Pages

Tuesday, 3 March 2015

சுகன்யா... 23


"அப்பா ... நீங்க எங்க வொர்க் பண்றீங்கப்பா?" சுகன்யா தன் தந்தையிடம் கேட்டாள்.

"எங்க கம்பெனி கல்கத்தாவுலேருந்து ஆபரேட் ஆகுதும்மா; டெக்ஸ்டைல் கூட்ஸ், லெதர் அயிட்டம்ஸ் எக்ஸ்போர்ட் பண்றோம்; எலக்ரானிக்ஸ் அயிட்டங்கள் இம்போர்ட் பண்றோம். இந்த கம்பெனியோட சதர்ன் ரீஜன் ப்ராஞ்ச் சென்னையில இருக்கு. நான்தான் இந்த பிராஞ்ச்க்கு இப்ப மேனேஜர். என் கீழ நாற்பது பேர் வேலை செய்யறாங்க. தமிழ் நாட்டிலே ஃபீல்ட் ஆஃபீஸ் ஒரு நாலு இருக்கு. நான் இங்க மாத்தலாகி வந்து மூணு வாரமாகுது. கம்பெனி, எனக்குன்னு தனியா டிரைவரோட என் ஆபீஸ் கார் குடுத்திருக்கும்மா. உன் தாத்தாவையும் பாட்டியையும் கிராமத்துல நம்ம வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன். இப்போதைக்கு நான் கம்பெனி கெஸ்ட் ஹவுசுல தங்கி இருக்கேன்."



"அப்பா நீங்க காமர்ஸ் தானே படிச்சீங்க"

"ஆமாம். மொதல்ல நான் எம். காம். படிச்சேன். அப்புறம் நம்ம வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம் எம்.பீ. ஏ. படிச்சேன். லா டிகிரியும் வாங்கினேன். எல்லாத்துக்கும் உங்கம்மா கொடுத்த ஒரே ஒரு நாள் ஒதைதான் மோட்டிவேஷன். நான் இன்னைக்கு இருக்கற நல்ல நிலைமைக்கு உங்கம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்." அவர் உரக்க சிரித்தவாறு சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

"போங்க ... பழசெல்லாம் இப்ப எதுக்குங்க இவ கிட்ட சொல்லிகிட்டிருக்கீங்க; எனக்கு கஷ்டமாயிருக்குங்க." சுந்தரி ஒரு குற்ற உணர்வுடன் சிரிக்க, அவள் கண்களில் தெரிந்த, காதலின் தாபத்தையும், ஏக்கத்தையும் பார்த்த குமாருக்கு உள்ளுக்குள் போதை ஏறியது.

"சுகா, என்னைப் பத்தி வேற என்னத் தெரியணும் உனக்கு?"

"நான் சொல்றேங்க ... அவ எதுக்கு இதெல்லாம் உங்க கிட்ட கேக்கிறான்னு?"

"அம்மா ... அப்பா இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்திருக்கார்; என் கதையை சொல்லி, அவரை ஏம்மா நீ டிஸ்டர்ப் பண்றே?"

"நீ சும்ம்மா இருடி; அவருக்கு இதெல்லாம் என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சுதான் ஆவணும். நான் பட்ட கஷ்டத்தை அவரும் கொஞ்சம் படட்டுமே. பொண்ணை பெத்துட்டா மட்டும் போதுமா?"

"சுந்தரி நீ சொல்லும்மா. நீ எதுவாயிருந்தாலும் என் கிட்ட சொல்லு. "

"யாரோ ஒரு எடுபட்டவ, சுகன்யாவுக்கு சொத்து பத்து ஒண்ணும் கிடையாது ... ஏன்னு கேக்க, சொந்த பந்தம் ஒன்னும் கிடையாது, இவ உன் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டா ... அது இவளுக்கு தெரிய வந்ததுலேருந்து மனசுக்குள்ளவே மருகிக்கிட்டு கிடக்கிறா." சுந்தரி கோபமாக பேசினாள்.

"சுகா என்னம்மா இது? யார் அப்படி சொன்னது? உனக்கு எந்த குறையும் இல்லேம்மா ... நீயா உன்னை எந்த விதத்துலேயும் தாழ்வா நெனைச்சுக்க வேண்டாம்"

"என் ஆஃபீசர்ப்பா ... சாவித்திரின்னு பேரு ..."

"அந்த அம்மா எதுக்கு உன்னை அப்படி சொல்லணும்"

"பொறாமை தாங்க ... வேறேன்னா .." சுந்தரி குறுக்கில் பேசினாள்.

"புரியற மாதிரி சொல்லேன் ... சுந்து ..."

