Pages

Monday, 16 March 2015

சுகன்யா... 58

ஐபோடில் பாடிக்கொண்டிருந்தவள் தன் கணீரென்றக் குரலால் சம்பத்தின் உறைந்திருக்கும் இதயத்தை காதல் தீயால் உருகவைத்தாள். நெகிழவைத்தாள்.

"நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே... திறக்காத சிப்பி என்னைத்
திறந்து கொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே...
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்; உன் வருகையினால் வயதறிந்தேன்..!
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..?!!"

சுகன்யா தன் முகம் தாமரையாக மலர்ந்து பாட்டுக்கேற்றவாறு ஆடிக்கொண்டிருந்தாள். சம்பத் தன் பாளம் பாளமான பரந்த மார்பில் துணியில்லாமல், நீல நிற ஆகாயத்தை நோக்கியவாறு பாடிக்கொண்டிருந்தான். துள்ளி துள்ளி ஆடினான்.

"கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா?


கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?"

என் மனசு சொல்லுது... சுகன்யா என்னுடையவள். நேற்றும் இன்றும் நாளையும் அவள் என்னவள். அவள் எங்கு போனாலும், யாருடன் தன் கை கோத்து சுற்றி சுற்றி வந்தாலும், கடைசியில் அவள் என்னிடம் வருவாள். அவளே வருவாள். அவள் என்னுடையவள். அவள் வரும்வரை நான் அவளுக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

தேர் எங்கு ஓடினாலும் அது தன் நிலையை அடைந்தே தீரும். நதி எங்கு பாய்ந்தாலும் கடைசியில் சமுத்திரத்தை சேர்ந்தே ஆகவேண்டும்...

கடல் தன்னுள் வந்து சேரும் நதியின் மூலத்தை அறிய ஆசைப்படுவதில்லை. தன்னுள் மூழ்கி தன் அடையாளத்தை இழக்க ஓடிவரும் ஆற்றின் நிறம் என்னவென்று பார்ப்பதில்லை. கடல் தன்னுள் ஐக்கியமாக வேக வேகமாக வரும் ஆற்றுத் தண்ணீரின் சுவையை தெரிந்து கொள்ளத் துடிப்பதில்லை. இத்தனை நாள் நீ எங்கிருந்தாய் என்று விசாரிப்பதுமில்லை.

நதி யார்? கடல் யார்?

உங்கள் இருவரில் யார் யாரைத் தேடுகிறீர்கள்?

யார் யாரிடம் யாசிப்பது?

யார் யாரிடம் சென்று சேரப்போகிறீர்கள்?

சம்பத்தின் உள்ளத்திலிருந்து ஒரு கேள்விக்குப் பின் அடுத்த கேள்வி உரக்க எழுந்தது.

ம்ம்ம்... சம்பத் பதட்டமில்லாமல் யோசித்தான்.

சிலகாலங்களில் சுகன்யா நதியாக இருந்தாள். அந்த நேரங்களில் சம்பத்தாகிய நான் அவள் வந்து சேரும் கடலாக இருந்தேன். இம்முறை நான் நதியாக உருவெடுத்திருக்கிறேன். இங்கும் அங்கும் இலக்கில்லாமல் இதுவரை ஓடி களைத்திருக்கிறேன். சுகன்யா என்னை அரவணைக்கப் போகும் விசாலமான கடலாக இருக்கிறாள்.

சம்பத்தின் மனமே கேள்விகளுக்குப் பதிலையும் சொல்லியது.

நல்லது. செல்வா என்கிற தமிழ்செல்வன் யார்?

கடலின் கம்பீரமான அழகில் ஈர்க்கப்பட்டு அதில் கட்டுமரமாய் சிறிது நேரம் மிதப்பவர்களில் தமிழ்செல்வனும் ஒருவனாக இருக்கலாம். கட்டுமரம் கடைசிவரை கடலில் மிதப்பதில்லை.

கடல் அமைதியாக இருக்கும் போது, அழகாக தன் நிறத்தைக் காட்டி கண் சிமிட்டும் போது, சூரியன் ஒளியில் தங்கமாக மின்னும் போது, கட்டுமரம் கடலை தான் அடிமைப்படுத்தியிருப்பது போல் நினைத்து உப்பு நீரில் நடனமாடுகிறது.

கடலில் புயல் தோன்றும் போது, கடல் சற்றே தன் பொறுமையை இழக்கும் போது, கட்டு மரம் சிதறி உருக்குலைந்து விடும். அந்த நேரங்களில் கடல் கட்டுமரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கடலில் மிதக்கும் கட்டுமரத்தை என்னைப் போன்ற நதி எப்போதும் வெறுப்பதில்லை. விரும்புவதுமில்லை. நதிக்கு நாணலும் ஒன்றே. பாய்விரித்து சீறிப் பாயும் படகும் ஒன்றே. நான் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் ஓட்டம் வழியில் பல இடைஞ்சல்களை சந்திக்கும். நதி பொறுமையுடன் ஓடுகிறது.

