Pages

Thursday, 19 June 2014

ஜில் ஜில் மேனி! செக்ஸ் ராணி!!


நான் அஞ்சாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தப்ப ஒரு நாள் கிளாஸ் டீச்சர் ஓட்டலுக்குப் போய் மசாலா தோசை வாங்கிகிட்டு வரச் சொல்லி என்னை அனுப்பினாங்க. டீச்சர் பேர் என்னன்னு இப்ப ஞாபகம் இல்லே. கனகாவோ கார்த்திகாவோ. சரியா ஞாபகம் இல்லே. கனகா டீச்சருன்னே வச்சிக்குவோம்.

அவங்களுக்கு 25 வயசு இருக்கலாம். ஸ்லிம்மா இருப்பாங்க. பிள்ளைகள் யாரையும் அனாவசியமா அடிக்க மாட்டாங்க. மசாலா தோசை வாங்கிகிட்டு வர்ற வழியில் சினிமா போஸ்டர்களைப் பார்த்தேன். எங்க ஊரில் ரெண்டு தியேட்டர்கள் இருந்தன. பக்கத்து ஊர்களில் மூணு தியேட்டர்கள் இருந்தன. இந்த அஞ்சு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் போஸ்டர்களை வியாழக்கிழமை சுவர்களில் ஒட்டுவார்கள். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் முதல் வேலையே அந்த போஸ்டர்களைப் பார்த்து எந்தெந்த தியேட்டர்களில் என்னென்ன படங்கள் ஓடுகின்றன என்று தெரிந்துகொள்வதுதான். நான் தோசை வாங்கிகிட்டு வந்த அன்னிக்கு வெள்ளிக்கிழமை காலையில் போஸ்டர்களைப் பார்க்கவில்லை. அதனால தோசை வாங்கிகிட்டு வரும்போது போஸ்டர்களைப் பார்த்து படங்களின் பெயர்களை மனப்பாடம் செஞ்சிகிட்டேன். ஏன்னா ஸ்கூலில் என்னுடன் படிக்கும் நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள் என்பதால். எங்க ஊரில் இருந்த தியேட்டர் ஒன்றில் சனிக்கிழமை, ஞாயித்திக்கிழமை காலைக் காட்சியாக பலான படங்களைப் போடுவார்கள். அந்த போஸ்டரையும் பார்த்து படம் என்னன்னு தெரிஞ்சிகிட்டேன். ஆனா பேர்தான் கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது. "ஜில் ஜில் மேனி! செக்ஸ் ராணி!!" ஸ்கூலுக்கு வந்ததும் டீச்சரிடம் மசாலா தோசை பார்சலைக் கொடுத்துவிட்டு வகுப்பில் போய் உக்காந்துகிட்டேன். டீச்சர் பாடம் நடத்திக்கிட்டிருந்தாங்க.

என் பக்கத்தில் உக்காந்துகிட்டிருந்த நண்பன் என்னிடம் " நம்மூர் தியேட்டர்லே என்ன படம்டா போட்டிருக்காங்க?"ன்னு கேட்டேன். "அப்புறமா சொல்றேண்டா" என்று சொன்னாலும் நண்பன் கேட்கவில்லை. இப்போதே சொல்லுன்னு அடம் பிடித்தான். "ஜில் ஜில் மேனி! செக்ஸ் ராணி" என்று படத்தின் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் சத்தமா சொல்லிட்டேன் போலிருக்கு. போர்டில் ஏதோ எழுதிக்கிட்டிருந்த டீச்சர் காதில் நான் சொன்னது விழுந்திடுச்சி. போர்டிலிருந்து பார்வையைத் திருப்பி என்னை ஒரு முறைப்பு முறைச்சாங்க. "டேய் இங்கே வாடா"ன்னு கூப்பிட்டாங்க. பயந்துகிட்டே போனேன். "அவன்கிட்டே என்னடா சொன்னே?"ன்னு கேட்டாங்க. "ஒண்ணும் இல்லே டீச்சர். நம்மூர் தியேட்டர்லே என்ன படம் போட்டிருக்காங்கன்னு கேட்டான். அதுக்கு பதில் சொன்னேன்" என்று தயங்கிக்கிட்டே சொன்னேன். "படத்தோட பேர் என்னடா?"ன்னு டீச்சர் கேட்டாங்க. "ஜில் ஜில் மேனி! செக்ஸ் ராணி"ன்னு சொன்னேன். "ஏண்டா இந்த வயசுலே உனக்கு இப்படிப்பட்ட படம்லாம் தேவையாடா? உனக்கு செக்ஸ்ன்னா என்னன்னு தெரியுமாடா?"ன்னு கேட்டாங்க. "இனிமே இப்படி கிளாஸ் நடக்கும்போது பேசிக்கிட்டிருக்கக் கூடாது"ன்னு கண்டிச்சாங்க.

அந்த வயசில் செக்ஸ்ன்னா என்னன்னு எனக்குத் தெரியாது. அது ஏதோ கெட்ட விஷயம்னு மட்டும் தெரியும். ஆனால் கெட்ட வார்த்தை இல்லை. ஏன்னா குமுதம், விகடனில் அந்த வார்த்தையை நான் படிச்சிருக்கேன். நான் வளர்ந்து பெரியவன் ஆனதும் இந்த சம்பவத்தை நினைச்சி மனசுக்குள்ளே சிரிச்சிக்குவேன். அந்தப் படம் எங்கேயாவது தியேட்டரில் போடுவாங்க, நாம போய்ப் பார்க்கணும்னு பல வருஷமா காத்திக்கிட்டிருக்கேன். நண்பர்களே! நீங்க யாராவது அந்த படத்தைப் பார்த்திருக்கீங்களா? பார்த்திருந்தா படத்தின் கதையை எனக்கு சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment