Pages

Friday, 20 March 2015

சுகன்யா... 64

"ப்ளீஸ்... சுகன்யா... ரெண்டு நிமிஷம் உக்காரேன்..." சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்த போதிலும், அவன் குரலில் இருந்த ஆளுமையை மீற முடியாமல் சுகன்யா தன் கையிலிருந்த காலி கப்பை பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் வீசிவிட்டு, அவனருகில் வந்து உட்க்கார்ந்தாள்.

"சுகன்யா... உன் அன்புக்கோ, பாசத்துக்கோ நான் சுத்தமா லாயக்கில்லதவன். இது எனக்கு நல்லாத் தெரியும்... ஆனா இந்த நிமிஷம், உன் கிட்ட முழு மனசோட நான் மன்னிப்பு கேட்கிறேன்..." சுகன்யாவின் கைகளை சட்டென சம்பத் பற்றிக்கொண்டான். சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவன் குரலில் இருந்த வறட்சியிலும், கரகரப்பிலும் அவளுக்குப் புரிந்தது.

"ம்ம்ம்..." முனகினாள் அவள்.



சம்பத் பேசிய பேச்சின் அர்த்தம் சுகன்யாவுக்கு முழுமையாகப் புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், சுகன்யா அவன் முகத்தையே மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சற்று நேரம் முன்வரை கொப்பளித்துக் கொண்டிருந்த இனிய புன்னகை மட்டும் மெல்ல மெல்ல காணாமல் போனது.

"சுகன்யா... நீ என்னை மனசார மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லும்மா... அப்பத்தான் நான் இன்னைக்கு நிம்மதியா பெங்களூருக்குப் போக முடியும்... இல்லேன்னா என் மனசுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி என்னை மொத்தமா திண்ணு தீத்துடும்..."

"நீங்க பேசறது எதுவுமே எனக்கு நிஜமா புரியலை... நீங்க பண்ண தப்பு என்ன? நான் எதுக்கு உங்களை மன்னிக்கணும்?" சுகன்யா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

"நாலு நாள் முன்னாடி, நான் உன் நிச்சயதார்த்தத்தையே நிறுத்தப் பாத்தேன். உன்னையும் செல்வாவையும் அழவெச்சு பாக்கணும்ன்னு நெனைச்சேன். நானும் நீயும் எட்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறோம்ன்னு பொய் சொன்னேன்... 'எங்க நடுவுலே நீ எங்கடா வந்தேன்னு?' செல்வாகிட்ட உன்னைப்பத்தி தப்புத்தப்பா, தாறுமாறா அவதூறு பேசினேன்."

"என்ன சொல்றீங்க சம்பத்..?" அவள் உதடுகள் முணுமுணுத்தன. இவன் என்ன சொல்றான்...? தன் மனதுக்குள்ளும் அலறினாள், சுகன்யா. அவள் குரலில் ஆச்சரியம், கோபம், குழப்பம், என பலவிதமான உணர்ச்சிகள் மொத்தமாக கலந்து கட்டி வெளி வந்தன.

"உங்க தாத்தா வீட்டுல உன்னை நான் பாக்க வந்த போது, என்னை, நீ யார்ன்னு, கதவுக்கு வெளியிலே நிக்க வெச்சேன்னு எனக்கு ரொம்பவே கோவம். நீ செவப்பா, அழகா இருக்கே; நான் கருப்பா இருக்கேன்.. அதனாலத்தான் நீ என் கையை பிடிச்சி குலுக்கலேங்கறங்கற, அர்த்தமில்லாத, சீற்றம், ஏமாத்தம், அதிர்ச்சி எனக்கு..."

"அத்தான்... நிஜமாவே நீங்க என்னைத் தப்பாத்தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க...?"

"நான் உனக்கு உறவுங்கறதையும் நீ பொருட்படுத்தாம, என் கிட்ட சாதாரணமாகூட பேசாம, என்னை மொத்தமா உதாசீனம் பண்ணிட்டு, உன் ரூமுக்குள்ள போயி, நீ கதவை என் மூஞ்சியிலே அடிச்சு மூடினேன்னு, உன் மேல எனக்கு அடக்கமுடியாத கோவம்..."

"சம்பத்... அன்னைக்கு தாத்தா வீட்டுல நடந்த விஷயங்களை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நான் நெனைக்கிறேன்.."

"உன்னைப் பாக்க வந்த என்னை, நீ அவமரியாதை பண்ணேன்னு நான் நெனைச்சேன்; அதுக்காக உன்னை பழிவாங்கணும்ன்னு அந்த இடத்துலேயே முடிவு பண்ணேன்..." சம்பத் தன் குரல் குளற, முகத்தில் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்.. வேடிக்கையா இருக்கு நீங்க பேசறது.... தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களை நான் இப்படி ஃபீல் பண்ண வெச்சதுக்கு, அயாம் சாரி..." சுகன்யாவின் முகம் தொங்கிப் போயிருந்தது.

