Pages

Tuesday, 7 April 2015

சுகன்யா... 106

மொட்டை மாடியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் செல்வா.

அனு கல்யாணம் பண்ணிக்கப்போற பையன் சென்னையில வொர்க் பண்றானேமே? தன் ஃப்ரெண்டு லைப்ல செட்டிலாகட்டும்ன்னு, சுகன்யா அவளாகவே, தன்னோட போஸ்டிங்கை டெல்லியிலே வாங்கிக்கிட்டாளாமே?

இட் ஈஸ் எ நீயூஸ் ஃபார் மீ.. லாஸ்ட் வீக்கூட அனுகிட்ட நான் பேசினப்ப தன்னோட மேரேஜைப்பத்தி எங்கிட்ட ஓண்ணுமே சொல்லவே இல்லையே? தன் சினேகிதியைப்பத்தி கவலைப்படற சுகன்யா, எப்ப இவ திரும்பி வருவான்னு தினம் தினம் கேலண்டரையே பாத்துகிட்டு இருக்கற என்னைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சாளா?

சுகன்யா ஈஸ் எ ஜெம். சுகன்யாவைப்பத்தி கோபாலன் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா என்ன? செல்வாவின் உதடுகளில் தவழந்த புன்னகையில் இப்போது சிறிய கர்வமிருந்தது.

"மோதிரத்தை கழட்டி அவ மூஞ்சியிலே எறிஞ்சியே அப்ப அவ ஜெம்ன்னு மறந்துட்டியாடா?"



"அதான் இப்ப தனியா நின்னுக்கிட்டு பொலம்பி சாகறேன்."

"சரி... சரி.. நீ விதைச்சதை நீ அறுத்துத்தானே ஆகணும்? சுகன்யாவைப் பாக்க டில்லிக்கு போகப்போறியா?"

"போனா என்ன? போகக்கூடாதா நான்? சுகன்யாவை விட்டு பிரிஞ்சது நான்தானே? நான்தானே அவளை சமாதானப் படுத்தணும்?"

"இப்பவாவது புத்தி வந்திச்சே? ."

"ம்ம்ம்ம்..."

"டேய்.. டில்லிக்கு போறதெல்லாம் அப்புறம்... திரும்பவும் உன் மாறிடப்போகுது. மொதல்லே அவகிட்ட ஒரு தரம் பேசுடா... "

செல்வாவின் மனம் மேலும் கீழுமாக அவனை புரட்டி புரட்டி பந்தாடிக்கொண்டிருந்தது. யெஸ். என் சுகன்யாவோட நான் இப்பவே பேசப்போறேன். செல்வா செல்லில் விடுவிடுவென அவள் நம்பரை அழுத்தினான்.

சுகன்யா கிச்சனில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். கட்டியிருந்த புடவையில் ஈரக்கையை துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்து சிணுங்கும் செல்லை எடுத்தாள் அவள். செல்லின் திரையில், செல்வாவின் முகமும் அவன் பெயரும் மாறி மாறி மின்னிக்கொண்டிருந்ததைக் கண்ட அவள் கன்னங்களில் இலேசாகச் சூடேறியது.

சுகன்யா... உன்னை பாக்கறதுக்கே பிடிக்கலைன்னு சொன்னவன், முழுசா மூணு மாசத்துக்கு அப்புறம் உன் கிட்ட பேச நினைக்கிறான்டீ... மனம் பரபரத்து கூவியது. முகம் சிவந்தது. தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக்கொண்டாள் அவள்.

இவனா நெனைச்சிக்கிட்டா என்னை வெறுக்க ஆரம்பிப்பான். உனக்கும் எனக்கும் இருக்கற உறவே முடிஞ்சு போச்சுடீன்னு கூவுவான். உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலேன்னு முகத்தை திருப்பிக்கிட்டு போவான்.

ஒரு வாரம் பத்து நாளாத்தான், நான் கொஞ்சம் நிம்மதியா இருக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிம்மதிக்காகத்தான், இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்துல, என் உறவுகளையெல்லாம் விட்டுட்டு தனியா மல்லடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப இதுவும் இவனுக்கு பிடிக்கலையா?

எதுக்கு இப்ப இவன் போன் பண்றான்? சுகு... சுகு... அயாம் சாரிப்பான்னு வழிவான். நானும் இவன் என்னைக் கொஞ்சற கொஞ்சல்லே மனசு மயங்கி, சொல்லுடா செல்வா... சொல்லுடா செல்வான்னு திரும்பவும் வழிஞ்சுக்கிட்டு நிக்கணுமா? நாலு நாள்ல்ல பழைய குருடி கதவை தொறடின்னு இவனே என் உயிரை வாங்குவான். இதே லொல்ள்ளாப் போச்சு இவன் கூட..!?

இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? ஆம்பிளை இவனுக்குத்தான் கோவம் வரலாம்... பொம்பளைக்கு வரக்கூடாதா? சுகன்யா வந்து கொண்டிருந்த காலை சட்டென டிஸ்கனெக்ட் செய்தாள்.

"என்னடா ஆச்சு...?"

"கால் டிஸ்கனெக்ட் ஆயிடிச்சி.."

"கட் ஆச்சா... இல்லே சுகன்யாவே உன்னை கட் பண்ணிட்டாளா?"

"என்னை கட் பண்ணிட்டாளா? அப்படி ஒண்ணும் இருக்காது."

"இன்னொரு தரம் டிரை பண்ணிப்பாருடா.."

ரீடயல் ஐக்கானை அழுத்தினான் செல்வா. சுகன்யாவின் செல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. மறுமுனையில் அவனுடைய கால் திரும்பவும் கட் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் விடாமல் தொடர்ந்து சுகன்யாவை அவளுடைய செல்லில் தொடர்பு கொள்ள முயன்றான் செல்வா.

சுகன்யாவும், செல்வாவின் கால் வந்தபோதெல்லாம், அவனிடம் பேசவேண்டும் என அவளுடைய மனதின் ஒரு பகுதி விரும்பியபோதிலும், அவளுடைய மனதின் மறுபகுதி அவளை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. அந்த மனதின் மறுபகுதி, செல்வாவின் மீது அவளுக்கிருந்த சிறிதளவு சினத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

டெல்லிக்கு சென்று சுகன்யாவை பார்க்கவேண்டுமென, செல்வாவின் மனதிலெழுந்த ஆவல் மெல்ல மெல்ல அடங்க தன்னையே வெறுத்துக்கொண்டான் செல்வா.

செல்வாதானே என் மூஞ்சியிலே அடிச்சான். அவனுக்கு நான் வேணும்னா, என் காதல் வேணும்னா, அவனே நேரா டெல்லிக்கு ஒரு தரம் வந்து என்னை பாக்கட்டுமே? அவனா வந்து என்னை பாக்காத வரைக்கும் நானும் அவன்கிட்ட நிச்சயமா பேசப்போறது இல்லே.

என்னைவிட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கட்டும்; அப்பத்தான் அவனுக்கு என் அருமை தெரியும். நான் அவன் மேல வெச்சிருந்த அன்பு புரியும்; என் ஆசை புரியும்; என் காதலோட வலிமை புரியும். சுகன்யா தன் உதடுகளை சுழித்துக்கொண்டாள்.

சுகன்யாவின் மனதின் ஒரு மூலையில் பொய்யான வீராப்பும், தாயிடம் அடிவாங்கிய ஒரு குழந்தையின் முறுக்கலும் இருந்த போதிலும், ஒரு முறைக்கு நான்கு முறை, செல்வா தன்னிடம் பேச விரும்பினான் என்பதிலேயே அவள் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

மனதின் இறுக்கம் வேகவேகமாக குறைவதையும், மன உளைச்சல் குறைவதால், தன் காதலனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தன்னுள் மீண்டும் மீண்டும் எழுவதையும் அவள் உணராமலில்லை.

"உடம்பு கிடம்பு சரியில்லையாடா உனக்கு?" மல்லிகா மகனின் நெற்றியை, கழுத்தை, மார்பை தொட்டுப்பார்த்தாள்.

"எனக்கென்ன கேடு? நான் கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்கேன். நீ கொஞ்ச நேரம் தொணத் தொணக்காமே இருந்தீன்னா எனக்கு நிம்மதியா இருக்கும்." பிள்ளை புரண்டு படுத்தது.

"நேத்தே ஆஃபீஸ் போவலையேடா. மணி பத்தாச்சு.. இன்னும் நீ டிஃபன் கூட சாப்பிடலே.. எப்பவும் படுத்துக்கிட்டு இருக்கியே? என்ன விஷயம்?"

செல்வாவை உலுக்கினாள் மல்லிகா. செல்வா படுத்திருந்த மாடி அறைக்கு வெளியில், நடராஜனின் கைகள் வேட்டியை உதறி உலர்த்திக்கொண்டிருந்தன. ஆனால் அவருடைய கவனமென்னவோ தாய்க்கும் மகனுக்கும் நடுவில், அறைக்குள் நடக்கும் உரையாடலிலேயே நிலைத்திருந்தது.

"நான் ரெண்டு வாரம் லீவு போட்டிருக்கேன்..."

"ஏண்டா...?"

"எனக்கு ஆஃபீஸ் போக பிடிக்கலேம்மா."

"என்னடா கூத்தடிக்கறே? தேவையே இல்லாம இப்ப எதுக்குடா லீவு போட்டே? உன் கல்யாண சமயத்துல லீவுக்கு என்ன பண்ணுவே?"

"இனிமே என் கல்யாணத்தைப்பத்தி நீ கவலைப்படாதே... இப்ப எனக்கு கருமாந்திரம் ஒண்ணுதான் பாக்கி.. நானே செத்ததுக்கு அப்புறம் லீவுக்கு என்ன அவசியம்?"

"காலங்காத்தால என்ன பேச வைக்காதேடா... சனியனே?" செல்வாவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் மல்லிகா.

"சரி பேசாதே... பேசு பேசுன்னு.. உன்னை நானா இப்ப கூப்பிட்டேன்..?"

"ஏன்டா இப்படி எங்க உயிரை எடுக்கறே?" மல்லிகாவின் குரல் கம்மியது.

"அப்பா சொன்னாரேன்னு.. நாலு தரம் அந்த சிங்காரி கிட்ட பேச டிரை பண்ணேன். நாலு தரமும் அவ என் காலை கட் பண்ணிட்டா." செல்வா எழுந்து தன் இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இறுக்கிக்கொண்டான்.

"என் நம்பர்லேருந்து பண்றேன்.. என் காலை அவ கட் பண்ணிடுவாளா?"

"கட் பண்ணலாம்..."

"உனக்கும் அவளுக்கும் தகராறுடா... எனக்கும் அவளுக்கும் நடுவுல என்னப் பிரச்சனை?"

"எனக்கு அப்புறம்தான் அவ உங்க எல்லாருக்குமே உறவு... இதை நான் எத்தனை தரம் சொன்னாலும், இது உங்க ரெண்டுபேருக்கும் ஏன்தான் புரியமாட்டேங்குதோ?"

"எங்களுக்கு புரிய வைக்க உனக்கு வயசு பத்தாதுடா..." மல்லிகா சீறினாள்.

"சரி.. அவ கிட்ட செருப்படி வாங்க உனக்கு இஷ்டம்ன்னா நீ என்ன வேணாப் பண்ணு..." தன்னிடம் அவள் பேசவில்லையே, தன்னை அவள் உதாசீனப்படுத்திவிட்டாளே என்ற எரிச்சலில், தன் முகம் சுருங்க, தன் தாயிடம், இடக்காக பேச ஆரம்பித்தான் செல்வா.

"அர்த்தமில்லாமே பேசாதேடா... அவ அந்த மாதிரி பொண்ணு இல்லே; ரெண்டு நாள் முன்னாடி கூட மீனாவும் சுகன்யாவும் நல்லாத்தான் சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தாங்க." விருட்டென அந்த அறைக்குள் நடராஜன் நுழைந்ததும் அந்த அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான் செல்வா.

"நில்லுடா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"அப்பா... நல்லாக் கேட்டுக்குங்க... அடுத்த ஒரு வருஷத்துக்கு சுகன்யா சென்னைக்கே திரும்பி வர்றதா இல்லே... அவளுக்கு போஸ்டிங் டில்லியிலே ஆயிடிச்சி... சீனு வீட்டுல சொல்ற மாதிரி என் தங்கச்சி மீனா கல்யாணத்தை சட்டு புட்டுன்னு முடிக்கற வழியைப்பாருங்க..."