"நம்ம சுகா, ஒரு பையனை லவ் பண்றாங்க. அந்த பையனும் இவ கூடத்தான் வேலை செய்துகிட்டு இருந்தான். அவனும் நம்ம பொண்ணை ரொம்பவே ஆசை படறான். ஆனா அவன் அம்மா, புள்ளையை தன் முந்தானையில முடிஞ்சு வெச்சிருக்கா. அவன் அந்தம்மா உக்காருன்னு உக்காருவான்; எழுந்துருன்னா எழுந்துப்பான். இவ ஆபீஸ்ல, இவளோட இம்மீடியட் பாஸ் சாவித்திரின்னு ஒருத்தி, அவ தன் பொண்ணுக்கு, அந்த பையனை முடிக்கணும்ன்னு, இவங்க ரெண்டு பேர் நடுவுல குழப்பம் பண்ணிகிட்டு இருக்கா. இவளையும் ஆபீசுல இண்டேரக்டா தொந்தரவு பண்றாளாம். இவங்களை சந்திக்க விடாம பண்ணணும்ன்னு நெனைச்சு, தன் அதிகாரத்தை யூஸ் பண்ணி, அந்த பையனை வெளியூருக்கு மாத்திட்டா. அந்த பையனோட அம்மாவும் இந்த சாவித்திரியும் ஃப்ரெண்ட்ஸ். "

"ம்ம்ம் ... இன்ட்ரஸ்டிங் ..."

"போங்கப்பா ... அந்த சாவித்திரி கிட்ட நான் படற அவஸ்தை எனக்குத்தான் தெரியும்" சுகன்யா அவரை முதுகில் மெதுவாக செல்லமாக அடித்தாள்.

"நம்ம சுகா, ஒரு வாழாவெட்டி வளர்த்த பொண்ணு; அப்பனும் ஆத்தாளும் வேற வேற ஜாதி. இப்ப அப்பா எங்கே இருக்காருன்னுகூட சுகன்யாவுக்கு தெரியாது. சுகா எதுவுமில்லாத அன்னாடங்காய்ச்சி குடும்பத்துலேருந்து வந்தவ. உறவுகாரங்கன்னு யாருமில்லாத அனாதை குடும்பம். பாக்கறதுக்கு செவப்பா, உடம்பு எடுப்பா, மூக்கும் முழியுமா இருந்தா போதுமா? வீட்டுக்கு வர மருமவளுக்கு, ஒரு வீடு, சொத்து சுகம், அப்படின்னு எதுவும் வேணாமா? இவ பின்னால உன் பையன் சுத்தலாமா? அந்த சாவித்திரி நம்ம குழந்தையைப் பத்தி இல்லாதையும் பொல்லாததையும், இவ லவ்வரோட அம்மா கிட்ட பேசி அவ மனசை குழப்பி வெச்சிருக்கா."

"ட்ரான்ஸ்பர் ஆகி போன அந்த பையன் லீவுல சென்னைக்கு வந்தப்ப சுகா கிட்ட கேட்டிருக்கான் போல, உங்கப்பா எங்க இருக்கார்? அந்த சாவித்திரி சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு? இவ பதிலுக்கு அவனை, நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா? உனக்கு நான் வேணுமா இல்லை உன் அம்மா வேணுமா? இப்பவே சொல்லுன்னு கேட்டு இருக்கா."

"அவன் தன் அம்மாவுக்கு பயந்துகிட்டு, சாவித்திரியோட பொண்ணை ஒப்புக்கு பாக்கறேன்னு சொல்லிட்டு அவ வீட்டுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு இவளுக்கும் தெரியாது. அந்தப் பையன் வீட்டுக்கு திரும்பி வந்து, நீ சொன்னேன்னு அந்த பொண்ணைப் பாத்துட்டு வந்துட்டேன்; ஆனா நான் சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு, அம்மா கிட்ட பெரிய சண்டை போட்டானாம்."

"ஏம்மா சுகா ... நீயே உன் லவ்வர் கிட்ட சாவித்திரி வீட்டுல என்ன நடந்ததுன்னு கேட்டுட வேண்டியதுதானே?"

"ஏங்க முதல்ல நான் பேசி முடிச்சிடறேன்; அப்புறமா நீங்க அவளை கேளுங்க."

"சரி ... சரி ... நீயே சொல்லு"

"உங்களுக்கு ஞாபகமிருக்கா, நம்ம காலேஜ்ல நம்ம கூட வேலுன்னு படிச்சாரே ... அவர் ஆர்ட்ஸ் படிச்சார்; எல்லாம் அவங்களும் உங்க குடும்பத்துக்கு தூரத்து ஒறவு தான். மாயவரத்துல பொண்ணு எடுத்தாருங்களே அவருங்க. அவர் பொண்டாட்டி கீதா என் கூடத்தான் இப்ப பி.ஜி. டீச்சரா வேலை செய்யறா. நம்ம பொண்ணை அவங்க புள்ளைக்கு கட்டிக்கணும்ன்னு தினம் அவ என்னை நச்சரிக்கறா."

