொண்டாட்டிடி.. கொஞ்சம் மரியாதையா பேசு.." "போ போ.. அவளைலாம் என்னால அண்ணியா ஏத்துக்க முடியாது..!!" "ஐயோ.. கடவுளே..!! திருந்தமாட்டேன்னு அடம் புடிக்குறீங்க ரெண்டு பேரும்..!! சரி சரி.. ஏத்துக்க முடியாம போனா வேணா போகட்டும்..!! நான் எடுத்துக்கிட்டு வர சொன்னதை எடுத்துட்டு வந்தியா..?" "ம்ம்.. ஒண்ணுதான் எடுத்துட்டு வந்தேன்.. போதும்ல..?" "போதும் போதும்.. எடு..!!" அசோக் சொன்னதும் திவ்யா தன் ஷர்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுத்தாள். அது.. சிகரெட்..!! சற்று முன்பு அசோக் சைகையாலே அவளிடம் எடுத்து வர சொன்ன சிகரெட்..!! தன் அண்ணனின் பாக்கெட்டில் இருந்து ஆட்டையை போட்டு அவள் எடுத்து வந்த சிகரெட்..!! அதை கையில் எடுத்தவள், மூக்குக்கு அருகே எடுத்து சென்று முகர்ந்து பார்த்தாள். உடனே முகத்தை சுளித்து 'உவ்வே..!!' என்றாள். "கருமம்.. இந்த நாத்தம் நாறுது.. எப்படித்தான் இதை குடிக்கிறீங்களோ..?" "ம்ம்ம்.. தீப்பெட்டியை எடு.. குடிச்சு காட்டுறேன்.." சிகரெட்டை அவளிடம் இருந்து பறித்துக்கொண்டே அசோக் கிண்டலாக சொல்ல, திவ்யா தன் இடுப்பில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அசோக் தீக்குச்சி கிழித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊதினான். அவன் புகை விடுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த திவ்யா சற்றே சலிப்பான குரலில் சொன்னாள். "சின்ன வயசுல இருந்து.. உனக்கு எதையாவது வீட்டுலருந்து திருடிக் குடுக்குறதே எனக்கு பொழப்பா போச்சு..!!" "ஏன்.. என்னாச்சு.. ரொம்பத்தான் சலிச்சுகுற..?" "பின்ன என்ன..? சிகரெட் அடிக்கடி காணாம போகுதே.. ஒருவேளை தங்கச்சி தம்மடிக்க ஆரம்பிச்சுட்டாளோன்னு என் அண்ணன் தப்பா நெனச்சுக்க போறான்..!!" "சரி சரி.. விடு.. இனிமே உன்னை சிகரெட் எடுத்துட்டு வர சொல்ல மாட்டேன்.. ப்ராமிஸ்..!!" "அப்படியே.. இனிமே சிகரெட்டே பிடிக்க மாட்டேன்னு ஒரு ப்ராமிஸ் பண்ணிடேன்..?" "போடீ.. அதுலாம் நம்மால முடியாது.." "ம்ம்ம்... நான்லாம் சொல்லியா நீ கேட்க போற..? அதுக்குலாம் ஆளு வந்தாத்தான் நீ அடங்குவ..!! பொண்டாட்டி வந்து 'பொளேர்.. பொளேர்..'னு நாலு அறை விட்டதுந்தான்.. நீ தம்மடிக்கிறதை விட போற.." "ஹாஹா.. அதுக்குலாம் சான்சே இல்ல.." "ஏன்..?" "நான்தான் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையே..?""என்னடா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட..?" "எனக்கு இந்த காதல், கல்யாணம்.. இதுலலாம் நம்பிக்கையே இல்லை திவ்யா..!!" "ம்ம்ம்.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்குப்பா..!!" "காதல்லயா..? கல்யாணத்துலயா..?" "காதல்க்கல்யாணத்துல..!!" "ஓ..!! அப்போ.. மேடம் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா..?" "ஆமாம்..!! முன்னப்பின்ன தெரியாத ஒருத்தனுக்கு எப்படி அசோக் கழுத்தை நீட்டுறது..? அவனை நம்பி எப்படி என் லைஃபை ஒப்படைக்கிறது..? ஸோ.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது காதல்க் கல்யாணம்தான்..!!" "ம்ம்.. நல்ல முடிவுதான்..!!" அசோக் புகையை ஊதிக்கொண்டே சொல்ல, திவ்யா இப்போது ஆகாயத்தை வெறித்து.. அந்தரத்தில் பார்வையை பதித்தவாறு.. கண்களில் எதிர்கால கனவுடன் சொன்னாள். "எனக்குன்னு ஒருத்தன் இந்நேரம் பொறந்திருப்பான் அசோக்.. எனக்காக உருகப் போறான்.. என்னை உள்ளங்கைல வச்சு தாங்கப் போறான்.. எனக்காகவே வாழப் போறான்..!! அவனை தேடி.. கண்டுபிடிச்சு.. பேசி.. பழகி.. திகட்ட திகட்ட காதலிச்சு.. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கணும்..!!" "ம்ம்.. உனக்கு வரப் போறவன் எந்த மாதிரி இருக்கணும்..?" "அப்டிலாம் பெருசா ரெஸ்ட்ரிக்சன் எதுவும் இல்ல..!! எந்த மாதிரி இருக்க கூடாதுன்னு வேணா சொல்றேன்.." "சொல்லு.." "தம்மடிக்க கூடாது.." "ம்ம்.." "தண்ணியடிக்க கூடாது.." "ம்ம்.." "வேற பொண்ணை சைட் அடிக்க கூடாது.." "சுருக்கமா சொன்னா.. என்னை மாதிரி இருக்க கூடாது..??" "ஹாஹா..!! ஆமாம் ஆமாம்..!! ம்ம்ம்.. இது இல்ல.. நீ என்னோட பேஸிக் கண்டிஷன்லையே ஃபெயில் ஆயிடுவ..!!" "அது என்ன கண்டிஷன்..?" "எனக்கு புருஷனா வரப் போறவன்.. சத்தியமா சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வொர்க் பண்ணக் கூடாது..!!" "அடிப்பாவி.. இப்படி ஒரு கண்டிஷனா..? அப்படி என்ன சாப்ட்வேர் ஆளுங்க மேல உனக்கு கோவம்..?" "என்னவோப்பா..!! எனக்கு உங்க இண்டஸ்ட்ரியே புடிக்கலை.. ஆளுங்களும்.. அவங்க கல்ச்சரும்..!!" "ம்ம்.. அவ்ளோதான் கண்டிஷனா..? இல்ல.. இன்னும் இருக்கா..?" "இன்னும் ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கு.." "என்ன..?" "அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!! எனக்காக.. என்னை நெனச்சு.. நெறைய கவிதை எழுதி தள்ளனும்.. நான் அதை படிச்சு படிச்சு ரசிக்கனும்..!!" "கிழிஞ்சது.. உனக்கு நான் மேரேஜ் அப்ளிகேஷன் அனுப்பிச்சா.. என் ரெஸ்யுமே ஷார்ட்லிஸ்ட் கூட ஆகாது போல இருக்கே..?" "ஹாஹா..!! உன் ரெஸ்யுமேதான் எல்லாத்துக்கும் கீழ.. அடில கிடக்கும்..!!" "ஹ்ம்ம்..." "ஆனா.. ஃப்ரண்ட்ஷிப் அப்ளிகேஷன் அனுப்பிச்சு பாரு.. உன் ரெஸ்யுமே தவிர.. வேற எதையும் நான் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்..!!" அவ்வளவு நேரம் முகத்தில் ஒரு சிரிப்புடனே பேசிக்கொண்டிருந்த திவ்யா, திடீரென அந்த மாதிரி சீரியஸாக சொல்லிவிட்டு, அசோக்கின் முகத்தை அன்பு ஒழுக பார்க்க.. இப்போது அசோக்கும் அப்படியே நெகிழ்ந்து போனான். திவ்யாவின் கண்கள் லேசாக கலங்கின. அசோக் உரிமையாக அவளுடைய தோளில் கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்."ஹேய்.. லூசு.. என்ன இது..?" "ஆமாம் அசோக்.. எனக்கு லைஃப் ஃபுல்லா உன் ஃப்ரண்ட்ஷிப் வேணுண்டா..!! எப்போவும் என்கூடவே இருக்கணும்..!!" "ப்ச்.. உன்னை விட்டு நான் எங்க போயிடுவேன்..? உன்கூடதான் இருப்பேன்.. எப்போவும்..!! சரியா..?" "ம்ம்.." "சரி வா.. கீழ போகலாம்..!! அக்கா தேடிட்டு இருப்பா..!!" சொல்லிவிட்டு அசோக் சிகரெட்டை சுண்டி எறிந்தான். இருவரும் படியிறங்கி கீழே வந்தார்கள். திவ்யா மீண்டும் அவள் அறைக்குள் சென்று முடங்கிக்கொள்ள, அசோக் கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே சித்ரா சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தாள். "சுட்டது போதும்.. பசிக்குது.. எடுத்துக்குறேன்.." என்று கல்லில் கிடந்த சப்பாத்தியை அசோக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த மாதிரி எடுக்க அவன் குனிந்தபோது, அசோக்கின் மூச்சுக்காற்று சித்ராவின் முகத்தில் மோத, அவள் படக்கென்று முகத்தை சுளித்தாள். கையில் வைத்திருந்த தோசைக் கரண்டியாலேயே அசோக்கின் தலையில் ஒரு போடு போட்டாள். அசோக் அலறினான். "ஆஆஆஆ...!! ஏண்டி அடிக்கிற..?" "எருமை மாடு..!! போய் தம்மடிச்சுட்டு வந்தியா..?" "தம்மா..? அதுலாம் ஒண்ணுல்ல.." சொல்லியவாறே, சப்பாத்தியை ஒரு தட்டில் போட்டுக்கொண்டான். "பொய் சொல்லாத.. அதான் குப்புன்னு நாறுதே..? இதுக்குத்தான் உன்னை மொட்டை மாடிக்கு வர சொன்னாளா..? அவதான் உன்னை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?" "இல்ல இல்ல.." "நீ மட்டுந்தானா..? இல்ல.. அவளும் அடிக்கிறாளா..?" "ஐயையே..!! அவள்ளாம் இல்ல.. நான் மட்டுந்தான்..!! அவ அப்புராணிக்கா.. அவளைப் போய் சந்தேகப் படுறியே..?" "நீதான் மெச்சிக்கணும்..!! அவளலாம் நம்ப முடியாது.. அடிச்சாலும் அடிப்பா..!!" "ப்ச்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..? அப்புறம் என்ன நொய்நொய்ன்னு..? ஆமா.. இதென்ன.. சப்பாத்திக்கு தேங்கா சட்னி பண்ணிருக்குற..?" "அது சப்பாத்திக்கு இல்ல.. தோசைக்கு..!!" "தோசையா..? ஏன்.. உன் வீட்டுகாரருக்கு ஒரு ஐட்டம் பத்தாதா..? எல்லாரும் உயிர் வாழ்றதுக்காக சாப்பிடுவாங்க.. மனுஷன்.. சாப்பிடுரதுக்காகவே உயிர் வாழ்றான்யா..!!" "அடச்சீய்.. தோசை அவருக்கு இல்ல..!!" "அப்புறம்..?" "அந்த குரங்குக்கு..!!" அவள் குரங்கு என்று விளித்தது திவ்யாவைத்தான்..!! "ஏன்.. அவளுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?" "அவளுக்கு சப்பாத்தி பிடிக்காது.. சப்பாத்தி பண்ற அன்னைக்கு.. அவளுக்கு தனியா ஏதாவது செஞ்சு கொடுத்திடனும்..!! இல்லனா.. மகாராணிக்கு கோவம் வந்துடும்..!! நாலு நாள் சாப்பிட மாட்டா.. பட்டினி கெடக்குறேன்னு வீட்டுல ஆக்டிங் குடுத்துட்டு.. பாய் கடைல போய்.. பரோட்டாவா தின்பா..!! நமக்கெதுக்கு அந்த பாவம்னுதான் அவளுக்கு ஏதாவது தனியா செஞ்சு கொடுத்திடுவேன்..!!" "ம்ம்ம்.. உங்க ரெண்டு பேர் ரிலேஷன்ஷிப்பை நெனச்சா.. புல்லரிக்குதுடி எனக்கு..!! ஆமாம்.. உன் புருஷனை எங்க..? சத்தத்தையே காணோம்..?? இன்னும் எந்திரிக்கலையா..?" "அப்போவே எந்திரிச்சுட்டாரு.. குளிச்சுட்டு இருக்காரு..!!" "இவ்ளோ நேரம் பாத்ரூம்ல என்ன பண்றாரு.? வழக்கமா.. டைனிங் டேபிள்ளதான ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணுவாரு..? நல்லா தின்னு தின்னு.. இப்போ பீப்பா மாதிரி ஆயிட்டாருக்கா..!!" "உதை வாங்க போற படவா..!! அவருக்கு மனசுல எந்த கெட்ட எண்ணமும் இல்லடா.. அதான் உடம்பும் வஞ்சனை இல்லாம வளருது..!! உன் அருமை ஃப்ரண்டு ஒருத்தி இருக்காளே.. அவளை பாத்தியா..? அவளுக்கு மனசு ஃபுல்லா வெனயம்.. அதான் உடம்புல ஒன்னும் ஒட்ட மாட்டேன்னுது..!!' "போதும்.. போதும்.. புருஷனுக்கு ரொம்பத்தான் சப்போர்ட்டு..!!" பேசிக்கொண்டே அசோக் சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக்கொண்டு.. "அப்போ.. நான் கெளம்புறேன்க்கா..!!" என்று சித்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் கிச்சனை விட்டு வெளியே வந்தபோது, "அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போயேன்.."