Pages

Thursday, 10 October 2013

அரசி


“முன்பே வா, என் அன்பே வா” ன்னு அரசி குளியலறையில் குளித்துக்கொண்டே பாடியது தண்ணீர் சத்தத்தில் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அப்படியே கேட்டாலும் பாதகமில்லை. அரசி பாத்ரூம் சிங்கர் மட்டும் கிடையாது. அருமையான குரலுக்கு சொந்தக்காரி. அத்தையிடமிருந்துதான் அந்த குரல்வளம் தனக்கு வந்திருக்க வேண்டுமென அவள் அடிக்கடி நினைப்பதுண்டு. குளித்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தவள்“அம்மா! சூடா ஒரு கப் காபி தர்றீயா?” என்று கேட்டுக்கொண்டே தலையை துவட்டினாள். “ஒரு நிமிஷம் இரு. பாலை சூடு பண்ணித்தர்றேன்” என்ற அம்மாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அடுப்படியிலிருந்து கூடத்தை நொடிக்கு ஒரு தரம் எட்டிப் பார்ப்பதும் பாத்திரங்களை உருட்டுவதுமாக இருந்தவளை பார்த்தவுடன் அரசிக்கு புரிந்துவிட்டது. அத்தை தலை குளித்துவிட்டு கூடத்தில் உட்கார்ந்து முடியை காயவைத்துக் கொண்டிருந்தாள். அரசிக்கு அம்மாவை பார்த்து சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் காபியுடன் கூடத்திற்கு வந்தாள்.

சோபாவில் உட்கார்ந்து செய்திதாளை புரட்டிக்கொண்டிருந்த அத்தை“குட்மார்னிங் குட்டிம்மா! நீயும் தலை குளிச்சியா? சீக்கிரம் காயவை. சளி பிடிக்கப்போகுது” என்றவுடன் அரசி “ஐயோ அத்தை! என்னை குழந்தை மாதிரி நடத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!. எனக்கு இருபத்திமூணு வயசாகுது” என்று சிணுங்கினாள். “இருக்கட்டுமே! எனக்கு நீ என்னைக்குமே குழந்தைதான்”ன்னு சொல்லிக்கொண்டே கடிகாரத்தை பார்த்தவள் “ஐயோ! காலேஜுக்கு நேரமாயிடுச்சு”ன்னு அரக்க பரக்க அவளது அறையை நோக்கி ஓடினாள். அத்தை அப்பாகூடப் பிறந்தவள். அவரைவிட இரண்டு வயசு மூத்தவள். அவளுக்கு நாற்பத்தியெட்டு வயசென்றால் யாருமே நம்பமாட்டார்கள். உன் அக்காவா என்று அரசியிடமே நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அத்தை ஒன்றும் அழகி கிடையாது. ஆனால் அவளது மனமும் குணமும் அத்தனை அழகு. அவள் அழுதோ, கோபப்பட்டோ அரசி பார்த்ததே கிடையாது. தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்கவைக்கும் வித்தை தெரிந்தவள். எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்வதில் கில்லாடி. அவளது பேச்சை கேட்டால் சாகப்போகிறவனுக்குகூட நம்பிக்கை துளிர்விடும். உலகத்தில் நாம் பிறந்ததே மற்றவர்களுக்கு உதவத்தான் என்று ஆணித்தரமாக நம்புபவள். வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து, அனுபவித்து வாழ்பவள். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியையாக பணிபுரிகிறாள். விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கிறாள். அவளது கிரியேட்டிவ் ரைட்டிங் வகுப்பு ஜுரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் மிக பிரபலம். வேலை, ட்யூஷன், சமூக மன்றங்களில் தொண்டூழியம் என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவள். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை மற்றவர்களுக்கு உதவவும், ஒரு பங்கை புத்தகங்கள் வாங்கவும் மீதியை தனக்காகவும் செலவிடுகிற கொள்கை கொண்டவள். திருமணமாகி ஆறே மாதத்தில் கணவனை இழந்த அத்தை என்ன காரணத்தினாலோ மறுமணத்தை அறவே தவிர்த்துவிட்டாள். பெற்றவர்கள் மறைந்தபின் அவளுக்கு இருக்கும் ஒரே உறவு தம்பி குடும்பம் மட்டும்தான். அதிலும் அரசியென்றால் அவளுக்கு உயிர். அரசிக்கும் அப்படித்தான். அப்பாவுக்குகூட அத்தை மீது தனிப்பாசம்தான். அத்தையை பிடிக்காதவர்கள் யார்தான் இருக்கமுடியும் அம்மாவை தவிர. அம்மா அதிகம் படிப்பறிவு இல்லாதவள். கணவர், மகள், சமையல்,தொலைக்காட்சி என்று அவளின் வட்டம் ரொம்ப சின்னது. அவளுக்கு வீடுதான் உலகம். அத்தைக்கு உலகமே வீடு. அத்தையோ பெண் சுதந்திரத்தை ஆதரிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண். பெண் சுதந்திரம்தான் குடும்ப அமைப்பின் எதிரியென்று நம்புபவள் அம்மா. இப்படி எல்லா விஷயங்களிலும் இருவரும் நேரெதிர். இது தவிர அத்தையை பிடிக்காததற்கு அம்மாவுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. அது அத்தையின் தலைமுடி. நீண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அடர்த்தி இருக்காது. அடர்த்தி இருந்தால் நீளம் இருக்காது. இரண்டும் இருந்தால் மிருதுவாக, பளபளப்பாக இருக்காது. ஆனால் அத்தையின் கூந்தல் கொள்ளை அழகு. கருகருவென முழங்காலுக்கு கீழே புரளும் அவள் முடியை யாராக இருந்தாலும் ஒருதரம் நின்று பார்த்துவிட்டுதான் போவார்கள். அம்மாவுக்கோ எலிவால் மாதிரி சாண் அளவு முடிதான். கல்யாணமான புதிதில் பாட்டி பலர் முன்னிலையில் “எனக்கும், என் பொண்ணுக்கும் தரையை தொடுற அளவுக்கு முடி. உன் பொண்டாட்டிக்கு தலையை மூடுற அளவுதான் முடி”ன்னு அப்பாவிடம் கிண்டலாக சொல்ல, அன்று பாட்டிமீது உண்டான கோபம் இன்றும் அத்தைமீது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “வீடு கூட்றதுக்குள்ள உசுரு போகுது. தலையை சீவுனப்புறம் கொட்ற முடியை குப்பையில போட்டா கொறஞ்சா போயிடும்”ன்னு அத்தை அறையை கூட்றபோது, “மாசத்துக்கு அஞ்சு தேங்காய் எண்ணெய் பாட்டிலும், பத்து ஷாம்பு பாட்டிலும் வாங்கறது இந்த வீட்ல மட்டும்தான் நடக்கும்”ன்னு மளிகை சாமான்களை பட்டியலிடும்போதுன்னு அம்மா கொட்டுகிற ஒவ்வொரு வசவும் அத்தையின் தலைமுடியை குறிவைத்துதான் வந்து விழும். அத்தை தலை குளிக்கும் நாட்களில் வசவுகளின் வீரியம் சற்று அதிகமாகவே இருக்கும். இவ்வளவு ஏன், அரசியிடம் கோபப்படும் தருணங்களில் கூட “குணத்துல அப்படியே அத்தையை உறிச்சுகிட்டு பொறந்தவ தலைமுடி விஷயத்துல மட்டும் என்னை கொண்டிருக்கியேடி! மாறி பொறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்”ன்னு திட்டும்போது அரசிக்கு எரிச்சல்தான் வரும். ஆனால் அத்தை