Pages

Monday, 16 March 2015

சுகன்யா... 57

நிச்சயதார்த்தம் நல்லபடியா எந்த குறையும் இல்லாமா முடிஞ்சதுலே எங்க எல்லோருக்குமே சந்தோஷம். முழு மனநிறைவுடன் மல்லிகா, சுந்தரியின் கையைப் பிடித்து நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள். 

"சுகா, உங்க அத்தை நீ எங்கேப் போயிட்டேன்னு கேக்கறாங்க.. என்னன்னு கேளுமா.." சுந்தரி தன் மகளின் காதில் கிசுகிசுத்தாள்.

"சாப்பாடு 'ஏ' கிளாஸ்... ரொம்பத் தரமா இருந்திச்சி. ரகு சாரோட ஏற்பாட்டுல எந்த கொறையும் இல்லை. நேத்து அருமையான முருகன் தரிசனம் கெடைச்சுது..." மல்லிகாவின் முகத்தில் மலர்ச்சி அளவில்லாமல் குடியிருந்தது. 

சுகன்யாவின் வீட்டுத் தரப்பில் உணவு, தங்குமிடம், உளங்கனிந்த உபசரிப்பு, என எல்லா ஏற்பாடுகளும், இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பது மல்லிகாவின் முகத்தில் பளிச்செனத் தெரிந்தது. அவள் மனதில் திருப்தியுடன் சோஃபாவில் ரிலாக்ஸ்டா சாய்ந்து உட்க்கார்ந்து பேசி கொண்டிருந்தாள். 



நடராஜன் சிவதாணுவின் அருகிலமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். குமாரசுவாமியும், ரகுராமனும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். 


"நீங்க சுகன்யாவுக்கு எடுத்துட்டு வந்தப்புடவை கலர் அவளுக்கு ரொம்ப பொருத்தமா, அருமையா அமைஞ்சுப் போச்சு. அவ முகத்தைப் பாருங்களேன்!! மகிழ்ச்சியிலே என் பொண்ணு தங்கமா மின்னிக்கிட்டு இருக்கா.. என் பொண்ணு சந்தோஷத்தை பாத்து என் கண்ணே பட்டுறும் போல இருக்கு..." சுந்தரி பதிலுக்கு தன் வருங்கால சம்பந்தியை சகஜமாக புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள். 

"உண்மையை நான் சொல்லிடறேன். புடவை என் பொண்ணு மீனாவோட செலக்ஷன். என் அண்ணிக்கு நான் தான் செலக்ட் பண்ணுவேன்னு அவ அடம் பிடிச்சா... சரின்னு அவ இஷ்டப்படி விட்டுட்ட்டேன்; நான் சும்மா கடையில அவகூட நின்னுக்கிட்டு இருந்தேன்..."

"ம்ம்ம்...இன்னய இளசுங்க சாய்ஸ் நமக்கு புரிஞ்சாத்தானே?" சுந்தரி கண்ணை சிமிட்டி அவள் சொல்வதை ஆமோதித்தாள். 

"சுகன்யாவோட அளவு ஜாக்கெட்டு இல்லேயேன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்... ஆனா நீங்க, ரவிக்கைத் துணியை அழகா கட் பண்ணி, 'நீட் அண்ட் க்ளீனா' தெச்சு, ப்ளவுசை ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிட்டீங்களே...!! நீங்க ஸ்டிச்சிங்ல ஒரு எக்ஸ்பர்ட்ன்னுதான் சொல்லணும்..." மல்லிகா சுந்தரியை மனமாரப் பாராட்டினாள். 

இருதரப்பினருடைய மனதிலும் இருந்த இனம் தெரியாத இறுக்கம் நிச்சயதார்த்ததுக்குப் பிறகு வெகுவாக குறைந்திருந்தது. சம்பந்திகள் ஒருவர் மற்றவருடன் கும்பலாக கூடத்தில் உட்க்கார்ந்து கலகலவென மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 

"உங்களுக்கு எந்த குறையும் இல்லாம நல்லபடியா எல்லாக் காரியமும் நடந்து முடியணுமேங்கற படபடப்பும், பரபரப்பும் எனக்கு ஆரம்பத்துல கொஞ்சம் இருந்திச்சி... என் மைத்துனர் ரகுதான் எல்லாத்தையும் முன்னே நின்னு செய்து முடிச்சார். அவருக்கு நான் எல்லாவிதத்துலேயும் கடமை பட்டு இருக்கேன்.." ரகுவின் கையை குமார் பிடித்துக் கொண்டார். 

"நான் தூக்கி வளர்த்த பொண்ணோட கல்யாணம். நான் தானே எல்லாத்தையும் செய்யணும். ஆல் இஸ் வெல் தட்ஸ் எண்ட்ஸ் வெல்.." ரகு சிரித்தான். 

"சுகன்யா ஒரு நிமிஷம் இங்கே வாம்மா" மல்லிகா அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து அவள் தோளில் கை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். 

