அசோக்கிற்கும் ப்ரியாவிற்குமான பிரச்சினை நாளொரு மோதலும், பொழுதொரு சண்டையுமாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர்கள் சண்டையுடன் சேர்ந்து அவர்களுடைய டீம் டெவலப் செய்த மென்பொருளும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது. செண்பகம் வந்து சென்ற இரண்டாவது நாள்.. முதல் கட்டமாக சில அடிப்படை அம்சங்கள் கொண்ட மென்பொருளை க்ளயண்டிற்கு டெலிவர் செய்தார்கள். க்ளையன்ட் நிர்ணயித்திருந்த காலக் கெடுவுக்குள்ளேயே அதை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய கம்பெனி அதை பெரும் வெற்றியாக கொண்டாடியது. க்ளையன்ட் அந்த மென்பொருளின் தரத்தில் மகிழ்ந்து போய் அனுப்பிய வாழ்த்து செய்தி, அவர்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இரண்டு பேரை குறிப்பிட வேண்டும். முதல் காரணம் ப்ரியா..!! அசோக் அவளுடைய ஈகோவை தூண்டி விட்டிருந்ததில் அவள் ஒரு வேகம் கொண்டிருந்தாள். இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறியில் இருந்தாள். அவள் ஆன்சைட் சென்றதால் கிடைத்த க்ளையன்ட் கம்பனி பிசினஸ் டீமின் அறிமுகம், ப்ராஜக்டை கையாள்வதில் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக, அவர்களை இங்கிருந்து அவளால் அணுக முடிந்தது. அதே மாதிரி இங்கே டீமில் இருப்பவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் எனினும், வேலை விஷயத்தில் ரொம்பவே அக்ரஸிவாக நடந்து கொண்டாள். குவாலிட்டி, டெட்லைன் என்ற இரண்டு விஷயங்களிலும் மிக கடுமையாக நடந்து கொண்டாள். 'யு ஆர் டூயிங் எ குட் ஜாப் ப்ரியா..!!' என்று பாலகணேஷ் தனது கட்டை விரலை உயர்த்தி அவளை அடிக்கடி பாராட்டுவார். வெற்றிக்கு இரண்டாவது காரணம் வேறு யாரும் அல்ல.. அசோக்கேதான்..!! அவனுக்கு ப்ரோமோஷன் கிடைக்காதது அவனிடம் ஒரு கோவத்தை உண்டு பண்ணியிருந்தாலும், அந்த கோவத்தை அவன் வேலையில் காட்டவில்லை. எப்போதும் போலவே சின்ஸியராக வேலை பார்த்தான். அவனுடைய மாட்யூலை மேற்பார்வையிட்ட கிறிஸ்டோஃபர் 'இட்ஸ் ப்ரில்லியன்ட் மேன்..!!' என்று மனமுவந்து பாராட்டினான். ப்ரியா லீட் ஆனது அசோக்கிற்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், 'அவள் தோற்க வேண்டும்' என்று குறுக்கு புத்தியுடன் அவன் நடந்து கொள்ளவில்லை. டீம் ஸ்ப்ரிட் அவனை விட்டு விலகவில்லை. ப்ரியாவைத் தவிர மற்றவர்கள் உதவி என்று வருகையில், எப்போதும் போலவே புன்னகையுடன் உதவி செய்தான். வேலையை முடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது, கைகொடுத்தான்..!! சுருக்கமாக சொல்லப்போனால்.. ப்ரியாவின் டீம் மேனேஜ்மன்ட் திறமையும்.. அசோக்கின் டெக்னிக்கல் அறிவுமே.. ப்ராஜக்டின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்ட வைத்தன..!! டீமில் இருக்கும் அனைவரையும் பாராட்டி கம்பனி மேனேஜ்மென்ட் வாழ்த்து சொன்னது. ப்ரியாவுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாராட்டு..!! முதல் இன்னிங்ஸிலேயே செஞ்சுரி அடித்த திருப்தி ப்ரியாவிற்கு..!! ஆனால் வழக்கம்போல சிறுபிள்ளை மாதிரி அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை.. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..!! அசோக்கிடம் கற்றுக்கொண்ட பாடம், அவளிடம் ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்..!! அவ்வளவு சந்தோஷத்திலும் கால்கள் தரையில் பட நிற்பது ப்ரியாவிற்கு ஒரு புதுவித உணர்வை கொடுத்தது..!! பிடித்திருந்தது அவளுக்கு அந்த உணர்வு..!! '"எல்லாம் டெவலப் பண்ணினது நாம.. இவளுக்கு மட்டும் ஓவர் பாராட்டு..!!" என்று அசோக் ஹரியிடம் சொல்லி கிண்டல் செய்தது காதில் விழுந்தும், விழுந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை அவள். தலையை குனிந்தவாறே அவர்களை கடந்து சென்றாள். தனது அறைக்கு சென்று.. கண்ணாடி முன் நின்று.. தனிமையில்.. தன்னைத்தானே பார்த்து.. 'கலக்குறடி ப்ரியா..!!' என்று மட்டும் சொல்லிக்கொண்டாள். இரண்டாவது கட்ட டெவலப்மன்ட் வேலைகளை ஆரம்பித்தபோதுதான், க்ளயன்ட்டிடம் இருந்து ஒரு புதுவித இம்சை வந்தது..!! கடலை எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கும்போதே 'நல்லெண்ணைதான..?' என்று கேட்பார்கள் என்று சொன்னேன் அல்லவா..?? அது மாதிரியான இம்சை..!! ஒப்பந்தத்தில் இருந்த அவர்களது தேவைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.. புதிதாக சில அம்சங்களை சேர்க்க விரும்பினார்கள்..!! 'பார்வதி ஓமனக்குட்டன் பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிற மாதிரி ஒரு ஃபைட் இருந்தா நல்லா இருக்கும்' என்பது மாதிரி..!! ரெகயர்மன்ட் சேஞ்ச்..!! க்ளையன்ட் ப்ரபோஸ் செய்த ரெகயர்மன்ட் சேஞ்ச் கொஞ்சம் கிரிட்டிகலான விஷயம்..!! இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்திருந்த மென்பொருளின் பல அம்சங்களை பாதிக்க கூடியது..!! கவனமாக கையாளப்பட வேண்டியது..!! க்ளையண்டின் யோசனையை இம்ப்ளிமன்ட் செய்வதற்கு முன்பான இம்பாக்ட் அனலைஸிசும்.. இம்ப்ளிமன்ட் செய்ய எந்தவிதமான அணுகுமுறையை பின்பற்றுவது என்பதை முடிவு செய்வதும்.. ப்ரியாவின் தலையில் வந்து விழுந்தது..!! திறமைக்கு சவாலான இந்த புதுவித வேலை ப்ரியாவை திணற வைத்தது..!! உதவிக்கு முதலில் அசோக்கிடம்தான் ஓடி வந்தாள்..!! "ஹேய்.. இந்த இம்பாக்ட் அனலைஸிஸ்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்..!!" ப்ரியா கெஞ்சலாக கேட்க,"ஹ்ஹ.. என்ன.. உன் வேலையை என் தலைல கட்டப்பாக்குறியா..?? அடுத்தவங்க வேலையை பாக்குறதுக்கு.. எனக்கு என்ன எக்ஸ்ட்ரா சம்பளமா தர்றாங்க..??" அசோக் பிகு செய்தான். "ஏன்.. உனக்கு எக்ஸ்ட்ராத்தான தர்றாங்க..??" "என்ன சொல்ற..??" "ஆமாம்.. நான் டெக்லீட்னு பேர்தான்.. என்னை விட உனக்குத்தான ஸாலரி அதிகம்..??" "அதுலாம் நீ சொல்லப்படாது..!! என்னதான் ஸாலரி அதிகமா இருந்தாலும்.. டெக்லீட்ன்ற அந்த கெத்து வருமா..?? எல்லாரையும் என்ன மெரட்டு மெரட்டுற..??" "ப்ச்.. இதுல என்ன கெத்து இருக்குது..?? உனக்கு குடுத்த வேலையை நீ பாக்குற.. எனக்கு குடுத்த வேலையை நான் பாக்குறேன்..??" "ஹ்ம்ம்.. நானும் அதைத்தான் சொல்றேன்..!! போ.. உனக்கு குடுத்த வேலையை நீயே பாரு.. என் வேலையை நான் பாக்குறேன்..!!" என்று கூலாக சொன்ன அசோக், "ஏற்கனவே ஹெல்ப் பண்ணதுக்கே நான் படுற பாடு பத்தாதா .." என்று வாய்க்குள் முனகினான். அவன் என்ன முனகினான் என்பதை ப்ரியாவால் தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால் என்ன சொல்லியிருப்பான் என்று ஓரளவு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்களை இடுக்கி அவனையே முறைத்துப் பார்த்தாள். "ஓகே.. நானே பாத்துக்குறேன்.. எனக்கு எவன் ஹெல்ப்பும் வேணாம்..!!" ப்ரியா வீராப்பாக சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். 'ஹேய்.. ப்ரியா..' என்று அசோக் அழைத்ததை மதியாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள். 'எவன் ஹெல்ப்பும் வேணாம்..' என்று ப்ரியா அசோக்கிடம் சொல்லியிருந்தாலும், அவளால் தனியாக அந்த வேலையை முடிக்க இயலவில்லை. வேறு டீம்களை சார்ந்த டெக்லீட்ஸ் சில பேரிடம் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அவர்களுடைய நட்பை இப்போது நாடினாள். இந்த மாதிரியான வேலையில் கவனமாக செய்ய வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டாள். அதில்லாமல் இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்த மென்பொருளைப் பற்றிய முழு அறிவும் அவளுக்கு தேவைப்பட்டது. வீட்டுக்கு சென்றும்.. இரவில் பலமணி நேரங்கள் தனியாக லேப்டாப் முன்பு அமர்ந்து.. அடுத்தவர்கள் எழுதிய கோடை அனலைஸ் செய்து அண்டர்ஸ்டாண்ட் செய்து கொண்டாள்..!! அந்த ஆராய்ச்சி வேலையை முடிக்க அவளுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன. நான்கு நாட்களின் முடிவில்.. ஒரு அதிகாலை நேரத்திலேயே.. பெரிய அளவிலான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ரியா தனது அனலைசிஸ் பற்றியும், பின்பற்ற போகிற அப்ரோச் பற்றியும் எல்லோருக்கும் விளக்குவதற்காக ஒரு பிரசன்டேஷன் தயார் செய்திருந்தாள். அதை எல்லோருக்கும் அவள் விளக்கி சரியான அணுகுமுறை என்று சர்டிபிகேட் வாங்க வேண்டும்..!! சற்றே பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் அது..!! ப்ரியாவால் லீட் செய்யப்படுகிற டெவலப்மன்ட் டீம் மட்டும் இல்லாமல்.. QA டீம்.. பிசினஸ் டீம்.. ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்.. அந்தந்த டீம்களின் மேனேஜர்ஸ்.. எல்லாவற்றிற்கும் தலையான பாலகணேஷ் என.. ஹாலில் எக்கச்சக்கமான பேர் இருந்தனர்..!! இதில்லாமல்.. யூ.எஸ்சில் இருந்து களயன்ட் கம்பனியின் சில முக்கியமான புள்ளிகளும்.. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக.. அந்த மீட்டிங் அட்டன்ட் செய்தனர்..!! ப்ரியா ஒரு மணி நேரத்துக்கு அந்த பிரசண்டேஷன் கொடுத்தாள். தன்னுடைய ஆய்வை பற்றியும்.. க்ளயன்ட்டின் விருப்பத்தை செயல்படுத்த எளிமையான அணுகுமுறையாக தான் கருதுவதையும்.. தெளிவாக.. நிதானமாக.. அழகிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தாள்..!! அனைவரும் அமைதியாகவும், கூர்மையாகவும் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!! அசோக் மட்டும் அசுவாரசியமாய் காட்சியளித்தான்..!! பிரசண்டேஷன் முடிந்து.. 'எல்லோருக்கும் புரிந்ததா.. அனைவருக்கும் இதில் சம்மதம்தானா.. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறாதா..??' என ப்ரியா உதட்டில் ஒரு புன்னகையுடன் ஃபார்மலாக கேட்ட போதுதான் அசோக்.. "ஐ கெஸ் தேர் இஸ் ஸம் ஃப்ளா இன் திஸ் அப்ரோச்..!!" என்று குரல் கொடுத்துக்கொண்டே எழுந்தான்.. 'உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது..!!' என்று நக்கீரர் எழுந்த மாதிரி..!! அவன் அவ்வாறு எழுந்ததுமே ப்ரியாவிற்கு அடிவயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது. "என்ன ஃப்ளா..??" என்று உதறலாக கேட்டாள். "லெட் மீ எக்ஸ்ப்ளயின்..!!" என்றவாறு அசோக் மேடை மீது ஏறினான். ப்ரியா கலங்கிப் போனாள். ஹாலில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு காட்டி அவன் பக்கமாய் திரும்பினாள். மேடையில் நின்ற அசோக்கின் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவனுக்கு மட்டுமே கேட்க கூடிய குரலில் கெஞ்சலாக சொன்னாள். "ப்ளீஸ்டா அசோக்.. வேணாண்டா..!!" அவளுடைய கெஞ்சலுக்கு பதிலாக அசோக் ஒரு வசீகர புன்னகையை மட்டுமே கொடுத்தான். கையில் ஒரு மார்க்கர் எடுத்துக்கொண்டு வொயிட் போர்டை நெருங்கினான். அவ்வளவு நேரம் ப்ரியா விளக்கியவற்றை சுருக்கமாக மீண்டும் சொன்னவன், அதில் தான் பிழையாக கருதும் விஷயத்திற்கு உடனடியாக வந்தான். அவன் எந்த விஷயத்தை குறிப்பிடுகிறான் என்று தெரிந்ததுமே, ப்ரியாவிற்கு அதில் தான் செய்திருக்கிற தவறும் பட்டென புரிந்து போனது.. அவளுடைய நெஞ்சுக்குழியை பக்கென எதுவோ கவ்வியது போல இருந்தது.. பதறிப்போனாள்..!! "அசோக் ப்ளீஸ்.. வேணாண்டா.. எல்லாரும் இருக்காங்க.. என் மானத்தை வாங்கிடாத..!!" என்று ரகசியமாக அவனிடம் இறைஞ்சினாள். அசோக் கண்டுகொள்ளவே இல்லை. தான் சொல்ல வந்ததை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் ப்ரியா சொன்னதை சரி என்றே கருதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும், இப்போது அசோக்கின் பேச்சில் ஆர்வமாகி.. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ப்ரியா மட்டும் மிரண்டு போனவளாய், எல்லோரையும் பரிதாபமாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். 'ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா..' என்று சன்னமான குரலில் அசோக்கை கெஞ்சிக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில்.. அசோக் தனது கெஞ்சலுக்கு காது கொடுப்பான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு போயிற்று..!! 'இன்னும் கொஞ்ச நேரம் விட்டால்.. இவன் எனது தவறை எல்லார் முன்பும் வெளிச்சம் போட்டு காட்டி விடுவான்.. ப்ரியாவின் திறமை இவ்வளவுதானா என்று எல்லோரும் என்னை கேலியாக பார்ப்பார்கள்.. இப்போது என்ன செய்வது..??' என்று அவசரமாக யோசித்தாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அசோக் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடையில் புகுந்து, "ஹேய்.. ஸாரி டூ இன்டரப்ட்.. ஆக்சுவல்லி.. வீ ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்.. ஷேல் வீ டேக் திஸ் ஆஃப்லைன்..??" (குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த மீட்டிங்கிற்கான நேரம் முடிந்து விட்டது.. நாம் இதை தனியே பேசி தீர்வு காணலாமா..??) என்று புன்னகை தவழும் முகத்துடன், ஸ்டைலான ஆங்கிலத்தில் எல்லோரையும் பார்த்து கேட்டாள். அவள் அவ்வாறு திடீரென கேட்டதும் அசோக் உட்பட அத்தனை பேரும் இப்போது அமைதியாயினர். எல்லா டீம்களின் மேனஜர்களும் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அனைவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருக்கும் க்ளையன்டின் விருப்பத்தை எதிர்பார்த்தார்கள். ஒரு சில வினாடிகள் யோசித்த க்ளையன்ட் டீமும் 'ஓகே..!!' என்று ஒருமனதாக கரகர குரலில் ஸ்பீக்கரில் சொல்ல.. ப்ரியா இப்போது கண்கள் மூடி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஓரிரு விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை திருப்பி.. அசோக்கை ஒரு உஷ்ணப்பார்வை பார்த்தாள்..!! அவனோ உதட்டில் கசியும் அழகான ஒரு புன்னகையுடன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! "வெல்டன் ப்ரியா.. கலக்குற போ..!!" என்று சன்னமாக சொன்னவாறே கையில் இருந்த மார்க்கரை ஓரமாக தூக்கிப் போட்டான். மீட்டிங் ஹாலில் இருந்த அனைவரும் கொத்து கொத்தாய் எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறினர். அனைவரும் ப்ரியாவை கடக்கையில் 'தேங்க்ஸ் ப்ரியா..' என்றனர். மேனேஜர்கள் 'குட் செஷன் ப்ரியா..' என்று பாராட்டினர். எல்லோருக்கும் ப்ரியா அழகாக ஒரு புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தாள். அசோக் மட்டும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். எல்லோரும் வெளியேறியதும், ப்ரியாவின் முகம் பட்டென இறுகிப் போனது. ஓரிரு வினாடிகள் அசோக்கை திரும்பி முறைத்தவள், அப்புறம் தனது லேப்டாப் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அதில் செருகியிருந்த நெட்வொர்க் கேபிள் எல்லாம் ஆத்திரமாக பிடுங்கி எறிந்தாள். கீ போர்டை கோபத்துடன் படபடவென தட்டினாள். அவளுடைய செய்கை அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. மெல்ல நடந்து அவளை நெருங்கியவன்.. "இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ டென்ஷன் ஆகுற..??" என்று கூலாக கேட்டான். "பேசாத..!! நெனச்சதை சாதிச்சுட்டல நீ..??" ப்ரியா சூடாக சொன்னாள். "ஹாஹா.. நான் என்ன நெனச்சேன்..??" "எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்தனும்னு நெனச்ச.. இன்னைக்கு பண்ணிட்ட..!! இப்போ சந்தோஷம்தான.??" "ப்ச்.. அதான் அழகா எஸ்கேப் ஆயிட்டியே.. அப்புறம் என்ன..?? அதில்லாம.. இதுல என்ன அசிங்கம் இருக்கு..??" "ஓஹோ..?? வெளையாட்டா இருக்குல உனக்கு இது..?? ஒருநாள் உனக்கு இது நடந்தாத்தான் உனக்கு புரியும்..!! நான் அவ்வளவு கெஞ்சியும்.. உனக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கம் வரலைல..?? ஹ்ம்ம்.. பாத்துக்குறேன்.. எனக்கும் நேரம் வரும்.. அப்போ பாத்துக்குறேன்..!!" அவளுடைய எச்சரிக்கை அசோக்கை எரிச்சலடைய செய்தது. கூலாக இருந்தவன் பட்டென டென்ஷன் ஆனான். "ஒய். என்ன மெரட்டுறியா..?? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. அப்படி பண்றேன்னு நானும் பாக்குறேன்..!!" என்று எகத்தாளமாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முறைப்பின் விளைவு அடுத்த நாளே வெளிப்பட்டது..!!அந்த வார இறுதியில்.. அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவனுடைய திருமணம் இருந்தது..!! அந்த திருமணத்திற்கு செல்வதற்காக இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று அசோக் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தான். ப்ரியாவும் அதை அப்ரூவ் செய்திருந்தாள்..!! அன்று காலையில் அசோக் ஆபீஸ் வந்து தனது மெயில் பாக்ஸ் திறந்து பார்த்தபோது அந்த அப்ரூவல் ப்ரியாவால் கேன்சல் செய்யப்பட்டிருந்தது..!! அந்த மெயில் பார்த்ததுமே அசோக்கிற்கு ப்ரியா மீது சுருக்கென்று கோவம் வந்தது..!! 'மேரேஜுக்கு சென்று.. பழைய நண்பர்களை எல்லாம் பார்த்து.. நான்கு நாட்கள் களிப்புடன் கழிக்கலாமே..' என்ற தனது திட்டத்திற்கு ஆபத்து வந்துவிட்டதே என்ற கோவம்..!! ப்ரியாவின் அறைக்குள் புகுந்து அவளுடன் சண்டையிட்டான்..!! "இப்போ எதுக்கு தேவை இல்லாம என் லீவை கேன்சல் பண்ணின..??" என்று காட்டமாக கேட்டான். "தேவை இல்லாமலாம் ஒன்னும் பண்ணல.. அந்த என்ஹான்ஸ்மன்ட் உடனே முடிச்சு குடுக்கனும்னு க்ளையன்ட் கேட்டிருக்காங்க..!!" ப்ரியா பொறுமையாக பதில் சொன்னாள். "கேட்டா முடிச்சு குடு..!! அதுக்கு ஏன் என்னோட லீவை கேன்சல் பண்ணின..??" "நீதான் அந்த என்ஹான்ஸ்மன்ட் பண்ணி முடிக்கணும்..!!" ப்ரியா சொல்ல, அசோக் அதிர்ந்தான். "என்ன வெளையாடுறியா..?? கோவிந்த்க்கு அந்த வேலையை குடுக்குற மாதிரிதான ப்ளான்..??" "ஆமாம்.. அப்படித்தான் ப்ளான் பண்ணிருந்தோம்..!! நீ அன்னைக்கு மீட்டிங்ல வாய் வச்சுட்டு சும்மா இருந்திருந்தா.. அவனுக்குத்தான் போயிருக்கும்..!! அன்னைக்கு நீ பெரிய புடுங்கியாட்டம் பேசினல.. இப்போ இந்த என்ஹான்ஸ்மன்டை முடிக்க நீதான் சரியான ஆள்னு க்ளையன்ட் ஃபீல் பண்றாங்க..!!" "க்ளையன்ட் ஃபீல் பண்றாங்களா..?? இல்ல.. இந்த வேலையை அசோக்குக்கு குடுக்கலாம்னு நீயா பேசி கன்வின்ஸ் பண்ணி.. அவங்களை அப்படி ஃபீல் பண்ண வச்சியா..??" "ஏதோ ஒன்னு..!! எனக்கும் இந்த என்ஹான்ஸ்மன்ட்டோட க்ரிட்டிக்காலிட்டி இப்போத்தான் புரியுது..!! இதை பர்ஃபக்டா பண்ணி முடிக்க எனக்கும் உன்னை விட்டா வேற ஆள் இல்ல..!! சேலஞ்சிங்கான வேலை வேணும்னு சும்மா சும்மா வந்து குதிப்பியே.. திஸ் இஸ் யுவர் ஆப்பர்ச்சூனிட்டி.. யூஸ் பண்ணிக்கோ..!! நேத்ராவையும் ஹரியையும் சேர்த்துக்கோ.. ஒன் வீக்ல இதை முடிக்கணும்..!! இது முடிஞ்சாத்தான்.. நெக்ஸ்ட் ஃபேஸ் டெவலப்மன்ட் நாம ஸ்டார்ட் பண்ண முடியும்..!! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சீரியஸ்னஸ்..!!" "எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல..!! எனக்கு அப்ரூவ் பண்ணின லீவ்.. எனக்கு வேணும்..!!" "ப்ச்.. சும்மா சின்னப்புள்ளையாட்டம் அடம் புடிக்காத..!! இந்த வேலையை முடிச்சு குடுத்துட்டு.. ரெண்டு நாளுக்கு பதிலா அஞ்சு நாள் கூட லீவ் எடுத்துக்கிட்டு என்ஜாய் பண்ணு..!! என்ன.. புரியுதா..??" ப்ரியாவின் பதிலில் அசோக் எரிச்சலானான். "என் ஃப்ரண்டோட மேரேஜ் நாளன்னிக்குடி.. அது முடிஞ்சப்புறம் நான் அஞ்சு நாள் லீவ் எடுத்து என்ன பண்றது..?? வீட்ல தனியா உக்காந்து.. என்னமாத்தான் வருது..??" "ஃப்ரண்டோட மேரேஜ்தான.. அதுக்கு ஏன் இப்படி குதிக்கிற.. என்னவோ உன் மேரேஜ்க்கே லீவ் தராதது மாதிரி..??" "என்ன இவ்ளோ கூலா சொல்ற..?? இப்படி எவன் மேரேஜ்ம் அட்டன்ட் பண்ணலைன்னா.. அப்புறம் என் மேரேஜ்க்கு எந்தப்பய வருவான்..?? நானும் பொண்ணும் ஐயரும் மட்டுந்தான் உக்காந்திருக்கணும்..!!"
அவ்வளவு காரசார விவாதத்திலும் அசோக்கின் அந்தப்பேச்சு ப்ரியாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். அந்த சிரிப்பில் அவளுடைய மனசு பட்டென லேசாகி போனது. அசோக்கிடம் எப்போதும் அவளுக்கு இருக்கும் நட்புணர்வு இன்ஸ்டண்டாய் அவளுக்கு திரும்பி வந்தது. ஆனால் அசோக் இன்னும் சீரியசாகத்தான் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவளாய்.. "ஹாஹா.. உனக்கு மேரேஜ்லாம் நடக்கும்னு வேற உனக்கு ஆசை இருக்கா..?? உன்னல்லாம் எவ கட்டிப்பா..??" என்று கிண்டலாக சொல்லிவிட்டாள். சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவன் முகம் இன்னும் இறுகிப் போய், தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும்தான் 'தவறாக பேசிவிட்டோமோ' என்ற நினைவு அவளுக்கு தாமதமாக வந்தது. முகத்தை உடனடியாய் சீரியசாக மாற்றிக்கொண்டு.. "ஹேய்.. ஸாரி அசோக்.. நான் ஏதோ வெளையாட்டுக்கு.." அவள் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "பேசாத.. என்னை எவ்வளவு கேவலமா நெனச்சுட்ட நீ..?? எவளும் என்னை கட்டிக்க மாட்டாளா..??" அசோக் சீற்றமாக சொன்னான். "ஹேய்.. நான் வெளையாட்டுக்கு சொன்னேன்.. நாம இந்த மாதிரி சொல்லி அடிக்கடி கிண்டல் பண்ணிக்கிறதுதான..??" "இத்தனை நாளா சொன்னது வேணா வெளையாட்டா இருக்கலாம்.. ஆனா இன்னைக்கு நீ சொன்னது அப்படி இல்ல..!! என்னை ஹர்ட் பண்ணனும்னேதான் சொல்லிருக்குற..!!" "ப்ச்.. இல்லடா.. நான்தான் சொல்றேன்ல..??" ப்ரியா இப்போது கெஞ்சலாக சொன்னாள்."காட்டுறேன்.. நீ நெனைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லன்னு காட்டுறேன்..!!" அசோக் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவசரமாய் எடுத்தான். ராஜேஷின் நம்பருக்கு கால் செய்தான். அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ப்ரியா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேஷ் காலை பிக் செய்து ஹலோ சொல்வதற்கு முன்பே.. "ஏய்.. எனக்கு அர்ஜண்டா ஒரு பொண்ணு வேணும்..!!" என்றான் அசோக் அவசரமாய். "டேய்.. நான் ராஜேஷ்டா.. உன் அண்ணன்..!!" அடுத்த முனையில் ராஜேஷ் பதறினான். "ஆமாம்.. அதுக்கு என்ன..??" அசோக் புரியாமல் கேட்டான். "இல்ல.. திடீர்னு கால் பண்ணி அர்ஜண்டா பொண்ணு வேணும்னு சொல்றியே.. அதான்.. வேற யாருக்கும் பண்ண வேண்டிய காலை எனக்கு பண்ணிட்டியோன்னு..!!" "அடச்சை..!! நான் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு சொன்னேன்டா..!!" அசோக் ராஜேஷிடம் சொல்ல, ப்ரியா இப்போது அசோக்கை உஷ்ணமாக முறைத்தாள். "அதான்.. நீயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டியே..??" "ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.. ஆனா நான் பாத்தது ஒன்னும் சரி இல்ல.. எல்லாம் திமிர் புடிச்சவளுகளா இருக்காளுக..!!" அசோக் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான். "ஓஹோ..!!" "நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ணு பாக்குற..!! நீ யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும்.. நான் அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அது யாரா இருந்தாலும் சரிதான்..!! எல்லாம் உன் இஷ்டந்தான்.. புரியுதா..??" "சரிடா சரிடா.. புரியுது..!! நான் பாத்துக்குறேன்.. விடு..!!" அசோக் காலை கட் செய்தான். ப்ரியாவை ஏறிட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா அசோக் மீது எழுந்த கோவத்தில்.. வேகவேகமாக மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் விம்மி விம்மி சுருங்க.. இவனையே முறைத்து பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்..!! ஒரு சில வினாடிகள் இருவரும் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் அசோக் 'ஹ்ம்ம்..' என்று சலிப்பாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் போவதையே ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம்.. அங்கே அசோக்கின் வீட்டில்.. ராஜேஷ் தலையை சொறிந்தவாறு அமர்ந்திருந்தான்..!! தம்பி சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு.. அவனுக்கு நிறைய நேரம் பிடித்தது..!! ஒரு வழியாய் நம்பிக்கை வந்ததும்.. என்ன செய்யலாம் என்று யோசித்தான்..!! 