"உங்க ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு, சுகாவை தன் புள்ளை சம்பத்துக்கு கேக்கறாங்க..."

"யாரு லட்சுமி அத்தை பொண்ணு ராணியா? அவ நார்த்ல பாம்பேயிலத்தானே இருந்தா?"

"அவளேதான்; ராணி தீடிர்ன்னு ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு, சுந்தரி, உன் மேல எனக்கு எப்பவுமே கோபம் இல்லடி. நாங்கதான் இந்த ஊர்லேயே இல்லயே? நான் இருந்தா இப்படியெல்லாம் ஆக விட்டிருப்பேனான்னு பிட்டு போட்டாங்க. இப்ப அவங்க பையன் பெங்களூர்ல மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கறானாம். ஐ.டி.யில இருக்கானாம். ஊருக்கு வந்தப்ப எப்பவோ நம்ம பொண்ணை பாத்திருக்கான். அம்மா கிட்ட சொன்னானாம்; சுகாவை எனக்கு பிடிச்சிருக்கு; கேட்டுப் பாருங்கன்னு சொல்லியிருக்கான்."

" நம்ம பொண்ணு சுகா இப்ப கை நிறைய சம்பாதிக்கறா. பாக்கறவங்க கண்ணுக்கு நெறைவா இருக்கா. நான் கஷ்டப்பட்டப்ப யாரும் என்னான்னு ஒரு வார்த்தை என்னை கேக்கலைங்க. ஆனா இப்ப என் பொண்ணு அழகா வளர்ந்து நிக்கறாளே ... நாலு பேரு என் கிட்ட வரத்தானேச் செய்வாங்க?"

"ம்ம்ம் .... அதெல்லாம் இருக்கட்டும்; நீ என்ன பதில் சொன்னே அவங்களுக்கு?"

"நமக்குள்ள ஆயிரம்தான் இருந்தாலும், பொண்ணை பெத்தவரு நீங்க; உங்களை ஒரு வார்த்தை கேக்காமா, அதுவும் உங்க நெருங்கின உறவுகாரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? பொறுமையா அவங்க சொல்றதையெல்லாம் காது குடுத்து கேட்டுக்கிட்டேன். வேற என்ன செய்வேன் நான்?

"ராணியோட வீட்டுக்காரர் இப்ப ரிடையர் ஆகி கிராமத்துல தான் இருக்காரு. உங்க மச்சான் ரகுவை மடக்கி மடக்கி, எப்பப் பாத்தாலும் ஒரே கட்ட பஞ்சாயத்து வெக்கிறாரு. உன் அக்கா கல்யாணத்தை நான் எதுக்கவே இல்லைப்பா. எதுத்தவன்ல்லாம் போய் சேர்ந்துட்டாங்க. ஜாதின்னு சும்மா வெட்டியா பேசறவனைப் பாத்தாலே எனக்கு புடிக்காது. உன் அக்கா சுந்தரி கிட்ட எடுத்து சொல்லு. நம்ம குழந்தை தனியா மெட்ராஸ்ல ஏன் கஷ்டப்படணும்; என் பையனுக்கு நான் கட்டிக்கறேங்கறாரு; உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு ரகு பதில் சொல்லியிருக்கான்."

"சுந்தரி, உன் பொண்ணை அவ கட்டின புடவையோட என் வீட்டுக்கு அனுப்பி வைடி; நான் வேற என்ன உன்னை கேக்கப் போறேன். குமாருக்குன்னு இருக்கறதெல்லாம் இவளுக்குத்தானே அப்படிங்கறா உங்க அத்தைப் பொண்ணு."

"ம்ம்ம் ... இவங்களுக்கு சரியான பதில் சொல்லித்தான் ஆகணும். நமக்கு நெருக்கமா இருக்கற உறவாச்சே இவங்க." 

"உங்க பொண்ணு என் பேச்சை இந்த விஷயத்துல கேக்கறதே கிடையாது."

"அம்மா சும்மா சொல்லாதேம்ம்மா ... நான் உன் பேச்சை எப்பம்மா கேக்கலை? செல்வா கிட்ட சும்மா சும்மா பேசாதேன்னு நீ சொன்னே. ரெண்டு நாளாச்சு அவன் கிட்ட நான் இன்னும் பேசவே இல்லை தெரியுமா உனக்கு?" சுகன்யா வெடிக்க ஆரம்பித்தாள்.

"சுகா ... நீ சும்மா இரும்மா. இப்ப நானும் அம்மாவும் தானே பேசிக்கிட்டிருக்கோம்."

