Pages

Saturday, 4 April 2015

சுகன்யா... 98

“ரகு நீ எழுந்திருடா. இவ சொல்ற கதையை நாம என்னக் கேக்கறது? இவரோட ஆசை பொண்ணுகூட உக்காந்து அவரு நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும். இந்தக்கொடுமையையெல்லாம் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது. சம்பந்தி வீட்டுக்கே போய் என்ன ஏதுன்னு நேர்லேயே ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துடலாம்?

சுந்தரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்க்கையில் வந்ததைப் போன்ற எந்த பிரச்சனையும் தன் பெண்ணின் வாழ்க்கையிலும் வந்துவிடக்கூடாது என அவள் அஞ்சினாள்.

“அக்கா... நீ சும்மா இருக்கியா ஒரு நிமிஷம்? சுகன்யா... உங்களுக்குள்ள என்னப் பிரச்சனைங்கறது எங்களுக்குத் தெரிஞ்சுத்தான் ஆகணும். ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சிப் போறதுக்குப் பேருதான் வாழ்க்கை. நாலு பேரு நடுவுல அவங்க கொடுத்த சீர்வரிசையை கூரியர்ல்ல அனுப்பிடலாம். போஸ்ட்ல அனுப்பிடலாம்ன்னு, எடுத்தமா, கவுத்தமான்னு இப்படில்லாம் நீ பேசறது நல்லாயில்லே.” ரகு தன் தன் மருமகளுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்.



"மாமா... எங்களுக்குள்ள ஆயிரம் வேறுபாடுகள் இருக்கு. எனக்கு பிடிச்ச விஷயங்கள் அவனுக்குப் பிடிக்காம இருக்கலாம். அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற சில சமாச்சாரங்கள்ல்ல எனக்கு பிடிப்பு இல்லாமல் போகலாம். இதெல்லாம் பரவாயில்லே. என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனா அவன் என்னைச் சந்தேகப்படறான்."

"சந்தேகப்படறானா? என்னம்மா சொல்றே?" குமாரசுவாமி முகத்தில் அதிர்ச்சியுடன் சுகன்யாவை நோக்கினார்.

"அப்பா... நான் ஓப்பனா சொல்றேன். அவன் என் நடத்தையைச் சந்தேகப்படறான். சந்தேகப்படற ஒருத்தன் கூட வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்பா." சுகன்யா தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.

"நீங்க ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சீங்கம்மா. இவ்வளவு நாள்லே, நீங்க ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு இருக்கணுமே? என்ன இப்படி பேசறே நீ?"

"உண்மைதான். என் கூட வேலைசெய்யறவன் கூட பேசினா, அவன்கிட்ட நீ ஏன்டீ சிரிச்சிப் பேசறேங்கறான். அவனோட ஏன்டீ நீ டீ குடிக்கப் போனேங்கறான்? இவனோட நீ ஏன் உக்காந்து சாப்பிடறேங்கறான்? என்னையும் எங்கூட வேலை செய்யற சுனில்ங்கறவனையும் இணைச்சு தப்புத்தப்பா பேசறான்.

"இது என்னடீ கொடுமை..?" கனகா தன் தலையை தோளில் நொடித்தாள்.

"சம்பத் அத்தான் எனக்கு போன் பண்ணா, அவங்கூட ஏன் பேசறேங்கறான்? நான் யாருகூட பேசணும்... பேசக்கூடாதுங்கறதை இவன் யாரு சொல்றதுக்கு?"

"அவன் உன் புருஷனாகப் போறவண்டீ?" சுந்தரி குதித்தாள்.

"அம்மா... அவனைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா? பாட்டி... என் ஆஃபீசுல எவனோ ரெண்டு பேரு என் பின்னாடி சுத்தினான். நான் அவனுங்களை திரும்பிகூடப் பாத்ததில்லே. அந்த வெறுப்புலே அவனுங்க எதையோ என்னையும், என் கலீக்கையும் சம்பந்தப்படுத்தி பேசினாங்கன்னு சொல்லி இவன் என் நடத்தையை சந்தேகப்படறான். இவன் கூட எப்படி நான் வாழமுடியும்... நீயே சொல்லு?" சுகன்யாவுக்கு மூச்சு இறைத்தது.

"அப்புறம்..?" சுந்தரி பொரிந்தாள்.

"நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம், பால்காரன், கேஸ்காரன், இஸ்திரி போடறவன், ஆட்டோ ஓட்டறவன், இவங்க கூடல்லாம் நான் பேசலாமா கூடாதான்னு அவனைக் கேட்டேன்."