'உடனே வேண்டும் என்று வேறு சொல்கிறானே.. இப்போதுதான் அவனுக்கு நான் அண்ணன் என்ற மரியாதையே வந்திருகிறது.. இந்த வாய்ப்பை விடக்கூடாது.. உடனடியாய் இவனை அமுக்கிப் போட வேண்டும்..' என்று நினைத்தவன், கையிலிருந்த செல்போனை எடுத்து காண்டாக்ட் லிஸ்டில், அவன் எப்போதோ ஸேவ் செய்து வைத்திருந்த ஒரு நம்பரை இப்போது தேடினான். தேடிய நம்பர் கிடைத்ததும் கால் செய்து காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படும் வரை காத்திருந்தான். பிக்கப் செய்யப்பட்டதும்.. "ஹலோ.. மிஸ்டர் வரதராஜன்..??" என்றான்.அத்தியாயம் 14 அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!! அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!! இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!! "நாக்ரதனா திரனனா தனனா.. தன நாக்ரதனா தன திரனனா திரனா..!!" 'எந்த நேரமும் பேய் தனது கோர முகத்தை காட்டப்போகிறது..' என்று திரையையே வெறித்துக் கொண்டிருந்த அசோக், அவனுக்கு பின்பக்கமாக இருந்து செல்போன் திடீரென அலறியதும் அப்படியே குலை நடுங்கிப் போனான். அவனுடைய கட்டுப்பாடின்றியே 'ஆஆவ்...!!' என்று கத்திவிட்டான். நாடி நரம்பெல்லாம் இன்ஸ்டண்டாய் ஒரு பய மின்சாரம் ஓட, உடல் உதறல் எடுத்துக் கொண்டது.. குப்பென வியர்த்துப் போனது..!! இருதயம் உச்ச பட்ச வேகத்தில் திடுக் திடுக் என அடித்துக் கொண்டது. மார்பு குபுக் குபுக்கென விரிந்து விரிந்து சுருங்க, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். செல்போன்தான் அடித்தது என்று அவன் புத்திக்கு புரிந்த பின்னும், மிரண்டு போன அவனது இதயம் தனது துடிப்பின் வேகத்தை குறைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அவனுடைய உடலில் எழுந்த பய அதிர்வும் அடங்க சில வினாடிகள் பிடித்தன. கண்களை மூடி சுவாசத்தை சீராக்க முயற்சி செய்தான். அவனுடைய மனதும் உடலும் ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும், 'இந்த நேரத்துல எந்த எழவெடுத்த நாயி..??' என்று உலகமாக ஆத்திரத்துடன், இன்னும் நடுங்கும் விரல்களாலேயே அவசரமாய் தன் செல்போனை எட்டி எடுத்தான். எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் இன்னும் அதிகமான ஆத்திரத்துக்கு உள்ளானான். ப்ரியா கால் செய்திருந்தாள்..!! 'ச்ச.. பகல்லதான் பத்திரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடுறான்னா.. ராத்திரிலயும் ரத்தக்காட்டேரி மாதிரி.. இப்படி ஃபோன் பண்ணி கிலியை கிளப்புறாளே..?? மனுஷனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா..??' என்று பற்களை நறநறவென கடித்தான். அந்த ஆத்திரத்துடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ப்ரியா ஹலோ சொல்வதற்கு முன்பே இவன் அவளை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!! "பிசாசு.. பிசாசு.. பேய்.. காட்டேரி..!!" "ப்ச்.. ஏண்டா திட்டுற..??" அடுத்த முனையில் ப்ரியா எரிச்சலாக கேட்டாள். "பின்ன என்ன.. ஃபோன் பண்றதுக்கு உனக்கு வேற நேரமே கெடைக்கலையா..?? நடுச்சாமத்துல ஜகன்மோகினி மாதிரி..!!" "எ..எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருந்தது..!!" "இந்த நேரத்துலயா..??" "ஹ்ம்ம்..!!" "ஏன்..??" "எனக்கு தூக்கமே வரலை..!!" "ஓ.. தாலாட்டு பாடணுமா நான்..??" அசோக் எரிச்சலும் கேலியுமாய் கேட்டான். "இ..இல்ல..!!" "அப்புறம்..??" "எ..என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்..!!" ப்ரியா ஒருமாதிரி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது அசோக் சற்றே ஆத்திரம் தணிந்தான். "எதுக்கு மன்னிப்பு..??" என்றான் கம்மலான குரலில். "நா..நான்.. சத்தியமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு இன்னைக்கு காலைல அப்படி சொல்லலடா.. எப்போவும் போலதான் வெளையாட்டுக்கு சொன்னேன்..!! நாம பேசிட்டு இருந்த சிச்சுவேஷன் சரி இல்லாததால.. உனக்கு தப்பா தோணிருச்சு..!! நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு அசோக்.. உன்னைப்போய் நான் அப்படிலாம் நெனைப்பனா.. எவ கட்டிப்பான்லாம்.. ம்ம்ம்..?? உனக்கு என்னடா கொறைச்சல்..?? உன்னை கட்டிக்க பொண்ணுகலாம் நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இதை சொல்லத்தான் இந்த நடுராத்திரில கால் பண்ணினியா..??" "ஆமாம்..!! அப்புறம்.. உன் லீவ் கேன்சல் பண்ணினது கூட நான் வேணும்னு பண்ணல.. எனக்கு வேற வழி தெரியலை அசோக்.. கிரிட்டிக்கல் வொர்க்.. உன்னை விட்ட எனக்கு வேற யார் இருக்கா.. சொல்லு..!! உனக்கு கண்டிப்பா லீவ் வேணும்னா.. பாலாட்ட பேசு.. அவர் ஓகே சொன்னா.. நான் அப்ரூவ் பண்றேன்..!!" "பரவால.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டேன்..!!" "ஹ்ம்ம்.. எனக்கு இன்னிக்கு பூரா அதே நெனைப்பாவே இருந்தது அசோக்.. நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கிட்டியேன்னு நெனச்சு நெனச்சு.. எந்த வேலையுமே ஓடலை..!! இப்போ படுத்து இவ்வளவு நேரம் ஆகியும் தூக்கமே வரலை.. எவ்வளவு நேரந்தான் சும்மா கண்ணை மூடிட்டே கெடக்குறது..?? அதான்.. உன்கிட்டயே பேசிடலாம்னு தோணுச்சு..!!" "ஹ்ம்ம்..!!" "நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு சொல்லலடா..!! நீ அப்படி தப்பா நெனச்சிருந்தா.. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சுடு அசோக்.. ப்ளீஸ்..!!" ப்ரியாவின் குரல் மிகவும் கெஞ்சலாக ஒலித்தது. அவள் இந்த மாதிரி நள்ளிரவு கால் செய்து, தன் மனதில் இருந்ததை தெளிவு படுத்தி மன்னிப்பு கேட்டதில், அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அவன் மனதில் இருந்த ஈகோமூட்டம் இப்போது கொஞ்சமாய் விலக, காதல்மதி மெல்ல எட்டிப் பார்த்தது. தானுந்தான் அவள் சாதாரணமாக சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு, ஓவர் ரியாக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் மனதில் ஏற்பட்ட அந்த நெகிழ்ச்சியை குரலில் காட்டிக்கொள்ளாமல், "பரவால விடு..!!" என்றான் இறுக்கமாக. "இல்ல.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!" "ப்ச்.. அதான் விடுன்னு சொல்றேன்ல.. விடு..!!" என்று அசோக் எரிச்சலாக சொல்ல, ப்ரியா அமைதியானாள். இப்போது அசோக் ஏதோ நினைவுக்கு வந்தவனாய், தன் குரலின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு இதமாக கேட்டான். "சாப்டியா..??" "ம்ம்.. சாப்டேன்..!!" "சரி.. ஃபோனை வச்சுட்டு போய் தூங்கு.. போ..!!" "எனக்கு தூக்கம் வரலை..!!" "ம்ம்.. என்ன பண்ணலாம்னு சொல்ற இப்போ..??" "கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா..??" "என்ன பேசுறது..??" "சும்மா.. ஏதாச்சும்..!!" "ஹ்ம்ம்ம்.. சரி.. பேசு..!!" "நல்லா தூங்கிட்டு இருந்தியோ.. ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டனா..??" "இல்ல இல்ல.. இன்னும் தூங்கல.. மூவி பாத்துட்டு இருந்தேன்..!!" "ஓ.. என்ன மூவி..??" "வுமன் இன் ப்ளாக்னு ஒரு ஹாலிவுட் மூவி..!!" "யார் நடிச்சது..??" "ஆக்டர்ஸ் பேர்லாம் தெரியலை..!!" "ஹ்ம்ம்.. அது ஏன் அப்படி டைட்டில் வச்சிருக்காங்க.. வுமன் இன் ப்ளாக்னு..??" "ம்ம்ம்..?? படத்துல.. உன்னை மாதிரியே அழகான ஒரு பொண்ணு.. ப்ளாக் ட்ரஸ் போட்டுக்கிட்டு அப்பப்போ வந்துட்டு போவா..!!" சற்றுமுன் அவளை பேய் என்றதை இப்போது அசோக் வேறுவிதமாக சொன்னான். "ஓ..!! அதெதுக்கு அப்பப்போ வந்துட்டு போறா.. அடிக்கடி வர வேண்டியதுதான..??" அது புரியாமல் ப்ரியாவோ அப்பாவியாக கேட்டாள். "அவ அப்படித்தான்..!!" அசோக் சொல்லிவிட்டு மனதுக்குள் சிரித்தான். லூசு என்று திட்டினான்.. அதுவும் மனதுக்குள்தான்..!! அப்புறம் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பு அகன்று நட்பு திரும்பியவர்களாய்.. உறக்கம் மறந்து உள்ளம் மலர்ந்தவர்களாய்..!! இரவு நெடுநேரம் அந்த மாதிரி பேசிக்கொண்டிருந்ததால்.. அன்று நடந்த சண்டையின் காரணமாய் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த இறுக்கம்.. அடுத்த நாள் அவர்கள் சந்திக்கையில் வெகுவாக குறைந்திருந்தது..!! இயல்பு நிலை ஓரளவிற்கு திரும்பியிருந்தது..!! அன்று காலை சில்க்போர்ட் சிக்னலில் இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.. அசோக் தனது பைக்கிலும்.. ப்ரியா தனது ஸ்கூட்டியிலும்..!! தூரத்தில் இருந்தே ப்ரியா அசோக்கை கவனித்துவிட்டாள். ஆனால் அசோக் இவளை கவனிக்கவில்லை. முதலில் அசோக்கிற்கு க்ரீன் சிக்னல் விழுந்து, அவன் ரைட் டர்ன் எடுத்து எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் பைக்கை செலுத்தினான். விரைவிலேயே ப்ரியாவிற்கும் சிக்னல் விழ, அவள் அவசரமாய் லெஃப்ட் டர்ன் எடுத்து ஸ்கூட்டியை விரட்டினாள். மிதமான வேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த அசோக், திடீரென தனக்கு பக்கவாட்டில் 'கீங்.. கீங்..' என்று அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் தலையை திருப்பி பார்த்தான். அசோக்கின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டிருந்த ப்ரியா, ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு இவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். ஆச்சரியமான அசோக்கும் இப்போது பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளிடம் ஏதோ பேசுவதற்காக வாயெடுத்தான். ஆனால் அதற்குள் ப்ரியா.. தனது ஸ்கூட்டியின் ஆக்சிலரேட்டரை சரக்கென முறுக்கி, வண்டியை சாலையில் சீறிப்பாய விட்டாள். அசோக்கை தாண்டி கொஞ்ச தூரம் சென்று, அவர்களுக்கிடையே சில மீட்டர்கள் இடைவெளி வந்ததும், தனது வலது கையை நீட்டி, அவளுடைய கட்டை விரலை கவிழ்த்து இவனுக்கு காட்டினாள். அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உடனடியாய் அவனுக்குள்ளும் ஒருவித குழந்தைத்தனமான ஈகோ வந்தது. 