Pages

Friday, 6 March 2015

சுகன்யா... 29

"மல்லிகா, எல்லோரும் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் நினைக்கறாங்க. செல்வாவுக்கு சுகன்யாவை திருமணம் பண்ணிக்கறதுலதான் மகிழ்ச்சின்னா, நடக்கறதெல்லாம நல்லதுக்குன்னு நினைச்சு, ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம்."

"சரி ... என்னப் பண்ணணுமோ அதை சீக்கிரமா பண்ணுங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்."மல்லிகா ஹாலில் சோஃபாவுக்கு பக்கத்தில் தரையில் படுத்திருந்தாள்.

"ஆரம்பத்துலயிருந்தே செல்வா மேரேஜ் விஷயம் ஒரே டிராமாவாத்தான் இருக்கு. எப்ப எந்த சீன் நடக்கும், அந்த சீன்ல எந்த ஆக்டர் உள்ள வராங்க, அவங்க எப்படி நடப்பாங்கன்னு தெரியலை. இப்ப இந்த நாடகத்துல, இன்னொரு புது சீன், ஒரு புது ஆக்டரோட ஆரம்பிச்சிருக்கு." நடராஜன் மையமாக சொல்லிவிட்டு சிரித்தார்.



"என்னப்பா அது ..." மீனா ஆர்வத்துடன் துள்ளி குதித்தாள்.

"என் மேனஜருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம். அவளும் கவர்மெண்ட் உத்தியோகத்துல சென்னையிலத்தான் இருக்காளாம். நம்ம பையன் செல்வாவுக்கு பார்க்கலாமான்னார். இப்ப அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குப் புரியலை."

"இது என்னங்க புதுக்கதை - நீங்க என் கிட்ட சொல்லவேயில்லை?" மல்லிகா தன் கணவரை வியப்புடன் பார்த்தாள்.

"ஏண்டா செல்வா உனக்கு சுக்கிர தசை நடக்குதாடா?" மீனா மீண்டும் ஓவென சிரித்தாள்.

"சும்மா இருடி ... எனக்கு சுகன்யா ஒருத்தியே போதும் ...நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்." அசட்டு சிரிப்பு சிரித்த செல்வா, தன் தாய், கடைசியில், சுகன்யாவை தன் மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்ததால் அவன் முகம் மகிழ்ச்சியில் ஓளிர்ந்து கொண்டிருந்தது.

"யாருங்க அது உங்க மேனேஜர்ங்கறீங்க ...புதுசா வந்திருக்காரே அவரா ... இல்லே?" மல்லிகாவையும் சற்றே மீனாவின் குதூகலம் தொற்றிக்கொண்டது.

"புதுசா வந்தவர்தாம்மா ... நம்ம வீட்டுல டின்னருக்கு வந்திருந்தாரே - அவர் தான். ரெண்டு நாள் முன்னாடி குமாரசுவாமி இவனை ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்திருந்தார் இல்லயா?"

"ஆமாம் ...அப்ப நானும்தானே உங்க கூட இருந்தேன்." மல்லிகாவின் முகத்தில் வியப்பு படர்ந்தது.

"பிரிஞ்சிருக்கற தன் குடும்பத்தோட மீண்டும் சேரணுங்கற ஒரே காரணத்தாலத்தான் அவர், டெல்லி பிராஞ்லேருந்து தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கிட்டு வந்திருக்கார். செல்வாவை ஆஸ்பத்திரியில நலம் விசாரிக்க வந்த அன்னைக்குத்தான் தன் மனைவியையும், மகளையும் சந்திச்சுட்டு வந்தவர், என் கிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தார்.

"ம்ம்ம் ...அப்புறம்" மல்லிகா ஊம் கொட்டினாள்.

"நடராஜன் ... உங்க குடும்பத்துல இருக்கற எல்லோரையும் நான் பார்த்துட்டேன். உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். புதுசா நான் யார்கிட்டவும் போய் விசாரிக்க வேணாம். உங்க மனைவியையும் சந்திச்சாச்சு. வாரி வாரி சாப்பாட்டை முகம் பார்த்து, இலையில அள்ளிப் போடறவங்க; உங்கப் பையன் செல்வாவை எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க விரும்பினால் என் பெண்ணை உங்க பையனுக்கு பார்க்கலாம்ன்னு சொன்னார். நான் இதை அவர்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை. நீங்க நிதானமா யோசனைப் பண்ணி சொல்லுங்கன்னார்."

