Pages

Thursday, 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 7


கபிலனின் மிருகத்தனத்தில் அரண்டுவிட்ட சூர்யா அவனைவிட்டு பிரிந்து பெற்றோரிடம் செல்ல முடிவெடுத்து அதை பற்றி கபிலனிடம் பேசினாள். அவள் பிரிவை சொன்னதும் அடுத்த நொடி பாய்ந்து வந்த கபிலன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்துக் கொண்டான். "சூர்யா... என்ன வார்த்தை சொல்லிட்ட சூர்யா... என்னை விட்டுட்டு போய்ட போறியா...? நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சூர்யா... நேத்து ஒரு மிருகம் மாதிரி நான் நடந்துகிட்டது எனக்கே வெறுப்பா இருக்கு. அதனால தான் காலையிலிருந்து உன் முகத்தை கூட பார்க்க சங்கடப்பட்டுகிட்டு இருந்தேன்... மன்னிச்சுடு சூர்யா... தயவு செய்து என்னை மன்னிச்சுடு..." அவன் காலில் விழுந்து அழ இவள் பதறிவிட்டாள். "ஹேய்... என்ன இது... ஐயோ... காலை விடுங்க.... ப்ளீஸ்... எந்திரிங்க..." "இல்ல சூர்யா... நான் மடத்தனமா நடந்துகிட்டேன்... போதைல என்ன செய்றோம்ன்னு தெரியாம செஞ்சுட்டேன்... நீ என்னை ஏமாத்திட்டென்ற கோபத்துல செஞ்சுட்டேன்... சூர்யா.. நீ என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்போதான் நான் விடுவேன்... ப்ளீஸ் சொல்லு..." அவன் கெஞ்சினான். என்ன இருந்தாலும் ஒரு மனிதன் செய்த தவறுக்காக காலில் விழுந்து கெஞ்சுகிறான். அதோடு இவளும் தவறு செய்யாமல் இல்லையே... ! அவள் மனம் இளகியது...

அவனை மனதார இன்னும் கணவனாக ஏற்க முடியவில்லை என்றாலும் அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து... பெற்றோர் செய்துவைத்த திருமணத்திற்கு மதிப்பு கொடுத்து... "சரி... நீங்க முதல்ல எந்திரிங்க..." என்றாள். "இல்ல நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு... அப்போதான் எந்திரிப்பேன்..." "சரி... நேற்று வரை நடந்த பழசை எல்லாம் மறந்திடுவோம்... நீங்க எந்திரிங்க..." அவள் சொன்னாளே ஒழிய அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது. நீ கபிலனை ஏமாற்றுகிறாய்... உன்னால் தீரஜ் பிரசாத்தை மறக்க முடியாது... மனசாட்சியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது... # # # அன்று இரவு கபிலன் மீண்டும் தான் உண்மை முகத்தை சூர்யாவிடம் காட்டினான். இன்றும் குடித்துவிட்டு வியர்த்த முகமும்... சிவந்த விழிகளுமாக வந்து நின்ற கபிலன் அவளை நடுங்க செய்தான். "நேற்று மாதிரி இன்றும் நடந்துகொல்வானோ...!" அவள் உடல் சில்லிட்டது. "எ... என்ன... இன்னிக்கும்....?" அவள் தயங்கி தயங்கி என்ன கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள். "என்னடி... என்ன...? உன் நடிப்பெல்லாம் என்கிட்டேயேவா...?" "................" "எப்படி... எப்படி....! அந்த தீரஜ் பிரசாத் உன்னை லவ் பண்ணினான்... நீ அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துட்ட.... ஹா.... ஹா... குட் ஜோக்..." "......................." "கேட்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லலாம்... ஆனா நான் கேனையன் இல்ல..." "................................" "ஏன்டி... அந்த தீரஜ் பேரை சொன்னா நான் உன்னை பற்றி ஆராய்ச்சி செய்றதை விட்டுடுவேன்னு நெனச்சியா...?" "................" "ஆமா... உண்மையிலேயே அவன் யாருடி... அந்த ஃபைஸல் தானே.... அவன் தான் உன்னை பற்றி என்கிட்டே அன்னைக்கு விசாரிச்சான்.... சொல்லுடி அவன் தானே..." இது போலவே விடிய விடிய சூர்யாவை தூங்கவிடாமல் பேசிபேசியே கழுத்தை அறுத்தான். அவனுக்கு போதையில் தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அசதியில் நின்ற நிலையிலேயே கண்களை லேசாக மூடினாலும் குரலை உயர்தி அவளை அதிர வைப்பான். நேற்று மாதிரி இன்று நடந்துவிட்டால் அவளால் தாங்க இயலாது... அதனால் அவன் கொடும் மொழிகளை கண்ணீருடன் சகித்துக் கொண்டு நின்றாள் சூர்யா. முதலில் நின்று கொண்டு பேசியவன் பிறகு வசதியாக அமர்ந்து கொண்டு பேசினான். பிறகு படுத்து கொண்டே பேசினான். பேசி பேசி ஓய்ந்து அவன் நன்றாக உறங்கிய பிறகுதான் சூர்யா அவள் நின்ற இடத்திலிருந்து அசைந்தாள். ஆனால் அப்போது மணி விடியற்காலை ஐந்து அடித்தது. படுக்கைக்கு செல்லாமல் நேரடியாக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். தினமும் வேலைக்கு விடுப்பு சொல்ல முடியாதே...! இரவு குடிபோதையில் சூர்யாவை தினமும் ஒவ்வொரு விதமாக சித்ரவதை செய்யும் கபிலன் விடிந்ததும் 'இவன் தானா அவன்...' என்கிற ரேஞ்சுக்கு மான ரோஷம் பார்க்காமல் அவள் காலில் விழுந்து கெஞ்சுவான்... "என்ன மனிதன் இவன்...! ஒரு நிலையாக இருக்காமல் மாற்றி மாற்றி நடந்து கொள்கிறானே...!" சூர்யா குழம்பிவிடுவாள். சூர்யாவின் மேல் இருக்கும் கோபத்தை போதை என்னும் திரைக்கு பின் ஒளிந்துகொண்டு வெளிப்படுத்தும் கோழை தான் கபிலன் என்பதை சூர்யாவிற்கு புரிந்துகொள்ள முடியவில்லை... அவனுடைய இரட்டை வேடத்தை அந்த குழந்தை பெண்ணால் சமாளிக்க முடியவில்லை... # # # தீரஜ்பிரசாத்தின் உடலெல்லாம் மிளகாய் அரைத்து பூசியது போல் எரிந்தது. அவனால் சூர்யா மற்றொருவனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் அவள் இதே ஊரில் வேறொருவன் வீட்டில்... அவனுக்கு மனைவியாக.... "ஐயோ... !" அவனால் அதற்கு மேல் நினைக் கூட முடியவில்லை. அவனுக்கு சூர்யா மேல் கடுமையான கோபம் இருந்தாலும் மற்றொருவனுடைய குடும்ப வாழ்க்கையை அழித்து தன்னுடைய வாழ்க்கையை செழிக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அவனுக்கு கோபம்... வன்மம்... எல்லாம் சூர்யா மேல் மட்டும் தான். கபிலன் மீது பொறாமையாகத்தான் இருக்கிறது... அவனை பார்த்தால் உடம்பெல்லாம் எறிவது போல தான் இருக்கிறது... அவனை பார்க்கவே பிடிக்கவில்லை தான்... ஆனால் இதற்கெல்லாம் முழு முதற்காரணம் சூர்யா மட்டும் தானே... சூர்யாவை வதைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட தீரஜ் அவளை வீட்டை விட்டு வெளியேற்றி கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு கொண்டுவர முடிவு செய்தான். அதற்கு கபிலனை கருவியாக பயன்படுத்திக் கொண்டான். கபிலனின் பணத்தாசையை கண்டுகொண்டவன் அவனுக்கு பணத்தை சம்பளமாக அல்லியல்லி வழங்கியதோடு அவனை சூர்யாவிடம் நெருங்காமலும் பார்த்துக் கொண்டான். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மட்டுமே வீட்டில் தங்க முடிந்த கபிலனின் உடல் ஓய்வுக்காக மட்டுமே வீட்டிற்கு செல்லும் என்பது அவனுக்கு உறுதி... ஆனால் இந்த ஒரு வாரமாக கபிலனின் நடவடிக்கை தீரஜ் பிரசாத்தை கலக்கியது. அவன் அடிக்கடி லீவ் போடுகிறான். காலை கம்பனிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை... மாலையும் விரைவாகவே சென்றுவிடுகிறான்... 'புது மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை போலும்...' இவற்றையெல்லாம் நினைத்தால் தீரஜ் பிரசாத்திற்கு பற்றிக்கொண்டு வரும். அந்தமாதிரி நேரங்களில் அவனிடம் சிக்குவோர் சின்னாபின்னம்தான்... ஆனால் அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்திருந்தது... சூர்யா வேலைக்கு செல்கிறாளாம்... KC -க்கு தான் அவள் வேலைக்கு வரவேண்டும் என்பது தீரஜ் பிரசாத்தின் விருப்பம். ஆனால் அவள் வேறு ஏதோ ஒரு கம்பனிக்கு வேலைக்கு செல்கிறாள். அதனால் என்ன...? அவள் வேலை செய்யும் கம்பனியை அவனுடைய கம்பனியாக மாற்றுவதில் அவனுக்கு சிரமம் எதுவும் இல்லை... அந்த வாரமே கம்பெனி கைமாறியது... சூர்யாவும் தீரஜ்பிரசாத்தை சந்திக்கும் நேரம் வந்தது.... அன்று சூர்யா வேலை செய்யும் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. புது முதலாளி வந்திருக்கிறார். அவர் மேல்மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களை எப்போது அழைப்பாரோ என்கிற பரபரப்பில் தங்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருந்தார்கள். வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் முடிந்திருக்கிறது என்பதால் சூர்யாவிற்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இல்லை... அதனால் அவள் முதலாளியின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அழைப்பும் வந்தது. முதலாளியின் அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டி உள்ளே வர அனுமதிக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்ற சூர்யா நிச்சயம் தீரஜ்பிரசாத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவள் மலங்க விழித்துக் கொண்டு நிற்கும் போதே "கம் இன்...." அவன் அவளை உள்ளே வர சொன்னான். எப்படிதான் அவனுடைய கண்களில் அப்படி ஒரு அந்நியத்தன்மையை கொண்டுவந்தானோ... அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்... இவளுடைய திகைத்த விழிகளை பார்த்து 'ஏன் இந்த பெண் இப்படி பார்க்கிறாள்...?' என்பது போல் பதில் பார்வை பார்த்து மட்டும் அல்லாமல் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போல ஒரு பார்வை பார்த்து வைத்தான். சூர்யாவிற்கு ஒரு நொடி சந்தேகமே வந்துவிட்டது... 'இவன் தீரஜ் தானா...! அல்லது... அவனோடு ஒட்டி பிறந்த இரட்டை பிறவி சகோதரன் யாரேனும் உண்டோ...! இல்லையே... தீரஜ் தன்னை பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்று தானே சொன்னான்...' அவள் பயங்கரமாக குழம்பிவிட்டாள்.