'என்கிட்டயா உன் வேகத்தை காட்டுற.. இருடி.. இதோ வர்றேன்..' என்று மனதுக்குள் நினைத்தவனாய், தனது பைக்கின் ஆக்சிலரேட்டரை பற்றி திருகினான். ஸ்பீடா மீட்டர் முள் சர்ரென க்ளாக்வைஸில் வட்டம் அடித்து மேலே செல்ல, அவனுடைய பைக் ஜிவ்வென்று முன்னோக்கி பாய்ந்தது.. ப்ரியாவின் ஸ்கூட்டியை மெல்ல மெல்ல நெருங்கியது..!! அசோக்கின் பாய்ச்சலை ரியர்வ்யூ மிரரில் கவனித்து புன்னகைத்தாள் ப்ரியா. அவளும் அந்த போட்டியை விட மனம் இல்லாதவளாய்.. உச்சபட்ச வேகத்தில் தனது வண்டியை செலுத்தினாள்..!! ஆனால்.. அசோக்கின் வேகம் சற்று கூடுதலாய் இருக்க.. இருவருக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது..!! இப்போது இரண்டு வண்டிகளுமே ஒரே நேர்க்கோட்டில் வந்தன.. காற்றை கிழித்தவாறு விர்ரென சீறிப்பாய்ந்தன.. சாலையில் சென்ற வாகனங்களை புயல்வேகத்தில் கடந்து பறந்தன..!! ப்ரியாவை கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து சென்று முன்னேறிய அசோக், 'ஹேய்...!!!' என்று முஷ்டியை மடக்கி குழந்தைத்தனமாய் குதுகலித்தான்..!! அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு.. அவர்கள் இருவரும் தங்களது சிறுபிள்ளைத்தனமான ஈகோவை தார்ச்சாலையில் ஓடவிட்டு போட்டியிட்டுக்கொண்டார்கள்..!! இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்துவதும்.. முந்தியதுமே கூக்குரல் இடுவதும்.. அடுத்து வருகிற சிக்னலில் சிக்கி ஒன்றிணைவதும்.. பிறகு சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வதுமாக..!! அந்த மாதிரி ரேஸ் விட்டுக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தார்கள்..!! ஆபீஸ் வளாகத்தை நெருங்கியும் கூட இருவரும் வேகத்தை குறைக்கவில்லை..!! வண்டியில் பறந்து கொண்டே.. இருவரும் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டை உயர்த்தி காட்ட.. கேட் அவசரமாய் திறந்து கொண்டது..!! இருவருக்கும் பொதுவாய் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டை கண்டுகொள்ளாமலேயே.. வளாகத்துக்கு உட்புறமான சிமென்ட் சாலையில் ஒன்றாக சீறிப் பாய்ந்தார்கள்..!! பார்க்கிங் ஏரியாவை அடைந்து.. சடன் ப்ரேக் அடித்து.. சரக் சரக்கென.. அடுத்தடுத்து வண்டியை நிறுத்தினார்கள்.. ஹெல்மட் கழற்றி புன்னகைத்தார்கள்.. குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்..!! "இடியட்..!!" ப்ரியா இதழில் கசிந்த சிரிப்புடனே சொன்னாள். "ஸ்டுபிட்..!!" அசோக் உதட்டை பிதுக்கியவாறு கேலியாக சொன்னான். அதன்பிறகு ஒரு பத்து நிமிடங்கள் கழித்து.. அவர்கள் டீம் உறுப்பினர்கள் கேஃப்டீரியாவில் காலை உணவிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள். நேத்ரா மட்டும் மிஸ்ஸிங்..!! அனைவரும் ஆளுக்கொரு பண்டத்தை வாங்கி, அதை அவ்வப்போது ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்..!! ப்ரியா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவதால் எதுவும் தனியாக வாங்கிக்கொள்ளவில்லை.. அடுத்தவர்கள் தட்டில் இருப்பதை அவ்வப்போது எடுத்து கொறித்துக் கொண்டாள்.. அசோக் ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தான்..!! அவர்கள் கம்பனியில் ஆண்டுக்கு ஒரு முறை ஆனுவல் டே கொண்டாடுவார்கள்..!! ஆபீஸில் அன்று முழுவதும் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்..!! ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என்று கம்பனியே புதுச்சாயம் பூசிக்கொள்ளும்..!! வருடம் முழுதும் வேலை வேலை என்று திரிபவர்களுக்கு.. அந்த ஒருநாள் மிகவும் இளைப்பாறுதலாய் இருக்கும்..!! அந்த ஆனுவல் டே அடுத்த வாரம் வருகிறது.. அதைப்பற்றித்தான் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருந்தார்கள்..!! அசோக் ஹரியிடம் கேட்டான்.."ஏண்டா.. எப்போவும் சோனு நிகம், சாதனா சர்கம்னு செலப்ரிடி யாரையாவது கூட்டிட்டு வருவானுக.. இந்த வருஷம் நம்மளையே ஆடிப்பாட சொல்லிட்டானுக..??" அசோக்கின் கேள்விக்கு ஹரி கேலியான குரலில் பதில் சொன்னான். "எல்லாம் காஸ்ட் கட்டிங் மச்சி.. காஸ்ட் கட்டிங்..!!" "ம்க்கும்.. இதுலயுமா காஸ்ட் கட்டிங்..??" "என்ன மச்சி இப்படி கேக்குற..?? இப்போலாம் ஐடி கம்பனிஸ் காஸ்ட் கட்டிங் பண்றோம்ன்ற பேர்ல.. எதெதுன்னு வெவஸ்தையே இல்லாம எல்லாத்துலயும் கைவைக்க ஆரம்பிச்சுட்டானுக.. டாய்லட் பேப்பர் மொதக்கொண்டு இவ்ளோ காஸ்ட்லியான பேப்பர் வாங்கணுமான்னு யோசிக்கிறானுக மச்சி..!! இன்ஃப்லேஷன்றானுக.. ஸ்லோடவுன்றானுக.. மார்க்கெட் க்ராஷ்ன்றானுக.. எகனாமி க்ரைசிஸ்ன்றானுக.. என்ன சொல்றானுகன்னே ஒரு எழவும் புரியலை..!!" "ஹ்ம்ம்...!!" "பேன்ட்ரில இருந்த காபி கப்லாம் போன மாசம் மாத்தினானுக.. ஞாபகம் இருக்கா..??" "ஆ..ஆமாம்.. ஞாபகம் இருக்கு..!!" "பெருசா இருந்த கப்லாம் சின்னதா மாத்திட்டானுக..!! வொய்..??? காஸ்ட் கட்டிங்..!!!! பாலை மிச்சம் பண்றானுகளாம்.. பக்கோடா வாயனுக..!!" "ஓ..!! இதுல இப்படி ஒரு சைக்காலஜி இருக்கோ..??" "ம்ம்ஹ்ஹ்ம்ம்... இண்டஸ்ட்ரியே ஒன்னும் சரியில்ல மச்சி..!! போற போக்கை பாத்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல.. நாமள்லாம் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட் அடிக்கிற நெலமை வந்தா கூட ஆச்சரியப் படுறதுக்கு இல்ல..!!" "ஹாஹாஹாஹா..!!" அசோக் அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான் நேத்ரா கேஃப்டீரியாவுக்குள் நுழைந்தாள். ஓரிரு வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்புறம் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டதும், நேராக இவர்களை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தாள். அவளுடைய முகம் கடுகடுவென இருந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது. வேகமாக நடந்து இவர்களை நெருங்கியவள், குனிந்து சான்ட்விச் கடித்துக்கொண்டிருந்த கோவிந்தின் தலையில் 'நங்..' என்று ஒரு குட்டு வைத்தாள். "ஆஆஆஆஆ...!!"
சான்ட்விச் நிரம்பிய வாயுடன் கோவிந்த் கத்தினான். அவன் கத்தவும், மற்ற எல்லோரும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். எல்லோரும் சிரித்து முடித்தபிறகும், ஹரி மட்டும் 'ஹாஹாஹாஹா..!!' என்று கூடக்கொஞ்ச நேரம் சிரித்தான். தலையை நிமிர்த்தி ஹரியை அப்படியே முறைத்து பார்த்த கோவிந்த், இப்போது நேத்ராவை ஏறிட்டு சற்று எரிச்சலாகவே கேட்டான். "ஹேய்.. வாட் ஹேப்பன்ட் டூ யூ..?? எதுக்கு இப்போ தேவை இல்லாம அடிச்ச..??" நேத்ரா பதில் சொல்லாமல் காலியாக கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த பிறகும் எதுவும் பேசாமல் கோவிந்தையே முறைத்துப் பார்த்தாள். 'கேக்குறன்ல..?? சொல்லு..' என்று கோவிந்த் திரும்ப கேட்டும் புண்ணியம் இல்லை. இப்போது ப்ரியா பொறுக்க முடியாமல் நேத்ராவிடம் கேட்டாள். "ஹேய்.. என்னாச்சு நேத்ரா.. ஏன் இப்படி டென்ஷனா இருக்குற..??" "பாரு ப்ரியா.. என்னை கேக்காம.. சிங்கிங் காம்படிஷனுக்கு என் பேரை குடுத்திருக்கான்..!!" நேத்ரா ஒருவழியாய் வாய் திறந்து பேசினாள். "ஓ.. அவ்ளோதான மேட்டர்..??" எல்லோருக்கும் சப்பென்று போனது. "ப்ச்.. நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. அவ்ளோதானான்னு எல்லாம் கூலா கேக்குறீங்க..??" "ஹேய் நேத்ரா.. இதுல என்னப்பா இருக்கு..??" கோவிந்த் இப்போது நேத்ராவிடம் பாவமாக கேட்டான். "என்ன இருக்கா..?? அறை வாங்கப்போற எங்கிட்ட..!! அதெப்படி நீ எங்கிட்ட கேக்காம என் பேரை குடுக்கலாம்..??" நேத்ரா அவனிடம் எரிந்து விழுந்தாள். "கேட்டா நீ குடுக்க விட மாட்ட.. அதான் நானா குடுத்தேன்..!!" "நீ என் பேரை குடுத்தது எனக்கு புடிக்கல.. போய் என் பேரை வாபஸ் வாங்கு.. போ..!!" "ப்ச்.. ஏன் இப்படி பேசுற..?? நீதான் நல்லா பாடுவல.. அப்புறம் என்ன..??" "நான் ஏதோ சும்மா ஜாலியா பாடுறேன்..!! அதுக்காக.. ஸ்டேஜ்ல போய் பாடுறதுலாம்.. எனக்கு புடிக்கல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு..!! ப்ளீஸ் கோவிந்த்.. நீயே போய் என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லிடு.. ப்ளீஸ்..!!" "ம்ஹூம்.. அதுலாம் முடியாது.. நீ பாடனும்..!!" "என்னால பாட முடியாது.. போதுமா..??"நேத்ரா கோபமாக சொல்லிவிட்டு, பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். கோவிந்த் கொஞ்ச நேரம் நேத்ராவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். "இங்க பாரு நேத்ரா.. நான் சும்மா உன்னை சீண்டுறதுக்காக உன் பேரை குடுக்கலை..!! உனக்கு ஸ்வீட்டான வாய்ஸ் இருக்கு.. ரொம்ப அழகா பாடுற..!! இந்த விஷயம் எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா..?? இந்த கம்பனில இருக்குற எல்லாருக்கும் தெரிய வேணாமா..?? இது ஒரு ஆப்பர்ச்சூனிட்டி..!! உனக்கு இருக்குற டேலன்ட்டை உள்ளயே வச்சிருந்தா.. அதனால என்ன யூஸ்.. சொல்லு பார்ப்போம்..?? அதை வெளிச்சம் போட்டு காட்டுறதுதான்.. அந்த டேலன்ட்டுக்கு நீ தர்ற மரியாதை..!! எனக்கு ஆசையா இருந்தது நேத்ரா.. நீ அவ்ளோ பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் உன் வாய்ஸ் கேட்டு என்ஜாய் பண்ணனும்.. நல்லாருக்குன்னு கை தட்டனும்.. உன்னை பாராட்டனும்.. இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது..!! அதான் உன்னை கேக்காம.. நானா உன் பேரை குடுத்துட்டேன்.. நான் செஞ்சது தப்புனா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!! பட்.. பாட மாட்டேன்னு மட்டும் சொல்லாத நேத்ரா.. ப்ளீஸ்..!!" நிதானமாக பேசிய கோவிந்த் கெஞ்சலாக முடித்தான். எல்லோரும் ஒருவித வியப்புடன் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர். நேத்ராவும் இப்போது கோவிந்தின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பொங்குவது போலிருக்க, உதடுகளை கடித்து கட்டுப்படுத்தியவாறே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அருகில் இருந்த கவிதா அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள். "ஹேய்.. கோவிந்த் சொல்றதுதான் கரெக்ட்..!! நீ இந்த காம்படிஷன்ல கலந்துக்கிட்டே ஆகணும் நேத்ரா..!!" என்றாள். "யெஸ்.. யு ஹேவ் டு பார்ட்டிஸிப்பேட்..!!!" மற்றவர்களும் இப்போது கோரஸாய் சொன்னார்கள். ஹரி மட்டும்.. "அதுசரி.. அப்படினா.. ஆனுவல் டே அன்னைக்கு ஆடிட்டோரியம் பக்கத்துல லோபர்மைட் டேப்லட் சில்லறைல வித்தா.. பெத்த லாபம் பாக்கலாம்னு சொல்லுங்க..!!" என்றான். "எ..என்ன சொல்றீங்க..??" கவிதா புரியாமல் கணவனை கேட்டாள். "ஆமாம்.. இவ பாடுறதை கேட்டு அன்னைக்கு எத்தனை பேருக்கு வாந்தி பேதி புடுங்கப் போகுதோ..??" ஹரி கேலியாக சொல்ல, நேத்ரா இப்போது கடுப்புடன் அவனை ஏறிட்டு முறைத்தாள். டேபிளில் இருந்த உப்பு டப்பாவை எடுத்து அவன் மீது சரக்கென வீசினாள். அவன் அதை கேட்ச் பிடித்துக்கொள்ள, இவள் சீற்றமாக சொன்னாள். "யூ...!!! என் வாய்ஸ் என்ன அவ்வளவு கேவலமா..?? பாக்கலாம்.. நான் பாடத்தான் போறேன்.. ஆனா யாருக்கும் நீ சொன்ன டேப்லட் தேவைப்படாது..!! உனக்கு வேணும்னா.. நாலு ஜெலுசில் கொண்டு வா.. வயித்தெரிச்சலை கண்ட்ரோல் பண்ணிக்க தேவைப்படும்..!!" "ஹாஹா.. பாத்தீங்களா.. நீங்கல்லாம் எவ்ளோ கெஞ்சுனீங்க..?? நான் ஒருத்தன் இப்படி கலாய்ச்சதும்.. எப்படி ரோஷமா ஒத்துக்கிட்டா பாத்தீங்களா..??" ஹரி அப்படியே பிளேட்டை திருப்பி போட, இப்போது எல்லோரும் அவனை புன்னகையும் நட்புமாய் பார்த்தார்கள். நேத்ரா மட்டும் சற்றே வெட்கமுற்றவளாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பிறகு அப்படியே தன் கருவிழிகளை ஒரு சுழற்று சுழற்றி ஓரத்துக்கு தள்ளி.. கோவிந்தை பார்த்தாள்..!! இப்போது கவிதா திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் சேரில் இருந்து எழுந்து கொண்டாள். "ஹையோ.. கட்லட் ஒன்னு ஆர்டர் பண்ணினேன்பா.. மறந்தே போயிட்டேன்.. பேசிட்டு இருங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்..!!" என்றவாறு ஃபுட் கவுன்ட்டர் நோக்கி நடந்தாள். ஹரி அதற்காகத்தான் காத்திருந்தவன் மாதிரி, அசோக்கிடம் திரும்பி சன்னமான குரலில் சொன்னான். "மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??" "எனக்கு என்னடா தெரியுது..?? உலகத்துல நடக்குற எல்லா மேட்டரும் உன் ஒருத்தனுக்கு மட்டுந்தான் தெரியுது.. அது எப்படித்தான் நீ தெரிஞ்சுக்குறியோ.. எனக்கு ஒன்னும் புரியலை..!! ஹ்ம்ம்.. என்ன மேட்டர்.. சொல்லு..!!" "நம்ம டீம்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ண போகுது மச்சி..!!" "ஓ.. அப்படியா..??" அசோக் தெரிந்தும் தெரியாதவன் போல நடித்தான். "ஆமாண்டா.. தமிழ் பொண்ணுதான்..!! ப்ரியாதான் அந்தப்பொண்ணை இன்டர்வ்யூ பண்ணது.. ஏன் ப்ரியா.. அசோக்ட்ட சொல்லலை..??" "இன்டர்வ்யூலாம் எடுக்க ஆரம்பிச்சுட்டியா ப்ரியா..?? சொல்லவே இல்லை..??" அசோக் ப்ரியாவிடம் சற்றே கேலியாக கேட்டான். "ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!" ப்ரியா கெத்தாக சொன்னாள். "ஓ..!!" அசோக் அவளை ஓரக்கண்ணால் ஏளனமாக பார்த்தான்.