Pages

Thursday, 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 9


சூர்யாவின் திடீர் முடிவில் தீரஜ் ஆடிப் போய்விட்டான். "என்ன... ஏன் இந்த திடீர் முடிவு...?" தீரஜ் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக கேட்டான். "எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்... சென்னைக்கு போனால் அடுத்து என்ன செய்றதுன்னு முடிவு பண்ண முடியும்." சூர்யாவும் அமைதியாகவே பதில் சொன்னாள். "அங்க போயி எடுக்குற முடிவ இங்க இருந்து எடுக்க முடியாதா...? அப்படி எதை பற்றி நீ முடிவெடுக்கணும்?"

'புதிதாக என்ன முடிவு... எல்லாம் ஏற்கனவே முடிவு செய்தது தானே... அவள் குழந்தையை நல்லபடியாக வளர்க்க அவளுக்கு பணம் வேண்டும். அதற்கு அவள் வேலைக்கு போகவேண்டும். இதை இவனிடம் சொன்னால் 'என் கம்பெனியிலேயே வேலை பார்...' என்று சொல்வான். இவனை பார்த்துக் கொண்டு இவன் அருகிலேயே இருந்தால் அது யாருக்குமே நல்லது அல்ல... இதை இவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது...' இயலாமையில் அவளுக்கு எரிச்சல் வந்தது. "நான் எதை பற்றி முடிவு செய்தாலும் உனக்கு என்ன தீரஜ்...? எத்தனை நாள் நான் உன் பாதுகாப்பில் இங்கு இருப்பது. எனக்கென்று என்னை பெற்றவர்களும் என் பிள்ளையும் இருக்கிறாள். நான் அவர்களோடு என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை தொல்லை செய்யாமல் இருந்தால் போதும்..." அவள் படபடப்பை அவனிடம் கொட்டிவிட்டாள். "நான் உன்னை தொல்லை செய்கிறேனா...? எப்போது எந்த விதத்தில் உன்னை தொல்லை செய்தேன்..." "இதோ... இப்போது செய்றியே... இதற்கு பேர் என்ன...? தொல்லை இல்லையா...? நான் சென்னைக்கு போனால் உனக்கென்ன... நீ எதற்கு என்னை தடுக்குற?" "நான் உன்னை தடுக்கலா சூர்யா... நீ தாராளமா சென்னைக்கு போ... ஆனா கீர்த்தியை நான் விட மாட்டேன்..." "கீர்த்தியையா...!" சூர்யா அதிர்ச்சியடந்தவளாக கேட்டாள். "ஆமாம் கீர்த்தியை தான்... அவளுக்கு நல்ல சிகிச்சை அளித்து மற்ற குழந்தைகளை போல் அவள் ஆகும் வரை அவளை நான் யாரிடமும் கொடுக்கமாட்டேன். எங்கேயும் அனுப்ப மாட்டேன்." அவன் அழுத்தம் திருத்தமாக சொன்னான். "தீரஜ்..." அவள் கத்திவிட்டாள். "................." அவன் நீ என்ன கத்தினால் எனக்கென்ன என்று நின்று கொண்டிருந்தான். "கீர்த்தி என் மகள். அவளை என்னிடம் கொடுப்பதற்கும் பறிப்பதற்கும் நீ யார்...? நான் அவளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்... நீ எப்படி தடுக்க முடியும்... உனக்கென்ன உரிமை இருக்கிறது...?" அவள் முகம் சிவக்க உடல் கோவத்தில் நடுங்க சத்தமாக பேசினாள். அதையெல்லாம் தூசி போல் ஊதிவிட்டு "என் உரிமை என்னவென்று என்னை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது. இதை நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்" என்றான் அழுத்தமாக. அவள் வாயடைத்துப் போனவளாக நின்றாள். "நான் எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று நான் தான் முடிவு செய்வேன். கீர்த்தியை மதுராவை விட்டு அனுப்புவதில்லை என்று நான் முடிவு செய்துவிட்டேன். " அவன் தீர்மானமாக சொன்னான். "நீ அநியாயம் செய்ற தீரஜ்..." சூர்யா அவனை எச்சரிப்பது போல் சொன்னாள். "நீ சொல்ற ஞாய அநியாயம்... சட்ட திட்டம் எல்லாம் என்னை எதுவும் செய்ய முடியாது சூர்யா..." அவள் அவனை கோபமாக முறைத்தாள். அவனும் அவளை முறைத்தான். அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் அவனும் தோலை குலுக்கியபடி வெளியேறினான். தோட்டத்திலிருந்து உள்ளே வந்த கிருஷ்ண மூர்த்தி இவர்களின் உரையாடலை முழுவதும் கேட்டார். தீரஜ் காரில் ஏறிக் கொண்டிருந்த போது "ஒரு நிமிஷம்... கொஞ்சம் பேசணும்..." என்றபடி