"சுகா, நான் என்ன சொல்றேன்னா, நம்ம உறவு காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா, முகம் கொடுத்து பேசுன்னு சொல்றேன் ... வேற என்ன சொல்றேன்? எப்பவாது நீ ராணி அத்தை கிட்ட சிரிச்சு பேசி இருக்கியா? பாக்கறவங்க உன்னைப்பத்தி என்ன நெனப்பாங்க? உன்னை திமிர் பிடிச்சவன்னு நெனைச்சுடக்கூடாதும்மா."

"என்னங்க, உங்க பொண்ணு, அம்மா, நீ கல்யாணப் பேச்சை எடுத்தா இந்த ஊருக்கே வரமாட்டேன்னு அடம் புடிச்சா. என்னா இப்படி பேசறாளேன்னு இவ மாமன் கேட்டதுக்கு, என் கூட வேலை செய்யறவனை ஆசைப்படறேன். நான் அவனைத்தான் கட்டிப்பேன்னு போன மாசம் என் கிட்ட அப்படி ஒரு சண்டை போட்டுட்டு இங்க வந்தா."

"இவ மாமனும் இவ கூட சேர்ந்துகிட்டு, அக்கா நீ சும்மாயிரு, நான் அவளுக்கு புரிய மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு, இப்ப இவ இஷ்டப்படியே இவ ஆசைப்படற பையனையே பண்ணி வெச்சுடலாம்ன்னு கூத்தடிக்கிறான்."

"நான் ஆசைப்பட்ட பையனைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டு வந்தவ, போன வாரம் அந்த பையனை சரியான சண்டைக்கு இழுத்து இருக்கா. என்னை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி என் அப்பனைப் பத்தி நீ கவலைப் பட்டியா? என் கையை புடிக்கறதுக்கு முன்னாடி என் அப்பன் யாருன்னு நீ கேட்டியா? இப்ப உங்க அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என் அப்பா யாரு? என் சொத்து சுகம் என்னான்னு ஏன் கேக்கறே?இவங்களுக்குள்ள இப்ப ஒரே வாக்கு வாதம், சண்டை. எனக்கு இதையெல்லாம் கேட்டா உடம்பு நடுங்கி போவுது."

"ஏண்டி, நீ உன் வயசுல உங்கப்பா அம்மாவை என்னமா சண்டைக்கு இழுத்தே? உன் பொண்ணு இப்ப உன்னை இழுக்கறா; ஹிஸ்டரி ரிபீட்ஸ் அவ்வளதானே?" குமார் சிரித்துக்கொண்டே சுந்தரியை சீண்டினார்.

"அப்பா .. அம்மாகிட்ட நான் வேணும்ன்னு சண்டைப் போட்டதே இல்லப்பா"

"நீ சும்மா இருடி; ஒரு வாரம் முன்னாடி, நானும் ரகுவும் இவளைப் பாக்கறதுக்கு இங்க வந்தோம். அன்னைக்குத்தான் இவங்களுக்குள்ள சண்டை நடந்திருக்கு; என்னை மறந்துடு; உனக்கும் எனக்கும் ஒத்து வராது; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உங்கம்மா கூடவே போய் நீ இருடான்னு, அவன் கிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டா; அந்த பையன் தங்கச்சி இவளுக்கு போன் பண்ணா, நீ யாருடி நடுவுல நாட்டாமை; உங்க அண்ணனை எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அவளை வேற போட்டு வாங்கியிருக்கா உங்கப் பொண்ணு."

"ம்ம்ம் ... தமிழ் சினிமா கதை மாதிரி இல்ல போகுது நம்ம சுகா கதை"

"இவளால தொட்டு பழகனவனை எப்படிங்க அவ்வள சீக்கிரம் மறந்துட முடியும்? நாள் பூரா அழுது அழுது இவ மூஞ்சி வீங்கி போய் கிடக்குது. வீட்டுக்கு வந்த இவளைப் பாத்ததும் என் வயிறு அப்படியே பத்தி எரிஞ்சுது. என்னாடின்னு கேட்டா மெதுவா ஒண்ணு ஓண்ணா சொல்றா."

"நம்ம ரகு, அந்த பையன் கிட்ட பேசி பாக்கறேன்னுட்டு, அவனை நம்ம வீட்டுக்கு இங்க வாப்பான்னு கூப்பிட்டான். நம்ம போறாத காலம், பாவம் அவன் இங்க வர்ற நேரம் பாத்து, வழியில ஒரு ட்ரக்ல அடிபட்டு, ரோடுல கிடந்து இருக்கான். போலீஸ் அவனை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நம்ம சுகன்யாவுக்கு தகவல் சொன்னாங்க. அவங்க அப்பன் ஆத்தா ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள, இவ தட தடன்னு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவனுக்கு இவ ரத்தத்தை குடுத்து பொழைக்க வெச்சி, அம்பதாயிரம் பணத்தையும், ஆஸ்பத்திரியில அட்வான்ஸ்ஸா கட்டியிருக்கா.."