"என்னடா சொல்றே?" இருவரும் ஒரே குரலில் வியப்புடன் கேட்டனர்.

"நடந்ததை சொல்றேன்... சுகன்யா, சென்னைக்கு ஏன் திரும்பி வரலேன்னு ஆஃபீசுல அவனவனும் என் உயிரை எடுக்கறானுங்க. அதான் லீவு போட்டுட்டு வீட்டுல படுத்து கிடக்கறேன்."

"மல்லிகா... ஈவினிங்கே, மீனா கல்யாணத்தைப்பத்தியும், இவனைப்பத்தியும், சுகன்யா கிட்டே நானே பேசிடறேன்..." நடராஜன் விறுவிறுவென எழுந்து வெளியே நடந்தார்.

* * * * *

"யார்கூட இவ்வளவு நேரமா பேசிகிட்டு இருந்தீங்க?"

"நம்ம சுகன்யாகிட்டத்தான் பேசிகிட்டு இருந்தேன்..."

"என்ன சொன்னா?"

வெராண்டாவில் உட்கார்ந்துகொண்டு, கையில் அந்த வார ஆனந்தவிகடனை புரட்டிக்கொண்டிருந்த நடராஜனின் அருகில் அமர்ந்திருந்தாள் மல்லிகா. செல்வா வாசல் படியில் காற்றாட உட்கார்ந்திருந்தான்.

"மாமா... எனக்கு ரொம்ப சந்தோஷம்... என் ஃப்ரெண்டு மீனா மேரேஜை மொதல்லே நடத்தி முடிங்கன்னு சொன்னா.."

"அப்புறம்..."

"உங்க பிள்ளை மேல எனக்கு இருக்கற கோவம் இன்னும் முழுசா தணியலேன்னா.."

"அப்டீன்னா..."

"மல்லிகா அத்தை எப்படி இருக்காங்கன்னு கேட்டா... அதே சமயத்துல... என் கதை முடிஞ்சுபோன விஷயம்... அதை மறந்துட்டு நடக்கவேண்டிய வேலையை பாருங்கன்னும் சொன்னா..."

"என்னங்க இப்படி பேசறீங்க?" மல்லிகாவில் குரலில் பதட்டம் ஏறிக்கொண்டே போனது.

"நானா எதுவும் சொல்லலேடீ... சுகன்யா சொன்னதை நான் சொல்றேன்..."

"முடிவா என்னதாங்க சொன்னா?"

"மல்லிகா... அவ எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணுங்கறா?"

"எனக்கு புரியலீங்க... உங்களை மாமாங்கறா... என்னை அத்தேங்கறா... ஆனா இவன் மேல கோவம் தணியலேங்கறா... இதுக்கு என்னங்க அர்த்தம்?"

"இனிமே... ஆண்டவன் விட்ட வழிதான்னு அர்த்தம்..." நடராஜன் தன் தலையை தடவிக்கொண்டிருந்தார்.

"குமார் மாமாகிட்ட பேசிட்டீங்களாப்பா?" மீனா நடராஜனின் மடியில் தன் தலையை சாய்ந்துக்கொண்டு வெறும் தரையில் படுத்திருந்தாள்.

"சுகன்யா சென்னைக்கு திரும்பி வராததுலே அவருக்கும் ரொம்பவே வருத்தம்... அவர் மட்டும் என்ன பண்ணுவார்? என் பொண்ணோட விருப்பம்தான் எனக்கு முக்கியம்... அவ திரும்பவும் விருப்பப்பட்டாதான் இந்த கல்யாணம் நடக்கும். மீனாவும் எனக்கு ஒரு பொண்ணுதான்... என்னை உன் கல்யாண வேலையை பாக்கச்சொல்லிட்டார்."

"செல்வா... அப்பா சொல்றதை கேட்டியாடா?" மல்லிகா தன் மகனை நோக்கினாள்.

"இதைத்தான் நான் காலையிலேயே சொன்னேன்..." செல்வாவின் குரலில் சிறிதே ஏளனம் இருந்ததாக அவர்களுக்குத் தோன்றியது.

"நான் வேணா ஒரு தரம் சுகன்யாவோட பேசட்டுமா?"

"அம்மா... நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன். ஸ்டாப் திஸ் ப்ளீஸ்.." செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே, மல்லிகாவை நோக்கி தன் இரு கைகளையும் கூப்பினான். நீளமாக பெருமூச்சொன்றை விட்டான். பின்னர் மெதுவாக எழுந்து மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 



இண்டர்காம் மென்மையாக சிணுங்க ஆரம்பித்தது. தலையை நிமிர்த்தி தன்னெதிரில் இருந்த சுவரை நோக்கினார் நடராஜன். டிஜிட்டல் வால் கிளாக் 1330 என நேரத்தை அறிவித்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் நடராஜன்... பிஸியா இல்லேன்னா ஒரு ரெண்டு நிமிஷம் என் ரூமுக்கு வரமுடியுமா?"

"நம்ம காண்ட்ராக்டர் ஒருத்தரோட பேசிகிட்டு இருக்கேன் சார். அவரோட வேலையை முடிச்சுட்டு, ஒரு பைவ் மினிட்ஸ்ல வரட்டுமா?"

"தட்ஸ் வெரி பைன்... வீட்டுலேருந்து உங்களுக்கும் சேர்த்து லஞ்ச் வந்தாச்சு. உங்களுக்கு பிடிச்ச மெனுதான். என் ரூம்லேயே சாப்பிட்டுக்கலாம் வாங்க." குமாரசுவாமி மென்மையாக சிரித்தார்.

* * * * *

"கம் இன்... ப்ளீஸ்..."

நடராஜன், குமாரசுவாமியின் அறைக்குள் நுழைந்தபோது அந்த அலுவலகத்திற்கான உணவு இடைவேளை தொடங்கி பத்து நிமிடத்திற்கும் மேலாகியிருந்தது. குமாருடன் சோஃபாவில் கவர்ச்சியான சிரித்த முகத்துடன், இதுவரை அவர் பார்த்திராத இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

உற்சாகம் பொங்கும் முகம், கூர்மையான கண்கள். செதுக்கிய மூக்கு. வலது மணிக்கட்டில் வட்டமான வாட்ச். காலில் மின்னும் கருப்பு நிற ஷூக்கள். உடலோடு ஒட்டிய பளபளக்கும் விலையுயர்ந்த காட்டன் ஆடைகள். மொத்தத்தில் பளிச்சென்றிருந்தான் அவன்.

"நான் லஞ்ச் கொண்டு வரலேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" புன்முறுவலுடன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார் நடராஜன்.

"காலையில மீனாகிட்ட பேசிகிட்டு இருந்தேன். உங்க வீட்டு எஜமானியம்மா திருத்தணி போயிருக்காங்கன்னு தெரியவந்தது. ஆஃபீசுக்குள்ள நுழையும் போது ரெண்டு கையையும் வீசிகிட்டு வந்தீங்க நீங்க. லஞ்சு அனுப்பும் போது ரெண்டு பேருக்கு அனுப்பும்மான்னு உடனே சுந்தரிக்கு போன் பண்ணிட்டேன்."



குமாரசுவாமியின் முகத்திலிருந்து, பொங்கி வரும் சிரிப்பிலிருந்து, அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது தெரிந்தது.

"உங்கக்கிட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் தோத்துடுவார் போங்க..." நடராஜனும் நட்புடன் சிறிது உரக்கவே சிரித்தார்.

"மீட் மிஸ்டர் சம்பத்... சம்பத், இவர்தான் நடராஜன். இந்த ப்ராஞ்ச்லே வேலை செய்யற அத்தனை பேருக்கும் சாப்பாடு போடறவர்... ஐ மீன் டூ சே, மாசக்கடைசீலே சம்பளம் குடுக்கறவர். சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர்." சிரித்தவாறே பரஸ்பரம் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

"மாமா, சாரோட பேசினது இல்லேயே தவிர இவரை நான் பார்த்திருக்கேன்."

சம்பத் இனிமையாக புன்னகைத்துகொண்டே தன் வலது கையை நீட்ட, நடராஜன் தன் புருவங்களை உயர்த்தியவாறு, அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே, அவன் நீட்டிய கையை அவசரமாக குலுக்கினார்.

"என்னை எங்கே பார்த்திருக்கீங்க நீங்க?"

"சுவாமிமலையிலே தமிழ்செல்வன், சுகன்யாவோட நிச்சயதார்த்தத்துக்கு நானும் வந்திருந்தேன்." சம்பத் இனிமையாக புன்னகைத்தான்.

"ஐ சீ... ஐ சீ..."

பை த பை... நடராஜன், இன்னைக்கு நம்ம லஞ்சை இவர்தான் என் வீட்டுலேருந்து நமக்காக கொண்டு வந்திருக்கார்."

"அப்படியா?"

"யெஸ்... நடராஜன்... என் ஒண்ணுவிட்ட சிஸ்டர் மிஸஸ் ராணி நல்லசிவத்தைப்பத்தி உங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்களோட ஒரே மகன் சம்பத் இவர்தான். இவருக்குத்தான் சுகன்யாவை பெண் கேட்டு வந்தாங்கன்னு...." குமார் பேசிக்கொண்டிருந்த வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார்.

"யெஸ்... யெஸ்... ஐ ரிமெம்பர் தட்..."

"சம்பத், நாளைக்கு, நம்ம ஜோனல் ஆஃபீஸ்லே, ஹெச்.ஆர்.லே டெபுடி மேனேஜரா ஜாய்ன் பண்றார். எல்லாம் அவரோட மெரிட்தான். இதுல என் ரோல் ஒண்ணுமில்லே."

"நீங்க இதை எனக்கு சொல்லணுமா? உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா? வெல்கம்... மிஸ்டர் சம்பத்குமாரன், வெல்கம்... யூ வில் எஞ்சாய் யுர் ஸ்டே ஹியர். ஹெட் ஆஃபீஸ்லேருந்து வந்த உங்க ஆர்டர்சை லாஸ்ட் வீக் பார்த்தேன்... சம்பத்துன்னு சொன்னதும் சட்டுன்னு ரிலேட் பண்ணிக்க முடியலே."

* * * * *

"போன் பண்ணி பாராட்டியே ஆகணும்... வீட்டுல யாரோட சமையல் இன்னைக்கு? புளிசாதத்துக்கு, மசால் வடை, உருளைகிழங்கு சிப்ஸ்... சூப்பர் காம்பினேஷன்..." நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நடராஜன்.

"புளிசாதம் எங்க கனகா பாட்டி பண்ணாங்க. மசால் வடை பண்ணது சுந்தரி மாமி. இங்கே வர்றதுக்கு முன்னாடி நானும் ஒரு புடி புடிச்சுட்டுத்தான் வந்திருக்கேன்." சம்பத் அவர்களுக்கு குளிர்ந்த நீரை டம்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்தான்.

"சம்பத்... உங்க வீட்டுலேதான் தங்கியிருக்காரா?"

"இப்போதைக்கு மாடியிலே சுகன்யாவோட ரூம் காலியாத்தானே இருக்கு. இங்கேயே இரேன்டாங்கறார் அப்பா. இவன் கேக்கமாட்டேங்கறான். தனியா வீடு வேணுமாம். காலையில நம்ம சீனுகிட்ட பேச டிரை பண்ணேன். அவன் கிடைக்கலே. சீனுவோட டே டு டே ப்ரொக்ராம் மீனாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்குமேன்னு காலையிலே அவகிட்டே பேசினேன்..

"யெஸ்... ஓரு ஆளுக்கு இப்ப தனி வீடு எதுக்கு?" நடராஜன் மசால்வடையை கடித்து நிதானமாக மென்று கொண்டிருந்தார்.

"ஹீ ஈஸ் கோயிங் டு கெட் மேரீட் வெரி வெரி சூன்..

"குட்... கங்கிராட்ஸ்..."

"சண்டேன்னைக்கு பத்திரிக்கையோட இவனும், இவனை கட்டிக்கப் போறவளும் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்காங்க..."

"அவசியம் வாங்க மிஸ்டர் சம்பத்..."

அத்தை பிள்ளைக்கு கல்யாணம்ன்னா, கல்யாணத்துக்கு சுகன்யாவும் வந்துதானே ஆகணும். நடராஜனின் மனதில் சட்டென சுகன்யாவின் முகமும், செல்வாவின் முகமும், ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

முருகா... செல்வாவை ரொம்ப சோதிக்காதே. அவனையும் சுகன்யாவையும் சீக்கிரமே ஒண்ணு சேர்த்துடுப்பா. மனதுக்குள் திருத்தணி முருகனை ஒரு முறை வேண்டிக்கொண்டார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவருக்கு பொறை ஏறியது. அதே நேரத்தில், நடராஜன் நினைத்ததையே, திருத்தணியில் முருகன் சன்னிதியில், மல்லிகா விண்ணப்பமாக்கிக் கொண்டிருந்தாள். 

இரண்டு வாரம் விடுமுறையில் இருந்தபின் அன்றுதான் அலுவலகத்திற்கு வந்திருந்தான் செல்வா. அவனுக்காக காத்திருந்த, அவனே செய்து முடிக்க வேண்டியிருந்த வேலைகளை, லஞ்சுக்கு கூட போகாமல், ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்தான். மேஜை காலியானதும்தான் அவனால் அப்பாடாவென மூச்சு விடமுடிந்தது.

மாலை நாலரை மணியளவில், வழக்கம் போல்,கேண்டீனின் வலதுபுற மூலையில், தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டு தன் கையிலிருந்த கொதிக்கும் காஃபியை மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தான் அவன்.

"செல்வா.. உன்னை எங்கெல்லாம் தேடறதுப்பா...?"

தனக்குப் பின்னாலிருந்து வந்த கூவலைக்கேட்டு அவன் திரும்புவதற்குள், அவன் தோளிலும் பட்டென ஒரு அடி விழுந்ததும், அவன் ஒரு நொடி அதிர்ந்து, விருட்டென பின்புறம் திரும்பியவன், அடுத்த நொடியில் தன் முகம் மலர்ந்து முறுவலிக்க ஆரம்பித்தான்.

"ஹாய் அனு... எப்டீ இருக்கே? எப்ப வந்தே பாண்டிச்சேரியிலேருந்து? இந்த ஆஃபீசுல ஜாய்ன் பண்ணிட்டியா?"

அனுவின் கையை உற்சாகமாக குலுக்க ஆரம்பித்த செல்வா, மூச்சு விடாமல், கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டு அவளை திக்குமுக்காடவைத்தான்.

"ஒரு வாரமா உனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கேன். 'ஸ்விட்ச்ட் ஆஃப்'ன்னே மெசேஜ் வருது? நேத்து ஈவினிங், கடைசியா, உன் தங்கை மீனாவுக்கு போன் பண்ணேன். சாமியார் மாதிரி, எங்கே போறேன்னு வீட்டுலகூட சொல்லிக்காம, ஊர் ஊரா நீ திரிஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அப்பத்தான் தெரிய வந்திச்சி. நீ பண்றதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா?"

"பெங்களூர் போயிருந்தேன் அனு. எங்கூட படிச்ச ஒரு ஃப்ரெண்டோட ஒரு வாரம் தங்கியிருந்தேன். இன்னைக்கு மார்னிங்தான் சென்னைக்கு வந்தேன். அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு கல்யாணமாமே? நீ ஏன் இதை எங்கிட்ட சொல்லவே இல்லே? மாப்பிள்ளை யாரு? அவரு என்னப்பண்றார்?"

"இன்னைக்கு ஈவினிங் உன் வீட்டுக்கு எங்க மேரேஜ் இன்விடேஷனோட வர்றதா இருக்கேன். அப்ப டீட்டெய்லா எல்லாக்கதையும் சொல்றேன்." புன்னகை பூவாய் இருந்தாள் அனு.

"பைன்... பைன்.. இப்படி உக்காரு நீ; மொதல்லே நீ என்ன சாப்பிடறே? அதைச்சொல்லு; நான் போய் வாங்கிட்டு வரேன்.." செல்வா வேகமாக எழுந்தான்.

"காபிமட்டும்தான் வேணும்... அதுவும் வந்துகிட்டு இருக்கு. மொதல்லே உன் காஃபி ஆறிப்போகறதுக்குள்ளே குடிச்சி முடி.. உன்கிட்ட எனக்கு நெறையப் பேசவேண்டியது இருக்கு."

அனுவின் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.இவளால மட்டும் எப்படி பொங்கற ஆத்து வெள்ளம் மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுது? ஆத்துல கூட தண்ணி வத்திப்போவுது... ஆனா அனுவோட சிரிப்பு மட்டும் வத்தவே வத்தாது. செல்வா பொறாமையுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

செல்வாவின் தோளோடு தன் தோள் உரச உட்கார்ந்து கொண்டாள் அனு. தன்னுடைய இயல்பின்படி முகத்தில் பொங்கும் சிரிப்புடன், நெற்றியில் வந்து விழும் தன் முன்னுச்சி முடியை காதுக்குப் பின்னால் தள்ளிக்கொண்டே, அனு செல்வாவின் இடது கையை வெகு இயல்பாக தன் கரங்களில் எடுத்துக்கொண்டாள்.அவனுடைய மெல்லிய நீளமானவிரல்களை ஒன்றன் பின் ஒன்றாக நெட்டி முறிக்க ஆரம்பித்தாள்.

"என்னம்மா பண்றே? என் விரலை ஒடைச்சிடப்போறே?" செல்வா தவித்தான்.

"மிஸ்டர் செல்வா...இங்கே நான் உக்காரலாமா? உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" செல்வா விருட்டென நிமிர்ந்தான். முகத்தில் இனிமையான புன்னகையுடன், கைகளில் காஃபி கோப்பைகளுடன், அவனெதிரில் நின்று கொண்டிருந்தான் சம்பத் என்கிற சம்பத்குமாரன்.

"சே..சே.. என்ன சொல்றீங்க? டேக் யுவர் சீட் ப்ளீஸ்..."

இங்கே எங்கே சம்பத் வந்தான்? அனுவுக்கு சம்பத்தை தெரியுமா? அனுவை திருமணம் பண்ணிக்கப் போறவன் சென்னையில வேலை செய்யறதா கோபாலன் சொன்னாரே? அப்படீன்னா சம்பத்துதான் அனுவை கல்யாணம் பண்ணிக்கப் போறவனா? சம்பத் பெங்களூர்லேல்லா வேலை செய்யறான்.

செல்வாவின் முகம் விருட்டென சிவக்க, அவன் முற்றிலும் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். அனு இன்னமும் செல்வாவின் கரத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்தாள். சம்பத் வெகு வெகு இயல்பாக இருந்தான்.

சுகன்யாவுக்கு சம்பத் உறவு. இவன் சுகன்யாகிட்ட சிரிச்சி பேசினதையே என்னாலத் தாங்கிக்கமுடியலியே? இவன் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு என் தோளோடு தோள் உரச உக்காந்து, என் கையை வேற பிடிச்சிக்கிட்டு இருக்கா. இவன் சிரிச்சுக்கிட்டு உக்காந்து இருக்கான். செல்வாவின் மனம் கபடி ஆடிக்கொண்டிருந்தது. 
"செல்வா... மீட் மை வுட் பீ... மிஸ்டர் சம்பத்குமாரன்..." சொல்லிவிட்டு தன் வலது கண்ணைச் சிமிட்டினாள் அனுராதா.

அனு என்ன சொல்றா? எனக்கு காது சரியாத்தான் கேக்குதா? அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த செல்வா தனக்குள் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தான்.

"என்ன செல்வா.. என்னமோ ஷாக்கான மாதிரிப் பார்க்கிறே? சம்பத்... இவர் மிஸ்டர் தமிழ்ச்செல்வன், என்னோட வெரிகுட் ஃப்ரெண்ட்.." அனு மிக மிக சந்தோஷமாக சிரித்தாள்.

"கங்கிராட்ஸ் மிஸ்டர் சம்பத்.. என்னால நம்பவே முடியலே; அனு உங்களோட மனைவியா ஆகப்போறாளா? எனிவே... ஆல் த வெரி பெஸ்ட்... யூ மஸ்ட் பீ வெரி வெரி லக்கி டு ஹேவ் எ வுமன் லைக் ஹர்..." செல்வா சம்பத்தின் கரத்தை இறுகப்பற்றி குலுக்க ஆரம்பித்தான்.

"அனு உங்க மனைவி ஆகப்போறாளா? இது என்னக்கேள்வி? அவரைப்பாத்து ஏன் இப்படி கேக்கறே நீ?" தலையை குனிந்து கொண்டிருந்த அனு செல்வாவின் இடுப்பில் குத்தினாள்.

"அனு.. நான் சொல்லப்போறதை கேட்டு நீ அதிர்ச்சியடையாதே. மிஸ்டர் செல்வாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் ஏற்கனவே ஒரு முறை சந்திச்சிருக்கோம். ஆனா அந்த சந்திப்பு அவ்வளவு சுமுகமானதா இருக்கலே..."

"சம்பத்... உங்களுக்கு செல்வாவை முன்னாடியே தெரியுமா? இந்த விஷயத்தை எங்கிட்ட நீங்க சொன்னதேயில்லை.? சுகன்யாவும் இதைப்பத்தி சொன்னதேயில்லை..." தன் முகத்தைச் சுளித்துக்கொண்டு படபடவென பொரிய ஆரம்பித்தாள் அனு.

"அயாம் சாரி அனு... உங்கிட்டேருந்து எதையும் நான் மறைக்க விரும்பலே. ஆனா சில விஷயங்களை சொல்றதுக்கு எனக்கு இன்னும் சரியான சந்தர்ப்பம் வாய்க்கலே... இதுதான் உண்மை. நம்ம கல்யாணம் முடியட்டும். அப்புறம்..."

"அப்புறம்??"

"செல்வாவும், சுகன்யாவும் திரும்பவும் ஒண்ணு சேரட்டும். நான்... செல்வா, சுகன்யா, நாங்க மூணு பேரும் ஒருத்தரோட ஒருத்தர், ஒரு குறுகிய காலத்துலே எப்படியெல்லாம் சம்பந்தபட்டுட்டோங்கறதை, உனக்கு நான் சொல்றேன்."

"சரீங்க..." தன் சிவந்த கீழ் உதட்டை கடித்து அதை மேலும் சிவப்பாக்கிக் கொண்டாள் அனு.

"டியர்... இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இரு. என்னை நம்பு..." சம்பத் வெகு இனிமையாக புன்னகைத்தான்.

அனுவிடம் பேசிக்கொண்டே, மேஜையின் குறுக்கே தன் கையை நீட்டி செல்வாவின் வலது கரத்தை மெல்ல வருடினான் சம்பத். சம்பத் தன்னைத் தொட்டதும் செல்வா சிலிர்த்தான். சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தான். இப்போது செல்வாவை நோக்கி நட்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன்.

"ஓ.கே.. ஓ.கே.. உங்களை நம்பிட்டேன் நான். உங்க பின்னாடி வரவும் தயாராயிட்டேன். கல்யாணப் பத்திரிக்கையும் அடிச்சாச்சு.. இனிமே உங்களை விட்டுட்டு எங்கே ஓடறது?" அனுவின் முகத்தில் மீண்டும் சிரிப்பும், வெட்கமும் ஒன்றாக வந்தது. செல்வாவின் பக்கம் திரும்பினாள் அவள்.

"செல்வா...உன் ஹேண்ட்சம்மான மூஞ்சை ஏன் இப்படி அலங்கோலம் பண்ணி வெச்சிருக்கே? ஹூம்ம்? உனக்கு தாடியும் மீசையும் நல்லாவேயில்லை. பிச்சைக்காரன் மாதிரியிருக்கே; எனக்கே உன்னைப்பாக்க சகிக்கலே. இந்தக் கோலத்துல சுகன்யா மட்டும் உன்னைப்பாத்தா, அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். என் ஃப்ரெண்டை நீ சாகடிச்சுடாதே..."

"ம்ம்ம்.. ப்ளீஸ் அனு.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" செல்வா தன் தலையை குனிந்து கொண்டான். அவன் உடலுக்குள் சூடு ஏற ஆரம்பித்தது. ஓரக்கண்ணால் சம்பத்தை பார்த்தான். மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.

"இன்னைக்கு ஈவீனிங், நாங்க ரெண்டு பேருமா, எங்க திருமணத்துக்கு உங்களையெல்லாம் அழைக்கறதுக்காக உங்க வீட்டுக்கு வர்றோம்."

"அவசியம் வாங்க... ராத்திரிக்கு எங்க வீட்டுலதான் நீங்க ரெண்டு பேரும் டிஃபன் சாப்பிடணும்..." செல்வா சம்பத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.

"செல்வா.. நான் உன் வீட்டுக்கு வர்றப்ப, உன் சுத்தமான மூஞ்சை பாக்க ஆசைப்படறேன். இல்லேன்னா அங்க நடக்கறதே வேற... இப்பவே சொல்லிட்டேன் ஆமாம்.." அனு செல்வாவின் முதுகில் மீண்டும் ஒரு முறை ஓங்கி அடித்தாள். தன் முகம் சிவக்க செல்வா அவளை நிமிர்ந்து பார்த்தான். தன்னைப் பார்த்தவன் தலைமுடியை நட்புடன் ஒரு முறை கலைத்தாள் அனு.

சம்பத் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். செல்வாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டான். அவனுடன் வெளியில் வந்தவன், கேண்டீனுக்கு எதிரிலிருந்த பெரிய அரசமரநிழலில் நின்றான். அனு அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

"செல்வா.. என்னை நீங்கத்தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. சுவாமிமலையிலே உங்க எங்கேஜ்மென்டுக்கு முன்னாடி நடந்ததையெல்லாம் இன்னும் நீங்க மறக்கலேன்னு நான் நினைக்கிறேன். என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா பரவாயில்லே. அதனால யாருக்கும் நஷ்டமில்லே. ஆனா சுகன்யாவையும் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. இதனால நிறையபேருக்கு நஷ்டம். இதை மட்டும் நீங்க தயவுசெய்து புரிஞ்சுக்கணும்."

"ப்ச்ச்ச்..." செல்வா விரக்தியாக சூள் கொட்டினான்.

"நான் சொல்றதை கேளுங்க. சுகன்யா உங்களைத்தான் லவ் பண்ணா. உங்களை மட்டுமேதான் லவ் பண்ணிகிட்டு இருக்கா. என் அனு சொன்னது மாதிரி, பழைய உற்சாகமான, தமிழ்செல்வனா, உங்க வீட்டுக்கு எங்களை நீங்க வரவேற்கணும்."

"ஷ்யூர்... முழு மனசோட, முழு விருப்பத்தோட, உங்களை நான் என் வீட்டுக்கு கூப்பிடறேன்... சம்பத் கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்..." செல்வா, சம்பத்தின் கைகளை பற்றிக்கொண்டான்.



"அனு உங்களோட நல்ல ஃப்ரெண்ட். சுகன்யா என்னோட மாமா பொண்ணு. அவ எனக்கு மாமா பொண்ணு மட்டும்தான்; உங்களுக்கு மட்டும்தான் அவ முழுமையாக சொந்தம். இரு தரப்பிலேருந்தும், நீங்க எனக்கு ரொம்ப நெருங்கியவரா ஆயிட்டீங்க. எங்க கல்யாணத்துக்கு நீங்க உங்க குடும்பத்தோட, உங்க ஃப்ரெண்ட் சீனுவோட, கண்டிப்பா சுவாமிமலைக்கு வரணும்."

"நான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டது உண்மைதான் சம்பத்... அதுக்கு இப்ப நான் ரொம்பவே அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். அயாம் சாரி... என் தப்புக்கு உங்கக்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"செல்வா... யாருகிட்டே குறை இல்லே?. உங்க வருத்தத்தை நீங்க சுகன்யாகிட்ட சொல்லுங்க... அதுபோதும். திரும்பவும் சொல்றேன். சுகன்யா லவ்ஸ் யூ ஒன்லி..." செல்வாவின் முதுகில் ஆதரவாக தட்டிக்கொடுத்த சம்பத், அனுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

அருமையான ஜோடி பொருத்தமென தன் மனதுக்குள் எழுந்த எண்ணத்தை அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. 'மே காட் பளஸ் தெம்...' அவன் உதடுகள் முணுமுணுக்க, தனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த காதலர்களை ஏக்கத்துடன் நோக்கியவாறு நின்றிருந்தான் செல்வா.

சுகன்யா... 105

"இப்ப பாக்கி இருக்கறது உங்க வூட்டுப்பிரச்சனைதானா?"

"கொழந்தை பொறக்கட்டும்.. அந்தப் பிராப்ளத்தையும் சால்வ் பண்ணிட மாட்டேன்...? கோமதியை என் தலைமேலே வெச்சிக்கிட்டு நான் தாங்கோ தாங்குன்னு தாங்கறதை பாத்ததும், என் மாமியார் அப்படியே ஐஸ் மாதிரி உருகிப்போயிட்டாங்க. இப்ப என்னை மாதிரி ஒரு மருமவனை இந்த உலகத்துலே எங்கேயும் பாக்க முடியாதுங்கறாங்க."

"கோமதியோட வாந்தியும்... சீனுவோட டைரக்ஷ்ன்தானா?"

"கோமதி, தன் அம்மாளை பாத்ததும், அம்மா கழுத்தைக் கட்டிக்கிட்டு குதிகுதின்னு குதிக்கறா. வாந்தி கீந்தி எல்லாம் மாயமா போயிடிச்சி. இந்த வாந்தி சீன் மட்டும் இன்னைக்கும் எனக்கு ஒரு புரியாத புதிராத்தான் இருக்கு." 



"ஊருக்கெல்லாம் பிலிம் காமிக்கற உனக்கே, கோமதி பிலிம் காமிச்சிட்டா போல இருக்கு?" செல்வா தன் வாய்விட்டுச் சிரித்தான். 


"எது எப்படியிருந்தா என்னடா? என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கா... அதைப்பாத்து என் மாமியார் சந்தோஷமா இருக்காங்க... அவங்க ரெண்டு பேரையும் பாத்து நானும் சந்தோஷமா இருக்கேன்..."

"நீ சொல்றது சரிதான்..."

"செல்வா... என்னைத் தப்பா நினைக்காதேடா... உன் ஸிஸ்டர் மீனாவும் வேலைக்கு போறா... வீட்டை விட்டு வெளியே போனா, அடுத்தவன் கிட்ட பேசித்தானே ஆகணும்?"

"ஆமாம்.."

"ஈகோ பாக்காம, சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி... அயாம் சாரின்னு ஒரே ஒரு வார்த்தையில அவகிட்ட மன்னிப்பு கேளுடா..."

"ப்ச்ச்ச்..."

"அந்த சமயத்துல அவ உன்னை வாரி கொட்டித் திட்டினாலும், பதில் எதுவும் பேசாதே. உனக்கு கிடைச்ச வாழ்க்கையை அவளை மாதிரி ஒரு நல்ல துணையோட சந்தோஷமா எஞ்சாய் பண்ணுடா..."

"ம்ம்ம்.. பேசறேன்டா அவகிட்ட..."

"ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான்... இன்னொரு விஷயம்... தனியா ரூம் பாக்கற எண்ணத்தை விட்டுட்டு... இன்னைக்கே வேண்டாம்.... நாளைக்கு நிதானமா உன் வீட்டுக்குபோய், 'நான் தப்பு பண்ணிட்டேன்னு' அப்பா எதிர்ல ஒரு தரம் தலை குனிஞ்சு நிக்கறதுலே எந்த தப்பும் இல்லேடா. கோழி மிதிச்சு எந்த குஞ்சும் இதுவரைக்கும் செத்தது இல்லே..." 

இதுவரை செல்வா பார்த்தேயிராத வேலாயுதத்தின் இன்னொரு முகம் மெல்ல மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்க... அவன் முகத்தையே செல்வா மவுனமாக, வெறித்துக் கொண்டிருந்தான்.

இன்னைக்கு வரைக்கும் வேலாயுதத்தை எதுக்கும் உதவாத ஒரு குடிகாரப்பயன்னுதானே நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்? இவன் என்னடான்னா, தன்னோட தினசரி வாழ்க்கையில எந்த சிக்கலையும் இழுத்துவிட்டுக்காம, ரொம்பத்திருப்தியா, மகிழ்ச்சியா வாழ்ந்துகிட்டு இருக்கானே?

வெற்று உடம்பில், கோமதியின் பழம் புடவையொன்றை போர்த்திக்கொண்டு, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்து செல்வா மனதுக்குள் வியந்தவனாய் அன்றிரவு முழுவதும் சரியாக தூக்கம் பிடிக்காமல், பாயில் புரண்டு கொண்டிருந்தான். விடியலில் அவனையும் அறியாமல் தூக்கம் விழிகளைத் தழுவ, காலை எட்டுமணி ஆனபின்னும் எழுந்திருக்கவில்லை அவன்.

"மச்சான்.. ஆஃபீஸ் போவலையாடா?" தன்னைத் தட்டி எழுப்பி, கையில் சுடச்சுட வேலாயுதம் கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சத் தொடங்கினான் செல்வா.

"போகணும்டா...?"

"சாயந்திரம் நான் வர லேட்டாகும்... ஒரு சாவியை நீ வெச்சுக்கோ..."

"இல்லே மச்சான்.. என்னோடது சின்னப்பைதானே... நான் ஆஃபிசுக்கே எடுத்திட்டு போயிடறேன்.."

"என் மேல கோவமாடா..."

"உன் மேல எனக்கென்னடா கோவம்? நீ சொன்னமாதிரி நான் வாழ்க்கையிலே தேவையேயில்லாத சில காம்பிளிகேஷன்களை உண்டு பண்ணிகிட்டு இருக்கேன். இந்த சிக்கலை நிதானமா சரி பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.."

"தட்ஸ் த ஸ்ப்ரிட்..." வேலாயுதம் வெள்ளையாக சிரித்தான்.

"ராத்திரி நீ ஏன்டா பொண்டாட்டி புடவையை போத்திக்கிட்டு தூங்கினே?" செல்வா அவன் முகத்தை புன்னகையுடன் நோக்கினான்.

"உனக்கும் கல்யாணம் ஆனாத்தான் இதெல்லாம் புரியும்... "

"விஷயத்தைச் சொல்லுடா..."

"கோமதி என் பக்கத்துல படுத்துக்கலேன்னா எனக்குத் தூக்கமே வராது... ஒடம்பு வாசம் துணியிலே இருக்குல்லே... அவ பொடவையை போத்திக்கிட்டா, அவளே என் கூட படுத்திருக்கறதா ஒரு நெனைப்பு வந்து மஜாவா தூங்கிடுவேன்." வேலாயுதம் கண்ணைச் சிமிட்டி குழந்தையாகச் சிரித்தான்.

* * * * *

"அயாம் சாரிப்பா..." அன்று இரவு வீடு திரும்பிய செல்வா, டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நடராஜனின் எதிரில் அரை நிமிடம் தயங்கி நின்றான்.

"இதை அந்த பொண்ணுகிட்ட சொல்லுடா..."

"மொதல்ல நீ சாப்பிட வாடா..." பிள்ளையைக் கண்ட மல்லிகா பரபரப்பானாள்.

"நான் சாப்பிட்டேன்... நீங்க சாப்பிடுங்கம்மா..." விடுவிடுவென தன் அறையை நோக்கி நடந்தான் செல்வா.

* * * * *

வேலாயுதத்திடம் சொன்னபடி, தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட செல்வா, சுகன்யவிடம் மன்னிப்பு கேட்க மட்டும் மனதுக்குள் இலேசாகத் தயங்கிக்கொண்டிருந்தான். இன்றைக்கு வேண்டாம்; நாளை முதல் வேலையாக அவளிடம் நான் பேசிவிடுகிறேன் என அந்த வாரம் முழுவதும் அவளுக்கு அவன் போன் செய்வதை தள்ளிப் போட்டுக்கொண்டேயிருந்தான்.

தனக்கு பிடிக்காத ஒருவனுடன், தன் காதல் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க முயன்ற சம்பத்துடன், தான் பேச வேண்டாம் என்று சொன்ன பின்னும், சுகன்யா சிரித்து சிரித்து பேசினாள் என்ற எரிச்சலில் செல்வா இருந்து கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில், அலுவலகத்தில் சுகன்யாவைப்பற்றி யாரோ இருவர் தரக்குறைவாக பேசியதைக் கேட்டதன் விளைவால், அவன் தன் மனதுக்குள் கோபத்தில் வெந்து கொண்டிருந்த நேரத்தில், சாவித்திரி அந்த தீயில் எண்ணையை ஊற்றியதும் செல்வா அன்று பற்றி எரிந்தான்.

செல்வா முழுவதுமாக பற்றி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், சுகன்யாவும், சுனிலும், மோட்டர் சைக்கிளில் ஜோடியாக பயணித்து வந்ததும், அவன் சுகன்யாவை வேண்டுமென்றே திமிராக சண்டைக்கு இழுத்தான். பின்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் சுகன்யாவின் மனதை நோக அடித்தான். அவள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தான்.

சுகன்யாவின் பிரிவை அவன் அனுபவிக்கத் தொடங்கியதும், அவள் தன் மேல் வைத்திருந்த அன்பை, நேசத்தை, தீராத காதலை அவன் மெல்ல மெல்ல உணரத்தலைப்பட்டான். தனிமை என்னும் கொடுமை அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. நிழலின் அருமையை அவன் பிரிவு என்னும் வெம்மையில் புரிந்து கொள்ளத் தொடங்கிய போதிலும், மனம் அவளுடன் சமாதானம் செய்து கொள்ள விழைந்த போதிலும், அவளுடன் இயல்பாக பேசத் தயங்கினான் செல்வா.

தான் சுகன்யாவிடம் இயல்பாக பேச முயற்சித்தாலும், அவள் தன்னிடம் மீண்டும் பழைய நேசத்துடன் பேசுவாளா என்ற அச்சம் அவன் மனதுக்குள் எப்போதும் இருந்தது. இந்த அச்சத்தினாலேயே அவன் அவளுடன் உடனடியாக பேச தயங்கினான்.

வார முடிவில், செல்வா தன்னை, சுகன்யாவிடம் பேசுவதற்கு மனதளவில் தயார் செய்து கொண்டபின்னும், குற்றமுள்ள அவனுடைய நெஞ்சு எப்போதும் குறுகுறுத்துக் கொண்டேயிருந்ததால்தான், சுகன்யாவுக்கு நேராக போன் செய்யாமல், அனுராதாவை கூப்பிட்டு, சுகன்யாவின் நலம் விசாரித்தான்.

காலம் யாருக்காவும் நிற்கப்போவதில்லை. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகவும் மாறிவிட்டன. இந்த இரண்டு மாதங்களில் செல்வாவின் போக்கே முற்றிலும் மாறிவிட்டிருந்தது. தன் உடைகளை, புத்தகங்களை, மற்ற பொருட்களை சிறிது சிறிதாக, அவன் தன் வீட்டின் மாடியறைக்கு கொண்டு சென்றுவிட்டான். சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே இறங்கி வருவதை தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

தன் தாயுடன், தன் தந்தையுடன், மீனாவுடன், தன் மிக நெருங்கிய தோழன் சீனுவுடன், இவர்கள் மட்டுமல்லாமல், வேறு எவருடனும்கூட, தேவைக்குமேல் ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசுவதை தவிர்த்து, யார் அவனிடம் பேசினாலும், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்ல ஆரம்பித்தான்.

தன் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, தேவையில்லாமல் தன் தலையை நிமிர்த்துவதேயில்லை என்ற முடிவுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டான். 

சுகன்யா தில்லிக்குப் போய் முழுசா மூணு மாசம் முடிஞ்சு போச்சு. இன்னும் ஒருவாரத்துல சென்னைக்கு திரும்பிடுவா. அவ திரும்பி வந்ததும், நேருக்கு நேராக அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கப் போறேன். அவளோட மனசைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கண்டிப்பா அவ என்னை மன்னிச்சிடுவா. தன் செல்லில் சிரிக்கும் சுகன்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

கேன்டீனில் தான் வழக்கமாக எப்போதும் உட்க்காரும் மூலையில் தனியாக விழிகளை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் செல்வா. அவன் எதிரிலிருந்த தேனீர் ஆறிக்கொண்டிருந்தது.

"ஹாய் செல்வா எப்படியிருகே?"

தனக்கெதிரிலிருந்து உற்சாகமான பெண் குரல் ஒன்று வந்ததும், நனவுலகத்திற்கு வந்தான் செல்வா. சுகன்யாவின் தோழி வித்யா கையில் டீ கோப்பையுடன் அவன் டேபிளுக்கு எதிரில் நின்றிருந்தாள்.

"பைன்.. உக்காருங்க.. உக்காருங்க.. நீங்க எப்படியிருக்கீங்க மேடம்...? அப்புறம் என்ன குழந்தை வீட்டுக்கு வந்திருக்கு?"

"ஆண் குழந்தைதான்... செல்வா.." வித்யாவின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

"குட்.. குட். சந்தோஷம்... நல்ல ட்ரீட் குடுக்கப்போறீங்கன்னு சொல்லுங்க..."

"நீயும், சுகன்யாவும் ஒண்ணா வீட்டுக்கு வாங்க.. அப்பத்தான் ட்ரீட்.." வித்யா முறுவலித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்... டூயூட்டிலே எப்ப ஜாய்ன் பண்ணீங்க?"

"இன்னைக்குத்தான்..."

"உங்க செக்ஷன்ல இப்ப ஈ-கவர்னர்ன்ஸ் சாஃப்ட்வேர் அப்டேஷன் நடந்துகிட்டிருக்கு... அதனால வேலை கொஞ்சம் அதிகமாயிருக்கு. கோபலன் சார்கிட்ட கேட்டு, லைட் சீட்டா வேற எங்கயாவது வாங்கிக்கோங்க..." செல்வா இலசாக முறுவலித்தான்.

"சாவித்ரி போனதுக்கு அப்பறம் எங்க செக்ஷ்ன்ல்ல தேவையேயில்லாத பிரச்சனைகள் கொறைஞ்சுருக்குன்னு எனக்குத் தோணுது..."

"ரியலி நைஸ் டு ஹியர் தட்.."

"செக்ஷ்ன்ல இப்போதைக்கு, சுகன்யா பாத்துக்கிட்டு இருந்த சீட்டு சுனில்ன்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கானே,. அவன் கிட்ட இருக்கறதாலே, எனக்கொண்ணும் அவ்வளவா கஷ்டம் இருக்காதுன்னு தோணுது. ஃபர்தர் தட் சுனில் சீம்ஸ் டு பி சின்சியர்..."

"யா... ஐ நோ... ஐ நோ... ஹீஸ் அன் இன்டெலிஜண்ட் கய்.." செல்வா சுனிலை மனசார பாராட்டினான்.

"தில்லியிலேருந்து ட்ரெய்னிங் முடிஞ்சு திரும்பி வர்ற அனுராதாவையும் என் செக்ஷ்ன்ல்லத்தான் போஸ்ட் பண்ணப்போறாங்க... அவளும் நல்லா வொர்க் பண்றவ... " டீயை ரசித்து குடித்துக்கொண்டிருந்தாள் வித்யா..

"அப்படியா... " செல்வாவின் முகத்தில் சட்டென எழுந்த மெல்லிய அதிர்ச்சியை அவனால் மறைத்து கொள்ள முடியவில்லை.

"ஆமாம்.."

"சுகன்யாவை, கோபலன் சார் எங்கே போஸ்ட் பண்ணப்போறார்?" மெல்லியகுரலில் வினவினான் செல்வா.

"நிஜமாவே உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாதா செல்வா?" வித்யா தன் ஈர உதடுகளை ஹேங்கியால் துடைத்துக் கொண்டாள்.

"இல்லே மேடம்.." செல்வா தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

"ஹேய்... லுக் ஹியர்... சுகன்யா உங்கிட்டே எதுவும் சொல்லலியா?"

"....."

"ஆமாம் செல்வா... தெரியாமத்தான் கேக்கறேன். அப்படி என்ன தீராதப்பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே? சுகன்யா எங்கே இருக்கா? அவ எங்கே இருக்கப்போறா? எதுவுமே உனக்குத் தெரியலேங்கறே? இந்த லட்சணத்துல இருக்கு உங்க ரெண்டு பேரோட காதல்... திஸ் ஈஸ் ரியலி வெரி பேட்..."

"மேடம்... ப்ளீஸ்... இப்ப என்னை எதுவும் கேக்காதீங்க..." செல்வாவின் குரல் குளறியது.

"நீ எதுவும் சொல்லவேண்டாம்பா... சுகன்யாவையே நான் கேட்டுக்கிறேன்.."

"மேடம்.. அவளுக்கு போஸ்டிங் பாண்டிச்சேரிலே ஆயிடலியே?"

"இல்லே... லாஸ்ட் வீக்கே சுகன்யா, தனக்கு போஸ்டிங் தில்லியிலேத்தான் வேணும்ன்னு அப்ளை பண்ணியிருந்திருக்கா. இன்னைக்கு கோபலன் அவளோட டெல்லி போஸ்டிங்கை அப்ரூவ் பண்ணிட்டார். நெக்ஸ்ட் ஒன் இயர் அவ நார்த்லேத்தான் இருந்தாகணும்."

"நிஜமாவா மேடம்..." செல்வாவின் இடது கை விரல்கள் இலேசாக உதறிக்கொண்டிருந்தன.

"அவ அப்ளிகேஷனை ப்ராஸஸ் பண்ணி பைல்லே புட் அப் பண்ணதே நான்தான். ஆர்டர்சை நெட்ல அப்லோட் பண்றதுக்காக உனக்கு காப்பி மார்க் பண்ணியிருந்தேனே, அதைக்கூட நீ பாக்கலியா?"

வித்யாவுக்கு பதிலேதும் சொல்லாமல், செல்வா ஒரு நடைபிணமாக எழுந்து தன் அறையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான். 



அடுத்த ஒரு வருஷத்துக்கு தில்லியிலேயே இருக்கறேன்னு சுகன்யாவே வேண்டி விரும்பி தனக்கு, போஸ்டிங் வாங்கிக்கிட்டான்னா, அவளுக்கு என் மூஞ்சை பாக்கறதுக்கு இஷ்டமில்லேன்னுதானே அர்த்தம்?

யோசிக்க யோசிக்க செல்வாவுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. மனதிலிருக்கும் பரபரப்பு அடங்கட்டும் என விழிகளை மூடி ஓரிரு நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ஏதோ முடிவுக்கு வந்தவனாக, இரண்டு வாரத்திற்கு லீவு அப்ளிகேஷனை எழுதி கோபாலனின் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

திரும்ப சீட்டுக்கு வந்த செல்வா, வாட்டர் ஜக்கிலிருந்த நீரை வேக வேகமாக பருகினான். குடித்த வேகத்தில் உதடுகள் நனைந்து, குளிர்ந்த நீர் அவன் முகவாயில் ஒழுகி, மேல் சட்டை நனைந்தது. அறைக்குள்ளாகவே மேலும் கீழுமாக மெல்ல நடக்க ஆரம்பித்ததும், உடலின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது போலிருந்தது அவனுக்கு. இடது மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான். மணி நான்கரைதான் ஆகியிருந்தது. இன்னும் முழுசா ஒரு மணி நேரத்தை ஓட்டியாகணும்.

தன் எதிரில் டேபிளின் மேல் குவிந்திருந்த பைல்களை ஒவ்வொன்றாகப் பிரித்து, அவைகளை படிக்காமலேயே, கண்ணை மூடிக்கொண்டு, கையெழுத்திட்டு தூக்கி எறிந்தான். இண்டர்காம் அடித்தது. கோபாலன் அவனை தன் ரூமுக்கு வருமாறு அழைத்தார். எப்போதும் லிஃப்டை உபயோகிக்கும் அவன் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி அவர் அறையை அடைந்தான்.

"குட் ஈவீனிங் சார்..."

"வாப்பா செல்வா... உக்காரு... எப்படியிருக்கே?"

சட்டென தன் முகத்தில் இருந்த கண்ணாடியை கழட்டி மேஜையின் மேல் எறிந்தார் அவர். சேரிலிருந்து எழுந்து நின்றவர், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். சீட்டுக்குப் பின்னால் முக்காலியின் மீதிருந்த பிளாஸ்கை திறந்து இரு கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை ஊற்றி, ஒரு கப்பை அவன் பக்கம் நீட்டினார்.

"தேங்க் யூ சார்..."

சந்தோஷமா இருந்தலும் கண்ணாடியை கழட்டி எறியறான். கோபம் வந்தாலும் இதைத்தான் பண்ணறான். இப்ப இவன் எந்த மூடுல இருக்கான்னு தெரியலியே? செல்வா அவர் முகத்தை, அவர் கண்களை படிக்க முயற்சி செய்து தோற்றுப்போனான்.

கோபாலன் நல்ல மனுஷன்தான்... ஆனா சிலநேரத்துல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எதிர்ல இருக்கறவன் உயிரை உண்டு இல்லேன்னு எடுப்பான். கூப்பிட்டா, எதுக்கு கூப்பிட்டேன்னு சட்டுன்னு விஷயத்தை சொல்ல மாட்டான்.

இந்த ஆஃபிசுல நடக்கறதெல்லாம் இவனுக்குத் தெரியும் ? ஆனா ஒன்னுமே தெரியாத மாதிரி அமுக்கமாக இருப்பான். அடுத்தவனை வெறுப்பேத்தி வெறுப்பத்தி, அவன் மனசுல இருக்கறதை அவன் வாயாலேயே சொல்ல வெப்பான். செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவருடைய செயல்கள் சற்றே எரிச்சலை ஊட்டின.

கோபலான் காஃபியை குடிக்க ஆரம்பிக்கும் வரை பொறுமையாக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வா. என்ன? எனக்கு இப்ப லீவு குடுக்க முடியாதுன்னு சொல்லப்போறானா? சொல்லட்டுமே... சொல்ல நினைக்கறதை சட்டுன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?

வீட்டுக்குப்போய் மெடிகல் லீவ் அனுப்பிட்டு போறேன். மிஞ்சிப்போனா பாண்டிச்சேரிக்கு போடாம்பான். இல்லை பெங்களூர் ஆஃபிசுக்கு போடாம்பான். நானே இந்த ஊரை விட்டே எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போயிடணும்ன்னுதானே நினைக்கிறேன்? சுகன்யா இல்லாத ஊருல எனக்கென்ன வேலை...?

இது என்ன? மூச்சுக்கு முன்னூறு தரம் சுகன்யா... சுகன்யா... சுகன்யா...?. தூரத்துல இருந்துகிட்டும் என் உயிரை ஏன் இப்படி வறுத்து எடுக்கிறா? செல்வா தன் முகவாயை அழுத்தமாக ஒரு முறை வருடிக்கொண்டு, தன் எதிரில் இருந்த காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

சை... இவனுக்கு சக்கரை வியாதின்னா... நானும் சக்கரையேயில்லாத காஃபியை குடிக்கணும்ன்னு எதாவது சட்டமா? இல்லே எனக்கென்ன தலையெழுத்தா? விருட்டென அவன் மனதில் மெலிதான ஒரு எரிச்சல் எழுந்தது. காபியை குடிக்காமல் அப்படியே வைத்துவிடலாமா என அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

செல்வா... உன் மனசோட அலைச்சலை கட்டுப்படுத்த முயற்சி பண்ணுடா. தேவையில்லாம மனசுல கிளம்பற எரிச்சல் தன்னால நின்னுடும். மனதில் எழுந்த எரிச்சலை வலுக்கட்டாயமாக அவன் துடைத்து எறிவதாக நினைத்தான். முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்.

இதுதாண்டா வாழ்க்கை. ஒருத்தனுக்கு எப்பவும் தித்திப்பே கிடைக்காது. அப்பப்ப அவன் கசப்பையும் சாப்பிட்டுத்தான் ஆகணும். சுத்தமாக சக்கரையே இல்லாத அந்த காஃபியும் இப்போது தொண்டைக்கும் மனதுக்கும் மிகவும் இதமாக இருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். 


"டேட்டா அப்டேஷன்லாம் எப்படி போயிகிட்டு இருக்கு? பிளான் பண்ணபடி எல்லாம் முடிஞ்சிடுமில்லையா?"

"முடிச்சிடறேன் சார்... என் செக்ஷ்ன்லேயும் ரெண்டு வேகன்சி இருக்கு.. ஒரு ஆள் குடுத்தீங்கன்னா... டார்கெட்டை நெக்ஸ்ட் மன்த் எண்டுக்கு முன்னாடியே அச்சீவ் பண்ணிடலாம்."

"குட்... மூணு பேரு ட்ரெயினிங் முடிஞ்சு வர்றாங்க... ஆனா அனுராதாவுக்கு சுகன்யா பார்த்துக்கிட்டு இருந்த சீட்டை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். பாண்டிச்சேரிக்கு அனுவோட ப்ளேஸ்ல ஒரு ஆளை போஸ்ட் பண்ணணும். பெங்களூரு பையன் ஒருத்தன் வர்றானே, அவனை உனக்குத் தர்றேன். ஈஸ் தட் ஓ.கே?"

"தேங்க் யூ சார்..."

"ஆமாம்... தலைக்கு மேல வேலை இருக்கும் போது, தீடீர்ன்னு லீவுலே போறேன்னு ஏன் என்னை மிரட்டறே?" கோபாலன் செல்வாவின் கண்களை நேராகப்பார்த்தார். அவன் அவருடைய கூரியப்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.

"கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது சார்."

"உடம்புக்கா... இல்லே மனசுக்கா...?" கோபாலன் உரக்க சிரித்தார்.

"...."

"செக்ஷ்ன்லே எதாவது பிரச்சனையா?"

"நோ.. நோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..." தலையை சட்டென இடவலமாக ஆட்டினான் அவன்.

"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு... அயாம் ஆல்வேஸ் ரெடி டு ஹெல்ப் யூ..." மெல்ல சிரித்தார் கோபாலன்.

"யெஸ் சார்... ஐ நோ இட் சார்..."

"உன்னை நான் மூணு மாசமா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். சம்திங்க் ஈஸ் மிஸ்ஸிங்... உன் வயசுல எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க... என்ன பிராப்ளம் உனக்கு... சொன்னாத்தானே தெரியும்?"

"சார்... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும் எனக்கென்ன பிரச்சனைன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?" செல்வாவின் தலை இன்னும் குனிந்தே இருந்தது.

"செல்வா... என்னத்தப்பா நினைக்காதே... சுகன்யாவோட டில்லி போஸ்டிங் அவளுடைய முழு விருப்பத்தோட, அவகிட்ட நான் பர்சனலா பேசினதுக்கு அப்புறம் நடந்த ஒண்ணு. மொதல்லே அனுவைத்தான் அங்கே ரிடெய்ன் பண்றதா இருந்தேன்."

"சார்..."

"அனுவுக்கு அடுத்த மாச ஆரம்பத்துல கல்யாணம் பிக்ஸ் ஆகுதாம். அந்த பையனும் சென்னையிலதான் வேலை செய்யறானாம். அய்தர் சுகன்யா ஆர் அனு இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர்தான் இப்போதைக்கு சென்னைக்கு வரமுடியும். சுகன்யாவும் மேல ஏதோ படிக்கப்போறேன்னு சொன்னா..."

"சார்... உங்களை நான் கொறை சொல்லலே. அனு ஈஸ் ஒன் ஆஃப் மை வெரி குட் ஃப்ரெண்ட்ஸ்... அவளுக்கு கல்யாணம் ஆகி, அவ தன் ஸ்பௌசோட சென்னையில இருக்கறதுல எனக்கும் சந்தோஷம்தான்."

"யெஸ்..."

"ஆனா... சுகன்யா தில்லியிலே படிக்கப்போறேன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். அவ சென்னைக்கு திரும்பி வந்தா இந்த ஆஃபிசுலே என் மூஞ்சை பாத்தே ஆகணும். அவளுக்கு என் முகத்தைப்பாக்க பிடிக்கலே... இதுதான் சார் உண்மை..." செல்வா விருட்டென தன் சீட்டிலிருந்து எழுந்தான்.

"செல்வா ப்ளீஸ்... ஒரு நிமிஷம் உக்காருப்பா. இப்பல்லாம் நீ சட்டு சட்டுன்னு எரிச்சல் படறே; சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே. உங்களோட பர்சனல் விஷயத்துல தலையிடறேன்னு நினைக்காதே... நீ எதை எதையோ உன் மனசுக்குள்ளே போட்டு வீணா கொழம்பிகிட்டு இருக்கே... உன் மனசை மட்டுமில்லே; உன் லவ்வரோட மனசையும் புண்ணாக்கிட்டே....!?"

"....."



"மை டியர் யங் மேன்... நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ... சுகன்யா ஈஸ் ரியலி எ ஜெம்... ஐ நோ ஹெர் ஃப்ரெட்டி வெல்... யூ ஆர் ஃபார்சுனேட்... ஷி ஸ்டில் லவ்ஸ் யூ வெரி வெரி மச்... நான் உனக்கு பதினைஞ்சு நாள் லீவு குடுக்கறேன்... இல்லே டெம்பரரி ட்யூட்டியிலே தில்லிக்கு அனுப்பறேன். வொய் டோண்ட் யூ கோ அண்ட் மீட் யுவர் லேடி தேர்?" கோபாலன் தன் கண்களை குறும்பாகச் சிமிட்டினார்.

"சார்.. என்ன சொல்றீங்க நீங்க..."

"ஆல் த வெரி பெஸ்ட்... இதை போற வழியிலே என் பீ.ஏ. கிட்ட குடுத்துடு... "

கோபாலன் டேபிளின் மேல் கிடந்த அவனுடைய விடுமுறை விண்ணப்பத்தில் சேங்ஷண்ட் என எழுதி அதன் கீழ் தன் கையெழுத்தை கிறுக்கி அவனிடமே திருப்பிக் கொடுத்தார். கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டார். அடுத்த பைலை பிரித்து அதில் மூழ்க ஆரம்பித்தார். இதற்கு மேல் அவர் தன்னிடம் எதுவும் பேசமாட்டார் என்பது செல்வாவுக்கு புரிந்தது.

"தேங்க் யூ சார்..." 



சுகன்யா... 104

உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத்தொலைடா...'

நடராஜன் கோபத்தில் செல்வாவை நோக்கிக் கூவியதும், ரோஷத்துடன் கையில் கிடைத்த நாலு பேண்டையும், நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக் கொண்டு, வீட்டு வாசலில் தன் கையை இறுகப்பிடித்து தடுத்து நிறுத்திய தங்கை மீனாவின் பிடியையும் விருட்டென உதறிவிட்டு, தெருக்கோடியை அடைந்த செல்வா அதற்கு மேல் எங்கு போவது என புரியாமல் விழித்தான்.

வயிறு கபகபவென பசியால் எரிந்து கொண்டிருந்தது. சாப்பாடு தயாராக இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும் என சொல்லிய சுந்தரம் அய்யர் அவனைப்பார்த்து இதமாக சிரித்தார். சூடாக ஒரு காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்ததும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க, மேற்கொண்டு என்ன செய்வதென நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான் செல்வா.

பெரிய புடுங்கல் மாதிரி வீட்டை விட்டு கிளம்பிட்டே. சொந்த வீட்டை விட்டா, உரிமையா எந்த நேரத்துலேயும் உள்ள நுழையறதுக்கு இருக்கற இன்னொரு இடம் சீனுவோட வீடுதான். என் விஷயத்துல அனாவசியமா தலையிட வேணாம்ன்னு அவனோடவும் வம்பிழுத்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே.



இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர்கிட்ட மரியாதையா பேசுடான்னு மீனா நேத்துதான் நோட்டிஸ் விட்டா; வெக்கத்தை விட்டுட்டு என்னடா மாப்ளேன்னு சீனு வீட்டு மாடியிலே போய் ஒரு மாசம் வேணாலும் படுத்துக்கலாம். ஆனா அங்கப் போனது நடராஜ முதலியாருக்கு தெரிஞ்சா, அடியே மல்லிகா, உன் ஆசைப்புள்ளை நம்ம சம்பந்தி வீட்டுக்கு போய் என் மானத்தை வாங்கறான்டீன்னு எக்கச்சக்கத்துக்கு அம்மாகிட்ட எகிறி எகிறி குதிப்பார். இருக்கற பிரச்சனை போதாதா?

லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கலாமா? இந்த ஏரியாவுல நாள் ஒண்ணுக்கு, சாதாரண அறைக்கே குறைஞ்சது ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு நெத்தியில பட்டை தீட்டி கழுத்துல கொட்டை கட்டிடுவானுங்க. செல்வாவின் மனது வரவு செலவு கணக்கு போட ஆரம்பித்தது.

பணம் போறது பெரிசு இல்லே; இந்த ஏரியாவுலே தெரிஞ்சவங்க யார் கண்ணுலயாவது பட்டுட்டா ஏன்டா இப்படீன்னு உயிரை வாங்குவானுங்க; அவனவன் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே தொண்டைத்தண்ணி வத்திப்போயிடும். மனம் போன போக்கில் செல்லை எடுத்து நோண்டினான் செல்வா.

வேலாயுதம்... நம்ப வேலாயுதத்தைப்போய் பாத்தா என்ன? அவனுக்கு இருக்கற கான்டாக்ட்ஸுக்கு ரெண்டு நாள்லே அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர் ஏரியாவிலேயே சீப்பா ஒரு ரூம் பாத்துக் குடுத்துடுவான். மனதுக்குள் ஒரு முடிவுடன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான்.

* * * *

"வாடா மச்சி.. வா... வா... மழை கிழை வந்துடப் போவுதுடா.."

முகத்தில் நிஜமான சந்தோஷத்துடன், பொய்யாக வானத்தைப்பார்த்துவிட்டு, உற்சாகமாக கூவினான் வேலாயுதம். ஃபிரிஜ்ஜ்லிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினான். செல்வாவின் தோளிலிருந்த பையைக்கண்டதும், சற்றே வியப்புடன் ஏற இறங்க அவனைப்பார்த்தாலும், அதைப்பற்றி உடனடியாக அவன் எதுவும் கேட்கவில்லை.

"தேங்க்ஸ்டா.. பேனைக் கொஞ்சம் வேகமாக்குடா வேலு..."

சோஃபாவில் சரிந்து வசதியாக உட்கார்ந்துகொண்ட செல்வா சோம்பலாக முனகினான். ஹாலை சுற்றி கண்களை சுழல விட்டான். வீடே நீட் அண்ட் க்ளீனாக எல்லாமே அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. ஒரு பொறுப்பான பெண்ணின் கைவண்ணத்தில் வீடு பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. கிச்சனிலிருந்து வெங்காயம், தக்காளி வதங்கும் வாசனை வந்து கொண்டிருந்தது.

"எப்ப மச்சி கல்யாண சாப்பாடு போடப்போறே?" வேலாயுதம் இளித்தான்.

"எனக்கு கல்யாணமும் இல்லே; உனக்கு கல்யாண சாப்பாடும் இல்லே..." தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியை வெறிக்க ஆரம்பித்தான் செல்வா.

"என்னா மச்சான்.. அபசகுனமா பேசறே?" வேலு அவன் கழுத்தை கட்டிக்கொண்டான்.

"நான் நேத்து காத்தால சாப்பிட்டதுதான்டா... ரொம்ப பசிக்குது... சாப்பிடறதுக்கு என்னடா இருக்கு? செல்வாவின் குரல் கலக்கமாக எழுந்தது.

"என்னடா பேசறே மச்சான்... வொயிட் ரைஸ் ரெடியாருக்குடா... அஞ்சு நிமிஷத்துல கத்திரிக்காய் சாம்பார் கொதிச்சிடும்.. மவராசனா சாப்பிடுறா..." செல்வாவின் பேச்சைக்கேட்டு ஒரு வினாடி விக்கித்துப்போன வேலாயுதம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், கிச்சனை நோக்கி ஓடினான்.

கோமதியோட சத்தத்தையே காணோமே? செல்வா மனதில் யோசனையுடன் எழுந்து வேலுவின் பின்னால் நடக்க ஆரம்பித்தான். வலது புறம் திறந்திருந்த பெட்ரூமில் அவன் பார்வை செல்ல, கட்டிலின் நடுவில் இளம் சிவப்பு நிற சேலையொன்று நீளக்கொடியாக கிடந்தது. கோமதியினுடையதாகத்தான் இருக்கவேண்டும். அவன் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டான் வேலு.

"மச்சான்.. கோமதி அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கடா... வர்றதுக்கு ஒரு பத்து நாளாகும். உன் தலையெழுத்து நீ என் கை சமையலைத்தான் சாப்பிட்டுத் தொலைக்கணும்..."

செல்வா மொகமே சரியில்லே. ஏதோ பிரச்சனையோட வந்திருக்கான். சாப்பிட்டு முடிக்கட்டும்... அப்புறமா நிதானமா என்ன ஏதுன்னு விசாரிக்கலாம். மனதில் எண்ணங்கள் ஓட வெள்ளையாகச் சிரித்துக் கொண்டே சாம்பாருக்கு தாளித்துக் கொட்டிய வேலாயுதத்தின் கன்னங்களில் சதை ஏறியிருந்தது. மெலிதாக தொப்பையும் விழ ஆரம்பித்திருந்தது.

"ஆளே பளபளன்னு இருக்கேடா... தொப்பை விழுது... கோமதி கை சாப்பாடு உன் ஒடம்புக்கு நல்லா செட்டாயிட்டாப்ல இருக்கு..." செல்வா சிரித்தான்.

"நம்பாளு சூப்பரா சமைப்பா மச்சான். கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனி வாட்டி உன்னைக் வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டேன்? நீதான் வரவேயில்லை. பத்து நாள் முன்னாடி கூட கோமதி உன்னை சுகன்யா கூட மார்கெட்ல பாத்தாளாம்."

செல்வா அவன் முகத்தை நேராக பார்ப்பதை தவிர்த்தான்.

"செல்வா... செல்வாங்கறீங்க... நல்ல ஃப்ரெண்டுன்னு வேற சொல்றீங்க... நம்ம மேரேஜ்க்கு அப்புறம் ஒரு தபா கூட நம்ம வீட்டுக்கு நீ வல்லியேன்னு கோம்ஸ் கூட ரெண்டு மூணு தரம் ஃபீல் பண்ணிருக்காடா..."

சுகன்யாவின் பேரை வேலாயுதம் சொன்னதும் செல்வாவின் முகம் சுருங்க, அவன் முகம் சுருங்கியதை, இவன் கண்கள் தவறாமல் படித்துக் கொண்டன.

சர்தான்... நம்ப மச்சான் செல்வா, சுகன்யா கூட தகறாரு பண்ணிக்கிட்டு வந்திருக்கான். பிகரு வெச்சிருக்கறவன் அத்தினி பேரும் தவறமா அட்சிக்கிறானுங்கப்பா. லவ் பண்றவனை ராடு வுடாத பொண்ணுங்களே இந்த ஊர்லேயே கிடையாதா? தானும் தன் மனைவி கோமதியும் காதலர்களாக இருந்த காலத்தில் வாரத்துக்கொரு முறை அடித்து பிடித்துக் கொண்டதெல்லாம் வேலாயுதத்தின் நினைவுக்கு வர அவன் சிரிக்க ஆரம்பித்தான்.

"வெல்லாயுதம்.. ஏன்டா சிரிக்கறே?"

"நீ பசியில இருக்கும்போது நான் எது சொன்னாலும் உனக்கு கோவம்தான் வரும். மொதல்லே சாப்பிடு மச்சான். அதான் பொட்டி படுக்கையோட வந்திட்டீல்லா? பொறுமையா சொல்றேன்..."

“ஹேய்... நக்கலா.. வாய் மேலேயே போடுவேன்..” செல்வாவின் முகம் சுருங்கியது.

“கோச்சிக்காதே மச்சான்...”

இரண்டு தட்டுகளில் சாதத்தை அள்ளி போட்டான். சாம்பாரை தளர தளர ஊற்றினான். வெந்தய வாசனை மூக்கைத் துளைத்தது. தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாயை ஜாடியிலிருந்து தாராளமாக வழித்து போட்டான் வேலு. பசி வேகத்தில் மொத்தமாக பரிமாறுவதற்கு முன்னரே அப்பளத்தை எடுத்து கடிக்க ஆரம்பித்தான் செல்வா. கையில் தட்டு வந்ததும் வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"சாம்பார் சூப்பரா இருக்குடா வேலு..." நண்பனை மனமார பாராட்டியவன் இன்னொரு கரண்டி சாம்பாரை எடுத்து தட்டில் ஊற்றிக் கொண்டான்.

"கோமதிகிட்ட கத்துக்கிட்டேன்டா..." வேலாயுதம் தன் பெண்டாட்டி புராணத்தை அன்று முழுவதும் நிறுத்தவேயில்லை. 

“இந்தாடா”

இரும்பு பீரோவிலிருந்து, சுத்தமாக துவைத்து வைக்கப்பட்டிருந்த லுங்கிகளில் ஒன்றை எடுத்து செல்வாவிடம் நீட்டிய வேலாயுதம் ஏர்கண்டீஷனரை ஓடவிட்டான். டபுள் காட்டில் சுவரோரமாக உருண்டு படுத்தவன், அவனையும் படுத்துக்கொள்ள சொன்னான்.

“வேணாம்டா... புருஷன் பொண்டாட்டி படுக்கற கட்டிலு... ஒரு பாயைக்குடு; இப்படியே நான் தரையில படுத்துக்கிறேன்.”

செல்வா கட்டிலில் படுக்கத் தயங்கினான். சுவரில் பதித்திருந்த ஸ்லேபில் வரிசைய் வரிசையாக புடவை மடிப்புகள் வீற்றிருந்தன. பிளாஸ்டிக் கயிற்றுக்கொடியில், ஹேங்கரில் மாட்டப்பட்ட ஒரு நைட்டியும், சல்வார் கமீசும் தொங்கிக் கொண்டிருந்தன. பாவாடை வரிசைகள், ஜாக்கெட்டுகள், அறையில் பெண்மையின் ஆதிக்கம் தூக்கலாக இருந்தது.

செல்வாவின் கையிலிருந்த லுங்கியிலிருந்து மெல்லிய பவுடர் வாசம் வந்து கொண்டிருந்தது.

"கோமதி... துணியெல்லாம் தொவைச்சு அதுமேல லேசா பவுடரை தூவிடுவா... வாசனையா இருக்குல்லே?" வேலாயுதத்தின் முகம் பெண்டாட்டியின் பெருமையைப் பேசிய போது பூவாய் மலர்ந்தது.

காதலிச்சு கட்டிக்கிட்டவளை ரொம்பவே தலை மேல தூக்கி வெச்சிக்கிறான். என் சுகன்யாவுக்கு முன்னாடி, இந்த கோமதியெல்லாம் நிக்க முடியுமா? செல்வாவுக்கு அவனுள் காரணமேயில்லாமல் ஏதோ புகைந்தது.

“மச்சான்... நடுகூடத்துல உக்கார வெச்சு நாளு கிழமையிலே எத்தனை தரம் உங்கம்மா எனக்கு சோறு போட்டு இருக்காங்க. வித்தியாசம் பாக்காதடா. உன் வூடு மாதிரி நெனைச்சுக்கோடா. ஃப்ரியா இரு மச்சான்...” வேலாயுதத்தின் குரலில் எல்லையில்லாத நட்பு வழிந்து ஓடியது.

“தேங்க்ஸ்டா...”

“நமக்குள்ள என்னடா மண்ணாங்கட்டி தேங்சு...?”

“ம்ம்ம்ம்...” செல்வாவும் படுத்தான். போம் மெத்தை அமுங்கி அவன் உடலை உள்வாங்கிக்கொண்டது.

“வீட்டுல கோச்சிக்கிட்டு வந்திட்டியாடா? உங்க நிச்சயதார்த்தம்தான் நல்லபடியா முடிஞ்சுப்போச்சே? இப்ப எதுனா புதுசா பிரச்சனையா? நீ வீட்டை விட்டு வந்தது உன் ஆளுக்குத் தெரியுமா?”

“ப்ச்ச்ச்... சுகன்யாவை நான் தலை முழுகி ஒரு வாரம் ஆச்சு... அவ இப்ப டில்லியிலே இருக்கா...”

“டேய்... நானும் பாக்கறேன்... நாக்குல நரம்புல்லாம பேசிகினே போறே? ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா சொல்றேன். நீ பேசறதெல்லாம் சுத்தமா நல்லால்லே. மப்புல இருக்கறவன் கூட இப்டீல்லாம் பேசமாட்டான்டா.” வேலு சட்டென அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தான்.

“எனக்கு ஒரு ரூம் வேணும்டா.” செல்வா முனகினான்.

“நான் உனக்கு ரூம் பாத்துக் குடுத்தேன்னு சீனுவுக்கு தெரிஞ்சா அவன் என்னை செருப்பால அடிப்பான்...”

“வேலு.. இப்போதைக்கு இங்க நான் இருக்கறது யாருக்கும் தெரியவேணாம்...”

“தண்ணியில உக்காந்துக்கிட்டு ஒருத்தன் குசு வுட்டானாம். அந்தக் கதையா இருக்குதுடா நீ பேசறது. இன்னிக்கு ஈவினிங்குள்ள தல உன்னைத் தேடிகிட்டு இங்க வந்து என் தலையை உருட்டலே, நீ என் பேரை மாத்தி வெய்டா...”

“என் விஷயத்துல தலையிடாதேன்னு நேத்தே அவனுக்கு வார்னிங் குடுத்துட்டேன். என்னைத் தேடிக்கிட்டு எவனும் இங்கே வரமாட்டான்.”

ஸ்ப்ளிட் ஏஸி அந்த சின்ன அறையில், சத்தமில்லாமல், வெகு அருமையாக வேலை செய்து கொண்டிருந்தது. செல்வா போர்வையை எடுத்து போத்திக்கொண்டான்.

“சீனுவும், நீயும், உங்க சொந்த வாழ்க்கையிலே மாமன், மச்சான் ஆவப்போறிங்க. உங்க வெவகாரத்துல நான் குறுக்கே வர்லே. நீ என் வூட்டுல பத்து நாளு இரு; பத்து மாசம் இரு; ஆனா உள்ளூர்ல அப்பன், ஆத்தா தங்கச்சின்னு எல்லாரும் இருக்கும் போது தனி ரூம் பாக்கற வேலைல்லாம் நல்லதுக்கு இல்லே. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்...!” வேலாயுதத்தின் முகம் கல்லாக மாறியிருந்தது. 



“வேலு... ஏ.சீ. ஃபிரிஜ்... வாஷிங் மெஷின்.. அது இதுன்னு உன் வீடே ஏகத்துக்கு தடபுலா இருக்கே? மொத்தமா இவ்வளவு பைசா ஏதுடா?” வேலாயுதம் போட்டுக்குடுத்த காஃபியை குடித்துக் கொண்டே செல்வா சிரித்தான்.

“ம்ம்ம்... புது பைக்கை வுட்டுட்டியேடா? எல்லாம் மாமியார் வாங்கிக்குடுத்தது மச்சான். அவங்க சேவிங்ஸ் மொத்தத்தையும் எனக்கு மொய் எழுதிட்டாங்க...” அவனும் இவனுடன் சேர்ந்து சிரித்தான்.

“கோவில்ல உன் மேரேஜ்ன்னைக்கு, நீ நல்லாயிருப்பியாடான்னு, மண்ணை வாரி வாரித் தூத்தினாங்க..”

“அது பழைய கதை மச்சான். லேடீஸ் மனசை, நம்ம ஈகோவால நாம புரிஞ்சிக்கறதே இல்லே. என் மாமியார் சைக்காலஜியை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன். வசதியா, சொகமா இருக்கேன்.” ஹோவென சிரித்தான் வேலாயுதம்.

"என்னடா சொல்றே?" ஈகோ, கீகோங்கறான். என்னைப்பத்தி பேசறானா? செல்வாவின் முகம் சட்டென விழுந்தது.

"உன் மேல உயிரையே வெச்சிருந்த சுகன்யா, உனக்கு பிடிக்காதவன் கிட்ட செல்லுல பேசினான்னு அவளை சந்தேகப்பட்டியே? அதுக்கு பேரு என்னடா? நான் சொல்றேன். அதுக்கு பேருதான் ஈகோடா. நாம பண்ணது தப்புன்னு தெரிஞ்சா சட்டுன்னு சம்பந்தபட்டவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடணும்."

வேலாயுதம் தன் விரல் நடுவிலிருந்த சிகரெட்டை நீளமாக இழுத்து ஊதினான். செல்வா அவனுக்குப் பதிலேதும் கொடுக்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோமதியோட அம்மா தன் பொண்ணை எவ்வளவு ஆசையா வளர்த்து இருப்பாங்க; அவங்க மனசுல அவளைப்பத்திய கனவுகள் என்னன்ன இருந்திருக்கும்? ஒன் பைன் மார்னிங், எனக்கு அவளை புடிச்சிருக்குன்னு, அவளை என் வீட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டா, அவங்க அதை ஒத்துப்பாங்களா?"

"கோம்ஸும்தானே உன்னை லவ் பண்ணா?"

"இருக்கலாம்...."

"அப்புறம் என்னா?"

"நான் விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நான் என் ஈகோவை திருப்தி படுத்திக்கிட்டேன். கோமதியும் தன் ஆசைதான் முக்கியம்ன்னு அவங்க வீட்டைவிட்டுட்டு என் பின்னாடி வந்துட்டா. இதை ஒரு தாயோட ஆங்கிள்லேருந்து பாருடா மச்சான்.."

"அவங்களுக்கு புடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ணி, அவங்க மனசை, நாங்க ரெண்டு பேருமே புண்படுத்திட்டோம் இல்லையா? புருஷன் இல்லாம தன் பொண்ணை வளர்த்து படிக்க வெச்ச பொம்பளைக்கும் ஈகோ இருக்குமில்லே?" தன் கையிலிருந்த சிகரெட் துணுக்கை வீசியெறிந்தான் வேலு.

"ம்ம்ம்..."

"நாளைக்கு எங்க பொண்ணு இதே காரியத்தைப் பண்ணா; எங்க மனசு எவ்வளவு பாடு படும்?"

"வேலு... என்னடா நீ இன்னைக்கு என்னன்னமோ பேசறே?"

"ஆமாம் மச்சான்.. சுகன்யா கழுத்துல தாலியை கட்டிட்டு அவகூட ஒரு ஆறுமாசம் நீ குடும்பம் பண்ணதுக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் பேசுவே.. கோமதி இப்ப தலைமுழுகாம இருக்காடா..."

"கங்கிராட்ஸ்டா..." செல்வா அவன் கையை குலுக்கினான்.

"கோமதி கன்சீவ் ஆனதும், ரொம்பவே வாந்தி வாந்தின்னு கஷ்டப்பட்டா; வீட்டுல சிகரெட் பிடிக்கறதைக்கூட நான் நிறுத்திட்டேன். தண்ணியடிக்கறது அவளுக்கு பிடிக்கலேன்னு அதையும் விட்டுட்டேன்; இந்த விஷயத்துல உன் தங்கச்சி மீனா எனக்கு ஒரு தரம் பெருசா ராடு வுட்டுட்டாப்பா..."

"சீனு சொன்னான். ஆனா இப்ப நீ சிகரெட் பிடிச்சே?"

"நீ வந்திருக்கே... மனசு சந்தோஷமா இருக்கு... பத்து நாள் கழிச்சு இன்னைக்குத்தான் புடிச்சேன்.. இதோட என்னைக்கு புடிப்பேனோ...?"

"அப்புறம்..?"

"மிஸ்டர் உன் பொண்டாட்டி மனசுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு... அது என்னன்னு கேட்டு தீத்து வைங்கன்னு ஒரு கைனகாலஜீஸ்ட் சொன்னா..."

"ம்ம்ம்"

"என்னம்மா கோம்ஸுன்னேன்? எங்கம்மாவை பாக்கணுங்க; அவங்க கையால ஒரு வாய் சாப்பிடணுங்கன்னு அழுதா..."

"ஓ மை காட்..."

"ராத்திரி பத்து மணி.. கால்லே செருப்பு கூட இல்லாம, இடுப்புல லுங்கி, மார்லே சட்டையோட, என் மாமியார் வூட்டு கதவை தட்டினேன்... எங்கடா வந்தே நாயேன்னாங்க?"

"காட்..."

"அத்தே.. உங்க பொண்ணை நான் என்னால முடிஞ்ச அளவுக்கு, சந்தோஷமாத்தான் வெச்சிக்கிட்டு இருக்கேன்... ஆனா இப்ப அவளுக்கு உடம்பு சரியில்லே. உடனே நீங்க வந்து அவளைப் பாக்கணும்; அப்புறமா என்னை எதுவும் குத்தம் சொல்லிடாதீங்கன்னு ஒரு பிட்டு போட்டேன்."

"என் பொண்ணுக்கு என்னடா ஆச்சு? அவளை கொன்னே போட்டுட்டியாடா குடிகார நாயேன்னு என் தலை மயிரை புடிச்சி உலுக்கு உலுக்குன்னு உலுக்கிட்டாங்கப்பா..."

"அத்தே.. அவ மூணு மாச கர்ப்பமா இருக்கா... கடைசியா உங்களை ஒரு தரம் பாத்துடணும்ன்னு ஆசை படறா... நீங்க இப்பவே வந்தாகணும்ன்னு அவங்க கையை பிடிச்சிக்கிட்டு, மூஞ்சை உம்முன்னு வெச்சிக்கிட்டு, குரலை இழுத்து இழுத்து பேசி, சின்னதா ஒரு ஃபிலிம் காட்டினேன்..."

"கிங்குடா நீ..." செல்வா சிரித்தான்.

"துணைக்கு நம்ப தோஸ்த் ஆட்டோக்கார தியாகுவையும் கூப்பிட்டுக்கிட்டு போயிருந்தேன். என் மாமியார் குய்யோ மொறையோன்னு கூச்சப்போட்டுகிட்டு வீட்டுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடினாங்க. ராத்திரி நேரத்துல கூச்சலைக் கேட்டு பக்கத்து வூட்டு காரனுங்க எட்டிப்பாக்க ஆரம்பிச்சிட்டாங்க."

"தகராறு எதாவது ஆயிடிச்சா?"

"நான் என்னா பண்ணேண்? என் மாமியாரை, சட்டுன்னு அப்படியே அலேக்காத் தூக்கி ஆட்டோவுல போட்டுகினு நம்ப வூட்டுக்கு வந்துட்டேன்..."

"கில்லாடிடா நீ..."

"எல்லாம் உன் மச்சான் சீனுவோட திரைக்கதை, வசனம் டைரக்ஷ்ன்தாம்பா... அவன் சொல்லி குடுத்த மாதிரியே ஆக்டிங் குடுத்தேன்." வேலு தன் 'தல'யை மனதுக்குள் நன்றியுடன் நினைத்துக்கொண்டான்.

"ஒரு பொண்ணு என்னைக் காதலிச்சி, நான்தான் முக்கியம்ன்னு என் பின்னாடி வந்தா பாரு; அவ சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்டா செல்வா... அவளுக்காக நான் என்னா வேணா பண்ணுவேன்... யார் கால்லே வேணா விழுவேன்." மிடுக்காக வேலு பேச பேச, செல்வாவின் முகம் இலேசாக கருத்தது. 

"கால்லே விழுந்தியா? யார் கால்லே விழுந்தே?"

"வீட்டுக்கு வந்ததும்.. என் பொண்டாட்டி கோமதி முழுசா எழுந்து வந்து வூட்டுக்கதவை தொறந்தா, என் மாமியார் என்னை பெண்டு எடுக்க மாட்டாங்களா?" வேலு கெக்கேபிக்கே என சிரித்தான்.

"அப்றம்..."

"இங்க குந்திகினு இருக்கோமே இதே எடம்தான்... நீள நெடுக அவங்க கால்லே விழுந்துட்டேன்... அத்தே என்னை மன்னிச்சுடுங்க... நான் பண்ணது தப்புதான்... உங்களுக்கு இஷ்டம் இல்லாம, உங்ககிட்ட சொல்லாம கொள்ளாம, உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

"ம்ம்"

"இப்ப என் பொண்டாட்டி வவுத்துல இருக்கற என் புள்ளை பொழைக்கணும்... கொஞ்சம் நாள் நீங்க என் கோமதிக்கு பொங்கிப் போடணும்... உங்களுக்கு என் மேல கோவம்ன்னா என்னை இப்படியே மிதிங்க... ஆனா உங்க ஆசைப்பொண்ணை தண்டிக்காதீங்கன்னேன்."



"அவ்ளோதான் மச்சான். அவங்க கால்லே என் கை பட்டதும்... ஆடிப்போயிடாங்க என் மாமியாரு... எழந்திருங்க மாப்பிளேன்னாங்க...! என் பொண்டாட்டியை தன் மடிலே போட்டுகினு, ஆத்தாளும் பொண்ணும், ராத்திரி பூரா ஒரே பாசமழையா பொழிஞ்சிக்கிட்டாங்க..."

"குட்..."

"எனக்கொரு பாய் தலையணையை குடுத்து ஹாலுக்குத் தொரத்திட்டாங்க... இங்கே மாமியார் இருந்த ஒரு வாரம் நான் என்னுதை கையிலதான் புடிச்சிக்கிட்டு கிடந்தேன்."