Pages

Friday, 6 March 2015

சுகன்யா... 28

அன்று, திங்கள் காலை மணி ஏழரை ஆகிக்கொண்டிருந்தது. நடராஜன் ரெண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். தன்னுடைய அலுவலகத்துக்கும், செல்வா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கும் அங்கும் அலைந்ததில் அவர் உடல் அலுத்துப் போயிருந்தது.

மல்லிகா காலையில் நிதானமாக தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து, வாய் கந்தர் ஷஷ்டி கவசத்தை முனகிக் கொண்டிருக்க, பரபரப்பில்லாமல் அவள் காலை காபியை கலந்து கொண்டிருந்தாள். மீனா இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. நடராஜன் ஹிண்டுவில் மூழ்கியிருந்தார். செல்வா தன் நண்பன் சீனுவிடம் தன் செல்லில் அரட்டையடித்துக் கொண்டிருந்தான்.


செல்வா, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தது. அவன் கால் வீக்கம் கணிசமாக குறைந்திருக்க, காலில் வீக்கத்திற்கு "க்ரெப் பேண்டேஜ்" போடச்சொல்லியும், காலை மாலை இரு வேளைகளிலும், வெதுவெதுப்பான நீரீல் பத்து நிமிட நேரம் தன் வீக்கமுள்ள காலை வைத்திருக்க வேண்டும் எனவும், அவனுக்கு மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

அவன் தலையிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டுவிட்டது. காதுக்குப் பின்னால் போடப்பட்ட தையல்கள் பிரிக்கப்பட்டு, காயம் ஆறிக்கொண்டிருந்தது. இடது கையில் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டரை இன்னும் ஒரு வாரத்தில் பிரித்து விடலாம் என டாக்டர் சொல்லியிருந்தார். அடுத்த சில நாட்கள் வரை அதிகமாக நடக்கவேண்டாம் எனவும், மிகவும் அவசியமான நேரங்களில் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் மெதுவாக வீட்டுக்குள்ளேயே அவன் நடக்க அனுமதிக்கப்பட்டிருந்தான்.

"காபி சூப்பர்ம்மா, டிஃபன் என்னப் பண்ணப்போறேம்மா?"

“டேய் உங்கப்பா இன்னைக்கும், நாளைக்கும் வீட்டுலத்தானே ஓய்வா இருக்கப் போறார்? அவரை அந்த சுந்தரம் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்லு. எனக்கும் உன் பின்னால அலைஞ்சு உடம்பு அலுத்துப் போயிருக்குது. எனக்கு மட்டும் லீவு வேணாமா? சமையலுக்கு இன்னிக்கு நான் லீவு விட்டுட்டேன். நானும் ரெண்டு நாளைக்கு நாள் பூரா நிம்மதியா படுத்து இருக்கப் போறேன்.”

“அம்மா, நான் வேணா சீனுக்கு போன் பண்ணட்டுமா? அவன் வீட்டுக்கு பக்கத்துலத்தானே அந்த மெஸ் இருக்கு? மீனா கேட்டுக்கொண்டே வெரண்டாவிற்கு வந்தாள்.

“மீனு, நீ சும்மா இருடி; இன்னிக்கு வொர்க்கிங்க் டே; அவன் வேலைக்குப் போக வேணாமா? போன வாரம் பூரா ராத்திரியில அவன்தான் இவன் கூட துணைக்கு இருந்தான். ஆஃபீசுக்குப் போறவனை நீங்க யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். இப்பத்தானே காஃபி குடிக்கிறோம். இன்னொரு அரை மணி நேரம் கழிச்சு நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன்.” நடராஜன் குரல் கொடுத்தார்.

"நீங்கதான் ஒரு நாளைக்கு சமையல் பண்ணுங்களேன்? உங்களால முடியாதுன்னா; என்ன வேணா பண்ணுங்க; நான் இன்னைக்கு கிச்சன்ல நுழைய மாட்டேன்." மல்லிகா மீண்டும் தீர்மானமாக தன் முடிவைச் சொன்னாள்.