அவன் அருகில் சென்றார். தீரஜ் பிரசாத்தும் காரில் ஏறாமல் கார் கதவை மூடிவிட்டு அவரை நோக்கி வந்தான். அவர் அவனை தோட்டத்திற்கு தள்ளிக் கொண்டு போனார். "தப்பா எடுத்துக்காதிங்க... நீங்களும் சூர்யாவும் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது..." "............." "நீங்க நினச்சா என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் இல்லன்னு சொல்லல... ஆனா சூர்யாவ நீங்க கஷ்ட்டப் படுத்துரீங்கன்னு என்னால நம்ப முடியல..." "..................." "ஏன்... எதுக்காக என் மகளை ஆளாளுக்கு இப்படி படுத்துறீங்க...?" "கீர்திக்காக... அவளுக்கு நல்ல சிகிச்சை கொடுப்பதற்காக..." அவன் உணர்ச்சியற்று பதில் பேசினான். "அதை நாங்கள் சென்னையில் இருக்கும் போது உங்களால செய்ய முடியாதா...? சென்னையில இல்லாத மருத்துவமனையா... மருத்துவரா...! என் மகள் சென்னைக்கு போக விரும்பினால் எங்களை அனுப்பிவிட வேண்டியது தானே... எதற்கு பிடிவாதம் பிடிக்கிறீங்க...?" அவர் அவனை மடக்கினார். "அது... அது... வந்து..." அவன் தயங்கினான். "சொல்லுங்க..." "கீர்த்திய பிரிஞ்சு என்னால இருக்க முடியாது..." அவன் உண்மையை தான் சொன்னான். அந்த பிஞ்சு குழந்தை அந்தளவு அவன் மனதில் இடம் பிடித்துவிட்டது. "சரி... அப்படின்னா ஒன்னு செய்யலாம்... நீங்க கீர்த்திய தத்தெடுத்துக்கோங்க... நான் சூர்யாவை சமாதானம் செஞ்சு சென்னைக்கு கூட்டிட்டு போறேன்." அவர் சாவதானமாக சொல்ல அவன் முகம் வெளிறினான். 'இந்த கிழம் செஞ்சாலும் செய்யும்... ஏற்கனவே ஒரு முறை சூர்யாவை 'கார்னர்' பண்ணி ஒரு புதை சேற்றில் தள்ளிய சாகசகாரனாச்சே...! இந்த ஆளை நம்பவே முடியாது...' தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

"என்ன... நான் சொல்றது சரிதானே... கீர்த்தியை நீங்களே வச்சுக்கோங்க... சூர்யாவை நாங்க கூட்டிட்டு போறோம்..." அவர் திரும்பவும் சொன்னதையே சொல்லவும் அவன் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான். "அ.. அது... சூர்யா... சூர்யா எப்படி குழந்தையை விட்டுட்டு..." "அதை பற்றி உங்களுக்கென்ன.. உங்களுக்கு தேவை குழந்தை தானே... அதை சூர்யாவின் சம்மதத்தோடு உங்களிடம் வாங்கிக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு... ஆனால் அதன் பிறகு சூர்யாவும் நாங்களும் சென்னை போகலாம் தானே... நீங்க எந்த வம்புக்கும் வர மாட்டிங்களே...!" "இல்ல... அது... அது எப்படி கீர்த்தி அவ அம்மாவை விட்டுட்டு இருப்பா...?" "அது சின்ன குழந்தை தானே... ஆறு மாதம் கூட ஆகாத குழந்தைக்கு அம்மா இருப்பது தெரியுமா... இல்லாதது தெரியுமா... அதெல்லாம் எதுவும் தெரியாது. பாலை குடுத்தா அதுபாட்டுக்கு குடிச்சுட்டு அழுவாம இருக்கும்..." அவர் தீரஜ்பிரசாத்தை சமாதானம் செய்தார். "இல்ல... அது..." அவன் தயங்கினான். இவன் இந்த அளவு ஒரு விஷயத்தை பற்றி பேச தயங்குவான் என்று அவனுக்கு இன்று தான் தெரிந்தது. "என்னதாங்க உங்க தயக்கம்..... ஒடச்சு பேசிடுங்க..." அவர் அவனை ஊக்கினார். "இல்ல... சூர்யாவ பார்க்காம... என்னால... இனி... முடியாது..." அவன் சொல்லிவிட்டான். ஒரு வழியாக அவன் மனதை திறந்துவிட்டான். "ம்ம்ம்... அப்போ சூர்யாவுக்காக தான் குழந்தைய இறுக்கி பிடிச்சுகிட்டீங்களா..?" "இல்ல... இல்ல... குழந்தையும் எனக்கு வேணும்..." "அப்படின்னா... சூர்யாவும் வேணும்... அப்படிதானே...?" அவர் போலிஸ்காரராக மாறி கேள்வி கேட்க, யாருக்கும் அடங்காத தீரஜ் இப்போது கிருஷ்ண மூர்த்திக்கு அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். "என்னை தப்பா நினைக்காதிங்க... சூர்யாவிற்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்த பின் நான் ஒதுங்கிதான் இருந்தேன். அவளுக்கு திருமணமாகிவிட்ட விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியில் சூர்யாவை