ஆனா.. சும்மா சொல்லக்கூடாதுடா..!!" ஹரி இடையில் புகுந்து சொன்னான். "எதை..??" "அந்தப் பொண்ணை சொன்னேன் மச்சி..!! இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு அந்த பொண்ணை நான் பாத்தேன்.. எங்கிட்டதான் கேஃப்டீரியாவுக்கு வழி கேட்டுச்சு..!!" "ஓ.. நீதானா அது..??" அசோக்கின் கிண்டலை ஹரி கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். "பொண்ணுன்னா அதுதாண்டா பொண்ணு..!! என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு அமைதி.. என்ன ஒரு டீசன்சி..!!" என்று பெருமிதமாக சொன்னவன், அப்புறம் ப்ரியாவை பார்த்து முகத்தை சுளித்துக்கொண்டே சொன்னான். “இதுங்களுந்தான் இருக்குதுங்களே..??" "ஏய்.. என்ன கொழுப்பா..?? அடங்குடா..!!" ப்ரியா முஷ்டியை மடக்கி காட்டினாள். "பாரு.. இதுங்க அடங்காம திரிஞ்சுக்கிட்டு.. நம்மள அடங்க சொல்லுதுங்க.. பொண்ணுகளா இதுகல்லாம்..??" ஹரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கவிதா கட்லட் வாங்கிகொண்டு அவனை நெருங்கியிருந்தாள். ஆனால் ஹரி அதை கவனிக்கவில்லை. அவனை மனைவியிடம் மாட்டிவிடும் எண்ணத்துடன் பிரியா வில்லத்தனமாக அந்தக் கேள்வியை கேட்டாள். "இதுகல்லாம்னா கவிதாவையும் சேர்த்துத்தான் சொல்றியா..??" "ஹாஹா.. இதுல என்ன சந்தேகம்..?? அந்த அடங்காப்பிடாரி லிஸ்ட்ல நம்பர் ஒன்னே என் வொய்ஃப்தான..??" அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனுடைய நடு மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் கவிதா. ஹரி 'ஆஆஆஆ...' என்று தலையை தேய்த்தவாறு வலியில் அலறி துடிக்க, எல்லோருமே வாய் விட்டு சிரித்தார்கள். கோவிந்த் மட்டும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாய், ஹரியை நோக்கி கையை நீட்டி நீட்டி சிரித்தான். இப்போது ஹரி கோவிந்தை ஏறிட்டு கடுப்புடன் முறைத்தான். "அங்க என்ன பார்வை..?? இந்தப்பக்கம் திரும்புங்க.. என் மூஞ்சியை பாத்து சொல்லுங்க.. நான் அடங்காப்பிடாரியா..??" கவிதா கோவத்தில் சிவந்து போன முகத்துடன் கேட்டாள். "ஐயோ.. இல்லம்மா.. உன்னைப் போய் நான் அப்படிலாம் சொல்வனா..?? நீ பின்னாடி நின்னதை நான் முன்னாடியே கவனிச்சுட்டேன்.. சும்மா இதுங்களுக்காக அப்படி காமடி பண்ணினேன்..!!" ஹரி பரிதாபமாக சமாளிக்க முயன்றான். "இல்ல கவிதா.. பொய் சொல்றான்.. நாமள்லாம் அடங்கா பிடாரிங்கலாம்.. பொண்ணுன்னா அந்தப்பொண்ணு மட்டுந்தான் பொண்ணாம்..!!" ப்ரியா போட்டுக் கொடுத்தாள். "எ..எந்தப்பொண்ணு..??" "நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணப்போற பொண்ணு..!!" "ஓ..!! யார் அவ..?? அவளை எப்படி உங்களுக்கு தெரியும்..??" கவிதா கணவனை பார்த்து சீற்றமாக கேட்டாள். "அட அவளைப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுமா..!! இ..இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு வழி சொன்னேன்.. அவ்ளோதான்..!! அ..அவ பேர் கூட இப்போ எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. ஏதோ.. செந்தாமரையோ செங்கமலமோ..??" ஹரி தலையை தடவியவாறு தடுமாற்றமாய் சொல்ல.. "செண்பகம்.. செண்பக லக்ஷ்மி..!!" அசோக் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்ச ஆரம்பித்தான். இப்போது எல்லோரும் அவனை ஏறிட்டு வியப்பாக பார்த்தார்கள். ப்ரியாதான் ஆச்சரியத்தை அடக்க முடியாதவளாய் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டாள். "ஹேய்.. உனக்கு எப்படி அவ பேர் தெரியும்..??" "ஹ்ஹ.. பேபியா இருக்குறப்போ இருந்தே அவளை எனக்கு தெரியும்.. பேர் தெரியாம இருக்குமா..??" அசோக் கூலாக சொல்ல, எல்லோருடைய முகத்திலுமே ஒருவித ஆச்சரியம் படர்ந்தது. பிரியாவுக்கும் அதே ஆச்சரியம். "எ..என்ன சொல்ற நீ..??" "அவ என் சொந்தக்கார பொண்ணுதான் ப்ரியா.. கொஞ்சம் தூரத்து சொந்தம்..!!" "ஓ..!! சொந்தக்கார பொண்ணுன்னு சொல்ற.. நம்ம கம்பனில ஜாயின் பண்ணப்போறா.. ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல..??" "ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!" ப்ரியா சற்றுமுன் கெத்தாக சொன்ன வார்த்தைகளையே அசோக் இப்போது திருப்பிக் கொடுக்க, அவள் ஒருவித எரிச்சலுடன் அவனை பார்த்தாள். வாயை இறுக்க மூடிக்கொண்டாள். அப்புறம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கை கழுவிக்கொள்ளும்போதுதான் மீண்டும் ஆரம்பித்தாள். "என் தம்பிதான் அந்த பொண்ணோட ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினான் அசோக்..!!" "அப்படியா..??" "ஆமாம்.. அவனுக்கு இவ காலேஜ் சீனியராம்..!!" "ஓஹோ..?? இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. சரி.. நான் அவகிட்ட கேக்குறேன்..!!" "ஹ்ம்ம்.. அடுத்த மாசம் ஜாயின் பண்றால..??" "இல்ல.. கொஞ்சம் எர்லியராவே ஜாயின் பண்ணிடுவா போல இருக்கு.. அவங்க கம்பனில சீக்கிரமே ரிலீவ் பண்றாங்களாம்.. காலைல பேசுறப்போ சொன்னா..!!" "ஓ..!!" மனதில் ஏதோ ஒரு உறுத்தல் எழ, ப்ரியா அமைதியாகிப் போனாள். கை கழுவிட்டு வெளியே வந்தார்கள். அவர்களுடைய தளத்துக்கு செல்ல, அனைவரும் லிஃப்ட் நோக்கி நடையை போட்டபோது, உள்ளுக்குள் இருந்த அந்த குறுகுறுப்பை அடக்க முடியாமல், அசோக்கிடம் மெல்லிய குரலில் கேட்டாள். "சொ..சொந்தக்கார பொண்ணுனா.. உனக்கு என்ன முறை வேணும் அசோக்..??" "ஏன் கேக்குற..??' "சு..சும்மாதான்.. தெரிஞ்சுக்கலாமேன்னு..!!" "எனக்கு அக்கா பொண்ணு.. மாமா மாமான்னுதான் கூப்பிடுவா.. அவ அக்காவைத்தான் என் அண்ணனுக்கு முடிச்சிருக்கோம்..!!" "ஓ..!!!!!" ப்ரியாவுக்கு மனதில் இருந்த உறுத்தல் இப்போது இன்னும் பெரிதானது. செண்பகத்தின் மீது ஒரு இனம்புரியாத பொறாமை அவளுடைய உள்ளத்தில் உருவானது. 'அந்த செண்பகத்துக்கு பதிலாக நான் இவனுடைய முறைப்பெண்ணாக இருந்திருக்க கூடாதா..?' என்று ஏக்கம் வந்தது. 'மாமா மாமா என்று இவனை கொஞ்சி கொஞ்சி கூப்பிடலாமே..?' என்று ஆசை எழுந்தது. அந்த ஆசையுடனும் ஏக்கத்துடனுமே அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள்.அத்தியாயம் 15 எல்லோரும் லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்று, அன்றைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்கள். நேத்ரா அன்று முழுக்க அசோக்கைப்போட்டு அரித்தெடுத்தாள். பாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருந்தாள் அல்லவா..?? அது விஷயமாகத்தான்..!! அசோக்கிற்கு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை வந்த தமிழ் திரை இசை பாடல்கள் எல்லாம் அத்துபடி..!! அவள் இவனை அணுகியதற்கு அதுதான் காரணம்..!! "ஹேய்.. 'கண்டுகொண்டைன் கண்டுகொண்டைன்'னல்லி ஒந்து ஸாங்கு இதியல்லா..?? சித்ரா ஸோலோ ஸாங்கு..!!" என்று 'கண்ணாமூச்சி ஏனடா..?' பாடலை கேட்டாள். "ஆமாம்.. இருக்கு..!!" "ஆ சாங்கு MP3 நன்க் பேக்கு..!!" "அது எதுக்கு உனக்கு..??" "காம்படிஷன்கே ப்ராக்டிஸ் மாட் பேக்கு..!!" "தமிழ் சாங்கா பாடப்போற..?? உனக்குத்தான் தமிழ் புடிக்காதுல..??" "ஹூ டோல்ட்..?? ஐ லைக் டமில் வெரி மச்..!!" என்று இதழில் புன்னகையும், முகத்தில் மலர்ச்சியுமாய் சொன்ன நேத்ராவை அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் அந்த பாடலின் MP3 தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து அவளுடைய மொபைலுக்கு ப்ளூடூத் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான். "ஹேய்.. அந்த சாங் லிரிக்ஸ்.. இங்க்லீஷ் ஃபான்ட்ல வேணும்..!!" கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக். "ஹேய்.. ஐ வான்ட் டு நோ த மீனிங்ஸ் ஆப் தீஸ் வேர்ட்ஸ்..!!" கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக். "உதடுகள்னா எனக்கு தெரியும்.. ஈரமாய் வாழ்கன்னா.. என்ன மீனிங்..??" நேத்ரா புரியாமல் கேட்க, அசோக் அவஸ்தையாய் நெளிந்தான். "ஹையோ.. ஏண்டி இப்டி தமிழ்ப்பாட்டை சூஸ் பண்ணி.. என் உசுரை வாங்குற..??" "ஹேய்.. சொல்லு..!! மீனிங் தெரிஞ்சாத்தான் ஒரு ஃபீலோட பாட முடியும்..!!" நேத்ரா விடாப்பிடியாக இருக்க, வேறு வழியில்லாமல் அசோக் வெட்கத்துடனே அந்த வரிகளுக்கு விளக்கம் கொடுத்தான். அசோக்தான் அவ்வாறு அவஸ்தைப்பாட்டானே ஒழிய, அவன் சொன்ன விளக்கத்தை கண்களில் மின்னலும் உதட்டில் புன்னகையுமாய் நேத்ரா கேட்டுக்கொண்டாள். திடீரென.. "ஐ மிஸ் யூன்றதை தமிழ்ல எப்படி சொல்றது அசோக்..??" என்று அவள் ஆர்வமாய் கேட்க அசோக் நெற்றியை சுருக்கினான். "ஏன் கேக்குற..??" "ஹேய்.. சொல்லேன்.. ப்ளீஸ்..!!" "தெ..தெரியல.. நான் உன்னை மிஸ் பண்றேன்னு சொல்லு.. புரிஞ்சுப்பாங்க..!!" என்று எரிச்சலாக சொன்னான். சொல்லிவிட்டு நேத்ராவை ஏறிட்டு வியப்பாய் ஒரு பார்வை பார்த்தான். 'என்னாச்சு இவளுக்கு..??' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனுவல் டே வந்தது..!!! அவர்களுடைய ஆபீசே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது..!! கம்பனி வளாகத்திற்குள் எங்கு பார்த்தாலும்.. கலர்கலராய் பலூன்களும்.. காகிதப்பூ தோரணங்களும் தொங்கின..!! ஆங்காங்கே விழா பற்றிய அறிவிப்பு போஸ்டர்கள் ஜிகினா பூச்சோடு மின்னின..!! ராட்சச வடிவ ஸ்பீக்கர்களில் 'தேரி மேரி.. மேரி தேரி.. ப்ரேம் கஹானி ஹே முஷ்கில்..' என ஷ்ரேயா கோஷல் உச்சஸ்தாயில் உருகிக்கொண்டிருந்தார்..!! கம்பனிக்குள் எதிர்ப்படுகிற முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு புன்னகையும்.. புத்துணர்வும்..!! க்யூபிக்கல் டெகரேஷன் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் தாங்கள் ஆண்டு முழுதும் அமர்ந்து வேலை செய்யும் இடத்தை, தங்களுக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள். போஸ்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், வொர்க் ஷாப், வொயின் ஷாப் என்று ஏதோ ஒரு தீம் வைத்துக்கொண்டு, அதற்கு தொடர்புடைய பொருட்களால் தங்கள் இடத்தை அலங்கரித்து வைத்திருந்தனர்..!! ஒரு பையன் தனது இடத்தில் செடி கொடிகள், இழை தழைகள் எல்லாம் போட்டு நிரப்பி.. அவனும் காட்டுவாசி கெட்டப்பில் கறைபிடித்த பற்களோடு வந்து.. கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்தான்..!! கலாச்சார உடைகள் அணிந்து வரும் போட்டியும் இருந்தது. வெவ்வேறு மாநிலத்தில் இருந்து பெங்களூர் வந்து வேலை பார்ப்பவர்கள், இன்று அவரவர் மாநில கலாச்சார உடைகளை அணிந்து வந்து, அலுவலகத்தையே வண்ணமயமாய் மாற்றியிருந்தனர்..!! குஜராத் குர்தாக்கள்.. ராஜஸ்தானி சோளிகள்.. ஆந்திர பஞ்சகட்சைகள்.. கேரளத்து முண்டுகள்..!! தமிழகத்து தாவணி பாவாடைகளையும் ஆங்காங்கே காண முடிந்தது..!! ஆடிட்டோரியத்தை ஒட்டி இருந்த அந்த ஸ்மோகிங் ஸோனில் அசோக்கும், ஹரியும் புகை வழியும் வாயுடன் நின்றிருந்தார்கள்..!! மேல் பட்டன் நீக்கப்பட்டு, காலர் பின்னுக்கு தள்ளப்பட்ட சட்டையும்.. கொஞ்சம் தொடையும், கொஞ்சம் கால்ச்சட்டையும் தெரியுமாறு ஏற்றிக்கட்டப்பட்ட வேஷ்டியுமாய் நின்றிருந்தார்கள்..!! இப்போதுதான் நடனப்போட்டியில் 'வேணாம் மச்சான் வேணாம்.. இந்த பொண்ணுக காதலு..!!' என்று இருவரும் குத்தாட்டம் போட்டு களைத்திருந்தார்கள்..!! ஆடிய களைப்பை புகை போட்டு ஆற்றிக் கொண்டிருந்தார்கள்..!! "இன்னிக்கும் மீட்டிங்க போட்டு.. கெட்ட ஏழரையை கூட்டுராய்ங்க மாப்ள..!!" என்று அசோக் மதுரை தமிழ் பேசிக்கொண்டிருந்தான். "கிளிப்பச்சை கலர் கெடைக்கல மாப்ள.. பஞ்சுமுட்டாய் கலர்தான் கெடைச்சுச்சு..!!" என்று ஹரி அணிந்து வந்திருந்த சட்டை பற்றி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அந்த இடத்திற்கு ப்ரியா அவசர நடையில் வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் ஒருவித டென்ஷன் தென்பட்டது. அசோக்கும் ஹரியும் அவளை குழப்பமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவள்.. "ஹேய்.. நேத்ராவை யாராவது பாத்தீங்களா..??" என்று கவலையாய் கேட்டாள். "இல்ல ப்ரியா.. நாங்க பாக்கலையே.. என்னாச்சு..??" "அங்க சிங்கிங் காம்படிஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா.. இவ பேரை கூப்பிட்டாங்க.. இவளை ஆளை காணோம்..!!" "ஓ..!!" "என் பக்கத்துலதான்டா இருந்தா.. திடீர்னு காணாம போய்ட்டா.. எங்க போனான்னு தெரியலை..!!" "அவ நம்பருக்கு கால் பண்ணி பாத்தியா..??"
