Pages

Monday, 6 April 2015

சுகன்யா... 102

"குட்மார்னிங் சுகன்யா... சம்பத் ஹியர்.."

"அத்தான் வெரி வெரி குட்மார்னிங் ... நீங்க நிம்மதியா தூங்கினீங்களா? இல்லே கனவு கண்டுகிட்டு கட்டில்லே உருண்டுகிட்டு இருந்தீங்களா?"

சுகன்யாவும், அனுவும் பார்க்கில் காலாற நடந்து முடித்தபின் புல்தரையில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். 'அனு... உன் ஆள்தான்டீ' சுகன்யா ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அனுவை நோக்கி கண்ணடித்தாள்.

"காலங்காத்தால கிண்டலா? நல்லாத் தூங்கினேன். அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் சுகா... அயாம் ரியலி ஹேப்பி... எழுந்ததுமே மனசுக்குள்ள ஒரு தெளிவு வந்த மாதிரி இருக்கு..."

"குட்.. அது இருக்கட்டும்.. இப்ப எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?இதையெல்லாம் இனிமே அனுகிட்ட வெச்சிக்கோங்க... நேத்து நீங்க அவ நம்பரை வாங்கிக்கலையா?" சுகன்யா விஷமமாகச் சிரித்தாள்."



"நீ பர்மிஷன் குடுத்தா நேர்லேயே வந்து அவ நம்பரை வாங்கிக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அவகிட்டவும் நன்றி சொல்லலாம்ன்னு இருக்கேன். " சம்பத்தும் குறும்பாக சிரித்தான்.

"உங்காளை பாக்கறதுக்கு என் பர்மிஷன் எதுக்கு?" சம்பத் தன்னைப்பார்க்க வரப்போகிறான் என தெரிந்ததும் அனுவின் முகம் மலர ஆரம்பித்தது.

"நீ தானே அவளுக்கு லாயர்... இன்னைக்கும் நான் ஃப்ரீதான்... உனக்குத் தெரியாம எப்படீ நான் அவளை மீட் பண்றது?" சம்பத் இழுத்தான்.

"புரியுது அத்தான்... புரியுது... நீங்க தாராளமா ஹாஸ்டலுக்கு வந்து அவளை எங்கே வேணா அழைச்சிட்டுப்போங்க... ஆனா அவளை முழுசா, பத்திரமா, திரும்ப இங்கேயே கொண்டுவந்து விட்டுடுங்க. சந்தோஷம்தானே?" சுகன்யா அனுவின் இடுப்பைக் கிள்ளினாள்.

"சும்மா இருடீ..." அனு சிணுங்கினாள்.

"அனு பக்கத்துல இருக்காளா?"

"இருக்கா... பார்க்ல இருக்கோம். அல்ரெடி ஸ்பீக்கர் ஆன்... நாம பேசறதை அவளும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கா... அவகிட்ட செல்லை குடுக்கறேன்; பேசறீங்களா?"

"அதான் நேர்ல வர்றேனே..."

"குட்மார்னிங்ன்னு விஷ்தான் பண்ணுங்களேன். கொறைஞ்சா போயிடுவீங்க?"

"ஹாய் அனு... குட்மார்னிங்..."

"குட்மார்னிங் சம்பத்... ஹவ் ஆர் யூ? இன்னைக்கு வர்ர்றீங்களா?" தன் உதடுகளில் பொங்கும் சிரிப்புடன் அனு குழைந்தாள்.

"ம்ம்ம்.."

"எத்தனை மணிக்கு?"

"அரவுண்ட் டென்.. இஸ் தட் ஓ.கே..?"

"எப்ப வேணா வாங்க... வெய்ட் பண்ணிகிட்டு இருப்பேன்..." அனு செல்லை சுகன்யாவிடம் கொடுத்தாள்.

"அத்தான்... ஒரு விஷயம்..."

"சொல்லு சுகா..."

"ட்ரெய்னிங் முடிஞ்சதும், சென்னையிலதான் அனுவுக்கு போஸ்டிங்ன்னு முடிவாயிடிச்சி... அதனால நீங்களும் சீக்கிரமா சென்னைக்கு வந்துடுங்களேன்..."

"ம்ம்ம்... உடனடியா அது எப்படி முடியும்?"

"உங்களோட வொர்க் எக்ஸ்ஃபீரியன்சை என் அப்பாவுக்கு அனுப்புங்கன்னு சொன்னேன்லா..."