"இவளைத் தனியா அனுப்ப முடியுமா? நாங்க ரெண்டு பேரும் இவ கூடவே ஆஸ்பத்திரிக்கு போனோம். அவன் கண்ணை தொறந்து பாத்ததும், அவன் அம்மா இவளை பாத்து என் புள்ளையை நீ பொழைக்க வெச்சிட்டே! உனக்கு ரொம்ப நன்றி; ஆனா இங்கேயிருந்து நீ போயிடு. என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துடுன்னு,, எங்க எதிர்லேயே கை எடுத்து இவளை கும்பிட்டு டயலாக் பேசினா. உங்கப் பொண்ணாச்சே? இவளும் ரோஷமா உன் புள்ளைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லே. நான் அவனை உனக்கே தாரை வாத்து கொடுக்கறேன்னு உளறி கொட்டிட்டு வெளியில வந்துட்டா."

"சும்மா இருடி நீ; அந்த காலத்துல நீ என்னை காதலிக்கறேன்னு காலையில சொல்லுவே; மதியானம் இல்லேன்னு சொல்லுவே; எத்தனை வாட்டி இந்த மாதிரி நீ பேசி பேசி, என்னை தாளிச்சு எடுத்து இருப்பே? எத்தனை வாட்டி திரும்பி வந்து ஐ லவ் யூன்னு சொல்லியிருப்பே? எல்லாம் உனக்கு மறந்து போச்சா? ரெண்டு நாளு, நான் உன் கிட்ட பேசாமா இருந்தா, எத்தனை பேரு மூலமா நீ தூது விட்டேங்கற கதையெல்லாம், நான் என் பொண்ணுகிட்ட சொல்லவா இப்ப? என் பொண்ணை நீ ஒண்ணும் கொறை சொல்ல வேணாம், சொல்லிட்டேன் ... ஆமாம்."

"ரெண்டு நாள் கூட இருந்து பாருங்க, அப்புறம் தெரியும் உங்க பொண்ணு லட்சணம்."

"யம்மா ... நீ சும்மா பேசாதே! ... நானும் சொல்லிட்டேன்," மீண்டும் சுகன்யா அவர்கள் பேச்சில் குறுக்கில் புகுந்தாள்.

"சுந்து ... அந்த பையனோட அப்பா என்ன சொல்றார் ..."

"அந்த மனுஷன் சாதுவா, நல்ல மனுஷனாத்தான் தெரியறார். ரகுவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துச்சு. நான் தான் சும்மா இருடான்னு அன்னைக்கு அடக்கி வெச்சேன். நம்ம பொண்ணு அவன் கூட பழகிட்டாளேன்னு பாக்க வேண்டியதா போச்சு; அப்புறம் அந்த மனுஷன் எல்லார் எதிர்லேயும் எங்க ரெண்டு பேரையும் கையெடுத்து கும்பிட்டு, என் பொண்டாட்டி சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவ இப்படி பேசி இருக்கக் கூடாது. அவ நல்லவதான். கொஞ்சம் முன் கோபி. நீங்க தப்பா நினைக்காதீங்கன்னார்."

"அதெல்லாம் சரிம்ம்மா; அவரு இவங்க காதலுக்கு ஒத்து வராறா இல்லையா?

"ம்ம்ம். அவரு ஒத்து வர்ற மாதிரிதான் எனக்கு படுது. என் பையன் கொஞ்சம் உடம்பு தேறி வீட்டுக்கு வரட்டும். உங்க கிட்ட நான் நிதானமா பேசறேன்னு சொன்னார். நாங்களும் நீங்க சொல்றது சரி .. எங்க வீட்டுக்கு நீங்க ஒரு தரம் முறைப்படி வாங்க அப்படின்னு சொன்னோம். சரின்னாவர், எங்க ரெண்டு பேரையும் தன் கார்ல வீட்டுக்கு அனுப்பி வெச்சார். அன்னைக்குத்தான் ரகு ஊருக்கு போனான்.

"இன்னைக்கு புதன், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை, இவளை கூப்பிட்டுக்கிட்டு நான் நம்ம ஊருக்கு போவலாம்ன்னு இருக்கேன். ரகுவும் ஊருக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கான். இவ கிராமத்துக்கு வந்து ஒரு பத்து நாளு இருந்தா, இவ மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு பாக்கிறேன். அங்க இவ ஊருல இருக்கும் போது, அந்த பையனோட அப்பாவுக்கு போன் பண்ணலாம்னு ரகு சொல்லியிருக்கான்."

"ஆனா அங்க போனா உங்க அத்தை பொண்ணுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. இந்த கதையெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. இப்பத்தான் நம்ம உறவு காரங்க கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்டுக்கு வந்து போறாங்கா; இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன டென்ஷன் கொடுப்பாங்களோன்னு நெனைச்சா எனக்கு பயமா இருக்கு?"