"எப்பவும் சாப்பாட்டுப் பிரச்சனைதானா இந்த வீட்டுல? நீயும் உன் புள்ளையும் கடைசியா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க அதைச் சொல்லுங்க?" நடராஜன் அலுப்புடன் பேசினார்.

"நீங்க எதைப்பத்தி கேக்கறீங்க?"

"அதாம்மா; அண்ணன் கல்யாண விஷயம்தான்; வேறென்ன?" மீனா சிரித்தாள்.

"ஏண்டி; என் கல்யான விவகாரம் நீ சிரிக்கற அளவுக்கு அவ்வள சீப்பா போச்சா?"செல்வா மீனாவின் முதுகில் செல்லமாக அடித்தான்.

"நீங்க எதுக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசும் போதே எப்பவும் அலுத்துக்கிறீங்க?" மீனா நடராஜனை சற்று கோபத்துடன் பார்த்தாள்.

"மல்லிகா, நீ தயவு செய்து உன் குரலை கொஞ்சம் இறக்கிப் பேசு. போன வாரம் நீ ஆடின கூத்துல இந்த தெருவுல நான் இறங்கி நடக்க முடியலை. ராமசுவாமி, என் கூட நடக்க வர்றவர், மணியான பசங்களாச்சே உங்களுக்கு, என்னப் பிரச்சனை, உங்க வீட்டுலேருந்து சத்தம் வந்ததைப் பாத்து ஆச்சரியமாப் போச்சுன்னு சிரிக்கிறார்."

"சரிங்க; அன்னைக்கு நான் பேசினதுதான் உங்களுக்கு பெரிசா தெரியுதா? நான் யாருக்காக பேசினேன்? இவன் நல்லதுக்குத்தான் பேசினேன். இவன் என் புள்ளை மட்டுமில்லே; உங்க புள்ளையும்தான்; நீங்க என்ன முடிவுல இருக்கீங்க? அதை முதல்லச் சொல்லுங்க?"

"என் முடிவு? ... என் முடிவு இதுல என்னாயிருக்கு? அவன் அவன், மனசுக்கு புடிச்சவளை இழுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடற இந்த காலத்துல, வீட்டுக்கு வந்து எனக்கு அவளைப் புடிச்சிருக்கு, பண்ணி வையுங்கன்னு இவன் கேக்கறான்; அவகூட இருந்து வாழப் போறவன் செல்வா; அவன் இஷ்டப்படி, சுகன்யாவை இவனுக்கு கட்டி வெக்க வேண்டியதுதான். அந்த பொண்ணு வீட்டுலயும் சரின்னு சொல்லும் போது எனக்கு என்னப் பிரச்சனை?

"ம்ம்ம் ... நான் தெரியாமத்தான் கேக்கிறேன். உங்களுக்கு, கொஞ்சமாவது நீங்க பெத்து வெச்சிருக்கற பொண்ணைப் பத்திய கவலை இருக்கா?"

"என் கல்யாணத்துக்கும், அண்ணன் கல்யாணத்துக்கும் இப்ப ஏம்மா நீ முடிச்சு போடறே?" மீனா தயங்கி தயங்கி பேசியவள், தன் தந்தையின் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள்.

"நீ செத்த நேரம் சும்மா இருடி? இப்ப உங்கிட்ட யாரும் எந்த அபிப்பிராயமும் கேக்கலை." மல்லிகா தன் பெண்ணின் வாயை அடக்கினாள்.


"மல்லிகா, நீ என்ன சொல்ல வர்றே?"

"மீனாவுக்கு நீங்களா போய் வரன் தேடப்போறீங்களா? இல்லே?... அவளையும் உனக்கு புடிச்சவன் எவனாவது இருந்தா இழுத்துக்கிட்டு வாடீ; உனக்கும் நான் சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடறேன்னு சொல்லப் போறீங்களா?"

"மல்லிகா ... உன் மனசுல இருக்கறதை நீ நேரடியா சொல்லு ... இப்படி சுத்தி வளைச்சுப் பேசாதே.."

"டேய் செல்வா .. சுகன்யா நம்ம ஜாதியை சேர்ந்தவளா?"