நதி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. நதி, தான் தோன்றும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். நதி ஓடும் திசை மாறலாம். சில நேரங்களில், அதிக வெப்பத்தால், நதி வற்றியும் போகலாம். வற்றினால், நிச்சயமாக அது மழையாக மாறி, வெள்ளமாக ஓடி மீண்டும் தன் பாதையை நிர்ணயித்துக் கொள்ளும்.

ஓடும் பாதையில் எதிர்படும் அசுத்தங்களால் நதியும் நாற்றமடிக்கலாம். நதி அழுக்கானாலும் தன் புனிதத்தை எப்போதும் இழப்பதில்லை. தன் வேகத்தை இழப்பதில்லை. நிறம் மாறலாம். சுவை மாறலாம். லட்சியம் மாறுவதில்லை.

நதி கடலைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. ஓடும் ஓட்டத்தில் தன்னை சுத்தம் செய்துகொள்ளுகிறது. அலுக்காமல் தேடி தேடி முடிவில் கடலை அடைந்தே தீருகிறது.

நதிக்கு கடலில் சென்று சேரவேண்டும்; அதுவே அதன் இலக்கு. அதுவே அதன் இலட்சியம். அதுவே அதன் முடிவான முடிவு.

நான் நதி... நான் வற்றாத ஜீவ நதி.

அந்த நள்ளிரவில், இருட்டறையில், சம்பத்தின் உள்ளம், பறக்கும் திசை எதுவென அறியாமல், ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. உயர உயர பறக்க நினைக்கும், ஊர்குருவியின் நிலையை அவன் மனம் ஒத்திருந்தது.

இந்த நேரத்தில் சுகன்யாவின் மீது தன் மனதிலிருந்து பொங்கிவரும் ஆசை, காதல் சரியானதா? தவறானதா? தன் ஆசையை அவளிடம் சொல்லுவதா? வேண்டாமா?

துல்லியமாக ஒரு முடிவெடுக்கமுடியாமல், விழிப்புமில்லாமல், தூக்கமுமில்லாத நிலையில் கட்டிலில் கிடந்தான், சம்பத். 

நேற்றைய இரவின் நினைவுகள் ஒரு பறவையைப் போல் சிறகை விரித்தன. தலை முடியை ஷாம்புவால் அவசரமில்லாமல் சுத்தம் செய்து ஷவரை திருகினான், சம்பத்.

சிறு தூறலாய், பூத்துளிகளாய், உடலுக்கு இதமாக சுடுநீர் தலையில் கொட்டி உடலெங்கும் வழிந்தது.

வீட்டில் யாருமில்லை. தனியனாக இருக்கிறேன். என்ன செய்கிறாய் என்று கேட்கும் என் தாய் வீட்டில் இல்லை. சுதந்திரம். தனிமை நீ விரும்பும் சுதந்திரத்தைத் தருகிறது. சுதந்திரம் தரும் சுகமே தனிதான்.

மனம் இலேசாகும் போது வாய் முணுமுணுக்கத்தானே செய்யும். சம்பத் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சம்பத் இப்போது தன் வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

என்மேல் விழுந்த மழைத்துளியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்!

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்!
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்!

ஒலியைத் திறந்தால் இசை இருக்கும்!
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்!

வானம் திறந்தால் மழை இருக்கும்!
என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்!

இரவைத் திறந்தால் பகல் இருக்கும்!
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்!

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

பார்வை இரண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமை ஆகிடுமோ?


சுகன்யா... நீ இத்தனை நாளாய் எங்கேயிருந்தாய்? என் இதயத்தின் ஒலி உனக்கு கேட்கிறதா? என் நெஞ்சம் பாடும் பாடல் உனக்கு கேட்கிறதா? உனக்கு கேட்கும் வரை நான் உனக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

"டேய்... டேட்... உனக்கு என்னடா ஆச்சு?" அவன் மனம் சிரித்தது.

"ஐ ஆம் இன் லவ்." சம்பத்தின் முகத்தில் வெட்கம்.

"சுகன்யா...சுகன்யாங்கறே... அவளையா காதலிக்கறே?"

"யெஸ்..."

"உன் மாமா பொண்ணைத்தானே?"

"யெஸ்"

"அவளுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.. நீ அவளை இன்னைக்குத்தான் லவ் பண்ண ஆரம்பிசிருக்கே... கதை புரியலியே?"

"ஸாரி... நான் நேத்துலேருந்து அவளை லவ் பண்றேன்... கரெக்ட் யூவர்செல்ஃப்...! நான் அவளை நேசிக்கறதுல யாருக்கு என்னப் பிரச்சனை?

"இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகப்போறவளை நீ காதலிக்கறே?

"ஆகத்தானே போறா..? இன்னும் ஆயிடலியே?"

"அப்டீன்னா... அவங்க கல்யாணம் நடக்காதா?"

"எனக்கென்னத் தெரியும்...?"

"டேய்... வெறுப்பேத்தாதே... உன் ப்ளான் என்னடா?"

"சுகன்யாவுக்காக பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்."

