Pages

Saturday, 14 March 2015

சுகன்யா... 53

ராமசாமிக்கு தெருவில் திரியும் நாய்களை கண்டால் எப்போதுமே மனதுக்குள் உள்ளூர பயம். உள்ளத்துக்குள் ஒரு இனம் தெரியாத நடுக்கம். தனக்கும் தெரு நாய்களுக்கும் இடையில், ஏதோ தீர்க்கமுடியாத ஒரு பூர்வ ஜன்ம கடன் பாக்கி இருக்கிறதென அவர் தீர்மானமாக நம்பினார். நடராஜனுக்காக தினமும் காலையில் தன் வீட்டு வாசலில் காத்திருந்து அவருடன் பாதுகாப்பாக வாக்கிங் செல்லுவதற்கு, இந்த நாய்களின் தொல்லையே மிக மிக முக்கியமான காரணம்.

அது என்னவோ, சொல்லி வைத்தாற் போல ராமசாமி தெருவில் இறங்க வேண்டியதுதான், எங்கேயோ தூங்கிக்கொண்டிருக்கும் அந்த தெரு நாய்களில், எதற்காவது மூக்கில் வியர்த்து, மெல்லிய உறுமலுடன் தன் எதிர்ப்பை காட்ட ஆரம்பிக்கும் கதை, சில நொடிகளில் மற்ற நாய்களும், முதலில் குரைக்க ஆரம்பித்த நாயுடன் சேர்ந்து அந்த தெருவே தாங்க முடியாத அளவிற்கு குரைத்தலில் ஈடுபட்டு, அந்த தெருவையே ஒரு யுத்தகளமாக மாற்றுவதில் சென்று முடியும். ஒரு புறம் நாய்களும் மறுபுறம் ராமசாமியுமாக வீயூகம் வகுத்து நிற்பார்கள்.



நாய்கள் கோரஸாக குரைக்க ஆரம்பித்தால், பொழுது விடிந்துவிட்டது; ராமசாமி தெருவில் நடந்து கொண்டு இருக்கிறார் என அந்த தெருவாசிகள் சொல்லும் அளவிற்கு அவருக்கும் அந்த தெரு நாய்களுக்குமிடையில் இருந்த நட்பு பிரபலமாகி போயிருந்தது.

தெருவில் இறங்கி சாதாரணமாக மற்றவர்களைப் போல் நடக்காமல் தன் கையிலிருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை ஆட்டி ஆட்டி அனாவசியமாக அவர் செய்யும் அபிநயத் தொந்தரவுகள் தாளாமல்தான் நாய்கள் தங்கள் பாதுகாப்பின் நிமித்தம் பக்கவாத்தியமாக குலைக்க ஆரம்பிக்கின்றன என்பது தெருவில் வசிப்போர்களின் வாதம்.

நான் என் பாதுகாப்புக்காக கையில் தடியோடு நடக்கிறேன் என சொல்லுவது ராமசாமியின் தரப்பு வாதமாக இருந்தது. எது எப்படியோ, அந்த தெருவில் காலை ஐந்து மணிக்கு எழ விரும்புகிறவர்கள் தங்கள் வீட்டில் அலாரம் வைப்பதை நிறுத்தி நெடுநாட்களாகிறது.

தனியாக அவர் வாக்கிங் கிளம்பினால் குறைந்த பட்சம், ஒரு கால் நொண்டியாகி, எதிர் வீட்டு முருங்கை மரத்தின் கீழ் படுத்திருக்கும் கருப்பனாவது அவரை நோக்கி குலைக்கும். அவர் கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லையென்று தெரிந்தால், அவரை கண்டிப்பாகத் துரத்தும்.

ராமசாமி தன் இனம் தெரியாத பயத்தில் தன் துண்டைக் காணோம், துணியைக் காணோமென இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி அவிழ தெருவில் ஓடி, மீண்டும் தன் வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கிராதிக் கதைவை மூடிய பின்னரே, நொண்டிக் கருப்பன் இடைக்கால போர் நடவடிக்கையாக தான் குரைப்பதை நிறுத்தும்.

ராமசாமி வீட்டுக்குள் நுழைந்த பின்னர் தன் வாலையும், காதுகளையும் ஆட்டியவாறு, வெற்றியுடன் தெருவின் நான்கு புறங்களையும் நோக்கும். அதன் பின் கம்பீரமாக நொண்டிக்கொண்டு தன் இடத்துக்கு திரும்புவதும் அந்த தெருவில் தினசரி நடக்கும் ஒரு வாடிக்கை நிகழ்ச்சியாக இருந்தது.

ராமசாமி, ஹிண்டுவில் தான் நிம்மதியாக தெருவில் நடக்க முடியாமல் தவிப்பதை எழுதிவிட்டார். முனிசிபாலிட்டிக்கு நூற்றுக்கணக்கில் மனுக்களை அனுப்பிவிட்டார்.

அவர் தெரு நாய்களை தன் தடியைக் காண்பித்து மிரட்டுகிறார் எனக் கேள்விப்பட்டு, வாயில்லாப் பிராணிகளின் சங்கச் செயாலாளர் பெண்மணி ஒருவர் அவர் வீட்டுக்கு தன் சங்க உறுப்பினர்களுடன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை பத்திரிக்கை நிருபர் ஒருவருடன் விஜயம் செய்தார்.