"சொல்லுங்க அத்தை..." சுகன்யா மல்லிகாவின் அருகில் நகர்ந்து அமர்ந்தாள். வெட்கப் புன்முறுவலுடன் அவள் தன் தலை குனிந்திருந்தாள். மல்லிகா அவள் முகத்தை நிமிர்த்தி கண்களில் பாசத்துடன் அவள் முகத்தை ஒரு முறை உற்று நோக்கினாள். 

"சுகன்யா...!! நான் உன்னை "சுகு"ன்னு கூப்பிடலாமா?" மல்லிகா எதிரில் உட்க்கார்ந்திருந்த தன் மகனைப் பார்த்து சிரித்தாள்.

"அம்மா... செல்வா மட்டும்தான் சுகன்யாவை "சுகு"ன்னு கூப்பிடலாம். நீ ஏன் என் அண்ணன் கூட இப்பவே போட்டிக்குப் போறே? மத்தவங்கல்லாம் என் அண்ணியை "சுகா" ன்னு கூப்பிடற மாதிரி நீயும் கூப்பிடேன்..!!" மீனா உரத்த குரலில் சிரித்தாள். 

"உங்க இஷ்டம் அத்தே" சுகன்யா தன் உதட்டைக் கடித்துக்கொண்டு செல்வாவை நோக்கியவள் மீனாவின் கையை மெல்ல கிள்ளினாள். 

"சுகா, நான் வாங்கிட்டு வந்த புடவையும், செயினும் உனக்கு பிடிச்சிருக்காம்மா...?" சுகன்யாவின் வாயால் அவள் விருப்பத்தை மல்லிகா கேட்க விரும்பினாள். 

"ம்ம்ம்... ரொம்பத் தேங்க்ஸ் அத்தே.. புடவை கலர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த டிசைன்ல நான் ஒரு பட்டுப்புடவை வாங்கனும்ன்னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க எனக்கு வாங்கிக் குடுத்திட்டீங்க...!!" சுகன்யா முகத்தில் சிரிப்புடன் இப்போது தயக்கமில்லாமல் மல்லிகாவின் முகத்தை நோக்கிப் பேசினாள். 

"சுகா... கோபத்துல ஒண்ணு ரெண்டு தரம் ஏதோ அர்த்தமில்லாம உன் கிட்ட நான் கடுமையா பேசியிருக்கேன். அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதேம்மா." மல்லிகா கெஞ்சலாக பேசினாள். 

மல்லிகா, சுகன்யாவின் கையை அன்புடன் பிடித்துக்கொண்டாள். அவள் பேசிய வார்த்தைகள் நேராக அவள் மனதிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவள் மனம் நிறைந்திருந்தது. சுகன்யா அவள் மனதுக்குள் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டாள் என்பது அவள் பேச்சிலிருந்து புரிந்தது. 

தன்னுடைய மகன் வழியாக கிடைத்துள்ள புது உறவுகளின் இதமான பேச்சும், அவர்கள் தனக்கும் தன் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் தந்த உரிய மரியாதையும், கனிவான உபசரிப்பும், மல்லிகாவைத் திக்குமுக்காட வைத்திருந்தது. 

"பிளீஸ்.. அத்தே.. நீங்க இப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க.. நான் உங்க பொண்ணு. நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க...!! எங்க ரெண்டு பேரோட ஆசையை நிறைவேத்திட்டீங்க. அதுவே எனக்கு போதும்...!! நடுவுல நான் எதாவது தப்பா நடந்திருந்தா நீங்கதான் என்னை மன்னிச்சிடணும்." 

சுகன்யா மல்லிகாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக பேசினாள். பின்னர் செல்வாவை ஒரு நொடிப் பார்த்து குறும் புன்னகை ஒன்றைப் பூத்தாள். 

"என்னங்க... எல்லார்கிட்டவும் சொல்லிக்கிட்டீங்களா, நேரமாகுதே... இப்ப கிளம்பினாத்தான் ராத்திரிக்குள்ள போய் சேரலாம்" தன் கணவரை பார்த்தாள் மல்லிகா.

"ம்ம்ம்.. நானும் உன்னை "சுகா"ன்னே கூப்பிடறேன். சரிதானேம்மா. நாங்க கிளம்பறோம்... நீ எப்ப வர்றே சென்னைக்கு..? நடராஜன் தன் வீட்டுக்கு வரப்போகும் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவினார். 

"மாமா... இன்னையோட எனக்கு லீவு முடிஞ்சிப் போச்சு..!! அப்பா ஞாயித்துக்கிழமை சென்னைக்கு கிளம்பறார். அவர் கூட கார்லேயே நானும் வரலாம்ன்னு இருக்கேன். அவள் தன் தந்தையை திரும்பிப் பார்த்தாள்.

"சம்பந்தி.. என்னைப் பெத்தவங்க என் கூட இருக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன். என் வைப் சுந்தரிக்கு இதுக்கு மேலே வேலை செய்ய பிரியமில்லே. தன்னோட ஸ்கூல் டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு என் கூட வந்துடனும்ன்னு ரொம்ப ஆசைப்படறாங்க. நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நெனைக்கிறேன்.."

