Pages

Thursday, 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 2


கோசிக்காலனிலேயே மிகப்பெரிய மதில் சுவர் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளை தாங்கி நின்றது. ஊதா நிற சீருடை அணிந்த காவலாளி கையில் நீண்ட துப்பாக்கியுடன் மதில் சுவரை ஒட்டியிருக்கும் தன்னுடைய சிறிய அறையில் நின்று தன் பணியை செய்து கொண்டிருந்தார். ஒரு நீண்ட கருப்பு நிற 'ஜாகுவார் XJ' கார் அந்த பெரிய மதில் சுவரை நோக்கி வந்தது. அந்த காரை பார்த்ததும், தன் அறையிலிருந்து வெளியே வந்த காவலாளி காருக்குள் இருந்தவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மரியாதையுடன் கதவை திறந்துவிட்டார். மதில் சுவருக்குள் நுழைந்த அந்த கார் இருபுறமும் பசுமையாக வளர்க்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அந்த பெரிய மாளிகையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் வீட்டிற்குள் செல்லாமல் தோட்டத்துப்பக்கம் சென்றான். அங்கே நீச்சல் குளத்திற்கு அருகே இரண்டு ஆஜானுபாகுவான மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கியவன்

"கலக்ஷன் என்ன ஆச்சு...?" என்று இந்தியில் கேட்டான். "ஜி... தப்பு நடந்து போச்சு ஜி..." என்று நடுக்கத்துடன் சொன்னான் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவனான பவன். "வண்டி ஓட்டும் போது குடிச்சிருந்தியா...?" அமைதியாக அழுத்தமாக கேட்டான் தீரஜ் பிரசாத். பதில் பேசாமல் தலை குனிந்தான் மற்றவன். நிமிடத்தில் தீரஜ்பிரசாத்தின் கை பவனின் கன்னத்தில் பதிய, அவன் நிலை தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்தான். அனல் கக்கும் முகத்துடன் சுஜித்திடம் திரும்பிய தீரஜ் பிரசாத் "இன்று இரவு பத்து மணிக்குள் கலக்ஷன் நமக்கு வந்து சேரனும். இல்லன்னா அவனோட கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பிடு " என்று அங்கு நின்று கொண்டிருந்த சுஜித்திடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். நீச்சல் குளத்திலிருந்து நீந்தி மேலே வந்த பவன், தன்னுடைய வாயிலிருந்து இரண்டு பற்களை கையில் எடுத்தான். "என்ன பவன்.... சொத்த பல் இருந்ததா...?" என்று ஆதரவாக கேட்டான் சுஜித். அவனை பாவமாக பார்த்த பவன் "இங்க வரும்போது தான் நல்ல நல்லி எலும்பா பார்த்து வாங்கி வீட்டுல கொடுத்து சமைக்க சொல்லிட்டு வந்தேன். போச்சு... எல்லாம் போச்சு..." என்று கையில் பற்களை வைத்துக் கொண்டு புலம்பினான். "வீட்டுல வாங்கிக் குடுத்த நல்லி எல்ழுபு வீணாப் போச்சேன்னு கவலைப்பட்டுகிட்டே சும்மா புலம்பிகிட்டு இருந்தா, நைட் பத்து மணிக்கு உன்னோட நல்லி எலும்ப பிரசாத்ஜி உருவிடுவார். ஒழுங்கா போயி கலக்ஷன் வசூல் பண்ணிக்கிட்டு வர்ற வழிய பாரு." என்று எச்சரித்தான் சுஜித். சுஜித் பேசி முடிப்பதற்குள் பவன் அந்த இடத்திலிருந்து கலக்ஷனை வசூல் செய்ய ஓடினான். # # # பிரபா சூர்யாவின் சிறுவயது தோழி. அவள் ஒரு ஆண்டிற்கு முன்பே கோசிகாலன் வந்துவிட்டாள். அவள் மூலம் தான் சூர்யாவிற்கு இங்கு வேலை கிடைத்துள்ளது. முதல் நாள் பயணக்களைப்பு தீர சூர்யாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, பிரபா அலுவலகம் சென்றுவிட்டாள். காலை முழுவதும் ஓய்வெடுத்த சூர்யா மத்திய உணவிற்காக கீழே இறங்கி வந்தாள். உணவுக் கூடத்தில் அவளுக்கு கிடைத்த ரொட்டியும் வேகவைத்த காய்கறியும் குடலை புரட்டியது. 'இந்த குளிரான கிளைமேட்டுக்கு, வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் பருப்பு துவையலும் இருந்தால் எப்படி இருக்கும்....!' என்று முதல் நாளே அம்மாவின் சமையலுக்கு ஏங்கினாள். ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு விடுதியின் தோட்டத்திற்கு வந்தாள். தோட்டத்தின் அழகு அவளுக்கு பிரசாத்ஜியை ஞாபகப்படுத்தியது. "யார் இந்த பிரசாத்ஜி... எப்படி இருப்பார்? " என்று சிந்தனையை ஓடவிட்டவள், ஒரு ஐம்பது வயது மனிதர் வெள்ளை ஜிப்பாவில் உயரமாக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டாள். அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனிடம் பிரசாத்ஜியை பற்றி விசாரித்தாள். இவள் பேச முயற்சிக்கும் இந்தி அவனுக்கு புரியவில்லை. அவன் பேச முயற்சிக்கும் ஆங்கிலம் இவளுக்கு புரியவில்லை. சிறிது நேரம் அவனுடன் சைகை