காலம் கெட்டுப் போச்சு... விலங்குகளுக்குன்னு ஒரு சங்கம்.. அதுக்கு பிரசிடெண்ட்...செயலாளர்கள். அதுவும் எல்லாம் பெண்டுகள்... ஆத்துக்காரியத்தைக் கவனிக்காம பொதுச்சேவைக்குன்னு வந்துடறதுகள், என மெல்ல தன் காதுக்கே கேட்காத அளவில் முணுமுணுத்துவிட்டு அலுத்துப்போய், தன் கர்ம வினையை நொந்தவாறு ஒருவழியாக ஓய்ந்து போனார்.

வெளிப்படையாக ஓய்ந்து போனாலும், இதுகளுக்கு எப்படித் தெரியுது நான் தெருவுக்கு வந்துட்டேன்னு? என்னைத் துரத்தமா விடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுதுங்களே? இந்த விந்தையை நினைத்து நினைத்து ராமசாமி மனசுக்குள் பெருமூச்சு விடாத நாளேயில்லை.

"குலைக்கறது நாயோட இயல்பு... உங்களைப் பாத்து அதுங்க குலைக்கலை... நீங்க வீணா ஏன் பயத்துல ஓடறீங்க? அதுங்க உங்களைத் தொரத்த நீங்களே ஏன் இடம் குடுக்கறீங்க..?"

தன் நண்பர் ராமசாமியின் அர்த்தமில்லாத பயத்தைப் போக்க நடராஜன் விடா முயற்சி செய்து பார்த்தார். அதனால் எந்த பலனும் கிட்டாமல் போக முடிவில் அவர் தன் மனம் வெறுத்துப் போய், ராமசாமியை மாத்தவே முடியாது... இனிமே தெரு நாய்ங்க கிட்டத்தான், அவரைப் பாத்து கொலைக்காதீங்கன்னு கருணை மனு குடுக்கணும்; அவர் தன் வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பார்.

நடராஜனின் தோழமை ராமசாமிக்கு வெகு அத்தியாவசியமாக தேவைப்பட்டதுக்கு அடுத்த காரணம் ஒன்று இருந்தது. சுந்தரம் அய்யர் மெஸ்ஸில் சுடச்சுட பில்டர் காஃபி குடித்துக்கொண்டே அன்றைய அரசியல் நிலவரத்தை ஒரு நாள் தான் அலசவில்லையென்றால், தன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடுவதாக அவர் நினைத்தார்.

ராமசாமி, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீசில், அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாக வேலைப்பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர். நடராஜனும் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

ராமசாமியை தமிழ் திருமறைகளில் ஒரு அத்தாரிட்டி என்று அவரைத் தெரிந்தவர்கள் சொல்லும் அளவுக்கு புலமைப் பெற்றவர். நடராஜனுக்கும் சைவத்தின் பேரிலும், சைவ நூல்களின் பேரிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில், அவர்கள் வீட்டருகில் இருக்கும் சிவன் கோவிலில் நடக்கும் உபன்யாசங்களுக்கும் ஒன்றாகப் போய் திரும்புவது அவர்கள் வழக்கம். நண்பர்கள் இருவரும் அந்த ஏரியாவில் ஒரே நேரத்தில் வீடு கட்டி, ஒரே வாரத்தில் குடி வந்தவர்கள்.

இருவரின் மனப்போக்கும் ஓரளவிற்கு ஒத்துப் போனதால், இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததால், தங்கள் ஓய்வு நேரத்தை ஒத்த காரியங்களில் செலவிட்டுக் கொண்டிருந்ததால், இயல்பாகவே ஒருவர் அடுத்தவரின் போல் ஈர்க்கப்பட்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக அவர்கள் நட்பு, பூத்துக் குலுங்கி மணம் வீசிக்கொண்டிருந்தது.

வழக்கம் போல் காலையில் எழுந்து தன் நண்பருடன் காலாற வாக்கிங் போய்வந்த ராமசாமி, சியாமளா கொடுத்த இரண்டாவது டோஸ் காபியை நிதானமாக ருசித்து குடித்தார். பரபரப்பில்லாமல் குளியலை முடித்துக்கொண்டு தன் ஈர வேட்டியை காய வைக்க மாடிக்கு வந்தார். வந்தவர் பார்வை எதேச்சையாக நடராஜன் வீட்டுப்பக்கம் செல்ல, மாடிப்படிக்கு அருகில் நின்றிருந்த சீனுவின் இறுக்கமான அணைப்பில் மீனா என்று யாவராலும் விளிக்கப்படும் மீனாட்சியைக் கண்டதும் அவர் மூச்சு ஒரு கணம் நின்று போனது.

வேறு யாராவதாக இருந்தால், இளம் காதல் ஜோடியின் நெருக்கத்தை தனது செல்லில் அழகாகப் பதிவு பண்ணி இணையத்தில் பிரசுரம் செய்து உடனடியாகப் பணம் பார்த்திருப்பார்கள்.