திட்டி காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளுக்கு அமைந்துவிட்ட குடும்பத்தை சிதைத்து என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நான் ஒருநாளும் நினைத்ததில்லை..." "அன்று சூர்யாவிற்கும் கபிலனுக்கும் பிரச்சனை நடந்த போது கூட நான் எதேர்ச்சையாக வேறு ஒரு விஷயமாக KC காலனிக்கு வந்தேன். அப்போதுதான் அங்கு பிரச்சனை நடந்தது தெரியவந்து நான் உள்ளே நுழைந்தேன். அன்று அந்த இடத்தில் சூர்யா இல்லாமல் வேறு எந்த பெண் இருந்திருந்தாலும், நான் அன்று அப்படிதான் நடந்து கொண்டிருந்திருப்பேன்." "ஆனால்... " அவன் தயங்கினான். "ஆனால்...?" அவர் எடுத்துக் கொடுத்தார். "ஆனால்... கீர்த்தியின் விஷயம் வேறு..." "அப்படின்னா...?" "வேறு ஒரு பெண்ணின் குழந்தையை என்னால் என்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொண்டிருந்திருக்க முடியாது... இப்போது கீர்த்தி என் மனதில் என்னுடைய குழந்தையாகத்தான் இருக்கிறாள். அவளை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்...?" அவர் மனம் நெகிழ்ந்தார். 'இப்படி ஒருவனையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு கபிலனுக்கு சூர்யாவை திருமணம் முடித்து கொடுத்தோம்...!' அவன் மனம் வருந்தினார். சூர்யாவையும் தீரஜ்ஜையும் எப்படியாவது ஒன்று சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தார். நினைத்ததை தீரஜ்ஜிடம் கேட்டும்விட்டார். "நீங்கள் ஏன் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள கூடாது...." "அது முடியாது..." "ஏன்...? அவளை திருமணம் செய்யாமல் அவளுடைய குழந்தைக்கு மட்டும் எப்படி நீங்கள் தகப்பனாக முடியும்?" ".............................." அவன் பதில் பேசவில்லை. "சூர்யா வேறு ஒருவனக்கு ஏற்கனவே மனைவியாகி விவாகாரத்தானவள் என்று நினைத்து அவளை ஒதுக்குகிறீர்களா...?" அவரது கேள்வியில் அதிர்ந்தவன் "ச்ச... ச்ச... இன்னொரு முறை அப்படி சொல்லாதிங்க..." "பின்ன உங்களுக்கு என்னதான் பிரச்சனை...?" "அது... அவளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே..." அவன் குனிந்தபடி மெதுவாக சொன்னான். அவன் முகம் சிவந்துவிட்டிருந்தது. அவமானமோ...! "அவள் அப்படி சொன்னாளா...?" "ஆமாம்... அப்படி சொல்லித்தான் என்னை நிராகரித்துவிட்டு சென்னைக்கு வந்தாள்." "அந்த எண்ணம் தவறு என்று இப்போது புரிந்து கொண்டிருக்கலாமே...!" அவன் பதில் பேசவில்லை... தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவன் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. குழம்பிப் போய் அமர்ந்திருந்தான். "யோசிங்க... நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க..." அவர் அவனை தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். அவன் குழப்பத்தை சுமந்தபடியே காரை நோக்கி சென்றான். அன்றொரு நாள் அவன் இதயத்தில் ஆரம்பித்து முடிவு தெரியாமல் பாதியிலேயே நின்றுவிட்ட யுத்தம் இன்று மீண்டும் துவங்கியது... தீரஜ் பிரசாத்திற்கு சூர்யாவின் மீதிருக்கும் காதல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவள் இன்னொருவனின் மனைவி என்று ஆகிவிட்ட பின்பு அவன் தன் காதலை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். அதற்காக சூர்யா அவள் கணவனை விட்டு விலகிய அடுத்த நாளே 'உனக்காக நான் காத்திருக்கேன்... என்னை திருமணம் செய்துகொள்...' என்று கேட்கும் அளவுக்கு தீரஜ் நாகரீகம் இல்லாதவன் இல்லை. ஆனால் இப்போது அவன் அவனுடைய விருப்பத்தை சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை சரி செய்யாவிட்டால் அந்த அரைவேக்காடு கிழம் மீண்டும் சூர்யாவை 'கார்னர்' பண்ணி குழந்தையை இவனிடம் விட்டுவிட்டு