"அம்மா ... இது நாள் வரைக்கும் நீ இதைப் பத்தி பேசினதே கிடையாது; இன்னைக்கு ஏம்மா நீ திடீர்ன்னு அவ ஜாதியை இப்ப இழுக்கறே?"

"நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லுடா.."

"சுகன்யாவோட பேரண்ட்ஸ்ங்க ரெண்டு பேருமே வேற வேற ஜாதிதாம்மா .. அவங்க ரெண்டு பேருமே நம்ம ஜாதியில்லேம்மா. இப்ப சுகன்யா ஜாதி என்னான்னு கேட்டா நான் என்ன சொல்றது?"

"செல்வா, உனக்கு கீழே வேற யாரும் இந்த வீட்டுல இல்லாமயிருந்தா, இந்த கேள்வியை நான் எழுப்பியிருக்க மாட்டேன்."

"அம்மா, நீயும் எல்லோரையும் மாதிரி கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை பெரிசா, கவுரவமா நினைக்க ஆரம்பிச்சிட்டியே? செல்வா அழாத குறையாகப் பேசினான்.

"என்னடா சொல்றே நீ" மல்லிகாவின் விழிகளில் திகைப்பிருந்தது.

"சுகன்யா என் மேல வெச்சிருக்கற அன்பு, நேசம், பாசம், இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையாம்மா? இந்த குணங்களை யாராலும் கண்ணால பார்க்க முடியாதுதான். ஆனா ஒருத்தர் பழகற விதத்துல இதை எல்லாத்தையும் நாம நல்லாப் புரிஞ்சுக்க முடியும்."

"ஜாதியை கண்ணால பார்க்க முடியுமா? இல்லே ... ஒருத்தர் பேசறதை, பழகறதை வெச்சுத்தான் யார் எந்த ஜாதியை சேர்ந்தவங்கன்னு எப்படி சரியா சொல்லமுடியும்? இல்லே ஒருத்தரோட உடல் நிறத்தை வெச்சுத்தான் சாதியை சொல்ல முடியுமா? இல்லே ஒருத்தரோட உணவு பழக்கத்தை வெச்சு யார் எந்த ஜாதின்னு சொல்லமுடியுமா?

நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில என் சுயநினைவு இல்லாம இருந்தப்ப அவ ஓடி வந்து தன் ரத்தத்தை குடுத்தா; அப்ப அவ ஜாதி என்னன்னு நாம யாரும் கேக்கலைம்மா. யார் கண்ணுக்கும் தெரியாத அவ ஜாதி உனக்கு ஏம்ம்மா இப்ப தெரியுது" செல்வா நிதானமாக பேசினான்.

"செல்வா, அதெல்லாம் எனக்கு தெரியாம இல்லடா. போன வாரம் பூரா அந்த பொண்ணு உனக்காக உண்மையா உருகிப் போய் நின்னதை என் கண்ணாலப் பாத்தேண்டா. அதனாலத்தான் நீ செய்ததுக்கு எல்லாம் நன்றின்னு என் கையெடுத்து அவளை கும்பிட்டு நின்னேண்டா. நீயும், உன் அப்பாவும் சேர்ந்துகிட்டு என்னை வேணா, ஜாதி, மதம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லேன்னு சொல்லி என் வாயை மூடிடலாம். ஆனா இந்த ஊர்ல இருக்கற எத்தனைப் பேர் வாயை உங்களால மூட முடியும்?"

"அ...அம்மா.." செல்வா முனகினான்.

"நாளைக்கு உன் தங்கையைப் பார்க்க வர்றவங்க, நீங்க உங்க புள்ளைக்கு பொண்ணு எடுத்து இருக்கற எடம் எதுன்னு கேட்டா; நான் என்ன பதில் சொல்றது? எந்த ஜாதியில பொண்ணு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்லணும்? இவனுக்குத்தான் புத்தியில்லே? நீங்க என்னப் பதில் சொல்லப் போறீங்க..?" மல்லிகா தன் கணவனிடம் ஆவேசத்துடன் சீறினாள்.

நடராஜன் தன் மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள், மீனா தன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். நடராஜனின் வலது கையை, அவள் தன் கைக்குள் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.