பார்த்தவர் யார்? இன்றைய இளசுகளையும், அவர்களின் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் மனம் போனபடி கொட்டமடிக்கும் நடவடிக்கைகளால்தான் இன்றைய உலகம் வெகு வேகமாக அழிவை நோக்கி செல்லுகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

தன் கடந்த கால பெருமையை, இளமையில் கடைபிடித்த ஒழுக்கத்தை, பெற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் தான் வைத்திருந்த மரியாதையை தினமும் சளைக்காமல் பார்ப்பவர்களிடமெல்லாம் பறை சாற்றும் ராமசாமி அல்லவா?

காலங்காத்தால இது என்ன கிரகசாரம்? அவர் தான் பார்ப்பதை நம்பமுடியாமல், தன் கண்களை ஒரு முறை தேய்த்து விட்டுக்கொண்டார். அதே நேரத்தில் சீனு, மீனாவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டதைக் கண்டதும், அவர் உடல் நடுங்கியது. முகம் சிவந்து போனது.

சீனுதான் ஒரு அயோக்கியன். இந்த பொண்ணு மீனாட்சிக்குமா புத்தி கெட்டுப் போச்சு? அவர்கள் ஒருவர் அணைப்பில் ஒருவராக மெய்மறந்து நின்ற நிலையைக் கண்டதும், கோபம் அவர் தலையுச்சிக்கு ஏறியது.

“கம்மினாட்டீ ... காவாலிப் பய... இவன் மூஞ்சும், மொகரக்கட்டையும், இவனைப் பாத்து மீனாட்சி விழுந்துட்டாளே? ஊர்ல நல்லப் பசங்களா இல்லாம போயிட்டானுங்க? இவன் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, இப்ப மீனாட்சியையே கடிக்கற அளவுக்கு வந்துட்டானா?”

சீனுவைக் கண்டால் ராமசாமிக்கு அறவே ஆகாது. அவர் உடல் ஆடியது. இப்ப நான் என்னப் பண்ணணும்? அவர் தன் நிலை தடுமாறி நின்றார். நடராஜன் காதுக்கு இந்த விஷயத்தை உடனடியா கொண்டுபோய், ஏதும் அறியாத இளம் பெண் மீனாட்சியின் மனசை கெடுக்கற இந்த சீனுவை, இந்த தெருவுல இருக்கற சொறி நாய்களை, ஒரு காலத்தில் என் தடியால அடிச்சி காலை ஒடைச்ச மாதிரி, அடிச்சி வெரட்டணும். நடராஜன் வீட்டுக்குள்ள அவன் திரும்பவும் எப்பவுமே நுழைய முடியாத மாதிரி பண்ணிடணும். மனதுக்குள் ஒரு உடனடித் தீர்மானம் கொண்டுவந்தார்.

ராமசாமி தன் கண்ணால் கண்ட விஷயத்தை, நடராஜன் வீட்டில் நேரம் காலமில்லாமல் உண்டு உறங்கியெழும் சீனுவை ஒரு பிள்ளையைப் போல் நடத்தும், அவர் வீட்டிலேயே அவருக்கிழைத்த மாபாதகத்தை, அவரிடம் உடனே சொல்லி எச்சரிக்க வேண்டும் என ஓடிவந்தார்.

தனது அருமை நண்பரின் ஒரே மகள் மீனாவின் எதிர்கால திருமண வாழ்க்கை சீராக அமைவதில் தனக்கிருக்கும் அக்கறையை காட்ட வேண்டும் என்ற துடிப்பில், வேகமாக தன் மாடியை விட்டிறங்கி நடராஜன் வீட்டு கேட்டை நெருங்கிக்கொண்டிருந்தார்.

முருங்கை மரத்து வேரில் சாய்ந்து, தன் உடலை வளைத்து நீட்டி, காயும் இளம் வெய்யிலை சொகுசாக அனுபவித்துக் கொண்டிருந்த நொண்டிக் கருப்பன், சிவனை தரிசிக்க வந்த நந்தனாருக்கு இடைஞ்சல் செய்த நந்தியாக, ராமசாமியைக் கண்டதும், தன் காதுகளை விரைத்துக் கொண்டு லேசாக உறுமத் தொடங்கினான்.

கருப்பனின் உறுமலோசையைக் கேட்டதும், சீனுவின் வலுவான அணைப்பையும், அந்த அணைப்பு தந்த புதிய சுகத்தையும், அவன் உதடுகளின் அழுத்தத்தையும், அந்த உதடுகள் தன் முகத்தில் ஏற்றிய வெப்பத்தையும், கன்னங்கள் சிவக்க, மனதுக்குள் மீண்டும் மீண்டும் ரீவைண்டிங் செய்து கொண்டு, ஹாலில் மேலும் கீழுமாக காரணமேயில்லாமல் உழன்று கொண்டிருந்த மீனாவுக்கு ராமசாமியின் முகம் மனதில் தோன்ற வெராண்டாவிற்கு விறுவிறுவென வந்தாள்.

ராமசாமி தங்கள் வீட்டை நோக்கி வெகு வேகமாக வருவதைக் கண்டதும் வெராண்டாவில் நின்று கொண்டிருந்த மீனாவுக்கு, அந்த நேரத்தில் தங்கள் வீட்டுக்கு வரும் ராமசாமியின் வருகை ஏதோ விபரீதமாகப் பட்டது. வெராண்டாவின் ஸ்க்ரீனை சட்டென இழுத்து மூடி அதன் பின் நின்று அவரைப் பார்க்கத் தொடங்கினாள்.

வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டே ஒதுங்கிப் போன சீனுவை, சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி அவனை நான் வம்புக்கிழுத்து, அஞ்சு நிமிஷம் முன்னாடி, நான் கட்டிபுடிச்சி முத்தம் குடுத்ததை இந்த கெழம் பாத்து கீத்து தொலைச்சிடுச்சா...? அப்பாவும், இந்த வெட்டிப் பேச்சு வீராசாமி மேல ஒரு சாஃப்ட் கார்னர் வெச்சிருக்கார்; இப்பல்லாம் இதும் கிட்டத்தானே எந்தவிஷயமா இருந்தாலும் ஒரு ஒப்பீனியன் கேக்கறார்.

அந்த ஹோதாவுல இந்த எதிர் வீட்டு கெழம் எங்களை நெருக்கமா பாத்துட்டதை, நம்ம வீட்டுல போட்டுக் குடுக்கத்தான் இவ்வளவு வேக வேகமா வந்துகிட்டு இருக்கா? இது என்ன வம்பாப் போச்சு? அவள் திகைப்பும் திகிலுமாய் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு கணம் தடுமாறி மனதுக்குள் பதைத்தாள். என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றாள். சீனுவை உஷார் படுத்தலாமா? அவள் மனதில் குழப்பத்துடன் நின்றாள்.



தான் எடுத்த தீர்மானத்தை உடனடியாக செயலில் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், வேகமாக நடராஜன் வீட்டை நோக்கி ஓடி வந்த ராமசாமி, கருப்பனின் மெல்லிய உறுமலைக் கேட்டதும் ஒரு நொடி தயங்கி நின்றார்.

வந்த அவசரத்துல கையில தடியைக் கொண்டு வர்றலே? இன்னைக்குன்னுப் பாத்து இடுப்புல கோமணமும் கட்டலை... இந்த கர்மம் புடிச்ச நொண்டி சனியன் என் மேலப் பாய்ஞ்சு எங்கேயாவது ஏடா கூடாம புடுங்கி கிடுங்கி வெச்சா என் கதி என்னாவறது? ராமசாமி அந்த வீட்டின் கேட்டருகில் வந்தவுடன் ஒரு நொடி தயங்கி நின்றார்.

மாடிப்படிக்கட்டில் உட்க்கார்ந்து, மீனா தன்னை ஆசையுடன் இறுக்கியதில் அவள் மெல்லிய உடல், தன் மார்பில் உண்டாக்கிய கதகதப்பை மனதுக்குள் அனுபவித்துக்கொண்டிருந்த சீனு, கேட்டருகில் ராமசாமியைக் கண்டதும், தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து தலையை நிமிர்த்த, ராமசாமியின் ஈரவேட்டி, அவர் மாடியில் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவன் மனதில் விருட்டென ஒரு அபாய சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.

போச்சுடா...! டேய்... சீனு உன் கதை கந்தலாயிடுச்சுடா !! மீனா என்னை கிஸ் அடிச்சதை இந்த "புத்தர்" தன் வீட்டு மாடியிலேருந்து பாத்துட்டு இருக்கணும்..!! அய்யரு வூட்டுல மணியடிச்ச சத்தம் இன்னைக்கு கேக்கலையே? அதான் நெத்தியில பட்டை, கழுத்துல கொட்டைன்னு பதறிப் போய் இன்னும் பூஜையைக் கூட முழுசா முடிக்காம இங்க ஓடியாரா சாமியாரு?

என் காதல் ஆரம்பிச்சு இன்னும் முழுசா இருபத்து நாலு மணி நேரம் கூட ஆவலை. அதுக்குள்ள என் காதலுக்கு சங்கு ஊதறதுக்கு இந்த அய்யிரு சிவகோலத்துல, காலங்காத்தால பல்லு வெளக்கிட்டு வந்துட்டாரு...!!

காதலியை எப்படி யாருக்கும் தெரியாம கிஸ் அடிக்கணும்ன்னு ஊருக்கெல்லாம் நான் உபதேசம் பண்றேன். ஆனா என் கதை இப்ப காத்துல பறக்கப் போவுது..!! இதுக்குத்தான் நேத்திக்கு "வயசுக்கு வந்த" சின்னப் பொண்ணுங்க சகவாசம் கூடாதுன்னு விஷயம் தெரிஞ்ச நான் எல்லாருக்கும் சொல்றேன்.

அனுபவப்பட்ட பொண்ணுங்களா பாத்து கரெக்ட் பண்ணணும், கடலைப் போடணும்ன்னு நம்ம பசங்களுக்கு நான் சொல்றேன்...!! ஆனா இன்னைக்கு என் விதி எனக்கு முன்ன வலுவா நிக்கும் போது நான் என்ன செய்யமுடியும்? நான் கேவலமா ஆவப்போற விஷயம் நம்ம பசங்களுக்கு தெரிஞ்சா... என்னை எவனாவது மதிப்பானுங்களா?

