Pages

Monday, 16 March 2015

சுகன்யா... 55

"ம்ம்ம்... அப்பாடா... நிம்மதியா இப்படி தூங்கி எவ்வளவு நாளாச்சு?" சுகன்யா காலையில் நிதானமாக எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்த போது காலை மணி எட்டரையைத் தாண்டியிருந்தது.

பாசத்தையும், அன்பையும், மழையா பொழியற தாத்தா, பாட்டி எனக்கு கிடைச்சிருக்காங்க. நான் கொடுத்து வெச்சவ. நான் ஆசையா தாத்தா, பாட்டீன்னு கூப்பிடறதுலேயே அவங்க பூரிச்சிப் போயிடறாங்க. வயசானவங்க முகத்துல மலர்ற மகிழ்ச்சியைப் பாக்கும் போது, எனக்கு கிடைக்கற நிம்மதியை, ஆனந்தத்தை, இத்தனை நாளாக, நான் ஏன் இழந்திருந்தேன்..? மனதுக்குள் சட்டென ஒரு வெறுமை படர்ந்தது.

சுகன்யா...! அந்தந்த நிமிஷத்துல கிடைக்கற சுகத்தை முழுசா நீ அனுபவிடீ. ஏன் உன் வாழ்க்கையில கடந்து போனதை நெனச்சு நெனைச்சு வீணா ஏங்கறே? நாளைக்கு உன் லைப்ல என்ன நடக்கப் போகுதுன்னு நெனைச்சும் கவலைப் படாதே! அவள் மனதே அவளுக்கு ஆறுதல் சொன்னது.


நிதானமாக பரபரப்பில்லாமல் குளித்து, சிம்பிளாக ஒரு காட்டன் புடவையை உடலில் சுற்றிக்கொண்டு, உள்ளத்தில் புத்துணர்ச்சியுடன், கள்ளக்குரலில் ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே, சுகன்யா, தன் கூந்தலை அள்ளி முடிந்தவாறே ஹாலுக்குள் நுழைந்தாள்.

சிவதாணு பாயை விரித்து கூடத்தில் உட்க்கார்ந்திருக்க, குமாரசுவாமியும், ரகுராமனும் எதிரெதிரில் அமர்ந்து வெள்ளிக்கிழமை விசேஷத்திற்கு, உறவினர்களில் யார் யாரை அழைப்பது என பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அப்பா... எப்ப வந்தீங்கப்பா?" சுகன்யா, சிறு குழந்தையாக மாறினாள். வேகமாக ஓடி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

முழுசா பதினைஞ்சு வருஷம் என் அப்பாவை நான் பிரிஞ்சி இருந்தேன். மனசுக்குள்ள நான் பொதைச்சு வச்சிருக்கற ஆசையெல்லாம், வெள்ளமா, காட்டாறா கரையைக் கடந்து ஓடுது. அவள் மனம் விகசித்து ரெக்கைக்கட்டிக் கொண்டது.

"வெள்ளிக்கிழமை உனக்கு வேண்டியவங்க எல்லாரும் வர்றாங்க; அவங்களையெல்லாம் வரவேற்கறதுக்கு நீ ரெடிதானேம்மா?" குமாரசுவாமி மென்மையாக பேசினார்.

"எனக்கு வேண்டியவங்க...! என்னப்பா சொல்றீங்க?" சுகன்யா அவர் சொன்னது புரியாமல் திகைத்தாள்.

"செல்வாவுக்கும், உனக்கும் ரெண்டு நாள்லே நிச்சயதார்த்தம் பண்றதா இருக்கோம். நீதான் என் பொண்ணுன்னு நடராஜன் கிட்ட சொல்லிட்டேன். அவர் ஒரு நிமிஷ நேரம் திகைச்சு நின்னார். அப்புறம் ரொம்பவே சந்தோஷமாயிட்டார். மொறையா உன்னைப் பொண்ணு கேட்டு அவங்க வீட்டுலேருந்து வர்றாங்க. ஆர் யூ ஹேப்பி..?"

"ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..." சுகன்யா தந்தையின் கழுத்தை தன் முகம் மலர கட்டிக்கொண்டாள். இந்த விஷயத்தை முன்னாடியே என் கிட்ட ஏம்பா சொல்லலை? தந்தையிடம் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

செல்வா இப்ப என்னப் பண்ணிக்கிட்டு இருப்பான்...?" சுகன்யாவின் மனம் சென்னையை நோக்கிப் பறந்தது.

"உன்னோட ஃப்ரெண்ட் வேணியும், அவ ஹஸ்பெண்டும் பங்ஷனுக்கு வர்றாங்க... உனக்கு வேற யாரையாவது கூப்பிடணும்ன்னா சொல்லும்மா." ரகு தன் மருமகளின் தலையை ஆசையாக வருடினார்.

"வேணி வர்றாளா? ப்ளீஸ் மத்தவங்களையெல்லாம் கல்யாணத்தப்ப கூப்பிட்டுக்கலாம்.." சுகன்யா முகம் சிவக்க வெட்க்கத்துடன் பேசினாள். செல்வாவுடனான தன் நிச்சயத்தார்த்ததுக்கு தனக்கு வேண்டியவர்கள் அனைவரையும் அழைக்க அவள் மனம் ஏனோ விரும்பவில்லை.

"ஏன்டீ... உன்கூட காலேஜ்ல படிச்ச ஃப்ரெண்ட்ஸ் உமாவும், லட்சுமியும், இங்க உன் தாத்தா வீட்டுக்கு பக்கதுலதானே இருக்காங்க. அவங்களை கூப்பிடேன்...!! நல்லக்காரியம் நடக்கும் போது, உன் கூட உன் வயசு பொண்ணுங்க ரெண்டு பேரு இருக்க வேணாமா?" சுந்தரி ஹாலுக்குள் கையில் டிஃபன் தட்டுகளுடன் வந்தாள்.

