Pages

Thursday, 26 February 2015

சுகன்யா... 14


சுகன்யா மருத்துவமனையிலிருந்து விருட்டென நடக்க ஆரம்பித்ததும், சுந்தரியும், ரகுவும் அவள் பின்னால் எதுவும் பேசாமல் மவுனமாக அவளைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்த சீனுவுக்கு மல்லிகா மீது தலைக்கு மேல் கோபம் வந்தது; வந்த கோபத்தை அடக்க தன் பற்களை கடித்துக்கொண்டான். மல்லிகாவை அவன் அம்மா என்றுதான் கூப்பிடுவான். அவள் பேசியதை பொறுக்கமுடியாமல், கொஞ்சம் நேரம் பேசாம இருங்கம்மா; இப்படியெல்லாம் பேசற நேரமா இது? அடிக்குரலில் பேசிய அவன், உரிமையுடன் அவள் கையை பிடித்து இழுத்து சென்று சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அவளை உட்க்கார வைத்தான். மல்லிகா, நடராஜன் இருவருமே அவனைத் தங்கள் வீட்டில் பிறக்காத இன்னொரு பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். அவன் செல்வாவின் வீட்டிற்கு இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் வருவான்; குளிப்பான்; சாப்பிடுவான்; தூங்கி, கண் விழித்தெழுந்து திரும்பிப் போவான்.

அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்று எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக நிற்பவன் அவன். அதற்கு மேல் அவனால் அந்த நேரத்தில் மல்லிகாவிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு தன் கீழுதட்டைக்கடித்துக்கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் மீனாவைப் பார்த்தான். ஏன் இந்த பொம்பளைங்க எல்லாம் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆவறாளுங்க என யோசித்தான். நடராஜன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு தன் மனைவியை முறைத்தவர், சட்டென விரைந்து சுகன்யாவின் பின்னால் நடந்து கொண்டிருந்த ரகுவின் கையை பிடித்து நிறுத்தினார், "சாரி சார் ... உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ... என் மனைவி பேசினது தப்புத்தான்; ஏன் அப்படி பேசினான்னு எனக்குப் புரியல; இப்ப அவளை எதுவும் கேக்கற நிலைமையில நான் இல்ல; உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்; புள்ளை அடிபட்டு கிடக்கிறானேன்ற மன வேதனையில, ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு அவ பேசினதை மனசுல வெச்சிக்காதீங்க." சுந்தரியிடம் சென்று, "அம்மா; என் பொண்டாட்டி கொஞ்சம் முன் கோபக்காரி; ஆனா கெட்டவ இல்லை; முதல் தடவையா நீங்க அவளைப் பாக்கறீங்க, உங்க மனசுல அவளைப் பத்தி ஒரு தப்பு எண்ணம் உருவாகலாம். அவ மனசுல எந்த காரணம் இருந்தாலும், பொது இடத்துல இப்படி நடந்துகிட்டு இருக்கக்கூடாது; நான் இதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்; நீங்க உங்க பொண்ணு சுகன்யாவை இப்ப திரும்பி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க ... ப்ளீஸ் ..." நடராஜன் கெஞ்சலாக பேசினார். சுகன்யா பேரை செல்வா முனகுகிறான், டாக்டர் அவளை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் மீனாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, வேகமாக மருத்துவமனை வாசலை நோக்கி சென்ற சுகன்யாவை நிறுத்த வெளியில் ஓடினாள். சீனுவுக்கும் கோபத்துடனும், ரோஷத்துடனும் போகும் சுகன்யாவை, கெஞ்சி கூத்தாடி அவளை திரும்ப கூப்பிட்டுக்கொண்டு வருவதுதான் முக்கியம், என மனதில் தோன்ற மல்லிகாவை விட்டுவிட்டு மீனாவின் பின்னால் ஓடினான். சுகன்யா, ஒரு மரத்தடியில், கான்கீரிட் பெஞ்சில், தன் நெஞ்சு பதைபதைக்க, தாடைகள் இறுகி, சுருங்கிய கண்கள் கலங்கி, வெறித்த பார்வையுடன், தன் கைப்பையின் "ஜிப்" பை காரணமில்லாமல் திறப்பதும் மூடுவதுமாக உட்க்கார்ந்திருந்தாள். "சாரி சுகன்யா; வெரி வெரி சாரி; எங்க அம்மா அப்படி பேசினதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேக்கிறேன்; அவங்க ஏன் அப்படி பேசினாங்க, என்ன காரணத்தால பேசினாங்கன்னு சத்தியமா, எனக்கோ, எங்க அப்பாவுக்கோ தெரியாது." மீனா கெஞ்சும் குரலில் பேச, சுகன்யா தன் முகம் சுருங்கி பதிலுக்கு முகத்தில் வேதனையுடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். "சுகன்யா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க; உங்களுக்கு இப்ப கோபம் நிச்சயமா வரும்; எங்கம்மாவை கோச்சுக்கறதுக்கு உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு; அதுக்கு மேல உங்களுக்கு உரிமையும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்; நீங்க சொல்ல நினைக்கற அவ்வளவையும் நான் பொறுமையா கேக்கத் தயார்; ஆனால் ... ப்ளீஸ் ... இப்ப நீங்க எழுந்து உள்ள வாங்க; செல்வாவுக்கு நினைவு வந்துடுச்சாம்; அவன் உங்க பேரைத்தான் திரும்ப திரும்ப சொல்றானாம். இப்ப உங்களை பாத்தா அவனுக்கு மனசு நிம்மதியா இருக்கும்." "டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ள கூப்பிடறார். அடிபட்டு கிடக்கற இந்த நிலைமையிலும் என் அண்ணன் உங்கப் பேரைத்தான் சொல்றான்; எங்க யார் பேரையும் சொல்லலை; உங்களுக்கு நீங்க நேசிக்கற செல்வா முக்கியமா? இல்ல எங்க அம்மா மேல கோபப்படறது முக்கியமா?" கண் கலங்கி பேசிய மீனா சுகன்யாவின் கைகளை பற்றியவள், எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் போல் இருந்தாள். "சுகன்யா, நான் சீனு, செல்வாவோட ஃப்ரெண்டு; அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிஞ்ச