பாஷையில் பேச முயற்சி செய்து அவனை கொன்றது மட்டும் அல்லாமல், சைகை பாஷையையும் ஒரு வழி செய்துவிட்டு, பின் அவளுக்கே முடியாமல் மீண்டும் செடி கொடிகளை வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டாள். அன்று தான் முதல் முதலாக சூர்யா அலுவலகத்திற்கு செல்கிறாள். பிரபாவின் வேலை நேரம் காலை எட்டு மணிக்கு என்பதால், சூர்யாவிடம் அலுவலகத்திற்கு வரும் வழியை தெளிவாக விளக்கி சொல்லிவிட்டு அவள் முன்பே அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள். பிரபா சொன்னபடியே ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்த சூர்யா, வழியில் மனிதர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் ஆட்டோ மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் போடப்பட்டிருக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் சூர்யாவை தவிர இரண்டு ஆண்களும் ஒரு ஆட்டோ ஓட்டுனரும் மட்டும் தான் இருந்தார்கள். லேசாக மழை தூறல் போட்டது. அந்த காட்டுக்குள் ஆட்டோ மக்கர் செய்தது. ஆட்டோ ஓட்டுனர் என்ன முயன்றும் அவனால் ஆட்டோவை சரி செய்ய முடியவில்லை. ஆட்டோவில் இருந்த மற்ற இரண்டு ஆண்களும் ஓட்டுனரிடம் சூர்யாவை பார்த்தபடியே இந்தியில் ஏதோ பேசினார்கள். சூர்யாவின் நெஞ்சுக்குள் இனம் புரியாத பீதி எழுந்தது. 'இவனுங்க என்ன பேசிக்கிரானுங்க. நம்மை பற்றி தான் ஏதோ பேசிக்கிரானுங்க போலருக்கே...' அவள் பயத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் மிரண்டாள். ஆனால் சிறிது நேரத்தில், ஆட்டோவில் வந்த ஆண் பயணிகள் இருவரும் கால்நடையாக செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்டோ ஓட்டுனரிடம் தனியாக மாட்டிக்கொண்ட சூர்யாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'ஒருவேள இந்த டிரைவர் ஆட்டோ ரிப்பேர் என்று பொய் சொல்லி, ஆட்டோவில் வந்த மற்ற பயணிகளை அனுப்பிவிட்டு நம்மை கடத்த நினைக்கிறானோ...' என்ற எண்ணம் தோன்றியதும் சூர்யா அவசரமாக ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டாள். மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த பக்கம் வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டே நின்றாள். அவளை ஏமாற்றாமல் தூரத்தில் ஒரு கருப்பு கார் வந்தது. லேசாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன் மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் நின்ற சூர்யாவின் அழகு அந்த காரை இரண்டாவது முறையாக தயங்கி வேகத்தை குறைக்கச் செய்தது. ஆம் இரண்டாவது முறையாக... கார் மெதுவாக அருகில் வந்து கொண்டிருக்கும் போது சூர்யா கையை ஆட்டி காரை நிறுத்த முயன்றாள். அருகில் வந்து நின்ற காரை பார்த்ததும் ஆட்டோ ஓட்டுனர் பம்மியதை சூர்யா கவனிக்கவில்லை. காரின் கண்ணாடி இறக்கப்பட்டது. காருக்குள் இருந்தபடியே சூர்யாவை பார்த்த அந்த கம்பீரமான வாலிபன் புருவத்தை உயர்த்தி "என்ன...?" என்று கண்களால் கேட்டான். "ஹலோ சார்... நான் கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்' போகணும். உங்களால என்னை அங்க விட்டுட முடியுமா ப்ளீஸ்..." என்று சரளமான ஆங்கிலத்தில் சூர்யா வினவ

காருக்குள் இருந்தவன் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் காரின் பின் கதவை திறந்துவிட்டு, கண்களால் சைகை காட்டி அவளை காரில் ஏற சொன்னான். அவன் திறந்துவிட்ட கதவை மூடிவிட்டு, காரை பின் பக்கமாக சுற்றி வந்து, மறு புற கதவை திறந்து காரில் ஏறி அமர்ந்தாள் சூர்யா. அப்படி அவள் காரை சுற்றி வரும் போது காரின் பதிவு எண்ணை மனதில் ஏற்றிக் கொண்டாள். அவள் காரில் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது. கார் நகர்கிறது என்பதையே சில நிமிடங்களுக்கு பிறகுதான் சூர்யா உணர்ந்தாள். "வாவ்... ரொம்ப நல்ல கார்... ரொம்ப நல்ல டிரைவிங் சார்..." என்று ஆங்கிலத்தில் கார் ஓட்டுபவனிடம் புகழ்ந்துவிட்டு, அவளுடைய தோழி பிரபாவிற்கு கைபேசியில் அழைத்தாள். "ஹலோ... பிரபா..." "சொல்லு டி.." "நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் பிரபா.." என்று சுத்த தமிழில் பிரபாவிடம் பேச்சை ஆரம்பித்தாள் சூர்யா. "என்னடி..." "என்ன நடந்தது என்பதை நான் பிறகு நேரில் விளக்கமாக உனக்கு