"வேண்டாம்மா...ப்ளீஸ்.."

"சரிடீ நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்... "

"சுந்தரி... நீ சாயந்திரமா உன் பொண்ணை சுத்திப் போடும்மா... என் பேத்தி மொகத்துல கல்யாணக்களை வந்துடுச்சு..." கனகா முகத்தில் பெருமிதத்துடன் சுகன்யாவின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.

"ஆகட்டும் அத்தே.. இப்ப நீங்களும் மாமாவும் எழுந்திருச்சி சாப்பிட வாங்களேன்.."

"இல்லம்மா. டிஃபனை நான் எடுத்து வைக்கிறேன். நீயும் என் புள்ளையும் நம்ம வீட்டுக்கூடத்துல ஒண்ணா ஜோடியா உக்காந்து சாப்பிடறதைப் பாக்கணும்ன்னு, எவ்வள நாளா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?" கனகா தன் குரல் தழுதழுக்க மனதில் புதைந்திருக்கும் ஆசையை மெல்ல மெல்ல வெளியிட்டாள்.

"பாட்டீ... நிஜ்ஜம்மா சொல்றேன்; உங்க புள்ளையையும், மருமகளையும் ஒண்ணா நிக்க வெச்சு முதல்ல நீங்கதான் சுத்திப் போடணும்."

"நீ சும்மா இருக்க மாட்டேடீ?" அவள் பேச ஆரம்பித்ததும் சுந்தரி தவித்தாள்.

"பாட்டீ... போனவாரம், காஞ்சீபுரம் கோவில்லேயும், மஹாபலிபுரம் பீச்சுலயும், ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சிக்கிட்டு, குசு குசுன்னு பேசி சிரிச்சிக்கறதும், ரோட்ல இடிச்சிக்கிட்டு நடக்கறதுமா இவங்க பண்ண அட்டகாசத்தை என்னால தாங்க முடியலை."

"புதுசா கல்யாணம் ஆன தம்பதிங்க மாதிரி, சுந்து.. உனக்கு பொங்கல் வேணுமா? இல்லேன்னா பூரி ஆர்டர் பண்ணட்டுமா? ஒரே உபசரிப்புத்தான்... உங்க பிள்ளை, உங்க மருமகளுக்கு ஊட்டிவிடாத கொறைதான்..!! அந்த கூத்தை நீங்கப் பாக்க குடுத்து வெக்கலை.!!" குரலில் ஏற்ற இறக்கத்துடன் கைகளை ஆட்டி ஆட்டி பேசிய சுகன்யா தன் தாயின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

"போடீ.. என் மானத்தை வாங்கறதுக்குன்னே நீ இருக்கே?" சுந்தரி வெட்க்கத்தில் குங்குமமாக சிவந்த தன் கன்னத்தை மகளின் கன்னத்துடன் இழைத்தாள்.

"அம்மா... உனக்கு எங்களை ஜோடியா பாக்கணுமா?" குமார் சுந்தரியை வேகமாக இழுக்க, தன்னருகில் சோஃபாவில் உட்காந்த சுந்தரியின் தோளில் தன் கையை ஆசையுடன் போட்டுக் கொள்ள, அவள் முகத்தில் வெட்க்கப்பூக்கள் ஆயிரம் ஆயிரமாக மலர்ந்தன.

சிவா...சிவா...!! என் கொழந்தைங்க இப்படியே சந்தோஷமா, காலங்காலத்துக்கு நல்லாயிருக்கணும். தன் கண்களை தன் மேல்துண்டால் யாருமறியாமல் துடைத்துக்கொண்ட சிவதாணுவின் மனம் மவுனமாக அவர் வணங்கும் சிவனிடம் விண்ணப்பம் செய்தது. சிவதாணு, கனகா தம்பதியரின் வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

"மனமே முருகனின் மயில் வாகனம்..." சுகன்யாவின் செல் ஹிந்தோளத்தில் சிணுங்கியது.

"அம்மா... செல்வா போன் பண்றாரு... நான் பேசலாமா... கூடாதா? சீக்கிரம் சொல்லும்மா!" சுகன்யா தாயின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

"பேசுடாச் செல்லம்...."

சுந்தரி தன் திருமணத்துக்கு இருபத்து மூன்று வயதான பின், கணவனின் தோளில் தன் தலையைப் பதித்துக்கொண்டு, தன் வீட்டில், தன் கணவனுடன் கூடத்தில் கம்பீரமாக உரிமையுடன் உட்கார்ந்திருக்கும் சுகத்தை கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். 

"அப்பா... எனக்கு இங்கீலீஷ்ல "எஸ்" இனிஷியல் போட்டு ஒரு தங்க மோதிரம் வெள்ளிக்கிழமைக்குள்ள வேணும்பா..!!" செல்வாவிடம் செல்லில் பேசிவிட்டு வந்தவள் குமாரசுவாமியின் தோளைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.

"சுகா உன் கிட்டத்தான் ஏற்கனேவே மூணு மோதிரம் இருக்கே? எதையும் நீ ஒரு வாரம் தொடர்ந்து போட்டுக்கறதில்லே? இங்க அங்க கழட்டி வெச்சுட்டு என்னைத் தேடச் சொல்லி என் உயிரை எடுக்கற; இப்ப இன்னொன்னு எதுக்கு உனக்கு...?"

"அம்ம்ம்மா.."

"கல்யாணத்துக்கு நகை வாங்கும் போது ஒருவழியா உனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக்கலாம். பிள்ளை வீட்டுல அவங்க எதிர்பார்ப்பு என்னன்னு ஒண்ணும் தெரியலை. உனக்கு காதுல, மூக்குல, கையிலன்னு என்னக் கேப்பாங்கன்னும் புரியலை?" சுந்தரி தன் புருவத்தை உயர்த்தினாள்.

"போம்ம்மா... ஒரு மோதிரம்தானே நான் கேக்கிறேன்? எதுக்கு நீ எனக்கு இப்ப இவ்வள பெரிய லெக்சர் குடுக்கிறே? எப்பவும் நீ ஒரு டீச்சராத்தான் இருக்க ஆசைப்படறே? நான் என்னா உன் கிளாஸ்ல படிக்கற ஸ்டூடண்டா?"

"சுந்து நீ சும்மாயிரும்மா. என் பொண்ணு இப்பத்தான் ஆசையா முதல் தரமா என் கிட்ட ஒரு நகை வாங்கிக்குடுன்னு கேக்கிறா...!! அவளை நீ ஒண்ணும் சொல்லாதே.." குமார் தன் பெண்ணின் தலையை வருடிக்கொண்டிருந்தார்.

"அம்மா... நான் எனக்காக கேக்கலைம்மா. வெள்ளிக்கிழமை செல்வாவுக்கு நான் ப்ரசென்ட் பண்ணப்போறேன். அவர் எனக்கு அவரோட சேவிங்க்ஸ்லேருந்து ஒரு மோதிரம் வாங்கிட்டு வர்றார். வெள்ளிக்கிழமை எனக்கு அவரே போட்டு விடுவாராம்.." சிணுங்கிய சுகன்யாவின் குரலில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்திருந்தன.

"இது என்ன புது வழக்கம்...?! அத்தே நீங்களே சொல்லுங்களேன்... நம்ம வீடுகள்ல்ல இந்த மாதிரி மோதிரம் மாத்திக்கறதுங்கற பழக்கமெல்லாம் உண்டா??"

சுந்தரி தன் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். கனகா தன் கணவரை நோக்கினாள். இந்த வயதிலும் தன் கணவன் எதிரில் அவள் பேசுவது இல்லை. அவள் மனதில் தன்னுடைய பேத்தியின் ஆசை எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்ற விருப்பமிருந்தது.

"என் மாமியார், அவங்க புருஷன் எதிர்ல வாயைத் தொறக்க மாட்டாங்க... நீ உன் தாத்தாவை வேணுமின்னா கேளு?" சுகன்யா தன் பாணத்தை வேறு திசையில் செலுத்தினாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது..!! தாத்தாக்கிட்ட எப்ப எனக்கு என்ன வேணுமோ அப்ப அவரை கேட்டு வாங்கிக்கறேன். இப்ப நீ வாங்கி குடுப்பியா மாட்டியா?"

"சுகா... என்னம்மா இப்படி கொழந்தை மாதிரி அடம் பிடிக்கறே?" தன் பெண் மிஞ்சுவதைக் கண்டு சுந்தரி கெஞ்ச ஆரம்பித்தாள்.

"நம்ம குடும்ப வழக்கப்படித்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்லே நான்தான் பண்ணிக்கப் போறேனா? இப்ப என் ஆசையில நீ ஏன் குடும்ப பழக்கத்தையெல்லாம் நடுவுலே கொண்டாந்து திணிக்கறே?" தன் தாயின் குரல் தணிந்ததும் சுகன்யா, தன் குரலை உயர்த்தினாள்.

"சுகா... நீ நல்லாக் கேட்டுக்கடீ; நீ உன் வாயலாத்தான்... இப்படி விதண்டாவாதம் பேசிப் பேசித்தான் உன் வாழ்க்கையில கஷ்டப்படப் போறே..!!" சுந்தரி தன் மூஞ்சை சுளித்துக்கொண்டு தன் கணவரின் அருகிலிருந்து எழுந்தாள்.

"சுந்தரி.. நம்ம கொழந்தையை நீயே இப்படி மனம் கெட்டுப் பேசாதேம்மா.. ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது... நம்ம சொல்லே பட்டுன்னு பலிச்சிடும்.. இதுக்காகத்தான் என் மாமனார் எப்பவும் வீட்டுல நல்லதையே பேசணும்மின்னு சொல்லுவாரு..." கனகா தன் மருமகளையும், பேத்தியையும் சமாதானப்படுத்தும் நோக்கில் மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.

"பாட்டீ நீங்களே சொல்லுங்க; நாலு பேரு எதிர்ல எனக்கு அவரு ஒரு கிஃப்ட் குடுக்கறாரே? நானும் தானே அவருக்கு ஈக்வலா சம்பாதிக்கறேன்; பதிலுக்கு நானும் ஏதாவது குடுக்க வேணாமா? அவங்க ஃப்ரெண்ட்ஸ் நான் என்னக் கிஃப்ட் கொடுத்தேன்னு கேட்டா, அவர் பதில் சொல்ல முடியாம தன் தலை குனிஞ்சு நிக்கணுமா?"

"சரிடாச் செல்லம்... நீ சொல்ல நினைக்கறதை மெதுவா சொல்லேன். அம்மாக்கிட்ட நீ ஏன் கோபமா குரலை உயர்த்திப் பேசறே? நீ சீக்கிரமே இன்னோரு வீட்டுக்கு போகப் போறவ... உன் மனசுல நீ வெறுப்போட பேசலைன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா நீ போற எடத்துல இப்படி கோபமா பேசினா அவங்க சும்மா இருப்பாங்களா?" ரகு சுகன்யாவை தன் பக்கம் மெல்ல இழுத்தார்.

"அம்மா, இந்த மோதிரத்துக்கு நான் பணம் குடுக்கறேன்... நீங்க யாரும் இதுக்காக செலவு பண்ண வேண்டாம்.." சுகன்யா அவர்கள் சொல்லுவதை புரிந்து கொள்ளாமல், குரங்குப்பிடி பிடித்தாள்.

"கண்ணு... சுகா, பணத்தைப் பத்தி அம்மா பேசினாளா? சொல்றதை நீ மொதல்லே புரிஞ்சுக்கோ... ஏற்கனவே உன் மாமா ரகு செல்வாவுக்குன்னு செயின் வாங்கி வெச்சிட்டாரு; முறைப்படி அவருக்கு புது துணியெல்லாம் எடுத்து வெச்சிருக்கோம்..."

"ம்ம்ம்...சொல்லுங்கப்பா.."

"உன் சுயமரியாதைக்கோ, சுயகவுரவத்துக்கோ எந்த விதத்திலேயும் குறைவு ஏற்படாத மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பண்ணி வெச்சிருக்கோம். நிச்சயமா உன் செல்வாவோ, அவனைச் சேர்ந்தவங்களோ, எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு உன் நிச்சயதார்த்தம் நடக்கும். அதனால நீ இப்ப குறுக்குலே பூந்து புதுசா எந்தப் பழக்கத்தையும் உண்டாக்க வேணாம்ன்னு அம்மா சொல்றாங்க. அவ்வளவுதான்.."

குமாரசுவாமி தன் மகளுக்கு நிதானமாக சுந்தரியின் மனநிலையைப் புரியவைக்க முயன்றார். அவருக்கு தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் முழுவதுமாக இருந்த போதிலும், அந்த நேரத்தில் தன் மனைவியை விட்டுக்கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை.

"சிவ சிவா... சுந்தரி..!! கொழந்தை என்னமோ ஆசைப்படறா... அவ விருப்பப்படி விடும்மா... நான் அன்னைக்கு உங்க ரெண்டு பேருகூட வாக்கு வாதம் பண்ணேன். என்ன பலன் கிடைச்சது?"

இப்பவும் விவாதம் பண்றதுல எந்த பலனும் இல்லே. காலம் மாறிக்கிட்டே இருக்கு. நாமும் கொஞ்சம் மாறித்தான் ஆகணும். எல்லா பழக்க வழக்கங்களையும், நாமத்தான் நம்ம சவுகரியத்துக்காக உண்டாக்கி வெச்சிருக்கோம். அவைகள்தான் நம்ம குடும்பப் பழக்கங்களாக, வழக்கங்களாகத் தொடருது..."

"மாமா... நீங்க சொல்றது எனக்குப் புரியுது... ஆனா.."சுந்தரி தயக்கமாக இழுத்தாள்.

"கண்ணு சுந்தரி... இன்னைக்கு பெண் குழந்தைகளும் வெளியில போய் படிச்சிட்டு, கை நெறைய சம்பாதிக்கறாங்க. அவர்களுக்குன்னு மனசுல விருப்பங்களை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. பொருளாதார ரீதியிலே பெற்றவர்களை நம்பி அவங்க இன்னைக்கு இல்லே. மொத்தத்துல ஒரு ஆணை தன் தேவைகளுக்காக நம்பியிருந்த காலம் மலையேறி போச்சு... சிவ சிவா..." பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு குடித்தார்.

"தனிப்பட்ட ஒரு மனுஷனின், மனுஷியின், பொருளாதர சுதந்திரம், அவர்கள் குடும்ப பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல மாத்திடுது. சிவ சிவா..." சற்று நேரம் அமைதியாக இருந்த சிவதாணு மெல்லியக் குரலில் பேசினார். தன் முகத்தை மேல் துண்டால் துடைத்துக்கொண்டார். அவர் மனம் அவரிடம் பேச ஆரம்பித்தது.

ம்ம்ம்.. என் பேத்தி ஜாதகத்துல, ஏழாம் வீட்டுல இருக்கிற ராகுவோட தசா புத்தி அவளுக்கு நடக்கும் போது, சுகன்யா குடும்ப வழக்கங்களை மீறத்தான் செய்வாள். பெரியவர்களின் பேச்சை எதிர்க்கத்தான் செய்வாள். குறையுள்ள, நியாயத்துக்கு ஒவ்வாத தர்க்கங்களை தன் பேச்சில் உபயோகிப்பாள். தான் பிறந்த இனத்தைவிட்டு இன்னோரு இனத்தைச் சேர்ந்தவனோடு அவளுக்கு பழக்கம் ஏற்படும். தான் பிறந்த இடத்தை விட்டு புது இடங்களுக்கு செல்லுவாள். இது ராகுவோட அடிப்படையான, இயற்கையான வேலை.

சிவ.. சிவா... இவ்வளவு ஏன்...? என் பேத்தியை விரும்பியவனே... அவளை விட்டுவிட்டு விலகிப் போகலாம். மீண்டும் திரும்பியும் வரலாம். வரமாலும் போகலாம். எல்லாத்துக்கும் மேல எதிர்பாரத ஒருவனுடன், எதிர்பாராத விதத்தில் மணவாழ்க்கை சுகன்யாவுக்கு அமையலாம். இது அந்த வாலறுந்த பாம்போட வேலை...

சிவ..சிவா... இவங்களுக்கு இதெல்லாம் இப்ப எங்கப் புரியப் போகுது? கெரகங்கள் பேசறது மனுஷன் காதுல விழுந்துட்டா, அவங்க பேசறதை இவங்களால புரிஞ்சிக்க முடிஞ்சா, குடும்பங்கள்ல ஏற்படற இந்தப் பிரச்சனைகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.

சிவ... சிவா.. என் புள்ளை அவன் கல்யாண விஷயத்துல என் பேச்சைக் கேக்கலே. என் பேத்தியும் அவ வாழ்க்கையில தன்னோட அப்பனை மாதிரி பிரச்சனைகளை சந்திச்சுத்தானே ஆகணும். விதித்தவனின் விருப்பத்தை யாரால் மீறமுடியும்? விதித்தவனும் அவனே... விதித்ததை மாற்றுபவனும் அவனே; சிவதாணு நீளமாக பெருமூச்செறிந்தார்.

"ரகு... நீ ஒரு மோதிரம் அவ இஷ்டப்படி வாங்கிடுப்பா... அவ தாத்தாவே சொல்லிட்டார். அவளுக்கு இப்ப இங்க சப்போர்ட் அதிகமாயிருக்கு...!! இனிமே இவகிட்ட பேசறதுல அர்த்தமில்லே" சுந்தரி தன் உதடுகளை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

"தேங்க் யூ தாத்தா..." சுகன்யா குஷியாகிவிட்டாள்.

ஏழாம் வீட்டிலிருக்கும் ராகுவின் இயல்பான குணங்கள் புரியாமல் சுகன்யா தான் நினைப்பதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். சிரித்தமுகத்துடன் செல்வா அவள் மனமெங்கும் வியாபித்திருக்க, அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு மாடிக்கு ஓடினாள்.



சுகன்யாவின் திருமண நிச்சயத்துக்காக அழைக்கப்பட்டிருந்த சங்கரும், வேணியும் ஒரு நாள் முன்னரே கும்பகோணம் வந்து விட்டார்கள். வேணியைக் கண்டதும், சுகன்யா குதித்தோடி அவளைத் வாஞ்சையோடு தன்னுடன் இறுக்கிக்கொண்டாள்.

"வேணீ... என்னடி... உன் முகமெல்லாம் மின்னுது... உன் உடம்புல கொஞ்சம் கலர் ஏறின மாதிரி தெரியுது...! ஏதாவது விசேஷமா...?" சுகன்யா அவள் காதைக் கடித்தாள்.

"ம்ம்ம்... டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாடீ... ரெண்டாவது மாசம்.." வேணியின் முகம் பெருமையில் மலர்ந்தது.

"கங்கிராட்ஸ் சங்கர்... ம்ம்ம். மேரேஜ் வாழ்க்கையில ஜெயிச்சிடீங்க..!!" சங்கரின் கையைப் பிடித்து வலுவாக குலுக்கினாள் சுகன்யா.

"எல்லாம்... உன் ஃப்ரெண்டோட விடாமுயற்சிதான்... என்னை தூங்கவிட்டாத்தானே?"

"கிண்டலா...? வேணி பாத்தியாடீ உங்க வீட்டுக்காரர் பேசறதை? அப்புறம் ரொம்பத் தேங்க்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்... ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு லீவு எடுத்துகிட்டு, உங்க வைப்ஃபை அழைச்சிக்கிட்டு நீங்க பங்கஷனுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கலை. மாணிக்கம் மாமாவும் வசந்தி அத்தையும்தான், வேணியை அழைச்சிக்கிட்டு வருவாங்கன்னு நினைச்சேன்..." சுகன்யா குழந்தையின் குதூகலத்துடன் முகம் மலர சிரித்தாள்.

"சுகன்யா, நான் வீட்டுல இருக்கறதா வேண்டாமா? நான் உன் ஃப்ரெண்டை உன்னோட பங்கஷனுக்கு கூட்டிட்டு வரலேன்னா, அவ என்னை சும்மா விடுவாளா?"

"தோ... பாருங்க... என்னமோ எங்கிட்ட ரொம்பத்தான் பயப்படற மாதிரி நடிக்கிறீங்க..." வேணி பொய்யாக சங்கரை முதுகில் அடித்தாள்.

"பாத்தியா சுகா, வந்த எடத்துலேயே நாலு பேரு எதிர்ல என்னை இப்படி மொத்தறாளே? எங்க ரூமுக்குள்ள தனியா இருக்கும் போது என்னை என்னப் பாடுபடுத்துவா? பாக்கறதுக்கு அய்யோ பாவம் மாதிரி ஆக்டிங் குடுப்பா.. அவளுக்கு கோபம் வந்திச்சி.. என்னை உருட்டி பொரட்டி பட்டையைக் கிளப்பிடுவா...!!"

"சங்கர்.. வீட்டுக்கு வீடு வாசப்படித்தாம்பா...நான் வாங்காத அடியா!!" குமாரசுவாமி தன் முதுகைத் தடவிக்கொண்டே சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

"ம்ம்ஹூம்... வாயை மூடுங்களேன்.. எல்லார் எதிர்லேயும் மானத்தை வாங்கறீங்க.." வேணி தன் கணவன் கையை முறுக்கினாள்.

"சுகா... புருஷனை எப்ப அடிக்கணும்..!! எப்ப அணைக்கணும்...!!! இந்த டெக்னிக்கையெல்லாம், இப்பவே முழுசா உன் ஃப்ரெண்டுகிட்ட கத்துக்கோ... பர்ஃபெக்ட் டீச்சர் இந்த மேட்டர்ல... நல்லா விலாவரியா சொல்லி குடுப்பா உனக்கு... நீ ஃபீஸ் எதுவும் தரவேண்டாம்... உன் மேரேஜ்க்கு அப்புறம் செல்வாவை டீல் பண்றதுக்கு வசதியா இருக்கும்...!!!" சங்கர் சுகன்யாவை முகம் சிவக்க வைத்தான்.

"ஏங்க இப்படீ சின்னப்பொண்ணுகிட்ட கன்னாபின்னான்னு உளர்றீங்க..." வேணீ தன் புருவங்களை நெறித்து அவனை முறைத்தாள்.

"ஏன்டீ... புருஷனை அடிக்கற கைதானேடீ... ஆசையாவும் அணைக்கணும்.. அதைத்தான் சொன்னேன்." சங்கர் அன்று ஃபுல் மூடில் இருந்தான்.

மாடியில் சுகன்யாவின் அறையில் மதிய உணவுக்குப்பின் அவர்கள் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

***


"வாங்க, வாங்க - சந்தனம், பூ, குங்குமம் எடுத்துக்குங்க...!!"

சங்கரும் வேணியும் சென்னையிலிருந்து வந்த நடராஜனின் குடும்பத்தினரையும், உடன் வந்த ராமசாமி, சியாமளா தம்பதியினரையும், வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு வந்தவர்களை வாயார வரவேற்றார்கள். வேணியின் இனிமையான முகமும், அவள் முகம் முழுவதும் நிரம்பியிருந்த சிரிப்பையும் கண்ட மல்லிகாவின் மனம் சட்டென நிறைந்தது.

"நீங்க..." மல்லிகா அவள் கையைப்பற்றிக்கொண்டு இழுத்தாள்.

"நான் கிருஷ்ணவேணி... வேணீன்னு கூப்பிடுவாங்க... சுகன்யாவோட ஃப்ரெண்ட்... சுகன்யா சென்னையில எங்ககூடத்தான் இருக்கா... அவ மாமா ரகு என் மாமனாரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்... நீங்க எட்டு ஊரு தேடினாலும் எங்க சுகன்யா மாதிரி ஒரு பொண்ணை செல்வாவுக்கு நீங்க தேடிப்பிடிக்க முடியாது..!" வேணி புன்னகைத்தாள்.

நல்லசிவத்தின் குடும்பத்தினரையும் மற்ற நெருங்கிய உறவினர்களையும் குமாரும் சுந்தரியுமாக நேரில் சென்று, விசேஷத்திற்கு முதல் நாள் மாலையே வந்துவிடவேண்டும் என அன்பு கட்டளையிட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

ரகுராமனின் வீட்டு மாடி அறைகளில், வரும் விருந்தினர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொட்டைமாடியில் சாப்பிடுவதற்கு வசதியாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு ஷாமியானாவும் விரிக்கப்பட்டிருந்தது.

"சிவ சிவா... ரகு... இவங்கள்ல்ல மாப்பிள்ளை யாருப்பா? இவர்தான் தமிழ்செல்வனா? இவர் அவரோட சினேகிதர் சீனுவா? வாங்க தம்பி நான் தான் சுகன்யாவோட தாத்தா... இவ என் வீட்டுக்காரி கனகா..." வீட்டுக்குள் வந்தவர்களை சிவதாணுவும், கனகாவும் வரவேற்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

சிவதாணுவின் முகத்தில் துலங்கிய விபூதியையும், அவர் கழுத்தில் கிடந்த ருத்திராக்ஷ மாலையையும் கண்ட ராமசாமி, வந்த எடத்துல நம்ம ரசனைக்கும் ஏத்தமாதிரி ஒரு ஆள் கிடைச்சிட்டார் என மகிழ்ந்து போனார். இனம் இனத்தை சேருமல்லவா?

"செல்வா, சீனு, அது யாரு மீனாவா, இப்படி எல்லாம் வாங்க..." பரஸ்பரம் எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் ரகுராமன் அறிமுகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.

"நடராஜன்... நீங்க என்னை மன்னிக்கணும்... கொஞ்சம் லேட்டாயிடுச்சி... நான் முன்னே நின்னு உங்களையெல்லாம் வரவேத்து இருக்கணும்! எங்க உறவுகளை உங்களுக்கு அறிமுகம் பண்ணியிருக்கணும்... கிளம்பற நேரத்துக்கு ஒரு சின்ன வேலை ... பிரயாணமெல்லாம் சவுகரியமா இருந்ததா?" தன் கைகளைக் கூப்பிய வண்ணம் குமாரசுவாமி உள்ளே நுழைய அவரைத் தொடர்ந்து, சுந்தரியும், சுகன்யாவும் வந்தனர்.

"என்னங்க... குமாரசுவாமி சார் உங்க ஆஃபிஸ் மேனேஜர்தானே? இங்க எங்கே வந்தார்? இவரோட சுகன்யாவும், சுந்தரியும் வர்றாங்களே?" மல்லிகா தன் புருவத்தை உயர்த்தி அவரை ஒருகணம் நோக்கியவள், தன் கணவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

"மல்லிகா, குமாரசுவாமிதான் நம்ம சம்பந்தி. சுகன்யா அவரோட பொண்ணுதான், இந்த விஷயம் எனக்கே ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும். நீதானே சுகன்யாவோட அப்பா யாருன்னு கேட்டுக்கிட்டு இருந்தே... அதான் சஸ்பென்ஸா இருக்கட்டும்ன்னு உனக்கு நானும் சொல்லலே.." நடராஜன் சிரித்தார்.

"அண்ணா, நீங்க பண்ணது சரியில்லே... உங்களுக்கு தெரிஞ்ச உடனே... வீட்டுல அவங்ககிட்ட இந்த விஷயத்தை ஏன் சொல்லலை?" சுந்தரி நடராஜனிடம் போலியாக சண்டையிட்டாள்.

"பாத்தீங்களா சுந்தரி... எவ்வளவு முக்கியமான விஷயத்தை இவர் எங்கிட்ட இப்படி மறைச்சு வெச்சிருக்கார்? மல்லிகாவும் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

"மேடம் தப்பு என் மேலதான்... மறைச்சது நான். நீங்க என் மேலதான் கோபப்படணும்..!! இந்த விஷயம் அவருக்கும் உண்மையிலேயே தெரியாது. ஆனா அதுக்கான காரணத்தையும் உங்களவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்...? குமாரசுவாமி சற்றே வருத்தத்துடன் அவளிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார். 

"எப்படியிருக்கீங்க செல்வா... உங்க காதுக்குப் பின்னாடியிருந்த காயமெல்லாம் ஆறிடிச்சா? மனதில் பொங்கிவரும் உவகையுடன், கண்களில் ஆசை வழிய, சுகன்யா நேராக செல்வாவிடம் ஓடினாள். ஒரு கையால் அவன் கரத்தைப் இறுகப் பிடித்துக்கொண்டவள், மறுகையால் மீனாவின் கரத்தை பற்றிக் கொண்டாள்.

"நல்லாருக்கேன்...நீ எப்படி இருக்கே சுகு?" சந்தோஷத்தில் வாயால் பேசமுடியாமல், விழிகளாலேயே பதிலளித்தான் செல்வா.

"டேய்... பத்து நாளா உன்னைப் பாக்காம, உன் கூட பேசாம, தவிச்சுப்போய் நிக்கறா சுகன்யா... தனியா தள்ளிக்கிட்டுப் போய் பயப்படாம பேசுடா... அம்மா கேட்டா நான் சொல்லிக்கறேன்... நான் தான் இருக்கேன்ல்லா.. அவளுக்கு இருக்கற தைரியம் உனக்கில்லேயே?!" சீனு அவனை கலாய்க்க ஆரம்பித்தான்.

"சும்மா இருங்க சீனு... அம்மா என்னையே பாத்துக்கிட்டு இருக்காங்க... அவங்க காதுல விழுந்துடப் போவுது? ..." சுகன்யா வெட்க்கத்துடன் சிணுங்கினாள்.

"யாரு உங்க அம்மா காதுலயா? இல்ல இவன் அம்மா காதுலயா?"

"என் மாமியார் காதுல..." சுகன்யாவின் பதிலில் மகிழ்ச்சியின் கீற்றுகள்.

"மிஸஸ் மல்லிகா உன் மாமியார் மட்டுமில்லே..!!" சீனு தன் வாயைக் நீளமாகத் திறந்து இளித்தான்.

"பின்னே..?" இவன் என்ன புதிர் போடறான்.. சுகன்யா விழித்தாள்.

"சுகன்யா.. கொஞ்சம் கிட்டவாயேன்" சீனு சுகன்யாவை தன்னருகில் கண்ணால் சைகை செய்து அழைத்தான்.

"அப்படி என்ன ரகசியம் சொல்லப் போறீங்க?"

"உன் மாமியார்தான் எனக்கும் வுட் பீ மாமியார். ரெண்டு நாள் முன்னாடிதான்... மீனா என்னை அவ ஆளா அப்ரூவ் பண்ணியிருக்கா.. வீட்டு மருமக நீ... உன் தயவு எங்களுக்கு கண்டிப்பா வேணும்.. எங்களை கைவிட்டுடாதே சுகன்யா.." சீனு அவள் காதைக் கடித்தவன் தன் இரு கரங்களையும் கூப்பி அவளை போலியாக வணங்கினான்.

"மீனா.. இங்க வாயேன்... ஒரு நிமிஷம்.." சுகன்யா உரக்க கூவினாள்.

"என்ன சுகன்யா..?"

"சரியான ஆள்டீ நீ... ரகசியமா வெச்சிருக்கியே உன் விஷயத்தை.. நேத்து போன்ல பேசினப்ப கூட எங்கிட்ட சொல்லலே நீ..." சுகன்யா அவளருகில் வந்த மீனாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சும்மாருங்க அண்ணி... முதல்ல உங்க விவகாரம் முடியட்டும்.. அது வரைக்கும் இது வெளியில தெரியவேண்டாமேன்னு நெனைச்சேன்..!! சீனுவுக்குத்தான் ஓட்டை வாயாச்சே... உங்ககிட்ட உளறிட்டாரா?" மீனாவின் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

"அது சரி சீனு.. நீங்க ஏன் மீசையெல்லாம் வழிச்சிட்டு வந்திருக்கீங்க? சட்டுன்னு ஒரு செகண்ட், உள்ளே நுழைஞ்சதும் உங்களை எனக்கு அடையாளமே தெரியலை..!!"

"எல்லாம் மீனாட்சி அம்மனோட அருள்தான்..!! மீசை வெச்சிருந்தா கிஸ் அடிக்கறதுல ப்ராப்ளமா இருக்குமாம்...!! இது என் அந்தபுரத்து ராணியோட சொந்த அபிப்பிராயம். ஆம்பிளை நான் அழியறேன்... இன்னும் என்னன்ன கோலம் பண்ணப் போறாளோ... தெரியலை?" சீனு பவ்வியமாக பேசினான்.

"தனியா வாங்க... உங்களுக்கு வெச்சிக்கறேன் கச்சேரீ!!" மீனா அவன் கையை அழுத்திக் கிள்ளினாள்.

***

"கங்கிராட்ஸ்... மிஸ்டர் செல்வா, நான் வேணி... இவர் என் ஹஸ்பெண்ட் சங்கர். என் ஃப்ரெண்ட் சுகன்யா ஒரு பூ மாதிரி; காலையிலேருந்து அவகூடத்தான் நான் இருக்கேன்; எப்ப வரப் போறீங்க நீங்கன்னு... தவியா தவிச்சிக்கிட்டு இருந்தா..." வேணி ஒரு நொடி பேசுவதை நிறுத்தினாள்.

"உங்களை பாத்ததுக்கு அப்புறம்தான் அவ மூஞ்சியில சிரிப்பே வந்திருக்கு... கடுமையா ஒரு சொல் தாங்க மாட்டா; புசுக்குன்னு அவ மூஞ்சு வாடிப்போயிடும்.. இப்பவே சொல்றேன்.. நீங்க அவளை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கணும்... வேணி புன்னகையுடன் தன் கையை அவனிடம் நீட்டினாள்.

"கண்டிப்பா.. உங்களைப் பத்தி சுகன்யா நெறைய சொல்லியிருக்கா... நிஜமாவே உங்களைப் பார்க்கணும்ன்னு நான் ரொம்ப ஆவலாயிருந்தேன்..." செல்வா மிருதுவாகப் பேசினான்.

***

"வாங்க... வாங்க... மொதல்ல எல்லோரும் சூடா டிஃபன் சாப்பிடுங்க... அப்புறமா ஆற அமர உக்காந்து பேசலாமே..!! ரகுராமன் விருந்தினர்களை அழைத்தார்.

"ரகு... சம்பந்திங்களுக்கு அப்படியே வீட்டையும் சுத்திக்காட்டுப்பா...சிவ சிவா..." சிவதாணு குரல் கொடுத்தார்.

"தாத்தா வீடு அருமையா கட்டியிருக்கீங்க... காத்து அப்படியே ஆளைத் தூக்குது? இங்க ரியல் எஸ்டேட் பிசினெஸ்ல்லாம்... எப்படீ? நல்லாப் போகுதுங்களா?" சீனு பேச்சோடு பேச்சாக கொக்கிப்போட்டான்.

"சிவாய நம...!! தம்பி... இது நம்ம ரகுவோட வீடு... கீழே மேலேன்னு நல்லா ஸ்ட்ராங்கா கான்க்ரீட் போட்டு கட்டியிருக்கார். பூமிக்கு அடியில தண்ணி கல்கண்டு மாதிரி ஓடுது.. "போர் போட்டு வெச்சிருக்கார்..." கீழே பேஸ்மெண்ட்ல்லயும் ஒரு ரூம் போட்டிருக்கார். ஸ்டோரா யூஸ் பண்ணிக்கலாம்."

"அப்படீங்களா..?"

"உள்ளே வரும் போது பாத்து இருப்பீங்களே? போர்ட்டிக்கோவுல ரெண்டு காரு தாராளமா நிறுத்தலாம்.. இந்த வீடு அவருக்குப்பின்னாடி சுகன்யாவுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருக்காரு... பின்னாடி இருக்குது பாருங்க இரும்பு வேலி போட்ட காலி மனை... அதுவும் இந்த வீட்டோட சேர்ந்ததுதான்... என் மருமக சுந்தரி பேருல இருக்கு... அதுவும் யாருக்கு... சுகன்யாவுக்குத்தான்.."

"ம்ம்ம்... குட்.. வெரி குட்..."

"நீங்கள்லாம் இப்ப சுவாமிமலை போய் முருகனைத் தரிசனம் பண்ணப்போறதா.. ரகு சொன்னார்... இங்கேருந்து ஏழு கிலோ மீட்டர்தான்... ரோடு காலியா இருந்தா பத்து நிமிஷத்துல போயிடலாம்... அங்க நம்ம வீடு காவிரி கரையோரம் இருக்கு... சுவாமி தரிசனம் ஆனதும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்... அந்த பிராப்பர்ட்டியும் என் பேத்தி சுகன்யாவுக்குத்தான்..."

"ரெயில்வேயிலேருந்து ரிட்டயர் ஆனவன் நான்.. பென்ஷன் வருது இன்னும்... இந்த கிழவனுக்கு என்ன செலவு இருக்கு சொல்லுங்க... சிவ சிவா.. ஏதோ கொஞ்சம் பேங்குல கிடக்கு.. வேற யாருக்கு இதெல்லாம்... எல்லாம் நம்மப் பேத்திக்குத்தான்.."



"தாராள மனசுங்க உங்களுக்கு.." சுகன்யாவின் இன்றைய சொத்து மதிப்பை கூட்டி கழித்துப் பார்த்த சீனுவுக்கு உண்மையிலேயே சில வினாடிகள் பேச்சு வரவில்லை.

சிவதாணுவா கொக்கா...? வாழ்க்கையில் பழம் தின்று கொட்டைப் போட்டவராயிற்றே...? சுகன்யாவின் சொத்து விவரத்தை பேச்சோடு பேச்சாக சம்பந்தி வீட்டாரின் காதில் விழட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது பக்கத்தில் சற்று தள்ளி, சுந்தரி, கனகாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மல்லிகாவின் காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்து கொண்டிருந்தது.

"மீனா..!! .உங்கண்ணன் புடிச்சலும் புடிச்சான்... நல்ல புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கான்டீ.. அவன் காட்டுல சரியான மழைதான் போ..." சீனு மெல்ல முணுமுணுத்தான்.

"சீனு... நான் குபேரன் பெத்த பொண்ணுல்லே... என்னைக் கட்டினப் புடவையோட உன் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கே... மறந்துடாதே... ஞாபகமிருக்கட்டும்... என் அப்பாகிட்ட இந்த அளவுக்கு எதுவும் கிடையாது!!" மீனா அவனை முறைத்தாள்.

"கோச்சிக்காதடீ செல்லம்... சும்மா டமாசுக்கு சொன்னேன்..."

"ரொம்ப வழியறே.. சட்டுன்னு தொடைச்சுக்கோ" மீனா மெல்ல அவன் காதுக்கு மட்டும் விழுமாறு சீறினாள்.

***


No comments:

Post a Comment