"புரியுதுங்க... அவங்களுக்கு வேலை செய்யணும்ன்னு என்ன அவசியம்? உங்ககூட இருக்கணுங்கற ஆசை ஞாயமானதுதானே? அவங்க ஆசையை நீங்க உடனடியா நிறைவேத்தணும். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருந்ததெல்லாம் போதும்..." மல்லிகா புன்னகையுடன் அவர் சொன்னதை ஆமோதித்தாள்.

"நான் சென்னையில அஞ்சாறு பேருக்கு சவுகரியமா இருக்கற மாதிரி வாடகைக்கு ஒரு வீடு பாத்துக்கிட்டு இருக்கேன். சரியா ஒரு வீடு அமைஞ்சதும், சுகன்யாவும், எங்க கூட வந்துடுவா. அது வரைக்கும் வேணியோட வீட்டுலதான் அவ இருந்தாகணும். நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்."

"குமார் சார், நீங்க அதைப்பத்தி கவலைப் படாதீங்க... ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்ச நாலு பசங்க கிட்ட சொல்லியிருக்கேன்... இந்த வாரத்துல நல்லதா ஒரு வீடு செட் ஆகிடும்..." சீனு நடுவில் புகுந்தான். 

"சீக்கிரத்துலேயே கல்யாணத்தை முடிச்சிட்டோம்ன்னா, குழந்தை உங்க வீட்டுக்கு... அதான்... அவளோட வீட்டுக்கு வந்துடப்போறா" ரகு சிரித்துக்கொண்டே அவர்கள் பேச்சில் நுழைந்தார். 

"யெஸ்... மிஸ்டர் ரகு... நீங்க சொல்றதைத்தான் முதல்ல செய்யணும்... சரியா ஒரு மாசம் டயம் குடுங்க... அமெரிக்காவுல இருக்கற என் ஒரே தங்கையும் அவ குடும்பமும் நெக்ஸ்ட் மன்த் இந்தியா வர்றதா ப்ளான் பண்ணி இருக்காங்க, அவங்க இங்க இருக்கும் போது கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு நான் பிரியப்படறேன்." நடராஜன் தன் விருப்பத்தைச் சொன்னார்.

"கண்டிப்பா... அப்படியே செய்யலாம்.." குமாரும், தன் மனைவி சுந்தரியைப் பார்த்துக்கொண்டே அவர் சொன்னதை ஆமோதித்தார். 

"சம்பத்... மணி ஆறாயிடுச்சுப்பா எழுந்திருடா கண்ணு... "

"ம்ம்ம்...இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கவிடும்மா" சம்பத் முனகிக்கொண்டே மார்பில் கிடந்த போர்வையை தலை வரை இழுத்து தன் முகத்தை நன்றாக மூடிக்கொண்டான்.

"குமாரும், சுந்தரியும் நேர்ல வந்து தாம்பூலம் வெச்சிட்டுப் போயிருக்காங்கடா.. உள்ளூர்ல இருந்துகிட்டே போவலைன்னா, தப்பா நெனைச்சுப்பாங்கய்யா... நாளைக்கு நமக்கும் நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும் ராஜா.."

ராணி, கரும்பச்சை பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள். அவள் புடவையின் பார்டரில் தங்கச்சரிகையில் மயில்கள் ஒன்றை ஒன்று நோக்கிய வண்ணம் ஜோடி ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்தன. அவள் நடக்க நடக்க, புது புடவை சரசரத்தது. அவள் நடப்பதற்கேற்ப அந்த சேலை அசைந்து அசைந்து உண்டாக்கிய இனிமையான ஒலியில் அவளே தன் மனதைத் தொலைத்துக்கொண்டிருந்தாள்.

மனதில் முழுமையான திருப்தி வராமல் புடவை மடிப்புகளை மீண்டும் மீண்டும் நீவி விட்டு சரிசெய்து கொண்டாள். ம்ம்ம்... புது புடவை சீக்கிரமா ஒடம்போட ஒட்டி நின்னாத்தானே... பாக்கறதுக்கு அழகா இருக்கும், மனதில் பெருமிதத்துடன் அலுத்துக்கொண்டாள்.

ராணி அன்று முதல் முறையாக தன் பிள்ளை சம்பத் ஆசையாக வாங்கிக் கொடுத்த செயினை அணிந்து கொண்டிருந்தாள். கழுத்தில் ஆடிக்கொண்டிருந்த அந்த தங்கச்சங்கிலியில் கோத்திருந்த அம்பாள் டாலரின் முகம் தன் எடுப்பான இரு மார்புகளுக்கு நடுவில் தொங்குமாறு சரி செய்து கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் நோக்கினாள். உடம்பை திருப்பி திருப்பி தன் பின்னழகுடன் புடவை ஒட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்தாள்.

ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையின் மணமும், பவுடர் வாசனையும் ஹாலை நிறைத்திருந்தன. எத்தனை வயதானலும் ஒரு பெண்ணின் மனதே அலாதியானது.

ராணியைப் பொறுத்த மட்டிலும், அவளுக்கு அவளுடைய புதுப்புடவை, நகை, பிள்ளை, கணவன், அவர்களின் சந்தோஷம் என்ற சிறுவட்டத்திலேயே திருப்தி அடைந்து கொண்டிருந்தாள்.