சொல்லுகிறேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை.... ஆனால் நான் இப்போது ஒரு புதியவனுடன் மகிழ்வுந்தில் வந்து கொண்டிருக்கிறேன். அவனுடைய மகிழ்வுந்து பதிவு எண், மாதுரி, வண்ணம் அனைத்தும் உனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். நான் இன்னும் சிறிது நேரத்தில் அலுவலகம் வரவில்லை என்றால் நீ நேராக காவல் நிலையம் சென்று நான் உனக்கு கொடுத்த தகவல்களை அவர்களிடம் கொடுத்து என்னை காப்பாற்று.... இல்லை... இல்லை... வேண்டாம்.... பிரசாத்ஜியிடம் சென்று முறையிட்டு என்னை காப்பாற்று..." "ட்ரிட்...." கார் ஒரு முறை பிரேக் அடிக்கப்பட்டு, மீண்டும் மிதமான வேகத்தில் கிளப்பப் பட்டது. அதை கவனிக்காத சூர்யா தோழியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் 'என்ன ஆச்சு இவளுக்கு... என்ன இது... புது இடத்துல மூளை எதுவும் குழம்பி போச்சா...?' "என்னடி உளறிகிட்டு இருக்க...?" பிரபா தலையும் புரியாமல் காலும் புரியாமல் கேட்டுவிட்டாள். "உளறல் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் உளறல் என்று சொல்கிறாயே... முட்டாள்... சொல்வதை செய்... மறந்துவிடாதே... பிரசாத்ஜியிடம் உடனே சென்று முறையிட்டு எண்ணை காப்பாற்றிவிடு..." "ம்ம்ம்...." அவள் சூர்யாவிடம் வாங்கிய வசவில் அவளை எதிர்த்து பேச துணிவின்றி குழப்பத்துடன் 'ம்ம்ம்' கொட்டினாள். "சரிடி... மறந்துவிடாதே..." என்று சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள், ஏதோ ஒரு பெரிய காரியம் செய்துவிட்டவள் போல் களைத்துப் போனாள். சிறிது நேரத்தில் "கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதியிருந்த பெரிய நுழைவாயில் கண்ணில் பட்டது. அந்த நுழைவாயில் முன் தீரஜ்பிரசாத் காரை நிறுத்த, சூர்யா காரிலிருந்து கீழே இறங்கினாள். "தேங்க் யு சோ மச் சார்..." என்று சூர்யா ஆங்கிலத்தில் சொல்ல "பரவாயில்லை. பத்திரமாக சென்று வாருங்கள். " என்று தீரஜ்பிரசாத் சுத்த தமிழில் பேசினான். மிரண்டு விழித்த சூர்யா சுதாரிப்பதற்குள் அவன் கண்களில் சிரிப்புடன் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். ஹேய்... சூர்யா... என்னடி ஆச்சு உனக்கு? காலையிலேயே வேலை பார்க்க விடாமல் ஃபோன் உளறிகிட்டு இருந்த...?" பிரபா கான்டீனில் காலை பதினோருமணி இடைவேளையில் சூர்யாவிடம் அசட்டையாக வினவினாள். "அதை ஏன்டி கேட்குற...?" "என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிட்டு கிருஷ்ணா கெமிக்கல்ஸ் நோடீஸ் போர்ட்ல போடலாம் என்று தான் கேட்குறேன்... சொல்லு என்ன விஷயம்..." "நோட்டிஸ் போர்ட்ல போடுற அளவு பிரபலமாக வேண்டிய விஷயம் தாண்டி... ஆனா காமெடி ஷோல போடுற அளவு சொதப்பலா முடிஞ்சிருச்சு..." "இன்ட்ரஸ்டிங்... அப்படி என்னடி நடந்தது..." பிரபா ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள். "ஆமாடி... எனக்கு ஒரு விஷயம் சொதப்பலா முடிஞ்சா உனக்கு இன்ட்ரஸ்டிங் தான்... துரோகி... " என்று தோழிக்கு முதுகில் ஒரு அடியை கொடுத்துவிட்டு வரும் வழியில் நடந்த விஷயங்களை விளக்கினாள் சூர்யா. "ஹா... ஹா... ஹா..." சூர்யா சொன்னவற்றை கேட்ட பிரபா சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். "ஏன்டி சிரிக்கிற...?" சூர்யா எரிச்சலாக வினவினாள். "சிரிக்காம... ஹா... ஹா... சிரிக்காம என்ன செய்றது? அது சரி... நீ அந்த ஆளுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைத்து பேசும் போது அவரோட முகம் எப்படி மாறியது...? ஹா... ஹா..." பிரபாவின் சிரிப்பு அதிகமானது. "ரொம்ப முக்கியம்டி... நான் தான் பின் சீட்ல உக்கார்ந்திருந்தேனே... அவர் முகம் எப்படி மாறியதுன்னு... எனக்கு எப்படி தெரியும்?" "அது சரி... அவருக்கு தமிழ் தெரியும் என்று உனக்கு தெரிந்ததும் உன் முகம் எப்படி மாறியது....? ஒரே ஒரு தடவ எனக்கு அந்த ரியாக்ஷன் கொண்டு வந்து காமியேன். ஹா...ஹா..." என்று பிரபா சூர்யாவை கிண்டலடிக்க, சூர்யா கையை ஓங்கிக் கொண்டு பிரபாவை அடிக்க துரத்தினாள். பேச்சு சுவாரசியத்தில் தோழிகள் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை மறந்து விளையாடியதால், தங்களை ரசனையுடன் கவனித்தபடியே தீரஜ்பிரசாத்தின் கார் அலுவலக நுழைவாயிலுக்குள் நுழைவதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. காலையில் சூர்யாவுக்கு லிஃப்ட் கொடுத்து அவளை அலுவலக நுழைவாயிலில் இறக்கிவிட்ட தீரஜ்பிரசாத், அவள் அடித்த கூத்தில் தன்னை சமனப்படுத்திக்கொள்ள தனிமையை தேடி சென்றுவிட்டான். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் உள்ளே நுழையும் போதே சூர்யாவை பார்க்க நேர்ந்தது. சூர்யா துள்ளி குதித்து, தன் தோழியை துரத்தி விளையாடியதை பார்த்தக் கொண்டே அலுவலக வளாகத்திற்குள் வந்த தீரஜ்பிரசாத், தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக வழியில் நுழைந்து அவனுடைய அறையை அடைந்து முதலாளி இருக்கையில் அமர்ந்தான். பள்ளி, கல்லூரி, நட்சத்திர ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று பல தொழில்களை நடத்தும் தீரஜ் பிரசாத்திற்கு 'கிருஷ்ணா கெமிக்கல்ஸ்' ஒரு முக்கியமான தொழில். மாதம் ஒரு முறை கிருஷ்ணா கெமிக்கல்ஸுக்கு வரும் தீரஜ் இன்றும் வந்தான். வரும் வழியில் ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் அவன் கண்ணில் பட்டு இன்று வரை அவ்வப்போது அவன் கனவில் வரும் அந்த முகத்தை மீண்டும் பார்த்தான். ஆம்.. அந்த முகம்... அதே முகம் சென்னையில் நீர் திவளைகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காரின் 'ஹெட் லைட்' வெளிச்சத்தில் பார்த்த அதே முகம், மீண்டும் கோசிகாலனில்... அதே நீர் திவளைகளுடன்...... அந்த நொடி முதல் அவன் அவனாக இல்லை. இப்போதும் குழந்தையாக மாறி அவன் கண் முன் ஓடியாடும் அவள் முகம் அவனை இம்சிக்கிறது. மீண்டும் மீண்டும் அவள் முகம் காண கண்கள் துடிக்கிறது. குழந்தை தனமான அவள் பேச்சை கேட்க செவிகள் ஏங்குகிறது. மனதில் ஏதோ ஒரு மெல்லிசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவரை அவன் அனுபவித்தறியாத புதுவித ஒரு மயக்கம் இது. சுகமான இந்த மயக்கம் இன்னும் வேண்டும் வேண்டும் என்று உள்ளம் கூக்குரலிடுகிறது. இது என்ன உணர்வென்று அவனுக்கு புலப்படவில்லை. இந்த போதையிலிருந்து எப்படி வெளி வருவதென்பதும் புரியவில்லை. # # #

காலை அவளுக்கு லிஃப்ட் கொடுத்த அந்த புதியவனின் முகத்தை மாலை வரை சூர்யாவிற்கு மறக்க முடியவில்லை. மாலை அலுவலகம் முடிந்து விடுதிக்கு செல்லும் போது, சிறுத்தை கொடிகட்டிய குவாலிஸ் கார் ஒன்றை சூர்யா வழியில் கண்டாள். உடனே காலை பார்த்த புதியவனின் முகம் மறந்து போய், பிரசாத்ஜியின் கற்பனை உருவம் மனதில் வந்து அமர்ந்து கொண்டது. பிரசாத்ஜியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ஷேர் ஆட்டோவில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள். "உங்க சொந்த ஊர் இதுதானா? " ஆங்கிலத்தில் சூர்யா கேட்க "ஆமாம்... நீங்க...?" என்று அந்த புதிய பெண் சிரித்தமுகத்துடன் சிநேகமாக சூர்யாவிடம் பதில் கேள்வி கேட்டாள். "நான் வெளியூர்... இங்க வேலைக்கு வந்திருக்கேன். இந்த ஊர் பாதுகாப்பானதா...? "பிரசாத்ஜி ஊர்ல இருந்துகிட்டு பாதுகாப்பை பற்றி கவலையே பட வேண்டாம்மா..." அந்த பெண் சூர்யாவின் எதிர்பார்ப்பு படி பிரசாத்ஜியை பற்றி பேச்சை ஆரம்பித்தாள். "யார் பிரசாத்ஜி...?" சூர்யா தெரியாதவள் போல் கேட்டாள். "மதுராவோட காவல் தெய்வம். அவருக்கு தெரியாம மதுரால ஒரு துரும்பு கூட அசையாது." "நீங்க அவர பார்த்திருகீங்களா?" "ஓ... பார்த்திருக்கேனே... என்ன அழகு...! என்ன கம்பீரம்...! அவர் மாதிரி ஒரு ஆண் சிங்கத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப் போவது இல்லை." அந்த பெண் பேசுவதை கேட்ட சூர்யாவுக்கு எரிச்சல் வந்துவிட்டது. 'என்ன இந்த அம்மா... இந்த வயசுல இப்படி வழியுது...' என்று உள்ளுக்குள் பொருமினாலும் வெளியில் சிரித்துக் கொண்டு, "அவர் எங்க இருப்பார்...?" என்று கேட்டாள். "அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா அவர் வீடு கோசிகாலன்ல தான் இருக்கு..." பிரசாத்ஜியின் வீடும் அவள் தங்கியிருக்கும் ஊரான கோசிகாலனிலே தான் இருக்கிறது என்ற செய்தி சூர்யாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. 'எப்படியும் ஒரு நாள் அந்த பிரசாத்ஜியை பார்த்தே ஆகவேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள். இரண்டாம் நாள் சூர்யா அலுவலகத்திற்கு சென்றாள். அதே ஷேர் ஆட்டோ... அதே காட்டு வழி... நேற்று நின்ற அதே இடத்தில் இன்றும் ஆட்டோ நின்றது. ஆனால் இன்று ஆட்டோவை நிறுத்தியது சூர்யா. " ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் தி ஆட்டோ... " ஆட்டோவை சடன் பிரேக் அடித்து நிறுத்திய ஆட்டோ டிரைவர் "என்ன... என்ன ஆச்சு...?" இந்தியில் வினவினான். அவனது கேள்வியை ஓரளவு புரிந்துகொண்ட சூர்யா "பர்ஸ்... பர்ஸ் மிஸ்ஸிங்..." என்று கைகளில் அபிநயத்துடன் ஆட்டோ ட்ரைவருக்கு விஷயத்தை விலக்கிவிட்டு, ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி பர்சை தேடினாள். தேடினாள்... தேடினாள்... தீரஜ் பிரசாத்தின் கார் அந்த பக்கம் வரும் வரை, பத்து நிமிடம் தேடிக் கொண்டே இருந்தாள். கார் வந்ததும் தேடுதலை நிறுத்திவிட்டு காரை கைகாட்டி நிறுத்த முயன்றாள். சூர்யாவின் செயலை ஓரளவு எதிர்பார்த்த தீரஜ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே காரை நிறுத்தினான். "ஹலோ... சாரி சார்.... உங்களுக்கு தமிழ் தெரியும் என்று எனக்கு தெரியாது..." அவள் சங்கடமாக அவனிடம் பேசினாள். "தமிழ் தெரியலன்னா... உதவி செய்றவங்கள இப்படி தான் போலீஸ்கிட்ட மாட்டிவிடுவீங்களா?" அவன் கண்களில் குறும்புடன் குறுக்கு கேள்வி கேட்டான். "நா எங்க மாட்டிவிட்டேன்... நீங்க என்னை கடத்தினா தானே மாட்டிவிட சொன்னேன்...!?" அவள் அப்பாவியாக அவனுக்கு விளக்கம் சொன்னாள். "என்னை பார்த்தால் உங்களுக்கு கடத்தல்காரன் மாதிரி தெரியுதா?" "இல்ல இல்ல... அப்படி இல்ல... அது... அது தான் சாரி சொன்னேனே..." அவள் உளறி கொட்டினாள். "என்ன இல்ல...?" "உங்களை பார்த்தால் கடத்தல்காரன் மாதிரி தெரியல..." "எப்படி நம்புறது...? " "என்ன சார் நீங்க.... உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா...?" "எனக்கு நம்பிக்கை இருந்து என்னங்க செய்றது... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கை வரலன்னா ஆபத்தாச்சே..." அவன் அவளை பார்த்து பயப்படுகிரானாம். அவளுக்கு பெருமை தாங்க முடியவில்லை... "நானும் நபுறேன் சார்... நீங்க கவலை படாதிங்க..." "அதை தான் கேட்குறேன்... நீங்க என்னை நம்புறீங்கன்னு நான் எப்படி நம்புறது...?" "ஓ..." அவனுடைய கேள்வியை புரிந்து கொண்டாளாம்... நீட்டமாக ஒரு 'ஓ' போட்டுவிட்டு அவனுக்கு பதில் சொன்னாள். "நான் தான் சொல்றேனே... நீங்க நல்லவர்..." அவள் அழுத்தமாக சொன்னாள். "அப்போ ஏறுங்க..." என்று அவன் அவளுக்கு காரின் முன் பக்க கதவை திறந்துவிட்டான். முதலில் விழித்தவள் பின் "ஆட்டோ எனக்காக நிக்குதே..." என்றாள் தயக்கமாக. அவன் ஆட்டோ டிரைவரை அழைத்து இந்தியில் ஏதோ சொன்னான். அடுத்த நொடி ஆட்டோ அங்கிருந்து பறந்துவிட்டது. "இப்போ ஏறுங்க..." அவன் தன் வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னான். அவள் அவன் திறந்துவிட்ட முன் பக்க கதவை மூடிவிட்டு பின் பக்க கதவை திறக்க முயன்றாள். பின் பக்க கதவு திறக்க மறுத்தது. இழுத்து இழுத்து பார்த்தவள், பின் அவனை பார்த்து பரிதாபமாக விழித்தாள். "முன் பக்கம் மட்டும் தான் உங்களுக்கு அனுமதி..." அவன் கண்களில் சிரிப்புடன் மீண்டும் முன் பக்க கதவையே திறந்துவிட்டான். ஆட்டோவும் சென்றுவிட்டது. நடுகாட்டில் தனியாகவும் நிற்க முடியாது. வேறுவழியின்றி முன்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்தாள் சூர்யா. "நான் ஆட்டோவிலேயே போயிருப்பேனே...!" "ம்ம்ம்.... நீங்க ஆட்டோல போவிங்க... வழில அது ரிப்பேர் ஆகும். அப்புரம் நீங்க வேர கார்ல லிஃப்ட் வாங்கி போவிங்க. அந்த கார்காரன் உங்கள கடத்திக்கிட்டு போவான்.... உங்க ஃப்ரன்ட் என்னோட கார் டீட்டெய்ல்ஸ போலிஸ்கிட்ட குடுத்து என்னை மாட்டிவிடுவாங்க. இதெல்லாம் எனக்கு தேவையா..." அவன் பயந்தவன் போல பேசினான். "இப்போ சரி... சாய்ங்காலம் நான் தனியா தானே போவேன். அப்போ என்னை யாராவது கடத்தினா என்ன செய்வீங்க?" அவள் அவனை பேச்சில் மடக்கிவிட்டாளாம். 'இப்ப என்ன செய்வ...?' என்பது போல் அவனை பார்த்தாள். "இனி உங்களை தனியா விடவே முடியாது போலருக்கே... உங்களை கடத்தல்காரங்ககிட்ட இருந்து பாதுகாப்பது தான் இனி என்னோட முதல் வேலை." அவன் சளைக்காமல் பதில் சொன்னான். "கடத்தல்லகாரவங்கலா...! அது யாரு...?" அவள் குழம்பிவிட்டாள். "நீங்க தானே யாரோ உங்களை கடத்த போவதா சொன்னீங்க... உங்களுக்கு தானே தெரியும்... எனக்கு எப்படி தெரியும்?" அவன் தெளிவாக அவளை குழப்பினான். "அது நான் ஒரு சந்தேகத்துல சொன்னது..."