இதையெல்லாம் கண்டுகொள்ளவேமாட்டாள். “நம்ம அம்மா சொன்னது அவ மனசுல ஆழமான வடுவாயிருக்கு. அதான் இப்படி பேசுறா. அவ கோபத்துக்கு வடிகாலா இருந்துட்டு போறேனே! நீ கண்டிக்கிறேன்னு ஏதாவது சொன்னா, அதுவும் என் மேலதான் திரும்பும். என்னைக்காவது ஒருநாள் அவ தன்னை மாத்திக்குவா”ன்னு சொல்லியே அப்பாவின் வாயை அடைத்துவிடுவாள். அம்மாவின் வசவுகளுக்கு அத்தை பழகிபோயிருந்தாலும், போன வாரம் அவள் கேட்க நேர்ந்த சொல் வீச்சு புதிதாகவும், அதிர்ச்சியாகவும் இருந்ததென்னவோ உண்மைதான். அரசிக்கு அந்த நிகழ்ச்சியை நினைத்தபோது அம்மா மீது வெறுப்புதான் மிஞ்சியது. கடந்த ஞாயிற்றுகிழமை தொலைக்காட்சியில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் கணவனை இழந்த பெண்னொருத்திக்கு பூவை பிய்த்து, வளையல்களை உடைத்து, தலையை மொட்டை அடிப்பது போல காட்சி. அதை பார்த்த அரசி “பார்த்தியா அத்தை! சடங்குங்கிற பேர்ல எவ்வளவு கொடுமை பண்ணி பொம்பளைங்களை பொம்மையாக்கி அடக்கி வச்சிருந்திருக்காங்க?”ன்னு ஆதங்கப்பட அதை கேட்ட அம்மா “என்னடி பெரிசா கொடுமையை கண்டுட்ட? அந்த காலத்து சடங்கெல்லாம் இருந்தப்ப கல்யாணம் ஆனவளா ஆகாதவளா, சுமங்கலியா முண்டச்சியான்னு பார்த்தாலே தெரியற மாதிரி ஒரு வேலி இருந்துச்சு. இப்பதான் எல்லாம் ஒரே மாதிரி திரியிறாள்களே! பொட்டு, பூவு, மொழங்காலுக்கு கீழ முடின்னு இவள்க பண்றதுதான்டி பெரிய கொடுமை”ன்னு அத்தையை பார்த்துகொண்டே சொல்ல அரசி துடிதுடித்து போய்விட்டாள். “அம்மா! வாயை மூடிகிட்டு சும்மாவே இருக்கமாட்டியா”ன்னு உச்ச குரலில் இவள் கத்த, சட்டென்று எழுந்த அத்தை வேகமாக அறைக்குள் நுழைந்துவிட்டாள். சிறிது நேரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் சிலைபோல் உட்கார்ந்திருந்த அரசி மெதுவாக எழுந்து அத்தையின் அறைக்குள் போனாள். புத்தகத்தை புரட்டி கொண்டிருந்த அத்தை “என்னடா டி.வி பார்க்கலையா”ன்னு எதுவுமே நடக்காததுபோல கேட்க “ஸாரித்தை. அம்மா பேசுனதை மனசுல வச்சுக்காத”ன்னு சொல்லி உடைந்தாள். “நான் அதெல்லாம் பெரிசுபடுத்தமாட்டேன்னு உனக்கு தெரியாதாடா? இந்த வார்த்தைகளை முன்னாடியே எதிர்பார்த்தேன். லேட்டா வந்துருக்கு. தயவுசெய்து அப்பாகிட்ட இதை சொல்லிடாத”ன்னு சொன்னவளை பார்க்கும்போது அரசிக்கு பிரமிப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. “ஏண்டி நேரமாயிடுச்சே! ஆபிஸுக்கு கெளம்பலையா? ” என்ற அம்மாவின் காட்டு கத்தல் அவளது எண்ண ஓட்டங்களை தடைசெய்ய அவசர, அவசரமாக கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அந்த நாள் வழக்கம்போல் வேகமாக நகர,மாலை வீட்டிற்கு புறப்படும் நேரத்தில் அப்பாவிடமிருந்து போன். “அரசி! எங்க இருக்க நீ?” என்ற அப்பாவின் குரலில் இருந்த பதற்றத்தை அவளால் உணரமுடிந்தது. “இப்பதான்பா ஆபிஸிலிருந்து கெளம்ப போறேன். என்னாச்சுப்பா? ஏதாவது பிரச்சனையா?” “ம்ம்ம்......அதுவந்து.....