சூர்யாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு பறந்தாலும் வியப்பில்லை... ஆனால் முன்பு தீரஜ் சூர்யாவிடம் அவனுடைய காதலை சொன்ன போது அவள் அவனுடைய காதலை நிராகரித்திருக்கிறாள். அதற்கான காரணம் அவன் அறிந்ததே...! அவனுடைய வாழ்க்கை முறையை அவள் வெறுக்கிறாள். பிரசாத்ஜி என்கிற அவனுடைய அடையாளத்தை வெறுக்கிறாள். அந்த வெறுப்பு அவள் மனதில் இருக்கும் போது இவன் எப்படி அவளிடம் தன் விருப்பத்தை சொல்ல முடியும்...? அவன் தயங்கினான். தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு முறை சூர்யாவை கை நழுவவிடும் எண்ணம் தீரஜ்ஜுக்கு இல்லை... அப்படியானால் சூர்யாவின் வெறுப்பை மாற்றியே ஆக வேண்டும். அவளுடைய வெறுப்பு மாற வேண்டுமானால் இவன் 'பிரசாத்ஜி' என்கிற அடையாளத்திலிருந்து வெளியே வந்து ஒரு சாதாரண மனிதனாக புது வாழ்க்கையை துவங்க வேண்டும். 'அவனுடைய அடையாளங்களா...? சூர்யாவா...? ' மீண்டும் எண்ணங்கள் அலை மோத ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த முறை மிக விரைவாகவே அவனுடைய இதயத்தில் ஆரம்பித்த யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. தீரஜ் மிக ஆழமாக சிந்தித்து கடைசியாக எடுத்த முடிவு அவனுடைய அடையாளங்களை துறப்பது என்பதுதான். பிரசாத்ஜி என்கிற பெயரையும் மதுராவையும் தூர விளக்கி தள்ளிவிட்டு நாட்டின் மறுகோடிக்கு சென்று சூர்யாவின் கணவனாகவும் கீர்த்தியின் தந்தையாகவும் தன்னுடைய புதிய வாழ்க்கையை துவங்க எண்ணினான். 'இந்த எண்ணத்தை சூர்யாவிடம் எப்படி சொல்லி புரியவைப்பது...? நான் சொல்வதை அவள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமே...' அவனுக்கு தவிப்பாக இருந்தது. தயக்கத்திலேயே நான்கு நாட்கள் ஓடிவிட்டன. நான்கு நாட்களாக இவன் எப்படி கீர்த்தியை பார்க்காமல் இருந்தான் என்பது அவனுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் இன்று என்னவோ காலை எழுந்ததிலிருந்து அந்த லட்டுகுட்டியை பார்க்க மனம் பரபரக்கிறது... இன்று கீர்த்தியை பார்க்காமல் தாங்காது என்கிற நிலையில் தீரஜ் சூர்யாவின் வீட்டிற்கு புறப்பட்டான். கீர்த்திக்கு ஆறு மாதம் முடிந்துவிட்டது. ஆனால் ஆறு மாத குழந்தைக்கு உரிய உடல் வளர்ச்சி இருந்தாலும் மன வளர்ச்சி இல்லை... அதாவது ஆறு மாத குழந்தையின் செயல்பாடுகள் எதுவும் கீர்த்தியிடம் இல்லை. ஒரு மாத குழந்தை எப்படி இருக்குமோ அது போல தான் இருந்தது. ஆனால் அழகாக இருந்தது. தீரஜ் குழந்தையை பார்க்க வந்த போது குழந்தை மர தொட்டிலில் படுத்து கை காலை அசைத்துக் கொண்டிருந்தது. அருகே சூர்யா அமர்ந்து அதன் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த தீரஜ் குழந்தையிடம் குனிந்து அதன் முகம் பார்த்து சிரித்தான். அதுவும் இவனை பார்த்து சிரித்தது. வேகமாக கை காலை அசைத்து ஆட்டிக் கொண்டே சிரித்தது. அவன் அந்த குழந்தையை கையில் அள்ளிக் கொண்டான். அவனுக்கு அதை வாய்விட்டு 'கண்ணே... மணியே...' என்று கொஞ்ச தெரியவில்லை. ஆனால் அதை நெஞ்சோடு அனைத்து அவனுடைய அன்பை குழந்தைக்கு தெரியப்படுத்தினான். அதுவும் அவனோடு ஒட்டிக் கொண்டது அவனுடைய அன்பை புரிந்து கொண்டது போல் தோன்றியது... குழந்தையை அணைத்தபடி தோட்டத்திற்கு வந்த தீரஜ் தோட்டத்தில் இருக்கும் பூ, மரம், செடி, கொடி, அணில், கிளி என்று எல்லாவற்றையும் பற்றி குழந்தையிடம் பேசினான். அதற்கு புரிகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப் படாமல் பேசிக் கொண்டிருந்தான். சூர்யா பால் பாட்டிலுடன் தோட்டத்திற்கு வந்தாள். "குழந்தைக்கு பால் கொடுக்கிற நேரம்..." அவள் விட்டேற்றியாக தீரஜ்ஜிடம் பேசினாள். அவன் அங்கு போடப்பட்டிருந்த கல் பெஞ்ச்சில் வசதியாக சாய்ந்து குழந்தையை மடியில் வைத்தபடி அமர்ந்து கொண்டு "அதை இங்க கொடு..." என்று கையை நீட்டினான். சூர்யா அவனை சந்தேகமாக பார்த்தபடியே பால் பாட்டிலை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன் லாவகமாக குழந்தைக்கு பால் புகட்டினான். சூர்யாவிற்கு எரிச்சல் வந்தது... 'இதெல்லாம் இவனுக்கு ரொம்ப தேவையா... எதுக்கு இங்க அடிக்கடி வந்து இதெல்லாம் செஞ்சு என் உயிரை எடுக்கிறான்...' அவள் மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள். அவளை மறந்துவிட்டு அவன் அவனுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கரைத்தான் அவளுடைய எரிச்சலுக்கு காரணம். பால் குடித்து முடித்த குழந்தை அவன் மடியிலேயே தூங்கிவிட்டது. "உட்கார் சூர்யா..." அவன் அமைதியாக சொன்னான். "எனக்கு வேலை இருக்கு... நான் போகணும்..." அவள் முறைப்பாக சொல்லியபடி உள்ளே வீட்டை நோக்கி திரும்பினாள். "சூர்யா.... உட்காருன்னு சொன்னேன்..." சத்தமில்லாமல் அழுத்தமாக சொன்னான். 'இந்த அதிகாரத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...' அவள் முனுமுனுத்தபடி அவனுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கல் பெஞ்ச்சில் அமர்ந்தாள். "சென்னை போறதை பற்றி என்ன முடிவு பண்ணியிருக்க?"

"அதுதான் மதுரா மகாராஜா போகக் கூடாதுன்னு உத்தரவு போட்டுடீங்களே..." அவள் நக்கலும் கோபமுமாக அவனுக்கு பதில் சொன்னாள். அவளுக்கு தெரியும் அவனை மீறி மதுராவில் ஒரு துரும்பும் அசையாது என்பது. அதனால் இப்போதைக்கு சென்னை பயணத்தை ரத்து செய்திருந்தாள். பழைய சூர்யா... வார்த்தைக்கு வார்த்தை அவனிடம் வாயாடும் சூர்யா லேசாக எட்டிப் பார்த்தாள். தீரஜ் பிரசாத்தின் கண்கள் லேசாக சிரிப்பில் சுருங்கின... "சரி... நீயும் குழந்தையும் சென்னைக்கு போகலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன்..." அவன் புதிர் போட்டான். "என்ன கண்டிஷன்...?" "என்னையும் கூட்டிட்டு போகணும்..." "என்னது... உன்னையா...! உன்னை எதுக்கு நான் கூட்டிட்டு போகணும்...?" "ஏன்னா... கீர்த்தியை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது..." அவனால் சூர்யாவையும் பிரிந்து இருக்க முடியாதுதான். ஆனால் அதை சொல்லாமல் குழந்தையை மட்டும் சொன்னான். "அதுக்காக...?" "அதுக்காகத்தான் என்னையும் உன்னோடு கூட்டிட்டு போக சொல்றேன்..." "விளையாடறியா...? நீ அடிக்கடி இங்க வந்து போறதா எத்தனை பேர் பார்க்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் நீ இங்க கீர்த்தியை பார்க்கத்தான் வர்ற... என்கிட்ட தேவையில்லாமல் பேசகூட மாட்டேன்னு தெரியுமா...? அவங்க மனசுல எல்லாம் என்னை பற்றியும் உன்னை பற்றியும் என்ன நினைப்பு இருக்கும் என்று உனக்கு தெரியுமா... இந்த தொல்லையிலேருந்து தப்பிக்க தான் நான் சென்னை போறேன்னு சொல்றேன் நீ அங்கேயும் வர்றேன்னு சொல்ற... யாரோ ஒரு ஆண் பிள்ளையை அழைச்சுட்டு போயி நான் நின்றால் எல்லோரும் அங்க என்ன நினைப்பாங்க..." அவள் படபடப்பாக பேசினாள். அவள் சொல்வது பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற பாவனையில் "யாரோ ஒரு ஆண்பிள்ளையை ஏன் நீ கூட்டிட்டு போகணும்... உன்னோட கணவனா என்னை கூட்டிட்டு போ..." என்று அவன் சொல்லிவிட்டான். "தீரஜ்..." அவள் சத்தமாக அவனை அதட்டினாள். தீரஜ் தான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அவளிடம் வெளிப்படுத்திவிட்டான். அதில் அதிர்ச்சியடைந்த சூர்யா "தீரஜ்..." என்று அவனை சத்தமாக அதட்டினாள். அவள் அதட்டலெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக சுலபமாக அவளை அடக்கினான் தீரஜ். "ஷ்... குழந்தை தூங்குறது தெரியல... ஏன் இப்படி கத்தி பேசுற...?" அவளை கடிந்து கொண்டவன் "நான் நிஜமா தான் சொல்றேன் சூர்யா... என்னால உன்னையும் குழந்தையையும் இனி தனியா விட