"ஏன்டா, நீ இன்னும் எழுந்துக்கலையா...? இன்னைக்குன்னு பாத்து இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணறியே?"

"எம்ம்மா... நேத்து ஈவினிங்தான் நீ கூப்பிட்டேன்னு உன் கூட வந்தேன்ல்லா...? அப்புறம் ஏன் இப்ப காலங்காத்தாலயே ரவுசு பண்றே?"

"நேத்து வந்தே... இல்லன்னா சொல்றேன்.. இன்னைக்கும் நீ வரணுங்கறேன்... "

"சுகன்யாவை நான் விஷ் பண்ணிட்டேம்மா... சுந்தரி மாமிகிட்டவும் நேத்தே பேசிட்டேன்.. அப்பாவும் நீயும் போய்வாங்கம்மா..."

"ராணி... நீ கெளம்புடீ... நேரமாவுது... அவன் எழுந்திருக்கற மாதிரி தெரியலே... என்னமோ உன்னைத்தான் நிச்சயம் பண்ண புள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்கற மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு லேட் ஆக்கறே?" நல்லசிவத்துக்கு எங்குமே குறித்த நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் பழக்கம்.

ராணி அவருக்கு எதிர்மாறாக, வேண்டுமென்றே பத்து நிமிடம் தாமதமாகத்தான் போகவேண்டும் என்பாள். இது அவள் வழக்கம். அப்பத்தான் வந்தவங்க நம்பளைப் பாப்பாங்க... அழைச்சவங்களுக்கும் நாம வந்தோம்ன்னு தெரியும்... இது அவளுடைய அர்த்தமற்ற லாஜிக் என்பார் நல்லசிவம். ராணி அவர் சொல்வதை காதில் போட்டுக்கொள்வதேயில்லை.

நல்லசிவம் ஹாலில் பொறுமையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார். நல்லப் புள்ளை வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு. நேத்து என்னமோ சொன்னப் பேச்சை கேட்டு எங்கக் கூட வந்துட்டான்! அதைப்பாத்து இவளும் ரொம்பவே குளுந்து போய் நிக்கறா!

"நாய் வாலை உன்னால நிமிர்த்த முடியுமாடீ? இவன்தான் ஒரு வேதாளமாச்சே?"

'நான் வுட்ட ஒரு அறையில என் புள்ளை எப்படி திருந்திட்டான் பாருங்க', மவன் பெருமையைப் பாடி பாடியே நேத்து ராத்திரி, பக்கத்துல படுத்துக்கிட்டு, என் தூக்கத்துக்கு அதிர் வேட்டு போட்டுக்கிட்டு இருந்தா... அவளும் தூங்கலை என்னையும் தூங்கவிடலை. ஆசைப்புள்ளை திரும்பியும் காலையில முருங்கை மரம் ஏறிட்டான். அவர் மனசுக்குள் முணுமுணுத்தார்.

"நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருக்கீங்களா? நம்ம வீட்டுல, வளந்தப் பையன் ஒருத்தன் கல்யாணத்துக்கு இருக்கான்னு நம்ம ஊர், ஒறவு மொறைக்கு எப்படி தெரியறது...? காலம் பூராத்தான் மூஞ்சி தெரியாத ஊர்ல உங்கக் கூட குடுத்தனம் பண்ணியாச்சு..." அவளுக்கு மூச்சிறைத்தது.

"சரி... இவன் பெருமையை, பாட்டா எழுதி, ஒரு நூறு போஸ்டர் அடிச்சு குடு... தெரு தெருவா நான் ஒட்டிட்டு வர்றேன்..." நல்லசிவம் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

"சொல்றதை சத்தமா சொல்லமாட்டீங்களே?"

ராணி தன் கணவரின் பதிலுக்கு காத்திராமல் மேலே பேசத்தொடங்கினாள். தன் வழக்கப்படி அவள் பேச ஆரம்பிக்க, நல்லசிவம் தன் இயல்பின் படி மவுனமாகிவிட்டார். அவருக்கு தலை இலேசாக வலிக்க ஆரம்பித்தது. அவர் இந்த நேரத்துக்கு இருமுறை காஃபி குடித்து இருப்பார். இன்று ஒரு கப் கூட அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

"கல்யாணம் கார்த்திகைன்னு நாலு எடத்துக்கு இவன் போனாத்தான்... நம்ம ஜாதியில பொண்ணைப் பெத்து வெச்சிருக்கறவன், ஒருத்தன் இல்லன்னா ஒருத்தன், நம்ம வீடு தேடி வருவான். எதுலயாவது புள்ளையைப் பெத்தவருக்கு ஒரு அக்கறை இருந்தாதானே?"

"ராணீ... உன் பாடு.. உன் புள்ளை பாடு... நான் வெராண்டாவுல நிக்கறேன்.. நீ சீக்கிரமா வந்து சேரு..." தன் தலையை அழுந்த ஒரு முறை தடவிக்கொண்டார். மெல்ல தெருப்பக்கம் நகர்ந்தார், நல்லசிவம்.