"ஓ... சந்தேகம் தானா... நான் நிஜமோன்னு நினைத்து பயந்தே போய்ட்டேன்...." அவன் நக்கலாக சொல்ல, அவனுடைய நக்கலை புரிந்து கொள்ளாமல், "என்ன சார் நீங்க... சரியான தொடைநடுங்கியா இருக்கீங்க...." என்று அவள் சீரியசாக பேசினாள். "யாரு... நானு...!" "ஆமா... பின்ன நானா...?" அவள் அவனிடம் வாய்க்கு வாய் பேசிக் கொண்டு வந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்குமே இருபது நிமிட பயணம் இரண்டு நிமிட பயணமாக தோன்றியது. நேற்று அலுவலக வளாகத்திற்கு வெளியில் சிறிது தூரத்திலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றவன், இன்று செக்யுரிட்டி அறைக்கு பக்கத்தில் காரை நிறுத்தினான். தீரஜ் பிரசாத்தின் காரை பார்த்ததும், வாயில் காவலன் தன் அறையிலிருந்து வெளியே வந்து சல்யூட் அடித்தான். அந்த சல்யூட் தனக்கு தான் என்று நினைத்த சூர்யா, கண்களில் பெருமை மின்ன தீரஜ் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான். "சரி... சரி... நீங்க கிளம்புங்க..." காரிலிருந்து கீழே இறங்கிய சூர்யா தீரஜ் பிரசாத்தை துரத்தினாள். அவளுடைய செய்கைகள் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து ரசிக்க முடிவு செய்த தீரஜ், அலுவலகத்திற்குள் வராமல் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். சூர்யா, தீரஜ் பிரசாத்தின் காரில் வந்து இறங்கிய செய்தி அலுவலகத்தில் தீயாக பரவியது. ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்ச்சாலையில் இந்த செய்தி பிரபாவின் காதுகளுக்கு மட்டும் எட்டாமல் போனது தான் விதி... மாலை ஆறு மணிக்கு சூர்யா அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அவளுக்கு கிடைத்த அதீத மரியாதையில் கலைத்து போயிருந்தாள். அதிபுத்திசாலியான சூர்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டது. 'என்ன... பார்க்குறவன் எல்லாம் இப்படி கும்பிடு போடுரானுங்களே...! நம்பள யாருன்னு நெனச்சு இந்த குனி குனியிரானுங்க....? ஒருவேள நம்பள மாதிரி தெளிவாவும் தைரியமாவும் பேசுற பொண்ணுங்கள பார்த்திருக்கவே மாட்டானுங்களோ...!' என்று ஏதேதோ சிந்தனை செய்து கொண்டே வெளியே வந்தாள். அப்போது தீரஜ் பிரசாத்தின் கார் கண்ணில் பட்டது. 'ஹேய்... சொன்ன மாதிரியே நம்மள 'பிக் அப்' பண்ண வந்துட்டானே இவன்...!' என்று நினைத்துக் கொண்டு வேகமாக காரை நோக்கி வந்தாள். "சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே... வெரி குட்...." என்று சொல்லிக் கொண்டே காரின் கடவை திறந்து அவனருகில் அமர்ந்தாள். "வெரி குட் எல்லாம் நீயே வச்சுக்கோ... உன் பேர் என்ன...? அதை முதல்ல சொல்லு... பேரும் தெரியாமல் ஊரும் தெரியாமல் உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றது? உன்னை யாரோ தூக்கிகிட்டு போயிட்டாங்கலோன்னு பயந்துட்டேன்..." "ஹலோ... என்னை யாராலையும் அவ்வளவு சுலபமா தூக்க முடியாது. ஏன்னா........ நான் சூ...ர்யா... ஹா...