முடியாது. நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள விரும்புறேன்..." அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் எதையோ பேச துவங்க அவளை கையமர்த்தி தடுத்தவன்... "நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா கேட்டுட்டு அப்புறம் பேசு..." என்று அவளை அடக்கிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான். "உனக்கு என்னோட சில நடவடிக்கைகளும் கொள்கைகளும் பிடிக்காதுன்னு எனக்குதெரியும்... அதையெல்லாம் விட்டுட முடிவு செய்துவிட்டு தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன்." "................" "என்னுடைய பெயர்... புகழ்... பணம்... மதுராவின் மீதான எனது ஆதிக்கம்.... எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு உன் பின்னால் உனக்கு கணவனாகவும் கீர்த்திக்கு தகப்பனாகவும் வர தயாராகிவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். சொல்லு... என்கிட்டே உனக்கு இன்னும் என்ன பிடிக்கலன்னு சொல்லு விட்டுடறேன்... ஆனா முன்பு சொன்ன மாதிரி என்னை பிடிக்கல... என் முகத்தை பிடிக்கலன்னு கதை அளக்காத..." "உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சிருச்சா...? ஏன் இப்படி உளர்ற...? இத்தனை நாள் நல்லாதானே இருந்த..." "நான் உளறல... நல்லா யோசிச்சு தெளிவா தான் பேசுறேன்... நீயும் வேணுன்னா நல்லா யோசிச்சிட்டு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்ல..." "இதுல யோசிக்க என்ன இருக்கு... எனக்..." அவள் சொல்லி முடிக்கும் முன் "உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லப் போறியா...? இதை நம்ப எவனாவது காதுல பூ வச்சவன் இருப்பான். அவன்கிட்ட போயி சொல்லு..." அவள் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றாள். அவளுக்கு அவனை பிடித்திருப்பது உண்மைதான். ஆரம்பத்திலிருந்து அவள் மனதில் இருப்பவன் அவன் மட்டும் தானே...! ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் அவள் இல்லையே...! மனதை சிரமப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டு, "தீரஜ்... நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத... சொன்னா புரிஞ்சுக்கோ... ப்ளீஸ்..." அவள் இறங்கிவிட்ட குரலில் பேசினாள். "எதை புரிஞ்சுக்கணும்..." "என் நிலைமையை புரிஞ்சுக்கணும்..." "என்ன உன் நிலைமை...? சொல்லு புரியுதான்னு பார்க்குறேன்..." "என் நிலைமை என்னன்னு உனக்கு தெரியாதா...?" "தெரியல... என்ன உன் நிலைமை...? சொல்லு..." அவன் விடாபிடியாக அவளிடம் விதண்டாவாதம் செய்தான். "தீரஜ்... எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... நீ என்கிட்டே இப்படி பேசுறது சரியில்ல... இது உனக்கு புரியலையா...?" அவள் ஆற்றாமையாக கேட்டாள். "தப்பா சொல்லாத சூர்யா... உனக்கு விவாகரத்து முடிந்து நான்கு மாதம் முடிந்துவிட்டது. இப்போ நீ ஒரு சுதந்திரமான பெண். உன்னுடைய வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கு. அப்படி இருக்கும் போது உன் மனதுக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள எதற்கு தயங்குற...?" "உன்னை பிடிச்சிருக்குன்னு நான் சொன்னேனா...?" "சொல்லல... நீ என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லதான்... ஆனா பிடிக்கலைன்னும் சொல்லல... அப்படியே நீ என்னை பிடிக்கலன்னு சொன்னாலும் அதை நான் நம்ப மாட்டேன்... அதனால உண்மையை மட்டும் பேசு... " "...................." "என்னதான் சூர்யா உன் பிரச்சனை... சொல்லு... பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்ல..." "........................." "சொல்லு சூர்யா உண்மையிலேயே உனக்கு என்ன தயக்கம்... சொல்லு..." "நீ ஏன் என்னையே நினச்சுகிட்டு இருக்க தீரஜ்.... உன்னை மாதிரி