எல்லாம் என் தலையெழுத்து...!! செய்கூலி, சேதாரம்ன்னு எந்த வீண் செலவும் இல்லாம, தன்னால வர்ற ஃபிரி ஆஃபர்ன்னு, லட்டு மாதிரி நமக்கு நல்லாத் தெரிஞ்ச மீனா எனக்கு கெடைச்சிட்டாளேங்கற அதுப்புல, அக்கம் பக்கத்தைப் பாக்காம, அவசரப்பட்டு அவ வீட்டுக்குள்ளவே அவளைக் கட்டிபுடிச்சது இப்ப வெனையா ஆகிப் போச்சு...!

நேத்துதான் வேலாயுதத்துக்கு பொறுத்தவன் பூமியாள்வான்டா... சும்மா சும்மா டாவடிக்கற பொண்ணு மார்லே கன்னாபின்னான்னு கையை போடாதடா, உன் ஆளு பயந்துடப் போவுதுன்னு புத்தி சொல்லிட்டு வந்தேன்... அவனுக்கு பாடம் நடத்திட்டு நான் சும்மாயிருந்தனா? மீனா கிட்டவந்தா என் புத்தி எங்கப் போச்சு... டேய் சீனு... உன் தப்புக்கு, உன்னை நீயேதான், உன் செருப்பால அடிச்சுக்கணும்...!!

மீனா சொன்னாளேன்னு ஏற்கனவே தாடி மீசையெல்லாத்தையும் வழிச்சிட்டு அடையாளம் தெரியாம நிக்கறேன்..!! இப்ப இந்தத் தெரு பெரிய மன்சன் ராம்சாமி, எனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தறதுக்கு வேகமா வந்துக்கிட்டு இருக்கான்.

ம்ம்ம்... விதின்னு சொல்றாங்களே அது இதானா? நடக்கறது நடக்கட்டும் அப்படீன்னு வுட்டுடலாமா? இல்லே... "டேய் சீனு உனக்கு மீயுஜிக் ஸ்டார்ட் பண்ண வந்துட்டேன்னு" தலைத் தெறிக்க ஓடியார அய்யரை தெரு கோடிக்கா தள்ளிகிட்டு போய்... ஒரு தபா மன்னிச்சுடு "தலை" ன்னு அவரு கால்ல சட்டுன்னு விழுந்துடலாமா?

சீனுவின் மனம் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்று மெல்லிய பயத்துடன் ஊசலாடிக் கொண்டிருந்தது. மவனே நீ என்னைக்காவது இந்த பெருசுகிட்ட மரியாதையா ஒரு வணக்கம் சொல்லியிருப்பியா...? அய்யரு உன் வருங்கால மாமனாரோட க்ளோஸ் பார்ட்டிட்டா... நான் சொல்றது உனக்குப் புரியுதாடா நாயே? அவன் மனசு அவனைப் புரட்டிப் போட்டு இரக்கமில்லாமல் அடித்தது.

வேகமாக வந்த ராமசாமியின் மனதில் இன்னொரு விஷயம் பட்டென உதித்தது. இப்ப நான் நடராஜன் வீட்டுக்குள்ளப் போனா அந்த கேடு கெட்ட சீனுக்கு நான் தான் அவனைப் பத்தி போட்டுக்குடுக்க வந்திருக்கேன்னு தெரிஞ்சு போவும்... அவன் என்னை மொறைச்சுக்குவான். அவனோ ஒரு கேடு கெட்ட குடிகாரப்பய...!! அவனைப் பத்தி நல்லபடியா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே?

நான் தனியா எங்கயாவது போகும் போது என்னை மடக்கி என் வேட்டியைப் புடிச்சு இழுத்து வம்பு பண்ணாலும் பண்ணுவான்! இல்லேன்னா இந்த நொண்டிக்கருப்பனுக்கு அப்ப அப்ப அவன் பொறை வாங்கிப் போடறானே; இந்த சனியனை எனக்குப் பின்னாடி "சூ" காட்டி வுட்டாலும் வுடுவான். அதுவும் அவன் நன்றிக் கடனைத் தீத்துடறேண்டா "படவா ராஸ்கல்ன்னு" என் காலை கவ்வினாலும் கவ்வித் தொலைக்கலாம்..

மொதல்ல அவன் இங்கேருந்து போய்த் தொலையட்டும். நின்ற இடத்திலிருந்து நடராஜன் வீட்டை அவர் நோட்டம் விட்ட போது, மாடிப்படியோரத்தில் மீனாவை காணவில்லை. சீனு மட்டும் மாடிப்படிக்கட்டில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு உட்க்கார்ந்திருந்தான்.

ராமசாமி தான் இருந்த குழப்பத்திலும், கருப்பனிடம் கொண்டிருந்த பயத்திலும், வெரண்டாவை சரியாக ஏறெடுத்து நோக்காததால், மீனா திரைச்சீலைக்கு பின் நின்றவாறு தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. தான் வந்ததை யாரும் பார்க்கவில்லை என்ற திருப்தியில், ஒரு பெருமூச்சுடன் ராமசாமி சத்தமெழுப்பாமல் வந்த வழியே திரும்பி தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

ராமசாமி தன் வீட்டை நோக்கி நகர்ந்ததும், நொண்டிக் கருப்பனும் ஆசுவாசத்துடன் ஒரு முறை தன் உடலை முறுக்கி நீட்டிக்கொண்டான். பின் நிம்மதியாக முருங்கைமரத்து அடிவேரில் தன் உடலைச்சாய்த்துக்கொண்டு, இளம் வெய்யில் தந்த சுகத்தில் கண்ணுறங்க ஆரம்பித்தான். 

"அடியே சியாம்ளீ... சட்டுன்னு குடிக்கறதுக்கு கொஞ்சம் தூத்தம் கொண்டாடீ..." ராமசாமி தன் மனைவியை உரக்கக் கூவி அழைத்தார்.

"இப்ப எதுக்கு இப்படி ஒரு கூப்பாடு... எனக்கு என்ன காது அடைஞ்சாப் போச்சு?"

சியாமளா தன் வலது புறத்தை ராமசாமிக்கு கொடுத்த அர்த்தநாரினி. அவர் வீட்டில் முப்பத்தஞ்சு வருஷத்துக்கும் மேலாக சமையலறை மேடையில் குக்கரும் கையில் சில்வர் கரண்டியுமாக நிற்பவள், தன்னைக் கொண்டவரிடம் எல்லையில்லா அன்பு பூண்டவள்.

சியாமளா தன் கணவரின் கூப்பிட்ட குரலுக்கு பதிலாக "ஏன்னா கூப்பிட்டேளா?" என்னும் தன் வழக்கமான முனகலைப் பதிலாக்கி வென்னீர் டம்ளரை அவரிடம் நீட்டினாள்.

ராமசாமிக்கு சியாமளா கொடுத்த வென்னீரின் சுகம் அவர் தொண்டைக்கு வெகுவாக இதமளிக்க, அந்த இதமான சுகத்தில் சிறிது நேரம் தன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். தன் கண்ணைத் திறந்தபோது சியாமளாவை பக்கத்தில் காணாமல் மீண்டும் குரல் கொடுத்தார்.

"சியாம்ளீ...அடியே சியாம்ளீ... இங்க வாடீ... ஒரு நிமிஷம் பக்கத்துல நிக்கமாட்டாளே" அவர் கண்டத்திலிருந்து மெல்லிய கூச்சல் கிளம்பியது.

ராமசாமிக்கு அசாத்திய எரிச்சல். வேலையுல இருந்த காலத்துல அந்த ப்யூன் முனுசாமி என்னை என்னைக்கும் மதிச்சதேயில்லே... காலையில குரல் குடுத்தா சாயங்காலம் வந்து நிப்பான்.

வேலையிலேருந்து ரிட்டையர் ஆயிட்ட என்னை இப்ப என் ஆத்துக்காரியே மதிக்க மாட்டேங்கறா? அவ்வளவு ஏன்? நடராஜன் வீட்டு மிச்சம் மீதி எச்சில் சோறு திங்கற இந்த தெரு நாய் நொண்டிக் கருப்பன் கூட என்னை மதிக்க மாடேங்குது... அப்புறம் ஊர்ல இருக்கறவன் ஏன் என்னை மதிக்கப் போறான்? தன் தலையை ஒரு முறை அழுந்த தடவிக்கொண்டார்.

கிராப்புத்தலை மொத்தமாக நரைத்திருந்தது, ஆனால் தலையில் இன்னும் வழுக்கை சுத்தமாக விழவில்லை. நெற்றில் பட்டையாக விபூதி. கழுத்தில் பொன்னால் கட்டிய ருத்திராக்ஷ மாலை. மார்பின் குறுக்கில் ஓடும் பூனூல்.

பளிச்சென்று அகன்ற முகம். நீளமான மூக்கு. நீள மூக்கின் நுனியில் எப்போதும் ஒரு மெல்லிய கோபம் குடி கொண்டிருக்கும். எப்போ எப்போவென காரணமேயில்லாமல் புறப்பட்டு குதிக்கும்.

வர்ஜா வர்ஜமில்லாமல் நிறைய படித்திருந்ததால் கண்களில் ஒரு அகங்காரம் நிலைகொண்டிருந்தது. மனசுக்குள் எனக்கு எல்லாம் தெரியும் என்னும் கர்வம் அவர் பேச்சில் பளிச்சிடும். எதிராளி குரலை உயர்த்திவிட்டால் ஓட்டுக்குள் அவசர அவசரமாக தன்னை ஒடுக்கிக்கொள்ளும் சாதுர்யமான ஆமை அவர். சற்று நேரம் அமைதியாக கண்ணை மூடி சப்பணமிட்டு உட்க்கார்ந்து கொள்ளுவார். மீண்டும் கோபம் மூக்கு நுனியில் வந்து வழக்கம் போல குடியேறும்.

நாலும் தெரிஞ்ச பெரியவங்க சும்மாவா சொன்னாங்க; "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமின்னு..?" யாருக்கு இது பொருந்துமோ இல்லையோ... ராமசாமிக்கு நிச்சயமாக இது பொருந்தும்.

"இப்ப என்ன வேணுங்கறேள்?" சியாமளா சற்றே குரலில் கோபத்துடன் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள்.

"பக்கத்துல வந்தாதானேடீ விஷயம் என்னங்கறதை நான் விவரமா நோக்குச் சொல்லமுடியும்?" மனைவியின் குரல் உயர்ந்ததும் ராமசாமி மெல்ல தன் குரலில் வேகத்தைக் குறைத்து குழைய ஆரம்பித்தார்.

"அப்படி என்ன தலெ போற விஷயம்...? இப்ப நான் அடுப்புலேயும் துடுப்பிலேயுமா நிக்கறேன். உங்க கூட ஆற அமர உக்காந்துண்டு வெட்டிப் பேச்சு பேச இப்ப எனக்கு நேரமில்லே..." சலித்தவாறு வந்தாள் சியாமளா.

"எதிர் வீட்டு மீனாட்சியும் அந்த தடிப்பய சீனுவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாம ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சிண்டு, நடராஜன் ஆத்து மாடிப்படி முக்குல, பட்டப் பகல்ல முத்தம் குடுத்துக்கிட்டாடீ... நேக்கு ஒடம்பே ஆடிப்போச்சு?

"என்னப் பேத்தறேள்..?"

"பேத்தறேனா.. நம்மாத்து மொட்டை மாடீல்லேருந்து என் ரெண்டு கண்ணாலப் பாத்தேன்டீ"

“மொட்டை மாடிக்கு காலமே நீங்க ஏன் போனேள்?”

“ஸ்நானம் பண்ணிட்டு துண்டை காயவெக்கப் போனேன்...”

“இன்னைக்கும் உங்க கோமணத்தை அங்க போடலியே? நேத்து பக்கத்து வீட்டு மைதிலி நம்மாத்துக்கு வந்து என்னை சண்டை இழுக்காத கொறை...”

"என் கோமணத்துக்கும் அவாளுக்கும் என்ன சம்பந்தம்..?"

“உங்க புழுத்துப் போன கோமணம் தானாவே காத்துல பறந்து போய் அவா ஆத்துல சம்பந்தம் பண்ணிண்டா, அதுக்கு நீங்கதானே பொறுப்பு?"

"செத்த புரியறமாதிரி பேசுடி... வயசானாலே பொம்மனாட்டிக நீங்க கேக்கறவாளுக்கு புரியாத மாதிரி பொடி வெச்சுப் பேசறேள்..."

“உங்களால நேக்கு மானம் போறது... இந்த எழவு கோமணத்தை விட்டுத் தொலைங்கன்னா நீங்க கேக்க மாட்டேங்கறேள்... உங்க புள்ளை டஜன் கணக்குல உங்களுக்கு ஜெட்டி வாங்கிக் குடுத்திருக்கான்...அதுல ஒண்ணை எடுத்து இடுப்புல மாட்டிக்கிட்டா என்ன?" முகத்தை வேகமாக நொடித்தாள் சியாமளா.

"அந்தக் கடங்காரன் பேச்சை எங்கிட்ட எடுக்காதே.. நேக்கு கெட்ட கோவம் வரும்...சொல்லிட்டன்..."

"மைதிலியோட ஆத்துல சுத்த பத்தமா தலை முழுகிட்டு மாடிலே வடாமிட்டு காய வெச்சிருக்கா...!! உங்க சனியன் புடிச்ச கந்தல், அவாத்து வடாம் மேல விழுந்தா சும்மா இருப்பாளோ?"

"அபசாரமா...அபாண்டமா பேசறதுகள்..."

"ஆமாம்.. அவாளுக்கு வேற வேலையில்ல பாருங்கோ...!!! மைதிலி உங்க கோமணத்தை ஒரு குச்சியிலே சுத்திண்டு வந்தா..!! நேக்கு தூக்கு போட்டுக்கிட்டு தொங்கலாம்ன்னு தோணித்து...!!"

"ம்ம்க்க்கூக்க்கும்.." தொண்டையை செருமினார் ராமசாமி... "அப்புறம் அந்த குட்டி மைதிலி என்னச் சொன்னா?"

"மாமீ... மாமாவண்ட நீங்களாவது ஜட்டி போட்டுக்கச் சொல்லப்படாதான்னு ஒரு கொறை அழுது பொலம்பிட்டுப் போனா!!”

"சியாம்ளீ... நானே பதறிப்போய் வந்து நிக்கறேன்? என்னடி நீ... புரியாம போலீஸ்காரா மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு என் உயிரை எடுக்கறே?"

"வீட்டுக்கு வீடு வாசப்படித்தானே? இந்த சின்ன விஷயம் நோக்கு ஏன் புரியலேன்னு தெரியலை... சதா ஊர் வம்புக்கு ஏன் அலையறேள்?

"வெய்யில் இன்னும் முத்தலையே... நேக்கு என்னப் பைத்தியமா பிடிச்சிருக்கு? வம்புக்கு அலையறவனா நான்?" சியாமளாவை அவர் முறைத்தார்.

சியாமளா அவரை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு பதிலொன்றும் சொல்லாமல், தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் திரும்பி கிச்சனை நோக்கி நடந்தாள்.

"ஏன்டீ சியாம்ளீ... நான் மெனக்கெட்டு.. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்... எதையும் காதுல போட்டுக்காம, என்னை அலட்சியமா பாத்துட்டு போயிண்டே இருக்கே..?"

"அவா முத்தம் கொடுத்துக்கிட்டா... செரி... இப்ப அதுக்கு நான் என்னப் பண்ணணுங்கறேள்?"

"நோக்கு நிஜமாவே புரியலியோடீ சியாம்ளீ?"

"இப்ப நான் உங்களை கட்டிண்டு உங்களுக்கு முத்தம் கொடுக்கணுங்கறேளா?"

"எல்லாம் என் கிரகசாரம்டீ... உன் முத்தம் கிட்டலயேன்னு இங்க யாரும் ஏங்கிப் போவலடீ"

"ஆமாம்.. ஏங்கினதெல்லாம் பிராமணனுக்கு இப்ப மறந்து போச்சாக்கும்; என் வாயை கெளறாதேள்...?"

"சரிடீ... நோக்கு அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தா சட்டுன்னு ஒண்ணு குடுத்துடேன்..." ராமசாமி தன் உதடுகளை புன்னகையுடன் குவித்தார்.

"ஆமாம் இப்ப எதுக்கு நீங்க அசடு வழியறேள்?"

"நானும் ஒரு காலத்துல ஊத்துகுளி வெண்ணைய் மாதிரி திக்கா வழிஞ்சிண்டுதான் இருந்தேன்... மறந்து போயிட்டியோ?"

"உங்க வாயை செத்த மூடுங்களேன்... இதென்ன வாசல்ல உக்காந்துண்டு விதாண்டாவாதம் பண்றேள்?"

"நோக்கு நம்ம பழங்கால கதையை செத்த ஞாபகப்படுத்தறேன்... நீ மறந்துட்டியே?"

"டிபன் இன்னும் ஆகல்லே? என்னைக்குமே நேரத்துக்கு செஞ்சுக் குடுக்கமாட்டியோ? அப்புறமா இப்படீல்லாம் நீங்க கொக்கரிக்க மாட்டேள்ன்னா உங்க வெட்டிக் கதையை கேக்கறதுக்கு இப்ப நான் தயார்..!!" சியாமளா அறிக்கை விட்டவள், தன் தோளை மொத்தமாக முந்தானையால் போர்த்திக்கொண்டாள்.

"செத்த பக்கத்துலதான் உக்காரேன்டீ... என்னமோ யாராத்துலயோ ஊர் பேர் தெரியாதவன் முன்ன நிக்கற மாதிரி போத்திக்கிடறே? என் மனசுல இருக்கறதை உங்கிட்ட கொட்டிப்பிடறேன்.."

"சொல்லித் தொலைங்கோ.." சியாமளா ராமசாமியின் எதிரில் காலை நீட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் உட்க்கார்ந்தாள். நீட்டிய பாதங்களில் ஈரத்தில் நின்று வேலை செய்வதால் வந்த வெடிப்புகள்.



"சியாம்ளீ...அந்த க்ராக் கீரீமை எடுத்து கால்லே பூசக் கூடாதோ? பாளம் பாளமா வெடிச்சிருக்கே... நடக்கும் போது நோக்கு வலிக்குமேடீ? கொண்டவளை ராமசாமி ஆசையுடன் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

"போதும்... நீங்க என் மேல வெச்சிருக்கற அக்கறையை இப்படி தெரு வாசல்ல உக்காந்துண்டு டாம் டாம் அடிக்கவேண்டாம்..." கெழ பிராமணனுக்கு வயசானாலும் என் மேல இன்னும் அக்கறை மிச்சமிருக்கு... சியாமளியின் மனம் சக்கரையாக தித்தித்தது.

"சியாம்ளீ... நடராஜன் எவ்வள சாதுவான மனுஷன். தெருவுல வர்றதும் தெரியலை. வீட்டுக்குள்ள போறதும் தெரியலை. அவர் வேலையைப் பாத்துண்டு செவனேன்னு இருக்கார்."

"அவர் பெத்த பொண்ணு மீனாட்சி பண்ற வேலையைப் பாத்தியோடி? அவர் பொண்ணோட இந்த தடியன் சீனு அவங்க வீட்டுக்குள்ளவே பண்ற அட்டூழியம் எங்கேயாவது அடுக்குமாடீ...? என்னக் கொடுமைடீ இது?"

"ம்ம்ம்..ரொம்ப நன்னாருக்கே நீங்க சொல்றது?"

"சியாம்ளீ... அந்த சீனுவோட குலமென்ன? கோத்ரமென்ன? அவா நெடுக நாமம் போடறவா... நடராஜன் சுத்த சைவன். அகலமா நெத்தியில பட்டை அடிக்கறவா? ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துப் போகுமோடீ?"

"பேசமா இருங்கோன்னா... அந்தப் பையன் சீனுவாசனும் ஒரு மனுஷன்... மனுஷனை மனுஷளாப் பாக்கறதுதானே ஞாயம்.. அதெ விட்டுட்டு உங்களுக்கு ஏன்னா ஊர் வம்பு? யாரையும் இந்த வயசுலே இப்படி கண்ணை மூடிண்டு வெறுக்காதீங்கோ..!"


No comments:

Post a Comment