ஆனால் அடுத்த நொடி அங்கே இருந்த பெயர் பலகை அவன் தீரஜ் தான் என்பதை தெளிவாக சொன்னது. அவள் மனம் வெகுவாக புண்பட்டது. 'இவன் என்னை மறந்தேவிட்டானா...! எப்படி இவனால் முடிந்தது...? என்னால் முடியவில்லையே... ' ஒரு நொடி தன்னிலை மறந்து சூர்யாவின் மனம் தீரஜ்பிரசாத்திடம் உரிமையை எதிர்பார்த்தது... பிறகு தன்னுடைய நிலையை எண்ணி 'ச்ச... என்ன நான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்...! எனக்கு திருமணம் முடிந்துவிட்டது... கபிலன் தான் என் கணவன். அவனுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்...' அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். சூர்யாவின் எண்ண ஓட்டத்தையும் தடுமாற்றத்தையும் அவள் முக பாவத்திலிருந்து கண்டு கொண்ட தீரஜ் முகத்தில் கசப்பான புன்னகை வந்து மறைந்தது. "உக்காருங்க..." என்று சொல்லி அவள் கையில் இருந்த கோப்பை வேண்டி கை நீட்டினான். சூர்யா அதை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி புரட்டியபடியே "உங்க பேர்...?" அவளிடம் கேள்வி கேட்டான். "சூ... க்க்ம்... சூர்யா..." பதில் பேசவிடாமல் அடைத்த தொண்டையை செருமி சரிசெய்து கொண்டு அவனுக்கு பதில் சொன்னாள். "எவ்வளவு நாளா இங்க வேலை பார்க்குறீங்க...?" "ஒரு வாரமா..." "இதுக்கு முன்னாடி எண்ண செய்துகிட்டு இருந்திங்க...?" "கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை செய்து கொண்டிருந்தேன்... " "கிருஷ்ணா கெமிக்கல்ஸ்...!" அவன் குரலில் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்து அவளை கேள்வியாக பார்த்தான். அவனுடைய இந்த பாவம் அவளை மிகவும் வருத்தியது. 'தூக்கியெரிந்தேவிட்டானே...!' "ஆமாம்... கிருஷ்ணா கெமிக்கல்ஸ் தான்..." அவள் மெலிந்த குரலில் பதில் சொன்னாள். "அது பெரிய கம்பெனியாச்சே...! அந்த வேலையை விட்டுட்டு இங்க ஏன் ஜாயின் பண்ணியிருக்கீங்க...?" "அவள் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள்." "மிஸ். சூர்யா... ம்ம்ம்... மிஸ் தானே...!" அவன்தான் பெரிய தவறு செய்துவிட்டவன் போல் முறுக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிய சூர்யா... இன்று தான் என்னவோ கொலை குற்றம் செய்துவிட்டவள் போல் குறுகினாள். "ஓகே... அது என்னவா வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஏன் KC-ல பார்த்த வேலையை விட்டுட்டு இங்க வந்து ஜாயின் பண்ணியிருக்கீங்க...? பதில் சொல்லுங்க..." "சில சொந்த பிரச்சனைகளால் அந்த வேலையை விடவேண்டியதா போச்சு... இப்போ இந்த கம்பெனில வேலை கிடைத்தது... ஜாயின் பண்ணிவிட்டேன்..." சுரத்தில்லாமல் சொன்னாள். அந்த குரல் தீரஜ்பிரசாத்தை பாதித்ததோ...! அதற்கு மேல் அவளிடம் பழைய விஷயத்தை கிளரும்படி வேறு எதையும் கேட்காமல் வேலை சம்மந்தமாக சில கேள்விகளை கேட்டுவிட்டு அவளை அனுப்பினான். அவள் அவனுடைய அறையிலிருந்து வெளியேறும் போது அவளுடைய முதுகை வெறித்த அவன் கண்களில் இருந்த பளபளப்பு இருளில் ஒளிரும் மிருகத்தின் கண்களில் இருக்கும் பளபளப்பேதான்... சூர்யாவிற்கு பல விஷயங்கள் விளங்கவில்லை.... எனக்கு திருமணம் முடிந்துவிட்ட விஷயம் இவனுக்கு தெரியுமா...? பிறகு ஏன் என்னிடம் சண்டை போடவில்லை... நான் இங்கு வேலை பார்ப்பது அவனுக்கு தெரியுமா...? தெரிந்து தான் இந்த கம்பனியை வாங்கினானா...? அப்படியானால் என்னை தெரிந்தமாதிரியே ஏன் காட்டிக்கொள்ளவில்லை.... ஒருவேளை அவன் நம்மை உண்மையிலேயே மறந்துவிட்டானா...! அது எப்படி முடியும்... மறக்க வேண்டும் என்று நினைத்தவுடன் ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நினைவிலிருந்து அழித்துவிட முடியுமா...! அவளுக்கு 'ஐயோ...' என்றிருந்தது... தலையை பிடித்துக் கொண்டாள். தீரஜ் அவளை திட்டியிருந்தாலோ கேள்வி கேட்டிருந்தாலோ அவளால் தாங்கியிருக்க முடியும்... ஆனால் இந்த விலகல் அவளை வெகுவாக பாதித்தது. இந்த மன வலியை தானே அவன் குறிவைத்தான்... அவன் குறி தப்பவில்லை... அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த சூர்யா எந்த வேலையையும் பார்க்கும் சிந்தனை இல்லாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். தீரஜ் இருக்கும் இடத்தில் சூர்யாவால் இருக்க முடியவில்லை. அவளால் கபிலனின் கொடுமைகளை கூட சகித்துவிட முடிந்தது ஆனால் தீரஜ் அவளை தள்ளி நிருத்திரியிருப்பதை சகிக்க முடியவில்லை. அவள் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்.... அவளுக்கே புரியவில்லை. அவள்தான் அவனுடைய நட்பையும் காதலையும் தூக்கி எரிந்தாள். இப்போது அவன் அவளை தூக்கி எறிந்துவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாள். அதே நேரம் கபிலனும் அவளுடைய மனக்கண் முன் வந்து 'நான் தான் உன் கணவன்... நீ மாற்றானை நினைக்கிறாயே... துரோகி...' என்று கூக்குரலிட்டான். 'இல்லை... இல்லை... மாற்றானை நினைக்கவில்லை... நான் அவனுடைய காதலை எதிர்பார்க்கவில்லை... அந்த தகுதி எனக்கில்லை..... ஆனால் அவனுடைய நட்பு... அதுவும் கிடைக்காதோ...! அந்த தகுதியையும் இழந்துவிட்டேனோ...! சரி நட்பு வேண்டாம்... என்னை விரோதியாகவேனும் பார்க்கலாமே... அதையும் தவிர்த்து இப்படி தூர தூர விளக்கி தள்ளிவிட்டானே...!' அவள் மனம் புலம்பியது. 'ஆமாம்... இழந்துவிட்டாய்தான்... நீயாகத்தானே அந்த பொக்கிஷத்தை தூக்கிஎரிந்தாய்...' இன்னொருமனம் கேள்விகேட்டது... 