"நான்தான் இவளுக்கு வாய்கொழுப்பு அதிகம்ன்னு தலை தலையா உங்கக்கிட்ட அடிச்சுக்கறேனே? அது கரெக்ட்டுதான்னு உங்க பொண்ணு உங்களுக்கு காமிச்சிட்டாளா? உங்க அழகு பொண்ணை உங்க கூடவே ஆயுசு முழுக்க வெச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருங்க. இவளுக்கு தேவையில்லாத அளவுக்கு செல்லம் குடுக்கறீங்க..." சுந்தரி பாட்டுக்கு தன் மகளின் மீது இருக்கும் எரிச்சலை தன் கணவரின் மீது காண்பித்தாள்.

"அப்பா... நான் சொல்றதை நீங்க கேளுங்கப்பா... ரகு மாமா என் வீட்டுக்கு வந்தா, அவர் கிட்டவாவது நான் பேசலாமா கூடாதான்னு கேட்டேன். இதுவும் வாய்க்கொழுப்பா? நான் கேட்டதுல என்னத்தப்பு இருக்கு?"

"ம்ம்ம்... என்னம்மா இது? அவன்தான் எதையோ சொன்னான்னா நீயும் கண்டபடி பேசிட்டு வந்திருக்கியே? இதெல்லாம் நல்லாவா இருக்கு?" குமாரசுவாமி தன் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

"நான் அவனோட மனஉணர்வுகளை புரிஞ்சிக்கலையாம்? சுகன்யா நான் உன் புருஷனாகப் போறேன்... அதனலா நான் சொல்றபடிதன் நீ நடக்கணும். என் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். உனக்கு இது பிடிக்கலேன்னா, நம்ம உறவை முறிச்சிக்கலாம்ன்னு சொல்லி மோதிரத்தை கழட்டி வீசி எறிஞ்சிட்டான்."

"ஆம்பிளைத் துணையில்லாம, ஒரு பொம்பளை வாழமுடியாதா? ஏம்மா பதினைஞ்சு வருஷம் அப்பா இல்லாமே நீ தனியா வாழலையா? மாமா மேரேஜ் பண்ணிக்காமலேயே தனியா தன் வாழ்க்கையை நிம்மதியா வாழலையா? என்னாலேயும் தனியும் வாழமுடியும். எனக்கு எந்த ஆம்பிளையோட துணையும் தேவையில்லை." சுகன்யா கொதித்துக்கொண்டிருந்தாள்.

"சிவ... சிவா... கண்ணு சுகன்யா, நான் சொல்றதை கேளும்மா... கோவத்துல குழந்தைத்தனமா பேசாதேம்மா. பொறுமையா இரு... குமாரு நீ போய் அந்த நடராஜனை என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாடா." சிவதாணு தன் பேத்தியின் தலையை வருட ஆரம்பித்தார்.

"அப்பா... என் மனசுல இருக்கறதை நான் முடிவா சொல்லிட்டேன். நாளைக்கு நான் டில்லிக்கு கிளம்பியாகணும். என் கேரீரையாவது என்னை நிம்மதியா பர்சூயு பண்ண விடுங்க. இப்போதைக்கு எந்தப்பிரச்சனையையும் உண்டு பண்ணாதீங்க. நீங்க எப்ப வேணா அவங்க வீட்டு சீர் வரிசையை திருப்பிக்கொடுத்துடுங்க. இனிமே அதை நான் என் கையாலத் தொடமாட்டேன்.

நீங்க அந்தப்பார்சலை கூரியர் மூலம் அனுப்புவீங்களோ? நேராப்பாத்து குடுத்துட்டு வருவீங்களோ... ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நீங்க நேராப்போனா உங்களையும் அவன் மரியாதையில்லாம பேசினாலும் பேசலாம். அவன் பழைய செல்வா இல்லே; இதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்." சுகன்யா விருட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள். 

சுகன்யா தில்லிக்கு கிளம்பிய தினத்தன்று, மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த நெருங்கிய உறவினர் ஒருவரின் நலம் விசாரிப்பதற்காக நடராஜனுக்கு செங்கல்பட்டு வரை போகவேண்டியிருந்தது. தன்னுடன் மல்லிகாவும் வருவதால், தங்களால் சுகன்யாவை வழியணுப்ப ஸ்டேஷனுக்கு வரஇயலாது என்பதனை அவர் வருத்தத்துடன் முதல் நாளே சுகன்யாவிடம் போன் மூலமாக தெரிவித்திருந்தார்.

செல்வாவுக்கு என்னாச்சு? காலையிலேருந்து குளிக்காம கூட, வெரண்டா பெஞ்சிலேயே சோம்பேறித்தனமா படுத்துக்கிடக்கறானே? லஞ்சுல சாப்பிடக்கூப்பிட்டதுக்கும், சரியா பதில் எதுவும் சொல்லலே; சாப்பிடவும் இல்லே; மொகத்தை கடுவன் பூனை மாதிரி உர்ன்னு ஏன் வெச்சிருக்கான்? எனக்குத்தெரிஞ்சு, இரண்டு மூணு நாளா சுகன்யாவோட போனும் வரலே. திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சா? செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவுல லடாயோ என்னவோ தெரியலியே? மனதிற்குள் அவனிடமோ, சுகன்யாவிடமோ இதைப்பற்றி பேசுவதற்கு தயங்கிக்கொண்டிருந்தாள் மீனா.

"அண்ணா... மணி அஞ்சரைக்கு மேல ஆவுது. எழுந்து குளியேன். ஸ்டேஷனுக்கு போகவேணாமா?" செல்வாவின் கையில் சூடான காஃபி டம்ளரைத் திணித்தாள் மீனா. மெல்லிய பழுப்பு நிற ஷிஃபான் சாரியும், வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுமாக, அன்று வெகு சிரத்தையாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"நான் வரல்லே. உனக்கு எங்கேயாவது போயே ஆகணும்ன்னா, சீனுவை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு போ." காஃபியை இரண்டே விழுங்கில் குடித்த செல்வா, மீண்டும் அதே பெஞ்சில் சுருண்டுப் படுத்துக்கொண்டான்.

* * * * *

"மச்சான்... உடம்பு கிடம்பு சரியில்லையாடா?" சீனு செல்வாவை உலுக்கினான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாப்ளே." செல்வா முனகியவாறு எழுந்து உட்கார்ந்தான்.

"டேய்... இன்னைக்கு உன் ஆள் டெல்லிக்கு கிளம்பறடா? மறந்துட்டியா?" சீனு அவன் முதுகில் விளையாட்டாகக் குத்தினான்.

"யாரு எங்கப் போனா எனக்கென்னா? ஆளைக் கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க விடுடா." செல்வா தன் முகவாயை சொறிந்துகொண்டான்.

"யாரு எங்கப் போனா உனக்கென்னவா? என்ன மச்சான்... எங்கிட்டவே நீ ஃபிலிம் காட்டறே? எனக்கு காது குத்தி, பூ சுத்தற ஐடியாவை மட்டும் நீ தயவு செய்து விட்டுடு. சுகன்யா உன்னை கலாய்க்கறாளா? இல்லே நீ அவளை கலாய்க்கறியா? அடிக்கடி நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி சண்டை போட்டுக்கிட்டாலும், அந்த சண்டைக்கு சுத்தமா மதிப்பில்லாம போயிடும்." சீனு அவன் தலை முடியை கலைத்தான்.

"ப்ளீஸ்... என்னைத் தொந்தரவு பண்ணாதேன்னு ஒரு தரம் சொன்னா உனக்குப்புரியாதா?" செல்வா அவன் முகத்தைப் பார்க்கவில்லை.

"என் மூஞ்சைப்பாத்து பேசுடா. திரும்பவும் உங்களுக்குள்ள எதாவது அடிதடியா? அடிச்சது யாரு; அடி வாங்கினது யாரு?" சீனு கிண்டலாக சிரித்தான்.

"என் பர்சனல் விஷயத்துல, யாரும் அனாவசியமா தலையிடாம இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்." விருட்டெனத் தன் தலையை உயர்த்தி மீனாவை ஒரு முறை முறைத்த செல்வா, தான் உட்கார்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்து, மாடிப்படிக்கட்டை நோக்கி நடந்தான். வேப்பமரத்தின் நிழலில், மாடிப்படிக்கட்டின் கைப்பிடியில் சாய்ந்துகொண்டு, தன் வலது கை விரல்களின் நகத்தை அவசர அவசரமாக கடித்து துப்ப ஆரம்பித்தான். சீனுவின் முகத்தில் ஈயாடவில்லை. விருட்டென திரும்பி மீனாவின் முகத்தை ஒருமுறைப்பார்த்தான் அவன்.

"அண்ணா... இவரு உனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க. என்ன வேணா பேசிக்குங்க. அதைப்பத்தி எனக்கு கவலையில்லே. இவரு இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர். என் எதிர்ல இவர்கிட்ட நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். இனிமே பேசறதுக்கு முன்னே, யார்கிட்ட என்ன பேசறோம்ங்கறதையும் கொஞ்சம் யோசனை பண்ணி பேசு." மீனாவுக்கு சட்டென அவள் மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

"பேசாம இருடீ..." கண்களால் பேசிய சீனு மீனாவின் இடது முழங்கையைப் பிடித்து அழுத்தினான்.

"வெல்... அயாம் சாரி மீனா... இனிமே இன்னொரு தரம் இப்படி நடக்காது. ஆனா இப்ப... ப்ளீஸ் லீவ் மீ அலோன்." செல்வா தன் இடது கை விரல்களிலிருந்த நகங்களை கடிக்க ஆரம்பித்தான். 



சென்ட்ரல் ஸ்டேஷனில், சுகன்யா தன் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். சற்று தள்ளி குமாரசுவாமியும், சுந்தரியும், ரகுவுடன் நின்றிருந்தார்கள். மீனாவும், சீனுவும் வந்ததையே கவனிக்காததுபோல், தொங்கிப்போன முகத்துடனிருந்த அவர்களை கண்டதும், செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் இடையில் நிச்சயமாக ஏதோ நடந்திருக்க வேண்டும், அதனால்தான் செல்வா ஸ்டேஷனுக்கு வராமல் இருந்துவிட்டானோ என்கிற பயம் மீனாவின் மனதில் எழுந்தது.

"குட் ஈவீனிங் அங்கிள்... அத்தே நீங்க எப்படியிருக்கீங்க?" மீனா சுந்தரியின் பக்கத்தில் சென்று வெகு நெருக்கமாக நின்றாள். சீனு, குமாரசுவாமியின் கையை குலுக்க ஆரம்பித்தான்.

"ஆண்டவன் விட்ட வழின்னு இருக்கோம்மா... நீ நல்லாயிருக்கியாம்மா? உங்க வீட்டுல யாருக்கு உடம்பு சரியில்லை? உங்கம்மாவும் செங்கல்பட்டுக்கு போயிருக்காங்களா?" சுந்தரி தன் குரலில் உயிரில்லாமல் பேசிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் செல்வாவைத்தான் தேடுகிறாள் என்பது மீனாவுக்கு தெளிவாகப்புரிந்தது.

"ஆமாம் அத்தே, எங்க அப்பாவோட தாய் மாமாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்காங்க. அவரைப்பாத்துட்டு, நேரா இங்கே வந்துடறேன்னு அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணார்.."

"பாவம்.. அவருக்கு எதுக்கு வீண் அலைச்சல்? அதான் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கீங்களே?" சுந்தரியின் கண்கள் பிளாட்ஃபாரத்தின் நெடுக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"அலைச்சல் எல்லாம் ஒண்ணுமில்லே; சுகன்யா தில்லிக்கு போறாளேன்னு டல்லாயிருக்கீங்களா அத்தே? மூணு மாசம்தானே? மூணு வாரமா ஓடிடும்; கவலைப்படாதீங்க." மீனா, சுந்தரியின் இடுப்பைக்கட்டிக்கொண்டாள்.

"அதெல்லாம் இல்லேம்மா?"

"அப்புறம் ஏன் உம்முன்னு இருக்கீங்க? அங்கிள் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். இன்னைக்கு என்னமோ அவரும் ரொம்பவே மூட் அவுட் ஆன மாதிரி இருக்கார்?" சுந்தரியை மீனா விடாமல் துருவ ஆரம்பித்தாள்.

அதற்குமேல் சுந்தரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. தன் மனதில் இருக்கும் கொதிப்பை யாரிடமாவது கொட்ட நினைத்தாள். கடந்த வாரம், செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் இடையில் நடந்ததை தணிந்த குரலில் மீனாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். திடுக்கிட்டுப்போன மீனா, சீனுவை தன்னருகில் வரும்படி சைகை செய்தாள். நடந்ததை அறிந்ததும் அவனும் அதிர்ந்து போய் என்ன பேசுவதென தெரியாமல் நின்றான். சுகன்யா நின்ற திசையில் திரும்பிப்பார்க்க, இப்போது அவளும், குமாரசுவாமியும் மட்டும் தனியாக நின்றிருந்தார்கள். சீனு அவர்களை நோக்கி நடந்தான்.

"என்ன சீனு... உன் ஃப்ரெண்டை பொறுப்புள்ள பையன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டானே?" குமாரசுவாமி வருத்தமாக பேசினார்.

"சுகன்யா... செல்வா ஒரு முட்டாள். இந்த நிமிஷம் அவனை என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமாயிருக்கு. அயாம் சாரி. கொஞ்ச நாளைக்கு அவன் கிட்ட எந்தக் காரணத்துக்காகவும் நீங்க வாயைத்திறக்காதீங்க. லெட் ஹிம் ரியலைஸ் ஹிஸ் மிஸ்டேக். அப்பத்தான் அவனுக்கு உங்க அருமை புரிஞ்சு புத்தி வரும்."

"அயாம் சாரி அங்கிள். என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலே; நீங்க பெரியவங்க, உங்களுக்குத் தெரியாதது இல்லே, கொஞ்சம் பொறுமையா இருங்க."

"சுகன்யா... லெட் த டஸ்ட் செட்டில் இன். ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ். செல்வாகிட்ட நான் பேசறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். " சீனு சுகன்யாவிடம் மெல்ல முணுமுணுத்தான்.

"வேண்டாம் சீனு... நீங்க வீணா சிரமப்படவேண்டாம். செல்வா இப்ப யார் பேச்சையும் கேக்கற மனநிலையிலே இல்லே." சுகன்யா தன் உதடுகள் துடிக்க மேலே எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

"சுகன்யா... என் அண்ணண் உன்னை வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நீ அவனை தயவு செய்து வெறுத்துடாதே. ப்ளீஸ்... சொல்லு சுகன்யா. அவனை நீ வெறுக்கமாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு." சுகன்யாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட மீனாவின் கண்கள் கலங்கியிருந்தன.

"இல்லே மீனா. நிச்சயமா இல்லே. என் காதலை நானே எப்படி வெறுக்க முடியும்?" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"தேங்க்யூ சுகன்யா... தேங்க்யூ... இது போதும் எனக்கு."

மீனாவும் கலங்கும் தன் விழிகளைத் துடைத்துக்கொண்டாள். ஒரு முறை மூக்கை உறிஞ்சினாள். பக்கத்தில் நின்றிருந்த சுந்தரியின் கையை பிடித்தாள். அத்தே... என் அண்ணன் சுகன்யாகிட்ட அறிவுகெட்டத்தனமா நடந்துகிட்டு, உங்க எல்லோரோட மனசையும் புண்படுத்திட்டான். அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்."

அங்கிள், செல்வா மேல நிச்சயமா உங்களுக்கு கோபம் இருக்கும். என் அண்ணன் பண்ணதை நினைச்சு, எங்கப்பா மேல நீங்க கோபப்பட்டுடாதீங்க. சுகன்யா எப்ப எங்க வீட்டுக்கு வரப்போறான்னு அவர் காத்துக்கிட்டு இருக்கார்." மீனாவால் அதற்கு மேல் பேசமுடியாமல் உதடுகளை கடித்துக்கொண்டாள்.



"சே..சே.. என்னப்பேசறே மீனா? இது நடந்து ஒரு வாரமாச்சு. நடந்து போனதுக்கு உங்க அப்பா என்ன பண்ணுவார்? இல்லே.. உங்கம்மாதான் என்ன பண்ணுவாங்க? யார் மேலேயும் எங்களுக்கு கோவமில்லேம்மா. உங்கப்பா ஏற்கனவே ரெண்டு நாளா டென்ஷன்ல இருக்கறது எனக்கு நல்லாத்தெரியும். அவங்க யாரையோ பேஷண்ட்டைப் பாத்துட்டு வர்றாங்க... நீ தெரிஞ்சுக்கிட்டதையெல்லாம், இன்னைக்கே உங்க வீட்டுல சொல்லி, உன் பேரண்ட்சையும் மனவேதனை படவெச்சிடாதே. " அவள் தலையை மென்மையாக வருடினார் குமாரசுவாமி.

"சரி அங்கிள்.."

"மொதல்லே நீ அழறதை நிறுத்தும்மா. நீ அழறதைப்பாத்து உன் ஃப்ரெண்டும் அழறாப்பாரு." குழந்தைபோல் அழும் மீனாவை சுந்தரி தன் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டாள். '


No comments:

Post a Comment