உடனே, யாரைப்பத்தியும், எதைப்பத்தியும், கவலைப்படாமா ஓடிவந்து ரத்தம் குடுத்து, பணத்தைக்கட்டி, எல்லாம் பண்ணிட்டு, அவன் உங்களை பார்க்கணும்ன்னு சொல்ற நேரத்துல, அவன் அம்மா அர்த்தமில்லாம எதையோ பேசினாங்கன்னு, திரும்பி போனா, நீங்க பண்ண அத்தனைக்கும் அர்த்தமில்லாம போயிடும்; ப்ளீஸ், சீக்கிரமா உள்ள வாங்க" சீனு அவளை நோக்கித் தன் கையை கூப்பினான். "சீனு, ப்ளீஸ், கையை கீழே போடுங்க முதல்ல; நான் வரேன்; என் செல்வாவுக்காக நான் வர்றேன்; எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை." சுகன்யா தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே மீண்டும் வந்தாள். மல்லிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உட்க்கார்ந்திருந்த தன் தாயிடம் தன் கைப்பையையும், செல் போனையும் கொடுத்தவள், தன் மாமாவின் முகத்தைப் பார்த்தாள்; அவள் பார்வையில் உள்ளே போகட்டுமா என்ற கேள்வி தொக்கியிருந்தது. அவரும் தன் கண்ணாலேயே விடைக்கொடுக்க, அவள் தன் ஜீவனைப் பார்க்க படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே விரைந்தாள். *** அந்த அறையினுள் இரு கட்டில்கள் போடப்பட்டிருக்க ஒரு கட்டில் காலியாக இருந்தது. பக்கத்து கட்டிலில் செல்வா தலையில் கட்டுடன் கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் முகம் வீங்கியிருக்க இடது கை மணிக்கட்டில் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அவனுடய ரத்த அழுத்தத்தை அளந்து கொண்டிருந்தாள். வலது கையில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. செல்வாவின் தலைப்பக்கத்தில், வயது முதிர்ந்த ஒரு டாக்டர் நின்றவாறே ஒரு பேப்பரில் வேகமாக கிறுக்கிக் கொண்டிருக்க, காலையில் அவளுடன் பேசிய டுயூடி டாக்டர் நின்று கொண்டிருந்தார். எழுதிக்கொண்டிருந்தவர், சுகன்யா நுழைந்தவுடன் ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், சுகன்யாவை நோக்கி புன்முறுவலுடன் மென்மையாக பேசத்தொடங்கினார். "சுகன்யா, ஆர் யூ ஹிஸ் ஃபியான்சி" "ஸார் .." "யூ ஆர் வெரி வெரி லக்கி கேர்ள் ... இவரை டயம்ல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ... ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்ததால பொழைச்சுக்கிட்டான். ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ் ... ஹீ வில் பீ ஆல்ரைட் இன் எ வீக் ... அவனுக்கு நினைவு வந்ததுலேருந்து உன் பேரைத்தான் சொல்லிக்கிட்டிருக்கான்.." "செல்வா, மிஸ்டர் செல்வா, கண்ணைத் தொறங்க ... சுகன்யா வந்திருக்கா உன்னைப்பார்க்க" சொல்லிவிட்டு அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார். அவன் மெதுவாக தன் கண்களைத் திறக்க அவர் வெளியே நகர ஆரம்பித்தார். "ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணதா டாக்டர் சொன்னார் ... ப்ரெய்ன்ல்ல ப்ராப்ளம் ஒண்ணுமில்லேயே ஸார்? ... "நத்திங்க் ... டியர், ஜஸ்ட், ஒரு சின்ன டௌட் ... அதை ரூல் அவுட் பண்றதுக்காக ஸ்கேன் எடுத்தேன். ஒரு வாரத்துல அவன் எழுந்து பழையபடி உன்னை பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு பைக் ஓட்டுவான் பாரும்மா. ஸ்பீடா போனான்னா முதுகுல ஒண்ணு போடு; நீ அவன் கிட்ட சீக்கிரமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு அவனைத் தனியா விடு. ரெஸ்ட் எடுக்கட்டும். அவர் சிரித்தபடியே நகர, டாக்டர் மாதவன் அவரைப் பின் தொடர்ந்தார். *** டாக்டர்கள் இருவரும் வெளியே வந்ததும், வெளியில் காத்திருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள, சீனியர் பேச ஆரம்பித்தார். நீங்க தான் செல்வாவோட பேரண்ட்ஸ்ஸா? ... நீங்க சுகன்யாவுக்கு அம்மாவா, இவரு அவளோட மாமாவா - சுகன்யா ரொம்ப தைரியமான பொண்ணு - காலையில டக் டக்குனு முடிவு எடுத்திருக்கா ... மாதவன் சொன்னார் ... " உங்க பையன் செல்வாவுக்கு நினைவு வந்திடுச்சி ... பயப்படற மாதிரி ஒண்ணுமில்லே ... தலையில ஒரு காயம் மட்டும் கொஞ்சம் நீளமாவும் ஆழமாவும் இருந்தது; அதுக்கு மட்டும் எட்டு தையல் போட்டிருக்கோம் ... மூளையில எந்த டேமேஜும் இல்ல ... ப்ளட் லாஸ் மேக் அப் பண்ணியாச்சு ... கடைசி யூனிட் ரத்தம் கொடுத்துகிட்டு இருக்கோம். மத்த படி உடம்புல அங்கங்க இருக்கிற ஸ்கேரச்சஸ், நார்மலா ஹீல் ஆயிடும்" "இன்னைக்கும் நாளைக்கும் ரெண்டு நாள் செல்வா இங்க I.C.U வில அப்சர்வேஷன்ல்ல இருக்கட்டும்; நாளைக்கு மறு நாள் அவனை வார்டுக்கு அனுப்பிச்சிடறேன். நாளைக்கு ஒண்ணு ரெண்டு எக்ஸ்ரே எடுக்கலாம்ன்னு இருக்கேன் ... ஒண்ணும் அட்வெர்ஸா இல்லன்னா, இந்த வீக் எண்ட்ல அவனை டிஸ்சார்ச் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல, அவன் நார்மலா பேச ஆரம்பிச்சுடுவான்னு எதிர்பார்க்கிறேன்." "சாயந்தரத்துலேருந்து நார்மல் புட் குடுக்கச் சொல்லியிருக்கேன், உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவான். பயப்பட வேண்டாம். செடேட்டிவ் குடுத்துடலாம். இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். சும்மா பேசி பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.." "நீங்கள்ளாம் ரெண்டு ரெண்டு பேரா போய் செல்வாவை பாத்துட்டு குயிக்கா வெளியில வந்துடுங்க. உங்கள்ல்ல யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும். பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடக்கூடாது பாருங்க - மெலிதாக சிரித்தவாறு சொன்னார் - மத்ததெல்லாம் டாக்டர் மாதவன் பார்த்துக்குவார். ஓ.கே." அவர் நடராஜன் கையை குலுக்கிவிட்டு நகர்ந்தார். *** செல்வா மெதுவாகத் தன் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தில் என்ன ஆகுமோ என்ற பயமும் பீதியும் இன்னும் பாக்கியிருந்தது. சுகன்யாவைப் பார்த்ததும், அவன் நிறையப் பேச நினைத்து, ஏதும் பேச முடியாமல், கலங்கிய அவன் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. நீண்டப் பெருமூச்சு அவன் உதடுகளில் இருந்து வந்தது. "உன்... உன்ன்னை .... உன்னைப்பாக்க வரும் போது ... அவன் ட்ரக்கால மோதிட்டான் சுகு" கஷ்டப்பட்டு பேசிய அவன் முகத்திலும் உதட்டிலும் வலி அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சி மிகுதியால் தொடர்ந்து பேச முடியாமல், அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது. சுகன்யா விருட்டென அவனை நெருங்கி அவன் கண்களைத் தன் கைகளால் துடைத்தாள். தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சட்டென அவன் நெற்றியில் தன் மெல்லிய உதடுகளை பதித்தாள். மூடியிருந்த அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா தன் விழிகளை மீண்டும் திறந்து சுகன்யாவின் முகத்தினை உற்று நோக்கினான். "அழாதேடா செல்வா, உனக்கு ஒண்ணுமில்லே ... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சி." உணர்ச்சி மிகுதியால் பொங்கி பொங்கி எழுந்த அவன் மார்பை நீவி விட்டாள். "நான் தான் உன்னைப்பாக்கறதுக்கு ஓடி வந்துட்டேனே. ராஜா நீ எழுந்துக்கறவரைக்கும் நான் உன் பக்கத்துல இருக்கறேண்டா. நீ அழாதேடா செல்லம் ... நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா; அவன் காதில் முணுமுணுத்தவாறு அவள் அவனுடன் சேர்ந்து தன் உதடுகள் துடிக்க ஓசை எழுப்பாமல் அழ ஆரம்பித்தாள். செல்வா மீண்டும் மெல்ல கண் திறந்து அவளை நோக்கி தன் உதடுகளை குவிக்க, சுகன்யா அவன் முகத்தின் மேல் குனிந்தாள். குனிந்தவள் தன் உதடுகளால் அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு நிமிர, நடராஜனும் மல்லிகாவும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், அவன் மார்பில் சரிந்து கிடந்த தன் துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள். "ம்மா ... இவ .. இவதான் என் சுகன்யாம்மா ... அவகிட்ட நீ பேசிப் பாரும்ம்மா, அவ எவ்வள நல்லவன்னு உனக்கு புரியும்." அவனால் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு நெற்றியும் தலையும் விண்விண்ணென்று தெறிப்பது போலிருந்தது. நடராஜன் அவன் படுக்கையை நெருங்க, "அப்ப்பா உடம்பெல்லாம் வலிக்குதுப்பா," அவன் தன் உடலை நிமிர்த்த முயன்றான். நடராஜன் தன் மனதில் அவன் படும் வலியை உணர்ந்தார். மகன் படும் அவஸ்தையையும், வேதனையையும் பார்க்க முடியாமல் மல்லிகா தன் முகத்தில் வேதனையுடன் அவன் வலது கையை மெதுவாக வருடினாள். நடராஜன் அமைதியாக செல்வாவின் முகத்தைப் பார்த்தார். தன் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொன்னார். பின் அவர் பார்வை படுக்கைக்கு மறு புறம் நின்றிருந்த சுகன்யாவின் மீது படிந்து அவள் முகத்தில் நிலைத்து நின்றது. இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கா. வெளியில நிக்கற ரெண்டு பேரும் மரியாதைப்பட்டவங்களா தெரியறாங்க. என் பொண்டாட்டி பேசினப் பேச்சுக்கு எவனாயிருந்தாலும் இன்னேரம் இங்க ஒரு ரகளையே பண்ணியிருப்பான். மல்லிகா மனசுக்குள்ள அப்படி என்னத்தான் இருக்குன்னு தெரியலை. ராத்திரி நான் சொன்னதுக் கெல்லாம் சரின்னா. இப்ப இங்க வந்து துள்ளிக்குதிக்கிறா. அவங்க ரெண்டு பேரும் அமைதியா இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பேசாம அவ பின்னாடி போனாங்களே? எதுக்காக போனாங்க; என் புள்ளையை அவங்க பொண்ணு விரும்பறாங்கற ஒரே காரணத்துக்காகத்தானே? சுகன்யாவை முன்ன பின்ன தெரியாது அந்த டாக்டருக்கு; அந்த மனுஷன் இவளை மனம் விட்டு பாரட்டி பேசிட்டு போறார். நம்ம பையனுக்கு இவளை விட பொருத்தமானவ எங்கே கிடைக்கப்போறா? இவதான் என் மருமக; அவர் தன் மனதில் அக்கணமே முடிவு செய்துவிட்டார். அவர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் மல்லிகா மவுனமாக தன் மகனின் கையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடராஜனின் தீர்க்கமான பார்வையை சந்திக்கமுடியாமல் சுகன்யா தன் தலையை தாழ்த்திக்கொண்டு, தன் மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தாள். வெளியில நடந்தது தெரியாம என்னை இவன் தன் அம்மாக்கிட்ட அறிமுகம் பண்ணி வெக்கிறான். அவங்களை எங்கிட்ட பேச சொல்றான். அவங்க மொத்தமா கூட்டிப் பெருக்கி எங்க ரெண்டு பேரு கதையையும் முடிச்சிட்டாங்கன்னு இவனுக்கு எப்படித் தெரியும். தன் மகனை என்னிடம் முழுசா விட்டுக் குடுத்துடுன்னு சித்த முன்னாடி சொன்ன மல்லிகா, நிச்சயமாக என்னிடம் இப்ப சமாதானமா பேசப் போறது இல்லை. மேற்கொண்டு சண்டை போடாம இருந்தா சரி; இப்ப மல்லிகா தன் புள்ளை கிட்ட தனிமையில ஏதாவது பேச நினைக்கலாம். நான் இங்கே அம்மவுக்கும் புள்ளைக்கும் நடுவுல நிக்கறது சரிதானா? சரியான நேரத்துல ரெண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க; நான் அவனுக்கு உதட்டுல முத்தம் குடுத்ததை கண்டிப்பா அவங்க பாத்து இருப்பாங்க; இந்த நேரத்தில இதை