நீ டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வா. அப்புறமா எல்லாத்தையும் சொல்றேன்”ன்னு அப்பா சொல்ல அவளுக்குள் லேசான பயம் எட்டி பார்த்தது. “டென்ஷனா இருக்குப்பா. எதுவா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க” “இன்னைக்கு அம்மாவுக்கு மெடிக்கல் செக்அப் இருந்துச்சே! மறந்துட்டியா?”ன்னு அவர் கேட்டவுடன்தான் ஞாபகமே வந்தது. கடந்த ஒரு மாதமாகவே அம்மா மார்பகத்தில் வலியென்று புலம்பிகொண்டிருந்தாள். அரசிதான் அவளை செக்அப்புக்கு வற்புறுத்தி இன்றைக்கு டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருந்தாள். லீவு கிடைக்காததால் அப்பாவை அழைத்துபோக சொல்லியிருந்தாள். “ஐயோ! சுத்தமா மறந்துட்டேன்பா. கூட்டிகிட்டு போனிங்களா? என்ன சொன்னாங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே!” “போயிட்டு இப்பதான்மா வர்றோம். எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டு பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்கம்மா” “என்னாச்சுப்பா?” என்றவளுக்கு அப்பாவின் பதற்றம் தொற்றிக்கொண்டது. “அம்மாவுக்கு ப்ரெஸ்ட் கேன்சர்மா. ஒரு ப்ரெஸ்ட்டை முழுசா பாதிச்சிருக்காம். உடனே அதை நீக்கினாதான் அடுத்த ப்ரெஸ்ட்டுக்கு பரவாம தடுக்கலாங்கிறாங்க”ன்னு அப்பா சொன்ன அடுத்த நிமிஷம் அரசி கண்களிலிருந்து அவளை அறியாமல் தாரை, தாரையா கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்துக்கு பதில் இல்லாமல் போகவே இவளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட அப்பா, “நீ அழாதேம்மா. உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லைன்னு சொல்லியிருக்காங்க. அம்மாதான் ரொம்ப பயந்துபோய் அழுதுகிட்டே இருக்கா. நீ தைரியமா இருந்தாதானே அவளை சகஜ நிலைக்கு கொண்டுவரமுடியும்” என்றவுடன் யதார்த்தத்தை புரிந்துகொண்ட அரசி தன்னை தேற்றிக்கொள்ள முயற்சித்தாள். அப்பா சொன்னதுபோலவே அம்மா விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். பெரிய போராட்டத்திற்கு பிறகு அவளது பயத்தை ஓரளவுக்கு குறைத்த அரசி ஒருவழியாக அவளை தைரியப்படுத்தி அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தாள். ஒருபுறம் மார்பகம் நீக்கப்பட்ட பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கீமோதெரபி ட்ரீட்மென்ட் கொடுக்க மருத்துவமனைக்கும்,வீட்டிற்கும் மாறி, மாறி அலைந்ததில் நான்கு மாதங்கள் யாருக்கும் உட்காரகூட நேரமில்லாமல் போனது. “உனக்கென்னம்மா! ஹவுஸ் ஒய்ப்! ஜாலியா டி.வி பார்த்துகிட்டு பொழுதை கழிக்கலாம்”ன்னு அம்மாவை கிண்டலடித்திருக்கிறாள். ஆனால் ஹவுஸ் ஒய்ப் வேலை எவ்வளவு கஷ்டமானதுன்னு இப்ப அரசிக்கு புரிந்தது. இவளுக்கு தைரியம் சொன்ன அப்பாவோ உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து போய்விட்டார். அத்தை மட்டும் இல்லாவிட்டால் இந்த நெருக்கடியை எப்படி சமாளித்திருப்போம் என்று நினைத்தபோதே அரசிக்கு தலை சுற்றியது.