"சுகா... இதைப்பத்தி அம்மாவும் என்கிட்ட பேசினாங்க. பட் அயாம் நாட் ஏபிள் டு டேக் எ டிஷிஷன்..."

"யூ ஆர் க்வாலிஃபைட் இனஃப்... தே நீட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பெர்சோனல்.. அப்புறம் எதுக்காக தயங்கறீங்க?அத்தையும் இதைப்பத்தி என் அப்பா கிட்ட பேசினாங்களாம்... அவர்கிட்ட நீங்களும் ஒரு தரம் பேசுங்களேன்..."

"ஓ.கே.. பெங்களூரு போனதும் ஐ வில் சென்ட் மை ரெஸ்யுமேஅண்ட் டாக் டு ஹிம்.."

"மறந்துடாதீங்க.. அப்புறம் கரெக்டா பத்து மணிக்கு வந்துடுங்க... அனு வில் பீ வெய்டிங் பார் யூ..." சுகன்யா மனதுக்குள் திருப்தியுடன் கலகலவென சிரித்துக்கொண்டே செல்லை அணைத்தாள். 

அனு கட்டியிருந்த வெள்ளை நிற காட்டன் புடவையில், கண்ணுக்கு இதமான இளம் பச்சை நிற பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமான கருப்பு நிற ரவிக்கையில் அவளுடைய முன்னழகுகள் தங்களை எடுப்பாக காட்டிக்கொண்டிருந்தன. அவள் கட்டியிருந்த புடவை அவளுடைய குழிந்த தொப்புளின் அழகை சிறிதளவு காட்டியும், காட்டாமலும், அவள் நடக்கும்போது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

அனு, பால்கனிக்கு சென்று தெருவை நோட்டமிட்டாள். திரும்பி வந்து அறையில் சேரில் உட்கார்ந்தாள்.நிமிடத்துக்கு இரண்டு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். விருட்டென மீண்டும் பால்கனிக்கு போனாள். இரண்டு நிமிடம் அங்கே நின்றாள். திரும்பவும் அறைக்குள் வந்தாள். செல்லை எடுத்து சமயத்தைப் பார்த்தாள். அனு படும் அவஸ்தையைப் பார்த்த சுகன்யா மெல்ல சிரித்தாள்.

"எதுக்குடி இப்ப சிரிக்கறே நீ?" அனு சிணுங்கினாள்.

"அனூ குட்டீ.. உன்னைப்பாத்து நான் ஏன்டீ சிரிக்கப்போறேன்?"

"பின்னே?"

"சட்டுன்னு மணி பத்தாகி தொலைய மாட்டேங்குதேன்னு என் வாட்சைப்பாத்து சிரிச்சேன்.." சுகன்யா கட்டிலிலிருந்து எழுந்து அனுவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

"சுகா... உன்னை நான் மீட் பண்ணியிருக்கலேன்னா,என் சம்பத் எனக்கு கிடைச்சே இருக்கமாட்டார்.உன்னை நான் என் வாழ்க்கை பூரா மறக்கமாட்டேன்டீ" அனுவின் குரல் தழைந்தது.

"ஹேய்.. ரொம்ப எமோஷனல் ஆகாதே... ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலேயும் என்ன நடக்கணுமே அது மட்டும்தான் நடக்கும். நடக்க வேண்டியது கட்டாயம் நடந்துதான் தீரும்..இட் ஈஸ் எ மேட்டர் ஆஃப் டயம்."

"சுகா.. உங்க அத்தை சட்டுன்னு கோபப்படுவாங்கன்னு சொன்னியே, என்னை வேணாம்ன்னு சொல்லிட மாட்டாங்களே?"

"சேச்சே...அதெல்லம் இல்லடி.. நான் அவங்களோட நார்மல் குணத்தை சொன்னேண்டீ.. புருஷனா இருந்தாலும் சரி; புள்ளையா இருந்தாலும் சரி; சட்டுன்னு எப்படி அவங்க கோவப்படறாங்களோ அதே மாதிரி அடுத்த அஞ்சு நிமிஷத்துல பாசத்தை மழையா அவங்க மேல பொழிவாங்கடீ... ஆனா எங்க மாமா... அதான் உன் ஆளோட அப்பா இருக்காரே; அவர் ஒரு பர்ஃபெக்ட்... பக்கா ஜெண்டில்மேன்.. உன்னை தன் தலை மேல தூக்கி வெச்சுக்குவார். மாமாகிட்ட பேசறியா... நீ பேசினா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்?"