"ஏண்டி சுந்து நீ என்ன பேசற? சுகன்யாவுக்கு ஒருத்தனை புடிச்சு போச்சு. அவங்க தொட்டு பழகினாங்கன்னு வேற சொல்றே. அப்புறம் சம்பத்துக்கு எப்படி இவளை கட்டி வெக்கறது? எங்க அத்தை பொண்ணை நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். இன்னொரு தரம் அவங்க உன் கிட்ட வந்தா என் நெம்பரை குடுத்து என் கிட்ட பேச சொல்லு."

"சரிங்க ... அதைத்தான் நானும் சொல்றேன்; நம்ம குடும்பத்து ஆம்பிளை நீங்க வந்துட்டீங்க. இனிமே உங்க பாடு; உங்க பொண்ணு பாடு; நீங்க உங்க பொண்ணை யாருக்கு கட்டி வெக்கறீங்களோ, கட்டி வெய்யுங்க. அவ சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் எனக்கு வேணும். இவ்வளவு நாள் தனியா உங்க பொண்ணை வெச்சுக்கிட்டு சமாளிச்சுட்டேன். இப்ப என்னால முடியல. இதுக்கு மேல என்னை விட்டுடுங்க."

சுந்தரி நீளமாக மூச்சு விடாமல் பேசி நிறுத்தினாள். சுகன்யா ஏதும் பேசாமல் தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவர் கையில் கட்டியிருந்த வாட்ச்சை மேலும் கீழுமாக தள்ளி குழந்தையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தாள்.



"அப்பா ... அந்த சம்பத்து ... மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கட்டும் ... இல்ல ரெண்டு லட்சம் சம்பாதிக்கட்டும்; உங்க சொந்தமா இருக்கட்டும்; இல்ல அம்மா சொந்தமாவே இருக்கட்டும்; நம்ம சொந்தத்துல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ... இப்பவே, இங்கேயே உங்க கிட்ட நான் சொல்லிடறேன்... ஊர்ல வந்து அவன் உன்னை பாக்க வரான், சும்மா பேருக்கு உக்காந்து அவங்க கிட்டு பேசும்மான்னு ... என்னை யாரும் டென்ஷன் பண்ணக்கூடாது ... "சுகன்யா தீர்மானமாக பேசினாள்.

"சுந்து ... எனக்கு ஒரு கப் சாயா குடிக்கணும் போல இருக்கு, நார்த்லயே கொஞ்ச நாளா இருந்ததாலே இந்த டீ குடிக்கற பழக்கம் என்னை தொத்திக்கிச்சு ... ஒரு கப் போட்டுத் தரயாம்மா...?"

"சுகா உனக்கும் வேணுமாடி?

"ம்ம்ம் ... குடும்மா"

"உன் லவ்வர் பேரு என்னம்மா?"

"செல்வா...ப்பா"

"சுகா ..." நீ இந்த செல்வாவை உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறியா?" இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்? சுகன்யா மட்டுமல்லாமல், சுந்தரியும் தன் கணவனை ஒரு வினாடி வியப்புடன் பார்த்தாள்.

"என்னப்பா ... இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க; அவரை நான் மனசார நேசிக்கிறேன்ம்பா!"

"சாரிம்மா ... உனக்கு என் கேள்வி பைத்தியகாரத்தனமாப் பட்டிருக்கலாம். நீ அவனுக்கு உன் ரத்தத்தை குடுத்தேன்னு அம்மா சொன்னாங்க; அவன் இடத்துல நீ இருந்திருந்தா, அவனும் உனக்கு தன்னோட ரத்தத்தை கொடுத்து உன்னை காப்பாத்தனும்னு துடிச்சிருக்கலாம். அவன் மேல உனக்கு இருக்கற நேசம், பாசம், காதல், எல்லாம் சரி; நீ படிச்ச பொண்ணு. நீ பேப்பர்ல, ஏதாவது மெகசீன்ல படிச்சிருக்கலாம் ... இல்லன்னா யார் மூலமாவது உனக்குத் தெரிஞ்சிருக்கலாம்."

"இப்பல்லாம் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே வீட்டுல சேர்ந்து இருக்கறாங்க; எல்லாத் தேவைகளையும் பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பூர்த்தி பண்ணிக்கறாங்க; தங்களுடைய ஆசைகளை ஒருத்தர் கிட்ட ஒருத்தர் ஷேர் செய்துக்கறாங்க. கல்யாணமான தம்பதிகளைப் போல படுக்கையையும் பகிர்ந்துக்கறாங்க; ஆகற செலவையும் தங்களுக்குள்ள டிவைட் பண்ணிக்கறாங்க."