அம்மாவோ உடல் மெலிந்து, முடி கொட்டி, தோள் வெளுத்து, கண்களை சுற்றி கருவளையங்களுடன் ஆளே உருமாறி போயிருந்தாள். உடல்வலியை விட மனவலிதான் அவளிடம் அதிகம் இருந்ததென்பது அவளின் பேச்சிலிருந்து தெளிவாக தெரிந்தது. அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அரசியும்,அப்பாவும் ரொம்ப மெனக்கெட்டார்கள். இந்த நிலையில் ஒருநாள் அத்தை“குட்டிம்மா! நான் வேலை விஷயமா ஆறு மாசத்துக்கு அமெரிக்கா போகவேண்டியிருக்குடா”ன்னு சொன்னபோது தனியொருத்தியாக எப்படி சமாளிக்கப் போகிறோமென்று அரசி ஆடித்தான் போனாள். அவளின் மனக்குழப்பத்தை சொல்லாமலே புரிந்துகொண்ட அத்தை, அம்மாவை கவனித்துக்கொள்ள ஆள், வீட்டு வேலைக்கு ஆள் என அவளது வேலைபளுவை குறைக்க சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டுதான் போனாள். அதோ, இதோவென்று அத்தை போய் நான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஆரம்பத்தில் அத்தையின் பிரிவு வேதனையை கொடுத்தாலும் நாட்கள் நகர,நகர பழகிபோய்விட்டது. வீட்டில் இருக்கும் நாட்களில் அதிக நேரம் அம்மாவுடன் செலவழிக்க ஆரம்பித்தாள். அம்மாவிடமும் இரண்டு மாதங்களாக நல்ல முன்னேற்றம். இன்னும் சொல்லப்போனால், என்றைக்கு பிறந்தநாள் பரிசாக அப்பா அந்த “விக்”கை கொடுத்தாரோ அன்று முதல் அவளது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். அதுவரை வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் “விக்”கை மாட்டிகொண்டு வெளியே வரத்தொடங்கினாள். அது தலையில் இருக்கும்போது ஏதோ கிரீடம் அணிந்த ராணி போல அவளது முகத்தில் அவ்வளவு பொலிவு. இடுப்புவரை முடியுடைய அந்த “விக்”குடன் அடிக்கடி கண்ணாடி முன் நின்று தன்னையே ரசித்து மகிழ்ந்தாள். தூங்கும்போது கூட “விக்”குடன் தூங்கும் அம்மாவை பார்த்தபோது அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. “விக்”குடன் அம்மா அந்நியமாக தெரிந்தாலும் அவளின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பாத அரசி அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் பழைய சூழல் திரும்ப தொடங்கியதால் நிம்மதியடைந்த அரசி, ஒரு சனிக்கிழமை தோழிகளுடன் சினிமாவுக்கு போய்விட்டு தேக்காவில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினாள். இரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டை அடைந்தவளுக்கு, வழக்கமாக பத்து மணிக்கே தூங்கிவிடும் அம்மாவும், அப்பாவும் விழித்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. “என்னப்பா நீங்க இன்னும் தூங்கலையா? நீ மாத்திரை சாப்பிட்டியாம்மா?ஒனக்கும் இன்னைக்கு தூக்கம் வரலையா”ன்னு கேட்டுகொண்டே அறைக்குள் நுழையப்போனவளை “மொதல்ல இந்த கூத்தை கேட்டுட்டு போடி” என்ற அம்மாவின் குரல் தடுத்தது. “அமெரிக்காவுல இருக்க நம்ம சித்தியோட மச்சினன் சாயந்திரம் போன் பண்ணினான். நேத்து ஒங்க அத்தையை பார்த்திருக்கான். அவங்க இவனை பார்க்கலையாம். ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்தாங்களாம். அவங்கதானான்னு சந்தேகம் வந்ததால எனக்கு போன் பண்ணி ஒங்க நாத்தனார் இங்க வந்திருக்காங்களான்னு கேட்டான்” என்று அம்மா சொன்னவுடன் அரசி “ஒன்னோட சொந்தக்காரங்களுக்கு மத்தவங்களை பத்தி பேசலைன்னா தலை வெடிச்சுடுமே! அவங்க சொல்றதையெல்லாம் நம்புறியே. அத்தையாவது முடியை கட் பண்றதாவது. அப்படியே இருந்தாலும் என்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாங்க”ன்னு எரிச்சல்பட்டாள். “ஒனக்கும், ஒன் அப்பாவுக்கும் அவங்களை பத்தி ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே! கோபம் பொத்துக்குமே!” என்றவள் அப்பாவை பார்த்து நக்கலாக “ஏங்க! இப்ப ஒங்க அம்மா சொன்னதை நெனைச்சு பார்க்கிறேன். இப்ப எனக்கு இடுப்பளவு முடி. ஒங்க அக்காவுக்கு தலையை மூடுற அளவுதான் முடி. வேடிக்கையா இருக்குல்ல!” என்றவுடன் கோபமாக எழுந்த அப்பா“வாயை மூடுடி. எந்தளவுக்கு ஒன் மனசுல வன்மம் இருந்தா ஒன்னோடது பொய்முடின்னு தெரிஞ்சும் இப்படி பேசுவ? எந்த முடியை வச்சுகிட்டு இவ்வளவு திமிரா பேசுறியோ அந்த முடியே எங்க அக்கா தானமா கொடுத்ததுதாண்டி. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம, அவங்க முடியை கொடுத்து இந்த “விக்”கை செஞ்சு அமெரிக்காவுலேந்து அனுப்புனாங்க. ஒனக்கு தெரியக்கூடாதுன்னும் தெரிஞ்சா நீ குத்த உணர்ச்சியில கஷ்டப்படுவேன்னும் சொல்லி என் வாயை அடைச்சுட்டாங்க. அவங்களை போய்..... சே!”ன்னு கத்திவிட்டு வேகமாக அங்கிருந்து நகர அரசியும், அம்மாவும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துபோய் நின்றார்கள். அப்பா சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அத்தை அந்த முடியை எவ்வளவு காதலித்தாள் என்று அரசிக்கு மட்டும்தான் தெரியும். அழுகை தொண்டையை அடைக்க,அத்தையோடு உடனே பேச வேண்டுமென மனசு கேட்க ஓடிப்போய் போனை எடுத்தவள் அவசர, அவசரமாக அத்தையின் எண்ணை அழுத்தினாள். சில நொடிகளில் லைனில் வந்த அத்தை “ஹாய் குட்டிம்மா! எப்படிடா இருக்க?இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க? இன்னும் தூங்கலையா? அப்பா நல்லாயிருக்கானா? அம்மாவுக்கு இப்ப ஒடம்பு பரவாயில்லையா? ” என்று கேள்விகளை அடுக்கிகொண்டே போக, அத்தை பேசுவதை அம்மாவும் கேட்கவேண்டும் என்று நினைத்த அரசி ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு “நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை. நான் இப்ப போன் பண்ணது நீ ஏன் இப்படி ஒரு காரியம் செஞ்சேன்னு கேட்கத்தான்” என்றாள். “அப்படி என்னடா உனக்கு பிடிக்காத காரியத்தை செஞ்சுட்டேன்” “என்கிட்ட கூட மறைச்சுட்டியே! அப்பா சொல்லிட்டாரு. ஏன் இப்படி செஞ்ச? ” “ஓ! தலைமுடியை பத்தி சொல்றியா! அம்மாவுக்கு எதுவும் தெரியாதே! “ன்னு அத்தை கேட்க அம்மாவை பார்த்த அரசி அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதை புரிந்துகொண்டாள். “அம்மாவுக்கு இன்னும் தெரியாது. ஒனக்கு ரொம்ப புடிச்ச அந்த முடியை வெட்ட எப்படி அத்தை மனசு வந்துச்சு?“ “இங்க வந்தப்புறம்தான், கேன்சர் நோயாளிகளுக்கு நம்ம முடியை கொடுத்து இந்த மாதிரி “விக்” செய்யமுடியும்ன்னு ஒரு தோழி மூலமா தெரிஞ்சுகிட்டேன். அதான் ஒடனே ஏற்பாடு பண்ணேன். அப்பாகூட வேண்டான்னுதான் சொன்னான். நான்தான் பிடிவாதமா அனுப்பிவிட்டேன்“ “ஒன்னோட அடையாளமே அந்த முடிதான். அதை தானமா கொடுத்துருக்கியே! ஒனக்கு ரொம்ப பெரிய மனசு அத்தை!“ “நீயும் அப்பா மாதிரி தானம், தர்மம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி என்னை தியாகி ஆக்காதே! என்னை பொறுத்தவரைக்கும் தானங்கிறது நமக்கு எந்த உறவும் இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது. நான் செஞ்சதுல என் தம்பி குடும்பம் நல்லா இருக்கணும், அவங்க நல்லா இருந்தா நான் சந்தோஷமா இருக்கலாங்கிற சுயநலம் இருக்கிறப்போ அதெப்படி தானமாகும்?