"அப்பா ... நீங்க என்ன சொன்னீங்கப்பா ..." செல்வா பரபரப்புடன் வினவினான்.

"நீ ஏற்கனவே ஒருத்தியைப் பிடிச்சி வெச்சிருக்கப்ப நான் என்னடா சொல்றது?"

"அது இருக்கட்டும் ... நீங்க என்னதான் சொன்னீங்கப்பா..." மீனா விஷயத்தை முழுதுமாகத் தெரிந்து கொள்ள துடித்தாள்.

"என் மேனேஜர்; நல்ல மனுஷன்; ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவன்; நேர்மையா வேலை செய்யறவன். அந்த ஆள் கிட்ட நான் எந்த விஷயத்துலயும் விளையாட விரும்பலே; இப்ப நம்ம வீட்டுல இருக்கிற பிரச்சனையை சொல்ல விரும்பினேன். ஆனா அதுக்காக மூஞ்சியில அடிச்ச மாதிரி உடனே மறுத்து சொல்ல முடியுமா? ஒரு ரெண்டு நாள் டயம் குடுங்க; வீட்டுல சொல்றேன்; அப்படீன்னேன்; கூடவே என் பையன் ஒரு பொண்ணை விருப்பப்படறான்னு தெரியுது; அந்த விஷயத்தை என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கும் போது, என் பிள்ளை அடிபட்டு இங்க வந்து படுத்துட்டான்னேன்."

மல்லிகா "ம்ம்ம்ம்" என்றாள்.

"அவசரம் ஒண்ணுமில்லே; உங்க பையன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா உங்க பையன் மனசுல என்ன இருக்குன்னு விசாரிங்க, நிதானமா வீட்டுல வெச்சு கேளுங்க; கூடவே என் ப்ரப்போசலையும் மனசுல வெச்சுக்குங்கன்னு சொன்னார்." நடராஜன் தன் தலையை சொறிந்து கொண்டார்.

"டேய் செல்வா, நீ இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கடா; அப்பாவுக்கு அடுத்த புரமோஷன் சீக்கிரமா கிடைச்சுடும்;" மீனா சிரித்தாள்.

"மீனா! எனக்கு இப்படியெல்லாம் ஒரு பிரமோஷன் தேவையே இல்லடா கண்ணு! என் புரமோஷன் வரும் போது அதுவா தன்னால வரட்டும். இந்த குமாரசுவாமியும் ஆஃபீசுல ஒழுங்கா வேலை செய்யறவன். இங்கேருந்து போனானே அவனை மாதிரி தப்புத் தண்டா பண்ற ஆள் இல்லே."

"குமாரசுவாமி, இந்த வாரக்கடைசியில தன் குடும்பத்தோட காஞ்சிபுரம், மஹாபலிபுரம்ன்னு, தன் சொந்த கார்ல போய் வந்திருக்கார். இதுக்கு முன்ன இருந்தவன்ல்லாம், ஆஃபீஸ் காரையும் டிரைவரையும் லீவு நாள்ல்ல தன் சொந்த வீட்டு வேலைக்கு யூஸ் பண்ணுவானுங்க. இல்லன்னா ப்ரைவேட் வண்டியை எடுத்துக்கிட்டு போய் சுத்திட்டு வந்து பில்லை என் தலையில கட்டி பாஸ் பண்ணுன்னு என் உயிரை எடுப்பாணுங்க."

"இவர் அந்த மாதிரி பிக்கல் பிடுங்கல் வேலையெல்லாம் எனக்கு குடுக்கறது இல்லே; ஆஃபீஸ் வேலை ஆஃபீஸ்க்குள்ள ... நம்ம பர்சனல் ரிலேஷன்ஷிப் வெளியில அப்படின்னு ஒரு வரைமுறையோட எங்கிட்ட பழகறார். இந்த ஆள் இங்கே மேனேஜரா வந்ததுலேருந்து நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்றேன். எனக்கு இதுவே போதும்."

"ஏம்பா ... உங்களுக்கு புரமோஷன் வேணாம்; ஒத்துக்கறேன்; உங்க மேனேஜரை, அதான் உங்க சம்பந்தி, உங்க கம்பெனியில எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுக்க மாட்டாரா?" அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"சும்மா இரேண்டி சித்த நேரம் ..." மல்லிகா அவளை அடக்குவதிலேயே குறியாக இருந்தாள்.