"கொஞ்ச நாள் கழிச்சு, ஒருத்தரோட எதிர் பார்ப்புகளை அடுத்தவரால பூர்த்தி செய்ய முடியலேன்னா, அவர்களுக்கு நடுவுல முரண்பாடுகள் அதிகமாக இருந்தால், சத்தமில்லாமா ரெண்டு பேரும் வேற வேற திசையை பாத்துக்கிட்டு போறதுங்கற கான்செப்ட் இப்ப நம்ம ஊர்லேயேயும் வளர ஆரம்பிச்சு இருக்கு."

"இவர்கள் நடுவிலும் காதல், பாசம், நேசம், பற்று, பிடிப்பு, காமம் எல்லாம் இருக்கு ... என்ன இந்த ஏற்பாட்டுல எமோஷனல் "பாண்டிங்" கொஞ்சம் குறைவா இருக்கலாம். இது நம்ம சமூகத்தால இன்னும் முழுமையா அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமா இருக்கு. இவங்கள்லேயே, சில ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாகவும் வாழறாங்க."

"காதலிக்கும் போது ஒருத்தருக்கு அடுத்தவரோட குறைகள் சட்டுன்னு தெரியறது இல்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழறப்ப, உடம்பு மேல இருக்கற கவர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கறப்ப, கணவனுக்கு தன் மனைவிகிட்ட இருக்கற குறைகளும், மனைவிக்கு தன் புருஷனோட குறைகளும் புரியும் போது, தினசரி வாழ்க்கையில உரசல்கள் ஆரம்பிக்கும்."

"இந்த காலத்துல ரெண்டுபேரும் வேலைக்கு போறாங்க; அதனால ஒவ்வொரு காரியத்துலேயும் ரெண்டு பேரும் பங்கெடுத்தே ஆகணுங்கற நிர்பந்தம் இருக்கு. அதனால வீட்டுல எல்லா காரியங்களையும் ஆரம்பத்துல நீயே செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்."

"அப்பா ... எது எப்படியிருந்தாலும் செல்வா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனைச்சுக் கூட பாக்க முடியலைப்பா. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, முறையான, அண்டர்லைன் பண்ணிக்குங்க, முறையான ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னுதான் நான் அவர் கூட பழகறேன்."

"அவரும் அந்த எண்ணத்துலத்தான் என் கூட பழகிக்கிட்டு இருக்கார். ஆனா சில நேரங்கள்ல, இப்பவே அவர் மேல எனக்கு சட்டுன்னு கோபம் வருது. அவருடைய சில குணங்கள் எனக்கு சுத்தமா பிடிக்கலைப்பா. இதை சொல்லிக்காட்டி நான் அவர்கிட்ட சண்டை போட்டிருக்கேன்."

"ம்ம்ம் ...."

"அவரால எந்த விஷயத்துலேயும், சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலைப்பா. எல்லாத்துக்கும் பயப்படறார்ப்பா. இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க ... அப்படி பண்ணா இப்படி ஆயிடுமோ? எப்பவும் குழம்பிக்கிட்டேதான் இருப்பார்."

"அவரோட அம்மாவை கேக்காம எந்த காரியத்தையும் அவரால செய்ய முடியாதுப்பா. அவருக்கு அவர் அம்மா மேல கண்டிப்பா ஆசையிருக்கும். இதை நான் தப்புன்னு சொல்லலை. எனக்கும்தான் என் அம்மா மேல அளவில்லாத பிரியம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா, அம்மாகிட்ட நான் பட்டுன்னு சொல்லிடுவேன். தன் மனசுல இருக்கறதை தன் அம்மாகிட்ட சொல்லக்கூட பயப்பட்டா எப்படிப்பா? எல்லாத்துக்கும் மேல, அவரா எதையும் இனிஷியேடிவ் எடுத்து செய்யறது இல்லேப்பா.

"ம்ம்ம் ... எனி எக்ஸாம்பிள்"

"என் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் குடுக்கலைன்னா, நாம என்ன பண்றதுன்னு அப்பப்ப கேக்கிறார். இந்த கேள்வியை அவர் இது வரைக்கும் நூறு தரம் என் கிட்ட கேட்டாச்சு. நானும் அத்தனை தரம் பதில் சொல்லியாச்சு."

"நீ என்ன பதில் சொன்னே?"

"நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்; உங்கம்மா கிட்ட பேசி அவங்களை நம்ம பக்கம் திருப்ப முயற்சி செய்யுங்க; அவங்க ஒத்து வரவேயில்லன்னா என்ன செய்யமுடியும்? அப்ப, நீங்க போட்டிருக்கற பேண்ட், சட்டையோட என் வீட்டுக்கு வந்துடுங்க; மீதியை நான் பாத்துக்கறேன்னேன். அதுக்கு, நான் எப்படி உங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்க முடியும்ன்னு கேக்கறாரு? இதைக் கேட்டா எனக்கு எரிச்சல்தான் வருது?"