"சுகா.. நான் அந்த நேரத்துல எதையும் முழுமையா சிந்திக்கல. மனசுக்குள்ள கோவம்.. கோவம்.. கோவம்... அன்னைக்கு மூர்க்கம் மட்டுமே முழுமையா எனக்குள்ள இருந்தது. அதே நேரம் செல்வாவோட போன் வந்தது... அவன் உன் கிட்ட முக்கியமா ஏதோ பேச விரும்பினான். வீட்டு ஹால்லே அந்த நேரத்துல யாருமே இல்லை. நான் அந்த வாய்ப்பை முழுசா யூஸ் பண்ணிக்கிட்டேன்..."

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், என் செல்வா என்னை 'நிச்சயம்' பண்ண கும்பகோணத்துக்கு வந்தானா? இந்த விஷயம் மல்லிகாவுக்கும், நடராஜனுக்கும் தெரிஞ்சுருக்குமா? சம்பத்தை நான் செல்வாவுக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்கேன்... ஆனா இங்க இருந்தப்ப அவன் என் கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லையே??

எட்டு வருஷம் இவனை நான் காதலிச்சேன்னு சொல்லியிருக்கான்... செல்வா என்னை சந்தேகப்பட்டிருக்கணுமே? எந்த ஒரு ஆம்பளை மனசிலும் சந்தேகம் வரத்தானே செய்யும்? தான் காதலிக்கற பொண்ணைத் தன்னோட ஒருத்தன் இணைச்சுப் பேசினா அது அவனுக்கு அதிர்ச்சியாத்தானே இருக்கும்? சுகன்யாவுக்கு மேற்கொண்டு யோசிப்பதற்கே முடியவில்லை. அவளுக்குத் தன் கண்கள் இருளுவது போலிருந்தது. சம்பத்தை பளாரென அறையலாமா என்ற எண்ணம் வேகமாக அவள் மனதுக்குள் எழுந்தது.

நான் சென்னைக்கு போனதும், நிச்சயமா செல்வா இந்த விஷயத்தைப்பத்தி என் கிட்ட கேப்பானே... நான் அவனுக்கு என்ன பதில் சொல்றது.? சம்பத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாதுன்னு அவனுக்கு எப்படி புரிய வெக்கறது? செல்வா எந்த விஷயத்திலும் சுலபமா குழம்பி போறவன். இந்த விஷயத்துல கேக்கவே வேண்டாம். அவன் நிச்சயமா குழம்பி போயிருப்பான். ஆனா இங்க வந்தப்ப ரொம்பத் தெளிவா இருந்தானே? சந்தோஷமா பேசினானே? ஆசையா என் விரல்லே மோதிரம் போட்டானே? திருட்டுத்தனமா என் ரூமுக்குள்ள நுழைஞ்சு, உரிமையா என்னை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்துட்டுப் போனானே?

செல்வாவுக்கு ஒரு விஷயம், அதுவும் இதுமாதிரியான தப்பான விஷயம் ஒரு தெரிஞ்சிருக்குன்னா, அது சீனுவுக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்... சீனு, செல்வா வீட்டுல பிறக்காத பிள்ளை. தன் பர்சனல் விஷயங்களை மனசு விட்டு கலந்து பேசறதுக்கு சீனுவைத் தவிர செல்வாவுக்கு வேற யாரும் நெருங்கிய சினேகிதர்கள் கிடையாதே? அவங்க ரெண்டு பேருக்குள்ளவும், ஒளிவு மறைவே கிடையாதே? இந்த விஷயத்தை நிச்சயமா செல்வா சீனு கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கணும். ஆனா சீனுவும் என் கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே?

யெஸ்... ஐ காட் இட்... செல்வா குழம்பியிருந்தாலும், நிச்சயமா சீனுதான், அவன் தலையில ரெண்டு தட்டு தட்டி, இங்க வாடான்னு இழுத்துக்கிட்டு வந்திருக்கணும்... " சுகன்யாவுக்கு இதை நினைக்கும் போதே மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அவள் முகம் மெள்ள மெள்ள கருத்துக்கொண்டிருந்தது. 

"சுகன்யா... உனக்கு ஆப்பு வெச்சவனை, உன் அத்தான்னு சொல்லி, முறைப்படி நீ செல்வாவுக்கு என்னை அறிமுகப்படுத்தினே? வெள்ளை மனசோட என் கையைப் பிடிச்சு அவன் எதிரிலேயே குலுக்கினே..! அன்னைக்கு உனக்கு உடம்பு சரியில்லே, அதனாலதான் நீ என் கிட்ட சரியா பேசலைன்னு எனக்கு விளக்கம் சொல்லி, எல்லார் எதிரிலேயும் என் கிட்டே ஸாரி சொன்னே..!!" உணர்ச்சி வசப்பட்ட சம்பத்தின் கண்கள் கலங்கத் தொடங்கின... அவனால் கோர்வையாகப் பேசமுடியாமல் தவித்தான்.