'ஆனால் அவனும் தவறு செய்தானே... அப்பாவிகளை வதைத்தானே... இன்னமும் அப்படிதானே இருக்கிறான்...' 'பிறகு ஏன் நீ அவனுக்காக ஏங்குகிறாய்...' "தெரியவில்லையே... எனக்கு தெரியவில்லையே...!" அவள் வாய்விட்டு புலம்பியபடி குலுங்கி அழுதாள். சூர்யா முடிவெடுத்துவிட்டாள். அவளால் தீரஜ் பிரசாத்தின் முகத்தை பார்த்துக் கொண்டு... அவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு... மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால் தான் அந்த முடிவுக்கு வந்தாள். அவளுடைய வேலையை விட்டுவிட்டு தீரஜ் பிரசாத்திடமிருந்து எவ்வளவு விலகியிருக்க முடியுமோ அவ்வளவு விலகியிருக்க வேண்டும் என்று... தன் முன் கையில் ராஜினாமா கடிதத்துடன் நிற்கும் சூர்யாவை சுட்டெரிப்பது போல் பார்த்தான் தீரஜ். அவள் மீது கட்டுக்கடங்காத கோபம் பீறிட்டது. ஏற்கனவே அவள் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். அந்த கோபத்தையெல்லாம் அவளிடம் கொட்டவேண்டும்... ஒரேடியாக கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி அவளை கதறடிக்க வேண்டும் என்கிற அவன் எண்ணத்தில் மண்ணை போடுவது போல் ராஜினாமா கடிதத்துடன் வந்து நிற்கும் சூர்யாவை கொன்று போட்டால் கூட தகும் என்கிற அளவு வெறி தோன்றியது. கண்களில் வெறியும் முகத்தில் அருவருப்புமாக தன்னை பார்க்கும் தீரஜ் பிரசாத்தை குழப்பமாக பார்த்து... "ஏன்... என்ன ஆச்சு...?" என்று கேட்டாள் சூர்யா. "நீ இவ்வளவு மோசமான பெண் என்று நான் நினைக்கவே இல்லை...." அவன் வெறுப்பாக சொன்னான். "ஏன்...? என்... என்ன நான் செய்தேன்...?" அவள் புரியாமல் திக்கி திணறி கேட்டாள். "என்ன செய்தியா...? உரிமை இருக்கோ இல்லையோ... அதை பற்றியெல்லாம் உனக்கு கவலையில்லை. ஆனால் நான் உன்னை சுற்றி சுற்றி வரவேண்டும்... அதை பார்த்து நீ மகிழ வேண்டும்...இது தானே உன் எண்ணம்... இப்படி நினைக்க உனக்கு கேவலமாக இல்லை..." "என்னது...!" அவள் அதிர்ந்தாள். "ஆமாம்... அப்படி தான் நீ நினைக்கிறாய்... அதனால் தான் என்னை உதறிவிட்டு சென்னை சென்ற நீ, உன் கணவனுடன் திரும்ப மதுராவுக்கே வந்திருக்கிறாய். ஆனால் உன் ஜாலத்தில் மயங்கி உன்னை சுற்றி வர நான் ஒன்றும் பழைய ஏமாளி தீரஜ் இல்லை..." "கடவுளே... கடவுளே... உனக்கு என்ன ஆச்சு தீரஜ்... ஏன் இப்படி பேசுற...?" "ச்சீ... வாயை மூடு... என் பேரை இன்னொரு தரம் நீ சொன்ன வெட்டி பொதச்சுடுவேன்..." அவன் காட்டிய அலச்சியம் கலந்த வெறுப்பு அவளை நொறுக்கியது. அவள் குன்றிபோனாள். அடுத்த வார்த்தை பேச தெரியாமல் திகைத்தாள். 'இவன் தீரஜ் தானா... அவள் எது பேசினாலும் எதை செய்தாலும் கலகலப்பாக சிரிக்கும் அதே தீரஜ் தானா இவன்...!' அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது... "ஏன்டி... ஒருத்தனோட நல்லா ஊர் சுத்திட்டு, இன்னொருத்தனை கல்யாணம் செய்ததோடு நிற்காமல் அவன் முன், நீ குடும்பம் நடத்தும் லட்சனத்தை மேடை போட வந்து நிரப்ப... அப்போவும் அந்த ஏமாளி உன்னை பார்த்து பல் இளிக்கணும்... என்ன பொண்ணுடி நீ..." "ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் பேசாத ப்ளீஸ்... நான் உன்னை நோகடிக்க இந்த மதுராவுக்கு வரல... இன்ஃபாக்ட் உன்னை பார்க்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது. அதனால் தானே நான் இந்த வேலையை ரிசைன் பண்ணுறேன்னு சொல்றேன்... அதுக்கு ஏன் நீ இப்படியெல்லாம் கோவப்படுற தீ..." அவன் பெயரை சொல்லும் துணிவின்றி பேச்சு பாதியிலேயே நின்றது. "என்னை பார்ப்பதை நீ தவிர்க்கிரியா...? ஹா.. குட் ஜோக்... நீ என்னை தவிர்க்க நினைத்திருந்தால் இந்த மதுராவுக்கே வந்திருக்க கூடாது... இங்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்து என் முன் நடமாடிக்கொண்டு இருந்து என்னை மயக்கப் பார்த்தாய். நான் உன்னை மாதிரி பிறவியை சந்தித்ததே பாவம் என்று விலகிருந்ததால் உன் அடுத்த அஸ்த்திரத்தை பிரயோகிக்க பார்க்கிறாய்...." அவனுக்கு தெரியும் இந்த கம்பனியை அவன் ஏன் வாங்கினான்... எப்போது வாங்கினான் என்று... ஆனால் சூர்யாவை எதையாவது சொல்லி நோகடிக்க வேண்டுமே... அதனால் அவனுடைய கம்பெனி என்று தெரிந்து தான் சூர்யா அங்கு வேலைக்கு வந்தாள் என்று கூசாமல் பொய் சொன்னான். 'சூர்யாவும் அதை நம்பினாள். ஒருவேளை அவன் இந்த கம்பனியை வாங்கிய பிறகுதான் நாம் இங்கு வேலைக்கு வந்திருப்போமோ... ஆனால் அது என்ன அஸ்த்திரம்...' "அஸ்த்திரமா...!" அப்படியென்றால் என்னவென்றே புரியாத சூர்யா குழப்பமாக அவனை பார்த்தாள். "என்னடி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பார்க்குற...? நீ இங்கிருந்து போனால் அடுத்து நீ வலைக்கு போகும் இடத்திற்கும் நான் வருவேன் என்று எதிர் பார்க்கிறாய்... அப்படிதானே..." "ஐயையோ... இல்லவே இல்லை... நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட..." அவள் கண்கள் கலங்கிவிட்டது. "பின்ன ஏன் இங்கிருந்து போக நினைக்கிற...? நாம் இருவரும் பழகினோம் தான்... ஒத்துவரவில்லை பிரிந்துவிட்டோம்... உன்வழி தனி என் வழி தனி என்று ஆகிவிட்டது. நான் என் வேலையை பார்க்கிறேன். உன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை... அதே போல் நீயும் உன் வேலையை பார்க்க வேண்டியது தானே... எதற்காக என் கம்பெனியில் வேலைக்கு வந்து... என் முன் விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு நடமாட வேண்டும்... இப்போது வேலையை விட போகிறேன் என்று நாடகமாட வேண்டும்..."