காணிக்கைன்னு வேணா சொல்லலாம்“ “என்ன சொன்ன? காணிக்கையா!!! கடவுளுக்கு கொடுக்கிறது பேர்தான் காணிக்கை. அம்மா ஒன்னை வார்த்தைகளால எவ்வளவோ காயப்படுத்தியிருக்காங்க. அவங்களும், கடவுளும் எப்படி ஒண்ணாக முடியும்?“ “அது ஏன் ஒனக்கும், ஒன் அப்பாவுக்கும் அம்மா திட்டினது மட்டும் பெரிசா தெரியுது? நீ பொறந்ததிலேந்து நான் என் தம்பி கூட இருக்கேன். வேற ஒருத்தியா இருந்திருந்தா என்னைக்கோ என்னை விரட்டி விட்டிருப்பா. இத்தனை வருஷத்துல ஒங்க அம்மா எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்கா. ஒருநாளாவாது என்னை அடுப்படிக்குள் நுழைய விட்டிருப்பாளா? என் துணிகளைகூட அவதான் தொவைச்சு அயர்ன் பண்ணி வைப்பா. எனக்கு ஒடம்பு சரியில்லைன்னா பத்திய சாப்பாடு சமைச்சு போட்டிருக்கா. ஆனா இதுக்கெல்லாம் அவ என்கிட்ட எதுவுமே எதிர்பார்த்தது கிடையாது. என் சம்பளத்தைகூட அவ வீட்டுசெலவுக்கு வாங்கிக்கலை. அவ செஞ்சதுக்கு முன்னாடி நான் செஞ்சிருக்கது ஒண்ணுமே இல்லை. எல்லாத்துக்கும் மேல புருஷன் இல்லாதவங்க மொட்டை தலையோடுதான் இருக்கணும்ன்னு அவ சொன்னது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமை புருஷன் இருக்கும்போதே மொட்டை தலையா இருக்கிறதுதான். அதுவும் அவளை மாதிரி பழைய சடங்கு, சம்பிராதயங்களில ஊறிப்போனவங்களுக்கு அதை தாங்கிக்கவே முடியாது. கடவுளுக்கு கொடுக்கிறது மட்டும் காணிக்கை கிடையாது குட்டிம்மா! அம்மா மாதிரி ஒடம்பாலும், மனசாலும் கஷ்டப்படுறவங்களுக்கு கொடுக்கிறதும் காணிக்கைதான்!“. “ஒன் அளவுக்கு எனக்கு பேசத்தெரியலை. ஒன் எடத்துல நான் இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பேனாங்கிறதும் சந்தேகம்தான். இப்ப நீ என் மனசுக்கு ரொம்ப அழகா தெரியிற. ஒடனே ஒன்னை பார்க்கணும் போல இருக்கு அத்தை“ன்னு நெகிழ்ந்து அழுகையை அடக்க சிரமப்பட்டவள், வாயை பொத்திக்கொண்டு குலுங்கி,குலுங்கி அழுதுகொண்டிருந்த அம்மாவை பார்த்தவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள். “குட்டிம்மா! அழறதை மொதல்ல நிறுத்து. ஒன்னோட அம்மா அடிக்கடி நீ என்னை மாதிரின்னு சொல்லுவாளே. நானும் அப்படித்தான்னு நெனைச்சுகிட்டிருந்தேன். நான் அழுது பாத்திருக்கியா? அத்தை மாதிரி அழாம தைரியமா இருக்கணும். மனசை போட்டு குழப்பிக்காம போய் தூங்கு. நான் நாளைக்கு கூப்பிடுறேன்“ என்றவள் போனை கட் செய்தாள். போனை வைத்துவிட்டு எழுந்த அரசி, அம்மா மனதில் இருக்கும் வன்மத்தையெல்லாம் அழுகையால் கழுவட்டுமென்று எண்ணி அவளிடம் எதுவும் பேசாமல் படுக்கச்சென்றாள்.

காலையில் சீக்கிரமாகவே விழிப்பு தட்ட, அறையிலிருந்து கூடத்துக்கு வந்தவள் எதிரிலிருந்த அத்தையின் அறையில் அம்மாவை கண்டு வியப்படைந்தாள். காலையில் குளித்து முடித்த கையோடு பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டுதான் மறுவேலை என்பது அம்மாவின் தினசரி வழக்கம். இன்று வழக்கத்துக்கு மாறாக பூஜை அறை இருண்டுகிடக்க, அத்தையின் அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த அம்மாவின் மனதில் அத்தை தெய்வத்துக்கும் மேலான இடத்துக்கு போய்விட்டாள் என்பதை சட்டென்று புரிந்துகொண்ட அரசி கண்களில் துளிர்த்த துளிகளை துடைத்துக்கொண்டு அம்மாவின் மனமாற்றத்தை பகிர்ந்துகொள்ள அப்பாவை தேடி ஓடினாள்.

No comments:

Post a Comment