"என்னங்க ... அவரு பொண்ணு போட்டோ எதாவது காட்டினாரா?" மல்லிகா தன் கணவனை வினவினாள்.

"நீ ஒருத்தி ... நீ உன் பொண்ணை குறை சொல்றே ... அப்புறம் நீ ஏன் ஏடாகூடமா பேசறே? உன் புள்ளையும், அந்த பொண்ணு சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கணும்னு முடிவா இருக்கப்ப, இது எதுக்குடி புதுக் குழப்பம். ரெண்டாவது எனக்கும் அந்த சுகன்யாவை பிடிச்சிருக்கு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நிச்சயம் நம்ம வீடு கலகலப்பா சந்தோஷமா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்."

"நான் அப்பவே அவருகிட்ட விஷயத்தை உடைச்சு சொல்லியிருப்பேன்; ஆனா ஆஸ்பத்திரியில எதுக்கு நம்ம வீட்டுக்கதையை அவருகிட்ட ஆரம்பிப்பானேன்னு சும்மாயிருந்தேன். இந்த ரெண்டு நாள் லீவு முடிஞ்சதும் ... ஆஃபீசுக்குப் போனதும், அவரு தனியா இருக்கும் போது, நீங்க உங்க பொண்ணுக்கு வேற எடம் பாருங்கன்னு, அவருகிட்ட உண்மையை சொல்லிடலாம்ன்னு இருக்கேன். "

"அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா ..." செல்வா தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான்.

"எனக்கும் உனக்கும் நடுவுல தேங்க்ஸ்ல்லாம் என்னடா? அந்த பொண்ணோட நீ பொறுப்பா குடும்பம் பண்ணிணா அதுவே எனக்குப் போதும்." அவர் தன் மகனின் தலையை பாசத்துடன் வருடினார். 

செல்வா, அரை மணி நேரமாக சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்லில் முயன்று கொண்டிருந்தான். தன் தாய், தங்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என அவன் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவளுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளை தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும் "அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா" என்ற செய்தி அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

இன்னைக்கு திங்கள் கிழமை. வெள்ளிக்கிழமையே சுகன்யாவோட அம்மா ஊருக்குத் திரும்பி போயிருக்கலாம். அப்ப இன்னைக்கு சுகன்யா ஆஃபீசுலதானே இருக்கணும். அவளை ஏன் காண்டாக்ட் பண்ண முடியலே? ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணலாம். ஆனா அந்த சனியன் புடிச்ச சாவித்திரிதான் முதல்ல போனை எடுப்பா. அதுக்கப்புறம் அவ கேள்விக்கு நம்பளால பதில் சொல்லமுடியாது.

நம்ம ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்ல எவனுக்காவது போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடச் சொல்லலாம். எனக்கு திரும்பவும் சென்னைக்கு போஸ்டிங் ஆயிடுச்சின்னு தெரிஞ்சதுலேருந்து "பார்ட்டி குடு ... பார்ட்டி குடுன்னு" ஒரே காண்டா இருக்காணுங்க. குடிகாரப்பசங்க; உன் ஆள் கூட நீ பேசறதுக்கு நாங்க என்னடா நடுவுல மாமாவான்னு கிண்டல் பண்ணிச் சிரிப்பானுங்க. எல்லாத்துக்கும் மேல அவனுங்க மூலமா சுகன்யாவை கூப்பிட்டா, நம்ப வீட்டு சிங்காரி நம்ப மேலேயே எகிறி குதிப்பா. சுகன்யா என்ன மூடுல இருப்பான்னு தெரியாது. அவனுங்க எதிரிலேயே என் மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா.

என்னா மாப்ளே, உனக்கும் உன் ஆளுக்கும் நடுவுல சண்டையா ... புட்டுக்கிச்சா ... அப்படின்னுட்டு உடனே பேஸ்புக்ல, "செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல ரப்சர்ன்னு, இந்த போக்கத்தப் பசங்க ஸ்டேட்டஸ்" போட்டுடுவானுங்க; அப்புறம் ஊரு பூரா கேக்கறவனுக்கு பதில் சொல்லி மாளமுடியாது.