'உன் கம்பெனியில் வேலைக்கு வந்தேனா...! விதவிதமாக அலங்கரித்துக் கொண்டேனா...! நாடகமாடுகிறேனா...! இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்ன...? அவளை ஒரு மோசமான பெண் என்று சொல்லிவிட்டான்....' 'தீரஜ்... அவள் தீரஜ்... வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவள் ஆழ் மனதிற்கு தெரியும் அவன் அவள் தீரஜ் என்று... அப்படி ஆழ் மனதில் அவள் பூஜிக்கும் அவளுடைய தீரஜ் அவளை பார்த்து எப்படிப்பட்ட வார்த்தையை சொல்லிவிட்டான்...' தாங்க முடியாத வலி அவள் நெஞ்சில் ஏற்பட்டது. கபிலனும் இதே வார்த்தையை தான் தினமும் சொல்லி அவளை ஏசுகிறான். ஆனால் அப்போது ஏற்படாத பயங்கர வலி இப்போது அவளை துடிக்க வைத்தது. அவன் மௌனத்தையும் விலகலையும் தாங்க முடியாத சூர்யா முன்பு நினைத்தாள்.... ' அவன் அவளை கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை... திட்டினால் கூட பரவாயில்லை...' என்று. ஆனால் அந்த சூழ்நிலை நடைமுறையில் வந்தபோது அவனுடைய வார்த்தையடியில் துவண்டாள். கையில் கொண்டுவந்த ராஜிநாமா கடிதத்தை அவனிடம் கொடுக்காமலே கசக்கியபடி அவனுடைய அறையிலிருந்து வெளியேறினாள். அந்த காகிதத்தை போலவே அவள் மனமும் கசங்கியிருந்தது. சூர்யாவின் கசங்கிய முகமும் தளர்ந்த நடையும் தீரஜ்பிரசாத்தை மகிழ்விக்கவில்லை.... மகிழ்வென்ன சின்ன அமைதியை கூட தரவில்லை... மாறாக மேலும் அவன் மன காயத்தை அதிகரிக்கத்தான் செய்தது... 'ஏன்டி... நீ ஏன்டி இப்படி இப்படி இருக்கிற...? நான் பேசும் போது என்னை எதிர்த்து சண்டை போடுவதற்கென்ன... முன்பெல்லாம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் பத்து வார்த்தை பேசும் என் சூர்யாவா நீ... ' 'உன்னை காயப்படுத்தவும் முடியவில்லை... உன்னிடம் அன்பாக இருக்கவும் முடிவில்லை... உன்னை விட்டு விலகவும் முடியவில்லை... உன்னிடம் நெருங்கவும் முடியவில்லை... என்னை வதைக்கவென்றே பிறந்தவளா நீ...!' அவன் மானசீகமாக அவளிடம் பேசினான். தீரஜ் கொடுத்த அடியில் பலமாக காயப்பட்ட சூர்யா மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. தினமும் அலுவலகத்திற்கு வரும் தீரஜ் சூர்யாவிற்கு தெரியாமல் அவள் முகத்தை பார்த்து ஆறுதலடைவான். ஆனால் இன்று சூர்யாவை காணாமல் தவித்தான். முதலில் சூர்யா சென்னைக்கு சென்ற போது எப்படி அவனால் அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இத்தனைக்கும் அப்போது அவள் அவனுடைய சூர்யாவாக இருந்தாள். ஆனால் இப்போது அவள் இன்னொருவனின் மனைவி... என்றாலும் அவனுடைய மனம் அவனுக்கு அடங்க மறுத்தது. கைவிட்டு போன பொக்கிஷத்தின் அருமை தீரஜ்பிரசாத்துக்கு தாமதமாகத்தான் புரிந்ததோ என்னவோ... அவனால் சூர்யாவின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கு தலைவலி வந்தது... யாரும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனுடைய அறையில் தனியாக இருந்தான். சூர்யா வந்தது போல் தெரியவில்லை. அவனுடைய அறை ஜன்னலிலிருந்து பார்த்தால் கம்பெனி வளாகத்தின் நுழைவாயில் தெரியும். அவளுக்காக கண்களை விரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பவனின் கண்களிலிருந்து தப்பி அவள் உள்ளே வந்திருக்க முடியாது... இருந்தாலும் ஒரு சந்தேகம்... 'கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணை இமைதோமே... அப்போது உள்ளே வந்திருப்பளோ...' அதற்கு சாத்தியமே இல்லை என்று அவன் அறிவு சொன்னாலும் அவன் மனம் கேட்கவில்லை. உடனே ரௌண்ட்ஸ் புறப்பட்டான். 'இல்லை... அவள் வரவில்லை....' அவனுடைய தலைவலி அதிகமானது... தலையே வெடித்துவிடும் போல வலித்தது... பைத்தியம் பிடிப்பதுபோல் ஆனது... மத்தியம்வரை காத்திருந்தவன் இனி அவள் வரமாட்டாள் என்று தெரிந்து கொண்டு காரை விரட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். மத்தியம் அவனுடைய அறைக்குள் நுழைந்தவன் மாலைவரை மது அருந்தினான். தொடர்ந்து அருந்தினான். தன்னை மறக்கும்வரை மது அருந்தினான். அப்படியே உறங்கிப்போனான். விடிந்து வெகு நேரம் கழித்து எழுந்தவன் அன்று அலுவலகம் செல்ல பயந்தான். 'இன்றும் அவள் வரவில்லை என்றால்... அவளுக்காக காத்திருந்து காத்திருந்து நோவதைவிட இன்று அங்கு போகாமலே இருந்துவிடலாம்... ' மாலை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு 'யார் யார் இன்று விடுப்பு...' என்பதை பொதுவாக கேட்டான். அவன் நினைத்தது சரிதான்... இன்றும் சூர்யா வரவில்லை... மேலும் இரண்டு நாள் அந்த அலுவலகம் பக்கம் செல்லாமலே அவன் தெரிந்து கொண்ட விஷயம் சூர்யா இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை... இதற்கு மேல் அவன் சூர்யாவை பார்க்கவில்லை என்றால் தாடிவைத்த தேவதாசாக தெருவில் அலையும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை என்று அவனுக்கு தோன்றியது... அதனால் சூர்யாவை தன்னிடத்திற்கு வரவைப்பது எப்படி என்று சிந்தித்தான். அடுத்த இரண்டாவது நாள் சூர்யா தீரஜ் பிரசாத்தை அவன் இடத்தில் சந்தித்தாள். அன்றோடு சூர்யா வேலைக்கு செல்லாமல் ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக கபிலன் சூர்யாவிடம் மிக இலக்கமாக நடந்து கொண்டான். அவளிடமிருந்து அவன் பறித்த அவளுடைய கைபேசியையும் அவளிடமே கொடுத்துவிட்டான். எப்பொழுதும் கரித்துக் கொட்டுபவன் புதிதாக இலக்கம் காட்டியது செயற்கை தனமாக இருந்தாலும் அவன் அதை பொருட்படுத்தாமல் மகிழ்சியாகதான் இருந்தான். சூர்யாவிற்கு அவனுடைய கடுகடுப்பான முகத்தை கூட சகித்துவிட முடிந்தது. ஆனால் இந்த புதிய கரிசனத்தை சகிக்க முடியாமல் மூச்சு திணறினாள். அன்றும் அப்படி தான். ஒரு புது புடவையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து "இந்த கலர் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் சூர்யா... உனக்காகவே பத்து கடை ஏறி இறங்கி தேர்ந்தெடுத்தேன்... இன்னிக்கு எங்க கம்பெனில பார்ட்டி இருக்கு. நீ இந்த புடவையை தான் கட்டிக்கிட்டு வரணும்...." அவன் அன்புக் கட்டளையிடான். சூர்யாவிற்கு "ஐயோ..." என்றிருந்தது. அவனிடம் பதில் சொல்லி பேச்சை வளர்க்காமல் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். அவளுக்குள் இன்னொரு கலக்கம்... "கம்பெனி பார்ட்டின்னா தீரஜ் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கே...! அவன் வந்தா என்ன செய்றது...! ஐயோ கடவுளே...! " பார்ட்டிக்கு தயாராகி வெளியே வந்தவளின் உடல் பயத்தில் பதறியது... "சூர்யா... என்னம்மா ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்க...?" கபிலன் கரிசனமாக கேட்டான். "மயக்கம் வர்றமாதிரி இருக்கு... என்னவோ செய்யுது..." அவள் தலையை கையில் தாங்கி பிடித்துக் கொண்டு தள்ளாடினாள். "ஐயையோ... மயக்கமா... ஒரு நிமிஷம் இப்படி உக்காரு...." அவன் பதட்டமாகிவிட்டான். அவளை வாசல் படியில் அமரவைத்துவிட்டு, அவசரமாக உள்ளே ஓடி தண்ணீர் கொண்டுவந்தான். "இந்தா இத கொஞ்சம் குடி... முகத்தை கழுவு..." அவனுடைய கரிசனத்தில் சூர்யா உருகிவிடவில்லை என்றாலும் மனித தன்மையுடன் அவன் நடந்துகொள்வது ஆறுதலாக இருந்தது. அவன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு மீதியை பருகினாள். கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தாலும் அவளுக்கு பார்ட்டிக்கு போவதை நினைத்தால் படபடப்பு அதிகமாவது போல் இருந்தது. "எனக்கு ஏதோ மாதிரி இருக்கு... நீங்க மட்டும் பார்ட்டிக்கு போயிட்டு வாங்களேன்..." அவனை கெஞ்சலாக பார்த்தவள் திடுக்கிட்டாள். அவனுடைய முகம் அவ்வளவு பயங்கரமாக மாறியது. ஒரே நொடியில் தன்னுடைய முகபாவத்தை மாற்றிக் கொண்டவன், "என்ன சூர்யா நீ... மயக்கம் வர்றதெல்லாம் ஒரு காரணமா பார்டியை தவிர்க்க... எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தோட வரும் போது நான் மட்டும் தனியா போயி நிக்க முடியுமா...? ப்ளீஸ்... ஒன்னும் ஆகாது சூர்யா... ஒரே மணி நேரம் தான்... போயிட்டு உடனே திரும்பிடலாம்... வா சூர்யா..." அவன் அவளை கட்டாயப்படுத்தினான். அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காமல் அவளை காலில் விழாத குறையாக கெஞ்சி அழைத்து சென்றுவிட்டான். கிருஷ்ணா கெமிக்கல்ஸ் கம்பெனி வளாகத்திலேயே இருந்த விருந்தினர் மாளிகையில்தான் பார்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு சூர்யா அதே நிறுவனத்தில் தான் வேலை செய்தாள். அப்போதெல்லாம் இது போல் எந்த பார்டியும் கொண்டாடியதில்லை. 