ஒரு பெரிய பிரச்சனையா ஆக்கி வெளியே போய் இவன் அம்மா கூச்சல் போட்டா என் மானம் கப்பல் ஏறிடும்? ஆனா இப்ப இதுக்கு என்ன பண்றது? எங்க ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்லை. சுகன்யா தன் மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள். அடியே சுகன்யா, நீ செல்வாவுக்கு முத்தம் குடுத்ததை யார் பாத்தா உனக்கு என்னடி; என்னைக்கு இருந்தாலும் இவன்தான் உன் புருஷன்னு அவன் கிட்ட காலையில போன்ல சொன்னே. எவ்வளவு நாளானாலும் காத்திருந்து அவன் கையாலதான் தாலி கட்டிக்குவேன்னு சொன்னே. அப்படின்னா இந்த மல்லிகாதான் உன் மாமியார், எதிர்ல நிக்கற நடராஜன்தான் உன் மாமனார்; இந்த ரெண்டு பேரும் செல்வாவுக்கும் உனக்கும் ரொம்ப ரொம்ப வேண்டியவங்க தானே. நீ முத்தம் குடுக்கறதை உனக்கு வேண்டியவங்க தானே பாத்தாங்க; பாத்தா பாத்துட்டு போறாங்கடி; இதைப் பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம புள்ளைக்காக இவ இப்படி உருகிப் போறாளேன்னு மல்லிகா மனசு மாறாதா? நீ ஒண்ணும் திட்டம் போட்டுப் பண்ணல; அவங்க உள்ளே வர நேரத்துக்கு, அவன் உதட்டை கவ்வல. மல்லிகா எதாவது கேட்டா; உன் ஆசை புள்ளைதான் முத்தம் குடுன்னு உதட்டை காமிச்சான்; ஆசையா கேக்கறவனுக்கு நான் எப்படி மாட்டேங்கறதுன்னு தீத்து சொல்லு. நீங்களும் ரெண்டு புள்ளையை பெத்த பொம்பளைத்தானே உங்களுக்கு உங்க புள்ளையோட அவஸ்தை புரியலயான்னு, சிரிச்சுக்கிட்டே கேளுடி. மீனா சொன்ன மாதிரி இவனுக்காக நான் எல்லாத்தையும் ஓடி ஓடி பண்ணிட்டு, இப்ப நான் ஏன் வெளியிலே போவணும்? நான் ஆசை பட்டவன் அடி பட்டு ரோடுல கிடக்கிறானே; என்ன ஆகுமோ; ஏது ஆகுமோன்னு மனசு குழம்பி கிடந்தப்ப, நாலு பேரு நிக்கற இந்த இடத்துல எதாவது பிரச்சனை ஆயிட வேணாமேன்னு, உன் புள்ளையை உனக்கு முழுசா திருப்பிக் குடுக்கறேன்னு மடத்தனமா உளறிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி; எமோஷனல் ஆயிட்டா என்னப் பேசறோம், ஏது பேசறோமுன்னு தெரியாம உளறிடறேன். காரணம் எதுவும் கேக்காதே, உன்னை நான் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லேன்னு நாலு பேரு எதிர்ல என் மூஞ்சியிலே அடிச்சாங்களே இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரது? முகத்தைப் பாத்தா அப்பாவியாதான் தெரியறாங்க; ஆனா சொல்லால அடிச்சாங்களே; என்னைப்பாத்து ஏன் பயப்படறாங்க; செல்வா என்ன சின்னக்குழந்தையா? நான் என்ன அவங்க புள்ளையை தூக்கிக்கிட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கா ஓடிட போறேன்? அவங்க புள்ளையை நான் சந்தோஷமா நான் வெச்சுக்கமாட்டேனா? அப்படி என்ன பெரிய தப்பு நான் பண்ணிடேன்? என்னை மருமகளா ஏத்துக்கமாட்டேங்கிறாங்க?அவங்க பார்வையில அவனை நான் காதலிச்சதே தப்பா? உன் புள்ளையை நான் காதலிக்கப்போறேன்; நீங்க பர்மிஷன் குடுங்கன்னு நான் கேட்டிருக்கணுமா? குற்றவாளிக்கு அவ பண்ண தப்பைக்கூட சொல்லாம தண்டிப்பேங்கிறது என்ன நியாயம்? இதைத்தானே செல்வா அன்னைக்கு எங்கிட்ட கேட்டான்" இந்த பாவி செல்வா கூட சேர்ந்து, அவன் எப்படி குழம்பி குழம்பி பேசுவானோ, அப்படியே அவனை மாதிரி நானும் ஆயிட்டேன்; ஆனா இவன் தங்கச்சி மீனா என்னா லாஜிக்கா பேசறா? வெளியில ஒடின என்னை ரெண்டு நிமிஷத்துல உள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாளே; அவகிட்டத்தான் நான் பேசறதுக்கு ட்ரெயினிங்க் எடுக்கணும் போல இருக்கு; அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது. காலையிலேருந்து, இவனை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு, போலீஸ் இன்ஸ்பெக்டர்லேருந்து, ஆஸ்பத்திரி டாக்டர் வரைக்கும் எல்லோர்கிட்டவும் தண்டோரா போட்டுட்டு, இப்ப உன் உரிமையை நீ ஏண்டி விட்டுக்குடுக்கறே? இங்கேயே நீ நில்லு. மல்லிகா என்ன பேசினாலும், வாயை மூடிகிட்டு பொறுமையா கேட்டுக்கோ. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாதே. எதுவா இருந்தாலும் இனிமே நீ நடராஜன் கிட்ட பேசு. அவரு பார்வையே சொல்லுது. அவருக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சுன்னு! சுகன்யா கட்டிலுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்த நடராஜனிடம் சென்றாள். மல்லிகாவின் பார்வை சுகன்யாவை பின் தொடர்ந்தது. சுகன்யா ஓரக்கண்ணால் மல்லிகாவைப் பார்த்தவாறு பேசினாள். "மாமா, உடம்பு வலின்னு இவர் சொன்னா, உடனே என்னை கூப்பிடுங்க; நான் வலிக்கு ஊசி மருந்து போடச்சொல்றேன்னு டாக்டர் மாதவன் சொல்லிட்டு போனார். நான் போய் அவரு எங்க இருக்காருன்னு பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்." என நயமாக பேசினாள். சுகன்யா, தன்னை மாமா என அன்புடன் அழைத்ததும் நடராஜன் ஒரு நொடி திகைத்து, தன் மனைவி மல்லிகாவை வியப்புடன் பார்த்தார். "சுகன்யா, நீ செல்வா பக்கத்துல இரும்மா, நான் போய் டாக்டரை கூப்பிட்டுகிட்டு வரேன்." நடராஜன் தன் மனம் நெகிழ்ந்து போனார். மல்லிகாவின் கண்கள் வியப்பால் விரிந்தது. அவள் முகம் இலேசாக சுருங்கியது. இந்த பொண்ணு சித்த முன்னாடி எங்கிட்ட என்ன சொன்னா? மீனாவும், சீனுவும் போய் என்ன சொல்லி இவளை திருப்பி இழுத்துகிட்டு வந்தாங்கன்னு தெரியலேயே? வந்த வேகத்துல, உள்ள வந்து கட்டில்ல கிடக்கறவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறா; மயக்கத்துல கிடக்கற என் புள்ளை இவ பேரைச் சொல்லி சொல்லி மாஞ்சு போறான்.