"அம்மா, நீ என்னை வாயை மூடுன்னு சொன்னே; இருந்தாலும் ஒரே ஒரு நிமிஷம் என்னைப் பேசவிடும்மா; நான் இன்னும் படிச்சே முடிக்கலை; சுகன்யா மாதிரி படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும், என் கால்ல நான் நிக்கணும்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை; எப்பவோ நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு இப்பவே ஏம்மா மூச்சு பிடிச்சி நீ பேசிக்கிட்டு இருக்கே?"

"சரிடி ... அந்த சுகன்யா மாதிரி நீயும் ஒருத்தன் பின்னால சுத்தணும்ன்னு உனக்கு ஆசையில்லையா? அதை ஏன் சொல்லாம விட்டுட்டே?

"அம்ம்ம்மா .. என்னம்மா பேசறே நீ" மீனாவின் குரல் உயர்ந்தது.

"நிறுத்துடி உன் பேச்சை ... அண்ணணுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டா.. அவனை மாதிரி நீயும் என் பேச்சை கேக்காம அலையப் போறியா?"சுந்தரி தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டு எழுந்தாள்.

"அம்மா ... ஒரு நிமிஷம் உக்காரும்மா ... என்னைக் கட்டிக்க வர்றவன் நான் என்ன ஜாதின்னு கேப்பான்னு நீ சொல்றே. அப்படி அவன் கேட்டா நீ சொல்ற மாதிரி அதுல கொஞ்சம் அர்த்தம் இருக்குன்னு நான் ஒத்துக்கறேன். ஆனா என் அண்ணியோட ஜாதி என்னான்னு எவனாவது கேட்டா அதுல என்ன ஞாயம் இருக்கு? அப்படி கேக்கறவனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?"

"இப்ப காலமும் மாறிக்கிட்டு இருக்கும்மா; நாமும் கொஞ்சம் கொஞ்சமா மாறித்தாம்மா ஆகணும். அம்மா! செல்வாவை நீ எவ்வள தூரத்துக்கு தடை பண்ணுவே? இதுக்கு மேல அவன் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டு முடிவா சுகன்யா பின்னால போறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்துக்கு நீ சரின்னு சொல்லும்மா." மீனாவும் விடாமல் பேசினாள்.

"பேசி முடிச்சிட்டியாடி நீ" மல்லிகாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"அம்மா ... அந்த சாவித்திரி என்ன முயற்சிப் பண்ணாலும், ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா; அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ; நீ என்ன சொன்னாலும் செல்வா ஜானகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஜானகி ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டு இருக்கா. செல்வாவும், சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்கங்கற விஷயம் அவளுக்கு நல்லாத் தெரியும். செல்வா, ஜானகியை பொண்ணு பாக்கப் போறதை அவ அம்மா அவகிட்ட இவன் போறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடித்தான் சொல்லியிருக்கா; அந்த எரிச்சல்லத்தான், கோவத்துலதான் அவ என் அண்ணனை சண்டைப் போட்டு அனுப்பிச்சிட்டா."

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு நீ என்னை கேக்காதே?ரொம்ப சிம்பிள். நானும் ஜானகியோட தங்கை ஜெயந்தியும் ஒண்ணாத்தானேம்மா படிக்கிறோம். அவ என்னோட நல்ல சினேகிதிம்மா. உனக்கு தெரிஞ்சதைவிட அந்த சாவித்திரியைப் பத்தி எனக்கு அதிகமா தெரியும்."

"ம்ம்ம் ... அதனால ..." மல்லிகா தன் பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தாள்.

"என்னைத் தப்பா நினைக்காதேம்மா; சுகன்யாவை வேண்டாம்ன்னு சொல்றதுக்கு இன்னும் ஒரே ஒரு காரணம் தான் உங்க கிட்ட இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்ச நேரம் தனியா இருந்தாங்கன்னு சொல்லுவே! அவ்வளவுதானே?

"மீனா ... போதும்மா... நீ பேசினது போதும் ... இதுக்கு மேல நீ இந்த விஷயத்தைப் பத்தி பேசாதே." நடராஜன் அவள் பேச்சில் குறுக்கிட்டார்.