'இந்த ஆண்டு மட்டும் என்ன சிறப்பு...? எதற்காக இந்த பார்ட்டி...!' சூர்யா குழம்பியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினாள். விருந்தினர் மாளிகை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் அந்த மாளிகை மின்னியது. கிருஷ்ணா கெமிக்கல்சில் மேல் மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். நல்லவேளையாக தீரஜ்பிரசாத்தை அங்கு காணவில்லை. அவள் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள். "ஹலோ... மேடம்... எப்படி இருக்கீங்க...?" "ஹாய்... சூர்யா... எப்படி இருக்க... கபிலன் சார் தான் உன் ஹஸ்பன்டா...?" "என்ன மேடம்... திடீர்ன்னு வேலையை விட்டுட்டு போயிடீங்க...? நீங்க போகனுன்னு நினைத்தாலும் கோசிகாலன் உங்களை விடாது போல... ஹா... ஹா..." "சூர்யா... உன்ன பார்த்து எத்தை நாளாச்சு... உன் கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லையே..." என்று பலர் சூர்யாவிடம் வந்து பேசினார்கள். பழைய நட்பு வட்டாரத்தை பார்த்ததும் சூர்யாவிற்கு அவளுடைய கவலை மறந்துவிட்டது. அவள் மலர்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். கபிலனின் கண்கள் ' சூர்யாவை யார்யாரெல்லாம் பார்க்கிறார்கள்...? அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது...? இந்த கூட்டத்தில் எவன் சூர்யாவின் முன்னாள் காதலனாக இருப்பான்... ' என்று கணக்கு பண்ணிக்கொண்டிருந்தது. கபிலன் தீரஜ்தான் சூர்யாவை காதலித்தவன் என்று நம்பவே இல்லை. அந்த முகம் தெரியாத காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கத்தான் இன்று பல ஜாலங்களை செய்து சூர்யாவை அலங்கரித்து அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அதை புரிந்துகொள்ளாத சூர்யா பழைய நண்பர்களுடன் விகல்பமின்றி பேசிக்கொண்டிருந்தாள். அவனால் யாரையும் குறிப்பிட்டு சந்தேகப்பட முடியவில்லை. சூர்யாவின் மீது யாருடைய பார்வையும் ஏக்கமாகவோ... தவறாகவோ... கோபமாகவோ... பதியவே இல்லை. எல்லோருடைய பார்வையும் சகஜமாக இருப்பது போல் தான் தெரிந்தது. அவனுக்குள் கோபம் குமிழிட்டது. யார் அவன்...? ஒருவேளை இன்று அவன் வரவே இல்லையோ...! அவனுக்குள் சந்தேகம் பிறந்தது. யோசித்துப் பார்த்தான். அவனுக்கு தெரிந்து யாரும் வராமல் இருப்பதாக தோன்றவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையுடன் இருந்தான். அந்த நேரம் அனைவருக்கும் மதுபானமும் குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது. கபிலன் மதுபானம் அருந்தியபடி ஒரு மூலையில் அமர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் விருந்து நடக்கும் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஸ் வருகிறார்... ஜி வருகிறார்... என்கிற குரல்கள் எழும்பின. தீரஜ்பிரசாத் ஒரு இளம் பெண்ணின் கையை பிடித்தபடி உள்ளே வந்தான். அந்த பெண்ணின் அழகில் விருந்து கூடமே ஒரு நொடி அசைவற்றுப்போன நேரம், தீரஜ்பிரசாத்தின் கண்கள் மலர்ந்த முகத்துடன் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டிருக்கும் சூர்யாவை விழுங்குவது போல் பார்த்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உள்ளே வந்த தீரஜ் புதிய பெண்ணை கையை உரிமையுடன் பிடித்தபடி, மைக்கில் இந்த பார்டி தொழிலாளர்களை உற்ச்சாகமூட்டுவதர்க்காக ஏற்ப்பாடு செய்யப்பட்ட பார்ட்டி என்றும் இந்த தருணத்தை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்லி சுருக்கமாக அனைவரிடமும் பொதுவாக பேசி முடித்தான். பிறகும் அந்த பெண்ணின் தோள் மேல் கை போட்டபடி, தனித்தனியாக அவனிடம் வந்து பேசுபவர்களிடம் உற்சாகமாக பேசியதோடு கையணைப்பில் இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். சூர்யாவிர்க்குள் ஒரு தீ பற்றிக்கொண்டது. அந்த தீ இதுவரை தீரஜ் பிரசாத்திர்க்குள் எரிந்து கொண்டிருந்த தீ...! பொறாமை தீ...! அவள் எவ்வளவோ முயன்றும் அவள் முகம் சிவந்து சூடாவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சூர்யாவின் சிவந்த முகம் தீரஜ் பிரசாத்தை கொஞ்சம் சாந்தப்படுத்தியது. அவள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதை அவன் புரிந்து கொண்டான். கபிலன் எதை கடுபிடிக்க வேண்டும் என்று இங்கு வந்தானோ அதை எப்படி கண்டுபிடிப்பது என்று மது கோப்பையுடன் அமர்ந்து யோசிக்கும் போதுதான் இவர்களின் மௌன போராட்டம் நடந்து கொண்டிருந்தது... அவன் ஒருவழியாக யோசித்து முடித்துவிட்டு வரும்போது தீரஜ் சகஜமாகிவிட்டான். ஆனால் சூர்யா தகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முக மாற்றம் கபிலனுக்கு சொன்ன செய்தி... 'நீ தேடும் ஆள் இங்கு தான் இருக்கிறான்...' இந்த உண்மை புரிந்ததும் கபிலன் சூர்யாவின் தோளில் கையை போட்டான். அவளுடன் மிக நெருக்கமாக நின்றான். சூர்யாவால் விலக முடியாதாளவு அவனுடைய பிடி இறுகியிருந்தது. அப்படி சூர்யாவுடன் நெருங்கி நின்றபடியே அங்கிருந்த ஆண்கள் அனைவரின் முகபாவத்தையும் கணக்கிட்டான். தீரஜ் உட்பட... யாருடைய முகத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவன் ஏமாற்றமாக உணர்ந்தாலும் அவனுடைய நெருக்கத்தை தளர்த்தவே இல்லை. கபிலன் அறியாத விஷயம்... தீரஜ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாலும் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான்... சிறிது நேரத்தில் அனைவரும் விருந்துண்ண அழைக்கப் பட்டார்கள். சைவமும் அசைவமும் தனித்தனியாக தோட்டத்தில் நிலா வெளிச்சத்திலும் மின் விளக்கு வெளிச்சத்திலும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவரவர் தங்களுக்கு விருப்பமான உணவை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உண்டு மகிழ்ந்தார்கள். கபிலன் சூர்யாவிற்கு ஊட்டியே விட்டுவிடுபவன் போல நடந்து கொண்டான். சூர்யாவுக்கு அவனுடைய செய்கை வெறுப்பாக இருந்தாலும் தீரஜ் முன் இவன் இப்படி நடந்து கொள்வதை நினைத்தால் 'காற்றில் கரைந்து காணாமல் போய்விடமாட்டோமா...' என்றிருந்தது. யாரயும் நிமிர்ந்து பார்க்கும் ஷக்தியின்றி குன்றிபோய் அமர்ந்திருந்தாள். அந்த காட்சியை சகிக்க முடியாத தீரஜ் என்ன சொல்லி தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்த பெண்ணை அனுப்பினானோ... அவளை அனுப்பிவிட்டு அந்த மாளிகையிலேயே மாடியில் இருந்த அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான். மேலே சென்றவனால் சும்மா இருக்க முடியவில்லை. சிசி கேமராவுடன் பொருத்தப்பட்ட திரை அவனுடைய அறையில் இருந்தது. அதில் கபிலனின் கொட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனால் அந்த கொடுமையை பார்க்க முடியாது என்கிற நிலையில் தன்னுடைய கைபேசியை எடுத்து சில எங்களை அழுத்தினான். அங்கே கபிலனின் கைபேசி அலறியது... சூர்யாவின் கையை விடாபிடியாக பிடித்திருந்த கபிலனின் கைபேசி அலறியதும் வேறு வழியின்றி அவள் கையை விட்டுவிட்டு கைபேசியை எடுத்து பேசினான். "ஹலோ..." "ஹலோ யாருங்க பேசுறது...?" "தீரஜ் பிரசாத்..."