இவ அப்படி என்னாதான் சொக்கு பொடி போட்டு என் புள்ளையை மயக்கி வெச்சிருக்கான்னு தெரியலையே? பத்தாக்குறைக்கு இவ கிட்ட பேசி இவ எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சுக்கணுமாம்; பாக்கறதுக்கு லட்சணமா இருந்துட்டா போதுமா? போன வாரம் இவனை தன் ரூமுக்கு கூப்பிட்டு பாதி உடம்பை அவுத்து காட்டினான்னு சொன்னான். இன்னைக்கு என் கண்ணாலேயே பாத்துட்டேன் அவ லட்சணத்தை. சே.. சே... பொண்ணுன்னா ஒரு அடக்கம் வேணாம்; கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அலையறாளே? என் புள்ளை இவ கழுத்துல இன்னும் தாலியை கட்டலை. அதுக்குள்ள இவ என்னடான்னா என் புருஷனை மாமாங்கறா; என்ன தைரியத்துல இப்படி கூப்புடுவா? என் புருஷனுக்கு தலை கால் புரியல; அப்படியே உச்சி குளுந்து போய் நிக்கறாரு. அடுத்தது என்னை இவ அத்தைன்னு கூப்பிடுவாளா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே? கொஞ்சம் விட்டா இங்கேயிருந்தே இவ என்னை மொத்தமா பார்சல் பண்ணி, காசி, ராமேஸ்வரம்ன்னு அனுப்பிடுவா போல இருக்கே? அப்புறம் இவகிட்டதான் நான் எல்லாத்துக்கும் கை ஏந்தி நிக்கணுமா? மல்லிகா தன் கண் விரிய அவர்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள். "மாமா, அப்படியே வெளியில நிக்கறவங்களையும் கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்களேன்; இவரைப் பாத்துட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்" கண்களில் கனிவு பொங்க அவரைப் பார்த்தாள். நடராஜன் அறையை விட்டு வெளியில் போகத் தொடங்கியதும், மல்லிகா வெற்றுப் பார்வையொன்றை சுகன்யாவின் மீது வீசியவள், விருட்டென திரும்பி தன் கணவனின் பின் நடக்க, "அத்தைக்கு இன்னும் கோபம் தீரல போல இருக்கு" மல்லிகா போன வேகத்தைப் பார்த்த சுகன்யா தன் மனதில் சிரித்துக்கொண்டாள் சற்று முன்பு மீனாவும், சீனுவும், செல்வாவை பார்த்துவிட்டு போன பின், முழுசாக ஐந்து நிமிடம் கூட தூங்க முடியாமல் உடல் வலியால் தவித்து கண் விழித்த செல்வாவுக்கு புரண்டு படுக்க வேண்டும் போலிருந்தது. செல்வாவுக்கு ரத்தம் ஏற்றி முடித்து, டிரிப்ஸையும் நிறுத்தி இருந்தார்கள். "செல்வா, ஒரு நிமிஷம் கண்ணைத் தொறந்து பாரேன்; எங்கம்மாவும், மாமாவும் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க". தன் நெருங்கிய உறவினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்திய சுகன்யாவின் குரலில் மிதமிஞ்சிய அன்பும், பரிவும் ஒருங்கே தொனித்தன. செல்வா, சுந்தரியைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பி சுகன்யாவை ஒரு முறை நோக்கிப் புன்னகைத்தான். அம்மாவும் பொண்ணும் ஓரே பிரஸ்ல அச்சடிச்ச மாதிரி இருக்காங்களே; ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான் அவன். "முதல் தடவையா உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்; என்னாலே எழுந்து விஷ் பண்ணமுடியலே" அவன் முகத்தில் உண்மையான வருத்தம் படர்ந்திருந்தது. "பரவாயில்லே தம்பி, நீங்க சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு" சுந்தரி மெல்லிய புன்னகையுடன் பேசினாள். "ஸார், அன்னைக்கு, உனக்கும், எனக்கும் நடுவுல இனி எதுவுமே இல்லன்னு இவ சொல்லிட்டு போனதாலே, சுகன்யாவை எனக்குத் தெரியாதுன்னு உங்ககிட்டே மடத்தனமா பேசிட்டேன்; அதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்." செல்வா மெல்லிய குரலில் சுகன்யாவை பார்த்தவாறு பேசினான். "தம்பி, நான் அதை எப்பவோ மறந்துட்டேன்; வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்துல இருக்கறவங்களை நேரா ஒரு முறை பார்த்து பேசணும்ன்னு வந்தேன். துரதிருஷ்டவசமா, நாம ஒருத்தரை ஒருத்தர் இங்க மருத்துவமனையில சந்திக்க வேண்டியதாப் போச்சு." "உங்க எல்லோரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு; பத்து நாள் போகட்டும்; சுகன்யாவோட அப்பாவைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க அம்மாவுக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கலாம்ன்னு தோணுது. இதைத் தவிர வேற எந்த மனக்குறை அவங்களுக்கு இருந்தாலும் அதை சரி பண்ண நாங்க முயற்சி பண்றோம். "நீங்க உங்க அம்மாவை சமாதானம் பண்ணுங்க; முறைப்படி எல்லோருமா ஒரு தரம் எங்க வீட்டுக்கு வந்து இவளைப் பாருங்க; உங்கப்பா கிட்ட நான் பேசணும்னு நீங்க விருப்பப்பட்டா அவரிடம் நான் பேசத் தயார். நீங்க இருக்கற நிலைமையில அவருகிட்ட உங்க கல்யாண விஷயத்தை பேசினா அது நல்லாயிருக்காது; எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்காக மனசுல தவிப்போட காத்துகிட்டு இருக்காங்கறதை ஞாபகத்துல வெச்சுக்குங்க. என்னக்கா; வேற ஏதாவது நீ சொல்லணும்னு நினைக்கிறியா?" இதமாக பேசியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்." "இவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்குப்போதும்" சுந்தரி தன் குரல் தழுதழுக்கப் பேசியவள், பக்கத்தில் நின்றிருந்த சுகன்யாவின் தலையை ஆசையுடன் வருடினாள். சுகன்யா தன் மனம் விகசிக்க தன் அம்மாவையும் செல்வாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்வா, சுகன்யாவை தன் கண்களால் தன்னருகே வரும்படி அழைத்தான். அவள் வலது கையை தன் கையால் எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கி முறுவலித்தான். "இது போதும் தம்பி" சொல்லியவாறு ரகு எழுந்த போது டாக்டர் மாதவனும், நடராஜனும் அறையினுள் நுழைந்தார்கள். செல்வா, உங்களுக்கு நான் ஒரு இஞ்சக் ஷன் போடறேன், பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும், உடல் வலியும் குறையும் ... ம்ம்ம் ... சொல்லிக்கொண்டே அவன் வலது கையில் ஊசியை