"சரி நான் உங்க வீட்டுக்கு வந்துடறேங்கறேன் ... அதுக்கும் கொஞ்சம் பொறும்மா. எங்க அப்பாவுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு; எங்க அம்மா மனசும் மாறிடும். அவங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதத்தோடத்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னும் சொல்றார். எது வந்தாலும் நான் பாத்துக்கறேன். நீ தைரியமா இருன்னு சொல்ற துணிவு அவருக்கு வரலை. அவருக்கு என் மேல ஆசையும் இருக்கு. கூடவே அவங்க அம்மா கிட்ட பயமும் இருக்கு. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை; என்னப் பண்றதுன்னு எனக்குப் புரியலை. "

"நேத்து ராத்திரி எட்டு மணி வாக்குல ஆஸ்பத்திரியில நான் அவரோட ரூம்ல தனியா இருந்தேன். அப்ப என் பாஸ் சாவித்திரி அவரை பாக்கறதுக்கு வந்தா. என்னை அங்க அந்த நேரத்துல செல்வா பக்கத்துல அவங்க எதிர்பார்க்கல. போகும் போது சொன்னாங்க, "செல்வா நான் உங்கிட்ட சில விஷயம் தனியா பேசணும்."

"வீ ஆர் இன் லவ்; அந்த லேடிக்கு இது நல்லாத் தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கோம்ன்னும் தெரியும். இவர் என்ன சொல்லணும்பா? எதுவாயிருந்தாலும் நீங்க சுகன்யா முன்னாடி பேசலாம்; இங்கேயே பேசுங்கன்னு சொல்லாம, அவ எதிர்ல பொத்திக்கிட்டு இருந்தவரு, அவ போனதுக்கு அப்புறம் என்னைக் கொடையறாரு."

"இவங்க எதுக்கு என் கிட்ட தனியா பேசணும்? இவங்க பொண்ணுதான் என்னை அவங்க வீட்டுக்கு போனப்ப ஹுமிலியேட் பண்ணி அனுப்பிச்சாளே? இப்ப இந்தம்மா என் கிட்ட என்ன பேசணும்ன்னு நினைக்கிறாங்க? என்னைத் திருப்பியும் அவ பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்களா? இதை எங்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? சாவித்திரியை நான் ஒரு புடி புடிக்கிறேன்னு சொல்றேன்; அதுக்கும் வேணாங்கறாரு. ஏண்டா காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு இருக்குப்பா."



"இதுதாம்பா எனக்கு செல்வாகிட்ட சுத்தமா புடிக்கலை. வழ வழா கொழ கொழன்னு, சரியான வெண்டைக்காய்ப்பா அவரு ... அதுவும் மோர்க்குழம்புல போட்ட வெண்டைக்காய்ப்பா அவரு."

"வேற எதாவது, உனக்கு அவன் கிட்ட பிடிக்காம இருக்கலாம் ..." அவர் இழுத்தார்.

"அப்பா முதல் நாள் நானும், அவரும் தனியா மீட் பண்ண அன்னைக்கு முதல்ல கோயிலுக்குத்தான் போனோம்; அப்புறம் பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்; நேரமாச்சு ... நான் போயிட்டு வர்றேன்னு சொன்னேன். என்னடா, இவ எப்படி தனியா போவா, நான் கொண்டு விடட்டும்மான்னு கூட கேக்கலே. சரி போயிட்டு வான்னு சொல்லிட்டார். "

"அப்புறம், அவர் ஃப்ரெண்ட் சீனுன்னு இருக்கான், அவன் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? இருட்டாயிடுச்சே; நீ அந்த பொண்ணை லவ் பண்றன்னு சொல்றே; அட்லீஸ்ட் வீட்டுக்கு பக்கத்துலயாவது கொண்டு போய் விட வேணாமான்னு திட்டினதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி, நான் பன்னது தப்பும்மா .. சாரிம்மாங்கறாரு."

"இவருக்காக தினம் ஆஃபீசுலேருந்து, ஈவினிங் ஆஸ்பத்திரிக்கு ஒடறேன். ஏன் ஓடறேன்; இப்படி இருக்கற ஒருத்தனுக்காக நான் ஓடறேன்; அதான் ஏன்னு எனக்கும் புரியலை. நீ எப்படிம்மா இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்கலை; நேத்துலேருந்து ஒரு போன் பண்ணலப்பா எனக்கு; அவருக்கு என் மேல ரொம்ப ஆசைப்பா; ஆனா அதை வெளியில சொல்லலைன்னா; அவரோட பிரியம் எனக்கு எப்படிப்பா தெரியும்?" சுகன்யாவின் குரல் கம்ம ஆரம்பித்தது. 


No comments:

Post a Comment