"டேய் சம்பத்.. சொன்னா கேளுடா... காலங்காத்தால என் மூடைக் கெடுக்காதே... எழுந்து சட்டுன்னு பல்லைத் துலக்கணமா, குளிச்சம்மான்னு, நல்லதா ஒரு பேண்ட் சட்டையை மாட்டிக்கிட்டு கெளம்புடா..." ராணி கூவிக்கொண்டே அவன் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். வலுவாக தன் இரு கரங்களாலும் அவனை உலுக்கத் தொடங்கினாள்.

"நீங்க ரெண்டுபேரும் போய்கிட்டே இருங்க... வீட்டைப் பூட்டிக்கிட்டு பின்னாடியே நான் வர்றேன்.." சோம்பலுடன் எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான், சம்பத். 

செல்வாவிடம் மனம் விட்டு மன்னிப்பைக் கோரியவன், மனதிலிருந்த பாரம், குற்ற உணர்ச்சி, வெகுவாக குறைந்த திருப்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து, சுடசுட வென்னீரில் குளித்துவிட்டு இரவு சாப்பிடாமலேயே படுத்த சம்பத்தின் கண்கள் வெகு நேரம் வரை தூக்கத்தை தேடிக் கொண்டிருந்தன. அவன் வெகு நேரம் உறக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

உண்மையை பேசுவதால் மனம் இந்த அளவிற்கு இலகுவாகி நிம்மதியை தருமா? என்னுடைய கல் மனசிலும் பூக்கள் பூக்குமா? சம்பத்தின் மனது மயில் பீலிகையாக காற்றில் மிதக்க, உள்ளத்துக்குள் பொங்கி வந்த இனம் புரியாத மகிழ்ச்சியை வெகுவாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.

காற்றே என் வாசல் வந்தாய்... மெதுவாகக் கதவு திறந்தாய்...!!
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்!!
நேற்று நீ எங்கு இருந்தாய்? காற்றே நீ சொல்வாய் என்றேன்;
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்..!!!

உடல் தூக்கத்தை தேடிக்கொண்டிருந்த போதிலும், அவன் உள்மனது தூங்காமல் களிப்புடன் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. என்ன மாதிரி பாட்டு வருது? என் மூடுக்கேத்த பாட்டு வருதே? வெரிகுட்... வாய்விட்டு ஒரு முறை சிரித்தான்.

மூடிக்கிடந்த இமைகளுக்குப் பின்னால், முல்லை நிற பற்கள் பளிச்சிட, விழி இமைகள் கட்டுப்பாடில்லாமல் துடி துடித்துக்கொண்டிருக்க, கேசம் காற்றில் அலைபாய, ரோஜா நிற சேலையில் சுகன்யா வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த தேவதையாக ஆடினாள். பாடினாள்.

படுத்திருந்தவன் எழுந்தான். அறை விளக்கை எரிய விட்டான். அர்த்த ராத்திரியில் தன் தலையை சீராக வாரிக்கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை உற்று நோக்கினான். கண்ணாடியில் அன்று தெரிந்தவன் அவன் கண்களுக்கு, புதியவனாக, சிறிதும் பரிச்சயமில்லாதவனாக இருந்தான்.

இதுவரை அவனே அறியாத ஒரு சம்பத்குமாரன் அழகு பிம்பமாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தான். நிஜமாவே இது நான்தானா? இவன் எஸ்.என். சம்பத்குமாரனா? இவன்தான் சுவாமிமலை நல்லசிவம் சம்பத்குமாரனா? பேச்சு மூச்சில்லாமல் அதிசயித்து நின்றான்.

எனக்கு இளம் பெண்ணின் தொடுகை புதுசு இல்லையே...! எத்தனை பேரை நான் வயசு வித்தியாசம் பாக்காம, இருட்டு, வெளிச்சம், பகல், இரவுன்னு நேரம் காலம் இல்லாம, அந்தரங்கமா தொட்டிருக்கேன்? அவர்களில் சிலரை முயங்கியும் இருக்கிறேன்... முயங்கும் சமயத்திலேயே உள்ளத்தால் வெறுத்துமிருக்கிறேன்.

காலேஜ்ல... பிக்னிக் போன எடத்துல... ஆபீஸ்ல பழக்கமான பெண்கள்.. அப்புறம் யார் யார்? வேற எங்கே? எந்த எடத்துலே? இப்ப அவங்க அட்ரஸா முக்கியம்? பலர் பணத்துக்காக என் கிட்ட வந்தவளுங்க... சிலர் பொழுது போகலேன்னு டயம் பாஸுக்கு வந்து போனவளுங்க; மனதில் ஒரு ஆணைக் கூடும் இச்சையில்லாமல், ஈர்ப்பில்லாமல், இயந்திரங்களாக என் படுக்கையை சிறிது நேரம் சூடாக்கியவர்கள்.