ஒரு பேண்ட் சட்டையோட என் வீட்டுக்கு வந்துடு; மீதியை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுப் போனவ, அதுக்கப்பறம் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. மீனா கூட கேட்டா? .. "என்னடா உன் ஆளை காணவே காணோம்? எதாவது திருப்பியும் சண்டையா உங்களுக்குள்ளன்னு" கிண்டல் பண்ணிச் சிரிச்சா?

என் வீட்டுக்கு வந்து "வீட்டு மாப்பிள்ளையா" இருன்னு சொன்னாளே? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு சோறு போட எனக்கு யோக்யதை இல்லயா? அவ எப்படி என்னை அந்த மாதிரி சொல்லலாம்? சுகன்யா சொன்னதைக் கேட்டதும், சொந்தமா நான் என் கால்லே நின்னு சம்பாதிக்கிறேன்; என்னைப் பாத்து இப்படி சொல்லலாமான்னு, எனக்கு எரிச்சல் வந்தது உண்மைதான்.

அந்த எரிச்சல்லே முழுசா ஒரு நாள் அவளுக்கு நான் போன் பண்ணல. அதுவும் வாஸ்தவம்தான். மறு நாள் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். மறுநாள் என்னைப் பாக்கறதுக்கு என் சித்தப்பா, சித்தி, அவங்க பசங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதனால அவகிட்ட பேச முடியாமப் போச்சு. அதுக்காக சுகன்யாவும் பிடிவாதமா இப்படி எனக்கு போன் பண்ணாமலே இருந்தா எப்படி? அவளா போன் பண்ணுவான்னு இருந்தது தப்பா போச்சே? இந்த தடவை சுகன்யாவும் ரொம்ப வீம்பாத்தான் இருக்கா. ஆஸ்பத்திரியிலேருந்து நான் வீட்டுக்கு வந்தாச்சான்னு கூட ஒரு வார்த்தை கேக்கலையே?

நான் பாண்டிச்சேரிக்கு போனப்ப கூட நான் அவளுக்கு போன் பண்ணல. அப்பவே என் மேல அவளுக்கு ரொம்ப கோபம். ரெண்டு நாள் பொறுத்துப் பாத்துட்டு அவதானே எனக்கு போன் பண்ணா? இப்பவும் அப்படியே ஆகிப் போச்சு. அவ என்னை தினம் தினம் ஆஃபீஸ்லேருந்து ஓடி வந்து பாத்தாளே? நான் "ஐ லவ் யூ சுகு"ன்னு ஒரு தரம் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். "எப்படி இருக்கே சுகுன்னு" ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். நான் ஒரு பைத்தியக்காரன். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்ட ஆசையா பேசக் கூட என்னால முடியலன்னா, தப்பு என்னுதுதானே? தப்பு என் பக்கம் இருக்கும் போது அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்.

நான் என்னப் பண்ணுவேன்? ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மாகிட்ட எங்கக் கல்யாணப் பேச்சை பத்து தரம் எடுத்துத்தான் பார்த்தேன். அம்மா பிடிகொடுத்துப் பேசலை. நம்ம கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்தேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்துட்டேன்.

அப்பா கூட கேட்டார். "செல்வா, எங்கடா சுகன்யாவை காணோம்?" "அவ ஆஸ்பத்திரிக்கு கட்டின அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்கணும்டா; இல்லன்னா அவங்க வீட்டுல நம்பளைப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொன்னாரு".

செல்வாவின் மனது பலவித எண்ணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தது. சட்டென அவன் மண்டையில் பொறி தட்டியது. சுகன்யாவோட ஃப்ரெண்ட் வித்யாவுக்கு போன் பண்ணா என்ன? வித்யா சுகன்யா ரூம்லதானே உக்காந்து இருக்கா. அவளுக்கு எங்க காதல் விஷயமெல்லாம் நல்லாத் தெரியும்.



"வித்யா மேடம், நான் செல்வா பேசறேன்?

"ஆ ஹாங் ... செல்வா!... எப்படியிருக்கே செல்வா! ... இப்ப உன் உடம்பு பரவாயில்லயா? ஹாஸ்பெட்டலேருந்து வீட்டுக்கு வந்திட்டியா?

"அயாம் ஒ.கே. ... மேடம் ... நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாரி உங்களை நான் உங்க பர்சனல் மொபைல்ல டிஸ்டர்ப் பண்றேன். சுகன்யா பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் கூப்பிடுங்களேன்.