குத்தி மருந்தை செலுத்தினார். *** நடராஜன் சார், இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு கிளம்பறேன். சுகன்யா அவளால் முடிஞ்ச வரைக்கும் இங்க உங்களுக்கு உதவியா இருக்கணும்னு விருப்பப்படறா ... நீங்க அதை அனுமதிக்கணும். தம்பி சுகமாயி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் ஒரு தரம் நீங்க எனக்கு போன் பண்ணுங்கவீங்கன்னு எதிர்பாக்கிறேன். போயிட்டு வரோம் ... மல்லிகாவிடமும், அவள் பக்கத்தில் நின்ற மீனா மற்றும் சீனுவிடமும் பொதுவாக கை கூப்பினார். "நல்லதுங்க; உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி; போய்ட்டு வாங்க; நீங்களும் போன் பண்ணுங்க ... சீனு, நம்ம வண்டி வெளியில பார்க்கிங்க்ல இருக்கு; நீ இவங்களை அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடறியா? ... கார் சாவியை அவனிடம் நீட்டினார். சுந்தரி நடராஜனைப் பார்த்து கை கூப்பியவள், மல்லிகாவின் அருகில் சென்று அவள் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "நம்ம பசங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பரம் ஆசைப்பட்டுட்டாங்க. நல்லது சீக்கிரமா நடந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்ங்கறது என் ஆசை." "குறையே இல்லாதவங்கன்னு யாரும் இந்த ஊர்லே இல்லே; சுகன்யாவும் உங்க பொண்ணுதான். ஏதாவது ஒரு குத்தம், குறையை, நீங்க அவ கிட்டப்பாத்து இருக்கலாம்; நீங்க அதை தாராளமா அவகிட்ட சுட்டிக்காமிக்கலாம்; அவ தன்னை நிச்சயமா திருத்திக்குவா; கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்; உங்களை நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன். இப்ப நான் போய்ட்டு வரேங்க." சுந்தரி புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தாள். *** "அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா ... சீனுவுக்கு போன் பண்ணட்டும்மா, அவங்களை வீட்டுல விட்டுட்டு திரும்பி வரும்போது, அவனை ஏதாவது ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்றேனே ... ?" மீனா நடராஜனிடம் வினவினாள். "எனக்கும் தான் பசியில தலைவலிக்க ஆரம்பிச்சிடிச்சி; மணியும் ஒண்ணாக போகுது; டாக்டர் சொன்ன மாதிரி நான் ஒரு ஆள் இங்கேயே இருக்கேன்; சீனு வந்ததும் நீங்க எல்லாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருந்தா, சட்டுன்னு எதையாவது சாப்பிட்டுட்டு, எனக்கு ஒரு தயிர் சாதம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கோ; நான் வெளியில மரத்தடியிலே உக்கார்ந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுகிறேன்." மல்லிகா தன் பெண்ணைப்பார்த்தாள். "அம்மா, சுகன்யாவை மறந்துட்டியா?" "ஏண்டி, நீ என்னா, என்னை ஒரு கொடுமைக்காரின்னே உன் மனசுக்குள்ள முடிவு கட்டிட்டியா? என்னை இதயமே இல்லாத ஒரு ராட்சசின்னு நினைக்கிறியா? பாவம் அந்த பொண்ணு, என் புள்ளைக்காக தன் ரத்தத்தை குடுத்துட்டு, காலையிலேருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம துடி துடிச்சுக்கிட்டு இருக்காளே; அது எனக்கு புரியலன்னு நீ நினைக்கிறியா? சுகன்யா உன் பொண்ணுன்னு இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி அவ அம்மா சொல்லிட்டு போனா; சுகன்யாவை விட்டுட்டு நான் சாப்பிடுவேனா? "அப்புறம் ஏம்ம்மா ... நீ காலையில அவகிட்ட அவ மனசை புண்படற மாதிரி பேசினே? எல்லாரும் உன்னை தப்பா நினைக்கிற மாதிரி ஏன் நடந்துகிட்டே?" மீனா தன் தாயின் தோளை ஆதுரத்துடன் அழுத்தினாள். "நீ கேக்கிற கேள்விக்கெல்லாம் என்னால இப்ப உனக்கு பதில் சொல்லமுடியாது. நான் சொன்னாலும், நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு இப்ப புரியாது" "சரி ... அவளுக்குத்தான் நீ சொல்றதுல இருக்கற அர்த்தம் புரியாது; எனக்கும் புரியாதா? இப்பத்தான் அவளை நீ நேராப் பாத்துட்டியே; அந்த பொண்ணோட அம்மாவையும் பாத்துட்டே; அவ தாய் மாமாவையும் பாத்துட்டே; சும்மா ஜாலியா பையனுங்க பின்னால வண்டியில ஏறி ஊர் சுத்திட்டு, சினிமா பாத்துட்டு ... அவன் காசுல பாப்கார்ன்னும் ஐஸ்கீரீமும் வாங்கித் திண்ணுட்டு, அப்புறமா அந்த பையனுக்கு டாட்டா காட்டிட்டு, ஃபாரின்லேருந்து வழுக்கை விழுந்த சொட்டைத்தலையன் எவனாவது கிடைச்சான்னா, அவன் பின்னாடி போற இந்த காலத்து பொண்ணுங்க மத்தியில, உன் பிள்ளைக்காக ஓடி ஓடி அவ பண்ற காரியங்களையும் உன் கண்ணால பாக்கிறே; உன் மனசுல கை வெச்சு சொல்லுடி; உனக்கு அவளைப் பிடிக்கல்லேன்னு? அவ நம்ம பையனுக்கு ஏத்தவ இல்லையா? நடராஜன் வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார். "இப்பவே இங்கேயே எல்லாத்தையும் எங்கிட்ட நீங்க பேசி முடிச்சே ஆகணுமா? மல்லிகாவின் முகம் மெலிதாக சிவக்க ஆரம்பித்தது. "ஆமாம்; அப்படித்தான் வெச்சுக்கோடி; உன் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு; உன் மனசுல என்னத்தான் இருக்குன்னு எனக்கு தெரியலை; நீ என்ன எதிர்ப்பாக்கிற அவகிட்ட; சொன்னாத்தானே தெரியும்; உன்னால, நீ உளறினதாலே, காலையிலே அவங்க ரெண்டு பேருகிட்டவும், தேவையில்லாம நான் மன்னிப்பு கேக்க வேண்டியாதாச்சு; அவளை உனக்கு புடிக்குது; புடிக்கலைன்னு; உண்மையை சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்?" "...." "சொல்லுடி மல்லிகா; நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற?" "எனக்கும் அவளைப் பிடிச்சிருக்குங்க; ஆனா ..." மல்லிகா தன் வார்த்தையை முடிக்கும் முன், சுகன்யா கையில் ஒரு "கேரி பேக்குடன்" வேகமாக மூச்சிரைக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். தன் மாமாவையும், அம்மாவையும் வழியனுப்பிவிட்டு நின்ற