ஜிம்ல தேவையில்லாத உடம்பு கொழுப்பை எரிச்சி எரிச்சி... டீயூன் பண்ண என் வடிவான தேகத்தைப் பாத்து, அதன் முழுமையான வலிமையை உணர்ந்து, அதன் திண்மையில், அதன் வேகமான வலுவான இயக்கத்தில், மயங்கி என் கிட்ட ஒண்ணு ரெண்டு பேரு திரும்ப திரும்ப வந்தாளுங்க; பின்னாடி அவளுகளுக்கு நான் அலுத்துப்போய் அவளுங்களே மெல்ல என்னை விட்டு விலகிப் போனாளுங்க... நிரந்தரம் என்றுமே எதிலுமே இல்லை.



பெண்களோட ஒடம்பை நெறையப் பாத்தாச்சு.. துணியோட, துணியில்லாம, எல்லாத்தையும் பாத்தாச்சு.

இவர்கள் தேடல்களே வேறு... இவர்களின் வட்டங்களே வேறு... இவர்கள் வசிக்குமிடங்களே வேறு... இவர்களை நான் தேடிப் போகவில்லை. அவர்கள் என்னைச் சூடாக்க வந்தவர்கள் அல்ல... தங்கள் சூட்டை தணித்துக்கொள்ள என்னிடம் வந்தவர்கள்... என் சூட்டை நீ தணி... . நீ என்னை சொறி.. நான் உன்னை கொஞ்சம் சொறியறேன்.. சுயநல பன்றிகள். முகத்துக்கு முன் தளுக்காக பேசி, முதுகின் பின்னால் நக்கலாக சிரித்த பத்தினிகள்... கண்ணகிகள்...

ஒரு நாள்ல மிஞ்சிப்போனா அரை மணி நேரமே நீடிச்ச நிலையில்லாத உறவுகள்... எல்லாம் எட்டிக்காய்கள். சுவைக்கும் போதே கசப்பில் முடிந்த உடல் விளையாட்டுக்கள்? இருபத்தாறு வயசுலயே பொம்பளைன்னா மனசால வெறுத்துப் போய் நிக்கறேன்... யாருமே என்னப் புரிஞ்சுக்கலை. என் தேவை என்ன? என் தேடல் என்ன? ப்ச்ச்ச்...

என் நிலமை புரியாம, 'சாவறதுக்குள்ள என் கடமையை நான் செய்யணும்டா, உனக்கு ஒரு நிரந்தரமான உறவைத் தேடிக்குடுக்கறேன்... உனக்கு ஒரு துணையை தேடித்தரேன்... லட்சணமான பொண்ணை உனக்கு கட்டி வெக்காம ஓயமாட்டேன்' சபதம் போட்டுக்கிட்டு என் பாசக்கார அம்மா, ஊர் ஊரா, லோ லோன்னு, அலைஞ்சுக்கிட்டு இருக்கற அலைச்சலை பாக்கும் போது எனக்கு கண்ணுலத் தண்ணி வருது... ஏன் ரத்தமே வருது.

யாரு இவங்களை எனக்கு பொண்ணு பாருன்னது! ஒடம்பு நமைச்சலை தீத்துக்கணும்ன்னா, அதுக்கு கல்யாணம்தான் ஒரே வழின்னு நெனைக்கற நடுத்தர வர்க்கத்துல பொறந்து தொலைச்சிட்டேனே? கடைசீ காலத்துல ஒரு வாய் வென்னீர் யார் வெச்சு குடுப்பாங்க? அம்மாவுக்கு இது ஒரு புலம்பல்...ஹூம்... நல்ல அம்மா...!?

டேய்... சம்பத் இடது பக்கமாகத்தான் நடக்கணும். ரெட் லைட்ல நிக்கணும்... ரோட்ல யாருமே இல்லன்னாலும் காரை நிப்பாட்டிட்டு பொறுமை வெய்ட் பண்ணணும்... ராத்திரி பத்து மணிக்கு தூங்கணும். ஆறு மணிக்கு முன்ன எழுந்துக்கணும்... பல்லு விளக்கிட்டுத்தாண்டா சாப்பிடணும்... தினம் குளிக்கணும்பா... அய்யோ... அய்யோ...!!!

சிவோஹம்... சிவோஹம்... சிவோஹம்...

இதை ஒரு நாளைக்கு நூறு தரம் சொல்லி புலம்பிகிட்டே இருக்கற 'நல்லசிவம்' என்னைப் பெத்த அப்பன்...?! என் அம்மாவை கர்ப்பமாக்கி, அவ மலடி இல்லேன்னு சர்டிஃபிகேட் குடுத்த எனது தந்தை....!!

சாயந்திரம் சுகன்யா என் கையைப் பிடிச்சதும், என் உடம்பு ஏன் அப்படி கிடு கிடுன்னு ஆடிப் போச்சு...? இதுவரைக்கும் நான் அறிந்தே இராத இதமான சுகம், என் ஒடம்பை ஊடுருவிச்சே! தலையிலேருந்து கால் வரைக்கும் அவள் தொடல் ஒரு புல்லரிப்பை குடுத்துச்சே!! அவளோட நிமிஷ நேர ஸ்பரிசத்துல என் முதுகுதண்டு ஆடிப் போச்சே? மனம் சிலுத்து மதிமயங்கி நின்னனே?! இதுக்கு என்ன காரணம்..

அப்புறம்...!