என்று திவ்யா தன் அறையில் இருந்து தன் தலையை மட்டும் வெளியே நீட்டி அவனை அழைத்தாள். அசோக் எதுவும் புரியாமலேயே திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். கதவை தள்ளி உள்ளே சென்றான். கைகளை விரித்தவாறு திவ்யா நின்றிருந்தாள். "இன்னைக்கு நான் எப்படி இருக்கேன்..? இந்த ட்ரெஸ் ஓகேவா..?" என்று முகமெல்லாம் பிரகாசமாய் கேட்டாள் திவ்யா. 'என்ன இது.. இன்று.. ஆளாளுக்கு அலங்காரம் செய்துகொண்டு என்னிடம் வந்து காட்டுகிறார்கள்..?' என்று அசோக் தன் மனதுக்குள் நினைத்து கொண்டான். ஆனால்.. செல்வா கேட்டபோது எழுந்த ஒரு எரிச்சலான உணர்வு இப்போது இல்லை.. அதற்கு எதிர்ப்பதமான ஒரு உணர்வு..!! திவ்யாவை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளவெடுத்தான்..!!சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். அலை அலையாக கேசம்..!! சலவை செய்த நிலவினை போன்றதொரு ஒளிமுகம்..!! உருளும் திராட்சைகளாய் இரு கருவிழிகள்..!! உருண்டையான கூர்மையான நாசி..!! தேன் சொட்டும் ஆரஞ்சு சுளைகளாய் பிளந்து கொண்ட இதழ்கள்..!! சந்தனத்தில் பாலை குழைத்து பூசிவிட்ட மாதிரியான மேனி வண்ணம்..!! தேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய மாதிரியான தேகக்கட்டு..!! தேவதை மண்ணில் குதித்த மாதிரியான.. திவ்யா..!! "வாவ்...!!!! யூ லுக் கிரேட்..!!!!" "ரியல்லி..???" "எஸ் திவ்யா..!! என்ன விசேஷம் இன்னைக்கு..?" "இன்னைக்கு காலேஜ்ல நான் ஒரு பேப்பர் ப்ரசன்ட் பண்ண போறேன்.." "ஓ..!! பசங்கள்லாம்.. அப்படியே சொக்கிப் போகப் போறானுக..!!" "போடா.. வெளையாடாத..!!" "இல்லடி.. சீரியஸ்..!!" "ம்ம்.. அப்போ ஓகேதான..? எதுவும் குறை இல்லையே..?" அவள் அப்படி கேட்டதும், அசோக் இன்னொரு முறை அவளை மேலும் கீழும் பார்வையிட்டான். அப்புறம் சற்றே கேலியான குரலில் சொன்னான். "குறை எதுவும் இல்ல.. ஏதோ ஒன்னு அதிகமா இருக்குற மாதிரிதான் இருக்குது.." "ஏய்..." திவ்யா முறைத்தாள். "அடச்சீய்..!! இதை சொன்னேன்டி.. இந்த ஸ்டிக்கர் பொட்டு..!! இது வேணாம்.. எடுத்துடுறேன்..!!" சொல்லிக்கொண்டே திவ்யாவின் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை அசோக் அகற்றினான். "மேட்சிங்கா ஒரு பொட்டு வச்சா.. நல்லாருக்கும்னு நெனச்சேன்..!!" "ம்ஹூம்.. நல்லால்ல..!! அது இல்லாம இருந்தாத்தான் நல்லாருக்கு..!!" "ம்ம்.. சரி..!! நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" "சரி திவ்யா.. நான் கெளம்பவா..?" "இரு.. நானும் வர்றேன்.. என்னை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணிடு..!!" "ஓகே.. வா..!!" பத்தே நிமிடங்களில் திவ்யா சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள். அசோக் பைக்கில் கொண்டுபோய் அவளை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்தான். மீண்டும் தன் அறைக்கு வந்தான். செல்வா இன்னும் திரும்பியிருக்கவில்லை. கதவை திறந்துகொண்டு தனது அறைக்குள் நுழைந்தான். மெத்தையில் பொத்தென்று விழுந்தான். ஓரிரு நிமிடங்கள் அப்படியே சீலிங்கை வெறித்தபடி கிடந்தான். பின்பு புரண்டு.. கை நீட்டி.. அலமாரியில் இருந்து அந்த டைரியை எடுத்தான். பக்கங்களை புரட்டினான். அவன் தேடிய பக்கம் வந்ததும் நிறுத்தினான். ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்வையை வீசினான்..!! அங்கே திவ்யா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அவன் நேற்று இரவு தூக்கம் வராமல் எழுந்து.. பென்சிலாலேயே நேர்த்தியாக வரைந்த திவ்யாவின் ஓவியம்..!! கண்களாலேயே ஆசை தீர.. திவ்யாவின் அழகை அள்ளிப் பருகினான் அசோக்..!! வலது கையின் ஐந்து விரல்களாலும் மென்மையாக அந்த ஓவியத்தை வருடினான்..!! பின்பு.. அந்த விரல்களின் இடுக்குக்குள்ளே.. அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த.. திவ்யா அறியாமலே அவளிடமிருந்து களவாடிய.. அந்த ஸ்டிக்கர் பொட்டை ஓவியத்தின் நெற்றியில் ஒட்டினான்..!!காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!! "அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!" திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன. தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக காதலித்துக்கொண்டிருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறான். ஆனால் தனக்கு ஏன் கவிதையில் ஈடுபாடு இல்லாமல் போனது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஒருவேளை தன் காதலில் ஏதும் குறை உள்ளதா..? ச்சே..!! இருக்காது..!! முயலவில்லை.. அதனால்தான் கவிதை முளைக்கவில்லை..!! ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். இன்று திவ்யாவை நினைத்து ஒரு கவிதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும்..!! எப்படி ஆரம்பிப்பது..?? அன்பே என்றா.. அடியே என்றா..?? கண்ணே என்றா.. காதலியே என்றா..?? உயிரே என்றா.. உறவே என்றா..?? ஆரம்ப வார்த்தையிலேயே அடுக்கடுக்காய் குழப்பம்..!! நெற்றியை சொறிந்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தான். எதுவுமே பிடிபடாமல் போக எரிச்சலுக்கும் இயலாமைக்கும் உள்ளானானான்..!! பேனா பிடித்த அவன் கை சும்மா இராமல், கிறுக்க ஆரம்பித்தது. திவ்யா என்றும்.. ஐ லவ் யூ என்றும்.. வார்த்தைகளை தாறுமாறாக காகிதத்தில் சிந்தியும் சிதறியும் வைத்தது..!! புத்தகங்களில் காணும் புதுக்கவிதைகளை விட, அவளுடைய பெயர் அழகாக இருப்பதாக, அவனது கண்களுக்கு தோன்றிற்று..!! 'சரியான அல்பம்டி நீ.. நீயே ஒரு அற்புதமான கவிதை.. எதுக்குடி உன்னை நெனச்சு கவிதை எழுதனும்னு உனக்கு ஒரு அல்ப ஆசை..?' என்று திவ்யாவிடம் கேட்பதாக மனதுக்குள் சொல்லிப் பார்த்தான். சிரிப்பு வந்தது..!! அடுத்த கணமே.. ச்சே..!! 'கவிதை எழுத தெரியலை.. அதுக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா..?' என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப.. கடுப்பானான்..!! கிறுக்கிய காகிதத்தை கையில் எடுத்து எரிச்சலுடன் கசக்கி எறிந்தான். எறிந்தவன் அடுத்த கணமே அதற்காக வருந்தினான்..!! எறியப்பட்ட காகிதம் வாசலில் நின்ற செல்வாவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. ஒருகணம் அசோக்கை திகைப்பாய் பார்த்த செல்வா, பின்னர் குனிந்து அந்த பேப்பரை எடுக்க சென்றார். அசோக் பதறிப்போய் எழுந்து ஓடினான். "அண்ணா.. வேணான்னா.. இருங்க.." "ஏன்.. என்னாச்சு..""ஒன்னுல்லன்னா.. அதை கொடுங்க.." என்றவாறு செல்வாவின் கையிலிருந்த காகிதத்தை, அசோக் பறிக்க முயன்றான். "ஏன் இப்படி பதர்ற..?? அப்போ இதுல ஏதோ மேட்டர் இருக்குது..!! இரு.. என்னன்னு பாக்குறேன்..!!" "ஐயோ.. அண்ணா.. வேணாம்.." "ஏய்.. இருடா..!!" "அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.." அசோக் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே, செல்வா பிடிவாதமாக அந்த காகிதத்தை பிரித்தார். கசங்கல் நீக்கி பார்த்தார். பார்த்ததுமே அவர் முகத்தில் பல்பு எரிந்த மாதிரி ஒரு பிரகாசம். அசோக்கிடம் திரும்பி, அவன் மீது ஏளனமாய் ஒரு பார்வையை வீசியபடியே, எள்ளலான குரலில் சொன்னார். "ஹ்ஹ.. நாங்கதான் சொன்னோம்ல..?" "அண்ணா.. அ..அது நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல.." அசோக்கின் குரல் சற்றே பரிதாபமாக ஒலித்தது. "ஹேய்.. 'திவ்யா ஐ லவ் யூ.. திவ்யா ஐ லவ் யூ..'ன்னு கிறுக்கன் மாதிரி கிறுக்கி வச்சிருக்குற..? நான் நெனைக்கிற மாதிரி இல்லனா.. வேற எப்படி..?" "அ..அது.. அது வந்து.." "ம்ம்ம்.. சொல்லு..." "நா..நான் மட்டுந்தான் அவளை விரும்புறேன்.. அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாது..!! ஜஸ்ட் ஒன்சைட்..!!" "ஓஹோ..!! அவகிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா..?" "இ..இல்ல.." "அப்புறம் எப்படி அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாதுன்னு நீயா சொல்ற..? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..!! அந்தப் பொண்ணு உன்னைத்தான் லவ் பண்றா.. உன்னைத்தான் லவ் பண்றா..!!" "அட போங்கண்ணா..!! நீங்க வேற.. வயித்தெரிச்சலை கெளப்பாதீங்க..!!! குடுங்க அதை..!!" அசோக் அவர் கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு சேரில் சென்று அமர்ந்தான். டைரிக்குள் அந்த காகிதத்தை வைத்து மூடினான். அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த செல்வா, அப்புறம் மெல்ல நடந்து அவனுக்கருகில் சென்றார். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, டேபிளில் சாய்ந்து கொண்டார். அசோக்கையே முறைத்து பார்த்தபடி சொன்னார். "எனக்கு உன் மேல கோவம்.." "ஏன்..?" "லவ் பண்ணிட்டு இத்தனை நாளா 'இல்ல இல்ல' ன்னு என்னை ஏமாத்திட்டு இருந்தேல்ல..?" "ப்ச்.. டபுள் சைடா இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேண்ணா..!! இது.. நான் மட்டுந்தான்.. அதான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கம்.." "இருந்தாலும்.. உன் மேல எனக்கு கோவம்.. கோவந்தான்..!!" "சரி.. அதுக்கு..???" "உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்.." "என்ன தண்டனை..?" "இன்னைக்கு நீ தண்ணியடிக்கிற..!!" செல்வா சொல்ல, அசோக் பக்கென அதிர்ந்தான். "ஐயோ.. அண்ணா..!! அந்த தண்டனை மட்டும் எனக்கு வேணவே வேணாம்.." "நோ நோ..!! நான் முடிவு பண்ணிட்டேன்.. இன்னைக்கு நீ தண்ணியடிச்சே ஆகணும்.." "வெளையாடாதீங்கண்ணா.. எனக்கு இன்னைக்கு தண்ணியடிக்கிற மூடுலாம் இல்ல.." "உனக்கு மூடு இருக்கா இல்லையான்லாம் எனக்கு கவலை இல்ல.. வா.. கெளம்பு..!!" "அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.." "கெளம்புடா.. எந்திரி.. பேன்ட்டை மாட்டு.."அசோக் கெஞ்ச கெஞ்ச, செல்வா அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். தண்ணியடிக்க அசோக்கிற்கு பெரிதாக மூடேல்லாம் தேவையில்லை. 'எங்க வீட்டு குழாய்ல இன்னைக்கு தண்ணி வரலைடி..' என்று சாலையை கடக்கும் யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருந்தால் கூட.. அது இவன் காதில் வந்து விழுந்துவிட்டால்.. அவ்வளவுதான்..!! அது போதும் அவனுக்கு..!! அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதம் என்கிறீர்களா..? செல்வாவுடன் சேர்ந்து ஒருமுறை தண்ணியடித்திருக்கிறான். அதன் பிறகு அந்த தவறை செய்யவே கூடாது என்று ஒரு முடிவு கட்டியிருந்தான். அதனால்தான் அந்த தயக்கம்..!! 'செல்வா அளவுக்கதிகமாக குடித்துவிட்டு ரவுசு செய்வாராக இருக்கும்' என்று எண்ணி விடாதீர்கள். அதுவும் இல்லை.. செல்வாவுக்கு குடிப்பழக்கமே கிடையாது..!! இது வேறு மாதிரி பிரச்னை..!! "ஆஃப் தந்தூரி சிக்கன் வாங்குனா.. போதும்லண்ணா..?" "ஃபுல்லாவே வாங்கிடு அசோக்..!! அதுல என்ன கஞ்சத்தனம்..?? அப்புறம்.. ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிட்டிருக்கியா நீ..?" "ம்ம்.. சாப்பிட்டிருக்கேண்ணா..!!" "இருந்தாலும் இந்த ஹோட்டல்ல சாப்பிட்டிருக்க மாட்ட… அதுவும் ஒன்னு சொல்லிடு.." "நெறைய ஆர்டர் பண்ற மாதிரி இருக்குண்ணா.. வேஸ்ட்டா போயிட போகுது.." "வேஸ்ட்லாம் ஆவாது.. நீ ஆர்டர் பண்ணு..!!" அசோக் செல்வாவையே பரிதாபமாக பார்த்தான். செல்வா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகும் நிறைய உயிரினங்களின் பெயரையும், அவற்றின் உடல் உறுப்புகளின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்டர் குறித்துக்கொண்டவனின் முகம் அகலமாகிக் கொண்ட சென்றது. எல்லாவற்றையும் பார்சல் கட்டிக்கொண்டு இருவரும் அறைக்கு திரும்பினார்கள். அசோக் ஒருமாதிரி நொந்துபோன குரலில் சொன்னான். "சரக்கு நூறு ரூபாய்தான்.. சைடிஷ் எழுநூறு ரூபாய்க்கு வாங்கிருக்குண்ணா.." "இருக்கட்டும் அசோக்.. என்னைக்கோ ஒருநாள் குடிக்கிற.. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்காத..!! காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..!!" "ஓஹோ.. அப்படியா..? உங்க பர்த்டே ட்ரீட் குடுக்குறப்போ.. காசை பத்தி வேற மாதிரி சொன்னீங்களே..?" "என்ன சொன்னேன்..?" "ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் அசோக்குனு.." "அப்படியா சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லையே..?" செல்வா அப்பாவியாய் நடிக்க, அசோக்கால் அவரை முறைத்து ஒரு பார்வை மட்டுந்தான் பார்க்க முடிந்தது. அடுத்தவன் காசு மட்டும் இன்னைக்கு இன்கமிங் நாளைக்கு அவுட்கோயிங்.. ஆனா இவர் காசை மட்டும் கவுன்ட் பண்ணித்தான் காவேரில கடாசுவாரு..!! மனதுக்குள் நொந்து கொண்டான்..!! அறைக்கு திரும்பியதும், கட்டிக்கொண்டு சென்றதை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அசோக் விஸ்கியையும்.. செல்வா சைடிஷையும்..!! என்னவோ.. நாளைக்கே உலகம் அழிந்து விடப்போவது போல.. செல்வா சிக்கனையும், மட்டனையும் கடித்து குதறினார். அவர் மிச்சம் வைத்த பீஸ்களை கடித்தபடியே அசோக் விஸ்கியை விழுங்கினான். இறுதியாக ஒரு மடக்கு விஸ்கியும், ஒரே ஒரு சிக்கன் பீஸும் மிச்சம் இருந்தது. அசோக் அந்த ஒரு மடக்கையும் உள்ளே ஊற்றிவிட்டு தேடியபோது, அந்த சிக்கன் பீஸ் செல்வாவின் வாய்க்குள் அரைபட்டு கூழாகியிருந்தது.அசோக் செல்வாவை சற்றே வெறுப்புடன் பார்த்தான். அவர் அவனை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. 