"என்ன செல்வா இது? என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலேயே நீ?

"வித்யா மேடம், உங்க கிட்ட நான் காமெடி பண்ணுவேனா? எனக்கு சுகன்யாகிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். அவ செல்லுல திரும்ப திரும்ப அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியான்னு மெசேஜ் வருது. அதனாலத்தான் நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்."

"இதுல தொந்தரவு என்ன இருக்கு? ஆனா சுகன்யா, பத்து நாள் லீவுல, அவங்க அம்மாகூட, அவங்க ஊருக்கு - அதாம்பா - கும்பகோனம் போயிருக்காளே; உனக்குத் தெரியாதா இது?" அவள் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.

"ஏன்? இப்ப எதுக்கு கும்பகோணத்துக்கு அவ போயிருக்கா?"

"நல்லாருக்கு செல்வா நீ பேசறது. சுகன்யா உன் ஆளு; உன் ஸ்வீட் ஹார்ட்; நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க; அவ ஊருக்குப் போனது உனக்கேத் தெரியலை; அவ எங்கப்போனா? அவ ஏன் போனான்னு என் கிட்ட கேக்கறே? இது எப்படி இருக்கு?" வித்யா, பதினாறு வயதில் ரஜினி மாதிரி நொடித்துக்கொண்டு சிரித்தாள்.

"ம்ம்ம்.. சுகன்யா ஊருக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா; ஏதாவது அவசர வேலையா சட்டுன்னு போயிருக்கலாம். ஆனா அவ எப்ப கிளம்பிப் போனான்னு எனக்குத் தெரியாது?

செல்வா தன்னிடம் குரல் குழறி அசடு வழிகிறானென்று வித்யாவுக்கு நன்றாகப் புரிந்தது. சுகன்யா தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது அவனுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. சுகன்யா எனக்கு போன் பண்ணல; பிடிவாதமா இருக்கான்னு நினைச்சேன்; ஆனா இப்ப ஊருக்குப் போயிருக்கா; அதைக்கூட எங்கிட்ட சொல்லலை. அப்படி என்ன அவளுக்கு என் மேல கோபம்?

"செல்வா, உங்க கல்யாண விஷயம் எவ்வளவு தூரத்துல இருக்கு?" வித்யா கரிசனத்துடன் வினவினாள்.

"உங்களுக்குத்தான் தெரியுமே ... வீட்டுல என் அம்மாவை சரிக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான்."

"சீக்கிரமா ஒரு முடிவுக்கு வா செல்வா ... எங்களுக்கெல்லாம் நல்ல கல்யாண சாப்பாடு போடு; சுகன்யா ரொம்பவே மனசாலத் தவிச்சுப் போயிருக்கா. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கறவ ... இப்ப சிடுசிடுன்னு ஆயிட்டா."

"ம்ம்ம்ம் ..."

"சுகன்யாவை யாரோ பொண்ணு பார்க்க வரதா நான் கேள்விப்பட்டேன். பையன் பெங்களூர்ல ஐடியில வேலை செய்யறானாம். அவளுக்கு தூரத்து உறவுன்னு நெனைக்கிறேன். அவனுக்கு வருஷத்துக்கு பத்து லட்சம் பேக்கேஜ் அப்படின்னு, சொன்ன மாதிரியிருந்தது. சுகன்யா, அவங்க அம்மா கூட பத்து நாள் லீவுல நேட்டிவுக்கு போனது இதுக்காகத்தான் இருக்குமோ? என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியலைங்கறே?" வித்யா மெல்லிய குரலில் பேசினாள்.

இது என்ன? வித்யா ஒரு புது விஷயத்தை சொல்றா. இதுல எவ்வளவு உண்மை? ஆனா வித்யா நல்ல மாதிரி. மத்தவங்க மாதிரியெல்லாம் வீணா "குசுகுசு" பேசறவ இல்ல. இவ சொன்னதுலே கொஞ்சமாவது விஷயம் இருக்கும். என் அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சந்தோஷமான விஷயத்தை சுகன்யாவுக்கு சொல்லணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன்.