"அப்பா ... ப்ளீஸ் ... என்னைப் பேச விடுங்கப்பா ..."

“நீ என்ன சொல்லப் போறேன்னு எங்களுக்குப் புரியுது ...”

“சரிப்பா ... நான் அதைப்பத்தி பேசலை ...”

"அம்மா ... சுகன்யாவோட அம்மாவையும், மாமாவையும் நீ ஆஸ்பத்திரியிலே பாத்தே? நாலு பேரு எதிர்ல நீ கோவப்பட்ட போதும், அவங்க எவ்வளவு இங்கிதமா நடந்துகிட்டாங்க? அவங்களோட குணம்தானேம்மா முக்கியம். இதுக்கும் மேல சுகன்யாவோட ஜாதி எதுவாயிருந்தா நமக்கென்னம்மா?" மல்லிகா தன் மனதுக்குள் பொங்கி எழுந்து வரும் சினத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

"அம்மா ... இவங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கு நீ சந்தோஷமா ஒத்துக்கணும்மா. சுகன்யா நிச்சயமா இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பாங்கங்கறதுல எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏன்னா இந்த ஒரு வாரத்துல உன்னை விட அதிகமா சுகன்யா கூட ஆஸ்பத்திரியில நான் இருந்தேன். செல்வாவோட ஆபீசுலேருந்து இவனைப் பாக்க வந்தவங்க எல்லாம், ஆணாயிருக்கட்டும் இல்லே பெண்ணாயிருக்கட்டும்; சுகன்யாவை பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க. இதுக்கு மேல நீயாச்சு; உன் பிள்ளையாச்சு."

மீனா தன் மனதிலிருந்ததை பேசி முடித்த திருப்தியில் தன் தாயின் முகத்தை அமைதியுடன் பார்த்தாள். நான் தப்பா ஏதும் பேசிடலையேப்பா என்ற பாவனை முகத்தில் தோன்ற தன் தந்தையின் முகத்தையும் ஒரு தரம் கூர்ந்து நோக்கினாள். பின் அமைதியாக தன் தலை முடியைக் கோதிக்கொண்டவள் காலியாக இருந்த காபிக் கோப்பைகளை சேகரித்துக்கொண்டு நிதானமாக கிச்சனை நோக்கி நடந்தாள். மல்லிகா தன் முகத்தில் எந்த வித சலனமுமில்லாமல் தெருவை நோக்கிக்கொண்டிருந்தாள்.

“மல்லிகா, எழுந்து வாம்மா சாப்பிடலாம்."

“இல்லீங்க நீங்க சாப்பிடுங்க; இப்ப எனக்குப் பசியில்லை.” மல்லிகா சிறு குழந்தையாக தன் கணவனிடம் முரண்டினாள்.

"அம்மா என் மேல இருக்கற கோவத்தை நீ அப்பா மேல ஏம்மா காட்டறே? நீ சொன்னியேன்னுதான் அவர் ஓடிப் போய் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கார் .." செல்வா தன் தாயிடம் டிஃபன் தட்டை நீட்டினான்.

"சரிடா ... உன் தங்கச்சிக்கு நல்லாவே சொல்லிகுடுத்து இருக்கே ... இப்ப நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தா அதையும் சொல்லிடு...ஒரு வழியா அதையும் நான் கேட்டுக்கறேன்."

"அம்ம்மா ... நீ என் கல்யாணப் பேச்சை விடும்மா; அது எங்கப் போவுது? எப்ப வேணா பேசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிடும்மா.. நீ பசி தாங்க மாட்டே; உனக்கு பசி வந்துட்டா தலைவலி வந்துடும்..." செல்வா தன் தாயிடம் கொஞ்சினான்.

"டேய் .. நீ எனக்காக ரொம்ப உருக வேணாம்... அப்புறம் அந்த சுகன்யா இங்க வந்து என் ஆளு ஏன் இளைச்சுப் போயிட்டான்னு என் கிட்ட மல்லு கட்டப் போறா" மல்லிகா விரக்தியாகப் பேசினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்ம்ம்மா, கடைசியா இப்பவாவது, நீ அவ என் ஆளுன்னு ஒத்துக்கிட்டயே ... எனக்கு அதுவே போதும்." செல்வாவின் முகம் மலர்ந்தது.