அவனுக்குள் ஒரு இன்ப படபடப்பு தோன்றியது. 'யாரும் நெருங்கவே முடியாத தீரஜ் நம்மை தனிப்பட்ட முறையில் கைபேசியில் அழைக்கிறானே...! ஆஹா... நீ பொழச்சுக்குவடா கபிலா....' அவன் மகிழ்சியாக தீரஜ் பிரசாத்திடம் பேசினான். "ஐயோ சார்... வணக்கம் சார்... சொல்லுங்க சார்... நான் பார்ட்டிக்கு வந்திருக்கேன் சார்... இங்க தான் சார்... தோட்டத்துல இருக்கேன்... நீங்க என்னை கவனிக்கல போலிருக்கு சார்..." தீரஜ் எதற்காக அவனுக்கு கைபேசியில் அழைத்தான் என்பதே தெரியாமல் படபடப்பில் உளறினான். "ம்ம்ம்... கபிலன்... இங்க தான் இருக்கிங்களா... ஓகே... அப்படியே உள்ள வந்து மாடிப்படியில ஏறி மேல வாங்க... உடனே..." "ஓகே சார்..." அவன் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் உடனே தோட்டத்திலிருந்து உள்ளே செல்ல எத்தனித்தான். சூர்யா அவனை கேள்விக்குறியாக பார்த்தாள். "மாடில என்னோட ஃபிரண்டு என்னக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கானாம்... போயி அவனை பார்த்துட்டு வந்திடறேன்..." எந்த காரணமும் இல்லாமலே இயல்பாக கபிலன் தீரஜ்பிரசாத்தின் பெயரை சொல்லாமல் மறைத்து பேசினான். "மாடிலையா...! பார்ட்டி ஹால் கீழ தானே... மாடிக்கு எம்ப்லாயீஸ் போறதுக்கு பர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே...! உங்க ஃபிரண்டு எப்படி மாடில வெயிட் பண்ணுறார்...? யார் உங்க பிரண்டு...?" அவள் குழப்பமாக வினவினாள். "சும்மா... நை... நைன்னு கேள்வி கேட்டு கொல்லாத... போசாம கொஞ்ச நேரம் இங்கேயே வெயிட் பண்ணு... " அவன் பதில் சொல்வதை தவிர்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்று அகண்ட பட்டு கம்பளம் விரிக்கப்பட்ட மடிப்படிகளில் ஏறினான். தீரஜ் மீண்டும் கபிலனுக்கு அழைத்து அவன் எந்த அறைக்கு வரவேண்டும் என்கிற விபரத்தை சொல்லி அவனை அங்கு வரவழைத்தான். கபிலனும் சரியாக தீரஜ் பிரசாத்தின் அறையை அடைந்து கதவை தட்டினான். "உள்ளே வா..." என்ற தீரஜ் பிரசாத்தின் குரல் அவனை வரவேற்றது. தீரஜ் பிரசாத்தின் அறை இப்படி தான் இருக்கும் என்ற கபிலனின் கற்பனையையும் மீறி பிரம்மாண்டமாக இருந்த அறையின் ஒரு பக்கத்தில் தீரஜ் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் டீப்பாயில் மது பாட்டில்களும் கோப்பைகளும் மேலும் சில உணவு பொருட்களும் அடுக்கியிருந்தன. கபிலன் தயங்கியபடி உள்ளே வந்தான். நிதானமாக மது அருந்திக்கொண்டிருந்த தீரஜ், அவனை ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியை காட்டி அதில் அமரச்சொன்னான். தீரஜ் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் கபிலனை அவன் அமரசொன்ன இடத்திற்கும் ஏகப்பட்ட இடைவெளி. கபிலன் குழப்பத்துடன் தீரஜ் பிரசாத் சொன்னதை செய்தான். தீரஜ் பிரசாத்தோ அங்கே கபிலன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டவன் போல ஒரு மணிநேரம் நிதானமாக மது அருந்தினான். பிறகு வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான். அவன் வீடியோ கேம் விளையாடிய திரையை கபிலனால் பார்க்க முடியாது. அவன் தீரஜ் பிரசாத்தின் முகத்தை, தூரத்தில் அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். தீரஜ் கேம் விளையாடுவதோடு கீழே பார்ட்டியில் என்ன நடக்கிறது என்பதையும் அவ்வப்போது திரையில் கொண்டுவந்து பார்த்துக்கொண்டிருந்தது கபிலனுக்கு தெரியாது... அவனுக்கு தீரஜ் பிரசாத்தின் விசித்திர நடவடிக்கை குழப்பத்தையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்தியது. பள்ளி மாணவனை ஆசிரியர் சத்தம் போடாமல் அமைதியாக ஒரு மூலையில் அமரும்படி உத்தரவிட்டு அமரவைத்திருப்பது போல் தன்னை தீரஜ் அமரவைத்திருப்பதாக உணர்ந்தான். என்ன ஒன்று தீரஜ் கபிலனை கைகட்டி வாயில் விரல் வைக்க சொல்லவில்லை அவ்வளவுதான்... தீரஜ் மேலும் ஒருமணிநேரம் வீடியோ கேம் விளையாடும் வரை பொறுத்திருந்த கபிலன் பொறுமையிழந்து எழுந்து... "சார்... என்னை ஏன் வர சொன்னிங்க...?" என்று தயக்கமாகவே கேட்டான். "அந்த சேர்ல உக்காருன்னு சொன்னேன்...." தீரஜ்ஜின் குரலில் இருந்த அதட்டலும் அவன் கபிலனை அமர சொன்ன தோரணையும் கபிலனை உறையவைத்தது. அவன் அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. 'தீரஜ் சூர்யாவின் மீது ஆசைப் பட்டிருக்கிறான். ஏதோ காரணத்தால் அவனுடைய ஆசை நிறைவேறாமல் சூர்யா சென்னைக்கு வந்துவிட்டாள். என்னையும் திருமணம் செய்துகொண்டாள். இப்போதும் அவனுக்கு சூர்யாவின் மீது இருக்கும் மோகம் குறையவில்லை. அதனால் தான் நான் சூர்யாவுடன் நெருக்கமாக இருந்தது பிடிக்காமல் என்னை இங்கு கொண்டுவந்து உட்க்கார வைத்துவிட்டான்.... மற்றபடி சூர்யா அடித்துவிட்ட காதல் கீதல் எல்லாம் பொய்... இவனுக்காவது சூர்யாவின் மீது காதல் வருவதாவது... அப்படியே வந்தாலும் அதை சூர்யா நிராகரிப்பதாவது... எல்லாம் கதை.... கட்டுக்கதை....' இப்போதும் சூர்யாவின் மீதுதான் கபிலனின் கோபம் திரும்பியது... 'அடிபாவி... உன் கழுத்துல தாலிகட்டின பாவத்துக்கு இவன் என்னை அடிமை மாதிரி இங்கு உட்கார வைத்துவிட்டான். இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ... எல்லாத்துக்கும் நீ தாண்டி காரணம்...' அவன் சூர்யாவை கருவினான். மேலும் இரண்டுமணி நேரம் கபிலனை இருந்த இடத்திலிருந்து தீரஜ் அசையவிடவில்லை. அதன் பிறகு கேழே பார்ட்டி முடிந்து அநேகமானவர்கள் சென்றுவிட்டார்கள். ஒருசிலர் மட்டுமே எஞ்சியிருக்கையில் சூர்யா தனித்து நின்றுகொண்டிருந்தாள். அப்போதுதான் தீரஜ் கபிலனிடம் சொன்னான்... "சரி நீ கிளம்பு... " என்று. எந்த விஷயமும் இல்லாமல் ஒரே இடத்தில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் கபிலனை தீரஜ் அமரவைத்து அவனை கேலிப் பொருளாக்கிவிட்டான். கபிலன் கடுகடுத்த முகத்துடன் தீரஜ் பிரசாத்தின் அறையிலிருந்து வெளியே வந்தான். அவன் தீரஜ் பிரசாத்துடன் கழித்த அந்த சில மணிநேரம் தான் அவனுடைய வாழ்க்கையில் மிக மோசமான நேரம் என்று நினைத்தான். அப்படி இருந்த போதும், தீரஜ் பிரசாத்துக்கும் சூர்யாவுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை தெரிந்துகொள்ள நினைத்து அசட்டுத்தனமாக ஒரு காரியம் செய்தான். அந்த காரியத்தால் அவனுடைய நிம்மதியே பரிபோகப்போவதை அறியாமல்... கபிலன் தீரஜ் பிரசாத்தை சந்திக்க சென்ற பின் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டு உணவருந்திய சூர்யா சிறிது நேரத்தில் பலரும் விடைபெற்று கிளம்ப ஆரம்பித்ததும் கபிலன் என்ன ஆனான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். 