சுகன்யாவுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. நாம ஓடி வந்த மாதிரிதான் செல்வாவோட குடும்பமும், ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரக்க பரக்க ஹாஸ்பெட்டலுக்கு ஓடி வந்திருப்பாங்க; அவங்களும் கண்டிப்பா அவ்வளவு சீக்கிரமா காலையில டிஃபன் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க. அவங்களும் இப்ப பசியோடத்தான் இருப்பாங்க. செல்வா இப்போதைக்கு கண் விழிக்கமாட்டான்னு டாக்டர் சொன்னார்; அவன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது டிஃபன் வாங்கிட்டு போய் அவங்களுக்கும் குடுத்துட்டு, தானும் சாப்பிட்டால் என்னவென்று அவள் மனதில் பட்டது. மருத்துவமனைக்கு சற்று தள்ளியிருந்த ஹோட்டலில் நுழைந்து அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு தக்காளி சாதமும், ரெண்டு பாக்கெட் தயிர் சாதமும், தொட்டுக் கொள்ள மசால் வடையும், கூடவே ரெண்டு பாட்டில் மினரல் வாட்டரும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுகன்யா. "அத்தே; எவ்வளவு நேரம் நீங்க வெறும் வயித்தோட இருப்பீங்க, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்" "இல்லம்மா, எனக்கு பசியில்லை, நான் காத்தால இங்க வர்றதுக்கு முன்னே சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்; நீங்கள்ளாம் சாப்பிடுங்க, நீ ரத்தம் வேற குடுத்துட்டு வந்திருக்கே, டயர்ட்டா இருப்பே" மல்லிகா வேண்டுமென்றே சுகன்யாவின் முகத்தைப் பார்க்காமல் பேசியவள், தன் மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். இவ கொஞ்சம் பார்க்கற மாதிரி அழகா இருக்காளே, திமிர் பிடிச்சவளா இருப்பாளோன்னு நினைச்சேன்; இல்லாட்டி அசமஞ்சமா இருக்கப்போதுன்னு நெனச்சேன், ஆனா ரெண்டுலேயும் சேராம, கெட்டிக்காரியாத்தான் இருக்கா. எல்லோரும் பசியோட இருப்போமேன்னு, தான் காதலிச்சவன் குடும்பத்துக்காக, உரிமையா ஓடிப்போய் எதையோ சட்டுன்னு வாங்கிட்டு வந்திருக்காளே; நல்ல தாரள மனசுதான் இவளுக்கு; பை நெறையவும் வாங்கிட்டு வந்திருக்கா! நான் நெனைச்ச மாதிரி, ஆசையா அத்தைன்னு கூப்பிட்டு என்னையும் எப்படி தந்திரமா வளைக்கறாப் பாரு; அவ கையால குடுக்கறதை மனசு திருப்தியா வாங்கிச் சாப்பிட்டுட்டு அப்புறம் நீ வேணாண்டின்னு எப்படி அவ கிட்டவே சொல்லுவேன்; இவ நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரையும் ஏற்கனவே தன் கையில போட்டுக்கிட்டா; இப்ப நீ ஒருத்திதான் பாக்கி; மல்லிகா இவகிட்ட நீ மசிஞ்சிடாதேடி. சுகன்யாவும் கில்லாடியாத்தான் இருக்கா; சாப்பாட்டைக் கையில வெச்சிக்கிட்டு, பசியில துடிச்சிக்கிட்டு நிக்கற நம்ப அம்மாவை படால்ன்னு அத்தைன்னு கூப்பிட்டு தன் வழிக்கு கொண்டாரப்பாக்கிறாளே; மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "அத்தை, உங்களுக்கு என் மேல என்னமோ கோபம்; அதை மனசுல வெச்சிக்கிட்டுத்தான், நான் டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சாப்பிடமாட்டேங்கிறீங்க; செல்வா சொல்லியிருக்கார்; ஞாயித்துக்கிழமையில நீங்க பதினோரு மணி வாக்கிலத்தான், நிதானமா குளிச்சு முழுகிட்டு, சாம்பார், பொறியல்ன்னு முழு சமையல் பண்ணித்தான் சாப்பிடுவீங்கன்னு; உங்க முகமே சொல்லுது; இப்ப நீங்க பசியோட இருக்கீங்கன்னு; உங்க கோபம் ஒருபக்கத்துல இருக்கட்டும்; எனக்காக இப்ப ஒரு வாய் சாப்பிடுங்க ... ப்ளீஸ் ... " சுகன்யா கெஞ்சலாகப் பேசினாள். அடப்பாவி! இந்தப் பய புள்ளை என் மானத்தை வாங்கறதுக்குன்னே பொறந்திருக்கான். என்னைப்பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் இவகிட்ட இன்னும் என்ன என்ன சொல்லி வெச்சிருக்கான்னுத் தெரியலையே? மல்லிகா தன் மனதுக்குள் மருகினாள். நடராஜன் அவர்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டிருந்த "நீயா நானா" விளையாட்டை, இதுல இன்னைக்கு "ஜெயிக்கப் போறது யார்" என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். "எனக்கு பசி உயிர் போவுது ... என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க; நான் சாப்பிடறேன்; எனக்கு குடுங்க; சீனு வந்தான்னா யாருக்கும் ஒண்ணும் மிச்சம் இருக்காது ... மொத்தமா வாரி கொட்டிகிட்டுப் போயிடுவான்; அப்பா உங்களுக்கு ஒண்ணும் இப்ப சாப்பிடறதுல பிரச்சனையில்லையே" மீனா கிண்டலாகச் சிரித்தவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கி பொட்டலங்களை வெளியில் எடுத்தாள். "எனக்கு என்ன பிரச்சனைம்மா? நிஜமாகவே எனக்குப் பசிக்குது; நான் சாப்பிட ரெடி; எனக்கு ஒரு தக்காளி சாதம் பொட்டலம் குடும்மா; மல்லிகா, சும்மா பிகு பண்ணிக்காம வந்து சாப்பிடுடி; உனக்குப் பிடிச்ச தயிர்சாதம், மசால்வடைன்னு சுகன்யா ஏகப்பட்டது வாங்கிட்டு வந்திருக்கா ... " ஒரு பொட்டலம் தயிர்சாதத்தையும் ஒரு வடையையும் எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார். "ரொம்பத் தேங்க்ஸ்ம்மா சுகன்யா; என்னம்மா எங்க வீட்டுல யாருக்கு என்ன என்ன பிடிக்கும்ன்னு அவன் உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கானா? அவர் சுகன்யாவை மன நிறைவுடன் பார்த்தார். "நம்மளை விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா, சாப்பிடுங்க சாப்பிடுங்க; இது மாதிரி இங்க எதாவது நடக்குமுன்னு தெரிஞ்சுதான், சுகன்யாவோட அம்மா சுடச் சுட ஊத்திக் குடுத்த ஊத்தப்பத்தையும், பக்கோடா குருமாவையும் ஒரு புடி புடிச்சுட்டு வந்துட்டேன்; பாவம் நம்ம ஹீரோவுக்காக ஆசை ஆசையா காலையில எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க; அவன் என்னடான்னா காலை ஒடைச்சிக்கிட்டு இங்க கட்டில்ல கிடக்கிறான்; மீனா ... எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்டா கண்ணு ..." சொல்லியவாறு மரத்தடி நிழலில் புல் தரையில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்த சீனு ஒரு மசால் வடையை எடுத்துக் கடித்தான். "சீனு, உங்களை நான் விட்டுடலை; உங்களுக்கும் சேத்துத்தான் வாங்கிட்டு வந்தேன். இப்ப உங்களுக்கு வேணும்ன்னா நீங்க தாராளமா சாப்பிடலாம் ..." சுகன்யா அவன் பக்கம் சாப்பாட்டு பையை நகர்த்தினாள். "ச்சே ... ச்சே ... நான் சும்மா உங்களை கலாய்ச்சுப் பாத்தேன்; நான் திருப்தியா உங்கம்மா கையால சாப்பிட்டாச்சு; சூப்ப்ப்பரா இருந்தது குருமா; உங்களுக்கும் இந்த அயிட்டமெல்லாம் பண்ணத்தெரியுமில்லியா; லெமன் ரைஸ் ... அப்புறம் புளிசாதம் நல்லாப் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்; அவன் சுகன்யாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். "உனக்கெப்படிடாத் தெரியும்" மீனா குறுக்கிட்டாள். "ம்ம்ம் ... வேறெப்படி ... எல்லாம் நம்ம ஹீரோ சொல்லித்தான் தெரியும் ... அவரு இங்க சென்னையில வேலையில இருந்த வரைக்கும், ஆபீசுல லஞ்சுல மனசுக்குப் பிடிச்சவாளுக்கெல்லாம், தவறாம பிரசாத வினியோகம் நடக்குமாம் ... " சொல்லிவிட்டு அவன் சுகன்யாவைப் பார்த்து ஹோவென சிரித்தான். "உங்க கிண்டல்லாம் போதும் சீனு ... இப்ப உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இங்க அவசியம் சொல்லித்தான் ஆவணுமா ... அத்தை என் மேல ஏற்கனவே கோபமா இருக்காங்க; அவங்க புள்ளையை நான் என் கையில போட்டுகிட்டேன்னு; சுகன்யா தன் முகம் சிவக்க புன்னகைத்தாள். "டேய் ... சீனு ... இவங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு வேறென்னல்லாம் தெரியும்டா" சொல்லுடா கேக்கறதுக்கு ரொம்ப இண்ட் ரஸ்டிங்கா இருக்கு" மீனா ஆர்வத்துடன் கேட்டாள். "நீ இன்னும் சின்னப்பொண்ணு ... அப்படியே அம்மாவுக்கு பாப்பாவா ஒரு ஓரமா ஒதுங்கி நில்லு; பெரியவா பேசும் போது நீ குறுக்க வரப்படாது; இதுக்கு மேல வேற எதுவும் கேக்காதே; அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விவகாரம் ... உனக்கு வேண்டாம் ... நோக்கு புரிஞ்சிக்கறதுக்கு வயசு பத்தாது ... சீனு சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் மேலும் உரக்கச்சிரித்தான். *** சுகன்யா, மல்லிகா சாப்பிட ஆரம்பிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கணவன் கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டு சீனு பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சீனு என்ன சொல்றான்? இவங்க ரெண்டு பேர் நடுவில வேற என்னல்லாம் நடந்திருக்கும்? சாப்பிடும்மா, நீ சாப்பிட்டாத்தான் சுகன்யாவும் சாப்பிடுவாங்கன்னு தோணுது" மீனா தன் அம்மாவின் இடுப்பில் கிள்ளினாள். அதற்கு மேல் மறுப்பெதுவும் சொல்ல முடியாமல் மல்லிகா மவுனமாக சாப்பிடத்தொடங்க, சுகன்யாவும் தக்காளி சாதத்தை சாப்பிடத்தொடங்கினாள். இரண்டு கவளம் சாப்பிட்ட சுகன்யாவுக்கு தொண்டையை அடைத்து பொறை ஏறியது ... இருமத் தொடங்கியவள் .. தன் கண் கலங்க, கையிலிருந்த சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை குடித்தாள். "என்னாச்சு சுகன்யா, ஏன் அழறீங்க, மீனா பதைபதைப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து அவள் தலையை இலேசாகத் தட்டினாள். "ஒண்ணுமில்லே மீனா ... காலையில ஆசையா சாப்பிட வரேன்னு சொல்லிட்டு உன் அண்ணன் என் வீட்டுக்கு வந்தார்... வழியில அடி பட்டு ... இப்ப தூக்க மருந்து மயக்கத்துல பசியோட உள்ளே படுத்து கிடக்கறதை நினைச்சேன் ... துக்கம் என் தொண்டையை அடைச்சிடுத்து; அவரை சாப்பிட கூப்பிட்டப்ப இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவேயில்லே ... இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவரைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன் ... அந்த குற்ற உணர்ச்சியினால என்னால தொடர்ந்து சாப்பிட முடியலை" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி போலியாகச் சிரித்தாள்.

"உன் மேல எந்த தப்பும் இல்லம்மா ... உன்னாலத்தான் ... உன்னைப் பாக்க வந்ததுனாலத்தான் அவனுக்கு அடிபட்டுதுன்னு ... நீ நினைக்கறது தப்பு; நீ அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதே; நடக்கணும்ன்னு இருக்கறதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாதும்மா ... " நடராஜன் இதமாக அவளிடம் பேசியவாறு தன் மனைவியை ஒரக்கண்ணால் பார்த்தார். சுகன்யாவையே பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவின் தாய்மை சட்டென விழித்தது; தன் மகனுக்காக சாப்பிடக்கூட முடியாமல் மனம் கலங்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் உள்ளத்தின் மூலையில் இறுகிக்கிடந்த ஒரு பனிப்பாறை மெதுவாக உருகி கரையத் தொடங்கியது. இருபத்தஞ்சு வருஷமா, தவமிருந்து ஆசையாக பெத்து, தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த தன் பிள்ளையை, தன் உடல் அழகைக் காட்டி, மினுக்கி, ஒரே நாளில் கொத்திக்கொண்டு போக வந்தவள் என சுகன்யாவின் மீதிருந்த, அர்த்தமில்லாத, அவ்வப்போது சாவித்திரியின் பொறுப்பற்ற பேச்சுகளால், தன் மனதில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சி சட்டென குறையத் தொடங்க, மல்லிகாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது. இவ உடம்பால மட்டும் அழகா இல்லை; இவ மனசும் அழகாத்தான் இருக்கு; சுகன்யாவை மல்லிகா முதன் முறையாக தன் மனதில் ஒரு நிறைவுடன் பார்த்தாள். சுகன்யாவின் முகம் இதுவரை அவள் உணர்ந்ததை விட மேலும் அழகாக இருப்பது போல் அவளுக்குப் பட்டது.

No comments:

Post a Comment