ஹா..." அவள் ஜோக் அடித்துவிட்டாளாம். அவள் அடித்த ஜோக்கிற்கு சிரிக்கவில்லை என்றாலும் அவள் சிரித்த சிரிப்பை பார்த்து தீரஜ் பிரசாத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. "ஆமாம்... என்னோட பேர கேட்டீங்களே... உங்க பேர் என்ன...?" "தீரஜ்...." "நைஸ் நேம்..." "உன்ன வாங்க போங்கன்னு சொல்லி கூப்படறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நமக்குள்ள இனி இந்த ஃபார்மாலிட்டீஸ் வேண்டாம் என்று நினைக்கிறேன்...." "ஆமாடா தீரஜ்... எனக்கும் உன்ன வாங்க போங்கன்னு நீட்டி முழக்க கஷ்ட்டமா தான் இருக்கு. நாம தான் ஃபிரன்ட்ஸ் ஆகிட்டோமே... நமக்குள்ள இனி என்ன ஃபார்மாலிட்டீஸ்..." "என்னது....! டா...வா...!" தீரஜ் பிரசாத் வாயை பிளந்தான். "என்னடா இதுக்கு போயி இவ்வளவு பெரிய ரியாக்ஷன் குடுக்குற...?" "ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... நான் உன்னைவிட அஞ்சு ஆறு வயதாவது பெரியவனா இருப்பேன்...." அவன் கிட்டத்தட்ட கெஞ்சினான். "உனக்கு இப்போ என்ன வயது?" "ரொம்ப முக்கியம்... அது தெரிஞ்சா தான் மரியாதை குடுப்பியா...? " என்று அலுத்துக் கொண்டே "முப்பது..." என்று பதில் சொன்னான். "ஹா.. அப்படின்னா நீ என்னை விட எட்டு வயது தான் மூத்தவன். நான் கிருஷ்ஷையே வாடா போடான்னு தான் சொல்லுவேன். அவன் என்னை விட இருபத்தெட்டு வயது மூத்தவன்." "யாரு அது கிருஷ்...?" அவன் எரிச்சலாக கேட்டான். "என்னோட அப்பா..." அவளுடைய பதிலை கேட்டு ஆளானப்பட்ட தீரஜ் பிரசாத்தே அடுத்து என்ன பேசி அவளை சமாளித்து அவளிடமிருந்து மரியாதையை பெறுவது என்று தெரியாமல் விழித்தான். "என்னடா... பேச்ச காணும்...?" கவனமாக கார் ஓட்டிக் கொண்டிருந்த தீரஜ், சூர்யாவின் 'என்னடா'-வை கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான். அவனுடன் இந்த அளவு யாரும் சகஜமாக பேசியது இல்லை. தலையில் அடித்தது போல் அவள் அவனை பெயர் சொல்லி 'டா' போட்டு அழைப்பது கூட நன்றாகத்தான் இருந்தது... "எங்கிருந்துடி இவ்வளவு பேச கத்துகிட்ட...? வாயை மூடவே மாட்டியா?" "நீ மட்டும் என்ன...? வடநாட்டுகாரனா இருந்துகிட்டு தமிழ் இந்த போடு போடுற...! நா பேசக் கூடாதா..." "என் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. என் அப்பா மட்டும் தான் வடநாடு. அதனால எனக்கு தமிழ் தெரியிறதுல ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல..." "ஓ... உங்க அப்பா அம்மா காதல் திருமணம் பண்ணிகிட்டவங்களா?" "ம்ம்ம்...." "சூப்பர்டா... நீ எப்படி...?" 'நானும் ஒரு தமிழ் நாட்டு பெண்ணை தான் பார்த்துகிட்டு இருக்கேன்...' "டேய்... என்னடா கனவு..." "ஹாங்... கனவா... அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு குட்டி பிசாசுகிட்ட மாட்டிகிட்டேன்.... அவகிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சேன்..." "சீக்கிரம் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய் நிறுத்து தப்பிச்சிடலாம்..." அவளுடைய பேச்சு தீரஜ் பிரசாத்தை உற்சாகப்படுத்தியது. "உங்க அப்பா என்ன பண்றாரு...?" தீரஜ் அவளுடைய குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான். "அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் ஆஃபீசர்" சூர்யா பெருமையாக சொன்னாள்.