"வேணாம்டீ.. எனக்கு பயமா இருக்குடீ..கொஞ்சம் பொறுக்கலாம்டீ... மொதல்லே சம்பத் தன்னோட வீட்டுல என்னைப் பத்தி பேசிடட்டும். அப்புறமா நான் அவங்ககிட்ட பேசறேன்."

"எங்க அத்தையே அவங்க காலேஜ் டேஸ்ல, லவ் பண்ணவங்கதான்டீ.. காதலைப்பத்தி, காதல் வசப்பட்ட ஒரு பெண்ணோட மனசைப்பத்தி, அவங்களுக்கு நல்லாத் தெரியும்டீ."

"ஐ சீ..."

"அன்பார்ட்சுனேட்லி அவங்க லவ் சக்ஸஸ்ஃபுல் ஆகலை. நீ எதுக்கும் கவலைப்படாதேடீ...கல்யாண விஷயத்துல அத்தானுக்கு அவங்க வீட்டுல முழு சுதந்திரம் குடுத்திருக்காங்க. சம்பத் எந்த பொண்ணை ஓ.கேன்னு சொன்னாலும் அவங்களுக்கு ஓ.கே தான். "

"நான் உன்னைத்தாண்டீநம்பியிருக்கேன்.."

"டோண்ட் வொரி.. உனக்கென்னடீ கொறைச்சல்? நீ ஏன் இப்படி பயந்து சாகறே? உன்னை நானே அழைச்சிட்டுப்போய் எங்க அத்தைகிட்ட அறிமுகப்படுத்தறேன். எங்கத்தான் ஒரே பையன்.ஏகப்பட்ட சொத்து இருக்கு அவருக்கு.நல்லாக் கேட்டுக்க. எங்க அத்தை வீட்டுல நீ ராணி மாதிரி இருக்கப்போறே."

"ப்ச்ச்... எனக்கு சொத்தெல்லாம் வேணாம்டி.. இவர் கிடைச்சா, அதுவே போதும்டீ..."

அனுவின் செல் கிணுகிணுத்தது. சம்பத்துதான் அவளை அழைத்திருந்தான். ரிஸப்ஷனில் இருப்பதாக சொன்னான்.

"போயிட்டு வரேன்டீ..."

"அனு.. ஆல் த பெஸ்ட்... கொஞ்சம் பொறுமையா இரு..."

"என்னடி சொல்றே?"

"ம்ம்ம்.. நீ ஒரு பாப்பா... நேத்து காலையிலத்தான் நீ வயசுக்கு வந்திருக்கே; நான் சொல்றதோட அர்த்தம் உனக்கு புரியலே? கல்யாணம் ஆகற வரைக்கும் முழுசா டேமேஜ் ஆகாம இருடீன்னு சொல்றேன்.." சுகன்யா ஹோவென சிரித்தாள்.

"போடீ.. இவ ஒருத்தி.. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..." அனு அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, தன் முகத்தில் வெட்கத்துடன் ரிசப்ஷனை நோக்கி வேகமாக ஓடினாள்.

* * * * *

சுகன்யா... நானும்தான் ஒருத்தனை மனசாரக் காதலிச்சேன். என் காதல் தோத்துத்தான் போச்சு. அதுக்காக நான் செத்தா போயிட்டேன்? இன்னொருத்தன் கூட சந்தோஷமா வாழ்ந்து இவனை பெத்துக்கலையா? என் புள்ளை சம்பத் வாழ்க்கையோட நிஜமான அர்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறான்.

என் புள்ளை, காலம் பூரா உன்னையே நெனைச்சுக்கிட்டு வாழ்ந்துடுவேன்னு அடாவடி பண்றான்டீ. உன் பேச்சை அவன் கேப்பான்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்மா. எனக்காக ஒரு தரம் நீ அவன் கிட்ட பேசறயா?

ராணி அத்தே... உங்க பிள்ளை நிஜமாவே லக்கி. தங்கமான மனசுள்ள பெண் ஒருத்தி உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா. நான் அதிகமா எந்த முயற்சியும் எடுக்காமலேயே உங்க பிரச்சனை தன்னால முடிஞ்சுப்போச்சு. கடந்தவாரம், தன்னிடம் செல்லில் அழுது புலம்பிய தன் அத்தை ராணியின் முகம் அவள் மனதில் சட்டென வந்தது. சுகன்யா எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

ஹாஸ்டல் கேட்டுக்கு வெளியில், கேட்டுக்கு எதிரில் உயரமாக வளர்ந்திருந்த மாமரத்தின் நிழலில் நின்றிருந்த சம்பத்தை அனு நெருங்கியதும், அவன் அவளை விருட்டென இழுத்து தன் மார்போடு அணைத்து அவள் கன்னத்தில் உரிமையுடன் முத்தமிட்டான்.