அப்புறமா என்னா...? மனசுகுள்ள ஒரே நிம்மதி! குத்தால அருவியிலே, பவுர்ணமி ராத்திரியில, சுத்துப்பட்டுல யாருமே இல்லாதப்ப, அம்மணமா தலைக்கு மேல தட தடன்னு வந்து விழற குளிர்ச்சியான அருவி தண்ணியில, எப்பவோ பதினெட்டு வயசுல நின்னு குளிச்சப்ப கெடைச்ச சுகம்.. திரும்பவும் கெடைச்சுது...

அவளுடைய விரல்கள் என் விரல்களை அழுத்தியதில், தன் மனசுல இருக்கற அமைதியை, என் மனசுக்கு மெல்ல மெல்ல அனுப்பிட்டாளா? இது வரைக்கும் உணர்ந்தேயறியாத முழு அமைதியை நான் அனுபவிச்சேனே? இப்பவும் அந்த அமைதி என் மனசுல தேங்கி நிக்குதே!

என்னை அவ தொட்டதும் எனக்குள்ள வந்த இந்த மாற்றங்கள், என் ஒடம்புல ஓடற ரத்தத்துல, என் பரம்பரையின் ஒரு துளி... ஒரே ஒரு துளி, சுகன்யாவோட ஒடம்புலேயும் ஓடுதே... அதனால இருக்குமா..?

ஒரே மரத்தின் இரு வேறு கிளைகளில் நாங்கள் பூத்து குலுங்கி மணம் வீசிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது இடையில் சொந்தம் விட்டுப்போனாலும், தேவையான நேரங்களில் மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்ளும் இந்த பங்காளிங்கறங்க குடும்ப உரிமையால இருக்குமா?

சே.. சே... எனக்குள்ள ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றங்கள், மெல்லிய, கண்ணால பார்க்க முடியாத நுண்ணிய உணர்வுகள், ஒரு மனுஷ உடம்புக்குள்ள, ஒரு பிறவியில, கொறைஞ்ச காலத்துக்கு அடைஞ்சு கிடைக்கற உணர்வுகளா எனக்குத் தெரியலியே?

நீண்ட நெடுங்காலமாக, யுகம் யுகமாக, பிறவி பிறவியாக, என்னை... எங்கள் இருவரையும்... விடாமல் தொடர்ந்து, துரத்தி வர்ற, இன்னும் முழுசா நிறைவேறாத ஆசைகளா, உணர்வுகளா தெரியுதே?

நாங்கள் யார்?

நானும் அவளும்... தொலை தூர அடிவானத்துக்கு கீழே, ஓரே இடத்துல பொறந்து, பொங்கி பொங்கி, திக்கு திசை தெரியாமல் பிரிஞ்சி, எங்கோ ஒரு மலையிலேருந்து அருவியா கொட்டி, கரை கொள்ளாத வெள்ளமா, பள்ளத்துல பாய்ஞ்சி, மேடுகளில் ஏறி, உருவில் இளைத்து, மண்ணில் தவழ்ந்து, மீண்டும் ஓடிக் களைச்சு, ஒண்ணா, ஒரே இடத்துல, கடல்லே மீண்டும் ஒன்று சேர்ந்து, நிதமும், நொடி நேரம் கூட ஓய்வில்லாமல், ஆர்ப்பரிக்கும் அலைகளாய், அலையும், தங்கள் உருவம் தொலைத்த இரு வேறு நதிகளா?

ஒண்ணா சேர்ந்ததுக்கு அப்புறம் ஆறாவது... நதியாவது... எல்லாமே தண்ணீர் தண்ணீர்.. கண்ணுக்கெட்டியவரை தண்ணீர். இரண்டு ஒன்றான பின் ஒன்றுதானே மிஞ்சும்? ஒன்று... ஒன்று... எல்லாமே ஒன்று...!!

ஒரு இளம் பெண், முதல் முறையாக என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்புடன் பேசினாள். நேசத்துடன் என்னைப் பார்த்தாள். என் அருகில் நெருங்கி நின்று தன் உடல் வாசம் என் மேல் வீச, அந்த வாசம் என் நாசியைத் தாக்கியதால், என் மேனியை அவள் பாசத்துடன் தன் கையால் தீண்டியதால், என்னுள் உடனடியாக இந்த உணர்வு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

அவளின் பாசமான தீண்டலால், அவள் கண்களில் மலர்ந்த குறும் சிரிப்பால், நான் அவளுடைய முறை மாப்பிள்ளை என்ற என் உரிமையை, அவள் அடையாளம் கண்டு கொண்டதால், என் மனதுக்கு அந்த வார்த்தைகள் தந்த இதத்தால், என்னுள் இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இந்த மாற்றங்களை உணர்ந்த நான், திகைத்து, மனம் கிறங்கி நிற்கிறேன். அவள் என்னை அடியோடு அரண்டு போக வைத்துவிட்டாள் என மருண்டு போகிறேன்.

நான் அவளை அழ வைக்க நினைத்தேன். இது அவளுக்குத் தெரியாது... ஆனால் முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட, நட்ட நடு ரோல என்னை மனசார மன்னிப்பு கேக்க வெச்சுட்டாளே...! இவ என் கூடவே, என் ஆயுசு பூரா இருந்தா நான் என்ன ஆவேன்? சம்பத் பிரமித்தான். மனம் ஸ்தம்பித்து நின்றான்.