சுகன்யா... சம்பத்தை அறையணும்ன்னு உனக்கு தோணினது உண்மைதான். ஆனா இவன் உண்மையைச் சொல்லி அழறதை பாக்கும்போது... இவன்தான் முட்டாள்தனமா ஒரு தப்பு பண்ணா, அதுக்காக நீ ஏன் உன் தரத்தை தாழ்த்திக்கணும்? சுகன்யாவின் மனசு வேகமாக அவளுக்குள் பேசியது. சுகன்யா நீ அவன் சொல்றதை முழுசா, பொறுமையா கேளு. சட்டுன்னு கோபப்பட்டு நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்காதே. ஏற்கனவே ஒரு தரம் நீ செல்வாகிட்ட இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம எரிச்சல்பட்டு, அவன் உறவே வேணாம்ன்னு ஓடியிருக்கே. இப்பத்தான் அந்த சிக்கல் சரியாகி இருக்கு. திரும்பவும் சட்டுன்னு பொறுமையை இழந்து உன் காதல் வாழ்க்கையில, திருமண வாழ்க்கையில, மீண்டும் எந்த குழப்பத்தையும் உண்டு பண்ணிக்காதே? அவள் மனம் அவளை எச்சரித்தது.

"ப்ளீஸ்... சம்பத்... என்னை நீங்க சரியா புரிஞ்சுக்காம, ஏதோ தப்பு நடந்து போச்சு... அதுக்காக நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க... இப்ப அழாதீங்க நீங்க..." சுகன்யா அவன் கையை மெல்ல வருடினாள்.

"சுகா.. அன்னைக்கு நீ எந்த வித்தியாசமும் பார்க்காம, என் கிட்ட பாசமா, அன்பா பழகினே.. பழகிக்கிட்டு இருக்கே; என்னை நம்பி தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கே; உன் நடத்தையால, வெள்ளை மனசால, ஒரே ஸ்ட்ரோக்ல என்னை.. என் திமிரை.. என் அகம்பாவத்தை... என் அகங்காரத்தை சுக்கு நூறா நீ ஒடைச்சு எறிஞ்சிட்டே... அன்னைக்கு நான் வெக்கத்தால தலை குனிஞ்சு உன் முன்னாடி நின்னேன்.. இப்பவும் நிக்கறேன்..."

"அத்தான்... போதும்... நீங்க இதுக்கு மேல எதையும் சொல்லாதீங்க ப்ளீஸ்... எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு" சுகன்யா தன் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.. சம்பத் அழுவதையும் அவளால் நேராகப் பார்க்கமுடியவில்லை. என்னமாதிரி ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன் நான்? அவனைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்து அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

"அத்தான்.. அத்தான்னு நீ என்னை, நமக்குள்ள இருக்கற உறவை முதன்மைப்படுத்தி அழைக்கறப்ப, என் ஒடம்பு சிலுத்துப் போவுது. நீ என்னை செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு... இப்படிப்பட்ட பொண்ணையா நான் பழிவாங்க நெனைச்சேனேன்னு நான் என் உள்ளுக்குள்ள எரிஞ்சு போறேன்..." புலம்பிக்கொண்டிருந்தான், சம்பத்.

"சம்பத்... ம்ம்ம்.. அத்தான்..." சுகன்யாவும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திணறினாள்.

"சுகன்யா, என் வாழ்க்கையில, பணத்தால எதையும் வாங்கிடமுடியும்ன்னு நம்பறவன் நான்; பணத்தால ஒரு பெண்ணுடலை சுலபமா அடையலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் நான்; என் கட்டான உடலால எவளையும் எளிதா வசியம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறவன் நான்.."

"ப்ச்ச்...ப்ச்ச்ச்"

"ப்ராண்டட் ட்ரெஸ் போடறதுனால, லேட்டஸ்ட் மொபைல் இருந்தா போதும், ஈஸியா இளம் பெண்களை சட்டுன்னு கவர்ந்துடலாம்ன்னு, அழகான ஃபிகர்களை கரெக்ட் பண்ணிடலாம்ன்னு, மனக்கோட்டை கட்டிக்கிட்டு, பைக்ல சுத்தி சுத்தி வந்தவன் நான்; என் அகங்காரத்துக்கு ஒரு எல்லையே இல்லாம வாழ்ந்தவன் நான்... ஆனா..." பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான், சம்பத்.

"ப்ளீஸ்... அத்தான்... நீங்க எதுவும் சொல்லவேண்டாம்... உங்க மனசு எனக்கு நல்லாப் புரியுது..." சுகன்யா அவன் வலது தோளைத் தன் கையால் மென்மையாக வருடினாள்.

"சுகன்யா நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகனும்.. அன்னைக்கு, சிவதாணு தாத்தா வீட்டுல, நான் உன்னை முதல் தரம் பாக்க வந்தப்ப, உன் உடம்பு மேல விழுந்த என்னோட அசிங்கமான பார்வையை சகிச்சிக்க முடியாம, நீ உன் மூஞ்சை திருப்பிக்கிட்டு உள்ளே போனேயே, அந்த நொடியில என் அகங்காரத்துக்கு மொதல் அடி விழுந்தது.”

“அத்தான்... போதும்.. நிறுத்துங்கன்னு சொல்றேன் நான்?” சுகன்யாவுக்கு மனதுக்குள் இலேசாக ஒரு இனம் தெரியாத பயம் எழுந்தது.

“அதுக்கப்புறம், நீ என்னை உன் அத்தான்னு, செல்வாகிட்ட அறிமுகம் பண்ணப்ப, நான் அவனை தப்பா பேசினது எதையுமே தன் மனசுல வெச்சுக்காம, சிரிச்சுக்கிட்டே செல்வா, என் கையைப்பிடிச்சு குலுக்கினப்ப, என் தலைமேல இன்னொரு பலமான அடி விழுந்தது... என் அகங்காரத்து மேல விழுந்த ரெண்டாவது அடி அது..”

"ப்ச்ச்ச்...ப்ச்ச்ச்.." சுகன்யா அவளையும் அறியாமல் பச்சாதாபத்துடன் சூள் கொட்டிக்கொண்டிருந்தாள்

“உன்னை மாதிரி ஒரு பெண்ணோட மனசை என்னை மாதிரி அயோக்கியனால, மளிகை சாமான் வாங்கற மாதிரி, வெலை கொடுத்து வாங்கமுடியாதுங்கறது, இந்த ரெண்டு மூணு நாள்ல எனக்கு நல்லாப் புரிஞ்சுப்போச்சு...."

"இப்ப எதுக்கு நீங்க இந்த அளவுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியலை...?" சுகன்யா அவள் உட்க்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தனது இடமும் வலமும் ஒரு முறைப் பார்த்தாள்.

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. அவன் குரலில் இருந்த தழதழப்பை உணர்ந்த சுகன்யா ஒரு கணம் ஆடிப்போனாள். நின்றிருந்த இடத்திலிருந்தே, அவள் தன் ஓரக்கண்ணால் அவனை நோக்கினாள். கண்கள் குளமாகி, கன்னங்கள் கோணிக்கொண்டு, மூக்கு நுனி துடிக்க, பேசமுடியாமல், விசும்பிக்கொண்டு, உட்கார்ந்திருந்தான், சம்பத்.

"சம்பத்... இப்ப எதுக்காக நீங்க இப்படி உணர்ச்சி வசப்படறீங்க? நான் சொல்றதை கேளுங்க... அத்தான்... ப்ளீஸ்... கூல் டவுன்..."

சுகன்யாவை நான் பழிவாங்க நினைசேன்; செல்வாவை, அவளுக்கு எதிராக உசுப்பினேன்.. இதெல்லாம் தெரிஞ்சப் பின்னும், இவ என்னை 'அத்தான்னு' 'அத்தான்னு' கூப்பிடறாளே...? சம்பத் உள்ளத்தில் வெட்கினான். அவன் உடல் குன்றிப் போனது. அவன் உடல் சிலிர்த்து நடுங்கினான். 



"சுகன்யா... நீ ஒரு மனுஷனடான்னு, கோபமா ஒரு தரம் என்னை திட்டேன்?" சுகன்யாவிடம் முறையிட்டான், சம்பத்.

"ஏனோ தெரியலை... ஐ ஸ்வேர்... உங்க மேல எனக்கு கோவமே வரலை... அத்தான்... உங்களைத் திருப்தி படுத்தணுங்கறதுக்காக இப்படி நான் பேசலை... என்னை நீங்க நம்புங்க... உங்க மனசுல இருக்கற குற்ற உணர்ச்சியை தயவு செய்து சுத்தமா இப்பவே, இங்கேயே, தொடைச்சி தூரப்போடுங்க..." சம்பத்தின் தோளை ஆதுரமாக சுகன்யா தட்டிக்கொடுத்தாள்.

"தேங்க்ஸ் சுகன்யா..." கண்களைத் துடைத்துக்கொண்ட சம்பத்தின் பார்வை வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் நிலைத்து நின்றிருந்தது. சில வினாடிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தவன், மெல்ல திரும்பி சுகன்யாவைப் பார்த்தான். அவள் வலது கையை தன் கையால் பற்றிக்கொண்டான். அவள் முகத்தை ஏக்கத்துடன் ஒரு நொடி பார்த்தான். தன் மனதில் சுகன்யாவிடம் தனக்குள் தோன்றியிருக்கும் காதலை சொல்லிவிட அவன் முடிவெடுத்தான்.

‘சுகன்யா... ஐ லவ் யூ..” சம்பத் மெல்ல தன் மனதை அவளுக்குத் திறந்து காட்டினான்.

“அத்தான்... என்ன சொல்றீங்க நீங்க...!!?? என் தலை மேல இப்படி ஒரு குண்டைத் தூக்கி ஏன் போடறீங்க...? இந்த அதிர்ச்சியை என்னாலத் தாங்க முடியலே..! சுகன்யா பதட்டத்துடன் கூவினாள். தன் வாயடைத்துப் போய், பேச்சு மூச்சில்லாமல், ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த சுகன்யா, மேலும் ஏதோ சொல்ல நினைத்து வாயைத் திறந்த போதிலும், அவள் குரல் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு வெளியில் முழுமையாக வரவில்லை.

"நிஜம்மாத்தான் சொல்றேன் சுகன்யா... என் மனசு உன்னை நேசிக்க ஆரம்பிச்சிடிச்சி.." சுகன்யாவின் முகத்தை சம்பத் கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தான். சுகன்யாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவன் மெல்லிய குரலில் மேலும் பேச ஆரம்பித்தான்.

"அயாம் வெரி ஹாப்பி சுகன்யா..."

இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது? இவனுக்கு எப்படி என் மன நிலைமையை புரிய வெக்கறது?" சுகன்யா கடமைக்காக அவனுக்கு "ம்ம்ம்...' என பதிலளித்த போதிலும், அவள் மனசுக்குள் வெகுவாக குழம்பி போயிருந்தாள்.

"சுகா.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு ரொம்ப ரொம்ப இலேசா இருக்கு. என் கிட்ட அன்போட பேசற, உரிமையோட என் மனசை புரிஞ்சுக்கிட்டு பேசற, அழகான ஒரு இளம் பொண்ணோடு உக்காந்து இருக்கறதே எவ்வளவு பெரிய சுகங்கறது எனக்கு இப்பத்தான் புரியுது!!" சுகன்யாவிடம் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்ட பின், தன் மனதிலிருக்கும் காதலை அவளிடம் சொல்லிய பின், தன் மனது இலவாகியிருக்க சம்பத் குரலில் பதட்டமில்லாமல் பேசிக்கொண்டு போனான்.

"அத்தான்.. உங்களுக்கு என்ன கொறை? நீங்க எந்தவிதத்துல யாருக்கு கொறைச்சல்...? நான் கருப்பா இருக்கேன்னு நீங்க ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மையோட இருக்கீங்க.? நிறையப் படிச்சு, நல்ல வேலையில இருக்கற நீங்க இப்படி ஒரு எண்ணத்தை உங்க மனசுக்குள்ள வெச்சிருக்கலாமா...? அதை மொதல்ல விடுங்க...!!" சுகன்யா அவனிடம் ஆதரவாக அவன் மனதுக்கு இதமாகப் பேசினாள்.

"தேங்க் யூ சுகன்யா..."

"என்னைப் போய் நீங்க அழகுன்னு சொல்றீங்க... உண்மையைச் சொல்லப்போனா, என்னைவிட அழகா, என்னைவிட அதிகமா படிச்சு, என்னை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ணுங்க, நல்லப் புத்திசாலித்தனம் உள்ள பொண்ணுங்க, இந்த ஊர்லேயே எவ்வளவோ பேரு இருக்காங்க.. அவ்வளவு ஏன்..? நம்ம சொந்த பந்தத்திலேயே நல்லப் பொண்ணுங்க இருக்காங்க..." சுகன்யா நிதானமாக, அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"பீளீஸ்.. சுகா, அவங்க யாருமே... என்னைக்குமே என்னோட மனசுக்கு பிடிச்ச 'சுகன்யா'வா ஆக முடியாது... இதை நீ புரிஞ்சுக்கணும்."

கரகரப்பாக வந்த சம்பத்தின் குரலில் போலி என்பது எள்ளளவும் இல்லை. பாசாங்கு சுத்தமாக இல்லை. உண்மையை அவன் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அவன் குரலில் ஒரு தீர்மானம், முழுமையான உறுதி இருந்தது.

"ம்ம்ம்..." இதற்கு மேல் அவனிடம் என்னப் பேசுவது என்று தெரியாமல் திகைத்தாள், சுகன்யா.

"சுகா, நீ என்னை காதலிக்க முடியாதுன்னு சொல்லு... என்னால அதை தாங்கிக்க முடியும்... செல்வாவை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்... எங்களுக்கு நிச்சயம் பண்ணியாச்சு.. இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் என் கிட்ட நீ எப்படி இந்த மாதிரி 'ஐ லவ் யூ' ன்னு ஃப்ரப்போஸ் பண்ணலாம்ன்னு என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விடு... என்னால அதை தாங்கிக்க முடியும்..."

"சம்பத்... பிளீஸ்... சம்பத்.. என் மனசையும், என் நிலைமையையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க... அது போதும் எனக்கு... நான் எதுக்கு உங்களை அறையணும்? இப்படியெல்லாம் நீங்க பேசாதீங்க... என் மனசை புண்படுத்தாதீங்க..."

"சுகா, ப்ளீஸ் ... நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீ தயவு செய்து எந்த பொண்ணையும் எனக்கு சிபாரிசு பண்ணாதே.. அதை மட்டும் என்னாலத் தாங்கிக்கமுடியாது..." சம்பத் தீவிரமான ஒரு பார்வையை அவள் மேல் எறிந்தான்.

"சம்பத்... போதும்... போதும்.. நீங்க அர்த்தமில்லாம பேசறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா?" சுகன்யாவும் தன் குரலில் சற்றே கடுமையைக் கூட்டினாள்.

"ப்ளீஸ்... சுகா... உன் நிலைமை எனக்கு நல்லாப் புரியுது... ஆனா இன்னைக்கு ஒரு நாள் நீ என்னை பேசவிடு..." சம்பத் அவளிடம் கெஞ்சினான்.

"என் நிலைமை புரிஞ்சி இருக்கும் போது இப்படியெல்லாம் நீங்க ஏன் என் கிட்ட பேசறீங்க..?" சுகன்யாவின் குரலிலும் சிறிது கெஞ்சல் வந்திருந்தது.

என்னை காதலிக்கறேன்னு சொல்லி ஒரே நிமிஷத்துல இவன் என்னை கலங்க அடிச்சுட்டானே? இவன் பாம்பா? இல்லை பழுதையா? இவனுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா...? இப்ப இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது...? இப்பத்தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு ஒரு வழியா என் கல்யாண விஷயம் செட்டில் ஆச்சுன்னு திருப்தியா இருந்தேன்.

இவன் என்னடான்னா அமைதியா இருந்த என் மனசுங்கற குளத்துல 'ஐ லவ் யூன்னு சொல்லி' ஒரு பெரிய பாறாங்ககல்லைத் தூக்கி போட்டு, வீனா ஒரு புயலை உண்டாக்கி, என் மனசு நிம்மதியை கொலைச்சுட்டானே...? இப்ப இந்த சிச்சுவேஷன்ல இவனை நான் எப்படி டீல் பண்ணணும்.. சட்டுன்னு எழுந்தும் போயிட முடியாது..

நோ... நோ சுகன்யா... அது ரொம்பத் தப்பு... இவன் மனசு ஒடைஞ்சு போயிருக்கான்... இன் ஃபேக்ட், இவனை ஜாகிங் போவலாம்ன்னு நீதான் கூப்பிட்டுக்கிட்டு வந்தே...சுகன்யாவின் மனது குழம்பியிருந்த போதிலும், நியாயமாக யோசித்தது.

சுகன்யா பொறு... கொஞ்சம் பொறுமையா இரு... இவன் கூட இருந்த நேரம் இருந்துட்டே... அவன் கொஞ்ச நேரம் பேசட்டும்... அவன் மனசுல இருக்கறதை கொட்டித் தீர்க்கட்டும்; அதுக்கு அப்புறம், நீ அவனை எந்த சூழ்நிலையிலும் காதலிக்க முடியாதுங்கறதை, நிதானமா இன்னைக்கே, இப்பவே, புரியவெச்சுடு. 'நோ' ன்னு சொல்றதை எப்பவும் தள்ளிப்போடாதே... அதுவும் இந்த விஷயத்துல தள்ளிப் போடாதே..! ஸ்ட்ரெய்ட்டா நோன்னு சொல்லிடு...

சம்பத், தன் கைகளை ஒன்றுடன் ஒன்றைக் கோர்த்து, விரல்களை வலுவாக நெறித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை மண்ணில் நிலைத்திருந்தது. சுகன்யா அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து, எதிர்த்திசையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கூட்ஸ் ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

கூட்ஸ் ரெயில், சுவாமிமலை ரெயில்வே நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரின் நடுவில் ஒரு இறுக்கமான மவுனம் தொடர்ந்து கொண்டிருந்தது. கூட்ஸ் ரயில், தூர வளைவில் சென்று மறைந்தது. ரயில் நிலையத்தில் மீண்டும் அமைதி.. சம்பத் ஒரு முறை தன் தொண்டையை செருமி கனைத்தான். மெல்ல நிமிர்த்து சுகன்யாவை ஒருமுறைப் பார்த்தான். மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"சுகன்யா இது வரைக்கும், என் கடந்து போன வாழ்க்கையிலே, நீ சொன்ன மாதிரி, உன்னை விட அழகான பொண்ணுங்க கூட நான் பழகியிருக்கேன்... அவளுங்க கூட ஒடம்புல பொட்டுத் துணியில்லாம என் படுக்கையில நான் உருண்டு பொரண்டு இருக்கேன்... அவளுங்க மேல எனக்கு எப்பவும் காதல் வந்தது இல்லே..."

"...."

இதெல்லாத்தையும் இப்ப எதுக்கு இவன் எங்கிட்ட சொல்றான்? பார்க்குலேருந்து தாத்தா கூடவே நேரா வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் தான் இவனை ஓடலாமான்னு கூப்பிட்டேன்... இப்ப என்ன பண்ணமுடியும்..? தன் மீதே அவளுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது. வந்தது வந்தாச்சு... வேற வழியில்லே... இவன் தன் மனசுல இருக்கறதை முழுசா சொல்லி முடிச்சிடட்டும். குறுக்க பேசாம இருக்கறது தான் நல்லது... தன் மனதில் முடிவெடுத்தாள், சுகன்யா.

இவன்... ஒருவேளை ஏதாவது மனஅழுத்தத்துல இருக்கானா? இவன் மனநோயாளியா? அந்த மாதிரியும் தெரியலியே? ரொம்பத் தெளிவா பேசறானே? நல்லாப் படிச்சவன், கை நிறைய சம்பாதிக்கறவன்... நான் கருப்பா பொறந்துட்டேன்னு ஏன் இப்படி ஃபீல் பண்றான்? இந்த தாழ்வு மனப்பான்மையினாலத்தான், நல்ல குடும்பத்துல பொறந்த இவன், இப்படி கண்ட பெண்களோட சகவாசம் வெச்சிக்கிட்டு, தன் வாழ்க்கையை பாழடிச்சுக்கிட்டு இருக்கானா?

சீரழிஞ்சு போனவளுங்க துணையில, தன் மனசோட புழுக்கத்தை தொலைக்கறதா நெனைச்சுக்கிட்டு, இவனும் குட்டிச்சுவரா போறானா? இந்த லட்சணத்துல என்னையும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு வேற பொலம்பறான்.. எனக்கு என்னப் பண்றதுன்னு ஒண்ணும் புரியலியே? சுகன்யாவின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தது.

"நான் பழகிய எந்தப் பொண்ணுகிட்டவும், உன்னைக் காதலிக்கறேன்னு எப்பவும் நான் சொன்னதே இல்லே சுகன்யா. ஏன்னா இதுவரைக்கும் நான் யாரையும் காதலிச்சதே இல்லே. அதெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரே ஒரு இரவு மட்டுமே நீடித்த உறவுகள்..."

"ப்ச்ச்ச்... அயாம் சாரி சம்பத்... கேக்கறதுக்கே வருத்தமாயிருக்கு.." சுகன்யா அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். சம்பத்தின் விழிகளில் கண்ணீர் இன்னும் தேங்கியிருந்தது.

"சுகன்யா... உன் மேல ஏற்பட்டிருக்கற இந்த உணர்வு, இதுக்குப் பேருதான் காதல்ன்னு சொன்னா, சத்தியமா சொல்றேன்... எனக்கு வேற யார் மேலேயும் இந்த உணர்ச்சி இதுவரைக்கும் வந்ததே இல்லே.. இதை மட்டும் நீ நல்லாப் புரிஞ்சுக்கோ..." தன் கண்களில் தளும்பிக்கொண்டிருந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.

"ம்ம்ம்..."

"உங்கிட்ட என் உள்ளத்துல இருக்கற உணர்ச்சியை, உன் மேல எனக்குள்ள வளர்ந்துகிட்டு இருக்கற இந்த உண்மையான உணர்ச்சியை, என் காதலை, உன்னிடம் வெளிப்படையா நான் சொன்னது தப்புன்னு நீ நெனைச்சா, அதுக்கு என்ன தண்டனை வேணா குடு.. நான் ஏத்துக்கறேன்.. ஆனா திரும்பவும் வேற எவளைப் பத்தியும் நீ எங்கிட்ட பேசாதே... பிளீஸ் சுகன்யா.. " அவன் குரல் மீண்டும் தழுதழுக்கத் தொடங்கியது.

சுகன்யா மொத்தமாக தனக்குள்ளே அந்த நொடியில் உடைந்தாள். இந்த அளவிற்கு இவன் என்னைக் காதலிக்கறானா? ஒரே நாள்ல, ஒரு ஆணால், ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ஆழமாக, உள்ள பூர்வமாக காதலிக்க முடியுமா? ஷுட் ஐ பீ ப்ரவுட் ஆஃப் திஸ்? அவள் ஒரு நொடி மனதுக்குள் திகைத்தாள்.

என் வாழ்க்கையிலே, என்னை மனசாரக் காதலிக்கறேன்னு எங்கிட்ட சொன்ன ரெண்டாவது வாலிபன் இவன். நோ டவுட்.. ஹீ ஈஸ் ஹேண்ட்சம்... ஹீ கேன் அட்ராக்ட் எனி வுமன் ஆஃப் மை ஏஜ்... தப்பை தப்புன்னு ஒத்துக்கற தைரியம் இருக்கற வாலிபன். உள்ளத்துல இருக்கறதை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்து தைரியமா சொல்லக் கூடிய வாலிபன் இவன்... இவனுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது? தன் உணர்ச்சிகளிலிருந்து சட்டென்று மீள முடியாமல் தவித்தாள், சுகன்யா.

"அத்தான்... உங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியாத கல்லு இல்லே நான்... நானும் ஒருத்தனை காதலிச்சவதான்... காதல்ங்கற உணர்ச்சிகளால அலைக் கழிக்கப்பட்டவதான்... உண்மையான காதல்ங்கறது என்னன்னு எனக்கும் தெரியும்..."

"தேங்க் யூ சுகன்யா... நீ என்னை எங்கே மூளை கொழம்பிய பைத்தியக்காரன்னு நெனைச்சிடுவியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்..."

"அத்தான்.. நான் செல்வாவை ஆறுமாசமா காதலிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் இன்னும் அவனை முழுசா புரிஞ்சுக்கலே.. அதுவும் உண்மைதான்.. ஆனா அவன் மேல நான் என் உசுரையே வெச்சிருக்கேன்... திரும்பவும் வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது... இது முன்னே நான் சொன்னதை விட பெரிய உண்மை... அவனும் அப்படித்தான்.. அவன் கூட எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி... நீங்களும் அந்த பங்ஷனுக்கு வந்து எங்களை வாழ்த்தினீங்க; உங்க காதல் உண்மையாகவே இருந்தாலும், நீங்க என்னை உண்மையா, உசுரா நேசிச்சாலும், இப்ப உங்களையும் என்னால எப்படி காதலிக்க முடியும்...?"

"அயாம் சாரி சுகன்யா... உன் மனசை கொழப்பணுங்கறது என்னோட நோக்கமில்லே... உன்னை எந்தவிதத்திலும் எமோஷனல் ப்ளாக் மெய்ல் பண்ணணுங்கறது என்னோட விருப்பமில்லே... ஆனா என்னால என் காதலை உன் கிட்ட சொல்லாமவும் இருக்க முடியலே..."



"பின்னே... இப்ப எதுக்காக உங்க மனசை என் கிட்ட தொறந்து காட்டறீங்க...?"

"சுகன்யா... இது என்னோட முதல் காதல்... நான் காதலிச்ச... காதலிக்கற... காதலிக்கப் போற முதல் பெண் நீ... என் காதலை உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட நான் சொல்லுவேன்?" சம்பத் உடைந்த குரலில் மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... நீங்க பேசறது எப்படி இருக்குன்னா, நல்ல பாட்டை ஒரு கச்சேரியில கேட்டுக்கிட்டு இருக்கறப்ப, பக்கத்துல ஒருத்தன் அந்தப்பாட்டுக்கு, தப்பு தப்பா போடற தாளங்கள் மாதிரியிருக்கு; அவன் தன்னையும் வருத்திக்கறான்; அடுத்தவங்களையும் நிம்மதியா பாட்டை ரசிக்க விடாம வருத்தறான்; இது உங்களுக்கு புரியலையா?" சுகன்யா அவன் மனசை நோக அடிக்க விரும்பாமல் வினயமாக பேசினாள்.

"சுகன்யா நான் உன் நினைவுகளோடு, அந்த நினைவுகளை என் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு வாழறதுல உனக்கோ, இல்லை உன் செல்வாவுக்கோ, ஏன் இந்த உலகத்துக்கோ என்னப் பிரச்சனை?" தன் உள்ளத்தை திறந்து விட்டதில், தன் காதலை சுகன்யாவிடம் சொல்லிவிட்டதில், இப்போது சம்பத்தின் குரலில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.


No comments:

Post a Comment