"செல்வாவுக்கு ஆப்பு வெச்சே? உன் ஆப்பு வேலை செய்யாம, அவன் கிட்ட நேத்து மன்னிப்பு கேட்டே? இப்ப திரும்பவும், நீ யாருக்கு ஆப்பு வெக்கப்போறே? சுகன்யாவுக்கா?"

"நான் லவ் பண்றவளுக்கு நானே ஆப்பு வெப்பனா?"

"டேய்... சம்பத்... சுகன்யா செல்வாவை லவ் பண்றா? இன்னைக்கு அவங்களுக்கு எங்கேஜ்மெண்ட்.. கூடிய சீக்கிரம் அவங்களுக்கு கல்யாணம் நடக்கப் போவுது! நீ அவளை லவ் பண்றே.. கேட்டா, இதுல என்னப் பிரச்சனைங்கறே? உனக்குப் பைத்யம் கிய்த்யம் பிடிச்சிடலியே?"

"இல்லே"

"அவ எப்படிடா உன்கிட்ட வருவா? உன் ஆசை எப்படிடா நிறைவேறும்?"

"தெரியலை... இப்ப இதுக்கு எங்கிட்ட பதில் இல்லை... என்னோட உள்ளுணர்வு சொல்லுது... சுகன்யா நிச்சயமா எங்கிட்ட வருவா; அவதான் இந்த ஜென்மத்துல என் மனைவி..!"

"ம்ம்ம்... டேய்ய்ய்.. டேய்ய்ய்... நீ யாருகிட்ட பேசிகிட்டு இருக்கே? நான்தான்டா உன் உணர்வு, நீ சொல்ற உன் உள்ளுணர்வு; என்னடா என்கிட்டயே கிண்டலா? நீ எப்பவாவது மப்புல இருப்பே; இப்ப அதுவும் இல்லே; ஏன்டா உளர்றே?"



"என் ஆத்மா சொல்லுது... ஆத்மா பொய் சொல்லாது.."

சம்பத் தன் தலையை பதட்டமில்லாமல் துவட்டிக்கொண்டான். காக்கி நிற காட்டன் பேண்ட்டை இடுப்பில் பெல்ட்டால் இறுக்கிக்கொண்டான். வெளிர் சிவப்பு கலர் டீ ஷர்டை உதறி போட்டுக் கொண்டான். 

சம்பத், நிச்சயதார்த்த வீட்டை அடைந்தபோது, செல்வா, பெரியவர்களால் அவனுக்கென நிச்சயம் செய்யப்பட்ட, அவனுடைய வருங்கால மனைவி சுகன்யாயின் விரலில் மோதிரத்தை அணிவித்துக்கொண்டிருந்தான். சுகன்யாவின் முகத்தை நிமிர்த்தி, புன்னகைத்து "ஐ லவ் யூ ஸோ மச் டியர்..." என்றான். சுகன்யா முகம் சிவந்து வெட்கினாள். போட்டோவிற்கு இருவரும் உடல்கள் உரச நின்று சிரித்தவாறு போஸ் கொடுத்தார்கள்

சுகன்யா செவ்விதழ்களில் வழியும் புன்னகையுடன், முகத்தில் மெல்லிய நாணத்துடன், தன் காதலனின் விழிகளில் பொங்கிய காதலை, தன் விழிகளால் பருகிக்கொண்டே, 'எஸ்' ன்னா செல்வான்னும் அர்த்தம்... சுகன்யான்னும் அர்த்தம்... புரிஞ்சுதா' அவன் விரலில் மோதிரத்தை அணிவிக்க, உறவுகளும், நண்பர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுகன்யா மகிழ்ச்சியின் உச்சத்தில், முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். மீண்டும் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. சம்பத், தான் தன்னுடன் கொண்டு சென்றிருந்த 'நிக்கானால்' அவளை மட்டும், அவள் முகத்தின் சிரிப்பை, உற்சாகத்தை, முகத்தில் ததும்பிய மகிழ்ச்சியை மட்டும், கிளிக்கிக்கொண்டான். 

விருந்தினர்கள் உணவருந்த அழைக்கப்பட்டார்கள். முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான், சம்பத். 

கடலில் மிதக்கும் படகுகளை நதி விரும்புவதுமில்லை, அதேபோல் வெறுப்பதுமில்லை. சிவஹோம்... சிவஹோம்... சிவஹோம்.. அவன் மனம் மெல்ல முணுமுணுத்தது. 

குமாரும் சுந்தரியும் அவன் வருகைக்கு நன்றி தெரிவித்தார்கள். அவனை அன்புடன் சாப்பிட அழைத்தார்கள். விருந்தை ருசித்து உண்டு முடித்தவன், தன் பெற்றோர்களுக்காக ஹாலில் அமைதியாக காத்திருந்தான். தாம்பூலம் வாங்கிக்கொண்டு விடைபெறும் போது மறக்காமல் குமாரசுவாமியிடமிருந்து, சுகன்யாவின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டான், சம்பத்.




No comments:

Post a Comment