"ஹ்ம்ம்.. பண்ணிப்பாத்தேன்.. என்கேஜ்டா இருக்கு.. எடுக்க மாட்டேன்றா..!! அங்க திரும்ப திரும்ப இவளை கூப்பிட்டுட்டு இருக்காங்க.. டிஸ்குவாலிஃபை பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு..!!" ப்ரியா கவலையாக சொல்ல, அசோக் சில வினாடிகள் தன் நெற்றியை தேய்த்தவாறு யோசித்தான். அப்புறம் ஹரியிடம் திரும்பி, "மாப்ள.. நீ போய் அவனுகளை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு..!! அவ இங்கதான் எங்கயாச்சும் இருப்பா.. நானும் ப்ரியாவும் போய் ஆளை இழுத்துட்டு வர்றோம்..!!" என்றான். "ஓகே மாப்ள..!!" என்ற ஹரி உடனே சிகரட்டை காலில் போட்டு நடுக்கிவிட்டு, ஆடிட்டோரியம் நோக்கி அவசரமாய் சென்றான். அசோக் ஏற்றிக்கட்டியிருந்த வேஷ்டியை தளர்த்திவிட்டு, எதிர் திசையில் ப்ரியாவுடன் நேத்ராவை தேடி சென்றான். ஓட்டமும் நடையுமாய் அசோக்கை பின் தொடர்ந்தவாறே ப்ரியா சொன்னாள். "ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல அசோக்.. அதான் லாஸ்ட் மொமன்ட்ல எஸ்கேப் ஆகிட்டா போல இருக்கு..!!" "ச்ச.. ச்ச.. அப்படிலாம் இல்ல..!! அதுக்கப்புறம் அவ மனசை மாத்திக்கிட்டா ப்ரியா.. இந்த காம்படிஷன்ல ப்ரைஸ் வின் பண்ணனும்னு ஹண்ட்ரட் பர்சன்ட் ஸ்ட்ராங்கா இருந்தா..!! எனக்கு நல்லா தெரியும்..!!" "ஹ்ம்ம்..!!" "அதுசரி.. இந்த கோவிந்த் பயலுக்கு என்னாச்சு.. இன்னும் வரலையா அவன்..??" "இல்லடா.. இன்னும் வரல.. என்னாச்சுன்னு தெரியல..!!" அசோக்கும் ப்ரியாவும் சேர்ந்து, வளாகத்துக்குள் ஆங்காங்கே வளர்க்கப்பட்டிருந்த பூங்காக்களில் நேத்ராவை தேடிப்பார்த்தார்கள். அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு சென்று அவளுடைய இடத்தில் பார்த்தார்கள். லிப்ட் ஏறி மேலே சென்று கேஃப்டீரியாவில் தேடினார்கள். எங்கும் அவள் ஆளைக்காணோம்..!! தேடிக்களைத்துப்போய் இருவரும் மீண்டும் ஆடிட்டோரியம் நோக்கி சென்றபோதுதான்.. தூரத்தில் பார்க்கிங் ஏரியாவுக்கு அருகில்.. தனியாக நின்றிருந்த நேத்ரா அவர்கள் கண்ணில் பட்டாள். தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் இருவருக்கும் ஒருவித நிம்மதி ஏற்பட, அவசரமாய் அவளை நெருங்கினார்கள். "ஹேய் நேத்ரா.. உன்னை எங்கல்லாம் தேடுறது..?? உன் பேரை அங்க திரும்ப திரும்ப அனவுன்ஸ் பண்ணிட்டு இருக்குறாங்க.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தது. ஆனால் அதை சட்டை செய்யாமல் ஃபோனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நேத்ரா, ஒருசில வினாடிகளிலேயே "ஓகே.. ஓகே.. ஓகே.. பை..!!" என்று பேச்சை முடித்து, காலை கட் செய்தாள். அவளுடய முகம் ஒருமாதிரி பொலிவிழந்து போய் வாடியிருந்தது. "ப்ச்.. கேக்குறேன்ல.. சொல்லு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?? யார் ஃபோன்ல..??" அசோக் அவளை அவசரப்படுத்தினான். "கோ..கோவிந்த்..!!" நேத்ரா உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னாள்."ஓ..!! என்ன சொல்றான்.. வருவானா வரமாட்டானாமாம்..??" "வ..வரமாட்டான்.. அவனுக்கு உடம்பு சரியில்ல..!!" நேத்ரா சொல்ல, அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக அதிர்ந்தார்கள். "எ..என்னாச்சு..??" ப்ரியாதான் கவலை தோய்ந்த குரலில் கேட்டாள். "நேத்து நைட்டுல இருந்து பயங்கர ஃபீவராம்.. 'இங்க வரணும்னு ஆசையா இருக்கு.. ஆனா எந்திரிக்க கூட முடியலை'ன்னு சொல்றான்..!!" "ஓ..!!" கோவிந்த் மீது ஒருவித பச்சாதாபத்துடன் சொன்ன ப்ரியா, ஓரிரு வினாடிகள் அமைதியாக நேத்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவசரமாய் சொன்னாள். "சரி நேத்ரா.. நீ வா.. அங்க எல்லாம் உனக்காக வெயிட்டிங்..!! டைம் முடியப்போகுது.. கமான்..!!!" நேத்ரா எதுவும் பேசவில்லை. அவர்கள் முகத்தை ஏறிடுவதை தவிர்த்து வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அமைதி அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது. எதுவும் புரியாதவர்களாய், நேத்ராவின் கலக்கமான முகத்தையே வியப்பும் குழப்பமுமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. நேத்ராவின் கண்கள் இரண்டும் பட்டென கலங்கின.. கண்ணீர் துளிகளை கசிய ஆரம்பித்தன..!! முதலில் ஒன்றிரண்டு முத்துக்களாய் உருண்டோடி வந்த துளிகள்.. ஓரிரு வினாடிகளிலேயே பொலபொலவென கொட்ட ஆரம்பித்தன..!! அவளும் உடைந்து போய் உதடுகள் கடித்து விசும்ப ஆரம்பித்தாள்..!! அசோக்கும் ப்ரியாவும் பதறிப் போனார்கள்..!! "ஹேய்.. நேத்ரா.. எ..என்ன இது..??" அசோக் பதட்டமாய் கேட்டான். "அ..அவன் ரூம்ல அவன் ஃப்ரண்ட்ஸ் கூட யா..யாருமே இல்ல அசோக்.. த..தனியா என்ன கஷ்டப்படுறானோ..??" கலங்கிய கண்களும், விசும்புகிற மூக்கும், துடிக்கிற உதடுகளுமாய் நேத்ரா பரிதாபமாக சொன்னாள். அவள் சொல்லிய விதத்திலேயே அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் அதுவரை புரியாமல் இருந்த விஷயம் இப்போது தெளிவாக புரிந்து போனது..!! ஒருவித அதிர்ச்சி தொற்றிக்கொண்டவர்களாய் நேத்ராவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார்கள். அசோக்தான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கேள்வியை கேட்டான். "கோ..கோவிந்தை நீ லவ் பண்றியா நேத்ரா..??" நேத்ரா அந்தக்கேள்விக்கு சில வினாடிகள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அழுதுகொண்டிருந்தவள், அப்புறம் படபடத்த தன் உதடுகளை பற்களால் கடித்து அடக்கியவாறு, 'ஆமாம்..' என்பதுபோல தனது தலையை மெல்ல அசைத்தாள். அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக முகம் மலர்ந்தார்கள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று புரியாமல், சந்தோஷமும், கவலையும் கலந்த மாதிரியாக அவளை ஒரு பார்வை பார்த்தார்கள். இப்போது நேத்ரா பட்டென ப்ரியாவின் கையை பிடித்துக்கொண்டு, சற்றே கெஞ்சலாக சொன்னாள். "ப்ரியா.. உன் வண்டியை தர்றியா..?? எனக்கு அவனை உடனே பாக்கணும் போல இருக்கு..!!" "எ..எடுத்துட்டு போ.. ஆ..ஆனா.. அங்க.." ப்ரியா தடுமாறிக்கொண்டிருக்க, அசோக் சற்று தெளிவான குரலில் நேத்ராவிடம் சொன்னான். "ஹேய் நேத்ரா.. இன்னைக்கு காம்படிஷன்ல நீ பாடனும்னு கோவிந்த் ரொம்ப ஆசைப்பட்டான்.. அங்க உன் பேரை.." இப்போது அசோக்கை இடைமறித்து நேத்ரா பட்டென சொன்னாள். "ஹையோ.. என்னால இப்போ பாட முடியாது அசோக்.. புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!""ஹேய்.. ஒன் வீக்கா நீ கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணினதுலாம்..." "ஸோ வாட்..???? அவனுக்காகத்தான் பாட நெனச்சேன்.. அவனுக்கு புடிக்கும்னுதான் அந்த பாட்டை சூஸ் பண்ணேன்.. கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணேன்.. என் பாட்டை கேட்டு எல்லாரும் கை தட்டுறப்போ, நான் மட்டும் அவன் முகத்தை பாக்கனும்னு ஆசைப்பட்டேன்..!! இப்போ அவனே அங்க இல்ல.. அங்க போய் நின்னுக்கிட்டு யாருக்காக என்னை பாட சொல்ற..??" நேத்ரா ஆடிட்டோரியம் நோக்கி கைநீட்டி ஆவேசமாக கத்தினாள். அசோக்கும் ப்ரியாவும் உறைந்து போனவர்களாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவள் இப்போது தனது ஆவேசம் நீங்கி, சற்றே உடைந்து போன குரலில் சொன்னாள். "இப்போ ஃபோன் பண்ணி பேசுறப்போ கூட.. 'என்னைப்பத்தி வொர்ரி பண்ணிக்காத.. நீ போய் பாடு.. டோன்ட் மிஸ் திஸ் ஆப்பர்ச்சூனிட்டி..'ன்னு சொல்றான்..!! அ..அவன்.. அவன் இல்லாம நான் எப்படி பாடுவேன் அசோக்..??" அசோக்கும் ப்ரியாவும் பேச்சிழந்து போய் நின்றிருந்தார்கள். நேத்ராவையே பிரமிப்பாக பார்த்தார்கள். சில வினாடிகள்..!! அப்புறம் ப்ரியா தனது கைப்பை திறந்து வண்டிச்சாவியை எடுத்து அவளிடம் நீட்டினாள். 'கெளம்பு நேத்ரா..!!' என்றாள். நேத்ரா சாவியை வாங்கிக்கொண்டு அவசரமாய் ஸ்கூட்டி நோக்கி நடந்தாள். அசோக்கும் ப்ரியாவும் அவளை பின்தொடர்ந்தார்கள். நேத்ரா வண்டியில் ஏறி அமர்ந்ததும், அருகில் நின்றிருந்த அசோக் மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான். "அவனும் உன்னை லவ் பண்றானா நேத்ரா..??" "இ..இல்ல.. தெரியல..!!" "உன் லவ்வை இன்னும் அவன்கிட்ட சொல்லலையா..??" "இன்னைக்கு சொல்லிடுவேன்.. அவன் என்ன சொன்னாலும் சரி..!! இனிமேயும் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு.. எ..என்னால முடியாது அசோக்..!!" உறுதியான குரலில் சொன்ன நேத்ரா, ஆக்சிலரேட்டரை முறுக்கி சர்ரென ஸ்கூட்டியுடன் பறந்தாள். அவள் கண்ணில் இருந்து மறையும்வரை அசோக்கும் ப்ரியாவும் அவள் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் மெல்ல தலையை திருப்பி ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு, ஏக்கமாய் ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். அத்தியாயம் 16 எப்போது எவரிடம் எவ்வாறு காதல் வரும் என்று எவர் அறியக்கூடும்..?? நேத்ராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!! அலுவலகத்தில் தனித்துவிடப்பட்ட கோவிந்த் மீது ஒரு பச்சாதாபம் கொண்டுதான் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவனுடன் பேச ஆரம்பிக்கையில் அவனைப்பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை அவளுக்கு..!! ஆனால் அவனிடம் பேசியபிறகு.. அமைதியாக சுற்றித்திரியும் அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அறிந்தபிறகு.. அவன் தன்மீது கொண்டிருப்பது தூய்மையான அன்பென உணர்ந்தபிறகு.. அவளுடய இதயம் காதல்க்கடலில் அமிழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.. தடுக்கவும் அவள் விரும்பவில்லை..!! கோவிந்த் நேத்ரா மீது காட்டிய அன்பிற்கும் காரணம் இருக்கிறது..!! நொந்து போயிருக்கிற மனதுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கிடைத்தால் அதன் மதிப்பே தனி..!! யாரும் அண்டாமல் ஒருவித விரக்தியுடன் தனித்து திரிந்த கோவிந்திற்கு, முதன்முதலாய் வலிய வந்து தன்னை அணுகிய நேத்ராவை உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை..!! அவள் பேசிய ஆறுதல் மொழிகளே, அவள் மீதான அன்பாய் உருமாறி, அவனிடமிருந்து பதிலுக்கு வெளிப்பட்டன.. அவள் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள தூண்டின..!! நேத்ராவின் பக்கமாய் தனது மனம் சாய்வதை அவனும் உணர்ந்தே வைத்திருந்தான்..!! அதனால்தான்.. தனது அறை தேடிவந்து கண்களில் நீருடன் காதலை சொன்ன நேத்ராவிடம், பதிலுக்கு கண்ணீர் உகுத்து தன் காதலையும் அவனால் அறிவிக்க முடிந்தது..!! நேத்ரா அன்று பகல் முழுக்க கோவிந்தின் அறையிலேயே தங்கி இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். மருத்துவரிடம் அழைத்து சென்றாள்.. மதிய உணவு தயார் செய்து கொடுத்தாள்.. மாத்திரைகளை விழுங்க செய்தாள்..!! சாப்பிட்டுவிட்டு களைத்துப்போய் அவன் உறங்க, அருகில் அமர்ந்து கண்கொட்டாமல் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உறங்கி எழுகையில் அவனுடைய உடல்நிலையும் ஓரளவு தேறியிருந்தது. அசோக்கும் ப்ரியாவும் அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக ஒரே பைக்கில் பயணம்..!! கோவிந்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு.. நேத்ரா எடுத்து சென்ற ப்ரியாவின் வண்டியை திரும்ப பெற்றுக்கொண்டு.. அப்படியே நேத்ராவின் காதல் கனிந்ததா என்று அறிந்துகொள்வதும்.. அவர்களது திட்டம்..!! காலிங்பெல் அடித்த அவர்களுக்கு நேத்ராதான் வந்து கதவு திறந்து விட்டாள். அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்து போய், ஒரு வெட்கப் புன்னகையை நேத்ரா வீச, அதிலிருந்தே நடந்ததை அறிந்து கொண்டார்கள் அசோக்கும், ப்ரியாவும்..!! கோவிந்தும் நேத்ராவும் காதலில் இணைந்தது.. அசோக்கிற்கு பெருமகிழ்ச்சியை கொடுத்தது.. ப்ரியாவிற்கோ பெருமகிழ்ச்சியுடன் சேர்த்து, ஒரு சிறுஏக்கத்தையும் கொடுத்தது..!! 'இப்போத்தான் லவ் பண்ண ஆரம்பிச்சா.. இவளுக்கு அதுக்குள்ள செட் ஆயிடுச்சு.. நானும் இத்தனை நாளா லவ் பண்றேன்.. எனக்கு என்னைக்கோ..??' என்பதுபோல..!! 'லவ்வை சொல்றதுக்கு இவளுக்கு இருந்த தைரியம்.. ஏன் எனக்கு இல்ல..??' என்று தன் மீதே ஒரு எரிச்சல்..!! அப்புறம் உடனே 'ஆமாம்.. அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டன்னு.. அண்ணனுக்கு ஃபோன் போட்டு.. உடனே எனக்கு ஒரு பொண்ணு பாருன்னு சொல்றான்.. இந்த லூசுப்பயலை நம்பி எந்த நம்பிக்கைல லவ்வை சொல்றது..??' என்று அசோக் மீது ஒரு கடுப்பு..!! சற்று யோசித்தபிறகு 'துணிஞ்சு சொல்லிடலாமா.. பதிலுக்கு அவன் என்ன சொன்னாலும் பரவால்லன்னு..' என்று மனதில் ஒரு குறுகுறுப்பு..!! அசோக்கும் ப்ரியாவும் கொஞ்ச நேரம் கோவிந்திடம் பேசிக்கொண்டிருந்தார்கள். 'நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்புறேன்..' என்று நேத்ரா சொல்ல, இவர்கள் மட்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியில் வந்து அவரவர் வாகனங்களை நெருங்கையில்.. "காஃபி டே போயிட்டு போலாமா அசோக்.. ரொம்ப நாள் ஆச்சு.. நாம சேர்ந்து போய்..!!" என்று ப்ரியா ஆசையாக கேட்டாள். காஃபி அருந்திக்கொண்டே காதலை சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாளோ என்னவோ..?? ஆனால்.. அசோக்கோ ப்ரியாவின் மனதை அறியாதவனாய்.. "ஹேய்.. ஸாரி ப்ரியா.. செண்பகம் நாளைக்கு ஜாயின் பண்றால.. இன்னைக்கு ஊர்ல இருந்து வர்றா.. அவளை போய் ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்..!! அண்ணி மதியமே கால் பண்ணினாங்க.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..!! அல்ரெடி இப்போவே லேட் ஆயிடுச்சு.. நாம இன்னொரு நாள் போகலாம்.. சரியா..??" என்று வருத்தமான குரலில் சொன்னான். "ம்ம்.. ஓகே.. நோ ப்ராப்ளம்..!!" என்றாள் ப்ரியா ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மறைத்துக்கொண்டு. மனதில் எழுந்த ஆசையை அவன் மறுதலித்துவிட்டானே என்பதால் வந்த ஏமாற்றம்..!! செண்பகத்தின் பேரை அவன் உச்சரிக்க கேட்டதால் வந்த எரிச்சல்..!! இருவரும் ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டியை கிளப்பி எதிரெதிர் திசையில் பறந்தார்கள்.அசோக் கலாசிப்பாளையத்தை அடைந்தபோது, செண்பகம் வந்து சேர்ந்திருந்தாள். தோளில் ஒரு பேக்.. அதை விட பெரிய சைஸில் காலடியில் ஒன்று..!! தனக்கருகே வந்து ப்ரேக் அடித்து நிற்கும் பைக்கை அவள் கவனிக்கவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த ஒரு பானிபூரி கடையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் அவளுக்கு பின்பக்கமாக சென்று அவளுடைய தலையில் 'சத்..' என்று ஒரு அடிபோட, உடனே ஷாக்காகி திரும்பி பார்த்தாள். அசோக் என்று தெரிந்ததும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள். "ஹாய் மாமா..!!" "வந்து ரொம்ப நேரமாச்சா..??" "இ..இல்ல.. இப்போத்தான்.. ஃபைவ் மினிட்ஸ் ஆச்சு..!!" "நான் வந்தது கூட தெரியாம.. எங்க பராக்கு பாத்துட்டு இருக்குற..??" "ஒ..ஒண்ணுல்ல.. சு..சும்மா.. அப்படியே.." செண்பகம் அசடு வழிந்தாள். அசோக் புன்னகைத்தான். அப்புறம் அவளை சீண்டும் எண்ணத்துடன்.. "ஹ்ம்ம்.. பானிபூரி சாப்பிடலாமா செம்பு..??" என்று கேஷுவலாக கேட்டான். "ஓகே மாமா.. சாப்பிடலாம்..!!" என்று செண்பகம் முகமெல்லாம் பிரகாசமாகவும், வாயெல்லாம் பல்லாகவும் சொன்னாள். அசோக் உடனே தனது நெற்றியை கீறிக்கொண்டு ஏதோ யோசிப்பது மாதிரி நடித்தபடியே, "இல்ல செம்பு.. இவன்ட்ட பானிபூரி நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்.. நாம போற வழில ஒரு கடை இருக்கு.. சூப்பரா போட்டு தருவான்.. அங்க போய் சாப்பிடுவோம்.. சரியா..??" என்று கேட்க, "ஹ்ம்ம்.. சரி மாமா..!!" முகம் வாடிப்போய்.. குரலில் உற்சாகம் குறைந்து போய்.. தலையாட்டினாள் செண்பகம்.
இருவரும் பைக்கில் கிளம்பினார்கள். மார்பில் ஒன்றும் மடியில் ஒன்றுமாய் இரண்டு பேகையும், தவறி விழுந்துவிடாமல் கவனமாக பிடித்துக்கொண்டே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பைக் ப்ரேக் அடித்து நிற்கும் தருணத்திற்காக ஆர்வமாக காத்திருந்தாள் செண்பகம். பைக் நிற்கவே இல்லை.. சென்றது.. சென்றது.. சென்று கொண்டே இருந்தது..!! ஒரு கட்டத்தில் செண்பகம் பொறுமை இழந்து போய்.. "இன்னும் ரொம்ப தூரம் போகனுமா மாமா..??" என்று சலிப்பாக கேட்டாள். "இல்ல இல்ல.. இதோ வந்துருச்சு.. நம்ம வீடு..!!" என்று வீட்டுக்கு முன்பாக பைக்கை ப்ரேக் அடித்து நிறுத்தினான் அசோக். செண்பகம் ஷாக்காகி போனாள். "வீடா..???? வீட்டுக்கே வந்துட்டமா..????" அதிர்ச்சியும் ஏமாற்றமுமாம் கேட்டாள். "ஆமாம்.. ஏன்..??" "போற வழில பானிபூரி சாப்பிடலாம்னு சொன்னீங்க..??" "ஷ்ஷ்ஷ்.. ஐயோ.. மறந்தே போச்சு செம்பு..!! நீயாவது ஞாபகப் படுத்திருக்கலாம்ல..??" அசோக் நல்லவன் மாதிரி நடித்தான். "நான் சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. நீங்க திட்டுவீங்களோன்னு பயமா இருந்தது.. அதான் சொல்லல..!!" "ப்ச்.. இதுக்குலாம் எதுக்கு திட்டப்போறேன்..?? ஹையோ.. போடி.. எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்ட நீ..!!" பழியை தூக்கி அவள் மீதே போட்டான் அசோக். "ப..பரவால மாமா.. விடுங்க..!!" பரிதாபமாக சொன்ன செண்பகத்தை பார்க்க அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த பேக் ஒன்றை தான் வாங்கிக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னான். "சரி.. நாளைக்கு கண்டிப்பா பானிபூரி சாப்பிடலாம்.. ஓகேவா..??" "ஹ்ம்ம்.. ஓகே மாமா..!!" செண்பகம் ஓரளவு சந்தோஷம் திரும்பியவளாய் சொன்னாள். அடுத்த நாள்.. அவர்கள் கம்பனியில்.. அசோக்கின் டீமில்.. செண்பகமும் சேர்ந்து கொண்டாள்..!! அவள் தங்கிக்கொள்வதற்கு மடிவாலா ஏரியாவில் ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்குமா என அசோக்கே தினமும் அட்வர்டைஸ்மன்ட் பார்த்து தேடுதல் வேட்டை நடத்தினான். ஹாஸ்டலில் இடம் கிடைக்கும்வரை தனது வீட்டில் அவளை தங்கிக்கொள்ள அனுமதித்தான். செண்பகமோ நிரந்தரமாக அவன் வீட்டில் டேரா போடலாம் என்று எண்ணினாள்."நான் இங்கயே தங்கிக்கிறேனே மாமா..??" என்று கெஞ்சலாக கேட்டாள். "ஏன்.. என்னாச்சு..??" அசோக் புருவத்தை சுருக்கியவாறு கேட்டான். "எனக்கு பி.ஜி.ல தங்க புடிக்கல..!!" "ஒன்னும் கவலைப்படாத செம்பு.. மாமா உனக்காகத்தான் நல்ல சாப்பாடு போடுற பி.ஜி.யா.. மைக்ரோஸ்கோப் வச்சு தேடிட்டு இருக்குறேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது..!!" "ஐயோ.. அதுக்காக சொல்லல மாமா..!!" "ம்ம்.. அப்புறம்..??" "எல்லாம் நாலாயிரம் ஐயாயிரம்னு கேக்குறாங்க.. தேவை இல்லாத தெண்ட செலவுதான..?? வேணுன்னா.. ஒன்னு செய்யலாமா..??" "என்ன..??" "நான் வேணா.. தங்குறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. திங்கிறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. உங்ககிட்ட குடுத்துடுறேன்..!!" "எந்த தவுசண்ட் ருபீஸ்..?? எப்போவும் உன் பர்ஸ்ல இருக்குமே.. அந்த தவுசண்ட் ருபீஸா..??" அசோக் கிண்டலாக கேட்டான். "ஐயோ.. அது இல்ல மாமா.. ரியல் தவுசண்ட் ருபீஸ்.. ஒரிஜினல் தவுசண்ட் ருபீஸ்..!! ஓகேவா..??" "அதுலாம் சரிப்பட்டு வராது செம்பு.. நீ பி.ஜி.ல தங்கிக்கோ.. அதுதான் எல்லாருக்கும் நல்லது..!! புரியுதா..??" அசோக் பிடிவாதமாக மறுக்க, "ம்ம்.. சரி மாமா..!!" செண்பகம் எரிச்சலுடன் ஒத்துக்கொண்டாள். அசோக்கின் பிடிவாதம் செண்பகத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றால், ஆபீசில் ப்ரியாவுக்கோ வேறுவிதமான எரிச்சல்..!! செண்பகம் ஜாயின் செய்த முதல் மூன்று நாட்கள் அசோக்குடன் பைக்கிலேயே ஆபீசுக்கு வந்தாள். அவளுக்கு இது புது இடம், புது டீம் என்பதால் அசோக் எப்போதும் அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அடிக்கடி அவர்களை சேர்ந்து பார்க்க நேரிட்ட ப்ரியாவுக்கோ, ஏனோ அது ஒருவித எரிச்சலை கிளப்பிவிட்டது. அதில்லாமல் நேத்ராவும், கோவிந்தும் வேறு உரிமையாக விரல்கள் கோர்த்து சுற்றி திரிந்து, அவள் மனதில் ஒருவித ஏக்கத்தை கிளறிவிட்டார்கள். செண்பகம் ஜாயின் செய்த மூன்றாம் நாள் இரவு.. அவர்கள் ஆபீசின் டூவீலர் பார்க்கிங் பகுதியில்.. ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்ய.. ப்ரியா அதனுடன் போராடிக் கொண்டிருந்தாள்..!! 'ம்ம்க்குக்குக்குக்கும்.. ம்ம்க்குக்குக்குக்கும்..' என்று கனைத்ததே ஒழிய, ஸ்டார்ட் ஆவது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் ஏதோ ஜோக்குக்கு சிரித்தவாறே அசோக்கும், செண்பகமும் லிஃப்டில் இருந்து வெளிப்பட்டார்கள். ப்ரியா ஓரக்கண்ணால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் பைக்கில் ஏறினார்கள். சர்ரென இவள் இருந்த திசை நோக்கி வந்த பைக், வழியில் இவளை கண்டதும் ப்ரேக்கிட்டு நின்றது. "என்னக்கா.. என்னாச்சு..??" செண்பகம் கவலையாக கேட்டாள். "ஸ்டார்ட் ஆகல.." ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "யூ.எஸ் டாலர்ஸ்ல வாங்குன.. யூஸ்லஸ் வண்டில..?? அப்டித்தான் இருக்கும்..!!" தன் மனதில் அந்த ஸ்கூட்டி மீதிருந்த ஒருவித கடுப்பை, அசோக் கேலியாக உதிர்த்தவாறே, அவனுடைய பைக்கை சீறவிட்டான். வண்டியில் பறந்துகொண்டே 'ஹேவ் ஃபன் ப்ரியா.. வித் யுவர் ஓட்டை வண்டி..!!!!' என்று கத்தினான். செண்பகம் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதே நேரம் பேலன்ஸ்க்காக அசோக்கின் தோளை பற்றினாள். அவர்கள் போவதையே ப்ரியா வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் பின்னால் அமர்ந்து இதேமாதிரி அவள் பறந்ததெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. 'ச்ச.. தம்பி சொன்னான்னு இவளுக்கு வேலை கெடைக்க ஹெல்ப் பண்ணினேன்.. இவ என் எடத்தையே புடிங்கிக்கிட்டாளே..' என்பது மாதிரி செண்பகம் மீது ஒரு எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலுடனே, ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டியை ஆத்திரமாக உதைத்தாள். அப்புறம் ஒருவழியாக அந்த மாதிரி உதைத்து உதைத்தே ஸ்கூட்டியை கிளப்பி கடுப்புடனே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால்.. மூன்று நாட்களாக அவள் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை ஒரே நொடியில் போக்குமாறு, ஒரு இனிய செய்தி அவள் வீட்டில் அன்று இரவு காத்திருந்தது. சோபாவில் அமர்ந்திருந்த ப்ரியா கால்களை கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த வரதராஜன் அவளுக்கு சாதத்தை பிசைந்து ஊட்டிவிட்டுக்கொண்டே ஆரம்பித்தார். "உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா ப்ரியா..!!" "என்ன விஷயம் டாடி..??" "எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்மா..!!" "ஹையோ.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா..?? நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன்ல டாடி..!!" ப்ரியா சலிப்பாக சொன்னாள்.“ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா.. மதுரைக்கார பையன்.. பெங்களூர்லதான் வேலை பாக்குறாரு..!!" "ப்ச்.. இந்த மதுரைக்கார பசங்களே ரொம்ப திமிர் புடிச்சவனுகளா இருப்பானுக டாடி.. என் ஆபீஸ்ல கூட ஒன்னு இருக்குது.. அராத்து புடிச்சது..!! எனக்கு சுத்தமா புடிக்காது.. ப்ளீஸ் டாடி.. வேணாம்..!!" "அடடடடா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்மா..!!" "என்ன சொல்லப்போறீங்க..?? வயசு ஏறிக்கிட்டே போகுது.. பவுன் வெலை கூடிக்கிட்டே போகுது.. கூட்ஸ் வண்டிலாம் கூவிக்கிட்டே போகுது.. அதான..??" "ஐயோ.. அது இல்லம்மா..!!" "அப்புறம்..??" "என்னை கொஞ்சம் பேச விடுறியா..??" வரதராஜன் பொறுமை இழக்கவும், "சரி.. பேசுங்க..!!" பிரியா மனம் இறங்கினாள். 'இந்தா..' என்று வரதராஜன் சாதத்தை பிசைந்து நீட்ட, அவள் 'ஆ'வென வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். மகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டே வரதராஜன் ஆர்வமாக சொல்ல ஆரம்பித்தார். ப்ரியாவும் வாயை அசை போட்டுக்கொண்டே அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தாள். "ப்ரோக்கர்ட்ட உன் ஃபோட்டோ குடுத்திருந்தேன்னு சொன்னேன்ல..??" "ஆமாம்.." "நாலு மாசம் முன்னாடி இந்த பையனோட அண்ணன் உன் ஃபோட்டோவும், என் ஃபோன் நம்பரும் வாங்கிருக்காரு..!! 'கூடிய சீக்கிரம் அவங்க உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுவாங்க'ன்னு ப்ரோக்கர் எங்கிட்ட சொல்லிருந்தாரு.. நானும் கொஞ்ச நாள் பாத்தேன்.. அவங்கட்ட இருந்து எந்த தகவலும் வரல.. அப்புறம் நானே அவருக்கு ரெண்டு தடவை கால் பண்ணி பாத்தேன்.. பதில் ஒன்னும் சரியா வரலை.. நானும் அவ்வளவுதான்னு நெனச்சு அதை அப்படியே விட்டுட்டேன்..!!" "ஹையோ.. பயங்கர ப்ளேடு போடுறீங்க டாடி.. சீக்கிரம் சொல்லி முடிங்க..!!" "இரும்மா..!! ம்ம்ம்.. அவ்வளவுதான்னு நெனச்சு விட்டுட்டனா..?? இப்போ.. ரெண்டு வாரம் முன்னாடி.. திடீர்னு அவரே எனக்கு கால் பண்ணினாரு.. 'உங்க பொண்ணை எங்களுக்கு புடிச்சிருக்கு.. ஜாதகம் அனுப்பி வைங்க.. பாத்துட்டு சொல்றோம்'னு சொன்னாரு.. நானும் அனுப்பி வச்சேன்..!! அவங்களும் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா உன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பாத்திருக்காங்க.. ரெண்டு ஜோசியருமே 'அருமையான வரன்.. எல்லா பொருத்தமும் பிரம்மாதமா இருக்கு.. இந்த இடத்தை முடிங்க.. அமோகமா இருக்கும்'னு சொல்லிருக்காங்க..!!" "ஐயோ..!! இந்த ஜோசியம்லாம் பயங்கர ஃப்ராடு டாடி.. அதைலாம் நம்பக்கூடாது.. இந்தியால இருக்குற இந்த மாதிரி மூட பழக்கத்தை பத்தி.. இத்தாலில இருக்குற ஒரு பெரிய ரைட்டர் ஒரு பெரிய புக் எழுதிருக்காரு.. அந்த புக் எவ்ளோ ஸேல் ஆகி இருக்கு தெரியுமா..?? உங்களுக்கு எங்க அதுலாம் தெரிய போகுது..??" "ஹாஹா.. இத்தாலி பத்தி எனக்கு என்னம்மா கவலை..?? என் பொண்ணு கழுத்துல ஏறப்போற தாலி பத்திதான் எனக்கு கவலை..!! நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளும்மா..!!" "ம்ம்.. சொல்லுங்க..!!" "பையனோட அண்ணன் நேத்து கால் பண்ணினாரு.. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்ப திருப்தின்னு சொன்னாரு.. பையனோட ஃபோட்டோ அனுப்பி வைக்கிறோம்.. உங்க பொண்ணுக்கு புடிக்குதான்னு கேட்டுட்டு சொல்லுங்கன்னு சொன்னாரு..!!" "நீங்க என்ன சொன்னீங்க..??" "கேளு.. இன்னைக்கு அந்த பையனோட ஃபோட்டோ கூரியர்ல வந்தது.. கவரை பிரிச்சு பாத்தா.. எனக்கு ஒரே ஷாக்கு..!!" "ஏன்.. பையனுக்கு பொக்கை வாயா..??" "ஐயயே.. ஏன்மா இப்படி இருக்குற நீ..??" "ஓகே ஓகே.. கண்டின்யூ..!!" "பையன் யார் தெரியுமா.. அன்னைக்கு நான் ஒரு தம்பியை பத்தி சொல்லிட்டு இருந்தன்ல..??" "எந்தத் தொம்பி..??" "அதான்மா.. உன் அம்மாவோட தாலிச்சரடு தொலஞ்சு போய்.. எடுத்துக்குடுத்தார்னு..!!" "ஆ..ஆமாம்..!!" ப்ரியாவிடம் இப்போதுதான் மெலிதாக ஒரு ஆர்வம் பிறந்தது. "அதே தம்பிதான்மா..!! எனக்கு அந்த தம்பிதான் மாப்ளைன்னு தெரிஞ்சப்போ.. எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா..??""ஓ..!!" "ரொம்ப நல்ல இடம்மா.. நம்மவிட ரொம்ப வசதியான குடும்பம்.. அன்னைக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேசுனதுல இருந்தே மாப்பிள்ளை தங்கமானவர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. இந்த இடம் அமைஞ்சா டாடி ரொம்ப நிம்மதியா இருப்பேன்மா..!! மாப்ளையும் ரொம்ப அழகா லட்சணமா இருக்காரு.. ஃபோட்டோ பாரு.. உனக்கு கண்டிப்பா புடிக்கும்..!!" வரதராஜன் சொல்லிக்கொண்டே டீப்பாய் மீது இருந்த அந்த கவரை எடுத்து ப்ரியாவிடம் நீட்டினார். ப்ரியா ஒருவித ஆர்வத்தின் பிடியில் இருந்தாள். அசோக்தான் தன் கணவன் என்று அவளுடைய மனதில் பதிந்து போயிருந்தாலும், தன்னை சந்திக்காமலே தன்னிடம், 'க்ரேட் கேரக்டர்..' என்று பாராட்டுப்பெற்ற அந்த மூஞ்சியை பார்க்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. எனவே கவரை பிரித்து ஃபோட்டோவை வெளியே எடுத்தாள். பார்த்தாள்..!! ஃபோட்டோவை பார்த்த ப்ரியா எந்த மாதிரி உணர்ச்சிக்கு உள்ளாகியிருப்பாள் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை..!! அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ப்ரியா தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. தனது மனதில் இருந்த உருவத்தையே.. தந்தை மாப்பிள்ளை என கையில் கொடுக்க.. அவளுடைய உடல் முழுவதிலும் ஒரு சிலிர்ப்பு.. உள்ளம் முழுவதிலும் ஒரு பரவசம்.. முகம் முழுவதிலும் ஒரு பிரகாசம்..!! மனதுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பீறிட்டு கிளம்ப.. வார்த்தைகள் கூட சரியாக வந்து விழவில்லை அவளுக்கு.. திணறலாய் சொன்னாள்..!! "டாடி.. இ..இது.. இவன்.." "என்னம்மா.. என்னாச்சு..??" "இ..இவனை எனக்கு தெரியும் டாடி.. இவன் பேர் அசோக்..!! என் கூட வொர்க் பண்றவன்தான்.. ஆறு வருஷமா இவனை எனக்கு தெரியும்..!!" "ஆஹா..!! இதைப் பார்டா.... நான் உனக்கு ஷாக் குடுத்தா.. நீ எனக்கு அதைவிட பெரிய ஷாக் குடுக்குற.. ஹாஹா...!! ம்ம்ம்ம்.. ஆறு வருஷம்னா.. அப்போ என்னை விட உனக்கு மாப்பிள்ளையை பத்தி நல்லா தெரியும்னு சொல்லு..!!" "ஹ்ம்ம்.. நல்லா தெரியும் டாடி..!!" "எப்படி.. நல்ல பையன்தான..??" "ந..நல்ல பையன்தான்..!!" "பிடிச்சிருக்கா..??" வரதராஜன் பேச்சுவாக்கில் இயல்பாய் கேட்க, "பிடிச்.." ப்ரியா அவசரமாய் சொல்லிவிட்டு அப்புறம் பாதியில் நிறுத்தினாள். அவள் மனதில் இப்போது லேசாக ஒரு குழப்பம். சில விடை தெரியாத கேள்விகள். "ஹாஹா.. ஏன்மா பாதில நிறுத்திட்ட.. பிடிச்சிருக்குன்னுதான் முழுசா சொல்லேன்..!!" "நான் சொல்றது இருக்கட்டும் டாடி..!! பையனுக்கு என்னை புடிச்சிருக்கான்னு அவங்ககிட்ட கேட்டீங்களா..??" "அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்மா.. உன் சம்மதம் மட்டுந்தான் இப்போ பாக்கி.. மாப்ளையோட சம்மதம் உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே கெடைச்சிடுச்சு.. ஹாஹாஹாஹா..!!" வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க, "எ..என்ன டாடி சொல்றீங்க..??" ப்ரியா தலையை சொறிந்தவாறு கேட்டாள்.
"ஆமாம்மா..!! அவங்க அண்ணன் சொன்னாரு.. பையன் அப்படியே குடும்பத்துக்கு அடங்கி நடக்குறவராம்.. பெரியவங்க வார்த்தையை தட்டவே மாட்டாராம்.. அண்ணன், அண்ணி மேல அம்புட்டு மரியாதையாம்.. அவங்களா பாத்து எந்த பொண்ணை செலக்ட் பண்ணாலும் அவருக்கு சம்மதம்தானாம்.. இந்தக்காலத்துல இப்படி ஒரு அடக்கமான புள்ளையை.." வரதராஜன் சொல்லிக்கொண்டே போக, 'ம்க்கும்.. கிழிஞ்சது கிருஷ்ணகிரி..' என்று ப்ரியா மனதுக்குள்ளேயே தந்தையின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள். 'அவனா அடக்கமான புள்ளை.. அவனை மாதிரி ஒரு அடங்காத தடிமாட்டை நான் பாத்ததே இல்ல..' என்று நினைத்துக்கொண்டாள். "இங்க பாருங்க டாடி.. இந்தக்கதைலாம் வேணாம்.. நாளைக்கு அவங்களுக்கு ஃபோன் பண்ணி.. 'மாப்ளை பொண்ணோட ஃபோட்டோவை பாத்தாரா.. இந்த கல்யாணத்துல அவருக்கு சம்மதமா'ன்னு தெளிவா கேட்டுடுங்க..!! என்ன.. புரியுதா..??" "அது சரிம்மா.. நாளைக்கு நான் ஃபோன் பண்ணினா.. 'உங்க பொண்ணு என்ன சொல்றா'ன்னு அவங்க என்னை திருப்பி கேட்பாங்களே.. அதுக்கு நான் என்ன பதில் சொல்றது..??" வரதராஜன் கிடுக்கிப்பிடியாய் ஒரு கேள்வி கேட்கவும், ப்ரியா பட்டென அமைதியானாள். முகத்தில் சற்றே வெட்கம் படர, தலையை லேசாக கவிழ்த்துக்கொண்டாள். மகளுடைய வெட்கத்தைப் பார்த்து வரதராஜன் மெலிதாக புன்னகைத்தார். அப்புறம் அவரே மெல்லிய குறுகுறுப்பான குரலில் கேட்டார். "அப்போ.. அவங்ககிட்ட… என் பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிடவா..??" "ம்ம்..!!" ப்ரியா வெட்கத்துடன் தலையாட்ட, வரதராஜனின் புன்னகை மிகவும் பெரிதானது. "அப்படி சொல்லுடி என் ராஜாத்தி..!!" என்று சந்தோஷ மிகுதியில் சோற்றுக்கையுடனே மகளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினார். ப்ரியாவுக்கு அன்று இரவு தூக்கமே இல்லை. மனம் முழுக்க நிறைய சந்தோஷமும், சிறு சிறு குழப்பங்களும்..!! நடப்பதெல்லாம் நனவா இல்லை கனவா என தன்னைத்தானே அடிக்கடி கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அசோக்கின் ஃபோட்டோவை தந்தைக்கு தெரியாமல் தன் அறைக்கு எடுத்து சென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள்ளேயே கொஞ்சலாக பேசி அவனிடம் உரையாடினாள். அதேநேரம் அவளுடைய மனதுக்குள் ஒருவித குழப்ப விவாதமும் நடந்து கொண்டிருந்தது. 'நான்கு மாதங்கள் முன்பே எனது ஃபோட்டோ அங்கே போயிருக்கிறது என்றால்.. அசோக் என் ஃபோட்டோவை பார்த்தானா இல்லையா..?? இல்லை.. பார்த்திருக்க மாட்டான்.. பார்த்திருந்தால் அந்த செய்தி எப்போதோ என்னிடம் வந்து சேர்ந்திருக்குமே..?? அதுசரி.. நான்கு மாதங்களாக அவர்கள் ஏன் அப்பாவை தொடர்பு கொள்ளவில்லை..?? திடீரென ஏன் தொடர்பு கொண்டார்கள்..??' அந்த கடைசி கேள்வி மனதில் எழுந்ததும், அன்று அவளுக்கும் அசோக்கிற்கும் நடந்த சண்டையும், அதன்பிறகு அவன் ஃபோனில் அண்ணனை அழைத்து பேசியதும் அவளுடைய நினைவுக்கு வந்தது..!! உடனே படபடவென பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்து போனமாதிரி இருந்தது..!! 'ஆமாம்.. அப்படித்தான் இருக்கவேண்டும்.. முன்பு ஏதோ ஒரு காரணத்துக்காக என் ஃபோட்டோவை பார்க்காமலே, அசோக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான்.. அப்புறம் அன்று அவன் பேசியதும், அவனுடைய அண்ணன் அப்பாவை திரும்ப தொடர்பு கொண்டிருக்கிறார்.. அசோக் அன்று சொன்னதை வைத்து 'மாப்பிள்ளைக்கு சம்மதம்' என்று அவரும் இவரிடம் சொல்லியிருக்கிறார்.. கூட்டி கழித்து பார்த்தால், அசோக்கிற்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கிறது..!!' ப்ரியா நெற்றியை கீறிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். சடசடவென சில முடிவுகள் எடுத்தாள். 'அசோக்கின் சம்மதம் தெரிந்து கொள்ள அப்பாவை எதிர்பார்க்க தேவை இல்லை.. நாமே நாளை அவனிடம் மனம் விட்டு பேசி விட வேண்டியதுதான்.. அவனுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. இத்தனை நாளாய் அவனிடம் நடந்து கொண்ட முறைக்காக தயக்கமில்லாமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.. அவன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிவிட வேண்டும்.. என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளடா என்று மனம் விட்டு பேசிவிட வேண்டும்..!!’ அந்த மாதிரி தெளிவாக ஒரு முடிவெடுத்ததும், ப்ரியாவின் மனம் குழப்பம் நீங்கி அமைதியானது. மீண்டும் அசோக்கை பற்றிய காதல் நினைவுகள் மனதை நிறைக்க ஆரம்பித்தன. அவனுடைய புகைப்படத்தை மார்பின் மீது போட்டுக்கொண்டு, கண்கள் மூடி கல்யாணக்கனவு காண ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment