Pages

Tuesday, 7 April 2015

சுகன்யா... 105

"இப்ப பாக்கி இருக்கறது உங்க வூட்டுப்பிரச்சனைதானா?"

"கொழந்தை பொறக்கட்டும்.. அந்தப் பிராப்ளத்தையும் சால்வ் பண்ணிட மாட்டேன்...? கோமதியை என் தலைமேலே வெச்சிக்கிட்டு நான் தாங்கோ தாங்குன்னு தாங்கறதை பாத்ததும், என் மாமியார் அப்படியே ஐஸ் மாதிரி உருகிப்போயிட்டாங்க. இப்ப என்னை மாதிரி ஒரு மருமவனை இந்த உலகத்துலே எங்கேயும் பாக்க முடியாதுங்கறாங்க."

"கோமதியோட வாந்தியும்... சீனுவோட டைரக்ஷ்ன்தானா?"

"கோமதி, தன் அம்மாளை பாத்ததும், அம்மா கழுத்தைக் கட்டிக்கிட்டு குதிகுதின்னு குதிக்கறா. வாந்தி கீந்தி எல்லாம் மாயமா போயிடிச்சி. இந்த வாந்தி சீன் மட்டும் இன்னைக்கும் எனக்கு ஒரு புரியாத புதிராத்தான் இருக்கு." 



"ஊருக்கெல்லாம் பிலிம் காமிக்கற உனக்கே, கோமதி பிலிம் காமிச்சிட்டா போல இருக்கு?" செல்வா தன் வாய்விட்டுச் சிரித்தான். 


"எது எப்படியிருந்தா என்னடா? என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கா... அதைப்பாத்து என் மாமியார் சந்தோஷமா இருக்காங்க... அவங்க ரெண்டு பேரையும் பாத்து நானும் சந்தோஷமா இருக்கேன்..."

"நீ சொல்றது சரிதான்..."

"செல்வா... என்னைத் தப்பா நினைக்காதேடா... உன் ஸிஸ்டர் மீனாவும் வேலைக்கு போறா... வீட்டை விட்டு வெளியே போனா, அடுத்தவன் கிட்ட பேசித்தானே ஆகணும்?"

"ஆமாம்.."

"ஈகோ பாக்காம, சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி... அயாம் சாரின்னு ஒரே ஒரு வார்த்தையில அவகிட்ட மன்னிப்பு கேளுடா..."

"ப்ச்ச்ச்..."

"அந்த சமயத்துல அவ உன்னை வாரி கொட்டித் திட்டினாலும், பதில் எதுவும் பேசாதே. உனக்கு கிடைச்ச வாழ்க்கையை அவளை மாதிரி ஒரு நல்ல துணையோட சந்தோஷமா எஞ்சாய் பண்ணுடா..."

"ம்ம்ம்.. பேசறேன்டா அவகிட்ட..."

"ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான்... இன்னொரு விஷயம்... தனியா ரூம் பாக்கற எண்ணத்தை விட்டுட்டு... இன்னைக்கே வேண்டாம்.... நாளைக்கு நிதானமா உன் வீட்டுக்குபோய், 'நான் தப்பு பண்ணிட்டேன்னு' அப்பா எதிர்ல ஒரு தரம் தலை குனிஞ்சு நிக்கறதுலே எந்த தப்பும் இல்லேடா. கோழி மிதிச்சு எந்த குஞ்சும் இதுவரைக்கும் செத்தது இல்லே..." 

இதுவரை செல்வா பார்த்தேயிராத வேலாயுதத்தின் இன்னொரு முகம் மெல்ல மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்க... அவன் முகத்தையே செல்வா மவுனமாக, வெறித்துக் கொண்டிருந்தான்.

இன்னைக்கு வரைக்கும் வேலாயுதத்தை எதுக்கும் உதவாத ஒரு குடிகாரப்பயன்னுதானே நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்? இவன் என்னடான்னா, தன்னோட தினசரி வாழ்க்கையில எந்த சிக்கலையும் இழுத்துவிட்டுக்காம, ரொம்பத்திருப்தியா, மகிழ்ச்சியா வாழ்ந்துகிட்டு இருக்கானே?

வெற்று உடம்பில், கோமதியின் பழம் புடவையொன்றை போர்த்திக்கொண்டு, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்து செல்வா மனதுக்குள் வியந்தவனாய் அன்றிரவு முழுவதும் சரியாக தூக்கம் பிடிக்காமல், பாயில் புரண்டு கொண்டிருந்தான். விடியலில் அவனையும் அறியாமல் தூக்கம் விழிகளைத் தழுவ, காலை எட்டுமணி ஆனபின்னும் எழுந்திருக்கவில்லை அவன்.

"மச்சான்.. ஆஃபீஸ் போவலையாடா?" தன்னைத் தட்டி எழுப்பி, கையில் சுடச்சுட வேலாயுதம் கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சத் தொடங்கினான் செல்வா.

"போகணும்டா...?"

"சாயந்திரம் நான் வர லேட்டாகும்... ஒரு சாவியை நீ வெச்சுக்கோ..."

"இல்லே மச்சான்.. என்னோடது சின்னப்பைதானே... நான் ஆஃபிசுக்கே எடுத்திட்டு போயிடறேன்.."

"என் மேல கோவமாடா..."

"உன் மேல எனக்கென்னடா கோவம்? நீ சொன்னமாதிரி நான் வாழ்க்கையிலே தேவையேயில்லாத சில காம்பிளிகேஷன்களை உண்டு பண்ணிகிட்டு இருக்கேன். இந்த சிக்கலை நிதானமா சரி பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.."

"தட்ஸ் த ஸ்ப்ரிட்..." வேலாயுதம் வெள்ளையாக சிரித்தான்.

"ராத்திரி நீ ஏன்டா பொண்டாட்டி புடவையை போத்திக்கிட்டு தூங்கினே?" செல்வா அவன் முகத்தை புன்னகையுடன் நோக்கினான்.

"உனக்கும் கல்யாணம் ஆனாத்தான் இதெல்லாம் புரியும்... "

"விஷயத்தைச் சொல்லுடா..."

"கோமதி என் பக்கத்துல படுத்துக்கலேன்னா எனக்குத் தூக்கமே வராது... ஒடம்பு வாசம் துணியிலே இருக்குல்லே... அவ பொடவையை போத்திக்கிட்டா, அவளே என் கூட படுத்திருக்கறதா ஒரு நெனைப்பு வந்து மஜாவா தூங்கிடுவேன்." வேலாயுதம் கண்ணைச் சிமிட்டி குழந்தையாகச் சிரித்தான்.

* * * * *

"அயாம் சாரிப்பா..." அன்று இரவு வீடு திரும்பிய செல்வா, டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நடராஜனின் எதிரில் அரை நிமிடம் தயங்கி நின்றான்.

"இதை அந்த பொண்ணுகிட்ட சொல்லுடா..."

"மொதல்ல நீ சாப்பிட வாடா..." பிள்ளையைக் கண்ட மல்லிகா பரபரப்பானாள்.

"நான் சாப்பிட்டேன்... நீங்க சாப்பிடுங்கம்மா..." விடுவிடுவென தன் அறையை நோக்கி நடந்தான் செல்வா.

* * * * *

வேலாயுதத்திடம் சொன்னபடி, தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட செல்வா, சுகன்யவிடம் மன்னிப்பு கேட்க மட்டும் மனதுக்குள் இலேசாகத் தயங்கிக்கொண்டிருந்தான். இன்றைக்கு வேண்டாம்; நாளை முதல் வேலையாக அவளிடம் நான் பேசிவிடுகிறேன் என அந்த வாரம் முழுவதும் அவளுக்கு அவன் போன் செய்வதை தள்ளிப் போட்டுக்கொண்டேயிருந்தான்.

தனக்கு பிடிக்காத ஒருவனுடன், தன் காதல் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க முயன்ற சம்பத்துடன், தான் பேச வேண்டாம் என்று சொன்ன பின்னும், சுகன்யா சிரித்து சிரித்து பேசினாள் என்ற எரிச்சலில் செல்வா இருந்து கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில், அலுவலகத்தில் சுகன்யாவைப்பற்றி யாரோ இருவர் தரக்குறைவாக பேசியதைக் கேட்டதன் விளைவால், அவன் தன் மனதுக்குள் கோபத்தில் வெந்து கொண்டிருந்த நேரத்தில், சாவித்திரி அந்த தீயில் எண்ணையை ஊற்றியதும் செல்வா அன்று பற்றி எரிந்தான்.

செல்வா முழுவதுமாக பற்றி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், சுகன்யாவும், சுனிலும், மோட்டர் சைக்கிளில் ஜோடியாக பயணித்து வந்ததும், அவன் சுகன்யாவை வேண்டுமென்றே திமிராக சண்டைக்கு இழுத்தான். பின்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் சுகன்யாவின் மனதை நோக அடித்தான். அவள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தான்.

சுகன்யாவின் பிரிவை அவன் அனுபவிக்கத் தொடங்கியதும், அவள் தன் மேல் வைத்திருந்த அன்பை, நேசத்தை, தீராத காதலை அவன் மெல்ல மெல்ல உணரத்தலைப்பட்டான். தனிமை என்னும் கொடுமை அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. நிழலின் அருமையை அவன் பிரிவு என்னும் வெம்மையில் புரிந்து கொள்ளத் தொடங்கிய போதிலும், மனம் அவளுடன் சமாதானம் செய்து கொள்ள விழைந்த போதிலும், அவளுடன் இயல்பாக பேசத் தயங்கினான் செல்வா.

தான் சுகன்யாவிடம் இயல்பாக பேச முயற்சித்தாலும், அவள் தன்னிடம் மீண்டும் பழைய நேசத்துடன் பேசுவாளா என்ற அச்சம் அவன் மனதுக்குள் எப்போதும் இருந்தது. இந்த அச்சத்தினாலேயே அவன் அவளுடன் உடனடியாக பேச தயங்கினான்.

வார முடிவில், செல்வா தன்னை, சுகன்யாவிடம் பேசுவதற்கு மனதளவில் தயார் செய்து கொண்டபின்னும், குற்றமுள்ள அவனுடைய நெஞ்சு எப்போதும் குறுகுறுத்துக் கொண்டேயிருந்ததால்தான், சுகன்யாவுக்கு நேராக போன் செய்யாமல், அனுராதாவை கூப்பிட்டு, சுகன்யாவின் நலம் விசாரித்தான்.

காலம் யாருக்காவும் நிற்கப்போவதில்லை. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகவும் மாறிவிட்டன. இந்த இரண்டு மாதங்களில் செல்வாவின் போக்கே முற்றிலும் மாறிவிட்டிருந்தது. தன் உடைகளை, புத்தகங்களை, மற்ற பொருட்களை சிறிது சிறிதாக, அவன் தன் வீட்டின் மாடியறைக்கு கொண்டு சென்றுவிட்டான். சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே இறங்கி வருவதை தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

தன் தாயுடன், தன் தந்தையுடன், மீனாவுடன், தன் மிக நெருங்கிய தோழன் சீனுவுடன், இவர்கள் மட்டுமல்லாமல், வேறு எவருடனும்கூட, தேவைக்குமேல் ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசுவதை தவிர்த்து, யார் அவனிடம் பேசினாலும், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்ல ஆரம்பித்தான்.

தன் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, தேவையில்லாமல் தன் தலையை நிமிர்த்துவதேயில்லை என்ற முடிவுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டான். 

சுகன்யா தில்லிக்குப் போய் முழுசா மூணு மாசம் முடிஞ்சு போச்சு. இன்னும் ஒருவாரத்துல சென்னைக்கு திரும்பிடுவா. அவ திரும்பி வந்ததும், நேருக்கு நேராக அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கப் போறேன். அவளோட மனசைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கண்டிப்பா அவ என்னை மன்னிச்சிடுவா. தன் செல்லில் சிரிக்கும் சுகன்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

கேன்டீனில் தான் வழக்கமாக எப்போதும் உட்க்காரும் மூலையில் தனியாக விழிகளை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் செல்வா. அவன் எதிரிலிருந்த தேனீர் ஆறிக்கொண்டிருந்தது.

"ஹாய் செல்வா எப்படியிருகே?"

தனக்கெதிரிலிருந்து உற்சாகமான பெண் குரல் ஒன்று வந்ததும், நனவுலகத்திற்கு வந்தான் செல்வா. சுகன்யாவின் தோழி வித்யா கையில் டீ கோப்பையுடன் அவன் டேபிளுக்கு எதிரில் நின்றிருந்தாள்.

"பைன்.. உக்காருங்க.. உக்காருங்க.. நீங்க எப்படியிருக்கீங்க மேடம்...? அப்புறம் என்ன குழந்தை வீட்டுக்கு வந்திருக்கு?"

"ஆண் குழந்தைதான்... செல்வா.." வித்யாவின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

"குட்.. குட். சந்தோஷம்... நல்ல ட்ரீட் குடுக்கப்போறீங்கன்னு சொல்லுங்க..."

"நீயும், சுகன்யாவும் ஒண்ணா வீட்டுக்கு வாங்க.. அப்பத்தான் ட்ரீட்.." வித்யா முறுவலித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்... டூயூட்டிலே எப்ப ஜாய்ன் பண்ணீங்க?"

"இன்னைக்குத்தான்..."

"உங்க செக்ஷன்ல இப்ப ஈ-கவர்னர்ன்ஸ் சாஃப்ட்வேர் அப்டேஷன் நடந்துகிட்டிருக்கு... அதனால வேலை கொஞ்சம் அதிகமாயிருக்கு. கோபலன் சார்கிட்ட கேட்டு, லைட் சீட்டா வேற எங்கயாவது வாங்கிக்கோங்க..." செல்வா இலசாக முறுவலித்தான்.

"சாவித்ரி போனதுக்கு அப்பறம் எங்க செக்ஷ்ன்ல்ல தேவையேயில்லாத பிரச்சனைகள் கொறைஞ்சுருக்குன்னு எனக்குத் தோணுது..."

"ரியலி நைஸ் டு ஹியர் தட்.."

"செக்ஷ்ன்ல இப்போதைக்கு, சுகன்யா பாத்துக்கிட்டு இருந்த சீட்டு சுனில்ன்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கானே,. அவன் கிட்ட இருக்கறதாலே, எனக்கொண்ணும் அவ்வளவா கஷ்டம் இருக்காதுன்னு தோணுது. ஃபர்தர் தட் சுனில் சீம்ஸ் டு பி சின்சியர்..."

"யா... ஐ நோ... ஐ நோ... ஹீஸ் அன் இன்டெலிஜண்ட் கய்.." செல்வா சுனிலை மனசார பாராட்டினான்.

"தில்லியிலேருந்து ட்ரெய்னிங் முடிஞ்சு திரும்பி வர்ற அனுராதாவையும் என் செக்ஷ்ன்ல்லத்தான் போஸ்ட் பண்ணப்போறாங்க... அவளும் நல்லா வொர்க் பண்றவ... " டீயை ரசித்து குடித்துக்கொண்டிருந்தாள் வித்யா..

"அப்படியா... " செல்வாவின் முகத்தில் சட்டென எழுந்த மெல்லிய அதிர்ச்சியை அவனால் மறைத்து கொள்ள முடியவில்லை.

"ஆமாம்.."

"சுகன்யாவை, கோபலன் சார் எங்கே போஸ்ட் பண்ணப்போறார்?" மெல்லியகுரலில் வினவினான் செல்வா.

"நிஜமாவே உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாதா செல்வா?" வித்யா தன் ஈர உதடுகளை ஹேங்கியால் துடைத்துக் கொண்டாள்.

"இல்லே மேடம்.." செல்வா தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

"ஹேய்... லுக் ஹியர்... சுகன்யா உங்கிட்டே எதுவும் சொல்லலியா?"

"....."

"ஆமாம் செல்வா... தெரியாமத்தான் கேக்கறேன். அப்படி என்ன தீராதப்பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே? சுகன்யா எங்கே இருக்கா? அவ எங்கே இருக்கப்போறா? எதுவுமே உனக்குத் தெரியலேங்கறே? இந்த லட்சணத்துல இருக்கு உங்க ரெண்டு பேரோட காதல்... திஸ் ஈஸ் ரியலி வெரி பேட்..."

"மேடம்... ப்ளீஸ்... இப்ப என்னை எதுவும் கேக்காதீங்க..." செல்வாவின் குரல் குளறியது.

"நீ எதுவும் சொல்லவேண்டாம்பா... சுகன்யாவையே நான் கேட்டுக்கிறேன்.."

"மேடம்.. அவளுக்கு போஸ்டிங் பாண்டிச்சேரிலே ஆயிடலியே?"

"இல்லே... லாஸ்ட் வீக்கே சுகன்யா, தனக்கு போஸ்டிங் தில்லியிலேத்தான் வேணும்ன்னு அப்ளை பண்ணியிருந்திருக்கா. இன்னைக்கு கோபலன் அவளோட டெல்லி போஸ்டிங்கை அப்ரூவ் பண்ணிட்டார். நெக்ஸ்ட் ஒன் இயர் அவ நார்த்லேத்தான் இருந்தாகணும்."

"நிஜமாவா மேடம்..." செல்வாவின் இடது கை விரல்கள் இலேசாக உதறிக்கொண்டிருந்தன.

"அவ அப்ளிகேஷனை ப்ராஸஸ் பண்ணி பைல்லே புட் அப் பண்ணதே நான்தான். ஆர்டர்சை நெட்ல அப்லோட் பண்றதுக்காக உனக்கு காப்பி மார்க் பண்ணியிருந்தேனே, அதைக்கூட நீ பாக்கலியா?"

வித்யாவுக்கு பதிலேதும் சொல்லாமல், செல்வா ஒரு நடைபிணமாக எழுந்து தன் அறையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான். 



அடுத்த ஒரு வருஷத்துக்கு தில்லியிலேயே இருக்கறேன்னு சுகன்யாவே வேண்டி விரும்பி தனக்கு, போஸ்டிங் வாங்கிக்கிட்டான்னா, அவளுக்கு என் மூஞ்சை பாக்கறதுக்கு இஷ்டமில்லேன்னுதானே அர்த்தம்?

யோசிக்க யோசிக்க செல்வாவுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. மனதிலிருக்கும் பரபரப்பு அடங்கட்டும் என விழிகளை மூடி ஓரிரு நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ஏதோ முடிவுக்கு வந்தவனாக, இரண்டு வாரத்திற்கு லீவு அப்ளிகேஷனை எழுதி கோபாலனின் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

திரும்ப சீட்டுக்கு வந்த செல்வா, வாட்டர் ஜக்கிலிருந்த நீரை வேக வேகமாக பருகினான். குடித்த வேகத்தில் உதடுகள் நனைந்து, குளிர்ந்த நீர் அவன் முகவாயில் ஒழுகி, மேல் சட்டை நனைந்தது. அறைக்குள்ளாகவே மேலும் கீழுமாக மெல்ல நடக்க ஆரம்பித்ததும், உடலின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது போலிருந்தது அவனுக்கு. இடது மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான். மணி நான்கரைதான் ஆகியிருந்தது. இன்னும் முழுசா ஒரு மணி நேரத்தை ஓட்டியாகணும்.

தன் எதிரில் டேபிளின் மேல் குவிந்திருந்த பைல்களை ஒவ்வொன்றாகப் பிரித்து, அவைகளை படிக்காமலேயே, கண்ணை மூடிக்கொண்டு, கையெழுத்திட்டு தூக்கி எறிந்தான். இண்டர்காம் அடித்தது. கோபாலன் அவனை தன் ரூமுக்கு வருமாறு அழைத்தார். எப்போதும் லிஃப்டை உபயோகிக்கும் அவன் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி அவர் அறையை அடைந்தான்.

"குட் ஈவீனிங் சார்..."

"வாப்பா செல்வா... உக்காரு... எப்படியிருக்கே?"

சட்டென தன் முகத்தில் இருந்த கண்ணாடியை கழட்டி மேஜையின் மேல் எறிந்தார் அவர். சேரிலிருந்து எழுந்து நின்றவர், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். சீட்டுக்குப் பின்னால் முக்காலியின் மீதிருந்த பிளாஸ்கை திறந்து இரு கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை ஊற்றி, ஒரு கப்பை அவன் பக்கம் நீட்டினார்.

"தேங்க் யூ சார்..."

சந்தோஷமா இருந்தலும் கண்ணாடியை கழட்டி எறியறான். கோபம் வந்தாலும் இதைத்தான் பண்ணறான். இப்ப இவன் எந்த மூடுல இருக்கான்னு தெரியலியே? செல்வா அவர் முகத்தை, அவர் கண்களை படிக்க முயற்சி செய்து தோற்றுப்போனான்.

கோபாலன் நல்ல மனுஷன்தான்... ஆனா சிலநேரத்துல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எதிர்ல இருக்கறவன் உயிரை உண்டு இல்லேன்னு எடுப்பான். கூப்பிட்டா, எதுக்கு கூப்பிட்டேன்னு சட்டுன்னு விஷயத்தை சொல்ல மாட்டான்.

இந்த ஆஃபிசுல நடக்கறதெல்லாம் இவனுக்குத் தெரியும் ? ஆனா ஒன்னுமே தெரியாத மாதிரி அமுக்கமாக இருப்பான். அடுத்தவனை வெறுப்பேத்தி வெறுப்பத்தி, அவன் மனசுல இருக்கறதை அவன் வாயாலேயே சொல்ல வெப்பான். செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவருடைய செயல்கள் சற்றே எரிச்சலை ஊட்டின.

கோபலான் காஃபியை குடிக்க ஆரம்பிக்கும் வரை பொறுமையாக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வா. என்ன? எனக்கு இப்ப லீவு குடுக்க முடியாதுன்னு சொல்லப்போறானா? சொல்லட்டுமே... சொல்ல நினைக்கறதை சட்டுன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?

வீட்டுக்குப்போய் மெடிகல் லீவ் அனுப்பிட்டு போறேன். மிஞ்சிப்போனா பாண்டிச்சேரிக்கு போடாம்பான். இல்லை பெங்களூர் ஆஃபிசுக்கு போடாம்பான். நானே இந்த ஊரை விட்டே எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போயிடணும்ன்னுதானே நினைக்கிறேன்? சுகன்யா இல்லாத ஊருல எனக்கென்ன வேலை...?

இது என்ன? மூச்சுக்கு முன்னூறு தரம் சுகன்யா... சுகன்யா... சுகன்யா...?. தூரத்துல இருந்துகிட்டும் என் உயிரை ஏன் இப்படி வறுத்து எடுக்கிறா? செல்வா தன் முகவாயை அழுத்தமாக ஒரு முறை வருடிக்கொண்டு, தன் எதிரில் இருந்த காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

சை... இவனுக்கு சக்கரை வியாதின்னா... நானும் சக்கரையேயில்லாத காஃபியை குடிக்கணும்ன்னு எதாவது சட்டமா? இல்லே எனக்கென்ன தலையெழுத்தா? விருட்டென அவன் மனதில் மெலிதான ஒரு எரிச்சல் எழுந்தது. காபியை குடிக்காமல் அப்படியே வைத்துவிடலாமா என அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

செல்வா... உன் மனசோட அலைச்சலை கட்டுப்படுத்த முயற்சி பண்ணுடா. தேவையில்லாம மனசுல கிளம்பற எரிச்சல் தன்னால நின்னுடும். மனதில் எழுந்த எரிச்சலை வலுக்கட்டாயமாக அவன் துடைத்து எறிவதாக நினைத்தான். முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்.

இதுதாண்டா வாழ்க்கை. ஒருத்தனுக்கு எப்பவும் தித்திப்பே கிடைக்காது. அப்பப்ப அவன் கசப்பையும் சாப்பிட்டுத்தான் ஆகணும். சுத்தமாக சக்கரையே இல்லாத அந்த காஃபியும் இப்போது தொண்டைக்கும் மனதுக்கும் மிகவும் இதமாக இருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். 


"டேட்டா அப்டேஷன்லாம் எப்படி போயிகிட்டு இருக்கு? பிளான் பண்ணபடி எல்லாம் முடிஞ்சிடுமில்லையா?"

"முடிச்சிடறேன் சார்... என் செக்ஷ்ன்லேயும் ரெண்டு வேகன்சி இருக்கு.. ஒரு ஆள் குடுத்தீங்கன்னா... டார்கெட்டை நெக்ஸ்ட் மன்த் எண்டுக்கு முன்னாடியே அச்சீவ் பண்ணிடலாம்."

"குட்... மூணு பேரு ட்ரெயினிங் முடிஞ்சு வர்றாங்க... ஆனா அனுராதாவுக்கு சுகன்யா பார்த்துக்கிட்டு இருந்த சீட்டை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். பாண்டிச்சேரிக்கு அனுவோட ப்ளேஸ்ல ஒரு ஆளை போஸ்ட் பண்ணணும். பெங்களூரு பையன் ஒருத்தன் வர்றானே, அவனை உனக்குத் தர்றேன். ஈஸ் தட் ஓ.கே?"

"தேங்க் யூ சார்..."

"ஆமாம்... தலைக்கு மேல வேலை இருக்கும் போது, தீடீர்ன்னு லீவுலே போறேன்னு ஏன் என்னை மிரட்டறே?" கோபாலன் செல்வாவின் கண்களை நேராகப்பார்த்தார். அவன் அவருடைய கூரியப்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.

"கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது சார்."

"உடம்புக்கா... இல்லே மனசுக்கா...?" கோபாலன் உரக்க சிரித்தார்.

"...."

"செக்ஷ்ன்லே எதாவது பிரச்சனையா?"

"நோ.. நோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..." தலையை சட்டென இடவலமாக ஆட்டினான் அவன்.

"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு... அயாம் ஆல்வேஸ் ரெடி டு ஹெல்ப் யூ..." மெல்ல சிரித்தார் கோபாலன்.

"யெஸ் சார்... ஐ நோ இட் சார்..."

"உன்னை நான் மூணு மாசமா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். சம்திங்க் ஈஸ் மிஸ்ஸிங்... உன் வயசுல எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க... என்ன பிராப்ளம் உனக்கு... சொன்னாத்தானே தெரியும்?"

"சார்... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும் எனக்கென்ன பிரச்சனைன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?" செல்வாவின் தலை இன்னும் குனிந்தே இருந்தது.

"செல்வா... என்னத்தப்பா நினைக்காதே... சுகன்யாவோட டில்லி போஸ்டிங் அவளுடைய முழு விருப்பத்தோட, அவகிட்ட நான் பர்சனலா பேசினதுக்கு அப்புறம் நடந்த ஒண்ணு. மொதல்லே அனுவைத்தான் அங்கே ரிடெய்ன் பண்றதா இருந்தேன்."

"சார்..."

"அனுவுக்கு அடுத்த மாச ஆரம்பத்துல கல்யாணம் பிக்ஸ் ஆகுதாம். அந்த பையனும் சென்னையிலதான் வேலை செய்யறானாம். அய்தர் சுகன்யா ஆர் அனு இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர்தான் இப்போதைக்கு சென்னைக்கு வரமுடியும். சுகன்யாவும் மேல ஏதோ படிக்கப்போறேன்னு சொன்னா..."

"சார்... உங்களை நான் கொறை சொல்லலே. அனு ஈஸ் ஒன் ஆஃப் மை வெரி குட் ஃப்ரெண்ட்ஸ்... அவளுக்கு கல்யாணம் ஆகி, அவ தன் ஸ்பௌசோட சென்னையில இருக்கறதுல எனக்கும் சந்தோஷம்தான்."

"யெஸ்..."

"ஆனா... சுகன்யா தில்லியிலே படிக்கப்போறேன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். அவ சென்னைக்கு திரும்பி வந்தா இந்த ஆஃபிசுலே என் மூஞ்சை பாத்தே ஆகணும். அவளுக்கு என் முகத்தைப்பாக்க பிடிக்கலே... இதுதான் சார் உண்மை..." செல்வா விருட்டென தன் சீட்டிலிருந்து எழுந்தான்.

"செல்வா ப்ளீஸ்... ஒரு நிமிஷம் உக்காருப்பா. இப்பல்லாம் நீ சட்டு சட்டுன்னு எரிச்சல் படறே; சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே. உங்களோட பர்சனல் விஷயத்துல தலையிடறேன்னு நினைக்காதே... நீ எதை எதையோ உன் மனசுக்குள்ளே போட்டு வீணா கொழம்பிகிட்டு இருக்கே... உன் மனசை மட்டுமில்லே; உன் லவ்வரோட மனசையும் புண்ணாக்கிட்டே....!?"

"....."



"மை டியர் யங் மேன்... நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ... சுகன்யா ஈஸ் ரியலி எ ஜெம்... ஐ நோ ஹெர் ஃப்ரெட்டி வெல்... யூ ஆர் ஃபார்சுனேட்... ஷி ஸ்டில் லவ்ஸ் யூ வெரி வெரி மச்... நான் உனக்கு பதினைஞ்சு நாள் லீவு குடுக்கறேன்... இல்லே டெம்பரரி ட்யூட்டியிலே தில்லிக்கு அனுப்பறேன். வொய் டோண்ட் யூ கோ அண்ட் மீட் யுவர் லேடி தேர்?" கோபாலன் தன் கண்களை குறும்பாகச் சிமிட்டினார்.

"சார்.. என்ன சொல்றீங்க நீங்க..."

"ஆல் த வெரி பெஸ்ட்... இதை போற வழியிலே என் பீ.ஏ. கிட்ட குடுத்துடு... "

கோபாலன் டேபிளின் மேல் கிடந்த அவனுடைய விடுமுறை விண்ணப்பத்தில் சேங்ஷண்ட் என எழுதி அதன் கீழ் தன் கையெழுத்தை கிறுக்கி அவனிடமே திருப்பிக் கொடுத்தார். கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டார். அடுத்த பைலை பிரித்து அதில் மூழ்க ஆரம்பித்தார். இதற்கு மேல் அவர் தன்னிடம் எதுவும் பேசமாட்டார் என்பது செல்வாவுக்கு புரிந்தது.

"தேங்க் யூ சார்..." 



No comments:

Post a Comment