"செல்வா, இந்த கல்யாணம் ஏன் வேண்டாம்ங்கறதுக்கான காரணங்களை நான் சொல்லிட்டேன். பின்னாடி என் கிட்ட வந்து நான் ஏன் இதெல்லாம் முன்னாடியே சொல்லலேன்னு நீங்க யாரும் என்னைக் கேக்கக்கூடாது."

"அம்மா ... என் வாழ்க்கையைத் துணையை நானே தேடிக்கிட்டது ஒரு தப்பாம்மா? இதைத் தவிர நான் வேற எந்த தப்பும் பண்ணி உன் மனசை எப்பவாது நான் நோக அடிச்சிருக்கேனா?

"நிச்சயமா இல்லடா..."

"அம்மா, சுகன்யாவைப்பத்தி நீ தவறா நினைச்சுக்கிட்டு இருக்கற ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றேம்மா.."

"சுகன்யா சென்னையில தனியாத்தான் இருக்கா. எனக்கு ஈக்வலா கை நிறைய சம்பாதிக்கறா. அழகா இருக்கா. அவ சரின்னு சொன்னா, அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கறதுக்கு என் ஆபீசுலேயே நாலு பேரு போட்டி போட்டாங்க. தலை கீழா நின்னுப் பாத்தானுங்க; ஒருத்தன் புதுசா காரு கூட வாங்கிட்டு வாங்க ஜாலியா சுத்திட்டு வரலாம்ன்னு அவளைக் கூப்பிட்டான்; அவ யாரையும் திரும்பிக்கூடப் பாக்கலை. எங்க வேணா சுத்தாலாம்; யார் கூட வேணா போவலாம்; அவளைத் தட்டிக்கேக்க இந்த ஊருல யாரும் இல்லே. ஆனா அவ லீவு நாள்ல வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாம்மா."

"அப்படிப்பட்டவ அவளா வந்து எங்கிட்ட பேசினா. அப்படி பேசினவ என்னை சினிமாவுக்கு போகலாம்ன்னு கூப்பிடலை. ஹோட்டலுக்கு அழைச்சுட்டுப் போய் வாய்க்கு ருசியா வாங்கி குடுன்னு கேக்கலை. பீச்சு, பார்க்குன்னு சுத்தறதுக்கு கூப்பிடலை. நான் இதுவரைக்கும் அஷ்டலட்சுமி கோவில் பாத்தது இல்லே; நீங்க என்னை அந்த கோவிலுக்கு கூப்பிட்டுகிட்டு போக முடியுமான்னு கேட்டாம்மா. நானும் வயசுப்பையன்ம்மா. நான் எப்படிம்மா அவளை ஒதுக்கிட்டு போக முடியும்? "

"நாங்க பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறமும், ஷாப்பிங் போகலாம்ன்னு இழுத்துக்கிட்டுப்போய், பிரா, ஃபாண்டீசுன்னு அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு பில்லை என் தலை மேல கட்டினதில்லை. இன்னைக்கு வரைக்கும் எனக்கு வீடு இருக்கா? என் சொத்து விவரம் என்னா? என் அப்பா என்ன சம்பாதிக்கறார்ன்னு ஒரு கேள்வி கேட்டது கிடையாது. நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தப்ப, அவ ஓடி ஓடி எனக்கு பண்ணதெல்லாம் உனக்கேத் தெரியும்; இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை."

"அம்மா, உடல் கவர்ச்சி மட்டுமே எங்க காதலுக்கு அடிப்படையில்லே. நாங்க ரெண்டு பேரும் படிச்சவங்க; ரெண்டு பேரும் ஒரு குடும்பத்தை நடத்த கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறோம்; எனக்கு இப்ப 26 வயசும்மா. என்னை விட வயசுல அவ மூணு வருஷம் சின்னவ. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்கற வயசும்மா எங்களுக்கு. நானும் அவளும் உடலாலும், மனசாலும் தேவையான அளவுக்கு முதிர்த்தியடைஞ்சதுக்கு அப்பறம் தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருக்கோம்."



"நிதானமா யோசிச்சு, நான் செய்யற காரியங்களின் பின் விளைவுகள் என்னவாக இருக்கலாம்ன்னு மனசுல ஒரு தெளிவோடத்தான் ஒரே ஒரு தரம் அவ ரூமுக்கு நான் போனேம்மா. எங்க வயசை பாரும்மா; திடீர்ன்னு எனக்கு மாத்தல் வந்ததும், ஒருத்தரை ஒருத்தர் பிரியப்போற ஏக்கத்துல, நானும் அவளும் தொட்டுக்கிட்டோம். அந்த சாவித்திரி மேல எங்களுக்கு இருந்த கோபம், தாபமா அன்னைக்கு மாறிடிச்சி. அவ்வளவுதான். அன்னைக்கு கிடைச்ச தனிமையை நாங்க தப்பா பயன் படுத்தி முழுசா தாம்பத்தியம் நடத்திடலம்மா."

"உன் மனசு எனக்குப் புரியுதுமா. இதை நாங்க தவிர்த்து இருக்கலாம். கல்யாணம் நடக்கிற வரை நாங்க பொறுமையா இருந்திருக்கலாம். இதுல நீ சுகன்யாவை மட்டும் பிரிச்சு வெச்சு தப்பு சொல்றதுல ஞாயமில்லேம்மா. எனக்கும் இந்த தப்புல சரி பாதி பொறுப்பு இருக்கு."

"அன்பார்ச்சுனேட்லி, சுகன்யா நம்ம ஜாதியில்லே. இந்த ஒரு காரணத்துக்காக எங்க கல்யாணத்துக்கு நீ மறுப்பு சொல்லாதேம்மா. அவளும் நம்பளை மாதிரி உணவு பழக்க வழக்கம் உள்ள ஒரு சைவ குடும்பத்துலேருந்து வந்தவம்மா. அவளுக்கு அதிக எதிர்பார்ப்புகளும் கிடையாதும்மா. ஆண்டவன் நினைச்சா எனக்கு எல்லாம் கிடைக்கும்ன்னு நம்பற ரொம்ப சிம்பிளான, உன்னை மாதிரி கடவுள் நம்பிக்கை உள்ள பொண்ணும்மா; சுகன்யாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவளைத் தவிர வேற ஒருத்தியை என் மனைவியா என்னால நினைச்சுப் பாக்க முடியாது."

"ம்ம்ம் ...செல்வா உன் முடிவை நீ தெளிவா சொல்லிட்டே ... ரொம்ப சந்தோஷம்." மல்லிகாவின் குரல் சற்று கம்மியிருந்தது.

"ஏம்மா ... உனக்கு என் மேல கோபமா?"

"இல்லப்பா ... எனக்கு யார் மேலேயும் கோவமில்லே ..."

"அப்புறம் ஏம்மா உம்ம்ன்னு இருக்கீங்க" செல்வா தன் தாயின் அருகில் நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

மீனா இந்த அளவிற்கு செல்வாவின் தரப்பில் தெளிவாகப் பேசுவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் பெண்ணை அவள் இன்னும் சிறு குழந்தையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இதற்கு மேல் செல்வாவின் கல்யாண விஷயத்தில் தன் பேச்சைக் கேட்க்க மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்திருந்த போதிலும், தன் வீட்டில் இதுவரை இல்லாமல் இந்த விஷயத்தில் தான் தனிமைப்படுத்தபட்டதை நினைக்கும் போது அவள் மிகவும் வருத்தமாக உணர்ந்தாள்.

"என் அம்மா .. உங்கப்பா போட்டோவை காமிச்சி இந்தப் பையனைப் உனக்கு பாத்து இருக்கோம்; பாத்துக்கடின்னு சொன்னாங்க; அவ்வளவுதான்; என் விருப்பத்தைப் பத்தி அவங்க கேக்கவேயில்ல. நானும் என் அம்மா அப்பா பாத்து செய்தா சரியா இருக்குங்கற நம்பிக்கையில சரின்னு சொன்னேன். நானும் ஒரு டிகிரி ஹோல்டர்தான். ஆனா என் பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னே எனக்கு குடுத்த லெக்சர் மாதிரி நான் என் அம்மாக்கிட்ட எப்பவும் பேசினது இல்லே. அவங்க எது சொன்னாலும் அது சரின்னு ஒத்துக்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுல நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என் பொண்ணும், என் பையனும் அப்படியில்லையேன்னு நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு."

"அம்மா ... நான் பேசினதை, உனக்கு நான் லெக்சர் குடுத்தேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா ... இந்த வீட்டுல என் அம்மாகிட்ட என் மனசுல இருக்கறதை சொல்ல எனக்கு உரிமையில்லையா? நீயே எங்கிட்ட இது தப்புன்னு நினைச்சு வருத்தப்பட்டா? ... இல்ல ...கோபப்பட்டா? என் மனசுல இருக்கறதை நான் யாருகிட்ட போய் சொல்லுவேம்மா? ஸ்டில் ... நான் பேசினதை நீ தப்புன்னு நெனைச்சா. ஐயாம் சாரிம்மா ... உன் மனசை புண்படுத்தணுங்கறது என் நோக்கம் இல்லம்மா." மீனா மல்லிகாவை நோக்கி சிரிக்க முயற்சி செய்து தோற்றாள்.

"சே.. சே.. மீனா உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லடி கண்ணு ... நான் இன்னும் என் உலகத்துலேயேதான் இருக்கேன். அதுதான் தப்பு. என் கல்யாணத்துக்கு அப்புறம், இந்த முப்பது வருஷ வாழ்க்கையில, இந்த சமூகத்துல வந்திருக்கற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கலையேன்னு, நான் என் மேலத்தான் கோபப்பட்டுக்கிறேன்." மல்லிகா தன் மூக்கை இலேசாக உறிஞ்சினாள். சற்று நேரம் அந்த ஹாலில் இறுக்கமான மவுனம் நிலவியது. அந்த அமைதியை கலைத்துக்கொண்டு, மீண்டும் மல்லிகாவே பேச ஆரம்பித்தாள்.

“என்னங்க ... சுகன்யாவோட மாமா ... ரகுராமன் தானே அவர் பேரு ... அவர்கிட்ட பேசி மேல் கொண்டு என்ன ஏதுன்னு விசாரிங்க. எப்ப இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு அவங்க சவுகரியத்தைக் கேளுங்க. அப்படியே இந்த ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு பாருங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்களை அந்த வீட்டுல தனிக்குடித்தனம் வெச்சிடலாம். என் புள்ள அந்த பொண்ணுகூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்.”

“அம்மா ... நான் எதுக்கு இப்ப தனியா போகணும்? என்னை எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகச் சொல்றே? உன்னைவிட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இங்கத்தான் இருப்பேன். முடிஞ்சா என்னை கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளு." செல்வா அவள் மடியிலிருந்து விருட்டென எழுந்து கோபத்துடன் கூவினான்.

“செல்வா நீ உன் முடிவை சொல்லிட்டே! நான் உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உன் இஷ்டப்படி அவளை நீ கல்யாணம் பண்ணிக்கோ. இதுக்கு மேல உன் இஷ்டம்.” மல்லிகா தீர்மானமாக பேசிவிட்டு எழுந்தாள்.

"அம்மா, என்ன ஆனாலும் சரி ... நான் உங்களையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் குடும்பம் பண்ண மாட்டேன்" அவன் உடல் பதறி, முகம் சிவக்கத் தொடங்கியது.



“டேய் செல்வா! ... இவன் ஒருத்தன் ... அடங்குடா ... என் பொண்டாட்டி எங்கிட்ட எதையோ சொன்னா ... அவ சொன்னதை செய்ய வேண்டியவன் நான். நடுவுல நீ ஏண்டா சும்மா தொணத் தொணன்னு பேசி அவளைக் கடுப்பேத்தறே? நடராஜன் குறுக்கில் புகுந்து செல்வாவை சும்மா இருக்குமாறு தன் கண்களால் சைகை செய்தார்.


No comments:

Post a Comment