'ஏஏஏஏவ்...!!!' என்று ஒரு ஏப்பத்தை வெளிப்படுத்தியவாறு, சுவரில் சாய்ந்துகொண்டார். ஒரு குச்சியை எடுத்து பல்சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊத.. அவன் கண்கள் செருகின.. தலை சுழன்றது..!! இருவருமே இப்போது ஒரு மயக்கத்தில் இருந்தார்கள். அசோக்கிற்கு மது மயக்கம். செல்வாவிற்கு உண்ட மயக்கம்..!! அப்போதுதான் அசோக் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை தயங்கி தயங்கி செல்வாவிடம் கேட்டான். "அண்ணா.." "ம்ம்.." "எனக்கு ஒரு சந்தேகம்.. உங்ககிட்ட கேட்கவா..?" "கேளு.." "காதலிச்சாதான் கவிதை வருமா..?" "ஏன்.. காப்பியடிச்சா கூட வருமே..?" அவர் வெடுக்கென சொல்ல, அசோக் அவருடைய பதிலில் அப்படியே ஆடிப்போனான். "அண்ணா.. எப்படிணா இப்டிலாம்..?? பின்னிட்டீங்க..!! நீங்க இதுவரை சொன்ன தத்துவத்துலயே இதுதான் சூப்பர்..!!" "தேங்க்யூ.. தேங்க்யூ..!! அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்..??" "அ..அது.." "எது..?" "அந்தப் பொண்ணு இருக்குல்லண்ணா..?" "கண்மணியா..?" "அடச்சை.. திவ்யாண்ணா..!!" "ம்ம்.. ஆமாம்.. இருக்கு..!! அதுக்கென்ன..?" "போன வாரம் அவகிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவளுக்கு காதலனா வரப் போறவன் எப்படி இருக்கணும்னு.."
"சரி.." "என்னென்னவோ சொல்றாண்ணா அவ..!! தண்ணியடிக்க கூடாதாம்.. தம்மடிக்க கூடாதாம்.. சைட் அடிக்க கூடாதாம்.. சாஃப்ட்வேர் பையன் வேணாமாம்.." "ஓஹோ..!!" "எ..எனக்கு.. எனக்கு எல்லா கண்டிஷனும் ஓகேண்ணா.. நான் மாத்திக்குவேன்.. தம்மு, தண்ணி எல்லாம் விட்ருவேன்.. என் வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு.. வேற வேலை தேடிப்பேன்..!! ஆனா.. அவ.. அவளுக்கு வரப் போறவனுக்கு கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்னு சொல்றாண்ணா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.. எனக்கு வர மாட்டேன்னுது..!! என்னண்ணா பண்ணலாம்..?" அசோக் அந்த மாதிரி ஒரு கேள்வியை முன்வைத்ததும், செல்வா அமைதியானார். தீவிரமாக எதையோ சிந்தித்தார். அப்புறம் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு ஆரம்பித்தார். "அசோக்.. நான் ஒரு கதை சொல்றேன் கேக்குறியா..?" "கதையா..???" அசோக் சற்றே மிரள, செல்வா அதை கண்டுகொள்ளாமல் ஆரம்பித்தார். "எங்க கிராமத்துல ரமா ரமான்னு ஒரு பொண்ணு இருந்தது.. அழகான பொண்ணு, அப்பாவிப் பொண்ணு.. வெகுளிப் பொண்ணு, வெள்ளந்தியான பொண்ணு..!! அப்போ.. எங்க ஊருக்கு ட்ராமா போடுறதுக்கு ரமேஷ்னு ஒருத்தன் வந்தான்.. தார்ல குளிச்ச காட்டெருமை மாதிரியே இருப்பான்..!! அவன் வாயை தெறந்தா.." "கப்படிக்குமா..?" "இல்ல.. கவிதையா கொட்டும்..!! அவனுக்கும் ரமாவுக்கும் எப்படியோ பழக்கம் ஆயிடுச்சு.. அவன் ரமாகிட்ட கவிதையாத்தான் பேசுவான்.. 'எருமை சாணம் அள்ளிட்டியா'ன்னு கேக்குறதை கூட.. எதுகை மோனையோடத்தான் கேட்பான்..!! ரமா அவன் பேச்சுல மயங்குனா.. அவனை கண்மூடித்தனமா காதலிக்க ஆரம்பிச்சா..!!" "ம்ம்.. அப்புறம்..?""ஒருநாள் ரெண்டு பெரும் ஊரை விட்டு ஓடுனாங்க.. ரயில்ல போயிட்டு இருக்குறப்போவே.. எதுத்த சீட்டுல உக்காந்திருக்குற பொண்ணை ரமேஷ் உஷார் பண்ணிட்டான்.. ரமா கொண்டு வந்த நகையை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு.. எதுத்த சீட்டு பொண்ணோட.. பாதி வழியிலயே ஜூட் வுட்டுட்டான்..!! மெட்ராஸ் வந்து முழிச்சு பாத்த ரமா.. அனாதையா நடுத்தெருவுல நின்னா..!! இப்படி ஒருத்தன் பேசிப்பேசியே ஏமாத்தி.. நம்ம வாழ்க்கையை சீரழிச்சுட்டானேனு.. மனம் குமுறிப்போய் நின்னா..!! அப்புறம் அவளை பாபுன்னு ஒரு நல்ல மனுஷன் ஏத்துக்கிட்டான்.. அது வேற கதை.." "அண்ணா.. இந்தக்கதையை நான் ஏதோ பாரதிராஜா படத்துல பாத்திருக்கேன்.." அசோக் அப்படி சொல்ல, செல்வா இப்போது பம்மினார். "ஓ..!! அந்தப்படத்தை நீ பாத்துட்டியா..?" "ஏண்ணா இப்படி இருக்குறீங்க..? என் உயிர்த்தோழன் கதையை என்கிட்டயே விடுறீங்க..?" "சரி சரி.. அதை விடு.. நான் எதுக்கு இந்தக்கதையை சொல்ல வந்தேன்னு உனக்கு புரியுதா..?" "எதுக்கு..??" "நீ தண்ணியடிக்கிறது, தம்மடிக்கிறது, கவிதை எழுத தெரியாம இருக்குறது.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்.." "அப்புறம்.. வேற எது மேட்டர்..?" அசோக் கேட்டதும் செல்வா ஒரு கணம் அமைதியானார். அவன் முகத்தை ஒருமாதிரி கூர்மையாக பார்த்தார். அப்புறம் அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார். "நீ திவ்யாவை எந்த அளவுக்கு உண்மையா லவ் பண்றேன்றதுதான் மேட்டர்..!! நீ அவளை எந்த அளவுக்கு லவ் பண்ற..?" "அண்ணா.. உயிரையே கொடுப்பேண்ணா.. சின்ன வயசுல இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..!!" "அப்புறம் என்ன..? தைரியமா போய் உன் லவ்வை அவகிட்ட சொல்லு..!! உன் காதல் உண்மையா இருந்தா.. கண்டிப்பா அது சக்சஸ் ஆகும்..!!" சொல்லிவிட்டு செல்வா மீண்டும் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். விட்டத்தை வெறித்து பார்த்தபடி பல் குத்த ஆரம்பித்தார். அசோக்கும் இப்போது அமைதியானான். சிகரெட் புகையை நுரையீரலுக்கு அனுப்பியவாறே, சிந்தனையில் ஆழ்ந்தான். செல்வா சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. 'தனது காதல் உண்மையானதுதானே..? அப்புறம் ஏன் இந்த தயக்கம்..?' உண்மைக்காதலை உடைத்து சொல்ல.. ஏன் பயம் கொள்ள வேண்டும்..?? காதல் செய்பவர்களுக்கு அவர்களுடைய காதலை தவிர வேறு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது..? சிகரெட் விரலை சுட ஆரம்பித்ததும், அசோக் அதை ஆஷ் ட்ரேயில் வைத்து நசுக்கினான். எங்கோ உறைந்து போன பார்வையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த செல்வாவிடம் மெல்ல கேட்டான். "அப்போ.. நாளைக்கே திவ்யாட்ட என் லவ்வை சொல்லிடவாண்ணா..?" "நீ சொல்றியோ இல்லையோ.. நான் சொல்லப்போறேன்.." அவர் பதிலை கேட்டு "அண்ணா..." என அசோக் அலறினான். "ஐயையே.. நான் நாளைக்கு கண்மணிட்ட என் லவ்வை சொல்லப் போறேன்னு சொன்னேன்பா..!!" "நல்லவேளை.. நான் பயந்தே போயிட்டேன்..!!" "நீ எதுக்கு பயப்படுற அசோக்..? திவ்யா உன்னைத்தான் லவ் பண்றா.. அவ கண்ணுல நான் அந்தக்காதலை பார்த்தேன் அசோக்.. தைரியமா போய் சொல்லு.. அவ உன் லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!!" "ம்ம்.. சரிண்ணா.." "ம்ஹ்ஹ்ம்ம்.. எனக்குத்தான் நாளைக்கு என்னாகப் போகுதோ தெரியலை.." வருத்தமான குரலில் சொன்ன செல்வாவை பார்க்க, அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனுஷன் காதலுக்காக ரொம்ப ஏங்குகிறார் என்று தோன்றியது. அவ்வளவு நேரம் தன்னை உற்சாகப்படுத்திய அவருக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணினான். "நீங்களும் ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்கண்ணா.. கண்டிப்பா கண்மணியும் உங்க லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!! தைரியமா போய் சொல்லுங்க..!!" "நெஜமாவா சொல்ற..?" உடனே, சோர்ந்து போயிருந்த செல்வாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். "ஆமாண்ணா.. அவளும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லப் போறா பாருங்க..!!" "அசோக்.. நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுனா.. நான் உன் சக்கரைக்கு வாய் போடுறேன்.." "அண்ணா...!!!!!" அசோக் இப்போது பெரிதாக அலறினான். "ச்சை.. ஸாரி அசோக்.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு..!! உன் வாய்க்கு சக்கரை போடுறேன்..!!" "சரக்கடிச்சது நான்.. டங் ஸ்லிப் ஆகுறது உங்களுக்கா..? சைடிஷ் தின்னதுக்கே.. ரொம்ப உளர்றீங்கண்ணா நீங்க..!!"அடுத்த நாள் மாலை.. அசோக் சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டான். திவ்யாவிடம் இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்திருந்தான். அவள் ஐந்தரைக்கெல்லாம் கல்லூரியில் இருந்து திரும்பி விடுவாள். அதற்குள் தானும் வீட்டை அடைந்து விடவேண்டும். அவளை எங்காவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும். மனதில் உள்ள காதலை துணிந்து சொல்லிவிட வேண்டும்..!! தனது காதலை எப்படி அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்கும்.. இரவே அவன் ஒத்திகை பார்த்துவிட்டான்..!! வார்த்தைகளை தேடித்தேடி தேர்ந்தெடுத்து.. மாலை போல கோர்த்து.. மனதுக்குள் வைத்திருந்தான்..!! அவ்வாறு அவன் ஒத்திகை பார்க்கையிலே.. சினிமாவில் நாயகர்கள் காதல் சொல்லும் காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. காதலை சொல்லுகையில் ஒரு கார்டும், ஒற்றை ரோஜாவும் கைவசம் இருந்தால் நல்லது என்று தோன்றியது..!! அவன் தங்கியிருக்கும் அறைக்கு அருகாமையிலேயே ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ஆபீசில் இருந்து கிளம்பியதும் அசோக் நேராக அங்கேதான் சென்றான். ஆறு தளங்கள் கொண்ட அந்த காம்ப்ளக்ஸ்சின் நான்காவது தளத்தில்தான் அந்த கிரீட்டிங் கார்ட் அண்ட் கிஃப்ட் ஷாப் இருக்கிறது. விதவிதமான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்பு பொருட்களும்.. குவித்தும் அடுக்கியும் வைக்கப்பட்டிருந்த.. மிகப்பெரிய கடை..!! அசோக் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் செலவழித்து அந்த அட்டையை தேர்வு செய்தான். மாலை நேர மலையோரத்தில்.. நிழலுருவாய் தழுவிக்கொள்ளும்.. காதலனும் காதலியும்..!! உள்ளே திறந்து பார்த்தால்.. இரத்த நிறத்தில் துடிக்கும் இருதயம்..!! அருகிலேயே.. அசோக் திவ்யாவிடம் சொல்ல நினைத்த வார்த்தைகளுக்கு நெருங்கி அர்த்தம் வரக்கூடிய.. ஆங்கில சொற்றொடர்கள்..!! இறுதியாக கீழே.. இட்டாலிக் ஸ்டைலில்.. I Love You..!! பார்த்ததுமே பிடித்துப்போக, அசோக் அதை எடுத்துக் கொண்டான். அநியாய விலை கேட்ட, பில் போடும் பெண்ணிடம், புன்னகை மாறாமல் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். பில்லிங் கவுண்டருக்கு அருகிலேயே, விற்பனைக்கு இருந்த சிவப்பு ரோஜா ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு, "இதையும் பில்-ல சேர்த்துக்கோங்க..!!" என்றான். இரண்டையும் ஒரு கவரில் வைத்து வாங்கிகொண்டான். தன் தோளில் கிடந்த பேக் திறந்து உள்ளே வைத்தான். பேகை மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டு, 'ஆல் தி பெஸ்ட்' என்று புன்னகைத்த அந்த பெண்ணுக்கு, ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக பட்டன் ப்ரஸ் செய்துவிட்டு காத்திருந்தான். அவனுடைய இதயம் முழுக்க ஒருவித படபடப்பும், ஒருவித நிம்மதியும் சரிவிகிதத்தில் நிறைந்திருந்தது. தனது காதலுக்கு திவ்யா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தினால் ஏற்பட்டது அந்த படபடப்பு..!! ஆனால்... இத்தனை நாளாய் மனதுக்குள்ளேயே காதலை பூட்டி பூட்டி வைத்து அனுபவித்த வேதனை.. இன்றோடு தீரப்போகிறது என்ற நினைவு.. அதே அளவு நிம்மதியையும் அசோக்கிற்கு கொடுத்திருந்தது..!!லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டான். கும்பலாக இருந்தது லிஃப்ட்..!! அசோக்கிற்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைத்தது. நெருக்கியடித்து நின்றுகொண்டான். அந்த கார்டை இன்னொரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது. பேக் திறந்து கார்டையும் ரோஸையும் எடுத்தான். கார்ட் பிரித்து.. உள்ளே எழுதியிருந்த வரிகளை இன்னொரு முறை வாசித்தான்..!! தன் இதயத்தில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்கப் போகும் அந்த வரிகளை பார்த்ததும்.. அவனுடைய இதழ்களில் அவனையும் அறியாமல் ஒரு புன்னகை..!! எங்கோ கனவுலகில் மிதந்து கொண்டிருந்த அசோக், க்ரவுண்ட் ஃப்ளோர் வந்து, ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு இறங்கிய போதுதான்.. நனவுலகுக்கு திரும்பினான். எல்லோருக்கும் வழிவிட்டு லிஃப்ட் உள்ளேயே ஒதுங்கி நின்றான். கையில் இருந்த கார்டையும், ரோஸையும் திரும்பவும் பேகுக்குள் திணித்தான். பேகை தோளுக்கு கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன், அதிர்ந்து போனான்..!! லிஃப்டில் இருந்து எல்லோரும் இறங்கி சென்றிருக்க, அந்தப்பெண் மட்டும் இறங்காமல், இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்.. அவனுடைய அக்கா... சித்ரா..!! அவளுடைய கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை..!! "அ..அக்கா.. நீ.. நீ எங்க இங்க..?" என்று தடுமாறினான். "கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது.." சித்ராவின் குரல் ஒருமாதிரி இறுக்கமாக ஒலித்தது. "எ..எந்த ஃப்ளோர்ல ஏறுன..?" கேட்டுக்கொண்டே அசோக் லிஃப்ட் விட்டு வெளியே வர, "சிக்ஸ்த் ஃப்ளோர்ல..!!" பதிலளித்துக்கொண்டே சித்ராவும் வெளியே வந்தாள். "ஓ.. நான் ஏறுனப்போவே உள்ள நின்னுட்டு இருந்தியா..? நான் கவனிக்கவே இல்ல.." "ம்ம்.. ஆமாம்.. நீ என்ன இந்தப்பக்கம்..?" "நா..நான்.. நான் சும்மா... சும்மாதான்க்கா வந்தேன்..!!" "ம்ம்.. பைக்லதான வந்த..?" "ஆ..ஆமாம்.. வெளில நிப்பாட்டிருக்கேன்.." "வா.. என்னை வீட்டுல விட்ரு..!!" சித்ரா சொல்லிவிட்டு விடுவிடுவென முன்னால் நடக்க, அசோக் பரபரவென தன் தலையை சொறிந்தவாறே அவளுடைய முதுகை பார்த்துக் கொண்டிருந்தான். 'பாத்திருப்பாளோ..? அவள் பேச்சே சரியில்லையே..? மேலே இருந்து கீழே வரும் வரை சைலன்ட்டாக என்னையே வாட்ச் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறாளே..? பாத்திருப்பாள்..!! அப்புறம் ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாள்..?? ஒருவேளை பாத்திருக்க மாட்டாளோ..?? வேறு ஏதோ எரிச்சலை என்னிடம் காட்டுகிறாளோ..??' எதுவும் புரியவில்லை அவனுக்கு..!!
அசோக் பார்க்கிங் ஏரியா சென்று பைக்கை கிளப்பிக் கொண்டு வந்தான். சித்ரா காம்ப்ளக்ஸ் வாசலில் தயாராக காத்திருந்தாள். அவளுக்கு முன்னால் வந்து அசோக் பைக்கை நிறுத்தியதும் ஏறிக்கொண்டாள். அவனுடைய தோளைப் பற்றிக்கொண்டாள். அக்கா ஏறிக்கொண்டதும் அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கினான். அவளுடைய அப்பார்ட்மன்ட்ஸ் இருக்கும் சாலையில் வண்டியை விரட்டினான். "ஓவர் ஸ்பீட் ஒடம்புக்கு நல்லது இல்ல தம்பி.. கொஞ்சம் மெதுவா போ..!!" சித்ரா இரட்டை அர்த்தத்தில் சொல்ல, அசோக்கிற்கு 'ஜிலீர்...!!!' என்று மனதுக்குள் ஒரு நடுக்கம்..!! அவனுடைய வலக்கை ஆட்டோமேடிக்காக வண்டியின் வேகத்தை குறைத்தது..!!
No comments:
Post a Comment