"அனு.. ரியலி யூ ஆர் வெரி வெரி ப்யூட்டிஃபுல் இன் திஸ் சாரி... தேவதை மாதிரி இருக்கே..." சம்பத் தன் விழிகளை இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ப்ளீஸ்.. சம்பத்... விடுங்க என்னை... சுகன்யா பால்கனியில நின்னுகிட்டு இருக்கா..." சம்பத் சட்டென அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான். அனு, சுகன்யா நிற்கும் திசையை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினாள். சம்பத்தை நோக்கி தன் முகம் மலர சிரித்தாள்.

"அனு எதுக்கு சிரிக்கறே?" சம்பத்தும் சுகன்யா நின்ற திசையை நோக்கி தன் கையை ஆட்டினான்.

"டேமேஜ் ஆகாம, முழுசா வந்து சேருடீன்னு இப்பத்தான் சுகன்யா சொல்லி அனுப்பினா. ஆனா நீங்க என்னடான்னா, அவ எதிர்லேயே என் கன்னத்தை கடிக்கறீங்க?" கன்னத்தை துடைத்துக்கொண்டு, அனு விழுந்து விழுந்து சிரித்தாள்.

சுவாமி மலை முருகா.. என் அனுவும், என் அத்தானும் என்னைக்கும் இப்படியே சந்தோஷமா சிரிச்சுக்கிட்டெ இருக்கணும். சுகன்யா அவர்களை நோக்கி உற்சாகமாக தன் கரத்தை அசைத்துக்கொண்டிருந்தாள்.

சம்பத் அனுவின் கழுத்தை சுற்றி தன் கரத்தை ஆசையுடன் போட்டுக்கொண்டான். அவள் அவன் இடுப்பில் தன் கையை தவழவிட்டுக்கொண்டாள். காலியாக இருந்த நடைபாதையில் அவர்கள் இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள். தலையில் காயும் வெய்யில் அவர்களுக்கு சுத்தமாக உறைக்கவில்லை. 

பால்கனி தரையில், குளிர்ந்த நீரை ஒன்றுக்கு இரண்டு முறையாக தெளித்து, தரை ஜில்லென்று ஆனவுடன், ஒரு பெட்ஷீட்டை விரித்து நிம்மதியாகப் படுத்திருந்தாள் சுகன்யா. அவள் உள்ளத்தில் அன்று அசாதாரணமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

நிசப்தமான அந்த இரவில், தன் தலைக்கு மேல் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் அவளை குளிப்பாட்டிக்கொண்டிருக்க, நிலவின் குளுமையை, அவள் தன் மெய்மறந்து, அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சந்திரனுக்கு இருபத்தேழு பெண்டாட்டியாமே? ஒவ்வொரு நட்சத்திரமும் அவனுக்கு ஒரு மனைவியாமே? தலைக்கு மேல் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில், பூர்ணசந்திரன் மெதுவாக உலா வந்து கொண்டிருந்தான். இன்னைக்கு ஒரு ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் மனசொத்து வாழறதே கஷ்டமாயிருக்கறப்ப, இருபத்தேழு பெண்களை, அஸ்வினியிலேருந்து ரேவதி வரைக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்திரன், எப்படி ஓரே நேரத்துல அவங்களை சமாளிச்சு இருப்பான்?

இளம் வயதில் சுந்தரி சொல்லியிருந்த புராணக் கதையொன்று சுகன்யாவின் நினைவுக்கு வர உதடுகளில் இளம் புன்முறுவல் ஒன்று எழுந்தது. இப்ப என் அனு என்ன பண்ணிக்கிட்டு இருப்பா? ம்ம்ம்.. என்ன பண்ணுவா? அத்தான் சம்பத்தோட செல்லுல, குசுகுசுன்னு எதையாவது பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பா... காதலர்களுக்கு பேசறதை தவிர வேற வேலை என்ன இருக்கு?

தில்லியில் ட்ரெய்னிங் முடிந்ததும், அனு சென்னை ஆஃபிசில் சேருவதற்கான போஸ்டிங் ஆர்டருடன், தமிழ்நாட்டுக்கு கிளம்பிப்போய் இரண்டு வாரங்களாகி விட்டிருந்தபோதிலும் இன்னும் ட்யூட்டியில் அவள் சேர்ந்திருக்கவில்லை. தனது சொந்த ஊரான பாண்டிச்சேரியில், தனக்கு கிடைத்த ஜாய்னிங் டயமை, பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருந்தாள்.

சுகன்யா... நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டீ...!! ஊருக்கு வந்த ரெண்டு நாள்லே, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறேங்கற சாக்குல, ஒண்ணுமே சொல்லாம கொள்ளாம, என் சம்பத், தன் அப்பா, அம்மாவோட, எங்க வீட்டுக்கு தீடீர்ன்னு காலையிலேயே வந்து நிக்கறாரு. அன்னைக்கு நான் எழுந்து குளிக்கக்கூட இல்லேடீ.

எங்கம்மா கதவைத் தொறந்தப்ப, நான் வீட்டு ஹால்லே, சோஃபாவுல கால் மேல கால் போட்டுக்கிட்டு கேஷுவலா நைட்டிலத்தான் படுத்திருந்தேன். அவங்க எல்லோரையும் ஒண்ணாப் பாத்ததும் எனக்கு கையும் ஓடலே; காலும் ஓடலே; அப்படியே திகைச்சு போய் நின்னுட்டேன்டீ.



நான் சாதரண நேரத்துல எப்படி இருப்பேன்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பினாங்களாம். உங்கத்தைக்கும், மாமாவுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சுடீ. அவங்க எங்கக் மேரேஜுக்கு அவங்க விருப்பத்தை, சம்மதத்தை, அப்பவே அங்கேயே என் எதிர்லேயே சொல்லிட்டாங்க.

சுகன்யா... உங்க அத்தையும் மாமாவும் ரொம்ப பெருந்தன்மையானவங்கன்னு, நீ சொன்னப்ப நான் நம்பவே இல்லே; நேர்ல அவங்களை பாத்து பேசினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, உங்கத்தைக்கு ரொம்பவே தாராள மனசுடி. அவங்க என்னை பிடிச்சிருக்குன்னு தன் வாயால மட்டும் சொல்லலேடி; சட்டுன்னு தான் போட்டுக்கிட்டிருந்த தங்கச்செயினை கழட்டி என் கழுத்துலே போட்டு அழகு பாத்தாங்கன்னா, பாத்துக்கோயேன்.

மாமாவும் எங்கிட்ட ரொம்ப அன்பா பேசினாருடீ. இன்னும் ஒரே மாசத்துல எங்க கல்யாணத்தை முடிச்சிடணும்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. சுகா... இதெல்லாத்துக்கும் முக்கியமான காரணம் நீதான்டீ. அனு தன் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவளிடம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சொல்லி சொல்லி நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சுந்தரியும், சம்பத்தின் கல்யாண விஷயத்தை மட்டுமல்லாமல், சென்னையில் குமாரசுவாமியின் கம்பெனியில் ஹெச். ஆர். டிவிஷனில் அவன் சேர்ந்துவிட முடிவெடுத்திருப்பதை பற்றியும் சுகன்யாவிடம் ஒரு வாரத்திற்கு முன் சொல்லியிருந்தாள்.

வேணிக்கு இது எத்தனையாவது மாசம்? எட்டாயிருக்கணுமே? அவகிட்டவும் மனசு விட்டு பேசி ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. இப்ப பேசலாமா? இப்ப மணி பத்தாயிடுச்சே? சங்கரும் அவளும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாலும் இருக்கலாம். இப்ப அவளை எதுக்காக கூப்பிட்டு தொந்தரவு பண்ணணும்? நாளைக்கு ஈவினிங் அவகிட்ட கண்டிப்பா பேசிடலாம்.

கண்களை மூடி படுத்திருந்தவள் சட்டென புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்து வானத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா. இத்தனை குளுமையான நிலவொளியிலும் ஏன் என் மனசு இப்படி எட்டு திசையிலும் தேவையே இல்லாம ஓடிகிட்டு இருக்கு? ஏன் எனக்கு வேண்டியவங்களையெல்லாம் திரும்ப திரும்ப நினைச்சுப் பாக்குது?

ஏன்டீ சுகன்யா... உனக்கு வேண்டியவங்க எல்லாரையும் நீ இன்னைக்கு நினைச்சிட்டியா? மனம் அவள் நெற்றிப்பொட்டில் பட்டென அடித்தது.

யெஸ். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

பொய் சொல்லாதடி..!. எங்கிருந்தோ ஒரு குரல் அவள் காதில் கேட்டது. தன் தலையை விருட்டென ஆட்டிக்கொண்டாள் சுகன்யா.

பயிற்சி முடிந்தபின், தில்லியிலேயே பணி புரிய தனக்கு விருப்பமென சுகன்யா எழுதிக்கொடுத்த விண்ணப்பம், ஒரே நாளில் அங்கீகரிக்கப்பட்டு, அவளுக்கு ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலேயே சேர உத்திரவு கொடுக்கப்பட்டதோடு அல்லாமல், அதே வளாகத்துக்குள்ளாகவே அவளுக்கு தங்குவதற்காக அரசாங்க க்வார்ட்டர்ஸும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

சுகன்யா எடுத்த இந்த முடிவு தெரிந்ததும், குமாரசுவாமி தன் மனதுக்குள் சிறிது ஆடித்தான் போனார். நடராஜனிடம் இதைச்சொல்லி வருத்தப்படவும் செய்தார். சிவதாணுவும், சுந்தரியும் தங்களால் ஆனமட்டும் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கடைசியில் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனார்கள்.

தாத்தா...! இப்பத்தான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன்! தில்லியிலே நான் நிரந்தரமாகவா இருக்கப்போறேன்? ஆஃப்டர் ஆல், மிஞ்சி மிஞ்சிப்போனா இன்னும் ஒரு வருஷம்தான் இங்கே நான் இருக்கமுடியும்? அதுக்கு அப்புறம் என்னை தமிழ்நாட்டுக்கு மாத்திடுவாங்க. ஒண்ணு நான் பாண்டிசேரியில வொர்க் பண்ண வேண்டியிருக்கும்; இல்லேன்னா சென்னை ஆஃபீசுக்கே வந்திடுவேன். நான் என்ன இன்னும் சின்னப்பொண்ணா? என்னைப்பத்தி ரொம்பக் கவலைப்படாதீங்க தாத்தா!

பாட்டியும், நீங்களும், ஃப்ளைட்ல, ரெண்டு மணி நேரத்துல தில்லிக்கு வந்துடலாம். ஒரு மாசம் என்னைப் பாக்கறதுக்கு நீங்க வாங்க. அடுத்த மாசம் உங்களையெல்லாம் பாக்கறதுக்கு நான் ஓட்டமா ஓடி வந்துடறேன். இல்லையா; நீங்க என் கூடவே இருக்கலாம். எனக்குன்னு இங்கே தனி வீடு கிடைச்சிருக்கு. சுகன்யா மிகவும் பிடிவாதமாக தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றாள்.

கட்டிலின் மேல் கிடந்த சுகன்யாவின் செல் மெல்ல சிணுங்க ஆரம்பித்தது. மணி பத்தாச்சு. இந்த நேரத்துல யார் கிட்டேருந்து கால் வருது? அனுவாத்தான் இருக்கும்! சம்பத் இதைச் சொன்னாரு. சம்பத் அதைச்சொன்னாருன்னு, இன்னைக்கு என்ன புதுக்கதை சொல்லப்போறாளோ? வர்ற காலை அட்டண்ட் பண்ணிட்டு, டயமுக்கு தூங்கினாத்தான், நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து, சமையலை முடிச்சுட்டு, ஆஃபிசுக்கு ஒழுங்கா கரெக்டான நேரத்துக்குப் போக முடியும்???

சுகன்யா விருட்டென எழுந்தாள். பவுர்ணமி நிலவுக்கும், அதன் குளுமையான மெல்லிய வெளிச்சத்திற்கும் ஒரு டாட்டா காட்டினாள். தரையில் கிடந்த பெட்ஷீட்டை உதறியெடுத்துக் கொண்டு, தன் படுக்கையறைக்குள் வேகமாக நுழைந்தாள். 

"ஹலோ.. அயாம் சுகன்யா ஹியர்... நீங்க யாரு?" செல்லை பாய்ந்து எடுத்த சுகன்யாவால், தன்னை அழைத்தது யார் என்பதை அவளால், செல்லில் பளிச்சிட்ட நம்பரை மட்டும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை.

"சுகன்யா... எப்படியிருக்கேம்மா? மறுபுறத்திலிருந்து வந்த குரலில் அன்பும், கனிவும் பொங்கிக்கொண்டு வந்தன.

"நான் நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க?" மறுமுனை இனிமையாக பேச ஆரம்பித்ததும், தன்னுடன் பேசுவது யார் என்பதை புரிந்து கொள்வது, சுகன்யாவிற்கு இப்போது சிரமமாக இல்லை.

"சுகன்யா... மணி ஏற்கனவே பத்தாயிடுச்சு... உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணிடலியே?" நடராஜன் மிருதுவாக பேசினார்.

"அங்கிள்... நீங்க என்னை எப்ப வேணாலும் கூப்பிடலாம். ஆனா யாரோ முகம் தெரியாத ஒருத்தர் கிட்ட பேசற மாதிரி என் கிட்ட நீங்க ஃபார்மலா பேசினா, அப்புறம் உங்க கிட்ட நான் பேசமாட்டேன்... ஆமாம்..."

நடராஜனுடன் சகஜமாக சிரித்து பேசுவதாக நினைத்தவளால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல், தன் முகம் வாடி சட்டென மவுனமானாள். அவர் தன்னைக் கூப்பிட்டு பேசுவார் என்று சுகன்யா சிறிதும் எதிர்பார்த்திராததால், கன்னங்கள் சிவந்து, உடலின் உஷ்ணம் வேகமாக ஏறி அவளுடைய குரல் சட்டெனத் தழுதழுத்தது.

நடராஜனின் குரலால், சில நாட்களுக்குப் பிறகு, தீடிரென புயலாகத் தன் மனசுக்குள் வந்து நின்ற செல்வாவின் முகம் சட்டென போகமாட்டேன் என அடம் பிடிக்க ஒரு நொடி தன் விழிகளை மூடி மூடித்திறந்தாள். இன்னைக்குத் தூங்கினமாதிரிதான் என மனதுக்குள் குமைய ஆரம்பித்தாள்.

செல்வா தன்னுடன் சண்டையிட்டுவிட்டு போனபின், நடராஜனோ, மல்லிகாவோ தன்னிடம் பேசாமலே இருந்தது அவள் மனதை அவ்வப்போது உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆயிரம்தான் இருந்தாலும் புள்ளையை பெத்தவங்களாச்சே... புள்ளையோட தப்பை அவங்க ஒத்துக்குவாங்களா? முதல் ஒரு மாதம் அவள் மனது இந்த போக்கில் போனது என்னவோ உண்மைதான். நாளாக நாளாக இந்த உறுத்தல் அவள் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

நடராஜன், இப்ப எங்கிட்ட என்ன பேசுவார்? சுகன்யாவின் மனசில் இந்த கேள்வி எழுந்ததும், அவளுக்கு இடது தொடைக்கு கீழ் முழங்கால் இலேசாக உதறியது. இரு கால்களும் தங்கள் வலுவினை இழந்து பஞ்சாக துவண்டன. கட்டிலில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். மீனாவின் பிறந்த நாளன்றுதான் அவரை, அவள் கடைசியாக சந்தித்து இருந்தாள். தங்கள் கல்யாணத்தைப்பற்றி அவருடன் மனம் திறந்து பேசிவிட்டு வந்திருந்தாள்.

அந்த வாரக்கடைசியில், கடற்கரையில், செல்வா வெகு மூர்க்கமாக, தன்னை, தன் உறவை, தன் காதலை தன்னிடமிருந்து முறித்துக்கொண்டு போனதும் அவள் நினைவிற்கு வந்தது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் கழித்து, சுகன்யா தில்லிக்கு வந்த பின், நடராஜனுடன் மீண்டும் அன்றுதான் முதன்முறையாக பேசிக்கொண்டிருக்கிறாள்.

"தேங்க் யூ சுகன்யா..!!"

நடராஜனின் குரலில் இருந்த சங்கடம் இப்போது வெகுவாக குறைந்தது போலிருந்தது. தன் 'காலை' அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையும், சுகன்யாவின் அந்த நேரத்து மனநிலையையும் வெகு துல்லியமாக அவர் கணக்கிட்டு விட்டிருந்தார். அவளுடன் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்பதையும் அவர் திட்டமிட்டுவிட்டிருந்தார்.

"அங்கிள்... மல்லிகா அத்தை எப்படி இருக்காங்க...?" சுகன்யா தன் மூச்சை நீளமாக இழுத்து தன்னை சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

"ஏதோ இருக்காம்மா..?"

"ஏன் அங்கிள் சலிச்சிக்கிறீங்க? அவங்களுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" வாய்க்கு வாய் தன்னை அன்புடன், உரிமையுடன், தில்லி வருவதற்கு முன் மாமாவென அழைத்துக்கொண்டிருந்த சுகன்யா இன்று தன்னை 'அங்கிள்' என்று விளித்தது அவருக்கு சுருக்கென்றிருந்தது.

"தடிமாடாட்டாம், புத்தியே இல்லாத, ஒரு புள்ளையை பெத்து வெச்சிருக்கோமே? சலிச்சுக்காம என்ன பண்றது?" இப்போது நடராஜனின் குரல் தழுதழுப்பாக இருந்தது.

"அங்கிள்...??"

"சுகன்யா.... மொதல்லே அந்த அறிவுகெட்ட முண்டம் பண்ண தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேம்மா..."

நடராஜன் நிஜமாகவே அந்த கசப்பான நிகழ்ச்சியால் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவருடைய குரல் அவளுக்கு தெளிவாக சொன்னது. அவர் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருப்பதையும் சுகன்யா உணர்ந்தாள்.

"அங்கிள்... பெரியவங்க நீங்க என்ன தப்பு பண்ணீங்க? எந்த காரணமும் இல்லாம, நீங்க இப்படி என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க... அங்கிள் ப்ளீஸ்..." சுகன்யாவின் கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

"ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்கத்தெரியாதவனா, அவன் மேல உண்மையான அன்பு வெச்ச ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையை குடுக்கத் தெரியாதவனா என் புள்ளையை நான் நான் வளர்த்திருக்கேனே; அது என் தப்புத்தானேம்மா..." நடராஜன் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

"அங்கிள்... செல்வா அன்னைக்கு ரொம்ப கோபமா இருந்தப்ப.. நான் என்னால முடிஞ்சவரைக்கும் பொறுமையா இருந்தேன் அங்கிள்.. என் நடத்தையை திரும்ப திரும்ப அவர் சந்தேகபட்டு என்னைத் தவறா பேசினதுனாலேதான் என் பொறுமையை நான் இழந்துட்டேன்.. அயாம் சாரி..."

"எல்லா விஷயத்தையும் நான் கேள்விப்பட்டேன். நீ தப்பு பண்றவ இல்லேம்மா... உன்னாலத் தப்பு பண்ணவே முடியாதும்மா.. செல்வா உன்னை சந்தேகப்பட்டது ரொம்பப் பெரிய தப்பு..."

"அங்கிள்... எல்லாம் என் கெட்ட நேரம்... இதுல அவரை மட்டும் கொறை சொல்லி எந்த பலனுமில்லே..."

"அயாம் சாரிம்மா... நீ ஆயிரம்தான் சொன்னாலும், என் புள்ளை செல்வா பண்ணது தப்புதாம்மா... நீயில்லே... வேற எந்த பொண்ணாயிருந்தாலும் இந்த அளவுக்கு உன்னை மாதிரி பொறுமையா இருந்திருக்க மாட்டாள்."

"நான் அதையெல்லாம் மறந்துடறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்... அங்கிள்..."



"ரொம்ப சந்தோஷம்மா... நடந்ததை நீ மறந்திட முயற்சி பண்றேன்னு சொல்றியே... உனக்கு உண்மையாவே பெரிய மனசு... ஆனா எங்களையெல்லாம் நீ மறந்துடலியே?"

"நோ... நோ.. அங்கிள் இப்படியெல்லாம் பேசி என்னை அழ வெக்காதீங்க... லாஸ்ட் வீக் கூட நானும் மீனாவும் பேசிகிட்டுத்தான் இருந்தோம். சீனுவும் அப்பப்ப என்கிட்ட பேசிகிட்டுத்தான் இருக்கார்."

"தெரியும்மா... ஆனா நீ செல்வா மேல இன்னும் கோபமா இருக்கேங்கறதும் எனக்குத் தெரியும்... இப்ப ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்ல விரும்பறேன்."

"சொல்லுங்க அங்கிள்..."

"எங்களால, உன்னைத்தவிர வேற யாரையும் எங்க வீட்டு மருமகளா நெனைச்சுப்பாக்க முடியலம்ம்மா..."

"....." 


No comments:

Post a Comment