ஒரு ஆணை திருமணம் செய்ய, அழகான படித்த வசதியான இன்னும் எல்லா விதத்திலும் உனக்கு பொருத்தமான பெண்கள் எத்தனை பேர் தயாரா இருக்காங்க தெரியுமா...? அவங்கள்ள யாரையாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமா வாழறதை விட்டுட்டு என்னை ஏன்..." அவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. "ஏன்னா நீ மட்டும் தான் 'சூர்யா...' எனக்கு சூர்யா மட்டும் தான் வேணும்..." அவள் மனம் அவளுடைய கட்டுப்பாட்டு மீற துடித்துக் கொண்டிருந்தது. அவள் அவனை எதுவும் செய்ய முடியாமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் இயலாமை தெரிந்தது. "என்ன சூர்யா...?" "எல்லாருக்கும் காதலிச்சவங்கலையே திருமணம் செய்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதில்லை தீரஜ்... நமக்கும் அந்த பாக்கியம் இல்லை என்று நினைத்துக் கொள்." அவள் தன்னை அறியாமலே அவனை காதலித்தாள் என்பதை மறைமுகமாக அவனிடம் ஒத்துக் கொண்டுவிட்டாள்.

"ஏன்... ஏன் நமக்கு நினைத்த வாழ்க்கை அமையாது... நான் நினைத்தால் எதையும் செய்வேன்..." "உன்னை போல நினைத்ததை எல்லாம் நான் செய்துவிட முடியாது தீரஜ்... நான் ஒரு குழந்தைக்கு தாய்... எனக்கு அவளுடைய எதிர்காலம் முக்கியம்.." "நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் தான்... நான் நினைத்ததை என்னால் செய்ய முடியும் போது நீ நினைத்ததை உன்னால் செய்ய முடியாதா...?" "என்ன உளர்ற தீரஜ்...?" "நான் உளறல... கீர்த்தி உனக்குமட்டும் மகள் இல்லை. அவள் எனக்கும் மகள் தான். மனதளவில் நான் அவளுடைய தந்தையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவளுடைய எதிர்காலம் எனக்கும் முக்கியம் தான். அதனால் தான் இந்த திருமணத்திற்கு அவசரப்படுகிறேன். உன்னைவிட என்னால் கீர்த்திய நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்... உனக்கு கூட..." கீர்த்தி விசயத்தில் தீரஜ் அடாவடி தான் செய்கிறான். அநியாயம் தான் செய்கிறான். சூர்யாவின் மகளிடம் அவளைவிட அவன் அதிகம் உரிமை பாராட்டுவது தவறான விஷயம் தான். ஆனால் அவன் அந்த தவறை செய்வது சூர்யாவிற்கு உண்மையில் ஆறுதலாக இருந்தது. இன்னும் ஆழ்ந்து நோக்கினால் அவள் மனம் அவனுடைய அடாவடித்தனத்தில் மகிழ்ந்தது. அவனுடைய அடாவடித்தனத்திக்கு அடிப்படை காரணம் அவன் கீர்த்தி மீது வைத்திருக்கும் பாசமாயிற்றே....! அந்த பாசம் சூர்யா மீது அவன் கொண்ட காதலால் பிறந்ததாயிற்றே...! அவள் உருகினாள். கண்ணீரில் கரைந்தாள். முகத்தை மூடிக்கொண்டு தேம்பினாள். தீரஜ் பிரசாத்தின் காதல் எவ்வளவு ஆழமானது. இந்த காதலை தூக்கியெறிந்த தான் எவ்வளவு பெரிய துரதிஷ்ட்டசாலி என்று நினைக்கும் போது சூர்யாவிற்கு அழுகை பொங்கியது... அவள் தேம்புவதை சிறிது நேரம் வெறித்த தீரஜ்... "என்ன ஆச்சு இப்போ... எதுக்கு இப்படி அழற?" என்றான். அவளுடைய அழுகை நிற்கவில்லை. "சூர்யா..." அவன் அதட்டினான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கலங்கிய முகம் அவனை என்ன செய்ததோ... உடனே "என்ன சூர்யா....? சொல்லிட்டு அழு..." என்று தழைந்த குரலில் கேட்டான். "...................." அவளிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழுகை நின்றிருந்தது. "உன்னை ரொம்ப கஷ்ட்டப் படுத்துறேனா சூர்யா...?" அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். "பின்ன என்ன...?" "எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றியே... இத்தனை நான் அனுபவிச்ச சுகங்களையும் அதிகாரத்தையும் விட்டுட்டு வந்து உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா...?" "நீயும் குழந்தையும் தான் என்னுடைய சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும் என் பக்கத்துல இருந்தா நரகத்தையும் என்னால