"ஓ... வெரி குட்... என்னவா இருந்தாரு...?" அவன் ஆர்வமாக கேட்டான். "கான்ஸ்டபில்...." அப்போதும் அவளுடைய பெருமைக்கு எந்த குறையும் இல்லை. "ஓ......" தீரஜ் பிரசாத்தின் இந்த 'ஓ' கொஞ்சம் நீட்டமாக வந்தது. "உங்க அப்பா என்ன பண்றாரு?" அவனுடைய 'ஓ'வில் இருந்த நக்கலை கண்டுபிடிக்காமல், அவனை கேள்விக் கேட்டாள். "அவர் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். இப்போ இல்ல... ஒரு விபத்துல அப்பா அம்மா ரெண்டுபேரும் போய்ட்டாங்க..." "ஓ... சாரி தீரஜ்... இப்போ நீ அவரோட பிசினஸ் தான் பார்த்துக்கிட்டு இருக்கியா... கார் எல்லாம் நல்லா ஓடுதா..?" "கார் நல்லா ஓடுதாவா...?" அவன் புரியாமல் கேட்டான். "ஆமாம்... நீ 'ட்ரவல்ஸ்' தானே நடத்துற?" "ஆ... ஆமா.." அவன் தட்டு தடுமாறி பதில் சொன்னான். "மாத கடைசில என்னை நீ ஆபீஸ் கொண்டுவது விட்டுட்டு திரும்ப கூட்டிகிட்டு போறதுக்கு பணம் செட்டில் பண்ணிவிடுறேன்... ஆனா ஆட்டோவுக்கு கொடுப்பதை விட நூ....று ரூபாய் அதிகமா தர்றேன் வச்சுக்கோ..." அவள் பெருமையடித்துக் கொண்டாள். "நூ....று ரூபாய் அதிகமா கொடுக்க போறியா.... நீ ரொம்ப நல்லவ சூர்யா...! ஆமா நான் ட்ரவல்ஸ் நடத்துறேன்னு எப்படி கன்னுபிடிச்ச?" "சும்மா ஆட்டோல போயிகிட்டு இருந்தவள ஃபிரன்ட் புடிச்சு கஸ்டமர் ஆக்கிகிட்டியே... உன்னோட பிசினஸ் டாக்டிஸ் எனக்கு பிடிச்சிருக்கு... " அவள் அவனை பாராட்டினாள் 'புத்தம் புது ஜாகுவார் காரை ட்ராவல்ஸ் பிசினஸ்க்கு யூஸ் பண்ணின முதல் ஆள் நான் தானா...' அவன் அவளுடைய புத்திசாலி தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டான். "தேங்க்ஸ்... ரொ...ம்ப கரெக்ட்டா கெஸ் பண்ணியிருக்க..." "ஹா...... என்னோட கெஸ்ஸிங் தப்பாக முடியுமா...? " "அது எப்படி தப்பாகும் சூர்யா... நீதான் மகா புத்திசாலியாச்சே..." "அது உனக்கும் தெரிஞ்சு போச்சா... ?" "வேற யாருக்கு தெரிஞ்சிடிச்சு...?" அவன் சந்தேகமாக கேட்டான். "அதை ஏன் கேட்குற...? ஆபீஸ்ல நான் ஜாய்ன் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னோட திறமை எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். எல்லாரும் ரொம்ப மரியாதை குடுக்குறாங்க... யாருமே சகஜமா பேச மாட்டேங்கிறாங்க... என்னோட திறமைய இனிமே கொஞ்சம் மறச்சு வச்சுக்கணும் என்று முடிவு பண்ணியிருக்கேன்... என்னதான் நம்ம பெரிய அறிவாளியா இருந்தாலும் மத்தவங்க நம்மளோட ஃப்ரீயா பழகனும் பாரு... அதுக்காக தான்..." என்று ரகசியம் பேசுவது போல் தீரஜ் பிரசாத்தின் காதோரம் சென்று கிசு கிசுப்பாக பேசினாள். அவள் பேசிய ரகசிய பேச்சில் தீரஜ் பிரசாத்திற்கு மூச்சே முட்டிவிட்டது. இன்று இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவன் வண்டியை வேகமெடுத்து அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளுடைய விடுதியின் முன் காரை நிறுத்தினான். மாஃப்பியா தலைவனைப் போல் தனக்கென்று ஒரு பெரிய குழுவை வைத்துக் கொண்டு, மதுரா மாவட்டத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஆட்டிப் படைக்கும் தீரஜ் பிரசாத், சூர்யாவிற்கு காலையும் மாலையும் டிரைவர் வேலை பார்த்தான். அதையும் அவன் மகிழ்ச்சியாகவும் உற்ச்சாகமாகவும் செய்தான். மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய முக்கிய தொழிலான 'கிருஷ்ணா கெமிக்கல்ஸ்'சை எட்டி பார்ப்பவன், இப்போதெல்லாம் தினமும் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சே கதி என்று இருக்கிறான். இந்த மாயம் நிகழ காரணமாக இருந்த சூர்யாவோ அதை உணராமல், தீரஜ் பிரசாத்துடன் சகஜமாக பழகிக் கொண்டிருந்தாள்.

அன்று இரவு தீரஜ் பிரசாத்திற்கு உறக்கம் பிடிக்கவில்லை. அவன் காதோரம் சூர்யா பேசிய ரகசியம், கிசு கிசுப்பாக அவனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த அனுபவம் தந்த மயக்கம் அவனை உறங்கவிடாமல் துரத்தியது. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனது அறையோடு ஒட்டியிருக்கும் பால்கனியில் கூடை ஊஞ்சலில் அமர்ந்து, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் தோட்டத்து பூக்களை ரசிக்க முயன்றான். தோட்டத்து பூக்களெல்லாம் சூர்யாவாக மாறி அவனை பார்த்து சிரித்தது, முறைத்தது, 'போடா...' என்றது, 'வாடா...' என்றது, கண் சிமிட்டியது, உதட்டை சுழித்து அழகு காட்டியது, என்னென்னவோ செய்தது.... "சூர்யா... சூர்யா... சூர்யா..." அவனுக்கு இப்போதே சூர்யாவுடன் பேசவேண்டும் போல் இருந்தது. அது முடியாததால் சத்தமாகவே அவள் பெயரை சொல்லி புலம்பினான். அவனுடைய அறைக்கு அவன் அனுமதியின்றி யாரும் வர முடியாததால் அவனுடைய புலம்பல் ஒலி அந்த அறைக்குள்ளேயே காற்றில் கரைந்து மறைந்தது.

No comments:

Post a Comment