சிவோஹம்... சிவோஹம். சிவோஹம்.

நான் என்ன ஆவேன்? நான் இந்த பிரபஞ்சமாக ஆகிவிடுவேன்.. சம்பத் மனதுக்குள் மகிழ்ச்சியானான்.

***

என் சுவாசத்தில இருக்கற ஒருத்தி, 'வந்துட்டேன் சம்பத்... என்னை உனக்குத் தெரியலையா...' புருவத்தை உயர்த்திப் பார்த்தாளே? இவ என் எதிர்ல வர்றதுக்கு இத்தனை வருடங்களா ஆயிற்று? இது நாள் வரை இவள் எங்கு இருந்தாள்?

மூடின கம்பிக் கதவுக்குப் பின்னால நின்னு 'உங்களுக்கு என்ன வேணும்' உதடு சுழித்து கேட்டவளை... இனம் காண முடியாமப் போச்சே? சம்பத் தன் முகம் சுருங்கினான்.

சம்பத்துக்கு சந்தோஷத்தில் தொண்டை அடைத்து அழுகை வந்தது. மவுனமாக அழுதான். எத்தனை நேரம் அழுதிருப்பான்? கண்களைத் துடைத்துக்கொண்டான். தன் ஆப்பிளைத் தேடினான். ஓடவிட்டான். ஸ்பீக்கருடன் இணைத்தான். கண்கள் மூடி ஒரே இலக்கில் தன் மனம் லயிக்கக் கிடந்தான்.

சுகன்யா! சுகன்யா! சுகன்யா! அவன் இழுத்த மூச்சில் சுகன்யா அவனுள்ளே நுழைந்தாள். அவன் இழுத்துக் கட்டிய மூச்சில், நெஞ்சில் சுகன்யா நிலைத்து ஆடாது அசங்காது தீபத்தின் ஓளியாய் நின்றாள். அவன் விட்ட வெப்ப மூச்சில் சுகன்யா மெல்ல வெளியேறினாள்.

மீண்டும் அவனுள் நுழைந்தாள்.

***

'சிவோஹம்... சிவோஹம். சிவோஹம்.' கண்மூடி கட்டிலில் கிடந்த சம்பத் தன் வாய்விட்டு உரக்கச்சொன்னான். மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

"அப்பா இதுக்கு என்னப்பா அர்த்தம்? எப்பப்பாத்தாலும் இதை சொல்லிக்கிட்டே இருக்கீங்களே?" எட்டு வயது சம்பத்குமாரன் தன் தந்தையிடம் கேட்டான்.

"பிரபஞ்சமே நான்தான் - அப்படீன்னு நெனைச்சிக்கறதுடா கண்ணு.."

"பிரபஞ்சம்ன்னா"

"நாம இருக்கற உலகம், சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம், செடி, கொடி, மரம்... எல்லாம்...நாமாதான்..."

"அப்டீன்னா... நான் சம்பத்து - எனக்கு நான் தான் அப்பாவா?.. நானே அம்மாவா? நானே பாட்டியா?" குழந்தை சம்பத் வாய்விட்டு சிரித்தான்...

"ஆமாண்டா கண்ணு.." தன் பிள்ளை சட்டென்று பிடித்துக் கொண்டானே, நல்லசிவம் மனசுக்குள் ஒரு தித்திப்பை உணர்ந்தார்.

"அம்மா... அப்பாவுக்கு பைத்தியம் புடிச்சிப் போச்சும்ம்மா... எல்லாம் நானாம்.. நான் சம்பத்து மட்டும்தானேம்மா" சிறுவன் கைகொட்டி சிரித்தான். அம்மாவின் தோளைக் கட்டிக்கொண்டான்.."



பதினெட்டு வயதில் மீண்டும் ஒரு முறை தன் தந்தையிடம் 'சிவோஹத்தின்" பொருளைக் கேட்டான்.

"உனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, அந்த கோபத்தை அடக்க இது ஒரு வழிடா... நாலு தரம் மனசுக்குள்ளவே சொல்லுடா ... அவன் மேல இருக்கற கோபம், வெறுப்பு, கசப்பு, எல்லாம் போயிடும்..' நல்லசிவம் கண்மூடி உட்க்கார்ந்திருந்தார்.

"அது எப்படி" பதினெட்டு வயது ரத்தம்.. முழுசூடுள்ள ரத்தம் எகிறியது.

"கோபப்படுகிறவன் நான்... யாரை கோபிக்கிறேனோ அவனும் நான்... கோபமும் நான்... இதான் சிவோஹத்தோட அர்த்தம்.." அவர் மெல்ல சிரித்தார்.

அந்த வயதிலும் சம்பத்துக்கு 'சிவஹோத்தின்' முழு அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று அவனுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கிறது.

சிவோஹம். சிவோஹம். சிவோஹம். மீண்டும் மெல்ல தன் மனதுக்குள் முணுமுணுத்தான் சம்பத். 


No comments:

Post a Comment