'இந்த கபிலன் எங்கு போனான்... மீண்டும் ஒரு முறை தீரஜ் பிரசாத்தை சந்திக்கும் நிலை வரும் முன் இங்கிருந்து கிளம்பிவிட்டால் நன்றாக இருக்கும்...' என்று யோசித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடப்பதும்... பின் ஒரு நாற்காலியில் அமர்வதும்... அதில் நிலைகொள்ளாமல் மீண்டும் நடப்பதுமாக இருந்த சூர்யாவை சிசி கேமரா திரையில் பார்த்துவிட்டு தீரஜ் கபிலனை விடுவித்தான். தீரஜ் பிரசாத்தின் அறையிலிருந்து வெளியே வந்த கபிலன் அவனுடைய அறை கதவு முழுவதுமாக மூடி லாக் ஆகிவிடாதபடி லேசாக மூடிவிட்டு வெளியே வந்தான். வெளியே வந்தவன் வராண்டாவில் நடந்தான். மாடிப்படியை அடைந்ததும் கீழே இறங்காமல் மாடிப்படியை கடந்து சென்று, மறுபுறம் ஒரு தூணுக்கு பின் மறைவாக ஒளிந்துகொண்டான். பிறகு கைபேசியை எடுத்து சூர்யாவை அழைத்தான். "சூர்யா... நான் என் நண்பனோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ மேலே வா... நாம் இருவரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்பிவிடலாம்..." என்றான். "மாடிக்கா...!" வியப்பாக கேட்ட சூர்யா... "இல்லை... நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்... நீங்க சீக்கிரம் வாங்க..." என்றாள். "சூர்யா... சொன்னா கேளு... நீ வரலன்னா என்னால இப்போ இங்கிருந்து கிளம்பவே முடியாது. என் நண்பன் என்னை அறுத்து தள்ளிக் கொண்டிருக்கிறான். நீ வந்தால்... நீ என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டதாக சொல்லி நான் உன்னோடு வந்துவிடுவேன்... ப்ளீஸ் சூர்யா..." இந்த நேரத்தில் மிரட்டினால் அவள் பணியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து அவளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். கெஞ்சினால் அவளிடம் கண்டிப்பாக வேலைக்காகும் என்று அவனுக்கு தெரியும். "சரி.... இப்படி நீங்க என்கிட்டே பேசுறது உங்க நண்பனுக்கு தெரியாதா... அவர் எங்க...?" அவள் அவனை மடக்கினாள் "அவன் பாத் ரூமில் இருக்கிறான்...." "சரி... நான் வருகிறேன்..." என்று சொல்லி சூர்யா மாடிப்படிகளில் ஏறினாள். முதல் முறையாக சூர்யா அந்த மாளிகையின் மாடி பகுதிக்கு சென்றாள். அதன் பிரம்மாணடமும் ஆடம்பரமும் அவளை குழப்பியது. எந்த பக்கத்தில் படி ஏறினோம்... இப்போது எந்த பக்கம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்கு தெளிவாக புரியவில்லை... கபிலனுக்கு கைபேசியில் அழைத்து "நான் மாடில தான் இருக்கேன்... நீங்க எந்த ரூம்ல இருக்கீங்க... இங்க எல்லா ரூமும் ஒரே மாதிரி இருக்கு... நான் எங்க இருக்கேன்னே எனக்கு இப்போ தெரியல..." என்றாள். அவனுக்கும் முதல் இங்கு வந்த போது அப்படி தான் இருந்தது. ஆனால் அவன் மாடிப்படியிலிருந்து ஐந்தாவது தூண் வந்ததும் வலதுபுறம் வளைந்து முதலாவது ரூம் என்று தெளிவாக கணக்கு பண்ணிக்கொண்டே வெளியே வந்ததால் குழப்பமில்லாமல் சூர்யாவிற்கு வழி சொன்னான். சூர்யாவும் அவன் சொன்ன வழியை பின்பற்றி அந்த அறையை அடைந்துவிட்டாள். "ம்ம்ம்... வந்துட்டேன்... வெளிய வாங்க..." அவள் அவனை கைபேசியில் பேசியபடியே வெளியே அழைத்தாள். "கதவு சாத்தவில்லை... நீ உள்ளே வா..." என்று சொன்ன கபிலன் கைபேசியை அணைக்கவே இல்லை. அவள் தீரஜ்ஜிடம் என்ன பேசப்போகிறாள் என்று கேட்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் போது சூர்யா கைபேசியை அனைத்து கைபையில் போட்டுக்கொண்டு கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள். கபிலனை போல் கதவை லாவகமாக சூர்யா மூடாததால் 'பட்' என்ற சத்தத்துடன் கதவு லாக் ஆனது. கதவு லாக் ஆவதற்கு முன் அங்கு என்ன நிலை சூர்யா தீரஜ்ஜிடம் என்ன பேசுகிறாள்... அதற்கு அவன் என்ன பதில் சொல்லுகிறான் என்று ஒட்டு கேட்க ஓடிவந்த கபிலன் ஏமார்ந்து போனான். சரி... உள்ளே கபிலன் இல்லை என்றதும் சூர்யா உடனே வெளியேரிவிடுவாள் என்று காத்துக் கொண்டிருந்த அவனுடைய எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. கபிலன் மணிக்கணக்கில் காத்திருந்தும் சூர்யா வெளியேறவில்லை. "உள்ளே ஏதோ கசமுசா நடக்கிறது... இல்லையென்றால் ஏன் இவ்வளவு நேரம் அந்த கடங்காரி வெளியே வரவில்லை.... ஐயோ... ஐயோ... கட்டிய கணவன் நான் இங்கு இருக்கும் போதே இப்படியா... பாவி... பாவி... சண்டாளி..." கபிலன் சிறிது நேரம் சூர்யாவை அர்ச்சித்துக் கொண்டே மாடியில் நின்றான். பிறகு யார் கண்ணிலும் பட்டுவிட்டால் தீர்ந்தோம் என்று நினைத்து தோட்டத்திற்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் கபிலன் தன் தலைவிதியை தானே தன்னுடைய கெட்ட எண்ணங்களால் மாற்றிக் கொண்டிருந்தான். ஆனால் கபிலன் நினைத்தது போல் அந்த அறையில் எதுவம் நடக்கவில்லை. தீரஜ் பிரசாத்தின் அறைக்குள் நுழைந்த சூர்யா முதலில் அங்கு யாரையும் காணாது திகைத்தாள். அந்த பெரிய அறையில் ஒரு பக்கம் மது கோப்பையுடன் ஒரு உருவம் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது அவள் கண்ணில் சில நிமிட தேடலுக்கு பிறகுதான் பட்டது. அவளுடைய கண்கள் நிலைகுத்திவிட்டன... அவள் அங்கு தீரஜ் பிரசாத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய அதிர்ந்த முகமே காட்டியது... வெளியே சென்ற கபிலன் கீழே செல்லாமல் தூணுக்கு பின் பதுங்கியதையும் அதன் பிறகு சில நிமிடங்களில் சூர்யா மாடிக்கு வருவதையும் திரையில் கவனித்துக் கொண்டிருந்த தீரஜ் சூர்யா அவனுடைய அறைக்குள்ளேயே நுழைந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்கள் பளபளத்தன. "வெல்கம் மிசஸ் கபிலன்... வெல்கம்..." அவன் முகத்திலும் குரலிலும் இருந்த எள்ளல் சூர்யாவை கொன்று கூறுபோட்டது... "நீங்களா...?" "என் அறைக்கே வந்து நின்று கொண்டு... என்னை பார்த்தே நீங்களா என்று கேட்கிறாய்....! ஏன்... உன் கணவன் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா.....?" 'அவன் என்ன சொன்னான்...? நண்பனை பார்க்க போவதாக சொன்னான்... பிறகு என்னையும் இங்கே வர சொன்னான்... ஆனால் தீரஜ் அறைக்கு ஏன் வர சொன்னான். இப்போ கபிலன் எங்கே போனான்...? என்ன நடக்கிறது இங்கே... ' அவள் பேந்த விழித்தாள். "ஹா... ஹா... ஹா...... ஹா... ஹா... " அவள் விழிப்பதை பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தான். அவனுடைய சிரிப்பு சத்தத்தில் அந்த அறையே அதிர்ந்தது. சூர்யாவிற்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. சிரித்து சிரித்து ஓய்ந்தவன் கையிலிருந்த கோப்பையில் சிறிது மதுவை ஊற்றி அருந்தினான். சூர்யா ஏன் இங்கு வந்தாள்...? கபிலன் ஏன் அறைக்கு வெளியே குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றியெல்லாம் தீரஜ் சிந்திக்கவே இல்லை. அவனுக்கு இப்போது சூர்யா அவனுடைய அறையில் இருக்கிறாள்... அதுமட்டும் தான் மனதில் நின்றது... நடுங்கியபடி அங்கு நின்று கொண்டிருந்த சூர்யா மெதுவாக நகர்ந்து அவள் உள்ளே நுழைந்து தாள் போட்ட கதவை திறக்க முயன்றாள்... முடியவில்லை... கதவு பூட்டப்பட்டிருந்தது... தானியங்கி கதவு... சூர்யா கதவை திறந்து வேகமாக விட்டதும் தானாக பூட்டிக் கொண்டது. அவளுக்கு கண்ணீர் முட்டியது... கண்ணீர் வெளியேறிவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள். தீரஜ் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவளுடைய முயற்சி தோற்றதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். "ஹா... ஹா.... ஹையோ.... ஹா... ஹா..." அதே வெறித்தனமான சிரிப்பு சூர்யாவை அச்சுறுத்தியது. கபிலன் ஒருமுறை குடித்துவிட்டு அவளிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டது நினைவில் வந்தது. அவள் நாவரண்டது. தீரஜ் அந்த அளவு தரமிறங்க மாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு பயம் படர்வதை அவளால் தடுக்க முடியவில்லை. "நான் போகணும் தீரஜ்... ப்ளீஸ்... கதவை திற..." அவள் பயத்தை மறைத்துக் கொண்டு அவனிடம் சாதாரணமாக கேட்டாள். "நான் உன்னை இங்கு வர சொல்லவில்லையே... கதவையும் நான் பூட்டவில்லையே...!" "தீரஜ் ப்ளீஸ்... நான் போகணும்..." "சரி போ... ஆனால் ஏன் இங்கு என்னை தேடி வந்த... அதை சொல்லிவிட்டு போ..." "நான் உன்னை தேடி வரவில்லை தீரஜ்..." அவள் தயக்கத்துடன் சொன்னாள். சட்டென்று குடிப்பதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய முகமும் கண்களும் போட்டி போட்டுக் கொண்டு சிவந்திருந்தன. சூர்யாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது... "அப்போ... யாரை தேடிவந்த... அந்த கபிலனையா....?" அவன் நிதானமாக கேட்டான். அவ்வளவு குடித்திருந்தாலும் அவனிடம் சிறு தடுமாற்றம் கூட இல்லை. "......................." அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்தாள்.