அப்பா சொன்ன மாதிரி "என் காதல் நாடகத்துல" வித்யா என்னடான்னா ஒரு புத்தம் புது பிட்டு போடறாளே? ஒரு புது ஆக்டர்; ஒரு புது சீன். செல்வாவின் தலைக்கு ரத்தம் குப்பென ஏறியது. அவன் நாக்கு உலர ஆரம்பித்தது. அவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் சுரீரென இனம் தெரியாத சினம் தலை தூக்கியது.

"வித்யா மேடம் உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?

"செல்வா, யார் சொன்னாங்கன்னு கேக்காதே; அதுவா உனக்கு முக்கியம்? நான் சொன்ன விஷயம் உண்மையா? இது தானே முக்கியம்." வித்யா சூடிகையாகப் பேசினாள்.

சை.. என்னப் பொம்பளை இவ? எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் இருக்காளுங்க; நேரம் காலம் தெரியாமா இவ என் உயிரை எடுக்கிறா? என்னை பேச்சுல மடக்கிட்டதா நெனைச்சு சந்தோஷப்படறா. நான் ஒரு புத்தி கெட்டவன் இவகிட்ட போய் சுகன்யாவைப் பத்தி ஏன் கேட்டேன்?

"அப்புறம் ... செல்வா .."

"வேற ஓண்ணும் இல்லை மேடம் ... நீங்க சொல்ற விஷயம் எனக்கு நிஜமாவே தெரியாது."

"செல்வா, எனக்கும் முழு விவகாரம் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உனக்கு சொல்லிட்டேன். பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவளைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க; அதுல ஒண்ணும் தப்பு இல்லே. சுகன்யா என்னப் பண்ணுவா? வீட்டுல சொல்றதை கொஞ்சமாவது அவ கேட்டுத்தானே ஆகணும். உன்னை மாதிரி ஆம்பளை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே?"

"பொம்பளையா பொறந்தவ, வயசு காலத்துல, கல்யாணம் முடியற வரைக்கும், அவளுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ; இப்படி வர்றவன் போறவன் முன்னாடி உடம்புல பட்டுப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுதான் ஆகணும்! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடும்?. கடைசியா அந்த பையனை எனக்குப் பிடிக்கலைன்னு அவ சொல்லப்போறா அவ்வளவுதான். நீ ஒண்ணும் உன் மனசை போட்டு குழப்பிக்காதே? அவ உன்னைத்தான் தன் மனசுல இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுக்கிட்டு இருக்கா. இது எனக்கு நல்லாத் தெரியும்."



"ம்ம்ம்ம்" செல்வா சுரத்தில்லாமல் முனகினான்.

"சீக்கிரமா, நீ ஆகவேண்டிய வேலையைப் பாரு. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே; அவ நல்லப்பொண்ணு ... கோட்டை விட்டுடாதே. அவ்வளதான் நான் உனக்கு சொல்லுவேன். சுகன்யா எனக்கு போன் பண்ணால், நான் உன் கிட்ட உடனே அவளைப் பேச சொல்றேன். ஓ.கே. வா? சாவித்திரி என்னைக் கூப்பிடறா." வித்யா வினயமாக பேசி லைனை கட் பண்ணினாள்.

வித்யா சொன்னது உண்மையா இருக்கலாமோ? அதனாலத்தான் சுகன்யா சொல்லாமா கொள்ளாமா ஊருக்குப் போயிட்டாளா? செல்வாவுக்கு ஒரு வினாடி தலை சுற்றுவது போலிருந்தது. இப்ப நான் என்னப் பண்றது? அவ நம்பரும் கிடைச்சுத் தொலைக்கலை. சுகன்யாகிட்ட எப்படிப் பேசறது? பேசினாலும் இந்த விஷயத்தை என்னன்னு கேக்கறது? செல்வாவின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன.

ஒரு வினாடி செல்வா யோசித்தான். சுகன்யாவை எவனோ பொண்ணு பாக்க வர்றான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? என் ஆளை, எவனோ ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்கணுங்கற நோக்கத்துல, எப்படி பாக்க வரலாம்? அவன் அவளுக்கு சொந்தமாவே இருக்கட்டுமே? அவங்க அம்மாவே சொல்லியிருந்தாலும், சுகன்யா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா?வெறுப்புடன் அவள் நம்பரை மீண்டும் தன் செல்லில் அழுத்தினான்.

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்."

செல்வாவுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. 

No comments:

Post a Comment