சொர்கமா மாத்திக்க முடியும்... நீங்க இல்லைன்னா சொர்கத்துல இருந்தாலும் அது எனக்கு நரகம் தான்... " அவன் சொல்லி முடிப்பதற்குள் "தீரஜ்..." அவள் மீண்டும் தேம்பினாள். "சொல்லு சூர்யா... என்னை கல்யாணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா...? சொல்லு..." அவன் விடாபிடியாக அவளிடம் கேட்க, அதற்கு மேல் தன் மனதை மூடி மறைக்க வலுவில்லாத சூர்யா கண்களில் கண்ணீருடன் 'ஆம்' என்பது போல் தலையசைத்தாள். அவளுடிய தலையசைப்பு உண்மையிலேயே அவளுடைய சம்மதத்தை தான் சொல்கிறது என்பதை நம்பமுடியாத இன்ப படபடப்பில் "என்ன... என்ன சொல்ற சூர்யா...? திரும்ப சொல்லு... என்னை உனக்கு பிடிச்சிருக்கா... " அவன் படபடத்தான். "ம்ம்ம்.... பி...டிச்சி...ருக்கு... பிடிச்சிருக்கு... ரொம்ப... பிடிச்சிருக்கு தீரஜ்... ரொம்ப பிடிச்சிருக்கு..." அவள் கண்ணீரும் விம்மளுமாக சொல்ல... அவன் மனம் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல...!!! இந்த நொடி தீரஜ் பிரசாத்தின் மனம் அனுபவிக்கும் மகிழ்ச்சியை அளவிட்டு சொல்ல முடியாது. இன்று போல் அவன் என்றும் மகிழ்ந்ததில்லை. சூர்யாவின் ஒற்றை தலையசைப்பு அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் மிதந்தபடி, "என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா... கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லேன்..." அவன் மீண்டும் கேட்டான். எத்தனை முறை அவள் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அவள் வாயால் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு... கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக "சம்மதம்..." என்றாள் சூர்யா. நிம்மதி பெருமூச்சு விட்டபடி "தேங்க்ஸ் சூர்யா..." என்றான் தீரஜ். 'எனக்கு நீ தேங்க்ஸ் சொல்றியா...!' அவள் மனம் கேட்டது. மகிழ்ச்சி தொண்டை வரை நிறைந்திருக்க பேச்சுவராமல் கண்ணீர் முட்டிக் கொண்டு வெளியேறியது. ஆனந்தக் கண்ணீர்...!!! இரண்டு வாரத்தில் தீரஜ் பிரசாத்திற்கும் சூர்யாவிற்கும் எளிமையாக கோசிகாலனில் திருமணம் முடிந்தது. ஆம் கோசிகாலனில் தான்... தீரஜ் சூர்யாவிற்காக மதுராவை விட்டுவிட்டு வர தயாரானாலும், சூர்யா தீரஜ் பிரசாத்திற்காக மதுராவை விட்டுவெளியேற மறுத்துவிட்டாள். தீரஜ் சூர்யாவை அவளுடைய எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக்கொண்டது போலவே, சூர்யாவும் தீரஜ் பிரசாத்தை அவனுடைய எல்லா குறை நிறைகளோடும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். அவர்கள் வாழ்க்கை மதுராவிலேயே ஆரம்பம் ஆனது.

கீர்த்தனாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. வயதுக்கேற்ற வளர்ச்சி அவளிடம் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவள் மூன்று வயதில் தான் நடப்பாள், ஐந்து வயதில் தான் பேசுவாள், எட்டு வயதில் தான் பள்ளியில் சேர்க்க முடியும்... என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மற்றபடி அவளை சாதாரண குழந்தைபோல் மாற்றிவிடலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். கீர்த்தனாவிற்கு ஐந்து வயதாகும் போதுதான் நலன் பிறந்தான். நலன் பிறந்த பின் கீர்த்தனா நலனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டாள். அதன் பிறகு அவளிடம் நிறைய முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவள் சுட்டிக் குழந்தையாக மாறினாள். மதுராவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பிரசாத்ஜியை சூர்யா, கீர்த்தி, நலன் மூவரும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் செல்ல தொல்லைகளை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் தீரஜ் பிரசாத். நிறைவடைந்தது

No comments:

Post a Comment