கபிலன் அவளுடைய கணவன். அவனை அவள் தேடிவருவதில் என்ன தவறு... அதை தீரஜ்பிரசாத்திடம் ஏன் அவளால் நிமிர்ந்து சொல்ல முடியவில்லை... யாருக்கும் தெரியாமல் அவள் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் ஒரு முகம் நேரில் வந்து கேள்வி கேட்கும் போது அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்... அவள் சிலை போல் நின்றாள். சூர்யாவை இழந்துவிட்ட துக்கமும், அவள் இனி தனக்கு கிடைக்கவே மாட்டாள் என்கிற தவிப்பும் கொடுத்த மனஅழுத்தமும்... அதை குறைக்க அவன் எடுத்துக் கொண்ட மதுவும் அவனை தூண்ட, அவன் சூர்யாவிடம் நேரடியாக கேட்டுவிட்டான்... "ஏன்டி இப்படி பண்ணின...? என்னை ஏமாத்திட்டு எதுக்குடி அவன்கிட்ட போன... என்கிட்டே இல்லாதது அப்படி என்னடி அவன்கிட்ட இருக்கு...?" கண்கள் கனலை கக்க.... கர்ஜித்தான்.... "தீரஜ்... இது பழசை பற்றி பேசும் நேரம் இல்ல... அதோடு உன்னை நான் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றவும் இல்லை... பிறகு நான் யாரை கல்யாணம் செய்துகொண்டால் உனக்கென்ன... ஏன் இப்படி செய்ற... " அவள் படபடப்பாக பேசிக்கொண்டிருக்கும் போதே மின்னல் வேகத்தில் தான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தவன் எதிரில் இருந்த டீப்பாயை காலால் எட்டி உதைத்தான். அது "தட்..டட்...டட்" என்ற சத்தத்துடன் கீழே உருண்டது. அதன் மீது அடுக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கலகலவென உடைந்து சிதறின. அந்த சத்தத்தின் ஊடே "பொய் சொல்லாதடி... பொய் சொன்னே... உன்ன கொலையே செஞ்சுடுவேன்..." என்று கையை ஓங்கிக் கொண்டு அவளிடம் பாய்ந்தான். பின் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை தொடாமல் கையில் இருந்த மது கோப்பையை தூக்கி சுவற்றில் அடித்தான். அவனுடைய வெறித்தனமான செயலில் செய்வதறியாது திகைத்த சூர்யா மிரண்டு விழித்தாள். "என்னடி முட்ட கண்ண வச்சுகிட்டு முழிக்குற...? இப்படி முழிச்சே ஆளை காலி பண்ணிடுவடி நீ... இன்னிக்கு முழுக்க நீ எனக்கு அடிமை... நீ இங்கிருந்து ஒரு அடி கூட நகர முடியாது..." "....................." "நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி... பார்த்திருப்பியே... 'கிரா....ன்ட் பார்ட்டி...' எதுக்குன்னு நினைக்கிற... எல்லாம் உன்னை இங்கு கொண்டு வரத்தான்......" "....................." "என்ன பார்க்குற... என்னை தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் சந்தோஷமா குடும்பம் நடத்துவ... நான் இங்கு வெந்து சாகனுமா...? இன்னியோட உன்னோட நிம்மதி சந்தோஷமெல்லாம் குழி தோண்டி புதைக்க போறேண்டி..." அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக வந்தது. "........................." அவள் பதில் எதுவும் பேசவில்லை. அவளை பொறுத்தவரை அவளது நிம்மதி என்றோ தொலைந்துவிட்டது. இல்லாத நிம்மதியை இவன் எங்கிருந்து புதைக்க போகிறான்.... "உன்னை ஏன்டி அந்த கபிலன் இங்கு வர சொன்னான்...? எதற்காக நீ இங்கு வந்த... முதலில் அதை சொல்..." ".........................." "பதில் சொல்லுடி... இல்லை... உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... சொல்லுடி..." அவன் அவளை அதட்டினான். "உன்னால என் நிம்மதி சந்தோஷம் எல்லாம் போச்சுடி... இப்போ எதுக்காக இங்க வந்திருக்க...? நான் எப்படி வேதனை பட்டு சாகிறேன் என்று பார்த்து ரசிக்க வந்தியா...? துரோகி... துரோகி..." "இல்லை... இல்லை..." "என்னடி இல்லை... நீ என்னை காதலிக்கவே இல்லை...? உன் மனசாட்ச்சியை தொட்டு சொல்லு... நீ என்னை நினைக்கவே இல்லை....?" "............................" "உன்னால பதில் சொல்ல முடியாதுடி... எப்படி முடியும்...? நீ என்னை எமற்றலடி... உன்னையே ஏமாத்திக்கிட்ட..." ".............................." "பொண்ணுங்க மனசு மட்டும் தான் பூ மாதிரியா....? காதல்ன்னு வந்துட்டா ஆண்கள் மனசுதான்டி பூ மாதிரி... " "........................" "என்னை நினைத்த உன் மனசில் இன்னொருவனை சுமந்துகொண்டு உன்னால் குடும்பம் நடத்த முடிகிறது.... ஆனால் என்னால் முடியாதுடி... உன்னை நினைத்த என் மனது வேறு யாரையும் நினைக்காதுடி..." "உன்னால நான் என் பலத்தை கொஞ்சம் கொஞ்சமா இழந்து கொண்டிருக்கிறேண்டி... அழிந்து கொண்டிருக்கிறேன்... பார்... இந்த மதுராவிலேயே இருந்து என் அழிவை பார்... உன்னை நினைத்ததற்கு நீ எனக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசை பார்த்து ரசி..." ".............." அவள் இப்போதும் எதுவும் பேசவில்லை. ஆனால் இதுவரை அடக்கி வைத்திருந்த அவளுடைய கண்ணீர் இப்போது அடங்க மறுத்து மடை திறந்தது. அவளுடைய கண்ணீரை பார்த்ததும் அவனுடைய பேச்சு நின்றது... அவன் எதிர் பார்த்தது நடக்கிறது... அவளை காயப்படுத்தி கதரவைக்க வேண்டும் என்கிற அவனது எண்ணம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது... ஆனால் அது அவனுடைய காயப்பட்ட மனதிற்கு நிம்மதியை தந்ததா...? இல்லையே...! அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை... அவளுடைய கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை. மறுபுறம் திரும்பி நின்றவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து ஆழமாக இழுத்து புகையை வெளியேவிட்டான். மறுபக்கம் திரும்பியிருந்தபடியே "எதுக்குடி அழற...? அழவேண்டியவன் நான் தான்... உன்னை போல் ஒரு பெண் பின்னால் பித்தனாக அளைத பாவத்திற்கு நான் இந்த ஜென்மம் முழுக்க அழ வேண்டும்..." அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தவன் திகைத்தான்... வேரறுந்த மரம் போல் சூர்யா தரையில் விழுந்தாள். ஒரே எட்டில் அவளை அடைந்தவன் கன்னத்தை தட்டிப் பார்த்தான். அசைவே இல்லை...

"சூர்யா... சூர்யா... ஏய்... எந்திரி சூர்யா... என்ன ஆச்சு... எந்திரி..." அவன் உண்மையிலேயே பதறினான். அவளுக்கு என்ன ஆயிற்றோ என்று தவித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அவனுக்கு தாங்கவில்லை. பிறகு எப்படி இவன் அவளை பழிவாங்க போகிறான்...!? மயங்கி விழுந்தவளை தூக்கி கட்டிலில் படுக்கவைத்தவன் மருத்துவருக்கு தொலைபேசியில் அழைத்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஆஜரான மருத்துவர் சூர்யாவின் நாடியை பிடித்து பார்த்துவிட்டு அவன் தலையில் அடுத்த இடியை இறக்கினார்....

No comments:

Post a Comment